Thursday, March 30, 2006

எங்கே போச்சு என் வத்தலகுண்டு?





பயண விவரம் பகுதி 12


'ஏம்மா, வத்தலகுண்டு வழியா மதுரைக்குப் போகலாமா?' ன்னு கேட்ட எங்க இவரைக் காதலோடு முறைச்சேன்,'இது என்ன கேள்வி? போகலைன்னாத் தானே இருக்கு?'ன்னு.


திரும்ப தேனி வந்து பெரியகுளம், தேவதானப்பட்டி ...ஆ......... இங்கெதானே பல வருசங்களுக்கு முந்தி வேப்பமரத்துலே பால் ஒழுகுதுன்னு வண்டி கட்டிக்கிட்டு வந்து பார்த்துட்டுப் போனோம். இங்கே ஒரு அம்மன் கோயில்இருக்குமே. கோயில் ஓலைக்கூறை போட்டதுதான். 'அந்தக் கூறையை வேயறவங்க கண்ணைக் கட்டிக்கிட்டுத்தான் வேயணுமாம். கண்ணைத் திறந்து பார்த்தாக் கண்ணு அவிஞ்சு போயிருமாம். இப்படி பார்த்த சில பேருக்கு உண்மையாவேகண்ணு போயிருச்சாம். ரொம்ப பயபக்தியா விரதமெல்லாம் இருந்துதான் இந்த வேலை செய்வாங்களாம். இப்பேர்ப்பட்ட மகிமையான ஆத்தா இருக்கற கோயில் வேப்ப மரத்துலே பால் ஒழுகுது. கட்டாயமாப் போய்ப் பார்த்துட்டு வரணுமு'ன்னுசொன்ன நண்பர் குடும்பத்தோட ஒட்டிக்கிட்டே வந்து பார்த்துட்டு, பிரசாதமுன்னு அந்தப் பாலைக் கொஞ்சூண்டு குடிச்சிட்டு( ஆ... கசப்பு) போனதெல்லாம் மனசுக்குள்ளெ வந்து போச்சு.


பெரியகுளம் நல்லாவே இருக்கு. எங்கெ பார்த்தாலும் அருமையான பெரிய பெரிய கட்டிடங்கள். தாலுக்காவாச்சே. அரசாங்கஅலுவலகங்கள் எல்லாம் புதுசுபுதுசா நிக்குதுங்க. ரோடும் அருமையா இருக்கு.


நம்ம ஞானவெட்டியாருக்கு ஒரு போன் போட்டு எப்படி இருக்காருன்னு விசாரிச்சுக்கிட்டேன். திண்டுக்கல்லுக்குவரலையான்னு கேட்டார். அடுத்த முறைதான் முடியும்போலன்னு சொன்னேன்.


இதோ வத்தலகுண்டுக்குள்ளெ வண்டி நுழைஞ்சுருச்சு. என் வத்தலகுண்டே, இதோ வந்துட்டேன்......


ஐய்யய்யோ.... ஏன் இப்படி ரோடெல்லாம் சின்னதா, தார் பூசிக்கிட்டு இருக்கு? எவ்வளோ அட்டகாசமான, அகலமானசிமெண்ட்டு ரோடுங்க இருந்துச்சு. ஒரு மழை பேய்ஞ்சாப் போதும், அப்படியே கழுவிவிட்டமாதிரி அப்படி ஒரு பளிச்!என்னமா இருக்கும்? இப்ப.......இந்த மெயின் ரோடுலெ இவ்வளோ கடைங்க எப்பருந்து வந்துச்சு?


'நாப்பது வருசத்துலே எல்லாமே மாறித்தானே போயிருக்கும்'ன்ன எங்க இவரைப் பார்த்து நிஜமாவே முறைக்கிறேன்.ஊர் உலகம் மாறும்,மாறட்டும். ஆனா என் வத்தலகுண்டு எப்படி மாறலாம்?


புலம்பிப் பயனில்லை. மாறிப்போச்சு! அங்கே இருந்த ஒருத்தர்கிட்டே விசாரிக்கறேன்,'ஏங்க ராஜாஜி மைதானத்துக்குஎந்தப் பக்கம் போகணும்?'


திடுக்கிட்டுப் போயிட்டார் மனுஷன். 'அப்படி ஒண்ணும் இல்லீங்க' இப்ப 'திடுக்' என்னோட முறை. எவ்வளோ பெரிய மைதானம்அது எப்படி இல்லாமப் போகும்? சரியான ஊர்தானா?..ம்ம்ம்ம் அதோ அந்த மலை இருக்கு. அதானே சென்றாயன் மலை? அப்ப இது வத்தலகுண்டுதான். சென்றாயன் மலையா இல்லே சேர்வராயன் மலையா? மறந்து போச்சே...ம்ம்ம் என்ன்னவா இருக்கும்?


இன்னொருத்தரைக் கேட்டா , அவரும் அதே முழி முழிச்சார். மக்கள்ஸ் பெருகிப் போனதாலெ எல்லா இடமும் வீடுங்க ஆயிருச்சா? இல்லே அந்த திடலுக்குப் பெயரை மாத்திட்டாங்களா?


இருட்டறதுக்குள்ளே மதுரைக்குப் போய்ச் சேரணுமே. சரி நம்ம ஸ்கூலையாவது பார்த்துட்டுப் போகலாமுன்னு ஹைஸ்கூல் எங்கன்னு கேட்டா ரெண்டாவது தெருவுலே திரும்புங்கன்னார். அப்பாடா அதாவது இருக்கே.


நல்ல அகலமான செம்மண் வீதி. மெயின் ரோடுலே இருந்து ரொம்ப தூரம் போகணும். அங்கே பெரிய கேட் இருக்கும். ரெண்டு பக்கமும் ஆளுயரத்துக்கு மருதாணிச்செடி நிக்குமுன்னு பார்த்துக்கிட்டே போனேன்.


ஹா................. இதோ ஸ்கூல் கட்டிடத்துக்கு முன்னாலே நிக்கறேன். எங்கே போச்சு நான் மேலே சொன்னதெல்லாம்?இதோ இருக்கு அந்தச் செம்மண் பூமி! எங்கே? நான் நிக்கறேனே, இங்கே.


ரெண்டு லாரிங்க பக்கம்பக்கம் போனாலும் இடிக்காமப் போகக்கூடிய அந்த செம்மண் வீதி, இப்போ எங்க கார்( ச்சின்னதுடாடா இண்டிகா) போறதுக்கெப் பத்தாம ஒடுங்கி இருக்கே.


மருதாணிச் செடியெல்லாம் போச்சு. படிக்கற பசங்களும் கூடிப்போனதாலே எல்லா இடத்துலேயும் வகுப்பறைகள் கட்டிட்டாங்க.
அமைதியா( எங்கே அமைதி, அதான் மனம் ஓன்னு கூச்சல் போடுதே) நின்னு சுத்திப் பார்த்துட்டு ரெண்டு படம் எடுத்துக்கிட்டு வந்தோம்.ஆங்....மாறாத ஒண்ணு இருக்குன்னா அது மெயின் பில்டிங்கோட கொலாப்ஸபிள் கேட். இதாவது அப்படியே இருக்கே.


முந்தியெல்லாம் எல்லாமே மதுரை ஜில்லான்னு இருந்துச்சுங்க. இப்ப என்னென்னா ஏகப்பட்ட ஜில்லாக்களா பிரிஞ்சுபோயிருக்கு. வத்தலகுண்டு, திண்டுக்கல் ஜில்லாவாம். இந்த ஜில்லா ஜில்லான்னு சொல்றது என்ன தெரியுமா? மாவட்டம்!


இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி நம்ம தமிழ்நாட்டு வரைபடம் ஒண்ணைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுலேபோட்டுருக்கு, வத்தலகுண்டு, ஸ்பெஷல் வில்லேஜ் பஞ்சாயத்துலே இருக்குன்னு. போச்சுரா..... இவ்வளோதானா?
என் ச்சின்ன வயசுலே, 'மதுரைக்கு அடுத்த பெரிய ஊர் இதுதான்'னு ஒரு நினைப்பு இருந்துச்சு.


மெளனமா திரும்பி, இதோ மதுரையைப் பாக்கப்போயிக்கிட்டு இருக்கோம். என்னதான் சொல்லுங்க மனசு ஆறலை.பேசாம இங்க வராமலேயே இருந்துருக்கலாம். கனவுலேயும் நினைவுலேயும் என் அருமை வத்தலகுண்டு வாழ்ந்திருக்கும்.செம்பட்டி வழியா திண்டுக்கல் பழனி பிரியற ரோடு வந்து, அங்கிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்தாச்சு. இன்னிக்கு ராத்திரி ஒரு குடும்ப நண்பர் வீட்டுலெ தங்குறதா ஏற்பாடு.


நம்ம மாமியோட பெரிய பொண்ணோட வீடு. நான் பூனாவுலே இருந்ததை எழுதியிருக்கேன் பாருங்க. அதைப் படிச்சவங்களுக்குப் புரியும் இந்த மாமி யாருன்னு. உண்மையைச் சொன்னா மாமிதான் நம்ம ஃப்ரெண்டு.


மாமி பொண்ணு மதுரையிலே ரொம்ப வருசமா இருக்காங்க. இவுங்க வீட்டுக்காரர் பெரிய பதவி வகிச்சு, ரிட்டையர் ஆகி இப்ப ஆறு மாசமாச்சு . நாங்க வீட்டுக்குப் போறதுக்குக் கொஞ்சம் முன்னாடிதான் திருச்செந்தூர் போயிட்டு அரக்கப்பரக்கத் திரும்பி வந்திருக்காங்க. ஸ்வாமிதரிசனம் எல்லாம் நல்லா ஆச்சான்னு கேட்டுக்கிட்டு அப்படியே நம்ம ராகவனையும் நினைச்சுக்கிட்டேன். அவரைப்பத்திச்சொல்லவும் செஞ்சேன்.


பேசிக்கிட்டு இருந்தப்ப, இதைப் பாருங்கன்னு ஒரு போட்டோ ஆல்பம் தந்தாங்க. அவுங்க மகன் அமெரிக்காவுலே இருக்கார்.அவரோட நிச்சயதார்த்தம் நடந்த அன்னிக்குத்தான், (அதாச்சு ஏழு வருசம்) நான் சென்னையிலெ போய் இறங்குறேன். ஒரு ஆட்டோ புடிச்சுக்கிட்டு, பொண்ணு வீட்டுக்காரங்க கொடுத்த விலாசத்தைத் தேடித்தேடிச் சுத்தி ஒருவழியாக் கண்டுபிடிச்சோம். அப்ப அந்த ஆட்டொக்காரர் சொல்றார், 'என்னங்க இது என்னென்னவோ சொல்லி இவ்வளோ சுத்த வச்சுட்டீங்க.விஜய் வீட்டுக்கு எதிர்வீடுன்னு சொல்லியிருந்தா அப்பவே கொணாந்து வுட்டுருப்பேன்லெ'ன்னு. 'அட, சினிமா நடிகர் விஜய் வீடா?எங்கே இருக்கு?' இது நான்.


ஒரு அற்பப்புழுவையோ அல்லது வேத்து கிரகவாசியையோ பாக்கற மாதிரி ஒரு பார்வையை வீசிட்டு, ரைட்டுலேபாருங்கன்னு அந்த வீட்டைக் (வீடா அது? பங்களா) காமிச்சாரு. நாங்க நிச்சயதார்த்த விருந்து நடக்கறப்பதான்போய்ச்சேர்ந்தோம். விருந்து மொட்டை மாடியிலே ஷாமியானா போட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு. வந்திருந்த பொடிசுங்கஎல்லாம் விஜய் வீட்டையே பாத்துக்கிட்டு இருந்துச்சுங்க. நாங்க மட்டும் அப்பப்பப் பார்த்ததோட சரி:-))


இதாங்க, எதாவது சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அப்படியே அங்கிருந்து வேற எங்கியாவது போயிடறேன். அவுங்கமகனுக்கு இப்போ ஒரு மகள் அஞ்சுவயசுலே இருக்கு. பேத்தி போட்டோவா இருக்குமுன்னு அதைத் திறக்கறேன், அடியாத்தீ, இதெல்லாம் எப்படி இங்கே?


எல்லாம் என் மகளோட படங்கள். பொறந்ததிலெ இருந்து அனுப்பிக்கிட்டு இருந்தது. 'நீங்க அம்மாவுக்கு அனுப்புனபடங்கள் இதெல்லாம். அவுங்க பார்த்துட்டுப் பத்திரமா வைக்கச் சொல்லி என் கிட்டே கொடுத்து வச்சிருந்தாங்க.இங்கே வர்றப்பெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டுப் பார்ப்பாங்க' அவுங்க சொல்லச் சொல்ல என் கண்ணு நிறைஞ்சு போச்சுங்க.


இந்த மாமிக்கும் எங்களுக்கும் பூர்வ ஜன்ம பந்தம் ஏதோ இருந்திருக்கு போல. உண்மையான அன்பு. இவுங்க நமக்குசொந்தம்கூட இல்லை. மாமி இந்த உலகைவிட்டுப் போனபிறகும்கூட நம்ம நட்பு இந்தக்குடும்பத்தோட தொடர்ந்துக்கிட்டுத்தான்இருக்கு. நல்லவங்களை நண்பர்களா அடையறதுக்கும் புண்ணியம் செஞ்சிருக்கோணும், இல்லையா?


படங்கள் : வத்தலகுண்டு கடைவீதி பின்புலத்தில் தெரிவது அந்த சென்றாயன் மலை. உயர்நிலைப்பள்ளி
மருதாணிச் செடிகள் இருந்த இடம்.இப்போ?

20 comments:

said...

துளசியக்கா! நீண்ட நெடுநாள் கழித்து இந்தப்பக்கம் வந்தால் இன்ப அதிர்ச்சி வத்தலக்குண்டு. அந்த கடைசி படத்துல இருக்கிற ஸ்கூல் கிரவுண்டில தான் என் மாமா முதன் முதலில் எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்தது.

said...

அட விஜய்! வாங்க, வாங்க. நல்லா இருக்கீங்களா?

இந்தப் பதிவைப் போடறப்ப நிஜமாவே உங்களை நினைச்சேன்,
அந்த சென்றாயன் மலைப் பேரை உங்க அம்மாகிட்டே கேட்டதைத்தான்.
என்ன ஆச்சரியம். உங்க பின்னூட்டம் முதலா வந்திருக்கு.

said...

I feel the samething like you whenever I happened to visit Madurai. But my village Melmangalam near Periyakulam is the same like the olden days. Only thing is the near and dears are not living there. Actually it hurts people when their homecity seems to be a new one to them. I am always feeling the same and now-a-days avoiding visiting Mela Avani Moola Veedhi in Madurai where we lived once.

said...

உங்கள் உரையாடலின் போது 1000 வாட்ஸ் வெளிச்சத்தை என் அம்மாவின் முகத்தில் கண்டேன். காரணம் வத்தலக்குண்டு

said...

அடடே! இந்த ஊருதான் வத்தலகுண்டா.......கேள்விப்பட்டதோடு சரி....இப்பத்தான் போட்டால பாக்குறேன்.

அந்தப் பள்ளிகூடத்துலதான் நீங்க படிச்சீங்களா? நீங்க இருந்தப்ப இருந்த அதே தள்ளு கேட்டுதான் இப்பவும் இருக்கா? இல்ல புதுசு மாத்தீருக்காங்களா?

கடைசீல அந்த மைதானம் கெடச்சதா இல்லையா?

ஊருக மாறிக்கிட்டேயிருக்கு டீச்சர். பெங்களூரே நான் பாக்குறேன். எவ்வளவு மாத்தம். எவ்வளவு மாத்தம்.

தூத்துக்குடி புதுக்கிராமத்துல முந்தி படியிலயிருந்து ரோட்டுக்கு எறங்கனும். போன ஞாயித்துக்கெழம போனப்ப ரோடு மேல ஏறி ஏறி ரோட்டில இருந்து பல வீடுகளுக்குப் படியில இறங்க வேண்டியிருக்கு.......

said...

படிக்கற பசங்களும் கூடிப்போனதாலே எல்லா இடத்துலேயும் வகுப்பறைகள் கட்டிட்டாங்க./

இந்த மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு. சென்னை வேப்பேரியில நான் படிச்ச ஸ்கூலே அடையாளம் தெரியாம போயிருந்தத பார்த்துட்டு எனக்கும் அப்போ அப்படித்தான் தோனிச்சி..

ஓட்டுக்கூரை வகுப்பறையெல்லாம் பலமாடி கட்டிடமா மாறி..ஊம்.. முன்னேற்றம் வரும்போது இதெல்லாம் நடக்கத்தான செய்யும்?

said...

டிராஜ்,
இந்த 'காட்டாஸ்ப்பத்திரி' எனக்குப் புதுசா இருக்கே! அங்கே மெயின் ரோடுலே ஊரு
எல்லைக்குக் கிட்டே முந்தி ஒரு கிறிஸ்டியன் ஸ்கூல் ஹாஸ்டல் வசதியோடு இருந்துச்சு.
அது பக்கத்துலேயே ஒரு சர்ச்சும். ஒருவேளை அங்கே ஆஸ்பத்திரி வந்துச்சோ என்னமோ?
அந்த இடம் அப்ப கொஞ்சம் காடாட்டம்தான் இருக்கும்.

இந்தப் பள்ளிக்கூடம் ப்ஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாலே கொஞ்ச தூரத்துலே இருந்துச்சு.

said...

வாங்க கீதா.

இதேதான் மாற்றங்கள் தவிர்க்க முடியாமப் போயிருது.

எங்க இவரும் சொல்லிக்கிட்டுத்தான் இருந்தார் , சில இடங்களைத் திரும்பப்போய் பார்க்காம
இருக்கறதுதான் நல்லதுன்னு. ஆனா விதி விட்டதா?

கிரிமினலுங்க, அவுங்க சம்பந்தப்பட்ட கிரைம் நடந்த இடத்தைப் போய்ப் பாப்பாங்களாமே!

அதே தான்.:-)))

said...

விஜய்,

உங்க அம்மாகிட்டேதான் கேக்கணும் அந்த ராஜாஜி மைதானம்/திடல் இன்னும் இருக்கான்னு?
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன். மனசு அடிச்சுக்குதேப்பா.

said...

ராகவன்,

நாம் அங்கேயே இருந்துக்கிட்டு அந்த மாற்றங்களைச் சிறுகச்சிறுகப் பார்த்துக்கிட்டு
இருந்திருந்தா அவ்வளவா வித்தியாசம் தோணாது. 43 வருசம் மனசுலே வச்சிருந்த
பிம்பம் ஒரே நாளுலே ஒடைஞ்சுருச்சு பாருங்க அதான்......

தள்ளு கேட் அதேதான் போல. ஆனா இத்தனை வருசம் தாக்குப் புடிச்சிருக்குமா?

மைதானத்தப் பத்தி நம்ம அல்வாவோட அம்மாகிட்டேதான் கேக்கணும். அவுக அந்த
ஊர்க்காரவுகதான்.

நாடோடி வாழ்க்கையிலே நான் படிச்ச பள்ளிக்கூடத்துலே இதுவும் ஒண்ணு. மொதமொத ஹைஸ்கூல்லே
காலடி எடுத்து வச்சது இங்கெதான். ரெண்டுவருசம்தான் இந்தப் பள்ளிக்கூடமுன்னாலும் மனசுலே மணை
போட்டு உக்காந்துக்கிட்ட ஊர் இது. அங்கே நாலு வருசம் இருந்தோம்.

said...

ஆமாங்க டிபிஆர் ஜோ,

மாற்றம் வருவதை மாற்றவே முடியாதுல்லே?

said...

மாணவி துளசி
மிஸஸ் துளசி
இப்போ டீச்சர்
இத்தனை காலங்களில் எத்தனை பரிமாணங்கள்
நிச்சயமாக மாணவி துளசியை எங்கேயும் இனி நாம் பார்க்க முடியாது
தவழ்ந்த மண்.
பழகிய ஊர்.
படித்த பள்ளி
இப்போ நம் கண் முன்னே
பதிவு சொல்லும் பழங்கதை
அது போதும்!

said...

என்ன கவிஞரே,

இப்படிச் சொல்லிட்டீங்க? வாழ்க்கை என்னும் பள்ளியிலே நம் வாழ்க்கை முழுசும் படிக்க
வேண்டியவங்கதானே நாமெல்லாம். The life is full of learning இல்லையா?

said...

டிராஜ்,

காட்டுக்கெங்கே போறது? எல்லாம்தான் வீடுகளாயிருச்சே!

said...

ஆமாங்க அத்துழாய், நம்ம மனசுலே வச்சிருந்த நினைவு அப்படியே அழிஞ்சதைத்தான்
தாங்கமுடியலை.

ஆமாம், எந்த திருமங்கலம்? மதுரை திருமங்கலமா? கல்லுப்பட்டிக்கு பக்கம்?

said...

நான் படித்த பள்ளி கட்டிடத்தை நீண்ட நாள் கழித்து பார்க்கிறேன். அதைத்தவிர எல்லாம் மாறிவிட்டது. பள்ளி வளாகத்தில் ஒரு மரம் கூட இல்லை இப்போது. சென்றாயப்பெருமாள் கோவிலிலும் நிறைய மாற்றங்கள்.

said...

வாங்க முரளிகண்ணன்.

இன்னொரு வத்தலகுண்டுக்காரரை வலையில் சந்திச்சது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

மருதாணிச்செடிகள் உங்க காலத்துலேயும் இருந்திருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.

நம்ம 'கதை' ஒரு 45/50 வருசப் புதுசு:-)

said...

ரசிக்கும் வகையில் மிகவும் ரசனையுடன் பதிவிட்டு இருக்கீங்க .வாழ்த்துக்கள் !

said...

வாங்க கவிஞரே.

நாலு வருசத்துப்பிறகு இந்தப் பதிவை மீண்டும் உயிர்ப்பித்து இருக்கீங்க!

ஒருவகையில் ஏசுநாதர் பதிவோ!!!!

said...

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி நான் வெளியே வந்த வருடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாறிவிட்டது. ஒன்பது முதல் 12 வரைக்கும் படித்த பள்ளியில் ஒரு பழைய ஆசிரியர் கூட இல்லை. 1 முதல் 12 வரைக்கும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் ஒருவர் கூட ஊரில் இல்லை. சென்ற வாரத்தில் எனக்கு 11 மற்றும் 12 ல் தமிழாசிரியராக இருந்த மீனாட்சி சுந்தரம் என்ற மீனவன் சமீபத்தில் காரைக்குடி ஒரு விழாவில் கலந்து கொண்டதாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு இது போன்ற தேடல் இன்று வரைக்கும் அதிகமாகவே இருக்கின்றது. நான் படித்த பள்ளியில் சென்ற ஒரு கூட்டத்தில் பேச வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.

பார்க்கலாம்.