Monday, July 30, 2007

வீடு 'வா வா'ங்குது பகுதி 2

அடுத்து, வீடு கட்டும் நிலம்? சில கம்பெனிகள், அவர்களே நகரின்,பல வேறு பகுதிகளில் இடம் வாங்கிப் போட்டுட்டு, எல்லாம் சேர்த்து ஒரு முழு 'பேக்கேஜ்' ஆகவும் விற்கறாங்க. இதில் ஒரு நல்ல காரியம் என்னென்றால், நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம். அவர்களிடத்தில் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருப்பதால் மூன்று மாதங்களில் புது வீட்டுக்குக் குடி போகமுடியும்!

நாங்கள் ஏற்கனவே ஒரு பழைய வீட்டை வாங்கியிருந்தோம். நம் இந்தியக் கணக்குக்கு மூணரை கிரவுண்ட் இடம். இதுலே இருக்கும்வீடு ரொம்பச் சின்னது. ரெண்டே ரெண்டு படுக்கை அறைதான். அதனாலே இங்கே இன்னும் ரெண்டு அறையைக் கூட்டலாமுன்னுதான் ஆ.தா. கிட்டே போனது. அதான் தோல்வியாப் போச்சே. சரி,அந்தப் பழைய வீட்டை இடிச்சிட்டு, அங்கே புதுசாக் கட்டிக்கலாம்.

புது வீடு வேணுமா, இல்லே வேணாமான்னுத் தீர்மானம் எடுக்க முடியாமல் இருந்ததாலே, கொஞ்சநாளுக்கு அந்த வீட்டை வாடகைக்கு விடலாம்னு முடிவு செஞ்சோம். அதே மாதிரி வாடகைக்கும் விட்டாச்சு. நமக்கு அவுங்களைக் காலி செய்யணும்னா 6 வார நோட்டீஸ் கொடுக்கணும். இங்கெல்லாம் வீடு 'வார வாடகை'தான்.

இந்த வீட்டுலே ஒரு ச்சின்னக் காடே இருக்கு.. ஒவ்வொண்ணும் ஒரு வகையா பதினோரு ஆப்பிள் மரங்கள். முள்ளுமுள்ளுச் செடிப் புதர்கள் அங்கங்கே உக்காந்துருக்கு. நல்ல பெரிய எலுமிச்சம்பழம் காய்ச்சுத் தொங்கும் ஒரு ச்சின்ன மரம்.வாசப்பக்கம் நம்மூர்லெ காகிதப்பூன்னு சொல்வோம் பாருங்க அந்த 'போகன்வில்லா'ச் செடி. பிங்க் பூக்கள். காம்பவுண்ட்சுவரைச் சுத்தி என்னென்னவோ பேர் தெரியாத செடிகள். ஆனா பூத்துக்குலுங்குது. க்ரோட்டன்ஸ் ஒரு பக்கம்.ஆனா தோட்டத்துலே கவனமா நடக்கணும். செடிகளுக்கு சப்போர்ட்டா ஊன்றுகோல் வைக்கிறேன்னு அங்கங்கே கம்பிகளை நட்டுப் பழைய 'பேண்டிஹோஸ்' வச்சுக் கட்டி விட்டுருக்காங்க, இந்த வீட்டின் முன்னாள் சொந்தக்காரியானஒரு பாட்டி. தவறிக் கீழே விழுந்தோமுன்னா.............. கம்பி நம்மைத் துளைச்சுக்கிட்டு வெளியே வந்துரும். எவ்வளோ ஆபத்து பாருங்க.

வாடகைக்கு விடுமுன்னே, ஒரு வீக் எண்ட் பூராவும் நானும் இவருமாச் சேர்ந்து கம்பிங்களைத் தேடிப் பார்த்துக் கவனமாத் தோண்டி வெளியே எடுத்துப் போட்டோம். பின் பக்கத்துலே இருந்த செடிகள், மரங்கள்ன்னு கொஞ்சம் கிளைகளைக் கத்தரிச்சோம். கைகாலெல்லாம் முள் கீறி விழுப்புண்களோடு கொஞ்சநாள் நடமாட வேண்டியதாப் போச்சு. முன்பக்கமும்,பின்பக்கமும் இருக்கற புதர்களை எங்க பூனைகளுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும். ஒளிஞ்சு விளையாடச் சரியான இடம்.சின்னதா ஒரு செயற்கைக் குளம்கூட பாசி பிடிச்சுக் காஞ்சு கிடக்கு.

இங்கெல்லாம் ஒரு மனையிலே வீடு கட்டிக்கணுமுன்னா, ஒரு 'லெவல்' வீடா இருந்தா 40% இடத்துக்குள்ளே கட்டலாம். மாடி வீடுன்னா 35% இடம்தான் வீட்டுக்கு. மீதி இடம் ச்சும்மாக் கிடக்கேன்னு தோட்டம், புல்வெளின்னுபோட்டு வைக்கணும். இந்த மனை 809 சதுர மீட்டர். அதனாலே 320 சதுர மீட்டர்வரை கட்டலாம். ஆனா பாட்டி, 130 சதுரமீட்டர்தான் கட்டி வாழ்ந்துருக்காங்க. கட்டுனதில் இருந்து அவுங்க மட்டுமே தனியா இருந்துருக்காங்க.இப்ப ரொம்பவே வயசாச்சுன்னு முதியோர் இல்லத்துக்குப் போயிட்டாங்களாம்.


சரி. முதலாவதாக எந்த மாதிரி டிஸைன்? எத்தனை அறைகள்? என்னென்ன முக்கியமாகத் தேவை என்று காகிதமும் பேனாவுமாக உட்கார்ந்தோம்.ஆரம்பமானது எங்கள் 'கூட்டு' ஆலோசனை. இதுக்கு இன்னொரு பேர் இருக்காமே, 'வாக்கு வாதம்'னு! தினமும் இதே வேலைதான். படம் படமா போட்டுகிட்டே இருக்கோம்.இப்படி மாத்தி, அப்படி மாத்தின்னு வரையறோம். நான் ஒரு படி மேலே போய், ஒரு அட்டையிலே ரூம் அளவுகளாய் வெட்டி வச்சுகிட்டு, அதை ஒரு பலகையிலே மாத்தி, மாத்தி வச்சுப் பாக்கறேன். எல்லாம் சிஸ்டமேட்டிக்:-)

ஒரு மாதிரி ஒரு டிஸைன் வந்தது. ஆனா, ஹால், ரூம் அளவெல்லாம் இப்ப நாம இருக்கற வீடு அளவுதான். இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கணும்ங்கறது என் எண்ணம். கோபால் சொல்றார், இதைவிட 40 செ.மீ (!!)அதிகம்னு.

இதே சைஸ்ன்னா, இங்கேயே இருக்கலாம்தானே! என்னத்துக்கு பணம் செலவு செஞ்சு இதே மாதிரி வீட்டுக்குப் போறது?

'சைஸ் அதேன்னாலும் வீடு புதுசு ஆச்சே! குளிர் இல்லாம இருக்குமே'! இது அவர் வாதம்.

ஒரு மாதிரி எங்க தேவைகளுக்கேத்த மாதிரி வரைஞ்சோம். இப்ப நமக்கு இந்த'ப்ளானை' வரையறதுக்கு ஒரு 'ஆர்கிடெக்ட் டிஸைனர்' வேணும். எனக்கோ ஆ.தா. அலர்ஜி! நமக்குத் தெரிஞ்ச ஒரு மலேசியப் பெண், ஒரு வெள்ளைக்காரரை மணந்து கொண்டு இருக்காங்க.அவரும் ஒரு 'பில்டர்'தான். அவருகிட்டே ஆலோசனை கேட்டப்ப, அவர் ஒரு 'ஆர்கிடெக்ட்' பேரை சிபாரிசு செஞ்சார். போய்ப் பார்த்தோம்.எனக்கு மனசுக்கு சரியாப்படல்லே!

இன்னொருநாள், '·போன் புக்' லே ( மங்களகரமா) 'மஞ்சள்' பக்கத்தைப் பார்த்து ஒரு 'ஆர்கிடெக்ட் ட்ராயிங் டிஸைனர்' க்குப் ·போன் போட்டோம்.என்ன மாதிரி 'சர்வீஸ்' செய்றாங்கன்னு கேட்டப்போ அவர் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

" நீங்க சொல்றதைக் கவனிச்சுக் கேப்போம்"

ஆஹா! சரியான பதில்! உடனே அவரைப் போய்ப் பார்த்தோம்.

ஆளு, ரொம்பச் சின்னப் பையன்! வயசு கூட ஒரு 25/26 இருக்கலாம்! தொழிலுக்குப் புதுசு போல. நமக்கு வேண்டியதைச் செய்வார்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

எனக்கு எப்பவுமே ஒரு ஆளைப் பார்த்தாலே 'மனசு'க்கு இவுங்களை நம்பலாமா/ வேண்டாமான்னு தோணும்! பல சமயங்களிலே இது சரியாகவும் அமைஞ்சுடும்!

பையன்னு சொன்னேன்லே, அவரு பேரு கூட 'பாய்ட்/போய்ட். Boyd' அவருக்கு உதவியாளனா இன்னொரு சின்ன வயசுப் பையன்! நாங்க வரைஞ்சிருந்ததைப் பார்த்துட்டு, அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. நல்ல டிஸைன்னு சொல்லிட்டு, அதயே இன்னும் கொஞ்சம்விவரமா வரையறேன்னு சொன்னாரு. எவ்வளவு காசு செலவுன்னும் பேசி முடிவு செஞ்சோம். 2900$ க்கு ஒத்துகிட்டாரு. அப்புறம் ஜி.எஸ்.டி.எல்லாம் சேர்த்து 3600$க்கு வந்துச்சுன்னு நினைக்கறேன்.

நம்ம வீட்டுக்கு ஒரு 'இந்தியன் டச்' கொடுக்கணும்னு ஒரு ஊஞ்சல் போட ஆசையா இருந்துச்சு. அதுக்கு, உத்தரத்துலே கொக்கி போடணும்லே? அதுக்கு 'ஸ்பெஷலா' ஒரு 'பீம்' போடவும் ப்ளான்லே வரைஞ்சாங்க! 'கார்னர் ஜன்னலுங்க இருக்குன்னு, ஒரு 'ஸ்ட்ரக்சுரல் எஞ்ஜினீயர்' வச்சு ஜன்னலுக்கெல்லாம், 'வெயிட் ' தாங்கறதுக்குன்னு என்ன 'சப்போர்ட்'ன்னும் வரைஞ்சாங்க. எல்லாத்துக்கும் 'எக்ஸ்ட்ரா'வா காசு கொடுக்க வேண்டியாச்சு.

என்னத்துக்கு ஊஞ்சலை வீட்டுக்குள்ளே போடணும்? தோட்டத்துலே போட்டால் ஆகாதா? எதுக்கு இப்படி 'டைனிங் ஏரியா'விலே வாஷ் பேஸின் வைக்கணும்? இப்படியெல்லாம் வந்த கேள்விகளுக்குப் பதில் சொல்றதே ஒரு 'பெருமை'யாப் போச்சு எனக்கு!

நல்ல பையன். ஒரு பத்துதடவை மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்து, திருத்தம் எல்லாம் செய்து, சரியா வரைஞ்சு, அதை இங்கே நம் 'சிட்டி கவுன்சில்'க்கு அனுப்புனோம். ஆன்னா ஊன்னா ஒரு அளவு நாடா எடுத்துக்குவார் இந்த பாய்ட்.இவ்வளவு நீளம், இவ்வளவு அகலமுன்னு அந்த ஆஃபீஸ் ரூம்லே நீட்டி நீட்டிக் காமிக்கும்போது என்னவோ பிரமாண்டமா வரப்போகுது வீடுன்னு தோணும். ஆனா..........................

வீட்டுக் கூரையோட நிழல் பக்கத்து வீட்டுக்கு மேலெ விழக் கூடாதுன்றதும் முக்கியமா கவனிக்க வேண்டியது! குளிர் ஊராச்சா? இருக்கறகொஞ்சம் நஞ்சம் வெய்யிலையும் மறைச்சுட்டா எப்படி? எல்லாம் தஞ்சாவூர் கோயில் கோபுர ரேஞ்சுக்கு சொன்னா ...?

நம்ம வீட்டோட கூரை வெய்யிலை மறைக்காதுன்னாலும், ஒரு 6 டிகிரி கோணம் கூடுதலா இருக்கறதுனாலே, பக்கத்து வீட்டு ஆளுங்ககிட்ட விவரத்தை சொல்லி, கையெழுத்து வாங்கணும். ஒரு நாள் பக்கத்து வீட்டு ஆளுங்களைப் போய்ப் பார்த்தோம்! சின்ன வயசுக்காரங்க அவுங்க ரெண்டுபேரும். ரெண்டு பூனைங்களும் வச்சிருக்காங்க! நாமளும் பூனைப் பிரியர்களாச்சா, சந்தோஷமா இருந்தது. அந்த பையன், அவுங்க அப்பாவை ஒரு வார்த்தைக் கேட்டுகிட்டு கையெழுத்துப் போடறதா சொன்னாரு. இங்கெல்லாம் வீடுன்னா, புருஷன் & மனைவி ( பார்ட்னர்ஸ்)ரெண்டுபேருலேயும்தான் பதிவு பண்ணுவாங்க! ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு. பின்னாலே பிரிஞ்சு போறதா இருந்தா, அதை வித்துட்டு பாதி பாதி பங்கு போட்டுக்குவாங்க! ரெண்டு மூணு நாள் கழிச்சு, அவுங்க ரெண்டுபேரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்க.

ஒரு மாசம் கழிச்சு கவுன்சில் கிட்டேயிருந்து, 'பில்டிங் பர்மிட்' வந்துச்சு. அவுங்களும் சில 'கண்டிஷன்'கள் போட்டாங்க. அதும்படியேதான் செய்யணும்! ஆனா 6 மாசத்துக்குதான் இது செல்லும். அதுக்குள்ளெ வேலையை ஆரம்பிச்சரணும். முடிக்கறதைப்பத்திக் கவலையில்லே!

இப்ப அடுத்த வேலை, ஒரு 'பில்டர்' தேர்ந்தெடுக்கறது. இது கொஞ்சம் 'ரிஸ்க்' வேலைதான்.நல்ல ஆளா இல்லாட்டா, நம்ம பணம் போச்சு.இன்ஷூரன்ஸ், அது இதுன்னு கிடைக்கும்னு சொன்னாலும், தலைவலி இல்லையா? இருந்திருந்து ஒரு வீடு கட்டறோம். இது நம்ம கனவு.அது நனவுலே சரியா வர வேணாமா?

இங்கே, நம்ம 'கிறைஸ்ட்சர்ச்' நகரத்துலே பெரிய 'பில்டிங்' வேலைங்க ரெண்டு நடந்துகிட்டு இருக்கு. ஒண்ணு நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கற 'மால்'. இன்னொண்ணு ஆஸ்பத்திரி. இங்கதான் ஊருக்கே ஒரே ஒரு ஆஸ்பத்திரியாச்சே! எல்லா கட்டிட வேலை செய்யற ஆட்களும் அங்கே வேலைக்குப் போயிட்டாங்க! ரெண்டு வருஷத்துக்கு வேலை இருக்குமே! அதுவுமில்லாமே இப்பத்தான் புது வீடுங்க நிறைய வந்துகிட்டிருக்கு.நாங்க இங்கே வந்து 17 வருஷமாகுது. புது வீடுங்க, புது ஏரியா எல்லாம் அப்ப கிடையாது. என்னமோ பழைய ஊராவேதான் இருந்தது. இப்ப 4 வருஷமாதான், தெளிவாச் சொல்லணும்னா, இங்கே இம்மிக்ரேஷன் பாலிஸியை புதுசா மாத்தி, நிறைய ஆளுங்க, குறிப்பா 'சைனா' ஆளுங்க வர ஆரம்பிச்சவுடன்தான், அதிக வீடுகளுக்கு தேவை ஏற்பட்டு, ஆப்பிள் தோட்டங்களா இருந்த இடங்கல்லாம் கொஞ்சம்கொஞ்சமா வீடுங்களா மாற ஆரம்பிச்சது.


இந்தியாவுலே ' அட்டாச்சுடு பாத்ரூம்' இருக்கு பாருங்க. அது இப்பத்தான் 'ஆன் ஸ்யூட்'ங்கற பேருலே வருது. அதுவும் 'மாஸ்டர் பெட்ரூம்'லே மட்டும் தான். முன்னெல்லாம் எத்தனை ரூம் இருந்தாலும் ஒரே ஒரு குளியலறைதான். இங்க இருக்கற குளிருக்கு அதுவே ஜாஸ்தின்னுநினைச்சிருப்பாங்களோ? இப்ப என்னென்னா 2 'டாய்லட்' இருக்குன்னா, அது பெரிய விஷயமா இருக்கு!
ஐய்யய்யோ, ஒரே 'டாய்லட்' இருந்தா எவ்வளவு கஷ்டம்? காலை குளிருலே யாரும் சீக்கிரமா எந்திரிக்காம, லேட்டா ஒரே சமயத்துலேஎழுந்து, வேலைக்கு, ஸ்கூலுக்குன்னு கிளம்ப நேரமாச்சுன்னு ஆடுவாங்க பாருங்க! அதுலேயும், சில ஆளுங்க போனா அவ்வளவுதான்!வெளியெ மத்தவுங்க 'டான்ஸ்' ஆடணும்! அவஸ்தைதான் போங்க!

தொடரும்............

19 comments:

Anonymous said...

கடைசில சொன்னீங்களே டாய்லெட் க்யூ. வீட்டு ஞாபகத்தை கிளப்பி விட்டுட்டீங்க. ஒரு ஆள் உள்ள இருந்து நாம வெளிய காத்துட்டு இருக்கற பாடு இருக்கே. பல சமயம் நெனச்சு சிரி சிரின்னு சிரிச்சுருக்கேன்

said...

" நீங்க சொல்றதைக் கவனிச்சுக் கேப்போம்"
எல்லா வியாபாரத்துக்கும் அடிப்படையயிற்றே!
ஊஞ்சலுக்கு தனி பீமா?ஊஞ்சல் ஆட்களுக்கு தானே! :-))
GST யோடு 3600 ஆஆஆ!!
தேவையான பல விபரங்கள் மட்டும் குறித்துக்கொண்டேன்.

said...

ஹூம்.... நீங்க சிம்பிளா வாக்குவாதம் அப்படின்னு சொல்லிட்டீங்க. ஐயோ பாவம் கோபால்.

சரி சரி. எவ்வளவு வாக்குவாதமானாலும் கடைசியில் நீங்க சொல்லறதுக்குத்தானே ஓக்கே. அப்புறம் எதுக்கு வாக்கு வாதமெல்லாம்?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

'இப்ப' சிரிப்பாத்தான் இருக்கும். அப்ப?

said...

வாங்க குமார்.

//ஊஞ்சலுக்கு தனி பீமா?ஊஞ்சல் ஆட்களுக்கு தானே! :-))//

இங்கத்து கன்ஸ்ட்ரக்ஷன் கொஞ்சம் வேற மாதிரி. தனியா 'பீமன்' இல்லாட்டி,
வீடு தரைமட்டமாயிரும்:-)))))

இந்த 'ஆஆஆஆஆஆஆஆஆ' இன்னும் ஏழெட்டு மடங்கு கூடிப்போயிருக்கும்
'ஆர்க்கிடெக்ட்' இதே வேலையைச் செஞ்சிருந்தா:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

அதெப்படிங்க எல்லாத்துலேயும் ஜெயிக்க முடியும்? சிலதுலெ படுதோல்வியும்
எனக்குக் கிடைச்சிருக்கு. இட்லியா / தோசையா வாதத்துலே கோபாலுக்கே ஜெயம்:-)

வாதமில்லாத வாழ்க்கை சுவையா இருக்காதுங்களே(-:

said...

துளசி பாத்ரூம் சொன்னீங்களே.அது உண்மை. இந்த ஊரில பாருங்களேன். வீடு பெரிசாயிருந்தாலும் ஒரு ஃபுல் பாத்ரூம். ஒரு ஹாஃப் டாய்லெட். என்னய்யா நியாயம். பக்கத்துவீடு நாலு பெட்ரூம் இருக்கு அங்கியும் 1 அண்ட் ஹாஃப் தான். சொல்ற மாதிரி குளிக்காட்டாப் போவுது. அட்லீஸ்ட் டாய்லெட் வேணுமில்லப்பா.
ஊஞல் நல்லா அமைஞ்சதா.ஹைய்யோ ஆசையா இருக்குப்பா.

said...

வாங்க வல்லி.

எனக்கும் இந்த பாத்ரூம் விஷயம்தாங்க,
ஏன் இங்கெ இப்படி இருக்குன்னு புரியறதில்லை.
'கழுவ'றதுக்குன்னு ஒரு எக்ஸ்ட்ரா குழாய் வைக்கக்கூடாதோ?

அதே மாதிரி டைனிங் ஏரியாவுலே கை கழுவ வாஷ்பேஸின்
இருக்காது.

இந்த அழகுலே 'எண்டெர்டெய்னர் கிச்சன்'ன்னு வச்சுக்கறாங்க.

said...

இன்னும் வீட்டு (துளசிதளத்து) வாஸ்து சரி செய்யலயா..தொடர்ந்து ஒரு பின்னூட்டம் வரைக்குமே காண்பிக்குது உங்க பதிவு.

ஊஞ்சலோட அந்த ஊருலயே கட்டி இருக்கீங்க..இங்க கட்ட எங்களுக்கு எப்ப காலம் வரப்போகுதோ?

said...

நேற்றும் இன்றும் பின்னூட்டம் போட அனுமதிக்க மறுக்குது உங்கபதிவு
இன்று இப்ப 7 காமெண்ட்ஸ் காட்டுது..சின்ன அம்மினி பின்னூட்டம் மட்டும் தெரியுது. அதற்கு மேல்
நகர மறுக்குது...
என்ன ஆச்சு? சிஜி பின்னூட்டம் போட்டா எடுக்காதே னு ஆர்டர் போட்டிங்களா?

இன்றைய பதிவுக்கு என் பின்னூட்டம் இதோ: முடிஞ்சா இணைச்சிடுங்க.

//கூட்டு ஆலோசனை.......அப்புறம்....விவாதம்.............//

வழக்கமான மற்ற மூன்றையும் விட்டுட்டிங்களே:
கூட்டு ஆலோசனை.........
விவாதம்..............................
வறட்டு வாதம்..................
பிடிவாதம்...........................
சரணாகதி!( யாருனு சொல்லனுமா?)

said...

வாங்க முத்துலெட்சுமி.

விவேக் கிட்டேதான் கேக்கணும் என்ன செய்யணும் வாஸ்துவுக்குன்னு:-)

பின்னூட்டம் காமிக்காம இப்படி அளும்பு பண்ணுதுப்பா(-:

said...

வாங்க சிஜி.

உங்க பின்னூட்டம் காப்பி & பேஸ்ட்லே இங்கே போட்டிருக்கேன்.

தொந்திரவோ, இல்லை அதிகப்படி வேலையா நினைக்கலைன்னாவோ,
பேசாம
http://thulasidhalam.blogspot.com/ இதுலே நம்ம வீட்டுக்கு வந்தீங்கன்னா,
பிரச்சனை இல்லை. எல்லாருக்கும் ஒருவழி, இடும்பிக்கு வேற வழின்னு ச்சும்மாவா
சொன்னாங்க? :-)))))

//வழக்கமான மற்ற...............//

இப்படிக் குடும்ப ரகசியத்தைப் போட்டுட்டீங்களே!!!!!

அனுபவம் பேசுதோ? :-))))

said...

டீச்சர், இன்னைக்கும் எனக்கு வேலை செய்யுது.

எனக்கு என்னமோ இந்த அன்னியலோகம்தான் படுத்துதோன்னு ஒரு சந்தேகம். அதை வேணா கழட்டி விட்டுப் பாருங்களேன்.

said...

கொத்ஸ்,

மறுவாழ்வு வேணாமுன்னா சொல்றீங்க? இப்போ வேலை செய்யுது. இன்னும்
கொஞ்சம் பொறுக்கலாம். அப்பத்தான் பூமி ஆள முடியுமாம்:-)

said...

:-)))) aduththathu naalaikku continue pandren. ;-)

said...

நோ ப்ராப்ளம், மை ஃப்ரெண்ட்:-)

said...

பகுதி 2 படிச்சாச்சு. ரொம்ப டீடெய்லாலாலாலாலாலா எழுதுறீங்க - உண்மைலே பொறுமைசாலிங்க நீங்க. பயங்கர நினைவாற்றல். எழுதும் திறமை. நானும் முயற்சி பண்ணணும்.

டாய்லெட் - டான்ஸ் எல்லார் வீட்டுலேயும் ஆடுறது தான். டிஸ்கஷன், டெலிபெரேஷன், ஆர்குயூமெண்ட்ஸ், என்ன தான் சொன்னாலும் கணவண் மனைவி வீடு கட்றதுலே இவ்வளவு ஒத்துமையா கலந்து பேசி முடிவு எடுக்கறது பெரிய விஷயம். ( கோபால் பேசி துளசி முடிவு எடுக்கறது ). அயல் நாட்டுலே வீடு கட்றது உண்மைலே கஷ்டம் தான்னு நினைக்குறேன்

said...

வாங்க சீனா.

இதுலெ அயல்நாடு, உள்நாடுன்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.
கஷ்டம் இஸ் அ கஷ்டம்;-))))

'வீட்டைக் கட்டிப் பார்'னு சொன்னது உள்ளூர் ஆளுங்கதானே? :-)

said...

// வீட்டுக் கூரையோட நிழல் பக்கத்து வீட்டுக்கு மேலெ விழக் கூடாதுன்றதும் முக்கியமா கவனிக்க வேண்டியது! //

இங்கே தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. நல்லவேளை இந்த சட்டம் இங்கு இல்லை. இருந்திருந்தால் எங்கு பார்த்தாலும் வழக்கு வாய்தா என்று இருக்கும்.

// இங்கெல்லாம் வீடுன்னா, புருஷன் & மனைவி ( பார்ட்னர்ஸ்) ரெண்டுபேருலேயும்தான் பதிவு பண்ணுவாங்க! ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு. பின்னாலே பிரிஞ்சு போறதா இருந்தா, அதை வித்துட்டு பாதி பாதி பங்கு போட்டுக்குவாங்க! //

நியூஸியில் , வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடாகவே இருப்பார்கள் போலிருக்கிறது.