Wednesday, June 27, 2007

எ.கி.எ.செ ? பகுதி 6

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?



ஊருக்குள்ளே நுழைஞ்சப்பவே பகல் ஒரு மணி. வேட்டையை ஆரம்பிச்சோம். கடற்கரைச்சாலையில் வந்து திரும்புனவுடனே இருந்த 'ஹாலிடே இன்' லே விசாரிச்சோம். டபுள் ரூம் அபார்ட்மெண்ட்தான் இருக்காம். அடுத்த கட்டிடத்துலே கேக்கலாமுன்னு போனா, சிங்கிள் ரூம் கிடைச்சது. 'ஸீ வியூ' இருக்குதான்னு நிச்சயம் பண்ணிக்கிட்டோம். பதினோராவது மாடி. கிச்சனெட், டைனிங், சிட்டிங், பெட்ரூம் & பாத்னு வசதியா இருக்கு.சிட்டிங் ரூமுக்கும், பெட் ரூமுக்கும் சேர்த்து நீண்ட பால்கனி. திரைச்சீலையை இழுத்ததும் கண்ணைக்கூசும் வெளிச்சமும், கருநீலக்கடலும் பளிச். கடற்கரை மணல் முழுசும் மக்கள்ஸ் நடமாட்டம். கீழ் தளத்துலே மின்னும் நீச்சல்குளம். ச்சின்னதா ஒரு ரவுண்டபெளட்லே நடுவிலே ஒற்றை மரம். அதைச் சுத்திப்போகும்(பொம்மை)கார்கள். அக்கம்பக்கத்துலே நெருக்கியடிச்சுக்கிட்டுக் கடலை எட்டிப் பார்க்கும் கட்டிடங்கள்.பேசாம இங்கேயே ரெண்டு மூணுநாள் இருக்கலாமேன்னு ஆசையா இருந்துச்சு.


கடற்கரை நகரத்தை எப்படி ஒரு 'தங்கச்சுரங்கமா' மாத்தலாமுன்றதை இவுங்ககிட்டே இருந்து தெரிஞ்சுக்கலாம்.

தெற்கே இருக்குமிடம் எல்லாம் கோல்ட் கோஸ்ட்( Gold Coast). வடக்கே போகப்போக சன்ஷைன் கோஸ்ட்(Sunshine Coast).நெராங் நதி இங்கேயும் வளைஞ்சு வளைஞ்சு வந்து கடலில் கலந்துருது. ஒரு வளைவையும் விட்டுவைக்காம water front அடுக்கு மாடி வீடுகள். எதோ இத்தாலி நாட்டுக்குள்ளெ வந்துட்டோமோன்னு நினைக்க வைக்கும் பெயர்கள். ஸொரேண்ட்டோ, ஐல் ஆஃப் காப்ரின்னு இருக்கு. இன்னும் தீவுத்திடலா இருக்கும் இடங்களையும் விட்டு வைக்கலை.அட்டகாசமான வீடுகள். அதென்ன மனுஷங்களுக்கு அவ்வளவு 'தண்ணி மோகம்'?


மதிய சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கடற்கரை மண்ணில் ஒரு நடை. லைஃப் கார்டுகள் கண் பார்வைக்குப் படற இடத்துலே மட்டுமே தண்ணியிலே இறங்கலாம். ரெண்டு கொடிகளை நட்டு வச்சுருக்காங்க. அதுக்கிடையில் இல்லாமத் தள்ளிப்போயிடறவங்களை ஒரு ஃபோர்வீல் வண்டியிலே வந்து ' அந்தாண்டையெல்லாம் போயிராதீங்க கண்ணுங்களா. ஆபத்து எதாச்சும் வந்துறப்போகுது'ன்னு சொல்லி இந்தாண்டை ' விரட்டி' வைக்கறாங்க. Surf Board வச்சுக்கிட்டு ஆளுங்க 'விர்விர்'னு அலையில் மிதந்து வந்துக்கிட்டு இருக்காங்க. மேலே ஹெலிகாப்டர் ஒண்ணு ஓயாம பறந்து 'தண்ணியிலே யாருக்கு கண்டமு'ன்னு பார்த்துக்கிட்டு இருக்கு. இது இல்லாம ஒரு குட்டி விமானமும் பறந்து 'தண்ணி ட்ராஃபிக்'கைக் கவனிக்குது.
அருமையான பாதுகாப்புதான். நடைபாதையில், சேண்ட் ஸ்டோனில் அழகழகா நவீன சிற்பங்கள் செஞ்சு வச்சுருக்காங்க. பீட்டர் லேஸின்றவரோட சிலையும் இருக்கு. இவர் Australian Surf Lifesaving Legend. Peter J. Laceyக்கு 'Lace the Great' ன்னு மரியாதை செஞ்சுருக்கு சிட்டிக் கவுன்ஸில். போட்டிகளில் இவர் 24 தங்கப் பதக்கம் வாங்கி இருக்காராம். இது மட்டுமில்லாம அங்கங்கே இதுவரை போரில் இறந்தவங்களுக்கு 'Australia Remembers' நினைவுச்சின்னம் வச்சிருக்காங்க.

மாலை ஆறு மணிக்கு மேலே 'உயிர்காக்கும் தோழர்கள் இருக்க மாட்டாங்க'ன்றதால் ஆறுமணிக்குப் பக்கம் (கடல்)தண்ணியிலே இறங்காதீங்கன்னு தண்ணீர் விளிம்பிலே வண்டி ஓட்டிக்கிட்டே சேதி சொல்லி வைக்கிறாங்க. நம்ம மக்கள்ஸ் இதையெல்லாம் தட்டுவாங்களா என்ன? எல்லா பப் களிலும், ஹொட்டல் முன்னாலே, நீச்சல் குளம் பக்கத்துலேன்னு 'தண்ணி'யோட மக்கள் செட்டில் ஆகிடறாங்க. 'ச்சூ மந்திரக்காளி'ன்னு மந்திரம் போட்டதுபோல கடற்கரை முழுசும் 'பட்'னு காலி!வெள்ளைக் காக்காங்க( Seagull)தான் கூட்டமா உக்கார்றதும் பறக்கறதுமா இருக்குங்க. கையில் ஒரு மெட்டல் டிடெக்டரோடு ஒரு பீச் கோம்பர் 'தேடிக்கிட்டு' இருக்கார். ரொம்பச் சின்னக் காசுகள் மட்டும்தான் இப்பெல்லாம் கிடைக்குதாம்.போன கிறிஸ்மஸ் சமயம்தான் இதுவரை கிடைச்சதுலேயே பெரிய ஐட்டமா ஒரு ப்ரேஸ்லெட் ஆப்ட்டுச்சாம். பேசிக்கிட்டே அவ்ரோடு நடந்தப்ப ஒரு இடத்துலே 'க்கீ க்கீ க்கீ க்கீ'ன்னு சத்தம் விடாமக் கேக்குது. தகரத்துலே செஞ்ச ஒரு சல்லடை மண்வாரியாலே மண்ணைப் பரபரன்னு வாரிப்போட்டார். சத்தம் மட்டுமே வருது,ஆனா ஒண்ணும் கிடைக்கலை. இன்னும் ஆழத்துலே புதைஞ்சிருக்குன்னு சொன்னார். 'ஒரு பொண்ணை அங்கே புதைச்சுட்டாங்க. அவ கையிலே இருக்கும் ப்ரேஸ்லெட்தான் இந்தச் சத்தம் போடுது. தோண்டிப் பார்த்துறலாம்'னு சொன்னேன். பீச் கோம்பர், ரெண்டரையடி தோண்டுனதும் கிடைச்சிருச்சு.ஒரு பீர் கேன்:-)))))

மணலை வச்சுத்தான் எல்லாமேன்றதாலே வேற எங்கிருந்தோ மணலைக் கொண்டுவந்து பீச்சுலே கொட்டறாங்களாம்.ம்ம்ம்ம் ....சொல்ல மறந்துட்டேனே......... 'பீச் வாலி பால்' வேற ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இதெல்லாம் வேணாமுன்னு ஷாப்பிங் செய்யற கூட்டமும் இருக்கு. முக்காவாசிக் கடைகளில் பீச் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். 20 டாலருக்குப் பூப்போட்டத் துண்டுத்துணி வாங்கிக் கட்டிக்கிட்டு, வெய்யிலில் படுத்துக்கலாம். யாரும் யாரையும் 'கவனிச்சு'ப் பார்க்கறதில்லை.
இன்னும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறையவே இருக்கு. 'ரிப்லீஸ் பிலிவ் இட் ஆர் நாட்' மியூஸியம் கூட இருக்கு. மாலுக்குள்ளேஃபேஷன் பரேடு, சாப்பாட்டுக்கடைகள் எல்லாம் அதுபாட்டுக்கு அதுன்னு நடந்துக்கிட்டு இருக்கு. நிறைய ஆக்டிவிட்டீஸ்!!!!நம்ம காசையெல்லாம் சுலபமாக் கரைச்சுருவாங்க.

மணல்ச்சிற்பம் செய்யறவரைச் சுத்தி ஒரு ச்சின்னக்கூட்டம். பலவருஷங்களா இவரேதான் இந்த இடத்தைப் புடிச்சுக்கிட்டு இருக்கார். இன்னிக்கு ஒரு ராட்ஸச மீன். பீச் ரோட் நடைபாதையெல்லாம் ச்சின்னச்சின்னதாக் கூடாரங்கள் முளைக்கஆரம்பிச்சது. ஒவ்வொரு புதனும் இங்கே, மாலை அஞ்சு முதல் பத்து மணிவரை மார்கெட் நடக்குதாம்.
நல்லவேளை,இன்னிக்குப் புதன்கிழமையாப் பார்த்து இங்கே வந்தோம்:-)))) பொம்மைகள், துணிமணிகள், கைவினைப்பொருட்கள்,மேசை விரிப்பு, பூச்சாடிகள், இன்னும் டேபிள் வேர்னு எக்கச்சக்கமான கடைகள். பொறுமையா எல்லா சாமான்களையும் அடுக்கி வச்சு, அப்புறம் எல்லாத்தையும் பிரிச்சு எடுத்து பேக் செய்யவே ரெண்டு மணி நேரமாயிரும் போல.

ஒரு கடையில், வெறும் டைனிங் ஃபோர்க் லேயே பொம்மைகள் செஞ்சு வச்சுருந்தாங்க.ஒரு கல்லுக் கடையும் இருந்துச்சு.நல்ல Geodeகளைக் குறுக்கா வெட்டி, பாலீஷ் செஞ்சு அதுலே பாம்பு, கழுகுன்னுன்னு சில உருவத்தை ஒட்டி விநோதமா இருந்துச்சு. இந்தக் கல்லெல்லாம் இங்கே கிடைக்கறதில்லையாம். வெளிநாட்டுலே இருந்து மொத்தவியாபாரியிடத்தில் வாங்கி, இவர் அதுலே இந்த 'ஒட்டு'வேலை செய்யறாராம். நானும் ஒரு 'அகேட் ஜியோடு' வாங்கிக்கிட்டேன். பருந்து ஒண்ணு இறக்கைகளை விரிச்சுக்கிட்டு இருக்கு.

நம்மளை 'ப்ரிஸ்பேனிலிருந்து விரட்டியடிச்ச ரக்பி கேம்' ஏழரைக்கு நேரடி ஒளிப்பரப்பாம். அதுக்கு முன்னாலே ராச்சாப்பாடு.ரெண்டு நாளைக்கு மேலே சோறைப் பார்க்காம இருக்க முடியறதில்லை. இங்கே இருக்கும் ஒரே ஒரு இந்திய ரெஸ்டாரண்டைத் தேடிப்பிடிச்சுச் சாப்பாடாச்சு. கடைத்தெரு முழுசும் சுற்றுலாக் கூட்டம். இதுவே ஒரு தனி உலகமா இருக்கு. அதுலேஇந்தியப் பகுதியா தெலுங்கு, ஹிந்தின்னு பேசிக்கிட்டு நாலைஞ்சு பேரா அஞ்சாறு குழுக்கள் நடமாடுது. 'குருவாரல்லா'ன்னு காதுலே விழுந்ததும் கர்நாடகாவும் ஜோதியில் இருக்குன்னு புரிஞ்சது.

இவர் ரக்பியிலும், நான் நம்ம தமிழ்மணத்திலும் மூழ்குனோம். எட்டரை மணிவாக்கில் காத்துலே மிதந்து வருது ஜாஸ் இசை.நேரம் போகப்போக செவிப்பறையில் ஓங்கியடிக்குறாப்போல ஆவேசமா ஒரே 'நோட்'டைத் திருப்பித் திருப்பி வாசிச்சு ஒரு வெறித்தனத்தோட முழங்குது. பத்தரையாச்சே..... தூங்கலாமுன்னு பார்த்தா..........ஊஹூம். நம்ம ஹொட்டலில் கீழ் தளத்துலே இருந்துதான் ( நீச்சல்குளத்தையொட்டி இருக்கும் ஹால்) 'சத்தம்' வருது. ஒரு கட்டத்திலே சகிக்க முடியாமல், இவர் ரிசப்ஷனைக் கூப்பிட்டுக் கேட்டார். 11 மணிக்கு இதெல்லாம் முடிஞ்சுரும். அதுவரைக்கும் இப்படித்தான். அப்புறமும் அடங்கலைன்னா கூப்புடுங்கன்னு சொல்லிட்டாங்க. இன்னும் 20 நிமிஷம் இருக்கேன்னு, கூடுதலா அலமாரியிலே இருந்த தலகாணிகளையெல்லாம் எடுத்துப்போட்டு, அதுக்குள்ளே தலையை ஒளிச்சுக்கிட்டுக் கிடந்தோம். மண்டைக்குள்ளே துளைச்சுக்கிட்டுப்போகுது 'இசை' இசையா இது? அளவுக்கு மிஞ்சினால் இசையும்..............

பதினொண்ணேகால் ஆச்சு, இன்னும் அடங்கலை. இன்னொருக்கா ரிஸப்ஷனைக் கூப்புட்டார். Noise Control க்கு சொல்லுவாங்கன்னு பார்த்தால்........... அவுங்களாலே ஒண்ணும் செய்யமுடியாதாம். 'ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருப்பாங்க'ன்னு பதில் வருது. போச்சுரா.........

கைப்பையைக் குடைஞ்சதுலே ஒரு செட் 'இயர்ப்ளக்' கிடைச்சதுன்னு கோபால் காதுலே அடைச்சுக்கிட்டார். எனக்கு நாலு தலைகாணி. ஒரு கட்டத்துலே பொறுக்கமுடியாம நானே கூச்சல் போடற நிலைக்கு வந்துக்கிட்டு இருக்கேன்.இவர் எழுந்துபோய், ச்சின்னதா ரெண்டு துணி உருண்டை கொண்டுவந்து கொடுத்தார். என்ன ஏதுன்னு கேக்கும் திராணிகூட இல்லை. காதுலே அடைச்சுக்கிட்டு ஒரு வழியா மெத்தைக்குள்ளே அமுங்குனேன்.

சரியான தூக்கமில்லாம மண்டையிடியோடு கண்முழிச்சப்ப ஆறரை மணி. பால்கனிக் கதவைத் திறந்தால் கடல் சத்தம் மட்டும்.கீழே அமைதி. வண்டி நடமாட்டம் ஏதும் இல்லை. அடிவானத்துலேச் செந்நிறக் கீத்தாச் சூரியன் வருகை தெரியுது. ஆளில்லாத மணல்பரப்புலே லைஃப் கார்ட் வண்டி வந்து நிக்குது. நாமும் ஒரு காஃபியைக் குடிச்சுட்டு அதிகாலை நடைக்குப் போகலாமுன்னு அடுக்களைக்கு வந்தால்........... அடுக்களைக் கத்தியும், முனை வெட்டப்பட்ட கைகுட்டையும் மேடையில் இருக்கு!ஆஹா......... ' தேவை தான் கண்டு பிடிப்புகளின் தாய்':-)))) காதுக்குள்ளில் இருந்து துணி உருண்டையை வெளியில் எடுத்துப்போட்டேன்.

வெளியே வந்து சாலையைக் கடந்து மணலுக்குப் போகுமுன்னே திரும்பிப் பார்த்தால் ஒரு அறிவிப்பு பேனர் கண்ணுலேபட்டது. 'ஜாஸ் ஃபெஸ்டிவல் வீக். 8 PM To 2 AM daily'. நல்லவேளை. தப்பிச்சோம். கடலுக்கு ஆசைப்பட்டு, இன்னும் ரெண்டு நாள் இங்கேயே தங்கிறலாமுன்னு நினைச்சதை, இப்ப நினைச்சாலே குலை 'நடுங்குது'! ஒரு மணி நேரத்துக்கு நடை. போய்வந்துட்டு, குளிச்சு ரெடியாகி, ஒம்போதரை மணிக்கு, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்கு போனோம். மொதல்நாள் அறை எடுக்கும்போதே, இதுக்குன்னு 20 டாலர் மதிப்புள்ள வவுச்சர் கொடுத்துருந்தாங்க.

திரும்ப அறைக்கு வந்தப்ப, நமக்கு நன்றி சொல்லி ஒரு வாழ்த்து அட்டையும், கூடவே நாம் தங்குனப்ப நாம் சேர்த்த குப்பைகளை எங்கே கொண்டுபோய்ப் போடணுமுன்னு 'நாசூக்கா' ஒரு குறிப்பும்! குப்பையைக் கடாசிட்டு, அறையைக் காலி செஞ்சுக்கிட்டுக் கிளம்புனோம்.

தொடரும்...............
படங்கள் சேர்க்கறதுக்கு 'நெட் தானம்' செஞ்ச கோபாலுக்கு ஒரு ஸ்பெஷல் 'ஓ'


12 comments:

said...

ஒரு எட்டு நாள் கிடைச்சா (இரண்டு பேருக்கும் சேர்த்து) பிரிஸ்பேன் போகலாம். அழகா படத்தோட பதிவு போடலாம். என்ன மாதிரி பேர் பார்த்து படிச்சு ரசிக்கலாம். சரியா?

said...

//இன்னும் ஆழத்துலே புதைஞ்சிருக்குன்னு சொன்னார். 'ஒரு பொண்ணை அங்கே புதைச்சுட்டாங்க. அவ கையிலே இருக்கும் ப்ரேஸ்லெட்தான் இந்தச் சத்தம் போடுது. தோண்டிப் பார்த்துறலாம்'னு சொன்னேன். பீச் கோம்பர், ரெண்டரையடி தோண்டுனதும் கிடைச்சிருச்சு.ஒரு பீர் கேன்:‍//

பயணக்கட்டுரை எல்லாம் முடிஞ்சதும் துப்பறியும் கதைகள் போடுவீங்கன்னு எதிர்பாக்கறேன்.

said...

பத்மா அர்விந்த்://ஒரு எட்டு நாள்.....சரியா?//

....எட்டு நாள் பதிவும் போடலாம்

said...

அந்த உயிர்காப்பு வண்டியை பார்த்ததும் Bay Watch தான் ஞாபகம் வந்தது.அதிலும் இதே மாதிரி வண்டியை தான் காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சூரியோதயம் படம் நன்றாக வந்துள்ளது.
தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் திட்டமும் சொதப்பிவிடுமே??

said...

மண் சிற்பம் அழகோ அழகு.சொல்ல மறந்துவிட்டேன்.

said...

வாங்க பத்மா.

எட்டு நாள் கிடைச்சால், பேசாம நியூஸி வந்துருங்க. அட்டகாசமான அழகுகள்
இங்கே கொட்டிக்கிடக்குது.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//பயணக்கட்டுரை எல்லாம் முடிஞ்சதும்...//

பயணங்கள் முடிவதில்லை :-))))


//...துப்பறியும் கதை....//

நோ ச்சான்ஸ்!

said...

வாங்க சிஜி.

மொதல்லே பத்மா இங்கே வரட்டும். பதிவுகள் எட்டா இல்லை எம்பதான்னு
நான் முடிவு பண்ணிடறேன்:-))))

said...

வாங்க குமார்.

சரிதாங்க நீங்க சொல்றது. ஒரே தலைவலி. மாத்திரை போட்டுக்கிட்டுச்
சமாளிச்சேன்.

நிறையப்படங்கள் நம்ம பால்கனியிலே இருந்து எடுத்ததுதான்.( கொடுத்த காசு
ஜெரிக்கணுமுல்லே?:-))) )

ரொம்பப் பொறுமையாக் கவனிச்சுப் பார்த்து ரொம்ப நல்லா சிற்பம் செய்யறார் அந்த சிற்பி.
மண்ணு கொஞ்சம் கூட பிசறலா இல்லாம அப்பப்ப ஒரு பிரஷ் வச்சு, கூடுதல் மணலை
அலுங்காம நலுங்காம துடைச்சு விடறார். மூணு மணி நேரம் மட்டுமே இருக்கும் சிற்பத்துக்கு
எவ்வளோ வேலை? மண்ணுலே தண்ணீர் ஊத்தி ரெண்டு கையாலேயும் ஒரு பெரிய பந்து மாதிரி
உருட்டி, அந்தக் கண்ணுக்குள்ளே 'முழி' வச்சார். அசந்துட்டேன்.

said...

கொச்சியிலருக்கறப்போ எல்லா எப்பிசோடுகளையும் படிச்சாலும் பின்னூட்டம் போட முடியாம போனதுக்கு ஈ கலப்பை இல்லாததுதான் காரணம். போறப்போ லாப்டாப்பை கொண்டு போகலை...

படங்கள்லாம் சூப்பரா வந்துருக்கு...

ஒங்க எழுத்தும் சூப்பர்னு சொல்லணுமா என்ன?

எட்டு விளையாட்டுக்கு ஒங்கள அழைச்சிருக்கேன்.. ஆனா ஒங்க எ.கி.எ.செவே ஒரு எட்டு விளையாட்டு மாதிரிதான இருக்கு?:-)

said...

இப்படி சத்தம் இருக்கிற ரூமா பார்த்து எடுத்ததுக்கு கோபால் எம்புட்டு வாங்கிக் கட்டிக்கிட்டாரு? :)))

said...

வாங்க கொத்ஸ்.

அதெப்படிங்க அவரை மட்டும் திட்ட முடியும்?
ரெண்டு பேருமாச் சேர்ந்துதானே அந்த ஹொட்டலில் ரூம் புக் பண்ணோம்.

அதனாலே ஆளுக்குப் பாதி! அவுங்கவுங்க செருப்பாலே அவுங்கவுங்களே :-)