Monday, March 05, 2007

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 1)








சாந்திநாதர்


எதுவுமே கிடைச்சிட்டு, அப்புறம் கிடைக்காமப் போகணும். அப்பத்தான் அதனோட அருமை பெருமை கூடுதலாய்த் தெரியும்.ஊர் ஊராய்ச் சுற்றிவளர்ந்த சிறுவயதுகளிலேயும் கோவில்கள் இல்லாத ஊரில் இருந்ததே இல்லை. இங்கே வந்தபிறகு அதுவும் சில வருஷங்களுப் பிறகுதான்( அதுவரை இங்கே செட்டில் ஆகும் பிஸியில்இருந்துட்டேன்) ரொம்பக் கஷ்டமாப்போச்சு. உள்ளூர்க் கோயில் ஒண்ணு இருந்தாலும், கோபுரம், கொடிமரம்இப்படி ஒண்ணும் இல்லாத இடத்தை கோயில்ன்னு மனசு ஒப்புக்கவே நாள் பல ஆச்சு. ச்சும்மா ஒரு வீட்டைவாங்கி அதைக் கோயிலா மாத்தி வச்சிருந்தாங்க. ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பகுதியில் ச்சின்ன மேடையில்ரெண்டு பளிங்குச் சிலைகள். சிலைகளைப் பார்த்தது போல் எதிர்ப்புறம் உட்கார்ந்திருக்கும் இந்த இயக்கத்தின் ஸ்தாபகர் சிலை. புரிஞ்சிருக்குமே..இது ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் கோயில்ன்னு!



ஆலயம் தொழுவது சாலவும் நன்றாம். சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க அந்த 'அம்மா'. இங்கேயெல்லாம் வந்து பார்க்க அவுங்களுக்கு அப்ப ச்சான்ஸ் இருந்துருக்காது. ச்சின்னவயசில் படிச்சது, குடும்பப் பழக்க வழக்கங்கள்ன்னுஎல்லாம் சேர்ந்து என்னப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருந்தது ஒரு காலக் கட்டத்தில். அப்புறம் 'ஞானம்' வந்துருச்சு. கோயிலை மனசுலேயே கட்டிவச்சுக்க ஆரம்பிச்சேன். அதுலே இதுவரை( டச் வுட்) ஓரளவு வெற்றியும் கிடைச்சிருக்கு.எந்தக் கோயிலாக, ஏன்? மாதா கோயிலாக இருந்தாலும்கூட அங்கேபோய் உக்கார்ந்து என் மனசுலே இருக்கும் என் பெருமா(ளை)னைக் கும்பிட தயக்கம் எப்பவுமே வந்ததில்லை. ஆனா கோயில்ன்னு ஒரு கட்டிடம் இருக்கணும்.அதன்மேல் தீராத ஒரு காதல்.


அதனாலே ஊருக்கு எப்பப்போனாலும் கோயில் கோயில்ன்னு மனம் அலையும். இதுக்குத் தோதா அமைஞ்சதுபோல் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்ததும்,தி.நகர் வெங்கடநாராயணா சாலையில்( சாலையின் பெயரும் நம்ம வெங்கியால் வந்ததோ?)உள்ள பெருமாள் கோயில் பக்கத்துலேயே தங்க இடம் கிடைச்சுக்கிட்டு இருந்தது. தினம் தவறாமல் காலையில் கோயிலுக்குப் போறதும், அங்கே பட்டர்களின் 'அராஜகம்' பார்த்து மனம் வெம்பி அந்தப் பெருமாளிடமே முறையிடுவதுமாத்தான் ச்சென்னைப்பயணம் இருந்துருக்கு. நம்ம வெங்கிக்கே பொறுக்கலை போலிருக்கு. 'என்னத்துக்கு இப்படி நீ அல்லாடறே? ரொம்பப் பக்கத்திலே இருந்தாத்தானே இந்த வம்பு தும்பெல்லாம் உன் கண்ணுலே படுது. கொஞ்சம் தள்ளி இடம் போட்டுத் தாரேன். கோயில், கோபுரமுன்னு அலையாதே. இங்கே பார், இன்னும் பக்கத்துலே ரெண்டே வீடு தள்ளி ஒரு கோயில் கூட உனக்காகவே வச்சுருக்கேன். கொஞ்ச காலமாவது மன நிம்மதியோடு இருந்துட்டுப்போ'ன்னு என்னை நார்த் கிரெசெண்ட் ரோடுலே வச்சுட்டார்.


இதுக்குமுன்னே ஒரு முறை போய்ப் பார்த்திருந்த கோயில்தான் இதுன்றதாலே தயக்கமே இல்லாம மறுநாள் காலையில் ஜி.என்.சாலையும், நார்த் கிரெசெண்ட் சாலையும் இணையும் இடத்தில் உள்ள கோயிலுக்குள்ளே நுழைஞ்சேன். உசரமான நுழைவாசல். ரெண்டு பக்கமும் மார்பிள் திண்ணைகள். அங்கே இருந்து கோயிலுக்குப் போகும் நடைபாதை. ரெண்டு பக்கமும் துளசிச்செடிகளும் குண்டு மல்லிச் செடிகளும். .ரெண்டு பக்கமும் பிரமாண்டமான வெள்ளையானைகள். அம்பாரி. ஒரு பக்கம் அரசன், மற்ற பக்கம் அரசி. இடது பக்கம் ஒரு எவர்சில்வர் வாளியில் தண்ணீர்.கைகால் கழுவிக்கொண்டு கோயிலுக்குள் போகலாம். பதினாறுப் படிக்கட்டுகள் ஏறினதும் முடியும் இடத்தில் ஒரு பெரிய கரும்பலகை.அதுவும் கோயிலின் வாசலை மறைச்சுக்கிட்டு! அதில் அன்று நடக்கப்போகும் விசேஷங்களின் பட்டியல்.


சாந்திநாத் மந்திர். சாந்தி நாதர். சாந்தி அளிக்கும் சாந்தி நாதர். நமக்கு வேண்டுவதும் அதுதானே?


படியேறி நுழைஞ்சவுடன் மூணு புறம் வாசல் இருக்கும் ஹால். நமக்கு இடம், வலமுன்னு ரெண்டு பக்கங்களிலும் வாசல். நேராக ஒரு மூணு பேர் நிக்கமுடியும் அளவுலே ஒரு சின்ன அறை, இல்லே சந்நிதின்னு சொல்லலாம். பளிங்குச் சுவற்றிலேயேசெதுக்கின சாந்திநாதர் சிற்பம். வாயைத் துணிகொண்டு கட்டிக்கிட்டு அங்கே நுழைஞ்சு சிலைகளுக்கு அலங்காரமோ, வழிபாடோ செய்யறாங்க.


ஹாலில் நடுவிலே சன்னதிக்கு எதிரே மூணடி உயரத்தில் ஒரு வெள்ளி பீடம். அதில் ச்சின்ன சிம்ஹாசனம். சுமார் பத்து இல்லை பனிரெண்டு செ.மீ அளவு வரும் ஒரு சிறிய வெள்ளிச்சிலை. நாராயண தீர்த்தங்கரர். எந்த நேரம்போனாலும் (கோயில் பகல் பனிரெண்டு மணிக்கு மூடிருவாங்களாம். அப்புறம் மாலை 4 மணிக்குத் திறக்குறாங்க.)சில மார்வாடி இன மங்கையர் வாயைக் கட்டிக்கொண்டு பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கறதைப் பார்த்தேன். ஒருச்சின்னச் சொம்பு பால்தான். கால் லிட்டர் இருந்தாவே அதிகம். அந்தப் பால் வழிந்து சிதறாமல், பீடத்துலே அமைஞ்சிருக்கும் மூக்குவழியா வெளியே வருது. அதையும் சிந்தாமல் சிதறாமல் இன்னொரு செம்பில் பிடிச்சுக்கறாங்க. அபிஷேகத்தண்ணீர்,பால்ன்னு ஊத்திக்கிட்டே இருந்தாலும் தரையில் ஒரு துளி ஈரமில்லை. விளக்குக் கொளுத்தி வச்சு தீபாராதனை.கூடவே அவர்கள் மொழியில் பாட்டு. ச்சின்ன ச்சின்ன மணைகள் ஒரு பக்கம் இருக்கு. அதுலே ஒரு கைப்பிடிஅரிசியைக் குமிச்சு எதோ ஜெபிச்சுக்கிட்டே ஸ்வஸ்திக் போல ஒரு கோலம் வரையறாங்க சிலர்.



கோயில் எல்லாருக்கும் பொதுதானாம். ஆனால் உள்ளெ கருவறையில் நுழையணுமுன்னா, அங்கே கோயிலிலேயே குளிச்சாகணும். அதுக்குண்டான வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. இடது பக்க வாசலுக்கு இடதுபுறம் சுவரிலேஒரு மாடம். அதில் ஒரு கைப்பிடி உயரச் சிலை. 'மணி மந்த்ர தேவ்'னு எழுதி வச்சிருக்கு. சந்தனம் பூசி வச்சுருக்காங்க. முகம் தெளிவா இல்லை. அருகிலே ஒரு விளக்கு எப்பவும் எரிஞ்சுக்கிட்டே இருக்கு.
ஹாலில் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாம்னு உக்கார்ந்தேன். நேராக் கருவறைக்குள்ளே பார்த்தால் என் பெருமா(ள்)ன்ஜொலிச்சுக்கிட்டு பூரண அலங்காரத்தோடு நிக்கறார். ஆஹா......... ஸ்ரீ நாராயணனை இங்கே (மனசில்) பிரதிஷ்டைசெஞ்சாச்சு. கண்ணைக் கசக்கிட்டு மறுபடி பார்த்தேன். சாந்திநாதர் சுவரில். பெருமாளாச்சு, பிள்ளையாரும்( நம்மமணி மந்த்ர தேவ்தான்)ஆச்சு.


கோயிலை வலம் வரலாமுன்னு இடது பக்க வாசல்வழியா வெளியே போனால்அங்கே ஒரு சிறிய மண்டபம். உள்ளெ குட்டிக் கருவறை. ஒரு காலை மடிச்சு உக்காந்திருக்கறது யாரு? பெயர் எழுதி இருக்கு.பத்மாவதி (தாயார்). சுவரில் செதுக்கிய சிலை. வடக்கத்திப் பாணியிலே புடவை கட்டி வச்சுருக்காங்க. அழகானவடிவம். கண்ணு மட்டும்.............. கொஞ்சம் 'அட! நீயான்னு முழிச்சு'ப் பார்க்கறதுபோல்! மண்டபத்தில் ஒரு அகலக் குறைவானநீள மேஜை. அதில் சாம்பிராணி தூப் புகையுது. ஒரு தட்டில் சாம்பிராணி தூப்கள் வச்சுருக்காங்க. விருப்பம் இருந்தால்கொளுத்தி வைக்கலாம்.ஒரு ஆணியில் பத்துப் பதினைஞ்சு ஜெபமாலைகள் தொங்குது. விருப்பம் இருந்தால் அதை எடுத்து ஜெபிக்கலாம். வலது பக்கம் ஒரு வெங்கல மணி தொங்குது. விருப்பம் இருந்தால்.............. எனக்கு விருப்பம். தினசரி அதை ஒருக்கா ஒலிக்க வச்சிருவேன். துள்சி ஆஜர் ஹோ........


வலமாகக் கோயிலைச் சுற்றிப் போனால் அங்கே ஒரு மேடையில் கிண்ணத்தில் சந்தனம். தொட்டு வைத்துக் கொள்ளக் 'கட்டிப்போட்ட' உலோகக்குச்சி. சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் ஒரு பெரிய சந்தனம் அரைக்கும் கல்.வாயைக் கட்டிக்கொண்டு காவி உடை இளைஞர் சந்தனக் கட்டையைத் தேய்ச்சு இழைக்கிறார். இப்ப ஒரு அஞ்சாறு வருஷமா தினமும் சந்தனம் நெற்றிக்கு இட்டுக்கற பழக்கம் எப்படியோ உண்டாயிருக்கு. அதுக்குத் தீம்பு வராம பெருமாள் ஏற்பாடு செஞ்சுருக்கார். பலே! பேஷ்!


சுற்றி வந்து முன்பக்கம் படிகளில் இறங்கிறலாம். ரெண்டு நிலைக்கோயில் முழுக்க முழுக்க பளிங்கும், லைம் &சோப் ஸ்டோனும் கொண்டு கட்டி வச்சுருக்காங்க. 70 அடி உயரக் கோபுரம் . படு சுத்தமா இருக்கு. தூண்களில் அலங்காரமாய் குட்டிக்குட்டியா ஏராளமான யானைகள். கோபுரத்தின் பக்கத்தில் எல்லாம் யானையோ யானை. எண்ணி மாளலை(-:

காம்பவுண்டு சுவருமே அழகா அங்கங்கே குட்டி மண்டபத்தோட இருக்கு. அந்த மண்டபத்துக்குள்ளே விளக்கு. கோயிலுக்குப் பின்புறமும், வலப்புறமும் பெரிய ஹால்கள். கல்யாணம் போன்ற விசேஷத்துக்குப் பயன்படுத்திக்கவாம். அதுக்குப் பக்கத்தில் தண்ணீர்ப் பந்தல். யாரும் வந்தமாதிரி தெரியலை. இப்ப டிசம்பர் மாசமாச்சே, கோடையில் வருவாங்களோ என்னமோ!


அங்கே இருந்த அத்தனை நாளும் தவறாமப் போன இடம் இதுவும், சரவணபவனும்தான்.


தொடரும்...........


முன்னுரை:


உங்கள் ஆதரவு வழக்கம்போல் இருக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இந்தப் பயணத்தில் தரிசித்த சில குறிப்பிட்டக் கோவில்களைப் பற்றி எழுதும் தொடர் இது. தட்டிக்குட்டுபவர்களை வரவேற்கின்றேன்.

20 comments:

said...

என்ன டீச்சர், ரொம்ப வயசாயிருச்சோ? ஒரேடியா கோவில் குளமுன்னு கிளாஸ்ரூமே ஆன்மீக வாசனை அடிக்குது?!! :-D

said...

போட்டோவிலேயே ஒரு சுத்து சுத்திட்டீங்க.
எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் சுத்தலாம்,பிரதஷ்னம் பண்ணலாம்.

said...

வாங்க கொத்ஸ்.

நாங்கெல்லாம் படிச்ச(??) காலத்தில் பள்ளிக்கூடத்துலே 'மாரல் ஸ்டடீஸ்'ன்னு
ஒரு வகுப்பு இருந்துச்சு. எல்லாம் அரசாங்கப்பள்ளிதான்.

அதுக்கப்புறம் மிஷன் ஸ்கூல்ஸ்லில் படிச்சப்ப 'ரிலிஜியஸ் ஸ்டடீஸ்'ன்னு அங்கேயும்
ஒண்ணு இருந்துச்சு.

இப்ப எல்லாம் இப்படி இல்லைன்னு கேள்விப்பட்டேன். நெஞ்சு கலங்கிருச்சு.
அதான் நம்ம வகுப்புலே இருக்கட்டுமுன்னு இப்படி ஆரம்பிச்சிருக்கு. இதுவும்
'பார்ட் ஆஃப் சரித்திரம்'தான்:-))))

said...

வாங்க குமார்.

உள்ளேயும் படம் எடுக்கலாமுன்னு தெரியலை. எதுக்கு அநாவசியமா அவுங்களைச்
சங்கடப்படுத்தணுமுன்னு எடுக்கலை.
பிரதட்சணம் பண்ணாவே புண்ணியம்தானே?

said...

கொடிமரம் இல்லாத ...படிகளில் ஏறி அறை அறை யாய் இருக்கும் சாமிகளை எதோ ஷோகேஸ் பொம்மை போல பார்ப்பது கொஞ்சம் மனசுக்கு கஷ்டம் தான் துளசி.

எனக்கு ஊரில் கொடிமரமும் குளமும்
வௌவாலும் ஒங்காரம் ஒலிக்கும் தனிமையுமாக இருக்கும் அரைஇருட்டு கோயிலில் இருக்கும் அமைதியும் தெய்வீகமும் இங்கு கிடைப்பதில்லை.

said...

//எதையும்.......கூடுதலாகத் தெரியும்//

இந்த அடிகளைப் படிச்சுப் பாருங்க:

"கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழன்றான் கடுந்துயர் காலவேலன்"
(கம்பராமாயணம்)

said...

துளசி, கி.என்.செட்டி ரோடு வழியா ஆயிரம் தடவை போனாலும்
இந்தக் கோவிலுக்குப் போனதில்லை.
ஜெயின் டெம்பிள் ஆச்சே. நம்மளை விடுவாங்களோனு சந்தேகம்.
நீங்க எழுதினது ரொம்ப சந்தோஷம்.
இனிமே நானும் போறேன்.
நீங்க சொன்னது போல எந்தக் கோவிலாக இருந்தாலும் எனக்கும் பரவாயில்லை.
கோவில் என்று ஒன்று இருந்தாலே போதும்.
மனசுக்கு நிம்மதி கொடுக்கும் நம்ம சாமியை நினைச்சுகிட்டு உள்ள போயிட்டப் போதுமே.
ரொம்ப அழகு இந்தக் கோவில் துளசி. நல்லா இருக்கு.

said...

வாங்க முத்துலெட்சுமி.

உங்க தில்லியிலே சம்பிரதாயமான தென்னிந்தியக் கோயில்கள் இருக்கேங்க. நீங்களே
இப்படிச் சொன்னா நான் புலம்பறதுலே 'பொருள்' நிறைய இருக்குல்லே? :-)))

நம்மூர்களிலே எத்தனையோ அருமையான பழங்காலக் கோயில்கள் சரியான கவனிப்பு இல்லாம
விரிச்சோடிக் கிடக்குறது பார்க்கும்போது கண்ணுலே ரத்தம் வராத குறைதான்.

ஆனா நீங்க சொல்ற //எனக்கு ஊரில் கொடிமரமும் குளமும்
வௌவாலும் ஒங்காரம் ஒலிக்கும் தனிமையுமாக இருக்கும்
அரைஇருட்டு கோயிலில் இருக்கும் அமைதியும் தெய்வீகமும் .....//

எனக்கும் இப்படித்தான் இருக்கு.

said...

வாங்க சிஜி.

அடடா.........கம்பர் எவ்வளோ அருமையாச் சொல்லி இருக்கார்.

சட்'னு எடுத்துக்கொடுத்ததுக்கு நன்றிங்க.

ஒரு வாக்கியம் சொன்னாலும் திரு வாக்கியம்:-)))

said...

வாங்க வல்லி.

ஒருநாள் போய்ப் பாருங்க. நம்ம யானைகளை முடிஞ்சா 'எண்ணி'க்கிட்டு வாங்க:-))))

குட்டிக்குட்டியா ஏராளமா இருக்கு. சிங்கங்களும் இருக்கு!

said...

பதிவர் பொன்ஸுக்கு பிடிச்ச ஆலயம் போல, திரும்பின பக்கமெல்லாம் யானை

said...

பிரபா,

//பதிவர் பொன்ஸுக்கு பிடிச்ச //

என்னை மறந்ததேனோ? :-))))

பொன்ஸ் நம்ம வாரிசுதான்:-)))

said...

ஹைதராபாத் பிர்லா மந்திர் மாதிரியும் கொஞசம் இருக்கு பாக்க வெள்ள வெளெர்னு

said...

////பதிவர் பொன்ஸுக்கு பிடிச்ச //

என்னை மறந்ததேனோ? :-))))

பொன்ஸ் நம்ம வாரிசுதான்:-)))//

:-)


நேரிலே சென்று பார்த்ததுபோல் இருந்தது, நன்றிகள்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//கொஞசம் இருக்கு பாக்க வெள்ள வெளெர்னு//

இப்ப பொல்யூஷன்லே தூசிதும்புமா கொஞ்சம் டல்லா இருக்கு. ஒரு மழை
அடிச்சுப் பெய்ஞ்சா சுத்தமாயிரும்.

said...

வாங்க ஜீவா.

சென்னைக்குப் போகும்போது சமயம் கிடைத்தால் நேரிலும் போய்ப் பாருங்க.
அருமையான யானைகள்:-)))

said...

யானை என்றால் எனக்கும் நல்லாப் பிடிக்கும். நல்ல பதிவு, துளசி.

துளசி, உங்க 500 வது பதிவுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

வாங்க செல்லி.

யானையை யாருக்குத்தான் பிடிக்காது?

ச்சின்னவயசில் அதோட பிரமாண்டம் மனசுலே எவ்வளவு தாக்கம் உண்டாக்குச்சு!
யானையைப் பார்க்கப்பார்க்கச் சலிக்காதுன்றதுதான் அதோட பெருமை.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

அக்கா. இந்தச் சமணக் கோவிலுக்குப் பல முறை போயிருக்கேன். முன்னாடி டி.சி.எஸ்ஸில் வேலை செஞ்சப்ப இந்தக் கோவிலுக்கு எதுத்தாப்புல இருக்கிற அப்போலோ கிளினிக்குக்குத் தான் ஒவ்வொரு தடவை ஆன்சைட் போகும் போதும் அனுப்புவார்கள்; நான் வருடாவருடம் அங்கே செல்லும் போதெல்லாம் இந்தக் கோவிலுக்குப் போய் அங்கிருக்கும் சுத்தத்தையும் அமைதியையும் அனுபவித்துவிட்டு வருவேன். நானும் முதன் முதலில் இங்கே போகும் போது நாமெல்லாம் போகலாமோ கூடாதோ என்று தயங்கிக் கொண்டே தான் சென்றேன்.

said...

வாங்க குமரன்.

எனக்கும் ரொம்பப் பிடிச்சது இந்தக் கோயில்.