Tuesday, January 23, 2018

விட்டு வைப்பதாக இல்லை :-) சமையல் குறிப்பு !

வீட்டாண்டை இருக்கும் கறிகாய்க் கடையில் பக்கெட் ப்ளம் அஞ்சு டாலர்னு போட்டுருந்தாங்க. பழம் பார்க்கறதுக்கு, நம்ம பழைய வீட்டு மரத்துப் பழம்போல நிறம்.  அந்த ப்ளம்.... சும்மா சொல்லக்கூடாது..... ஸ்ஸ்ஸ்ஸ்   அப்படி ஒரு இனிப்பு! நம்ம   இங்கத்து நண்பர்கள் இன்னும்கூட அந்த  டேஸ்ட்டை மறக்கலைன்னா பாருங்க!
"நல்லா இல்லைன்னு என்னம்மா  செய்வே?"

ஙே......   "தின்னு பார்த்துட்டு நல்லா இருக்கா இல்லையான்னு  பேசலாம். நான் வாங்கறேன்"  (ஃபைனல் வேர்ட்!)

பக்கெட்டுன்னா.... பக்கெட்டோடு இல்லையாக்கும்.  பையிலே போட்டு பக்கெட்டுக்குள்ளே வச்சுருப்பாங்க.  பையை மட்டும் அப்படியே தூக்கிக்கிட்டு வந்துடலாம்!

வீட்டுக்கு வந்ததும் எடை போட்டுப் பார்த்தேன்.  அஞ்சு கிலோவுக்கு 30 கிராம் கம்மி.  கிச்சன் மேடையில்  எடை பார்க்கும் மெஷீன்(!) வச்சுருப்பதால்....   எல்லாத்தையும் அளந்து பார்த்தே ஆகணும் எனக்கு :-)  ஆத்துலே போட்டாலும் அளந்து போடணுமுன்னு பெரியவங்க சொல்லி வச்சதை மறக்கலாமா?

சிலது பழுத்தும் சிலது ரெண்டு மூணு நாளில் பழுக்கும் நிலையிலுமா  இருக்கு. ஒரு பழத்தைத் தின்னு பார்த்தேன். ஓக்கே....  (ஆனாலும் நம்மூட்டு  பழத்துக்கு ஈடு இல்லை !) அடி நாக்குலே லேசா புளிப்பு தட்டுது!

கைவசம் அஞ்சு கிலோ...... என்றதால் எதாவது யோசிக்கத்தான் வேணும்.....
ப்ளம் ஸாஸ்! இதுவரை பண்ணலை. அதுக்காக? அப்படியே  விட்டுடறதா?  நெவர்....

முதல்லே நல்லாவே பழுத்தது, இன்னும் கொஞ்சம் பழுக்க வேண்டியதுன்னு தரம்  பிரிச்சு வச்சேன்.
பழுத்ததைக் கழுவிட்டு,  ஒரு 3 லிட்டர் குக்கரில் போட்டு,  முக்கால் டம்ப்ளர்  தண்ணீர் சேர்த்து  நாலு விஸில்.  இங்கெதான் ஒரு  தப்பு பண்ணிட்டேன்.  அந்த முக்கால் டம்ப்ளர் தண்ணி அதிகம் போல........ குக்கர் மூடியில் விஸிலின் கூடவே.....   ஜூஸ்.... பெருகி வந்து அந்தச் சூட்டில் அப்படியே சொய்ங் னு  காய்ஞ்சு போயிருச்சு.
எல்லா ஸ்டீமும் போனதும் குக்கரைத் திறந்தால் இப்படி இருந்துச்சு :-)
பொடேட்டோ மேஷர் இருக்கு பாருங்க.... அதால்  நாலைஞ்சு முறை  அமுக்கிவிட்டுட்டு,  ஜல்லிக் கரண்டியால் கிளறிக் கொட்டைகளை எடுத்தேன்.
ஒரு நான்ஸ்டிக் வாணலியில் குக்கரில் வெந்து மசிஞ்சு கிடக்கும் சமாச்சாரத்தை ஊத்தி, மிதமா எரியும் அடுப்பில் வச்சுக் கிளறணும்.  புளிப்பு சுவையா இருப்பதால் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்தேன்.

அப்புறம் லேசாக் கொதிச்சு வர ஆரம்பிச்சதும், ஒரு டீஸ்பூன் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து இன்னும் கெட்டியா வர ஆரம்பிச்சதும்  ரெண்டு கப் சாஃப்ட் ப்ரவுன் ஷுகர் சேர்த்தேன்.  நல்லாக் கொதிச்சு  ஸாஸ் பதம் ஆனதும் அடுப்பை அணைச்சாச்.

மகள்  ஸ்பைஸ் ஐலேண்ட் ( Caribbean Cruise )  போய்வந்தப்ப,  தாய்க்காக வாங்கி வந்த மஸாலா........

பரிசோதனை எலியின் டின்னரான  ரவாக்கிச்சடிக்கு (உப்புமாவா?  ஹேய்.... அதெல்லாம் இல்லையாக்கும்..... ) ஒரு அரை ஸ்பூன் தொட்டுக்க சைட் டிஷ்ஷாக்  கொடுத்தேன்.  ரொம்ப நல்லா இருக்காமே!

நாக்குலே துளி வச்சுப் பார்த்தேன்....  அட!  கட்டாமீட்டா சட்னி!  ஓ.... சூப்பர்!

ஆறியதும் எடுத்து வைக்கலாமுன்னா... கெட்டியா இருக்கு.  ஸாஸ்ன்னா ஊத்தும் பதம் வேணாமோ?  இது சட்னி !

துளசிவிலாஸின் வழக்கம் அனுசரிச்சு, கொஞ்சம்  எடுத்துக் கிண்ணத்தில் வச்சுட்டு மீதியை ஐஸ் க்யூப் ட்ரே யில் நிரப்பி ஃப்ரீஸரில் வச்சுருக்கேன்.
பாக்கிப் பழத்தை இன்னும் ரெண்டுநாளில் ஸாஸாவே பண்ணிப்பிடலாம்.  இப்ப செஞ்ச தப்பையெல்லாம் திருத்திக்கணும். ஓக்கே!

ஒருநாள் ப்ளம்மோதரை செஞ்சு பார்க்கணும் :-)


Monday, January 22, 2018

சங்கொடு.... சக்கரம்...... (இந்திய மண்ணில் பயணம் 104)

 சின்ன ஓய்வுக்குப் பிறகு  பொடி நடையில்  பக்கத்துத் தெருவில் இருக்கும் முஸ்தாஃபா நகை சென்ட்டருக்குப் போறோம். கோவிலுக்குப் போக வேணமான்னு நம்மவர் கேட்டார். இல்லை.... மகள் வேலையை முடிச்சுக்கிட்டுப் போகலாமுன்னு சொன்னேன்:-)
நியூஸியில் இருந்து கிளம்பி இங்கே வந்த தினமே  கல்யாண மோதிரம் பார்க்க இங்கே வந்தோமுன்னு எழுதி இருந்தேன். அது ஆச்சே  செப்டம்பர் 18. இப்போ நவம்பர் 6 !   புது டிஸைன்ஸ் வந்துருக்கான்னு பார்த்தால்....  ஒன்னும் இல்லை.  முந்தி பார்த்து வச்சதைக்கூடக் காணோம்.  விற்பனைப்பிரிவுப் பெண்கள் கூட அவ்ளோ உதவி இல்லை. 'வாங்குனா வாங்கு, வாங்காட்டிப் போ' ன்ற மனோபாவம்! சலிப்பு அதிகம்....

நாங்கள்  'பத்துபஹட்டில்' பார்க்கலாமுன்னு  செராங்கூன் சாலையில் காளியம்மன் கோவிலை நோக்கிப் போறோம்.  அம்மனைக்  கும்பிட்டுக்கிட்டு, அப்படியே கோமளவிலாஸில் ஆளுக்கொரு காஃபி.  மணி ஆறரை ஆகுது.  இப்ப எதாவது சாப்பிட்டால்... அப்புறம் ராச்சாப்பாடு  வேண்டி இருக்காது....    இப்ப  வேணாம்.....

எதிர்வாடையில் நடக்கும்போது மெர்லின் நகைக்கடை கண்ணில் பட்டது.  கல்யாண மோதிரங்களைப் பார்த்தால்  நமக்குத் தேவையான மாதிரி இருந்தது.   க்ளிக்கி மகளுக்கு அனுப்பினோம்.  ஸ்டேண்ட்பை யில்  இருக்கச் சொல்லி இருந்தோம். நியூஸியில் நடுராத்திரி பனிரெண்டு.  பாவம்தான். ஆனால் இதை விட்டால்.... அப்புறம் தொடர்பு கஷ்டம்....
ப்ளெயின் மோதிரங்கள்தான். கொஞ்சம் அகலமா வேணும் என்பதுதான் முக்கியம்.  உள்ளே எழுதணுமாம் !   ஓக்கே ஆச்சு.  ஆனால் ஒரு மோதிரத்துக்கு  சைஸ் கொஞ்சம் மாத்தணும்.  சரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க,  கடை மேனேஜர் டோரிஸ்.


கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்ததில் நானும் டோரிஸும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் :-)  (இப்பவும் வாட்ஸ் அப்பில் பேசிக்கிட்டு இருக்கோம்)  எங்கூரில் ஒரு ப்ளம் வெரைய்ட்டிக்கு பேர் 'டோரிஸ்' னு சொன்னேன். உண்மைதான்பா!

மகள் கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தப்ப, கல்யாண உடை, வெள்ளைக்கார டிஸைன்  கௌன் தானேன்னதுக்கு  இல்லை காக்ரான்னு சொல்லி செல்லில் இருந்த படத்தைக் காமிச்சேன்.  'நான் உங்க பொண்ணா இருக்கக்கூடாதான்னு இருக்கு'.... ன்னாங்க. அதனால் என்ன நீ(ங்களும்) என் பொண்ணு(மாதிரி)தான்னேன். கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க டோரிஸ்.  காஃபி வேணுமான்னு கேட்டு, எனக்குக் கப்புச்சீனோதான் பிடிக்குமுன்னு  சொன்னதும் ஓடிப்போய் காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாங்க. மெஷீன்தான் செய்யுதுன்னாலும்....  :-) ஹிஹி...
அப்போ இன்னொரு ஜோடி மோதிரம் பார்க்க வந்தாங்க. தங்க்ஸுக்கு  சங்கு டிஸைன்  வேணுமாம். இங்கே ஏராளமா அடுக்கி வச்சுருக்காங்க.  சங்கு  டிஸைன் நல்லதுல்லேன்னு  ரங்க்ஸுக்கு  எண்ணம். யாரோ சொன்னாங்களாம்....   பஞ்சாயத்து என்னிடம் வந்துச்சு.  விடமுடியுமோ?

நம்மாட்கள்தான்.  சமீபத்துலே கல்யாணம் ஆனவங்க..
'சங்கு பெருமாளுக்கானது. அதைப் போட்டுக்கிட்டால் நன்மைதான்.  இங்கெ பாருங்க.... இதை    இருவது வருசங்களாப் போட்டுக்கிட்டு இருக்கேன்'னு என் கையைக் காமிச்சேன். உடனே  தங்க்ஸ் சொல்றாங்க.... 'இந்த டிஸைன் ரொம்ப நல்லா இருக்கே.... எங்கே வாங்குனீங்க? '

"இதே சிங்கப்பூரில்தான். அப்பெல்லாம்  நல்ல கனமா நகைகள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. தங்கம் விலை ஏற ஏற  கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆனது போல் எல்லாம் தளுக்கால்லே இருக்கு....."

சங்கு இருக்கும் கையைக் காமிச்ச கையோடு சக்கரம் இருக்கும் கையையும் காமிச்சேன்!  விடமுடியுமா?  அகம் ப்ரம்மாஸ்மி .....

அப்பவே சங்கு வாங்குன கையோடு சக்கரம் இருக்கான்னு கேட்டதுக்கு  ஆர்டர் பண்ணா செஞ்சு தரோமுன்னு சொன்னாங்க. ரெண்டு மூணு வாரம் ஆகுமாம். நமக்கேது நேரம்?   அப்ப இப்ப எப்படி கையில்?
ஓ... அதுவா.... சிங்கையில் வெவ்வேற கடைகளில் பலமுறை தேடியும் கிடைக்கலை. அப்புறம்.... சென்னையில் நமக்குத் தெரிஞ்ச  சீனிவாசன் ஆச்சாரி (மங்கேஷ் தெரு, தி நகர்) செஞ்சு கொடுத்தார்.  சிங்கை சமாச்சாரம் (சங்கு) கொஞ்சம் பார்க்க நளினமா இருக்கும்.  இவர் செஞ்சு கொடுத்தது   அதைவிட கனம் கூடுதல் என்றாலும்  பார்க்கக் கொஞ்சம்  முரட்டுத்தனமா இருக்குன்றதை ஒத்துக்கத்தான் வேணும்.

இவுங்களுக்காகவும் நம்ம டோரிஸ் கூட பேரம் பேசி மோதிரத்தை வாங்கினதும்,  இன்றைக்கு நல்ல நாள் (!) இப்பவே  போட்டுவிடுங்கன்னதும்  ரொம்பவே வெக்கத்தோடு போட்டுக்கிட்டாங்க தங்க்ஸ்.

பெரியவங்களா, லக்ஷணமா   'நல்லா இருங்க'ன்னு அவுங்களை வாழ்த்திட்டு, ரெடியான நம்ம மோதிரங்களையும் வாங்கிக்கிட்டு எதிர்வாடையில் இருக்கும் கோமள விலாஸுக்கு இன்னொரு முறை! ராச்சாப்பாடுதான்.  இங்கேயும் அங்கேயுமா நடக்க முடியாது.... மணி எட்டு  எட்டு.

வழக்கமான ரெண்டு இட்லி எனக்கும் நம்மவருக்கு ஒரு ஊத்தப்பமுமா முடிச்சுட்டு நேரா  நம்ம சிங்கைச் சீனு தரிசனம்.  கோவில் ஒன்பது மணிக்கு மூடிருவாங்கன்றதால்   கொஞ்சம் காலை வீசிப்போட்டுப்போனோம்:-)
அப்படியும் எட்டேமுக்கால் ஆகிருச்சு.  இட்லி சைஸ் ரொம்பப் பெருசு  இங்கெல்லாம்.....

அவசரடியா ஓடுனது ரெண்டு சமாச்சாரங்களுக்கு.  ஒன்னு  கல்யாண மோதிரங்களைப் பெருமாள் காலடியில் வச்சு வாங்கிக்கணும். ரெண்டாவது  நன்றிக் கடனுக்கான அர்ச்சனை.  முக்திநாத் யாத்திரை நல்லபடியா  அமையணுமுன்னு  வேண்டிக்கிட்டுப் போனேனே.....
அர்ச்சனை டிக்கெட் வாங்கும் கவுண்டர் மூடிட்டாங்க. நாளைக்கு அர்ச்சனை செஞ்சுக்கணும்.  பெருமாள் வழக்கம்போல் ஜொலிப்போடு நிக்கறார்!  மனம் நிறைய நன்றியோடு  கும்பிட்டுக்கிட்டோம்.  பட்டர்ஸ்வாமிகளிடம் மோதிரங்களைக் கொடுத்துப் பெருமாள் காலடியில் வச்சு  ஆசி வாங்கிக்கணும் என்றதும்,  அவரும்  கொண்டுபோய் வச்சு ஒரு ஆரத்தியும் காமிச்சுட்டு, எடுத்துவந்து தந்தார்.  ரொம்ப நிறைவா இருந்துச்சு.

நம்மவர் வழக்கம்போல் அவருடைய தூண் பக்கத்துலே போய் உக்கார்ந்துட்டார்.  நான் மட்டும் கோவிலை வலம் வரும்போதே  டு இன் ஒன் என்று க்ளிக்கிக்கிட்டே வந்தேன்.
தாயாரின் துவாரபாலகியர் ஸ்ரீ நிர்மால்யஹாரிணி, ஸ்ரீ நிவேத்யஹாரிணி. நம்ம ஆண்டாளம்மாவின் துவாரபாலகியர்  ஸ்ரீ   பூமிம், ஸ்ரீ ஸதீம்!

தாயார், ஆண்டாள் சந்நிதிகளில் நிற்கும் துவாரபாலகியரின்  புடவைகளை அவிழ்த்து  மடிச்சு வச்சுக்கிட்டு இருந்தார் ஒரு பட்டர்.  பட்டுப்பொடவை கசங்கிருமுன்னா?   வேறு நூல்புடவை சுத்திவிடுவாங்களான்னு பார்த்தால் இல்லை.  ஏற்கெனவே சிலையில் செதுக்கி இருக்கும் புடவைகள் போதுமுன்னு விட்டுட்டாங்க போல!
நம்ம ஆஞ்சி  இடுப்பில் ஒரு சின்ன வேட்டியும், கழுத்தில் துளசியுமா படு சிம்பிளா    நிக்கறார்!


ஒவ்வொரு சந்நிதியா  மூடிக்கிட்டே வந்தாங்க. கடைசியில்   மூலவர்  சந்நிதி !  மேளதாளம்  நாதஸ்வரம் வாசிச்சாங்க , வாத்ய கோஷ்டிக்காரங்க. பெருமாளுக்கு முன் திரை போட்டு உள்ளே  தீபாராதனை காமிச்சு, பிரஸாதமா  பால் நைவேத்யம்  செஞ்சு, நமக்கும் கிடைச்சது.  அதுக்குப்பின் கருவறை வாசல்   வெள்ளிக் கதவுகளைச் சார்த்தினார் பட்டர்ஸ்வாமிகள்!
த்வாரபாலகர்கள் ஸ்ரீ கிஷ்கிந்தனும், ஸ்ரீ தீர்த்தனும்  உடை மாற்றிக்கலை !
கோவில் நடை, நாளின் கடைசியில் சாத்தறதை இப்பத்தான் முதல்முதலாப் பார்க்கிறோம்!

கோவில் இரவு ஒன்பதுவரை திறந்துருக்கும்னு அறிவிப்பு. அதே போல ஒன்பது கழிஞ்சுதான்   சந்நிதிகளை மூட ஆரம்பிக்கறாங்க.   நாலைஞ்சு பட்டர்கள் பரபரன்னு  வேலை செஞ்சாலும்  ஒன்பதரைக்குக்கிட்ட ஆயிருது. நாங்கள்  அதுவரை கோவிலிலேயே உக்கார்ந்துருந்தோம்.
ஹைய்யோ..... என்ன ஒரு அமைதி!  உள்ளும் புறமும்தான்!

"காலையில்  சுப்ரபாதத்துக்கு   வர்றேன்!  குட் நைட் பெருமாளே!  "


தொடரும்........... :-)


Friday, January 19, 2018

சென்னையில் இருந்து சிங்கை..... (இந்திய மண்ணில் பயணம் 103)

அடையார்  கோவிலில் சாயங்காலம் சாயரக்ஷை பூஜை ஆறரைக்கு நடக்கும். அதே அடையாறில் ஒரு நியூஸித்  தோழியின் பெற்றோர்களைப் போய்ப் பார்த்துட்டு வரணும்.  முதலில் அவுங்களைப்போய் பார்த்துட்டு,  அப்புறம் கோவிலுக்குப் போகணுமுன்னு திட்டம். அப்படியே ஆச்சு.

இந்தக் கோவிலுக்குள் சிவனுக்கும் ஒரு சந்நிதி வெளிப்பக்கம்  ஸ்வர்க்க வாசலைத் தாண்டி அந்தாண்டை இருக்கு.   வழக்கம்போல்  பதுமன் ஆழ்ந்த சயனத்தில்!  அறிதுயில் மன்னன்! 'போயிட்டு வரேண்டா' சொல்லியாச். 'இனி எப்போ? ' கேட்டுட்டான்!  'யாருக்குத் தெரியும்'னு பதில் சொன்னேன்.

எப்பவும் கொஞ்சம் பேச்சு வார்த்தை உண்டு எங்களுக்குள் :-)  எதிரே கொஞ்ச நேரம் உக்கார்ந்து  அவனைக் கண்ணால் கண்டுக்கிட்டே இருப்பேன். 'என்ன சௌக்கியமா' ன்னு மனசுக்குள் வந்துருவான்!  ஜருகு கிருகுன்னு ஒன்னும் இல்லாமல் மனசடங்க உக்கார்ந்து தரிசிக்க முடியும் இங்கே!

அங்கிருந்து கிளம்பி நேரா  வெங்கடநாராயணா ரோடு, திருப்பதி  தேவஸ்தானக் கோவில்.    உள்ளே போகலை. தலை தெரிஞ்சது !     வெளியில் இருந்தே ஒரு கும்பிடு.  அப்படியே   அடையார் கோவில் தரிசனத்தை இவனுக்கும் சொன்னேன்.  "பாரு.... அப்படிக்    காட்சிக்கு எளியவனா இருக்கணும் கடவுள்!  ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறயே  திருப்பதியிலே!  "
" என்ன பண்ணச் சொல்லுறே..... கூட்டம் அம்முது. அதுக்கேத்தாப்பல ஆட்களும் ஆடறாங்க........  "

"உனக்கும் நல்லா வேணும்.....  ஆசை ஆசையா ஓடிவர்ற பக்தர்களை, ஒரு அஞ்சு செக்கன்ட் தரிசிக்க விடாமக் கையைப் பிடிச்சு இழுத்து வெளியே கடாசும் அரக்கிகளை அங்கே வச்சுருக்கே.... பார்லிமென்ட் அங்கம் என்ற ஹோதாவில் வர்ற கண்டவங்களையும் தீர்த்தம் என்ன, பிரஸாதம் என்ன, புடவை என்னன்னு தாராளமா வாரிக்கொடுத்து  உபசரிச்சயே....   இப்பப் பாத்தியா  உன்னைப்பத்தி இழிவாப் பேசிக்கிட்டுத் திரியுது  ஒன்னு....  அதுகளைக் கைப்பிடித்துக் கடாச முடியுமோ அந்த வல்லரக்கிகளால்? "

இப்போப் பதிவு எழுதும்போதே இதெல்லாம் வந்து விழுது மனசுக்குள்....  அதன் போக்கில் அப்படியே விட்டுட்டேன்....

  அடுத்த ஸ்டாப்  அதே ரோடில் இருக்கும் சரவணபவன்.   இந்தப் பயணத்தில் சென்னையில்   இதுதான் முதல்முறை இங்கே!

எனக்கொரு நெய் ரோஸ்ட்டும்,  நம்மவருக்கு  ஒரு ரவா தோசையும்...... கூடவே ஆளுக்கொரு பால்!  சீனிவாசன்   வீட்டுலே போய் சாப்பிடப் போறாராம்.... மணி எட்டுக்கூட ஆகலைன்னார்...

நாங்க லோட்டஸுக்கு வந்துட்டோம். நாளைக்குச் சீக்கிரமா எழுந்து ரெடி ஆகணும்.   காலை  ஆறேமுக்காலுக்கு சீனிவாசனை வரச்சொல்லியாச்சு, பெரிய  வண்டியை எடுத்துக்கிட்டு, ஃபைனல் பில்லையும் வாங்கிக்கிட்டு  வந்துருவார்.

நாங்களும் ராத்திரியே ஃபைனல் பேக்கிங் முடிச்சுக்கிட்டோம். அப்பதான்  கவனிக்கிறேன்....   ரெண்டு பெரிய பெட்டிகள்  புதுசா  இருக்கேன்னு....   ஒன்னுதானே  வாங்கினோம்.....    கேட்டதுக்கு 'எங்கே இதையெல்லாம் கவனிக்கிறே.....    ஜாலியா சுத்திக்கிட்டுல்லே இருக்கே....   முதலில் ஒரு பெட்டி வாங்கிட்டு,  பத்தாதுன்னு  இன்னொன்னும் வாங்கினோமே.....'

ஓ.... பெட்டி வேலைகளை இவர் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பிக்பஸாரின்  பாத்திர செக்‌ஷனுக்கு போனது இப்பத்தான் நினைவுக்கு வருது.  அழகான பாத்திரங்கள் (நல்ல தரம்!) இருந்தாலும் ஒன்னும் வாங்கிக்கலை, கேட்டோ!!!

நான் திரும்பி வர்றதுக்குள்ளே  பில் பணம் கட்டியதும், பெட்டிகளை சீனிவாசன் கொண்டுபோய் வண்டியில் வச்சுருக்கார்.

காலை ஆறரைக்குக் கிளம்பி நேரா பேங்க் ஏடிஎம், ஜிஎன் செட்டி சாலையில். நம்மவர் ஒரு தொகையைச் சொல்லி 'இவ்வளவு போதுமா'ன்னார்.  ' ஏடிஎம் ஒரு  முறைக்குக் கொடுக்கும்  அதிகபட்ச தொகையை எடுத்துக்குங்க. செலவு இல்லைன்னா, அடுத்த பயணத்துக்கு ஆச்சு'ன்னேன்.

அங்கிருந்து நேரா நம்ம கீதா கஃபே, இந்தப் பயணத்தில் கட்டக் கடைசி !
இட்லி வடை காஃபி மூவருக்கும் :-)  லோட்டஸுக்குத் திரும்பி பெட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி செஞ்சுட்டு, ட்யூட்டி ஸ்டாஃப்களிம் கணக்கை செட்டில் செஞ்சுட்டு நேரா ஏர்ப்போர்ட் தான்.  காலை வேளை என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லை. வெறும் 25 நிமிட்ஸில் வந்துருந்தோம்.

மணி இப்போ ஏழே முக்கால்.  நம்ம ஃப்ளைட் பத்து மணிக்கு!சீனிவாசனுக்கு 'எல்லாம்' செட்டில் செஞ்சுட்டு, நாலைஞ்சு க்ளிக்ஸ் ஆனதும்  ரெண்டு ட்ராலிகளையும் தள்ளிக்கிட்டு உள்ளே போயிட்டோம்.  'எடை பயம்' இன்னும் இருக்குன்னாலும், நம்மவர் 'பிபிஎஸ் க்ளப்  கோல்ட் கார்ட் ' வச்சுருக்காரேன்னு  ஒரு தைரியம்தான்.  அப்புறம் பார்த்தால்.....  ரெண்டு கிலோ கொறையுது!!!!!   விடலாமோ?  ஓடிப்போய் ஸ்ரீக்ருஷ்ணா ஸ்வீட்ஸில்  இனிப்பு :-) இங்கெதான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.  பால் பொருட்கள் இங்கே கொண்டு வந்தால் சில சமயம் பிரச்சனை (பைத்தார மாடு வியாதி) என்பதால் அதை விட்டுட்டு மற்ற இனிப்புகள்னு  (அவசரத்தில்) சொல்லிட்டேன்.  என்னத்தையோ வச்சுட்டாங்க..... பேசாம மைஸூர்பா ரெண்டு அரைக்கிலோ பேக்கும்,  ஹல்வா ரெண்டு அரைக்கிலோக்களும் வாங்கியிருந்தால் கொடுக்க வசதியா இருந்துருக்கும்,  இல்லே?

இந்தமுறை நாம் ஸில்க் ஏர் ஃப்ளைட்.   சென்னையில் காலை பத்துமணிக்குக் கிளம்பி சிங்கைக்கு மாலை நாலே முக்காலுக்கு வருது. ஏற்கெனவே நாம்  புக் பண்ணியது வழக்கமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுதான். ராத்திரி  பதினொன்னே முக்காலுக்குக் கிளம்பி பொழுதுவிடிய சிங்கை வந்துரும்.  இது நமக்கு ரொம்பவே வசதி, சென்னையில். பகலெல்லாம் சுத்தியடிச்சுட்டு ராத்திரி  ஒன்பது, ஒன்பதரைக்கு ஏர்ப்போர்ட் வரலாம்.  இதுலே ஒரே ஒரு  கஷ்டம் சிங்கை வந்தபின்.....  ஹொட்டேல்  செக்கின் டைம் பகல் மூணு மணின்றதால்   கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் திண்டாடணும். என்னதான் ஷவர் எடுத்துக்கவும், பொட்டிகளைப் பத்திரமா வச்சுக்கவும் ஹொட்டேல் வசதிகள் இருக்குன்னாலும்.... ராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் ஒன்பது மணி நேரம் சிங்கை வெயிலில் சுத்தறதும் கஷ்டம்தானே?
நம்மவர் கண் பிரச்சனை காரணம், நாம் சிலநாள் முன்னதாகவே டிக்கெட்டை மாத்தி இருந்தோம்.  அப்பதான் ஸில்க் ஏர்  பகல் நேர ஃப்ளைட் எடுக்கலாமுன்னு  தோணுச்சு. நாலே முக்காலுக்கு  சிங்கைக்கு  வந்து ஹொட்டேல் போய்ச் சேர எப்படியும் அஞ்சரை ஆகிரும். அறை  தயாரா இருக்கும். ஆனால் ஒரு நாள் முழுசாக் காணாமப்  போயிருதே  :-(  ஒன்னு கிடைச்சால் ஒன்னு கிடைக்காது...   ப்ச்....

வண்டியில் வந்து ஏறுங்கன்னு  கூப்பிட்டதும்  முதல்லே   உள்ளே போய் உக்கார்ந்தாச்சு.  சரசரன்னு கொஞ்ச நேரத்துலேயே சனங்கள் வந்து நிறைஞ்சுட்டாங்க. பத்து மணின்னுட்டு பத்து நிமிட் இருக்கும்போதே  வண்டி நகர ஆரம்பிச்சது!
மேலே இருந்து சென்னையைப் பார்த்தால்  ஒரே மசமச.....  கண்ணுலே தண்ணியா என்ன?  ஊஹூம்... புகை மூட்டம்...
ஒரு மணி நேரத்துலே பாடாவதியா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்  :-(  சிங்கை டைம் பார்த்து விளம்பறாங்க போல.....    லஞ்ச் ன்னு சொல்லலாம்.  ஆலூகறி, சோறு, பன், ஸாலட்ன்னு...     கூடவே ஒரு தண்ணி பாட்டில்.  பசி இல்லை.....

தேவர் நடமாட்டம் உண்டான்னு பார்த்தால்....   வெறும் நீலவானம்.  மேகங்கள் எல்லாம் எங்கே போச்சோ?  ஃப்ளைட் பாத் பார்த்துப் பொழுதை ஓட்டினேன். நம்மவர் பேப்பர் படிச்சுட்டுத் தூங்கிட்டார்.
சாங்கி வழக்கம்போல கலகலன்னு இருக்கு.  மயில்கள்தான் எங்கே பார்த்தாலும்!

 மயிலன்கள்தான்  அழகன்கள் :-)
பெரிய பெட்டிகள் எல்லாம் செக்த்ரூ பண்ணிட்டதால்   ரெண்டு கேபின் பேக் மட்டும்தான்.  டாக்ஸி பிடிச்சு ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தாச்.  வழக்கமான இடம்தான்... இந்த பார்க் ராயல். பெருமாளுக்குக் கிட்டக்க என்பதால் முன்னுரிமை கொடுத்துருக்கேன் :-)

தொடரும்.......  :-)