Saturday, July 08, 2006

எவ்ரி டே மனிதர்கள் -8 ஸ்டீவன்

வழக்கத்தைவிட பத்து நிமிஷம் முன்னாடியே வேலைக்குக் கிளம்பிட்டேன். இன்னிக்குஸ்டீவன் வர்றதா முன்னேற்பாடு இருந்துச்சு.


நான் போய்ச் சேர்ந்தப்பவே லிஸியும், ஸ்டீவனும் எனக்காகக் காத்திருந்தாங்க. அவசரஅவசரமாச் சாவியைத்தேடி எடுத்துக் கதவைத் திறந்தேன். உள்ளெ வந்த லிஸி,முறைப்படி ஸ்டீவனை அறிமுகப்படுத்தி வச்சாங்க. நான் நீட்டுன கையைக் குலுக்கும்போதே அதுலே ஒரு சிநேகபாவம் தெரிஞ்சது.


வயசு 17 ஆச்சாம். இங்கே இதே பகுதியிலே இருக்கற உயர்நிலைப் பள்ளியிலே விசேஷத் தேவை இருக்கற பிரிவில் 'படிக்கிற' பையன். Children with Special needs.


நான் வேலை செய்யற இடம் ஒரு லைப்ரரி. குழந்தைகளுக்கான விசேஷ வாசகசாலை. இங்கே 16 வயசுவரை மட்டுமே அங்கத்தினரா இருக்க முடியும். இங்கே அக்கம்பக்கம் வசிக்கும் பிள்ளைகளுக்காகவே இது நடக்குது. பிள்ளைங்க மேலே அளவற்ற அன்பு வச்சுருந்த ஒரு செல்வந்தர் கொடுத்த நன்கொடை. ஆரம்பிச்சது 1954இல். இந்த சேவையை எத்தனையோ தடங்கல்கள் வந்தாலும் நிறுத்தக்கூடாதுன்னு,தன்னார்வத்தொண்டு உணர்வு இருக்கும் பெண்களாலேயே இது நடந்துக்கிட்டு இருக்கு. நானும் 11 வருஷமா இங்கே வேலை செய்யறேன். நிர்வாகக்குழுவிலேயும் பங்கெடுத்துக்கிட்டு இருந்தேன்.


ஒரு நாள், எங்க சேர் பெர்ஸன், எங்கிட்டே 'இதுபோல பக்கத்துலே இருக்கற பள்ளிக்கூடத்துலெ இருந்து ஒருவிண்ணப்பம் வந்திருக்கு. விசேஷத்தேவைப் பிரிவுலே இருக்கற பிள்ளைங்களுக்கு அங்கே இது கடைசி வருசமாம்.அவுங்களுக்கு எதாவது வேலை செய்யப் படிப்பிக்கணும். எதுலே ஆர்வம் இருக்குன்றதைப் பொறுத்து அவுங்களுக்கு வேலை ஏற்பாடு செய்ய இது உதவியா இருக்குமாம். நம்ம லைப்ரரியிலே ஒரு பையனுக்கு பயிற்சி கொடுக்கறீங்களான்னு கேட்டாங்க. என்ன சொல்லட்டும்?' னு கேட்டாங்க.


'இது ஒரு புது முயற்சியா இருக்கே, ஏன் இதுக்கு உதவி செய்யக்கூடாதுன்னு நினைச்சு சரி'ன்னு சொல்லிட்டேன்.


அதுக்கப்புறம்தான் லிஸி என்னை ஃபோன்லே கூப்புட்டு நேரம், நாள் எல்லாம் கேட்டுக்கிட்டாங்க. அங்கே மொத்தம்14 பிள்ளைங்க இருக்காங்களாம். அவுங்களை இது மாதிரி பயிற்சி கொடுக்கற இடத்துக்குக் கொண்டு போய்க் கொண்டுவர்றதுக்கு சில ஒருங்கிணைப்பாளர்கள் இருக்காங்க. அதுலெ ஒருத்தர்தான் நம்ம லிஸி.



தட்டுத்தடுமாறி, சக்கரநாற்காலியிலே இருந்து எழுந்த ஸ்டீவனைப் பார்த்தால் ஒரு 10 வயசுக்கு மேலே மதிப்பிட முடியாது. ச்சின்ன உருவம். நல்லா சம்மர் கிராப் தலை, கழுத்து ஒரு பக்கமா சாஞ்சு மாதிரி இருந்துச்சு. நிறையவெடிப்பு இருந்த உதடுகள். அப்பப்ப மூக்கைமூக்கை உறிஞ்சி ஒரு இழுப்பு. ச்சின்னக் காதுகள்,ச்சின்னக் கண்கள். ஆனா கண்ணுலெ மட்டும் நல்ல பளிச். பேசவேண்டியதையெல்லாம் அந்தக் கண்ணே பேசிரும். இதை நான் என்கூடவேலை செய்யும் தோழியிடம் சொன்னப்ப, அவுங்க என்னை விநோதமாப் பார்த்தாங்க. தலையை ஆட்டிக்கிட்டே 'கண்ணுலே ஜீவனே இல்லையே'ன்னு சொன்னாங்க. பார்வைகள் வேறுவேறு இல்லையா?



சரி. எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கிடைச்சாச்சு. புத்தகம் பிடிக்குமான்னு கேட்டேன். ரொம்பப் பிடிக்குமாம். வேற என்னென்ன பிடிக்குமுன்னு கேட்டதுக்கு நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பிடிக்குமாம். வெறும் படங்கள் மட்டும் போட்டுருக்கற புத்தகங்களிலே நாய், பூனை இருக்கறதை மட்டும் எடுத்துத் தனியா வைக்க முடியுமான்னு கேட்டதும் முகத்துலே பயங்கர சந்தோஷம்.


மரத்துலே பெட்டிகள் ( மூடியில்லாமல்) செஞ்சு, ஒவ்வொண்ணுக்கும் கார், பஸ், ரயில், தீயணைக்கும் வண்டின்னு பலவிதமா அதை அலங்கரிச்சுப் பெயிண்ட் செஞ்சு வச்சுருப்போம். அதுலேதான் ரொம்பச் சின்னப்புள்ளைகளுக்கான புத்தகங்கள் போட்டு வைப்போம். அலமாரின்னா புள்ளைங்களுக்கு எட்டாதுல்லையா?



அங்கே போய் உக்காந்துக்கிட்டு, ஒவ்வொண்ணா எடுத்துப் பார்த்து குட்டி மிருகங்கள் இருக்கற புத்தகத்தையெல்லாம் தனியா எடுத்து ஒரு சின்ன மலை போல குவிச்சு வச்சுட்டு ஒவ்வொரு படங்களாப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்த ஸ்டீவன், திடீர்னு எந்திருச்சு கை கொள்ளாத அளவு புத்தகங்களைத் தூக்கி எடுக்க முயற்சி செஞ்சு எல்லாத்தையும் கீழே போட்டு முழிச்சது இப்பவும் ஞாபகம் வருது.


கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்களை அடுக்கறதுக்கும், அந்த அலமாரிகளைத் துடைச்சு வைக்கவும், எழுத்துக்கூட்டி சில சொற்களைப் படிக்கவுமா நாட்கள் பறந்துச்சு. என்ன வேலைக்குப் போகணுமுன்னு ஆசைன்னு ஒரு நாள்கேட்டேன். அதேதான் நாய், பூனைகள் கூடவே இருக்கணுமாம். RSPCA வில் வேலைன்னா நல்லா இருக்கும்.அங்கே பூனைக்குட்டிகள் எப்பவும் இருக்குமே!


இல்லேன்னா எங்கியாவது பண்ணைகளில்கூட வேலை செய்யலாம்.அங்கேயும் கோழிக்குஞ்சுகள், பன்றிக்குட்டிகள், பூனைகள்ன்னு நிறைய இருக்குமே. இதைச் சொன்னதும் முகம் பூவாய் மலர்ந்துருச்சு.


ஒரு நாள் திடீர்னு ஸ்டீவனுக்கு நம்பர்கள் மேலே பிரியம் வந்தது. ஒரு ச்ச்சின்ன நோட்டுப்புத்தகத்தைக் கையில்வச்சுக்கிட்டு குனிஞ்ச தலை நிமிறாம என்னவோ எழுதுறதைப் பார்த்ததும் என்ன நடக்குதுன்னு கிட்டேப்போய்ப் பார்த்தேன். புத்தகங்களுக்கு ஒரு சீரியல் நம்பர் போட்டு வச்சுருப்போம். அந்த நம்பர்களையெல்லாம் ஒவ்வொரு புத்தகமாப் பார்த்து விறுவிறுன்னு எழுதுது கை. எதுக்கு இந்த நம்பர்கள்ன்னு கேட்டதுக்கும், பதில் அதே சிரிப்புதான். கூடவே ஒரு மூக்குறிஞ்சல்.


"ஐ லைக் நம்பர்ஸ்." பேச்சு மட்டும் எப்பவும் ஒரு குழறலோடுதான். ஆனா, எனக்குப் புரியுமே!


நம்பரோட அருமை புரிஞ்சதோ, இல்லையோ? எப்பவுமே நம்பருன்னே ஆயிருச்சு. எழுதுன நம்பர்களையே திருப்பித்திருப்பி எழுதிக்கிட்டேஏஏஏஏஏ இருக்கணுமாமே!


வருசக்கடைசியும் வந்துச்சு. பள்ளிக்கூடங்கள் எல்லாம் அடைக்கும் காலம். கோடை விடுமுறை. அந்த வாரம் கடைசி வாரமாம். அன்னிக்கு லைப்ரரிக்கு வந்த ஸ்டீவனோட முகம் நல்லாவே இல்லை. கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு. லிஸியும் சொன்னாங்க, 'இனிமே ஸ்டீவன் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கடைசிவருசம்,கடைசி நாள். ஒரு புதுப் பரிசோதனையாத்தான் ரெகுலர் பள்ளிக்கூடத்துலே இவுங்களுக்கு ஒரு தனிப்பிரிவு வச்சுப் பார்த்தோம். இதுவரை எல்லாம் நல்லாவே நடந்துச்சு'ன்னு. 'ஸ்டீவனுக்கு உங்களை ரொம்பப் பிடிக்குமாம்'னுலிஸி சொன்னாங்க. எனக்கோ ஒரே ஷாக். அதெப்படி என்னப் பிடிச்சுப்போச்சு?


லிஸிக்கும் அதுதான் கடைசி நாளாம். பகுதி நேர வேலையாத்தான் இதைச் செஞ்சாங்களாம். அடுத்தவருஷம் அவுங்களும் படிக்கப் போறதாலே இனி இந்த வேலைக்கு வரமுடியாதாம்.

ஸ்டீவன் குடும்பமும் வடக்கே போகப்போறாங்களாம். அங்கே ஒரு சின்னப் பண்ணையை வாங்கறாங்களாம்.இனிமேல் ஸ்டீவன் பூனைக்குட்டிகளுக்கும், கோழிக்குஞ்சுகளுக்கும், நாய்க்குட்டிகளுக்கும் உற்ற தோழனா இருப்பான்.


எங்க லைப்ரரியில் இனிமேல் தேவையில்லை என்று எடுத்து வைக்கப்பட்ட புத்தகங்களில் ஒரு பூனைப் படங்கள் உள்ள புத்தகத்தை ஸ்டீவனுக்குப் பரிசாக் கொடுத்தேன். ஒரு நிமிஷம் மலர்ந்தது முகம். அடுத்த நொடி வாயெல்லாம் கோணிக்கிட்டு ஒரே அழுகை.


பை பை ஸ்டீவன் என்று சொல்லறப்ப கையை விடாமப் புடிச்சுக்கிட்டே இருந்தது எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு.


ஸ்டீவனுக்கு 'டவுன் சிண்ட்ரோம்'.


--------
அடுத்தவாரம்: தாமஸ்

நன்றி: தமிழோவியம்


இந்தப் பதிவை நம் சகவலைஞர் ஒருவரின் மகனுக்கு சமர்ப்பிகின்றேன்.

20 comments:

said...

//பார்வைகள் வேறுவேறு இல்லையா?//

உண்மை.

ஆதலால் தான் வாழ்க்கை ருசிக்கிறதோ!!!

//'ஸ்டீவனுக்கு உங்களை ரொம்பப் பிடிக்குமாம்'னுலிஸி சொன்னாங்க. எனக்கோ ஒரே ஷாக்.//

எதுக்கு ஷாக்! இத சொல்லலேன்னாதான் ஷாக்கா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

said...

என்னங்க. இப்படி கனமா பண்ணிட்டீங்க?

அந்த சுட்டி சரியில்லை போல இருக்கே.

said...

நன்மனம்,
நன்றிங்க.


கொத்ஸ்,

அந்தச் சுட்டி வேலை செய்யலையா?

இதுலே இருக்கறதை வெட்டி ஒட்டிப் பாருங்க

http://padhu.wordpress.com/2006/06/19

said...

ஸ்டீவன் போன்றோரைப் பார்க்கும்போது,"......தெய்வத்திற்கு
கருணை என்றொரு பெயெர் எதற்கு"
எனும் கேள்வி எழுதில்லே?
சரி, அத ஈடு கட்டதானெ நாம இருக்கோம்

said...

வாங்க சிஜி.

நம்ம ஸ்டீவனாவது பரவாயில்லை.
அதைவிட வேற மாதிரி நிலையில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும்போதுதான் மனசு கனமாகிவிடுகிறது(-:

said...

இந்த மாதிரி ஒரு நிறுவனத்துல வேலை செய்யறது கூட பூர்வ ஜன்மத்து பலந்தாங்க..

இவங்கள கடவுளோட செல்ல குழந்தைங்களா நினைச்சு பார்த்துக்கறதுலருக்கற சுகம் இருக்கே அது அலாதியானது..

நீங்க குடுத்து வச்சவங்கதான் துளசி!

said...

வாங்க டிபிஆர்ஜோ.

இப்ப நம்ம லைப்ரரியை மூடி 7 மாசமாகுது. பெரியமீன் சின்ன மீன் கதைதான்.

சிட்டிக்கவுன்ஸில் ஒரு பெரிய லைப்ரரியைக் கட்டிருச்சு 500 மீட்டர் தூரத்துலே. நமக்கு ஃபண்டிங் இல்லை.(-: இத்தனைக்கும் எல்லாரும் வாலண்ட்டியர்கள்தான். புத்தகம் வாங்கக் காசு வேணும் இல்லையா?

said...

எதுவும் எழுதத் தோன்றவில்லை. வார்த்தைகள் தோல்வியுறும் பதிவும் சுட்டியும்.

said...

இங்கு குவைத்தில் ஒரு பெரிய்ய்ய்ய செல்வந்தக் குடும்பத்தில் இம்ம்மதிரி "டௌன் ஸிண்ட்ரோமுடன்"
குழந்தை பிறக்க, அந்தச் செல்வமிக்க தாய் ஒரு பெரிய சென்டரே இம்மாதிரிக் கூடுதல் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கெனத் திறக்க வைத்தது.

நம் சென்னையில் பான்யன், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி மாதிரி அமைப்புகள் இம்மாதிரிக் கூடுதல் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு உதவுகின்றன.

இத்தருணத்தில் ஔவையார் சொன்ன "அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது...அதிலும் கூன்,செவிடு,குருடு-குறையின்றிப் பிறத்தல் அரிது" என்பது நினைவுக்கு வருகிறது.

Good health is the real wealth.

மற்றபடி இம்மாதிரி,இறைவன்/இயற்கை விளையாட்டில் ஏதாவது அர்த்தம் /உணர்த்துதல் இருக்கும்.

said...

மணியன்,

சில சமயங்களில் 'மெளனம் பேசும் ' என்பதே உண்மைதான்.

said...

ஹர்ஹரன்,

நீங்க சொன்னது 100% சரி. குறை இல்லாமப் பிறப்பதே பாக்கியம்தான்.

சென்னை ஸ்பாஸ்டிக் சொஸைட்டியில்
நம் உறவினர் சில ஆண்டுகள் வாலண்டியரா சேவை செஞ்சுருக்காங்க.

said...

இங்கெல்லாம் வேளை செய்ய ரொம்ப பொருமை வேணும் துளசிக்கா.

சில மாதங்களுக்கு முன்னால் லக்ஷ்மியின் அச்சமில்லை அச்சமில்லையில் இது போல் குழந்த்தை உள்ள பெற்றோரையும் குழந்தையையும் காண்பித்தார்கள்.

சமயம் கிடைத்தால் இந்த பதிவு கொஞ்சம் பாருங்களேன்.

http://akannabiran.blogspot.com/2006/07/blog-post.html

said...

துளசி,ஸ்டீவன் மாதிரி எத்தனை பெரு பார்த்திங்களோ.
அத்தனையும் புண்ணியம்.

said...

வாங்க மனசு.

சுட்டிக்கு நன்றி.
கட்டாயம் பார்க்கிறேன்.

said...

மானு,

என்னாங்க புண்ணீயம்? மனசுக்கு எவ்வளோ கஷ்டமாயிருது பாருங்க.

said...

மனச ரொம்ப பாரமாக்கி விட்டுட்டீங்க. நல்லவேளை என் பிள்ளைக குறையில்லாம இருக்காங்கன்னு பெருமைப்படாம அந்த ஸ்டீவனுக்கு தகுந்த வேலை கிடைக்கனுமேன்னு ஏங்க வைச்சீட்டீங்க.

said...

வாங்க கஸ்தூரிப்பெண்.

வேலைன்னா அப்படி நல்லதா ஒண்ணும் கிடைக்கச் சான்ஸ் இல்லை. ஆனா மனசுக்கு எது நெருக்கமோ
அதோடு வாழ்க்கை அமைஞ்சிருக்கும். இல்லையா?

said...

அந்த பக்குவம் ஸ்டீவனுக்கு இருக்குமா?

said...

கஸ்தூரிப்பெண்,

அப்படிப் பக்குவம் எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லைன்னு நினைக்கறேன். ஆனா பெற்றோர்கள் கூடவே வச்சுக்கறதாலே அவனோட தேவைகளைக் கவனிச்சுப்பாங்கதானே?

said...

மனதைக் கனக்கச் செய்தது உங்களது இப்பகிர்வு. ஸ்டீவன் போன்ற நண்பர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல துணை தேவை.

பார்வைகள் வேறுவேறு என்பது உண்மை. எங்களுடன் வந்த ஒருவர் ஐந்தே நிமிடத்தில் வெளியே சென்று விட்டார் - அவருக்குப் பொறுமையில்லை இவற்றையெல்லாம் பார்க்க.

இந்த நல்ல பகிர்வின் சுட்டியை என்னுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி துளசி டீச்சர்....