Friday, December 31, 2004

மனசே சரியில்லே.

இத்தனை உயிருங்க, (ஒரு லட்சத்துக்குமேலே இருக்குமாமே! ஐய்யோ) ஒரு நிமிசத்துலே உலகை
விட்டுப் போனதை நினைச்சு நினைச்சு மனசே சரியில்லே.



போனவங்களுக்கு அவுங்கவுங்க சம்பிரதாயப்படியும் நம்பிக்கைப்படியும் சவ அடக்கம் செய்யக்கூட முடியாம
போயிருச்சே. இதையெல்லாம் நினைச்சு நினைச்சு அவுங்க நெருங்கிய சொந்தங்கள் வாழ்நாளெல்லாம்
வருத்தப்படுவாங்களே.

இந்த நிலையிலே கொஞ்சம் பண உதவியைத்தவிர வேறு ஏதும் செய்ய இயலாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு,
என் கையாலாகாத நிலையை எண்ணித் துக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

உயிர் பிழைச்சவுங்க எல்லாம் இந்த பேரழிவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கையுடன் மறுவாழ்வு தொடங்க
நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் முக்கியம்.

அங்கே நடந்தவைகளையும், இப்போது என்னவிதமான நிவாரணப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன
என்ற விவரங்களையும் சக வலைப் பதிவாளர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிந்தது.

நிறையப்பேர் சேவை மனப்பான்மையோட உதவி செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சப்ப, அவுங்களையெல்லாம்
கையெடுத்துக் கும்பிடணும்ன்னு இருக்கு.

புது வருசத்துக்குன்னு சில பதிவுங்களை ஏற்கனவே எழுதி வச்சிருந்தாலும், இப்ப இருக்கற மனநிலையிலே
அதைப் பத்தி நினைக்கறதுகூட அபத்தமாப் படுது.

ஓரளவுக்காவது நிலமை சீரடைஞ்சாத்தான் இனி எழுதவே ஓடும்.

இந்தமாதிரி ஒரு பேரழிவு, உலகத்துலே எங்கேயுமே நடக்கக்கூடாதுன்னு மனசார வேண்டிக்கிட்டு இருக்கேன்.


Tuesday, December 28, 2004

'கடல் பொங்கியது!'

'கடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக்
கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது.
கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல்
தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன.
படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.'


எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்ததாய் 'அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில்'
மேற்கண்ட நிகழ்வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது கொஞ்ச நாட்களாக இணையத்தில் 'பொன்னியின் செல்வன்' படித்துவருகிறேன். இதுவரை
நான்கு பகுதிகள் முடித்துவிட்டேன். ஐந்தாவது பகுதி ஆரம்பத்திலேயே நாகையில் ஏற்பட்ட நிகழ்வுகளாக
எழுதியவைகள் எல்லாம் இந்த ஞாயிறன்று மீண்டும் சம்பவித்தது! என்ன விபரீத ஒற்றுமை!

இதோ கல்கியின் எழுத்தில்.........

'அன்றிரவு முழுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக
இருந்தன. அவரவர்களும் உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் ஒருவருக்கொருவர்
உதவி செய்து கொள்வதும் இயலாத காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் நாகைப்பட்டினத்தின்
வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை உதவி புரிந்து வந்தார்கள். அதே இரவில் ஆச்சாரிய
பிக்ஷுவும் பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் கண் விழித்திருந்து
பேசிக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கடும் புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள்
எவளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் கவலைப்பட்டார்கள்.

அரண்மனை மணியக்காரனை இளவரசர் அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு
இருக்கிறது என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் விசாரித்தார். களஞ்சியங்கள்
நிறையத் தானியம் இருந்ததென்று தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின்
ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த
பொற்காசுகள் பன்னிரெண்டு செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது.

"குருதேவரே! புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் செய்வதற்கு வேண்டிய
வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு,
உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் அவ்வளவையும் வீடு
இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்!" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"அது எப்படி நியாயமாகும்? தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய பாட்டியார்,
செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக
செலவு செய்யலாமா? அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா?" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.

"ஆச்சாரியரே! என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் சொல்லிக்கொள்வேன். இப்பொழுது
இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன்.
வருங்காலத்தில் என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ நாடெங்கும்....... '


மேலும் படிக்கப் படிக்க, எல்லாமெ தற்போதைய நிகழ்வுகளை அப்படியே கொண்டிருக்கிறது! ஆனால்
அப்போது மன்னராட்சி. இப்போது...மக்களாட்சி.

உயிர்களையும், உடமைகளையும் இழந்து நிற்பவர்களுக்காக மனமுருக பிரார்த்திபோம்!முடிந்தவரை உதவிகளையும் செய்வோம்.


Monday, December 27, 2004

திரு கருணாநிதி ?

இப்போதுதான் சென்னையிலிருந்து ஒரு தகவல். தி.மு.க தலைவர் திரு. கருணாநிதி இவ்வுலக வாழ்வை
நீத்துவிட்டார் என்று!

மேல்விவரம் ஏதாவது உண்டா?




Sunday, December 26, 2004

திருவல்லிக்கேணி?

நம்ம திருவல்லிக்கேணியிலே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கடல்நீர் அந்தப் பகுதியில் ஊருக்குள்
வந்துவிட்டதாகவும் ஒரு நண்பர் மூலம் அறிந்தோம்.




இது பற்றிய மேல்விவரம் ஏதாவது உண்டா? ஏம்பா, இங்கே யாராவது திர்லக்கேணி ஆளுங்க இருக்குறாங்களா?






Saturday, December 25, 2004

ஒலியும் ஒளியும்- சிவாஜி!!!!!!!!

இன்னைக்கு நாள் ரொம்ப 'கொயட்!' கடைகண்ணி ஏதும் இல்லை! தெருவெல்லாம் அனக்கம்
இல்லாமக் கிடக்குது!



இங்கெ நம்ம ஊர் தொலைக்காட்சியிலே இன்னைக்கு விளம்பரங்களே கிடையாது! அதனாலே ஒரு மணி நேரம்
போடுற நியூஸ்கூட 15 நிமிசத்துலெயே முடிஞ்சிடுச்சுன்னா பாருங்க, எவ்வளோ விளம்பரங்கள் வருதுன்னு!

பண்டிகைநாள் மாதிரியே இல்லை! அட் லீஸ்ட் நேத்துவரைக்குமாவது எல்லா இடமும் 'கலகல'ன்னு
இருந்துச்சு!

இன்னைக்கு 'ஸ்பெஷலா' என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப, ஊருக்குப் போயிட்டு
'ஹாங்காங்' வழியாத் திரும்பி வந்திருந்த நண்பர் ( முந்தாநாள்தான் வந்தாராம்!) 'அங்கே டிவிடி 20
ஹாங்காங் டாலருக்குக் கிடைக்குது. நான் கொஞ்சம் பழைய படங்கள் (மூணு படம் ஒரு டிவிடிலே)
அப்புறம் வெறும் பாட்டுங்கன்னு வாங்கிட்டு வந்தேன். நீங்க பாத்துட்டுத் தாங்க'ன்னு சொன்னார்.

மொத்தம் 7. 'எல்லாத்தையும் வேணா வச்சுட்டுப் போட்டா'ன்னு கேட்டார். சரின்னு சொன்னா ரொம்ப
'க்ரீடி'யா இருக்குமேன்னுட்டு, 'ஜஸ்ட் ரெண்டு பாட்டு டிவிடி மட்டும் கொடுங்க. படங்களை அப்புறமாப்
பாத்துக்கறேன்'னு சொன்னேன்.

சிவாஜி-50 சிறந்த பாடல்கள் ( ப்ளாக் & ஒயிட்)

எஸ்.பி.பி பாடுன 50 பாடல்கள் இன்னோன்னு!

கொஞ்சநேரம் கழிச்சு, இன்னோரு நண்பர் வந்தப்ப, நம்ம வாய் ச்சும்மா இருக்குமா? இந்த மாதிரி ரெண்டு
டிவிடி கிடைச்சிருக்குன்னதும், 'எனக்கு ஒண்ணு தாங்க. நான் பார்த்துட்டுத்தரேன்'னார். எது வேணும்ன்னு
கேட்டதுக்கு எஸ்.பி.பி எடுத்துக்கறேன்னுட்டு எடுத்துக்கிட்டுப் போயிட்டார். நான் அதுதான் மொதல்லே
பாக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பண்டிகைநாள், 'குட் வில் டுவர்ட்ஸ் மென்'னாக இருக்கட்டும்.
நாம அப்புறம் பார்த்தாப் போச்சு!

கொஞ்ச நேரத்துலே அந்த நண்பர் ஃபோன்லே கூப்பிட்டு, அந்த டிவிடிலே பாட்டு இல்லிங்க. ஏதோ
'கம்ப்யூட்டர் பேக் அப் டிஸ்க்'தான் இருக்கு. தவறுதலா வச்சிட்டுட்டாங்க போல. நாளைக்குத் திருப்பிக்
கொண்டு வரேன்னார்!!!!!

நான் ஆஹான்னுட்டு, சிவாஜி பாடல்கள் பார்க்க ஆரம்பிச்சேன். 50 பாட்டு முடியாது! இன்னைக்கு ஒரு 15
பார்க்கலாம்ன்னு ப்ளான்.

பாலும் பழமும், படிக்காத மேதை, பழனி, பலே பாண்டியா,விடி வெள்ளி,ஞான ஒளி, கை கொடுத்த தெய்வம்,
பார் மகளே பார், பாகப்பிரிவினை, மஹா கவி காளிதாஸ் இப்படின்னு பாட்டுங்க வந்துக்கிட்டு இருந்தது!

எல்லாமே கறுப்பு வெள்ளைப் படங்கள்தான். ஆனா நல்லா 'பளிச்'சுன்னு இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப கவனிச்சது இது.....

அந்தக் காலப் படங்களிலே,

கதாநாயகிங்க கொஞ்சம்(!) குண்டா இருந்தாலும் அழகான முகத்தோட இருக்காங்க! களையான முகம்!
சரோஜா தேவி, சாவித்திரி, விஜய நிர்மலா,தேவிகா, செளகார் ஜானகி, ஜி.வரலட்சுமி இப்படி! அப்பல்லாம்
சினிமாவுலெ நடிக்க 'அழகு அவசியம்!'

ஆறு வர்ற 'சீன்'லே ஆத்துலே நிஜமாவே தண்ணி நிறைய ஓடுது!

டி.எம்.எஸ். குரல்தான் சிவாஜிக்கு'மேட்சிங்'கா இருக்கு. ஒரு படத்துலே ( விடிவெள்ளி) ஏ.எம்.ராஜா குரல்,
பொருத்தமாவே இல்லே!

ஈகோ இல்லாம ரெண்டு மூணு கதாநாயகர்ங்க சேர்ந்து நடிச்சிருக்காங்க. பழனின்னு ஒரு படம். நாலு அண்ணன்
தம்பிங்களாம்( பாட்டுலேயெ இந்த விவரம் இருக்கு!) சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்,முத்துராமன், இன்னொருத்தர்
யாருன்னு சரியாத் தெரியலை. 'க்ளோஸ் அப்' அவருக்கு வைக்கலை! நானும் உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.
ஊஹூம்... அசோகன் மாதிரி தெரியுது! ஒருவேளை வேற யாரோ!

'மஹாகவி காளிதாஸ்'லே 'யார் தருவார் இந்த அரியாசனம்?' பாட்டு. நகை நட்டெல்லாம் ச்சும்மாத் 'தகதக'ன்னு
ஜொலிக்குது! எல்லாம் 'கல்லு'வச்ச நகைங்க! இந்தப் படத்துலே 'காளி அம்மன்' நடனம் ஆடறாங்க.க்ளோஸ் அப் இருந்தும்
யார்ன்னு தெரியலை, ஆனா நல்லா ஆடறாங்க! அந்த கோயில் 'செட்'டும் அட்டகாசமா இருக்கு! நல்லாக் கவனிச்சுப்
போட்டிருக்காங்க!

குரு தட்சிணைன்னு ஒரு படம். இதுலே நம்ம 'அம்மா' ஜோடி! நல்லா அழகா, அம்சமா இருக்கங்க! இப்ப 'அம்மா'
அதைப் பார்த்தாங்கன்னா அவுங்களுக்கு எப்படி இருக்கும்? வயசாறதே ஒரு கொடுமை!!! ச்சும்மாவா சொன்னாங்க
அவ்வைப் பாட்டி, கொடிது கொடிது முதுமை கொடிதுன்னு! எப்படி இருந்தவுங்க...ஹூம்

படத்துலே நாயகன் 'பணக்காரன்'னா, 'நைட் ட்ரெஸ்'மேலே ஒரு ஸாட்டீன் 'ட்ரெஸ்ஸிங் கவுன்'போட்டுக்கணும்!

'கலாட்டாக் கல்யாணம்' படப் பாட்டுலே நாகேஷ் இருக்கார். பழைய ஒல்லிக்குச்சி நாகேஷ்!

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' பாடுலே எல்.ஆர். ஈஸ்வரியோட 'ஹம்மிங்'நல்லா இருக்கு! அந்தப் பாட்டுலே
ஒரு வரி 'இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா'! ஆனா நாயகிக்கு இடை இருக்கு!( அதெல்லாம் கண்டுக்கக்
கூடாது!)

பாக்கிப் பாட்டெல்லாம் இனி எப்ப நேரம் இருக்கோ அப்ப!


Friday, December 24, 2004

லாஸ்ட் மினிட் ஷாப்பிங்?

நாளைக்குப் பொழுது விடிஞ்சாப் பண்டிகை! நாளைக்கு என்ன நாளைக்கு? இன்னும் ஒம்பதே முக்கால் மணி நேரம்தான்
இருக்கு,கிறிஸ்து பிறப்புக்கு!


நம்ம வீட்டுலே இருக்கற பூனைங்களுக்கு அவுங்களுக்குன்னு இருக்கற 'ஸ்பெஷல் சாப்பாடு' இன்னும் சில டின்
இருந்தாத் தேவலை. நாளைக்கு இங்கே எல்லாக் கடைகளும் மூடியிருக்கும். தெருமூலைகளிலே
இருக்கற 'கார்னர் டெய்ரி'ங்கதான் திறந்து இருக்கும். அங்கே இந்த 'பெட் ஃபுட்' சமாச்சாரமெல்லாம்
யானை விலை!

இன்னைக்கு 'கிறிஸ்மஸ் ஈவ்' என்றபடியாலே, நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே 'கல் எறியும் தூரத்துலே'
இருக்கற, 24 மணிநேரமும் திறந்திருக்கும் 'சூப்பர் மார்கெட்'கூட ராத்திரி 9 மணியோடக் கடையைக்
கட்டிருவாங்களாம். இப்பல்லாம் இங்கே 'கிறிஸ்மஸ் ஈவ்'அன்னைக்கு சாயந்திரம் கடை கண்ணிலே வேலை
செய்யற ஆட்களிடம் ராத்திரி 9 மணிக்குமேல வேலை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க.

மத்த தொழிலாளிங்களுக்கெல்லாம் பண்டிகை விடுமுறை டிசம்பர் 24 க்குத் தொடங்கிடணுமாம். அவுங்களுக்கும்
பண்டிகை ஷாப்பிங் செய்ய டைம் கொடுக்கணுமாம். இப்படியெல்லாம் சட்டங்கள் வந்துகிட்டே இருக்கு.

போன ரெண்டு வாரமா கடைங்கெல்லாம் ராத்திரி 10, 11, 12 ன்னு திறந்திருக்குங்க. பிள்ளைங்களை
எல்லாம் தூங்க வச்சுட்டு, பரிசுப் பொருட்கள் வாங்கறதுக்குன்னு 'அந்தந்த வீட்டு சான்ட்டா க்ளாஸ்'ங்க கடைங்களுக்கு
வராங்களாம்.

நாளைக்குப் பாருங்க, சத்தமில்லாம, தெருவே ஓய்ஞ்சு போய் இருக்கும்! கார் நடமாட்டம் ரொம்பவும் கம்மியா இருக்கும்!

நானும் பல வருஷங்களாப் பாக்கறேன், இந்தப் பண்டிகை சமயத்துலே மட்டும் 'பெட் ஃபுட்' சேல் லே
வர்றதில்லே. ஏன்னு தெரியலை!

ஒருவேளை, குடும்பங்கள் எல்லாம் விடுமுறைக்குப் போறதாலே வளர்ப்பு மிருகங்களை 'கேட்டரி, கென்னல்
இங்கெல்லாம் விட்டுட்டுப் போறதாலேயா?

இல்லேன்னா, எப்படியும் இதுங்களுக்கு சாப்பாடு வாங்கித்தானே ஆகணும். முழு விலையும் கொடுத்தே
வாங்கட்டும் என்ற வியாபார மனப்பான்மையா?

மத்த சமயத்துலே 89 சதம், 99 சதம்ன்னு கூவிக் கூவி விக்கற 'பெட்ஃபுட்'ங்கெல்லாம் இப்ப $2.45க்கு!

எதுக்கும் இருக்கட்டும்ன்னு இன்னும் ரெண்டு டின் வாங்கி வச்சுக்கலாம்ன்னு நானும் சூப்பர் மார்கெட்ப்
பக்கம் போனேன். பார்க்கிங் இடம் இல்லாம காருங்க அப்படிஅப்படியே நட்ட நடுவிலே நிக்குதுங்க.
ஒரு வண்டியை யாராவது எடுத்தாப் போதும் அந்த இடத்தைப் பிடிக்க எல்லோரும் பாயறாங்க!
'பாலீஷ்டா' இருக்கற நாகரீகம் எல்லாம் வெளியேறப் போகுதுன்ற மாதிரி 'லுக்! நல்ல வேளை நான்
நடந்து போயிருந்தேன். இல்லேன்னா, வண்டி நிறுத்த இடம் தேடி 'ஸாட்டிலைட்'கணக்காச் சுத்தணும்.
ஏற்கெனவே அங்கே பல 'ஸாட்டிலைட்டுங்க' சுத்திக்கிட்டே இருக்குங்க!

கடைங்களுக்குள்ளெ கால் வைக்க முடியாதபடி 'ஜனத்திரள்!'

ரெண்டு மாசமா வாங்கிக்கிட்டேதான் இருந்தாங்க. இன்னுமென்ன விட்டுப் போச்சுன்னு இவுங்கெல்லாம்
வந்திருக்காங்கன்னு தெரியலையே! ஒரு நாள் கடையில்லேன்னா என்ன ஆயிரும்? நாமெல்லாம் எத்தனை
'பந்த்'ங்களைப் பார்த்து அனுபவிச்சவுங்க!

இப்படித்தான், சில வருஷங்களுக்கு முந்தி ஏதோ புதுசாச் சட்டம் ஒண்ணு போட்டு, கடைங்கெல்லாம்
அதிகாரப் பூர்வமான அரசாங்க விடுமுறைக்குத் திறக்கக்கூடாதுன்னுட்டாங்க. இதப் பத்தியெல்லாம் தினசரி
களிலேயும், தொலைக்காட்சியிலெயும் ஓயாமச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முன்னாலேயே
பால், பெட்ஃபுட்ன்னு தேவையானதையெல்லாம் வாங்கி சேமிச்சுக்கிட்டோம்.

விடுமுறையன்னைக்கு ச்சும்மா ஒரு 'ரைடு'போகலாம். ரோடெல்லாம் 'ஜிலோ'ன்னு இருக்கேன்னு
கிளம்பிப் போனோம். சுத்திட்டு வர்றப்போ, கார்லெ இருக்கற ரேடியோவிலெ 'லோகல் நியூஸ்' கேட்டுக்கிட்டே
வந்தோமா, அப்ப அதுலெ சொல்றாங்க, கொழும்புத் தெருவிலே இருக்கற 'கவுண்ட் டவுன்' சூப்பர் மார்கெட்
இன்னைக்குத் திறந்திருக்கு. இந்த ஊர்லேயே இந்த ஒரு இடத்திலேதான் இன்னைக்கு கடை!

ஹாங்... நமக்குத் தெரியாமப் போச்சே. ச்சும்மாப் போய் என்னன்னு பார்க்கலாம்ன்னு அங்கெ போனா,
ஆளுங்க சூப்பர் மார்கெட் ட்ராலி நிறைய சாமான்களை நிரப்பிக்கிட்டு வெளியே வந்துகிட்டு இருக்காங்க.
எங்க இவரும் ஏதாவது வேணுமான்னு என்னைக் கேட்டாரா, நான் ஜஸ்ட் ரெண்டு டின் 'கேட் ஃபுட்'
வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். சரி. நீ போய் வாங்கிக்கிட்டு வந்துரு.பார்க்கிங் இடம் வேற கிடைக்காது
போலிருக்கு! நாங்க ( மகளும் இவரும்) வண்டியிலேயே இருக்கோம்ன்னு சொன்னாரு.

நான் கடை உள்ளெ போறேன். ஊரே அந்த ஒரு கூரைக்குக் கீழே! இந்த மாதிரிக் கூட்டத்தை நான் இங்கே
பாக்கறது இதுதான் மொதல்! ஹைய்யோடா...வெளியே போயிறலாம்ன்னு திரும்பினா, எனக்குப் பின்னாலே
இன்னும் ஜனம் வந்து சேர்ந்துச்சு! முன்னாலே போய், சுத்திக்கிட்டு 'எக்ஸிட்'லேதான் வெளியே போகணும்!

எனக்கு முன்னாலே இருக்கற கூட்டம் எல்லாம் சொல்லி வச்சாப்போல ஒரு பக்கமாச் சாஞ்சாங்க. அடுத்த நிமிஷம்
அவுங்க கையிலே இருக்கு ஃப்ரெஞ்ச் ப்ரெட்! நீஈஈஈஈஈஈஈளமா, ஒல்லியா இருக்குமே அது! இன்ஸ்டோர் பேக்கரி
ஆளுங்க சலிக்காம ட்ரே ட்ரேயா ப்ரெட்டுங்களைக் கொண்டுவந்து குவிக்கறாங்க. ஜனமும் பால்மாறாம எடுத்துக்கிட்டே
இருக்கு! மெதுமெதுவா 'க்யூ' முன்னேறுது!

அடுத்த சில நிமிஷத்துலே என் கையிலேயும் ஒரு ப்ரெட். இந்த வகை ப்ரெட்டை நாம் எப்பவுமே வாங்கறது இல்லே.
இது இங்கே லஞ்சு, டின்னருக்குண்டானது! நமக்குத்தான் 'மெயின்' சோறும், சப்பாத்தியுமாச்சே! நாம வழக்கமா
வாங்கறது ப்ரேக் ஃபாஸ்ட்க்கான டோஸ்ட் ஸ்லைஸ்டு ப்ரெட்.

வளைஞ்சு வளைஞ்சு வரிசை நகர்ந்துகிட்டே இருக்கு. கடைன்றது வாழ்நாளிலேயே இன்னைக்குத்தான் கடைசின்னு
ஜனங்க நினைச்சுட்டாங்க போல! ரெண்டு பக்கம் 'ஐலில்' கையிலே கிடைக்கறதையெல்லாம் இந்தக் கையிலேயும்
அந்தக் கையிலேயுமா எடுத்து எடுத்து ட்ராலிங்களை நிரப்பிக்கிட்டே போறாங்க.

இதுக்கு நடுவிலே நானும் ட்ராலியை மெதுவாத் தள்ளிக்கிட்டே ஊர்ந்து போறேன். இந்த ட்ராலி எப்படி என் கையிலே
வந்துச்சுன்னே தெரியலை! ட்ராலி மெதுவா நிரம்பிக்கிட்டு இருக்கு. நான் போய் ரொம்ப நேரமாச்சே,இன்னும் ஆளைக்
காணோமேன்னுட்டு, இவுங்க பார்க்கிங் கிடைச்சவுடனே வண்டியை நிறுத்திட்டு, என்னைத் தேடிக்கிட்டு கடை உள்ளே
வந்தாங்க. அவ்வளோதான்! கூட்டத்துலே இவுங்களும் மாட்டிக்கிட்டாங்க. ஒருவழியா அதுலே நீச்சலடிச்சு என்னைக் கண்டு
பிடிச்சிட்டாங்க. மகள்தான் ச்சின்னப் புள்ளையாச்சே. அவதான், கூட்டத்துக்குள்ளே,ச்சின்னச் சின்ன இடைவெளிலே
மெதுவா நுழைஞ்சு,அப்படி இப்படின்னு என்னைக் கண்டு பிடிச்சுட்டா! 'செக் அவுட்' கிட்டே கொஞ்சம் மூச்சுவிடவும்
தாராளமா நகரவும் இடம் இருந்தது!

என்ன, 'கேட் ஃபுட்' வாங்க வந்துட்டு, இவ்வளோ சாமான் ட்ராலிலேன்னு இவர் கேக்கறார். அப்பத்தான் 'கேட்ஃபுட்' எடுக்க
மறந்தது நினைவுக்கு வருது. இப்ப இந்த வரிசையை விட்டுட்டா, மறுபடி வரிசையோட 'வாலை'ப் பிடிக்கணுமேன்னு இருந்தது.
இப்ப வீட்டுலே இருக்கறது ஒரு நாலைஞ்சு நாளைக்கு வரும். அப்புறம் நம்ம வீட்டுக்கிட்டே வாங்கிக்கலாம்ன்னு சொல்றேன்.
அதுக்குள்ளே மக சொல்றா, அவ போய் எடுத்துக்கிட்டு வராளாம்! நம்ம பூனைங்க சாப்பிடுற வகை என்னன்னு அவளுக்கும்
தெரியுமே! அதே மாதிரி, கூட்டத்துலே சந்துலே புகுந்து போய் ரெண்டு டின்னைக் கொண்டும் வந்துட்டா!

ஏதோ மூளைச் சலவைன்னு சொல்றாங்களெ, அதை எனக்குப் பண்ணிட்டாங்களொ இல்லே மூளையவே கழட்டிட்டுப்
போயிட்டாங்களொன்னு தெரியலை அன்னைக்கு!

அப்புறம் என்ன, நாங்க ட்ராலி நிறைய சாமான்களை வச்சுத் தள்ளிக்கிட்டு வெளியே வர்றப்ப, கடை 'என்ட்ரீ'லே
இன்னோரு கூட்டம் திமுதிமுன்னு நுழையுது!

இதோ கடையுள்ளே நுழைஞ்சுட்டேன். வீட்டுக்கு எப்பத் திரும்புவேன்னு தெரிலை! எதுக்கும் இப்பவே சொல்லிடறேன்.
அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் ஈவ் வாழ்த்துக்கள்!!!

*************************************************************************************



Wednesday, December 22, 2004

படா தின்!!!!

இன்னைக்கு படா தின்! நீண்ட பகல் உள்ள நாள்! சூரியன் ரொம்ப சீக்கிரமா வந்துருவார்! அதிகாலையிலே
ஒரு நாலு மணிக்கெல்லாம் சூரியோதயம்! அஸ்தமனமும் இரவு 9 மணிக்கு!



இப்ப எங்களுக்கு பகல் நேர சேமிப்பு ( எந்த 'பேங்'குலேன்னு கேக்காதீங்க!)வேற நடக்கறதாலே
காலை 3 முதல் இரவு 10 வரை வெளிச்சம் இருக்கும்!


பூமத்திய ரேகைக்கு தெற்கே இருக்குறோமே! அதுவும் உலக உருண்டையிலே பார்த்தீங்கன்னா உலகத்தின்
கோடியிலே! ரொம்பக் கீழே!

' பராசக்தி'யிலே ஒரு வசனம் இப்படி வரும் பாருங்க! ஓடினாள், ஓடினாள், உலகத்தின் கோடிக்கே ஓடினாள்!

அந்த மாதிரி உலகத்தின் கோடிக்கு ஓடிவந்திருக்கோம்!

எங்களுக்கு ( தெக்கத்திக்காரங்களுக்கு) இதுதான் 'லாங்கஸ்ட் டே!'

அதனாலேதான், சினிமா எடுக்கறவுங்களுக்கு இந்த சமயம் இங்கே வர்றது ரொம்பப் பிடிக்குமாம்!
நிறைய நேரம் வெளிச்சம் இருக்கறதாலே, வேலையை முடிக்க ஏதுவா இருக்காம்!


நாளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாப் பகல்ப்பொழுது சுருங்க ஆரம்பிச்சிரும்! ஜூன் 22 வந்தா
அது ச்சின்ன பகல்பொழுது நாள்,'ஷார்ட்டஸ்ட் டே!'


இதுவே ஃபிஜியா இருந்தா, ஆஜ் படா தின் ஹை! ஆடு ஒண்ணு வெட்டு ஹை! ன்னு இருக்கும். 'காவோ
பீவோ, மஜா கரோ' ன்னு இருப்பாங்கன்னு சொல்லவும் வேணுமா?


Tuesday, December 21, 2004

சல்லியம் !!!

இந்த ஆளுங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை!
இன்னைக்கு ஒரு ஃபோன் வருது.

"உங்க வீட்டை விக்கப் போறீங்களா?"



"இல்லையே"

'உங்க வீடு .....ஏரியாலெதானே இருக்கு?"

"ஆமாம்"

"அங்கேதான் வீடு தேடிகிட்டு இருக்கேன், விக்கறதுக்கு!"

"அது இருக்கட்டும். நீங்க யாரு?

நான் .....ரியல் எஸ்டேட் லிருந்து பேசுறேன்.

பேசறேன்னா .. பேரு இல்லையா?"

"என் பேரு ..... உங்க வீட்டை வித்துத் தரட்டா?"

"வித்துட்டு நான் எங்கே போறது?" ( இது என்னடா சல்லியம்?)

"உங்களுக்குத் தெரிஞ்சவுங்க யாருக்காவது வீட்டை விக்கணுமா?"

இது கொஞ்சம் ஜாஸ்தியா இல்லே? எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா கோபம் வருது. கிறிஸ்மஸ் சமய
குட்வில் எல்லாம் காணாமப் போகப்போகுது!

"எனக்குத் தெரியாது! ஏன்? உங்க வீட்டையே வித்துக்கலாமே."

"அப்ப கட்டாயம் உங்க வீட்டை விக்கப்போறதில்லையா? நல்ல விலைக்கு வித்துத் தர்றேன்."

திஸ் இஸ் த லிமிட்.

"இந்த மாதிரி இனிமேல் ஃபோன் செஞ்சு தொந்திரவு பண்ணாம இருங்க."

ஃபோனைக் கட் செஞ்சேன்.

இங்கே 'ரியல் எஸ்டேட் பிஸினஸ் ரொம்பக் கொழிக்குது! நல்ல கமிஷன் கிடைக்கும் அவுங்களுக்கு.
அதுக்காக இப்படியா ஃபோன் செஞ்சு ,'உன் வீட்டை விக்கறயா'ன்னு கேப்பாங்க?

கொஞ்சம் ஏமாந்தா, என்னைத் தூக்கி முதியோர் இல்லத்துலெ கடாசிட்டு, இந்த வீட்டை வித்துருவாங்க போல!

இது என்ன விதமான பிஸினெஸ் அப்ரோச்?

என்ன ஆனாலும் சரி. இந்த வீட்டை விக்கறதுன்னா, இந்த.... ரியல் எஸ்டேட் ஆளுங்களை நம்ம
ஏஜண்டா வைக்கக்கூடாது!





Monday, December 20, 2004

அவள் ஒரு தொடர்கதை?

நான் மொத மொதலா எழுத(!) ஆரம்பிச்சது மரத்தடியிலெதான். அப்புறம் இ-சங்கமத்துலே
இப்ப வசிக்கற நாட்டைப் பத்தி எழுதிகிட்டு (ஒரு தொடர்) இருக்கேன். ஏன் 'தொடர்'ன்னு கேட்டா,
நறுக்குன்னு சொல்றது, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கறது, இப்படியெல்லாம் எனக்குப் பழக்கமே
இல்லை! எல்லாத்தையும் 'விஸ்தரிச்சுச்' சொல்லணும்!



மரத்தடியிலே சில கட்டுரைகள் ( அதுவும் ஒரு மாதிரி தொடர்தான்!) வந்துக்கிட்டு இருக்கு. அதைப்
பத்தித் தெரியாதவங்களுக்காக இங்கே ஒரு 'லிங்க்' கொடுக்கறேன்.

இங்கெயும் அங்கெயுமா ரெண்டு இடத்துலெயும் போடலாமாம். அது வேண்டாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன்.

அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

ஏற்கெனவே இதையெல்லாம் படிச்சவுங்க(!) தயவு செஞ்சு கோவிச்சுக்காதீங்க.
http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166

தொழில்நுட்ப அறிவு இல்லாததாலெ லிங்க் சரியாக் கொடுக்கமுடியலை!

copy & paste பண்ணிடலாம்( எல்லாம் ஒரு குறுக்கு வழிதான்!)

அப்புறம் பார்க்கலாம். சரியா?

Saturday, December 18, 2004

முட்டைக் கோஸ்........!!!!!

இன்னைக்கு இங்கே ஒரு 'கிறிஸ்மஸ் பார்ட்டி!' பார்ட்டின்னு சொல்றதைவிட விழான்னு சொன்னா
பொருத்தமா இருக்கும்.



அதான் டிசம்பர் மாசம் பொறந்ததிலிருந்து நடந்துகிட்டே இருக்கே. இதிலே என்ன அப்படி விசேஷம்?

இருக்கே! மத்ததெல்லாம் பார்ட்டிங்க! ஆஃபீஸ்லே மேலதிகாரிங்களுக்கும், அவுங்க 'பார்ட்னர்'களுக்கும்
சி.இ.ஓ. கொடுக்கறது, நமக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கு நாம கொடுக்கறது, பெண்களுக்கு,
ஆம்பிளைகளுக்குன்னு தனித்தனியா, அப்புறம் நாம 'வாலண்டியரா'வேலை செய்யற இடத்துலேன்னு
வித விதமானதுங்க!

பிடிக்குதோ பிடிக்கலையோ அநேகமா எல்லாத்துக்கும் போகணும். அது மட்டுமா? ஒரு பொய் முகம்வேற
போட்டுக்க வேண்டியிருக்கும். எல்லோரும் 'தீர்த்தமாடிண்டிருப்பா!' நாம எதிலும் பட்டுக்காம 'சிரிச்ச முகமா'
ஒரு ஆரஞ்சு ஜூஸையோ, மினரல் தண்ணியையோ வச்சிக்கிட்டு, எப்படா 'மெயின்' வரும். தின்னதா பேர்
பண்ணிட்டு வீட்டுக்கு ஓடலாம்ன்னு இருக்கும்.

இதுலே இன்னும் சுதி ஏற ஏற, ஸ்மால் டாக்(அபத்தமான)கேள்விங்கெல்லாம் புறப்படும். அசட்டுத்தனமா சில
பேச்சுப் பரிவர்த்தனைகள்!

'மெயின் கோர்ஸ்' வந்தாலும், மத்தவுங்க என்னென்னமோ சாப்பிடறப்ப, நம்ம 'வெஜிடேரியன் ஐட்டம்'தான்
எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்! அது நல்லா இருக்கா? நல்லா இருக்கா? அப்படின்னு ஆளு மாத்தி
ஆளு கேட்டுக்கிட்டே இருக்கும். 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ( வயிறெரிய) சொல்லணும். இதுலே பரிமாறின
ஆளு வேற, ரொம்ப அக்கறையோட, தானே சமைச்ச மாதிரி, நம்மகிட்டே வந்து 'ஸ்பெஷலா' ரெண்டுமூணு தடவை
நல்லா இருக்கான்னு கேட்டுகிட்டே இருப்பார். இதெல்லாம் இப்பப் பழகிப் போச்சுன்னு வச்சிக்குங்க.

இப்பல்லாம் ரொம்ப இயல்பா மூஞ்சியை வச்சிகிட்டு, ரொம்பவே இந்தப் பார்ட்டிங்களையெல்லாம் அனுபவிக்கறமாதிரி
இருக்க முடியுது! ரெஸ்டாரெண்ட்டிலே நுழையறப்பவே 'ஜிம் கேரி'க்கு மாஸ்க் ஒட்டிகிட்ட மாதிரி நமக்கும் வந்து ஒட்டிக்கிது!

அது போட்டும்! இப்பப் போன விழா, நம்ம கேரள சமாஜம் ஏற்பாடு செய்தது! இதுலே சமையல் எல்லாம் நம்ம 'நாடன் ஸ்டைல்'
புள்ளைகுட்டிங்கெல்லாம் கலந்து இருக்கறதாலெ 'தண்ணி' கிடையாது!

வழக்கமா ஒரு மாசத்துக்கு முந்தியே ஒரு மீட்டிங் வைச்சிருவாங்க. அப்ப என்ன 'மெனு' ன்னு தீர்மானமாகும். ஒண்ணும் விட்டுறக்
கூடாது! எல்லா வகைக்கும் சமைச்சுக்கொண்டு வரப்போற ஆளுங்களையும் முடிவு செஞ்சிருவாங்க. மொத்த செலவையும் கடைசியிலே
பங்கு போட்டுக்குவோம்.

இந்த முறை எனக்குக் கிடைச்சது'தோரன்'

பிரதம விருந்தாளியா வர்றவுங்க ஒண்ணும் கொண்டு வரவேணாம்!!!!

இந்த முறை நமது பிரதம விருந்தாளி, இங்கத்து உதவி பிரதமரே! இங்கெல்லாம் 'பந்தா'வெல்லாம் கிடையாது. எந்த விழாவுக்கும்
அரசியல்வாதிங்களை, அமைச்சர்களை,அரசாங்க அதிகாரிகளைன்னு தாராளமாக் கூப்பிடலாம். அவுங்களும் நேரம் அமைஞ்சதுன்னா
வந்துருவாங்க!

இன்னும் சொல்லப்போனா, உதவிப் பிரதமர் எங்க ஊர் எம்.பி.தான். நாமெல்லாம் இங்கே 'எத்னிக்' கூட்டங்கறதாலே, நம்ம
அழைப்புங்களுக்கு விசேஷ மரியாதையும் இருக்கு!

'டாண்'ன்னு சொன்ன நேரத்துக்கு உதவிப் பிரதமர் தானே காரை ஓட்டிக்கிட்டு வந்து சேர்ந்தார்! கறுப்பு, வெளுப்பு, சிகப்பு, பச்சைன்னு
ஏதாவது பூனைங்க படை வரும்ன்னு பார்த்தா ஒண்ணையும் காணாம்!

ச்செண்டை வாத்தியம் முழங்க ( எல்லாம் டேப் தான்!)'தாலப்பொலி'யோடு வரவேற்பு!

ஆரம்ப நிகழ்ச்சிகள் ஆனபிறகு, 'சீஃப் கெஸ்ட்' பேசினார். வழக்கமான 'அரசியல்வாதி'களின் பேச்சு. என்ன வித்தியாசம்ன்னா
இவர் பேச்சு இங்கிலீஷ்லே! அப்புறம் கலை நிகழ்ச்சிகள்! உணவு இடைவேளை!

நாமே இங்கெ, எப்பப் பார்த்தாலும் முட்டைகோஸைத் தின்னுக்கிட்டு இருக்கமே. அலுத்துப் போச்சுன்னு சொல்றவிதமா அவருக்கும்'முட்டைக்கோசு'
கொடுக்கலாம்ன்னு நானு 'முட்டைக் கோஸ் தோரன்' ஆசைஆசையா(!)கொண்டுபோயிருந்தேன்.

சாப்பிடறதுக்கு ஆசைதான், ஆனா வேற (!) ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்ன்னு சொல்லி எங்க சாப்பாட்டிலிருந்து தப்பிச்சுக்கிட்டுப்
போயிட்டார்! அவருக்குக் கொடுத்துவைக்கலே!

சரின்னு உங்களுக்கு இந்த 'ரெஸிபி'யைப் போடுறேன்! 60 பேருக்கு பண்ண அளவைச் சொல்லாம, இது கொஞ்சமான அளவு.

முட்டைக்கோஸ் தோரன்
*******************

முட்டைகோஸ் பொடிப்பொடியா நறுக்கினது 2 கப்

பச்சைப் பட்டாணி (ஃப்ரோஸந்தான்) கால் கப்

காரட் மூணு இஞ்சு நீளம் ( எல்லாம் இது போதும். ச்சும்மாஒரு கலருக்குத்தான்)துருவி வச்சுக்கணும்.

மிளகாய்ப் பொடி அரைத் தேக்கரண்டி ( காஞ்ச மிளகாயைக் கிள்ளிப் போடலாம். அதை எடுத்து எறியலென்னா சின்னப்
புள்ளைங்க தப்பாக் கடிச்சிறப்போது! கவனமா இருக்கணுமில்லை. கூட்டத்துலே இது முடியுமா?)

உப்பு இதுவும் அரைத் தேக்கரண்டி போதும். வேணுமுன்னா இன்னும் சேத்துக்கலாம் கடைசியில்!

கடுகு, கருவேப்பிலை

பயத்தம் பருப்பு ( பாசிப்பருப்புதாங்க) ரெண்டு டேபிள் ஸ்பூன். மொதல்லேயே ( இன்னைக்குத் தோரன்ன்னு முடிவு செய்வீங்கல்ல,
அப்பவே) ஊறவச்சிடுங்க.

கொஞ்சம் தேங்காய் துருவல். ( எல்லாம் டெஸிகேட்டட் போதும்) ஒரு டேபிள் ஸ்பூன்.

எண்ணெய் ரெண்டு டேபிள் ஸ்பூன். மீனாட்சி அம்மா புஸ்தகத்துலெ இருக்கறது போல ரெண்டு 'முட்டை'க்கரண்டி!

செய்முறை
**********

மைக்ரோவேவ்லே ( வந்துட்டாடா, மைக்ரோவேவ்காரின்னு யாரோ அங்கெ முணங்கற சத்தம் கேக்குது!) இந்தப் பருப்பை ஒரு 3 நிமிஷம்
வேகவச்சு எடுத்துகிட்டு, தண்ணியை வடிச்சிருங்க! என்னாத்துக்கு இவ்வளோ கஷ்டம்ன்னு இருந்தா வேணாம். அப்படியே ஊற வச்சப்
பருப்பை, தண்ணியை வடிகட்டி வச்சிக்குங்க.

ஒரு வாணலியிலே, எண்ணெய் ஊத்திக் காஞ்சதும் கடுகு போட்டு, வெடிக்கவிட்டு,மிளகாய்ப் பொடி கருவேப்பிலையையும் போட்டு,ஊற வச்ச பருப்பையும்
போட்டு, ஒரு கரண்டியாலெக் கிளறுங்க.அந்த சூட்டுலேயே பாதி வெந்துரும். அப்புறம் மு.கோஸைப் போடுங்க.உப்பையும் சேர்த்துடுங்க.
இங்கெல்லாம் வேகணுமேன்னு முட்டைக்கோஸுக்குத் தண்ணியே விடவேணாம். அதுலெயே எக்கச்சக்கத் தண்ணி. பொதபொதன்னு இருக்கும்.
அதுக்குள்ளெ மைக்ரோவேவ்லே( முணுமுணுக்காதீங்க) பச்சைப் பட்டாணியை வச்சு ச்சும்மா ஒரு நிமிஷம்வேகவிடுங்க. அதுலெயே 'டீஃப்ராஸ்ட்டு'
ஆகி, வெந்தும் போகும். கால் கப்புக்கென்ன சவரட்சணை?

அதையும், துருவிவச்சக் காரட்டையும் இப்ப சேர்த்திருங்க. இன்னும் ரெண்டு நிமிஷம் வேகட்டும்.கடைசியா நம்ம தேங்காய்த்துருவல்.
அவ்வளவுதான். ரொம்பக் கொசகொசன்னு வேகாம திட்டமா இருக்கும்!

என்ஜாய் யுவர் முட்டைக் கோஸு!

பி.கு: இதை எழுதறதுக்கு எடுத்த நேரத்துலெ, செஞ்சு சாப்பிட்டே முடிச்சிரலாம்!

*************************************************************************************


Friday, December 17, 2004

அலை அலை நுண்ணலை!!!!!

கை ஒடிஞ்ச மாதிரின்னு சொல்வாங்களே, அதேதான்! நமக்கு ஒரு புது மைக்ரோவேவ் அடுப்பு வாங்கணும்!

ஏன் இத்தனை நாள் வச்சிருந்ததுக்கு என்ன கேடு? ஏன் புதுசா ஒண்ணு?


ஹி, ஹி.. அது ஒண்ணும் இல்லே! மகள் தனிக்குடித்தனம் போயிட்டா. அவளுக்கு ஒரு மைக்ரோவேவ்
வேணுமாம்.


ரெண்டு வாரமா இங்கெ இருக்கற சாமான்களை அவ எடுத்துகிட்டுப் போறதும், அதுக்குப் பதிலா நான்
புதுசு வாங்கறதுமா நடந்துகிட்டு இருக்கு! அந்தக் கணக்குலே இப்ப மைக்ரோவேவ்!

ஐய்ய, புதுசைப் புள்ளைக்குக் கொடுக்காம பழசையாக் கொடுக்கறது?

இப்ப என்ன, கலியாணம் முடிஞ்சாத் தனிக்குடித்தனம்? ச்சும்மா ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்துகிட்டு
ஃப்ளாட் எடுத்துத் தங்கறதுதானே? எல்லாம் இது போதும். ( ஆகி வந்த பொருளுங்க!)

என்ன? கல்யாணம் ஆகலையா? அப்ப ஏன் தனிக்குடித்தனம்?

'கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து!!!! ஆத்தைவிட்டுப் பறந்து போயிடுத்து!!!!!'

இங்கெல்லாம், 20 வயசு ஆயிருச்சுன்னா, அப்பா, அம்மாகூட இருக்கறது கேவலமாம்! ஹ்ங்ங்..

அதனாலே இந்தப் பசங்க ( பொட்டைப் புள்ளைங்களும் சரி, ஆம்புளைப்புள்ளைங்களும் சரி) வேற வீடு பார்த்துக்கிட்டுப்
போகுதுங்க! தனியாப் போனா வாடகை கட்டுப்படி ஆகாதுல்லே! அதனாலெ ஃப்ளாட்டிங்!

மூணு, நாலு பேராச் சேர்ந்துக்கிட்டு வசிக்கறது. ஆளுக்கு ஒரு நாள் சமையல், பாத்திரம் கழுவறதுன்னு! ஒரு விதத்திலே
நல்லதுதான்! நம்மகூட இருக்கறப்ப காஃபி குடிச்ச டம்ப்ளரைக் கூட எடுத்து 'ஸிங்'குலே போட முடியாது! அங்கே பறந்து
பறந்து வேலை செய்யுது! எல்லாம் நன்மைக்கே!

இதுலே பாருங்க, ஒரு 'இன்ட்ரஸ்ட்' ஆன விஷயம், ஆம்புளைப் பசங்க அவ்வளவா ஃப்ளாட்டிங் போறதில்லே. மகளிர்தான்
இந்த அட்டகாசம்! அட, வெளியூர்லே படிப்புன்னாக்கூட ப்ரவாயில்லே. அடுத்த தெருவிலே இருக்கு வீடு! கொஞ்சம் 'கத்திக்
கூப்பிட்டா' கேக்கற தூரம்தான்!

எல்லாப்பசங்களும், அவுங்க அவுங்க வீட்டுலே இருந்து சாமான் கொண்டாருதுங்க. நம்ம பொண்ணு மைக்ரோவேவ்!

இப்படித்தான் எல்லா அம்மாங்களும் வீட்டுச் சாமான்களை 'அப் க்ரேடு' செஞ்சுக்கறது!

நான் கடை கடையா விலை, மற்றும் விவரம் கேக்கறதுக்குப் போனேன். இப்ப 'கிறிஸ்மஸ் சேல்' வேற நடக்குதே!

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், உள்ளேயும், வெளியேயுமா ஒண்ணு இருக்கு. அளவும் நமக்குத் தகுந்த மாதிரிதான்! விலையும் ஓக்கே!

வாங்கிட்டு வந்தாச்சு! வர வழியிலேயே மகளுக்கு ஃபோன் போட்டு, விஷயத்தைச் சொன்னேன். நாங்க வீடு வந்து சேர்றதுக்குள்ளே
மகள் இங்கே 'ஆஜர்!'

உடனே எடுத்துகிட்டு இடத்தைக் காலி செஞ்சுட்டா! புதுசைத் திறந்து வெளியே எடுத்து அழகை ரசிச்சேன்! அட்டகாசமா இருக்கு!
எனக்கு 'எவர்சில்வர்' ரொம்பப் பிடிக்கும்! எது பிடிக்காதுன்னு கேட்டுறாதீங்க! எனக்கு எல்லாமே பிடிக்கும்! வேணுன்னா எது
ரொம்ப, எது கொஞ்சம்ன்னு கேக்கலாம்!

எவர்சில்வர்லே இன்னும் புடவை வரலேல்ல? இல்லெ, எனக்குத் தெரியாம வந்திருச்சா?

மின்சார இணப்புக் கொடுத்து சரியா வேலை செய்யுதான்னு பார்த்தேன். அப்பத்தான் தெரிஞ்சது, இதுலே நிறைய 'ஆட்டோமேட்டிக்
குக்கிங்' வசதி இருந்தாலும், மேனுவல் ஆபரேஷன்'லே ச்சும்மா ரெண்டு 'ஸ்டேஜ் குக்கிங்'தான் இருக்கு!

ஐய்யய்யோ, நமக்கு வேணுங்கறது 3 ஸ்டேஜ் குக்கிங் ஆச்சே!

ஆட்டோமாட்டிக்கா சமைக்குதுன்னாலும், அது பண்ணற லொள்ளு இருக்கே! கொஞ்ச நஞ்சமா? கொஞ்சநேரம் சமைக்கும். அப்புறம்
கூப்பிடும். எதுக்கு? 'செக்'செய்யணுமாம்! அப்புறம் ஸ்டார்ட் அமுக்கணும். இன்னொரு கூப்பாடு! மூடி போடணுமாம்!

இதுலேயேயே 'மோர் இல்லேன்னா தயிர்.ச்ச்சீச்சீ... மோர் இல்லாட்டா லெஸ் சோறு சரியா வேகலேன்னா இன்னும் கொஞ்சநேரம்
கூடுதலா வேகவச்சுக் கொடுக்குமாம்!

இந்த மாதிரி அடுப்புகிட்டே நின்னுகிட்டே அது சொல்றதுக்கெல்லாம் ஆட முடியாது! எனக்குத் தேவை 3 நிலை! அரிசியைக் கழுவி
அதுக்குன்னு இருக்கற மைக்ரோவேவ் ரைஸ் குக்கர்லே போட்டு, 5 நிமிஷம் ஃபுல் பவர், 5 நிமிஷம் மீடியம் ஹை, 10 நிமிஷம் மீடியம்.
ஆச்சு சோறு!

வெளியே ஓடுற அவசரத்துலே இதை மைக்ரோவேவ் அடுப்புலே கடாசி, மெமரிலே வச்சிருக்கற நம்பரை போட்டோமா, போனோமான்னு
இருக்கணும். திரும்பி வந்தா 'சோறு' ரெடி!

இது மட்டுமா! அஞ்சு நிமிசக் குக்கிங், ஊற வச்ச பருப்பைக் கிள்ளுப் பதமா வேகவைக்க ( பொரியலுக்குப் போட)அப்புறம் அப்பப்ப
காஃபி, டீன்னு இப்படி பலவிதம் இருக்கே!

இது சரிப்படாதுன்னு, மறுநாளே திருப்பிக் கொடுத்துட்டு, நமக்கு வேணுங்கற மூணு நிலை வாங்கலாம்ன்னு போனா, விற்பனைப் பிரிவு
பெண்மணி, 'எனக்கு இந்த மாதிரி 3 ஸ்டேஜ் இருக்குன்னு தெரியாது. எல்லா புஸ்தகமும் இருக்கு. நீங்களே பாருங்க'ன்னு சொல்லிட்டாங்க.

அப்படியே இதுலெ சமையல் செஞ்சீங்களான்னு கேட்டாங்க. 'சமையல் செய்ய இது தோது இல்லேன்னுதானே திருப்பித்தரேன்'னு
சொன்னேன்.

அப்புறம் ஒரு அடுப்பு கிடைச்சது! புஸ்தகத்துலெதான்! இங்கே, எங்க 'வேர்ஹவுஸ்'லே அது இருக்கான்னு பார்த்துட்டு உங்களை ஃபோன்லே
கூப்பிடறேன்னு சொன்னாங்க.

"அப்படி இருந்தா நாளைக்கு வந்து எடுத்துக்கட்டுமா?"

" இருக்கான்னு தெரியாது. இல்லைன்னா வேற இடத்துலே இருந்து வரவழைக்கணும். அதுக்கு நாலைஞ்சு நாள் ஆகும்"

" ஐய்யோ! நான் எப்படி உயிர்வாழறது? தினமும் 'டேக் அவே'தானா?"

" வேற அடுப்பு இருக்குல்லே?"

" இல்லையே!" உண்மையைச் சொல்ற 'பாவனை'யைக் கஷ்டப்பட்டு முகத்துலே கொண்டுவர முயற்சிக்கிறேன்!

இப்போது அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு சிரிப்பு. " இங்கேயிருந்துதானே ஒரு கேஸ் அடுப்பு முந்தி வாங்கியிருக்கீங்க. கம்ப்யூட்டர்
சொல்லுதே!"

" மைக்ரோவேவ் இல்லைன்னா எனக்கு நிஜமாவே கஷ்டம்தான்!"

"அப்ப ஒண்ணு செய்யறேன். உங்ககிட்டே வேற அடுப்பே கிடையாது.உடனே கொண்டுவந்து தரணும்ன்னு ஒருவரி அந்த ஆர்டர்லே
எழுதறேன். உடனே கவனிப்பாங்க!"

"அதுசரி, அந்த திருப்பிக் கொடுத்த அடுப்பிலே ஒண்ணுமே சமைக்கலையா?"

"ஒண்ணும் சமைச்ச ஞாபகம் இல்லையே. ஏன் கேக்கறீங்க?"

"இப்ப அதை மறுபடி சரியா பேக் பண்ணின ஆளு, அதுலே 'ஸ்பைஸ்'வாசனை வருதுன்னு சொன்னாரு"

" அந்த வாசனை என் மேலே வருதோ என்னமோ? சரி. நாளைக்கு ஃபோனை எதிர்பார்ப்பேன்"

வீட்டுக்கு வந்தா, என்னமோ கை ஒடிஞ்சது போல வேலையே ஓடலை! காஃபிக்குப் பால் காய்ச்சி, அந்தப் பாத்திரத்தை வரட்டு, வரட்டுன்னு
தேய்க்கும்படி ஆச்சு!

இதுக்கு நடுவிலெ நேத்து என்னத்தைச் சமைச்சோம் ன்னு மண்டைக்குள்ளே ஒரே குடைச்சல்!

சரி, இன்னும் மத்த கடைகளிலே அந்தப் புஸ்தகத்துலே போட்டிருந்த மாடல் இருக்கான்னு பார்க்கலாம்ன்னு இன்னோரு ரவுண்ட் போனோம்.

ஆஹா! ஒரு கடையிலே ஆப்டுக்கிச்சு! அதைத் திறந்து பார்த்து, அதுக்குள்ளெ இருக்கற விவரங்கள் அடங்கின பேப்பருங்களையெல்லாம்
விலாவரியாப் படிச்சுட்டு அதுதான் தேவைன்னு முடிவாயிடுச்சு!ஆனா இந்த மாடல் விலை கூடுதல். ஏற்கெனவே கொடுத்திருந்த காசைவிட இன்னும்
கூடுதல் தரணும்.

மறுபடி, வாங்கின கடைக்கே வந்து அந்த ஆர்டரை ரீ கன்ஃபர்ம் செஞ்சுட்டு வந்தோம். கொஞ்சம் பேரமும் பண்ணினேன். அதுக்கு பலனும்
கிடைச்சது. ஒரு 20 டாலர் கம்மி பண்ணாங்க!

வீட்டுக்கு வரும்போது, நினைச்சுகிட்டே வரேன். 'இந்த நவீன சாதனங்கள் இல்லாம இருக்கவே முடியலையே. ஒரு காலத்துலே இதெல்லாம்
இல்லாமதானே இருந்தோம். விஞ்ஞானம் வளர வளர மனுஷன் அதுக்கு அடிமையா ஆயிட்டானே! இது ரொம்ப மோசம்!'

இதுலே 'நம்ம ஆச்சிமகன்' வேற நுண்ணலை அடுப்புங்களோட ஆபத்தைப் பத்தி ரெண்டு மூணு பதிவு போட்டிருந்தார். அதையெல்லாம்
படிச்சும்,'திருந்தாத ஜன்மம்' யாரு? எல்லாம் நாந்தான்! வேற யாரு?

இன்னைக்கு ஏதாவது சுலபமா சமைக்கணுமே! என்ன காய் இருக்குன்னு ஃப்ரிஜ்ஜைத் திறந்து பாக்கறேன். மேல்தட்டுலே ஒரு பாத்திரத்துலே
என்னமோ மூடி வச்சிருக்கு. அப்பத்தான் ஞாபகம் வருது எப்படி 'ஸ்பைஸ்' வாசனை மைக்ரோவேவ் அடுப்புலே வந்திருக்கும்ன்னு.

நேத்து ராத்திரி, புளியோதரையை 30 விநாடி சூடு செஞ்சு சாப்பிட்டேனே!

மறுநாள் அடுப்பு வந்திருச்சான்னு கேட்டு, வந்துருச்சுன்னதும் உடனே பாய்ஞ்சு போயிக் கொண்டுவந்துட்டேன்!

( சின்னக் குரலிலெ விற்பனைப் பிரிவு பெண்கிட்டே சொன்னேன், புளி சாதம் சுடவச்சதை! அது ஜஸ்ட் ரீ ஹீட்டுதான்! சமையல் இல்லேன்னு!)
*****************************************************************************




Wednesday, December 15, 2004

ஜம்மு காஷ்மீரில் சென்னை? !!!!!

காலையிலே ஃபோன் அடிக்குது! நம்ம ட்ராவல் ஏஜண்ட் ஆஃபீஸில் இருந்து. புது ஆளு வேலைக்கு
வந்திருக்கு போல.


" சென்னை இருக்கறது ஜம்மு காஷ்மீரிலா?"

இது என்னடா புது விஷயமா இருக்கே!

சரி. ஆமான்னு சொல்லிப் பார்ப்போம்.

" ஆமாம். ஏன் கேக்கறீங்க?"

" மிஸ்டர் கோபால் சென்னைக்கு டிக்கெட் புக் செஞ்சிருக்காரே. அது டெர்ரரிஸ்ட் ஏரியான்னு
எங்களுக்கு விவரம் (!) இருக்கறதாலே அதுக்குத் தனியா ஒரு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கணும். அதுக்குத்
தான் இப்ப உங்களை இவ்வளவு காலையிலே கூப்பிடவேண்டியதாப் போச்சு!

நல்லாத்தான் விவரமா இருக்காங்க! எனக்குத்தான் தலையிலே அடிச்சுக்க ரெண்டுகை பத்தாது!

" சென்னையிலே ஆபத்து ஏதும் கிடையாது. அது இருக்கறது டீப் செளத். அதுக்கும் காஷ்மீருக்கும்
ரொம்ப தூரம். இன்ஷூரன்ஸ் வேணும்ன்னா அப்புறமா நானே ஃபோன் செய்யறேன். சரியா?

அங்கே உங்க ஆஃபீஸிலே ஒரு சுவர் முழுக்க இந்தக்கோடியிலே இருந்து அந்தக் கோடிவரை ஒரு
பெரிய உலக வரைபடம் இருக்கே. அதை ஒரு நாளு நேரம் இருக்கறப்பப் பாக்கலாமில்லே?...

இப்படிக் கேக்க ஆசையாத்தான் இருக்கு! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

ஆனா நான் சொன்னது 'ஹேவ் அ நைஸ்டே!'

Monday, December 13, 2004

கரும்புத் தின்னக் கூலியா?

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் நிஜமாகவே கடைசிப் பகுதி!


கிறிஸ்மஸ்ஸுக்கு என்ன செய்வீங்க? இந்தக் கேள்வியை எனக்குத் தெரிஞ்ச(!) அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்ககிட்டேயும், மகளோட
பள்ளிக்கூடத்துலே சந்திக்கறவங்ககிட்டேயும் விடாமக் கேட்டுகிட்டே இருக்கேன்.


"ஒண்ணும் பெருசா இல்லே. வெளியே சாப்பிடப் போறோம்"

" மாமியார் வராங்க. க்ராண்ட் கிறிஸ்மஸ் லஞ்ச்/டின்னர் சாப்பிடுவோம்!"

"முதியோர் இல்லத்துலே இருக்கற எங்க அப்பா/அம்மாவைக் கூட்டிக்கிட்டு வருவோம். மத்தியானம் எல்லோருமாச் சேர்ந்து சாப்பிட்ட
பிறகு திருப்பிக் கொண்டுபோய் விடுவோம்."

" ஃபேமிலியோட டின்னர்"

" கேர்ள் ஃப்ரெண்ட்/பாய் ஃப்ரெண்ட் வீட்டிலே சாப்பிடக் கூப்பிட்டிருக்காங்க!"

" ரொம்பக் கொயட் கிறிஸ்மஸ்தான். வெயில் வந்தா பார்க், பீச்சுன்னு போகறதா இருக்கோம்."

" காலையிலே எழுந்து, கிஃப்ட்டெல்லாம் பிரிச்சுப் பார்த்துட்டு, 10 மணிக்குச் சர்ச்சுக்குப் போகணும்"

நான் எதிர்பாக்கற பதில் இதுவரைக்கும் வரவே இல்லை! தாங்கமுடியாம கேட்டுட்டேன்,'நீங்க கிறீஸ்மஸ் ஈவுக்கு
ராத்திரி 12 மணிக்குச் சர்ச்சுக்குப் போவீங்கதானே?'

ஒரு ஆளு, ஒரே ஒரு ஆளு, ஆமாம்ன்னு சொல்லாதான்னு மனசுக்குள்ளே ஒரே ஆத்தாமை! வந்த பதிலு என்ன தெரியுமா?

"நாங்க அவ்வளவு ரிலிஜியஸ் கிடையாது!"

"அப்போ, மூலைக்கு மூலை இவ்வளவு சர்ச்சுங்க இருக்கே, அங்கெ யாருமே சாமி கும்பிடப் போகமாட்டீங்களா?"

" ஓ, எங்க க்ராண்ட் பேரண்ட்ஸ் சிலசமயம் போவாங்க!"

" சரி. கிறிஸ்மஸுக்குப் புதுத்துணி எடுத்தாச்சா? புது உடுப்பு போடுவீங்கதானே?"

" இல்லையே! புது உடுப்பு எல்லாம் கிடையாது!"

" என்ன! பண்டிகைக்கு புது உடுப்பு இல்லையா?"

பரிசு வாங்கறதுலெயும், கொடுக்கறதுலெயும் பரபரப்பா இருக்காங்களே அதுதான் கிறிஸ்மஸ்! இதுலே கடைக்காரங்கதான்
விக்கறதுலே தீவிரமா இருக்காங்க. எல்லாக் கடைகளிலும், மால்களிலும் கிறிஸ்மஸ் மரம் அலங்கரிச்சு வச்சிருக்காங்க.
கேரல்ஸ் மெல்லிசான குரலில் பாடிகிட்டே இருக்கு. அதுக்குன்னு இருக்கற டேப்பைப் போட்டுடுவாங்க போல. அது
பாட்டுக்குப் பாடிகிட்டே இருக்கு. அந்தப் பாட்டுங்கல்லாம் காதுவழியா மண்டைக்குள்ளே போய் நல்லா 'செட்டில்' ஆகிடுச்சு!
அதைக் கேக்கக் கேக்க எனக்கு என் ஸ்கூல் ஞாபகம் வந்துகிட்டே இருக்கு!

பலர் கணக்கு வழக்கில்லாம க்ரெடிட் கார்டை உபயோகிச்சு, பரிசுகள் வாங்கிடுவாங்களாம். அப்புறம் அதுக்குண்டான பணத்தைக்
கட்ட முடியாம ரொம்பவே கஷ்டப்படுவாங்களாம். அவுங்களுக்காக அரசாங்கமே 'பட்ஜெட் எப்படி செய்யணும்' ன்னு சொல்லிக்
கொடுக்க இலவச ஆலோசனைகள் வழங்க கவுன்சிலர்களை ஏற்பாடு செய்யுதுன்னு பேப்பர்லே செய்தி வந்துகிட்டே இருக்கு!
டி.வி. யிலேயும் அடிக்கடி வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் விளம்பரம் கொடுத்துக்கிட்டே இருக்கு!

நம்ம வீட்டு 'மெயில் பாக்ஸ்'லே 'பர்த்டே பார்ட்டி இன்விடேஷன்'களா வந்து நிறையுது! என்னன்னு பார்த்தா, அவ்வளவும்
நம்ம பேட்டையிலே இருக்கற வித விதமான சர்ச்சுங்களிலே இருந்து வந்திருக்கு! கிறிஸ்மஸ் தினத்துக்கு எல்லோரும் வந்து
'ஜீசஸ் பிறந்தநாளைக் கொண்டாடுங்க'ன்னு சொல்லி நம்மையெல்லாம் அழைக்கறாங்க. வெத்தலை பாக்குதான் பாக்கி!

டிசம்பர் 24! கிறிஸ்மஸ் ஈவ்! எனக்குச் சர்ச்சுக்குப் போய்ப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்கு. நம்ம தெருவிலேயே ஒரு
சின்ன சர்ச்சு இருக்கே! அங்கேயாவது போயிட்டு வரலாமென்னு மனசு துடிக்குது! எங்க வீட்டுக்காரரைக் கேட்டேன்.

"அதெல்லாம் வேணாம். நம்ம என்ன கிறிஸ்தவங்களா? ச்சும்மா ஒரு ரைடு வேணுமுன்னா போயிட்டு வரலாம்!"

அது போதுமே! கிளம்பி இந்த நகரத்தை ஒரு சுத்து சுத்திட்டு வரலாம். 'சிடி கவுன்சில்' மரங்களிலே எல்லாம் அலங்கார
லைட் போட்டு வச்சிருக்காங்களே. அதையெல்லாம் பார்க்கலாம்ன்னு போனோம். சுத்திக்கிட்டு இருந்தப்ப சர்ச்சு மணி
ஓசை கேக்குது! எங்கே இருந்து வருதுன்னு பார்த்தா, நாங்க அப்பப் போய்க்கிட்டு இருக்கற 'கொழும்புத் தெரு'விலே இருக்கற
தேவாலயத்துலே இருந்துதான் மணியோசை வருது! மணி ராத்திரி பதினொன்னரை! உள்ளே போய்ப் பார்க்கலாமான்னு கேட்டேன்.
என் ஆசையை ஏன் கெடுப்பானேன்னு இவரும் சரின்னு சொல்லிட்டார். உள்ளெ பாய்ஞ்சு போனேன். பரவாயில்லாமக் கூட்டம்
இருக்கு! பாட்டுங்க பாடிகிட்டு இருக்காங்க! ஆளாளுக்குக் கையிலே பேப்பருங்களை வச்சுப் பாடறாங்க! ஃபோட்டோக்காப்பி
எடுத்துவச்சிருக்கற பேப்பருங்களை முன்னாலே இருக்கற மேசையிலே வச்சிருந்தாங்களா,நானும் ஒண்ணு எடுத்துகிட்டேன்.

மொதல்லே ஒரு பாட்டுக்குக் கொஞ்சம் தடுமாறுன மாதிரி இருந்துச்சு. அப்புறம் பிடி பட்டுடுச்சு! சமாளிச்சுகிட்டேன். கூட்டத்தோட
சேர்ந்து நானும் சத்தமாப் பாடிகிட்டே இருக்கேன். என் பொண்ணு ( அஞ்சு வயசு) 'அம்மாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?'
ன்னு ஆச்சரியத்தோட பார்க்கறா! சரியாப் பன்னெண்டு மணி அடிச்சதும் 'மெர்ரிக் கிறிஸ்மஸ்' வாழ்த்துச் சொல்லிட்டு பிரசங்கம்
ஆரம்பிச்சாங்க. நாங்க கிளம்பி வந்துட்டோம்.அதையெல்லாம் கேக்கற பொறுமை எங்க இவருக்குக் கிடையாது! எப்படியோ 20
வருஷம் கழிச்சு, எனக்கு இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைச்சது! ரொம்ப சந்தோஷமா இருந்தது!


'கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வேணாம்' அப்படின்னு ஒரு மூதுரை இருக்குல்லே! ஆனா இந்த ஊருலே இந்துக்
கோயில் கிடையாது. இஸ்கான் ஆளுங்க நடத்தற ஒரு 'ஹரே கிருஷ்ணா' கோயில் மட்டும்தான் இருக்கு! இதுவும் பார்க்கறதுக்கு
வீடு மாதிரிதான் இருக்கும்! கோபுரம், மற்றும் கோயிலுக்குண்டான அம்சம் எல்லாம் இல்லை! நகரத்தோட
மத்தியப் பகுதியிலே 164 வருஷம் பழமை வாய்ந்த ஒரு தேவாலயம் இருக்கு. முதல் முதலிலே வெள்ளையர்கள் இங்கே
குடிபெயர்ந்து வந்தப்போ கட்டுனதாம்.அந்தக் காலத்துலே, இதைச் சுத்தித்தான் நகரையே நிர்மாணிச்சிருக்காங்க! எப்ப சிடிக்குப்
போனாலும், ஒரு அஞ்சு நிமிஷம் இந்த தேவாலயத்துக்குப் போயிட்டுதான் வருவேன். எனக்கு எல்லா மதமும் ஒண்ணுதான்!
என் இஷ்ட தெய்வத்தை எங்கே வேணுன்னாலும் கும்பிடுவேன். இது சரியா, இல்லையான்னும் தெரியாது!

அதுக்கு அடுத்த வருஷத்துலே இருந்து இப்படி, கிறிஸ்மஸ் ஈவுக்குக் கோயிலுக்குப் போறதை ஒரு பழக்கமா வச்சிகிட்டோம்! ஆச்சு
பதினாறு வருஷம்!

இங்கே கிறிஸ்மஸ் தினமும், மறுநாள் பாக்ஸிங் தினமுமாக ரெண்டு நாளுக்கு அரசாங்க விடுமுறை கட்டாயம் இருக்கு! முதலிலே
'பாக்ஸிங்' குத்துச்சண்டை எதுக்குப் போடணும்? அதுக்கு ஏன் அரசாங்க விடுமுறை? ஒருவேளை கணக்கு வழக்கில்லாம செலவு
செஞ்சிட்டு, குடும்பத்துலே சண்டை வந்துரும்ன்னு அதுக்காக ஒரு நாள் லீவு விடுறாங்களோன்னு நினைச்சேன். அப்புறம் தான்
விஷயம் தெரிஞ்சது! பழைய காலத்துலே ப்ரிட்டன்லே பெரும் செல்வந்தர்கள் எல்லாம், கிறிஸ்மஸ் நல்லபடியாக் கொண்டாடுவாங்களாம்.
அப்போ அந்த பார்ட்டிங்களிலே மீந்து போற கேக் முதலான தின்பண்டங்களை எல்லாம் அட்டைப் பெட்டிகளில் அடைச்சு, அனாதை
ஆஸ்ரமங்களுக்கும், வசதி குறைஞ்சஆட்களுக்கும் விநியோகிப்பாங்களாம். அதுனாலே அதை 'பாக்ஸிங் டே'ன்னு கூப்பிட்டாங்களாம்.

இங்கே முதலில் வந்து குடியேறியவர்கள் ப்ரிட்டிஷ்காரர்கள் என்பதால் அவர்கள் பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கிட்டே வந்திருக்கு. ஆனால்
வந்து குடியேறினவுங்க யாரும் பெரும் செல்வந்தர்கள் இல்லை! சாதாரண விவசாயிகள்தானாம்!

இந்தியர்கள் இப்ப நிறைய இங்கே குடியேறிகிட்டு இருக்காங்க. கேரளத்துலே இருந்து ஒரு பதினைஞ்சு குடும்பங்கள் இப்படி வந்திருக்காங்க.
அவுங்க எல்லோருமே கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவுங்க. அவுங்க எல்லாம் வந்து இப்ப ஆறேளு வருஷமாச்சு! அவுங்க எல்லாம் சேர்ந்து
கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிவராங்க. அந்தக் குழுவிலே நாங்களும் இருக்கோம். நமக்குத்தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்'
ஆச்சே! ரெண்டு வருஷமா, இந்தக் கொண்டாட்டத்துலே, குழுவாச் சேர்ந்து 'கேரல்ஸ்' மேடை மேலே பாடறாங்க! இதுலே நானும் இருக்கேன்னு
சொல்லவும் வேணுமா? நமக்குத்தான் 'பாஷை ஒரு ப்ரஷ்ணமே' இல்லையே!

இந்த இரண்டு வருஷத்திலே இன்னும் நிறைய சேச்சிமாரும், சேட்டன்மாரும் வந்துட்டாங்க! இங்கே எங்க ஊர் ஆஸ்பத்திரியிலே நர்ஸ்
உத்தியோகம் பார்க்க ஆளு ரொம்பக் குறைவா இருக்கே! ( நிஜமாத்தாங்க!)

இவுங்க எல்லாம்தான் நம் இந்தியாவிலே உள்ள வழக்கப்படிப் புது உடுப்பு எல்லாம் அணிஞ்சு, கிறிஸ்மஸ் ஈவுக்குத் தப்பாம சர்ச்சுக்குப்
போறாங்க! வெள்ளைக்காரங்க போறது ரொம்பவே குறைவு!

ரெண்டு வாரத்துக்கு முன்னே, இந்தக் குழுவினர் கேட்டாங்க, 'இந்த வருஷம் வீடுகளில் போய் கிறிஸ்மஸ் கேரல்ஸ் பாடலாம்ன்னு
இருக்கறோம். உங்க வீட்டுக்கு வந்து பாடவா?'

நான் ஒரு இந்து என்றதாலெ ஒரு தயக்கம் அவுங்க குரலிலெ இருந்தது! அட!கரும்பு தின்னக் கூலியா? தாராளமா வாங்கன்னு
சொன்னேன்.

நேத்து ஒரு முப்பத்தி நாலு பேரு பெரியவுங்களும், சின்னப் பசங்களுமா வந்தாங்க! கூடவே கிடார் வாசிக்க ஒரு லோகல் பையன்.
அவுங்க போற சர்ச்சைச் சேர்ந்தவராம்.

ச்சும்மா ஒரு நாலு பாட்டு! ஒரு எவர்சில்வர் தட்டுலே பஞ்சு நிரப்பி ( பஞ்சு மெத்தைன்னு வச்சுக்கணும்!) அதுலே ஒரு ச்சின்ன
குழந்தை ஏசு!

சேன்ட்டாவும் வந்தார்! எல்லோருமா சேர்ந்து பாடுனோம்! இதுலே வேடிக்கை என்னன்னா, என் கணவரும் பாடினார்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
***********************************************************************************









Friday, December 10, 2004

போவோமா ஊர்கோலம்!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் ( கடைசிப் பகுதிக்கு முந்தின பகுதி)

இப்ப நாங்க இருக்கறது, முக்குக்கு முக்கு சர்ச்சுங்க இருக்கற ஊரு! இந்த ஊருக்கு வந்த வருசம் கிறிஸ்மஸை ரொம்ப ஆவலோட எதிர்ப்பார்த்துகிட்டு
இருந்தேன். நவம்பர் மாசம் மூணாவது வாரம் 'சேன்ட்டா பரேட்' இருக்குன்னு பேப்பரிலே விளம்பரம் வந்தது!


வெளிநாட்டுலே, வெள்ளைக்காரங்க ஊருலே கொண்டாடப் போற மொதக் கிறிஸ்மஸ்!

இந்த ஊரோட மத்தியிலே இருக்கற ஒரு பெரிய தெருவிலெதான் பரேடு நடக்குமுன்னு போட்டிருந்துச்சு. இந்தத் தெருவுக்குப் பேரு 'கொலம்போ'த்தெரு!
நம்ம ஸ்ரீலங்கா கொழும்புதாங்க. இன்னும் மெட்ராஸ்த்தெரு, காஷ்மீர் ஹில்ஸ், குங்குமப்பூத்தெரு இப்படியெல்லாம் இங்கே தெருப் பேருங்க இருக்குது!

மத்தியானம் ரெண்டு மணிக்கு ஆரம்பிக்குது பரேடு! ஊரே அங்கேதான் இருக்கு! கூட்டம்ன்னா கூட்டம்! அந்தத்தெருவிலே, வாகனங்களோட
போக்குவரத்தையெல்லாம் நிப்பாட்டி இருந்தாங்க. நடைதான். பக்கத்துத் தெருவிலே,கண்ணுலே பட்ட இடங்களிலே காருங்களை நிறுத்திட்டு,
ஜனக்கூட்டம் கொழும்புத்தெருவை நோக்கி நடக்குது! நாங்களும் அந்த ஜோதியிலே கலந்துட்டோம்.

தெருவுக்கு ரெண்டு பக்கமும் வரிசையா ஜனக்கூட்டம். ஒரு லட்சம் பேரு வந்திருந்தாங்கன்னு மறுநாள் பேப்பரிலே பார்த்துத் தெரிஞ்சு கிட்டோம்.
ச்சின்னப் புள்ளைங்க எல்லாம் கீழே தெருவிலேயே உக்காந்துகிட்டு இருக்காங்க. பல பெரியவுங்களும் அப்படியப்படியெதான். வாழையிலே
போட்டு, விருந்து பரிமாற வேண்டியதுதான் பாக்கி!

கென்டக்கி சிக்கன், மக்டோனால்ட்ஸ் ஆளுங்க, எல்லாருக்கும் வெயில் தொப்பி இலவசமாக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இன்னும் பலூன்,
நியூஸிலாந்து கொடி, மிட்டாய்ங்கன்னு இலவச சப்ளை நடந்துக்கிட்டே இருக்கு! பிள்ளைங்கெல்லாம், கிடைக்கறதையெல்லாம் சளைக்காம
வாங்கிகிட்டே இருக்காங்க!

சரியா ரெண்டுமணி ஆனதும் ஒரு போலீஸ் கார் மொதல்லே வருது! அதுக்குப் பின்னாலே ஒரு பேண்டு வாத்தியக் குழு. அப்புறம் மார்ச்சிங்
கேர்ல்ஸ், பேக் பைப் வாசிச்சுகிட்டே ஒரு ஹைலேண்ட் ம்யூஸிக் குழு, கார்ட்டூன் கேரக்டர்ஸ் மிக்கி மவுஸ், டோனால்ட் டக், ஸ்கூபிடூ,
மிஸ் பிக்கி, கெர்மிட் இப்படி பலதரம், நியூஸிலாந்து ஜிம்னாஸ்டிக் ஸ்கூல் பிள்ளைங்க சர்க்கஸ் வித்தை காட்டறது போல குட்டிக் கரணம்
போட்டுகிட்டே வராங்க, ஃபேரி டேல்ஸ் வண்டிங்க வரிசையா வருது! கோல்டிலாக்கும் 3 கரடிங்களும், சின்ட்ரெல்லா, ஹான்சல்& க்ரேடல்,
ஸ்நோ ஒயிட்டும், 7 குள்ளர்களும், இன்னும் ஸ்பெல் போட்டுகிட்டே வர்ற விட்சுங்க, பேய் வீடு, கடற்க் கொள்ளைக்காரர்கள் இப்படி
ஏகப்பட்டது! அலங்கார வண்டிகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வியாபார நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ததாம்!

நடுநடுவிலே உள்ளூர் ப்ரெட் கம்பெனிங்க பெரிய பெரிய ப்ரெட் லோஃப்பைத் தூக்கித்தூக்கி பெரியவங்களுக்கு கொடுத்துகிட்டே போறாங்க!
பிள்ளைங்களை மிகவும் கவர்ந்த விஷயம் என்னன்னா, உள்ளூர் தொலைக்காட்சிகளில் சின்னப் பசங்க நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிற
டி.வி. ஸ்டாருங்க! திறந்த டாப் உள்ள பெரிய வண்டிகளில் இவுங்க எல்லாம் ஒரு பந்தாவும் இல்லாம கையையும் காலையும் ஆட்டிகிட்டே
வராங்க!

பெரியவங்களைக் கவர்ந்தவங்க யாருன்னா, ரேடியோ நிகழ்ச்சி நடத்தறவங்க! இப்படிப் பெரியவங்களும், ச்சின்னப் புள்ளைங்களுமா குதூகலமா
இருக்காங்க!

நடுநடுவிலே ஒத்தைச் சக்கர சைக்கிள்களிலே விதூஷகருங்க. அதுலெயெ உக்காந்துகிட்டு, 4 பந்து, 5 பந்துங்களைத் தூக்கிப் போட்டு'ஜக்ளிங்'
செஞ்சுகிட்டு வராரு மிஸ்டர் மூன்! இவர் இந்த ஊர்லே குழந்தைகள் உலகிலே ரொம்பப் பிரபலமானவராம். அவர் தலையிலே பின்பக்கம்
பிறைநிலாவும் நட்சத்திரங்களும் இருக்கும்! முடியைக் கொஞ்சம் ஒட்ட வெட்டி, அதுலே இந்த நிலா டிஸைனை வேற கலருலே சாயம் ஏத்தி
இருக்காரு. (இன்னவரைக்கும் அப்படித்தான் இருக்காரு. இது அவரோட ட்ரேட் மார்க்!)

ஒரு ரயில் எஞ்சின்கூட 'கூ'ன்னு கத்திக்கிட்டே நீராவி வெளியே விட்டுகிட்டு, ரோடுலே வருது! இப்பல்லாம் நீராவி எஞ்சின் கிடையாதுல்லையா?
அதனாலெ இது அரியகாட்சியாக இருக்கு!

அப்புறம் வருது ஒரு யானை! அம்பாரியெல்லாம் வச்சு ஜோடிச்சு இருக்கு. 'இண்டியன் எலிஃபெண்ட்' ன்னு பேரு எழுதியிருக்கு அதன்
ரெண்டு பக்கத்திலும். அலாவுதீன் அற்புதவிளக்குலே வர்ற பொண்ணுமாதிரி அரபி உடை போட்டுகிட்டு, முகத்துலே சல்லாத்துணியை வாயை
மறைச்சு கட்டிகிட்டு ரெண்டு பொண்ணுங்க அந்த இந்தியன் யானை மேலே! யானையுமே பொம்மைதாங்க! இந்த ஊருலே ஏது நிஜ யானை?

உள்ளூர் மேஜிக்காரர் ஒரு கூண்டிலே ஒரு பெரிய கொரில்லாவை(!)கொண்டுவராரு. அது அப்பப்ப கூண்டுக்குள்ளே இருந்து வெளியே
வந்து கையை ஆட்டிட்டு, மறுபடி கூண்டுக்குள்ளே போகுது! இவருடைய மேஜிக் ஷோ, எல்லா ஸ்கூல் லீவு சமயத்திலேயும், ஷாப்பிங்
மால்களிலே இலவசமா நடக்கும். அந்தக் கொரில்லாவும் அந்த ஷோவிலே கலந்து கொள்ளும். இரண்டு ஷோவுக்கு இடைவெளி இருக்கறப்ப,
அங்கே மறைவுக்காக வச்சிருக்கற திரைக்கு அந்தப் பக்கம் ஒரு நாற்காலியிலே உக்காந்துகிட்டு, பேசிகிட்டே காஃபி குடிச்சுகிட்டு இருக்கறதை,
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாப் பார்க்கலாம்!

உள்ளூர் போலீஸ் நாய்ங்க அணிவகுப்பு! பார்வையில்லாதவர்களுக்கு உதவி செய்யும் நாய்களுடே அணிவகுப்பு! எல்லா நாய்ங்களும்
கிறிஸ்மஸ் கலரில், பச்சையும், சிகப்புமா மேலங்கி போட்டுகிட்டுப் போவுதுங்க! போற போக்கிலேயே, தெருவிலே ரெண்டுவரிசையிலும்
உக்காந்துகிட்டு இருக்கற சின்னப் பசங்ககிட்டே நின்னு, தடவிக்கிட்டுப் போதுங்க! பிள்ளைங்களும்,கையை நீட்டிக் கூப்பிட்டுக்கிட்டே
இருக்குங்க!

ரெண்டு மூணு அலங்காரவண்டிங்களுக்கு ஒண்ணு என்ற மாதிரி பேண்டுவாத்திய கோஷ்டிங்க வேற வந்துகிட்டு இருக்கு! இங்கே பேட்டைக்குப்
பேட்டை இந்த மாதிரி பேண்டு குழு இருக்கு! இதுலே வாசிக்கறவங்க இதை முழுநேரத் தொழிலாச் செய்யறவங்க இல்லை! இசை ஆர்வம்
இருக்கறதாலே, நல்ல வேலைகளில் இருக்கற நிறைய பேர் இதுகளிலே இருக்காங்க. என் கணவரோட வேலை செய்யற ஒரு எஞ்சினீயரும்
இப்படி ஒரு பேண்டுலே வாசிக்கிறாராம். வரிசையா வர கோஷ்டிகளிலே அவரு எங்கே இருக்காருன்னே தேடிக்கிட்டு இருந்தோம். ஒரே
மாதிரி யூனிஃபார்ம் போட்டுகிட்டுப் போற கூட்டத்துலே இது ரொம்பக் கஷ்டமாப் போயிருச்சு! இதுலே எனக்கு, எல்லா வெள்ளைக்காரங்க
முகங்களும் ஒண்ணுபோல வேற தெரியுது! ( வந்த புதுசு ஆச்சுங்களே? இப்பப் பரவாயில்லை!)

அக்கார்டியன் ம்யூஸிக் ஸ்கூல் மாணவ மாணவிகள் இன்னோரு வண்டியிலே உக்காந்துகிட்டு வாசிச்சுகிட்டே வராங்க. எல்லா வண்டிங்களுக்கும்
கடைசியிலே, ரெயிண்டீர் ஓட்டற ஸ்லெட்ஜ் அமைப்பா இருக்கறதுலே கிறீஸ்மஸ் தாத்தா எல்லோரையும் பார்த்து கையை அசைச்சுகிட்டே
வராரு. மிட்டாய்ங்களை கைநிறைய அள்ளி அள்ளி, பிள்ளைங்களைப் பார்த்து வீசறாங்க, 'சேன்ட்டாஸ் லிட்டில் ஹெல்ப்பெர்ஸ்'!
எங்க தலையிலே எல்லாம் மிட்டாய் மழை!

அவருக்குப் பின்னாலே 'சிடி போலீஸ்' வண்டி, தலையிலே சிகப்பு, நீலம் லைட்டுங்களோட வந்தது! இதுதான் கட்டக் கடைசி! சரியா
ஒருமணி நேரம் ஆயிருக்கு இந்த ஊர்வலம் நம்மைக் கடந்து போறதுக்கு!

அடுத்த நிமிஷமே கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுச்சு! தெருவிலே எங்கே பார்த்தாலும் குப்பைங்க! கலர் கலர் காகிதங்களா இறைஞ்சு கிடக்கு.

நாங்களும் இடத்தைக் காலிபண்ணிட்டு, நம்ம வண்டி நிறுத்தியிருந்த தெருவுக்குப் போனோம். அது ஒரு வழிப் பாதை என்றதாலே, திருப்பி
இந்த ஊர்வலம் போன வீதியிலேயே வரவேண்டியிருந்தது. எல்லாம் ஒரு பத்து நிமிஷ இடைவெளிதான். திரும்பி வந்தா, மந்திரமோ மாயமோ
போட்டமாதிரி, இந்தத் தெரு படு சுத்தமா, ஒண்ணுமே நடக்காதது போல சாதுவா இருக்கு! ஒரு லட்சம் ஜனங்க கூடியிருந்த அறிகுறியே
காணோம்! மருந்துக்கு ஒரு கலர் பேப்பர்(!)? ஹூ..ஹூம்!!

உங்களை ரொம்ப சோதிக்க மாட்டேன். அடுத்த பதிவுதான் அநேகமா(!) கடைசி.


Wednesday, December 08, 2004

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும்!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும் ( தொடர்ச்சி)

"விளக்கு வைக்கிற நேரத்துலே சாமி முன்னாலெ உக்காந்து ரெண்டு பாட்டைப் பாடு"



கிறிஸ்மஸ் லீவு வருதேன்னு வீட்டுக்குப் போயிருப்பேன். 'ரேடியோ சிலோன்'லே தமிழ் சினிமாப்
பாட்டு கேட்டுகிட்டு மஜாவா உக்காந்திருக்கும் போது அம்மம்மா இப்படிச் சொல்வாங்க. சரின்னு, கையைக் காலை கழுவிட்டு
சாமி அறைக்கு வருவேன். உட்காந்தாச்சு. பாட்டு! பாட்டு...தான்! தெரிஞ்ச பாட்டு ஒண்ணுகூட ஞாபகத்துக்கு வராது!

ஞாபகம் இருக்கறதெல்லாம், 'கிறிஸ்மஸ் கேரல்ஸ்'தான்! அது இல்லையா...சினிமாப் பாட்டுங்க! கஷ்டப்பட்டு, முயற்சி செய்து
ஏதாவது பாட்டை ஆரம்பிப்பேன்.

"ஹைங், ஹொய்ங்'ன்னு பாடி இப்பத் தொண்டை எப்படி கெட்டுப் போயிருக்கு பார்! இந்த லீவுலே மரியாதையா உக்காந்து
மறந்த பாட்டுங்களையெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணு"

அம்மம்மா ( பாட்டிதாங்க) பாட்டு டீச்சர். அவுங்க சொன்னா வேற அப்பீலே கிடையாது! அரை வருஷப் பரீட்சை முடிஞ்சு வந்திருப்போம்லெ.
ஹோம்வொர்க் என்ற பேருலே அந்த கேள்விதாளுங்களூக்கெல்லாம் பதிலை எழுதிகிட்டுவேற போகணும். பரீட்சைதான் முடிஞ்சுடுச்சேன்னு
ஹாய்யா இருக்க முடியாது. இதுக்கு நடுவிலே இந்தப் பாட்டு கிளாஸ் வேற.

அப்புறம், விடுதிக்குத் திரும்பிப் போனோம்னா, அங்க இருந்தவங்கெல்லாம் 'ஜோரா லீவு நாளுங்களைக் கழிச்சோம்'ன்னு சொல்லி, எங்க
வயித்தெரிச்சலைக் கொட்டிக்குவாங்க!

கடு கடுன்னு இருக்கற வார்டன் கூட அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டுப் போனாங்களாம்!

ஒரு வருஷம் இதையும் பாத்துறலாம்ன்னு இருந்தேன். அடுத்த வருஷம் நான் ஸ்கூல் ஃபைனல். அதை விட்டா வேற ச்சான்ஸ் இல்லே!

அடுத்த வருஷம்! கிறிஸ்மஸ் வந்துகிட்டு இருக்கு! நான் வீட்டுலே சொல்லிட்டேன், 'எனக்கு நிறையப் படிக்கணும். அதனாலே இந்தப்
பத்து நாளும் படிப்பு, படிப்பு, படிப்புதான்'

லீவு தொடங்குச்சு! எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பறதும், அவுங்க வீட்டு ஆளுங்க வராங்களான்னு மாடியிலிருந்து எட்டி எட்டிப் பாக்கறதும்,
பையைத் தூக்கிக்கிட்டு ஓடறதுமா இருந்தாங்களா, மனசுக்குள்ளே கொஞ்சம் 'பேஜாரா'த்தான் இருந்துச்சு.

அன்னைக்கு விடுதியிலே மொத்தம் 22 பேருதான். அதனாலே டீச்சருங்க மெஸ் சாப்பாடுதான் எங்களுக்கும்! டீச்சருங்களும் நாலைஞ்சு
பேருதான்! மத்தவங்க லீவுலே போயிட்டாங்க.

அப்புறம்தான் தெரிஞ்சது, கொஞ்சப் பேரு மட்டும் இருக்கறதாலே எதுக்கு ரெண்டு கிச்சன்? சாப்பாடு அட்டகாசம்! இனிப்பெல்லாம் கூட
இருந்துச்சு! லீவு முடியற வரைக்கும் அமர்க்களமான சாப்பாடுதானாம்! ( இதையே எப்பவும் போடக் கூடாதா?)

மறுநாள், எங்களையெல்லாம் கூப்பிட்டு, என்னென்ன செய்யலாம்ன்னு கேட்டாங்க! இதுக்கெல்லாம் நான் புதுசா, ஆ ன்னு வாயைப்
பார்த்துகிட்டு இருக்கேன். பசங்கெல்லாம் ஷாப்பிங்,சினிமா, பீச் ன்னு லிஸ்ட் போட்டுகிட்டு இருக்காங்க. போற வழியிலே பூ கூட வாங்கிக்
கலாமாம்!

இந்தப் பூ என்றதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. பொதுவா எங்க ஸ்கூலிலே தலையிலே பூ வச்சிக்கறதுக்கு அனுமதி இல்லெ!
ஆனா, யாருக்காவது பிறந்த நாள் வந்தா அன்னைக்கு மட்டும் பூ வச்சுக்கலாம். காலையிலெ படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் போது,
நம் தலயணைக்குப் பக்கத்திலே ஒரு நாலு இஞ்சு நீளப் பூஞ்சரம் இருந்துச்சுன்னா, அன்னைக்கு யாருக்கோ 'பர்த் டே!'

மொதநாளே, பிறந்தநாள் பொண்ணும், அவுங்களோட நெருங்கிய சிநேகிதிங்களும் ( அவுங்களுக்கு மட்டும் ஒரு முழ நீளப் பூஞ்சரம்!)
வார்டன் கூடப் போய் பூ வாங்கிகிட்டு வந்திருப்பாங்க. ஆனா எல்லாம் ரகசியமாக இருக்கும்!

பிறந்தநாள் யாருக்குன்னு காலையிலெ 'ப்ரேக் ஃபாஸ்ட்'க்கு, உணவுக் கூடத்துக்குப் போனவுடனே தெரிஞ்சிடும். சாப்பிடறதுக்கு முன்
ஒரு நாலுவரி ஜெபம் உண்டு. அதுலெ பிறந்த நாள் பொண்ணோட பேரு வந்திரும்! இப்படிக் கொஞ்சமே கொஞ்சம் பூ எப்பவாவதுதான்
கிடைக்கும். நானோ பூப் பிசாசு!

ஆனா, லீவுக்காக வீட்டுக்குப் போகாம இருக்கறவங்களுக்குத் தினம் தினம் பூ! எங்களுக்கு இஷ்டமானதை நாங்களே வாங்கிக்கலாம்!
இது மட்டுமா? ஹோட்டலிலே போய் சாப்பிடவும் கொண்டு போனாங்க! மசால் தோசையும், பாதாம் கீரும்! என்னா மாதிரி 'லக்ஸரி!'

இப்படியே கிறிஸ்மஸ் ஈவும் வந்தது! ராத்திரி சாப்பிட்டு முடிஞ்சவுடன், பத்துமணிக்கு எல்லோரும் கோயிலுக்குப் போறோமாம்! புது உடுப்புங்க,
தலை நிறையப் பூ, இன்னும் ஆபரணங்கள்( வார்டனோட கஸ்டடியிலே இது நாள்வரை விட்டு வச்சது! வழக்கமா நகையெல்லாம் போட்டுக்கக்
கூடாது. வீட்டுலெயே வச்சிடணும். தப்பித்தவறி போட்டுட்டே வந்துட்டா, அதைக் கழட்டி வார்டன்கிட்டே கொடுத்து வைக்கணும்)அலங்காரங்கள்
இப்படின்னு ஒரே ஆரவாரமா இருக்கு!

இப்படி ராத்திரியிலே சர்ச்சுக்குப் போறது எனக்குப் புதுமையா இருக்கு! அங்கே, கோயிலிலே ஒரே தீப அலங்காரம். ஜொலிக்குது!
மற்ற ஜனங்களும் குழந்தையும் குட்டிமா புது உடுப்புங்களோட வந்திருக்காங்க. ஜேஜே ன்னு இருக்கு!

ப்தினோரு மணிக்கு ஆரம்பிச்சது சர்வீஸ்! பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி இருக்கு. சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்'
வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்தது.

நாங்கல்லாம் விடுதிக்குத் திரும்பி வரவே ராத்திரி ஒரு மணிக்கு மேலே ஆனது. வந்தவுடனே, நல்ல நல்ல கேக்குகளும், பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ்
என்று 'மிட்நைட் ஃபீஸ்ட்' வேற!

இப்படியே ஒரு வாரம் போனதே தெரியலை! மறுபடி டிசம்பர் 31க்கு 'நியூ இயர்ஸ் ஈவ்'. மறுபடி ராத்திரியிலெ சர்ச் விஸிட். 'ஹாப்பி நியூ இயர்'
கொண்டாட்டம்!

இது முடிஞ்ச இரண்டொரு நாளிலே லீவு முடிஞ்சிடுச்சு! லீவுக்கு வீட்டுக்குப் போயிருந்தாக்கூட, இவ்வளவு ஜாலியா இருந்திருக்க முடியாது!


இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.



Sunday, December 05, 2004

சாப்பிட வாங்க!!!!!!

அனைவருக்கும் வணக்கம்!!!!

இந்தப்பதிவு ச்சும்மா 'சாப்பாட்டுக்காக!'



எங்க பாட்டி சொல்வாங்க, 'கோடி வித்தலு கூட்டி குறைக்கு'( தெலுங்குங்க! குறைக்குலுன்னு
போட்டுடலாமா?)

உலகத்துலே கஷ்டப்பட்டு சம்பாரிக்கறது( கற்ற வித்தையெல்லாம் காட்டி) எல்லாம் வயிறார சாப்பிடத்தானாம்!

நம்ம அவ்வையார், அதாங்க தமிழ்ப்பாட்டிகூட

'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளைக்கேலென்றால் ஏலாய்.....

( அடுத்த வரியெல்லாம் நினைவுக்கு வரலே)

இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது!' என்று முடியும் பாட்டைப் பாடியிருக்காங்கல்லே!

( இப்ப இதைப் பாடியது அவ்வையாரா இல்லையான்னு வேற சந்தேகம் மனசுலே எட்டிப் பார்க்குது.

ச்சீ... ச்சும்மாக் கிடன்னு மனசை அதட்டி வச்சிருக்கேன்!)

பண்டிகைகள் வருதே. அதனாலே உங்களையெல்லாம் அன்போடு சாப்பிடக் கூப்பிடலாம் என்று
பார்த்தால், உலகின் பல மூலைகளில் இருக்கும் உங்களை எப்படி ஒரே நாளிலே திரட்டறது?

அதுக்குத்தான் ஒரு வழிகண்டு வச்சிருக்கேன்.

நான் சமையல் குறிப்பை எழுதுவேனாம். நீங்க அதை சமைச்சு சாப்புடுவீங்களாம்! சரிதானே?

எல்லாமே ரொம்ப எளிமையா செய்யக்கூடியதுதான்! பயந்துராதீங்க! நானே பலமுறை செய்து பார்த்த
வெற்றிகரமான 'ரெஸிபி'கள்தான் இவை. எல்லாமே 'ஈஸி பீஸி இண்டியன் குக்கிங்!!!!'

இந்தப்பதிவில் வரும் சமையலில் உபயோகப்படுத்திய மைக்ரோவேவ் அவென் 1000 பவர் உள்ளது!


முதலில் ஒரு இனிப்போடு ஆரம்பிக்கலாம்.

பாதாம் பர்ஃபி ( மைக்ரோவேவ் ரெஸிபி)

தேவையான பொருட்கள்:
********************

150 கிராம் பாதாம் பருப்பு ( 1 கப் வரும்)

1 கப் பால் பவுடர்

300 மில்லி ஃப்ரெஷ் க்ரீம்

1 டின் கண்டென்ஸ்டு மில்க்

செய்முறை:
*********

ஒரு தட்டுலே ( மைக்ரோவேவ் அவன்லே வைக்கக் கூடிய தட்டு) பாதாம் பருப்பை பரத்திவச்சு,
30 வினாடி சூடு செய்யணும். அப்புறம் இன்னொரு 30 விநாடி சூடு செஞ்சுக்கோங்க!

ஆறியதும், ஃபுட் ப்ரோஸசர் இல்லேன்னா மிக்ஸியிலே போட்டு பொடிச்சு வச்சிக்குங்க! தோலெல்லாம் எடுக்க வேணாம்!

அப்புறம் மேலே சொன்ன எல்லாப் பொருட்களையும் ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு நல்லா
கலந்துடுங்க.

இப்ப ஹை' பவர்'லே 5 நிமிஷம் வையுங்க. வெளியே எடுத்து ஒரு கலக்கு கலக்குங்க.
இன்னொரு 5 நிமிஷம் வச்சுட்டுக் கலக்குங்க. அப்புறம் மூணாவது முறை இன்னொரு 5 நிமிஷம் &
கலக்குங்க!

இப்ப ஒரு நெய்தடவிய தட்டிலே பரப்பி, ஆறியதும் வில்லை போட்டுருங்க!

ஆச்சா? இப்ப ஒரு வில்லையை எடுத்து, உங்க வீட்டு அம்மா/ அய்யாவுக்கு ஊட்டிவிடுங்க!

நல்லா இல்லேன்னா ஆட்டோ அனுப்பாதீங்க! ( ச்சும்மா....)


அடுத்தது இன்னொரு இனிப்பு. இங்கே ஆல்மண்ட், முந்திரி எல்லாம் மலிவாதான் இருக்கு. அதுமட்டுமில்லை. நல்ல தரமாவும்
கிடைக்குது. அதனாலே நம்ம 'ரெஸிபி'களிலே இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவெ அடிச்சுவிட்டிருப்பேன். 'தூபரதண்டி'ன்னு
திட்டாதீங்க! உங்க இஷ்டத்துக்குக் கொஞ்சம் குறைச்சும் போட்டுக்கலாம். சாப்பிடறதுக்குச் சுவையா இருக்கணுமே தவிர, கணக்குப்
பார்த்து, அதே அளவிலே போடணும் என்ற 'கெடுபிடி'யெல்லாம் கிடையாது!

இன்னும் ஒரு சின்னக் குறிப்பு சொல்லிடறேன்.

ஏலக்காய் விதைகள் இப்பெல்லாம் தனியாக் கிடைக்குதில்லையா! அது ஒரு 2 அல்லது 3 டீஸ்பூன் எடுத்து, 10 விநாடி மைக்ரோஅவன்லே
சூடு பண்ணி, ஆறியதும் மிக்ஸியிலே 'ட்ரை'யாப் பொடி செஞ்சு, ஒரு சின்ன பாட்டில்லே வச்சிக்கிட்டா, எந்த இனிப்பு செய்யவும் வசதியா
இருக்கும். நானு அதைப் பொடிக்கறப்பயே கூடவே ரெண்டுமூணு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்துக்குவேன். அப்பப்ப தூளாக்கற வேலை
மிச்சம்!

பாதாம் கேசரி. (சாதாரண அடுப்பு)
***********

ரவை 1 கப்
சீனி 1/2 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ கொஞ்சமே கொஞ்சம்
பால் 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் கொஞ்சம்.
பாதாம் 1/4 கப்

செய்முறை:
********

கொஞ்சம் சுடுதண்ணிலே பாதாம் பருப்பை ஊறவையுங்க. 15 நிமிஷம் ஊறட்டும். இப்ப அதை லேசா அமுக்கினா தோலு கழண்டு
வந்திடும். ( இதெல்லாம் தெரியாதான்னு முணுமுணுக்காதீங்க! சொல்றப்ப விளக்கமா சொல்லணும்லே!)

இப்ப வெள்ளையான பருப்பை 'மிக்ஸியிலே' போட்டு தண்ணிவிட்டு அரைச்சுடுங்க. ரெண்டரைக் கப்புத் தண்ணீவரை தாராளமா
விடலாம். நல்லா பாலாட்டம் இருக்கும்.
கொஞ்சம் சூடான பால் (சாதாப் பால்தாங்க) 2 டீஸ்பூன் எடுத்து அதுலே குங்குமப்பூவை ஊறவிடுங்க.

இப்ப ஒரு அடி கனமான வாணலியில் ( எல்லா சமையல் எழுதற ஆளுங்களும் இப்படி எழுதறாங்களேன்னுதான் நானும் இப்படிச்
சொல்றேன்!) ஜஸ்ட் ஒரு 'நான் ஸ்டிக்' வாணலிகூடப் போதும். அதுலே அந்தக் கால் கப் நெய்யைவிட்டு, நல்லா சூடானதும்
ரவையைப் போட்டு வறுங்க! இப்ப அடுப்பு நிதானமா எரியணும். ரவை நல்லா பொன்நிறமா வாசனையா வறுபட்டவுடனே நாம் செஞ்சு
வச்சிருக்கற ரெண்டரைக் கப்பு பாதாம் பாலை விட்டுக் கிளரணும். கெட்டியா வரும்போது, சீனியைச் சேருங்க. இப்ப கொஞ்சம்
இளகி,'தளக் தளக்'குன்னு கொதிக்கும். பத்திரம். மேலே தெறிக்கப் போகுது! இப்ப குங்குமப்பூப் பாலையும் ஏலக்காயும் சேர்த்துடுங்க!
கேசரி பதம் வந்துரும். இறக்கி, ஒரு தட்டுலே பரப்பி சமனாக்கி, வில்லை போடலாம்.

மஹாராஷ்ட்ராவிலே இந்த கேசரியை பிரசாதமாப் பரிமாறதுக்குன்னே ஒரு சின்னக் கரண்டி விக்கறாங்க. அதுலே எடுத்து,ஒரு அமுக்கு அமுக்கித்
தட்டுனா அழகா சின்ன டிஸைன்லே தட்டுலே விழும்!

சரி அப்புறம் பார்க்கலாம். சரியா?
*************************************************************************************


Friday, December 03, 2004

சான்ட்டா பரேட் !!!!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும்!
**********************

கிறிஸ்மஸ் வந்துகிட்டு இருக்கே! இங்கே எங்க ஊரில்,( நான் இப்ப இருக்கற ஊர்) வீடுகளில் கொண்டாட்டத்துக்கு அலங்காரம் ஆரம்பிக்குதோ
இல்லையோ, கடை, கண்ணிகளிலே மட்டும் 'ஊருக்கு முந்தி' ஆரம்பிச்சுடுது!



நாங்க இங்கே வந்த புதுசுலே நவம்பர் மாசம் கடைசியிலே அங்கெ ஒண்ணு, இங்கெ ஒண்ணுன்னு அலங்காரம் ஆரம்பிக்கும்.
இப்ப என்னன்னா, அக்டோபர் மாசம் மொத வாரமே நான், நீன்னு போட்டி போட்டுகிட்டு ஷாப்பிங் மாலுங்க, தனிக் கடைங்கன்னு
ரொம்ப ஜோரா கிறிஸ்மஸ் அமர்க்களம் ஆரம்பிக்குது!

எல்லாக் கடைக்காரங்களும் சேர்ந்து, பண்டிகை வருது, பண்டிகை வருதுன்னு நம்மையெல்லாம் உஷார்ப் படுத்தற மாதிரிதான்!

நான் சின்னப் பிள்ளையா இருந்த காலத்துலே, தமிழ்நாட்டுலே இந்தப் பண்டிகை வருதுன்னா, நம்ம கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்த
தோழிங்க வீட்டுலேயெல்லாம், இந்துக்கள் தீபாவளிக்கு எடுக்கற முஸ்தீபுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம ஏற்பாடுங்க நடக்கும்.

புது உடுப்பு எடுக்கறது, பலகாரங்கள் செய்யறதுன்னு மட்டும் இருந்திராம, 'கிறிஸ்மஸ் கேரல்ஸ்'க்கும் ரொம்ப முக்கியம் கொடுப்பாங்க.

நான் அப்ப ஒரு கிறிஸ்துவப் பள்ளியிலே படிச்சுகிட்டு இருந்தேன். அதுமட்டுமில்லே, நான் விடுதியிலும் தங்கியிருந்தேன். பாட்டு வேற
சுமாராப் பாடுவேனா, பள்ளிக்கூட 'கொயர்'லே வேற சேர்த்துட்டாங்க.

டிசம்பர் மொதத் தேதிலே இருந்து, காலங்காத்தாலே எழுந்து, கையிலெ ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்திப் பிடிச்சுகிட்டு, கிறிஸ்மஸ்
பாட்டுங்களைப் பாடிகிட்டே, சின்ன ஊர்வலமா, டீச்சருங்க தங்கியிருக்கற கட்டடத்துக்கு போவோம். மொதல்லே 'ப்ரின்ஸி' ரூம் வாசல்லே!

அவுங்க எழுந்து வந்து கதவுகிட்டே நின்னு ரெண்டு பாட்டைக் கேப்பாங்க. பாடி முடிச்சதும் நல்லாப் பாடறீங்கன்னு, எங்களை மெச்சி
ஒரு வார்த்தை சொல்வாங்க. அப்புறம் ஒவ்வொரு டீச்சருங்க ரூம் வாசல்லேயும் நின்னு பாடுவோம்! இது எனக்கு எப்பவுமே நம்ம
மார்கழி மாச பஜனையைத்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவரும்! சுண்டலும், பொங்கலும்தான் மிஸ்ஸிங்!

கிறிஸ்மஸ் லீவு ஒரு பத்துநாள் கிடைக்கும். நாங்கள்ளாம் வீட்டுக்குப் போயிருவோம். மலேசியாவிலிருந்து வந்து படிச்சு படிச்சுகிட்டிருந்த
பலர், இந்த லீவுக்காக எங்கேயும் போகாம விடுதியிலேயே இருந்துடுவாங்க. அப்புறம், 'பெர்ஷியா'வுலே ( அப்பல்லாம் மத்தியக் கிழக்கு
நாடுகளுக்கு ஒட்டுமொத்தமான பேரு இதுதான்!) வேலைசெய்யற பெற்றோர்கள் உள்ள சிலரும் இந்த லீவுக்கெல்லாம் விடுதியிலேயே
இருந்துடுவாங்க. பெரிய லீவுக்கு மட்டும்தான் விடுதி முழுசுமா காலியாகும்!

கிறிஸ்த்துவப் பள்ளி என்றதாலே, ஞாயிற்றுக் கிழமைங்களிலே நாங்க எல்லாரும் கட்டாயம் 'சர்ச்'சுக்குப் போகணும். காலையிலே எட்டரை
மணிக்கெல்லாம், நல்ல உடுப்புங்களைப் போட்டுகிட்டுத் தயாராயிடணும். வார்டன் அம்மா வந்து, நாங்கெல்லாம் 'ஒழுங்கா ட்ரெஸ்'
செஞ்சிருக்கோமான்னு வேற பார்ப்பாங்க!

தேவாலயம் அஞ்சாறு தெரு தள்ளியிருந்தது. ரெண்டு ரெண்டுபேரா வரிசையா நடந்து போகணும்! அங்கே எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி
இருப்பாங்க. சிலுவை டிஸைன் லே இருக்கும் பெரிய கூடத்துலே, ஒரு 'விங்' எங்களுக்குன்னு இருந்தது. எங்க பள்ளிக்கூட 'கொயர்'தான்
சர்ச்சுக்கும் கொயரா இருந்தது! நாங்க தான் அங்கே பாடற எல்லாப் பாட்டுக்களையும் ஆர்கன் ம்யூஸிக்கோட இணைஞ்சு பாடணும்.
ஏதாவது தப்பு ( அபஸ்வரம்?)விட்டோமோ, தொலைஞ்சோம்!

எங்க 'பாட்டு' டீச்சர் இருக்காங்களே, ரொம்பக் கோவக்காரங்க! ஒரு குரல் தப்பாயிடுச்சுன்னாலும் எல்லாருக்கும் மண்டகப்படிதான்!
விடுதிக்குத் திரும்பி வர்ற வழியிலேயே ஆரம்பிச்சுருவாங்க! நடந்து வர்றப்ப அவுங்க பக்கத்துலே கூட வர்றவுங்க பாடுதான் 'ஐயோ பாவம்'ன்னு
ஆயிடும். இத்தனைக்கும் அவுங்க கொயர் மெம்பரா இருக்கணுங்கற அவசியம்கூடக் கிடையாது! நற நறன்னு பல்லைக் கடிச்சுகிட்டே கண்ணாடி வழியா
கோபப் பார்வையை வீசிகிட்டே வருவாங்க!

விடுதிக்கு வந்தவுடனே, எல்லாக் கொயர் ஆளுங்களையும் நிக்க வச்சு,சரியா 'டோஸ்' விட்டுட்டு, மறுபடி அந்தப் பாட்டைப் பாடச் சொல்வாங்க!
நாங்க இதுக்குள்ளே சமாளிச்சுகிட்டு, அருமையாப் பாடிடுவோம்! உடனே அதுக்கும் ஒரு 'டோஸ்' கிடைக்கும். இப்பப் பாடுன மாதிரி அப்ப
ஏன் பாடலேன்னு!

மீதியை அப்புறமாச் சொல்றேன்.

Tuesday, November 30, 2004

கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!


கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!

இப்போது உலகில் எங்கே போனாலும் 'மேட் இன் சைனா' என்றுதானே எல்லாமே கிடைக்கிறது!
சீனர்கள், இப்போதுபோல உலகளாவிய வர்த்தகம் தொடங்கும் முன்பிருந்த காலக் கட்டம்.ம்ம்ம்... ஒரேடியாக அப்படியும் சொல்ல முடியாது!
ஆனால் அவர்கள் வியாபாரம் இன்னும் ஃபிஜிவரை வரவில்லை என்றும் சொல்லலாம்!

புடவைகள் எல்லாம் ஜப்பானிலிருந்து வந்துகொண்டிருந்தன. நல்ல நைலக்ஸ் புடவைகள். அப்போது புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகள்
நம் ஹிந்தி நடிகை 'ஷபானா ஆஸ்மி போன்றவர்கள் அவற்றுக்கு, 'மாடல்' ஆக இருந்தனர். 'ரூபி க்வீன்' புடவைகள்.பெரிய பெரிய
காலண்டர்கள் இவர்களின் படங்கள் + புடவைகளைத் தாங்கி வந்தன! அதே புடவைகள் கடைகளிலும் விற்பனைக்கு இருந்தது! இப்போதுள்ளது
போல ஐந்து மீட்டர் இல்லை. எல்லாமே 6 மீட்டர் நீளமுள்ளவை. அதனால் நிறைய கொசுவத்தோடும், நீஈஈஈஈளமான முந்தானையோடும்
வலம் வந்துகொண்டிருந்தோம்!

புடவைகள் வகைவகையாக இருந்தனவே தவிர அவற்றுக்கு ப்ளவுஸ் மேட்ச்சாகக் கிடைப்பது மிகவும் கஷ்டமே! அதனால் அங்கே எல்லோரும்
பாலியஸ்டர் துணியிலேயே ப்ளவுஸ் போட்டுக் கொண்டிருந்தனர்! அந்த சூட்டுக்கு அப்பப்பா..... ஐயோ என்றிருக்கும்! அதுமட்டுமின்றி அங்கே
ப்ளவுஸ் தைத்துக் கொடுப்பதற்குத் தையற்காரர்களே இல்லை! வீடுகளில்தான் பெண்கள் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்! தையல்கூலி
மிகவும் அதிகம். 10 டாலர்கள். ஆனால் துணியின் விலை ஒரு மீட்டர் ஒரு டாலர்தான்!

இங்கே வியாபாரம் செய்ய வந்த குஜராத்தியர்களில் அநேகர் தையற்காரர்களாம். முதலில் துணிகளையும் விற்றுக் கொண்டு அப்படியே அவற்றைத்
தைத்தும் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். இப்போதெல்லாம் ஆண்கள் அனைவருமே ரெடிமேட் உடைகளையே வாங்குவதால், அந்தப் பழக்கம்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விட்டதாம். ஆகக்கூடி தையல் கடைகள் இல்லாமல் போய்விட்டன! ஆனால் 'க்ளோத்திங் ஃபேக்டரிகள்'
வந்துவிட்டன!

இந்தியாவில் இருந்து வந்த நமக்கோ, 'டூ பை டூ'வில் ப்ளவுஸ் அணிந்து பழக்கம் ஆகிவிட்டதே. இதைப் பற்றிக் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்
என்று முனைந்தபோது, இந்தியாவில் இருந்தே 'டூ பை டூ' துணிகள் வருவதும் தெரிந்தது. ஆனால் கொள்வோர் இல்லை! ஆகவே விலை
மலிவு. ஆஹா அடிச்சது ச்சான்ஸ்! மெட்ராஸில் வாங்குவதுபோல 65 செ.மீ. 75 செ.மீ என்றெல்லாம் விற்கமாட்டார்கள். ஒரு மீட்டர், ஒன்னரை
மீட்டர் என்றுதான் வாங்கவேண்டும். சரி, இனிமேல் நாமே தைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரு தையல் மெஷின் வாங்கியாச்சு!
ஆனால் எப்படித் தைப்பது?

ஊரில், தன்னுடைய உடைகளைத் தானே தைத்துக் கொள்ளும் என் தோழிக்கு எழுதி, 'பேப்பர் கட்டிங்'வரவழைத்தாயிற்று! மீட்டர் கணக்கில்
வாங்குவதால் ரொம்பக் கவனமாக வெட்டவேண்டாம். ஒரு வழியாக என் முதல் ப்ளவுஸ் நன்றாகவே அமைந்து விட்டது! அதிர்ஷ்டம்தான்!

வீட்டு வேலைக்கும் இரண்டு உதவியாளர்கள் இருப்பதால் பகல் முழுவதும் தையல், இரவானால் ஹிந்தி சினிமா என்று நாளைப் பிரித்துக்
கொண்டேன். என் மகளுக்கும் நான்தான் டெய்லர்! வெறும் ஐம்பது சதத்துக்கு நல்ல நல்ல துணிகள் கிடைத்தன. கடைகளில் பார்வைக்கு
வைத்திருக்கும் குழந்தை உடுப்புகளின் டிஸைன்களை மனதில் பதித்துக் கொண்டு, மறுநாளே அதை அப்படியே அச்சாகக் காப்பி செய்வதில்
கில்லாடியாகிவிட்டேன். அப்புறம் என்ன? குழந்தைக்குத் தினமும் புதுசுதான். இப்படியாக இரண்டாயிரம் துணிகளைக் கெடுத்து முழு டெய்லர்
ஆகிவிட்டேன். இந்தத் தையல் என் மனம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது. எப்போதும், என்ன டிஸைன் செய்யலாம் என்றே எண்ணம்
வந்துகொண்டு இருந்தது! சொன்னால் வெட்கக்கேடு! ஒரு முறை ஒரு மரண வீட்டிற்குச் சென்று இருந்தபோது, என் முன்பாக அமர்ந்து இருந்த
ஒரு சிறு பெண்ணின்( மரணித்தவரின் கடைசி மகள்! அணிந்து இருந்த உடுப்பு மிகவும் நன்றாக இருந்தது) உடுப்பைப் பார்த்துவிட்டு, அதே போல்
மறுநாள் என் மகளுக்குத் தைத்துவிட்டேன். இதுவரை வாழ்வு நிம்மதியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது! ஆனால் இங்கேயிருந்து போகப் போகிறோமே,
அந்த நாட்டில் வீட்டு வேலைக்கு எல்லாம் உதவியாளர்கள் இல்லையாமே! எல்லாமும் நாமேதான் செய்துகொள்ள வேண்டுமாம்! இதுவே
ஒரு கவலையாகப் போனது, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று!

இந்த நிலையில்தான் தமிழ்க்காரர்கள் பற்றிய விவரம் தினத்தாளில் வந்திருந்தது! அரசாங்கமே அவர்களை ஒரு வீட்டில் தாற்காலிகமாகத் தங்க
வைத்துள்ளது என்றும், பல இந்தியர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுத்து வருகின்றனர்
என்றும் அறிந்தோம். நாங்களும் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றோம். மொத்தம் 32 பேர். எல்லோருமே இளவயதுக்காரர்கள்தான்!
ஆண்களே கூடுதல். கிடைத்த உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்! அகதிகள் என்று
பதிந்துகொண்டு கனடா நாட்டுக்குப் போய்விடலாம் என்று 'ட்ராவல் ஏஜண்டு' சொன்னபடி, கைக்காசை நிறைய செலவழித்துக்
கிளம்பினவர்களாம்! சரியான 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாத காரணத்தால் இங்கே இறக்கிவிடப்பட்டவர்களாம்! மேற்கொண்டு தகவல் ஒன்றும்
தெரியவில்லை. எங்களால் ஆன உதவியைச் செய்துவிட்டு, மறுமுறை வருவதாகச் சொல்லி வந்தோம்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி சரிவருமா அல்லது பட்ட காலிலெ படும் என்பது சரியாகுமா என்று தெரியவில்லை!

நம் ஃபேக்டரிக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த காரில் ஒரு 'ட்ரக்' வந்து மோதிவிட்டது! இங்கேதான் எப்போதும்(கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்)
வண்டியை நிறுத்தி வருகிறோம். நல்ல அடி! சரிப்படுத்த நாள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்! தினமும் வேலைக்குப் போக, வர, குழந்தையைக்
'கிண்டர்கார்டன்' கொண்டுபோய்க் கொண்டுவர என்று எல்லா வேலைகளும் கம்பெனி வண்டி மூலம் நடந்து கொண்டுதான் இருந்தது! ஆனால்
வார இறுதிகளில் வேறு எங்காவது போய்வரத்தான் கஷ்டமாகிவிட்டது!

இந்த அழகில், நியூஸிலாந்து எம்பசியில் இருந்து, ஒரு கடிதம் வந்தது! 'எங்கள் விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருப்பதால், அவர்களாக
எங்களைத் தொடர்பு கொள்ளும்வரை, நாங்கள் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது!'

காத்திருப்பு என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்பது அப்போதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது! ச்சும்மாவே இருப்பதால் நேரம் போவது
கடினமாகிவிட்டது! வெயிட்டிங்.............

இதற்கிடையில், தமிழ் ஆட்களை, அரசாங்கம் திருப்பி அனுப்பப்போவதாகவும் தெரியவந்தது. மூன்று மாதமாகப்போகிறது அவர்கள் இங்கே வந்து!
நம் இந்தியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டதால், உதவிக்கு யாரைக் கேட்பது என்று எங்களுக்கும் குழப்பமாக இருந்தது.

விமான நிலையம் இருக்கும் ஊரில் வசிக்கும் எங்கள் நண்பர்கள் மூலம் பல விவரங்கள் தொடந்து கிடைத்த வண்ணம் இருந்தன.
இனி அவர்கள் இங்கே தொடர்ந்து தங்க முடியாது என்று அரசாங்க அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். ஆனால் அவர்களில் யாரையாவது
இங்குள்ளவர்கள் திருமணம் புரிந்து கொண்டு விட்டால், வாழ்க்கைத்துணை என்ற நிலையில் அந்த நபர் இங்கே தங்கி விடலாமாம்!

இங்குள்ள இளஞர்கள் சிலர் இதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ்க்காரப் பெண்கள் மூவருக்கு வரன் கிடைத்தது. பெண்கள் சம்மதம் கிடைத்ததால்
அவர்களுக்கு பதிவுத் திருமணமும் நடந்தது! இப்படியாக மூவரைத் தவிர மற்றவர்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள்.சரி. எப்படியோ மூன்று
பேருக்காவது நல் வாழ்வு அமைந்ததே என்று நாங்கள் மகிழ்ந்தோம்!

இலங்கையில் இருந்துவரும் உள்நாட்டு விவகாரம் எங்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திராத காலம். ஏதோ நடக்கிறது, ஆட்கள் நாட்டை விட்டு
வெளியேறுகின்றனர் என்ற அளவில் மட்டுமே விவரம் கிடைத்துவந்தது! நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வந்தே 14 ஆண்டுகள் ஆகியிருந்தன!

பத்திரிக்கைகளிலும் அவ்வளவாக செய்திகள் இல்லை! எங்களுக்கு நண்பராக ஆன ஒரு இலங்கைத் தமிழ்க்காரர்தான் அவ்வப்போது இதைப்
பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரும் 'லட்டெளகா' என்னும் இடத்தில் வசித்ததால் அடிக்கடி சந்திப்பதும் குறைவே!

அவர்களும் இவையெல்லாம் சம்பவிக்கும் முன்பே வெளிநாட்டுப் பணிக்காக, இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள். இரண்டு வருடங்கள் இங்கே
ஃபிஜியில் இருந்து விட்டு, இங்கிலாந்து நாட்டுக்குப் போய்விட்டார்கள். கலவரம் நடப்பதால் மீண்டும் இலங்கைக்குப் போவது கஷ்டம் என்றும்
அங்கே உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போக முடியாத நிலை இருப்பதால், ஊரில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வீடியோவில்
பதிவு செய்யப்பட்டு இவர்களுக்கு வந்துவிடும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கும் அந்தக் கல்யாணக் கேஸட்டுகள் தருவார்கள். அதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் கொஞ்சம் வேறு பட்டிருந்தாலும்,
எனக்குப் பிடித்தமானது அவைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள திரைப் படப் பாடல்கள்!

எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமான புது திரைப் படப்பாடல்கள்! தமிழ் நாட்டில் கல்யாண வீடு என்றால், 'மணமகளே மணமகளே வா வா,
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா' என்ற பாடலை மட்டுமே கேட்டுக் கேட்டுக் காது புளித்திருந்த எங்களுக்கு, இந்தப் புதிய பாடல்கள்
கேட்பதற்கு நன்றாக இருந்ததால், அவர்கள் வீட்டுக் கல்யாணக் கேஸட்டுகளுக்கு 'ஃபேன்' ஆகிவிட்டோம்!

கல்யாண ஜோடிகள் வேறு வேறாக இருந்தாலும், மாப்பிள்ளைத் தோழனாகத் தலைப்பாகையுடன் வரும் ஒரு சிறுவன் மட்டும் மாறவேயில்லை!
இது பற்றிக் கேட்டபோது, 'அவர் எங்கட தமையனாரின் மகன். மாப்பிள்ளைத் தோழருக்கு மோதிரம் போடுவது எங்கட பழக்கம். அவருக்கு
பதினோரு மோதிரம் கிடைச்சிருக்குன்னா பாருங்கள். சில சமயம் அய்யருக்கே மறந்துபோன விவரங்களைச் சொல்லித் தருவார். அவ்வளவு
அனுபவப்பட்டவர்' என்றார்கள். மணமக்களைவிட அந்தச் சிறுவனின் முகம் எங்கள் மனதில் பதிந்துவிட்டது! அதற்கப்புறம் கலியாணக் கேஸட்டில்
முதலில் நாங்கள் தேடுவது இந்தச் சிறுவனைத்தான்!

ஒருவழியாக எங்கள் காரும் செப்பனிடப்பட்டுவந்து சேர்ந்தது. அதே சமயம் எங்களது விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கடிதம்
வந்தது! ஒரு சிறிய நேர்முகத் தேர்வுக்கும் வரச்சொல்லியிருந்தார்கள். நாங்கள் போனோம். எங்கள் 'பாஸ்போர்ட்டில்' நியூஸிலாந்து
பெர்மனண்ட் ரெஸிடன்ஸ் விஸா'வுக்கான முத்திரைக் குத்தப்பட்டது!

இதற்குள் இந்தியாவிலிருந்து ஒரு 'இஞ்சினீயர்'நம் இடத்துக்கு வந்து விட்டார். தனி மனிதர்.

'கட்டு மூட்டையை'என்று சொல்லிக் கொண்டு, நம் நண்பர்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு ஒரு நல்ல நாளில் கிளம்பி
நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம்!

நேடிவ் ஃபிஜி நண்பர்களின் அன்பளிப்பானத் 'திமிங்கிலப் பல் மாலையும், புல்ப் பாயும்' எங்கள் வீட்டு வரவேற்பறையில் இடம்பெற்று
விட்டன!


பின்னுரை:
*******

இந்தக் கட்டுரைத் தொடருக்கு முன்னுரை என்று ஏதும் எழுதவில்லையென்றாலும், பின்னுரை எழுதுவது அவசியம் என்று
கருதியதால் என் பின்னுரை இதோ!

ஃபிஜியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களே (1982-1988) இருந்தாலும், ஏதோ யுகம் யுகமாக அங்கேயே இருந்தது போல ஒரு நினைவு!
அருமையான தீவுகளும், அருமையான மக்களுமாக ஒரு நல்ல இடமாகவே அமைந்துவிட்டது.

'குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' என்பார்களே, அதைப் போல அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டுக் கொண்டது இந்த நாடு!

இந்த 'கூ' நடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 12,000 ஃபிஜி இந்தியர்கள் வெளியேறிவிட்டனர்! இதனால், அங்கே இப்போது
நேடிவ் ஃபிஜி மக்கள் தொகை 60% ஆக உயர்ந்துவிட்டது! ஆனால் நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்குதான் அதிகம்!

எங்கள் நண்பர்கள் பலரைப் பார்க்கவேண்டுமானால், எனக்கு ஆக்லாந்து( நியூஸி) போனாலே போதும்!

நமது ராணுவத்தலைவர் 1993-ல் ஃபிஜியின் பிரதமராகவே ஆகிவிட்டார். ( உள்துறை இலாகா போரடித்து விட்டதோ?)

1997-ல் காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் மறுபடியும் ஃபிஜி இணைக்கப்பட்டுவிட்டது!

1999 தேர்தலில் மறுபடியும் 'லேபர் கட்சி' வென்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஹேந்திர சவுத்தரி பிரதமரானார்.
அடுத்த வருடமே(2000) 'ஜார்ஜ் ஸ்பைட்' என்பவரால் மந்திரிசபை முழுவதும் துப்பாக்கி முனையால் மிரட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

2000, ராணுவம் அரசாங்கத்தை எடுத்துக் கொண்டது. ( ஃபிஜி மக்கள் 'கூ'வுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டனர்!)

அரசியல் சட்டம் பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது!

ஃபிஜியில் உள்ள கம்பெனி, இப்போது வேலை செய்துவரும் கம்பெனியெல்லாம் ஒரே தலைமையின் கீழ் உள்ளதால், என் கணவர்
அடிக்கடி கம்பெனி விஷயமாகப் போய்வந்து கொண்டுதான் இருக்கின்றார்.( அப்படியே வீட்டுக்கு சாமான்களும் கொண்டுவந்துவிடலாம்!)

ஃபிஜி இந்தியர்கள் இங்கே நியூஸிலாந்திலும் தங்கள் பழக்க வழக்கங்களை, ராமாயண் மண்டலி போன்றவைகளை விட்டுவிடாமல்
நடத்திக் கொண்டு வருகின்றனர். ( நாங்களும் எல்லாவற்றிலும் பங்கு பெற்று வருகின்றோம்)

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. இதுவரை எழுதினது முழுதும் என் நினைவில் இருந்துதான். ஏதாவது குறிப்புகள் தவறாக இருப்பதாக
நீங்கள் கருதினால் அது என் ஞாபகக் குறைவின் காரணமாக இருக்கலாம்!

இந்தத் தொடருக்கு பின்னூட்டங்கள் எழுதி, என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


மீண்டும் அடுத்த தொடரோடு வருவேன் உங்களை மீண்டும் அறுக்க!

நன்றி. வணக்கம்!
*************************************************************************************



Friday, November 26, 2004

'பல்லும் பாயும்!!!!!!!'

ஃபிஜி அனுபவம் பகுதி 20
************************

ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?



ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?

அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைக்கும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு
மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது!

அது பல்! சாதாரணப் பல் அல்ல. 'திமிங்கிலப் பல்!'

இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்பு கூடும்! ஒரு 'பல்'லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக்
கழுத்தில் அணிவார்கள்! சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும்!

இதன் உருவம் ஃப்ஜி நாணயத்திலும் பதிக்கப் பட்டுள்ளது!

மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட
விருந்தினருக்கோ, இந்த 'பல் மாலை' அணிவிப்பார்கள்.

இது இந்நாட்டின் மதிப்பு மிகுந்த பொருள் என்பதால், இப்போதெல்லாம் அதை வெளிநாடுகளுக்குக்
கொண்டுபோகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது! நம் 'யானைத் தந்தம்'போல என்று வைத்துக் கொள்ளலாம்!

நான் எப்போதும் நினைப்பது, 'இவர்களுக்குத் திமிங்கிலம் எங்கிருந்து கிடைக்கிறது ?' இவர்கள் திமிங்கில
வேட்டைக்கும் போவதில்லையே!

(நியூஸிலாந்தில் சிலசமயம், திமிங்கிலங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கடற்கரையில் ஒதுங்குகின்றன!
அவைகளைக் காப்பாற்ற முயன்று, தோல்வி ஏற்பட்டால் அவைகளைப் புதைத்து விடுகின்றனரே தவிர
பற்களையெல்லாம் எடுப்பதில்லை!)

ஓலைப்பாயும் இவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததே! திருமணச் சீர்வரிசையில் இது அவசியம் இருக்கவேண்டும்!
நம் ஊரில் சுருட்டுவது போலில்லாமல், இந்த வகைப் பாய்களை 'ஜமக்காளம்'போல மடிக்கலாம்! மிகவும் மிருதுவான
ஒருவகைப் புல் போன்ற ஓலைகளையே இதற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த ஓலையுமே வேறு எங்கோ இருந்துதான்
வருகிறதாம்! ( ஆகக்கூடி, இங்கில்லாத சமாச்சாரம் என்பதால்தான் இந்த மதிப்போ?)

இது இருக்கட்டும். நம் கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

இரண்டாவது முறை நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
அப்போது இருந்த இடைக்கால அரசாங்கத்தை, இரண்டாம் தடவை ராணுவம் பிடித்தெடுத்துக் கொண்டது.
நாலு மாத இடைவெளியில் இரண்டுமுறை 'கூ'

மக்களுக்கு,'கூ' மீதிருந்த பயம் தெளிய ஆரம்பித்ததோ, என்னவோ?

அரசியல் சட்டங்களை மாற்றுவதில் மும்மரமாக இருந்தார் நம் ராணுவத்தலைவர். அவருக்கு வேண்டியவர்களாகவும்,
அதே சமயம் 'ராத்தூ'க்களாகவும் இருப்பவர்களை மட்டுமே அரசாங்கத்தை நிர்வகிக்க ஏற்பாடு செய்துவந்தார்!

மேலும் இப்போதுதான் ஃபிஜி குடியரசு நாடாகிவிட்டதே! இதை மற்ற நாடுகள் ( இங்கிலாந்து, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து)
அங்கீகாரம் செய்யவில்லைதான்! ஆனாலும் 'ஹூ கேர்ஸ்?'

முதல் ஜனாதிபதியாக 'ராத்தூ பெனைய கனிலாவ்' நியமிக்கப் பட்டார்!

பிரதமர் பதவி, பழைய ஊழல் பெருச்சாளி என்று கருதப்பட்டவருக்கே கிடைத்தது!

நம் ராணுவத்தலைவர், ராணுவத் தலைமையை உதறிவிட்டு ( தூசி போல உதறிவிட்டு என்று சொல்லலாமா?) உள்துறை
மந்திரியாக உட்கார்ந்துகொண்டு,அனைத்து அரசாங்கத்தையும் 'தன் பிடிக்குள்ளேயே' வைத்திருந்தார்!

'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா'

இந்தியர்களின் வெளியேற்றத்தால் ஜனத்தொகை குறைய ஆரம்பித்தது! நல்ல பதவியிலும், வேலைகளிலும் இருந்தவர்கள்
போயாச்சு! டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது! நோயாளிகளைக் கவனிக்க முடியாமல், மருத்துவ மனைகளில் ஒரு
தேக்கம் ஏற்பட்டது! இப்படியே மற்ற துறைகளிலும்! 'பட் ஹூ கேர்ஸ்?'

அப்போது நியூஸிலாந்து அரசாங்கம், தன் கொள்கைகளை ( வெள்ளையர் மட்டும் குடியேறுதல்)சற்றுத் தளர்த்தி, காசு இருந்தால்
குடியேறலாம் என்றது! 'பிஸினஸ் மைக்கிரேஷனாம்!' $250,000 இருந்தால் போதும்! அதை நியூஸிலாந்து வங்கிகளில் போட்டு
வைத்துவிட்டு, அதைக் காட்டினால் பி. ஆர். கிடைத்துவிடுமாம்!

குஜ்ஜுக்கள் பலர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்திக் கொண்டனர்! இங்கே குடும்பத்துடன் வந்து, பாஸ்போர்ட்டில்
ஸ்டாம்ப் செய்து கொண்டு, 'ரீ எண்ட்ரி விசா' வாங்கிகொண்டு ஃபிஜிக்கே திரும்பிவந்து வியாபாரத்தைக் கவனித்து வந்தார்கள்.
இந்த 'ரீ எண்ட்ரி விசா' ஒரு 4 வருடத்திற்குச் செல்லும்! இன்னும் ஏதாவது குழப்பம் உண்டானால் வெளியேறலாம் என்ற எண்ணம்தான்!

நியூஸிலாந்து அரசாங்கம், இந்தக் கொள்கை மாற்றங்களுக்குப் பழக்கப் பட்டிருக்கவில்லை. நாட்டில் வரவு வைக்கப்பட்ட பணம் என்ன
ஆகிறதென்ற கவனமும் இல்லாமல் இருந்தது. அதற்கான சட்ட திட்டங்களும் ஒன்றுமேயில்லை! சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன் படுத்த
நம் மக்களுக்குச் சொல்லித்தர வேண்டுமா என்ன?

பலர், இங்கே வங்கி கணக்கில் காண்பித்த பணத்தை, அவர்கள் காரியம் முடிந்து ஃபிஜிக்குத் திரும்பி வந்தவுடனே மறுபடி ஃப்ஜியில்
உள்ள வங்கிக்கே மாற்றி எடுத்துக் கொண்டார்கள்!

இதனிடையில் ஃபிஜி நாளிதழில் மற்றுமோர் செய்தி! இலங்கைத் தமிழர்கள் பலர் (கனடாவுக்குப் போக வேண்டியர்கள்) சரியான 'விசா'
பேப்பர்கள் இல்லாததால் எப்படியோ 'நான்டி ஏர்போர்ட்'டில் ( இதுதான் இந்நாட்டின் பன்னாட்டு விமானநிலையம்) இறக்கிவிடப்
பட்டிருக்கின்றனராம்!

ஐய்யய்யோ.... தமிழ்க்காரர்களா? அடப்பாவமே... என்றெல்லாம் இருந்தது!

இங்கே ஜனங்கள் எல்லாம் ரொம்ப நல்லமாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் அல்லவா? அப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும்
நல்லவர்களாகவே அமையமுடியுமா? பெரும்பாலோர் நல்லவர்களே! ஒரு சிலர் வேறு மாதிரியும் இருப்பார்களல்லவா?

இதுபோன்ற சில நிகழ்வுகளும் ( நல்ல மனிதர் அல்லாதவரால்) அவ்வப்போது நடக்கும். அப்போது எங்களால் ஆன உதவி ஏதாவது
செய்வோம். மாதிரிக்கு ஒன்று!

சென்னையிலிருந்து ஒருவர் இங்கே வேலைக்காக வந்திருந்தார். அவருடைய துரதிஷ்டம் இது போன்ற ஒரு இடத்தில் அவர் வேலை அமைந்து
விட்டது. அந்த நிறுவனத்தினர் என்றாலே இங்கே பலருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது!

வந்த மறுநாளே எங்களை வந்து பார்த்தார். ஒரு வாரம்தான் போனது, அதற்குள் அங்கே முதலாளிக்கும், இவருக்கும் ஏதோ 'லடாய்!'
அப்புறமும் அடுத்துவந்த நாட்களில் என்னென்னவோ நடந்துவிட்டதாம்! அவருக்கு உணவும் சரியாகத் தரப்படவில்லை என்று சொல்லிக்
கொண்டிருந்தார். நம் வீட்டிலே அவருக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த்தோம். அவர் என்ன மாதிரி ஒப்பந்தத்தில் வந்திருக்கிறார் என்று
எங்களுக்கு விவரமாகத் தெரியாது! அவருடைய முதலாளி ஏதோ இழிசொற்கள் சொன்னதாக நம்மிடம் வந்து புலம்பினார். எல்லாம் படபட
வென நடந்துவிட்டது ஒரே மாதத்தில்!

ஒரு நாள் மாலை 4 மணி அளவில் நம்மைத் தொலைபேசியில் அழைத்து, 'என்னை உடனே போகச் சொல்லிவிட்டனர். எனக்கு டிக்கெட்
தரவேண்டியது அவர்கள் கடமை என்று சொன்னேன். அவர்கள் ஒரு இடம் சொல்லி அங்கே உன் டிக்கெட் இருக்கிறது. அதை எடுத்துக்
கொண்டு உடனே கிளம்பவேண்டும். ஒரு நிமிடம் கூட இருந்தாலும், போலீஸ் 'ஓவர் ஸ்டே'என்று பிடித்துவிடும்' என்று
பயத்தோடு சொன்னார்.

டிக்கெட் உள்ள இடம் நம் வீட்டிலிருந்து 22 மைல் தூரத்திலுள்ள 'லட்டெளகா' என்னும் ஊர். அங்கே டிக்கெட்டை அந்த 'ட்ராவல் ஏஜண்ட்'
மூலம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து இன்னும் 22 மை தூரத்தில் உள்ள விமான நிலையம் செல்லவேண்டும்! டிக்கெட்டைப் பெற்றுகொண்டு
விமான நிலையம் போகவும் அவருக்கு வாகன வசதி ஏதும் செய்துதரவில்லையாம்! சொல்லும்போதே அவரது குரல் 'கம்மி' அழுதுவிடுவார்
போலிருந்தது!

நாங்களே அவரை அழைத்துச் சென்று டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளச் செய்து அவரை நம் வீட்டிற்குக் கொண்டுவந்தோம்.
அப்போதே மாலை 6 மணியாகிவிட்டது. ஊருக்கு வெறும் கையாகப் போகின்றோமே என்றும் புலம்பிக் கொண்டிருந்தார். அங்கேதான் மாலை
6 மணிக்கு எல்லா கடைகளும் அடைபட்டிருக்குமே. அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை ஊரில் இருக்கிறதென்று சொல்லியிருந்தார்.


எங்கள் அக்காவுக்கு இந்த விவரத்தைத் தெரிவித்தோம். அங்கே எனக்கு ஏது அக்கா? சொல்கிறேன்! அக்கா நமக்கு அக்கா ஆனதே ஒரு
தனிக் கதைதான்!

அங்கே எல்லோரும் நமக்கு உறவினர்கள்தான்! ஏதாவது முறைவைத்துதான் அனைவரையும் அழைப்பார்கள். அந்தப்
பழக்கம் எங்களையும் பற்றிக் கொண்டது! ஆனால் நல்ல பழக்கம்தானே! இந்த அக்கா நமது மூன்றாம் வீட்டு ஆட்கள். அக்கா பெங்களூரைச்
சேர்ந்தவர். நாங்கள் வந்த புதிதில், வந்து 1 வாரம் ஆனபின்புதான் நமக்கு என்று கம்பெனி தெரிவு செய்த வீட்டிற்குக் குடி புகுந்தோம்.நாள்
நன்றாக இல்லையென்று நம் கம்பெனி உரிமையாளரின் தாய், நம்மை அவர்கள் வீட்டிலேயே அதுவரை தங்கியிக்கச் சொல்லிவிட்டார்கள்.
ச்சும்மா சொல்லக்கூடாது, எங்களை வேற்று மனிதர்களாக எண்ணாமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்தினார்கள். எங்களுக்கும்
தாய் போலவே இருந்தார்கள். நம் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தனி வீட்டிற்கு வந்த மறுநாள், ச்சும்மா மொட்டை மாடியில் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுப்
பெண்மணி என்னைப் பார்த்துவிட்டு, அவருடைய பக்கத்து வீட்டு பெண்மணி ( யாரு? நம்ம அக்காதான்!)யிடம் சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர்கள் இருவரும் நம் வீட்டிற்கு வந்தனர். நானும் அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னேன். அப்போது எல்லா சம்பாஷணை
களும் ஹிந்தியில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அக்கா கேட்டார்கள்,

"நீங்கள் இந்தியாவில் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்?"

" பூனாவிலிருந்து வந்துள்ளோம். ஆனால் மெட்ராஸ்தான் சொந்த(!) ஊர்"

" ஓ, தமிழ் பேசுவீர்களா?"

இதைத் தமிழில் கேட்டவுடன், தாவி வந்தது என் பேச்சு, 'ஆமாங்கா, நாங்க தமிழ்தான் பேசுவோம்'

அப்போது என்னை அறியாமலேயே 'அக்கா' என்ற வார்த்தை வந்து விட்டிருந்தது! அப்போது என் கணவரும் மதிய உணவுக்காக
வீட்டிற்கு வந்தார். அவரிடம்,'இந்த அக்கா தமிழ் பேசறாங்க' என்று மிக மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

'ஆமாம் தம்பி, தமிழ்காரங்கதான். ஆனா பெங்களூரு!' அவர்களும் 'தம்பி' என்று உரிமையோடு சொன்னதில் இவருக்கும் மகிழ்ச்சி!

அந்த நிமிடம் முதல் அவர்கள் எங்களுக்கு அக்காவும் அவர்கள் கணவர் எங்கள் மாமாவுமாக ஆகிவிட்டனர். எங்கள் நட்பு இன்னமும் இந்த
23 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது!

அந்த அக்காவிடம் விஷயத்தைச் சொன்னவுடன், அவர்கள் சில புதுப் புடவைகளைக் கொண்டுவந்தார்கள். என்னிடமும் சில புடவைகள்
புதிதாக இருந்தன. அவ்வப்போது 'சேல்' வரும்போது வாங்கிவைக்கும் பழக்கம் இருந்தது. ஊருக்குப் போகும்போது கொண்டுபோகத்தான்!
அப்படியே, ஊரில் உறவினரின் மக்களுக்கு என்று சில ஆடைகளைத் தைத்து வைத்திருந்தேன். (அப்போது, நான் 'ஆயிரம் துணியைக்
கெடுத்து அரை டெய்லர்' ஆக மாறியிருந்த காலம்!) இது போன்ற சிலவற்றைக் கொடுத்து, அவருக்கு ஆறுதல் சொல்லி மறுநாள் அதிகாலை
5 மணிக்குப் போகும் விமானத்தில் ( இரவு 1 மணிக்குக் கிளம்பினோம். 44 மைல் இரவில் பயணிக்க வேண்டும் அல்லவா?)
அவரை அனுப்பி வைத்தோம்.


இன்னும் வரும்!
**********

Tuesday, November 23, 2004

'சன் டே' யும் சண்டையும்!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 19
**********************

ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக,


ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக, எதுவுமே இல்லையென்றால் ச்சும்மா
ஒரு லாங் ட்ரைவ் இப்படி ஏதாவது ஒன்று!

மற்ற நாட்களில் வேலையால் உண்டாகிய அலுப்பைப் போக்கும் நாள்! எந்தக் காரியமாக இருந்தாலும், இந்த 'சன் டே' கட்டாயம் செஞ்சிடணும்
என்றிருந்த காலம்!

இதெல்லாம் கூட அவ்வளவு முக்கியமில்லை. இங்கே ஜனங்களின் வசதியை முன்னிட்டு, திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகள்
சனி, ஞாயிறு ( வீக் எண்ட் இல்லையா?)களிலே நடக்கும். திருமணங்கள் அநேகமாக சனிக்கிழமையன்றுதான். ஆனால் அதை ஒட்டி, நடக்கும்
பல்வேறு வைபவங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் 'மறுவீடு புகுதல்' , மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு ( திருமணம் எப்போதும்
மணப்பெண் வீட்டிலேயே நடைபெறும்)போன்றவைகள் மறுநாளான ஞாயிறன்றே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது, இன்று நேற்று வந்த
பழக்கம் அல்ல. பல ஆண்டுகளாகவே இப்படித்தான்!

அதற்கும் வந்ததே ஆபத்து! நம் ராணுவத்தலைவர், நாட்டை ஒரு 'கிறிஸ்டியன் ஸ்டேட்' ஆக அறிவித்தார்! ( அப்பப்ப இப்படி ஏதாவது
ஸ்டண்ட் அடிக்கலேன்னா அவருக்கு ஆகாது!)

அறிவிச்சுக்கட்டும். அதனாலே என்ன என்று எல்லோரும் ச்சும்மா இருந்தோம். ஏனெனில் 'கிறிஸ்டியன் ஸ்டேட்' என்றால் என்ன என்று
தெரிந்தால் தானே?

'சர்ச்சு'க்கு மட்டும் போக முடியும். மற்ற விஷயங்களுக்கெல்லாம் 'தடா!' போலீஸ்காரர்களுக்கு இதுவே முக்கிய வேலையாகப் போனது!
போற வர்ற காருங்களை நிறுத்தி விசாரிக்கறது! அவரவர் வீட்டிலே 'கப் சுப்'என்று உட்கார்ந்திருக்கணும்!

இந்தியர்கள் சம்பந்தமுள்ள விழாக்கள் எல்லாம் ஞாயிறு தவிர மற்ற நாட்கள் மட்டுமே என்பதால், நம்மவர்க்கு இடைஞ்சலாக இருந்தது!
இதுநாள்வரை, ஒருவித வேற்றுமையும் பாராட்டாமல் ' எல்லாரும், எல்லாத்துக்கும் போய் வந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்' எல்லாம்
புது வர்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியதுபோல இருந்தன! இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே 'மோதல்' ஏற்படத் தொடங்கியிருந்தது!


'இது என்ன புது வம்பு' என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்தனர்!

அதே சமயம் 'காமன்வெல்த் அணி'யிலிருந்து ஃபிஜியை நீக்கிவிட்டதாக அறிக்கை வெளிவந்தது!

தலைவர் ச்சும்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்பாரா என்ன? அவரும் பதில் அறிக்கை விடுத்தார். 'நீங்கள் என்ன எங்களை
நீக்கறது? நாங்களே விலகுகிறோம்!'

'சபாஷ்! சரியான போட்டி' என்று 'நடிகர் வீரப்பா, வஞ்சிக்கோட்டை வாலிபனில்' சொன்ன மாதிரி நாங்களும் புது சுறுசுறுப்புடன்
நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

இதற்குள் என் கணவரும் நியூஸிலாந்து போய் அங்கே உள்ள ஃபேக்டரியைப் பார்வையிட்டு(!) திரும்பி வந்தார். அது கொஞ்சம் பெரிய
அளவில் ( 300 பேர் வேலை செய்கிறார்கள்) நடந்து கொண்டிருந்தது. யூனிட் பெருசு என்பதால், வசதிகளும், இன்னும் மேலே உயரக்கூடிய
வாய்ப்புகளும் இருந்தன! இங்கேயோ 15 ஆட்கள் மட்டுமே உள்ள சிறிய யூனிட்.

அங்கே போனால், புது 'ப்ராடக்ட் டெவலெப்' செய்து ஆராயவும் வசதிகள் இருந்தன! வளர வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இதையெல்லாம்
நினைவில் கொள்ளவேண்டுமல்லவா? ஆகவே 'ச்சலோ நியூஸிலாண்ட்' என்று தீர்மானித்தோம்.

வேலைக்கான அனுமதியில் போகவேண்டாம் என்றும், நிரந்தர வசிப்பு என்ற தகுதியில் போகலாம் என்றும் நினைத்ததால், உடனே இங்குள்ள
தூதரகத்தில், 'பெர்மெனண்ட் ரெஸிடென்ஸ்' தகுதிக்கு விண்ணப்பித்தோம். அதே சமயம், அங்கே நியூஸியில் நம் வருகைக்கான அவசியத்தை(!)
குறிப்பிட்டு, கம்பெனியும் குடியுரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது!

'இரண்டு கல்லில் ஒரே மாங்காய்!!'

நான் எழுதிய அனுப்பிய லிஸ்ட்டில் இருந்த சாமான்கள் கிடைப்பது, நாங்கள் இருக்கப் போகும் நகரத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும், ஆக்லாந்து
என்னும் பெரிய நகரத்தில் இவை கிடைக்கும் என்ற விவரமும் கொண்டுவந்தார். ஆனால் 'அரிசி' கிடைக்கிறதென்று சொன்னார்!

இன்னும் ஒரு முக்கியமான(!) விஷயத்தையும் கவனித்து வந்திருந்தார்.

'வைர மோதிரம்'

இதுவரை, இந்தியக் கலாச்சாரத்தை (தாலி செண்டிமென்ட் போன்றவை ) மற்றுமே அறிந்து வாழ்ந்துவந்த எங்களுக்கு, இது ஒரு புது
விஷயமாக இருந்தது. நம் ஊர்க் கல்யாணங்களிலும் மோதிரம் என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும் 'வைரம்' என்பது மிகவும்
வசதியானவர்களுக்கு என்ற நிலமை இருந்துவந்த காலம்! ஆனால் இங்கே 'வெள்ளையர்கள்' திருமணச் சடங்குகளுக்கு முக்கியமாகக்
கருதியது இந்த வைர மோதிரம்! அதுவும் ஒரு பெரிய வைரக் கல்லாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு 'எறும்புத் தலை'யின்
அளவிருந்தாலும் போதும்! வைரம் வைரம்தான்! மற்றபடி அவர்கள் நம்மைப் போல் தங்க நகைகள் அணிவது அநேகமாக இல்லை என்றே
சொல்லலாம்!

எங்கே, எனக்குத் தாழ்மைஉணர்வு வந்துவிடுமோ என்று 'இவராகவே எண்ணிக் கொண்டு' எனக்கு ஒரு 'வைர மோதிரம்' வாங்கித் தந்தார்!
அடிச்சது பிரைஸ்! நல்லதாகவே பார்த்து வாங்கிக் கொண்டேன்! ( நியூஸி போன பின்புதான் இந்த 'வைர விவகாரம்' இவர் நினைத்தது
போல இல்லையென்பதும், பலர் வெறும் தங்க மோதிரமே அணிகிறார்கள் என்பதும், சிலர் ஒன்றும் அணியாமலேயே இருக்கிறார்கள் என்றும்
தெரிந்தது) ஏதோ நம் அதிருஷ்டம், இவர் வைரமோதிரம் உள்ளவர்களை மட்டுமே பார்த்திருக்கிறார்!! வெல்டன்!!!!

இப்போது 'காத்திருப்பு காலம்'. நமக்குத் தூதரகத்திலிருந்து அழைப்பு வரும் என்று சொல்லியிருந்தார்கள்.

நம் ராணுவத்தலைவர் இன்னோரு அறிக்கை வெளியிட்டார். இது மிகவும் முக்கியமானது! எங்கள் நாடு இனி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு
உட்படப் போவதில்லை. இதை ஒரு 'குடியரசு நாடு' என்று பிரகடனம் செய்தார்! இதனால், இங்கிலாந்தின் அதிகாரத்தில் இருந்து முழுமையாக
விடுபட்டாயிற்று. இனி 'நோ கவர்னர் ஜெனரல்!' நானே பிரதம மந்திரி! நானே எல்லாம்!!!!!!!

இங்கிலாந்து அரசுக்கும் 'விட்டது ஒரு தொல்லை!' அவர்களும் இந்த நாட்டுப் பராமரிப்புக்கென்று இனி செலவு செய்ய வேண்டாமே! இனி எல்லாம்
உங்கள் பாடு என்று 'நைஸா'கக் கைகழுவி விட்டனர்!

நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த நம் ராணுவத்தலைவர்......இல்லையில்லை, நம் புதிய பிரதமர் தனக்குத் தெரிந்த வழியை மீண்டும்
செயல்படுத்தினார்.

இந்தா பிடி, இன்னொரு 20 சதம் நாணய மதிப்புக் குறைவு!

இப்போது ஃப்ஜி டாலர் மொத்தம் 34% மதிப்பை இழந்துவிட்டது!

வியாபாரிகளுக்கு பயங்கர இடி!

குரங்கு அப்பம் பிட்ட கதையாக ஆனது எங்கள் சேமிப்பு!


இன்னும் வரும்
************

Friday, November 19, 2004

இருப்பதா? போவதா?

ஃபிஜி அனுபவம் பகுதி 18
**********************

ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை!


ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை! இருப்பவர்களும் போய்ச் சேரும் வழியைத் தேட ஆரம்பித்தனர். அந்தந்த நாட்டினர்
தங்களுடைய குடிமக்களை(ஹாலிடே மேக்கர்ஸ்) இங்கிருந்து உடனே திரும்பிவரச் சொல்லி வேண்டுகோள் விடுவித்த வண்ணம் இருந்தனர்!

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், எல்லா ரிஸார்ட்டுகளும் காலியாகிவிட்டன! அரசாங்கத்துக்கும் வருமானம் போச்சு!

ராணுவம் ஏன் இப்படிச் செய்தது என்பதற்குப் பலவிதமான காரணங்கள் கசியத் தொடங்கியன! முதல் காரணம் பணம்!!!!

இங்கே ஏது அவ்வளவு பணம்?

இதற்குமுன் இருந்த பிரதமர் கோடிக்கணக்கில் பணத்தை 'அமுக்கிவிட்டார்' என்றும், புது மந்திரிசபை வந்தவுடன் அந்த ஊழல் வெளிப்பட்டு
விடுமென்ற பயத்தில், ராணுவத்தின் உதவியுடன் இதை நடத்திவிட்டார் என்றும் பரவலான செய்திகள் வந்தவண்ணமிருந்தன!

இங்கே எப்போதும் புயல் வருவதால்,( அதுதான் வருடாவருடம் வருகிறதே!) மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் புயல் நிவாரணம் நிதியை
ஒழுங்கான முறையில் செலவுசெய்து கணக்கில் காட்டாமல், சுருட்டிட்டாங்களாம்! அதுவே மில்லியன் கணக்கில் இருக்குமே!

இந்த கலாட்டாவைப் பார்த்துட்டு, நம்ம 'மாட்சிமை தாங்கிய மஹாராணி ' சொல்லிட்டாங்க, 'ஃபிஜியை 'காமன்வெல்த் கூட்டத்துலே இருந்து
விலக்கப்போறோம்!'

இந்த 'தம்கி' யெல்லாம் எந்த மூலைக்கு?

(இந்திய அரசாங்கம் ஒண்ணும் செய்யாமச் சும்மா அறிக்கை விட்டுகிட்டு இருந்தது! அங்கெயே குடுமிப்பிடி சண்டை நம்ம அரசியல்வாதிங்களுக்கு!
அதுலெ பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை யாரு நினைப்பா? அவுங்க ஓட்டு கணக்குலே வராதில்லே!)

இதற்கு நடுவுலே நமக்கு அங்கெயே இருப்பதா அல்லது இந்தியாவுக்குப் போய்விடலாமா என்று ஒரே குழப்பம். இந்தக் கம்பெனி ஆரம்பித்து
ரொம்ப நன்றாக வளர்ந்து இருந்தது இந்த 5 வருசத்துலே! முதல் வருடம் முடிவதற்கு முன்பே, ஆஸ்தராலியக் கம்பெனி ஒன்று இதனுடன்
கூட்டுச் சேர்ந்துகொண்டது! அதற்குப் பின் அதே ஆஸ்தராலியக் கம்பெனி, நியூஸிலாந்து கம்பெனிகளையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது!

அங்கிருந்தெல்லாம் 'பெருந்தலைகள்' அவ்வப்போது ஃபிஜிக்கு விஜயம் செய்து கம்பெனி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் நடந்து
கொண்டிருந்தது. அவர்கள் வரும்போது, மனைவிகளும் கூடவே வருவார்கள். அவர்களுக்கு ஒரு ஃப்ரீ ஹாலிடே! அப்படியே,
நம் வீட்டுக்கும் வந்து ஒரு விஸிட் அடித்துவிட்டுப் போவார்கள்.

நமக்கும் ஒப்பந்தம் முடிவடையும் நாள் வந்துகொண்டிருந்தது! நாங்கள் 3 வருட ஒப்பந்தத்தில் வந்து, அது மீண்டும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு
இருந்தது. இன்னும் 11 மாதங்களே இருந்தன! இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்து அதை நம் கம்பெனியிடம் தெரிவித்தோம்.
இன்னொரு எஞ்சினீயரை வரவழைக்க வேண்டுமல்லவா? அத்ற்கு நேரம் எடுக்குமல்லவா? இப்போது சொன்னால்தானே நல்லது!

அவர்களுக்கு நம்மை விட்டுவிட விருப்பமில்லை(!) ஃபிஜி குடியுரிமை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். 'ஆடிக் காத்தில் அம்மியே
பறக்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?'

உள்ளூர் ஆட்களே, இங்கே இனி வாழ்க்கையில்லை என்று வெளியூர் கிளம்பிகின்றனர்!


மூணு மாசமாகிவிட்டது. ஒரே இறுக்கம்! ஏதும் முன்னேற்றம் காணப்படவில்லை. இன்னும் 'ராணி சாஹிபா'வின் ஆட்சியின் கீழேதான்
என்பதால் பேச்சு வார்த்தை(!) நடந்துகொண்டிருந்தது, இங்கிலாந்துடன்!

நம் ராணுவத்தலைவர் அவ்வப்போது ஏதாவது 'ஸ்டண்ட்' அடித்துக் கொண்டிருந்தார்! பழைய பிரதமரை ( ஊழல் பெருச்சாளி என்று
வதந்திகளில் வந்தவர்) புது 'கவர்னர் ஜெனரல்'பதவிக்குக் கொண்டுவந்தார்! ஒரு இடைக்கால அரசாங்கம் 'நியமிக்கப் பட்டது!'

உள்ளூர் டாக்டர்கள், இன்னும் நல்ல வேலைகளில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கனடா, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து
என்று போனார்கள். வேலை கிடைத்தல்ல! ச்சும்மாப் போய் வேலை கிடைக்குமா என்று பார்க்க! ஏற்கெனவே டூரிஸ்ட்டாக அங்கே
போனவர்கள் விசா முடிந்தபின்னும் திரும்பி வராமல் 'ஓவர் ஸ்டே'யாக நின்றுவிட்டனர்! அந்த அரசாங்கங்களும் ஏதாவது உதவி
செய்தேயாகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தன!

இங்கே தூதரகங்கள் எல்லாம் திரும்ப இயங்கத் தொடங்கிவிட்டன!

இந்திய ஹைக்கமிஷனர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவருடைய உரையில், இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு,
இந்த நாடு நல்ல நிலையில் இருப்பதற்கு இந்தியர்களின் உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டு விட்டாராம்! இது பொறுக்காத அரசு,
உடனே இந்தியத் தூதரகம் இனி தேவையில்லை. உடனே மூடப்படவேண்டும் என்று சொன்னது! இதனால் பரபரப்பு மீண்டும் தொற்றிக்
கொண்டது! அடுத்த நாளே, ஹை கமிஷனரும், அலுவலக ஆட்களும் கிளம்பிப் போய்விட்டனர்!

இதற்குள் நம் கம்பெனியின் 'பெருந்தலைகள்' கூடிப் பேசி, நீங்கள் இந்தியா திரும்ப வேண்டாம். ஆஸ்தராலியா அல்லது நியூஸிலாந்துக்கு
வந்துவிடுங்கள் என்று அழைத்தனர்!

இப்போது 'பந்து நம் பக்கம்'

ஆஸ்தராலியா பெரிய நாடு. ஒரு கண்டம் முழுவதும் ஒரே நாடு என்பது ஒரு சிறப்பு அம்சம்! ஃபேக்டரியும் பெரிது! முன்னேற நல்ல வாய்ப்பு
என்று பல நல்லவைகள் இருந்தாலும் என் மனதில் ஒரு அச்சம்! இங்கே ஃபிஜியில் வார, மாத இதழ்கள் என்று ஒன்றுமே வெளியாகாது.
தினசரிப் பேப்பரே ஒன்றே ஒன்று என்னும் போது இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? நமக்கோ, கொஞ்சம் ஏதாவது படிக்கவேண்டும்!
பொட்டலம் கட்டித்தரும் பேப்பர் என்றாலும் சரி! ஆனால் பொட்டலமே இல்லையே! எல்லாம் பாலித்லீன் பைகள்தானே!

ஊரில் இருந்து குமுதமும், ஆனந்தவிகடனும் வரவழைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் வேற ஒன்றும் இல்லாததால், ஆஸ்தராலியா
இதழ்களை ( இவை உள்ளூர்க் கடைகளில் தாராளமாகக் கிடைத்தன) வாங்குவதையும் வழக்கமாக்கி வைத்திருந்தோம்.

ஆஸ்தராலியாவைப் பற்றின என் அறிவெல்லாம்(!) இந்த இதழ்களின் மூலம் பெற்றவைதான். அப்போது அங்கே பள்ளிப் பிள்ளைகள் கூட
'ட்ரக்' உபயோகிக்கின்றனர் என்றெல்லாம் வந்துகொண்டிருந்தது. மேலும் 'இன ஒற்றுமை' அவ்வளவாக இல்லை என்றும் செய்திகள்
வந்துகொண்டிருந்தன. எனக்கோ வயிற்றீல் 'புளி!' பெரியவர்களுக்குப் பரவாயில்லை. ஆனால் குழந்தை, அடுத்தவருடம் பள்ளிக்குப்
போக ஆரம்பிக்குமே. பள்ளியில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் குழந்தையின் வாழ்வு பாதிக்கப்படுமே என்று ஒரே கவலை!

நியூஸிலாந்து பற்றித் தெரிந்த விஷயம் ஒண்ணும் இல்லை. ஃபிஜியில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத 'கேஸ்'கள்,
அவர்களுக்கு இருக்கும் நிதிநிலையைப் பொறுத்து, நியூஸிலாந்து நாட்டுக்கு வந்து குணம் பெற்றுத் திரும்பும்! பேச்சு வழக்கில் சொன்னால்
'ஏதோ கொல்லையில் இருக்கற இடம் போல, போயிட்டு வந்துட்டு இருக்கறது!'

அவ்வப்போது, மூணு மாசத்துக்கு 'விசா' இல்லாமலே போய்வரலாம் என்ற அதிரடி அறிவிப்புகள்வேறு வரும்! அப்போது, பலர் இங்கு வந்து,
'ஃப்ரூட் பிக்கிங்' வேலை செய்து சம்பாரித்துக் கொண்டு திரும்புவார்கள். ஒரு ஃபிஜி டாலருக்கு ரெண்டு நியூஸி டாலர்கள் இருந்த காலம்!
மேலும் ஃபிஜியில் வேலைக்கு வாரக் கூலிதான்! நியூஸியில் மணிக்கு இவ்வளவு என்று கூலியாச்சே! நல்ல காசு!

மேலும் 'நியூஸி'யில் வெள்ளை இன மக்களுக்கு மட்டுமே குடியேற்ற உரிமை என்ற கட்டுப்பாடு இருந்ததும், அப்போது புதிதாக வந்த
'லேபர் கவர்ன்மெண்ட்' இதைச் சற்று தளர்த்தியிருந்ததும் எங்களுக்குச் சாதகமாக இருந்தது!

வேலைக்கான அனுமதி என்று ஒருவகையும், பி. ஆர் ( பெர்மனன்ட்டு ரெஸிடன்ஸ்) என்ற ஒன்றும் இருந்தன. ஆனால் பி. ஆர்.
வேண்டுமானால் நிரந்தர வேலைக்கு உத்திரவாதம் இருந்தால்தான் கிடைக்கும்!

சரி ஒரு 'சான்ஸ்' எடுக்கலாம் என்று நினைத்தாலும், சரிவர விவரம் இல்லாமல் இடம் மாறுவது நல்லதல்ல என்றும் எண்ணம் இருந்தது.
என் கணவர் மட்டும் 'கம்பெனியை நேரில் போய்ப் பார்த்து விட்டு முடிவு' சொல்வதாகச் சொன்னார். நானும் வழக்கம் போல ஒரு
நீண்ட பட்டியலைக் கொடுத்தேன், என்னென்ன சாமான்கள் கிடைக்கும் என்ற விவரம் வேண்டி. அதில் முதலாவது இருந்தது எது என்று
சொல்லவும் வேண்டுமா? புளி!

இன்னும் வரும்
***************