Saturday, December 31, 2005

கூட்டிக் கழிச்சுப் பாத்தா.......




















இதோ அதோன்னு வருசம் முடியுற இடத்துக்கு வந்துட்டோம். கொஞ்சம் நின்னு திரும்பிப் பார்த்தா,'பரவாயில்லை'ன்னுதான் தோணுது.

மெய்யாலுமா?

வேற என்னா சொல்லச் சொல்றீங்க? தனி மனுஷனுக்கு லாபநஷ்டக் கணக்கு வேற, ஒரு சமூகம்,ஒரு நாடுன்னு வந்தா அதுங்கணக்கு வேறயில்லே?


நாடுன்னு வர்றப்ப எந்த நாட்டையின்னு சொல்றது? ஆனானப்பட்ட அமெரிக்காவைக்கூட விட்டுவைக்கலை விதி.கத்ரீனா போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமா?


தமிழ்நாட்டுலே தண்ணி இல்லேன்னு இனி பேச்சே வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செய்யறமாதிரி இந்தத் தண்ணியாலெயே கஷ்டம். எல்லாத்துலேயும் கோராமை எதுன்னா, நிவாரணம் வாங்கப்போய் சாகறது?இந்த அநியாயம் உலகத்துலே வேற எங்காவது நடக்குமா?


இயற்கை பண்ணற சதி ஒருபக்கமுன்னா, மனுஷன் பண்ணற அட்டூழியம் ஒருபக்கம். தேவை இல்லாம போர்நடக்குது. இவன் பத்துப்பேரைக் கொன்னா அவன் ஒருத்தரையாவது கொல்லமாட்டானாமா?


சமாதானப் பேச்சு நடத்தறொமுன்னு சொல்லிச் சொல்லியே வருசக்கணக்கா சமாதானமே இல்லாமப்போச்சு.



தலைவன் என்ற பேர் இருக்கறவங்களுக்கு ஒண்ணும் ஆகறதுல்லே, ஆனா பஞ்சப்பரதேசிகளான பொது மக்களுக்குவிழுது அடி பலமா.

சாதாரண ஜனங்க போற விமானம் கடலுக்குள்ளெ விழுது. ஆனா மந்திரிமார் போற விமானமோ, ரயிலோ எதுவோஅதிர்ஷ்டவசமா விபத்துலே இருந்து தப்பிக்குதாம்( இதுவும் அபகடமாகணுமுன்னு சொல்ல வரலை. ஆனா இது மட்டும் எப்படித்தப்பிச்சுருதாம்? அதே கவனிப்பு சாதாரணனுக்கு வேணாமாமா?)


ரெண்டு நாளைக்கு முன்னாலே இ-பேப்பர் ஒண்ணு பார்த்தேன். அரசியல் தலைவருக்குப் பொறந்தநாளாம். நல்லது.கொண்டாடட்டும். ஆனா பக்கத்துக்குப் பக்கம் கோஷமெல்லாம் கூவி, 'எங்கள் முதல்வரே'ன்னு கூட ஒரு ஆர்வக்கோளாறுலேபோட்டிருக்காங்க இந்த வட்டம், சதுரம், செவ்வகமெல்லாம். பத்திரிக்கையிலே போடக் காசு செலவாயிருக்காதா? ( அந்த வட்டத்துக்கும் சதுரத்துக்கும் உள்ளெ ஒரு பொருமல், இப்படியெல்லாம் கோஷம் போடவேண்டியிருக்கே!நம்ம பேர் எப்ப இப்படி வரப்போகுதோ? ஹூம்....)


நாடு இப்ப இருக்கற நிலையிலே, அதே தலைவரே, 'இந்த ஆடம்பரமெல்லாம் வேணாம். கஷ்டப்படுற ஏழைக்கு உதவலாமு'ன்னுஒரு வாக்கு சொல்லியிருந்தாலே மக்கள் மனசுலே இடம் கிடைச்சிருக்காதா?


ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் ஒரு மினிமம் கேரண்ட்டி இருக்குதேப்பா, எப்படியும் நடத்திரலாமுன்னு!பேசாம நானே சிரமம் பார்க்காம ஒரு ஆ.....சிரமத்தை ஆரம்பிக்கலாமான்னு இருக்கு. நமக்கு நாலுபேரு இருக்கமாட்டாங்களா?காசுக்கும் பஞ்சமிருக்காது. கோபாலும் என் சிஷ்யகோடி/கேடியா வந்துரலாம்!


ஆன்மீகமுன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. புதுசுபுதுசா கோயில் கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்லதுதான்.ஆனா அதுக்கு முந்தி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செஞ்சு கொடுத்துட்டுச் சாமி கும்புடலாமுல்லே?அழுக்கும் புழுக்குமா இருந்துக்கிட்டா சாமி கும்புடணும்? சுத்தபத்தமா இருக்கத் தேவை இல்லையா?


எல்லாக் கிராமத்துக்கும் இண்டர்நெட் வசதி செஞ்சுதராங்களாமே. பேஷாச் செய்யட்டும். தண்ணீ, மருத்துவ வசதி, ரோடு வசதி,இன்னும் மக்களுக்குத் தேவையான பல வசதிகள், பல கிராமங்களுக்கு இன்னும் இல்லைன்னு கேள்வி. வறுமை தாங்காமவிவசாயிங்க எலிக்கறி ( இங்கே பழைய காலத்துலே மவோரிகள் உணவுலே எலிக்கறி இருந்தாத்தான் பிரமாதமான விருந்தாம்!) தின்னாங்கன்னு படிச்சேன். இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களாமா? செல் ஃபோனும், நெட்டும் கிடைச்சுட்டா ?ப்ளொக் எழுதினா பசி அடங்கிரும், இல்லே?)


ஒரு வீட்டுலே அம்மா, அப்பாவுக்கு அஞ்சு மகன்கள். அஞ்சு மருமக வந்தாச்சு. மாமியார் எல்லாருக்கும் ஒவ்வொருட்யூட்டி பிரிச்சுக் கொடுத்தாங்க.

வீடு வாசல் பெருக்கித் துடைச்சு வைக்கணும் மருமகள் நம்பர் 1

சமையலுக்குத் தேவையான காய்கறிகளை, அரிசி பருப்பை சேகரிச்சுக் கொடுக்கணும் மருமகள் நம்பர் 2

எல்லாத்தையும் அடுப்புலே ஏத்தி ஆக்கி வைக்கணும் மருமகள் நம்பர் 3

வாழை இலையைக் கொண்டுவந்து, சுத்தம் செஞ்சு, நடுக்கூடத்துலே வரிசையாப் போட்டுப் பறிமாறணும் மருமகள் நம்பர் 4

எல்லா இலையையும் எடுத்துக் கடாசிட்டு, பாத்திரம் பண்டம் தேச்சு வைக்கணும் மருமகள் நம்பர் 5.

லிஸ்ட் போட்டுக் கொடுத்தாச்சு.


மறுநாள் காலையிலே நம்பர் 1 தன்னுடைய வேலையைச் செஞ்சாச்சு.

தூங்கறவங்க எழுந்திரிக்க முந்தியே பாயிலே இருந்துஅவுங்களை உருட்டி விட்டுட்டு எல்லாத்தையும் சுருட்டி வச்சு, பெருக்கி சுத்தம் செஞ்சாச்சு.

நம்பர் 2ம் 3ம் அவுங்கவுங்க வேலையைச் செஞ்சாங்க.

நம்பர் நாலு பரபரன்னு எல்லாத்தையும் வாழை இலை போட்டுப் பறிமாறியாச்சு. கடமை முடிஞ்சதுன்னு நாலு மருமகளும்ரெஸ்ட் எடுக்கறாங்க.

நம்பர் 5 வேகம்வேகமா வந்துச்சு, எல்லா இலைகளையும் அப்படியே வாரி வெளியே போட்டுட்டு, பாத்திரம் பண்டம்தேச்சு வச்சுருச்சு.

சாப்புடவந்த மகன்களும், அப்பா அம்மாவும் பேய் முழி முழிச்சுக்கிட்டு நின்னாங்களாம்.


அவுங்கவுங்க வேலையைச் செஞ்சப்ப, ஆளுங்க வந்தாங்களா, சாப்புட்டாங்களா, இன்னும் இலையிலே கை வைக்கமுந்தியே எடுக்கறமேன்னு ஒரு விசாரம் இல்லே.


அவுங்கவுங்க வேலையைச் செய்யட்டும். ஆனா ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு, கூட்டாச் சேர்ந்து செஞ்சிருக்கலாம்தானே?


இதுபோலத்தான் அரசாங்கமும் நடக்குது. எது கேட்டாலும் இது எங்க டிபார்ட்மெண்ட் இல்லைன்னு ஒரு பதில் ரெடியா வச்சுருக்காங்க.
ஜனங்க இதாலே படற அல்லல் கொஞ்சநஞ்சமில்லை. ஒரு பில்லு கட்டப்போனா குறைஞ்சது நாலு கவுண்ட்டர்மாறிமாறி நிக்கணும்.

அரசாங்கமே மக்களுக்காகத்தான். அதை நினைப்புலே வச்சுக்கணும் இல்லையா?

'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னு சாலை விபத்துலே தினம் கொறைஞ்சது பத்துப்பேர். தீவிரவாதிகள் பிடியிலேமாட்டிக்கிட்டுக் கொஞ்சம் பேர்ன்னு எமனுக்கு ஓவர்டைம்தான் எப்பவும்.

இதையெல்லாம் மறந்துட்டுப் பார்த்தா, ஓரளவு பரவாயில்லாத வருசமாத்தான் இருந்திருக்குல்லே?

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. ஒரு வாரம் நட்சத்திரப் பதிவு முடிச்சவுடனே கொஞ்ச நாளைக்கு 'சுப்'ன்னு இருக்கணும்ங்கறசம்பிரதாயத்தை ஒட்டி நானும் இருக்கலாமுன்னா, இந்தப் புதுவருசம் வேற வந்துக்கிட்டு இருக்கு.


'வருசம் முழுவதும் வருசப்பிறப்பு'ன்னு இங்கே நம்ம தமிழருவிக்கு ( தமிழ்ச்சங்க வெளியீடு) ஒரு கட்டுரைஎழுதியிருந்தேன். ரெண்டு மூணு வருசமாச்சு. கிடைச்சா உங்களுக்காக ஒருக்கா இங்கேயும் போட்டாப்போச்சு.

இந்த 2006வது வருசம், மக்களுக்கு நன்மையா இருக்கட்டுமுன்னு வேண்டிக்கறதைத் தவிர வேற என்ன செய்யமுடியுது?


அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, December 26, 2005

குயிலைப் புடிச்சுக் கூண்டிலடைச்சு.......

எல்லாரும் ஆழமாவும் அகலமாவும், அறிவுப்பூர்வமாவும் சிந்திச்சுப் பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கீங்க. நல்லாதான் இருக்கு.ஆனா எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுதவர்றது இல்லே. இணையம் மூலமா தமிழ் விளையாடற இடங்களைக் கண்டுக்கிட்டது முதல்வெகுதூரத்துலே இருந்தாலும் தனிமை உணர்வு அவ்வளவா பாதிக்கறதில்லை. மரத்தடியிலேயும்,தமிழ்மணத்துலேயும் நிறையப்பேரைநண்பர்களா ஆக்கிக்க வாய்ப்புக் கிடைச்சது இன்னும், கூடக் கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.


நான் பாட்டுக்கு மனசுலே தோணறதையெல்லாம் கிறுக்கிக்கிட்டு இருந்தேன். தினமும் ஒரு பதிவு போடறதுகூட இருந்துச்சுதான்.ஆனா 'இந்த வாரம் நீ தினமும் ஒரு பதிவு போடணும்'னு சொன்னவுடனே என்ன எழுதறதுன்னே புரியலை. அப்பத்தான் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துச்சு,


குயிலைப் புடிச்சுக் கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகம்
மயிலைப் புடிச்சுக் காலை ஒடிச்சு ஆடச் சொல்லுகிற உலகம்......

ஐய்யய்யோ, தப்பா நினைச்சுக்காதீங்க. நல்லா பாடுவாங்க சிலர்.
யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கன்னு கேட்டாப்போதும், ஒரு பாட்டும் 'சட்'ன்னு நினைவு வராது. அதுபோலன்னு ...... ( குழப்மே உன் பேர் துளசியோ?)


எத்தனையோ பேர் நல்ல கருத்துக்களையெல்லாம் சொல்லி நட்சத்திரப்பதிவுகள் போட்டாங்க. இப்படி எல்லாமே சீரியஸ் பதிவா இருந்தா எப்படி? நாம சினிமாவெல்லாம் பாக்கறோம். எல்லாமேவா கருத்துள்ள படமா இருக்கு?எத்தனை படத்தை, மூளையைக் கழட்டிவச்சுட்டுப் பாக்கறோம். ஆங்.... அதேதான். இப்பப் புரியுதுல்லே என்னசொல்லவரேங்கறது?


இது பண்டிகைக் காலம்வேற, கூடவே விடுமுறைகளும் வந்துருது. அவனவனுக்கு ஆயிரம் வேலை. இதுலே எல்லாத்தையும் லேசா எடுத்துக்கிட்டாத்தான் குடும்பம், புள்ளைகுட்டி, ஹாலிடேஸ்னு எஞ்சாய் செய்ய முடியும்.அப்பத்தான் வரப்போற வருஷத்துலெ ஒரு புத்துணர்ச்சியோட நம்ம கடமைகளைச் செய்யமுடியும். எப்பவும்ஆனந்தமா இருக்கறதுதானே உசத்தின்னு பெரியவுங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க. இந்த அக்காவுக்கும் அதெ பாலிஸிதான்.


சந்தோஷமா இருங்க. மனசுலே வர்றதை அப்பப்ப உங்க பதிவுகளிலே போட்டு வையுங்க. நட்பு, நண்பர்கள்ன்னு சொல்றது அருமையான விஷயம். சிலபேர் சொல்வாங்க , நாங்கெல்லாம் ஒரே மாதிரி, கருத்துவேற்றுமையே வராதுன்னு. அதைமட்டும் நம்பவே நம்பாதீங்க. எல்லாருக்கும் அவரவருக்குன்னு ஒரு கருத்து கட்டாயம் இருக்கும்.இருக்கணும். நாமென்ன ஆட்டு மந்தையா? சுயமா சிந்திக்கத் தெரிஞ்ச மனுஷங்களாச்சே.ச்சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதைப் பெருசு பண்ணாம நாமெல்லாம் ஒரு குடும்பம்னு நினைச்சுக்குங்க. எல்லாம் சரியாயிரும்.


முதல்லே சொன்னேன் பாருங்க, சர்க்கஸ் கூடாரமுன்னு. அதுலே நம்ம மேலே ஃபோகஸ் லைட்டைத் திருப்புன மதிக்கும், இந்த அரங்கத்தை ஆக்குன காசிக்கும், இன்னும் தமிழ்மண நிர்வாகத்துலெ பங்கெடுத்து 'பிஹைண்ட் த ஸீன்'னுசேவை செஞ்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கும், என்னை இந்த ஒரு வாரமா சகிச்சுக்கிட்டு இருந்த சக வலைஞர்களுக்கும் நன்றி. வணக்கம்.

நாளைய நட்சத்திரத்தை வாங்க வாங்கன்னு வரவேத்துட்டு நான் நைஸாக் கழண்டுக்கறேன்.


சொன்னது ஞாபகம் இருக்குல்லே?


ஹகூனா மட்டாடா.... நோ வொர்ரீஸ்!!!

Sunday, December 25, 2005

கிறிஸ்மஸ் இன் கிறைஸ்ட்சர்ச்

ஒரு ஆறேழு வருசமா கிறிஸ்மஸ் பண்டிகையை வழக்கமான முறையிலிருந்து வித்தியாசமாத்தான் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்.முந்தியெல்லாம் இது ஒரு லீவு நாள். குழந்தை ஏமாந்துருவாளேன்னு நம்ம வீட்டு மேரி ஆன் (சேண்ட்டாவின் மனைவி) பரிசு வாங்கி ஒளிச்சுவச்சு, பண்டிகை நாள் பொழுது விடிஞ்சதும் ராத்திரி சேண்ட்டா கொண்டுவந்து வச்சுட்டுப் போயிருக்காருன்னு சொல்லிக்கொடுக்கறதுதான்.


இந்த ஊருக்கு வந்த புதுசுலே மட்டும், ஒரு கிறிஸ்மஸ் மரம் ( பைன் மரக்கிளை) வாங்கி அதை நட்டு வைக்கபெரிய தொட்டி இல்லாம, வெளியே முன்புறம் இருந்த புல்தரையில் குழி வெட்டி நட்டு வச்சோம். அப்புறம்அதை எடுத்து 'டம்ப்' செய்ய ட்ரைய்லருக்கு 10 டாலர், டம்ப்பிங் சார்ஜ் 5ன்னு 15$ செலவு. மரம் என்னவோ 5$தான்.


அடுத்தவருசமும் இதுபோலப் படமுடியாதுன்னு அதே 20 $க்கு ஒரு டேபிள் டாப் லே வைக்கற ரெண்டு அடி உயரகிறிஸ்மஸ் மரம் வாங்கியாச்சு. அலங்காரத்துக்கு 20 ச்சின்னச் சின்ன டெகரேஷன்கள் மரத்தோடு இலவசமாக் கிடைச்சது. அதோட விட்டிருக்கலாம். ஆனா இங்கே கிறிஸ்மஸ் மறுநாள் பாக்ஸிங் டே க்கு எல்லாக் கடைகளிலும் இந்த டெகரேஷன் வகையறாங்கெல்லாம் அரை விலைக்குக் கிடைக்கும். வாங்கி வச்சா அடுத்த வருசத்துக்கு ஆகுமேன்னு கொஞ்சம்வாங்கிக்கறதுதான். வருசாவருசம் வாங்கி வாங்கி, இப்ப அந்தச் சின்ன ரெண்டடி உயர மரத்துக்கு அதோட 'கிளை' முறிஞ்சு விழற மாதிரி அலங்காரத்தின் பளு கூடிப்போச்சு. அதான் 'பீலிப்பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்'! சும்மா சொல்லக்கூடாது, இந்த வள்ளுவர் வேற, எல்லாத்துக்கும் சொல்லிவச்சுட்டாரேய்யா. இப்ப நான் எதைச் சொன்னாலும் பழசாத்தானே இருக்கு.


டிசம்பர் மாசம் வந்தவுடனே கிறிஸ்மஸ் மர அலங்காரம் செஞ்சு நானும் கொண்டாடுரேன்னு பாவ்லா காமிச்சுக்கிட்டு இருந்ததுக்கு ஒரு முடிவு வந்துச்சு. எட்டு வருசத்து முந்தி இங்கே பி.ஆர். வாங்கிகிட்டு ஒரு 12 குடும்பங்கள் ஏறக்குறையஒரே சமயத்துலே இங்கே வந்தாங்க. எல்லோரும் கேரள மாநிலத்துக்காரர்கள். ஆஹா... நம்மட மலையாளம் கிட்டத்தட்ட மறக்குற நிலையிலே இருக்கு. இப்ப அதுக்கு மறுவாழ்வு கொடுத்துரணும். எல்லோரும் கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.அதனால் என்ன? 'மதம்' எனக்கு இன்னும் பிடிக்கலைதானே?


அதுக்கு அடுத்த வருசம் முதல் கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஓணம் எல்லாம் சேர்ந்து கொண்டாடினோம். போனவருசம்முறைப்படி கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷன் உருவாச்சு. கொண்டாட்டங்கள் இன்னும் அருமையா ஆச்சு.இதோ, இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு என்னைக் கலை, கலாச்சாரக் (காவலாளியா ?)ஒருங்கிணப்பாளர் ஆக்கிட்டாங்க.


பாரம்பர்யமா நடத்தணுமுன்ற ச்சுமதலை ஏற்பட்டுடுச்சு. இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையா'மார்க்கம் களி'ன்னு ஒரு ஐட்டம் செஞ்சோம். 'களி' செய்யறதுதான் எனக்குக் கைவந்த கலையாச்சே:-)


ஐய்ய, இது வேற களிங்க . திங்கறது இல்லை. ஆடறது.


கேரளத்துப் பெண்கள் ஓணம் பண்டிகை சமயத்தில் திருவாதிரைக் களி ன்னு ஒண்ணு செய்வாங்க தெரியுமா.நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டுலே அந்தக் காலத்துலே இதைக் கேள்விப்பட்டு நாமும் செய்யலாமேன்னு,அரிசியை வறுத்து ரவை போலாக்கி அதை வெல்லப்பாகு வச்சுக் கிளறி ஒரு களி செய்வாங்க. அதுவுஞ்சரி. நமக்குத்தெரிஞ்சதெல்லாம் திங்கும் களிதானே?


மலையாள நாட்டுலே களின்னு சொன்னா ஆட்டம். கதை சொல்லி ஆடறது கதகளி,படகு ஓட்டி விளையாடுறது 'வள்ளம் களி'. திருவாதிரை தினம்வீட்டு முற்றத்துலே குத்து விளக்கு ஏற்றி வச்சு,பெண்கள் நல்ல ஆடை ஆபரணங்கள் அணிஞ்சு, கடவுள் பாட்டுக்களைப் பாடிக் கும்மி அடித்து ஆடுவது 'கைகொட்டிக் களி' இப்படி.


கிறிஸ்த்துவமதம் கேரளத்துலே பரவ ஆரம்பிச்சு, ஏராளமான குடும்பங்கள் மதம் மாறினார்கள். அதுவரையில் இந்துக்களாக இருந்து அவுங்க செஞ்ச எல்லாத்தையும் கொஞ்சம் கிறிஸ்த்துவ 'டச்' கொடுத்து அவுங்களுக்கேத்தபடி மாத்திக்கிட்டாங்க.குத்து விளக்கு இப்பவும் கிறிஸ்த்தியானிகள் வீட்டிலே இருக்கு. என்ன, ஒரு சின்ன மாறுதலோடு. விளக்கின் மேல் புறம்அன்னப் பட்சி, மயில், கூம்புன்னு இருக்கறதெல்லாம் சிலுவை அடையாளமாயிருச்சு.
அந்தச் சிலுவை விளக்கை நடுவுலே வச்சு, அதைச் சுத்தி கடவுள் யேசுவைப் பற்றிப் பாடி கை கொட்டி ஆடறதுதான் புதுவித மார்க்கம் களி. கிறிஸ்த்துவ மார்க்கம் ஆளுங்க செய்யறதாலே 'மார்க்கம்' ன்ற வார்த்தை ஒட்டியிருக்குமோ?


அதுசரி. யாராவது நாட்டிலே கேரள கிறிஸ்த்துவர்கள் வீடுகளிலெ இருக்கற பிராயம் கூடிய ஸ்த்ரீகள் பள்ளிக்குப் போகறதைப்பாத்திருக்கீங்களா?


ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க. ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்' 'பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்கா மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'போல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னுசிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.


மேலே சொன்ன அலங்காரத்தோட , இந்த மேக்கா மோதரம் மொதக்கொண்டு நாங்களே செஞ்சு இந்தக் களியை இந்தவருசம் மேடை ஏத்தி இருக்கோம். 11 வயசுமுதல், 70 வரை வயசுள்ள பெண்கள் இதுலே பங்கெடுத்துக் கிட்டாங்க.ஒரு வாரம் பிராக்ட்டீஸ், அதுக்குள்ளேயே எல்லாருக்கும் சட்டை தைச்சது, குனுக்கு செஞ்சதுன்னு இருந்தோம்.


மறந்துபோன பழைய நாடன் களி( ஃபோக் டான்ஸ்)யைப் பார்த்த நம்ம ஜனங்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டுட்டாங்க.


இதோட ஒரு படம் இத்துடன் போடறேன். படத்தின் தரம் சரியா இல்லாததுக்கு தமிழில் ரமணாவுக்குப் பிடிக்காத வார்த்தை, ப்ளீஸ்.


'மெனு'வை இன்னொரு நாள் சொல்றேனே,ப்ளீஸ்....

Saturday, December 24, 2005

அடுத்தவீட்டுக்காரரை நேசி.


படத்தில் இருப்பது கேத்தரீனும், எய்மியும், பின்னே......


பிள்ளைகள் வளர்கின்றார்கள்.
பிள்ளைங்கன்னா வளராம இருக்குமா? வளராமலே இருந்தா அது புள்ளைதானா?இங்கே சொல்ல வந்தது புள்ளைங்க எப்படி வளர்கிறாங்கன்னு?

தாமாய்!


பக்கத்தூட்டுக்காரரு பெரிய குடும்பி. மொத்தம் பத்து வாய்/வயிறு.
பெரியவன் 'ஜோனத்தன்'. எட்டுவயசு.அடுத்து 'கேதரீன், எய்மி, ஆலா' ன்னு 7 முதல் ஒண்ணரைவரை.


அப்புறம் சாம் இருக்காரு. இவர் பெரியவரு.இப்பப் புதுசா வந்திருக்கறவரு மஃப்பின். வயசுஆறு மாசம் தான். ஆனா ரொம்பத்துரு துரு! பெரிய பெரிய கண்ணு.


அப்புறம் ரெண்டு பூனைங்க வேற இருக்கு. கறுப்புக்கு பேர் மில், ஜிஞ்சருக்குப் பேர் பூன்( Mill & Boon)


நம்ம தோஸ்து இதுலே ஜோனத்தந்தான். பேச்சுலே ஒரு மெச்சூரிட்டி தெரியும். மூணு தங்கைகளுக்குஅண்ணன்றதாலெ கூடுதல் பொறுப்பு தானே வந்த மாதிரி இருக்கும்.


காலையிலே பள்ளிகூடம் போய் பகல் மூணு மணிக்குத் திரும்பி வந்துட்டார்ன்னா மத்தவங்களை மேய்க்கறதேவேலை. நம்ம வேலியோரம் இருக்கற மரக்கிளை பயங்கரமா ஆடுச்சுன்னா, பசங்க 'ட்ராம்போலின்'லே குதிக்குதுங்கன்னுஅர்த்தம். எட்டுப்பேரா இருக்கறதாலே பொழுது அப்படியே விளையாட்டுலேயே போயிருது.


மஃப்பினுக்கு அவுங்க வீட்டுலே இருக்கறதைவிட நம்ம வீட்டுலே இருக்கத்தான் விருப்பம் கூடுதல். நம்ம வீட்டுக் கதவு மூடியிருந்தாலும் வாசலிலே வந்து குரல் கொடுக்கத் தெரிஞ்சிருக்கு. மில் & பூன்னுக்கும் கூட நம்ம வீட்டுலே வந்து தண்ணீ குடிச்சாத்தான் திருப்தி.


கதவைத்திறந்ததும் வீட்டுக்குள்ளே ஒரே பாய்ச்சல்தான். முதல் காரியம் என்னன்னா நம்ம கோபாலகிருஷ்ணனோடசாப்பாடு எங்கே இருக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கறது. அடுத்த வேலை? அது எல்லாத்தையும் வழிச்சு முழுங்கறது.



திறந்திருக்குற எல்லாக் கதவுகளையும் கடந்து உள்ளெ போய்ப் பார்த்தால்தான் மனசுக்கு நிம்மதி. புது ஆளுங்களைப்பார்த்தால் ஒரு சின்ன சத்தம். ஒரு மிரட்டல் வேற. கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு மவோரி வெல்கம் கூடத்தருவார்.அதுதான் மூக்கோடு மூக்கை தொடறது. ஆனால் நம்ம கோபால கிருஷ்ணன் ரொம்ப தலைக்கனம் பிடிச்சது. இவரைச்சட்டைகூடச் செய்யாது:-)


தினமும் ஒருதடவையாவது மஃப்பின் தரிசனம் தரத் தவறாது. 'லாஸோ அஃப்ஸோ' வகையாம். இப்பெல்லாம்அவரோட பாஷை எனக்குப் புரியுது. இன்னிக்கு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார். கவனமாக் கேட்டப்பத்தான் புரிஞ்சதுஅவர் என்ன சொல்றார்ன்னு.


'அண்ணன் ஸாம் வாழ்க!'


இன்னும் ஒரு 'ஸ்லீப்'தான் இருக்கு. பொழுது விடிஞ்சா கிறிஸ்மஸ். வழக்கம்போலவே உங்க எல்லாரையும் விட மொத ஆளாப் பண்டிகைகொண்டாடப்போறது நாந்தான். 'டேட் லைன்'லே குந்தியிருக்கேனே:-)


பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும், பண்டிகை கொண்டாடாமல் விடுமுறையை அனுபவிக்கும்நண்பர்களுக்கும், 'எது எப்படிபோனால் என்ன' என்று தமிழ்மணமே கதியாக இருக்கும் நண்பர்களுக்கும், பதிவுகளைமாய்ந்து மாய்ந்து எழுதித்தள்ளும் நண்பர்களுக்கும், பின்னூட்டம் மட்டுமே எழுதும் நண்பர்களுக்கும் எங்கள் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பணிவன்போடுதெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு மஃப்பின் & துளசி.

இதைத்தான் சொல்றாங்களோ 'Love Thy Neighbour'ன்னு.

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே....

47 நாட்கள்னு சிவசங்கரியோட கதை ஒண்ணு வந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கா? அதுலே சொன்னதெல்லாம்'கதையல்ல நிஜம்'னு ஆகிப்போச்சுன்னு இப்ப சமீபகாலமா வர்ற செய்திகள் சொல்லுது. இந்தமாதிரி வீட்டு வீட்டுக்குநடக்குதுன்னு நான் சொல்லலை. எங்கியோ ஒண்ணுதான் இப்படின்னாலும், அந்த ஒண்ணும் ஏன் அப்படி நடக்கணும்?


அந்தக் காலத்துலே, நம்ம கொள்ளு/எள்ளுத் தாத்தா & பாட்டிங்க கல்யாணம் எல்லாம் நடந்தப்ப, 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதுக்கு'ன்னு இருந்துச்சு. 'பொண்ணுக்குப் படிப்பெல்லாம் எதுக்குங்க. வீட்டுவேலை செஞ்சுக்கிட்டுஅடக்க ஒடுக்கமா இருந்தாப் போதும்'. இந்த நிலமை அதுக்கு அடுத்த தலைமுறைகளிலே கொஞ்சம் மாறுச்சு, பொண்குழந்தை வயசுக்கு வர்றதுவரை பள்ளிக்கூடம் போகலாமுன்னு. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு எட்டாம் வகுப்பு. அப்பவும்சொன்னது என்னன்னா, 'படிச்சுட்டு என்னா வேலை வெட்டிக்காப் போகப்போகுது. வூட்டைப் பார்த்துக்கிட்டு புள்ளைகுட்டிங்களை
வளர்த்தாப் போதும்'.


பொண்ணு எஸ்எஸ்எல்சி வரை படிச்சிருக்கு. 'ஆமாமாம். பொண்ணு படிச்சிருக்கறது முக்கியம். புள்ளைங்களுக்குவீட்டுப்பாடமெல்லாம் சொல்லித்தரணுமுல்லே?' எல்லாம் நம்ம ஊர்ங்களிலே புதுசா முளைச்சு வந்த 'நர்சரிப் பள்ளிக்கூடங்கள்' செஞ்சுவச்ச உபயம். இங்கிலீஷ் கான்வெண்ட்டுலே புள்ளைங்களைச் சேர்க்கலாமுன்னு போனா, படிச்சஅப்பா அம்மாவோட புள்ளைங்களுக்குத்தான் இடம் தருவாங்களாம். வீட்டுப் பாடமெல்லாம் சொல்லித்தர ஆளு வேணுமுல்லே? இது என்னா கதையா இருக்கே? அப்ப ஸ்கோல்லே டீச்சருங்க சொல்லித்தர மாட்டாங்களாமா? அதெல்லாம் சொல்லித் தந்தாலும்வூட்டுலே அம்மாவோட பார்ட் டைமு ஜாப் இதுதான்.


இந்தப் படிப்புலேயே கொஞ்சம் பேர் வேலைக்குன்னு போக ஆரம்பிச்சதும், டீச்சர் வேலை, நர்சு வேலைன்னு மேலேபடிக்கப்போனதும்னு ஆச்சு. நம்ம மக்களுக்கும் , பொம்பிளைப்புள்ளைங்களும் ஆம்புளைப் பசங்களைப் போலவே படிக்கணுமுன்னுஒரு விழிப்புணர்வு வந்து காலேஜு படிப்பெல்லாம் படிக்க வச்சாங்க. மெதுவா பெண்கள் வீட்டைவிட்டு வெளிஉலகத்துக்கு வந்து அதிக அளவில் வேலைக்குப் போக ஆரம்பிச்சு எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சு.ஆனா ஒண்ணு, படிப்பு, வேலை, வாங்கற சம்பளம் எல்லாம் ஏறக்குறைய ஒண்ணா இருந்தாலும், பொம்பளைங்களுக்கு ஒரு தனி கவுரதை கொடுத்தாங்கப்பா இந்த ஆம்புளைங்க.


'வீட்டுத்தலைவி. எங்க வீட்டு மகாலட்சுமி.' வீட்டுலெ அடுக்களைப் பொறுப்புமுழுசும் தலைவிக்கே! அடுக்களை மட்டுமல்ல எல்லாமே 'அம்மா'தான். 'அப்பா, இந்தக் கணக்கு வரமாட்டேங்குது.சொல்லித்தாங்கப்பா' 'அப்பா பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்கென்லே, போய் அம்மாகிட்டே கேளு' ஆமாமாம். படிச்ச மருமகல்லே. நல்லாச் சொல்லித்தரும்( இது வீட்டுலே மத்த பெருசுங்களோட நினைப்பு) குழம்பைக் கலக்கிக்கிட்டேஅம்மாதான் சொல்லித்தரணும். டீச்சர் கூப்புட்டு அனுப்புனாலும் அம்மாதான் ஆபீஸ்லே பர்மிஷன் வாங்கிக்கிட்டுப்போகணும். அப்பாவுக்கு வேலை இருக்குல்லே! ( இதுவும் வீட்டுக்கு வீடு இல்லே. சில வீட்டு நடைமுறைகள் வேற மாதிரியும்இருக்கும். எல்லாத்துக்கும் ஒரு டிஸ்க்ளெய்மர் போட வேண்டி இருக்குங்க. காலம்...)ஆனால் பலர் வீடுகளிலே அம்மாவோட சம்பளப்பணம் மட்டும் முழுசா அப்பா கைக்குப் போயிரணும்ன்றது ஒரு எழுதப்படாத விதி. இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சா.....


அப்புறம் கம்ப்யூட்டர் காலம் வந்துருச்சு. நிறையப் பேர் படிச்சுட்டு வெளிநாடுகளுக்கு இந்த பொட்டி தட்டற வேலை( இப்படித்தான் பரவலாச் சொல்லிக்கிட்டு இருக்காங்க) பார்க்கப் போயிட்டாங்க. கை நிறைய சம்பளம். பொம்பளைங்களும் இந்தப் படிப்புப் படிச்சுட்டு உள்ளூர்லேயும் வெளியூர்லேயும், வெளிநாட்டுலேயும் போக ஆரம்பிச்சு எல்லாம் நல்லபடியாநடந்துக்கிட்டு வருது.


மொதல்லே தனியாப் போற ஆம்புளைங்க, அந்த வாழ்க்கை முறைக்குப் பழகிபோய், நண்பர்கள் கூட வீடு எடுத்துக்கிட்டுசமைச்சு சாப்புட்டு வீட்டுவேலைகளைப் பகிர்ந்துக்கிட்டு ஒரு வழிக்கு வந்துடறாங்க. அவுங்களுக்குப் பொண்ணு பாக்கறப்ப,வெளிநாட்டு மாப்பிள்ளைன்ற அந்தஸ்து கூடிப்போனதாலேயும், பொண்ணும் நல்லாப் படிச்ச பொண்ணா இருந்தால் அங்கேஅவளும் போய் வேலை செஞ்சு நல்லா சம்பாரிக்கலாமேன்னும் அதுக்கேத்தமாதிரி பொண்ணுங்களைப் பார்த்துக் கல்யாணம்முடிச்சு அவுங்களும் வெளிநாடு வந்து நல்லபடியா செட்டில் ஆகிடறாங்க. இனி எல்லாம் சுகமேன்னு பலரோட வாழ்க்கைஅமைஞ்சுருது. இதுலே கூட ஒரு சிலர்,'அய்யய்யோ, நாம ஆம்பளையாச்சே. வீட்டு வேலையிலே எல்லாம் உதவியா இருக்கப்படாது'ன்ற'ஞானோதயம்' ஏற்பட்டு எல்லா வேலையையும் மனைவி தலையிலேயெ கட்டிருவாங்க. (இதைப் பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம். அது அப்புறம்.)



ஆனா, ஒரு சிலர் மட்டும் தவறான நபர்கிட்டே மாட்டிக்கிறாங்க. ஆணாதிக்கம், வக்கிரபுத்தி, தவறான தொடர்பு வச்சுக்கிட்டுஇருக்கற புருஷன்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது. இந்த மாதிரி ஆளுங்ககிட்டே மாட்டிக்கிட்ட பெண்கள் எப்படிஇதுலே இருந்து தப்பிக்கறது?


படிச்ச பெண்களே 'இது நம்ம தலையெழுத்து'ன்னு நினைச்சுக்கிட்டு இந்தக் கொடுமையைத் தாங்கிக்கிட்டு வாழறாங்க. அப்புறம்எல்லை மீறி போனபிறகு 'அய்யோ அம்மா'ன்னு ஆகிப்போகுது. பெத்தவங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை நல்லவராத்தான் இருக்கணும்என்ற நம்பிக்கை. கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணி வை. நம்ம ஆளுங்களுக்கு ஆயிரத்துக்குக் கொறைஞ்சு சொல்லத்தெரியாது. இதைப் பயன்படுத்திக்கிட்டு, கூட இன்னும் ஒரு ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் நடந்துருது. மகனோட 'குணாதிசயங்கள்' எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டும், மருமக வந்து அவனைத்திருத்திடுவா/திருத்தணும்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. மருமகள் என்ன டீச்சரா, அவனைத் திருத்தறதுக்கு?முப்பது வருசம் வளர்த்தவங்களாலே அவனைத் திருத்தமுடியலை, இவ வந்து ஒரே வாரத்துலே/மாசத்துலே திருத்த முடியுமா? இந்தமாதிரி நடந்துக்கறவங்க, அடுத்தவங்க சொல்லித் திருந்தமாட்டாங்க. தானே திருந்தினாத்தான் உண்டு.


பத்திரிக்கைகளும், மகளிர்க்கான வாரப் பத்திரிக்கைகளும் அசம்பாவிதமா நடக்கற சம்பவங்களைப் போட்டு மக்களைக் கவனமா இருக்கஎச்சரிக்குதுதான். ஆனா வெளிநாட்டு மோகம் கண்ணை மறைச்சுருதேங்க. இதுலே பொண்ணு கஷ்டப்படுறாளே என்றஎண்ணம் இல்லாம ,பொண்ணு திரும்பிவந்துட்டா, அக்கம்பக்கத்துலே நம்ம கவுரவம் போயிருமோன்னு பொண்ணுக்குத்தான் உபதேசம்நடக்குதே தவிர, அந்தப் பொண்ணோட புருசனைத் தட்டிக்கேக்க மாட்டேங்குறாங்க.இதுனாலெயே தப்பு செய்யறவனுக்குத் துளுத்துப் போகுது.


இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாமுன்னு யோசிச்சால் அது நீண்டுக்கிட்டே போகுது. இப்போதைக்கு சில முன்னேற்பாடு செஞ்சுக்கலாம்.பொண்ணுங்க அவுங்களோட படிப்புச் சான்றிதழ் அது இதுன்னு இருக்கற முக்கியமான பத்திரங்களை , பத்திரமா வச்சுக்கணும். கொறைஞ்சபட்சம் அதையெல்லாம் ஃபோட்டோகாப்பி எடுத்து( அதான் தெருவுக்கு பத்து ஜெராக்ஸ் கடைங்க இருக்கேப்பா) அதுக்கெல்லாம்அட்டெஸ்டேஷன் வாங்கி ஊருலே அம்மா வீட்டுலேயோ, பேங்க் லாக்கர்லேயோ வச்சுக்கறது. கணவனை நம்பாம இல்லை. ஒரு 'பேக் அப்'னு நினைச்சுக்கணும். ( கட்டுன புருஷனை சந்தேகிக்கறதா? அய்யோ, நம்பிக்கைதானே வாழ்க்கை?)திடீர்னு தொலைஞ்சு போச்சுன்னா என்னா செய்யறது?திருப்பி அங்கங்கே அப்ளை செய்து வாங்கறதுக்குள்ளெ விடிஞ்சுடாது? அப்படின்னு நினைச்சுக்கிட்டு இதைச் செஞ்சுரணும்.


வெளிநாடோ, வெளியூரோ வந்தாச்சு. 'அவரே எல்லாம் பாத்துக்குவார்'னு சரணாகதித் தத்துவத்தைக் கடைப்பிடிக்காம,நம்மைச் சுத்தி என்ன நடக்குது, அங்கே பேசற மொழியைக் கத்துக்கறது, வேலை வாய்ப்பு எப்படி இருக்கு, இன்னும்எதாவது கோர்ஸ் செஞ்சு முன்னேற வாய்ப்பு இருக்கான்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, 'அப்பாடா இங்கே சன் டிவி வருது. மெகா சீரியலை மிஸ் பண்ண வேணாம்'னு மனத்திருப்திப் பட்டுக்கிட்டு அதுலெயே மூழ்கிடக்கூடாது. வேலைக்குப்போகத் தேவை இல்லாத நிலைன்னாலும், சமூக சேவைன்னு நினைச்சுக்கிட்டு கம்யூனிட்டிக்காக எதாவது வாலண்டரிசர்வீஸ் செய்யலாம். இந்த முறையிலே உங்களுக்கு வெளி உலகத்தோட ஒரு தொடர்பு இருந்துக்கிட்டே இருக்கும்.


வாக்கப்பட்டு வந்த கொஞ்ச நாளுலெயே எப்பேர்ப்பட்ட புருஷன்கூட இருக்குறோம்ன்றது புரிஞ்சுருமுல்லே. அதுக்குத்தகுந்த மாதிரி நடந்துக்கணும். கொஞ்சம் கவனமா இருந்தா பின்னாலெ துக்கப்படவேணாம் இல்லையா?
என்னடா இவ ஒரேதா பெண்கள் பக்கமே பேசிக்கிட்டுப் போறாளேன்னு நினைக்காதீங்க. தவறான மனைவிகிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களும் இருக்காங்கதான். ஆனா அதுலே இருந்து தப்பிக்கறது ஓரளவு, கொஞ்சமே கொஞ்சம் சுலபமாஇருக்குமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.( யாரு கண்டா, ஒருவேளை அதுக்கும் படாதபாடு படணுமோ என்னவோ?) நம்ம பத்மாவோட பதிவுகளிலே இருந்தும், நம்ம குழலியோட பதிவுகளிலே இருந்தும்தான் இந்தப் பதிவு எழுதலாமுன்னு எனக்குத் தோணுச்சு.


கஷ்டப்படுற பெண்கள் சார்பா இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கேன். ஆண்கள் சார்பா புலம்ப வேற யாராவது வருவாங்க, பார்க்கலாம்.

Friday, December 23, 2005

சிக்கனமா இல்லே கருமித்தனமா

புருஷன் நீட்டுன சம்பளக் கவரை வாங்கிப் பார்த்த சரோ அக்காவுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு. எள்ளும் கொள்ளும்வெடிக்கற முகத்தோட ' ஏங்க, கவர் பிரிஞ்சிருக்கே, திறந்துட்டீங்களா?'ன்னு கேட்டாங்க. மாமாவும் தயங்கித்தயங்கி,'கைமாத்து வாங்கியிருந்தேன்லெ, அதைத் திருப்பிக் கொடுத்துட்டுட்டு வந்தேன்'ன்னு சொன்னார்.


'சரி,சரி. அடுத்த மாசமும் இப்படிச் செஞ்சீங்கன்னா நான் மனுஷியா இருக்கமாட்டென், ஆமா'ன்னாங்க. மாமாவும்பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுனார்.


அன்னிக்கு ராத்திரி சாப்புடற சமயத்துலே, அக்கா கேட்டாங்க,'ஆமா, கைமாத்து வாங்குனதைத் திருப்பிக் கொடுத்தேன்னுசொன்னீங்கல்லே. எப்ப எதுக்கு கை மாத்து வாங்குனீங்களாம்?'னு மறுபடி ஆரம்பிச்சாங்க. மாமாவுக்குப் புரை ஏறிக்கிச்சு.ஒருகையாலே தலையைத் தட்டிக்கிட்டே பரிதாபமா ஒரு 'லுக்'வுட்டார்.


"ஏங்க எத்தனை தடவை சொல்லியிருக்கேன். யார் கிட்டேயும் கைமாத்து, கிய்மாத்துன்னு வாங்காதீங்கன்னு. வேலைக்குக் கிளம்பறப்ப கைச்செலவுக்குக் காசு வேணுமுன்னா வீட்டுலே இருந்தே கொண்டு போகலாமுல்லே?"


" ஆமாம் சரோ. நீ சொல்லியிருக்கேதான். ஆனா அன்னிக்குக் கூடவேலை செய்யற ஜெகனுக்குக் கல்யாணப் பரிசுவாங்கப் பணம் கலெக்ட் செஞ்சாங்க. எங்கையிலே காசு அவ்வளவா இல்லே. அதுனாலே நம்ம மூர்த்திகிட்டே முப்பது ரூபா வாங்கிக் கொடுத்தேன்."


" முப்பது ரூபாயா பரிசுக்குக் கொடுத்தீங்க?"


" இருபது ரூபாதான் கொடுத்தேன். கைச்செலவுக்கு இருக்கட்டுமுன்னு முப்பதா கடன் வாங்கிட்டேன்."


" அப்ப அந்த மீதிப் பத்து ரூபாயை என்ன செஞ்சீங்க?"


மாமா திருதிருன்னு முழிச்சுக்கிட்டே யோசிக்கறாப்போலெ மேலே கூரையைப் பாத்துக்கிட்டு இருந்தார்.


" சிகெரெட், பீடான்னு செலவாயிருக்கும்.இல்லே?"


அக்காவோட 'கொக்கி'யைக் கவனிக்காம மாமா தலையை ஆட்டுனார். அவ்ளோதான், சிகெரெட்டுச் சனியனைவிட்டுத்தொலைக்கச் சொல்லி ஒரு மைல் நீள லெக்சர் கேக்கும்படியாச்சு.


சரோ அக்கா கல்யாணம் கட்டுனது சொந்த மாமனைத்தான். அம்மாவோட கடைசித்தம்பி. தாய்தகப்பன் இல்லாதபுள்ளைன்னு ரொம்பச் செல்லம் கொடுத்து வளத்துட்டாங்க ச்சின்னப்பாட்டி. படிப்பும் அவ்வளவா ஏறலை. மிலிட்டரியிலேசேரப்போறேன்னு போய், அங்கே ரெண்டு நாளைக்கு மேலே தாக்குப் பிடிக்காம திருட்டுத்தனமா ஓடிவந்துட்டாராம்.புடிச்சுக்கிட்டுப் போக ஆளு வந்துருமுன்னு ஒரு வாரம் பரண் மேலே ஏறி ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாராம். ஆளும் வரலை,தேளும் வரலையாம். அப்பதான் சுதந்திரம் கிடைச்சதுன்னு ஒரே கோலாகலமா இருந்துச்சாம். இவர் வெளியே வந்துவேடிக்கைப் பாக்கப் பயந்துக்கிட்டு இருந்தாராம். எப்படியோ இந்த கலாட்டாலே இவர் தலை தப்பிச்சதாம்.



கொஞ்ச நாள் கழிச்சு, பக்கத்துலே புதுசாத் தொடங்குன ஃபேக்டரியிலே ஆள் எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கேபோனப்ப, அவுங்களே பார்த்து வேலைக்குச் சேத்துக்கிட்டாங்களாம். எப்படியோ வேலை, மாசாமாசம் சம்பளமுன்னு இருந்தாலும், காசைக் கணக்காச் செலவு செய்யமட்டும் கத்துக்கலை. சினிமா, ஓட்டல்னு சிநேகிதனுங்க கூடச் சுத்தறது.கைக்காசு தீந்து போனா, ச்சின்னப்பாட்டிக்கிட்டே வந்து கடன் வாங்கறது. கடன் என்னா கடன்? திருப்பித் தராத கடன்தான்.


இப்படிச் சுத்தறானே, ஒரு கால்கட்டைப் போட்டாச் சரியாயிருமுன்னுதான் அக்கா மகளைக் கட்டிவச்சாங்க. சரோஜாவும்நல்ல பொண்ணுதான். பத்துவரை படிச்ச பொண்ணு. நல்லா எலுமிச்சம்பழ நிறம். நல்ல அடர்த்தியான நீண்ட கூந்தல்.என்னா, பல் மட்டும் கொஞ்சம் எடுப்பு. கொஞ்சம்னா கொஞ்சமே கொஞ்சம். ஆனா, கெட்டிக்காரி.


கல்யாணம் கட்டுன புதுசுலே இன்னொரு சித்தி வீட்டுலே இருந்துருக்காங்க. அந்தச் சித்தப்பு சரியில்லை. அந்த ஆளொடபார்வையும் பேச்சும் அசிங்கமா வரம்பு மீறுதா இருந்திருக்கு. சரிப்பட்டு வராதுன்னு, மாமன்கிட்டே சொல்லித் தனிக்குடுத்தனம் போயிருச்சு அக்கா. மாமாவுக்கு ஒரே பயம், எப்படி சமாளிக்கப்போறோமுன்னு. அக்காதான் தைரியம்கொடுத்துருக்கு.


வாடகை கம்மின்னு, ஊரைவிட்டுக் கொஞ்சம் தொலைவா வீடு பார்த்துக்கிட்டு வந்துட்டாங்க. அருமையான வீடு.ச்சுத்திவரத்தென்னமரங்க. நடுவுலே ஓட்டு வீடு. அக்கம்பக்கத்துலேயும் பத்துப்பன்னெண்டு வீடுங்க இருந்துச்சுதான். அதெல்லாம்கொஞ்சம் தள்ளி. குரலெடுத்துக் கூப்புட்டாக் கேக்கற தொலைவுதான்.அதனாலே பயம் இல்லாம இருக்க முடிஞ்சது.


மொதல்லே ரெண்டு மூணுமாசம் அக்காவுக்கு இந்த வரவு செலவு புரிபடலை. அம்மா வீட்டுலே காசுக் கவலையில்லாம இருந்தவங்க. அப்புறம் பாத்தா மாசத்துலே பாதி நாகூட சம்பளம் போறலை. ஒரு நாளு அமைதியா உக்காந்து, என்ன ஏதுன்னுமாமாகிட்டே விசாரிச்சது. மாமாவோட சம்பளம் ரெண்டு வயித்துக்கு தாராளம். சிநேகிதங்க கூடச் சுத்தறதுதான் காரணமுன்னுகண்டு பிடிச்சுச்சு. நல்ல வார்த்தையாச் சொல்லி, இனிமேப்பட்டுச் சம்பளம் கவர் பிரிக்காம வூட்டுக்கு வரணும். அக்காவேசெலவு எல்லாத்தையும் பார்த்துக்குமுன்னு சொல்லி வச்சது. மேற்கொண்டு அந்த மாசப் பத்தாக்குறைக்கு நகை ஒண்ணைக்கொடுத்து அடகுவச்சுப் பணம் கொண்டாரச் சொல்லிச் சமாளிச்சது.


அக்கா கவர்மெண்ட்டுலே நிதி மந்திரியா இருக்கவேண்டிய ஆளு. அவ்வளோ சாமர்த்தியம். நல்லா பட்ஜெட்டுப் போட்டுச்சு.சகல செலவுக்கும் இதுக்கு இவ்வளோன்னு ஒதுக்குச்சு. அனாவசியமான செலவு ஒண்ணும் இருக்கக்கூடாதுன்னுசொன்னப்ப, மாமாவும் 'இவ ஏதோ நல்லதுக்குத்தான் சொல்றா'ன்னு நினைச்சாரு பாருங்க அங்கேதான் இருக்கு அக்காவோடஅதிர்ஷ்டம். என்னதாம் பொம்பளைக் கணக்குப் போட்டுச் செஞ்சாலும், ஆணோட ஒத்துழைப்பு இல்லேன்னா 'டமால்'தானே?


தினம் பொழுது பலபலன்னு விடியறப்பவே அக்கா எந்திருச்சுரும். வீட்டுவாசலைச் சாணித் தெளிச்சுப் பெருக்கி ஒருசின்ன மூணு புள்ளிக் கோலம் போட்டுரும். அக்கா மகா கெட்டிக்காரின்னு சொன்னது இந்தக் கோல விசயத்துலே மட்டும்பலிக்காமப் போச்சு. நிதைக்கும் அந்த ஒரே கோலம்தான். பாசிமணி, பூத்தைய்யல், க்ரோஷா பின்னுறதுன்னு எல்லாத்துலேயும்அழகா நறுவிசாச் செய்யற அக்காக்கு இந்தக் கோலம் மட்டும் இப்படிப் பண்ணுமா? இந்த ஒரு கோலத்தைத் தவிரவேற ஒண்ணும் தெரியாதாம். மெய்யாவா இருக்கும்? என்னாலே நம்பவே முடியலை. நம்பித்தான் ஆகணும், ஏன்னா வெள்ளிக்கிழமை வூடுவாசல் கழுவினாலும், அடுப்படி மொதக்கொண்டு எல்லா ரூம்புலேயும் இதே கோலம்தான்.

அதுக்கப்புறம் காப்பி பலகாரம் எல்லாம் செஞ்சு, மத்தியான சாப்பாட்டையும் ஆக்கிக் கையோடு மாமனுக்குக் கொடுத்தனுப்பிச்சிரும்.மாமாவுக்கு வேலை காலையிலே ஏழரை மணிக்கு. அவரு ஏழுமணிக்குக் கிளம்புனாத்தான் சரியா இருக்கும். அஞ்சுமைலு சைக்கிள் மிதிக்கணுமுல்லெ.


அவர் போன கையோட அக்கா குளிச்சு நல்லா உடுத்திக்கிட்டு வீட்டைத் துப்புரவா ஒழுங்குபடுத்தி வச்சுட்டு, பூத்தைய்யல் போடஉக்காந்துரும். தலகாணி உறை, படுக்கை விரிப்புன்னு எதாவது அலங்காரம் அதுக்குன்னே இருந்துக்கிட்டே இருக்கும். பகல் சாப்பாடுஆன கையோட 'கல்கி' புஸ்தகத்தை எடுத்துவச்சுக் கொஞ்ச நேரம் வாசிக்கும். அக்கம்பக்கம் இருக்கற பொம்பளைங்க கடுதாசிஎழுதிக்க, அவசரத்துக்கு சக்கரை, காப்பித்தூள் கடன் வாங்கன்னு யாராவது வருவாங்க.


கடன் கேட்டா இல்லைன்னு சொல்லாது. கடைவீதியிலே இருந்து இம்மாந்தூரம் இருக்காங்க. ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஒதவலேன்னா எப்படின்னு சொல்லும். சமையல் ரூமுலே ஒரு நோட்டு வச்சிருக்கும். அதுலே என்னா சாமான் கடன் கொடுத்துச்சுன்னு அவுங்க முன்னாலேயேஎழுதி வைக்கும். அந்த ஆளுங்களும் அதைப் பாக்கறாங்கள்ளெ, அவுங்க வூட்டுக்கு அந்தச் சாமான் வாங்கிட்டு வந்தவுடனே திருப்பிக் கொடுத்தரணுமுன்னுசொல்லும். திருப்பிக் கொடுத்தவுடனே அவுங்க முன்னாலேயே எழுதுனதை அழிச்சுரும். இப்படிக் கொடுக்கவும் வாங்கவுமா இருந்துச்சு. அப்பப்பக் காசும்அஞ்சு பத்துன்னு கடன் கொடுக்கும்.


சாயந்திரம் மாமா அஞ்சுமணிக்கு வந்துருவார். அதுனாலே ஒரு நாலுமணிபோல அடுப்புப் பத்தவச்சு சாயங்கால டிபன் செய்யும். பஜ்ஜி, போண்டா, வடைன்னு எதுவாச்சும் இருக்கும்.சட்னி, காபி எல்லாம் ரெடி. தினம்தினம் இப்படி வாய்க்கு ருசியாத் தின்னு மாமாவோட ஓட்டல் போக்கு நின்னுச்சு. அப்படியே சாயந்திரத்துக்கும் எதாச்சும் சமைச்சு வைக்கும். ஃப்ரிட்ஜ், மிக்ஸி சமாச்சாரமெல்லாம் இல்லாத காலம்.இட்டிலி தோசைக்கு தினமும் மாவு அரைக்கும்.


இங்கெதான் இருக்கு விஷயம். நாமெல்லாம் பஜ்ஜி போட்டோமுன்னு வையுங்க, எல்லாரும் தின்னுட்டு மிச்சம் இருக்குதுல்லே. அக்காகிட்டேஇதெல்லாம் நடக்காது. ஆளுக்கு நவ்வாலு பஜ்ஜி, இல்லே மும்மூணு போண்டான்னு அதுக்கேத்த மாவுபோட்டுச் செய்யும். தப்பித்தவறி யாராவது,ஏன் நானே போனாலும் நமக்கு ஒண்ணும் இருக்காது. வரேன்னு முன்னாலேயெ சொல்லியிருந்தாத்தான் நமக்கும் திங்கக் கிடைக்கும். அதென்ன கணக்கோ சரியாப் பத்து இட்டிலிக்கு வராப்பல மாவு அரைக்கும்!அட, இத்தை வுடுங்க. குழம்பு ரசம்கூட ரெண்டே பேருக்குச் சரியாயிரும். என்ன மாயமோ?


நானும் இருக்கேனே, அண்டா அண்டாவாக் காச்சிவச்சுட்டு, அய்யா தின்னுங்க, அம்மா தின்னுங்கன்னு கத்திக்கிட்டு இருக்கறதைப் பாக்கணுமே!


கொஞ்சம் கொஞ்சமாக் காசு சேத்து, நகை, புடவை, மாமாக்கு நல்ல துணிமணிங்கன்னு வாங்குச்சு. ரெண்டு வருசத்துலேயே அங்கே பக்கத்துலேகொஞ்சம் இடம் வாங்கி ச்சின்னதா ஒரு கல்லு வீடு கட்டுச்சு. செங்கல் சுவர். ஆனா மேல் கூரை மட்டும் ஓலை. எல்லாம் அளந்துவச்சாப்ல அந்தவீடுகூட கணக்கா ரெண்டு ரூம், ஒரு அடுப்படி. வூட்டுக்கு பின்னாலே ஒரு பாத் ரூம். அடுத்த வருசம் மாமாவுக்கு போனஸ் வர்றப்ப ஓடு போட்டுக்கலாமுன்னு திட்டம்.


கல்கியிலே வர்ற தொடர்கதைகளை எடுத்துச் சேகரிச்சு பைண்டு பண்ணி ஒரு பக்கம் அலமாரியிலே அடுக்கி வச்சிருக்கும். படிக்க எடுத்தா,'கவனமாபக்கத்தைத் திருப்பு. கிழிஞ்சிரப்போகுது'ன்னு சொல்லும். ஒரு புத்தகத்தை ஒழுங்காத் திருப்பிக் குடுத்தாத்தான் இன்னொண்ணு கிடைக்கும். அதான் அதையும் நோட்டுலே எழுதி வச்சுருமே!


பொட்டி நிறையப் புடவை இருக்கு. ஆனா வீட்டுலே கட்டிக்கன்னு ரெண்டே ரெண்டு புடவை எடுத்துத் தனியா வச்சுக்கும். குளிச்சுட்டுக் கையோடதொவைச்சு வச்சுரும். சரிப்பா, இன்னிக்கு மழை வந்துருச்சு. தொவைக்க முடியலை. மறுநாள் பொட்டிலே இருந்து ஒண்ணை எடுக்குங்கறீங்க? ஊஹூம். நேத்துத் தொவைக்காம வச்சதை எடுத்துத் தொவைச்சு வீட்டு எரவானத்துலேஒரு பக்கம் முடிஞ்சிட்டு, அடுத்த பக்கத்தைக் கையிலே புடிச்சுக்கிட்டு நிக்கும். படபடன்னு அடிக்கற காத்துலே ஒருஅஞ்சு நிமிசத்துலே பொடவை காஞ்சுருமுல்லே. குளிச்சுட்டுக் காய்ஞ்சதைக் கட்டிக்கும்.


சொந்தக்காரங்க வீட்டுக்கோ, சினிமாவுக்கோப் போறப்ப அக்காவைப் பாக்கணுமே. அருமையா உடுத்தி அலங்கரிச்சுக்கிட்டுப்போகும். தம்பி பொண்டாட்டி இப்படி செட்டா இருந்து நாலு காசு வச்சுருக்கறது, மத்த சித்திமாருக்கு கொஞ்சம் பொறாமைதான்.'பொண்டாட்டிக்கு உக்கார்ற மணைக்கட்டை' மாதிரி ஆயிட்டான் தம்பின்னு அவுங்களுக்குள்ளெ பேசிக்குவாங்க.பாட்டிக்கு மட்டும் ரொம்ப சந்தோஷம். இருக்காதா பின்னே? இப்பெல்லாம் மாமா 'கடன்' கேட்டு வர்றதில்லேல்ல!



இந்தக் காலக்கட்டத்துலேயே அக்கா கர்ப்பிணி ஆனாங்க. குழந்தை எட்டு மாசத்துலே பொறந்துச்சு. அதுக்கு ஆண்டவன்போட்ட ஆயுசு ஒரு மாசம்தான். அக்கா மனசொடைஞ்சு போயிட்டாங்க. 'குழிப்பிள்ளை மடியிலே'ன்ற மாதிரி ஆறுமாசத்துலே மீண்டும் ஒருமுறை கர்ப்பம்.


நம்ம ஜனங்களுக்குப் பேச்சுன்றது எவ்வளோ சக்தியான ஆயுதமுன்னு தெரியுமோ தெரியாதோ, பேச ஆரம்பிச்சாங்க.இதெல்லாம் அரசபுரசலா அக்கா காதுக்கு வந்துச்சு. வரணுமுன்னுதானே மக்கள் பேசறது? பேசுனாங்க.
ஆச்சு, ஒம்போது மாசம். அக்காவுக்குப் பயம் வந்துருச்சு போல. 'இங்கே பிரசவம் வேணாம். பெரியக்கா வீட்டுக்குப்போயிரலாம். பெரியக்கா நல்ல அனுபவசாலி. அதுக்கே அஞ்சு புள்ளைங்க. நாலு பொண்ணு, ஒரு பையன்னு இருக்காங்க.அது என்னப் பாத்துக்கும்'ன்னு சொல்லி பெரியக்கா ஊருக்குப் போயிட்டாங்க.


அங்கே ஒரு மாசம்போல எல்லாம் நல்லாத்தான் போச்சு. குழந்தையும் பொறந்துச்சு. ஆம்பளைப்புள்ளே. ரொம்ப அழகாஇருந்துச்சாம். அச்சு அசலா அம்மா மாதிரி நிறமாம். அதோட விதியும் சரியில்லே. ஹூம்...


மக்காநாளே புள்ளை கண்ணை மூடிருச்சு. புள்ளை பொறந்ததைச் சொல்ல, வேற ஊருலே இருந்த மாமாவுக்குத் தந்திபோச்சு. அந்த சந்தோஷம் முழுசுமா மனசுக்குள்ளே போறதுக்குள்ளே இன்னோரு தந்தி பின்னாலயே போச்சு, துக்கசெய்தியைச் சுமந்துக்கிட்டு.


அக்கா ரொம்ப துக்கத்துலே ஆழ்ந்துட்டாங்க. உடம்பும் பலஹீனமாப் போச்சு. எப்பப் பார்த்தாலும் அழுகை. பெரியக்கா சமாதானமெல்லாம் எடுபடலை. 'உனக்குச் சின்ன வயசுதானே. அடுத்த புள்ளை இதோன்னு பொறந்துரும் பாரு. நல்லாசாமிக்கு வேண்டிக்கலாம். பெருமாளே, என் அப்பனே, கண்ணைத் திறந்து பாரு. ஒரு குழந்தையைக் கொடுப்பா. உன் கோயிலுக்கு வந்து புள்ளைக்கு மொட்டை போடறொம்'னு சாமியைத் துணைக்குக் கூப்புடறாங்க.


இதெல்லாம் அக்கா காதுலே ஏறவே இல்லை. அழுகை, ஓயாத அழுகை. 'வெறுங்கையோடே ஊருக்கு எப்படித் திரும்பிப் போவேன். மாமா மூஞ்சுலே எப்படி முழிப்பேன்'னு ஒரே புலம்பல். மாமாவும் 'லீவு வாங்கிக்கிட்டு பத்து நாள்ளே வரேன்'னுமறுபடி எழுதுனார். எண்ணி எட்டே நாள். மாமாவுக்கு இன்னொரு தந்தி பறந்துச்சு. முதலுக்கே மோசம்.


அழுது அழுது மகராசி போய்ச் சேர்ந்தாச்சு. மாமா லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு பாட்டியோட கிளம்பிப்போனார்.எமன் வாயிலே போனதை மீட்க முடியுமா? எல்லாம் போச்சு. ஆறு வருச வாழ்க்கை முடிஞ்சது.


மாமாவுக்கு பேச்சே நின்னு போச்சு. ஊருக்குத் திரும்பிவந்து கருமாதியெல்லாம் செஞ்சாங்க. நடு வூட்டுலே அக்காவோடபடத்தை வச்சு, அக்காவோட துணிமணி நகை நட்டெல்லாம் வைக்கணுமுன்னு பாட்டி சொல்லிட்டாங்க. மாமா எல்லாத்தையும்வாரிக் கொண்டுவந்து வச்சார். பாத்தவங்க கண்ணு அப்படியே நிலைகுத்திருச்சு. என்னா துணிமணிங்க, எவ்வளோ நகை நட்டு.ஒண்ணுத்தையும் அனுபவிக்காமப் போய்ச் சேர்ந்த புண்ணியவதியை நினைச்சவுடனே எல்லாருக்கும் அழுகை பீறிக்கிட்டு வந்துச்சு.


ஆச்சு ஆறு மாசம். மாமா வேலைக்குப் போறதும், பாட்டி வீட்டுலே சாப்பிடறதும், ராவானால் வூட்டுக்கு வந்து தூங்கறதுமாப் போகுது.போச்சு. ' இப்படியே இவனை விடக்கூடாது.எப்படியாவது இன்னொரு கல்யாணம் செஞ்சுவச்சுரணும்'ன்னு பாட்டி மெதுவாப் பேச்சைஆரம்பிச்சாங்க.


ஆரம்பத்துலே வேணவே வேணாமுன்னு சொல்லிக்கிட்டிருந்த மாமாவோட குரல் நாளாக ஆக நீத்துப் போச்சு. அதுலே பாட்டி வேறகல்யாணம் ஒரு வருசம் முடியறதுக்குள்ளெ செஞ்சாதான் ஆச்சு. இல்லேன்னா மூணு வருசம் கழிச்சுத்தான் செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க. அரக்கப் பரக்கப் பொண்ணு பாத்தாங்க.


பொண்ணு நல்ல பொண்ணா இருக்கணும். காசு பணம் எல்லாம் பெருசுல்லைன்னு சொல்லிட்டாங்க பாட்டி. தெரிஞ்சவுங்க மூலமாரொம்ப வசதி இல்லாத ஒரு பொண்ணைப் பார்த்து முடிச்சாங்க. பொண்ணுக்கு அப்பா இல்லை. பொண்ணு,குழந்தையா இருந்தப்பவே இறந்துட்டாராம். அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களாம். படிப்பு அறவே இல்லை. சொந்தக்காரங்க வீட்டுலே தங்கி வளருதாம்.


அக்காவோட தலை திவசம் முடியறதுக்குள்ளேயே கல்யாணம் நடந்துச்சு. அக்காவோட பொட்டியைத் திறந்து பார்த்தபுது அக்காவுக்கு கண்ணு விரிஞ்சு போச்சு. ஏற்கெனவெ அழகான பெரிய கண்ணு அதுக்கு. பாட்டி சொல்லிட்டாங்க,இப்ப எதையும் எடுக்கக்கூடாது. வருசப்பூசை முடிஞ்சாவுட்டு எடுக்கலாமுன்னு.



தலை திவசமும் வந்தது. அக்காவோட துணிமணி, நகை நட்டெல்லாம் இன்னொருக்கா வெளியே வந்துச்சு.பூசை எல்லாம் நல்லபடியா நடந்துச்சு.


ஆச்சு வருசம் ஏழு.


இப்ப மாமாவுக்கு 4 பொட்டைப் புள்ளைங்க. அன்னிக்கு யதேச்சையா மாமாவைக் கடைவீதியிலே பார்த்தேன். கையிலே சிகெரெட்டுப்புகைஞ்சுக்கிட்டு இருந்துச்சு. என்னப் பாத்ததும் அதை ஒரு இழுப்பு இழுத்துட்டுக் கீழே போட்டு மிதிச்சார்.வீட்டுக்கு ஏன்வர்றதில்லைன்னு கோச்சுக்கிட்டார். வீட்டை வித்துட்டாராம். இப்ப டவுனுக்குள்ளேயே வாடகைக்கு இருக்காங்களாம்.


'எப்படி இருக்கீங்க?'ன்னு கேட்டேன். 'அக்கா மாதிரி வராது'ன்னார். மாமியாரும் வீட்டோட வந்துட்டாங்களாம். பொண்ணுக்குக்கூடமாட உதவியா இருக்காங்களாம். நாலு புள்ளைங்களைப் பாத்துக்கணுமே.


ஒரு நா வீட்டுக்குப்போனேன். சாமான்செட்டெல்லாம் இறைஞ்சு கிடந்துச்சு. பசங்க ஒரே அழுகையும், அழுக்குமாஇருந்துச்சுங்க. அக்கா படம் சுவத்துலே காஞ்ச மாலையோட இருந்துச்சு. புது அக்கா ஒரு அழுக்குச் சீலையைக்கட்டிக்கிட்டு இருந்துச்சு. காதுலே கழுத்துலே ஒரு பொட்டுத் தங்கம் இல்லே. மூக்குத்தி மட்டும் தூங்கறாப்போலஇருந்துச்சு. மாமாவும் அழுக்கு லுங்கியோடு பாயிலே படுத்துக்கிட்டு இருந்தார். போனதுக்குக் கொஞ்ச நேரம் இருந்துட்டுவந்துட்டேன். வெளியே வர்றப்ப என் கண்ணு அக்காவோட படத்தைத் தன்னாலே பாத்துச்சு. 'தனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தம் ஒன்னுமில்லை'ன்னு சொல்றது போல அக்காவோட பார்வை இருந்துச்சோ?


நாலுநாளு கழிச்சுப் பாட்டியைப் பார்க்கப் போனேன். என்னைப் பாத்து அழுதுச்சு. கண்ணு வரவர மங்கி இருக்காம்.எப்ப வந்தேன்னு கேட்டுச்சு. விவரம் சொல்லி, மாமாவைப் பார்த்ததையும் அங்கே போனதையும் சொன்னேன். அப்பஅங்கிட்டு வந்த சித்தி சொல்லுச்சு, 'அந்தப் பொண்ணு ஒண்ணும் சரியில்லைம்மா. சரோஜாவைப்போல வராது. வந்தஆறே மாசத்துலே எல்லாப் புடவையையும் கட்டிக் கிழிச்சிருச்சு. தாம் தூமுன்னு செலவு செஞ்சு எல்லாம் போச்சு.உங்க மாமா வீட்டைவித்து, நகையை வித்து இப்ப ஒண்ணுமில்லாமக் கிடக்கான். சிக்கனமாக் குடும்பம் நடத்தத்தெரியலை பாத்தியா?'


'பாவி, பார்த்துப்பார்த்துச் செஞ்சு ஒன்னையும் அனுபவிக்காமப் போய்ச் சேர்ந்தா. இதுக்கு இருந்துருக்கு விதி எல்லாத்தையும் ஆண்டு அனுபவிக்க'ன்னு சொல்லி பாட்டி அழுதுச்சு. 'சரோ மாதிரி வராது'ன்னு சொல்லி ஒரு குரல் ஒப்பாரி வச்சது.


சரோ மாதிரி எப்படி வரும்? ஒவ்வொருத்தரும் ஒரு ரகம் இல்லையா? ஒண்ணுபோல ஒண்ணு இருக்குமா என்ன?


திரும்பி வர்றப்ப அக்காவை நினைச்சுக்கிட்டே வந்தேன், அக்கா சிக்கனமா இருந்துச்சா இல்லெ கருமியா இருந்துச்சான்னு.

நிக்கொலஸ், ஏங்க இப்படிச் செஞ்சீங்க?

நம்ம கிறிஸ்மஸ் தாத்தா 'சேண்டா க்ளாஸ்' இருக்காரே, அவரோட பேருதாங்க இது.நிக்கொலஸ். அவருடைய மனைவி பேரு யாருக்காச்சும் தெரியுமா? தெரிஞ்சவங்ககை தூக்குங்க. அடடா, மன்னிக்கணும். ஸ்கூல் ஞாபகம். அந்தம்மா பேரு மேரி ஆன்.


விவரம் தெரியாத புள்ளைங்க உலகத்துலே இந்த சேண்டாவுக்கு ஒரு அற்புதமான இடம் இருக்கு.எது வேணுமுன்னாலும் அள்ளித்தர்ற வள்ளல். அப்பா அம்மாட்டே 'கொஞ்சமே கொஞ்சம்' நல்லபடியாநடந்துக்கிட்டா 'சேண்டா'வுக்கு குஷி கிளம்பிடும். அப்புறம்?


அப்புறமென்ன? வீட்டு ஷாப்பிங் லிஸ்டைவிட நீளமா பசங்க வச்சுருக்கற 'விஷ்' லிஸ்ட்டுலே முடிஞ்சவரைகொடுத்துட்டுத்தான் மறுவேலை.அதான் வீட்டு வீட்டுக்கு சேண்டா இருக்காங்களே, நிக்கொலஸ்க்கு அசிஸ்ட்டெண்ட்!
சேண்டாவுக்கு லெட்டர் போட்டு, லிஸ்ட் அனுப்பலாம். அதுக்கே இங்கே ஒரு அட்ரஸ்கூட இருக்கு. ஸ்டாம்புகூடஒட்டவேணாம்.


'லெட்டெர் ட்டு சேண்டா, நார்த் போல்.'


ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருதுன்னு எங்க நியூஸிலாந்து போஸ்ட் சொல்லுது.


பண்டிகை சமயத்துலே, டிசம்பர் ஒன்னு முதலே சேண்டாவுக்கு ஏக டிமாண்ட். எல்லா ஷாப்பிங் மால்களிலேயும்ஒரு அலங்கரிச்ச இடத்துலே சேண்டா மஜாவா ஒரு நாற்காலியிலே இருப்பார். கூடவே ஒரு ஃபோட்டொகிராஃபர்.உங்க புள்ளை சேண்டா மடியிலே இருக்கற கணத்தை, நீங்கமட்டும் அப்படியே மனசுக்குள்ளெ நிறுத்திக்கிட்டாப்போதுமா? வீட்டுலெ மத்தவங்க, ஊர்லே இருக்கற தாத்தா, பாட்டி, சித்தப்பு, பெரியப்பு, அத்தை சொத்தை( ஒரு ரைம்தான்)எல்லாம் பாக்கணுமா இல்லையா? 'கிளிக்' இப்பெல்லாம் டிஜிட்டல் ஃபோட்டோ வந்துருச்சுல்லே, உடனே ரெண்டேநிமிசத்துலே உங்க பணமும், படமும் இடம் மாறிடும். எல்லாமே யாவாரமாயிருச்சு.


இந்த மாசம் ஆரம்பத்துலே இருந்தெ கிறிஸ்மஸ் பார்ட்டிங்க வேற ஆரம்பிச்சுருதே. எங்கெங்கே கிறிஸ்மஸ் பார்ட்டியோ அங்கெல்லாம்சேண்டா இருக்கோணுமில்லையா? அப்படி இல்லேன்னா எப்படி? சேண்டா காஸ்ட்யூம் அமோக விற்பனை . இங்கேமுந்தியெல்லாம் 'காஸ்ட்யூம் ஹயர்' கடைகளிலே வாடகைக்கு எடுப்போம். அதுக்கு $20 தரணும். ஒரு உபயோகம்முடிஞ்சதும் அதை 'ட்ரை க்ளீன்' செய்யணுமுல்லே, அதுக்கான செலவும் இதுலே அடக்கம். ஒரு மாசத்துக்கு முன்னாலேயேஅட்வான்ஸ் புக்கிங் செய்யலேன்னா கிடைக்கறதும் கஷ்டம். இப்ப நிலமை வேற!


ச்சீனாக்காரங்க புண்ணியத்துலே(!) அதே 20 டாலருக்குச் சொந்தமாவே ஒண்ணு வாங்கிர முடியுது. அதுலேயும் கிறிஸ்மஸ்தினத்துக்கு மறுநாள் வாங்குனா 50% கழிவு. கெட்டுப்போற சாமானா என்ன? வாங்கி வச்சுக்கிட்டா அடுத்த வருசத்துக்கு ஆச்சு.கிறிஸ்மஸ் இருக்கறவரை சேண்டாவும் இருப்பார் தானே?


இப்ப,மத்த வியாபார நிறுவனம், ஆபீஸ், சர்ச்ன்னு பண்டிகை உணர்வை உண்டாக்க எங்கே பார்த்தாலும் சேண்டாக்களின்தேவை அதிகரிச்சுப் போச்சு. இங்கெ யுனிவர்சிட்டி, ஹைஸ்கூல் எல்லாம் விடுமுறை விட்டாச்சில்லையா, அந்தப்பசங்களுக்கும் வேலை வாய்ப்பு . மணிக்கு 10 டாலர் சம்பளம். இது நியூஸி நிலவரம். உலகத்துலே மத்த இடங்களிலும்முக்கியமா வெள்ளைக்கார நாடுகளிலேயும் இப்படித்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.


குழந்தை உலகத்தின் ஆதர்ஷ புருஷனாக 'வேஷம் கட்டுற' ஆட்கள் இப்ப இதையும் கேவலப்படுத்தற மாதிரி நடந்துக்கறாங்கன்னுஒரு பேச்சு கிளம்பியிருக்கு. வதந்தின்னு சொல்ல முடியாம ஆதாரபூர்வமா வெளியாகி இருக்கு.


குடிகார சேண்டா, கொள்ளையடிக்க வந்த சேண்டா, வேகக் கட்டுப்பாட்டை மீறிக் காரோட்டிக்கினு போன சேண்டா,அவுத்துப் போட்டுட்டுப் போன சேண்டான்னு ஒரே பேஜார். முழு விவரத்துக்கும் இங்கே பாருங்க.


நிக்கொலஸ், இது என்ன அக்கிரமம்? 'கலி முத்திப்போச்சு'ன்னு சொல்லிறலாமா?

Thursday, December 22, 2005

இது ஒரு பண்டிகைக் காலம்.

இதுக்கு முந்தியிருந்த பதிவுலே தம்பி ராமநாதனுக்குப் பதில் சொல்றப்ப 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'னுஎழுதுனப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, எனக்கு ஊரு, மொழியும் மட்டுமில்லை எல்லா மதங்களுமே சர்வ சம்மதமுன்னு இருந்திருக்கிட்டு இருக்கேன்றது. குழந்தை உலகத்துலேயும் இந்த விகல்பம் எல்லாம் கிடையாது பாருங்க.


இப்ப இந்த வருஷ கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட நம்ம ஊர் கேரளா அசோஸியேஷன் மும்முரமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கு. அதுக்கு இந்த விழாவுக்கான கலை கலாச்சார ஒருங்கமைப்பாளர் 'அடியேன்' என்பதாலே இந்த ஒருமாசத்துக்கும்மேலா, அவுங்ககூடயே பேசிப் பழகிவர்றதாலே 'மலையாள வாசனை' கூடிப்போய் பதிவிலும் தலை காட்டிக்கிட்டு இருக்கு.
கிறிஸ்மஸ் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன். கதைக்களன் நம்ம 'வத்தலகுண்டு'தான்:-)






சர்வ மதமும் சம்மதம்


எங்க பக்கத்து வீட்டுலெ ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்க பேரு ஆரோக்கிய மேரி. அவுங்கவீட்டுலே ஒரு பெரிய கூண்டுலே இரண்டு ஆடுங்க இருக்கும்! ஆடுங்களுக்கு எதுக்கு கம்பி போட்டகூண்டுன்னுதானே நினைக்கறீங்க? அதுங்க ரெண்டும் 'ஸ்பெஷல்' ஆடுங்க! அதுங்க ரெண்டும்'கேளை ஆடு'ங்களாம்! கூண்டுன்னா சின்னது இல்லே. அதுங்க காலாற நடக்கறதுக்கும், துள்ளிக்குதிக்கறதுக்கும் இடம் நிறைய இருந்துச்சு. அதுங்களுக்குத் தீனிக்காக ஏதோ ஒருவித தழைங்களைக்கொண்டுவந்து போட்டுருப்பாங்க. நான் அங்கே போறப்பெல்லாம், அந்தத் தழைங்களை எடுத்து,கம்பிக்கு நடுவாலே நீட்டுவேன். அதுங்க ரெண்டும் என்னப் பாத்தாப் போதும், 'மே மே'ன்னுகத்தும்!


அவுங்க வீட்டுலே கோழிங்ககூட நிறைய இருந்துச்சு. அதுங்க குஞ்சுங்களோட மேயறதைப் பாக்கறதுக்குஜோரா இருக்கும்.அந்த அக்கா ஒரு கிளிகூட வளத்தாங்க!


அந்த அக்காவோட வூட்டுக்காரருக்கு, வேற எங்கோ மலைமேல வேலையாம். எப்பவாவது வருவார். அந்தஆடுங்ககூட அவரு மலையிலே இருந்து கொண்டு வந்ததுதானாம்!


நம்ம அண்ணன் இருக்காரு பாருங்க, அவரு ரொம்ப நல்லா படம் வரைவாரு! அப்பல்லாம் நம்ம 'சந்திராடாக்கீஸ்'லே புதுப்படம் வரும்போது, காலையிலே ஒரு மாட்டு வண்டிலே டும் டும்னு கொட்டு அடிச்சுகிட்டுதெருவுலெ எல்லருக்கும் சினிமா நோட்டீஸ் கொடுத்துகிட்டுப் போவாங்க. அங்கே வேலை செய்யற ஆளுநம்ம அண்ணனோட '·ப்ரெண்ட்' ஆயிட்டாரு. அந்த வண்டி நம்ம வீட்டுகிட்டே வர்றப்ப நானும் டும் சத்தம் கேட்டுட்டு நோட்டீஸ் வாங்க ஓடுவேன். அப்போ அந்த '·ப்ரெண்ட்' கீழே இறங்கி எனக்கு நோட்டீஸ்கொடுத்துட்டு, கூடவே பெரீய்ய்ய சினிமா போஸ்டர் ஒண்ணும் தருவாரு. அது அண்ணனுக்கு!


அண்ணன் அந்த போஸ்டர்லே இருக்கற படங்களைப் பாத்து, அப்படியே வரைஞ்சிருவாரு! நம்ம வீட்டுலெஅண்ணன் வரைஞ்ச படங்கள் ஏராளமா இருந்துச்சு.


படம் மாத்திரமில்லை, நல்லா பொம்மையும் செய்வாரு. புள்ளையார் சதுர்த்தி வரும்போது, ஆளுங்கபுதுக்களிமண்ணாலெ புள்ளையார் சிலை செஞ்சு விப்பாங்க. அந்த ஈர மண்ணெ ஒரு அச்சு மாதிரிஇருக்கற பலகையிலே அடைச்சு ஒரு தட்டு தட்டினா புள்ளையார் அப்படியே 'டபக்'ன்னு வெளியேவந்துருவாரு! கூடவே எருக்கம் மாலையும் விப்பாங்க! ஆனா, ஆத்துப்பக்கம் நிறைய எருக்கஞ்செடிஇருக்குல்லே,நாங்க அங்கேபோய் பறிச்சுகிட்டு வந்து, ஊசிநூலுலெ கோத்துருவோம்!


நம்ம வீட்டுலே மட்டும் சிலையா வாங்காம, நாலணாக்கு வெறும் களிமண்ணை வாங்குவோம். வெறும் மண்ணுன்றதாலே நிறைய தருவாங்க!
அதை அண்ணன் புள்ளையார் சிலையாச் செஞ்சுருவாரு. மூஞ்சூறுகூட அற்புதமா இருக்கும். எனக்கும்கொஞ்சம் பச்சை மண்ணு கிடைக்கும், சின்ன சின்ன சொப்பு செய்யறதுக்கு. இந்த சிலை மட்டுமில்லே,நம்ம வீட்டுலே நோம்பு கும்புடுவாங்களே, அதுக்கும் கலசத்துலே முகம் வரைஞ்சு, கண்ணு, மூக்கு, காதுஎல்லாம் அரைச்ச மஞ்சளாலே அருமையா செஞ்சுடுவாரு!
வத்தலகுண்டுலே நிறைய ராவுத்தருங்க இருக்காங்க. ஒரு தடவை ஒரு பெரியவரு நம்ம ஆஸ்பத்திரிலேகொஞ்சநாள் தங்கியிருந்தாரு. அவருக்கு நம்மோட, ரொம்ப பிரியம் ஏற்பட்டுப் போச்சு! உடம்பு சுகமாகிவீட்டுக்குப் போனப்புறமும், தினம் ஒரு நடை நம்மையெல்லாம் வந்து பாத்துட்டுத்தான் போவாரு.தினமும் கொஞ்சதூரம் நடக்கணும்னு அம்மா சொல்லியிருந்தாங்களாம். இங்கே ராவுத்தருங்கெல்லாம்தமிழ்தான் பேசுவாங்க.அவுங்க வீட்டுலேயும் தமிழ்தான்.


அவரு ரொம்ப பக்திமான். தினமும் சாயந்திரம் மசூதிக்குப் போயிட்டு அப்படியே ஒரு ஏழு மணிவாக்குலெநம்ம வீட்டுக்கு வந்து, வெளியே இருக்கற பெரிய திண்ணையிலே உக்காருவாரு.


அநேகமா அம்மா அந்த நேரத்துலெ ஆஸ்பத்திரி ஜோலியெல்லாம் முடிச்சுட்டு வீட்டுலெதான் இருப்பாங்க.நம்ம பக்கத்துவீட்டு ஆரோக்கியம் அக்காவும் எப்பவுமெ நம்ம வீட்டுலெதான் இருப்பாங்க.
நான் தான் நம்ம ராவுத்தர் தாத்தாவுக்கு, 'சங்கத்தலைவர்'னு பேரு வச்சிருந்தேன்! ராவுத்தர் தாத்தாவந்தவுடனே எல்லாரும் திண்ணைக்கு வந்துருவாங்க. நல்லா இருக்கீங்களாம்மான்னு அன்பாக் கேப்பாரு.சின்னப்புள்ளென்னு நினைக்காம எங்கிட்டேயும் 'இன்னிக்கு என்ன பாடம் படிச்செம்மா? வீட்டுப்பாடம்எழுதியாச்சா?'ன்னு கேப்பாரு. பெரியவங்க எல்லாம் ஏதாவது விஷயம் பேசிகிட்டு இருப்பாங்க. 8 மணிசங்கு ஊதுனவுடனே,'நல்லதும்மா, போயிட்டு வாரேன்'ன்னு கிளம்பிடுவாரு.
பேச்சு எதுலெயோ ஆரம்பிச்சு எங்கெயொ போகும். ஒருநா, எங்க தாத்தா எப்படி செத்தாருன்னு அம்மாசொன்னாங்க. கேக்கறதுக்கு கதை மாதிரி இருந்துச்சு. அக்காங்க எல்லாம் உள்ளெ எதாவது படிச்சுகிட்டோ,
ரேடியோவிலே பாட்டு கேட்டுக்கிட்டோ இருப்பாங்க. அண்ணன் அவர் பாடத்தைப் படிச்சுகிட்டு இருப்பார்.நாந்தான்ஆஆஆன்ன்னு பேசறவுங்க வாயைப் பாத்துகிட்டு அவுங்களோட உக்காந்திருப்பேன்.


ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம்நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கறபசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும்.நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!


அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்பநீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப்பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.


அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ·பாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்கசாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுகேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுகிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாமமுழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சைரசமாம்.நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னுபாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜைஎல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.


அம்மாவுக்குத் தொண்டையிலே சின்னக் கட்டிபோல வந்தது. அவுங்களே ஏதோ மருந்து சாப்பிட்டாங்க. ஆனா அது போகறமாதிரி தெரியலெ!நம்ம ராவுத்தர் தாத்தாதான் சொன்னாரு, 'வியாழக்கிழமை கொஞ்சம் சக்கரை கொண்டுபோய், மசூதிலெ கொடுத்தா பாத்தியா ஓதித் தருவாங்க.அப்படியே ஒரு அச்சு வெல்லத்தை மசூதிலே இருக்கற குளத்துலெ போடுங்க'ன்னு.


நானும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு அச்சு வெல்லமும், ஒரு காகிதத்துலெ பொட்டலம் கட்டுன சக்கரையுமா மசூதிக்குப் போவேன்.அச்சு வெல்லத்தைக் குளத்துலெ போடுவேன். அங்கெ நிறைய வயசான தாத்தாங்க உக்காந்திருப்பாங்க. அவுங்கள்ளே யாராவது அந்தச்சக்கரைப் பொட்டலத்தை வாங்கி, ஏதோ மந்திரம் சொல்லி ஓதிட்டு, திரும்பத் தருவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுகிட்டேவீட்டுக்கு வந்துருவேன். பொட்டலத்துலே பாக்கி இருந்தா அக்காங்களுக்கு அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கணும்!


ரெண்டு மூணு மாசத்துலே அந்தக் 'கட்டி' காணாமப் போச்சுன்னு அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் சக்கரையை பாத்தியா ஓதி வாங்கறது அந்த ஊர்லே நாங்க இருந்தவரைக்கும் தவறாம நடந்துச்சு.


வத்தலகுண்டுக்குப் பக்கத்துலே இன்னொரு கிராமம் இருக்கு. அதுதான் முதல்லே வத்தலகுண்டா இருந்துச்சாம். அப்புறம் ஊர் பெருசாஆகணும்னு இப்ப இருக்கற எடம் வத்தலகுண்டாயிடுச்சாம். அதனாலே அந்தக் கிராமம் பழைய வத்தலகுண்டாயிடுச்சாம்! அங்கே வீடுங்கரொம்ப இல்லே. ஆனா ஒரு பெரிய கோயில் இருக்கு, அது மாரியம்மன் கோயில். சித்திரை மாசம் திருவிழா வரும். அதுக்குன்னு ஏகப்பட்ட 'முஸ்தீபு' இருக்கு. இருங்க சொல்றேன்!


பங்குனி மாசம் தொடக்கத்துலே நல்லதா, மூணுகிளையா இருக்கற வேப்பக்கம்பை எடுத்து, அரைச்ச மஞ்சளைப் பூசி, குங்குமம் வச்சுஒரு மேடையிலெ நடுவிலெ நட்டு வச்சிருவாங்க. இது கோயிலுக்கு முன் வாசல்லே இருக்கும். தினமும், கோயிலுக்குப் பக்கத்துலெஇருக்கற குளத்துலெ பொம்பிளங்க முங்கி எந்திருச்சு, கையோட கொண்டுவந்துருக்கற குடத்துலே தண்ணி மொண்டுகிட்டுப் போய்அந்தக் கம்பத்துக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, சுத்திவந்து கும்பிட்டுகிட்டு, கோயிலுக்குள்ளெ போய் சாமி கும்பிடுவாங்க. இதுபோல ஒரு மாசம், தினமும் நடக்கும்! ஆளுங்க, குடும்பக் கஷ்டங்களுக்காக, சாமிகிட்டே நேந்துகிட்டு, இப்படி ஒரு மாசம் பூரா தினமும் வந்து'கொம்பு'க்கு தண்ணி ஊத்துவாங்க!


30 நாளு ஆனபிறகு, கோயில் திருவிழா நடக்கும். அது ஒரு வாரம். அதுலெ கடைசி மூணு நாளு, சாமி,, இப்ப இருக்கறவத்தலகுண்டுக்கு வந்துரும்! இங்கே மூணு நாளு திருவிழா அமர்க்களப்படும். தினமும் ராத்திரி ஒரோரு அலங்காரமா ஊர்கோலம்வரும். முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்குன்னு. ஜோடனை செய்யறதுக்கு ஆளுங்க வெளியூர்லெ இருந்து வருவாங்க! பாட்டுக் கச்சேரி,பொய்க்காலு குதிரை, கரகாட்டம்னு நடக்கும். வளையல், பொம்மைங்க, விளையாட்டு சாமானுங்க, முட்டாய்ங்கன்னு எங்கெ பாத்தாலும்கடைங்கதான்! குடை ராட்டிணம், தொட்டி ராட்டிணம்னு வேற சுத்திக்கிடே இருக்கும். இந்த சமயம், முழுப் பரீட்சையெல்லாம் முடிஞ்சுபெரிய லீவு விட்டிருபாங்களா, எங்களுக்கெல்லாம் திருவிழா நடக்கற இடமே கதின்னு சுத்திக்கிட்டு இருப்போம்! நம்ம வத்தலகுண்டுலே 'ராஜாஜி மைதானம்'னு இருக்கு. அங்கெதான் இதுக்கு இடம்.


ஒரு பெரிய சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இருக்கே தவிர, மாரியம்மனுக்குன்னு கோயில் இல்லே. அதனாலே மைதானத்துலேஓரு ஓரமா ஓலைக்கொட்டாய் போட்டு அங்கெதான் சாமியை வச்சிருப்பாங்க! அந்த மூணு நாளும் 'ஜே ஜே'ன்னு எங்கெ பாத்தாலும்ஜனங்க ! இங்கேயே ஒரு கோயில் கட்டணும்னு பேசிகிட்டு இருக்காங்களாம்.


அந்த ஊர்லே நமக்குத் தெரிஞ்சவுங்க ( நமக்குத்தான் எல்லாரையும் தெரியுமே!)குடும்பம் ஒண்ணு, சாமிக்கு நேர்த்திக்கடன்னு சொன்னாங்க!அவுங்க வீட்டுலே பெரிய கூட்டுக் குடும்பம்.அவுங்களுக்குள்ளே என்ன சொந்தம்னு சொன்னாலும் புரியாது. அவுங்க வீட்டுக்குப் போனா,நேரம் காலம் தெரியாம விளையாடலாம். அங்கே எல்லா வயசிலேயும் ஆளுங்க இருப்பங்க. ஒரு நாலஞ்சு இடத்துலெ சமையல் கட்டுங்களாஇருக்கும்! வேற வேற சமையல் செஞ்சுகிட்டு இருப்பாங்க! அந்த வீட்டுலெ ஒரு பெரியம்மா இருக்காங்க. அவுங்கதான் எல்லாருக்கும்'க்ளாஸ் லீடர்'மாதிரி!
'எல்லாப் புள்ளைங்களையும் இழுத்துக்கிட்டு, காலேல 5 மணிக்கெல்லாம் புறப்பட்டுக் கோயிலுக்குப் போகணும்'னு அம்மாகிட்டே சொல்லிகிட்டுஇருந்ததை நான் கேட்டேன்! என் கண்ணுல இருந்த ஆசையைப் புரிஞ்சுகிட்டு, பெரியம்மா( எல்லாப் பசங்களும் அவுங்களை அப்படிக் கூப்புடறதுனாலே நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்!)சொன்னாங்க,


"பாப்பாவையும்( நாந்தான் அது)அனுப்பறேங்களா?"

" அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாளே!"

" நான் எந்திருச்சுருவேன்" இது நானு.

" நாங்க எல்லாரும் கிளம்பி இங்க வர்றதுக்கு ஒரு அஞ்சரை ஆயிரும். எப்படியும் இந்தப் பக்கம்தான், உங்க வீட்டைத் தாண்டிப் போகணும். நாங்க வந்து கூப்புட்டுக்கிட்டுப் போறோம்"


" அவ்வளவு தூரம் நடப்பாளான்னு தெரியலையே"

"நடப்பேன் நடப்பேன்" இது நானு.

" திரும்பி வந்து ஸ்கூலுக்குப் போகணுமே"

" இந்தப் பசங்கெல்லாம்கூட ஸ்கூலுக்குப் போகணும்தான். இன்னும் லீவு வுடலையே"

" எத்தனை மணிக்குத் திரும்புவீங்க?"

" என்ன, ஒரு எட்டுக்கு முன்னாலெ வந்துருவொம்"

அம்மா ஒருவழியா சம்மதிச்சுட்டாங்க! மறுநாள் காலையிலே யாரோ என்னப்போட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்குறாங்க!


கண்ணைத் திறந்தா, சின்னக்கா கையிலே ஒரு தண்ணிக் குடத்தோட நிக்குது! 'சீக்கிரம் கிளம்புடீ, எவ்ளோ நேரமா எழுப்புறது?அவுங்கெல்லாம் வந்து வாசல்லே நிக்கறாங்க.எந்திரிச்சி ஓடு'ங்குது!


அப்பத்தான் ஞாபகம் வருது, நான் கம்பத்துக்கு தண்ணி ஊத்தப்போணும்ங்கறது! அரக்கப் பரக்க எந்திரிச்சு, அசட்டுச் சிரிப்போடவெளியே போனேன்.'கொஞ்சம் இருங்க. பல்லு விளக்கிட்டு வந்துருவா'ன்னு அக்கா சொல்லுது.


'அதெல்லாம் போற வழிலே பாத்துக்கலாம். இதுங்கெல்லாம் கூட அப்படியேதான் வருதுங்க'ன்னு பெரியம்மா சொன்னாங்க.


நானு தண்ணிக்குடத்தை எடுத்துகிட்டு, (குடம் என்ன குடம், அது குடம் மாதிரி இருக்கற சொம்புதான்!)கிளம்பிட்டேன்.


போற வழிலே, புளியங்கா நிறைய இருக்கு. எடுக்கலாம்னு பாத்தா, 'இப்ப வேணாம். இன்னும் நீங்க யாரும் பல்லு விளக்கல்லே.வரும்போது எடுக்கலாம்'னு பெரியம்மா சொல்லிட்டாங்க!


ரோட்டுலே நடமாட்டம் அவ்வளவா இல்லே. இவ்வளவு காலேலெ அப்படித்தான் இருக்கும்னு பெரியம்மா சொன்னாங்க. ரோடெல்லாம் ஆடிகிட்டே போனோம். ரொம்ப நேரம் போனமா, அப்ப தூரத்துலே மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிஞ்சது!



மெயின் ரோட்டுலே இருந்து பிரியுற செம்மண் பாதையிலே இறங்கி ஓடுனோம். குளம் வந்துருச்சு. குளத்துக்குப் பக்கம் இருக்கறவேப்ப மரத்துக்கிளையை உடைச்சு,சின்னக் குச்சிங்களா எடுத்து எங்களுக்குத் தந்தாங்க பெரியம்மா. எதுக்குத் தெரியுமா?


பல்லு விளக்க! அதைக் கடிச்சு,அப்படியே மெல்லணும்.கசப்பா இருக்குன்னு மென்னு மென்னு துப்பிகிட்டு இருந்தோம். அது அப்படியேப்ரஷ் ஆயிருச்சு. அதைவச்சு பல்லை விளக்கிட்டு, குளத்துலே முங்கி எந்திரிச்சு,'குடத்துலே'தண்ணி ரொப்பிகிட்டு, கோயிலுக்குமுன்னாலெ நட்டு வச்சிருக்கற கம்பத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, உள்ளெ போய் சாமியைக் கும்பிட்டோம். ஈரப்பாவாடை, கவுனுஅப்படியே உடம்புலே ஒட்டிகிச்சு. நடக்கவே முடியலே! எங்களை மாதிரி நிறையப் பேரு ஈரமா வந்து சாமி கும்புடறாங்க.கோயிலு தரையெல்லாம் 'நச நச'ன்னு ஈரமா இருக்கு. எங்கே வழுக்கிறுமோன்னு, பயந்து பயந்து காலை தூக்கி வச்சு நடக்கறோம்.சாமியைக் கும்புட்டு, துண்ணூரு வாங்கிக்கிட்டு வந்தவேலை முடிஞ்சு போச்சுன்னு கிளம்பிட்டோம்.



வர்ற வழியெல்லாம் ஒரே ஓட்டம்தான். வெய்யிலு வர ஆரம்பிச்சிருச்சு. பாவாடை சட்டையெல்லாம் அப்படியே காஞ்சுபோச்சு.மரம் மரமாப் போயி புளியங்கா பொறுக்கிக்கிட்டே வீடு வந்துட்டோம். மறுநாளு, என்னைத் தயாரா இருக்கச் சொல்லிட்டுபெரியம்மாவும், மத்த பசங்களும் போயிட்டாங்க.
அக்காகிட்டே வழக்கம்போல, இதுவரைக்கும் நடந்ததெல்லாம் சொன்னேன். அக்கா சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு,'போய் நல்லா பல்லு விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்புடு.ஸ்கூலுக்கு நேரமாயிருச்சு'ன்னு சொன்னாங்க.


எங்கிட்டே ஒரு பழக்கம் என்னனா, பள்ளிக்கூடத்துலே இருந்து வந்தாலும் சரி,வேற எங்கேயும் போயிட்டுவந்தாலும் சரி,வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே, நடந்தது எல்லாத்தையும் ஒப்பிச்சாகணும். அவசரமா பாத்ரூம் போகணும்னு இருந்தாலும்,கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு, விஷயத்தைச் சொல்லிட்டுதான் பாத்ரூமுக்கு ஓடுவேன்.பெரியக்கா சொல்லும்,'கிருஷ்ணர் வேஷம்போடாதே! பாத்ரூமுக்கு போயிட்டு வந்து சொல்லு'ன்னு. ம்ம்ம்ஹூம். நான் அதையெல்லாம் கேக்கற ஆளா?


மறுநாளு, அம்மாவே காலெல எழுப்பி என்னை 'ரெடி'பண்ணிட்டாங்க. அன்னைக்குத் திரும்பிவரப்போ, சும்மாப் போனமாட்டுவண்டிலெ எங்களை ஏத்திக்கிட்டாங்க! ஜாலியா இருந்துச்சு. அப்புறம், நாங்களாவே மாட்டுவண்டி 'லி·ப்ட்' கிடைக்குமான்னுபாத்துகிட்டே இருப்போம். சிலநாள் கிடைக்கும். சிலநாளு ஒண்ணுமே அந்த நேரத்துலே வராது!


இப்படியே ஒரு மாசமும் போயிருச்சு.நடுவுலே பெரிய பரிட்சை முடிஞ்சு லீவும் வுட்டுட்டாங்களா, ஒரே ஆட்டம்தான்!


அப்புறம் திருவிழா ஆரம்பிச்சு, சாமி இங்கே வந்துச்சு. தினம் நல்லா சுத்திகிட்டு இருந்தோம். கைலேயும் காசு நடமாட்டம் நிறையஇருந்துச்சு. திருவிழாக் கடையிலே ஒரு பச்சைக்கல் வச்ச அழகான லோலாக்கு ரெண்டணாவுக்கு கிடைச்சது. அக்காவுக்கு'சர்ப்ரைஸ்' தரலாம்னு, அதைவாங்கி, வீட்டுக்கு வெளியே இருக்கற திண்ணையிலே உக்காந்து, நான் ஏற்கனவே போட்டுருந்தத்தங்க லோலாக்கை அவுத்துட்டு,பச்சைக்கல் லோலாக்கைப் போட்டுகிட்டு வீட்டுக்குள்ளெ போய் அக்காவுக்குக் காமிச்சேன்.


அக்கா, ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, 'நீ போட்டுருந்த தங்கலோலாக்கு எங்கே?'ன்னு கேட்டுச்சா, அப்பத்தான்ஞாபகம் வருது, நான் அதை அங்கே திண்ணையிலேயே வச்சுட்டு வந்துட்டேன்னு. ஓடிப் போய் பாக்கறேன், எனக்கே'சர்ப்ரைஸ்!' அது அங்கே இல்லை! 'திருவிழாக்கூட்டம்தான் ஊரெல்லாம் மேயுதே, யாரு கையிலே கிடைச்சதோ'ன்னுஅப்புறம் எல்லாரும் வீட்டுலே கத்திக்கிட்டே இருந்தாங்க! எனக்கு நல்லா'டோஸ்'கிடைச்சது!


நன்றி: மரத்தடி

தமிழும் மலையாளமும்

மலையாளம் படிக்கறது ரொம்பவே சுலபங்க. மலையாள எழுத்துக்களைப் பார்த்தீங்கன்னா, நம்ம எழுத்துக்கு கொஞ்சம்சம்பந்தம் இருக்கு.


ஒரு ஒண்ணாப்பு பாடப்பொஸ்தகம் கிடைச்சாப் போதுங்க. அப்படியே படம் பார்த்து எழுத்துக்கூட்டிப் படிச்சுரலாம்.'க' ன்ற எழுத்து 'சட்'னு பார்த்தா நம்ம 'க' மாதிரிதான், கொஞ்சம் இன்னொரு வளைவு சேர்ந்து இருக்கும். எப்படி விளக்கிச்சொல்றதுன்னு தெரியலை, ஆனா எங்கியாவது மலையாள எழுத்தைப் பார்த்தீங்கன்னா விடாதீங்க. மனசுக்குள்ளெ நம்மதமிழ் எழுத்தை நினைச்சுக்கிட்டுப் பாருங்க. கொஞ்சம் புரிஞ்சுரும்!


எழுத்தைப் பாக்கணுமுன்னா இங்கே பாருங்களேன். ஒரு பரிச்சயம் கிடைக்கும். பாடம் 2 லே இருந்து க்ளிக் பண்ணுங்க.


எழுத்து கிடக்கட்டும். மொதல்லே பேச வருமான்னு கேக்கறீங்களா?
தாராளமா வரும். எல்லாத்துக்கும் ஒரு 'சிம்பிள்' டெக்னிக் இருக்குல்லெ.
தெலுங்கு பேசணுமுன்னா எல்லாத்துலேயும் ஒரு 'லு' சேர்த்துக்கணுமுன்னு தமாஷ் செய்றொமுல்லே,அதே மாதிரி, கொஞ்சம் மூக்கைப் புடிச்சுக்கிட்டுத் தமிழ்ப் பேசிப்பாருங்க.


எங்கெ சொல்லுங்க ..வ ந் து வந்து.


எப்படிக் கேட்டுச்சு? 'வந்நு' தானே?


அதேதான் அதேதான். பாருங்க, மூக்கைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டே பேசணும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.அப்புறம் பழகிரும்.


எது? மூக்கைப் பிடிக்கறதா?


அட போங்க நீங்க, எப்பவும் தமாஷ்.


நம்ம உஷா இருக்காங்களெ, அவுங்க சொன்னது இது.

//அடிப்பொளி சேச்சி!

அருஞ்சொற்பொருள்அடிப்பொளி- தமிழில் "சூப்பர்" என்ற சொல்லுக்கு இணையானது. சகட்டு மேனிக்கு எதற்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.//

ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாத்தான் சொன்னாங்க. இதை மறந்துராம மனசுலே போட்டு வச்சுக்குங்க. ஆச்சா?


ஒண்ணுத்துக்கு உதவாதது, மோசம். இதை எப்படிச் சொல்லலாம்?

'தள்ளிப் பொளி' 'ஒண்ணினும் கொள்ளில்லெ'

தூள் கிளப்பியாச்சு = பொடி பொடிச்சு! கேமம்! உக்ரன்!


ஈ போஸ்டிங் வளரே கேமமாயி = இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருக்கு


ஓஹ் எந்தொரொரு பொங்கச்சம்? = ஓ.. எவ்வளவு வீண்பெருமை?


ஆணோ? = அப்படியா?

அதே= ஆமாம்.

Wednesday, December 21, 2005

ஒரு குழந்தை உலகம்......

ஏங்க, எப்பப்பார்த்தாலும் புதுப்புது புடவையா கட்டமுடியுமா, இல்லே புதுப்புது சல்வார் கமீஸே போடமுடியுமா?இடைக்கிடே பழசும் எடுத்துப் போட்டுக்கறமல்லே, அதே போல முந்தி எழுதனதுலே ஒண்ணை 'நைஸா' இங்கேபோட்டுக்கறேன். புது ஆளுங்களும் படிக்கத்தாவலை? இப்பப்பாருங்க, நம்ம தாணுவே கேட்டுருக்காங்க,' .....முந்தியேசொல்லிட்டீங்களா? லேட்(?) ஆசாமிகளுக்காக மறுபடிக் கதைக்கவும்'னு.

அதென்ன புடவை, சல்வார்ன்னு கேக்கறீங்களா? என்னமோப்பா எனக்குத் தெரிஞ்ச உதா ரணம்.


சட்டாம்பிள்ளை


வத்தலகுண்டு 'எலிமெண்டரி ஸ்கூல்'காம்பவுண்டு. பின்பக்கச் சுவர்லே ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதுவழியா பசங்க போலாம்,வரலாம். ஆனா போகக்கூடாதுன்றது டீச்சருங்க போட்ட கட்டளை. ஏன்னா அதும் பக்கத்துலெதான்பெண்பிள்ளைகளுக்கான 'டாய்லெட்' இருக்கு. அந்த ஓட்டைக்கு வெளியே ஒரு சின்ன மண்தரை இருக்கும். அந்தத் தரையைத்தாண்டினா ஒரு பாதை வரும் அதுக்கு எதிரே நம்ம வீட்டு வாசல்! ஒரே நிமிஷத்துலே வீட்டுக்குப் பொயிரலாம்!


எனக்கு அதுவழியா 'ஸ்கூலு'க்குப் 'போறதுக்கு' மட்டும் முடியாது. செங்கல்லுலே உரசி சட்டையெல்லாம் அழுக்கு ஆயிடுமே!ஆனா உண்மையான காரணம் வேற ஒண்ணு. ஸ்கூலுக்குத் தனியாப் போகப் பயம்! மொதநாளு என்கிட்டஅடிவாங்குன பசங்க திருப்பி அடிக்கக் காத்துகிட்டு இருப்பாங்கல்ல.


"இருடா இரு வீட்டுக்குப் போறப்ப பாத்துக்கறேன்"


" எங்க கை மட்டும் பூப்பறிக்குமா? இருடி இரு"


இந்த மாதிரி வீர வசனங்கள அப்பப்ப எடுத்துவிடுவோம்.
பெரிய காரணமெல்லாம் இருக்காது. சிலேட்டுக்குச்சி தரலே, சிலேட்டுலே எழுதுனதை அழிச்சிட்டான்(ள்)கணக்குக்கு விடையைச் சொல்லலே, இப்படி ஏதாவது சில்லறைக் காரணம்தான். ஆனா அந்த வயசுக்குஅது ரொம்பப் பெருசுதானே!


சண்டை எதுக்கா இருந்தாலும், வகுப்பு நடக்கறப்ப சமத்தா இருந்துடுவோம். எதா இருந்தாலும் சாயந்திரம்ஸ்கூல் விடறதுக்குக் கொஞ்சம் முன்னலேதான் அதுக்கு மறு உயிர்!


சாயந்திரமா 'ஸ்கூல் விடறப்ப பின்னாலேயே போய், ஒரு அடி 'படார்'னு முதுகிலே அடிச்சுட்டு, சுவத்துலெஇருக்கற ஓட்டைவழியா வீட்டுக்கு ஒரே ஓட்டம்தான். இது தெரியாம பசங்க 'ஸ்கூல் கேட்'லே காத்துக்கிட்டுஇருப்பாங்க சில சமயம்!


மறுநாளு, காலையிலே எந்திரிக்கும்போதே ஒரு பயம் வந்திரும். ஸ்கூல் நேரத்துக்கு முன்னாலேயே ஆஸ்பத்திரிக்குப்போய், அங்கேயே சுத்திகிட்டு இருப்பேன். சிலநாளு அம்மா கூடவே,'ரவுண்ட்ஸ்'போவேன். எனக்கு ரொம்பப் பிடிச்சஇடம் எதுன்னா, புதுப்பாப்பா வார்டு. ஜோரா இருக்கும்! கிராமத்துலே இருந்து வந்தவுங்க எல்லாம் கூட்டம் போட்டுகிட்டுஉக்காந்திருப்பாங்களா, அம்மா அங்கெ போறதுக்கு முன்னாடி, நர்ஸ்ஸம்மா போயி அவுங்களையெல்லாம் விரட்டுவாங்க!அவுங்களும் வெளியே போறமாதிரி போயி, அம்மா தலை மறைஞ்சவுடனெ, திரும்பி வந்துருவாங்க!


அம்மா கேப்பாங்க "ஸ்கூல் டயமாச்சே, இன்னும் போகலையா?"

"இன்னும் பெல் அடிக்கலே"

மணி அடிக்கறதுக்கு முன்னாலெ போனா, பசங்க 'அடிக்க'க் காத்திருப்பாங்க!

மணி அடிச்சபிறகு போனா, டீச்சருதிட்டுவாங்க! ஆனா திட்டு வாங்காம தப்ப ஒரு வழி இருக்கு. யாராவது பெரியவுங்க கொண்டாந்து விட்டாங்கன்னா டீச்சரு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! அதுக்காக, ஆஸ்பத்திரிலே இருக்கற 'கம்பவுண்டர், வார்டு பாய், குறைஞ்சபட்சம் அழுக்கெல்லாம் கூட்டற 'லச்சி' இவுங்கள்லே யாரையாவது கூட்டிட்டுப் போகணும்னு காத்துகிட்டிருப்பேன்!


'பாப்பாவை நான் கூட்டிட்டுபோறேன்'ன்னு சொல்றதுக்கு ஆள் 'ரெடி'யா இருக்கும்! இந்த சாக்குலே ஒரு அஞ்சுநிமிசம் 'எஸ்கேப்' ஆகலாம்னுதான்!

ரொம்ப தூரமா என்ன? ஒரு பத்து எட்டுலெ இருக்கு பள்ளிக்கூடம்! முக்காவாசி நாளு இதே கதைன்றதால எல்லாருக்கும்பழகிப்போச்சு.
அந்த ஸ்கூல்லே ஒரு பழக்கம் இருந்துச்சு. அதாவது காலையிலே 'ஆஜர்' சொன்ன பிறகு, யார் யார்வரலேன்னு தெரிஞ்சுரும்லே. அப்ப டீச்சர் கேப்பாங்க, வராதவுங்கல்லாம் ஏன் வர்லேன்னு.


தெரிஞ்சா சொல்லுவோம், தெரியலேன்னா, தெரிலேன்னு கத்துவோம்.
உடம்பு சரியில்லேன்னா மட்டும் எனக்குக் கட்டாயம் தெரிஞ்சிரும். நம்ப அம்மாகிட்டதானே மருந்து வாங்க வருவாங்க!


தினமும் காலையிலே ஆஸ்பத்திரி முன்னாலே இருக்கற பெரீய்ய்ய்ய வெராண்டாவுலே ஒரு பெரீய்ய்ய மேஜைபோட்டு வச்சிருப்பாங்க. அங்கெதான் 'அவுட் பேஷண்ட்'டைப் பாக்கறது. அம்மா 'சீட்டு' எழுதுனவுடனே,அதைக் கொண்டுபோய் கம்பவுண்டர் கிட்டே கொடுத்தா, அவரு, ஏற்கெனெவே கலக்கி வச்சுருக்கற 'தண்ணீ'மருந்தைத் தருவாரு. அதை வாங்கறதுக்கு 'சீசா' கொண்டு போணும். இல்லாதவுங்க, நம்ம ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குவெளியே, ஒரு ஆளு, சாக்கு விரிச்சு உக்காந்துகிட்டு, 'பாட்டிலு' விக்கறாரு இல்லே, அவருகிட்டப் போய் வாங்கணும்.ஆனா, எல்லாருமெ ஒரு 'சீசா' வீட்டுலே இருந்துதான் கொண்டு வருவாங்க. பழைய மருந்து ஏதாவது பாக்கி இருந்தாஅதை வெளீயே ஊத்திட்டு, அவசர அவசரமாக் களுவிட்டு வந்துருவாங்க சில பேரு. கம்பவுண்டர்க்கு எப்படியோ இதுதெரிஞ்சிரும் போல. மோந்து பாத்துட்டு, வேற கொண்டான்னுட்டார்னா, வழியில்லாம அஞ்சு காசு,பத்து காசு கொடுத்துவாங்கிருவாங்க!


அதே ஆளுதான், ஸ்கூல்லே 'ரீஸஸ்' விடுறப்ப, ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளியெ, அதே சாக்கை விரிச்சு, அதுலேஅவிச்ச கள்ளே, நெல்லிக்காய், கொடுக்காப்புளி,கரும்புத்துண்டு இப்படி 'சீஸனு'க்கு ஏத்த மாதிரி விப்பாரு. இதுலெல்லாம்எனக்கு 'இன்ட்ரெஸ்ட்' இல்லே! ஆனா அவரு பக்கத்துலே ஒரு 'ஆயா' உக்காந்து விக்கும் பாருங்க 'சவ்வு முட்டாய்' அதுதான் என் 'கோல்' அதுலெ ரெண்டு விதம் இருக்கும். ஒண்ணு கலரு போடாதது, இன்னொண்ணு நல்லா சிவப்புக்கலருலே இருக்கும்! அதைத் தின்னா, அப்படியே வாயெல்லாம் சிவந்து, வெத்தலை போட்டமாதிரி இருக்கும். பசங்க எல்லாம்அதைத் தின்னுட்டு, நாக்கை நாக்கை நீட்டிப் பாத்துக்குவாங்க! பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!


ஆனா, எனக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. வெளியிலே 'கண்டதையும்' வாங்கித் தின்னக் கூடாதுன்றது அம்மாக் கட்டளை!அரச கட்டளை மாதிரிதான் இது! தெரியாம வாங்கித் தின்னலாம்னா, அந்த சிவப்புக் கலரு இருக்கே அது, மத்தியானம் வரைக்கும்அப்படியே இருக்கும்.அப்படியேன்னா, அப்ப்ப்ப்படியே இல்லை. ஆனா லேசில போகாது! பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகணும்ல.அப்ப மாட்டிக்க மாட்டேனா?


அந்த வயசுலெ ஆசையெ அடக்கறதுக்கு நான் என்ன புத்தரா? தின்னணும், ஆனா மாட்டிக்கக்கூடாது. எப்படி? ஒரேவழி. கலருபோடாத முட்டாயத்தான் வாங்கித் தின்னணும்! (அந்த வயசிலேயே எவ்வளவு தில்லு முல்லு திருக்கோசு பாருங்க!)


முட்டாயுன்னதும் இன்னொண்ணு கூட ஞாபகம் வருது. ஒரு முட்டாய் விக்கறவரு,தடியா ஒரு கம்பைத் தோள்மேலே தூக்கிகிட்டு வருவாரு.அந்தக் கம்புலே, மேல்பக்கத்துலே கலர்கலரா வானவில்லை அப்படியெ பந்தா சுருட்டின மாதிரி சவ்வு முட்டாய் சுத்தி இருக்கும்.அந்தக் கம்பு உச்சியிலே ஒரு பொம்மை இருக்கும். அதுக்கு நல்லா 'கவுனு' இல்லாட்டா புடவைன்னு உடுத்தி விட்டுருப்பாங்க!அதுக்குச்சலங்கைகூட கட்டிவிட்டுருப்பாங்க! கம்பத் தூக்கிகிட்டு வரும்போதே'ஜல் ஜல்'ன்னு தாளத்தோட பொம்மை ஆடிகிட்டே இருக்கும்.அவருகிட்டே முட்டாய் வாங்குனா, நமக்கு என்ன மாதிரி வேணும்னு கேட்டு, அதே மாதிரி செஞ்சு கொடுப்பாரு.( டிஸைனர் முட்டாய்!)எல்லாப் பசங்களும் சொல்லிவச்ச மாதிரி கைக்கடியாரம்தான் கேப்பாங்களா, அவரும் கம்பு மேலெ இருக்கற பந்திலெருந்து, நீளமாஇழுத்து நீட்டி, அதைச் சுத்திச் சுத்தி நிமிசத்திலே கைக்கடியாரம் செஞ்சு, கேட்டவுங்க கையிலே கட்டியும் விட்டுருவாரு. கையிலே கட்டிட்டாதிங்கறது எப்படி? அதுக்காக, கம்புலேருந்து இன்னும் கொஞ்சம் இழுத்து நீட்டினதுலே, கொஞ்சம்போல எடுத்துத் தனியா கொடுத்துருவாரு!பூனை, நாய், சைக்கிள்,தேளு இப்படி விதவிதமா அவரு விரலு விளையாடும்! அதப் பாக்கறதே ஒரு சொகம்!


அதுக்கும் நமக்கு கொடுப்பனைஇல்லே. அந்த முட்டாய் சுத்த பத்தமா செஞ்சது இல்லையாம்! அந்த ஆளுங்க,'மூக்கைச் சீந்திட்டு' அப்படியே தொட்டுருவாங்களாம்! அப்படி, இப்படின்னு சொல்லி வச்சுருவாங்களா, அதுக்குப் பயந்துகிட்டு அதையெல்லாம் பாக்கறதோட சரி.


நம்ம கையிலே காசு வந்தவுடனே அது, நம்ம தெருவிலே இருக்கற பெட்டிக் கடைக்கு போயிரும்.ஆரஞ்சு முட்டாய் இல்லேன்னா கோழிமுட்டைமுட்டாய். இதுலே உள்ளுக்குள்ளே ஒரு பாதாம் பருப்பு இருக்கும். இதை வாயிலெ போட்டுட்டா அவ்ளதான். ரொம்ப நேரத்துக்கு பேச முடியாது.வெளியவும் எடுக்க முடியாது. எச்சி இல்லே! முட்டாய்ங்களைப் பத்தி இன்னைக்கில்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்தான்.


ஆனாப் பாருங்க, வாழ்க்கையிலே நிறைவேறாமப் போன ஆசைகளிலே இந்த ஜவ்வு முட்டாயும் இருக்கு. இப்பல்லாம் இது கிடைக்குதான்னுகூடத் தெரியலே.


ஆங்.... எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஸ்கூலு...ஆஜர் எடுக்கறது.


டீச்சரு கேட்டப்ப, வராதவுங்க ஏன் வரலைன்றதுக்குக் காரணம் தெரியலேன்னா, அதைத் தெரிஞ்சிக்கறதுக்கு வேற வழி இருக்குல்ல!

" கமலா/செல்வி/வசந்தா/குமார் ஏன் வரலென்னு யாருக்காவது தெரியுமா?"

"தெரியாது டீச்சர்" "இவுங்க வீடு யாருக்குத் தெரியும்?"

" எனக்குத் தெரியும் டீச்சர்!"

இந்தக் கேள்வியை மத்தவங்ககிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை. அதான் நான் இருக்கேனே. எல்லார் வீடும் அனேகமா எனக்குத்தெரிஞ்சிருக்கும்! அது எப்படி? அதானே எனக்கும் தெரிலெ?


நான் எப்பவும் ஊரைச் சுத்திக்கிட்டு இருந்ததாலா? ச்சீச்சீ, இருக்காது.

எல்லாருக்கும் எல்லார் வீடும் தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்.அப்ப 'இந்தக்காலத்தில' இருக்கறதைப்போல தப்புத் தண்டாவெல்லாம் நாங்க கேள்விப்பட்டதேயில்லை! பயமில்லாமத் திரிஞ்சிகிட்டுஇருந்தோம்!


உடனே என்னையும், கூட இன்னோரு பொண்ணையும்( இது எப்பவுமெ என் 'பெஸ்ட் ·ப்ரண்டு' பிச்சம்மாவாத்தான் இருக்கும்) அனுப்புவாங்க!

"ஓடிப்போய் என்னன்னு கேட்டுட்டு வரணும். அங்கே, இங்கேன்னு பராக்குப் பாத்துகிட்டு நிக்கக்கூடாது"

நாங்க ரெண்டுபேரும் கிளம்பிடுவோம். டீச்சர் சொல்படி ஓடிப்போக மாட்டோம். ஏன் தெரியுமா? பிச்சம்மாவுக்கு, 'போலியோ' வந்து, ஒரு காலுவளஞ்சு போயிருக்கும்.அந்தக் காலை உதறி உதறி விந்தி விந்திதான் நடப்பா. மத்தபசங்கெல்லாம் அவளை, நொண்டிப்பிச்சம்மா'ன்னுகூப்பிடறப்போ, எனக்குக் கோவம் கோவமாவரும்.


என் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு(இருந்தது?) என்கூட இருக்கறவங்க எப்படிப் பேசுறாங்களோ, நடக்கறாங்களோ, அதேமாதிரி என்னை அறியாமலேயேசெஞ்சுருவேன். பிச்சம்மாகூட போறப்ப நானும் அவளைப் போலவே நடப்பேன்.பாக்குறவங்களுக்கு, ரெண்டு சின்ன பொண்கள் கால் சரியில்லாமஇருக்கறாங்கன்னு நினைச்சுப்பாங்க! ( இதை ஒருதடவை எங்க அம்மா பாத்துட்டு கேட்டப்பத்தான் எனக்கே தெரியும்,நான் பிச்சம்மா மாதிரி நடக்கறேன்னு!)


இந்த நகர் வலத்தை முடிச்சிட்டு திரும்பி வர்றதுக்கே காலையிலே விடற 'ரீஸஸ் டைம்' ஆயிரும்! அப்புறம் ரெண்டு பீரியட்தான். சாப்பாட்டு இடைவேளை வந்துரும்!


அப்புறம், டீச்சரு எங்கெயாவது போனாங்கன்னா, சட்டாம் பிள்ளைதான் டீச்சர் வர்ற வரைக்கும் மொத்த வகுப்பையும் பாத்துக்கணும். சத்தம் கித்தம்போடாம, வீட்டுப் பாடம் எதாவது எழுதிகிட்டு இருக்கணும்.


எங்க 'ஸ்கூல்'லெ வகுப்புத் தலைவர்(சட்டாம்பிள்ளை) ஆவணும்னா வகுப்புலெ மொத'ரேங்' எடுக்கற ஆளா இருக்கணும். எல்லா மாசமும் 'டெஸ்ட்' வைப்பாங்கல்ல. அதுலே யாரு நிறைய 'மார்க்'கோ, அவுங்கதான் அடுத்த 'டெஸ்ட்' வரவரைக்கும் 'க்ளாஸ் லீடர்'


இதுலே எனக்கும், எங்க வகுப்புலே இருந்த 'வைத்தி' ன்னு நாங்க கூப்புடற வைத்தியநாதனுக்கும்தான் போட்டி.


வைத்தியப்பத்திச் சொல்லியே ஆகணும். அக்ரஹாரத்துப் பையன். ஆசாரமான குடும்பமாச்சா, அதுனால 'குடுமி'வச்சிருப்பான். முன்னந்தலைஅரைவட்டமா மழிச்சு இருக்கும். ஆனா, மழ மழன்னு இருக்காது. குட்டி குட்டியா சின்னச் சின்ன முடி இருக்கும். தலையைத் தடவுனா,'ப்ரஷ்'மாதிரி குறு குறுன்னு இருக்கும். நல்லாப் படிப்பான். நல்ல நிறமா இருப்பான். அவனோட தங்கச்சிப் பாப்பாவுக்கு எப்பவும் வயித்துக்கோளாறுன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வருவாங்க அவுங்க அம்மா. கூடவே இவனும் வருவான்.அப்ப அவனை எங்க வீட்டுக்குள்ளேயெல்லாம் கூட்டிட்டுப்போய் எங்க அக்காங்களுக்கெல்லாம் காமிச்சிருக்கேன். நாங்க ரெண்டுபேரும் ·ப்ரெண்ட்ஸ்தான்.ஆனா அப்பப்ப சண்டையும்வந்துரும்!


ஒருநாளு டீச்சரு இல்லாதப்ப அவந்தான் எங்களையெல்லாம் மேய்ச்சுகிட்டு இருந்தான்.நாங்கெல்லாம் எப்பவும்போல பேசிகிட்டு இருந்தோம்.சத்தம் ஜாஸ்தியாச்சுன்னா, ஒரு 'சத்தம்' போடுவான்.



"உஷ்ஷ்ஷ்ஷ்.... பேசாதீங்க! டீச்சரு சொல்லிட்டுப் போயிருக்காங்க, பேசறவங்க பேரை 'போர்டு'லே எழுதணும்னு. இப்ப எழுதிருவேன். அப்புறம் டீச்சரு வந்தா மாட்டிக்குவீங்க"


நான் அப்படியெல்லாம் அடங்கற ஆளா? ரெண்டு நிமிஷம் சத்தம் இருக்காது.அப்புறம் மெதுவா, கிசு கிசுப்பா தொடங்கும். போகப்போகசத்தம் உசந்துகிட்டே போயிரும்.


வைத்தி, என் பேரை கோணக்கா மாணக்கான்னு 'போர்டு'லே எழுதிட்டான்!


இவ்வளவு தூரத்துக்கு இதுவரைக்கும் வந்ததில்லே. இன்னைக்கு ஏன் டீச்சரு இவ்வளொ நேரமா திரும்பி வரலே?


"டேய் வைத்தி, டேய் அழிச்சுடுடா, இனி பேசமாட்டெண்டா, டேய் டேய்"


"ஐயோ, டீச்சரு வந்துகிட்டு இருக்காங்கடா, டேய் வைத்தி, அழிடா அழிடா"


டீச்சரு காலை உள்ளே வெக்கறதுக்கும், வைத்தி 'போர்டை' அழிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.


அப்பாடா, தப்பிச்சுட்டேன்! ஆனாலும் எவ்வளொ கெஞ்ச வச்சிட்டான்.
இருக்கட்டும். அவனை வீட்டுக்கு விடறப்பகவனிக்கலாம்!


அடுத்த ரெண்டு நாளிலேயே சந்தர்ப்பம் கிடைச்சிடுச்சு. நான் தான் 'லீடர்'
டீச்சரு வகுப்பிலே இல்லே. பேச்சு சத்தம் கொஞ்சம் கொஞ்சமா உச்ச ஸ்தாயிலே போயிகிட்டு இருக்கு. எனக்குசெஞ்ச உபகாரத்தை நினைச்சுகிட்டு, வைத்தி சத்தமா பேசிகிட்டு இருக்கான், பக்கத்துலே உக்காந்து இருக்கறபையனோட!


நானு, சத்தம் போடாதீங்க, சத்தம் போடாதீங்கன்னு ஒப்புக்கு ரெண்டுதடவை கத்திட்டு, வைத்தி பேரை 'போர்டு'லேஎழுதிட்டேன்! அவன் அதை சட்டையே பண்ணாம இன்னும் பேசிகிட்டு இருக்கான்!


ஆஹா.... டீச்சரு வந்துட்டாங்க! வைத்திக்கு அவன் கண்ணையே நம்ப முடியலே! அவன் பேரு இன்னும் இருக்கு.நான் அதை அழிக்கறதுக்கு ஒரு முயற்சியும் எடுக்கலே!



வைத்திக்கு 'நல்லதா' ரெண்டு அடி உள்ளங்கையிலே கிடைச்சது! அவன் கண்ணுலே தண்ணி முட்டிகிட்டு நிக்குது!


டீச்சரு என்னெ எதுக்கு கை நீட்டச் சொல்றாங்க! ஐயோ...ஆஆஆஆ வலிக்குதே! எனக்கு எதுக்கு ரெண்டு அடி?


நானே நீலி! 'நீலிக்கு கண்ணீரு நெத்தியிலே'ன்ற மாதிரி, கண்ணீரு ஆறாப் பெருகுது!

வகுப்பே முழிக்குது!

அழுதுகிட்டே கேக்கறேன், "என்னை ஏன் அடிக்கறீங்க? நானா பேசுனேன்?"

டீச்சரு, 'போர்டை'க்காட்டுனாங்க. இப்பத்தான் எனக்கு உறைக்குது!

நாந்தான் எழுதியிருக்கேன்!

'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'



நன்றி மரத்தடி.காம்

பயம்

வரவர எதுக்குத்தான் பயப்படறதுன்னே விவஸ்தை இல்லாமப் போச்சுப் பார்த்தீங்களா?


ஒரு அழகான குழந்தையோ, ச்சின்னப் பசங்களோ கண்ணுலே பட்டா அவுங்களைப் பார்த்து இயல்பாவே நமக்கும்ஒரு சந்தோஷம் வந்துருது. உடனே அவுங்ககிட்டே கொஞ்சம் பேசலாமுன்னும் தோணுது. இனிமே அது ஒண்ணும்நடக்காது.


எங்கே பார்த்தாலும் ஒரு சந்தேகப்பேய் வந்து உக்கார்ந்துக்கிட்டுச் சத்தம் போட்டுச் சிரிக்குது. சில வக்கிர மனசுடையமனிதர்(?)களாலே, பலர் இயல்பான சந்தோஷத்தையும் செயல்படுத்த முடியாமப் போறது ரொம்ப விசனம்தான்.


குடும்பச் சண்டை, கணவன் மனைவி ஒற்றுமை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் சில பல விஷயங்களில் ஏமாத்தறது,இதன்காரணமாக் குடும்பக்கோர்ட்டுக்குப் போறதுன்னு உறவுகளிலே விரிசல் வர ஆரம்பிச்சதே மனசுக்குக் கஷ்டமாப் போச்சுன்னா,இப்ப சக மனுஷனை நம்ம முடியாமப்போறது இன்னும் அதிர்ச்சி தர்றதுதானே?


இப்பெல்லாம் ச்சின்னப்பசங்க அதாவது 16 வயசுக்குக்கீழே இருக்கறவங்க தனியா விமானப்பயணம் போறது சகஜமாப் போச்சுல்லே. இப்படி ஒரு பையன் தனியா போறப்ப, அந்தப் பையனுக்குப் பக்கத்து சீட்டுலே ஒருத்தருக்கு இடம்போட்டுருந்தாங்களாம். விமானம் கிளம்பறதுக்கு முன்னாலே அவரை வேற இருக்கைக்கு மாத்துனாங்களாம்.


காரணம் ? .....தனியாப்போற பசங்களுக்குப் பக்கத்துலே ஆம்பளை உக்காரக்கூடாதாம்! ஏனாம்? கேட்டதுக்குக் கிடைச்ச பதில்,அந்தப் பையனோட பாதுகாப்பை முன்னிட்டாம்!! ஆளுங்க உக்கார்ந்தாப் பயணம் முடியற நேரத்துக்குள்ளே அந்தப் புள்ளையை 'அப்யூஸ்'செஞ்சுருவாங்களாம். இது கொஞ்சம் அக்கிரமமா இல்லே? அந்த ஆளுக்கு எப்படி இருந்திருக்கும்? இதெல்லாம்நடந்தது இங்கேதான். க்வான்டாஸ் & ஏர் நியூஸிலாண்ட் ஃப்ளைட்டுங்களிலேதான்!


அவமானப்பட்டுப்போன அந்த மனுஷர் இப்ப மனித உரிமைக் கழகத்துலே முறையீடு செஞ்சிருக்கார். இந்த விமானக்கம்பெனிஉத்தியோகஸ்தரைக் கேட்டதுக்கு, அவுங்க சொன்னாங்களாம், 'இது இப்பெல்லாம் பிள்ளைங்களைத் தனியா அனுப்பற பெற்றோர்களின் கோரிக்கை'ன்னு.


இது இப்படி இருக்கும்போது, இங்கே எங்க ஊர்லே ஒரு பள்ளிக்கூட மாணவன், கூடப்படிக்கிற பொண்களைத் தேவையில்லாம 'கண்ட' இடத்தில் தொட்டும், அவுங்களைக் கீழே தள்ளியும், ஹிம்சை செய்யறான். இதனாலேஅந்தப் பெண்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துலே முறையீடு செஞ்சிருக்காங்கன்னு டிவி செய்தி. இந்த 'செக்ஸ் அஃபெண்டர்' பள்ளிக்கூடத்துலே இருக்கக்கூடாதுன்னு அவுங்க சொல்றாங்க. பையனோட அம்மா 'அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொல்லாம மெளனமா இருக்காங்க. இந்த 'செக்ஸ் அஃபெண்டரோ'ட வயசு என்ன தெரியுமா? ஆறு! ஆறே வயசு!


இதையெல்லாம் பார்க்கறப்பப் பக்கத்து வீட்டுப் பசங்க நம்ம வீட்டுக்கு வந்தாலும், நாம பயந்துக்கிட்டு அதுங்களை நம்ம விருந்தோம்பல்படி வீட்டுக்குள்ளே கூப்புடாம நாங்க வெளியே வந்து தெருவுலே நின்னுக்கிட்டுப் பேசும்படியா இருக்கு!


இப்படி ச்சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தொலைச்சுட்டு நிக்குறோமே(-:

என்ன நடக்குது இங்கே?

பி.கு: இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கமனசுக்குள்ளெ என்ன தோணுச்சு?
பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்களேன்.

Tuesday, December 20, 2005

அன்னம்மாச் சேச்சியின் கும்பசாரம்

சென்ற பதிவின் தொடர்ச்சி.....


நாங்க இருந்த ஒரு ச்சின்ன ஊர்லே கிட்டத்தட்ட 99 சதமானம் கிறிஸ்துவர்கள்தான். கத்தோலிக்கர்ங்க. எல்லோரும் தவறாமப்பள்ளி( சர்ச்)க்கு போவாங்க. ச்சின்ன ஊர்ன்ற படியாலே பாதிரியார்கள் உட்பட எல்லோருக்கும், எல்லோரையும் தெரியும்.வீட்டுலெ சண்டையோ,மனக்கஷ்டமோ எதா இருந்தாலும் பள்ளிக்குப் போய் பாவமன்னிப்புக் கேட்டுருவாங்க. நாங்க இருந்த வாடகைவீட்டுஉரிமையாளர் அன்னம்மா சேச்சி ரொம்ப நட்பா பழகுவாங்க. அது டூப்ளெக்ஸ் வீடு. எல்லாமே ஒண்ணுபோல இருக்கும் சைடு பை சைடா.


ரரத்திரி சாப்பாட்டு நேரத்துக்குத்தான் அவுங்க குடும்பம் முழுசும் ஒண்ணாச் சேர்ந்து சாப்புடுவாங்க. எட்டுமணி வாக்குலே எல்லோரும்சாப்பாட்டு மேசைக்கு வந்துருவாங்க, அன்னம்மா சேச்சியோட வீட்டுக்காரர், மூணு புள்ளைங்க. எட்டு, அஞ்சு, மூணுவயசுலே.


முதல்லே ஜெபம் . மெலிசா இருக்கற சுவர். துல்லியமா எல்லாம் கேக்கும், ரேடியோ நாடகம் போல.அப்புறம் ஜாலியாப் பேசிப்பேசி, பேசிப்பேசி பசங்க எல்லாம் பாதிச் சாப்பாட்டுலேயே மேசைமேலே சாய்ஞ்சுஅப்படியே தூங்கிருவாங்க. திடீர்னு பேச்சுச் சத்தம் நின்னு போச்சுன்னு வச்சுக்குங்க அன்னம்மா சேச்சியும் அவுட்.


ஆமா, இது எனெக்கெப்படித் தெரியும்? ஒரு நாள் வாடகைப் பணம் கொடுக்கறதுக்காக போனேன். அங்கெ பார்த்தாஎல்லோரும் எச்சில் கையைத் தள்ளி நீட்டிக்கிட்டு சாய்ஞ்சு கெடக்குறாங்க, சேட்டன் உட்பட! என்னவோ ஆயிருச்சுபோல,சாப்பாட்டுலே எதாவது மயக்கமருந்து இருந்துச்சோ? என்ன செய்யலாமுன்னு புரியாமத் திரும்புனப்ப அவுங்க வீட்டுலேஅடுக்களை ஜோலிக்கு 'நிக்கற' பொண்ணு, புஷ்பா என் காலடிச் சத்தம்கேட்டு அடுக்களையிலே இருந்து வந்துச்சு.


'இது எப்போழும் பதிவா. குட்டிகளானு ஆத்யம் தொடங்கும், பின்னே சேட்டனும் சேச்சியும்'னு சொல்லுது. எங்க பேச்சுச்சப்தம் சேச்சியை எழுப்பிடுச்சுபோல. திடுக்குன்னு முழிச்சுக்கிட்டு,'எண்டே ஈசோவே, இதெந்தா இவிடே, வந்நு குறே நேரமாயோ?'ன்னு கேட்டுட்டு ஒரே 'பொட்டிச்சிரி'.


நம்ம அன்னம்மா சேச்சி களங்கம் இல்லாத மனசு. மாமியார், நாத்தனார்கூட எதாவது வாக்குவாதம் வந்தா, தன்னோடஅபிப்ராயத்தை 'பட்'ன்னு சொல்லிருவாங்க. அப்புறம் 'ஏண்டா இப்படிச் சொன்னோமு'ன்னு மனசு போட்டுப் பிராண்டுமாம்.உடனே ஓடு பள்ளிக்கு. எதுக்கு? பாவமன்னிப்புக் கேக்கத்தான்!


அங்கே பள்ளியிலே எப்போதும் சில 'அச்சன்மார்' கூடுதலா இருப்பாங்க. புதுசா பயிற்சி முடிஞ்சு வர்ற 'ச்சிறுப்பக்காரஅச்சன்மார்'. பாவமன்னிப்புக்கு வந்திருக்கறதா அறிவிக்க அங்கே ஒரு ச்சின்ன மணி இருக்காம். அதை ஆட்டுனா,'கன்பெஷன் பாக்ஸ்'க்குள்ளெ அச்சன் வந்து உக்கார்ந்துக்குவார். நம்ம சேச்சிக்கோ எதையும் விஸ்தாரமாச் சொல்லித்தான்பழக்கம். எப்போ,என்ன பேசிக்கிட்டு இருந்தாங்க, சண்டை எப்படி ஆரம்பிச்சது, அவுங்க என்ன சொன்னாங்க, இவுங்க என்ன சொன்னாங்கன்னு..... போகும் பாவமன்னிப்பு கேக்கறது.



ஒருநாள் சேச்சி இப்படிச் சொல்லிக்கிட்டு இருக்கறப்ப ,'நம்மட ச்சிறுப்பக்கார அச்சன்' எல்லாத்தையும் 'ஊம்' கொட்டிக்கேட்டுக்கிட்டே இந்த கதை கேக்கற சுவாரசியத்துலே மூழ்கிட்டார் போலெ. ஒரு இடத்துலே சேச்சி சொல்றதை நிறுத்திட்டுஅப்புறம் என்ன நடந்துச்சுன்னு மனசுலே யோசிக்கறப்ப அச்சன் கேட்டாராம், 'ஊம், பின்னே எந்து பற்றி?'ன்னு!


வீட்டுக்கு ஓடிவந்த சேச்சி இதையெல்லாம் சொல்ல அங்கே 'வீண்டும் ஒரு பொட்டிச் சிரி'.


( இந்த வாரம் உங்களுக்கு சில மலையாள வார்த்தைகள் சொல்லித்தரப்படும். இப்பெல்லாம் மலையாளப்படங்கள்தமிழில் ரீமேக்கு நிறைய வருதுல்லே. அப்ப உங்களுக்குச் சுலபமா இருக்க இந்த ஏற்பாடு:-) சரியா?)

உண்மை விளம்பி

ஏங்க, நட்சத்திரம் உக்கார நாற்காலிக்கு மேலே ஒரு கத்தி தொங்குதா? இல்லே அந்த நாற்காலி இருக்கற இடத்துக்கு மேலே நீதிமன்றத்துலே இருக்கறமாதிரி 'சத்யமேவ ஜெயதே'ன்னு இருக்கா? அடடா, தெரிஞ்சவரைக்கும் தமிழிலே சொல்லணுமுல்லெ? அதாங்க 'வாய்மையே வெல்லும்'னு எழுதித் தொங்கவிட்டிருப்பாங்களே. பக்கத்துலேயே நீதி தேவதைகண்ணைக் கட்டிக்கிட்டு தராசு புடிச்சுக்கிட்டு நிக்குமே, அது.


இல்லேன்னா அது 'பள்ளி'யிலே கும்பசாரிக்கிற இடமா? மறுபடி குழப்பறேனா? இது மலையாளங்க. சர்ச்சுலேபாவமன்னிப்புக் கேக்கறதுக்கு ஒரு 'கன்ஃபெஷன் பாக்ஸ்' இருக்குமுல்லே, அதுவான்னு கேக்கறேன். இதைப்பத்திக் கடைசியிலே( இதே பதிவோட கடைசியிலேதாங்க) சொல்றேன்.


ஏன்னா, இப்ப சில மாசங்களா வர்ற நட்சத்திரங்கள் எல்லாம் , உண்மையை விளம்பிட்டுப் போறதனாலே இந்தசந்தேகம் வந்திருக்கு.


அவுங்கவுங்க பிட் அடிச்சது, சிகெரெட் புகைச்சது, கோவமாப் பேசுனது, வெவ்வேற பேருலே எழுதுனதுன்னு ரகம் ரகமாச் சொல்லிட்டாங்களேய்யா. நான் என்னத்தைச் சொல்றது?


ஐய்யோ இப்ப நான் என்ன செய்யணும்? எனக்கும் ஏதாவது உண்மையைச் சொல்லியே ஆகணும்போல இருக்கே.தேவுடா! இப்படி ஒரு நிலமை வருமுன்னு முந்தியே கோடி காமிச்சிருக்கக்கூடாதா? குறைஞ்சபட்சம் ஒரு பூனை..ச்சேச்சே.. புனைப்பெயராவது வச்சிக்கிட்டு இருந்திருக்கலாமே.
புனைப்பெயர் வச்சுக்கிட்டு இருந்த/இருக்குறவங்களைக் கவனிச்சீங்கன்னா, முக்காவாசிப்பேருக்கும் மேலே , பெண்கள் பேரைத்தான்வச்சிருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்?


அவுங்க எழுத்து ஒருவேளை மக்கள் மத்தியிலே எடுபடாமப்போனா, 'அந்தப் பொம்பளை எழுத்து ஒண்ணும் சரியில்லேப்பா'ன்னுபேசறது, இவுங்க காதுவரை எட்டுச்சுன்னா, இது அந்த 'யாரோ' பெண்ணுக்குக் கிடைச்ச அர்ச்சனை. நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஜாலியாப் போயிரலாமுன்னா? கொஞ்சம் விரசமா எழுதறவுங்க, 'அட!ஒரு பொம்பளை இப்படி எழுதறாளேய்யா'ன்னுமக்களைத் திகைக்கவச்சு அதுலே ஒரு சந்தோஷம் அடைஞ்சுடறாங்களோ?


இதுவரை ஆண்கள் பேருலே எழுதற பொண்கள் யாராவது இருக்காங்களா? எனக்கு ஒண்ணும் ஞாபகம் வரலையே!உங்களுக்கு யாராவது நினைவுக்கு வராங்களா?


பேசாம, என் வயசு 18தான். உங்ககிட்டேயெல்லாம் 50+ன்னு பொய் சொல்லிட்டேன்னு ஒரு ரீல் விட்டுப் பாக்கலாமா?அடடா, இப்படிப் புலம்ப வச்சுட்டாங்களேய்யா, புலம்ப வச்சுட்டாங்களே!


புலம்பல் தொடரும்.....

Monday, December 19, 2005

தம்பு.....

யானைக்கொரு காலமுன்னா பூனைக்கும் ஒரு காலம் வருமாமே!

ஆமாம். வந்துருச்சுங்க. வந்தே....... வந்துருச்சு.

இப்பப் பாருங்க 'நான்' இந்தவார நட்சத்திரமாம்:-)))

வலைஞர்கள் மேலே ஃபோகஸ் லைட் போடறது இப்படித்தான். இல்லே?

ஃபோகஸ் லைட்டுன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருதுங்க.

ஒரு ஏழெட்டு வருசத்துக்கு முன்னாலே நடந்தது. அப்ப இங்கே எங்க ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுருந்துச்சு.

மிருகங்களை சர்க்கஸ்லெ வச்சு காட்சி நடத்தறது எனக்குப் பிடிக்காத விஷயம். அதுலேயும்வீட்டு மிருகம் நாய், பூனை, குதிரை, ஆடுன்னாக்கூடப் பரவாயில்லை. அதுங்களும் மனுஷனை அண்டித்தானே பொழைக்குதுங்கன்னு வுட்டுரலாம். இந்த சிங்கம், புலி, யானைங்கதான்பரிதாபக்கேஸுங்க.
அதுலேகூடப்பாருங்க, யானை அத்தாம் பெரிய உடம்பை வச்சுக்கிட்டு, ச்சின்ன ஸ்டூல்லேகஷ்டப்பட்டு உக்கார்றதைப் பார்த்தா எனக்கு அழுகையே வந்துரும்.


இப்ப எங்க ஊர்லே சர்க்கஸ்லே காட்டுமிருகங்கள் இருக்கறதைத் தடை செஞ்சுட்டாங்க. இந்த சர்க்கஸ்கூடரஷ்யாவுலேருந்து வந்ததுதான். இல்லாட்டா இங்கே ஏது இதெல்லாம்? மிருகமும் இல்லேன்னதும் சரிபோய்ப் பார்க்கலாமுன்னு மூணு டிக்கெட் முன்பதிவு செஞ்சுவச்சோம்.


சர்க்கஸ் பார்க்கப் போனோம். அங்கே நம்ம மூணு டிக்கெட்டை ரெண்டை ஒரு வரிசையிலும் ஒரு டிக்கெட்டைஇன்னொரு வரிசையிலும் போட்டுவச்சிருக்காங்க. வெளியே போறதே குடும்பமாச் சேர்ந்து இருந்து அனுபவிக்கத்தானே?அதிலும் ஒருவாரம் முன்னாடியே முன்பதிவுவேற செஞ்சிருக்கு.


கொஞ்சம் வாக்குவாதம்(சண்டைன்னு சொன்னா நல்லா இருக்காதுல்லெ?) செஞ்சபிறகு ஒரே வரிசையிலே இடம்கிடைச்சது. உள்ளே போனா, ரெண்டு ஒருபக்கம். ஒண்ணு அடுத்தபக்கம். நடுவிலே ஆளுங்க போகவர்ற பாதை.டெண்ட்டோ நிரம்பி வழியுது. கேன்சல் செஞ்சுட்டு இன்னோரு நாள் வரலாமுன்னா மகள் ஏமாந்துருவா. சரி,தொலையட்டுமுன்னு அப்பாவையும் மகளையும் ஒருபக்கம் உக்காரவச்சுட்டு, நான் அடுத்தபக்கம் அம்போன்னுஉக்காந்துருக்கேன். நிகழ்ச்சிங்க பார்த்துக்கிட்டு இருக்கறப்ப, நாம ரசிக்கிற ஏதும் வந்தாலும் அதைப்பத்திப் பேசிப் பகிர்ந்துக்க முடியாதுல்லெ? ஐல் சீட்டுன்னாலும் எட்டிப் பேசறப்ப ஆளுங்க போறதும் வாரதுமா இருக்காங்க.


'உர்'ன்னு கோபமா இருக்கேன். அப்ப சர்க்கஸ் ஆரம்பிச்சுடுச்சு. திடீர்னு பார்த்தா ஒரு 'க்ளவுன்' வந்து என் மடிமேலே உக்காந்துருச்சு.ஃபோகஸ் லைட் என்மேலெ அடிக்குது. ஜனங்களுக்கு ஒரே சிரிப்பு. நானோ ஏற்கெனவே கடுப்பிலே இருக்கேன்.மடிமேலெ உக்காந்து கொஞ்சிக்கிட்டு இருக்கற கோமாளியை ஒரு தள்ளு தள்ளி விட்டேனா, அது அப்படியே கீழே வுழுந்து எந்திரிச்சு ரொம்ப பவ்யமா கையைக் கட்டிக்கிட்டு,'மே ஐ..'ன்னு திரும்ப மடிமேலே உக்காரப் பர்மிஷன் கேக்குது.இப்ப எனக்கே சிரிப்பு வந்துருச்சு.'நோ'ன்னு சொல்லிக் கண்ணை உருட்டின பிறகு தலையை ஆட்டிக்கிட்டே அழுவறமாதிரிக்கண்ணைக் கசக்கிக்கிட்டு வேற வரிசையிலேபோய் ஒரு ஆள்மேலே உக்காந்தது. அதுவரை லைட் எம்மேலேயெ இருந்துச்சா,எனக்குக் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சுங்க.


மகள் சொன்னா,'ஓ... இட் வாஸ் ஃபன்'!

இருக்குமுல்லெ?

அது போகட்டும். ஒரு வாரம் என்னோட இம்சைகளைத் தாங்கிக்கற மனோ திடம் உங்களுக்குக் கிடைக்கணுமுன்னுஉங்க எல்லோருக்காகவும் வேண்டிக்கறேன்.


நட்சத்திரவாரம் நல்லபடியா முடிஞ்சா........


முடிஞ்சா?


உங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு யானை.


வச்சுக் காப்பாத்தணும் என்ன?:-)))))

Friday, December 16, 2005

நியூஸிலாந்து பகுதி 35

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வர்றமாதிரி இந்தத் 'தங்கம்'தோண்டறதுக்கும் ஒரு முடிவுக்கு வந்துச்சு. அதானே அந்த
சுரங்கங்கள் எல்லாம் அக்ஷய பாத்திரமா என்ன? 1863 லெயே ஒட்டாகோ தங்க வயலிலே தங்கம் தீர்ந்து போச்சாம்.



அந்த இடத்தை விட்டுட்டு வேற இடங்களிலே தங்கம் தேடிப் போனாங்க. இதுலே பாருங்க இந்த வெள்ளைக்காரங்க
செஞ்சதை! ச்சைனாக்காரங்கவந்துட்டாங்கன்னு சொன்னேன்லெ? அவுங்களோட எலிவால் பின்னலும், மூங்கில் தொப்பியும்,
சாமான்களை குச்சிலே ரெண்டுபக்கமும் காவடி கட்டி எடுத்துக்கிட்டுப் போற பழக்கமும் இவுங்களுக்கு ஒரே பரிகாசமா
இருந்திருக்கு. நல்ல இடத்துலே அவுங்களை விடறதில்லை. எதுக்கும் உதவாத இடங்களிலேயும், ஏற்கெனவே தோண்டி,
தங்கம் சுரண்டிட்ட இடங்களிலேயும்தான் இவுங்களுக்கு அனுமதி.



ஆனா, ச்சும்மா சொல்லக்கூடாது, இந்தச் சைனாக்காரங்க கடின உழைப்பாளிகள். பொறுமையா வேலை செஞ்சு, 'அதே
இடத்துலே' நிறைய தங்கம் தோண்டி எடுத்திருக்காங்க! கெட்டிக்காரங்க! Gold dredging system எல்லாம் செஞ்சு
மத்தவங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருந்திருக்காங்க. இதான் சொல்றதுபோல 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்'னு.
தப்பான பழமொழி போட்டுட்டேனோ? 'விலை மோர்லெ வெண்ணெய் எடுக்கறது' சரியா இருக்குமுல்லே?


அழுக்கும் சகதியும் செங்குத்தாப் போற சின்னப் பாதையிலே நடக்கணுமுன்னு, அங்கே இருந்த நிலமை கொஞ்சம் ஆபத்தாவே
இருந்திருக்கு. சதசதன்னு இருந்த இடத்துலே எல்லாம் 'சேண்ட் ப்ளை'ன்னு சொல்ற கொசு மாதிரி சமாச்சாரம் இவுங்களைப்
போட்டுப் புடுங்கியிருக்கு. கடிச்சா, அந்த இடத்துலே ஒரே அரிப்புதான் போங்க. (இப்பவும் ரெயின் ஃபாரஸ்ட்டுக்குள்ளே இருக்கு.
அதுக்குன்னு இருக்கற ஸ்ப்ரே போட்டுக்கிட்டுத்தான் போகணும்.) எலிங்க எங்கே பார்த்தாலும் இருந்துருக்கு. குடிதண்ணி எடுக்கற
இடத்துலே இருந்த கழிவு எல்லாம் சேர்ந்து மக்களுக்கு 'டைஃபாய்டு'ஜுரம் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. அதனாலே
'பூனை' இவுங்களுக்கு ஒரு சொத்தா இருந்துச்சு. அந்த எலிகளை ஒழிக்க வேற வழி இல்லையே. பூனைக்கு மட்டுமில்லே,
பொண்ணுக்கும் பயங்கர டிமாண்ட்டு. அந்தப் பக்கம் கல்யாணத்துக்கு தயாரா இருக்கற பொண்ணுக்கு ஒரே வாரத்துக்குள்ளே
மாப்பிள்ளை கிடைச்சதாம். பொண்ணுக்குத்தான் இப்பக்கஷ்டம்,யாரைத் தேர்ந்தெடுக்கணுமுன்னு!



பொண்ணுங்களுக்குள்ளே ,'ஓஹ்... 50 ஆளுங்க என்னைக் கட்டிக்கப் போட்டி போட்டாங்க'ன்னு பெருமைப்பீத்தல் வேறயாம்!

பொம்பளைங்க இப்படிக் கூடிப் பெருமைகளை அளந்துக்கிட்டு இருந்தப்ப பொழுது போக்கா இருக்க ஆம்பளைங்க
'எலிப் பந்தயம் ( எலி ரேஸ்) விட்டுக்கிட்டு, 'பப்' தொடங்கி அங்கே மஜாவா இருந்திருக்காங்க. காசு வந்தவுடனே
குடி அது இதுன்னு எல்லாம் ஆரம்பிச்சிருச்சு. வாரத்துலே 6 நாள் வேலை. ஞாயித்துக்கிழமை ஓய்வு. அதென்ன ஓய்வோ,
துணி துவைக்கறதும், கிழிசலைத் தைக்கறதும், அக்கம்பக்கத்துலெ எதாவது பறவையை அடிச்சுக்கிட்டுவரக் கிளம்பறதும்,
இது ஒன்னும் இல்லைன்னா 'பைப்' புகைச்சுக்கிட்டுக் கதையடிக்கறதுமுன்னு நாள் போயிரும். சிலர் ஆட்டுமந்தையிலே இருந்து
ஒரு ஆட்டைத் திருடிக்கிட்டு வந்து பொலி போட்டுறதுகூட இருந்துச்சாம். அடுப்பெரிக்க விறகு வேணுமே. அதனாலெ சுள்ளி
பொறுக்க 20 கிலோ மீட்டர்கூட சிலசமயம் நடக்கவேண்டி இருக்குமாம்.



நாலே வருஷம்தான் இந்த வாழ்க்கை. அப்புறம் பெரிய பெரிய மெஷினுங்களைக் கொண்டு ஆழமாத் தோண்டி சுரங்கம்
அமைக்க கம்பெனிங்க வந்துருச்சு. சாதாரண ஆளுங்களாலே இதெல்லாம் செய்ய முடியாமப் போச்சு. அப்படியே இந்த
'கோல்ட் ரஷ்' ஒருமாதிரி அடங்கிடுச்சு.

இப்ப சுத்தமா ஒன்னுமே இல்லையாம். எல்லாச் சுரங்கத்தையும் மூடிட்டாங்க. என்ன இருந்து என்ன? அந்த ஒம்போது
காரட் தங்கம்தான் நகையா வருது இங்கே. திருப்பி வித்தா சல்லி தேறாதுல்லே. ஆனா டிசைனுங்க அருமையா இருக்கு.
அதுக்குப் பார்த்தா, போட்ட காசு? நமக்கு தங்கம்னு சொல்றதே ஒரு சேமிப்புக்காகத்தானே? தங்கம் விலை ராக்கெட்டுலே
ஏறி உக்காந்துக்கிடுச்சுன்னு பேசிக்கறாங்க. ஹூம்....

Thursday, December 15, 2005

கிருபா..... 'டாங்க்ஸ்'பா!

இதென்ன திடீர்னு இப்படி ஒரு பதிவுன்னு இருக்கா? எல்லாம் ஒரு நன்றி கூறல்தான். அது பாருங்க,நானே ஒரு க.கை.நா. என்றதாலே உங்க கம்ப்யூட்டர் சமாசாரெமெல்லாம் புரிபடாம /பிடிபடாம இருந்துச்சா, ( இப்ப மட்டும் எல்லாம் தெரிஞ்சுச்சான்னு ஏம்ப்பா இடையிலே குரல் விடறீங்க?)சரி, கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிடலாமுன்னு 'விடா முயற்சியே வெற்றி தரும்'ன்னு பெரியவங்கச்சொல்லிவச்சுப் போனமாதிரியே இருந்தேன்.


படம் போடறதுக்கு எப்படியோ முக்கிமுனகிக் கத்துக்கிட்டு, கொஞ்சநாளா இதே வேலையா, பதிவுக்குச்சம்பந்தம் இருக்கோ இல்லையோ 'இதோ ஒரு படம்'னு இருந்தேன். எல்லாம், விஷயம் நல்லபடியா புரியறவரைக்கும்தான்.


அப்பப்ப நம்ம மக்கள் 'ஒரு லிங்க் கொடுக்கக்கூடாதா?'ன்னு கேக்கறப்பல்லாம் 'இதென்னடா வம்பாப் போச்சே.இதை எப்படிக் கொடுக்கறது? நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த 'லிங்க்(கு)சாமிதானே?'.( இதுக்குத்தான் பொழுதன்னிக்கும் சினிமா சினிமான்னு பர்த்துக்கிட்டு இருக்காதேன்னு எத்தனைதபாச் சொல்றது?)


ஆங்..... இன்னொரு லிங்க் கூடத்தெரியும். சங்கிலி இணைப்பு. நமக்குத் தெரியாத சங்கிலியா?:-)))


வி.மு.வெ.த.ன்னு அப்படியே போஸ்ட்டோட உர்ல், காப்பி & ஒட்டு முறையிலே போட்டுச் சமாளிச்சேன் சில இடங்களிலே.ஆனா பாருங்க இந்த 'இங்கே'தான் ஆட்டம் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. நம்ம ஜெயஸ்ரீயும் என் புலம்பலுக்குப் பதில் தர்றமாதிரி,விலாவரியாச் சொல்லி மடல் போட்டுருந்தாங்க. ஆனா என் மரமண்டைக்கு ஏறவேணாமா? ( நேரம் வரலைன்னு சொல்லலாம்)அதுக்கப்புறமும் சிலர்/பலர் ( பேரெல்லாம் போடலை. எனக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துருச்சு. சஞ்ஜய் ராமசாமிக்கு வந்ததுன்னுநம்புனீங்கெல்லெ. அப்ப இதையும் நம்பணும், ஆமா) நானும் தலையாலே தண்ணி குடிச்சுப் பார்த்துட்டேன். ஊஹூம்...ஒண்ணும் வேலைக்காகலே.


நம்ம வலைஞர்களிலேயும் ஒரு சிலர் இப்படிச் சிலசமயம் 'இது' போட வரலை, 'அது'போட வரலைன்னு எழுதறதைப்படிக்கறப்பெல்லாம் உள்ளுக்குள்ளே ஒரு ச்சின்ன(!) சந்தோஷம். ஆஹா... நாம ஒற்றைப்பட்டுப் போகலை. நமக்கும் ஆளு இருக்காங்க.


என்னைப் போலவே மதுமிதா( கவிதாயினின்னு சொல்லணுமுல்லே) சமீபத்திய ஒரு பதிவுலே இங்கே (இதுக்கு முன்னாலே இருக்கற இங்கேயில் க்ளிக்கவும். ப்ரிவ்யூலே அழகா கலருலே வந்துச்சு. போஸ்டிங்குலே காலை வாரிடுச்சு. ஹெல்ப் ப்ளீஸ்!)உர்ல் போடத் தெரியலைன்னுசொன்னப்ப , வழக்கம்போல நல்லெண்ணம் கொண்ட நபர்களின் உதவி பின்னூட்டமா வந்துச்சு. அதைப் படிச்சப்பக்கொஞ்சம் புரியறாப்பலே இருந்துச்சு( நேரம்,காலம் வந்துருச்சு போல!!) வி.மு.வெ.த,ன்னு முயன்று சில 'சோதனைப்பதிவு' போட்டுப் பார்த்தப்பஅட...வருது! வந்துருச்சு. ஆஹா வந்துருச்சுன்னு பாடாத குறை. ஓக்கே ஓக்கே.


சொல்லித்தந்த 'ஆசானுக்கு' நன்றி சொல்லிக்கலாமுன்னு பார்த்தா அவரோட மெயில் ஐடி தெரியலை. ப்ளொக்கர்'புரோபைல்' இல்லேங்குது. இதுக்காக சோர்ந்து போயிரலாமா? எதுக்கு பின்னே நமக்குன்னு பதிவு வச்சிருக்கறது? அதுலே போட்டாப் போய்ச் சேர்ந்துராது?( ஆர்மி போஸ்ட் ஆபீஸ்லே லெட்டருங்க போய்ச் சேர்றமாதிரி )


ஆசான் கிருபாசங்கருக்கு நன்றி. மனமார்ந்த நன்றி. ( இப்பக் கத்துக்கிட்டது பதிவுலே லிங்க் கொடுக்க மட்டுமே.)ஆமாம் கிருபா, இந்தப் பின்னூட்டங்களிலேகூட சிலபேர் இங்கேன்னு ஒரு லிங்க் கொடுக்கறாங்களே அது எப்படின்னுகொஞ்சம் சொல்லித்தாங்களேன் ப்ளீஸ்.


( படிச்சா படிச்சபடி நடக்கணுமுன்ற முறைப்படி இங்கே ஒரு 'இங்கே' கொடுத்துட்டேன். சரியா வந்திருக்கா?)

Wednesday, December 14, 2005

வீரண்ணா

ரொம்பநாளா வராத அதாவது 'உங்களுக்கு' வராத படங்களைப் பத்தி ஒண்ணும் பேசலை. ஆனா இந்த மெளனம் இனியும் நீடிக்கமுடியாத நிலமை.


சிங்கப்பூர் சீமான்கள் தயாரிப்பு. செய்யட்டும் செய்யட்டும். தமிழ் சினிமா எடுக்கணுமுன்னு ஒரு ஆசை நெடுங்காலமாஇருந்துருக்கு போல. G.N. தாஸ், M. நேரு, G. ராமதாஸ் தயாரிப்பு. சிங்கை வலைஞர்கள் சந்தோஷப்படட்டுமுன்னு இவுங்க பேரைத் தேடிப் போட்டேன்:-)



கதைக்காக அப்படி ஒண்ணும் மெனக்கெடலை. என்னாத்துக்குக் கஷ்டப்படறது? எல்லாம் தெரிஞ்ச கதையா இருந்தாலேபோதும். கண்டிப்பா 'பாஸ்' பண்ணிடலாம். பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வி மேலே, இருக்குற அதே நம்பிக்கை.



அகம்பாவம் பிடிச்ச பணக்கார அம்மா( புருஷனை மதிக்க மாட்டாங்க)- ம்

அம்மாவின் ஒரே பொண்ணு,அதுவரை ஊர்ப்பக்கமே வராம இருந்த படிச்ச மகள்-ம்

அம்மாவுக்கு ஒரு தம்பி( அக்கா மகளைக் கல்யாணம் கட்டக் காத்திருக்கறவர்)- ம்

மிலிட்டரி ஆஃபீஸரா இருந்து, சரியான நேரத்துக்கு ஊர் திரும்பற கதாநாயகன் -ம்

பணக்கார அம்மாவின் நன்றியுள்ள வேலைக்காரர்( நாயகனின் அப்பாவும் இவர்தான்) -ம்

நாயகனுக்கு ஒரு மொறைப் பொண்ணு, கல்யாணக் கனவோட இருக்கணும்- ம்

அம்மாவுக்குக் கொத்தடிமையா இருக்குற வாயில்லாப் பூச்சிகளான ஊர் ஜனங்கள் -ம்

அம்மாவுக்கேத்த அடியாளுங்க( நாயகன் கிட்டே அடிவாங்கணும்)-ம்

லிஸ்ட்டு எல்லாம் சரியா இருக்கா. ஆமா.


அடுத்த அம்சங்கள்:

நாயகன் அம்மாவோட, பொண்ணை 'ஆடை இல்லாத' ஒரு சந்தர்ப்பத்தில் ( பொண்ணூ மயங்கிக் கிடந்துச்சுங்க) பார்த்துக்காப்பாத்தறாரு. தமிழ்ப் பண்பாடுன்னு பொண்ணு அவரையே கல்யாணம் செஞ்சுக்குது அம்மாவை எதிர்த்துக்கிட்டு.


எத்தனை ஆயிரம் படம் பாத்திருப்பீங்க. இப்ப நீங்களே கதையைச் சொல்லுங்க பார்ப்போம்.ம் அட.சரியாச் சொல்லிட்டீங்களே!சபாஷ்!


நடிகர்கள்:

'மாவீரன்' நெப்போலியன் எம் எல் ஏ - இரு வேடங்களில் கலக்குறாராம்( எதை?)


பணக்கார அம்மா - பழம் பெரும் நடிகை- மலையாள ஷீலா (செம்மீன்) ஆங்... வீட்டுலே உக்காந்து போரடிக்காம ஒரு படம் பண்ணேன்னு இருக்கலாம்.


மற்றும் மணிவண்ணன், வடிவுக்கரசி, சுந்தரராஜன் & பலர்

இசை...அய்யோ கேக்காதீங்க. செளந்தர்யனாம்.

இயக்கம் - கலாநிதி

சொல்ல மறந்துட்டேனே.... காமெடி நம்ம வடிவேலு. 'ஈ' க்குப் பயப்படறார்.

வீரண்ணா பயங்கரமா கடிச்சதாலே இப்பத் தட்டச்சு செய்ய ஏலாம ஒத்தை விரலில்' டொக் டொக்'னு அடிச்சுக்கிட்டு இருக்கேன்.


நன்றி. வணக்கம்.

Tuesday, December 13, 2005

நியூஸிலாந்து பகுதி 34

அங்கங்கே சில ஆடுங்கன்னு மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததெல்லாம், ஒரு பத்து வருசத்துலே அஞ்சு லட்சமாப் போச்சு.ஏகப்பட்ட ஆளுங்க வரத்தொடங்கி, இப்ப என்னன்னா வேலை கொஞ்சமாவும், வேலையாளுங்க அதிகமாவும் ஆச்சுது.திடுக்குன்னு வேலை இல்லாம முழிச்சு நின்ன சிலர், ஆடுங்களை நிறைய வாங்கி அதை மந்தையாக்கி வளர்க்க ஆரம்பிச்சாங்க.


என்னாத்தை வளர்க்கறது? சோறு ஆக்கிப் போட்டா? அதான் மானாவரியா நிலம் கிடக்குல்லே. ஒரு அல்பத்தொகைகொடுத்தா பத்தாயிரம் ஏக்கர் பூமியை 'அரசாங்கம்' ஒத்திக்குக் கொடுத்துச்சாம். எங்கே பார்த்தாலும் பச்சைப்பசேர்னுஇருந்த புல்லுங்களைத் தின்னுட்டு அதுங்க பல்கிப் பெருகியதுமில்லாம மேல்வரும்படிக்கு வழி செஞ்சுச்சுங்க.ஆட்டு ரோமத்தை எடுத்து கம்பளி தயாரிக்க விக்க ஆரம்பிச்சாங்க. இதுலே சிலர், அண்டை நாடான 'ஆஸ்தராலியா'லேஇருந்து ஆடுங்களையே கப்பலிலே வரவழைச்சாங்க. 'ஆஸ்தராலியன் மெரீனோ ஆடு' ரொம்ப உயர்ந்த ரகமாம். வுல்பெரிய பிஸினஸ் ஆகிப் போச்சு.


அஞ்சு லட்சமா இருந்த ஆடுங்க இன்னும் ஒரு பத்து வருசத்துலே முப்பது லட்சமா ஆயி, இப்ப இன்னிக்குக் கணக்குலேஎங்களுக்கு ஆளுக்கு 12 ஆடு! நானூத்து எம்பது (480) லட்சம். போதுமா?


இப்பப் புதுத் தொழில் உருவாச்சு. ஆட்டுமந்தையை மேய்ப்பவர்கள். நிலத்துக்கு வேலி, எல்லைன்னு ஒண்ணும் இல்லாததாலேஅங்கங்கே குடிசை போட்டுக்கிட்டு மலைப் பாங்கான இடத்துலே ஆளுங்க மேய்ப்பர்களா வேலை செஞ்சாங்க. தினந்தினம்யாரு பத்தாயிரம் ஏக்கரைச் சுத்தி வர்றது? அதான் நாய் இருக்கே! நாய்ங்களுக்குத் தொழில் கிடைச்சது:-)


'ஷீப் டாக்'. ஷெப்பர்டு நாய் வளர்த்தா, நாய்ங்க ஆடுங்களை கூட்டமாக் கொண்டு போய் கொண்டுவந்துச்சுங்க.


புல் மட்டுமா இருக்கு? அங்கங்கே தானாய் வளந்து வானை முட்டற உசரத்துலே ஓங்கி நிக்கற மரங்களுக்குஅடுத்த ஆபத்து வந்துச்சு. மரங்களை வெட்டி, மரப்பலகையா அறுத்து வீடுங்க, கடைங்க, சர்ச்சு, பொதுக்கூடம்னு கட்டவும் ஆரம்பிச்சதுலே, குடிசை வீடுங்கல்லாம், மரவீடுங்களா மாற ஆரம்பிச்சது. ரிமு, கவ்ரின்னு தரமானமரங்கள். கவ்ரியெல்லாம் இங்கிலாந்துக்குப் போச்சு, கப்பல் கட்ட!. கவ்ரி மரங்களிலே இருந்து பிசின் வரும்பாருங்க,அதுக்கும் தேவை இருந்துச்சு. எதுக்கு? பெயிண்ட்டு, வார்னிஷ், கோந்துன்னு பலவித உபயோகம்.


சில மரங்கள் பிரமாண்டமான சைஸு. மரம் அறுக்கற ரம்பம் சிலது மூணரை மீட்டர் நீளமாம். அம்மாடியோவ்!


மண்ணாசை கூடவே 'மூவாசை' யிலே இன்னொரு ஆசையும் ஏற்பட்டுச்சு. 1862லே தங்கம் இங்கே இருக்கறது தெரிஞ்சது. தெற்குத்தீவுலே 'ஒடாகோ' என்ற இடத்துலே இருக்கற நகர சபை சொல்லுச்சு, தங்கம் இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்றவங்களுக்கு இனாம் 500 பவுண்டு. அப்ப்பா, எவ்வ்ளோ காசு!


டுஆபெகா(Tuapeka) என்ற இடத்துலே தங்கம் இருக்கறதா அரசப் புரசலாப் பேச்சு வந்தவுடனே இங்கே அப்பஇருந்த ஒரு ஆஸ்தராலியர், கேப்ரியல் ரீட் என்றவர் ஒரு டெண்ட், ஸ்பேடு, இறைச்சிவெட்டற கத்தி, கம்பளிப்போர்வைகளோட ( இதைத்தான் கத்தி கப்டான்னு சொல்றது இல்லே?) ஒரு தகரடின்னையும் எடுத்துக்கிட்டுக் கிளம்பினார்.


ஒரு பத்துமணி நேர உழைப்புலே 7 அவுன்ஸ் தங்கத்தைச் சுரண்டிட்டார். இந்த விஷயம் வெளியிலே தெரிஞ்சதும்கூட்டங்கூட்டமா ஜனங்க 'தங்கமே தங்கம்'னு படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சொன்னா நம்பமாட்டீங்க, ஏறக்குறைய11000 பேர் டெண்ட் போட்டுக்கிட்டு அந்தப் பக்கத்துலே தங்கம் தேடிக்கிட்டு இருந்தாங்களாம்.


1862 லே தங்க நிறைய இருக்கறது உறுதிப்பட்டுப் போனவுடனே கொஞ்சம் கொஞ்சமா தங்கச் சுரங்கம் தோண்டறகம்பெனிங்க உருவாச்சு. அப்பவே ச்சைனாவுலே இருந்து கொஞ்சம் பேர் இந்த வேலைக்கு வந்துட்டாங்களாம். இந்தச்சுரங்கத் தொழிலாளர்களுக்கான சாமான்கள், ஸ்பெஷல் உடுப்பு, தங்கம் அரிச்செடுக்கற பாத்திரம்னு விக்கற கடைகளும்ஆரம்பிச்சது. 1874 முதல் 1881 வரை அந்த 7 வருசத்துலெ இங்கெ வந்து சேர்ந்த ச்சைனாக்காரங்க சுமார் 5000.இதுலே சிலர் மட்டும்தான் திரும்ப அவுங்க ஊருக்குப் போனவுங்க. மத்தவங்க எல்லாம் இங்கேயே தங்கிட்டாங்க.ஆச்சுஏழெட்டு தலைமுறை!


நம்ம ஊர்லே கட்டிடவேலை செய்யற சித்தாளுங்க 'பாண்டி'ன்னு, தகரத்துலே செஞ்ச அதிகம் குழி இல்லாதஒண்ணு வச்சிருப்பாங்க. அதுலேதான் சிமெண்டுக் கலவையைத் தூக்கிக்கிட்டு சாரத்துமேலே எல்லாம் கொண்டு போவாங்க.அதுபோல ஒண்ணுதான் இங்கே தங்கம் அரிச்செடுக்கற பாத்திரம். தங்கச் சுரங்கத்துலே இருந்து வெளியே வர்றதண்ணீர் ஒரு கால்வாயா ஓடுமில்லையா? அங்கே தண்ணீரோடு சேர்த்து மண்ணை அள்ளி, மெதுமெதுவா ஆட்டி ஆட்டிஅப்படியே அரிச்செடுப்பாங்க. நம்மூர்லே சோறாக்கறதுக்கு அரிசி அரிப்பாங்களெ அது போல. மண்ணெல்லாம் போகப் போகஅடியிலே தங்கம் மணல்போல நிக்கும்.


இங்கே இன்னும் சில இடங்களிலே 'கோல்ட் பானிங்' (Gold Panning) ஒரு டூரிஸ்ட்டு அட்ராக்ஷன். அஞ்சு டாலர்கொடுத்தா ஒரு தகரத் தட்டும் ச்சின்ன மண்வெட்டியும் குடுப்பாங்க. அவுங்க ஒரு இடத்தையும் காமிப்பாங்க. அங்கே கால்வாய் ஓடிக்கிட்டு இருக்கும். அந்தமண்வெட்டியாலே மண்ணை வாரி அந்தத் தட்டுலே போட்டுக்கிட்டு தண்ணிக்கிட்டேஉக்காந்து அரிச்சு அரிச்சு எடுக்கணும். நாங்களும் ஒருக்கா இங்கே போனோம். அரிச்சு அரிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும்வர்றமாதிரி இல்லே. ரொம்பக் கொஞ்சமா மினுக் மினுக்குன்னு தூளா அடியிலே தங்குச்சு. நான் மகள் பார்க்காத சமயம்மெதுவா என் கழுத்துச் செயினை மண்ணுக்குள்ளே நுழைச்சுட்டு அப்படியே உக்காந்து அரிச்சுக்கிட்டே இருந்தேன்.மகள் பாக்கற சமயம் இன்னும் கொஞ்சம் தண்ணீருலே அரிச்சப்ப பளிச்சுன்னு தங்கம் தெரிஞ்சது. மகளுக்குஆச்சரியமாப் போச்சு,' டாடி டாடி, அம்மாவுக்குத் தங்கம் கிடைச்சிருச்சு'ன்னு கத்துனதும் இவரும் ஓடிவந்தார்.அலசுனதும் செயின் ஜொலிச்சது. நான் சொன்னேன், 'இப்பெல்லாம் சுரங்கத்துலே நகையாவே கிடைக்குது போல!'ன்னு.உத்துப் பாத்துக்கிட்டிருந்த மகள், 'இது நம்ம செயின் போல இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்'னு சொன்னா. அப்ப அரிச்சமணல் தங்கப் பொடி இன்னும் நம்ம வீட்டுலே இருக்கு. கஷ்டப்பட்டுச் சேர்த்த தங்கத்தை விட்டுற முடியுமா?:-)


டேன் எல்லிஸனும், 'ஹகரிஆ ஹயிரோ' வும் அந்தக் காலத்துலே கோல்ட் பானிங் செய்ய 'ஷார்டோவர்'நதியைக்கடந்து போனப்ப அவுங்க நாய் தண்ணிலே அடிச்சுக்கிட்டுப் போயிருச்சு. கொஞ்சதூரம் தண்ணியிலே போனநாய்,மெதுவா நீந்தி தண்ணியிலே மூழ்கிக்கிடந்த ஒரு பாறையிலே ஏறித் தப்பிச்சுக்கிச்சு. அங்கே இருந்து குலைச்சுக்கிட்டேஇருந்துச்சு. அந்தச் சத்தம் வந்த திசையிலே நாயைத் தேடிக்கிட்டே போன இவுங்க ரெண்டு பேரும் , மெதுவாஅந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தாங்க. அந்தப் பாறை இடுக்குலே பார்த்தா....... தங்ங்ங்ங்கம்! ஜொலிக்குது!! ரெண்டுபேரும்அங்கேயே உக்கார்ந்து மெதுமெதுவா சுரண்டி எடுத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? எட்டரைக் கிலோ!!!!!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&