Tuesday, October 10, 2006

எவ்ரிடே மனிதர்கள் -19 மீனாட்சியம்மா

"அங்கோட்டா இங்கோட்டா?"

" அங்கோட்டுதன்னே"

கையிலே இருந்த ஒரு ச்சின்னப்பையிலே இருந்து எடுத்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துஅந்த மேஜையில் வச்சாங்க மீனாட்சியம்மா. இருநூறு ரூபாய். கையோடு கொண்டு வந்திருந்த பாஸ்புக்லே பதிஞ்சதும், ரெண்டு நிமிஷம் அங்கே இருந்த இன்னொருத்தர், (மேனேஜரா இருக்கணும்)கூடப் பேசிட்டுக் கிளம்பினாங்க. முதல்லே அந்தக் கட்டிடத்தை ஒரு வீடுன்னுதான் நினைச்சேன். உள்ளே போனபிறகுதான் தெரிஞ்சது அது ஒரு பேங்க்ன்னு.
ஊரும் ச்சின்ன ஊர்தானே. அதுக்கேத்த மாதிரி ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், அலங்காரம்னு எதுவும் இல்லாத ஒரு பேங்க். நான் இந்த ஊருக்கு வந்தபிறகு பார்த்த முதல் பேங்க்.


வீட்டைச் சுத்தி இருந்த பரம்பில் தெங்கும், கமுகுமா இருந்துச்சு. அஞ்சாறு பலாவும், ரெண்டு மாவும் கூட இருந்தது. மாசம் ஒருக்கா ஒருத்தர் வந்து தேங்காய் பறிச்சுப் போட்டுட்டுப் போவார். ஏழெட்டு மாசத்துக்கு ஒருதடவை அடைக்கான் எடுக்கவும் ஒரு ஆள் வரும். அந்தத் தேங்காய்கள் எல்லாம் அப்படியே வீட்டுஉள் முற்றத்துலே கிடக்கும். அதுலே இருந்துதான் சமையலுக்குத் தேங்காய்கள் எடுத்துக்குவோம். தேங்காய் வாங்கிக்கற வியாபாரிகள் எப்பவாவது வந்து விலை பேசி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்பவும் ஒரு ஆள் வந்து அந்தத் தேங்காய்களை உரிச்சுக் கொடுப்பார். அந்த மட்டைகளை எல்லாம் காய வச்சுருவாங்க. அது பாட்டுக்கு அங்கே காய்ஞ்சுகிட்டே இருக்கும். தேவையானப்ப அடுப்பு எரிக்க நாலைஞ்சா வீட்டுக்குள்ளெ வரும்.


எல்லாமெ ஒரு ஒழுங்கில் நடந்துகிட்டு இருந்துச்சு அந்த வீட்டுலே. மீனாட்சி அம்மாவோட கணவர் இறந்து போயே 18 வருஷமாச்சாம். கடைசிப் பையனுக்கு 1 வயசாம் அப்ப. அவனுக்கும் மூத்ததா ஆறு பேர். அஞ்சு பொண்கள். ரெண்டுஆண்கள்னு குடும்பம். மூணு பொண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்துச்சு. மூத்த பெண் ரொம்ப சாது. டீச்சரா இருந்தாங்க. அடுத்தவங்க ஒரு யூனியன் லீடரைக் கட்டி இருந்தாங்க. அவுங்களும் ஒரு பேக்டரியிலே வேலை. கம்யூனிஸ்ட்டு பார்ட்டியிலே நேதாவு. மூணாவது பெண், அம்மா வீட்டுக்குப் பக்கத்து நிலத்துலே வீட்டைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க புருஷன் மிலிட்டரியிலே இருந்து ரிட்டயர் ஆனவர். மணிமணியா ரெண்டு பிள்ளைங்க.


நாலாவது பெண் மெட்ராஸ்லே நர்ஸ் வேலை பார்க்குது. கடைசிப்பெண் நர்ஸ் வேலைக்குப் படிச்சுக்கிட்டு இருக்கு.பெரிய மகனும் ஒரு பாக்டரியிலெ வேலை செய்யறார். கடைசிப் பையன்தான் சரியாப் படிக்காம, வேலை வெட்டி இல்லாம ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தான். தகப்பன் இல்லாத புள்ளைன்னு செல்லம்.


பிள்ளைங்க கொடுக்கற காசுலே வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டு மத்த காசெல்லாம் தவறாம சேமிப்புக்குப்போயிரும். அதே போல தேங்காய், பாக்கு வித்த காசும் வந்த உடனே பேங்குக்குத்தான். எப்பவும் காசு 'அங்கோட்டு'த்தான், 'இங்கோட்டு' நான் பார்க்கவே இல்லை. இன்னும் ரெண்டு பொண்கள் கல்யாணத்து இருக்கே.


வெடவெடன்னு ரொம்ப ஒல்லியான உடம்பு. தலையில் பஞ்சாய் நரை. நடக்க சோம்பலே கிடையாது. காலையில் இருட்டு வெளுக்கு முன்னே எந்திரிச்சு அடுப்பைப் பத்த வச்சிருவாங்க. மொதல்லே ஒரு கட்டஞ் சாயா. கிளை அடுப்பு அது. ஒண்ணுலே ஜீரகவெள்ளம் எப்பவும் தயாரா இருக்கும். அதுக்கப்புறம் எப்ப தோணுதோ அப்பெல்லாம் ஒரு கட்டன் காபி. ஒரு அடுப்புலே கல்சட்டியிலே பருப்பை வேகப்போட்டுருவாங்க. அதுபாட்டுக்கு வெந்துக்கிட்டுக் கிடக்கும்.


மேல் அடுக்களையில் ( சமையலறையை ரெண்டு பாகமாப் பிரிக்கறது இதுதான்) ஒரு சாப்பாட்டு மேஜை. அதுலே அன்னிக்கு வந்த தினசரி மலையாள மனோரமா. கண்ணாடியைப் போட்டுக்கிட்டு ஒரு வார்த்தை விடாமப் படிப்பாங்க.நானும் மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டது அப்பதான். நம்ம க, ம, ன, இதெல்லாம் பார்க்க கிட்டத்தட்ட ஒண்ணுபோல இருக்குல்லே, அதை வச்சே எழுத்துக்கூட்டிப் படிக்கிறதுதான். புரியலைன்னா அம்மாகிட்டே கேட்டுக்கலாம். என்னுடைய மலையாள டீச்சர் அம்மாதான். அருமையா இங்கிலீஷ் பேசுவாங்க. சமஸ்கிரதம் படிச்சு அர்த்தமெல்லாம் சொல்லுவாங்க.
சாப்பாட்டுலே ரொம்ப நியமம். ராத்திரி சாப்பாடு அறவே கிடையாது. ஏழரைமணிக்கு ஒரு கட்டங்காப்பி. அந்தக் கப்புலேயே ஒரு கைப்பிடி அவல் போட்டுருவாங்க. காபியிலே ஊறவச்ச அவல்!!! அதோட ராச்சாப்பாடு ஓவர். ராத்திரி எட்டு மணிக்கு ரேடியோ நாடகம் கட்டாயம் கேப்பாங்க. அந்தக் காலத்துலேதான் டிவியே வரலையே. அம்மாவோடு சேர்ந்து நாங்களும் ரேடியோ நாடகத்துக்கு அடிமையாயிட்டோம்( வேற வழி? பொழுது போக்குன்னு வேற எதுக்கும்தான் நம்மகிட்டெ ஐவேஜ் இல்லையே) எட்டரைக்கு நாடகம் முடிஞ்சதும், நாங்க மேலே நம்ம போர்ஷனுக்கு வந்து சாப்பாடு. ஒம்போது மணிக்கு ஐலண்டு எக்ஸ்ப்ரெஸ் நம்ம வீட்டைக் கடந்து போகும். ரயிலைப் பார்த்துட்டுத்தான் தூக்கம்.


இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தது நம்ம அதிர்ஷ்டமுன்னுதான் சொல்லணும். எங்க இவர் வீடு தேடிக்கிட்டு இருந்தப்ப,அவரோட கம்பெனியிலெ ஒருத்தர் இங்கே கூட்டிக்கிட்டு வந்தாராம். மாடியிலே ஒரு பெரிய ஹால், அதுக்குப் பக்கத்துலே ஒரு ச்சின்ன நீளமான அறை. ஹாலைச் சுத்தி மூணு பக்கமும் விஸ்தாரமான வெராண்டா. மொத்த மாடியும் நமக்குத்தான். வாடகை 90 ரூபாய்ன்னு சொன்னாங்களாம். சரின்னு சம்மதிச்சுட்டார், நானும் ஊர்லே இருந்து வந்துக்கிட்டுஇருக்கேனே. மறுநாள் ரெயிலை விட்டு இறங்கியதும் நேரா இங்கே வந்தோம். தங்க ஒரு இடம் உடனெ வேணுங்கறநிர்ப்பந்தம் நமக்கு. தங்கிட்டோம். நானும் அந்த விட்டுப் பொண்ணா மாறிட்டேன். ஒரு மாசம் ஓடியே போச்சு.


அட்வான்ஸ்ன்னு ஒண்ணும் தரலை. மாசம் முடிஞ்சதும் 90 ரூபாயைக் கொண்டு போய் அம்மாகிட்டெ கொடுத்தோம்.அதுலே 50 ரூபாயை எடுத்துக்கிட்டு பாக்கியை எங்கிட்டே கொடுத்துட்டாங்க. திகைச்சுப் போயிட்டோம். 'பரவாயில்லை.50 ரூபாயே போதும். நாந்தான் வர்ற ஆளுங்க எப்படி இருப்பாங்களோன்னு பயந்துக்கிட்டு 90 ரூபான்னு சொல்லி
வச்சேன்.இதுதான் முதல்முறையா மாடி ஹாலை வாடகைக்கு விட்டது. வாடகை ஜாஸ்தின்னா, ஆளுங்க வேணாமுன்னு போயிருவாங்கல்லே'ன்னு சொன்னாங்க. இப்படி ஒரு வீட்டு உடமஸ்த்தர்.


பலாப்பழ சீஸன்லே ரெண்டு நாளைக்கு ஒரு பழமுன்னு வெட்டித் திங்கறதுதான். மத்தியானம் பகல் சாப்பாட்டுக்கப்புறம் இதுதான் வேலை. பலாக் கொட்டைகளும் அங்கே ஒரு மூலையில் குவிஞ்சு கிடக்கும். மாங்காய், பலாக்கொட்டை,பருப்பு சேர்த்து ஒரு மொளகோஷ்யம் வைப்பாங்க. ஒரு அம்பது ரூபாயை வாடகையாக் கொடுத்துட்டு, ஏதோ அந்தவீட்டுப்பொண் போல ரொம்ப உரிமையா எல்லாத்தையும் ஆண்டுக்கிட்டு இருந்தேன்.
ரெண்டு மாசத்துக்கொருதரம், குருவாயூர் கோயிலுக்குப் போய்வர்ற பழக்கம் இருந்துச்சு. நாங்களும் கூடவே ஒட்டிக்குவோம். அந்த வருஷம் வந்த வருஷப்பிறப்புக்கு எங்களுக்கு விசேஷக் கைநீட்டமும், கனி காணலும் கிடைச்சது. விடிகாலை நாலு மணிக்கு எழுப்பி, கண்ணை இறுக்கமூடிக்கிட்டு,இருட்டுலே தடவித்தடவிப் படிஇறங்கிப்போய் சாமி அலங்காரத்தைப் பார்த்தது இத்தனை வருஷத்துக்கப்புறமும் மனசுலே பச்சக்குன்னு பதிஞ்சுகிடக்கு.


அந்த ஊரைவிட்டு நாங்க வந்தபிறகு, நாலு வருசம் கழிச்சு ஒரு விடுமுறைக்குப் போனப்ப மீனாட்சியம்மாவைப் போய்ப் பார்த்தோம். கடைசி ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் முடிச்சுட்டாங்களாம். வீட்டுக்குப் புது மருமகளும்வந்தாச்சு. அம்மாவுக்கு இனிமேல் கொஞ்சம் ஓய்வுதான். கடைசிப் பையனும் எங்கியோ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கானாம்.


மாறாத அதே அன்போடு பேசுனாங்க. இன்னும் மெலிஞ்சு இருந்தாங்க. நடை மட்டும் மாறவே இல்லை. குடும்பத்தைகட்டிக் காப்பாத்துன நிறைவு முகத்துலே தெரிஞ்சதோன்னு எனக்கு ஒரு தோணல்.


'சேமிப்புன்றது எவ்வளோ முக்கியம்'ன்றதை நான் மீனாட்சியம்மாகிட்டேதான் படிச்சுக்கிட்டேன்.


அடுத்த வாரம்: இந்திரா காந்தி


நன்றி: தமிழோவியம்

16 comments:

said...

//அடுத்த வாரம்: இந்திரா காந்தி//

ஆகா, டீச்சர்...நீங்களும் இந்திரா அம்மையாரும் அவ்வளவு குளோசா? கிச்சன் கேபினட்?? உங்க லெவல் என்னான்னு இவ்வளவு நாள் தெரியாமப் போயிடுச்சே! சோனியா கிட்ட ஒரு ரெகமண்டேஷன் லெட்டர் வேணும் டீச்சர். கொஞ்சம் பாத்து ஏற்பாடு பண்ணுங்களேன் :-)))

said...

//ஏழரைமணிக்கு ஒரு கட்டங்காப்பி. அந்தக் கப்புலேயே ஒரு கைப்பிடி அவல் போட்டுருவாங்க//

அவல் காபியாசம்???

//'பரவாயில்லை.50 ரூபாயே போதும். நாந்தான் வர்ற ஆளுங்க எப்படி இருப்பாங்களோன்னு பயந்துக்கிட்டு 90 ரூபான்னு சொல்லி
வச்சேன்.//

படிக்காதவங்க, பட்டிக்காடு ன்னு எல்லாம் கிண்டல் பண்றோம். ஆனா எவ்வளவு விவரம் பாருங்க! அன்பும் இருக்கு, விவரமும் இருக்கு! நாம தான் பட்டிக்காடுகள் :-)))

அப்படியே இயல்பா, ஒரு கிராமத்து வீட்டையும் அடுக்களையும் படம் புடிச்சிக் காட்டி இருக்கீக! சூப்பர்!
கடைசி வரை எந்த ஊரு-ன்னு பறையவேயில்லையே! எண்ட குருவாயூரப்பா!

said...

வாங்க KRS.

இதுக்குத்தான் இன்னின்னாரைத் தெரியுமுன்னு சொல்லிக்கறதே இல்லை.
உடனே ரெக்கமெண்டேஷனுக்கு வந்துருவீங்களே:-)))))

ஏங்க, அந்த ஊரு எதுன்னு தெரிஞ்சுக்கிட்டா மீனாட்சியம்மா வீட்டை வாடகைக்கு
எடுத்துக்கிட்டு 'அரை' வாடகை தரலாமுன்ற ஐடியா இருக்கோ? :-))))

ஊர் பேர் முரிங்கூர். இப்ப அந்த ஊர்லே ஒரு இண்டர் நேஷனல் செண்டர்
வந்திருக்காம். கிறிஸ்துவர்களுக்கானதாம். பயங்கரப் பணப்புழக்கம் உள்ள
ஊரா மாறி , நிலமெல்லாம் ஏகத்துக்கும் விலை உயர்ந்து போச்சாம்.

நாம எப்படா ஊரைக் காலிசெய்வோமுன்னு இருந்திருக்காங்க பாருங்க:-)

said...

முரிங்கூரா. எனக்கு அங்கே துளசியைத்தெரியுமே.

அவங்களுக்கு இந்திராகாந்தியைத்தெரியும். அதனாலெ எனக்கும் இந்திரா காந்தி ஃப்ரண்டுதான்.:-)

வாழ்க்கை பூராவும் நமக்கு சொல்லித்தர குரு கிடைக்கிறாங்க.நாம அதை ஏத்துக்கிறதுல தான் நம் வாழ்க்கை சிறக்கிறது.
இப்போ பாருங்க, இந்த வயசில இத்தனை நல்ல இணைய ஃப்ரண்டுங்க எனக்கு.

மறக்காம மீனாட்சி அம்மாவைப் பதிவுல கொண்டு வந்திட்டீங்க.
நினைவு நிரந்திரமாயிடுச்சு.

said...

வெள்ளி, சனி, ஞாயறு, திங்கள்-
4 நாள் மட்டம்;
5 வது நாள்-பழைய(தமிழோவியம்)
பாடம்!
பழைய பாடம்னாலும்
ஒரு சராசரி இந்தியப் பெண்மணியை
கண்முன் நிறுத்தியதற்குப் பாராட்டு!

said...

பணநிர்வாகத்தில் பெண்கள் எப்போதும் சிறந்தவர்கள்தான். எங்கள் வீட்டில் 'அவங்க'தான் நிதிஅமைச்சர் :)

//அடுத்த வாரம்: இந்திரா காந்தி//
அவங்க எவ்ரிடே மனிதர்களா ?
அல்லது எவ்ரிடே மனுஷியான அவர் பெயர் கொண்டவரா ?

said...

பொது நலமறிந்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை கொண்ட நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

வேறென்னத்தச் சொல்றது டீச்சர்?

இந்திரா காந்தியா? எனக்கு காந்தியே தெரியுமே!

said...

வாங்க வல்லி.

//வாழ்க்கை பூராவும் நமக்கு சொல்லித்தர குரு கிடைக்கிறாங்க//

இது என்னவோ சத்தியம் வல்லி.

வாழ்க்கையிலே இன்னும் கத்துக்க வேண்டியது
எவ்வளவோ இருக்குல்லியா?

போற போக்குலே கிடைக்கிற நல்ல விஷயங்களை அப்படியே
'லபக்'னு பிடிச்சுக்கணும்:-)

said...

ஸ்ரீதர்,
உங்க யாஹூ அட்ரஸுக்குப் போட்ட மெயில் அப்படி யாருமே இல்லைன்னு
பவுன்ஸ் ஆயிருச்சேப்பா. நீர் இருக்கிறீரா இல்லையா?

said...

வாங்க சிஜி.

இப்படி அட்டெண்டன்ஸ் எடுத்தா எப்படிங்க?

நீங்க ரிட்டையர் ஆயிட்டதாச் சொன்னீங்களே :-))))

said...

வாங்க மணியன்.

//பணநிர்வாகத்தில் பெண்கள் எப்போதும் சிறந்தவர்கள்தான்.
எங்கள் வீட்டில் 'அவங்க'தான் நிதிஅமைச்சர் :)//

இந்த 'உண்மை' ரொம்பப்பேருக்குப் புரியறதில்லீங்க. பெண்கள் என்னவோ
'பணக்கணக்கு' கேக்கறாங்க, நம்ம சம்பாத்தியம், இவ(ங்க)ளுக்கு ஏன் சொல்லணுமுன்னு
ஒரு தப்பான எண்ணம் உருவாகிருது(-:

நம்ம ராகவன் ஸ்டைலில் பதில் சொல்லணுமுன்னா,

' சேர்த்த பணத்தைப் பத்திரமா செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு
அவுங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு'

said...

ராகவன்,

உங்க பாட்டு ஸ்டைல் எனக்கும் தொத்திக்கிச்சு:-))))

//இந்திரா காந்தியா? எனக்கு காந்தியே தெரியுமே! //

டீச்சருக்கு இந்திரா காந்தி தெரிஞ்சா
மாணவருக்கு காந்தி தெரியாதா என்ன? :-))))

said...

வாங்க வைசா.

இன்னும் சில நாள் பொறுத்துக்கலாமா? :-))))

said...

அடடடா.. அப்படியே ஒரு கேரளத்து குடும்பத்துக்குள்ள போய்ட்டு வந்தா மாதிரி இருந்தது..

கேரளவாசிகள் குறிப்பாக பெண்களிடத்தில் சேமிக்கும் குணம் இருந்ததை கண்கூடாக பார்த்திருக்கிறேன் நான்.

ஆனால் இளைய தலைமுறையினரிடத்தில் அந்த குணம் குறைந்துக்கொண்டே வருவதும் உண்மை..

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//கேரளவாசிகள் குறிப்பாக பெண்களிடத்தில் சேமிக்கும்
குணம் இருந்ததை கண்கூடாக பார்த்திருக்கிறேன் நான்.//

பின்னே. பேங்க் ஆளாச்சே. கவனிக்காம இருந்தாத்தான் அதிசயம்:-)))))

இப்ப இளைய தலைமுறைக்கு கைநிறைய காசு வர்றதாலெ
பணத்தோட அருமை தெரியலைபோல இருக்கு.

said...

மறுபிறவியிலே ஆண் பொண்ணாயிருமா? :-))))

பரவாயில்லையே! பேஷ் பேஷ்