Tuesday, May 16, 2006

பை பை ச்சென்னை!!!

பயண விவரம் பகுதி 26

மனசும் உடலும் தளர்ந்து போய் 'டிபார்ச்சர் லவுஞ்'லே உக்காந்துருக்கேன். ஒவ்வொருமுறையும் ஊரைவிட்டுக் கிளம்புறப்ப இதேதான். இனி எப்ப இங்கே வரப்போறோமுன்னு மனசுக்குள்ளே ஒரு துடிப்பு. நேத்தும், இன்னிக்கும் ஓட்டம் கூடுதலா இருந்துச்சு.


நேத்துத், தாம்பரத்துலே அண்ணியோட அம்மா வீட்டுக்குப் போனோம். அங்கே ஒரு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் படம் இருக்கு. அதுலே ஹனுமான் முகம் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது.அவ்வளோ விநயமும், பவ்யமுமா இருக்கும். அதை அடுத்த பதிவுலே போட்டுரலாம். இதேபோல ஹரே கிருஷ்ணாவுலே வாங்குன கிருஷ்ணன், யசோதா படமும். அதுலே பால கிருஷ்ணன் முகபாவனை ரொம்ப அற்புதம். படங்களைப் பத்திச் சொல்ல இன்னும் நிறைய இருக்கு. அது அப்புறம் ஒரு நாள்.அத்தை எனக்கு இன்னொரு அம்மாதான். அருமையான விருந்து சமைச்சு வச்சிருந்தாங்க. இனி எப்ப வரப்போறொமுன்னு அங்கேயும் ஒரு பிடி பிடிச்சாச்சு. அப்புறம் கொஞ்சம் வீட்டு விஷயங்கள் பேசுனோம். எனக்குப் பிடிக்குமேன்னு சாயந்திரம் பிட்டு அவிச்சு வச்சுட்டாங்க. மத்தியானம் பிடிச்சதே இன்னும் செரிக்கலை. அதுக்குள்ளே..... ..... அதுக்காக? அப்படியே விட்டுற முடியுதுங்களா?


பார்ஸல் வாங்கிக்கிட்டா பசிக்கும்போது தின்னலாமே! சரி, நேரமாச்சேன்னு கிளம்பிட்டோம். எனக்கு இன்னும்பேக்கிங் வேலை அப்படியே கிடக்குன்னு கெஸ்ட் ஹவுஸுக்கே வந்துட்டோம். மறுநாள் சாயங்காலம் அண்ணன் வந்ததும் ஏர்ப்போர்ட்க்குப் போலாமுன்னு சொல்லிட்டார்.


துவைக்கிற துணிகளை மெஷினுலே போட்டுட்டு கடைசிநாளாச்சேன்னு டிவி சீரியல் பார்த்துக்கிட்டு இருந்தேன்.எனக்குச் சென்னையிலே பிடிச்ச ஒரு விஷயம் இந்த துணி துவைக்கறதுதாங்க. எந்த நேரமுன்னு பார்க்கவே வேணாம். ஒரு, ஒருமணி நேரத்துலே காஞ்சுருது.


காலையிலே வழக்கமாப் போறமாதிரி கோயிலுக்குப் போய், பெருமாள்கிட்டே 'போயிட்டு வர்றேன்'னு சொல்லிக்கிட்டுகடைசி நிமிஷ ஷாப்பிங் ( இது, இதோட முடியற வேலையா?) செஞ்சுக்கிட்டு, மதுவோட வீட்டுக்குப் போய் சொல்லிக்கிட்டு, அப்படியே பேங்க் போய் கொஞ்சம் காசை எடுத்து வச்சுக்கிட்டேன்.


பொட்டியைத் தூக்கிப் பார்க்கலாமுன்னா, ஊஹூம்.... முடியலை. ஓவர் வெயிட்டுத்தான். தீட்டப்போறாங்கன்னு தெரிஞ்சுபோச்சு. போனமுறை எக்கச்சக்கமா ஆயி, அதை கார்டுலே போட்டேன். இந்தமுறை கேஷாக் கட்டிரலாமுன்னுதான்காசு எடுத்தது.


மகளுக்காக கொஞ்சம்(!) இனிப்பு வாங்கிக்கலாமுன்னு நம்ம சரவணபவன், ஸ்ரீகிருஷ்ணாவெல்லாம் போய்வந்தாச்சு.துவைச்சத் துணிகளையெல்லாம் பெட்டிபோட்டு வாங்கி அடுக்கியாச்சு. இடைக்கு இடையிலே டிவி பாக்கறது, பக்கத்து வீட்டம்மாகிட்டே சொல்லிக்கறதுன்னு நேரம் போயிருச்சு. பக்கத்து வீட்டம்மா போனமுறை பார்த்ததுக்குப் பாதியாப் போயிருந்தாங்க. கேன்ஸராம். 'அடுத்தமுறை நீங்க வர்றப்போ இருக்கேனோ என்னமோ?'ன்னு சொன்னதும் மனசுக்குப் 'பக்'னு ஆயிருச்சு. 'இதெல்லாம்நம்ம கையிலேயாங்க இருக்கு? எல்லாம் கடவுள் விட்ட வழின்னு இருந்துக்கிட்டு உடம்பைப் பார்த்துக்கணுமு'ன்னு சொன்னேன். நல்லா இருக்கோம்னு நினைக்கற நாமே, நாளைக்கு இருப்போமான்றது தெரியாதுல்லையா? நம்பிக்கைதானேங்க வாழ்க்கை.


அப்பல்லோ ஆசுபத்திரியிலே இருந்தாங்களாம். அங்கே பணத்தைக் கறந்துட்டாங்களாம். இப்படியே போனா, ரிட்டயர்மெண்டுக்குச்சேர்த்த காசெல்லாம் 'கோவிந்தா'ன்னு போயிருமாம். இப்ப என்னவோ சித்தா மருந்து எடுத்துக்கறாங்களாம். அவுங்க சொல்லச்சொல்ல, கேக்கறதுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சுங்க. அப்ப தான் நான் எப்பவும் பண்ணற பிரார்த்தனைக்குமுழு அர்த்தமும் தோணுச்சு. 'கடவுளே, கைகால் நல்லா இருக்கப்பவே 'பட்'ன்னு கொண்டு போயிரு'


என்னமோ தோணுச்சேன்னு 'ஒலிக்கும் கணங்கள் 'நிர்மலாவுக்குப் ஃபோன் போட்டேன். அவுங்க நேத்து ராத்திரிதான் கல்கத்தாலே இருந்துச் சென்னைக்கு வந்துட்டாங்களாம். அடுத்தமுறைக் கட்டாயம் சந்திக்கணுமுன்னு அப்பவே முடிவு செஞ்சாச்சு. பாருங்க, எவ்வளோ நம்பிக்கைன்னு!


ஏழுமணிக்கு அண்ணன் வந்துட்டார். கொஞ்ச நேரத்துலே கிளம்பிப்போய் நல்ல ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டு, ச்சென்னையை உண்மைக்குமே 'இஞ்ச் பை இஞ்சா' அனுபவிக்கிறேன். கத்திப்பாரா வர்றதுக்குள்ளே என்னா கூட்டம் என்னா கூட்டம்!அடுத்தமுறை அங்கே ஃப்ளை ஓவர் வந்துருமாம். ஏர்ப்போர்ட் வந்து பார்க்கிங் கிடைச்சு, அண்ணன் அண்ணிகிட்டேப் பிரியாவிடை வாங்கி உள்ளே போயாச்சு. அதுக்கு முன்னாலே நாங்க அங்கே ஒரு வடை & காஃபியை உள்ளே தள்ளியாச்சு. அங்கேயும் மசால்வடை நஹீ...(-:


பெட்டியை wrap செய்யறதுன்னு புதுசா ஒண்ணு இருக்கே. அதுக்கு 200 ரூபாயாம். சரி, இருக்கட்டுமுன்னு அதையும்செஞ்சுக்கிட்டேன். இந்த முறை சிங்கையிலே தங்கறதுக்கு ஹோட்டல் கிடைக்காததால் ச்சும்மா ஒரே பகல் மட்டும் அங்கே இருந்துட்டு டைரக்ட்டா நியூஸி போறேன்.


பெட்டியை எடை போட்டா 33 கிலோ காமிக்குது. ஆனா கவுண்ட்டர்காரர் ஒண்ணும் சொல்லலை! எனக்கு ஸீட் அலொகேட் செய்யறப்ப, 'இண்ட்டர்நெட்'லே புக் பண்ணிட்டீங்க போல இருக்கே. ஏன் முதல்லே சொல்லலை?'னுகேட்டார். நானும் முகத்தைப் பாவமா(!) வச்சுக்கிட்டு, எங்க ட்ராவல் ஏஜண்ட் பண்ணி இருக்கலாமுன்னு சொன்னேன்.போர்டிங் பாஸ் ரெண்டு ஃப்ளைட்டுக்கும் கொடுத்ததும் வாங்கிக்கிட்டுப் போய் லவுஞ்சுலே உக்கார்த்தாச்சு.


ஃப்ளைட் ரெடியாம். நம்ம நம்பரைக் கூப்புடறாங்க.


இன்னிக்கு ராத்திரி 'புஷ்' வர்றாராம். ரெண்டு பெரிய மனுஷங்களை இந்தியா ஒரே சமயத்துலே தாங்காதுன்னு இதோ நான் கிளம்பியாச்சுங்க. அவர் டெல்லியிலே கால் வைக்கறப்ப நான் ப்ளேன்லே!

பை பை ச்சென்னை!!!

57 comments:

said...

உண்மையிலேயே மெகா சீரியல் எழுத போகலாங்க நீங்க. என்னா விலாவாரியா (அப்படீன்னு எதுக்கு சொல்றாங்க) சொல்றீங்க. நானும் எழுதினேனே ஒரு பயண கட்டுரை, நாலு வரியில.. சரி அதுக்கும் ஒரு இது வேணுமில்ல...

said...

அடடே... முகமூடி!

வாங்க வாங்க.

நீங்கெல்லாம் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பீங்க. 'குறள் 'மாதிரி.

நம்மது எல்லாம் 'பாரதம்' ஆச்சே:-))))

said...

///இன்னிக்கு ராத்திரி 'புஷ்' வர்றாராம். ரெண்டு பெரிய மனுஷங்களை இந்தியா ஒரே சமயத்துலே தாங்காதுன்னு இதோ நான் கிளம்பியாச்சுங்க. அவர் டெல்லியிலே கால் வைக்கறப்ப நான் ப்ளேன்லே!///

இது புஷ்-க்குத் முன்னமே தெரிந்திருந்தால் பயணத்தைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருப்பாரோ என்னவோ?. :-)).

said...

குறளோ பாரதமோ, உரை (உறையும்!) தேவைப் படாமல் புரியுதே. அதுவே பெரிய விஷயம்தான். ஹிஹி.

said...

என்ன துளசி ஊருக்கு கிளம்பிட்டீங்களா?
அய்யொ பாவமா இருக்குப்பா.
திரும்பி சீக்கிரம் வாங்க.இந்த வெய்யில் உங்க ஊரில கிடைக்குமா? மசால் வடை கூரியர் செய்ய முடிஞ்சா அனுப்பிடுவேன்...

said...

பெட்டிமட்டும் கனக்கவில்லை, உங்கள் உள்ளமும் கனத்தது என்று தெரிகிறது. சென்னையின் வெயிலில் பொரிந்து கொண்டிருப்பவர்களுக்கு நிழலில் இருந்தால்தானே வெயிலின் அருமை தெரியும்.:))

said...

முத்துத்தம்பி,

வாங்க. என் தப்புதான், புஷ்க்கு என் பயண விவரம் சொல்லாதது:-)))))

said...

கொத்ஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ( இப்படித்தான் சொல்லணுமாம்)

said...

மானு,

எத்தனைநாள் வீட்டை விட்டுட்டு இருக்கறது? கிளம்பித்தானே ஆகணும்.

தயவு செஞ்சு ம.வ. அனுப்பாதீங்க. வர்றதுக்குள்ளே ஊசிப்போயிரும் :-)))

said...

ஆமாங்க மணியன்.
இன்னிக்குப் பாருங்க 6 டிகிரி. கொஞ்சம் வெய்யில்
இருந்தா இதமா இருக்குமில்லே(-:

said...

என்ன எங்க ஊரில் 106,உங்க ஊரில் வெறும் 6. ரொம்ப வித்தியாசம் இல்லை.ஒஹொ. நீங்க செல்ஷியஸ் சொல்றீங்களொ.சரி 42.டிகிரி . கொஞ்சம் குளிர் காத்து அனுப்புங்க.

said...

இதோ... அனுப்பியாச்சு வல்லி.

said...

துளசிம்மா,

எனக்கும் அப்படிதான் இருக்கும்.ஆணால்,இங்கு (மஸ்கட்)கம்பெனியில்,வருடம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வரலாம்,அதனால் பிழைத்தேன்.

மீனாட்சி அருண்

said...

இன்னொன்ற் சொல்ல மறந்துவிட்டேன்.இங்கு வெயில் 50 C தாண்டும்

மீனாட்சி

said...

சென்னையில் டிராஃபிக் தேவலை என்றுதான் நான் சொல்வேன். கடந்த இரண்டு வார அனுபவத்தில் நான் கண்டது இது. சென்னையிலும் சில குறிப்பிட்ட இடங்களில் டிராபிக் ஜாம் உண்டு. ஆனால் முடிந்த வரையில் தேங்காத ஜாம். பெங்களூரில் தேங்கித் தேங்கிப் பொங்கிப் பொங்கி....ஜாமோ ஜாம். எல்லாம் மாறும்னு நம்புறேன்.

ஆகா....பயண அனுபவங்கள் முடிஞ்சதா! சரி. அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். அடுத்து வேற ஏதாவது எழுதுவீங்களே!

said...

//எனக்குச் சென்னையிலே பிடிச்ச ஒரு விஷயம் இந்த துணி துவைக்கறதுதாங்க. எந்த நேரமுன்னு பார்க்கவே வேணாம். ஒரு, ஒருமணி நேரத்துலே காஞ்சுருது.
//
எனக்கும் சென்னைல பிடிச்ச விஷயம் இது தான்கா.. அடுத்த ட்ரிப் எப்போ? :)

said...

மீனாட்சி,

வாங்க வாங்க. புதுசுங்களா? வந்ததுக்கு நன்றிங்க.
ஆமாம். நீங்க மருதக்காரவுகளா? ச்சும்மா... பேரைப்பார்த்துட்டு
அப்படித் தோணிப்போச்சு.

வருசாவருசம் ஊருக்கா? கொடுத்து வச்சவுகதான்.

நான் எப்பவாச்சுத்தான். அதான் நீட்டிவலிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன்.

எங்க கோடையிலே 27,28 வந்தாவே ஜாஸ்தி. எப்பவாவது ஒரு நாள் 30ன்னா அவ்வளோதான்.
பாக்கறவுக எல்லாம்'இண்டியன் சம்மர்'னு சொல்லுவாங்க.

said...

ராகவன்,

நிறைய வண்டிங்களாயிருச்சு இப்ப. அதான் காலையிலே 11 மணிக்குக் கொஞ்சம்
பரவாயில்லையாம். சாயந்திரம் 6 மணிக்கு மேலே எட்டுவரை ஜாமோ ஜாமாம்.

said...

பொன்ஸ்,

அடுத்த பயணமா? இன்னும் இதே எழுதி முடிக்கலையே:-)))
சீக்கிரம் முடிச்சுட்டு, வகுப்புக்குப் போகணும். அங்கே புள்ளைங்க எல்லாம்
'டீச்சரைக் காணோம்'னு கொண்டாடிக்கிட்டு இருக்குறாங்க. போய் ஒரே அமுக்கு.
சரித்திர வகுப்புக்குள்ளே கொண்டுவந்து தள்ளீரணும்.

said...

நான் சிங்கார சென்னைங்க.மதுரை மீனாட்சி அம்மனுக்கு வேண்டிக்கிட்டு பொறந்தால் இந்த பேரு.உங்க தளம் தான் முதல படிக்க ஆரம்பிச்சது,அப்படிய தமிழ்மணம் பக்கம் தாவி இப்ப தினமும் தமிழ்மணம் பாக்கலனா அவ்வளவுதான்.கதை கந்தல் ஆயிடும்.

said...

வருசத்துக்கு ஒரு தரம் போய்,2 மாசம் இருந்துட்டு வந்தாலும்,இங்க எல்லாதுக்கும் ம்சென்னை போல வருமானு பெருமுச்சு தான்.இன்னும் 11 மாசம் இருக்கெ,பொட்டிய தூக்கறதுக்கு

said...

சின்ன வயசில் அம்மாயியிடம் கதை கேட்ட சுகம் உங்களின் இந்தியப் பயணத் தொடர் படித்ததிலும் கிடைத்தது எனக்கு. நன்றி துளசிம்மா. நீங்கள் இன்னும் நிறையப் பயணங்கள் போகக் கடவது!! பின்னே கதை எப்படிக் கேக்கிறதாம்:))

said...

// நம்மது எல்லாம் ' பாரதம்' ஆச்சே//
தப்பு....தப்பு..'மஹாபாரதம்' ஆச்சே;-))))
a good travelogue

said...

'கடவுளே, கைகால் நல்லா இருக்கப்பவே 'பட்'ன்னு கொண்டு போயிரு'//

என்னங்க துளசி, அடிக்கடி இந்த வாக்கியத்த உபயோகிக்கிறீங்க? நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாத்தாங்க நடக்கும். கவலைய விடுங்க.

said...

அக்காவின் சென்னை பயணம் இனிதே முடிந்து (எங்கே போனாலும் சாப்பாடுதான் பிரதானமான விசயமா இருக்கு, அதிலும் அந்த மசால் வடை), மீண்டும் அடுத்த முறை சென்னை போகும் வரை விரதம் இருப்பதாக கோபால் சாரிடம் சொல்லி அவரும் சரி, இருந்துக்கோன்னு சொல்லியும், அடுத்த நாளே மசால்வடையை நினத்து எதையோ செஞ்சி சாப்பிட்ட கதையை இங்கே நீங்க எல்லோருக்கும் சொல்லாமெ விட்டுட்டீங்களே, மறந்துட்டீங்களா?

said...

உண்மையாகவே அந்த பாலக கிருஷ்ணர் படங்கள் அருமை. பார்த்துக் கொண்டே இருக்கலாம். நான் பெங்களுரில் வாங்கினேன். நல்ல பிரேமும் கூட.

said...

மீனா,
என்ன சொல்றீங்க, நம்ம'தளம்' தான் மொதல்லெ படிக்க ஆரம்பிச்சதா?

ஆஹா..... இப்படி ஒரு பெருமை வேற 'நமக்கு' இருக்கா? :-))))

ஆமாம், வாசகியாவே இருந்தா எப்படி? தமிழ்வேற தட்டச்சு செய்ய வந்துருச்சுல்லெ,
எடுத்து விடறது உங்க அனுபவங்களை!

ச்சின்னச் சின்னப் பதிவாப் போடலாம், ஆரம்பத்துலே. சீக்கிரம் வந்து ஜோதியிலே சேர்ந்துருங்க.

said...

செல்வா,

//.......நிறையப் பயணங்கள் போகக் கடவது!! //

இப்படி ஒரு சாபமா? இல்லே வாழ்த்தா? :-))))

said...

சிவஞானம்ஜி,
இன்னும் 50% இங்கிலீஸுதானாக்கும்?:-))))

said...

டிபிஆர்ஜோ,

நடக்குமுன்னு சொல்றீங்க. நடக்கணும். இங்கே முதியோர் இல்லத்தைப் பார்த்தா நான் 'வேண்டும்'
காரணம் 'பளிச்'னு தெரியும்.

said...

மஞ்சூராரே,

நீங்கவேற! விரதமே 'தினம் மசால்வடை சாப்பிடறேன்னுதான்':-)))))

மனுஷனுக்குச் சாப்பாடு பிரதானம் இல்லீங்களா? அப்படியே வயித்தைக் காயப்போட்டா
'பாவம்' சேர்ந்துருமே! இருக்கற பாவம் போதாதுன்னு இதைவேற சுமக்கணுமா?:-)))

said...

நாகைசிவா,

பிரேம் எல்லாம் போட்டு வாங்கலீங்க. எப்படிக் கொண்டு வர்றது? படமாத்தான் வாங்கி வந்தேன்.
இப்போதைக்கு ச்சும்மா சுவத்துலே போர்டு பின் போட்டு வச்சிருக்கேன். ஸேல் வரும்போதுதான்
ப்ரேம் போடணும்.

குழந்தைக் கிருஷ்ணன் அப்படியே ச்செல்லம் போல இருக்கான்.

said...

சேந்துட்டா போச்சு.(கொஞ்ச நாள் ஆகும்).முதல்ல நல்ல வாசகியா இருப்போம்.அப்புறம் ஆரம்ப்பிக்கலாம் நம்ம கச்சேரிய

said...

சொல்ல மறந்துட்டேன்.ஒரு முறை,சைனிஸ் நூடுல்ஸ் ரெசிப்பிக்கு கூகிளல தேடும் போது,அது உங்க தளத்தில கொண்டு வந்துவிட்டுச்சி(ஒரிண்டல் நூடுல்ஸ்).அது ஆச்சு 1 வருசம்,அதிலருந்து நான் ஒரு மெளன வாசகி (சைலண்ட் ரிடர்).

said...

அடடே அதுக்குள்ள பயண கட்டுரை முடிஞ்சுதா!

said...

ஹ்ம்ம்ம்
சென்னையை விட்டு நீங்கள் சென்றது மனதிற்கு சற்று பாரமாகவே இருந்தது, அம்மா, நியூசிலாந்தில் பூகம்பம் மற்றும் சுனாமி என்று அறிந்தேன், நலமா? :( உடன் மடலிடவும் :(
ஸ்ரீஷிவ் @ சிவா...:(

said...

யோகன்,
இப்ப 'சொந்த ஊர்' எதுன்னே தெரியாமக் குழப்பத்துலே இருக்கேன்.

இங்கே இருக்கறப்ப 'ஊர் நினைவும்', ஊர்லே இருக்கறப்ப 'வீட்டு நினவு'மாச் சுத்திக்கிட்டு
இருக்கு மனசு.

ஊரை விட்டு 25 வருசமாச்சு. குழந்தை குட்டி, வீடு வாசல் எல்லாம் இங்கேயே ஆகிப்போனதாலே
எது என்னோடதுன்னு ஒரு மயக்கம்(-:

ஒருவேளை தாய்தகப்பன் இன்னும் உயிரோடு இருந்தால் ஊரோடு உள்ள பந்தம் இன்னும் நெருக்கமா
இருக்குமோ?

said...

மீனா,

''வெளியே வரவே' ஒரு வருசம் எடுத்துக்கிட்டது போல இல்லாம சீக்கிரம் வந்து சேருங்க, ஆமாம்:-)))

said...

சிங். செயகுமார்,

ச்சென்னை முடிஞ்சு, உங்களைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டு இருக்கென்லெ:-))

said...

சிவா,
அன்புக்கு நன்றி. நிலநடுக்கம் நேத்து இரவு 10 மணிக்கு லேசா இருந்ததாம்.
நான் ஆடற ஆட்டத்துலே அது மறைஞ்சுபோச்சு போல:-))

said...

//துவைக்கிற துணிகளை மெஷினுலே போட்டுட்டு கடைசிநாளாச்சேன்னு டிவி சீரியல் பார்த்துக்கிட்டு இருந்தேன்.//

க்கும்... ரொம்ப முக்கியம் :-)

எனக்குச் சென்னையிலே பிடிச்ச ஒரு விஷயம் இந்த துணி துவைக்கறதுதாங்க. எந்த நேரமுன்னு பார்க்கவே வேணாம். ஒரு, ஒருமணி நேரத்துலே காஞ்சுருது. //

அது சரி காஞ்சபய ஊரு'ன்னு சொல்றீங்களே? உண்மை சுடும்'னு இதத்தான் சொல்வாங்களோ? ;-)

said...

துளசி அம்மா,
// பெட்டியை ந்ரப் செய்யறதுன்னு புதுசா ஒண்ணு இருக்கே. அதுக்கு 200 ரூபாயாம்

போன வருசம் கூட 100 ரூவான்னுதான் இருந்திச்சி. வருசத்துக்கு 100 ரூவா இன்கிரிமென்ட்டா ?

said...

நல்ல பயணக்கட்டுரை துளசி. அருமையா இருந்தது. முக்கியமா சந்திச்ச மனிதர்கள் பத்தி எழுதி இருந்தது இன்னும் நல்லாவே இருந்தது.

said...

என்னப்பா குசும்ப்ஸ்,
நலமா?
உங்களுக்கென்ன டிவி சீரியல் எல்லாம் தினமும் பாப்பீங்க?
ஒண்ணும் இல்லாமக் காஞ்சு இருக்கற நான் அங்கே பார்த்தாதானே உண்டு:-)))

said...

கார்த்திக்,

விலைவாசி ஏறாதா? அதான் 100% ஏறிடுச்சு போல.

said...

வாங்க பத்மா.

ஆமாம் பத்மா, நிறைய நல்லவங்களைச் சந்திச்சேன்.
இன்னும் பலர் இருக்காங்க பத்மா. அடுத்தமுறை பார்க்கலாம்.

said...

துளசி, நியூசி பக்கத்துல கடல்ல பூகம்பம்னு இங்க செய்தியில சொன்னாங்க.. கொஞ்சம் எச்சரிக்கையா கடல் பக்கம் எல்லாம் போகாம இருங்க. ஏற்கனவே உங்களுக்கு அரசாங்கமே தகுந்த எச்சரிக்கை கொடுத்திருப்பாங்க.

இருந்தாலும் நேரம் கிடைக்கிறப்போ இதனால ஒரு பாதிப்பும் இல்லைன்னு நல்ல சேதிய ஒரு 4 வரி எழுதுங்க.

said...

முகமூடி,

மனசு பொங்கிருச்சு.
இங்கே ஒண்ணும் ஆகலை இதுவரை.
எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம்.

நன்றிங்க.

said...

துளசி மேடம், என்னை நினைவிருக்கா? நீங்க சென்னை வரப்போ உங்களுக்கு ஒரு சோப் சிற்பம் பண்ணித்தரனும்னு கேட்டிங்களே. அது சும்மா ஒரு பேச்சுக்குத்தானா? நான் சீரியஸாக உங்களுக்கு என்ன செய்துதரலாம் என்றெல்லம் யோசித்துக்கொண்டிருந்தேன்! நீங்கள் சென்னை வந்ததை எனக்கு சொல்லவே இல்லையே! இபோதுதான் இந்த பதிவையே பார்க்கிறேன்!

முகமூடி,
//விலாவாரியா (அப்படீன்னு எதுக்கு சொல்றாங்க) // இது உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஒரு விஷயம். உடலில் எவ்வளவு சதை இருந்தாலும் விலா எலும்புகள் மட்டும் வரிவரியாய் தெரியுமாம். எங்க அப்பா சொல்வாங்க. சரிதானான்னு யாரச்சும் சொல்லுங்க. ம்.. எவ்வளவு பின்னூட்டங்களுக்கு அப்புறம் உங்களுக்கு பதில் கிடைச்சிருக்கு பாருங்க!

said...

என்னங்க அருள்குமார்,
நீங்க சென்னையிலேயா இருக்கீங்க?
நான் பயணம் புறப்படும்முன்னே ஒரு பதிவு போட்டு, போன் 3 எல்லாம் சேர்த்துக்கிட்டுத் தானேங்க
வந்தேன்.
அப்ப நீங்க பதிவைக் கவனிக்கலைபோல(-:

போகட்டும், நேரம் வரலைன்னு வச்சுக்கணும்.

சோப் புள்ளையார் அழகாப் பண்ணி வச்சுருங்க. அடுத்தமுறைக் கட்டாயம் வந்து வாங்கிக்கறேன்.

அது பாருங்க, வலைஞர் சந்திப்பு அங்கே இருந்து போடமுடியலை. எல்லாம் ஃபாண்ட் ப்ராப்ளம்தான்.

said...

துளசி, சாந்தாம்மா மற்றும் ஹெ.ஐ.வி பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பற்றி எழுதுனீங்க பாருங்க, மனச ரொம்பவே உருக்கிடுச்சு.
படங்க, இங்க வரலை. என்னத்த போட்டீங்க? தடைப்பட்ட சைட்டுன்னு வருது :-))

said...

துளசி Madam,

இனிப்பு எடுத்துட்டு வர விடுவாங்களா நியூஸில? ஆஸில விட மாட்டாங்க:(.

said...

வாங்க கோபாலன். புதுசுங்களா?
நலமா? எப்படி இருக்கீங்க?

இங்கே இனிப்பு கொண்டுவரும்போது 'கன்ஃபெக்ஷனரி. cooked இண்டியன் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் விலாவரியா எழுதி டிக்ளேர் செஞ்சுரணும்.

சொல்லிட்டு வந்தா தப்பில்லை. சொல்லாமக் கொண்டுவரமுடியாது.
ஆனா பழம், காய், விதை, பூ இந்த வகையிலே ஒண்ணூம் கொண்டுவரக்கூடாது.
பிடிச்சா 10,000$ பைன்.

தனியா ஒரு பையிலே எல்லாத்தையும் பேக் செஞ்சுக்கிட்டு
அப்படியே காமிச்சுட்டு வந்தாத் தப்பிச்சுரலாம். டச் வுட்!

said...

அங்கே புள்ளைங்க எல்லாம்
'டீச்சரைக் காணோம்'னு கொண்டாடிக்கிட்டு இருக்குறாங்க.//

:-))
:-((

said...

எல்லா பதிவும் ஒன்றுவிடாமே படிச்சாச்சு!

அற்புதம் துளசி!(பதிவு, துளசி இரண்டுக்குமேதான் இந்த அற்புதம் :))

அன்பு
மீனா.

said...

தருமி,

எதுக்கு சந்தோஷத்தை இப்படி மறைச்சுக்கறீங்க?
கொண்டாட்டம் நிஜம்தானே?:-)))

said...

மீனா,

நன்றி.

இன்னும் ஒரு அத்தியாயமிருக்கே. அதை வுட்டுறாதீங்க.