Sunday, December 25, 2005

கிறிஸ்மஸ் இன் கிறைஸ்ட்சர்ச்

ஒரு ஆறேழு வருசமா கிறிஸ்மஸ் பண்டிகையை வழக்கமான முறையிலிருந்து வித்தியாசமாத்தான் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்.முந்தியெல்லாம் இது ஒரு லீவு நாள். குழந்தை ஏமாந்துருவாளேன்னு நம்ம வீட்டு மேரி ஆன் (சேண்ட்டாவின் மனைவி) பரிசு வாங்கி ஒளிச்சுவச்சு, பண்டிகை நாள் பொழுது விடிஞ்சதும் ராத்திரி சேண்ட்டா கொண்டுவந்து வச்சுட்டுப் போயிருக்காருன்னு சொல்லிக்கொடுக்கறதுதான்.


இந்த ஊருக்கு வந்த புதுசுலே மட்டும், ஒரு கிறிஸ்மஸ் மரம் ( பைன் மரக்கிளை) வாங்கி அதை நட்டு வைக்கபெரிய தொட்டி இல்லாம, வெளியே முன்புறம் இருந்த புல்தரையில் குழி வெட்டி நட்டு வச்சோம். அப்புறம்அதை எடுத்து 'டம்ப்' செய்ய ட்ரைய்லருக்கு 10 டாலர், டம்ப்பிங் சார்ஜ் 5ன்னு 15$ செலவு. மரம் என்னவோ 5$தான்.


அடுத்தவருசமும் இதுபோலப் படமுடியாதுன்னு அதே 20 $க்கு ஒரு டேபிள் டாப் லே வைக்கற ரெண்டு அடி உயரகிறிஸ்மஸ் மரம் வாங்கியாச்சு. அலங்காரத்துக்கு 20 ச்சின்னச் சின்ன டெகரேஷன்கள் மரத்தோடு இலவசமாக் கிடைச்சது. அதோட விட்டிருக்கலாம். ஆனா இங்கே கிறிஸ்மஸ் மறுநாள் பாக்ஸிங் டே க்கு எல்லாக் கடைகளிலும் இந்த டெகரேஷன் வகையறாங்கெல்லாம் அரை விலைக்குக் கிடைக்கும். வாங்கி வச்சா அடுத்த வருசத்துக்கு ஆகுமேன்னு கொஞ்சம்வாங்கிக்கறதுதான். வருசாவருசம் வாங்கி வாங்கி, இப்ப அந்தச் சின்ன ரெண்டடி உயர மரத்துக்கு அதோட 'கிளை' முறிஞ்சு விழற மாதிரி அலங்காரத்தின் பளு கூடிப்போச்சு. அதான் 'பீலிப்பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்'! சும்மா சொல்லக்கூடாது, இந்த வள்ளுவர் வேற, எல்லாத்துக்கும் சொல்லிவச்சுட்டாரேய்யா. இப்ப நான் எதைச் சொன்னாலும் பழசாத்தானே இருக்கு.


டிசம்பர் மாசம் வந்தவுடனே கிறிஸ்மஸ் மர அலங்காரம் செஞ்சு நானும் கொண்டாடுரேன்னு பாவ்லா காமிச்சுக்கிட்டு இருந்ததுக்கு ஒரு முடிவு வந்துச்சு. எட்டு வருசத்து முந்தி இங்கே பி.ஆர். வாங்கிகிட்டு ஒரு 12 குடும்பங்கள் ஏறக்குறையஒரே சமயத்துலே இங்கே வந்தாங்க. எல்லோரும் கேரள மாநிலத்துக்காரர்கள். ஆஹா... நம்மட மலையாளம் கிட்டத்தட்ட மறக்குற நிலையிலே இருக்கு. இப்ப அதுக்கு மறுவாழ்வு கொடுத்துரணும். எல்லோரும் கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.அதனால் என்ன? 'மதம்' எனக்கு இன்னும் பிடிக்கலைதானே?


அதுக்கு அடுத்த வருசம் முதல் கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஓணம் எல்லாம் சேர்ந்து கொண்டாடினோம். போனவருசம்முறைப்படி கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷன் உருவாச்சு. கொண்டாட்டங்கள் இன்னும் அருமையா ஆச்சு.இதோ, இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு என்னைக் கலை, கலாச்சாரக் (காவலாளியா ?)ஒருங்கிணப்பாளர் ஆக்கிட்டாங்க.


பாரம்பர்யமா நடத்தணுமுன்ற ச்சுமதலை ஏற்பட்டுடுச்சு. இந்த நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையா'மார்க்கம் களி'ன்னு ஒரு ஐட்டம் செஞ்சோம். 'களி' செய்யறதுதான் எனக்குக் கைவந்த கலையாச்சே:-)


ஐய்ய, இது வேற களிங்க . திங்கறது இல்லை. ஆடறது.


கேரளத்துப் பெண்கள் ஓணம் பண்டிகை சமயத்தில் திருவாதிரைக் களி ன்னு ஒண்ணு செய்வாங்க தெரியுமா.நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டுலே அந்தக் காலத்துலே இதைக் கேள்விப்பட்டு நாமும் செய்யலாமேன்னு,அரிசியை வறுத்து ரவை போலாக்கி அதை வெல்லப்பாகு வச்சுக் கிளறி ஒரு களி செய்வாங்க. அதுவுஞ்சரி. நமக்குத்தெரிஞ்சதெல்லாம் திங்கும் களிதானே?


மலையாள நாட்டுலே களின்னு சொன்னா ஆட்டம். கதை சொல்லி ஆடறது கதகளி,படகு ஓட்டி விளையாடுறது 'வள்ளம் களி'. திருவாதிரை தினம்வீட்டு முற்றத்துலே குத்து விளக்கு ஏற்றி வச்சு,பெண்கள் நல்ல ஆடை ஆபரணங்கள் அணிஞ்சு, கடவுள் பாட்டுக்களைப் பாடிக் கும்மி அடித்து ஆடுவது 'கைகொட்டிக் களி' இப்படி.


கிறிஸ்த்துவமதம் கேரளத்துலே பரவ ஆரம்பிச்சு, ஏராளமான குடும்பங்கள் மதம் மாறினார்கள். அதுவரையில் இந்துக்களாக இருந்து அவுங்க செஞ்ச எல்லாத்தையும் கொஞ்சம் கிறிஸ்த்துவ 'டச்' கொடுத்து அவுங்களுக்கேத்தபடி மாத்திக்கிட்டாங்க.குத்து விளக்கு இப்பவும் கிறிஸ்த்தியானிகள் வீட்டிலே இருக்கு. என்ன, ஒரு சின்ன மாறுதலோடு. விளக்கின் மேல் புறம்அன்னப் பட்சி, மயில், கூம்புன்னு இருக்கறதெல்லாம் சிலுவை அடையாளமாயிருச்சு.
அந்தச் சிலுவை விளக்கை நடுவுலே வச்சு, அதைச் சுத்தி கடவுள் யேசுவைப் பற்றிப் பாடி கை கொட்டி ஆடறதுதான் புதுவித மார்க்கம் களி. கிறிஸ்த்துவ மார்க்கம் ஆளுங்க செய்யறதாலே 'மார்க்கம்' ன்ற வார்த்தை ஒட்டியிருக்குமோ?


அதுசரி. யாராவது நாட்டிலே கேரள கிறிஸ்த்துவர்கள் வீடுகளிலெ இருக்கற பிராயம் கூடிய ஸ்த்ரீகள் பள்ளிக்குப் போகறதைப்பாத்திருக்கீங்களா?


ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க. ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்' 'பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்கா மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'போல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னுசிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.


மேலே சொன்ன அலங்காரத்தோட , இந்த மேக்கா மோதரம் மொதக்கொண்டு நாங்களே செஞ்சு இந்தக் களியை இந்தவருசம் மேடை ஏத்தி இருக்கோம். 11 வயசுமுதல், 70 வரை வயசுள்ள பெண்கள் இதுலே பங்கெடுத்துக் கிட்டாங்க.ஒரு வாரம் பிராக்ட்டீஸ், அதுக்குள்ளேயே எல்லாருக்கும் சட்டை தைச்சது, குனுக்கு செஞ்சதுன்னு இருந்தோம்.


மறந்துபோன பழைய நாடன் களி( ஃபோக் டான்ஸ்)யைப் பார்த்த நம்ம ஜனங்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டுட்டாங்க.


இதோட ஒரு படம் இத்துடன் போடறேன். படத்தின் தரம் சரியா இல்லாததுக்கு தமிழில் ரமணாவுக்குப் பிடிக்காத வார்த்தை, ப்ளீஸ்.


'மெனு'வை இன்னொரு நாள் சொல்றேனே,ப்ளீஸ்....

10 comments:

said...

ஒலகத்துல எந்த மூலைக்குபோனாலும் வாழ்க்கையை சுவாரசியமா வைச்சிருக்கறதுல பண்டிகைகள் ஒரு முக்கிய காரணமா இருக்கு...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் துளசியக்கா!!!

(சமையல், கைவேலைப்பாடுகள்,நடனம், தோட்டக்கலை, சுகமான எழுத்துநடை.. அக்கா.. எதைத்தான் விட்டுவைச்சிருக்கீங்க?? :) )

said...

இளவஞ்சி,

//ஒலகத்துல எந்த மூலைக்குபோனாலும் வாழ்க்கையை சுவாரசியமா வைச்சிருக்கறதுல பண்டிகைகள் ஒரு முக்கிய காரணமா இருக்கு... //

இது சத்தியமான வார்த்தை.

இன்னிக்கு லீவாச்சே. யாரு இங்கே வரப்போறான்னு நினைச்சேன்.

உங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

said...

//கேரளத்துப் பெண்கள் ஓணம் பண்டிகை சமயத்தில் திருவாதிரைக் களி ன்னு ஒண்ணு செய்வாங்க தெரியுமா.நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டுலே அந்தக் காலத்துலே இதைக் கேள்விப்பட்டு நாமும் செய்யலாமேன்னு,அரிசியை வறுத்து ரவை போலாக்கி அதை வெல்லப்பாகு வச்சுக் கிளறி ஒரு களி செய்வாங்க. அதுவுஞ்சரி. நமக்குத்தெரிஞ்சதெல்லாம் திங்கும் களிதானே?//


:-(

said...

அட,
இன்னிக்கும் களியா? களிக்.. சே..கலக்குங்க..

Merry Christmas!

--நேத்திக்குத்தான் ஒருவழியா மோர்க்குழம்பு. சூப்பரா இருந்துது. டேங்க்ஸ்.

said...

பண்டிகை ஜனங்களுக்கு தர்ற மகிழ்ச்சிதான் மேலும் உயிர்ப்பா வாழவைக்குது மீதி நாளுங்கள.
படத்துல எங்கயாவது நீங்க இருக்கீங்களாம்மான்னு தேடித்தேடி... :-)

said...

என்னங்க ஞான்ஸ்,

எதுக்குப்பா வருத்தம்?

களி'ன்னவுடனே எனக்கு ஞாபகம் வர்றது என்னோட 'களி'தான்.

said...

ராம்ஸ்,

சேம் டு யூ

நாலு தடவை செஞ்சுட்டா நீங்கதான் 'டாக்டர்'

மோர்க்குழம்பைச் சொன்னேன்:-)

said...

மது,

நாந்தானே ஆட்டுவிச்சவள்:-)

நாங்க எட்டுபேர் சேர்ந்து (எல்லாம் பெண்கள்)'யெளவனம்'னு
ஒரு ச்சின்ன நகைச்சுவை நாடகம் போட்டோம்.

நாந்தான் மெயின் ரோல் ஹிஹிஹிஹி......

said...

ரொம்ப நல்லா களியாட்டம் போடறீங்க போலிருக்கு. ம்ம்ம்ம்.

//ஓணம் பண்டிகை சமயத்தில் திருவாதிரைக் களி //

அது திருவாதிரைக் களியா? திருவாதிரைக்களின்னா திருவாதிரை அன்று தானே ஆடுவாங்க? திருவோணத்தன்னைக்கு ஆடுவாங்களா? இல்லை ரெண்டு களிக்கும் ஆதிரக்களின்னு தான் பேரா?

said...

குமரன்,
//ரெண்டு களிக்கும் ஆதிரக்களின்னு தான் பேரா? //

அதே!