Wednesday, May 11, 2005

பெங்குவின் ஃப்ரம் ஓமரு!!!!!!

நம்ம செல்வராஜ் மெல்போர்ன் பெங்குவின் பத்தி எழுதியிருந்தாரா, அதுகூட ஒரு சின்னக் கொசுவத்திச் சுருளை ஏத்திடுச்சு:-)

இங்கே நியூஸியிலே தெற்குத்தீவிலே ஹைவே # 1 ல் போனா வருவது ஓமரு என்ணும் ஊர். இப்ப இங்கே போட்டுருக்கறது
இ-சங்கமத்தில் வந்த 'நியூஸிலாந்திலிருந்து ஒரு நியூஸ்' என்னும் பகுதியிலிருந்து!

இந்த நாட்டைப் பத்தி எனக்குத்தெரிஞ்ச அளவில் எழுதியிருந்தேன்.


அடுத்து வருவது 'ஓமரு' என்னும் ஊர். இங்கே 'பெங்குவின்' பறவைகளைப் பார்க்கலாம், அதன் இயற்கைச் சூழலில்! காலையில் இரை தேடி,
இவை கடலுக்குள் சென்றுவிடுமாம். பிறகு அங்கேயே பகல் முழுதும் இருந்துவிட்டு, மாலையில் கொஞ்சம் இருட்டின பிறகுதான் இவைகள்
கரைக்குத் திரும்பி வருமாம். இந்த 'பெங்குவின் பறவை காலனி' யில் செடி, புதர்களுக்கு நடுவேயெல்லாம், கூடு ( வீடு) செய்து
வைத்துள்ளனர்.

கான்சர்வேஷன்( இதற்குத் தமிழில் என்ன?) துறையினர் இந்தப்பகுதியை, அதன் இயற்கைத் தன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.

மாலை, இருட்டுவதற்கு முன், நாம் அங்கே போய், இவர்கள் கட்டிவைத்துள்ள பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருந்து
நாம் கடல் தண்ணீரைப் பார்க்கமுடியும். முதலிலேயே சொல்லிவிடுவார்கள் நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று!
பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..) டார்ச் லைட்டோ, ஃப்ளாஷ் உள்ள கேமெராவோ உபயோகிக்கக்கூடாது. எழுந்து நடக்கக்கூடாது.
அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும்.

நாமெல்லாம், தண்ணீரையே பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், பாதுகாவலருக்கு எப்படியோ தெரிந்துவிடும்.
நமக்கு எச்சரிக்கை விடுவிப்பார். அதன்பின் ஒரே அமைதிதான்.


நாமெல்லாம், அண்டார்டிக்காவில் உள்ள 'எம்பரர் பெங்குவின்' போல'மெகா சைஸில்' ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இங்குள்ளவை
மஞ்சள் கண் பெங்குவின்கள். கோழியைவிடச் சின்ன சைஸில் இருக்கும்! சுமார் ஒரு அடி உயரம் இருக்கும்!

முதலில் ரெண்டு மூன்று பறவைகள் கடற்கரையில் தோன்றும். தண்ணீரிலே வந்து கரை ஏறியவைதான். அப்படியே அங்கேயே நின்றுகொண்டிருக்கும்.
நேரம் போகப் போக நூற்றுக் கணக்கில் வந்து சேரும். மணலிருந்து ஏறி நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குமுன் 'பாதையைக் கடக்க' எல்லாம்
வரிசையில் நின்று கொண்டிருக்கும். அவர்கள் கூட்டத் தலைவன் வந்து, போகலாம் என்று சொன்னால்தான் போகவேண்டுமாம்!

ஆரம்பப் பள்ளிகளில், முதலாம் வகுப்புப் பிள்ளைகளை நினைவூட்டும் விதத்தில், அந்த வரிசையில் பேச்சும், ஒன்றை ஒன்று தள்ளுவதும்,
இடிப்பதும், வரிசையில் இருந்து தள்ளிவிடுவதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும். அல்லது இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். அபிமான
நடிகரின் படம் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதைப்போல! ஒரே 'கல பிலா' சத்தம்தான்.

ஆஹா, இதோ வந்துவிட்டார், தலைவர்! தலைவர் முதலில் பாதையை இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு, ஏதோ கட்டளை இட்டவுடன், எல்லாம்
வரிசையாகப் பாதையைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும். அந்த மெல்லிய இருட்டிலும் எப்படியோ தங்கள் வீடுகளை அடையாளம்
கண்டு கொள்ளுமாம்!

இவ்வளவு நேர்த்தியான ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் இவை உண்மையிலேயே அதிசயப்பறவைகள்தான்! இவைகளை இந்த இடத்தில் மட்டுமே
நாம் காணமுடியும் என்பதால், சுற்றுலா வரும் கூட்டத்தினர் தவறாமல் இங்கு வருவார்கள்.

நன்றி இ-சங்கமம்


10 comments:

said...

மிகவும் ரசிச்சேன் துளசி. உங்க ஊருக்கு எப்ப போவோம் என்று எண்ணும்படி செய்துட்டீங்களே :-( :-) !

"....பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..)....."

அதானே, நம்ம மாதிரி ஆள்களுக்கு எல்லாம் இப்படி ஒரு தடை (டா) போட்டால் எப்படி?

said...

அன்புள்ள அருணா,

கட்டாயமா வாங்க!!! ரொம்ப ஏகாந்தமா இருக்கலாம். நம்ம ஊர்லே இருக்கற பிரபல
'புள்ளி'ங்களுக்கு இது சொர்க்கம். ஏன்னு கேக்கக்கூட நாதி இருக்காது!

பயந்துறாதீங்க. அட்டகாசமான இயற்கைக் காட்சிகள், அமைதியான இடங்கள்ன்னு
எல்லாமே கூடுமானவரை இயல்பான இயற்கைச் சூழலிலே இருக்கறதை ரசிக்கலாம்.

எப்ப வர்ரீங்க?

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி, ரொம்ப சுறுசுறுப்பா இருக்கீங்க. நீங்க எழுதியிருக்கிற அதே அனுபவத்தைத் தான் நாங்களும் அனுபவித்தோம். ஆனா நூத்துக்கணக்குல ஒண்ணும் வரலை. அந்த அன்னிக்கு ஏமாத்திடுச்சு. அதனால என்ன, ஒரு நாள் சாவகாசமா உங்க ஊருக்கு வந்துட்டாப் போச்சு!

said...

கட்டாயம் வாங்க செல்வராஜ்.

இங்கே 'வரலாறு' படைக்காமலிருக்க நான் காரண்டி:-)))))

said...

இப்ப!இப்ப!இப்ப! இப்பவே பாக்கணும் போலயிருக்கு!

said...

ம்.. இதையெல்லாம் பார்க்க புண்ணியம் செய்ய வேண்டும்.

ராஜ்குமார்

said...

என்னங்க மரம்,
அப்படிப்போடு (அருவாளைன்னானாம்!) இப்பத்தான் விமான டிக்கெட் எல்லாம் மலிவு
ஆயிடுச்சே. கிளம்பி வர்றது? நாங்க இருக்கோம்ல! லாஸ் ஏஞ்சலீஸ் லேயிருந்து
எங்க ஊருக்கே டைரக்ட் ஃப்ளைட் இருக்குல்லே!

ராஜ்குமார்,

இதுக்கு ஏதுக்குங்க புண்ணியமெல்லாம் செஞ்சிருக்கணும்? இந்தியாவுலேயிருந்து
டிக்கெட் எடுத்தா ரொம்ப மலிவுங்க. இங்கிருந்து போற எங்களுக்கு இங்கே அநேகமா
டபுள் சார்ஜ் ஆயிருது(-:


பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!!!!

said...

///முதலிலேயே சொல்லிவிடுவார்கள் நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று!
பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..)///

said...

//ஆரம்பப் பள்ளிகளில், முதலாம் வகுப்புப் பிள்ளைகளை நினைவூட்டும் விதத்தில், அந்த வரிசையில் பேச்சும், ஒன்றை ஒன்று தள்ளுவதும்,
இடிப்பதும், வரிசையில் இருந்து தள்ளிவிடுவதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும். அல்லது இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். அபிமான
நடிகரின் படம் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதைப்போல! ஒரே 'கல பிலா' சத்தம்//

அப்டியே கண் முன்ன நடக்கற மாதிரி இருக்கு . அருமை !!! படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு . பார்த்த கண்கள் கொடுத்து வைத்தவை . நன்றி பகிர்ந்ததற்க்கு :)
போட்டோஸ் இல்லையா ?

said...

Ada aammaam, nallaa irukku..... naan rasithathum athey athey :-)