Monday, October 04, 2004

குளு குளாத் திருவிழா !!!!

தொடர்ச்சி பகுதி 3 புரட்டாசி மாதம்!!
****************************************


இப்போது புரட்டாசி மாதம் நடக்கிறதல்லவா? ஃபிஜி மாரியம்மன் கோவிலில் 'குளு குளாத் திருவிழா' நடக்கும் காலம்.

இந்தத் திருவிழாவைப் பற்றி இந்தியாவில் ஏதும் விவரங்கள் இல்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் கடைசி சனிக்கிழமையன்று, கோவிலில் குளுகுளாத் திருவிழா நடக்கும்.


குளுகுளா என்றால் என்ன?

இது மைதாமாவில் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, சின்ன உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் ஒரு தின்பண்டம்.
விழாவுக்கு மூன்று நாட்கள் முன்பே விரதம் அனுஷ்டித்து, இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள், கோவிலிலே தங்கியிருப்பார்கள்.


விழாவன்று மாலையில் அம்மன் சந்நிதி முன்பு ஒரு மேடை போட்டு அதில் அடுப்பு வைத்து, ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்சுவார்கள். வேறு ஒரு பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் சேர்த்து, நெய்யும் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து,(சப்பாத்திமாவுப் பதத்தில் ) சின்னப் பந்து அளவில் உருட்டி வைப்பார்கள். எண்ணெய் காய்ந்துகொண்டே இருக்கும்!


இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் குளித்து முடித்து,வாயில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அம்மனை வணங்கி வரிசையாக வந்து எண்ணெய்ச் சட்டிக்கு முன் நிற்பார்கள். மாவு பந்துக்கள் எண்ணெயில் போடப்படும். அவை வெந்து பொன் நிறமாக மாறும்போது, ஒவ்வொருவராக வந்து, 'வெறும்' கைகளால், அந்த எண்ணெயிலிருந்து கோரி எடுப்பார்கள். கைகளை முக்கி குளுகுளாக்களை எடுத்து, அப்படியே கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, ஒரு பாத்திரத்தில் வைப்பார்கள். விரதம் இருந்த்வர்கள் எல்லாரும் எடுத்தபின்,அவைகளை அம்மனுக்கு முன்வைத்து பூஜித்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்!

ஒவ்வொருவரும் எண்ணெயில் கைவிடும்போது 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷம் முழங்கப்படும்! புரட்டாசி மாதம் என்றெல்லாம்சொல்லத்தெரியாது. ஆனால் கோவிந்தாப் பூஜை மாசம் என்றே குறிப்பிடுவார்கள். இந்த 'கோவிந்தா' முழக்கம் எல்லா திருவிழாக்களுக்குமே பொது!

பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும் இந்த புரட்டாசிச் சனிக்கிழமை பூஜை நடத்துவார்கள்.

இங்கே சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை இவர்கள் தொடங்கி, பள்ளிக் கூடங்களைக் கட்டி நடத்தி வருகின்றனர். இப்பள்ளிகளில் கற்பிப்பதற்கு, தமிழ் நாட்டிலிருந்தே ஆசிரியர்களை வரவழைத்திருந்தனர். இங்கே தமிழும் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டு வந்ததாம். தலைமுறைகள் மாற மாற, தமிழ்ப் படிக்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் அதனால் தற்சமயம் தமிழ் போதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சங்கம் பள்ளிகள் அநேகக் கிளைகளைக் கொண்டிருக்கிறது!

வட இந்தியர்கள் முதலில் வந்ததால், ஹிந்தி மொழி பரவலாகப் பேசப்பட்டு, பின்னர் நம் தென் இந்தியர்களும் அவசியத்தை முன்னிட்டு ஹிந்தி பேசக் கற்றுக் கொண்டனராம். இப்போது ஃபிஜியில் ஹிந்தியும் ஒரு தேசியமொழியாக உள்ளது. மற்ற இரண்டும் ஆங்கிலமும்,ஃபிஜியன்என்னும் மண்ணின் மைந்தர்களின் மொழியும்! இந்த மொழிக்கு எழுத்துரு கிடையாது. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.


ஃபிஜியர்

இவர்கள் கள்ளமில்லா மனத்தினர். என்ன ஒன்று, நாளை என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்து பழகியவர்கள்.இவர்களுடைய வாழ்க்கை முறை நம் வழக்கத்திலிருந்து மாறுபட்டது.


ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும், 'கோரோ' என்று அழைக்கபடும் சின்ன கிராமத்தில் கூட்டாக வசிக்கின்றனர். அந்த்க் 'கோரோ'வின் தலவர்தான் இவர்களுக்குப் படியளக்க வேண்டும்! அவர்கள், தங்களது இருப்பிடத்தைச் சுற்றி மரவள்ளிக் கிழங்கு, இன்னும் 'டாரோ'என்று அழைக்கடும் கிழங்கு வகைகளப் பயிரிட்டு , அதையே முக்கிய உணவாகவும் பயன் படுத்துகின்றனர். அரசாங்கம் தரும் உதவிப்பணம் அந்தந்த கோரோவின் தலைவர் மூலமாகப் பொருளாகவோ, பணமாகவோ அவர்களுக்குப் பிரித்துத் தரப்படுகின்றது.

வேலை செய்பவர்களும் அந்தந்த வாரச் சம்பளத்தை கிடைத்த அன்றே தீர்த்துவிடுவார்கள்!

வீட்டுவேலைக்கு இவர்கள் வந்தால் எல்லா வேலைகளையும் நம் மனம்
கோணாமல் செய்வார்கள். என்ன ஒன்று, சாப்பாடு
எதிர்பார்ப்பார்கள். சாப்பாடு என்றால், தலை வாழை இலை போட்டு விருந்தா? 'ப்ரெட்'ம் தேனீரும் தான்! இதுவே இவர்களுக்கு விருப்பம்!


இவர்களின் குடியிருப்புகளுக்குப் போனால் அன்போடு வரவேற்பார்கள். நல்ல வெள்ளந்திச் சிரிப்பு !!! இவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஹிந்தி பேசுவார்கள்! ஆனால் ஃபிஜியன் மொழி பேசும் இந்தியர்கள் வெகு அபூர்வம்! எல்லோரையுமே 'கைஸே பெஹனி, கைஸே பையா ( எப்படி இருக்கின்றீர்கள் சகோதரி/சகோதரா) என்றே சம்பாஷனையை ஆரம்பிப்பார்கள்.


இன்னும் வரும்
******************

2 comments:

said...

குளு குளா - டாரோ - எனக்கு இதெல்லம் உடனே வேணும் - வாயிலே தண்ணி வருது. கோவிந்தா மாசத்துலே திருவெளாவுலே கையே கொதிக்குற எண்ணைச் சட்டிலே விட்டு எடுக்கறது. ம்ம்ம்ம்ம் .... சரி சரி. கோவிந்தா கோவிந்தா சொன்னாக்க ஒன்னுமே தெரியாது

said...

என்னத் திருவிழா இது! கொதிக்கும் எண்ணையில் இருந்து 'குள குளா'வை கையால் கோரி எடுப்பார்களா?
ஃபிஜியன் மக்களின் குணநலம் வியக்க வைக்கிறது!