Wednesday, January 25, 2006

பொட்டியை மூடியாச்



நட்பு வட்டத்தின் உபதேசத்தின்படி திரும்ப வரும்வரை பின்னூட்டப் பொட்டியை மூடிவச்சிருக்கேன்.

அதுவரை பூக்களைப் பார்த்துக்கிட்டுச் சமர்த்தாக இருங்க மக்களே;-)

மேலெ இருக்கறதுல்லாம் நம்ம வீட்டுலே எடுத்த படங்கள்தான்.

தாமரையும்(!) லொபெல்லியாப் பூக்களும்.

Tuesday, January 24, 2006

லீவு லெட்டர்

அன்பார்ந்த வலைஞர்களே,


அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி.நான் கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு வெளிநாடு போறேன். (யாருங்க அங்கே, நிம்மதிப் பெருமூச்சு விடறது?) அங்கிருந்து உங்க பதிவுகள் சிலதைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் பின்னூட்டமெல்லாம் 'தமிழில்'போடமுடியுமான்னு தெரியலை. முடிஞ்சவரை ஆங்கிலத்திலே பின்னூட்டம் கொடுக்கலாம்.இல்லாட்டா,நம்ம பின்னூட்டத்தை எதிர்பார்த்து நிக்கறவங்களுக்கு ஏமாத்தமாயிராது?


இந்தப் பின்னூட்டங்களைப் பத்திச் சொல்றப்ப இன்னொரு விஷயம் ஞாபகம் வருது.நம்ம டிபிஆர் ஜோசஃப் அவர்களோட பதிவுலே, பின்னூட்டங்கள் போதுமான அளவு வரலையேன்னு அவர் கவலைப்பட்டதுக்கு ஆறுதலா நம்ம குமரன், 'பின்னூட்டக் கலையை வளர்த்தவங்களிலே துளசியும் ஒருத்தர்'னு புகழ்ந்துட்டார். படிச்சவுடனே ரொம்ப சந்தோஷமாஇருந்துச்சு. எதையாவது வளர்த்தவரை விசேஷம்தானே! 'ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா.நான் பின்னூட்டம் வளக்கறேன். இல்லையா ஆத்தா?'


ஆமாம், இதுவரைக்கும் எனக்குப் புரியாத விஷயம் இந்தப் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் வேணுமா,இல்லை வேணாமான்றதுதான்.


நம்ம வீடுதேடி வந்து, நாம கிறுக்கியதைப் படிச்சுட்டு,ஒருத்தர் அவரோட வேலை மெனக்கெட ஒருபின்னூட்டம், நல்லா இருக்குன்னோ, இல்லை நீ சொல்றது தப்புன்னொ சொல்றார். வந்தவங்களைவாங்கன்னு சொல்லி, அவுங்க சொன்னதுக்கு பதில் தரணுமா இல்லை வர்றவங்க எல்லாம் வந்துசொல்றதை எல்லாம் சொல்லிட்டுப் போங்க. நாலு நாள் கழிச்சு, 'பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்நன்றி'ன்னு சொல்லி முடிச்சுக்கணுமா?


இங்கேதான் வருது 'பின்னூட்டம் வளர்ப்புக்கலை'. சிலப்ப தனித்தனியாக, சிலப்ப கூட்டமா நன்றி சொல்லிக்கிட்டுவந்தேன். வளர்றது அதும்பாட்டுக்கு வளருது. ஆனா பின்னூட்டங்களொட எண்ணிக்கையைப் பார்த்து ஒரு பதிவோடதரத்தைச் சொல்ல முடியாது. எழுதுன பதிவு நமக்குத் திருப்தியா இருந்தா அது நல்ல பதிவு. தினம் 'கவுண்டரை'ப்பார்த்தமா, அதுலே நம்ம பதிவுக்கு ஒரு நாளுக்கு வந்த எண்ணிக்கையைக் கணக்கு எடுத்து அதை ரெண்டாலே வகுத்தோமான்னுஇருக்கணும். அதான் முணுக் முணுக்குன்னு நாமே பதிவுக்குப் போய் எதாவது வந்திருக்கான்னு பாக்கறமில்லே?


இப்ப நம்ம மெயில் ஐடியை செட்டிங்லே போட்டபிறகு அப்பப்ப வீட்டுவாசலைத் தேடி ஓடாம இருக்க முடியுது. பின்னூட்டம்வந்துச்சுன்னா நமக்கு 'போஸ்ட்மேன்' வந்துட்டுப் போறாருல்லெ!


'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. மாலை முழுதும் விளையாட்டு'ன்னுமுண்டாசு சொன்னபடியேதான் இத்தனை நாள் இருந்துச்சு.


காலையிலே எழுந்து கையிலே ஒரு காஃபியோட வந்து கணினி திறந்து ஒரே படிப்பு. கூடவே கொஞ்சம் பாட்டுஅதுவும் கணினி மூலமாத்தான். மாலையானதும் விளையாட்டு. அதுவும் கணினியிலேதான்'னு நாள் போய்க்கிட்டு இருந்துச்சு. இனி கொஞ்ச நாளைக்கு இந்த ரொட்டீனை மாத்திக்கணும். கணினி மையம் திறக்கவே ஒம்போதுமணி ஆயிருதாமே(-:


என்னவோ சொல்ல ஆரம்பிச்சு எங்கியோ போயிட்டேன்.

ம்ம்ம்ம்ம்ம்........லீவுலே போறேன். நியூஸித்தொடர்அம்போன்னு நிக்குது. வந்துதான் மறுபடி விட்ட இடத்துலே இருந்து தொடரணும். டீச்சர் தொலைஞ்சான்னு மாணவர்கள் ஒரு ரெண்டு மாசத்துக்குச் சந்தோஷம் கொண்டாடிக்கலாம்.


இதோ போனேன், இதோ வந்தேன்னு போயிட்டு வந்து தாளிக்கிறேன்.


அப்ப... போயிட்டு வரட்டுமா மக்களே.

Monday, January 23, 2006

படக்கதை

விவரமாச் சொல்லலாமுன்னா இந்தத் 'தன்னடக்கம்' வந்து தடுக்குதேப்பா, இது என்ன அநியாயம்?

முப்பெரும் நிகழ்ச்சியாக தைபொங்கல் விழா நடத்தப்பட்டது நம்ம தமிழ்ச் சங்கத்துலே.

தைப்பொங்கல்

தமிழருவி ( ஆண்டு மலர்) வெளியீடு

சங்கத்தின் 10வது பிறந்த நாள் விழா.

மத்த விவரங்கள், புகைபடங்கள் எல்லாம் இங்கே பார்க்கலாம்.

உங்கள் பொறுமைக்கு நன்றி.

13 'கூடாது' கட்டளைகள்.


'காலை எழுந்தவுடன் படிப்பு'ன்ற நியமத்தை மாத்தமுடியாம கொஞ்சம் படிச்சுக்கிட்டு இருந்தப்பக் கண்ணிலே பட்டது,'பெண்கள் செய்யக்கூடாத 13 காரியங்கள்'!

1 இருட்டுவழியிலே தனியா நடந்துபோகக் கூடாது.( பார்ட்டிகளிலே கலந்துக்கிட்டு அர்த்தராத்திரியிலே தனியாநடந்துவர்றப்ப தவறான ஆளுங்க கிட்டே மாட்டிக்கிட்டு பலவிதமான அபாயங்களை நேரிடலாம்)


2. மனம், மொழி மெய்களால் துன்புறுத்தும் துணையுடன் இருக்கக்கூடாது.


3. பாதுகாப்பிலாம உறவு கொள்ளக்கூடாது ( இது குஷ்பு மேட்டர்தானே?)


4. ஜங்க் ஃபுட் அதாங்க சிறுதீனி பொழுதண்ணிக்கும் சாப்பிடக்கூடாது.


5. மயக்க மருந்து பழக்கம் கூடாது.


6. புகைப் பிடிக்கும் பழக்கம் கூடாது


7. ஹிட்ச் ஹைக்கிங் Hitchhike.(இதுக்குத் தமிழிலிலே என்ன சொல்றது?
ஊரூராச் சுத்தறதா?) கூடாது.


8.முன்பின் அறிமுகம் இல்லாதவங்களுக்கு நம்ம கார்லே 'லிஃப்ட்' கொடுக்கக்கூடாது.


9. மதுபானம் குடிச்சுட்டுக் காரோட்டிக்கிட்டுப் போகக்கூடாது.


10. கடை, உணவகம் இப்படி எங்கெல்லாம் பணம் கொடுத்துப் பெறும் சேவைகளில் குறைபாடு இருந்தால் அதை ஏத்துக்கிட்டுச் சும்மா இருக்கக்கூடாது. (Don't accept shoddy service. If service staff are rude, complain to a manager. Don't take bad service lying down - you are a paying customer and deserve to be treated well. If you don't make noise about bad service, you, and other customers, will be treated in the same manner again. )


11. கைத்தொலைப்பேசியை வீட்டுலே வச்சிட்டு வெளியே போகக்கூடாது.( இது எனக்காகப் போட்டுருப்பாங்களோ? )


12. கைப்பையைக் கார் இருக்கையிலே வச்சிட்டுப் போகக்கூடாது.


13. தானியங்கியிலே பணம் எடுக்க நமக்குன்னு உள்ள 'பின் நம்பரை'ATM PIN யாருக்கும் சொல்லக்கூடாது.


எல்லாம் சரிதான். இது ஆண், பெண் என்ற வேறுபாடே இல்லாம இரு பாலர்களுக்கும் பொருத்தம்தான். ஆனாஇதை என்னாத்துக்குக் 'பெண்களுக்கானது'ன்னு குறிப்பிட்டுச் சொல்லி இருக்காங்கன்னே புரியலைங்களே(-:


அவுங்களுக்கென்ன சொல்லிட்டுப்போயாச்சு, அகப்பட்டது நானல்லவா?உங்களுக்காவது புரிஞ்சதுங்களா?


ச்சும்மா ஒரு படம் வருது. அது என்னன்னு பார்த்துச் சொல்லுங்க.

Friday, January 20, 2006

புத்தம் புதிய புத்தகமே


நான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த லைப்ரரியை 'ஊத்தி மூடியாச்சு;ன்னு சொல்லிக்கிட்டுஇருந்தேனே, யாருக்காவது நினைவு இருக்கா? ( ஆமாம். பொல்லாத விஷயம், ஞாபகத்துலேவேறவச்சுக்கணுமாக்கும்னு யாரோ....... யாரோ என்ன யாரோ எல்லாம் நம்ம மனசாட்சிதான் குரல் கொடுக்குது!)


பக்கத்துலேயே ஒரு 500 மீட்டர் தூரத்துலே நம்ம நகராட்சி புது நூலகம் ஒண்ணைக் கட்டத்துவங்கிவேலை அநேகமா முடிஞ்சுபோச்சு. வர்ற திங்கட்க்கிழமை புது நூலகம் அதிகார பூர்வமா திறக்கப்படும்.


அதுக்கு முன்னாலே, என்னைப் போல வேலையை இழந்த(!) நூலகர்களுக்கு இன்னிக்கே ஒரு விசேஷஅழைப்புக் கொடுத்துக் கூப்புட்டு இருந்தாங்க. நமக்குத்தான் முதல் அழைப்பாம்!


சரின்னு போனேன். நம்ம காசு எப்படியெல்லாம் உபயோகமாகுதுன்னு பார்க்கத்தான். அதான் வீட்டுவரின்னுஏகப்பட்டது வாங்கிடறாங்களே!
வாசலிலேயே வரவேற்புக்காக நின்னுக்கிட்டு இருந்தவங்கதான் புது லைப்ரரியின் தலைமை அதிகாரியாம்.இனிப்பாப் பேசி உள்ளெ கூப்புட்டுக்கிட்டுப்போய் ஒரு கூடத்துலே உக்காரவச்சாங்க. நாங்க, நகரசபை கவுன்சிலர்கள், லைப்ரரி கட்ட இடம் கொடுத்த புண்ணியவான், அங்கே வேலை செய்யப்போற சிலர்,ஒவ்வொரு பிரிவுக்கும் புத்தகம் ஏற்பாடு செஞ்சவங்கன்னு சிலர்னு ஒரு முப்பதுபேர் இருந்தோம்.


வழக்கம்போல எல்லாரையும் வரவேற்று, அறிமுகப்படலம் எல்லாம் முடிச்சு, 'ஓப்பன் சிஸமே'ன்னு உள்பக்கக் கதவு திறக்க எங்களை உள்ளே கொண்டு போனாங்க.


அட்டகாசமா அடுக்கி வச்சுருக்கற புதுப் புத்தகங்கள்,பளபளன்னு கண்ணைப் பறிக்குது. ச்சும்மாப் பார்த்தா, அது ஒரு பெரிய ஹால்தான். நடுவிலே புத்தக அடுக்குகள். அங்கங்கே வாசகர்கள் உக்காந்துபடிக்க நல்ல சோஃபாக்கள், நாமே புத்தகங்களைப்பற்றிய விவரங்களைத் தேடிக்க நிறைய இடத்துலே கணினிகள், ஒரு காஃபி ஷாப் ( தின்னுக்கிட்டே புஸ்தகம் படிக்கவாம். அட!நம்ம பழக்கம் இவுங்களுக்குஎப்படித் தெரிஞ்சது?) மேலும் இன்ட்டர் நெட் வசதி, சிடி ரைட்டர் வசதி (இதுக்கெல்லாம் காசு)ன்னுஏகப்பட்ட வசதிகள்.


இப்போதைக்கு அம்பதாயிரம் புத்தகங்கள் வச்சிருக்காங்களாம். அதுலே குழந்தைகள் பிரிவு ரொம்பநல்லா இருக்கு. பெரியவங்க பிரிவுலே இருக்கற ஃபர்னிச்சர்ங்க டிஸைனிலே குட்டிக் குட்டியாமேசை, நாற்காலிகள். சூப்பர் போங்க!


ம்யூசிக் செக்ஷன் ஜோர். புத்தம் புது டிவிடிக்கள். ஒரு வாரம் வச்சுக்கலாமாம். வாடகை ஒரே ஒரு டாலர்! அடிச்சேன் ப்ரைஸ்!


இந்தக் கட்டிடம் கட்ட இடம் கொடுத்தது இங்கே இருக்கற ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடம்தான். அவுங்கபள்ளிக்கூடப் பசங்களுக்கும் இங்கே வந்து ஸ்பெஷல் வகுப்பு நடத்திக்கலாமென்ற வசதிக்காக மூணு பெரியஅறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கு. ஒரு அறையிலே 40 கணினி வசதி இருக்கு. பசங்க கொடுத்து வச்சவங்கதான்.


வெளியே தோட்டமும் புதுவிதமா இருந்தது. இங்கே இருக்கற ஒரு ஆற்றுப்படுகை மாடலிலே இருந்துச்சு.வைமாகாரிரி ஆறு. அதுக்குத் தண்ணீர் பாய்ச்ச மழைநீரே போதும் என்ற வகையிலே அமைச்சிருக்காங்க.


முழு நூலகமும் குளிர்சாதன வசதி செய்யலை. உள்ளெ வெப்ப நிலை கூடும்போது , ஜன்னல்கள் தானே திறந்து புதுக்காத்து வருமாம். தேவைக்குத்தக்கபடி தானே மூடித்திறக்கற ஜன்னல்களாம்.


நம்முடைய பழைய லைப்ரரி கார்டைக் கொடுத்துட்டு புதுசு வாங்கிக்கலாமாம். அதையும் மொத ஆளாமாத்தி வாங்கிக்கிட்டேன்.
எங்களுக்காக ஒரு தேநீர் விருந்தும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த ஹால் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்இடமாவும், பொது ஜனங்களுக்குத் தேவைப்பட்டா குறைந்த வாடகையில் ஃபங்ஷன் ஹாலாவும் உபயோகப்படுமாம்.


இலாபநோக்கு இல்லாத மீட்டிங் நடத்தணுமுன்னா இலவசமாவும் கிடைக்குமாம். அப்படிப்போடு. மனசுலே வச்சுக்கணும்.


போனதுக்குக் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். அதுலெ ரெண்டு உங்களுக்குச் சுடச்சுட இதோ!

Thursday, January 19, 2006

சென்னை, பெங்களூரு வலைஞர்களே,

இது பழைய பதிவு. மீண்டும் பொங்கியதன் காரணம் தெரியவில்லை.
உங்களையெல்லாம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.உங்க தொலைபேசி எண்களை அனுப்பி வச்சீங்கன்னா, உங்க ஊருக்கு வந்ததும்தொடர்பு கொள்வேன்.

இதுவரை எழுத்து மூலமே பரிச்சயப்பட்டவர்களின் முகங்களைக் காணும் ஆவலில்இருக்கேன்.

மற்றவை நேரில்.

என்றும் அன்புடன்,
துளசி.

பதிவு போரடிக்காம இருக்கச் சும்மா ஒரு படம் போட்டு வச்சுருக்கேன்.

இது நியூஸியிலெ கிடைக்கிற பாவா சிப்பி.

Sunday, January 15, 2006

பட்டை ஜுரம்.


பட்டை பட்டைன்னு ஒரு ரெண்டு வாரமா வந்துக்கிட்டு இருந்துதா, முதல்லே அது ஏதோதொழில்நுட்பம். நமக்கும் அதுக்கும் காத தூரமுன்னு இருந்துட்டேன். உதவிக்கு நம்ம'குடும்பத்துலே' யாராவது வருவாங்கன்ற அதீத நம்பிக்கை.


அதுலெகூடப் பாருங்க, பழைய அழிக்கணுமா வேணாமான்றதுதான் தலையைப் பிச்சுக்கறகேள்வியா இருந்துச்சு. நாள் இருக்கேன்னு பார்த்துக்கிட்டு இருக்கறப்பவே பரபரன்னு ஓடிப்போய் மீதி ரெண்டே நாள்தான்னு ஆனதும், என்னடா செய்யறதுன்னு பேய்முழிமுழிச்சுக்கிட்டு, அன்னிக்குக் காலையிலே எழுந்ததும், (அப்பத்தானே மூளை ஃப்ரெஷ்ஷாஇருக்கும்!) மறுபடி நிரல் ஒட்டு வேலையை கவனமாப் படிச்சேன். 'புரிஞ்சுபோச்சா'ன்னுகேக்கமாட்டீங்கன்னு நம்பறேன்.


வழக்கம்போல ஒண்ணும் புரியலை. கடவுள் மேலே பாரத்தைப் போடுன்னு பாட்டி சொன்னமுதுமொழியை மனசுலே வச்சுக்கிட்டு, என்னோட டெம்ப்ளேட்டை ஒரு காப்பி எடுத்துவச்சுக்கிட்டேன். எதாவது 'கடுபடு' (ஹிந்தி & மராத்தி வார்த்தை) ஆச்சுன்னா இந்தக் காப்பியை எடுத்து ஒட்டிறமாட்டேனா என்ன!


அதுக்கப்புறம் ஒண்ணாவது நிரல் பட்டையை எடுத்து, பழைய பட்டையை அழிச்சிட்டு அங்கே ஒட்டுப் போட்டேன்.அப்புறம் அதே போல ரெண்டாவது. அதுக்கப்புறம் இலவச இணைப்பாக் கொடுக்கறதுபோல ஒரு ச்சின்னப்பட்டை வேற இருந்துச்சு. அதையும் ஒட்டியாச்சு. முழு ப்ளொகையும் மறுபதிவும் செஞ்ச்சாச்சு.


'குட் ஆன் யூ' சொல்றதுபோலவும், 'ச்சீ ,நீ பேட் 'ன்றது போலவும் 'தம்ப்ஸ் அப் அண்டு டவுன்' படங்கள் வந்துச்சு.ஆச்சா, ஆஹா பட்டை வந்துருச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனாலும் மனசுலே பக் பக்.


குடும்பத்து ஆட்கள் யாராவது பார்க்கணுமே கடவுளேன்னு ஒரு மயில் பறக்கவிட்டாச்சு. குடும்பத்தில் ஒருத்தர்அதைப் பார்த்தே பார்த்துட்டார். தனிமடலிலே தொடர்பு கொண்டு உதவி வேணுமான்னு கேட்டாரா, அவ்வளோதான்.'ச்சிக்கெனப் பிடித்தேன்'. பாவம் மனிதர். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து , சரி செய்யவேண்டிய உத்தியெல்லாம்சொல்லிக் கொடுத்தார். ஒரு வழியாப் போட்டாச்சுன்னு ஆசுவாசம் வர்றதுக்குள்ளே என்னவோ சில சிக்கல்கள்.


ஆனா ஒண்ணு, ஒவ்வொரு பதிவும் போட்டவுடனே கர்ம சிரத்தையா, நந்தவனத்தில் 'உர்ல்,அளி'ன்னதுலே போய் அளிச்சுருவேன்.


இதுக்கு நடுவிலே நம்ம ஷ்ரேயா வந்து கேட்டாங்க. எல்லாம் இந்தப் பட்டை விவரம்தான். அங்கேயும் என்னவோ குழப்பங்கள்.நாந்தான் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்'போல கூடச் சேர்ந்துக் கொஞ்சமே கொஞ்சம் குட்டையைக் குழப்பிவச்சேன்.நமக்கு வந்த உதவிகளை அனுப்பிவச்சேனா, அங்கேருந்து அவுங்க டெம்ப்ளேட்டை நமக்கு அனுப்பி எதாவது தெரியுமான்னு கேட்டுட்டாங்க.


அதைப் பார்த்துத் தலை சுத்தி விழுந்தவ இன்னிக்குத்தான் எந்திரிச்சேன்னா பாருங்களேன். இந்தக் களேபரத்துலேபொங்கல் வந்ததும் தெரியலே, போனதும் தெரியலே. இன்னிக்கு 'மாட்டுப் பொங்கலாமே'!


இதுவரை எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாலுவகைப் பட்டைங்கதான். அதுலே ரெண்டு, குறுக்கும் நெடுக்குமா நமக்கு நாமே திட்டத்தில் போட்டுக்கற ஆன்மீகப் பட்டைங்க.

மீதியிலே ஒண்ணு அடுக்களையிலே இருக்குற பட்டை. எனக்கு ரொம்ப நெருக்கம்.

அடுத்தபட்டை கொஞ்சம் பேஜாரானது. 100,200ன்னு மில்லியிலே கிடைக்கறது. தமிழ்நாட்டை விட்டுக் கேரளாவுக்குள்ளேநுழைஞ்சவுடனே தமிழ்லே எழுதிவச்சுருக்கற எழுத்தைப் பார்க்கலாம். அட, தமிழ் எழுத்துன்னு சந்தோஷம் வந்துரும்.'கள்ளு' படிச்சவுடனே வந்த சந்தோஷம் பொக்குன்னு போயிரும்.

ஆனா அந்தப் பட்டையெல்லாம் போடாதவங்களைக்கூட 'பட்டை பட்டை'ன்னு தவிக்கவச்சு ஜுரம் வரை கொண்டுவந்து விட்ட இந்தப் பட்டைதான் இப்போதைக்கு வெற்றி பெற்ற பட்டை.


பட்டையே உன் 'நாமம்' வாழ்க!

Friday, January 13, 2006

கோபால கிருஷ்ணன்














நட்புவலையில் சிக்கிக்கிட்டேன். நண்பர்கள் பலரின்( ஒருத்தருக்கு மேற்பட்டால் பலர்தானேங்க?)வேண்டுகோளை( இந்த வார்த்தைக் கொஞ்சம் கூடிப்போச்சோ?) முன்னிட்டு கோபால கிருஷ்ணனின்படங்கள்.


இதோ.அவரைப் பற்றிய மேல் விவரங்கள் இங்கே.


இவருக்கு சூப்பர்மார்கெட் கேரி பேக் ரொம்பப் பிடிக்கும். உள்ளெ போய் உக்கார்ந்துக்குவார்.

Thursday, January 12, 2006

சீவி முடிச்சு சிங்காரிச்சு.....


'இவுங்க மூணுபேரும் 'ட்ரூ' குடும்பத்தைச் சேர்ந்தவங்க'. 'அன்றலர்ந்த பூ'ன்னு எதோ ஒரு உவமை சொல்வாங்க பாருங்க ,அப்படி பளிச்சுன்னு இருந்தாங்க. மேட்டுக்குடிக்கே உரிய பார்வை, கம்பீரம், நடை எல்லாம் பொருந்தியிருந்துச்சு.'வீடு மாத்திக்கிட்டுப் போறாங்க. அதாலே கொஞ்சநாள் இங்கே இருக்கட்டுமுன்னு இவனுங்களை விட்டுட்டுப் போயிருக்காங்க'ளாம்.


அடுத்த அறையிலே ஒருத்தனுக்கு நல்ல தூக்கம். கை காலையெல்லாம் 'பப்பரப்பா'ன்னு நீட்டிக்கிட்டு இருக்கார்.தாய்தகப்பன் வெளிநாடு போயிருக்காங்களாம். அதனாலே 'ஹாஸ்டல்' வாசம்.


வெளியே தோட்டத்துலே ஒரு பெரியவர் உக்கார்ந்து, வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தார். அங்கே இருக்கற ஹாஸ்டல் வாசிகளிலே இவர்தான் ரொம்பவே வயதானவராம்.


அடுத்தடுத்த அறைகளில் இன்னும் பலர். சிலபேருக்கு நம்மைப் பார்த்தவுடனே முகத்தில் ஒரு சிரிப்பு. நட்புணர்வோடு கை நீட்டுனாங்க சிலர்.


ஹாலில் ஒரு டி.விப் பெட்டி. மெல்லிசான சத்தத்திலே ஓடிக்கிட்டே இருக்கு. 24 மணிநேரமும் இப்படித்தானாம். பசங்க நேரங்கெட்ட நேரத்துலே டி.வி. பார்த்துக்கிட்டு இருக்காங்களே. அப்ப 'மிட்நைட் மசாலா' கூடப் பாப்பாங்கதான்.
அடக் கடவுளே!


அறையிலேயே இருந்தா சாப்பிட்டுத் தூங்கி, டிவி பார்த்துன்னு 'போர்' அடிச்சுராதா? வெளியிலே ஒரு 'வாக்' போய்வரக்கூடாதா? முடியுமான்னு கேட்டதுக்கு, 'தாராளமாப் போய் வரலாம். எல்லாரையும் ஒரே சமயத்துலே வெளியே அனுப்ப முடியாது. அவுங்கவுங்களுக்குத் தனி நேரம். கூட்டமாப் போனா சிலசமயம் வேண்டாத வாக்குவாதம் வந்துசண்டை வந்துரும்.'


"எத்தனைபேர் இப்ப இருக்காங்க? ஒரே ஒரு பில்டிங்தானா? இல்லே ......"

"ரெண்டு ஹாஸ்டல் பில்டிங் இருக்கு. சாப்பாட்டு நேரம்தான் கொஞ்சம் வித்தியாசம். ச்சும்மா ஒரு 15 நிமிஷம்தான்.ஒரே சாப்பாடுதான். பரிமாற ஆள் ஒண்ணுதான் இருக்கு. 20 பேர் ஒரு பில்டிங்லே தங்க வசதி இருக்கு. "

"உடம்பு சரியில்லாம இருக்கறவங்களுக்குக் கவனிப்பு எப்படி? "

" எதாவது மருந்து கொடுக்கணுமுன்னா சொல்லுங்க, சாப்பாட்டு நேரத்துலே கொடுத்துரலாம்"

" எங்க பையனுக்குச் சக்கரை வியாதி. அதான்......."

" தினம் ஊசி போடணுமா?"

" அதெல்லாம் இல்லைங்க. இன்சுலின் அளவு குறைஞ்சு போறதாலே சாப்பாடு நின்னு செரிக்கரதில்லை. அதனாலேபசி கூடுதல். மத்தவங்களுக்கு மூணு வேளைன்னா அவனுக்கு ஆறு வேளை சாப்புடணும்."

" அது பரவாயில்லை. நாங்க சாப்பாடு கூடுதலாக் கொடுப்போம். எதாவது ஸ்பெஷல் சாப்பாடுங்களா?சொல்லுங்க. நாங்க வாங்கிடறோம்"

" ஆமாங்க,ஸ்பெஷல்தான். நாங்களே சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டுப் போறோம். அப்புறம் ஃப்ரெஷ் சாப்பாடு வகைஒண்ணு போடணும். அதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சுடறோம். "

" அப்பச் சரிங்க. நீங்க கவலைப்படவேணாம். நாங்க நல்லா கவனிச்சுக்குவோம். உங்க குடும்ப டாக்டர் விலாசமும்,ஃபோன் நம்பரும் குடுங்க. எதாவது தேவைன்னா நாங்களே கூட்டிக்கிட்டுப் போய் காமிச்சிருவோம். "

" நல்லதுங்க. ஹாஸ்டல் ஃபீஸ் எவ்வளோன்னு சொல்லுங்க."

" ஒரு நாளைக்கு ----- இவ்வளோன்னு கணக்குங்க. மூணு வாரத்துக்கு மேலே தங்குறவங்களுக்கு ஒரு 10 சதம் கழிவுதர்றோம்"

"ஹாஸ்டலைச் சுத்திக் காமிச்சதுக்கு நன்றி. நாங்க ஊருக்குப் போகறதுக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே, பையனைக்கொண்டுவந்து விட்டுருவோம். பொட்டியெல்லாம் அடுக்கறப்பப் பக்கத்துலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தால் பாவமாஇருக்குமில்லையா?"


" உண்மைதான். அப்பா அம்மா நம்மளைக் கூட்டிட்டுப் போகலையேன்னு இருக்கும்தான். நீங்க கவலைப்படாமப் போய்வாங்க.இதுதான் எங்க மின்னஞ்சல் விலாசம். அப்பப்ப மெயில் செய்யுங்க. இல்லேன்னா ஃபோன் செஞ்சாலும் சரி"


திரும்பி வர்ற வழியெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு வந்தோம். நகரத்தோட சந்தடியெல்லாம் இல்லாமஅமைதியா இருக்கற இடம்தான். நம்ம வீட்டிலிருந்து ஒரு 20 நிமிஷக் கார் பயணம். ஒரு மாசமா அலைஞ்சுஇந்த ஹாஸ்டலைக் கண்டு பிடிச்சோம். பேரு கூட அழகா இருக்கு,'செர்ரி க்ரொவ் கேட்டரி'


வார்டனும் அன்பாப் பேசறாங்க. தங்கி இருக்கற பசங்களும் அவங்களைப் பார்த்ததும் எவ்வளோ சந்தோஷப் பட்டாங்கன்னுதான் பார்த்தமே.


ஒரே ஒரு எண்ண்ம்தான். மத்த பசங்க நல்ல 'காந்தானி'யா இருக்காங்க. நம்ம பையன் மட்டும் மட்டமா? இவனும்மேட்டுக்குடி மைனர்தான். முடி நீளம். தினமும் தலை சீவிக்க மாட்டான். அதான் கொஞ்சம் சிக்கு பிடிச்சுக் கிடக்கான்.இமயமலையிலே இருக்கவேண்டிய சாமியார் மாதிரி ஜடாமுடி.


சீப்பு வச்சா வலிக்குது போல.அதான் இஷ்டப்படறதில்லை. ஒருதடவை சலூன்லே 'ஹேர்கட்' செஞ்சுக்கட்டும். அப்புறம் நல்லா ஆயிருவான்.

ஆச்சு.


இப்பப் பட்டுப்போல இருக்கு முடி. விட்டுட்டா மறுபடி சிக்கு விழுந்துரும். தினமும் ரெண்டு நேரம் சிரமம் பாக்காம சீவி விட்டுரணும்.


வாடா, கோபால கிருஷ்ணா. அப்பா கிட்டே தலை சீவிக்கோ. ஹாஸ்டலுக்குப் போறப்போ நல்லா 'ஜம்'னுஇருக்கணும். இல்லேன்னா மத்த பசங்க சிரிக்கமாட்டாங்களா?


'சீவி முடிச்சுச் சிங்காரிச்சு.......'ன்னு பாடிக்கிட்டே சீவறாரு அப்பா!

Tuesday, January 10, 2006

என் செல்ல(செல்வ)ங்கள். கடைசி நாட்கள்

ம்மா ம்ம்ம்ம்மான்னு குரல் கொடுத்துக்கிட்டே வீட்டுக்குள்ளே ஓடிவந்து நிக்கிற கப்புவைப் பார்த்ததும்'பசங்க' இங்கே ரொம்பக் கஷ்டம் வைக்காம 'செட்டில்' ஆகிட்டாங்கன்னு சந்தோஷமாத்தான் இருந்தது.
கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை , அடுத்தவீட்டுக்குப் போய் அங்கே செடிப் புதரில் படுத்திருந்துட்டுபசியெடுக்கும் நேரம் மட்டும் இங்கே வந்துக்கிட்டு இருந்தவந்தானே இவன்.


நேரத்துக்குச் சாப்புடாம ஒரே எலும்பும் தோலுமா ஆயிட்டான் பாருங்க. ஏதோ இப்பவாவது கொஞ்சம் ஒடம்புதேறட்டும். வயிறெல்லாம் எப்படி ஒட்டிப் போயிருச்சு . பாவம்.


வேளாவேளைக்குச் சாப்புடறதும், தோட்டத்துலே இருந்த ஒரே மரத்தடியிலே தூங்கறதுமா நாள் போய்க்கிட்டு இருந்தது.அடுத்தவீட்டுப் புதரை இப்ப குத்தகைக்கு எடுத்திருக்கிறது நம்ம ஜி.கே. ஒருத்தன் மாத்தி ஒருத்தன்!
ரெண்டு வாரத்துக்கு முன்னே வீட்டுக்குள்ளெ வந்தவனைத் தூக்கும்போது கொஞ்சம் கனமாக இருந்தான். வயிறும்நிறைஞ்சமாதிரி இருந்தது. இவன் கொஞ்சம் பயந்த சுபாவம்தான். யாராவது வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா போய்ஒளிஞ்சுக்குவான்.


அப்படிப்பட்டவன், ரொம்ப அதிசயமா ஒரு நாளு நடந்துக்கிட்டான். 'மெளனம் சுரேஷ்' குடும்பத்துடன் வந்திருந்தப்பதானாய் வந்து கூட்டத்துக்கு நடுவிலே நடுநாயகமா எங்க காலடியிலே வந்து உக்காந்துக்கிட்டது எங்களுக்குரொம்ப ஆச்சரியமாப் போச்சு.


மறுநாள் வழக்கம்போல அதிகாலையில் வந்து எழுப்பினான். 'ம்மா, ம்மா'ன்னு கூப்புட்டுக்கிட்டே தலையிலேவந்து உக்காந்து 'குர்குர்ன்னு பர்( purr)'பண்ணறதுதான் தினமும் எனக்குத் திருப்பள்ளி எழுச்சி.


கண்ணுலே மட்டும் கண்ணீர் வர்றமாதிரி இருந்தது. எதுக்கும் 'வெட்'கிட்டே காமிச்சரலாமுன்னு ஒரு நேரம்வாங்குனேன். மறுநாள் செவ்வாய்க்குத்தான் கிடைச்சது. நம்ம வீட்டுலேதான் 'வெட்'க்குக் கொண்டுபோறதே ஒருஅட்வெஞ்சர் ரைடாச்சே. நைஸாப்பேசி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தேன். கூண்டுக்குள் வைக்கும்போதும்வழக்கமா வர்ற எதிர்ப்பு ஒண்ணுமில்லாமல் அமைதியா இருந்ததே மகா ஆச்சரியம்.இந்தப் பதினாறு வருஷத்துலேமுதல்முறையாச் 'சொன்ன நேரத்துக்கு'க் கொண்டுபோனோம். வழியெல்லாம் வழக்கமான 'குய்யோமுறையோ கூவல்'கூட இல்லை!


நம்ம 'ஷான் கானரி'ஆலன் பரிசோதிச்சார். கூடவே எங்க தலையிலே ஒரு குண்டைத் தூக்கியும் போட்டார். நுரையீரலில்இருந்து தண்ணீர் வழிஞ்சு வயித்துலே தேங்குதாம். இதயமும் பழுதடைஞ்சிருக்காம். அதீதவலியாலேதான் கண்ணுலேதண்ணீர். கடவுளே......


உடனே சிகிச்சையை ஆரம்பிச்சிருங்கன்னு சொன்னதுக்கு, இன்னொரு இடியைப் போட்டார். இதுக்கு நிவாரணம்இல்லையாம். வாழ்க்கையோட கடைசிக் கட்டத்துலே இருக்கானாம்.அப்போதைக்கு மட்டும் வலி நிவாரணமாஒரு ஊசி போடலாமே தவிர வேற ஒண்ணும் செய்யமுடியாதாம். சீக்கிரமா நாங்க முடிவு(!) எடுக்கணும்.


பொங்கிவர்ற கண்ணீரை மட்டுப் படுத்தமுடியாம நிக்கிறோம். சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வந்தோம்.கூண்டைத் திறந்ததும் துள்ளி ஓடும் ஓட்டம் இல்லை. 'தூக்கி வெளியே விடேன்'ன்னு சொல்லுது அதோட பார்வை.



கனத்த மனசோடயே புதன் கழிஞ்சது. வியாழன் காலையிலே என்னை எழுப்ப வந்தவனுக்குக் கட்டில்லே குதிச்சுஏறமுடியலை. கீழே நின்னுக்கிட்டே 'ம்மா ம்மா'ன்னு ஹீனக்குரல். கோபால்தான் அவனைத்தூக்கி என் மடியிலேவச்சார். வயிறு ரொம்பவே ஊதிப்போயிருந்தது. மெதுவாத் தடவிக் கொடுத்தவுடனே நீர் பிரிய ஆரம்பிச்சது. திட்டவும்மனசு வரலை. அப்புறம் விரிப்புகளையெல்லாம் எடுத்துத் துவைக்கப்போட்டேன்.


வழக்கமான மரத்தடியிலே தலையைக் குனிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருக்கான். சாப்பாடும் ரொம்பக் கொஞ்சமாவேசாப்பிட்டான். மனசைக் கல்லாக்கிக்கிட்டு 'வெட்'க்கு ஃபோன் செஞ்சு, முடிவைச் சொன்னேன். வெள்ளியா இல்லேன்னாசனியான்னு கேட்டார். கோபாலும் கூட இருக்கணுமுன்னு இருந்ததாலே சனிக்கிழமைன்னு சொன்னேன்.


வெள்ளிக்கிழமை பொழுது விடிஞ்சப்பவே 'பகீர்'ன்னு இருந்துச்சு. இன்னும் ஒரு நாள்தான் இருப்பான். எதுலேயும்மனசில்லாம என்னவோ செஞ்சோம் போனோமுன்னு நாள் போச்சு. மரத்தடியை விட்டு நகராம இருக்கான். கிட்டப்போய் பக்கத்துலே உக்கார்த்தேன். பெரிய பெரிய ஈங்க அவனைத் தொந்திரவு செய்யுதுங்க. முற்றும் துறந்த முனிவரைப்போல யோக நிஷ்டையில் இருக்கான். வாலை ஆட்டி அந்த ஈக்களைத் துரத்தவும் இல்லை. அதுங்களும் அவன் மேலேயேமுட்டைவச்சுக்கிட்டு இருக்குதுங்க. மனசு கேக்காம உள்ளே தூக்கிவந்து சுத்தம் செஞ்சேன். அப்பப் பார்த்து நம்ம'வெட் க்ளினிக்'லே இருந்து கூப்பிட்டாங்க. சனிக்கிழமை நம்ம 'ஷான்' ஏதோ அவசர வேலையாக வெளியே போறாராம்.அதனாலே வேற ஒரு 'வெட்' நம்மைக் கவனிப்பாராம்.


யோசிச்சுச் சொல்றேன்னு சொன்னேன். நல்லா யோசனை செஞ்சப்ப, கப்புவுக்குப் பழக்கமான ஷான் இருந்தாத்தான்நல்லது. புது ஆளைப் பார்த்தால் அவன் மிரளக்கூடும். போற நேரத்துலே மனசமாதானம் முக்கியமில்லையா?மறுபடி 'ஷான்'கூடப் பேசினேன். அவர் புரிஞ்சுக்கிட்டார். 'சரி. இன்னிக்கு இரவே நீங்க கொண்டுவாங்க. எட்டுமணி வரைக்ளினிக் வேலைகள் இருக்கு. நான் காத்திருக்கேன். அதுக்கப்புறம் வேண்டியது செய்யலாம்.எட்டரைமணிக்குஎல்லாம் முடிஞ்சுரும்'ன்னு சொன்னார்.


எட்டுமணிக்குக் கொண்டுபோனோம். அழுதுஅழுது எனக்குப் பயங்கரத் தலைவலி. எத்தனை மாத்திரைபோட்டுக்கிட்டும்வலி அடங்கலை. உள்ளே கொண்டு போனோம். மேசையில் கிடத்துனோம். இனி ஒருமுறை என்னாலே இதையெல்லாம்தாங்கமுடியாது. கடவுளே.... கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?


ஊசிக்கு எல்லாம் தயார் செஞ்சாங்க. 'ஹெவி டோஸ் மயக்கமருந்துதான். உயிர் அடங்குறப்ப ஒரு ரீஃப்ளெக்ஸ் இருக்கும்.உடம்பு தூக்கிப்போடும், பயந்துராதீங்க. அவனுக்கு வலி தெரியாது. க்வாலிட்டி ஆஃப் லைப் போக ஆரம்பிச்சிருச்சு.ஹீ டஸ்ந் கேர் எனிமோர். பார்த்தீங்களா, முதுகுலே ஈ முட்டைகளை'ன்னு சொன்னார். ஷானோட கண்ணுலேயும்கண்ணீர் கட்டியிருந்துச்சு. குனிஞ்சு அவனோட தலையிலே ஒரு முத்தம் கொடுத்தார்.


ஊசி போட்டாச்சு. தலையைத் தடவிக் கொடுத்துக்கிட்டே நின்னேன். ஒரு அஞ்சு வினாடிதான். உடம்பு தூக்கிப் போட்டுச்சு.அப்புறம் அடங்கிடுச்சு. கண்ணைத் திறந்து என்னப் பார்த்துக்கிட்டே போயிட்டான்.


அழற எங்களைத் தேற்றாம ஷானும் கூடவே அழறார். 16 வருஷ வாழ்க்கை நொடியிலே முடிஞ்சது. அருமையானராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கான்.


இங்கே வளர்ப்பு மிருகங்களுக்கு ஒரு எரியூட்டும் இடம் இருக்கு. அங்கேயே கொண்டுபோய் எரியூட்டி, பிறகு அஸ்தி தரும் சேவைக்கும் சேர்த்து வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சுட்டு காலிக் கூண்டோட வீட்டு வந்தப்ப ஒம்போதரைமணி ஆயிருந்திச்சு.


யாருக்கும் யார்கூடவும் பேசவும் விருப்பமில்லாம, வீடே அமைதியா அழறமாதிரி இருந்துச்சு. திங்கள் கிழமை'வெட் க்ளினிக்'லே இருந்து ஒரு ஆறுதல் கடிதம் வந்து, அடங்கியிருந்த அழுகையைக் கிளப்பி விட்டுருச்சு. மறுபடிபுதனன்று கூப்பிட்டாங்க, அஸ்திப் பெட்டி வந்துருச்சுன்னு. போய் வாங்கிக்கிட்டு வந்தேன். ஷானும், அங்கே வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்ணும் எங்க துக்கத்துலே பங்கெடுத்துக்கிட்டாங்க. புத்திர சோகம்ன்னா என்னன்னு இப்பத்தான்முழுசாத்தெரியுது.


வீடு முழுக்க ஒரு மாதிரியான வெறுமை. ஜி.கே.வும் சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுமே ஆஜர். இப்ப ஒரு மாசமாத்தான்ஜி.கே. வீடுதங்க ஆரம்பிச்சுருக்கான். மெதுமெதுவா கப்புவோட இனிய நினைவுகளோட வீடு பழைய நிலைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கு. அடுக்களை ஜன்னலில் பாத்தா கப்புவோட மரம் நிக்கும். நேத்து அதனடியிலே கறுப்பா ஒரு உருவம்.பதறிப்போய்ப் பாத்தா, நம்ம ஜி.கே. படுத்திருக்கார். இன்னிக்குக் காலையில் கப்பு போலவே வந்து எழுப்ப முயற்சிக்கிறார்.


ஆச்சு, இன்னையோட கப்பு ஸ்ரீவைகுண்டம் போய் 96 நாள். சொர்க்கவாசல் கதவு திறக்கும்போது அங்கே வெளியிலே நிக்கற உயிர்களை பெருமாளே கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போவாருன்னு ஒரு ஐதீகம் இருக்காமே. இன்னிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சே. கப்புவையும் உள்ளே அழைச்சுக்கிட்டுப் போயிருக்கணுமுன்னு மனசு தீர்மானமாச் சொல்லுது.


பின்குறிப்பு: கப்புவின் கடைசி நாட்கள் பத்தி எழுதணுமுன்னு ஆரம்பிச்சு, முடிக்க முடியாமலேயே மனசு கனத்துபோய்வச்சிருந்ததை இன்னிக்கு முடிச்சு அனுப்பறேன்.


வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்.

Monday, January 09, 2006

ஆண்டொன்று போனால் வயது....?

ஐய்ய..... அழகு அழகுன்னு சொல்றதெல்லாம் வெளித்தோலை வச்சுத்தான். தோலுக்குக் கீழே எல்லாம் ரத்தமும் சதையும்ஒண்ணுதான்... இப்படிப் பலர் சொல்லக்கேட்டு இருக்கேன். இப்ப ஒரு புது ஆராய்ச்சி செஞ்சுக் கண்டுபிடிச்சிருக்காங்க,'அழகுன்றது எலும்பு வரை'ன்னு!


சொன்னது பெரிய இடம். அமெரிக்காவுலே இருக்கற ப்ளாஸ்டிக் சர்ஜன் மாநாடு.
என்னதான் சொல்றாங்க, பாப்போமுன்னு கொஞ்சம் உள்ளார நுழைஞ்சு படிச்சால்.... அட!


நம்ம வலை டாக்டருங்கதான் இதெல்லாம் சரியான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லணும்.


நம்ம ஊர்லே ரொம்பவே வயசான தாத்தா, பாட்டிங்க முகங்களை அப்படியே மனசுக்குள்ளே கொண்டுவாங்க.கன்னத்துலே குழி விழுந்து, தோலெல்லாம் சுருங்கி, புருவமுடியெல்லாம் நரைச்சு, சிலருக்கு அதெல்லாம் கொட்டி, முகம் கொஞ்சம் நீண்டு....... எப்படியெல்லாம் போயிருது (-:


இவ்வளோ என்னாத்துக்கு? நம்ம வீட்டுலே பழைய ஃபோட்டோங்க எதுனா இருந்தா எடுத்துப் பாருங்க. நாற்காலியிலே விறைப்பா உக்காந்துக்கிட்டு இருக்கற ஆம்பளைக்குப் பின்னாலே நாற்காலியைத்தொட்டுக்கிட்டு நிக்கற அம்மாவைப் பாருங்க. எவ்வளோ அழகு.கறுப்பு வெள்ளைப் படமானாக்கூட, திருத்தமாத் தெரியுற மூக்கும் கண்ணும் அடடடா.....


'இதான் உங்க/எங்க தாத்தா பாட்டி'ன்னு சொன்னதும், நம்பிக்கையில்லாம இன்னும் உத்துப் பார்ப்போம்.அடுத்தபார்வை, அங்கே கட்டில்லே உக்காந்து கண்ணைச் சுருக்கிக்கிட்டு டிவியோ, எதையோ பாக்குற பாட்டி/தாத்தா மேலேதாவும். ச்சின்ன வயசுலே எவ்வளோ அழகா இருந்திருக்காங்க. இப்ப எப்படிச் சிரிக்காம இருக்கும்போதே கன்னத்துலே இப்படிக் குழி விழுது! குழியா அது? 'டொக்கு' ஹ....ங்


வீட்டுலே தாத்தா பாட்டி படமில்லையா? டோண்ட் வொர்ரி. சினிமா எதுக்கு இருக்கு? பழைய படங்க எதுவாச்சும்கிடைக்காமப்போயிருமா என்ன? சிவாஜி, ஜெமினி, பானுமதி, பத்மினின்னு வர்றதை விட்டுராதீங்க. அன்றும் இன்றும்கவனிச்சிட்டு இப்பச் சொல்லுங்க.


மூஞ்சுலேயும், கன்னப் பகுதியிலேயும் சதை கொறைஞ்சு போச்சுன்னாலும், அங்கே இருக்கற கொழுப்பு(!) வடிஞ்சாலும் முகச் சுருக்கம் வந்துரும்.மேலும் புவி ஈர்ப்பும் காரணமுன்னு நம்பிக்கிட்டு இருந்தவங்கதான் பலரும். பெருமூச்சு விட்டுக்கிட்டே சொல்றது 'வயசாச்சுன்னா இப்படித்தான்'!



ஆமாம், வயசாச்சுன்னா ஏன் இப்படி ஆகணும்? அதான் சொன்னேனே, கண்டுபிடிச்சுட்டாங்கன்னு, எலும்புதான்காரணமாம். அது பாருங்க, எலும்பு வயசாக ஆகக் கொஞ்சம் கொஞ்சமா(contourக்கு தமிழ்லே என்ன சொல்லணும்?) உருமாறுதாம்.


இயற்கையோட பாரபட்சத்தையும் பாருங்க. ஆம்பளைங்களைவிட பொம்பளைங்களுக்கு இது சீக்கிரமா ஏற்படுதாம்.பொம்பளைங்களுக்கு எப்பவும் அவசரம்தான். 'பொண்ணு வளர்த்தியோ, புடலங்கா வளர்த்தியோ'ன்னு திடுதிடுன்னுவளர்ந்துரணும், அவசரக் குடுக்கைங்க. இப்ப என்னன்னா உணவுப் பழக்கங்கள் மாறிடுச்சு, ஃபாஸ்ட் புட் கலாச்சாரமுன்னு சொல்லி ரொம்பச் சின்னவயசுலேயே பத்து, பதினொரு வயசுலேயே ஹார்மோன் மாற்றமெல்லாம் வேகவேகமா நடந்து 'பெரிய புள்ளை'யா வேற ஆயிருதுங்க.


16 வயசுப் பொண்ணுக்கு இருக்கற மெச்சூரிட்டி( உடம்புலேயும் சரி, மனசுலேயும் சரி) 16 வயசுப் பையனுக்குஇருக்கறதில்லை. பையனுங்க நின்னு நிதானமாத்தான் வளர்றாங்க. இது சரியான்னு மகனரணி சொல்லட்டும்,கேட்டுக்கறேன்.


அம்பது வயசு ஆம்பளை முகத்துலே அவ்வளவா மாற்றம் தெரியறது இல்லை, ஆனா அதே அம்பது வயசு பொம்பளை....?'அங்கிள் அப்படியே இருக்கார், நீங்கதான் ஆண்ட்டி ரொம்ப மாறிட்டீங்க. நம்பவே முடியலை இது நீங்கன்னு'சொல்ற வயசுப் பசங்ககிட்டே,அப்படியான்னு மனசுலே கறுவிக்கிட்டே, 'இது நான் இல்லை. அங்கிளோட முதல்மனைவி'ன்னு சொல்ற நிலையும் வந்ததே(-:


கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கற எலும்புமேலெ பழியைப் போட்டுட்டு, 'கெட்டிங் ஓல்டு க்ரேஸ்ஃபுல்லி'ன்னு ஜபிச்சுக்கிட்டேசூப்பர்மார்க்கெட்டுக்குப் போனா அங்கே 'வயசைக் குறைச்சுக் காட்டுமுன்னு ஏஜ் டிஃபையிங் க்ரீம்' வித்துக்கிட்டுஇருக்காங்க. 'அம்பதை இருவத்தஞ்சாக் காட்டுமோ'ன்னு நினைச்சுக்கிட்டு அதோட விலையைப் பாத்தா, முப்பது
டாலராம், வெறும் அம்பதே அம்பது மில்லிக்கு!


வாழ்க்கையிலே ஒருதடவை வாங்குனாப் போதுமா? வாழ்நாள் முழுசும் வாங்கிக்கிட்டே இருக்கணுமாமே.


போச்சுரா, இதுக்குச் செலவு பண்ணறதைக் கணக்குப் பார்த்தா அதிர்ச்சியிலேயே அம்பது, நூறாப் போயிராதா?அட... வயசைச் சொல்றேங்க.


பேசாம ஆப்பிரிக்க நாட்டு சொலவடை ஒண்ணு இருக்காமே 'போலீ போலீ'(polee polee)ன்னு. அதைச் சொல்லிக்கிட்டேவந்தேன்.


ஊர்வசி ஊர்வசி 'போலீ போலீ' ஊர்வசி. அதான், அதுவேதான் அர்த்தம்:-)

Friday, January 06, 2006

காணி நிலம் வேண்டும்......


எந்த ஊரு நல்ல ஊரு? இப்படி மொட்டையாக் கேட்டா எப்படி? எல்லா ஊரும் நல்ல ஊருதான். எல்லாம் நாம நடந்துக்கறதைப் பொறுத்துத்தான் ஊரும் நாடும். இல்லையா? ஆனாலும்.....ச்சின்னச்சின்னஆசைகள்..... பெரிய பெரிய புலம்பல்கள்....


சொந்த நாட்டைவிட்டுப் பலகாலமா போன ஆளுங்க, ஒருநாள் இல்லேன்னா ஒரு நாள், 'போதும். இங்கே இருந்தது.ஊரைப் பார்த்துப் போயிரலாம்'ன்னு நினைப்பாங்க. நினைக்கிறாங்க.
சரி. போயிரலாமுன்னு முடிவு எடுத்துட்டா, எங்கே போறது? ரொம்ப வசதிகள் இல்லேன்னாலும் அத்தியாவசியமான வசதிகளொடஅதாவது தண்ணீர், மருத்துவ வசதி, சுகாதாரச் சூழல் எல்லாம் இருக்கற இடம் வேணுமில்லையா?


நாட்டுநடப்பையெல்லாம் இணையத்துலேயும், இப்ப வர்ற இ-பேப்பர்களிலேயும் படிக்கறப்ப ஊழல் ரொம்பவே மலிஞ்சு
போனதாத் தெரியுது. இதுக்கெல்லாம் ஈடுகொடுத்து, நடக்குற அநியாயங்களைப் பொருட்படுத்தாம இருக்கற மனசு
முதல்லே வேணும். குற்றங்களும் பெருமளவுலே இருக்கு. அல்ப சமாச்சாரமா அஞ்சுபவுன் நகைக்கெல்லாம் கொலை வரைபோறாங்கப்பா!


'ஓஓஓஓ.... ..... பெருசாப் பேசவந்துட்டா, எல்லாம் இங்கிருந்து போன ஆளுங்கதானே?'ன்னு உங்களுக்குத் தோணும்.


அங்கேயே இருந்திருந்தா இதெல்லாமே பழகிப்போயிருக்கும். இப்ப 'டச்'விட்டுப் போச்சு. அதே சமயம் கொஞ்சம்பேரு
திரும்பிவந்து புது வாழ்க்கையை ஆரம்பிச்சுக்கறாங்கதான். நம்ம 'காசி'யே பிடுங்கி நடப்பட்ட மரம்னு எழுதியிருந்தார். அவருக்குச்
சின்ன வயசு. போய் செட்டில் ஆகிட்டார். நாமோ...... வயசான காலத்துலே, எல்லாத்தையும் மொதல்லே இருந்து ஆரம்பிக்கணுமுன்னாநடக்கற காரியமான்னு மலைப்பா இருக்கு.


மனசுக்குள்ளெ எப்பவும் ஒரு ஆசை மூலையிலே குந்திக்கிட்டு இருக்கு. ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச அழகானவீடு. மேலே ஓடு வேணுமுன்னுகூட அவசியமில்லை. அழகா ஓலை வேய்ஞ்சிருந்தாலும் போதும்.( குடிசைன்னுசொல்லேன், என்னமோ ஓலை கீலைன்னு பீலா வுடறே?ன்னு யாருப்பா அங்கே சவுண்டு விடறது)


உள்ளே போனா நல்ல முற்றம். அதை ஒட்டுனாப்போல உள்பக்கமும் திண்ணைங்க. முற்றம் முழுசும் அலங்காரமாப் பூச்செடிங்க.மேலே நிமிர்ந்து பார்த்தா அழகான ஆகாயம். சிமெண்ட்டுத்தரை எல்லாம் வேணாம். இல்லே வேணுமா?மழைகிழை பேய்ஞ்சா, மண்ணெல்லாம் ஊறி நசநசன்னு ஆயிரும் இல்லே? சரி. சிமெண்டுத்தரையே இருக்கட்டும்.ஆனா வீட்டுக்குள்ளெ எல்லாம் மொழுகுன மண்தரைதான் சொல்லிப்புட்டேன். தண்ணிகிண்ணி கொட்டுனாலும் கவலையே இல்லை.அப்படியே உள்ளே இஞ்சிரும்,ஜாலிதான்.


மின்சாரம் வேணும். ஆனா அடுக்களையிலே மாடர்ன் உபகரணங்கள் எல்லாம் வேணாம். அம்மிக்கல், ஆட்டுக்கல்னுஇருக்கணும். போனாப் போட்டுமுன்னு 'கேஸ் அடுப்பு' மட்டும் இருந்து தொலையட்டும்.


வீட்டைச் சுத்தித் தென்னைமரங்களும், இன்னும் சில பழமரங்களும் வேணும். பலாமரம் இருக்கறது கட்டாயம்.காத்து சிலுசிலுன்னு வரணும். தண்ணிப் பஞ்சமே இருக்கக்கூடாது. கிணத்துலே 'நல்ல தண்ணி' எப்பவும் வத்தாம இருக்கோணும். பழையகாலத்துலே இருட்டிருட்டா இருக்குமே அப்படி இல்லாம வீடும் வெளிச்சமா இருக்கணும்.


படுக்கையறை ஃபர்னிச்சர்ன்னு ஒண்ணும் பெருசா வேணாம். ஒரு கயித்துக் கட்டில் இருந்தாலும் போதும். பாயைஉதறி உள்திண்ணையிலே போட்டோமா தூங்குனோமான்னு இருக்கணும். எலெக்ட்ரிக் ப்ளாங்கெட், வேலன்ஸ், ஃப்ளாட்ஷீட், ஃபிட்டட் ஷீட், டூவே இன்னர், டூவே கவர் இப்படி ஒரு நக்ராவும் கூடாது.


வீட்டை ஒட்டி ஆறு 'ஓடுனா' உத்தமம். இல்லையா, கவலை வேணாம். வீட்டுக் குளியலறை கொஞ்சம் விஸ்தாரமா இருந்தாப் போதும்.அங்கே மட்டும் வசதியை முன்னிட்டு, நம்ம 'பாலிஸி'யைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.( புரிஞ்சிச்சுல்லே)


கங்காரு, குட்டியைத் தூக்கிட்டு அலையுறதுபோல எப்பப் பார்த்தாலும், ஸ்வெட்டர், ஜாக்கெட்டுன்னு தூக்கிக்கிட்டுப்போய் அலுப்பா இருக்கு. இதெல்லாம் தேவையில்லாத ஒரு காலாவஸ்தை ( அவஸ்தை இல்லீங்க, காலநிலை) இருக்கணும்.


இதெல்லாம் கூடிவரக்கூடிய ஊர் எதாவது தெரிஞ்சதுன்னா சொல்லுங்களேன். சிம்பிளா இருக்கறதே ஒரு லக்ஸரியாப்போயிருமோ?

Wednesday, January 04, 2006

உறவுகள் மேம்பட.....

உறவுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.... இப்படிச் சொல்லலாம்தானே? நம்மச் சுத்தியும் பார்த்தால் எத்தனையோசொந்தங்கள் இருக்கு. இதுலே எது உசத்தி? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்துலே உசத்தின்னாலும் எது நிஜமாவே உசத்தி?


அம்மா - குழந்தை, அண்ணன் -தம்பி/தங்கை, அக்கா-தங்கை/தம்பி பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமின்னு எக்கச்சக்கம்.நமக்கு உறவுமுறையிலே சொந்தம் இல்லாதவங்களைக்கூட அம்மா,அண்ணே, மாமி,அக்கான்னு கூப்புடறோம்.பேசறப்ப சிலசமயம் மனசு நெகிழ்ந்து நீங்க எனக்கு அம்மா மாதிரி, மகள் மாதிரி, மகன் மாதிரின்னு நிறைய 'மாதிரி'கள் வருது.ஆனால் யாரையாவது நீங்க எனக்கு மனைவி/கணவன் மாதிரின்னு சொல்லத் தோணுமா? ச்சீச்சீன்னு இருக்காது?


அதாலே இந்தக் கணவன் மனைவின்னு சொல்லற உறவுதான் உண்மைக்குமே உசத்தின்னு என் மனசு சொல்லுது.அதுவும் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்குற கல்யாணத்துலே பாருங்க, அந்த வாழ்க்கைத் துணை ரெண்டு பேருக்குமேஅவ்வளவா முன்பின் தெரியாத நபரா இருப்பாங்க. பொண்ணு பார்க்க வந்தப்பத்தான் ரெண்டுப்பேரும் முதல்முதலாசந்திக்கறாங்க.( சந்திப்பு என்ன சந்திப்பு? பார்த்துக்குறாங்கன்னு சொல்லலாம்) அப்புறம் கல்யாணம் நிச்சயமானபிறகுசில அதிர்ஷ்டசாலிகளுக்கு நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நடுவிலே கொஞ்சம் இடைவெளி ஒரு ரெண்டுமூணுமாசம்கிடைக்கும். (இதுவா அதிர்ஷ்டம்னு யாரும் அடிக்க வந்துராதீங்க.) போன் பில் ஏகப்பட்டது வருதுன்னு சொல்லிக்கிட்டாலும்'கடலை பிஸினஸ்' அமோகமா நடக்கும்.


அப்பவும் அவுங்க பேசிக்கறது முக்காலே மூணுவீசம் வெறும் ஸ்வீட் நத்திங். அதுக்கப்புறம் கல்யாணம், குழந்தைன்னுவாழ்க்கை ஓட ஆரம்பிச்சு நின்னு மூச்சுவிடவே நேரமில்லாமப் போயிடும்.


இப்பத்தான் ச்சின்ன சின்ன விஷயமும் பூதக்கண்ணாடியிலே பாக்கறமாதிரி பெரூசாத் தெரிஞ்சு மனசுலே ஒரு கசப்பு.இது ஏற்படறதுக்கு ரெண்டு சைடும் காரணக்காரர்கள்தான். இந்தச் சின்ன விஷயத்துலே எதெது முக்கிய இடம் புடிச்சுருக்குன்னுஒரு சமயம் படிச்சேன். அதுலே ஞாபகம் இருக்கறதை உங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னுதான் இந்தப் பதிவு.


சண்டை. ஒண்ணும் பெரிய யுத்தம் இல்லீங்க.என்ன கத்தியெடுத்தா சண்டை. இதெல்லாம் வெறும் 'கத்தி' சண்டைதான்.எங்கே எங்கேன்னு காத்துக்கிட்டு இருந்தாப்போல சூழலிலே சுத்திக்கிட்டே இருக்கும். ஒரு கோடி காமிக்கவேண்டியதுதான்.'டாண்'ன்னு வந்து இறங்கிரும்.


பாத்திரம் இன்னைக்கு யார் தேய்க்கிறது? இது ரொம்ப ஈஸி இல்லே? நம்ம ஊரா இருந்தா வேலைக்கு உதவிசெய்யறவங்க.இங்கேன்னா இருக்கவே இருக்கு 'டிஷ் வாஷர்'. ஹ்ம்..... அதான், யாரு அதுலே பாத்திரம் அடுக்கறது? செய்யவேண்டியவர்செய்யலை. தொலையட்டுமுன்னு அதோட போகாது. இதுக்கு முன்னாலே எத்தனை தடவை இப்படி நடந்திருக்கு, எந்தெந்தசந்தர்ப்பத்துலேன்னு எல்லாம் துல்லியமா புள்ளிவிவரத்தோடு விஸ்தரிக்கப்படும். ஏறக்குறைய அரைமணிநேரச் சண்டைகேரண்ட்டீ!
( ஆனா இந்தச் சண்டைக்கு இந்தியாவுலே ஸ்கோப் இல்லைன்னு நினைக்கிறேன்)


வெளியே கடை கண்ணின்னு போறோம். ரெண்டுபேருமா காரை விட்டு இறங்கி கடைக்குள்ளெ போயிட்டாப் பிரச்சனை இல்லை.அதைவிட்டுட்டு, நான் கார்லேயே இருக்கேன். நீ/நீங்க போய் வாங்கிவந்தாப் போதும். வந்துச்சு வினை. 'எவ்வளவு நேரமாச்சு? அங்கேஎன்னதான் செஞ்சுக்கிட்டு இருந்தே?' இது கொஞ்சம் நாகரீகமாச் சொல்றது.(எங்கே போய்த் தொலைஞ்சே? போனா போன இடம் வந்தா வந்த இடம்...... ) ஆனா பாருங்க பலசமயங்களிலே சூப்பர்மார்கெட்டுலே செக்அவுட்லே நிக்கறப்ப கரெக்ட்டாநமக்கு முன்னாலே நிக்கறவங்களுக்குத்தான் எதாவது பிரச்சனை, கார்டு வேலை செய்யாது, தவறான விலையைக் காமிக்கறதுன்னுஇப்படி எதோ ஒண்ணு. வேற கவுண்ட்டருக்குப் போகமுடியாம நம்ம பின்னாலே அனுமார்வால் போல நீளமான க்யூ.நடுவிலே மாட்டிக்கிட்டு முழிச்சது கார்லே காத்துக்கிட்டு இருந்தவங்களூக்குத் தெரியுமா? முப்பது நிமிஷ ஃபைட்டுக்கு உத்திரவாதம்!


'எனக்கு நிஜமாவே எரிச்சல் ஊட்டுற விஷயம் என்னன்னு தெரியுமா?' இப்படி ஆரம்பிக்கற பேச்சுதான் எங்கியோ கொண்டு போய் விட்டுரும். இது விம்ப்ள்டன் ஃபைனல் மேட்ச் பாக்கறமாதிரிவிறுவிறுப்பான சமாச்சாரம். இதுவரை நடந்த வாழ்க்கையிலுள்ள அத்தனை மோசமான அம்சமும் கேட்லாக் போட்டமாதிரி ஒவ்வொண்ணா வரும். ஆகக்கூடி அத்தனையும். இதுலே கவுண்ட்டர் அட்டாக் வரக்கூடிய அபாயமும் இருக்கு. கவனம் தேவை.


இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? போச்சுரா! என்னவா இருக்கும்? பொறந்தநாள், கல்யாணநாள், புள்ளைங்களோட பொறந்தநாள் இப்படி ஒண்ணும் இல்லேன்னாலும் நம்ம நாய்/பூனை செத்த நாள்...... ஐய்யோ எதோ ஒண்ணு, சட்னு நினைவுக்கு வந்து தொலையமாட்டேங்குதே.......

தெரியலைன்னா தலை கவிழ்ந்து இருந்தால் தப்பிச்சீங்க. அதை விட்டு தப்பா எதுவாவது சொல்லிட்டீங்க..அவ்வளோதான். உங்களைக் காப்பாத்த அந்த ஆண்டவனாலேயும் முடியாது. இந்த கண்டம் ஆம்புளைங்களுக்குத்தான்.45 நிமிஷ வாய்ச் சண்டைக்கு ரெடியா இருங்க. சொல்லிட்டேன்.


........ பில் அடைச்சாச்சா?

(எலக்ட்ரிசிடி பில், போன் பில், க்ரெடிட் கார்டு பில் இப்படி எதாவது ஒண்ணுன்னு வச்சுக்குங்க. அதான் ஏகப்பட்டது இருக்கே.)
கேக்கற கேள்வியோட தொனியே 'அடைக்கலே இல்லே? ஞாபகமா மறந்திருக்குமே?'

இன்னிக்குத்தானே கடைசிநாள்? பாக்ஸிங் க்ளவுஸ் இருந்தா எடுத்து ரெண்டுபேரும் போட்டுக்குங்க. எவ்வளோநாள் தான் வாய்ச் சண்டை மட்டும் போடுறது?


ரொம்பவும் சென்சிட்டிவான டாபிக் 'அம்மா'! அதிலும் 'உங்க'ன்ற அடைமொழி சேர்ந்தாப் போச்சு. தன்னுடைய தாய் ஒரு பேய்னு தான் சொன்னாலும் சொல்லலாமே தவிர அதை 'உங்க' போட்டீங்க, கதம் கதம் கதம்......


அப்புறம் அநேகமா எல்லா வீட்டுலேயும் வழக்கமா நடக்கறது இது. உங்க மகன்/மகள் செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா?இது புள்ளைங்க எதாவது தப்புத் தண்டா செஞ்சா. அதே புள்ளைங்க நல்ல பேர், நல்ல மார்க்னு எடுத்துட்டா சிலசமயம் நம்ம, பலசமயம் என் பையன்/பொண்ணு..... இதுக்கு மட்டும் சண்டையெல்லாம் இல்லே , ஒரு 'எகத்தாளமான பார்வை' மட்டும்தான்.


இப்படி இன்னும் பல சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா , நாங்க இதுவரை சண்டையே போட்டதில்லைன்னு யாராவது சொன்னாமட்டும்நம்பவே நம்பாதீங்க. ஒண்ணு அவுங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு 24 மணி நேரம்கூட ஆயிருக்காது. இல்லே, அவுங்க 'உண்மை'யைச் சொல்லாம மறைக்கறாங்க.( பொய்ங்க, பொய்ய்யி)


ஆனா இந்தச் சின்னச் சின்ன சண்டைகள்தான் வாழ்க்கைக்கு மசாலா தூவி ஒரு ருசி கொடுக்குது. ஆனா எல்லாம் அளவோட இருக்கணும்.


சண்டையும் சச்சரவுமா எல்லோரும் சந்தோஷமா இருங்க, என்ன.
புரிஞ்சதா?

Monday, January 02, 2006

அப்பாடா......


ஓஹ்.... ஒரு வழியா இந்த கிறிஸ்மஸ், நியூ இயர் எல்லாம் முடிஞ்சதுப்பா.

அக்டோபர்லே ஆரம்பிச்சு நேத்துவரை நம்மளைச் சக்கையாப் பிழிஞ்சுட்டாங்க.

இன்னிக்குத்தான் அலுப்புதீர வென்னீர்லே சுகமா குளிச்சுத் துவைச்சுக் காத்தாட ஒரு குடை ராட்டினம் சவாரி!