Monday, July 10, 2023

கிர்மிட் பாட்டி !

முன்குறிப்பு :  படங்கள் சேர்த்ததால் 19 வருஷத்துப் பதிவு  மீள்பதிவாக வந்துள்ளது. 

கிர்மிட் பாட்டி!


முன் பதிவின் தொடர்ச்சி. பகுதி 2

தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளில் இருந்து, வந்தவர்களே பெரும்பாலோர். வேலை தருகிறோம் என்ற ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டு வந்தவர்கள். 'அடுத்த ஊரில் வேலை. உங்களை வேலை முடிந்தவுடன்திருப்பிக் கொண்டுவந்து இங்கே விடுவோம் 'என்று சொல்லி, அவர்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றி, சென்னைப் பட்டினத்திற்குக் கொண்டுவந்து, ஒரு பெரிய கொட்டகையில் தங்க வைத்து, பின்னர் கப்பலில் ஏற்றி ஃபிஜிக்கு கொண்டு வந்துவிட்டனர்! நான்கு மாதங்களுக்குமேல் கடலில் பிரயாணம் செய்தனராம்! பலர் அப்போதே நோய்வாய்ப்பட்டு இறந்தும் விட்டனராம்! இவர்களின் ஊர் எது என்று கேட்டால் சிலர் திண்ணாமலை என்று சொல்கிறார்கள்.


வந்தவர்களில் யாருக்குமே படிப்பறிவு கிடையாதாம்.மனைவியைப் பிரிந்துவந்த கணவர்கள், கணவன்,குழந்தைகளைப் பிரிந்துவந்த மனைவிமார், குடும்பத்தைப் பிரிந்து வந்த பலரும் நினைத்திருந்தது' இதோ, வேலை முடிந்து கூலியோடு மாலை வீடு திரும்புவோம்' இனி தம் வாழ்நாளில் தம் குடும்பத்தினரைப் பார்க்கப்போவதில்லை என்ற பயங்கரமான உண்மையைஅறியாதவர்கள். பாவம்!

தென் இந்தியர்கள் வரும் முன்பே, வடக்கே பீஹார், ஒரிஸ்ஸா பகுதிகளில் இருந்து இதேபோலக் கொண்டுவரப் பட்டவர்கள்தான் இப்போதுள்ள வட இந்தியர்களின் முன்னோர்கள்.
இவர்கள் யாருக்குமே படிப்பறிவு இல்லாத காரணத்தால், தாய்நாட்டில் இருக்கும் தம் உற்றார் உறவினரோடு மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. அதன்பின் அவர்கள் தங்களுக்குள்ளே புது உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.
சமீப காலம்வரை, தென் இந்தியர்களுக்கும், வட இந்தியயருக்கும் திருமண உறவு ஏற்பட்டதில்லை. அத்தி பூத்ததுபோல எங்கோ சில காதல் திருமணங்கள்!

வெள்ளையர்களின் கண்காணிப்பிலே இவர்கள் தங்கி இருந்தார்கள். அவர்களின் பெயர்களைப் பதிவு செய்தபோது, குடும்பப் பெயர்கள் கேட்கப்பட்டனவாம். வெள்ளையர்களுக்கு 'ஸர் நேம்' கட்டாயமல்லவா? நம் தமிழர்கள் அவரவர்கள் ஜாதிப் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்கள். சிலர் உண்மையையும் சிலர் அவர்கள் மனதுக்குத் தோன்றியதையும்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள்கூடப் பதிவாகி விட்டதாம்! பிள்ளை, நாயுடு, முதலியார்,கவுண்டர் இப்படி!

இங்கேயுள்ள வட இந்திய சமூகத்தில், நிறைய பேருக்கு 'ஸர்நேம், மஹராஜ்'என்று பதிவாகியுள்ளது. அவர்கள் யாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவாம். முதன் முதலில் வந்தவர்கள் வட இந்தியர்கள்தானே. அவர்கள் பெயரைப் பதிவு செய்தபோது, 'சர்நேம்' கேட்கப்பட்டபோது சம்பாஷணை இப்படி இருந்ததாகச் சொல்கின்றனர்.

பெயர் என்ன?

ராம்சேவக்

ஸர்நேம் என்ன?

ஜி, மஹராஜ்? ( என்னங்க? என்று ஹிந்தியில் கேட்டிருக்கிறார்கள்)

அதுவே அவர்கள் பெயராகிவிட்டிருக்கிறது. 'ராம்சேவக் மஹராஜ்'

இப்படியாக அங்கே எக்கச்சக்க மஹராஜ்கள்!!!!!

நம் தமிழ்க்காரர்களுக்கு,குறிப்பாக முதியோர், நடுத்தரவயது உடையோருக்கு, இன்னமும் இந்தியா என்றாலே மிகவும் வாஞ்சைஅதிகம். நான் அங்கே இருந்தபோது, மிகவும் அன்பாக இருந்தார்கள்.

ஊர்லே இருந்து வந்த பாப்பாவா(!)? நல்லா இருக்கியாம்மா? ஊர்லே எல்லாரும் நல்லா இருக்காங்களா? ஊர் எப்படிம்மா இருக்கு?

இவர்களுக்குத்தான் ஊரோடு தொடர்பே இல்லாமல் போய்விட்டதே! அதனால் ஊரிலிருந்து வந்தவர்கள் யாரைப் பார்த்தாலும் மிகவும்அன்புடன் பேசிப் பழகுவார்கள். உள்ளிருக்கும் அந்த அன்பை நம் மனதால் புரிந்து கொள்ள முடியும்!

அங்கே நாங்கள் வசித்த இடம்தான் இந்த 'ம்பா' என்னும் ஊர். அங்குள்ள கோயிலில் எங்களுக்கு முன் மரியாதை! நாங்கள்தான் ஊர்க்காரர்களாச்சே! அம்மனுக்கு ஆடை அலங்காரம் எல்லாம் செய்யவும் அனுமதி உண்டு. வீட்டிலிருந்தே ஏதாவது பிரசாதங்களைக்கொண்டுபோய் அம்மன் முன்பு வைத்து வணங்கிவிட்டு அங்கே உள்ளவர்களுக்கு வினியோகம் செய்வது பொதுவான பழக்கம்.கோயிலில் உள்ள பூசாரியும், அவர் குடும்பத்தினரும் மிகவும் அன்பாகவே எல்லோருடனும் பழகுவார்கள். எப்போது போனாலும் குறைந்தது பத்துப் பேராவது கோயிலில் இருப்பார்கள்.

ஒருமுறை, எழுத்தாளர் வாசந்தி அவர்கள் வந்திருந்தபோது, அவர்கள் அங்குள்ள தமிழ் ஆட்களைக், குறிப்பாக பெண்களைச் சந்திக்கவிரும்பியதால், நான் கோயிலிலேயே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்.

அனைவரும் ஏதாவது ஒரு உறவுமுறையில்தான் அழைத்துக் கொள்வார்கள். பூசாரியையே நாங்கள் 'பூஜாரி நைனா'என்றே கூப்பிடுவோம்.

வெள்ளையர்கள் கொண்டு வந்த ஆட்களிலே இப்போது யாருமே இல்லை. அவர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால் அவர்களில் கடைசியாக இருந்தவரை நாங்கள் சந்திக்கும் பேறு கிட்டியது. நல்ல பழுத்த கிழவியாக இருந்தார்கள். அவ்ர்கள் பெயர் 'சுந்தராம்பாள்' .சுந்தராம்பா பாட்டி 'கிர்மிட்டில்' வந்தவர்கள். வெள்ளையர்களின் 'அக்ரிமெண்ட்' என்பது 'கிர்மெண்ட்' ஆக மாறியிருந்தது!

என் மகள் பிறந்தபோது, தன் மூப்பையும் பார்க்காமல் நம் வீட்டிற்கே வந்து குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார்கள்.அவர்கள் வெளியே போவதை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏனோ உங்கள் வீட்டுக்குக் கட்டாயமாகப் போகவேண்டும் என்றுசொன்னார்கள் என்று அவருடைய மகன் தெரிவித்தார்.

ஊர்காரர்களான எங்களைப் பார்த்தவுடன் அவருக்கு ஊர் ஞாபகமும், அவர் விட்டு வந்த சொந்தங்களும் நினைவுக்கு வந்திருக்குமோ?

இன்னும் வரும்.
****************











6 comments:

said...

துளசி - இருக்குமிடத்தை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டிருக்கிறீர்கள். மகளை வாழ்த்திய கிர்மிட் பாட்டிக்கு நன்றி.

வாசந்தியுடன் நட்பா ?? பயமா இருக்கு - பெர்ய ஆளா நீங்க - தமிழ் இலக்கிய உலகின் - இலக்கிய வட்டங்களின் முக்கிய புள்ளியா

said...

கிர்மிட் பாட்டி போன்றவர்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. சொந்த ஊரையும், சுற்றத்தாரையும் விட்டு முன்பின் தெரியாத ஊரில் வந்து வேரூன்றுவது என்பது எத்தனை கஷ்டம்.

சர் நேம் கொடுக்கும் முறை நல்ல தமாஷ்!

திருமதி வாசந்தியைத் தெரியமா? நான் அவருடைய எழுத்துக்களை மிகவும் ரசித்து வாசிப்பேன். உங்களின் இந்த சந்திப்பு பற்றி எழுதியிருக்கிறீர்களா?
இணைப்பு ப்ளீஸ்!

said...

மிகவும் ரசித,துப்படித்தேன். என்ன என்னவோ நினைவுகளைக் கிளப்பியது.

நாங்கள் நடாதூர் வம்சம். முன்னோர்கள் காஞ்சீபுரம். எங்கெங்கோ பல தலைமுறைகள் சென்று பரந்து இப்போ என் தலைமுறை பெங்களூரில். சமீபத்தில் ஒரு திருமணத்தில், நீங்கள் நடாதூரா, நானும் என ஒருவர் வாஞ்சையோடு பேசிக்கொண்டிருந்தார். உள்ளூரிலேயே இப்படி. வேரோடு பிடுங்கி எடுத்து வெளிநாட்டில் நடப்பட்டவர்களுக்கு?

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எழுத்தறிவு இல்லாத காரணத்தால் மீண்டும் சொந்தங்களைத் தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விட்டதுதான் துயரம்....

said...

உறவுகளை பிரிந்திருப்பது அவர்கள் மனநிலை படிக்கும்போதே மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

said...

வாங்க மாதேவி,

விட்டுவந்த குடும்பத்தை நினைச்சு எவ்ளோ கண்ணீர் விட்டுருப்பாங்க, இல்லே ?