Tuesday, February 08, 2005

ஞாபகம் வருதே!!!

காசி அவர்களின் 'வாழைப்பழ கிண்ணக்கேக்' படிச்சவுடனே, ஒரு பெரிய கொசுவர்த்திச் சுருளை
ஏத்தி வச்சது போல, 'மஃப்பின் நினைவலைகள்' சுழன்றுசுழன்று வருது!

ரெண்டுவரி பின்னூட்டம் கொடுக்கலாம்ன்னு ஆரம்பிச்சா, எங்கே ரெண்டுவரியோட முடியுது?
அதான் தனிப்பதிவாவே போட்டுறலாம்ன்னு........

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்த புதிதில், இங்குள்ள ஒரு நண்பர்
'சில்ட்ரன்ஸ் ஆக்டிவிட்டி க்ரூப்' என்று ஒன்று தொடங்கலாமா என்று யோசனை சொன்னார்.
நாங்களும் இன்னும் சில குடும்பங்களுமாக சேர்ந்து கொண்டோம். வாரம் ஒரு முறை கூடுவோம்.
அவ்வப்போது ஒவ்வொருவரும் ஏதாவது சமைத்துக் கொண்டுபோய் அங்கே பகிர்ந்து உண்போம்!

குடும்பமாக வார இறுதிகளில் அடுத்துள்ள இடங்களுக்கு கேம்ப் போவது, குதிரை ஏற்றம் எப்படி என்று
ஒருநாள் 'ரைடிங் ஸ்கூல்' போய்வந்தது, ஜக்கிளர் ஒருவரை அழைத்துவந்து ஜக்ளிங் செய்வது எப்படி என்று
அறிந்து கொண்டது, ஈஸ்டர் முட்டைகள் செய்வது, நதிகள் அடித்துக் கொண்டுவரும் மரங்களை எடுத்து
'ட்ரிஃப்ட் வுட்' அலங்காரங்கள் செய்வது, தோல் பொருட்கள் செய்து அதுல் 'சீல்' வைப்பது என்று
பலதும் கற்றுக் கொண்டோம்!டி.வி ஸ்டேஷன், ரேடியோ ஸ்டேஷன் என்றெல்லாம் போய் பார்த்தோம்.

அந்த வருடம் புதுமையான முறையில் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடினோம். எங்கள் குழுவினருக்கு
தீபாவளி கொண்டாடும் முறை, ஏன் கொண்டாடுகிறோம் என்ற விளக்கம் ( கதை)எல்லாம் சொல்லி
இங்குள்ள 'நேட்டிவ் புஷ்'( புதர்) செடியான 'ஃப்ளாக்ஸ்' ( பாக்கறதுக்கு நம்ம தென்னை ஓலை போல இருக்கும்) ஓலை
எடுத்து அதை முடைந்து, சின்னச் சின்ன அலங்காரத் தெப்பம்போல செய்து, அதில் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்து,
அவைகளை இங்குள்ள 'ஏவான்' நதியில் மிதக்க விட்டோம். அப்புறம் நான் செய்து கொண்டு போயிருந்த
தீபாவளிப் பலகாரங்களையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு, பட்டாஸ் வகைகளையும் கொளுத்தினோம்!

இருட்டில், நதி நீரில் இந்த விளக்குகள் ஆடி அசைந்து போனதை, அந்தச் சாலை வழியே போய்க் கொண்டிருந்த பலரும்
தங்கள் கார்களை நிறுத்திவிட்டு வந்து பார்த்து மகிழ்ந்து விவரம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் இனிப்பையும் தின்றுவிட்டுப்
போனார்கள்.

மறுநாள் இங்குள்ள தினசரியில் இது படங்களுடன், செய்தியாகவும் வந்தது!

பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிக்குப் போகும்வரை இந்தக் குழு இயங்கிவந்தது! மொத்தம் 8 வருடங்கள்! இந்த எட்டு
வருடங்களிலும் தீபாவளிப் பண்டிகையை விட்டுவிடாமல் கொண்டாடினோம்!

இப்போதும் நல்ல நட்பு அந்தக் குடும்பத்தினருடன் நீடிக்கிறது!

எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளி, யூனிவர்சிடிக்கு அடுத்த கட்டிடம் என்பதால்,
யூனிக்கு கொஞ்ச நாளைக்காக வரும் வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்கள் பிள்ளைகளை
இந்தப் பள்ளியில் சேர்த்துவிடுவார்கள்.

அந்தப் பெற்றோர்களும், புது இடத்தில் அவர்கள் பிள்ளைகளுக்கு பொழுது போக்காக இருக்கட்டுமே என்று
எங்கள் குழுவில் சேர்ந்துகொள்வார்கள். எங்களுக்கும் நல்லதாய் போயிற்று! எங்கள் பிள்ளைகளுக்கும்
அவர்கள் நாட்டையும் அவர்கள் கலாச்சாரத்தையும் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பல்லவா!

ஒரு சமயம், ஒரு அமெரிக்கர் எங்கள் குழுவில் சேர்ந்தார். ஒருநாள் 'pot luck'=ல் அவர்கள்
மஃப்பின் கொண்டு வந்திருந்தனர். எனக்கோ அதையெல்லாம் செய்யத் தெரியாதது மட்டுமல்ல, அதன்
பெயரும் கூடத் தெரிந்திருக்கவில்லை! செய்முறை சொல்லுங்கள் என்று கேட்டேன். அந்தப் பெண்மணிக்கு
ஒரே ஆச்சரியம்! 'யூ டோண்ட் நோ ஹவ் டு மேக் மஃப்பின்ஸ்! ரியலி?' என்று பலமுறை கேட்டுவிட்டார்கள்.

எனக்கென்னடா என்றால், 'மஃப்பின் செய்யத் தெரியாது என்பதை நம்பவில்லையே' என்ற குறை!

எப்போதும் நான் கொண்டு போகும் உணவை அவர்கள் எல்லோரும் ரசித்துச் சாப்பிடுவதுடன் செய்முறை
கேட்டுத் துளைத்துவிடுவார்கள். இப்போது என் முறை!

மறு நாளே லைப்ரரிக்குப் போய் மஃப்பின் செய்முறைகள் உள்ள புத்தகங்களாக வாரிக் கொண்டுவந்தேன்!

அப்புறம் ஒரு 'மஃப்பின் ட்ரே' வாங்கி ஒரு முறை செய்தும் பார்த்தேன். இப்போது நான் மஃப்பின் எக்ஸ்பெர்ட்!

எனக்குத்தான் எதையும் என் சொந்தக் கைவரிசையைக் காட்டாமல் சமைக்கத் தெரியாதே! வித விதமான பொருட்களை
சேர்த்து, நிலக்கடலை, பாதாம், ப்ளூ பெர்ரி, மாம்பழம், வால்நட்ஸ், இன்னும் கண்ணில் படும் எல்லா ரக நட்ஸ்,
கண்ணில் படும் பழவகைகள் என்று அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றேன்!



7 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

//'சில்ட்ரன்ஸ் ஆக்டிவிட்டி க்ரூப்' //
//அவ்வப்போது ஒவ்வொருவரும் ஏதாவது சமைத்துக் கொண்டுபோய் அங்கே பகிர்ந்து உண்போம்!//
சாப்பிட்ற க்ரூப்புக்கு பேர் சில்ட்ரன்ஸ் ஆக்டிவிடி க்ரூப்பா? :))

said...

கார்திக்,

அவ்வப்போதுன்னுதானே சொல்லியிருக்கேன்! எப்பவும்ன்னு நினைசுக்கிட்டீங்களா? :-)

ஜெயஸ்ரீ,

மைக்ரோவேவ் ப்ளாஸ்டிக்லே மஃப்பின் ட்ரே ( வட்டமான தட்டு 6 குழிகளோட வருது!) கிடைக்குது!
ஆனா நடுக்குழிலே மாவு ஊத்தாதீங்க. சரியா வேகறதில்லை!

இங்கே சூப்பர் மார்கெட்லேயே கிடைக்குது!

said...

//ஞாபகம் வருதே!!! //

எல்லாத்தையும் பண்ணிப்பாத்திருக்கீங்க.. இந்தக்காவோட தொல்லையப்போச்சுப்பா...எங்க வூட்டுல நாங்க ஒண்ணும் சொல்லிக்கமுடிய்றதில்லைப்பா...

(அப்படியே ரெண்டு பேருமா சேர்ந்து மைக்ரோவேவ் மஃபின் குறிப்பையும் விவரமாப் போடுங்க.)

said...

அன்புள்ள காசி,
//(அப்படியே ரெண்டு பேருமா சேர்ந்து மைக்ரோவேவ் மஃபின் குறிப்பையும் விவரமாப் போடுங்க.)//

அந்த ரெண்டுபேரும் யாரு?

ஒண்ணு நானு. அந்த இன்னொண்ணு?

said...

நீங்க குறிப்பு கொடுப்பீங்களாம், ஜெயஸ்ரீ சோதிச்சு ஓக்கே பண்ணுவாங்களாம், நாங்க அப்புறமா அப்படியே சுட்டுக்குவோமாம்.

said...

யக்கோவ்... ம·ப்பின் செய்ய உங்களுக்கு தெரியும்.. சரி...நம்புறேன். ஆனா உங்களுக்கு "பிராப்பரா பேக்" பண்ணத் தெரியுமா..? சும்மா 'தெரியும்'னு வரியில சொல்லாம ஒரு டஜன் ம·ப்பின் பேக் பண்ணி உடனே 'கொரியர்'ல தம்பிக்கு அனுப்புங்க.. சரியா..?