Thursday, August 31, 2006

எவ்ரிடே மனிதர்கள் -15 சாவித்திரி

சீராக ஓடிக்கிட்டு இருந்த பஸ் ஒரு குலுக்கலோடு நின்னுச்சு. நடத்துனர் அருகே வந்து,'நீங்க இறங்கவேண்டிய இடம் இதுதாம்மா'ன்னு சொல்லி என் பையையும் கையில் எடுத்து நான் கீழே இறங்குன பிறகு என் கையில் கொடுத்தார்.


கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்கதானே? உண்மைக்குமே இப்படித்தான் நடந்தது. பின்னே? இது என்ன நம்ம சிங்காரச் சென்னையா?
இன்னும் தென் மாவட்டங்களில் மரியாதைக்குக் குறைவு வரலைங்களே.

மெயின் ரோடிலிருந்து கிளை பிரியும் ஒரு மண்ரோடில் இறங்கி நிக்கறேன். சுத்துமுத்தும் ஒரு பார்வை. ரோட்டின் ரெண்டு பக்கமும் வரிசையா நிக்கும் மரங்களோட வரிசையைத் தவிர ஒரு ஆளு அம்பைக் காணொம்.


முன்பின் தெரியாத இந்த ஊருலே ........... நான் எதுக்கு வந்து இறங்கி இருக்கேன்?


பை கொஞ்சம் கனம். தூக்கிக்கிட்டு நடக்கக் கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு. மண்ரோடின் வளைவிலே திரும்புனதும் பளிச்சுன்னு ஒரு தெரு. ரெண்டு பக்கமும் வரிசையாத் திண்ணை வச்ச வீடுங்க. மொத வீட்டுத் திண்ணையிலே விளையாடிக்கிட்டு இருந்தச் சின்னப் பையனுங்க, ஒரு புதுமுகத்தை, அட நாந்தாங்க பார்த்ததும் ஓடிவந்து யார் வீட்டுக்குன்னு கேக்குதுங்க.


'இங்கே குருக்கள் வீடு........' ன்னு ஆரம்பிச்ச வாக்கியத்தை முடிக்கறதுக்குள்ளே என்னக் கையோடு அங்கே கொண்டு போய் சேர்த்துட்டாங்க. உள்ளெ இருந்து ஒரு வயசான அம்மா வெளியே வந்து, 'வாம்மா, கார்த்தாலே இருந்து பார்த்துண்டிருக்கேன். ஏன் இத்தனை நேரம்?' ன்னு அன்பா விசாரிச்சாங்க.


'பஸ் விசாரிச்சு வர லேட்டாயிருச்சு'ன்னு ஒரு அசட்டு சமாதானம் சொல்லிக்கிட்டே பையைக் கொண்டுபோய் உள்ளே வச்சுட்டு, அங்கே இருந்த முற்றத்தில் கைகால் கழுவிக்கிட்டு வந்து பையைத் திறந்தேன். ஆப்பிளும்,ஆரஞ்சும், சாத்துக்குடியும் வெளியே வந்தபிறகு பை காத்தா இருந்துச்சு. மூணே மூணு செட் துணிகள்தான்.


"சாவி நன்னா இருக்காளா? இப்படி உக்காந்துக்கோ. நல்லா காத்து வரும். காஃபி குடிக்கிறயா? காலம்பரப் பலகாரம்ஆச்சா? "


'சாவி நல்லா இருக்காம்மா'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே வாசப்பக்கமிருந்து ஒரு கனைப்புச் சத்தம்.வந்தவர் சாவியோட அப்பாவாத்தான் இருக்கணும். 'சட்'னு எழுந்து 'நமஸ்காரம் மாமா'ன்னேன்.


'வாம்மா வா. பிரயாணம்செளக்கியமா இருந்ததா?' அந்த ஒரு கேள்வியிலேயே, இதுவரை இருந்த என் தயக்கம் எல்லாம் ஒரே ஓட்டம்தான். அந்தக் குரலிலிருந்த சிநேகபாவம் மனசுக்குள்ளே ஊடுருவினமாதிரி இருந்துச்சு. ஏன் இருக்காது? சாவியோட அப்பா இல்லியா, அப்ப சாவிக்கு இருக்கும் குணம் இல்லாமப் போகுமோ?


சிநேகமான பேச்சுக்கு முன்னாலே நாமெல்லாம் மனம் குழைஞ்சு, குழந்தையாயிடறோம் இல்லையா?

சாவித்திரியை சந்திச்ச அந்த சாயங்காலம் ரொம்ப நல்லா நினைவிலே இருக்கு. என்னுடைய ஒரு ஹாஸ்டல் வாசத்து முதல்நாள். நானே அங்கே அன்னிக்கு மத்தியானம்தான் போய்ச் சேர்ந்திருந்தேன். வார்டன் அம்மா சொன்னாங்க,அந்த அறையிலே நாலு பேராம். 'ஐய்யோ நாலா? ரொம்பக் கூட்டமா இருக்குமோ'ன்னு ஒரு பயம். அறைக்குப் போனப்ப,அவ்வளவா மோசமில்லைன்னு தோணுச்சு. செவ்வகவடிவா பெரிய அறைதான். பெரிய ரெட்டைக் கதவுகள்.நாலு மூலையிலும் ஒவ்வொரு கட்டில். கதவுக்கு நேரா பிரமாண்டமா ஒரு ஜன்னல். ஆமாமா, நாலு பேருக்குக் காத்து வேணாமா?
சுவருக்குள்ளேயே பதிச்சமாதிரி அறையின் ரெண்டு பக்கத்திலும் நீளத்தில் சரிபாதி தூரத்தில் ரெவ்வெண்டு அலமாரிகள்.பெரிய அளவு ஷெல்ஃப்.

அதுக்குள்ளேயே ஸூட்கேஸ்/பெட்டிகளை வச்சுக்கலாம். கீழ்த்தட்டுலே பெட்டி. அதுக்கு மேலே உள்ள தட்டில் புத்தகம் இன்ன பிற. நடுத்தட்டில் அலங்காரச்சாமான்கள், சீப்பு, கண்ணாடி வகையறா. மேலே உள்ள ரெண்டுதட்டில், ஒரு தட்டில் நிஜமான தட்டு! புரியலையா? நாம சாப்பிடும் தட்டு, ஃப்ளாஸ்க், டம்ளர் , டிஃபன் டப்பா இத்தியாதிகள்.அதுக்கும் மேலே கொஞ்சம் துணிமணிகள், நைட்டி இன்னும் அது இதுன்னு பலதும். மத்த மூணு அலமாரியிலும் இப்படித்தான் இருந்துச்சு. அதையே பார்த்து நானும் காப்பி அடிச்சுட்டேன். அதான் அலமாரிக்கெல்லாம் கதவில்லையே!



ஒரே ஒரு நடுத்தட்டில் மட்டும் ஒரு ஓரமா சாமிப் படம் இருந்தது. அதுக்கு முன்னாலே ஊதுவத்தி ஸ்டேண்டு வேற. சாயங்காலம் பறவைகள் ஒவ்வொண்ணாக் கூட்டுக்குத் திரும்புச்சு. கடைசியா வந்து சேர்ந்த பறவைதான் சாவித்திரி. அறிமுகம்ஆச்சு. என்னைவிட ஒரு ஆறேழு வயசு கூடுதல். கொஞ்சம் உயரம் குறைவுதான். பெரிய கண்கள். நீளமான சடை.முகத்துலே மட்டும் ஒரு அமைதி. கொஞ்சமா எத்துனாப்போல பற்கள்.


கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.குரலில் ஒரு சிநேக உணர்வு. அப்படியே வீட்டுலே அக்காகிட்டே பேசிக்கறதைப்
போல.எனக்கு அவுங்களை அந்த வினாடியே பிடிச்சுப்போச்சு.


இதோ, அஞ்சு நிமிஷத்துலே குளிச்சுட்டு வரேன், அப்புறமா சாப்பிடப் போலாமுன்னு போனாங்க. குளிச்சிட்டு வந்துசாமி முன்னாலே ஊதுவத்தி ஏத்திவச்சு கண்ணைமூடி ரெண்டு நிமிஷம் கும்பிட்டாங்க. பேசிக்கிட்டே சாப்பிட்டோம். சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துலெ ஒரு ச்சின்ன கிராமம். இங்கே ஒரு மருந்து கம்பெனியில் வேலை.


மறுநாள் தூக்கக் கலக்கத்துலே இருக்கும்போதே, என்னை எழுப்பி காஃபி கொடுத்தது சாவி( நேத்தே பேரைச் சுருக்கிட்டேன்!)தான்.குளிச்சு, சாமி கும்பிட்டு வேலைக்குப் போகத் தயாராகிக்கிட்டு இருக்காங்க. சரியா எட்டுமணிக்கு பஸ் பிடிக்கணுமாம்.( ஆ......நான் எட்டு மணிக்கு முன்னாலே எழுந்ததே இல்லை) பத்து நிமிஷம் ஆடிஆடி நடந்தா பஸ் ஸ்டாப். ஏழே முக்காலுக்குக் கிளம்பிருவாங்களாம். கீழே போய் டைனிங் ஹாலில் டிபன் டப்பாவிலே பகல்சாப்பாட்டை எடுத்துக்கிட்டு, காலை உணவைப் பார்சல் செஞ்சுக்கிட்டுப் போகணுமாம். கம்பெனிக்குப் போனதும், கொண்டுபோன ப்ரேக்ஃபாஸ்டைச் சாப்பிட்டுட்டு வேலையை ஆரம்பிக்கச் சரியா இருக்குமாம்.



அதுக்கு அடுத்தநாள் பஸ்ஸ்டாப் வரை நானும் கூடவே போனேன். ஆச்சு காலம்பற ஒரு நல்ல வாக். அங்கே போனபிறகுதான் ஒருஇன்ப அதிர்ச்சியும் கிடைச்சது. பஸ் ஸ்டாப் பக்கத்திலே ஒரு இண்டியா காஃபி ஹவுஸ் இருக்கு. மறுநாளில் இருந்து ரெகுலரா 'வாக்'போக ஆரம்பிச்சேன்:-) பஸ் வர நேரம் இருந்தால் ரெண்டு பேரும், இல்லைன்னா சாவியை பஸ் ஏத்தி விட்டுட்டு நான் மட்டும் ஒரு 'நல்ல' காஃபி குடிச்சுட்டு மறுபடி ஆடிஆடி ஒரு வாக். எனக்கு ஆஃபீஸ் 10 மணிக்குத்தானே.


எப்படியோ எங்க மனசுக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டுப்போச்சு. அப்பா ஊரிலே கோயில் குருக்கள். மூணு அக்கா, ஒரு தம்பி.பெரிய அக்காவுக்கு மட்டும் கல்யாணமாச்சு. மாப்பிள்ளையும் இன்னொரு பெரிய ஊரில் புகழ்பெற்ற கோயிலில் குருக்கள்தானாம். ஏகப்பட்ட வரும்படியாம். ஆனா............


கல்யாணமான ரெண்டே வருசத்துலே இறந்துட்டாராம். மூணுமாசக் கைக்குழந்தையோடு அக்கா, அப்பா வீட்டுக்கே வந்தாச்சாம். அந்த அதிர்ச்சியோ என்னவோ, மத்த ரெண்டுஅக்கா கல்யாணத்தைப் பத்தியும் வீட்டுலே அப்பா பேச்சே எடுக்கலையாம்.


வரதட்சிணை நிறையக் கேக்கறாங்களான்னு கேட்டு வச்சேன். அவுங்க சமுதாயத்திலே வரதட்சிணை இல்லையாமே! எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு. அந்த ரெண்டு அக்காவுக்கும் எப்பக் கல்யாணம் முடிஞ்சு, எப்ப சாவியின் முறைவர்றது?ஹூஊஊஊம்.


இப்ப அக்காவின் குழந்தைக்கு எத்தனை வயசாம்? பதினோரு வயசாச்சாம். ஊரிலே இருக்கும் கொஞ்சூண்டு நிலத்தைஇப்ப அக்காவே பார்த்துக்குறாங்களாம். மனக்கவலையை மறக்கவோ என்னவோ எப்பவும் உடல் உழைப்புதானாம். வீட்டுக்கு ஒரு ஆம்புளைபோல எல்லா வயல் வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்வாங்களாம்.

மருந்தடிக்கிறது,களை எடுக்கறது, அடுப்பெரிக்க விறகு வெட்டி எடுக்கறது எல்லாம் அக்கா தானாம். தம்பி சின்னவன் இல்லையா,அவன் ஹைஸ்கூல் முடிச்சுட்டு ஒரு ரேடியோ ரிப்பேர் கடையிலே வேலை.


அப்போ மத்த ரெண்டு சின்னக்காங்க? இன்னொரு ஊரில் வேலை செய்யறாங்களாம்.


எல்லாரையும் போலவே நம்ம சாவிக்கும் இளவயதுக்கே உரிய காதல், கல்யாணம் ஆசைகள் எல்லாம் இருந்தாலும் குடும்பத்தை மீறி ஒண்ணும் செய்ய விருப்பம் இல்லைதான். கொஞ்சம் பயந்த சுபாவம் வேற. ஒரு தடவை வேற ஒரு வேலைக்கு முயற்சி செஞ்சு கிடைக்கறதுபோல இருந்துச்சாம். இங்கே வேலையை விட்டுடறேன்னு சொல்லிட்டாங்களாம்.அவுங்களும் எதோ பரிசு கொடுத்து பார்ட்டி எல்லாம் வச்சாங்களாம். புதுவேலையில் சேர்ந்தப்பத்தான் அங்கே சரியில்லைன்னு மனசுக்குப் பட்டுச்சாம்.

ச்சென்னையிலே வேலை இல்லாம என்ன செய்யறது, ஏது செய்யறதுன்னு பயந்து பதறிப்போய் பழைய கம்பெனிக்குப் போனாங்களாம். முதலாளியும் ஒரு வார்த்தை மனம் நோகப்பேசாம உடனே மறுபடி வேலைக்கு எடுத்துக்கிட்டாராம். அதுலெ இருந்து சாவி வேற வேலை எதுக்கும் முயற்சிகூட செய்யலையாம். இங்கே நல்ல முதலாளி, அப்புறம் சூப்பிரவைஸரும் நல்லவங்களாம். எல்லாமே பெண்களாவே இருக்கறதாலே வேலைச்சூழல் நல்லா இருக்காம். முதலாளி நல்லவர்தான்........... ஆனால் கொடுக்கும் சம்பளம்தான் கொஞ்சம் 'கட்டை'.


எனக்கு ஒரு முறை டைஃபாயிடு ஜுரம் வந்து ஆஸ்பத்திரியில் சேரும்படி ஆச்சு. அப்பவும் என்னைப் பார்த்துக்கிட்டது நம்ம சாவிதான். காலையில் 7 மணிக்கு வந்து எனக்குத் தேவையான ஜூஸ் எல்லாம் பிழிஞ்சு வச்சிட்டு வேலைக்குப் போவாங்க. மறுபடி மாலை வந்து கூடவே இருந்து வேண்டிய உதவியைச் செஞ்சுட்டு எட்டுமணி போலத்தான் விடுதிக்குப் போவாங்க. இப்படி கிட்டத்தட்ட ஒரு மாசம்.


நல்லா ரெஸ்ட் எடுக்கணுமுன்னு சொன்னதாலேயும், இடமாற்றம் மனசுக்கு இதமா இருக்கும் என்றதாலெயும்தான் இப்ப ஓய்வுக்காக நான் சாவி வீட்டுக்கு வந்திருக்கேன். ஏற்கெனவே நாலு பொண்கள் இருக்கும் வீட்டிலே அஞ்சாவது ஒரு பொண் வந்தா அதிகமா என்ன?


கொஞ்சம்கூட பதற்றமே இல்லாத, காவிரியின் கிளை நதி ஒண்ணு அமைதியா ஓடும் ச்சின்னக் கிராமம். நல்லகாத்து, வீட்டுச் சாப்பாடு. பெரியக்கா கூடவே வயலுக்குப் போய் கொஞ்ச நேரம்,அப்புறம் ஆத்துலே குளியல், சாயந்திரம் கோயில், பள்ளிக்கூடம் விட்டதும் என்கூட விளையாடறதுக்காக ஓடிவரும் அக்கா மகள்ன்னு ரெண்டு வாரம் போனதே தெரியலை. அவுங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு மறுபடி ச்சென்னைக்கு வந்தப்ப மனசுக்கு நல்லாவே இல்லை.



கால ஓட்டத்துலே நானும் காதலில் விழுந்தேன், கல்யாணமும் ஆச்சு. அப்புறம் ஊர் ஊராய்ப் போனதுலே, என் சாவியின் கூட இருந்த தொடர்பு அறுந்தே போச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் ச்சென்னைக்குப் போனப்ப மனசெல்லாம் சாவியைப் பார்க்கணும்ன்னே இருந்துச்சு. ஆனா.......... நாந்தான் சாவி வேலை செய்யும் கம்பெனி பேரை கடைசிவரை கேட்டுக்கவே இல்லையே(-:


விடுதியிலும் அவுங்க இப்ப இல்லையாம். ஒரு வேளை ஊருக்கே திரும்பப் போயிருப்பாங்க. அடுத்தமுறையாவது, ஊர்ப்பக்கம் போய் விசாரிக்கணும்.


ரெண்டு வருசப் பழக்கத்துலே இப்ப நான் சொன்னது ஒரு கால்வாசிதான். சாவியைப் பத்திச் சொல்ல இன்னும்எவ்வளவோ இருக்கு. இன்னொருநாள் சொல்றேன். ஆனா இப்ப ஒரே ஒரு வார்த்தை.


சாவின்னா அன்பு.
-------------


அடுத்தவாரம்: மணி.


நன்றி: தமிழோவியம்
-------------

Tuesday, August 29, 2006

ரெடிமேட் பகுதி 13

ஒருவிதம் தனியாவே வெட்டித் தைக்கற தைரியம் வந்துருச்சு. அருமையான கத்தரிக்கோல் ஒண்ணும் வாங்கியாச்சு. ஜமாய்ச்சுக்கிட்டு இருக்கேன். வீட்டு வேலைக்கு ஆள் வராங்க. நிறைய நேரம் இருக்கு.எங்க இவரோ, புதுசாப் போடற ஃபேக்டரி வேலையிலேயே 'மூழ்கி' இருக்கார்.


ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு தலையை நிமிர்த்திப் பார்த்தாத்தான் தெரியுது இவருக்கு ரொம்ப நாளாத் துணிகள் ஒண்ணும் எடுக்கலையேன்னு. ஆம்புளைங்க துணிகள் பக்கம் கண்ணை ஓட்டுனேன். அட! இந்த ஊர்லே டெயிலர்களே இல்லீங்களே! அப்ப எப்படி?


எல்லாம் ரெடிமேடுதான். ஷர்ட், டீ ஷர்ட்டு, பேண்ட்ஸ்ன்னு. மொதமொதலா டீ ஷர்ட் போட ஆரம்பிச்சார். வீக் எண்டுலே ரிலாக்ஸா இருக்கட்டுமேன்னு. அளவுங்கதான் பேஜாரா இருந்துச்சு. ஸ்மால், மீடியம், லார்ஜ். ஷர்ட்டுங்களும் இப்படியே. டீ ஷர்ட்டாவது பரவாயில்லை, கொஞ்சம் லூஸாப் போட்டுக்கலாம். ஆனா ஷர்ட்டுங்க? மீடியமே கொஞ்சம் லூஸ்தான்.


நாடே இப்படி இருக்கும்போது நமக்கென்ன புது ஸ்டையிலு? நம்ம தையற்கலை அனுபவம் இந்த இடத்துலே கைகொடுத்துச்சு. ஷர்ட்டுங்களுக்கு முதுகுப் பக்கத்துலே லேசா ரெண்டு இடத்துலே பிடிசுட்டா ஓக்கே!

ட்ரவுஸர்ங்கதான் தகராறு. இங்கே இருக்கற இந்தியர்களும், நம்மூர்லே இருக்கற ஆளுங்களைவிடக் கொஞ்சம் உயரமாவே இருக்காங்க.அவுங்களுக்கு வர்றது, நமக்குக் கால் நீளம். காலைக் கொஞ்சம் வெட்டித் தைக்கணும். அதையும் செய்ய ஆரம்பிச்சேன்.


டெனிம்தான் பிரச்சனை. ரெண்டு மூணு ஊசியை ஒடைச்சாத்தான் வேலை நடக்கும். இதுக்கிடையிலே நானும் ஊர் ஜனங்களைப் போலவே 'லாங் ட்ரெஸ்' போட ஆரம்பிச்சேன். நல்ல ஐலண்டு பிரிண்டுகளிலேயும், ஜெர்ஸி மெட்டீரியல்களும் கிடைக்குது. இங்கே மக்கள் பொதுவா இதைத்தான் போடறாங்க. நேட்டிவ் ஃபிஜி ஆளுங்களும் இப்படித்தான். ஆனா அவுங்க சர்ச்சுக்குப் போறப்ப ரொம்ப பாரம்பரிய உடையாப் போடறது 'சுலு சாம்பா.' சுலுன்றது நம்ம ஊர் லுங்கி மாதிரி.'ச்சாம்பா'ன்னா மேல் ப்ளவுஸ். ரெண்டும் ஒரே துணியில் தைக்கறதுதான். ப்ளவுஸ் நல்லா இறக்கமா இடுப்புக்குக் கீழே, ஷர்ட் நீளம் இருக்கும். அழகழகான பிரிண்டுகளும், கலர்களும் ரொம்பவே நேர்த்தியா இருக்கும்.


நம்ம வீட்டுலே இப்பப் புதுவரவு. பெண்குழந்தை. பொறந்த குழந்தைக்குப் பட்டுபோல மிருதுவாவும் இருக்கணும். இங்கே இருக்கற சூட்டுக்கு இதமாவும் இருக்கணுமுன்னு மெல்லிசா இருக்கற வெள்ளை நிற(?)க்காட்டன் துணிகளிலேச் சின்னச் சின்ன சட்டைகள், அதுக்குக் கலர்ஃபுல்லான பைண்டர்கள்ன்னு வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்கேன். தேவை இருக்கோ இல்லையோ இப்பெல்லாம் துணி தைக்கறதே வேலையாப் போச்சு. இங்கே ஒரு புதுக்கடை வந்தது அப்ப. இந்தியர்கள் மட்டுமே நடத்திவந்தத் துணிக்கடைகள் இல்லாம இது ஒரு ஆஸ்தராலியன் கம்பெனி நடத்தற கடையாம்.வெறும் துணிகள் மெட்டீரியல்ஸ் மட்டும். ஒரு மீட்டர் 50 செண்ட்டுக்குக் கூட இருக்கு. சனிக்கிழமைதோறும்,(அதான் இங்கே மார்க்கெட் டே) காய்கறி மார்கெட்டுக்குப் போய் வரும்போது இங்கேயும் போய் ஏழெட்டு துணிகள் அரை மீட்டர் அளவில் மட்டும் வாங்கிருவேன். என்னதான் நல்ல துணிகள்ன்னு வச்சாலும் வாரம் அஞ்சு டாலர்தான் ஆகும்.


தினமும், பகல் சாப்பாட்டுக்குப் பிறகு தைக்கிற வேலைதான். நாள் முழுக்க,என்ன பேட்டர்ன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். சாயந்திரம் இவர் அஞ்சு அஞ்சரைக்கு வர்றதுக்குள்ளே மகளுக்கு புது உடுப்பு ரெடியாகி, அதைப் போட்டுக்கிட்டு இருப்பாள். உடனே நம்ம 'மாடலை' ஒரு போட்டோவும் எடுத்துருவேன்.


இப்படி ஒரு நாளுக்கு ஒரு உடுப்புன்னு இருக்கறது மட்டுமில்லாம, எனக்குத் தைக்கிற துணிகள்லெ கொஞ்சம் மிச்சமானா( அதுதான் அரைமீட்டர் கூடுதல் வாங்குனா தீர்ந்துச்சு) அதுலேயும் ஒண்ணு தைக்கறதுதான். ட்வின்ஸ் மாதிரி போட்டுக்கிட்டுப் போவோம்.

இந்த ஊர் நிலவரத்தைப் பத்திச் சொல்றதுக்கு ஒண்ணும் பிரமாதமா இல்லை. ச்சின்ன டவுன். ஜனத்தொகை 5000. அக்கம்பக்கத்துலே பதினெட்டுப் பட்டிகள் இருக்கு. பொம்பளைங்க மாஞ்சுமாஞ்சு வீட்டுவேலையெல்லாம் பதினொருமணிக்குள்ளே முடிச்சுருவாங்க. அப்புறம் டவுனுக்குள்ளே நடமாட்டம். எல்லா வியாபாரமும் இந்தியர்கள்தான்.அதுலே 95 சதமானம் குஜராத்திகள். பாக்கி அங்கேயே நாலைஞ்சு தலைமுறைகளா இருந்துட்ட ஃபிஜி இந்தியர்கள்.எல்லாம் கரும்புக்காட்டுலே வேலை செய்யப் போனவங்களோட வம்சாவளி.


எட்டு எட்டரைக்கு கடைகள் திறந்துரும். சாயந்திரம் 6 மணிக்கு எல்லாம் மூடிருவாங்க. ஊரே 'ஜிலோ'ன்னு இருக்கும்.தெருவுலே நாய்கூட ஓடாது. சைலண்ட். அப்போ அங்கே இன்னும் டிவி ஸ்டேஷன் வரலை.ஆனா வீடியோ வரத்தொடங்கி இருந்துச்சு. அநேகமா எல்லா ஹிந்திப் படங்களும் வந்துரும். தியேட்டர்லே ஹிந்தி, இங்கிலீஷ் படங்கள் காமிப்பாங்க.


இந்தச் சின்ன டவுனுக்கே 3 தியேட்டர்! படங்கள் எல்லாம் வீடியோ கேஸட்டாக் கிடைக்கும். வாடகைக்கு எடுப்போம்.மூணு கடைகள் அவுங்க வழக்கமா வச்சிருக்கற மத்த சாமான்களோட( துணிமணி, நகை நட்டு, பாத்திரபண்டம், எலெக்ட்ரிக் சாமான்கள் ரைஸ் குக்கர் டோஸ்ட்டர், மிக்ஸி இத்தியாதிகள்) சினிமாவையும் சைடு பிஸினஸ்ஸா வச்சிருந்தாங்க.
இந்தியாவில் வெளியிடற அதே நாளில், சிலசமயம் அதுக்கும் முன்னாடியே படங்கள் வந்துரும். நிறைய காப்பிகள் எடுத்துருவாங்க. அது ஸ்டார் வேல்யூவைப் பொறுத்து. அப்புறம் வாடகைக்கு விடறதுதான். ஒரு நாளைக்கு ஒரு படத்துக்கு வாடகை ஒரு டாலர்.

எங்க இவர் சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், ஒரு காஃபி குடிச்சுட்டு எல்லாருமாக் கிளம்பிப்போய் ஒரு படம் வாங்கிட்டு வருவோம்.அப்படியே கடையில் புதுசா என்ன ரெடிமேடு டிசைன் குழந்தைகளுக்கு வந்துருக்கு பார்க்கறதுதான். பார்த்துட்டு, மனசுலெஅப்படியே அதை உள்வாங்கிக்கிடறது. அடுத்து வர்ற நாட்களிலெ தைச்சுப் போட்டுடறது. கடைக்காரரே கூட,ஆச்சரியமாக் கேப்பார், இதை நான் வேற எங்கே வாங்கினேன்னு.


புதுவித பட்டன்கள், லேஸ்கள், பைண்டர்கள்ன்னு கண்ணுலே பட்டவுடனே வாங்கிருவேன். சதா சர்வகாலமும் கண்ணும், மனசும் அப்படியே அலையும், எங்கே என்ன டிசைன் இருக்குன்னு? சினிமாப் பாக்கறப்பவும் அதுலே வர்ற உடுப்புகள்தான் முக்கியமாப் போச்சு. வீடியோதானே? மறுநாள் அதைத் திருப்பிப் போட்டு முக்கியமானதை இன்னொருக்காப் பார்த்து ஒரு பேப்பருலே வரைஞ்சு வச்சுக்குவேன்.


இந்தப் பைத்தியம் எதுவரை போச்சுன்னு சொல்லணுமுன்னா.......


வெக்கக்கெடு.

Sunday, August 27, 2006

Baywatch பிள்ளையார்.


பிள்ளையாரைப் பார்க்கக் கடற்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.எங்களுக்குக் கடற்கரையும் கடலும் மிகவும் விருப்பமான இடம். நேரமும் கிடைத்து,குளிரும் அதிகம் இல்லையெனில் போய்வருவது வழக்கம். அதிலும் இங்கே உள்ள 'சம்னர்' கடற்கரையில் ஒரு விசேஷமும் உண்டு.


ஒருநாள் அப்படிப் போனபோதுதான்'அவரை'ப் பார்த்தேன். அங்கே 'கேவ் ராக்' என்னுமொரு சிறுகுன்றின் அடிவாரத்தில் இருக்கும் கல்லில் பிள்ளையார் போல தெரிந்தது. சற்று நேரம் உற்றுக் கவனித்ததில்'அட! நெற்றியில் பட்டை!!' என் நினைப்பு உறுதியானது. என் கணவருக்கு அதைக் காட்டி 'விளக்கம்' அளித்துக்கொண்டிருந்தேன். முதலில் அதை ஏற்க மறுத்தாலும் என் தொணதொணப்பைத் தாங்கமுடியாமல்," ஆமாம்.பிள்ளையார் போல்தான் தெரிகிறது ' என்றார். அது போதாதா எனக்கு? 'ஆஹா, சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்' எனமகிழ்ந்து மனதில் வழிபாடு செய்துகொண்டே....... பழக்க தோஷம் காரணமாக,

"அப்பா, பிள்ளையாரப்பா, கண்ணிலே கொஞ்சம் காசைக் கட்டப்பா"

என்று சொல்லி முடிக்குமுன்னே கண்முன்னே பளபளவென மின்னும் ஒரு $2 நாணயம் என் காலடியில்!கேட்டவரம் உடனே கிடைத்துவிட்டது. என் அல்ப புத்தி! கொஞ்சம் காசு என்றதும்,'இந்தா பிடி 2 டாலர்' என வழங்கிவிட்டார் நம் 'வரசித்தி விநாயகர்'


நம் நாட்டில் இவர் ஆற்றங்கரையில் படித்துறை அருகே அமர்ந்து தாயைப்போல தமக்கொரு பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டல்லவா? இங்கே ஆற்றங்கரையில் பெண்கள் குளிக்கப் போவதில்லையென்பதால் கடற்கரைக்கு வந்துவிட்டார். இவருக்குப் BAY WATCH பிள்ளையார் என்கிற பெயரும் பொருத்தம்தானே?


அடடா,,,, இங்கே வேறொரு இடத்தில் பிள்ளையார் சிலை இல்லாத ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கிறது. அதைப்பற்றி பிறகு சொல்வேன். இப்போது பிள்ளையாரைப் பார்க்க நேரமாகிவிட்டது.


"இதுவே நம்மூராக இருந்தால் உடனே ஒரு கோயில் முளைத்திருக்கும்" இல்லீங்க?


"கூடவே ஒரு உண்டியலும், ஒரு சாமியாரும் . இதை விட்டுட்டியா?".


சம்னர் வாழ் வரசித்தி விநாயகர் வாழ்க, வாழ்க!


நன்றி: தமிழருவி 2001


நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


பி.கு: படம் மகாராஷ்ட்ராவில் இருந்தபோது கிடைத்த அஷ்டகணபதி.

Saturday, August 26, 2006

பனங்காய் பணியாரமே

நம்ம யோகன் பாரிஸ் கற்பகத்தரு எழுதி இருந்தாரில்லையா? அதைப் படிச்சது முதல்இந்தப் பனங்காய் ரொம்பப் பாடாய்ப் படுத்திருச்சு. நம்ம தமிழ்ச் சங்கத்துலே ஒரு ச்சின்னப்பிள்ளை இந்தப் பாட்டுக்கு நல்லா ஆடுனார். அவுங்க அம்மாகிட்டே கேட்டு இப்ப இந்த முழுப் பாட்டையும் போட்டுருக்கேன். இதோட ஆடியோவும் அனுப்பி இருக்காங்க. இங்கே அதை இணைக்க எனக்குத் தெரியாததாலே விட்டு வச்சுருக்கேன். பாடலைக் கேக்க விருப்பம் இருக்கறவங்க தனி மடல் அனுப்புங்க. நல்ல துள்ளலோடு இருக்கும் இசைதான்!


தொகையறா: (prelude (??)

வல்லை வெளியிலே காற்றடிக்கும் திரளி
மீன் துள்ளியெழும் ஒடியல்
கூழ் குடித்தால் மனமெல்லாம்
விண் கூவும்
===========
பனங்காய் பணியாரமே (2)

பச்சைக் கொழுந்து ( கொழும்பு ?) வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரித்து படுத்துறங்கும் மணியக்கா
கமுக மர பாக்கு தந்து கவுக்கிறது என்னக்கா (1)

காங்கேசந்துறை சுண்ணாம்பை கொஞ்சம் தடவி தடவி கொ (கு)டடி
உன் கையாலே வாய் சிவக்க வெத்தலை மடிச்சு கொடடி
ஒக்கார (??) மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் வீட்டு கூரையிலே ஏறுது


கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் கிக்குதான் கிக்குதான்

கீரிமலைப்பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் மப்புதான் மப்புதான்


நான் கோவில்கடவை ஆளு,
நீ சேலை கட்டிய தேரு
நீ சுன்னாகத்து மாங்காய்,
நான் கொடிகாமத்து தேங்காய் -----

பனங்காய் பணியாரமே


கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம் (2)

மட்டு நகர் தயிர் எடுத்து வளைஞ்சு நெளிஞ்சு வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்து போடி
மண்பானை தயிர் கனக்கும் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?


கண்டி குளிரிலதான் கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேற்ற நெஞ்சு நினைக்குதெடி
முல்லைத்தீவு போவோம் முயலிரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம் நான் பேச்சிழந்து போவேன்

பனங்காய் ...பணியாரமே


பாடலை அனுப்பிய இனிய தோழிக்கு நன்றி.

Thursday, August 24, 2006

ரெடிமேட் பகுதி 12

எஸ். ஜானகி, அதாங்க பின்னணிப்பாடகி ஜானகி தாங்க, அவுங்க எப்பவுமே ஒரேமாதிரி ப்ளவுஸ்தான் போடுறாங்க. அந்த 'நெக்' பேரு ஸ்வெட்டர் நெக்காம்.'ஹை நெக்'ன்னுகூடச் சொல்றாங்க. பேசாம 'ஜானகி நெக்'ன்னு பேரு வச்சிரலாம்.


வெள்ளைக் கலர்(?)லே டூ பை டூ ( இதுலே கூடப்பாருங்க 2 x 2 ன்னு எழுதறதாம், சொல்றப்ப டூ பை டூ வாம்)லே துணி எடுத்து வச்சுக்கிட்டேன். வீட்டுலேதான் ஏற்கெனவே வாங்குன வெள்ளை நூல்கண்டு இருக்கே.முன் ஜாக்கிரதை முத்தண்ணி. கறுப்பு,வெள்ளைன்னா எதுக்கு வேணாலும் போட்டுக்கலாமாம். அப்படி ஒரு மடத்தனமான ஐடியா!


பழைய ப்ளவுஸ் ஒண்ணைப் பிரிச்சு மேய்ஞ்சேன். சுமாராப் பிடிபட்டது. அதுலே கழுத்துதான் வேற. எனக்கு இப்ப வேண்டியது 'ஹை நெக்'. மிஸ்கிட்டே முதல் பாடம். அவுங்களே வெட்டியும் தந்தாங்க. ரொம்பக் கவனம் எடுத்துத் தைச்சேன். யார் செஞ்ச புண்ணியமோ? கரெக்ட்டா அமைஞ்சு போச்சு. அதுமட்டும் சரியா வராம இருந்திருந்தா?என்னுடைய திறமை(?)யிலே நம்பிக்கையே போயிருக்கும், எங்க இவருக்கு. அதுக்காக நான் தைய்யலையே விட்டிருப்பேனா? ஊஹூம்.... இன்னும் பத்துத் துணிகளைக் கவனமாக் கெடுத்திருப்பேன்.



இதுக்கிடையிலே, நம்ம 'காட் ப்ரதர்ஸ்' ஸா மாறிட்ட நண்பரின்( ஆமாம், 'காட் பேரண்ட்ஸ்'ன்னு இருக்கறப்ப காட்சிஸ்டர்ஸ், ப்ரதர்ஸ்ன்னும் இருக்கக்கூடாதா என்ன?) மனைவி ( காட் சிஸ்டர் இன் லா?) அருமையாத் தைக்கிற விவரமும் தெரிஞ்சது. அவுங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க,எட்டு வயசும், அஞ்சு வயசுமா. கல்வின்னு வந்தபிறகு விட முடியுமா? அப்பப்ப அங்கேயும் படை எடுக்கறதுதான். 'ட்ரிக் ஆஃப் த ட்ரேட்' எல்லாம் அவுங்க சொல்லிக் கொடுத்ததுதான்.


அங்கே போய் வெட்டிக்கிட்டு வந்து நான் தைச்சுருவேன். மிஸ்ஸும் அப்பப்ப கைடன்ஸ்க்கு இருக்காங்களே. நம்ம மிஸ் இருக்காங்க பாருங்க, அவுங்களுக்கு ஒரு பார்ஸிக் குடும்பம் நண்பர்களாம்.அவுங்க ரொம்ப செல்வந்தர்களாம்.அடிக்கடி வீட்டுக்கு ஃபர்னிஷிங் மாத்திக்கிட்டே இருப்பாங்களாம். அவுங்க வீட்டுக் கர்ட்டன்ஸ், ட்ரேப்ஸ் எல்லாம் தைக்கறது நம்ம மிஸ்தானாம். இந்த வேலை வந்துருச்சுன்னா பத்துப் பதினைஞ்சுநாள் தினமும் காலேல 10 மணிக்குப் போயிட்டுச் சாயங்காலம் 6 மணிக்கு வந்துருவாங்களாம். சாப்பாடு, நாஷ்தா, சாய் எல்லாம் அங்கேயே தானாம். நல்ல மெஷீன் வச்சுருக்காங்களாம். இதெல்லாம் போக நாளுக்கு இவ்வளோன்னு வருமானமும் உண்டாம். எல்லாம் மேல்வரும்படி வரட்டுமுன்னு போய்வர்றதுதானாம்.



அப்புறம் ஒரு சுவாரசியமான விஷயமும் அவுங்ககிட்டே இருந்து தெரிஞ்சுகிட்டேன். அதுதான் இந்த பார்ஸிகாரர்களொட 'டவர் ஆஃப் சைலன்ஸ். எனக்கு எப்பவுமே இந்த சாவு ரொம்ப வசீகரமா இருந்துருக்கு. ச்சின்னப் பிள்ளையா இருந்த காலத்துலேயும் செத்தவங்களைப் பாக்கறதுலே பயம் இல்லை. எல்லா சாவு வீட்டுலேயும் புகுந்து புறப்பட்டு வந்து,நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கதை சொல்வேன். ஒருநாள், 'தைக்கப்போறேன், உங்க வீட்டுக்கு வரமுடியாது'ன்னு சொல்லிப்போன மிஸ், திடீர்ன்னு வந்துட்டாங்க. என்னன்னு கேட்டப்ப, வேற ஒரு பார்ஸி நண்பர் குடும்பத்துலே ஒருத்தர் இறந்துட்டார். அங்கே அவுங்க( தைக்கக் கூப்புட்டு இருந்தவங்க) போறதாலே இவுங்களுக்கு ஒரு வாரத்துக்கு வேலைக்குப்போக வேணாமாம். அப்பதான் இந்த ஜனங்கள் இறந்துபோனவங்களை என்ன செய்யறாங்கன்னு சொன்னாங்க.


எல்லாரும் வெள்ளை உடுப்புதான் போட்டுக்கணுமாம். நிறைய சடங்கு, ப்ரேயர் எல்லாம் இருக்காம். வீட்டுலேயே மதகுருமாதிரி ரெண்டுபேர் வந்து எல்லாம் செய்வாங்களாம். பிணத்தைக் கட்டிப் பிடிச்சு அழுவறது கூடாதாம்.தூரமா நின்னுதான் பார்க்கணுமாம். முகத்தைத் தவிர உடம்பு முழுக்க வெள்ளைத்துணியிலே சுத்தி வச்சுருவாங்களாம்.


அப்புறம் அதுக்குன்னு உண்டான இடத்துலே கொண்டு போய் அங்கேயும் சாஸ்த்திர சம்பிரதாயங்களைச் செஞ்சுட்டு,உயரமாக் கட்டி வச்சுருக்கற மேடையிலே வைப்பாங்களாம். இது பாக்கறதுக்குக் கிணறு போல இருக்குமாம். கம்பிகம்பியா போட்டுருப்பாங்களாம். அந்தக் கம்பி மேலே பிணத்தை வச்சுட்டு வந்துருவாங்களாம். ப்ளவுஸ்க்கு ஹெம்மிங் செஞ்சுக்கிட்டே இந்தக் கதையெல்லாம் கேக்கறதுதான். மாசம் ரெண்டு தைச்சுக்கிட்டாவே ஜாஸ்திதான். ( இங்கே வந்தபிறகு ஒரு புத்தகம் க்ளைவ் ஜேம்ஸ் எழுதுன 'த சில்வர் காஸல்' படிச்சப்ப மிஸ் சொன்னதெல்லாம் ஒருதடவை மனசுக்குள்ளே வந்து போச்சு)


நமக்கு ஃபாரீன் யோகம் வந்துருச்சு. போற இடத்தைப் பத்தின அறிவு ஒண்ணும் இல்லை. யார்கிட்டேயாவது கேக்கலாமுன்னாலும் இது ரொம்பக் கேள்விப்படாத இடமா இருக்கு. ஒரே ஒருத்தர்தான் இதைப் பத்திப் பாடியிருக்கார். அவர்கிட்டேயும் மேல்விவரம் கேக்க முடியாது. அவர் 'மேலே போய்' வருஷம் நிறைய ஆயிருச்சு. 'கரும்புத் தோட்டத்திலே'ன்னு அவர் எழுதிவச்ச கவிதையை மட்டும் படிச்சுட்டு, மனுஷனுக்குத் தைரியமே பெரிய துணை'ன்னு கிளம்பி வந்துட்டோம்.


நாட்டுக்குப் பேர் ஃபிஜித் தீவுகள். நம்ம எம்ப்ளாயரே துணிகள் வியாபாரமும் செஞ்சுக்கிட்டு இருந்ததாலே நிறையப் புடவைகள் பரிசாக் கிடைச்சது. இப்ப அதுக்கெல்லாம் மேட்சிங் ப்ளவுஸ் வேணுமே! ஜப்பானிலிருந்து வர்ற 'ரூபி க்வீன்' புடவைகளுக்கு வெறும் வெள்ளையும் கறுப்பும் போட்டுச் சமாளிக்க முடியாது. ரொம்ப மெலீசான துணிகளாச்சே.


கடைகளைச் சுத்திப் பார்த்தப்ப, இங்கே பாலியஸ்ட்டர் துணிகளைத்தான் எல்லாரும் ப்ளவுஸுக்கு வாங்கறாங்களாம்.இங்கே இருக்கற சூட்டுக்கு எப்படித்தான் இதைப் போட்டுக்கறாங்களோ? அப்பப்பா.......


இன்னும் கொஞ்சம் சுத்துனதும் ஒரு கடையில் நம்ம ரெண்டுங்கீழ் ரெண்டு இருந்தது. விலையும் மலிவுதான். மீட்டர்1 டாலர். பாலியஸ்ட்டரும் இதே விலைதான். நமக்கு( அப்ப) 65 செ.மீ போதும். அதனாலே ஒரு சிக்ஸ்ட்டிஃபைவ் வாங்கிக்கலாமுன்னா, அங்கே இப்படி 65, 75ன்னு கொடுக்கற வழக்கம் இல்லையாம். அரைமீட்டர், ஒரு மீட்டர்னுதான்வாங்கிக்கணுமாம். சரி 1 மீட்டர். தாராஆஆஆஆஆஆளமாத் தச்சுக்கலாம். வாங்கியாச்சு. இனி டெய்லரைப் பிடிக்கணும்.


மயக்கமே வந்துருச்சு, தைய்யக் கூலியைக் கேட்டதும். ப்ளவுஸுக்கு 10 டாலர். ஹம்மா..... இதெல்லாம் நாம் வந்து இறங்குன ரெண்டு வாரத்துக்குள்ளேயே. இந்தியக் கணக்குலே பெருக்கல் எல்லாம் போட்டுப் பார்த்து மனசொடிஞ்சு போச்சு.


பேசாம நாமே தச்சுக்க வேண்டியதுதான். ஆனா வெட்டித்தரவேண்டிய காட் ஸிஸ் இன் லா இந்தியாவுலேல்லெ இருக்காங்க. 'இந்தக் கடிதத்தைத் தந்தியாகப் பாவித்து, என்னுடைய அளவுக்கான பேப்பர் கட்டிங் ஒன்றை உடனே அனுப்பி வைக்கவும்'ன்னு லெட்டர் அனுப்புனேன்.


இது போன சுருக்குலே நம்முடைய நிலையைச் சரியாப் புரிஞ்சுக்கிட்ட காட் ஸிஸ் இன் லா பேப்பர் கட்டிங்கை அனுப்பிட்டாங்க. இதுக்கிடையிலே மெஷீன் ஒன்னு வேணுமேன்னு தேடுனதுலே நம்ம அதிர்ஷ்டம் நல்லாவே வேலை செஞ்சது. நம்ம கம்பெனி( எங்க இவர் வேலை செய்யற கம்பெனி நம்மதுதானேங்க?) பாகஸ்த்தர் கடையிலே தைய்யல் மெஷீன் விக்கறாங்களாம். அதனாலே அடக்க விலையிலேயே நமக்கு ஒண்ணு கிடைச்சிருச்சு.


அப்புறம் என்ன? தையலோ தைய்யல்தான்.

Wednesday, August 23, 2006

பரிசு வாங்கலையோ பரிசு

"பரிசு பரிசு பரிசோ........வ் பரிசு,பரிசு வாங்கலையோ பரிசு"

"போனா வராது பொழுதுபோனாக் கிடைக்காதுபரிசோ............. பரிசு."

"ஏம்மா, கூடையைக் கொஞ்சம் இறக்கு. என்னா பரிசுன்னு பார்க்கலாம்."

"ஒரு கை கொடும்மா, இறக்கிப்பிடலாம்."

"அட! புத்தகமா? ஆமா, டஜன் என்னான்னு கொடுப்பே?"

"சரியாப் போச்சுப் போ. நல்லா உத்துப் பாரு. ஒரு டஜனா இருக்கு? எண்ணி ஏழே ஏழு. முத்தாட்டம் ஏழு... உன் சொத்தாகப் போது......."

"பாட்டெல்லாம் இருக்கட்டும், என்ன விலை? அதை சொல்லு மொதல்லே."


"யம்மாடி....... இதுக்கெல்லாம் நீ(ங்க) காசே கொடுக்க வேணாம்.வெறும் கடுதாசி போட்டாவே போதும். வூடு தேடி வந்துரும்."


"யாருக்குப் போடணும்? மந்திரிக்கா?"


"அவ்வளோ கஷ்டமெல்லாம் வேணாம் தாயி. நம்ம சிவகுமார் இருக்காகளே,அவுங்க பதிவுக்குப் போய், படிச்சுப் பார்த்துட்டு பின்னூட்டமுன்னு ஒரு பெட்டி இருக்கு பாருங்க, அதுலே நீங்கப் படிச்சதைப் பத்தியும், என்னா புரிஞ்சுக்கிட்டீங்கன்னும், இன்னும் அதை எப்படிஎப்படி லகுவாச் சொல்லலாமுன்னும் எழுதிப் போடுங்க."


"போட்டா?"


"ஒரு வாத்தியாரும், ஒரு (அப்பாவி) பொது ஜனமும் மார்க்குப் போடுவாங்களாம். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப், பெருக்கி, வகுத்துப் பார்த்து நிறைய மார்க்கு வாங்குனவங்களுக்கு இந்தப் புத்தகம் ஒண்ணை நம்ம சிவகுமார்தம்பி அனுப்பி வச்சுப்புடுவாக."


"ஏம்மா.. நீ சொல்றது சரிதான். ஆனா 'பரிசு'ன்னு சொல்லி விட்டுறாம இப்படிப் புத்தகம், அத்தோட பேரெல்லாம் சொல்லிப்புட்டா ஆளுக அப்பீட்டாயிருச்சுன்னா?"


"நானும் அப்படித்தாம்மா நினைச்சேன். தம்பி ஒரு வெள்ளாந்தி. அதுதான் மர்மமா வுடாம இப்படிப்போட்டு ஒடைச்சிருச்சு.


எல்லா விவரமும் தம்பி சிவகுமார் இங்கே விலாவரியாப் போட்டுருக்கு. படிச்சுப் பாருங்க.
நானும் இன்னும் நாலு தெரு போகணும். ஒரு கைகொடும்மா, கூடையைத் தூக்கித் தலையிலே வச்சுக்கறேன்."


யம்மா. சொல்ல மறந்துட்டேனே, " ஆஹா அருமையான பதிவு. சிந்திக்கத் தூண்டுகிறது"ன்னு ஒரு குத்துமதிப்பாகுன்ஸாப் போட்டா, மார்க்கு ஒண்ணும் கிடைக்காதாம், சொல்லச் சொன்னாக."


"ம்ம்ம்... பரிசு வாங்கலையோ பரிசு,
பரிசு வேணுமா.............. பரிசு.
பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு பெருசு..........."

Tuesday, August 22, 2006

'இம்சை' என் பார்வையில்

இம்சை அப்படி, இம்சை இப்படின்னு சமாச்சாரமெல்லாம் அடிபட அடிபட , என்னடா நமக்குஇன்னும் வரலையேன்னு கொஞ்சம் ஏங்கத்தான் வச்சுருச்சு. முந்தாநாள் ஒருத்தர் வந்து சொல்லிட்டுப் போனார்,மூணு கோடிதான் செலவாம் முப்பது கோடி வசூலாமுன்னு. நேத்தைக்கு வேற ஒருத்தர் மூணு கோடிபோட்டு,நாப்பது கிடைச்சிருச்சாமுன்னு.


பொதுவா, நல்ல ஓடுற அல்லது பலராலும் பரவலா அறியப்பட்ட படங்களுக்கு விமரிசனம் எழுதறது இல்லைதான்.ஆனா 'ரொம்பப் பழைய படங்கள்' மட்டும் இதுக்கு விதிவிலக்கு. இந்தக் கணக்குலே இதை விட்டுறலாமுன்னு பார்த்தாலும் முடியலையே.


வடிவேலுவின் நடிப்பு.....? ஒரே அட்டகாசம். எல்லோர் மனசையும் அப்படியே அள்ளிக்கிட்டு போயிட்டார்.முதல் காட்சியிலே அப்பா படத்துக்கு முன்னாலே கைகூப்பி நிக்கும்போதும், நடக்கும்போதும் அப்படியே சிங்கத்தின் நினவு. ( இங்கே சிங்கம்ன்னு சொன்னது நம்ம சிவாஜி கணேசன். மகள் எப்பவும் சிங்க மாமான்னுசொல்றதாலே அவருக்கு நம்ம வீட்டுப்பேரு இது)
அவர் நடிகர், சொன்னதைச் செஞ்சுட்டுப் போயிருவார்ன்னு பார்த்தா, இவரை இது மாதிரி செய்யவச்சவரைத்தான்பாராட்டவேணும். சிம்புதேவன். பேரே புதுசா இருக்கேப்பா. ஒவ்வொண்ணையும் ஆழமா சிந்திச்சு இருக்கார்.


கதைன்னு பெருசா ஒண்ணும் இல்லை. முதல் காட்சியிலேயே 'உத்தமபுத்திரன்'( அதே சிங்கம்) நினைவு. இப்பத்தானே ஆறுமாசம் முந்தி வாங்கியாந்தேன். காட்சிகள் பலதும், இன்னும் பல சினிமாக்களைத்தான் ஞாபகப்படுத்துது.மனோகராவைக் கூட விட்டு வைக்கலை. அதே வில்லத்தனமான மாமா, ராஜமாதா, அரண்மனை ஜோஸியர் வகையறாக்கள்.


யாரடீ நீ மோகினி........... பட்டிதொட்டியெல்லாம் கூட போடுபோடுன்னு போட்ட பாட்டு. ஏறக்குறைய அதே ஸ்டைல்,ஆனா இதுலே ஒரு அரண்மனைக் குளியல் வருது. சாம்பிராணி போட்ட ஆகாசம் பார்க்கும் மீசையில் ரெண்டு பூ:-))


காட்சிகளை அமைச்சுக் கதை சொன்னவிதம் நல்லாவே இருக்கு. இப்ப சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சனைகளைத் தொட்டுப்போறார். சிரிப்பு மட்டுமில்லை, அதுக்குள்ளேயே நிறைய சிந்திக்கவும் வச்சுட்டார் இயக்குனர். அவரோட வசனங்களும் அருமையாத்தான் இருக்கு.


முழுப்படத்தையும் பத்திச் சொல்லிட்டா, இன்னும் பார்க்காதவங்களுக்கு செய்யுற அநீதியாச்சேன்னு எங்களுக்குப் பிடிச்ச காட்சிகளை மட்டும் சொல்லட்டுமா?


அரண்மனைக் கோட்டையில் இருக்கும் வீட்டு எண்.

புதிய எண்
பழைய எண்
எதிர்கால எண்:-))))))


அரண்மனை அந்தப்புரத்தில் அவ்வையார்.


ஜாதிச் சண்டைக்குன்னு தனியா ஒரு இடம் அரசாங்க சொத்தையெல்லாம் அழிக்கவேணாம் பாருங்க,அதுக்கு.


திருடர்கள் உலவும் பகுதி ( எச்சரிக்கை போர்டு) எல்லாத் திருடர்களுக்கும் நெத்தியிலே ஒரு பெருக்கல் குறி:-))))


புலிகேசி விடுகதை போடும்போது சிஸர் மனோகர், இன்னும் பக்கத்துலே இருக்கும் காவலாளிகளோட முகபாவம்.இன்னும் சொல்லப்போனா எல்லாக் காவலர்களின் முகபாவங்களும் அட்டகாசம்தான்.


புலிகேசியின் அம்பு விடும் திறமை, அம்பு விட்டுப் பழகும் அழகு, கடைசியில் அதே அம்பு விட்டதும், ஆள் குழப்பத்தில் இருக்கும் நாசரின் முகபாவம் .


அரண்மனைக் கொல்லன் செஞ்சு கொடுத்த வாள் இன்னும் மற்ற இரும்புச் சாமான்கள்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.


உக்கிரபுத்தன், புலிகேசியின் ஆடை, அணிகளைப் போட்டுக்கிட்டு, ராஜா செருப்போட விறுவிறுன்னு நடக்கும் நடை( கால் மட்டும் என்னம்மா
ந(ட)டிக்குது)


மந்திரி இளவரசு சரியான ச்சாய்ஸ். பின்னிட்டாரு.


கடைசியில் புலிகேசியின் பத்து கட்டளைகள் தூள். அதுலேயும் அந்த அர்த்தநாரீஸ்வரர் கொள்கையை சாமியோடு நிறுத்திக்காம, நாட்டு நடப்புலே கொண்டு வரச்சொன்னது.( இதைத்தான் நானும் ரொம்ப நாளாச் சொல்லிக்கிட்டு இருக்கேன்)


இந்த 10 கட்டளைகளையும் உண்மையாவே இப்ப அமுலுக்குக் கொண்டுவந்தா நம்ம நாடே ரொம்ப உயரத்துக்குப்போயிரும்.



இந்தப் படத்துக்கு உண்மையான ஹீரோ நம்ம சிம்புதேவன்தாங்க. படத்தோட வெற்றி முழுசும் அவருக்குத்தான்.


ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம, ராஜ வைராக்கிய மாமன்னர் புலிகேசி வாழ்க.


இருங்க எண்ணிப் பார்த்துக்கறேன், ஏழு இருக்கான்னு!

Sunday, August 20, 2006

எவ்ரிடே மனிதர்கள் -14 காமா

தட தட தட தட தட தட............. தடால்........

சத்தம்கேட்டு அடுக்களையிலே இருந்து ஓடிவந்து பார்த்தா, கிணத்து ராட்டினம் மட்டும் இன்னும் தடதடன்னு சுத்திக்கிட்டே இருக்கு.
கிணத்துக்குள்ளெ எட்டிப் பார்த்தால் கொப்புளம் கொப்புளமா நீர்க்குமிழி வந்துக்கிட்டு இருக்கு.


நடுக்கத்தோடு சுத்திமுத்திப் பார்க்கறாங்க காமாவும், பெரியக்காவும். எப்பவும் காலைச் சுத்திக்கிட்டே இருக்கும் குழந்தையைக் காணொம். அவ்வளோதான். ஐய்யோ குழந்தை கிணத்துலே விழுந்துருச்சு!


ராணி, ராணின்னு கத்திக்கிட்டே கிணத்தை இன்னும் உள்ளெ எட்டிப் பார்த்துக்கிட்டு ஒரே அழுகை."குழந்தைக்கு மூச்சுத் திணறுது உள்ளெ. கொப்புளம் கொப்புளமா வருது. ஐய்யோ நான் என்ன செய்வேன்....ராணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஐய்யோ, பாவி நான் குழந்தை என்ன செய்யுதுன்னுகவனிக்காம இருந்துட்டேனே..................."


'அம்மா' ன்னு கூப்புட்டுக்கிட்டே உள்ளெ வந்த புது போஸ்ட்மேனைப் பார்த்ததும் காமாவோட முகத்துலே வெளிச்சம்.'மணி ஓடியாடா..... குழந்தை கிணத்துலே விழுந்துருச்சுடா........ சீக்கிரம் இறங்கிப் பாருடா..........'சீக்கிரம், சீக்கிரம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்'


'அம்மா, எனக்கு நீச்சல் தெரியாதேம்மா....நானு....'


'அடப் பாவி. இறங்குடா முதல்லெ. குழந்தை மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கு. ஐய்யோ குமிழிகூட வரலையேடா,மூச்சு அடங்கிரப்போகுது. இறங்குடா...........'


பெரியக்கா அழுதுக்கிட்டே,'காமா நான் போய் இன்னொரு தாம்புக்கயிறு கொண்டுவரேன்'னு சொல்லிக்கிட்டே ஸ்டோர் ரூமுக்குள்ளே பாயறாங்க. ராணி.... ராணீ........ம்ம்ம்ம்ம் ராணி ஈஈஈஈஈஈஈ தேம்பித்தேம்பி அழுதுகிட்டேசுவத்துலெ பெரிய ஆணியிலே மாட்டி இருந்த தாம்புக்கயிறை தூக்கிக்கிட்டு திரும்புனப்ப...............


ஆஆஆஆஆஆஆ ராணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ......................................கூச்சல்கேட்டு மிரண்டுபோய் கதவுக்கு உள்பக்கத்தில் சுவரோடு சுவரா ஒடுங்கி நிக்கற ராணியை ஓடிப்போய் கட்டிப் பிடிச்சுக்கறாங்க. ஒரே ஒரு நொடிதான். அப்புறம் தரதரன்னு ராணியை வெளியே இழுத்துக்கிட்டு வராங்க. அதுக்குள்ளெ காமாவும், போஸ்ட்மேனும் அங்கே வந்தாச்சு.


ராணிக்கு செம அடி கிடைக்குது, அக்கா கிட்டே இருந்து. ஓடிவந்து தடுத்த காமாவுக்கும் போஸ்ட்மேனுக்கும் கூடரெண்டு அடி விழுந்துச்சு.

' அடிப்பாவி. உள்ளேயே இருந்துக்கிட்டு என்ன அழுத்தம்? நாங்கெல்லாம் கத்திக் கதறுனமே அப்பவாவது குரல் கொடுத்திருக்கூடாதா? '


'மணிக்கு நீச்சலே தெரியாதாம். அவன் உள்ளெ இறங்கி, அவனுக்கு எதாவது ஆகியிருந்தா.......'


' நான் ஊன்னுதான் சொன்னேன். நீங்கதான் அழுதுக்கிட்டே கத்துனீங்க'

இதைக் கேட்டதும் இன்னும் ரெண்டு மொத்து கிடைச்சது.


முழங்கைவரை ஊறுகாய் ஜாடியிலே கையைவிட்டு, மாங்காயை எடுத்துத் தின்ன ராணியின் சட்டையெல்லாம் மிளகாய், எண்ணெய் கலந்த ஊறுகாய் சாறு ஒழுகி ரத்தவிளாறாய் தெரியுது.


ஆமாம், இந்த போஸ்ட்மேன் எதுக்கு இங்கே சம்மணம் போட்டு உக்கார்ந்து கதை கேட்டுக்கிட்டு இருக்கார்?


நம்ம காமா இருக்காங்களே அவுங்க பேர் காந்திமதி. எல்லாரும் மரியாதையா காந்திமதியம்மான்னு கூப்புடும்போது,மூணரைவயசு ராணிதான் 'காமா'ன்னு ஆரம்பிச்சு வச்சது. நம்ம போஸ்ட்மேன் மணிக்கு இன்னிக்குத்தான் வேலையிலே சேர்ந்த மொதநாள். அம்மாகிட்டே சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்த இடத்துலேதான் இவ்வளவு களேபரம். காமாவோடஒரே பையந்தான் இந்த போஸ்ட்மேன் மணி.


மணியோட அப்பா காலமாயி ரொம்ப வருசமாச்சாம். காமாதான் வீட்டுவேலை செஞ்சு மகனை வளர்த்து ஆளாக்குனது.இந்த வீடு கவர்மெண்ட்டு வாடகைக்கு எடுத்த வீடு. மருத்துவர் குவாட்டர்ஸ். இங்கே வர்ற மருத்துவர் வீடுகளுக்கு வழக்கமா வீட்டுவேலை உதவி நம்ம காமாதானாம். அவுங்களும் பலபேரிடம் வேலை செஞ்சிருக்காங்களாம். பழகுன ஆள்ன்றதாலே எல்லாரும் காமாவையே உதவிக்கு வச்சுக்குவாங்களாம்.


ஆனா நம்ம வீட்டாளுங்களோட காமாவுக்கு ஒரு அதீத நட்பு ஏற்பட்டுப் போச்சாம். அம்மா, அக்காங்க,அண்ணன் எல்லோரும் காமாவை வீட்டு உதவியாளரா நினைக்கறதே இல்லை. நம்ம குடும்பத்துலே ஒருத்தரா ஆக்கிட்டாங்க.அதுலேயும் ராணிக்குட்டிக்கு எல்லாம் எப்பவும் காமாதான்.
கடைகண்ணிக்குப் போறதுலே இருந்து, சினிமா கோயில்ன்னு எங்கே போனாலும் ,'விசுக்'ன்னு ராணிக்குட்டியைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கிட்டு விறுவிறுன்னு நடக்கறது காமாவோட பழக்கம். அய்யே..... விடுங்க காமா. இறக்கிவிடுங்க, நானு நடந்து வரேன்னு கெஞ்சுனாலும் பேச்சைக் கேட்டாத்தானே?


வெள்ளைச்சீலையைப் பின்கொசுவம் வச்சுக் கட்டிக்கிட்டு இருப்பாங்க. ரவிக்கை போடறது இல்லை. பாதிக்கும் மேலெ நரைச்ச ச்சின்ன முடியை அள்ளி முடிஞ்சுக்கிட்டு இருப்பாங்க. வயசு என்ன, ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமோ என்னவோ.


பக்கத்துத் தெருவுலெதான் இருக்கு காமாவோட வீடு. ராணிக்குட்டிக்கு அங்கே போற வழி நல்லாத் தெரியும். கொஞ்சநேரம் காமாவைப் பார்க்கலேன்னா ராணி அங்கே போயிரும். புதுச் சட்டை போட்டுக்கிட்டா, ஓடிப்போய் அங்கெ காமாகிட்டே காமிச்சுட்டு வந்தாத்தான் நிம்மதி. காமாவோட வீடு ச்சின்னதா அழகா இருக்குன்னு ராணிக்கு நினைப்பு. அதுவும் அங்கே காமாவீட்டு வெந்நீர்ப் பழையதுன்னா ராணிக்கு உசிரு. அழகான அரிசிப்பல்லாலே ச்சின்ன வெங்காயம் கடிச்சுக்கிட்டு சோத்துப் பருக்கையை வாரி எடுக்கத் தெரியாம ச்சின்னக்கை அளையும்போது, 'அயிரை புடிக்குது ராணி'ன்னு மணி அண்ணந்தான் கிண்டல் செய்யும்.


நம்ம அண்ணனுக்கும் மணி அண்ணன்னா ரொம்ப இஷ்டம்தான். அண்ணன் பள்ளிக்கூடம் விட்டு வந்துட்டா,அவுங்க ரெண்டுபேரும் தினம் சாயந்திரமா வெளியே போய் சுத்திட்டு வருவாங்க. மணி அண்ணன் பெரிசுன்றதாலே எல்லாப் பசங்களுக்கும் ஒரு பயம்தான். அண்ணனுக்கு நிமோனியா வந்து மதுரை பெரியாஸ்பத்திரியிலே இருந்தப்ப,நம்ம மணி அண்ணந்தான் ரெண்டு வாரம் கூடவே இருந்து பார்த்துக்கிச்சு. மொத்தத்துலே குடும்பத்துக்கே காவல் மணி அண்ணந்தான்.


ஒரு நாள் அம்மா மதுரைக்குப் போய்வந்தப்ப, ராணிக்கு 'தங்கச் செருப்பு' ஒரு ஜோடி வாங்கியாந்தாங்க. அப்படியே மின்னுது தகதகன்னு தங்கமாட்டம். அதைப் போட்டுக்கிட்டு உடனே காமா வீட்டுக்கு ஓடுச்சு ராணி. பெரிய மனுஷியாட்டம்வாசல்லே செருப்பை கழட்டிவிட்டுட்டு உள்ளெ போய் காமாவைத் தேடுச்சு. பெரிய பங்களாவா? காமாவைக் காணொம்.பக்கத்து வீட்டுக்குப் போயிருக்குமோன்னு அங்கே போய்ப் பார்த்தா, அந்த வீட்டு ஆச்சிக்கு மூச்சுப் பிடிப்புன்னு தைலம்போட்டு உருவிக்கிட்டு இருந்தாங்க காமா. 'காமா வந்து பாருங்க என் புதுச் செருப்பை. தங்கச் செருப்பு'ன்னு சொல்லிக் கையைப் புடிச்சு இழுத்தா....... 'இதோ... இப்ப வரேன்'னுட்டுப் பொழக்கடையிலெ போயிக் கையைக் கழுவிக்கிட்டு வந்தாங்க.காமா வீட்டுப் படியிலே பார்த்தா..... செருப்பைக் காணொம். யாரோ களவாணி, களவாண்டுக்கிட்டு போயிட்டான்.


வீட்டுக்குவரப் பயந்துக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்த ராணியைத் தூக்கிக்கிட்டு வந்து வீட்டுலே விட்டுட்டு, செருப்புக் களவாணியை நல்லா வஞ்சது நம்ம காமாதான். நல்லவேளை,அன்னிக்கு மொத்து விழாமக் காப்பாத்துனது காமாதான். களவாண்டவங்க செருப்பைப் போட்டுக்கிட்டுப் போகும்போது பார்த்துப் பிடிச்சுறலாமுன்னு காமா சொன்னதாலே தினமும் வாசப்படியிலே உக்காந்து போறவர்ற பசங்க காலைப் பார்த்துக்கிட்டு இருக்கறதே ராணிக்குச் சோலியாப் போச்சு.


ஒருநாளு இப்படித்தான் வாசப்படிக்கட்டுலெ உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்துச்சு ராணி. காலை நேரம்.பக்கத்துப் பள்ளிக்கூடத்துக்கு பசங்க போய்க்கிட்டு இருக்காங்க. காலையே உத்துப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது,ராணிக்குட்டி எப்படி இருக்கேன்னு கேட்டுக்கிட்டே வந்து பக்கத்துலெ உக்காந்தது நம்ம காமா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா. செருப்புக் களவாணியைப் பிடிக்கறதுக்கு உக்காந்துருக்கென்னு சொன்ன ராணி,மல்லிகாவோட பேசிக்கிட்டே பள்ளிக்கூடத்துக்குப் போயிருச்சு. அங்கெ டீச்சர் பார்த்துட்டு, ஒண்ணாப்புலெ கொண்டுபோய் உக்கார வச்சுட்டாங்க.


இங்கே வீட்டுலெ ஒரே அமளிதுமளி, புள்ளையைக் காணொமுன்னு. தேடித்தேடிப் பார்த்துட்டு யாரோ புள்ளைபுடிக்கிறவன் கொண்டு போயிட்டானோன்னு பயந்து நடுங்கி காமா ஒடிப்போய் தலையாரிகிட்டே சொல்லியிருக்காங்க.தண்டோராப் போடறவர், இந்த மாதிரி நாலு வயசு ராணியைக் காணொம். பார்த்தவங்க உடனெ வந்து விவரம்
சொல்லணுமுன்னு 'டமு டமு டமு டமு'ன்னு தமுக்கு அடிச்சுக்கிட்டே தெருத்தெருவாப் போய்க்கிட்டு இருக்கார்.


அப்ப யாரோ, 'மல்லிகா கையைப் புடிச்சுக்கிட்டுப் போனதைப் பார்த்தேன்'னு காமாகிட்டே சொன்னதும், பள்ளிக்கூடத்துக்கு ஒரே பாய்ச்சல். மல்லிகாகிட்டே கேக்கலாமுன்னு அங்கேபோனா, ஒண்ணாப்புலே ராணிக்குட்டி இருக்குன்னு தெரிஞ்சுச்சாம்.சரின்னு அங்கே போய்ப் பார்த்தா.......... முத்தாட்டம் உக்காந்துக்கிட்டு டீச்சர் சொல்றதையெல்லாம் அழகாத் திருப்பிச் சொல்லிப் பாடம் படிக்குதாம் ராணிக்குட்டி.


காமாவைப் பார்த்த டீச்சர்,' ராணிக்குட்டி ரொம்ப புத்திசாலி. பள்ளிக்கூடத்துலே இப்பவே சேர்த்துறலாமு'ன்னு சொன்னாங்களாம்.அம்மாவைக் கேக்கணும். புள்ளைக்கு நாலு வயசுதான் ஆச்சுன்னு காமா சொல்லியும்கூட, பிடிவாதமா,ரெண்டுவயசைக் கூட்டி அன்னிக்கே புள்ளையை வகுப்புலே சேர்த்துட்டாங்களாம், டீச்சர். காமா வீட்டுக்கு ஓடிப்போய் அம்மாகிட்டே விஷயத்தைச் சொன்னாங்களாம். இப்படி ராணிக்குட்டியோட பள்ளிக்கூடப் பிரவேசம் ஆச்சு....


அன்னிலே இருந்து காமாவுக்குப் புது வேலை ஒண்ணும் சேர்ந்துக்கிச்சு. மத்தியானம் சாப்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் விடுவாங்கல்லெ, அப்ப அங்கே போய் ராணிக்குட்டியைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்து சோறு ஊட்டிட்டு, பிறகு அதெ மாதிரி இடுப்புலே தூக்கி வச்சுக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு விடும். 'எருமைமாடு' மாதிரி இருந்துக்கிட்டு இடுப்புலே உக்காந்து வர்றதுக்கு ராணிக்குட்டிக்கு வெக்கமா இருக்கும். அதுவும், கூடப்படிக்கிற பசங்க எல்லாரும் பாக்கறாங்களே அது வேற. காமா அதெல்லாம் கேக்காது, புள்ளைக்குச் சூட்டுலே காலு பத்திக்குமாம்.


ராணிக்குட்டி படிப்புலே ரொம்பச் சூட்டிகை. எண்ணி ஆறே மாசத்துலே அதைத் தூக்கி ரெண்டாப்புலே போட்டுட்டாங்க.பள்ளிக்கூடத்துலே சேர்ந்த மொத வருசமே டபுள் புரமோஷன் வாங்கிருச்சு. காமாவுக்கு தலைகொள்ளாத பெருமை.


காமாதான் தினமும் சோறு ஊட்டணும், குளிப்பாட்டணும், இன்னும் வெளியே போனாக் களுவி விடணும்னு எல்லாத்துக்கும் காமா காமான்னு இருந்தப்ப அம்மாவுக்கு வேற ஊருக்கு மாத்தல் வந்துருச்சு. சேதி கேட்டதும் ராணிக்குட்டியைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு காமா அழுத அழுகை.............. ....


இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, கிளம்பரதுக்கு. தினமும் விதவிதமாப் பலகாரம் பண்ணிக்கிட்டு வந்து ராணிக்குட்டிக்கு ஊட்டிக்கிட்டும், தினமும் சாயங்காலம் கோயிலுக்குக் கொண்டு போறதுமா இருந்தாங்க காமா. மணி அண்ணன் வேறதினமும் முட்டாயெல்லாம் வாங்கிவந்து கொடுக்கும். கிளம்பறதுக்கு மொதநாளு, கோவில்லே மாவிளக்குப் போட்டாங்க. ராணிக்குட்டிக்குப் புதுச் சட்டை எடுத்துக் கொடுத்தாங்க.
அதைப் போட்டுக்கிட்டு, பஸ்ஸுலே ஏறி ஜன்னல்பக்கம் உக்கார்ந்துக்கிட்டு காமாவுக்கு கை ஆட்டுனா ராணிக்குட்டி.காமாவுக்கு அழுது அழுது கண்ணும் செவந்து போச்சு, தொண்டையும் கட்டிக்கிச்சு. அக்காங்க கிட்டேயும், அம்மா, அண்ணன் கிட்டேயும் என்னமோ சொல்லிக்கிட்டே, முந்தானையிலே மூக்கைத் துடைச்சுக்கிட்டே இருந்த காமாவைப் பார்த்த ராணிக்குட்டிக்கும் அழுகையா வந்துச்சு. மணி அண்ணன் பஸ்ஸுக்குள்ளே ஏறி, சாமான்களையெல்லாம் அடுக்கி வச்சுட்டு, அண்ணன் கையைப் புடிச்சுக்கிட்டே என்னமோ பேசிக்கிட்டு இருந்தார். அவர் கண்ணுலேயும் கரகரன்னு தண்ணி வந்துக்கிட்டு இருக்கு. இதுவரைக்கும் ஒண்ணும் நடக்காதமாதிரி இருந்த அக்காங்களும் அம்மாவும் ஏன் அண்ணனும்கூட பஸ் நகர ஆரம்பிச்சதும் ஒரு கதறுகதறுனாங்க பாருங்க....................................


அடுத்தவாரம்: சாவித்திரி


நன்றி: தமிழோவியம்
-------------

Saturday, August 19, 2006

இன்ப அதிர்ச்சி

இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் வழக்கம்போல கணினி முகத்தில் கண்விழிச்சுப்பார்த்தப்ப............ அடடா என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.


அது வந்துங்க, எங்க 'வீட்டுப் பக்கம்' திறந்தவுடன், உள்நாட்டு விஷயம் எதாவது இருக்கான்னு பார்க்கறது. முக்கியமா இன்னிக்கு எத்தனை டிகிரி சூடு, வெய்யில்(!!!!!!) வருமா இத்யாதிகள்.


டெக்னாலஜி நியூஸ்ன்னு Indian Village Uploads Itself Online னு படிச்சதும் பரபரப்பா அதைத் திறந்தேன். இந்திய விஷயங்களை அவ்வளவா கண்டுக்காத உலகத்தின் பகுதியிலே ரொம்ப அசம்பாவிதமா எதாவது நடந்தாலொழிய ( அதுக்கும் டி.வி. கவரேஜ் 2 நிமிஷம்தான்)சட்டை பண்ணாமப் போற இடத்துலே எக்ஸ்ட்ரா நியூஸ்லே வந்துருக்கேன்னு ஆச்சரியம்!


இவுங்க டிவிலே வரணுங்கறதுக்காக அதீதமா எதாவது நடக்கணுமா என்ன? No News is Good News இல்லீங்களா?


அந்த கிராமத்தைப் பத்தி எழுது ஒரு சுட்டியும் கொடுத்துருக்காங்க.

கிராமத்தைப் பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்புன கையோட உங்ககிட்டேயும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவு.
கிராமங்கள் விழிச்சுக்கிச்சுன்னாவே நல்ல முன்னேற்றம் வருதுன்றதுக்கு அறிகுறி.


அனைவருக்கும் இன்றையப் பொழுது நல்லதாக அமையட்டும்.

Thursday, August 17, 2006

மனக்குறை

சரி. முதல் காரியம் முதல்லெ. எதுக்கும் ஒரு டிஸ்கி போட்டுக்கறென்.


கொஞ்சநாளா மனசுக்குள்ளெ ஒரே முணுமுணுப்பு. எனக்கு மட்டும்தான் இப்படித் தோணுதா இல்லே,மத்தவங்களும் இப்படித்தானா?ன்னு தெரிஞ்சுக்கறதுக்காகப் போடுற பதிவு இது. உங்களுடைய கருத்துக்களையும், இது சம்பந்தமான மற்ற அனுபவங்களையும் தெரிஞ்சுக்க விருப்பம்.


பொதுப்படையா நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு சொன்னாலும், வட இந்தியர்கள் அதிகமா இருக்கற ஒரு கூட்டத்துலே தென்னிந்தியருக்கு சகஜமாக இருக்கறதுலே கொஞ்சம் கஷ்டம் இருக்கோ? இதுவும் ஒருவித தாழ்வு மனப்பான்மையா? என்னமோ அங்கே ஒரு ஒட்டுதல் இல்லாமப் போகறதுக்குக் காரணம் என்ன?


நம்முடைய தென்னிந்தியக் கூட்டத்துலே கலந்துக்கற வட இந்தியர்களுக்காக, நாம் பெரும் முயற்சி எடுத்து,அவுங்களை நல்லபடியா வரவேற்று அவுங்க இயல்பா இருக்க நம்மால் ஆனதைச் செய்யறப்ப( அதான் தமிழ் சினிமா உலகத்துலே பார்க்கறீங்களே) அவுங்களுக்கு ஏன் இதை நமக்குத் திருப்பிச் செய்யத் தோணறதில்லை?


நேத்து, இங்கே நம்மூரில் இருக்கும் 'ஹரே கிருஷ்ணா' கோவிலுக்குப் போயிருந்தோம். இந்தமாதிரி விசேஷ நாட்களிலே மட்டும் கொஞ்ச நேரமாவது போய், அந்தக் கொண்டாட்டத்துலேக் கலந்து மகிழறது நல்லாத்தான் இருக்கு. இங்கே ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையிலும் சாயங்காலம் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிரசங்கிப்பார். அது முடிஞ்சதும்,ஆரத்தி எடுப்பார்கள். அப்புறம் சாப்பாடு. சுமாரான கூட்டம் இருக்கும். நேத்து, ரொம்ப விசேஷமாச்சே, பிரசங்கிச்சவர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களையெல்லாம் சொல்லி, அதில் இந்த கிருஷ்ணாவதாரம் ஏன் ரொம்பவும் சிறப்பானதுன்னு விளக்கிக்கிட்டு இருந்தார். ரொம்ப சீரியஸ்ஸா இல்லாம அப்பப்ப சில நகைச்சுவைகளைச் சொல்லிக் கூட்டத்துக்குக் கொஞ்சம் உற்சாகம் தரணுமுன்னு நினைச்சார் போல, ஒரு சம்பவத்தைச் சொன்னார்.


ஒரு முறை 'பிரபுபாதா' தென்னிந்தியாவுலே யாத்திரை செய்த சமயம், பிறப்பினால் பிராமணர் ஆன ஒருவர், கீதைப் புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். தலைகீழாப் படிச்சதாலே அதுக்குண்டான அர்த்தத்தையும் தலைகீழாவே புரிஞ்சுக்கிட்டாராம். பிரபுபாதாதான், அவர்கிட்டே போய்,'இந்த மாதிரி புத்தகத்தைத் தலைகீழாய் வச்சுப் படிச்சால் இப்படித்தான் அர்த்தமெல்லாம் அனர்த்தம் ஆகிரும்'னு சொன்னாராம்.


இந்த சம்பவம் மெய்யா, இல்லே பொய்யான்னு தெரியாது. என்னுடைய கேள்வியெல்லாம், from where these peopleget this kind of stories? அதுக்கப்புறம் அவர் செஞ்ச பிரசங்கத்துலே என் மனசு பதியலை. அதுபாட்டுக்குத் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சிருச்சு. இந்தத் தொந்திரவெல்லாம் வேணாமுன்னுதான் நான் சனிக்கிழமை கோயிலுக்குப் போற பழக்கத்தை வச்சிருக்கேன். அன்னிக்கு அங்கே கடவுளுக்கும், எனக்கும் இடையிலே யாரும் வரமாட்டாங்க. பிரசங்கம்ன்னு சொல்லி எதையும் என் காதாலெ கேட்டுக்க வேண்டிய அவசியமும் இல்லை.



ஏன், இதே மாதிரி ஒரு கதையை நம்மாலெ உண்டாக்க முடியாதா? ஒரு வடக்கிந்தியர் தப்பாப் படிச்சுக்கிட்டு இருந்தார்ன்னு.முடியும். ஏன் முடியாது? ஆனா நாம இதைச் செய்ய மாட்டோம். இயற்கையாவே விருந்தோம்பல், பிறர்மனம் நோகாம நடக்கறது,அடுத்தவர்களுக்கு ஒரு மரியாதை இதெல்லாம் மனசுலே ஆழமாப் பதிஞ்சு போயிருக்கு. இதையெல்லாம் மீறி வெளியே வந்து,ஒருத்தரை அவமானிக்க என்னாலே/நம்மாலே முடியாது.
வர்ற வழியிலே இதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே வந்தேன். பிரசங்கிச்ச வெள்ளைக்காரருக்கு இந்த வடக்கு,தெற்கு பேதம் வரச்சான்ஸே இல்லை. ஆனா சம்பவத்தைச் சொன்னவர் கல்கத்தாக்காரராச்சே! ஸோ......அப்பவே இருந்து தெற்கைக் கீழாப் பார்க்கிற பழக்கம்இருந்திருக்கு. இது ஒண்ணும் புதுசு இல்லை(-:


மனசுக் குடையக் குடைய ரெண்டு வருசத்துக்கு முன்னே நடந்த இன்னொரு சம்பவம் எனக்கு நினைவு வந்துச்சு.அதை அப்பவே ஒரு டயரிக்குறிப்பா எழுதிவச்சிருந்தேன். ( ப்ளொக் எழுத ஆரம்பிக்காத காலம்) இங்கே அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுத்து நடை மாறுபட்டு இருக்கும், பார்த்துக்குங்க.



தமிழுக்கு வந்த கதி!
-------------------


இந்த மாதம் ஆரம்பத்தில் ( ஜூலை 3, 2004) இங்குள்ள இந்தியன் சோசியல் & கல்ச்சுரல் க்ளப்'-ன் குளிர்கால மத்தியில் கூடும் ஒன்றுகூடல் விழா நடந்தது. இங்கே ஒவ்வொரு சங்கமும் ஒவ்வொரு விதமாகநடக்கும். இதில், உணவும் இங்குள்ள ஒரு 'ரெஸ்டாரண்டில்' இருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.நாம் ஏதும் கொண்டு போகத் தேவையில்லை.இதற்குள்ள 'டிக்கெட்'டுகளை மட்டும் விழா நடக்கும் நாளுக்குச் சிலதினங்களுக்கு முன்பே வாங்கிவிடவேண்டும். அப்போதுதானே, உணவு தயாரிப்பவர்களுக்குத் தெரியும் எவ்வளவு உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று.


இதில் அங்கத்தினருக்கு ஒரு 'ரேட்'டும், மற்றவர்களுக்கு இன்னும் கூடுதலாகவும் இருக்கும். அது அநேகமாக இரட்டிப்பு விலை என்பதால், நம் ஆட்கள் அங்கத்தினராக அன்றே பதிவு செய்து கொள்கிறேன் என்றுசொல்லி, அங்கத்தினர் டிக்கெட்டுகளைப் பெற முயல்வார்கள்.


இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். இங்கே நாம் வந்த புதிதில் நம் ஆட்களும் அதீகமில்லை. தமிழ்பேசும் குடும்பங்களும் மொத்தமே மூன்றுதான், எங்களையும் சேர்த்து. மற்ற இரண்டு குடும்பத்தினரும் இலங்கைத்தமிழர். இது 1988-ல். இப்ப 31 தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன. அதில்,ஐந்து குடும்பங்கள்தான்இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தமிழர்கள்!
1997-ல் நம் மக்கள் தொகை ஓரளவு கூடிவிட்டது.மேலும் ·பிஜித்தீவு இந்தியர்களும் இங்கே இருந்தனர்.அவர்கள் 'ஹிந்தி'மொழி பேசுபவர்கள்.
கோபால் எல்லா இந்தியர்களையும் ஒன்று சேர்க்கும் ஆர்வத்துடன் இந்த 'இந்தியன் சோசியல் & கல்ச்சுரல் க்ளப்'பை ஆரம்பித்தார். முதல் விழாவாக நம் இந்திய நாட்டின்சுதந்திரதினம் பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது முதல் இந்த 'க்ளப்' ஓரளவு நன்றாகவே நடந்து வருகின்றது.


கோபால்தான் 'ஸ்தாபகர்' என்பதால் நாங்கள் எப்போதும் எல்லா விழாக்களுக்கும்,மீட்டிங்குகளுக்கும் தவறாமல் போகும் வழக்கம். இந்த ஒன்று கூடல் வைபவங்கள் எல்லாமே ஒரு வார இறுதியில் சனியன்றுதான் இருக்கும். நாங்கள் கொஞ்சகாலமாக, சனிக்கிழமையன்று மாலை கோவிலுக்குப் போகும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றோம். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டுமென்றால், சனியன்று காலை கோவிலுக்குப்போய் வருவோம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருட குளிர்கால ஒன்று கூடலுக்குப் போக எனக்கு என்னவோ விருப்பம் இல்லாமல் இருந்தது.மாலையில் கோவிலுக்கே போகலாம் என்று தீர்மானித்து, நாங்கள் விழாவுக்கான' டிக்கெட்'டை முன்கூட்டியே வாங்கவில்லை. கமிட்டி மெம்பர்களும் ,போனில் ஏன் இன்னும் டிக்கெட் வாங்கவில்லை?வீட்டுக்குக்கொண்டுவரட்டுமா ? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தனர். நானும் விடாப்பிடியாக, இந்த முறை வருவதற்கு வசதிப் படாது, அடுத்த முறை பார்க்கலாம் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களும், விடாப்பிடியாக' மனசு மாறினால் கட்டாயம் ஹாலுக்கு வந்துவிடுங்கள். முன் கூட்டியே டிக்கெட் வாங்குவது உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு' என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.


அன்று பிற்பகல், கடைகளுக்குச் சென்றபோதும், ஒரு கமிட்டி மெம்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும், கட்டாயம் விழாவுக்கு வரவேண்டும் என்று ஆரம்பித்தார். நானும், பார்க்கலாம். ஆனால் மற்றொரு முக்கியமான வேலை வந்துவிட்டது என்று சொல்லிவிட்டேன்.


இதை எதற்கு இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால் விஷயம் இருக்கு!


கடைகளில் இருந்து வீட்டுக்கு வந்தால், நுழையும்போதே தொலைபேசி மணி விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது.ஒரு நண்பர் ,போனில் கூப்பிட்டு, அவர் ஏற்கனவே 'டிக்கெட்'வாங்கிவிட்டார் என்றும், விழாவுக்குப் போக இயலாமல் தலைவலியும், காய்ச்சலுமாக இருக்கிறதென்றும் சொல்லி, நீங்கள் இந்த டிக்கெட்டை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். நானும் இந்தமுறை போகவேண்டாம் என்றிருப்பதைச் சொல்லிவிட்டு, எதற்கும் கோபாலைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றும் கூறினேன்.


கோபாலும், "இது என்ன போக வேண்டாம் என்று நினைத்தால் இப்படியாகிறதே! பாவம். அவர்களுக்கு 20$ வீண்செலவுதானே?சரி, நாமே அதை வாங்கிகொள்ளலாம்" என்றார்.


நானும், கோவிலுக்குப் போக வேண்டாமா? என்றதற்கு, இப்போதே போய்விட்டு வரலாம் என்றார். மணியோ மாலை ஐந்தரைஆகிவிட்டது. நான், நண்பரைத் தொலைபேசியில் விளித்து, கோவிலுக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது, அவர்கள் வீட்டில் டிக்கெட்டை எடுப்பேன் என்றேன். அவரும், அப்பாடா! ரொம்ப நன்றி.இரண்டரை டிக்கெட் எடுத்திருந்தேன். அரை டிக்கெட் போனால் போகட்டும் என்றார். அப்போது தான் ஞாபகம் வந்தது அவர்கள் குழந்தை ஏமாந்துவிடுமே என்று. உடனே, நான் குழந்தையை விழாவுக்கு அழைத்துப் போவேன். கொஞ்சம் தாமதமாகத்தான் போக முடியும். நீங்கள் பையனை தயாராக வைத்திருங்கள் என்று முடிவாகச் சொல்லி அதே போல் ஆறேமுக்காலுக்குப் பையனைப் போய்க் கூட்டிக்கொண்டு விழாவுக்குப் போனோம்.


விழாக் குழுவினருக்கு எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.( அப்படின்னு நினைக்கிறேன்) Indian standard time படி,(நமக்கே உரிய தாமதம்)கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. நான் கொண்டுபோன பையனுக்கு ஐந்தே வயது. அவனுக்கு மேடையில் நடப்பது மறைக்காமல் தெரியவேண்டுமே என்று,நான் பையனுடன் முதல் வரிசையில் போய் அமர்ந்துகொண்டேன்.


கலை நிகழ்ச்சிகள் சுமாராக நடந்துகொண்டிருந்தன.ஒரு பஞ்சாபி இளைஞர், க்ளப்பின் 'யூத் கோ ஆர்டினேட்டர்' மேடையில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி வழங்கிக் கொண்டிருந்தார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடையும் தருணம் அந்த இளைஞர் ஒரு அறிவிப்பு செய்தார்.


" அனைவரும், நம் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு எப்போதும் ஹிந்தி, இங்கிலீஷ் பாட்டுகள்தானா என்று, புகார் செய்வதால்,இன்று ஒரு தமிழ்ப்பாட்டு பாடப் போகின்றேன். இதுதான் கடைசி அயிட்டம். சாப்பாடு பரிமாற ரெடியாக உள்ளது.இது முடிந்தவுடன் உணவு"


எனக்கு சந்தோஷமாக இருந்தது. பரவாயில்லையே! நிமிர்ந்து உட்கார்ந்தேன். பஞ்சாபி மேளம் மாதிரி ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றொரு பஞ்சாபி இளைஞரும் மேடை ஏறினார். வந்தது பாட்டு!


பாட்டா அது? ஒரு தமிழ் வார்த்தையும் இல்லை. காட்டு மிராண்டிகள் போலக் கத்திக்கொண்டும், மேளத்தை அடித்துக்கொண்டும்அலறிக் கொண்டிருந்தனர்! பெரிய தமாஷ் நடப்பதைப் போல எல்லோரும் சிரித்துக் கொண்டு அதை அனுபவிக்கிறார்கள்!


எனக்கோ 'ரத்தம்" கொதித்துக் கொண்டிருக்கிறது! முன் வரிசையில் இருந்தபடியால் கையைத்தூக்கிக் காண்பித்து 'நிறுத்து'என்று சைகை செய்தேன். ஆனாலும், மது அருந்திய மந்திகள் போல அங்கே மேடையில் பாட்டும் அதற்கேற்ப ஆட்டமும், மேளமும் தொடர்ந்து கொண்டிருந்தது. தாங்கமுடியாமல் எழுந்துபோய், " என்ன நடக்குது இங்கே? இதுதான் தமிழ்ப் பாட்டா?" என்று சத்தம் போட ஆரம்பித்தேன். அதற்குள் அந்த இளைஞர், சும்மா 'தமாஷ்'க்குப் பாடினேன் என்றார்.


எது தமாஷ்?


ஒரு மொழியைக் கிண்டல் செய்வது தான் தமாஷா?

அதற்கு, தமிழ் என்று ஏன் சொல்ல வேண்டும்?

உன்னுடைய சொந்த மொழியான 'பஞ்சாபி' என்று சொல்லியிருக்கலாமல்லவா?


ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது பெற்ற தாய்க்கு சமானமே அல்லவா?

தன் தாயை யாராவது கேலி செய்து, அவமதித்தால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா?

தமிழ் மொழி இந்திய மொழிகளில் ஒன்றில்லையா? எவ்விதம் அதை கேலி செய்யப்போயிற்று?

இந்தியாவின் எல்லா மொழிகளுகளுமே சமமான மதிப்பை உடையதல்லவா?


இந்தியாவின் சிறப்பே இத்தனை மொழிகள் இருந்தும் ஒரே நாடாக இருப்பது தானே?


தமிழும், தமிழனும் கேலிக்குரியவர்களா?


இன்று நீங்கள் கலந்து மகிழும் இந்தக் க்ளப் கூட ஒரு தமிழனால் தொடங்கப்பட்டதல்லவா ?


நீ உண்மையான தமிழ்ப்பாட்டை, தப்பும் தவறுமாகப் பாடியிருந்தால் கூட, நான் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன்.குறைந்த பட்சம், 'உதித் நாராயணன்' போலத் தமிழில் பாட முயற்சி செய்தாய் என்று! அதை விட்டு, ஒரு தமிழ் வார்த்தையும் இல்லாமல் கத்துவதுதான் தமிழ்பாட்டா ?


என்று ஒரே கேள்விக்கணைகளாகத் தொடுத்துக் கொண்டிருந்தேன். இதற்குள், க்ளப்பின் தலைவரும்,மற்ற கமிட்டி ஆட்களும் வந்துவிட்டனர். எல்லோருடனும் நான் 'சாமி' வந்தமாதிரி கத்தி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்!இதற்குள் கோபாலும் பின்னாலிருந்து அங்கே வந்துவிட்டார். அந்த இளைஞன் பேயறைந்தது போல நின்றுகொண்டிருந்தான்!தலைவரும் அதே நிலையில்! மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பல முறை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.


நான் சொன்னேன்," இனி நான் உங்களுடைய எந்த விழாவுக்குமே வரமாட்டேன். எங்கள் 'மெம்பெர்ஷிப்'பை கேன்சல் செய்கிறோம். நாங்கள் இப்போதே வெளியேறுகிறோம். உங்க சாப்பாடும் வேணாம், நீங்களும் வேணாம்!"


கோபால் சொன்னார்,"நீங்க செஞ்சது நிஜமாவே பெரிய தப்பு.தலைவர் என்ற முறையிலே நிகழ்ச்சிகள் மேடை ஏறு முன்பே என்னென்னெ இருக்கு. அதுலே குற்றம் குறை இருக்கான்னு 'ரிகர்சல்லே' பாத்திருக்க வேண்டாமா?"


தலைவர் சொல்றார், "தெரியாத்தனமாக தப்பு நடந்து போச்சு. நிகழ்ச்சி நிரலில் பாருங்க. இந்த அயிட்டமே கிடையாது.இந்தப் பசங்க ஏதோ ஆர்வக்கோளாறாலே இப்படி செய்துட்டாங்க! நீங்க இப்படி க்ளப்பை விட்டு போகக் கூடாது.சாப்பிடாமலும் போகக்கூடாது. இது உங்க க்ளப். நீங்க ஆரம்பிச்சது! நான் என்ன செய்யணும் சொல்லுங்க.என்னசெய்யட்டும்?"


அந்த இளைஞன் சொல்றார், "தவறுதலா என் வாயிலே 'தமிழ்'னு வந்துருச்சு. மன்னிச்சுடுங்கோ!"


"தவறுதலா தமிழ்னுதான் வருமா? பெங்காலி, குஜராத்தி, மராட்டி ன்னு வராதா?" இது நான்!


அப்புறம் கோபாலே ஒரு தீர்வும் சொன்னார்." மேடையிலே போய் அந்த இளைஞரும், தலைவரும் நடந்ததற்கு மன்னிப்பு கேட்கணும்"


இது எனக்குத் தோணலே பாருங்க! நாந்தான் சாமியாடிகிட்டு இருக்கேனே!


இதுக்குள்ளே எல்லோரும் சாப்பாட்டுக்கு வரிசையிலே நிக்கப் போயிட்டாங்க!சிலர் சாப்பாட்டை வாங்கி வந்து, சாப்பிடவும் செய்றாங்க!
அந்த இளைஞர் சொல்றாரு, எல்லோரும் சாப்பிட்டு முடிச்ச பிறகு மன்னிப்பு கேக்கறேன்! இப்ப ம்யூஸிக் சிஸ்டத்துலே பாட்டு போய்கிட்டு இருக்கு.


'பாட்டையெல்லாம் நிறுத்தலாம். நானே நிறுத்துவேன். ஏறு மேடையிலே!' இது நான்.



அப்புறம் அவுங்க ரெண்டுபேரும், மேடையிலே ஏறி 'மைக்'கைப் பிடிச்சு, முக்கியமான அறிவிப்புன்னு சொல்லி, நடந்ததுக்கு எங்களிடமும், எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டாங்க! கமிட்டி ஆட்களும் மன்னிப்புக் கேட்டாங்க!


அதுக்கப்புறம், வந்திருந்த மத்த ஜனங்கள் எல்லோரும், அது நிஜமாகவே பெரிய தப்புதான், அப்படி, இப்படின்னு வந்து எங்ககிட்டவந்து சொன்னாங்க!
இவ்வளவும் நடந்துகிட்டு இருக்கறப்ப, எனக்கு இன்னும் ரொம்ப மன வருத்தம் ஏற்பட்டது எதுக்குன்னா, அங்கே இன்னும் ரெண்டு தமிழ்க் குடும்பங்கள் விழாவுக்கு வந்திருந்தாங்க. அவுங்க மட்டும் எதுவும் நடக்காத மாதிரி, வரிசையிலே போய் சாப்பாட்டை வாங்கிவந்து அமைதியா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்ததுதான்! ஒரு 'சப்போர்ட்டு'க்காகக்கூட எங்ககூட வந்து நிக்கலே!



மற்ற இரண்டு தமிழ்க் குடும்பத்துக்கும் தாய்மொழியும் தமிழ்தான். எனக்கும் கோபாலுக்கும் தாய்மொழின்னு பார்த்தால் தமிழ் கிடையாது. அப்படி இருக்கறப்பவே, தமிழ் மொழியை யாராவது கேலி பேசினால் என்னாலே பொறுத்துக்கொள்ள முடியலே!


போகவே வேணாம்னு முடிவு செய்திருந்த,அந்த விழாவுக்கு எங்களைப் போக வைத்தது எது?


ஒருவேளை, நாந்தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்து
கொண்டேனோ?

நான் செய்தது சரியா?


எனக்குப் பொறுமையா இருக்கத் தெரியலையா?


இப்படி பல கேள்விகள் என் மனசிலே!



வீட்டுக்கு வந்தபிறகு, நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது, நான் செய்தது மிகச் சரிதான் என்ற எண்ணம் வந்தது. இதுபோன்ற தவறுகளை, வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியத்தான் வேணும்! இனி மற்றவர்களையும், அவர்கள் மொழியையும், அவர்கள் பழக்க வழக்கத்தையும் மதிக்காவிட்டாலும், கேவலம் செய்வதையாவது நிறுத்திக்கொள்வார்கள் அல்லவா?


கடவுள்தான் என்னை அங்கே கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தாரா?
---------
இன்னிக்கு கோயிலில் ஏன் சாமியாடலைன்னு கேக்காதீங்க. 'இந்த அக்கிரமத்தை சாமி நீயே பார்த்துக்கோ'ன்னு விட்டுட்டேன்.

Wednesday, August 16, 2006

நானா.........என்னையா?



இங்கே பாரு கண்ணா, அம்மா உன்னை இன்னிக்குக் கட்டிப்போடப் போறேன்.


ஏம்மா? நானென்ன செஞ்சேன்? நான் நல்ல பிள்ளைதானேம்மா.

ஆமாண்டாச் செல்லம். ஆனா ஊர் முழுசும் உம் மேலே குற்றஞ் சொல்லுதே,நீ எல்லார் வீட்டிலேயும் போய் வெண்ணெய் திருடித் திங்கறேன்னு.


ஏம்மா.... நான் ச்சின்னப் பையந்தானே? நீங்கெல்லாம் வெண்ணெயை உறிமேலே எடுத்து வச்சுடறீங்களே. அது எனக்கு எப்படிம்மா எட்டும்? நான் உன் இடுப்பு உயரம்கூட இல்லையேம்மா?


நீதான் ஊர்ப்புள்ளைங்க அத்தனைபேரையும் கூட்டிக்கிட்டுப் போய் அழிச்சாட்டியம் செய்யறேன்னு அந்தப் புள்ளைகளொட அம்மாக்களும் தினமும் வந்து வீட்டுவாசலில் நின்னு கத்திட்டுப் போறதைப் பார்க்கலையா நீ?



அதுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏதும்மா? காலையிலே இருந்து சாயந்திரம் வரைக்கும் இந்த மாடுகளையெல்லாம் மேய்ச்சுட்டு வர்றப்பயே எனக்குக் களைப்பாப் போயிருது. வீட்டுக்கு எப்படாப் போவோம்,கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமுன்னு இருக்கேம்மா.


அப்ப நீ வெண்ணையைத் திங்கவே இல்லையா?


ஊஹூம்........... இல்லைம்மா.


ஓஹோ ......... அப்படியா? அப்ப உன் கன்னத்துலே ஈஷியிருக்கே வெள்ளையா அது என்னவாம்?


பாலகிருஷ்ணனின் கதைகளைக் கேக்கறப்ப நமக்கே மனசெல்லாம் சந்தோஷம் வந்து நிறைஞ்சிரும்.எத்தனைமுறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத சம்பவங்கள்.


அனூப் ஜலோதான்னு ஒரு புகழ்பெற்ற பாடகர் இருக்காரே, அவரோட பாட்டு ஒண்ணு இந்த பாலகிருஷ்ணனின் வெண்ணைய் சம்பவத்தைச் சொல்லும். ' மே நஹீன் மாக்கன் காயோ' இதுக்கு 'நான் வெண்ணெய் தின்னவே இல்லை'ன்னு அர்த்தம். கேக்கக்கேக்கத் தெவிட்டாத பாடல்.


கண்ணன் குழந்தைகளின் கடவுள். குறும்பு நிறைஞ்ச அந்தக் குழந்தைப் பருவத்தை மீண்டும் அனுபவிக்க நமக்கெல்லாம் ஒரு வாய்ப்புக் கிடைச்சால் எவ்வளோ ஜோரா இருக்கும்?நடக்கிற காரியமா.........ஹூம். ஆனா, மானசீகமா அனுபவிச்சுப் பார்க்கலாம்தானே?


இன்னிக்குக் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. எல்லோரும் கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்தோடு ஒருநாள் இருந்து பார்க்கலாமா?


அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

Tuesday, August 15, 2006

பாரதம் என்றால்....

பாரதமென்னால் பாரின் நடுவில்
கேவலம் ஒருபிடி மண்ணல்ல
ஜனக்கோடிகள் நம்மே நாமாய் மாற்றிய
ஜென்ம க்ரஹமல்லோ ( பாரதம்)


விருந்நு வந்நவர் பரணம் பற்றிவீடே ஆக முடிச்சு
வீடு புதுக்கிப் பணியும் வரையில் விஸ்ரமம் அல்லனிமேல்
துடங்கிவச்சு நாமொரு கர்மம் துஷ்டிதுளும்பும் ஜீவித தர்மம்
ஸ்வந்த்ர பாரத விஸாலஹர்ம்யம் சுந்தரமாக்கும் நவதர்மம் ( பாரதம்)


கிராமம்தோறும் நம்முடெ பாதம்
க்ஷேமம் விதரி நடக்கெட்டே
கூரகள் தோறும் நம்முடெ கைத்திரி
கூரிருள் கீறி முறிக்கெட்டே

அடிபதறாதே ஜனக்கோடிகள் புதுப்
புலரியிலேய்க்குக் குதிக்கெட்டே
அலஸதயருதே நம்முடெ லக்ஷ்யம்
அரிகே அரிகே அரிகே ( பாரதம்)



மக்கள்ஸ், மேலே இருக்கற தேசபக்தி பாடல் மலையாள பாஷையில் இருக்கு. இந்தப் பாட்டு அநேகமா அமீரகத்துலே இருக்கற நம்மக்கள் கேட்டிருப்பாங்க. கலாபவன் நடத்துற உற்சவங்களில் ஆரம்பப்பாட்டு இதுவாத்தான் இருக்கும்.


இந்த 59வது சுதந்திர தினத்தில் உங்களுக்காக இந்தப் பாடலைத் தமிழில் அப்படியே எழுதி இருக்கேன்.எனக்குப் பிடிச்சப் பாடல்களில் இதுவும் ஒன்று.


அனைவருக்கும் எங்கள் அன்பான சுதந்திரதின நல்வாழ்த்து(க்)கள்.

Sunday, August 13, 2006

எவ்ரிடே மனிதர்கள் -13 சிந்தியா

அந்த ஒரு வாரத்துலேயே அஞ்சு தடவை ஃபோன் வந்துருச்சு இந்தியாவுலே இருந்து. எல்லாம் ஒரே விதமான சம்பாஷணைதான். ' அங்கே ---- இந்தத் தேதிக்கு வர்றோம். ஊர் நல்ல ஊர்தானே?'ன்னு. கூட இருந்து அவுங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறது அவுங்க புருஷந்தான். அவர் இங்கே வந்து 4 மாசம் இருந்துட்டு, இப்பப்போய்க் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு வர்றார். அவர் சொல்லி இருக்கமாட்டாரா, ஊர் நிலவரத்தைப் பற்றி?


திருப்பித்திருப்பிக் கேட்டுக்கிட்டு இருந்த கேள்விகளிலே தடுமாறி, 'அதெல்லாம் கவலைபடாதீங்க. ஏர்ப்போர்ட்டுக்கு வாரேன்'ன்னு 'நாக்கு ஸ்லிப்'புலே சொல்லிட்டேன்.


அவுங்க வீட்டுக்காரர் டெர்ரி, இங்கே வர்றதுக்கு முன்னாலே இந்தோனேசியாவுலே வேலை பார்த்துக்கிட்டு இருந்தார்.எங்க வீட்டுலெ இவர், எதோ கம்பெனி விஷயமா அங்கெ போனப்ப இவரைச் சந்திச்சு இருக்கார். அவரோட வேலை செய்யும் வகை இவருக்குப் பிடிச்சுப்போச்சாம். இங்கே இவருக்கு உதவியா ஒருத்தரைத் தேடிக்கிட்டு இருந்த சமயம்.இன்னும் ரெண்டு மாசத்துலே இந்தோனேசியாவிலே ஒப்பந்தம் முடியுதுன்னு தெரிஞ்சதும், இங்கே வேலைக்குக் கூப்புட்டாராம். அவரும் சரின்னு சம்மதிச்சு, வொர்க் பர்மிட்லே இங்கே வந்து சேர்ந்துட்டார்.


ரொம்ப நல்ல சிநேகிதமான மனுஷர். ரெண்டு தலைமுறைக்கு முன்னாலே கம்போடியாவுலே இருந்து இந்தியாவுக்குப் போய்செட்டிலான குடும்பம். பிறந்தது கல்கத்தாப் பக்கமுன்னாலும், எஞ்சிநீயரிங் படிச்சது எல்லாம் பெங்களூர்தானாம்.மனைவி சிந்தியா கோவாக்காரங்க. ரெண்டு பசங்க இருக்காங்களாம். இப்ப மூணாவது குழந்தை வயத்துலே.


குறிப்பிட்ட நாள் வந்துச்சு. சொல்லிட்டோமேன்னு ஏர்போர்ட்டுக்குப் போனோம். இவருக்கு, எதோ மீட்டிங் இருந்ததாம்.என்னாலே அதைத் தள்ளி வச்சுட்டு வந்த கடுப்புலே இருந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லேண்ட் ஆயிருச்சு. உள்ளெ இருந்து ஒவ்வொருத்தரா ஃபார்மாலிட்டி முடிஞ்சு வெளியே வர ஆரம்பிச்சாங்க. கவனமா அந்தக் கதவையே பார்த்துக்கிட்டு இருக்கேன். நேரம் போய்க்கிட்டு இருக்கு. இவுங்க ஆளையே காணொம். அப்புறம் அங்கே இருந்த அதிகாரி ஒருத்தரைக்கேட்டுகிட்டேன், உள்ளெ ஒரு இந்தியக் குடும்பம் நிக்குதான்னு பாருங்கன்னு. அவர் போய்ப் பார்த்துட்டு வந்து, எல்லாரும் போயாச்சு. அங்கெ யாருமெ இல்லைன்னுட்டார்.


இது என்னடா....? இந்த ஃப்ளைட்டுலேதானே வரேன்னு சொன்னாங்கன்னு யோசனையோட, இவரை ஆஃபீஸ்லே இறக்கிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கொஞ்ச நேரத்துலெ இவர் ஃபோன் அடிச்சார். 'அவுங்க வந்துட்டாங்களாம். சிந்தியாவுக்கு முடியாம, வீல்ச்சேர்லே இருந்ததாலே ப்ளைட் லேண்ட் ஆனதும் மொதல்லே க்ளியரன்ஸ் கொடுத்து வேற வழியா வெளியே அனுப்பிட்டாங்களாம். இப்ப நம்ம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க பார்.'


பத்து நிமிஷம் ஆச்சு. வீல்ச்சேர்லே இருக்காங்களா....அடடா.... கவலைப்பட ஆரம்பிக்கறதுக்குள்ளே டெர்ரி , நம்ம வெளிகேட்டுலே நுழையறார். பின்னாலேயே ஒரு துள்ளலோடு சிந்தியா( அவுங்களாத்தான் இருக்கணும்!) நடந்து வர்றாங்க!



வரவேற்று உக்காரவச்சுட்டு, உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டேன், பிள்ளைத்தாய்ச்சி ஆச்சே. அதெல்லாம் நல்லாத்தான் இருக்காங்களாம். அப்ப எதுக்கு வீல்சேர்? ஓஓஓஓ... அது ஒண்ணுமில்லை. கால்வலின்னு ஏர்ஹோஸ்டஸ் கிட்டே சொல்லி, ஏர்ப்போர்ட் வீல்ச்சேர்லே வந்தேன்!!!!!!!!!!!!!!!!



பாய்ஸ் இன்னும் ஊர்லேதான் இருக்காங்களாம். அவுங்களை இங்கே கொண்டு வரணுமுன்னா இன்னும் கொஞ்சம்சில நியமங்கள் இருக்காம். அதுக்கு எங்க இவர் உதவணுமுன்னு சொல்ல வந்தாங்களாம். கொஞ்ச நாளைக்கு கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லே அவுங்களைத் தங்க வைக்க ஏற்பாடு ஆச்சு. அப்புறம் இவர் பெர்சனலா உதவிசெஞ்சு, பசங்களும் வந்து சேர்ந்தாங்க. பெரியவனுக்கு 16 வயசு. அடுத்தவனுக்கு 14.


நம்ம வீட்டு ஏரியாவுலேயே வீடு பார்த்துக் குடிவந்துட்டாங்க. பசங்களையும், எங்க இவரே கம்பெனிக்குப் பக்கத்துலே இருக்கற பள்ளிக்கூடத்துலெ சேர்த்துவிட்டார். சிந்தியாவும் அவுங்க போற சர்ச்சு மூலம் நண்பர்களைச் சேர்த்துக்கிட்டாங்க.குழந்தையும் பிறந்தது. பொண் குழந்தை. ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்துட்டு வந்தோம்.


ரெண்டு நாள் கழிச்சு, நம்ம வீட்டுலே சில நண்பர்கள் குடும்பங்களுக்கு ஒரு விருந்து நடந்துக்கிட்டு இருந்தப்ப, திடீர்ன்னு சிந்தியாக் குடும்பம் வந்துட்டாங்க. ஆஸ்பத்திரியிலே இருந்து மொதநாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.அவுங்களையும் சாப்பிடச் சொன்னோம். 'நீங்க வெஜிடேரியன் சாப்பாடாச்சே. சிந்தியா ஒரு வேளைகூட நான் வெஜ் இல்லாமல் சாப்பிடமாட்டாங்க'ன்னு சொல்லிட்டு டெர்ரியும், பிள்ளைகளும் சாப்பிட்டாங்க. சிந்தியா என்ன நினைச்சாங்களொ என்னவோ, தானும் சாப்பிடறதாச் சொல்லிச் சாப்பிட்டாங்க. அவுங்க முதல்முதல்லெ ரசிச்ச வெஜிட்டேரியன் சாப்பாடு நம்ம வீட்டுதுன்னும், 'அந்த சாம்பார்' ரொம்பப் பிடிச்சிருச்சுன்னும், இனிமே நான் சாம்பார் வைக்கும் போதெல்லாம் அவுங்களுக்கும் கட்டாயமா அனுப்பி(??????) வைக்கணுமுன்னும் சொன்னாங்க.



சிந்தியாவோட அப்பா,அம்மா இன்னும் மத்த சொந்தமெல்லாம் கோவாலே இருந்தாங்க. அப்பான்னு இவுங்களுக்கு ரொம்பப் பிரியமாம். நல்லதுதானே? அவருக்கு, இல்லாத வியாதிகளே கிடையாதாம். நிலமை ரொம்ப மோசமாம்.அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாங்க. நானும் ஆறுதலாச் சில வார்த்தைகள் சொல்வேன்.


அடுத்த சில மாதங்களிலே வேற வீடு மாறப்போறோமுன்னு சொல்லி, அந்த வீட்டை எங்களை வந்து பார்க்கச் சொன்னாங்க.பழைய வீடுதான். பரவாயில்லாமல் இருந்தது. வாடகை வீடுதானே. நல்லாதான் இருக்கு. சொந்த வீடா வாங்கறதா இருந்தாத்தான் ரொம்பக் கவனிக்கணுமுன்னு சொன்னோம். அப்பத்தான் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. 'இந்தவீட்டை வாங்கறதாத்தான் இருக்கோம். வீட்டு ஓனர், இங்கே இமிக்ரேஷன்லெ வேலை செய்றாங்க. நாங்க இங்கே நிரந்தரக் குடியுரிமை வாங்கறதுக்கு உதவறேன்'னு சொல்லி இருக்காங்க.



'இங்கே இதுபோல ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாமே நேர்வழிதான். இது என்னடா இப்படிச் சொல்றாங்களெ'ன்னு நினைச்சேன். வாடகை என்னன்னு கேட்டாச் சொன்னது கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. 'நாங்க இந்த வாடகை மட்டும் கட்டிக்கிட்டு வருவோம். குடி உரிமை கிடைச்சு, வீட்டை வாங்கும்போது, இதுவரை கட்டுன வாடகையில் ஒரு பகுதியைத் திருப்பித் தரேன்னு சொல்லி இருக்காங்க'ளாம்.



அடிக்கடி எனக்குப் போன் பண்ணுவாங்க. எப்பக் கேட்டாலும் யாராவது ஒரு மகன் உடம்பு சரியில்லை,பள்ளிக்கூடம் போகலைன்னு சொல்வாங்க. அப்புறம் விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சது, சிந்தியாவுக்குத் தனியே வீட்டுலெ இருக்க பயமாம். அதனாலெ தினம் ஒரு பையன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பள்ளிக்கூடத்துக்கு மட்டம். ஏற்கெனவே பசங்க, வயசுக்கேத்த வகுப்பில்ல்லாம ச்சின்ன வகுப்பிலே படிக்குதுங்க. இதுலே இப்படிச் செஞ்சா எப்படி? அதுதான் கைக்குழந்தை இருக்கே. அதைப் பார்த்துக்கிட்டு இருந்தாபொழுது போயிருமே. அப்புறம் பயப்பட எங்கெ நேரமுன்னு சொல்லிப் பார்த்தேன்.



திடீர்ன்னு பசங்களை வேற ஒரு ப்ரைவேட் பள்ளிக்கூடத்துலே சேர்த்துட்டோமுன்னு சொன்னாங்க. அங்கே பள்ளிக்கூடஃபீஸ் ரொம்ப ஜாஸ்த்தியாச்சேன்னு சொன்னதுக்கு, 'அது பரவாயில்லை. முந்தி இருந்த பள்ளிக்கூடத்துலே நல்லா சொல்லிக் கொடுக்கறதில்லை'.


அடிக்கடி மட்டம் போட்டதாலே, காரணம் கேட்டுப் பள்ளிக்கூடம் கடிதம் போட்டுருந்தது அப்புறம்தான் தெரியவந்துச்சு.எப்ப வீட்டுக்குப் போனாலும் பசங்க வீட்டுவேலை, சமையல், பாத்திரம் தேய்க்கறது, குழந்தையைப் பார்த்துக்கறதுன்னு பிஸியா இருப்பாங்க. அப்பப் படிப்பு.........? டெர்ரியும் சமையல் செய்யறதுலே மும்மரமா இருப்பார்.



என்கிட்டே ஒரு நாள் சிந்தியா , ஏன் அப்படிக் கேட்டாங்கன்னு புரியலை.

"இங்கே பேங்குலே கடன் வாங்கிட்டுக் கட்டலைன்னா என்ன ஆகும்?"

" எதுக்குக் கடன் வாங்கணும்?" ( இது நான்)

" இல்லே. ச்சும்மாதான். தருவாங்களா?"

" அது தெரியாது. ஆனா யாராவது பெர்ஸனல் ஷூரிட்டி தரணும். இல்லைன்னா வீடு வாங்கக் கடன் கிடைக்கும்."

" அந்தக் கடனைத் திருப்பிக் கட்டலைன்னா?"

" வீட்டோட பத்திரம் பேங்குகிட்டேதான் இருக்கும். பணம் கட்டலைன்னா, வீட்டை பேங்க் வித்துட்டு அவுங்களுக்குச் சேரவேண்டிய தொகையை எடுத்துக்குவாங்க"

" அப்ப பர்சனல் லோன், ஷூரிட்டி இல்லாமக் கிடைக்காதா?"

" ஆமாம். இப்ப எதுக்கு இதையெல்லாம் கேக்கறீங்க? கடன்னு வாங்குனாத் திருப்பிக் கட்டத்தானே வேணும்.அதெப்படிக் கட்டாம இருக்கலாம்?"

சிந்தியாவும், டெர்ரியும் முந்தி அமீரகத்துலே இருந்திருக்காங்க. அங்கே சிலர், இப்படி பேங்கிலே பெரிய தொகையைக் கடனா வாங்கிட்டு, ஊருக்குப் போயிட்டுத் திரும்ப வர்றதில்லையாம். (இது எவ்வளவு தூரம் உண்மைன்னு அங்கே இருக்கும் வலை நண்பர்கள்தான் சொல்லணும்) அப்ப அவுங்களுக்கு ஷூரிட்டி போட்டவங்களுக்கு எவ்வளோ கஷ்டம்? எனக்கென்னமோ இது கொஞ்சம் மன உறுத்தலாத்தான் இருந்துச்சு.


இங்கே குடியுரிமை கேட்டு விண்ணப்பம் போட்டாங்க. மருத்துவப் பரிசோதனையிலே டெர்ரி தேறலை. இதயத்துடிப்பு சரியில்லைன்னு அவருக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்காங்க. வச்சுப் பல வருசங்கள் ஆச்சாம். இந்தியாவுலே இருந்தப்ப இது நடந்ததாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் சமயத்திலும், அதில் கேட்டிருந்த மருத்துவ/உடல்நிலை பற்றிய கேள்விங்க இருக்கு பாருங்க அதுலெ இதைச் சொல்லாம விட்டிருந்தார். இந்த விவரங்கள் எல்லாம் கம்பெனிக்கும் இப்பத்தான் தெரியவந்துச்சு.


இந்தக் காரணங்களாலே இங்கே மெடிகல் இன்சூரன்ஸும் கொடுக்க மறுத்துட்டாங்க. இதுக்கிடையில் டெர்ரிக்குக் கொஞ்சம் சுகமில்லாமப்போய் ஹாஸ்பிட்டலிலே அட்மிட் ஆகும்படி ஆச்சு. வீட்டுலே பசங்க இருந்து, குழந்தையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நாங்க இவரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு, அங்கிருந்து வீடுவந்து, பிள்ளைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொண்டு போனோம்.


குழந்தை அழுக்காக, அழுதுகிட்டே இருந்துச்சு. எனக்குப் பார்த்தவுடனெ மனசுக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு.கண்ணுலே தண்ணியே வந்துருச்சு. தூக்குனவுடனே தாவிக்கிட்டு வருது. பசங்களும் மாறிமாறித் தூக்கி வச்சுக்கிட்டு இருந்துட்டு,ரொம்பக் களைப்பாவும் பசியாவும் இருந்தாங்க.


மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டாங்க. இங்கே குடியுரிமை கிடைக்காதுன்னு தெரிஞ்சதும், என்ன செய்யலாமுன்னு யோசனை. ஒண்ணும் செய்ய முடியாதுன்னாலும், இப்ப இருக்கற வொர்க் பர்மிட் முடியும்வரை வேலை செய்யலாம். அது முடிஞ்சதும் இந்தியாவுக்குத் திரும்பப் போகணும்.
இங்கே கல்வியாண்டுன்றது ஜனவரிதான் ஆரம்பம். அதனாலே ஏப்ரலில் முதல் டெர்ம் வரை பிள்ளைங்க படிக்கட்டும்.ஊருக்குப் போயிட்டா, அங்கே ஜூனில் தானே பள்ளிக்கூடம். அங்கே தொடர்ந்து படிக்கலாமேன்னு சொன்னேன்.இங்கே தனியார் பள்ளிக்கூடத்துலே இருந்து முதல் டெர்ம்க்கு உள்ள காசை அடைக்கணுமுன்னு கடிதம் வந்ததும்,பசங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிறுத்திட்டாங்க அவுங்க அம்மா.



வீட்டு வாடகையிலே அதிகப்படிக் கொடுத்த காசு திரும்பிக் கிடைக்காது. அதுதான், வீட்டை வாங்கினா தரேன்னு சொல்லி இருந்தாங்களே. சீக்கிரமா ஊருக்குக் கிளம்பிப் போகப் போறோமுன்னு சொன்னாங்க. இன்னும் ரெண்டு மாசம்வரை இருக்கலாமேன்னு சொன்னதுக்கு, அப்பாவின் நிலை கவலைக்கிடமா இருக்குன்னும் சொன்னாங்க.


வீட்டைக் காலி செய்யப் போறொம். அப்ப ரெண்டு மாசத்துக்கு எங்களுக்குக் கம்பெனி கெஸ்ட் ஹவுஸைக் கொடுக்கணுமுன்னு எங்க இவர்கிட்டே கேட்டாங்க. இங்கே கம்பெனி பாலிஸி வேற மாதிரி இருந்தது. அது என்னன்னா, இங்கே வேலைக்கு வர்றாங்க பாருங்க, அவுங்க வீடு பார்த்து செட்டில் ஆகும்வரை கூடி வந்தா ஒரு மாசம் தங்கிக்கலாம். விட்டுப் போறவங்களுக்கு தங்கிக்க முடியாது.


எங்க இவர் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், டெர்ரி விளக்கியும் அதை ஏத்துக்க சிந்தியாவாலே முடியலை.இங்கே எல்லாருக்கும் ஒரே விதி தான். நாளைக்கு நாங்களே கேட்டாலும் கிடைக்காது. இத்தனைக்கும் மேலிடத்திலும் பரிந்துரை செஞ்சு பார்த்தார் எங்க இவர். ஒண்ணும் நடக்கலை.


இந்த நாடே ரொம்ப மோசம். இங்கே வெளியிலும் சரி, கம்பெனியிலும் சரி 'எவ்ரி ஒன் ஈஸ் ஈக்வலி பேட்'ன்றது சிந்தியாவின் கருத்தா இருந்துச்சு. அவுங்களுக்கு எங்க எல்லார் மேலேயும் ஒரே கோவம்.


அப்படி இப்படின்னு அடுத்தவாரம் கிளம்பறோமுன்னு சொன்னாங்க. வீட்டைக் காலி செஞ்சாச்சு. அதுவரை எங்கே தங்கி இருக்கப் போறாங்கன்னு கேட்டேன். ஆஸ்பத்திரியிலே இருந்தப்ப, ஒரு டாக்டர் நட்பானார். அவர் வீட்டுலே தங்கறோமுன்னு சொன்னாங்க. டெர்ரி இருக்கும் நிலைமையிலே டாக்டர் வீடுன்னா நல்லதுதான். எதாவதுன்னா உடனடி உதவி
கிடைக்குமில்லையா?


அவுங்களுக்கு ஒரு நாள் பிரிவு உபசாரமா ஒரு பார்ட்டிக்குக் கம்பெனி ஏற்பாடு செஞ்சது. அதுக்கு அவுங்க போகவே இல்லையாம். கோபத்தைக் காமிக்கறது இப்படியாம். இவுங்க விண்ணப்பத்துலே செஞ்ச குழறுபடிதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறதை ஒப்புக்கவே மாட்டேன்னு இருந்தா எப்படி?


என்னிக்குக் கிளம்புறாங்கன்னு கேட்டதுக்கு தேதி சரியாக நினைவில்லை. இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு சிந்தியா சொன்னாங்க. அநேகமா திங்கள் இல்லைன்னா புதன். கன்ஃபர்ம் இன்னுமாகலையாம்.


நம்ம வீட்டுலே ஒரு நாள் சாப்பிடக் கூப்பிடலாமுன்னு இருந்தோம். வெளியே எங்கியாவது கொண்டு போகலாமுன்னு நினைச்சேன். அவுங்ககிட்டே கேட்டு, அவுங்க இஷ்டப்பட்ட இந்திய உணவகத்துலேயே குறிப்பிட்ட நாளில் இரவு டின்னருக்கு ஏற்பாடு செஞ்சோம்.


மாலை 7 மணிக்கு ரெஸ்டாரண்டுலே சந்திக்கலாமுன்னு ஏற்பாடு. நாங்க, அவுங்களுக்காக 7 முதல் அங்கே கார்த்துக்கிட்டு இருக்கோம். என் மகளுக்கோ பொறுமை போய்க்கிட்டு இருக்கு. இவுங்க ஆளையே காணோம். ஆர்டர் எடுக்கறவர் பத்துதடவை வந்து கேட்டுட்டார். ஊஹூம்...... இன்னும் பத்து நிமிஷம் பார்த்துட்டு நாம் சாப்பிடலாமுன்னு இருந்தோம்.மணி ஏறக்குறைய 8 ஆகப்போகுது. நம்ம கைத்தொலைப் பேசியில் கூப்பிடலாமுன்னா, அவுங்க கிட்டே செல் கிடையாது.அந்த டாக்டர் வீட்டு போன் நம்பரும் நமக்குத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் பேஜாரா இருந்துச்சு. அப்பதான் எங்கஇவர் சொல்றார், கம்பெனி கொடுத்த பார்ட்டிக்கு இவுங்க வரவே இல்லைன்னு(-:



எட்டுமணி போல வந்து சேர்ந்தாங்க. கொஞ்சம் நிம்மதி ஆச்சு. அப்பாவுக்கு நிலமை மோசமாயிருச்சு. அதனால் ஊருக்குப் போன் செஞ்சு பேசுனதுலே நேரமாயிருச்சுன்னும் சொன்னாங்க. மறுநாள் வெள்ளிக்கிழமை. திங்கள் கிளம்பறாங்க. ரெண்டு நாளில் ஒண்ணும் ஆகாதுன்னு ஆறுதல் சொல்றதைத் தவிர வேற என்ன செய்ய முடியும், சொல்லுங்க.


இங்கெல்லாம் ரெஸ்டாரண்ட் புக்கிங் ரெண்டு மணி நேரத்துக்குதான். இவுங்க வந்ததே லேட்டுன்றதாலே அதுக்கப்புறம் ஆர்டர் செஞ்சு, தயாரிச்சு வந்து சாப்பிட நேரம் பத்து மணி ஆயிருச்சு. ஓனர் நமக்குத் தெரிஞ்சவர்ன்றதாலே கொஞ்சம் கேட்டுக்கிட்டோம். மறுநாள்தான் கம்பெனியில் டெர்ரிக்குக் கடைசி நாள். வேலையில் சந்திக்கலாமுன்னு எங்க இவர் சொன்னார்.


மறுநாள் அதிகாலையில் சிந்தியா கிட்டே இருந்து ஃபோன். 'ரொம்ப கெட்ட நியூஸ்'ன்னு சொன்னாங்க. அவுங்க அப்பாவுக்குத்தான் எதோ ஆயிருச்சுன்னு நான் புரிஞ்சுக்கிட்டு, மேற்கொண்டு ஒண்ணும் கேக்காம, இப்பவே கிளம்பி உங்களைப் பார்க்க வர்றோம். அந்த டாக்டர் வீட்டு விலாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்.


'பரவாயில்லை,வரவேணாம். உடனே கிளம்ப எதாவது ஏற்பாடு செய்யணும். நான் ஏர்லைன்ஸ் கிட்டே கேட்டுருக்கேன். அநேகமா இன்னிக்குப் பகல் ப்ளைட்டுலெ இடம் கிடைச்சா நல்லது. எதுக்கும் மேற்கொண்டு தகவல் கிடைச்சா உடனே சொல்றேன்'னு சொன்னாங்க.


எங்க இவரும், டெர்ரி கிட்டே, 'கடைசி நாள் வேலைக்கு வரலைன்னாலும் பரவாயில்லை. நான் சொல்லிக்கறேன். நீங்க டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க'ன்னார். அதே போல இவர் கம்பெனியில் போய், இந்த மாதிரி டெர்ரியின் மாமனார் இறந்து போனதாலே குழப்பமா இருக்கார். இன்னிக்கு வேலைக்கு வரலைன்னா பரவாயில்லைன்னு அறிவிச்சுட்டார். அவர் பார்ட்டிக்குப் போகாததாலே அவருக்குக் கொடுக்க வாங்கி வச்சிருந்த அன்பளிப்பை அன்னிக்குக் கொடுக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு இருந்துச்சாம்.


ஒம்பது மணி போல மறுபடி சிந்தியாவிடமிருந்து போன் வந்தது, 'பகல் ஒரு மணி ஃப்ளைட்டில் இடம் கிடைச்சிருச்சு'ன்னு. எத்தனை மணிக்கு அவுங்க ஏர்ப்போர்ட் போறாங்கன்னு கேட்டதும், 11 மணிக்கு அங்கே இருப்போம்'ன்னு சொன்னாங்க.நாங்க அந்த சமயத்துக்கு அங்கே வர்ரோமுன்னு சொல்லிட்டு நானும், எங்க இவரைப் போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். குழந்தைக்கும் ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சிருந்தேன்.


பதினோரு மணிக்கு ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்தோம். செக்கின் கவுண்ட்டர் கூடத் திறக்கலை. இவுங்களைக் காணோம். குடும்பத்துலே யாராவது கண்ணுலே படமாட்டாங்களா? அவ்வளோ கூட்டமா இங்கே இருக்கு? ப்ளைட் ஒரு மணிக்குக் கிளம்பிப் போயாச்சு. கடைசி வரை இவங்களைக் காணோம்.


வீட்டுக்குத் திரும்பி வந்து,சாப்பிட்டு விட்டு இவர் வேலைக்குப் போய்விட்டார். மூணு மணியானப்ப, ஒரு தோழி வந்தாங்க.அவுங்களுக்கும் சிந்தியாவைத் தெரியும் என்றதாலே, விவரத்தைச் சொன்னேன். அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம்.


எதனாலே?


காலையில் ஒம்போதரைக்குத் தோழி ஏர்ப்போர்ட் போயிருக்காங்க, சிந்தியா குடும்பத்தை வழி அனுப்ப.


"அந்த நேரத்துலெ ஏது ஃப்ளைட்?"


"இங்கிருந்து ஆக்லாந்து நகருக்குப்போய், அங்கே இருந்து இந்தியா போறாங்க."


" எமர்ஜென்ஸி கோட்டாவுலே பகல் ஃப்ளைட்டுலே இடம் கிடைச்சதுன்னு சொன்னாங்களே!"

" என்ன எமர்ஜென்ஸி? "

" அவுங்க அப்பா இறந்துட்டாருன்னு....."

" இல்லையே. யார் சொன்னா? நேத்து சாயங்காலம் நம்ம வீட்டுலே இருந்துதானே ஃபோன்லே அப்பாகிட்டே பேசுனாங்க. அதுக்கப்புறம் டிவியெல்லாம் பார்த்துட்டு எட்டுமணி போலத்தான் கிளம்பிப் போனாங்க."


" இன்னிக்குக் காலையிலெ 6 மணிக்கு 'கெட்ட செய்தி'ன்னு போனில் சொன்னாங்களே"


" ஏர்ப்போர்ட்டுலே பார்த்தப்ப ஒண்ணும் சொல்லலையே. சந்தோஷமாத்தானே இருந்தாங்க எல்லாரும்"



"திங்கள் கிழமை போக வேண்டியது, இப்படி ஆனதுனாலே ஏர்லைன்ஸ்லே கேக்கப் போறேன்னுசொன்னாங்களே. 5 டிக்கெட் கடைசி நேரத்துலே கன்ஃபர்ம் ஆகறது கஷ்டம்தானே?"


" திங்கக்கிழமையா? எப்படி? இன்னிக்குத்தானே அவுங்க போறதாப் ப்ளான். எல்லா டிக்கெட்டும் கன்ஃபர்ம்டு ஆயிருச்சே போனவாரமே "


தோழி போனவுடன், இவருக்குத் தகவலைச் சொன்னேன். இவரும் எனக்கு ஒரு புது செய்தி சொன்னார்.


டெர்ரி, தன்னுடைய கைக்கடிகாரத்தை பாத்ரூமில் மறந்து வச்சுட்டுப் போயிட்டதாகச் சொல்லி, கொண்டு வந்து கொடுத்தாராம், கம்பெனியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி. அவரோட வீட்டில்தான் ஒரு வாரம் தங்கி இருந்தாங்களாம்.


அப்ப டாக்டர்.....? எந்த டாக்டர்? ஏது டாக்டர்? அப்படி யாரும் இல்லையே!!!!!!!!!!


ஏன் சிந்தியா ஏன்? எதுக்காக இத்தனை பொய்?


பின் குறிப்பு: இந்தியா போன ரெண்டு மாசத்தில் டெர்ரி இறந்துட்டார். பிள்ளைகள் பள்ளிக்கூடம்போகலை. எதோ தொழில் பட்டரையில் வேலை செய்கிறார்களாம். சிந்தியாவுக்கு மறுபடி இங்கே வரணுமாம். இங்கே யாராவது வெள்ளைக்காரரை மணமுடித்து அவர் மூலம் வர முயற்சி செய்கிறார்களாம். எல்லாம் தோழி சொன்னதுதான்.



இப்போது கானடா நாட்டுலே குடி உரிமை வாங்கிய கோவாக்காரர் ஒருத்தரைக் கல்யாணம் முடிச்சு,அங்கே போய் இருக்க ஏற்பாடு நடக்குதாம். இங்கே போலீஸ் க்ளியரன்ஸ் கிடைக்க நாங்க உதவி செய்யணுமுன்னு போனமாசம் சிந்தியா ஃபோனில் கூப்புட்டுச் சொன்னாங்க. இங்கே எல்லாமே நேர்வழிதான். நாங்க என்ன செய்ய முடியும்?


சிந்தியாவை நினைச்சால் மனசுலே எனக்கு ஆயாசமாக இருக்கும். எதுக்காக இத்தனை பொய் சிந்தியா?
----------------

அடுத்தவாரம்: காமா


நன்றி: தமிழோவியம்

Thursday, August 10, 2006

ரெடிமேட் பகுதி 11

புதுத்தைய்யல் மெஷீனைப் பார்க்கப் பார்க்க பரவசமா இருக்கு. நாமும் கொஞ்சம் தைச்சுப் பார்க்கலாமுன்னு துணியைத் தேடறேன். ஒண்ணும் வாகா இல்லை. ஒரு கைகுட்டையை எடுத்து வச்சுக்கிட்டு மெஷீனை ஓட்டுனேன். தைய்க்குதுதான். ஆனா கொஞ்சம் டைட்டா இருக்கோ?


மெஷீனை கொஞ்ச நேரம் ஆராய்ச்சி செஞ்சதுலே நூல் ஒரு இடத்துலே ரெண்டு தகடுக்குள்ளே சுத்திட்டு, அப்புறம் அங்கிருந்து இறங்கி ஊசிக்கு வருது. ஆஹா..... இந்தத் தகடுதான் நூலை இப்படி இழுக்குது. அதை எடுத்துட்டா சுலபமா ஓடும். எடுத்துட்டேன். அனாவசியமா(!) அதுக்குள்ளே ஏன் நூல் போய் வரணும்?



இப்பத் தைச்சுப் பார்த்தால் நல்ல சுலபமான ஓட்டம். தைச்ச துணியை வெளியே எடுத்துத் திருப்பிப் பார்த்தேன்.அடுத்தபக்கமும் சீரா வரணுமே. கொசகொசன்னு நூலுங்க அடையாப் பிடிச்சிருக்கு. ரொம்ப நேரம் இதையும் அதையும் திருப்பி இன்னும் கொஞ்சம் நேரத்தையும் நூலையும் பாழாக்கிட்டு மெஷீன் சரியில்லைன்ற முடிவுக்கு(?) வந்தேன்.

ஏமாத்திட்டான்............நல்ல ப்ராண்டா வாங்கி இருக்கணும்.


ஆமாம். இன்ஸ்ட்ரக்ஷன் புத்தகத்தைப் பார்க்கலியான்னு கேக்கறீங்களா? அப்படியெல்லாம் ஒண்ணும் தரலையே.


மறுநாள் இவர் வேலைக்குப் போறப்ப, மெஷீன் கடைக்கு ஃபோன் போட்டு 'நல்லாத் தைக்கலை'ன்னு சொல்லச் சொன்னேன். வீட்டுலே அப்பெல்லாம் போன் வச்சுக்கறது பெரிய ஆடம்பரம்.


அன்னிக்கு மத்தியானமே ஆள் வந்துச்சு. அதே பையந்தான். விஷயத்தைச் சொல்லி, நான் தைச்சு(?) வச்சதைக் காமிச்சேன்:-))))


டென்ஷனிலே இருந்து நூலை ஏன் வெளியே எடுத்தீங்கன்னு கேட்டதும் நான் முழிச்சேன். அப்புறம் 'அது ரொம்படைட்டா இழுக்குது'ன்னதும் அதை எப்படி லூஸ் செய்யணுமுன்னு காமிச்சிட்டு, ( அட ! இப்படி ஒரு வழி இருக்கா?)நான் கன்னாபின்னான்னு திருப்பி வச்சிருந்த எல்லாத்தையும் மறுபடி சரியாக்கிட்டு, அதே கைகுட்டையிலே மறுபடி என்னையே தைக்கச் சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. அட! சரியாத்தான் தைக்குது!


இப்பத் தைக்கத் தெரிஞ்சுபோச்சு. தைக்கத்தான் துணி இல்லை. சாயந்திரம் இவர் வந்ததும் கடைக்குக்( அதே எம்.ஜி. ரோடு)கிளம்பினோம். இருக்கறதுலேயே மலிவா ஒரு துணியை ஒரே ஒரு மீட்டர் வாங்கியாச்சு. அதை வெட்டறதுக்கு?முந்தி ஒரு கதை (பேரு ஞாபகம் இல்லை)யிலே ஒரு அம்மா அருவாமணையிலே துணிகளை வெட்டிக் கையாலே ஊசிநூல் வச்சுத் தச்சு ஜாக்கெட் போட்டுப்பாங்க. அப்படியே நாமும் செஞ்சிரணுமோ?ஹாஹா....


யானை வாங்குனா அங்குசமும் வாங்கணுமில்லே?

இன்னொரு கடையிலே சுமாரான விலையில் ஒரு கத்தரிக்கோல், நூல்கண்டுன்னு கொஞ்சம் வாங்கினோம்.


இப்ப தினமும் டைம்பாஸ் துணி தைக்கறதுன்னு ஆகிப்போச்சு. அந்த ஒரு மீட்டர் துணியைத் துண்டுதுண்டா வெட்டி, ச்சும்மா நீளமா தைக்கறதுதான். நேர் தைய்யல். எங்கியாவது போய் தைக்கப் படிக்கணுமே. இங்கே எதாவது தைய்யல் வகுப்பு இருக்கா? விசாரிக்கணும். இதுக்குள்ளே நம்ம அக்கம்பக்கத்து ஆட்கள் கிழிஞ்சதைத் தைக்க நம்ம வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. நம்ம மெஷீன் ஆச்சே. நாம்தானே தைக்கணும்?


கிழிசல் தைக்கறதுலே எக்ஸ்பெர்ட்டா ஆனேன். சமூக சேவை.
நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா ஒரு வாடகைவீடு கிடைக்கறாப்புலே இருந்துச்சு. எங்க இவர் ஒரு சைக்கிளை மாச வாடகைக்கு எடுத்திருந்தார்னு சொன்னேனில்லை. ( ரெடிமேட் 6)அதுக்குப் பணம் கட்டப் போனப்ப, பக்கத்து வீட்டு மாடிகாலியாகப் போகுது. உங்களுக்கு வேணுமான்னு கேட்டாராம். இவரும் வீட்டைப் போய்ப் பார்த்துருக்கார். நல்ல(?)வீடு.வீட்டுக்காரர்கிட்டே பேசினாராம். அவருக்கும் சம்மதம்.


வீடு மாறிட்டோம். இப்பச் சாமான்கள் நிஜமாவே கூடிப்போச்சு. முந்தி மாதிரி ரெண்டு மணி நேரத்துலே மூட்டைக்கட்ட முடியலை. இதுக்கிடையிலே நமக்கு ஒரு நாய்க்குட்டியும் வந்துருச்சு. எல்லாருமா அங்கே போய்ச் சேர்ந்தோம்.அப்பத்தான் நான் அந்த வீட்டை முதல்முதலாப் பார்க்கறேன். மாடி வீடு. ரெண்டு ரூம். உண்மையாவே பெரூசா ரெண்டு ரூம். வெளியே வெராந்தாக் கடைசியில் ஒரு பாத்ரூம். முந்தி இருந்த வீட்டைப் போல டபுள் சைஸ்.


கோர்புரி பஜார்லே வீடு. முன்னாலும் பின்னாலும் வெராந்தா வச்ச மாடிவீடு. ஒரு பக்கம் மெயின் ரோடு. அதைத்தொட்டாப்புலே மிலிட்டரி கிரவுண்டு. கூர்க்கா ரெஜிமெண்ட். அடுத்தபக்கம் கடைத் தெரு. ரெண்டு பக்கமும் வரிசையாக்கடைங்க. அநேகமா எல்லாக் கடைகளுக்கு மேலேயும் வீடுங்க. கீழேயும் தெருவைப் பார்த்து இருக்கற முன்வரிசையில் மட்டும் கடைகள். அதுக்குப் பின்னே இருக்கற அறைகளில் அநேகமா அந்தந்தக் கடைக்காரர்களின் குடித்தனம். ஒரு நாலைஞ்சு கடைகளிலே மாத்திரம், பின்னம்பக்கம் குடி இருக்கறவங்க அந்தக் கடைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவங்க. நம்ம பால்கனியிலே இருந்து பார்த்தா எதிர்வரிசைக் கடைகளும், மாடியில் இருக்கும் வீடுகளும் தெரியும். அதுலே நமக்கு நேர் எதிரா இருந்த வீட்டுலே ஒரு கோவானி மிஸ் இருந்தாங்க.


நாம அங்கே போன சில நாளுலேயே, அவுங்களோடு பழக்கமாயிருச்சு. நம்ம வீட்டுக்குக் கீழே வீட்டுலே இருக்கற அம்மாவோடு அவுங்களுக்கு நல்ல பழக்கம். ஒரே பையன். 15 வயசு இருக்கும். அவுங்க வீட்டுக்காரர் எதோ அரபுநாட்டுலே வேலையா இருந்தார். அவுங்க நல்லா தைப்பாங்களாம். சரி. நல்லதாப் போச்சு. இவுங்க தான் இனி நமக்கு டீச்சர். தைய்யல் டீச்சர் கிடைச்சாச்சு.

Monday, August 07, 2006

ரெடிமேட் பகுதி 10

மக்கள்ஸ் மாப்பு......... ப்ளீஸ்.

எடுத்த வேலையை முடிச்சுறலாமுன்னு நினைச்சால் எதாவது தடங்கல் வந்துக்கிட்டே இருக்கேன்னு,கொஞ்சம் முனைப்பா இந்தத் தொடரையாவது எழுதிரலாமுன்னு மறுபடி ஆரம்பிச்சிருக்கேன்,வழக்கம்போல ஆதரவு கிடைக்கும் என்ற மகா நம்பிக்கையுடன்.


மறந்து போனவங்களுக்காகவும், புதுசா வந்து இருக்கறவங்களுக்காகவும் இதோ முன் பதிவுகள், 1 முதல் 9 வரை.


ரெடிமேட் 1

ரெடிமேட் 2

ரெடிமேட் 3

ரெடிமேட் 4

ரெடிமேட் 5

ரெடிமேட் 6

ரெடிமேட் 7

ரெடிமேட் 8

ரெடிமேட் 9


ரெடிமேட் பகுதி 10

ஊருக்கும் போகணும். நம்மகிட்டே இருக்கற நாலு பாத்திர பண்டங்களையும் காப்பாத்திக்கணும். எல்லாத்துக்கும் மேலா, உயிரோடு இருக்கணும். ஊஹூம்.... இந்த வீடு சரிப்படாது.வேட்டையை மறுபடி ஆரம்பிச்சோம். எல்லாம் வீடு வேட்டைதான்.


அலைஞ்சதுலே பலன் கிடைச்சது. ஹடப்ஸாரை அடுத்து இருக்கற சஸானே நகர்லே ஒரு வீடு இருக்கு. முக்கியமா அக்கம்பக்கத்துலே எங்க இவரோட கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் குடும்பத்தோடு இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா அதிமுக்கியமான விஷயம் ஒண்ணும் இருக்கு. எல்லாரும் தென்னிந்தியர்கள். அதுவும் கேரளர்கள்.


போய்ப் பார்த்தோம். வீடு(?) ரொம்பச் சின்னது. ஒரு பெரிய அறையை ரெண்டாத் தடுத்திருக்கு. டூ ரூம் ஹவுஸ்!அறை என்ன பெரிய அறை? பன்னெண்டுக்கு பதினாறு அடி இருக்கும் ரூம், ரெண்டாக் கிடக்கு. முன்னாலெ இருக்கறது ஹால் & டைனிங் & பெட்ரூம் & ஐய்யோ இப்படிச் சொல்லிக்கிட்டே போகவேண்டியதுதான். அடுத்து இருக்கறது அடுக்களை & பாத்ரூம். ச்சின்னதா கட்டைச்சுவர் எழுப்பி ஒரு மூணுக்கு மூணு இடம். குளியலறை! மத்ததுக்கு வெளியே தனியா ஒரு கட்டிடம், நாலு கழிவறைகளோடு.


நல்லாத்தான் இல்லை. ஆனா....... ஊருக்குப் போகணும். கட்டாயம் போகணும். போயே ஆகணும்.மனசுலே ஒரே வெறி.


சரின்னு அங்கே வீடு மாறியாச்சு. வாடகைக்கு எடுத்திருந்த சாப்பாட்டு மேஜையைத்தான் வச்சுக்க முடியாது. அது ரொம்பப் பெருசு வேற. இடம் கிடையாதே. அதை மொதல்லே திருப்பிக் கொடுத்தோம். இங்கே வந்து சாமான்களைஒதுக்கி வச்சு, அக்கம்பக்கம் நட்பாக ஒரே நாள்தான் ஆச்சு. நமக்கு பாஷை ஒரு பிரச்சனை இல்லையே!


ரெண்டு பக்கமும் வரிசையா வீடுங்க, ஒண்ணோடஒண்ணுதோளில் உராய்ஞ்சுக்கிட்டு. எதிர்வரிசையில் மூன்று குடும்பமும், எங்க வரிசையில் 3 குடும்பமும் தவிர மத்தவங்க எல்லாம் மராத்திக்காரங்க. ரொம்பச் சாதாரண மக்கள். சேட்டன்மாரெல்லாம் எங்க இவர் வேலைசெய்யும் கம்பெனியில் மெஷீன் ஆப்பரேட்டர்கள். கருவேப்பிலைக் கொத்துப்போல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு எங்க இவர் மட்டும்தான் எஞ்சிநீயர். அதனாலே நமக்குஏகப்பட்ட மருவாதை.


தினம் பத்து மணிக்கப்புறம் மாதர்சங்கம் கூடிரும் நம்ம வீட்டுலே. தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகள் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருந்த காலக்கட்டம்.


ஊருக்குப் புறப்பட ஆயுத்தம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. சில புதுப் புடவைகளும் எடுத்தாச்சு. அதுக்கு ப்ளவுஸ் தைக்கணுமே. நம்ம வீட்டுக்குப் பின்னால் இருந்த இன்னொரு வரிசை வீட்டிலே ஒருத்தர் தைப்பாங்களாம். அங்கேயே கொடுத்துட்டா சுலபமுன்னு நினைச்சு அங்கேயே கொடுத்தேன். தைச்சும் கொடுத்தாங்க. என்னத்தைச் சொல்ல?கிராமத்து ஸ்டைல்!

சரியில்லேன்னு சொல்லி, அதை பிரிச்சு மறுபடி தைச்சு எப்படியோ வந்துச்சு. வேற வாங்கிக்க சக்தியும் இல்லை, நேரமும் இல்லை. அதையே ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செஞ்சு போட்டுக்கிட்டு ஊருக்குப் போய்வந்தோம்.


ஒரு நாள் எம் ஜி ரோடுலே உல்லாசமா(!)நடந்துக்கிட்டு இருந்தோம். ஏன் உல்லாசம் இருக்காது? அதான் போனஸ் கிடைச்சிருந்ததே! நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத கணத்துலே, 'உனக்கு என்ன வேணும்? வாங்கித்தரேன்'னு சொன்னார். என்ன வேணும்? கேக்கத்தெரியலை. ஒருவேளை ஷாக்குலே இருந்துருப்பேன். அப்படியே நின்னுட்டேன்.அந்தக் கணம் நடந்துக்கிட்டு இருந்த இடம் ஒரு தைய்யல் மெஷீன் விக்கற கடைக்கு வெளியே.


' எனக்கு ஒரு தைய்யல் மெஷீன் வாங்கித் தாங்க'ன்னதும் மறு பேச்சுப் பேசாம அந்தக் கடைக்குள்ளே நுழைஞ்சுட்டார். 'நீலம் தைய்யல் மெஷீன்' விலை 600 ரூபாய். வாங்கியாச்சு. மறுநாள் கடைக்காரப் பையனே கொண்டு வந்து டெலிவரி செஞ்சுருவான்.


'இன்னும் வேற என்ன வேணும்?'னு அடுத்த ஷாக்! எவ்வளவு போனஸ் வந்தது? கேக்கலையே!


அங்கே பக்கத்துலே வீட்டுச் சாமான்கள் விக்கற இன்னொரு கடை இருந்தது. அங்கே போய்ப் பார்க்கலாமுன்னு போனோம். நல்ல இரும்பு பீரோ, காத்ரெஜ் கிடையாது. ஆனா அதே போல, லோக்கலி மேட். ஆளுயரக் கண்ணாடிஒரு கதவுலே இருக்கு. கதவுக்கு உள்பக்கம் வளையல்கள் வச்சுக்க ஒரு ரோலர். உள்ளே லாக்கர். அதுக்குள்ளே நகைகள் வைக்கத் தனியா இன்னொரு லாக்கர். அதுக்குள்ளே இன்னும் ஓரு ரகசிய லாக்கர். கையை வளைச்சு ஒரு ஆங்கிளிலே கொண்டுபோனா மத்த ரெண்டு ரகசிய அறைகளும்தட்டுப்படும். வாங்கலாமா, வேணாமான்னு யோசிச்சப்ப அங்கே கண்ணுலே பட்டுச்சு கிச்சன் டேபிள்.


அளவு சரியாத்தெரியலை. ஒரு மூணடிக்கு அஞ்சடி இருக்கற மேஜை. எல்லாம் இரும்பாலே செஞ்சது. அலுமினியம் டாப்.அது மேலே இடது பக்கத்துலே ஒரு பக்கத்துலே ச்சின்ன ஷெல்ஃப்.
மேஜைக்கு அடியிலே வலதுபக்கம் ஒரு வலைக்கதவு போட்ட கப்போர்டு. இடதுபக்கம் தட்டுகள் அடுக்கி வைக்ககம்பி கம்பியா இருக்கும். நடுப்பாகம் ரெண்டு தட்டு ஓப்பன் ஷெல்ஃப். முக்கால்வாசி அடுக்களைச் சாமான்களை அதுலேயே வச்சுக்கலாம். முன்பக்கம் கொக்கிகள் இருக்கும், டீ கப்புகளை மாட்டி வைக்கறதுக்கு. 'இனிமே வாங்கப்போற' கேஸ் அடுப்பை அலுமினிய மேஜையில்( மேடையில்) வைத்துச் சமைக்கலாம். குழம்பு கொதிச்சு வழிஞ்சாலும் துடைக்கிறது ரொம்பசுலபம். பூனா, பாம்பேலேதான் இதை நான் நிறையப் பார்த்திருக்கேன். இட நெருக்கடி இருக்குதில்லையா?


அது இருந்தாத் தேவலை. பீரோ வேணாமுன்னு சொன்னேன். இதுலே நகையெல்லாம் வச்சுக்க வசதி இருக்கு. ஆனா நம்மகிட்டே பெருசா நகைகள்னு ஒண்ணும்தான் இல்லையே!


இவர் என்ன நினைச்சாரோ தெரியலை. ரெண்டுமே வாங்கிக்கலாம். காசு இருக்குன்னு சொன்னார்.


மறுநாள் வீட்டுக்கு எல்லா சாமான்களும் வந்து சேர்ந்துச்சு. தைய்யல் மெஷீனுக்கு ரெண்டு வருசம் கேரண்டியாம்.அட! பரவாயில்லையே.
கொண்டுவந்த அந்தப் பையனே மெஷீன்லே எப்படி நூலைப் போடணுமுன்னு போட்டுக் காமிச்சு, ஒரு துண்டுத்துணியிலே தைய்யல் சரியா வருதான்னு பார்க்க ரெண்டு தடவை ஓட்டியும் எல்லாம் சரி செஞ்சும் கொடுத்துட்டுப் போனான். ச்சின்னப் பையன்தான். பதினேழு வயசுகூட இருக்காது.


இனி நாமே எல்லாத்துணிகளையும் தைச்சுக்கலாம். இதுலேயே பூத் தைய்யல் போட்டு ஜமாய்க்கலாம். ஜாலிதான். ஆனா.....



ஆனா என்ன ஆனா?

எனக்குத்தான் துணி தைக்கத் தெரியாதே!
_____________________

Saturday, August 05, 2006

எவ்ரிடே மனிதர்கள் -12 ராஜகோபால்

வீட்டுக்குப் பின்னாலே இருக்கற மரத்திலே இருந்து மெல்லிசா இருக்கற கிளைய ஒடிச்சு அதுலே இருக்கற இலையை உருவிப் போட்டுட்டு, நீளமான சின்னக் குச்சியா எடுத்துக்கிட்டு மூணாங்கட்டுலே இருக்கற முற்றத்துப் பக்கம் போறார் நம்ம ராஜகோபால்.


ரெண்டு சின்னப் புள்ளைங்க மூணும் நாலுமா வயசு இருக்கும் போல, அங்கெ உக்காந்து வெளிக்குப் போய்க்கிட்டு இருக்குங்க. அய்யய்ய.... இது என்னா பழக்கம், இங்கெ உக்கார்றது?.... அப்ப வீட்டுக்குள்ளே இருந்து ஓடிவருது இன்னொண்ணு. அதுவும் அங்கதான்..... ச்சீச்சீ.... இது என்னடா கண்றாவி?


ராஜகோபால் இதுகளை அடிக்கத்தான் குச்சி கொண்டு வர்றாரோன்னு நினைச்சிங்கன்னா.....? ஊஹூம்... இல்லை.


மொதல் குழந்தை பிறந்து நடக்க ஆரம்பிச்ச புதுசில் ஒரு நாள் குழந்தைக்கு பேதி மருந்து( எல்லாம் விளக்கெண்ணெய்தான்)கொடுத்தாங்க பாருங்க அன்னைக்கு ஆரம்பிச்ச விஷயம் இது. குழந்தையை வெளியே 'உக்காரவச்சுட்டு' அது போன சமாச்சாரத்துலே புழு இருக்கான்னு பார்க்கறது. ரெண்டு மூணு முறை 'வெளியானதுக்கு' அப்புறம் 'பரிசோதிச்சுட்டு'அப்பாடா.... குழந்தை வயத்துலே புழு இல்லை'ன்னு ஏற்படுற திருப்திக்கு இவர் அடிமை.


இப்பத்தெரிஞ்சுதா... எதுக்கு அந்தக் குச்சின்னு?


குடும்பம், மனைவி, பிள்ளைகள் மேலே ரொம்பப் பாசமா இருப்பார்.
குடும்பத்துக்காக அயராம உழைக்கிறவர்.அவ்வளவாத் தமிழ்ப் பேச வராது. அந்தக் காலகட்டத்துலே அது ஒரு பிரச்சனையாவும் இருக்கலை. அப்ப அந்த ஊர் வெறும் சென்னப்பட்டணம்.


இப்ப ஆந்திரான்னு சொல்லப்படுற மாநிலத்துலே நெல்லூர்ன்னு ஒரு ஊர்லெ இருந்து ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டு,இங்கே வந்து குடியேறிய ஒரு குடும்பம். அப்படி என்ன தப்பு செஞ்சாங்களாம், ஊரே ஒதுக்கி வைக்குமளவுக்கு?



தப்புதான். பெரிய தப்பு. ஊர்க் கட்டுப்பாட்டை மீறுனது தப்புதானே. எதுக்காக ஊர்க் கட்டுப்பாட்டை மீறுனாங்களாம்?


விஷயம் இல்லாமயா? இருக்கே. ஆறு வயசுலே கல்யாணம் முடிச்சு, எண்ணி ஏழே மாசத்துலே கைம்பெண்ணாகிய மச்சினிக்கு, ஊர் வழக்கப்படி தலையை மழிக்க இடைஞ்சலா நின்னது தப்பில்லையா? ஊர் சொல்லிப் பார்த்துச்சு.நம்ம ராஜகோபாலோட மூத்த மகனுக்கும், இவரோட மைத்துனிக்கும் வயசு வித்தியாசம் வெறும் மூணுதான். தன்னோட பிள்ளையைப் போலத்தான் அந்தப் பொண்ணையும் நினைச்சார். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு இப்படி விதவைக்கோலம் கட்ட அவர் மனசு சம்மதிக்கலை. அதுக்காக ஊர் மக்களோடு போட்ட சண்டையிலேதான், இந்தக் குடும்பத்தையே ஒதுக்கி வைக்கும்படி ஆச்சு.


வந்த விலைக்கு, இருந்த நிலபுலன்களை வித்துட்டு மாமனார் மாமியார் குடும்பத்தோட சேர்ந்து இவரும் இங்கே வந்துசேர்ந்தார். ச்சின்னதும் பெருசுமா சில வியாபாரங்களைப் பண்ணி இருக்காங்க. ச்சின்ன மகளோட வாழ்க்கை இப்படிஆகிப்போச்சேன்ற மனக்கவலையிலே பெரியவர் சீக்கிரமே உலகை விட்டுப் போனாராம். அவர் அந்தக் கால மருத்துவர்.


நெல்லூர் பகுதியிலேயே ரொம்பப் பேர் போனவராம். சுத்துப்பட்டு கிராமங்களிலெ இருந்து ஓயாம நோயாளிங்க வந்துக்கிட்டு இருப்பாங்களாம்.நல்ல கைராசிக்காரர். பெண்கள் கையைப் பிடிச்சு நாடி பார்க்கக் கூச்சப்பட்டுக்கிட்டு,ஒரு பட்டுத்துணியை நோயாளி கைமெலே போட்டு அதும்வழியா நாடி பிடிச்சுப் பார்ப்பாராம். அவ்வளோ நல்லமனுஷன்.

ஆனாலும் ஊர்க் கட்டுப்பாட்டுக்கு தலை வணங்கித்தானே ஆகணும்.
மாமனார் போனவுடன் மாமியார், மச்சினியோட பொறுப்பும் இவருக்குத்தான் வந்தது. ஏற்கெனவே கூட்டுக்குடும்பமா இருந்ததாலே ரொம்பக் கஷ்டப்படலையாம். அப்படி இப்படின்னு இவருக்கும் ஏகப்பட்ட புள்ளைகுட்டிங்க. அதுகளோடயே மச்சினியையும் படிக்க வச்சார். இவருக்கே 12 புள்ளைங்க. இதுலே கூட இன்னொரு புள்ளையா அந்த மச்சினி.


ரொம்பக் கணக்கா செலவழிப்பாராம். ஒவ்வொரு வியாபாரமாப் பார்த்துக் கடைசியிலே ஒரு பொடிக் கம்பெனி ஆரம்பிச்சார்.அசல் பட்டணம் பொடி. நல்ல சரக்கு. சீக்கிரம் நல்ல பேர் வாங்கிருச்சு. வெள்ளைக்காரன் ஆண்டுக்கிட்டு இருந்த காலம்.இந்தப் பொடியைப் போட்ட யாரோ ஒரு மகானுபாவராலே இது இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாற அளவுக்குப் போச்சு.
மதராஸுலேயே நாலு இடத்துலே கடைங்க போட்டாச்சு. பிஸினஸ் அமோகம். எல்லாப் பிள்ளைகளுக்கும் பார்த்துப்பார்த்துச் செய்வாராம். புள்ளைங்க ஆரோக்கியத்துலே எப்பவும் கண்ணு. அதான் இப்படிக் குச்சி வச்சிக்கிட்டு.......


என்னதான் பணவரவு இருந்தாலும், சீரும் செட்டுமா இருந்தாத்தானே நல்லது. இவரோட மனைவிக்கு கை கொஞ்சம் தாராளம். எல்லாம் பெரிய அளவுலெதான் சமையல் இன்னும் எல்லாமும். இவரோ கணக்கு. கொஞ்சம் கருமி கூட.இந்தக் கருமித்தனம் இவர் வரைக்கும்தான். புள்ளைங்களுக்கு குறை ஒண்ணும் வைக்கலை.


பொடி செய்யறதுக்காக, அசல் நெய் பெரிய பெரிய டின்களிலே வீட்டுக்கு வந்து இறங்குமாம். பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்ததும் சாதம் பறிமாறிட்டு, நெய் ஊத்தறப்ப, நாலு சொட்டு இலையிலே விழறதுக்குள்ளேயே போதும் போதும்ன்னு சொல்லி இலைக்குக் குறுக்கா கை வச்சு மறிப்பராம். சாப்பிடும்போது, ஆஹா.... என்ன மணமான நெய். நாலு சொட்டுலேயே எவ்வளவு ருசின்னு ஒரே பாராட்டு. இருக்காதா பின்னே? அதான் சாதம் பறிமாறும்போதே நல்ல விழுது நெய் ரெண்டு முட்டைக்கரண்டி அளவு அந்த சாதத்துக்குள்ளே ஒளிச்சு வச்சிருப்பாங்களே அவர் மனைவி.


மச்சினிச்சியும் நல்லாப் படிச்சாங்க. பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஒரு டீச்சர் வீட்டுக்கு வருவாங்களாம். அதான் ஏகப்பட்ட பிள்ளைங்க, ஒரு வகுப்புக்கு வர்ற அளவுக்கு இருக்கே. மச்சினிச்சி ரொம்ப நல்லாப் பாடுவாங்களாம்.அதுக்கப்புறம் அவுங்களை டீச்சர் வேலைக்குன்னு டீச்சர் ட்ரெயினிங்குக்கு அனுப்புனார். இவுங்கதான் இந்தக் குடும்பத்துலெயே வெளியே வேலைக்குன்னு போன முதல் பொண்ணு.


இவரோட மூத்த பொண்ணும் நல்லாப் படிக்கிறவங்கதானாம். மாமனாரின் நினைவா இவுங்களை மருத்துவம் படிக்க வச்சார். அந்தக் காலத்துலெ மெட்ராஸ் மெடிகல் காலெஜிலே படிக்கறதுன்னா சும்மாவா? இவரோட பையனுங்கதான் யாருமே சரியாப் படிக்கலை. இவருக்கு ஆறு பையனுங்க. எல்லாரும் ஸ்கூல் ஃபைனலைத் தாண்டவே சிரமப்பட்டுருக்காங்க. அதான் கடைங்க இருக்கே, ஆளுக்கொண்ணாப் பார்த்துக்குங்கன்னு விட்டுருக்கார்.


சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சுக்கிட்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சிமேலே மக்களுக்கு ஒரு ஈர்ப்பு.இவரோட ரெண்டாவது மகன் இதுலே ரொம்ப ஆர்வமாப் பங்கெடுப்பாராம். எப்பவும் கதர்துணிகள் தான் போட்டுக்குவாராம். நேரு ஸ்டைல் குர்த்தா, வெஸ்ட்கோட்டுன்னு இருப்பாராம். இதெல்லாம் பார்த்த ராஜகோபாலுக்கு மனசுக்கு திருப்தியாத்தான் இருந்துச்சாம். ரெண்டாவது பொண்ணைத்தவிர, அதுக்குக் கீழே இருந்த மத்த பொண்ணுங்க எல்லாரும் படிச்சு வாத்தியார் வேலைக்கே போக ஆரம்பிச்சாங்க. கடைசி ரெண்டு பொண்ணுங்க மட்டும் பட்டப்படிப்பு படிச்சு அப்புறம் டீச்சரானாங்களாம்.



குடும்பத்துலெ, பிள்ளைங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு நடந்துருக்கு. இதுக்கு நடுவிலே தூரத்து சொந்தக்காரங்கமூலமா, தான் ஒரு விதவைன்னு தெரிஞ்சுக்கிட்ட மச்சினி பொட்டு வைக்கிறதையும் பூச்சூடுறதையும் விட்டுட்டாங்களாம்.அப்பதான் அவுங்க வேலைக்குப் போக ஆரம்பிச்ச நேரமாம். இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்துருக்கார்' இதெல்லாம் வேணாம்மா. பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ'ன்னு. அவுங்க கேக்கலையாம். இது அவருக்கு ஒருபெரிய மனக்குறையா ஆயிருச்சு.


இப்படி இருந்தவருக்கு அவர் வியாபாரத்துலே பழக்கமான ஒருத்தர் மூலமா, ராமலிங்கசுவாமிகளைப் பத்தித் தெரியவந்து அப்படியே ரொம்ப பக்திமானா ஆயிட்டாராம். 'அருட்பெருஞ்சோதி-தனிப்பெருங்கருணை'ன்னு எப்பவும் சொல்ல ஆரம்பிச்சாராம். முக்காவாசித் தெலுங்குக்காரர்களைப்போல இவுங்க குடும்பம் அந்தத் திருப்பதிப் பெருமாளையே வழிபடும் குடும்பம்தானாம். ஆனா இவர் மட்டும் விபூதி பூசறதும், அருட்பா சொல்றதுமா மாறிட்டாராம். இந்தப் புத்தகம் படிக்கறதுக்காகவே தனியா ஒரு வாத்தியார் வச்சுத் தமிழ்ப் படிக்கக் கத்துக்கிட்டாராம் அந்த வயசுலே.


கடைசி மகள் பட்டப் படிப்பு கடைசி வருசம் படிக்கிறப்ப, இவருக்கு முதுகுலே ஒரு கட்டி வந்துருக்கு. அதுலே இருந்து உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா கீழே போக ஆரம்பிச்சிருக்கு. தினமும் வீட்டுக்கு ஒரு நர்ஸ் வந்து கட்டி உடைஞ்சு புண்ணாக இருந்ததுக்கு ட்ரெஸ்ஸிங் செஞ்சுட்டுப் போவாங்களாம்.

ஒரு வெள்ளிக்கிழமையன்னிக்கு சாயந்திரமா குத்து விளக்கை ஏத்தி பக்கத்துலே கொண்டு வைக்கச் சொன்னாராம். மனைவி விளக்கைக் கொண்டுவச்சாங்களாம். அருட்பா சொல்ல ஆரம்பிச்சார். முடியலைன்னு கொஞ்சம் சாஞ்சு படுத்தவர் திடீர்ன்னு எழுந்து உக்காந்து," அடடா... என்னப்பனே நடராஜா.... எவ்வளோ ஆனந்தமா இருக்கு உன் ஆட்டம்"ன்னு சொல்லிக்கிட்டேக் கையாலே தாளம் போட்டுருக்கார். பார்வை மட்டும் எங்கியோ தொலை தூரத்துலே நின்னிருக்கு. அப்படியே ஒரு ரெண்டு நிமிஷம். அவ்வளவுதான்........................ அவர் கதை முடிஞ்சது. பக்கத்துலே இருந்த குத்து விளக்கும் தானா அணைஞ்சது.

சமுதாயத்துக்காக பெரிய அளவுலே புரட்சின்னு செய்யாட்டாலும், பெண் விடுதலைக்கு அவராலே ஆனதைச் செஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும். மேற்படி விஷயங்கள் எல்லாம் என் அம்மா பலமுறை சொல்லிக்கேட்டதுதான். என் அம்மாவோட தகப்பனார்தான் இந்த ராஜகோபால்.
--------------
அடுத்த வாரம்:

சிந்தியா
--------------

நன்றி: தமிழோவியம்

Friday, August 04, 2006

வரலக்ஷ்மி வருவாயம்மா......
















ஆடி மாசம் வந்துருச்சு. இந்த மாசம் பவுர்ணமி வர்றதுக்கு முன்னாலே வர்ற வெள்ளிக்கிழமைஒரு விசேஷ நாள். வரலக்ஷ்மி நோம்பு/விரதம் தான் இந்த நாளில் வருது.


ஏன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடறோம்? இருக்கு இருக்கு, அதுக்கும் ஒரு கதை இருக்கு.


ம்ம்ம்ம்ம்ம். எல்லாரும் சத்தம் போடாம அமைதியா இருந்தாத்தான் சொல்லுவேன். ஆமா.......



முந்தி ஒரு காலத்துலே, பார்வதியும் பரமசிவனும் அக்கடான்னு .... உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.அப்ப பார்வதி கேட்டாங்க, 'பிராண நாதரே( அந்தக் காலத்துலே இப்படித்தானே கூப்புட்டிருக்கணும்?)'பெண்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று வாழணுமுன்னா என்ன செய்யணும்? 'னு.


'அதென்னபெண்களுக்கு மட்டும்? ஆணுங்க எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையா'ன்னு ஆணியவாதிகள் கேக்கறாங்களா?
பொறுங்க. எதுக்கு இவ்வளோ கோபம்? 'நாங்கெல்லாம் நல்லா இருந்தோமுன்னா நீங்க ஆட்டோமாட்டிக்கா நல்லா இருப்பீங்க'ன்றது அந்தக் காலத்துலேயே தெளிவுபடுத்தப்பட்ட உண்மை. சரி. கதைக்கு வர்றேன்.


பரமசிவன் கொஞ்சம்கூட யோசிக்கவேயில்லை. இதுதான் சாக்கு 'டக்'னு சொல்ல ஆரம்பிச்சார்.


'லக்ஷ்மியைக் கும்பிட்டு விரதம் இருந்தால் எல்லா ஐஸ்வர்யங்களும் பெருகும்.கேட்ட வரங்களைத் தருவதால் அவள் வரலக்ஷ்மி'


ஏன் சொல்ல மாட்டார்? லக்ஷ்மி யாரு? சாக்ஷாத் அந்தப் பரமேஸ்வரனின் தங்கை.( என்ன இருந்தாலும் அவரும் ஆம்புளைதானே. சமயம் பார்த்துப் பழி தீர்த்துக்கிட்டாரு) நாத்தனாரைக் கும்பிடணுமுன்னு சொன்னதும் நியாயமா பார்வதிக்குக் கோபம் வந்திருக்கணும்.ஏன்? என்னைக் கும்பிடக்கூடாதா? உங்க தங்கச்சின்னா உங்களுக்கு எப்பவும் உசத்திதான். ஹ்ம்ம்ம்ம்ம்ம்.


ஆனா......அவுங்க என்ன நம்மைப்போல மானிடப் பிறவியா?
சாதாரண மனுஷப்பிறவிகளுக்கு இருக்கற கஷ்டங்களை என்னன்னு பட்டியல் போடுறது?



நாட்டை அழிக்கப் போடுற குண்டு வீச்சுலெ இருந்து, சாகாமத் தப்பிக்கறது முதல், நாளைக்கு என்ன கொழம்பு வைக்கலாம்ன்றது வரை விதவிதமான கவலைகள் கஷ்டங்கள். ஆனா பார்வதி மேற்படி விஷயம் பரமேஸ்வரன் கிட்டே கேட்டப்ப இந்த நாடுகளை அழிக்கறதுன்றதெல்லாம் அவுங்க அதுவரை கேள்விப்படாத ஒண்ணாத்தான் இருந்திருக்கணும்.


சரி, கதைக்கு வர்றேன்.


கும்பிடப் போறதென்னவோ மனுசங்கதானே, கும்பிட்டுக்கிட்டுப் போகட்டுமுன்னு இருந்துட்டாங்க. நாத்தனார் மனம்குளிர்ந்தா, எல்லாக் குடும்பத்துலேயும் சமாதானமும் அமைதியும் நிரந்தரமாயிருமுன்னு இந்த நோம்பை மனுசங்களுக்குக்கத்துக் கொடுத்துட்டாங்க.


நோம்பு கடைப்பிடிக்கும் முறைகள் எல்லாம் அந்தந்த குடும்பத்துக்குத் தக்கபடி. சில வீடுகளில் கொண்டாடும் வழக்கமும் இருக்காது. ஆனா அதுக்கு பதிலா வேற எதாவது நோம்பு/விரதம் இருக்கும்.



ஆகக்கூடி நாத்தனார் பூஜைதான் இந்த நோம்பு. நானுமிங்கே ஒரு பூஜைக்குப் போயிட்டு வந்தேன். அப்புறம் இன்னும் ரெண்டு தோழிகள் வீட்டுலே வெத்தலை பாக்கு/ஹல்தி குங்கும் வாங்கிக்கப் போக வேண்டியதாப் போச்சு.( அவுங்களுக்கும் நாத்தனார்கள் ( இங்கே) இல்லாத குறையைத் தீர்க்க என்னை விட்டா வேற யார் இருக்கா?


வலை உலக அக்கான்ற முறையில் நிறையப்பேருக்கு இப்ப வலை நாத்தனாரா இருக்கறதுலே ரொம்ப சந்தோஷம்தான்.


ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. இந்த வச்சுக்கொடுக்கறது அதாங்க 'ப்ளவுஸ் பிட்' எல்லாம் இப்ப சமீப காலங்களில் பொருளாய் மாறி இருக்கு. தட்டு, கிண்ணம் இப்படி. அதையும் கவனம் வச்சுக்குங்க. போன வருஷம் ஒரு தோழி கொடுத்த தட்டுக்கு ஜோடி இப்பத்தான் இன்னொரு தோழி கிட்டே இருந்து கிடைச்சது. முதல் தோழி இந்த வருஷம் கொடுத்தது கிண்ணம். அதோட ஜோடி அடுத்தவருஷம் ரெண்டாவது தோழி கிட்டே இருந்து வரணும். வந்துரும்அதெல்லாம். எங்கே போகப்போது?


தோழி வீட்டின் நோம்புக் கலசத்தின் படம் இத்துடன். கூடவே பிரசாதங்களும்( அதானே... இது இல்லாமையா?)


'அனைவருக்கும் வரலக்ஷ்மி அருள் புரியணும்' என்று மனமார வாழ்த்துகின்றேன்.