Saturday, February 05, 2005

'வைட்டாங்கி ஒப்பந்தம்!!!!'

இது நடந்தது 1840லே! கணக்குப் போட்டுப் பாருங்க எத்தனை வருசம் ஆச்சுன்னு?

17-ஆம் நூற்றாண்டுகளிலே 'ஏபிள் டாஸ்மென்' என்றவர் இந்த நியூஸிலாந்தைக் கண்டுபிடிச்சார்.

அதுக்கு அப்புறம் 18-ஆம் நூற்றாண்டிலே நம்ம கேப்டன் குக் இங்கே வந்திருக்கார். அவரும் வீனஸ்
கிரகம் அப்ப பூமிக்கு அருகிலே வர்றதாலெ அதைப் பாக்கறதுக்குன்னு வந்தவராம்!( போன வருஷம்
கூட நாலு கிரகங்கள் பூமிக்குக் கிட்டே வந்ததுன்னு சொன்னாங்களே! அதே மாதிரி ரொம்ப காலத்துக்கு
முன்னே வந்தப்ப!)


அதுக்கு அப்புறமா இங்கிலாந்திலே இருந்து வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமா இங்கே வர ஆரம்பிச்சாங்க!

இதெல்லாம் நடக்கறதுக்கு ரொம்ப காலம் முன்பே (சுமார் 1000 வருஷங்களுக்கு முன்னே) பஸிபிக் கடலில் இருக்கற
தீவுகளில் இருந்து ஜனங்க ஒரு சின்னக் குழுவா இங்கெ வந்து சேர்ந்திருந்தாங்க! இப்படியே பல குழுவுங்க வந்துட்டாங்க.

அவுங்க அங்கங்கே இடம்பிடிச்சு குடியேறி இருந்தாலும், ஒரு குழுவுக்கும் இன்னோரு குழுவுக்கும் அப்பப்ப சண்டை வந்துக்கிட்டு
இருந்துச்சாம்! (ஒரு பேட்டை ஆளுங்க அடுத்த பேட்டையிலே போய் சண்டை போடறதைக் காமிக்கற தமிழ் சினிமாங்க மாதிரி?)

வெள்ளைக்காரங்க வந்தபிறகு அவுங்ககூடவும் சண்டைன்னு ஆரம்பிச்சு அப்புறம் சமாதானமாயிட்டாங்களாம். வெள்ளைத்தோலைப்
பார்த்து மவொரி இனத்துக்கும், முகமெல்லாம் பச்சைக் குத்திக்கிட்டு இருக்கும் ப்ரவுண் தோலைப் பார்த்து வெள்ளைக்காரங்களுக்கும்
பயமா இருந்திருக்கும் போல!

இந்த 'மவொரி'ன்ற வார்த்தைக்கே 'லோகல் ஆளுங்க'ன்னு அர்த்தம்!

அந்த சமயம் இங்கிலாந்தை அரசாண்டுக்கிட்டு இருந்தது விக்டோரியா மகாராணி! இந்த சண்டைங்களைத் தீர்த்துக்கிட்டு
சமாதானமாயிரலாம்ன்னு அப்ப இந்த மவொரிங்களோட ஒரு ஒப்பந்தம் போட்டாங்க.

'சண்டை ஒத்து நைனா, சமாதானங்கா போதே மஞ்சிதி'

இதுலெயும் பாருங்க, சில மவொரி க்ரூப்புங்களுக்கு இது பிடிக்கலே. ஆனா அந்த ஜனங்களோட தலைவனா இருக்கறவங்களுக்குக்
கட்டுபட்டு இருக்கணுமே!

நமக்குள்ளே எதுக்கு சண்டை? நாங்க இங்கே ஒரு சிவில் அரசாங்கம் உருவாக்குவோம். உங்க சொத்துங்க, உங்க கலாச்சாரம், பழக்க வழக்கம்
இதுக்கெல்லாம் இங்கே குடியேறி வந்த/வரப்போற ப்ரிட்டிஷ் ப்ரஜைகளாலே ஒரு கஷ்டமும் வராது! உங்களுக்கு நாங்க பாதுகாப்பா இருப்போம்.
ப்ரிட்டிஷ் குடிமக்களுக்கு இருக்கற எல்லாவித உரிமைகளும் உங்களுக்கு இருக்கு!

இங்கே இருக்கற வனாந்தரங்கள், கடலிலெ மீன் பிடிக்கற உரிமை எல்லாம் உங்களுக்கே! எங்களாலே ஒரு தொந்திரவும் இருக்காது. உங்களுக்கு
விருப்பப்பட்டா(!) உங்க நிலபுலன்களை எங்களுக்கு விக்கலாம். நீங்களா உரிமை கொடுத்தா நாங்களும் கொஞ்சம் மீன் புடிச்சுக்குவோம்!

(நம்ம அரசியல்வாதிங்க கொடுக்கற வாக்குறுதிங்க ஞாபகம் வருதா?)

இப்படியெல்லாம் சொல்லி, ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க! இது நடந்தது ஒரு ஃபிப்ரவரி மாசம் ஆறாம் தேதி!

இந்த நாளுக்கு இங்கெ அரசாங்க விடுமுறை உண்டு! மவொரிங்களோட கம்யூனிட்டி பில்டிங் பேரு 'மராய்' இங்கே அவுங்களும்
வருசாவருசம் இந்த நாளைக் கொண்டாடுவாங்க(!) அதுக்கு இங்கேயுள்ள மகாராணியின் பிரதிநிதியான 'கவர்னர் ஜெனரலும்'
அரசாங்கத்தின் பிரதிநிதியாக பிரதம மந்திரியும், எதிர்க்கட்சித் தலைவரும் வேற வேற ஊருங்களிலே இருக்கற 'மராய்'ங்களுக்கு விஜயம்
செய்வாங்க!

சில வருசத்துக்கு முன்னெ, இப்ப இருக்கற பிரதமரை, உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லி,தள்ளிவிட்ட சம்பவங்களும் நடந்திருக்கு!

போனவருசம், அவுங்களையே வரவேற்ற சம்பவமும் நடந்திருக்கு. இதோ நாளைக்கு மறுபடி 'வைட்டாங்கி தினம்!' என்னென்ன
கலாட்டான்னு தொலைக்காட்சியிலே சாயந்திரமா காமிப்பாங்க! இப்ப எங்க பிரதமரும் ஒரு 'அம்மா'தான்! எதிர்கட்சித்தலைவர் ஒரு
'அய்யா!'

அப்பப்ப, மவொரிங்க அவுங்களுக்கு இன்னும் உரிமைகள் வேணும். இந்த வைட்டாங்கி ஒப்பந்தத்தைச் சரியா நிறைவேத்தலைன்னு குரல்
கொடுத்துக்கிட்டே இருப்பாங்க!

இப்ப சமீப காலமா இங்கெ இருக்கற கடற்கரை முழுசும் எங்களுக்கே சொந்தம்ன்னு ஆரம்பிச்சிருக்காங்க! இதுவரைக்கும் ஏராளமான
நிலங்களை அந்த க்ரூப், வெள்ளைக்காரங்களுக்கு வித்தாச்சு! அந்தக் காசெல்லாம் அவுங்க குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும், அதுலெ
வேற வேற கம்பெனிகள் ஆரம்பிக்கறதுமா இருக்காங்க. ஆனா ஒண்ணும் சரியா நடக்கறதில்லை!

இப்பல்லாம் 100 சதமானம் மவொரி ரத்தம் உள்ளஆளுங்களே இல்லையாம். எல்லாம் கலந்துகட்டியாச்சு! ஆனாலும் 'பத்தாங்காலிலே
பங்காளி'ன்னு சொல்றதுபோல பத்துத் தலைமுறைக்கு முன்னே ஒரு தாத்தாவோ பாட்டியோ மவொரி இனம்ன்னு காமிச்சாலே போதும்.
அவுங்களுக்கு, இன்னும் இல்லாத உரிமைகளையெல்லாம் கேக்கற அளவு உரிமை கிடைச்சிருது!

எங்க வீட்டிலே இவரும் சொல்றார்,'நீ அசப்புலே மவொரி மாதிரிதான்இருக்கே! என்ன, பொட்டு வைக்காமலும், காதுலெ கழுத்திலெ கிடக்கற
நகைகளையும் கழட்டிட்டா நீ அசல் மவொரிதான்'

ஹாரே மாய் ஹாரே மாய் ( வெல்கம்ன்னு மவொரி பாஷையிலே சொல்றேன்!)





4 comments:

said...

மவொரி துளசியக்கோவ்... மாதிரி மவொரி படம் போடுங்களேன்.. பாக்கலாம்.

அங்கேயே எனக்கும் ஏதாச்சும் இடம் பிடிச்சுக்கொடுங்கக்கா... புண்ணியமா போகும்.

அப்புறம்... நீங்க "தோழியர்" வலைப்பூவுல கேட்ட கேள்விக்கு இங்கே பதில் தர்றதுக்கு மன்னிக்கணும்.. அங்கே கொடுத்தா சம்பந்தமில்லாம ஆயிரும்.

ஷார்ஜால இருந்து சென்னைக்கு எல்லா நாள்லயும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இருக்கு.

வாரத்துல நாலு நாளு - சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் - அன்னைக்கு வழி எப்படின்னா... ஷார்ஜா-திருவனந்தபுரம்(!)- திருச்சி(!!)- சென்னை.

மீதி மூணு நாளு வழி எப்படின்னா - ஷார்ஜா - கொச்சி (!)- கோயமுத்தூர்(!!)- சென்னை.

சென்னையில் இருந்து ஷார்ஜா போறதும் இதே போலத்தான்.. ரெண்டு மூணு வருசமா இதே ரூட்ல அடிக்கடி போயிட்டு வர்றதால தெரிஞ்ச விசயம்னு சொன்னேங்க்கா. திட்டாதீங்க...

கமெண்ட் பண்ணனும்னா..பிளாக்கர்ல.. கையெழுத்து போட்டு வர்ற மாதிரி இருக்கே... கொஞ்சம் ஈஸியா மாத்தக்கூடாதாக்கா.?

said...

அன்புள்ள முருகன் தம்பி,

அரபு நாடுகள் பக்கமெல்லாம் நாங்க வந்ததே இல்லை! எங்க பிரயாணம் எல்லாம் இந்தியாவின் கிழக்கேதான்!
ஆனாலும் விளக்கமா சொன்னதுக்கு நன்றி.

நான் ஒரு கணினி கைநாட்டு! ஏதோ எழுத்துன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். தொழில் நுட்ப உதவி
செய்யறவங்கதான் எது மாத்தணுமுன்னாலும் உதவி செய்யணும்!

இன்னும் ஃபோட்டோவை பதிவுலே போடறதுக்குக் கத்துக்கலை. கத்துக்கிட்டுப் போடறேன், மவொரி
முகங்களை!

என்றும் அன்புடன்,
துளசியக்கா

said...

கவலைப்படாதீங்கங்கக்கா..

சீக்கிரம் புகுந்து வெளையாடப்போறீங்க.. எல்லாரு, உங்களப்போலத்தான்.. இப்பத்தான் நானும் கொஞ்ச நாளா எழுதுறேன்னு சொல்லிகிட்டு திரியிறேன்..!

weblogs.us பிளாக் ரொம்ப நல்லா இருக்கு... படம் அப்லோட் பண்றதும் ஈஸி.

பிளாக்கர்..ன்னா - Hello _ picaassa பதிவிறக்கி, இன்ஸ்டால் பண்ணி, லாகின் பண்ணி அப்புறம் படமேத்த முடியும். கொஞ்சம் சலிப்பா இருக்குறதால நான் வெப்லாக்ஸ்-லதான் அடிக்கடி எழுத முயற்சி பண்றேன்..!

உங்க ·ப்ரொ·பைல்..ல உங்க இ-மெயில் அட்ரஸ் எதுவும் இல்லையேக்கா..?

என்னோடது murugapoopathi@gmail.com

said...

நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது தமிழர்களா?

-ஆய்வுக் கட்டுரை:எச்.எஸ். முகம்மது ராஃபி
நியூஸிலாந்து அருங்காட்சியகம் கப்பல் மணி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து பல நாடுகளில் வியாபாரத்தில் கோலொச்சியவர்கள் தமிழர்கள். முற்கால இந்தியாவில் கப்பலோட்டும் கலை தமிழருக்கே உரித்தாயிருந்தது என்றால் அது மிகையில்லை. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல்களைக் கட்டி கடலிலே செலுத்தியதை ஹரப்பா, மொகதஞ்சரோ நாகரிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற் படைகளை உடையவராயிருந்தனர். இராஜராஜசோழன் லட்சக்கணக்கான தமிழ் வீரர்களை கப்பலில் கொண்டு சென்று இலங்கை, மலாய் முதலியத் தீவுகளை வென்றதாக வரலாறு கூறுகின்றது. மேலும் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்திற்கு முத்திரைப் பதிக்கும் விதமாக அமைந்துள்ளது நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் தமிழ் மணி. நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 'கப்பல்மணி' தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இதுக் கருதப் படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் 'முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி' என்று மணயைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணியில் காணப்படும் எழுத்தைக் கொண்டு இது 17ம் அல்லது 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். முற்றிலும் வெண்கலத்தினால் ஆன இம்மணியை சுற்றிலும் 23 தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. 1836ஆம் ஆண்டில் இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர். வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டம் மாற்று செய்து கொண்டார். மௌரி இனப் பழங்குடியினரோ இந்த மணியை பெரும் சூறாவளியில் கரையடைந்து, ஒரு பெரிய மரத்தின் வேர்களால் சூழப்பட்ட நிலையில் இதனைக் கண்டனர். பாதிரியார் மணியைக் காண்பதற்கு முன்னர் மௌரிகள் இதனை எத்தனை காலம் சமையல் பாத்திரமாக உபயோகித்தார்கள் என்றோ, மௌரிகள் எந்த ஆண்டில் கண்டெடுத்தனர் என்றோ குறிப்புகளும் இல்லை. இறுதியாக பாதிரியாரின் உயிலின் பிரகாரம் இந்த மணி நியூஸிலாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தல்
15-ம் நூற்றாண்டின் வாக்கிலேயே தமிழர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு சென்று வாணிபம் செய்திருக்கலாம் என்று நம்மப் படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்து கடல் ஆய்வாளர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பல்வேறு புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்த பிறகு வேறு புதிய நாடுகளை கண்டுபிடிக்க பசிபிக் பெருங்கடலில் பல ஆண்டுகள் வெள்ளையர் சலித்தெடுத்தனர். இறுதியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர். 1769-ம் ஆண்டில் நியூஸிலாந்தை அவர்க் கண்டுபிடித்தார். நியூஸிலாந்து நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தமிழர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட கப்பல் மணி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றால் அது ஆச்சர்யமான விஷயமில்லை தான். ஆனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வெள்ளையர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தடம் பதித்தது மட்டுமின்றி வாணிபமும் செய்ததற்கும் இந்த கப்பல் மணி ஒன்றே போதுமான ஆதாரமாகவும் இதனைக் கருதலாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மணிக்கு தமிழகத்தில் மூன்று ஊரார்கள் உரிமை கோருகின்றனர் இதோ கீழே.
வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்கள் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம். பெயருக்கு ஏற்றார் போல் இவ்வூர்வாசிகள் கப்பல் வணிகராகவும், கப்பல் உரிமையாளராகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாவும் விளங்கினர். சேது நாட்டின் சிறந்த துறைமுகமாக வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் திகழ்ந்தது என்றால் அது மிகைன்று.19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையினிலும் இவர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்ட காலங்கள் பொற்காலம் என்றே வர்ணிக்கலாம்.
நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப் பட்ட மணி எங்களுக்குச் சொந்தமானது என ஒ.மு.சே.மு.உம்முசல்மாபீவி மற்றும் அவரின் சகோதரர் ஒ.மு.சே.மு.செய்யது முகையதீன் ஆகியோர்; எங்கள் பாட்டனார் சேகப்பா அவர்களின் தாத்தாவே வக்காஸ் ஆவார். அவருக்கு சில கப்பல்களை வைத்திருந்ததாவும் அவற்றில் ஒரு கப்பலின் மணியாக இது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்து வாசிகள் வக்காஸ் எனும் பெயரை காலகாலமாக தங்களின் குழந்தைகளுக்கு இன்று வரை சூட்டிவருகின்றனர். மேலும் வக்காஸ் எனும் பெயர் தமிழகத்தில் வேறு எந்த ஊர்களிலும் புலக்கமும் கிடையாது. இன்று வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் முகையதீன் வக்காஸ் அவர்களின் வழியில் வந்தவர்களே என்கின்றக் காரணத்தினாலும் இந்த மணியின் உரிமையை இவர்கள் பெற முனைவதாகத் தெரிகின்றது. வக்காஸிற்குப் பின்னர் அவரது மகன் முகையதீன் மீராசா ஷையாரின் பேரன் சேகப்பா, சேகப்பாவின் மகன்கள் ஐவரும் கப்பல் வணிகர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள்.
ஹபீபு முகம்மது அரசர்
கீழக்கரையைச் சேர்ந்த ஹபீபு முகம்மது அரசர் மரைக்காயர் பட்டிணத்தை நிறுவினார். 1822ஆம் ஆண்டு மதுரை ஜில்லா கலேக்டர் மௌதா ரொசுபீத்தா என்பவர் ஹபீபு முகம்மது அரசரின் சகோதரர் அப்துல் காதர் சாகிபு மரைக்காயர் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் ஒன்றின் மூலம் இது நிறுபணமாகின்றது. முதலில் ஹபீபு மம்மது புரம் என்று அழைக்கப் பட்டாலும் பின்னர் மருவி மரைக்காயர் பட்டிணம் என்றானது. இந்த மணி-கீழக்கரை வள்ளல் ஹபீபு மரைக்காயரின் நாப்பது கப்பல்களின் ஒன்றின் மணி எனவும் கீழக்கரை வாசிகள் கருதுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்தை ஹபீபு முகம்மது அரசர் உருவாக்கினாலும் கீழக்கரையினிலேயெ அவர் வாழ்ந்து மறைந்ததால் இந்த மணியை கீழக்கரைவாசிகள் உரிமை கோருகின்றனர்.
மேலும் கீழக்கரை சேதுநாட்டின் முதன்மை துறைமுகமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.ஆயினும் பல இஸ்லாமிய எழுத்தாளர்கள் இந்த மணி ஹபிப் அரசருக்குச் சொந்தமானது என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் போதிய ஆதாரங்களை இதற்காக அவர்கள் மேற்கொள் காட்டவில்லை.முகையதீன் பக்ஸ் சமீபகால ஆய்வுகளில் பழவேற்காட்டில் மீர் முகம்மது ஷபீ மற்றும் ஜேன் டி மட்டு டி அக்வாரரெஸ் என்னும் டச்சுக்காரரும் இணைந்து கூட்டாக ஒரு கப்பலை நடத்தி வந்தனர். அந்தக் கப்பலுக்கு முகையதீன் பக்ஸ் என்று பெயர். இந்த கப்பல் பழவேற்காடு, நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூரகிழக்கு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த மணி இது போன்ற கப்பலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கின்றார் பிரபல தொல்லியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான முனைவர்: ஜெ.ராஜாமுகம்மது (இவர் முன்னாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத் தலைவரும்; கூட).
இலங்கைத் தமிழர்களின் மணியா!
இந்த மூன்று ஊரார்களின் உரிமை போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும் என்சைக்ளோபீடியா ஆஃப் நியூஸிலாந்தில் (நுnஉலடழிநனயை ழக நெற ணநயடயனெ ) இந்த மணியை ஸ்ரீலங்கா நாட்டின் தமிழ்மணி என்று கூறப்படடிருந்தாலும் அதனை மெய்பிக்க எவ்விதமான சான்றுகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.தபால் தலை தமிழர்;களின் கடல் கடந்த வாணிபத்திற்கு ஒரு மணி மகுடமாகவேத் திகழும் இந்த கப்பல் மணியை தபால்தலையாக வெளியிட்டு கப்பலோட்டியத் தமிழர்களுக்கு மகுடம் சூட்டவேண்டும் செய்வார்களா?. ஆதார நூல்கள்:
1.வரலாற்றில் உறபிப் முகம்மது அரசர்- இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (2004)
2.கீழக்கரை இலங்கை இனியத் தொடர்புகள் இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (1995)
3.விடியல் வெள்ளி மாதஇதழ் 2005-பிப்ரவரி மற்றும் 2005-அக்டோபர்
4.இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்- அப்துற்றகீம் (1979)
5தமிழககத்தில் இஸ்லாமியர்கள் வரலாறு- ஏ.கே.ரிபாயி 1988
6.எம்கே.ஈ.மவ்லானா அவர்கள் எழுதிய 1.8.90ல் எழுதியக் கட்டுரை
படம்: 1836-ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் கப்பல் மணி.