Wednesday, July 06, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 14

ரொம்பவே வயசானதா, அழுக்கு உடம்போட( ஒருவேளை அதோட கலரே அதுதானோ என்னவோ?)
ஒண்ணு வந்து வாசலிலே நிக்குது. Hedgehog க்கு வைக்கற சாப்பாட்டை ஒரு கை பாக்குது!!
இந்த 'ஹெட்ஜ்ஹாக்'ன்றது ஒரு பெருச்சாளி சைஸுலே இருக்கும். உடம்பெல்லாம் முள்ளம்பன்றி போல
இருக்கும். அசப்புலே பார்த்தா நம்ம ஊர்லே தேங்காய் நார் இருக்கும்லே ,அதுலே அப்படியே ஒரு
பெருச்சாளிக்குச் சட்டை தைச்சுப் போட்டதுபோல!


இது எங்கெருந்து வருது? இதுங்கெல்லாம் வேலிக்குப் பக்கத்துலே இருக்குற செடிப்புதர்கள்லே
பகல் முழுக்க ஒளிஞ்சு இருக்கும். இருட்டுனபிறகு, சாப்பாடு தேடி வரும். புழு, பூச்சி, நத்தை இப்படி
யெல்லாம்தான் சாப்பாடு!! ஆனா பாலும், ப்ரெட்டும் வச்சா ரொம்ப நல்லா சாப்பிடும்னு ஒரு புத்தகத்துலே
வாசிச்சேன். அதும்படி அப்பப்ப ஒரு ரொட்டித்துண்டைப் பிச்சு, பாலிலே போட்டு வச்சோம்னா நல்லா
சாப்பிடும். ஆனா ஆளுங்க போனா ஒடிப் போயிரும். அதாலே தட்டை வெளியிலே வச்சுட்டு, கதவைச்
சாத்திட்டு ஒளிஞ்சிருந்து ஜன்னல் வழியாப் பாப்போம். இப்படி ஒரு நாள் பாத்தப்பதான் இந்த 'அழுக்குக்கேஸ்'
மெதுவா வந்து அந்தப் பாலை நக்கிக்குடிக்குது!!

பாவமா இருக்கேன்னு, கொஞ்சம் கப்புவோட சாப்பாட்டையும் வச்சேன். அதையும் ஆவலோட தின்னது!
அதுக்கு அப்பவே சொல்லியாச்சு, 'வா, சாப்பிடு. ஆனா வீட்டுக்குள்ளே வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதே!'
புரிஞ்சதோ என்னவோ, தினம் ராத்திரி மட்டும் வந்துக்கிட்டு இருந்தது!! 'கஞ்சி வரதப்பான்னா எங்கே
வருதப்பான்னு கேட்டானாம்னு சொல்றமாதிரி அதும் பார்வை இருந்துச்சு. அதாலே அதுக்கு 'வரதன்'னு
பேர் வச்சு, சுருக்கமா வரதுன்னு கூப்பிட ஆரம்பிச்சோம்.

ஒரு நாள் மகள் கேக்கறா, 'ஏம்மா, வரதன் ற பேரு நம்ம தாத்தா பேருதானே?'ன்னு!!! ஆஆஆஆ....
ஆமாம். வரதாச்சாரின்றது நம்ம மாமாவோட முழுப்பேர். ஆனா எல்லோரும் 'ச்சாரி மாமா'ன்னே
சொல்லிக்கிட்டு இருந்ததாலே அவரோட பேரின் முதல் பாதி மறந்தே போச்சு!!! அடக் கடவுளே.....
இப்ப என்ன செய்யறது? ஒரே பேருலே எத்தனை ஆளுங்க இருக்காங்க! ஃபோன் புக்கைப் பாருங்க!!!
ஸ்ரீநிவாசனும், வெங்கடராமனும் பக்கம் பக்கமா இல்லை? அதாலெ இப்படியே விட்டுரலாம்!!!!

ரெண்டுமாசம் வரைக்கும் வந்துக்கிட்டிருந்த வரது ஒருநாள் வரவேயில்லை. எதுக்கும் இருக்கட்டுமுன்னு
கொஞ்சம் சாப்பாடை வெளியில் வச்சுட்டு வந்தேன். இப்ப என்னன்னா அந்த பூனைச் சாப்பாட்டை, இந்த
ஹெட்ஜ்ஹாக் கூட்டம் வந்து சாப்பிடுது!!!!! இப்படியே நாள் போச்சு! வரது வரலை!!!! வரவேயில்லை!!!!
இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க குளிர் வந்தவுடனே தூங்கப் போயிரும். அப்புறம் வசந்த காலம் வந்தாத்தான்
முழிக்கும்!!! ஹைபர்னேட் செய்யற வகை!!!!

கப்புவுக்கும், இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க மேலே ஒரு பிரியம் வந்துருச்சு போல. அதுங்க தட்டைச் சுத்தியும், சிலது தட்டு
மேலெ ஏறியும் நிக்குறதைப் பாத்துக்கிட்டே தூரமா உக்காந்திருக்கும்!!!! அதை 'ஃபிக்ஸ்' செஞ்சாச்சு!
ஆபரேஷனுக்கு ஆன செலவுலே பாதியை மட்டுமே நாங்க கட்டுனோம். மீதியை அந்த 'கேட் ப்ரொட்டக்ஷன் லீக்'
கொடுத்துச்சு. 'நல்ல ரெஸ்பான்ஸிபிள் ஓனர்'னு நமக்கு இந்தச் சலுகை!!!!!

கப்பு ஒரு இயற்கை உபாசகி!! தோட்டத்துலே பூச்செடிக்குப் பக்கத்துலே போய், பூக்களை மோந்து
பாத்துக்கிட்டு, அப்படியே அதும்வாசத்திலே சொக்கிப் போனாப்புலெ கண்ணெல்லாம் அரைவாசி
மூடிக்கிட்டு உக்காந்து இருக்கும்!!! அப்பப்ப எதாவது ஒரு குருவியைப் பிடிச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளே
கொண்டுவந்து எனக்குக் கொடுக்கும். பயந்து நடுங்கிக்கிட்டு போராடற பறவையைச் சமாதானப்படுத்தி
வெளியே கொண்டுபோய் விடுறது எனக்கொரு வேலை!!! அதேபோலத்தான் எப்பயாவது ஒரு எலிக்குட்டியை
கொண்டுவரும்!! எதையும் கொல்லாது!!! அஹிம்சாப் பூனை!!!! மனமெல்லாம் அன்பு மட்டுமே நிறைஞ்சது!!!

நமக்கு எங்கேயாவது சில நாள் அக்கம்பக்கம் இருக்கற ஊருங்களுக்குப் போய்வரணுமுன்னா, கப்புவை
'கேட்டரி'யிலே விட்டுட்டுப் போவோம். அங்கேயும் பலவித நிபந்தனைகள் இருக்கு. முதலாவதா,
நம்ம பூனைக்கு தடுப்பூசி போட்டிருக்கணும். குறைஞ்சது ஒரு மாசத்துக்கு முன்னே போட்டிருக்கணும்.
இங்கெல்லாம் பூனை, நாய்க்கு ஒரு ரெக்கார்ட் புக் நம்ம வெட்னரி க்ளினிக்லே கொடுப்பாங்க.
ஒவ்வொருமுறை அங்கே கொண்டு போறப்பவும் அதை இந்த புத்தகத்துலே பதிஞ்சுருவாங்க. அப்புறம்
அதுக்கு வேற ஏதாவது நோய்நொடிக்கு சிகிச்சை செஞ்சிருந்தாலும் அது அந்த புத்தகத்திலே பதிஞ்சிருக்கும்.
அந்தப் புத்தகத்தைக் காட்டுனாத்தான், 'கேட்டரி'யிலேயே சேர்ப்பாங்க.

ஒரு நாலைஞ்சுதடவை இப்படி விட்டுட்டுப் போயிருக்கோம். எல்லாம் மூணு, நாலு நாளுங்கதான்!!
ஆனா ஒவ்வொருதடவையும், திருப்பி எடுக்கப் போறப்ப ஒரே கம்ப்ளெயிண்டுதான். 'சாப்பிடவே இல்லை'!!!
முகமெல்லாம் வாடி இருக்கும். பாவம். அதனாலே எங்கே போனாலும் காலையிலே போய் ராத்திரிக்குத்
திரும்பிடறமாதிரி வச்சுக்கிட்டோம். அப்படியே எப்பவும் இருக்க முடியுமா?

ஊர்லே அண்ணன் மகளுக்குக் கல்யாணம். கட்டாயம் போகணும்!!! ஒரே நாளுலே இந்தியாவுக்குப் போயிட்டு
வந்துரமுடியுமா? ஊருக்குப் போயே நாலுவருஷம் நாலுமாசம் ஆகுது. அக்கம்பக்கம் விசாரிச்சப்ப,
ஒரு நல்ல 'கேட் மோட்டல்' இருக்குதுன்னு சொன்னாங்க. அங்கே ஒரு நாள் போய்ப் பார்த்தோம்.

ஊருக்கு வெளியிலே இருக்கு அந்த இடம். பெரிய தோட்டத்துக்குள்ளே ஒரு தனி வீடு!!!! சின்னச்
சின்னதா நிறைய அறைகள் இருந்துச்சு. ஒவ்வொரு ரூமுக்கும் ஒரு பின்வாசல் வேற. அங்கே ஒரு ச்சின்னத்தோட்டம்.
தோட்டம் பூராவும் வலைக்கம்பி போட்டுப் பாதுகாப்பா இருக்கு! அந்த அறையிலே குளிருக்கு இதமா
ஹீட்டர் பொருத்தியிருக்கு. நம்ம பூனையோட படுக்கை, விளையாட்டுச் சாமான் எல்லாம் கொண்டுபோய்
கொடுத்துட்டா, அதையெல்லாம் அந்த அறையிலே போட்டுவச்சு, அதுக்குப் பிரிவுத்துயர் ஓரளவு வராமப்
பாத்துப்பாங்களாம்!!!!

இது இல்லாம, ஒரு ஹாலிலே ஒரு பெரிய கட்டிலும், மெத்தையும் போட்டு வச்சிருந்தாங்க. நிறையப் பூனைங்க
அதுலே ஏறி விளையாடிக்கிட்டும் படுத்துத் தூங்கிக்கிட்டும் இருந்ததுங்க. ஓரளவு 'சோஷியலைஸ்' செய்யக்கூடிய
பூனைங்களை இப்படி வச்சுப்பாங்களாம். அதுங்களும் வீட்டுலே இருக்கறதைபோலவே உணருமாம்!!!!
நல்ல இடம்தான். கொஞ்சம் செலவு கூடியது. ஆனாலும் பரவாயில்லை!!!! ஏழு வாரத்துக்கு அங்கே
ரூம் போட்டாச்சு!!!! ஊருக்குப் போகறதுக்கு மொத நாள் கொண்டுபோயும் விட்டாச்சு!!

மறுநாள் கிளம்பறதுக்கு முன்னே ஒரு ஃபோன் போட்டு விசாரிச்சேன். 'தொந்திரவு ஒண்ணுமில்லை.
அமைதியா இருக்கு'ன்னு சொன்னாங்க. ஒரு மனத்திருப்தியோடு கிளம்பிப் போனோம். நாலுவாரம்
மட்டுமே எங்க இவர் லீவு எடுத்திருந்தார். அதனாலே அவர் மட்டும் ஊரிலிருந்து கிளம்பிட்டார். நாங்க
இன்னும் மூணுவாரம் இருந்துட்டு வர்றதா ஏற்பாடு.

ரெண்டு நாள் கழிச்சு, இவர் தான் நல்லபடியாகப் போய்ச் சேர்ந்த விவரத்தைச் சொல்றதுக்கு ஃபோன்
போட்டவர் சொல்றார், 'கப்புவைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்'!!!

என்ன விவரமுன்னு கேட்டா, இவர் வந்தவுடனே கேட்டரிக்குப் ஃபோன் போட்டு, கப்புவோட சுகத்தை
விசாரிச்சாராம்! 'நல்லாதான் இருக்கு. ஆனா சாப்பாடு மட்டும் சரியாச் சாப்புடறதே இல்லை'ன்னு
சொன்னாங்களாம். அப்ப இவர் ,'இப்ப வந்து நான் திரும்ப எடுத்துக்கலாமா?'ன்னு கேட்டதுக்கு,
'எடுக்கலாம். ஆனா மூணு வாரக் காசை திருப்பித்தரமாட்டோம்'னு சொன்னாங்களாம். இவர்
பரவாயில்லைன்னு சொல்லிட்டு அங்கே போனாராம். கப்பு ரொம்ப இளைச்சு, ச்சின்னப் பூனைக்குட்டி
மாதிரி இருந்துச்சாம். உடனே வீட்டுக்குக் கொண்டு வந்துட்டாராம். 'இப்பக் கொஞ்சம் பரவாயில்லை.
மூஞ்சு தெளிஞ்சிருக்கு. கொஞ்சம் நல்லாத்தான் சாப்பிடறான்'னு சொன்னார்.

நம்ம பூனைங்க, நாய்ங்களை பொண்ணாயிருந்தாலும் நாங்க எப்பவும் 'ன்'போட்டுத்தான் சொல்றது!
இப்படிச் சாப்புடாம சத்தியாகிரகம் பண்ணறதை என்ன செய்ய? அப்பத்தான் இங்கே 'கேட் டோர்'
வைக்கறது அறிமுகமாகியிருந்தது. அதனாலே ஒரு ஆளைக்கூப்பிட்டு, கண்ணாடிக் கதவுலே ஒரு 'கேட்
டோர்' வைக்கச் சொன்னோம். இது உண்மைக்குமே நல்ல உபயோகமா இருந்தது! பூனைக்கு எப்ப
வேணுமோ அப்ப வெளியே போக வர ரொம்ப செளகரியம்!!!! நம்ம நண்பர்கள் யாராவது, நாம இல்லாதப்ப
நாளைக்கு ரெண்டுமுறை வந்து சாப்பாடும், த்ண்ணீரும் வச்சிட்டுப் போயிட்டாங்கன்னா, பூனை
சாப்புட்டுக்கும்!! பூனைங்களுக்குப் பழகுன இடம்தான் முக்கியமாம். அதுங்க நாயைப் போல எஜமானனை
ஸ்நேகிக்காதாம். இடத்தைத்தான் ஸ்நேகிக்குமாம்!!! இப்படியெல்லாம் சில புத்தகங்களில் எழுதுனதைப்
படிச்சிருக்கேன்!!! இந்தப் ப்ளான் நல்லா வொர்க் அவுட் ஆச்சு!!!!

இந்தக் 'கேட் டோர்'லே ஒரு கஷ்டமும் இருந்துச்சு. நம்ம பூனையல்லாத வேற பூனைங்களும் வீட்டுக்குள்ளே
வந்து, இருக்கறதை ஒரு பிடி பிடிச்சுட்டுப் போக ஆரம்பிச்சதுங்க!!!! ஒரு சின்னப் பிரவுன் நிறப்
பூனைக்குட்டி எப்பப்பார்த்தாலும் ரொம்ப உரிமையோடு வந்து சாப்பிடறது மட்டுமில்லாம, நம்மப் படுக்கை
அறைக்குள்ளும் வந்து கட்டிலில் ஒய்யாரமாத் தூங்க ஆரம்பிச்சது! தினமும் அதைத் துரத்தறதே எங்களுக்கு
வேலையாப் போச்சு! சத்தமே இல்லாமப் 'பூனை' மாதிரி வீட்டுக்குள்ளெ வந்துரும்!!!!

நம்ம வீடு 'யுனிவர்சிட்டி'க்குப் பக்கம் என்றதாலே வருஷ மார்ச் முதல் நவம்பர்வரை மாணவர்கள் கூட்டம்
அதிகம் இருக்கும். இதுலே பலர் நண்பர்களுடன் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருப்பாங்க.
பரீட்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சா, கூட்டைக் கலைச்சு விட்டமாதிரி எல்லோரும் போயிருவாங்க. இதுலே
பலர் பூனை, நாய் வளர்க்கறவங்கா இருப்பாங்க. நாய் வச்சிருக்கவங்க அவுங்க போகும்போது நாயைக்
கூட்டிட்டுப் போயிருவாங்க. இந்தப் பூனைக்கேஸ்ங்கதான் கொஞ்சம் 'டோண்ட் கேர்' ஆளுங்க! பல
சமயம் அப்படியே விட்டுட்டுப் போயிடுவாங்க. அதுங்கதான் அக்கம்பக்கத்து வீடுகளிலே போய் தெண்டுறது!!!

இதனாலேயே பல பூனைங்களை நாம பாத்துக்க வேண்டியதாயிடும்!!!! பொறுப்பில்லாத ஜனங்கள்!!!! இதுவரை
வந்த பூனைங்களைக் கணக்கெடுத்தா ஏராளமாப் போயிரும், இந்தத்தொடரும் முடிவில்லாமத் தொடர்ந்துடும்!!
அதனாலே நம்ம வீட்டுக்குள்ளே வந்து , வாழ்க்கையிலே பங்கு வச்சதுங்களைமட்டும் சொல்வேன்!

இன்னும் வரும்!!!!!



6 comments:

said...

துளசி
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவில் இன்னும் எத்தனை வாரம்?

said...

//பூனைங்களுக்குப் பழகுன இடம்தான் முக்கியமாம். அதுங்க நாயைப் போல எஜமானனை ஸ்நேகிக்காதாம். //

உப்பு போட்டுத்தானே பூனைகளுக்கு சாப்பாடு? அதுக்குப்பிறகும் "உப்பிட்டவரை உள்ளளவும் நினை"க்கவில்லை என்றால் எப்படி? நன்றியுணர்ச்சியே இல்லாத கெட்ட பூனைகள். :o|

said...

நன்றி பத்மா.
// இந்தியாவில் இன்னும் எத்தனை வாரம்?//

இது புரியலையே!!! நான் தினமும் ராத்திரி 11 மணிக்குமேலே இந்தியா போயிட்டுக்
காலையிலே ஒரு அஞ்சு அஞ்சரைக்குத் திரும்பிடுவேனே!!!! ( கனவுலேதான்!!!)

என்றும் அன்புடன்,
துளசி.

said...

//உப்பு போட்டுத்தானே பூனைகளுக்கு சாப்பாடு//

ஷ்ரேயா

இருக்குமோ என்னவோ? நான் தின்னு பர்க்கலை:-))))

துளசி.

said...

//ஊர்லே அண்ணன் மகளுக்குக் கல்யாணம். கட்டாயம் போகணும்!!! ஒரே நாளுலே இந்தியாவுக்குப் போயிட்டு வந்துரமுடியுமா?//

தேன் துளி இதை வாசிச்சுட்டு குழம்பிட்டா போலருக்கு. அவ கேட்டதப் பாத்து நானும் குழம்பிட்டேன். :o)

//உப்பு போட்டுத்தானே பூனைகளுக்கு சாப்பாடு// & //இருக்குமோ என்னவோ? நான் தின்னு பார்க்கலை:-))))//

யாரு உங்களை சாப்பிடச் சொன்னா...அதெல்லாம் சாப்பிடாமலே உப்பு இருக்கா என்று பார்க்கலாம். பூனையின் சாப்பாடு இருக்கிற டின்ல "இன்கிரீடியன்ட்ஸ்" லிஸ்ட் இருக்கும்!! நீங்க சமைச்ச சாப்பாடு போட்டாதான் உப்பு இருக்கா.. இல்லையா என்று....

ம்ஹூம்!..இந்த விளையாட்டுக்கு நான் வரல்ல! ;o)

said...

துளசி...எங்கே ஆளைக் காணோம்?