Wednesday, August 29, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 15

27/9 ரெண்டு மூணுநாளா அப்படி ஒண்ணும் பெருசா நடந்துடலே. நான் மட்டும் சும்மாப் போய்வந்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு கோபாலும் ச்சீனாவிலிருந்து திரும்பி வந்துட்டார். நேத்து சிங்கப்பூர்லேருந்து கூப்பிட்டார். ஊஞ்சல் சங்கிலி விசாரிக்கறேன்னு சொல்லியிருந்தாருல்லே! யானை போட்ட சங்கிலி இருக்காம். ஆனா நீளம் இல்லையாம்! அதனாலே பித்தளையிலே ஒரு அடி, அரை அடி இப்படி தனித் தனியா இருக்கற கம்பிங்க மாதிரி இருக்கறதும் இன்னும் மாட்டற கொக்கி, பலகைக்குப் போடற குமிழ்ன்னு எல்லாம் பாத்துப் பாத்துதான் வாங்கிட்டு வந்திருக்கார்!
அரை அடி இருக்கும் கம்பிக்கு எனாமல் வேலை செஞ்சு, மரூன் கலரில் ரொம்ப நல்லா இருக்கு.






ஊஞ்சப் பலகைமட்டும் இங்கே நம்ம 'கிங்'குகிட்டே செய்யச் சொல்லணும். அது எப்படி இருக்கும்னு காமிக்கறதுக்கு ஃபோட்டோக்கள் எடுத்து வந்திருக்கார். நாளைக்குதான் நிதானமா அதுகளைப் பாக்கணும்.
ஊர்லே இருந்து வந்தவுடனே பெட்டிங்களைப் பிரிச்சு சாமான்களை எடுத்து வைச்சுட்டு, ஒரு 'டீ' குடிச்சுட்டு வீட்டைப் பார்க்கப் போனோம்! வேலை நடந்துக்கிட்டு இருந்தது! 'மார்னிங் கோர்ட்'க்கு சா·பிட் போட மரம் வச்சி ஃப்ரேம்க்கு அடிபாகத்துலே சேர்த்து அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. இதுவரை நடந்ததைப் பார்வையிட்டாரு. 'கேஸ்' கன்ட்ரோல் பேட்' விஷயம் சொன்னதும் அதை நாமே மாத்தி வைக்கலாமேன்னார். இவருகிட்டே சொல்றேன், 'முதல்லே அந்த கேஸ் ஆளுக்கு ஃபோன் செஞ்சு வரவேணாங்கணும்' . சொல்லி வாய் மூடலை, அந்தஆளு வந்து நிக்கறாரு. நாங்களே செஞ்சுடறோம்னு சொன்னதுக்கு சரின்னாரு. ஆனா வந்துட்டுப் போனதுக்கு நாம காசு கொடுத்தரணுமாம்.சரி, நீங்களே வேலையை முடியுங்கன்னு சொல்லிட்டோம். ரெண்டு நிமிஷ வேலை. போச்சு 40 டாலர்!



அங்கேயிருந்து, 'பாலி ப்ரொடக்ட்ஸ்' போனோம். யானை டிஸைனு பாத்தோம். புள்ளையார்கூட செய்யலாமாம்! நெட்லே பார்த்து கொஞ்சம் படம் எடுத்துக் கொடுக்கணும். கராஜ்க்கு மேலே யானை, மெயின் வாசலுக்கு மேலே பிள்ளையார்னு இருக்கேன்.


அப்புறம் திரும்பிப் போய் 'மாஸ்டர் டிரேட்'லே பாத்ரூம் சாமான்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். 'வேனிட்டீ'தான் மனசுக்குப் பிடிச்சமாதிரி அமையலெ. பாத்ரூமுக்கு இருக்கற 'நக்கரா'வைப் பத்தி தனியா எழுதணும்!

வார்ட் ரோப் கதவுங்க, லாண்டரி & கோட் கப் போர்டுங்களுக்குக் கதவுங்க எல்லாம் ஆர்டர் கொடுக்கற நேரம் வந்தாச்சு. அதை இன்னும் ஒருதடவை அளவெடுத்துக்கிட்டுப் போலாம்னு திருப்பி அங்கிட்டுப் போனோம். அளந்தா 1100மிமீ வருது. ஜெ & ஜி கடையிலே போய் ஆர்டர் கொடுத்தாச்சு! எந்த நிறுவனத்தில் வாங்கப்போறோமுன்னு முடிவு செஞ்சதுக்கப்புறம், வீட்டு வேலை நடக்க நடக்க, அந்தந்தப் பொருட்களின் தேவை வரும்போது சப்ளை செய்யும்படி கேட்டுக்கறதுதான் நடைமுறை. இல்லேன்னா, அந்தப் பொருட்கள் வந்து காத்துக் கிடக்கும். சமயம் வரும்வரை அதைக் காப்பாத்தணும்னு சில தொல்லைகள் இருக்கு. பொதுவா இங்கே சப்ளை செய்ய ஆறுவார காலம் எடுத்துக்கறதாலே, நமக்கு வேண்டிய சமயத்துக்கு ஆறுவாரம் இருக்கறப்ப ஒரு ரிமைண்டர் கொடுக்கவேண்டி இருக்கும்.

ஜன்னல், கண்ணாடிக்கதவுகள் எல்லாம் டபுள் க்ளேஸிங் செஞ்சு வாங்கறோம். வீட்டுக்குள்ளே இருக்கும் உஷ்ணம் நஷ்டப்படாம இருக்க இது உதவுது. மேலும் இங்கேதான் வானத்துலே பெரிய ஓட்டை விழுந்துருக்காமே. ஒஸோன் லேயர்லே ஓட்டை. அதனாலே வெய்யிலு கொஞ்சமா வந்தாலும் அதுலே இருக்கற UV கதிர்கள் உடலைத் துளைச்சுருதாம். எக்கச்சக்க ஸ்கின் கேன்ஸர் இருக்குன்றதாலே சிட்டிக் கவுன்சிலும் இனிமே கட்டும் வீடுகளுக்கு டபுள் க்ளேஸிங் கட்டாயம் இருக்கணுமுன்னு விதி கொண்டு வந்துருக்கு இப்ப. நாங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்புக்காக டிண்ட்டட் கண்ணாடியாப் போடறோம். UV வடிகட்டி? Condensation, mould and extreme heat loss ன்னு இருக்கறதைத் தடுக்கும் சமயம் வெளியே இருந்து வரும் சத்தத்தின் அளவையும் குறைச்சுரும். இதுலே ரெண்டு கண்ணாடிக்கு நடுவுலே எதோ ஒருவகையான வாயுவை நிரப்பறாங்களாம். ஆர்கானிக் கேஸ். அது கண்ணாடியைப் பாதுகாக்குமாம். (அதுக்குத் தனிக் காசு) என்ன தமாசுன்னா, அந்த வாயுவுக்கு மணம் கிடையாதாம். கண்ணாடி உடைஞ்சாலும் வெளியேறும் வாயுவால் சுற்றுப்புறச் சூழலுக்கும், நமக்கும் ஆபத்து இருக்காதாம்.ரொம்ப சுத்தம்:-)))))))))))) எனெக்கென்னவோ 'எம்பரர்ஸ் க்ளொத்' கதை ஞாபகம் வருது:-)))) இருக்கட்டும், அது இப்போதைக்கு வேணாம்.


இந்தியாவில் ஜன்னலுக்குக் க்ரில் கம்பி போடுறது ஒருவிதப் பாதுகாப்பா இருக்குன்ற எண்ணத்தாலே, நாங்களும் கம்பிப் பாதுகாப்போடு கண்ணாடி ஜன்னல் வைக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். க்ரில் கொள்ளையர்களைப் பத்தி அப்ப பேப்பரில் படிச்ச ஞாபகம் இல்லை.கம்பிகளில் அழுக்குப் படிஞ்சு அதைத் துடைக்கும் வேலைக்குப் பயந்துகிட்டு, ரெண்டு கண்ணாடிகளுக்கு இடையில் கம்பி வர்றதுபோல டிஸைன் செய்யச் சொன்னோம்.இங்கே வீட்டுவேலைக்கு உதவியாளர்கள் வச்சுக்கக் கூடிய அளவுக்கு நமக்கு வசதிகள் இல்லை. கம்பி உள்ளே இருக்கறதாலே,ரெண்டு பக்கமும் கண்ணாடியை மட்டும் (கோபால்) துடைச்சாப் போதுமே:-) துடைப்பவர் கையிலும் கம்பி இடிச்சு வலிக்காதே! நல்ல எண்ணமா, இல்லையா? :-)))

30/9
ப்ளம்பர் மேட்' வந்து ஒரே நாளிலேயே எல்லா பைப் கனெக்ஷன் கொடுத்தாச்சு. காசாக் கொடுத்தம்னா கொஞ்சம் குறைக்கிறேன்னு சொன்னாரு. நாங்க கொடுத்தோம். டேங்க் கிடையாது. மெயின் ப்ரெஷர். வீட்டைச் சுத்தி நாலு இடத்துலே வெளியேக் குழாய்களும் போட்டாச்சு. தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தணுமே. மெயின்லே இருந்து கராஜ் வழியாத் தண்ணி வீட்டுக்குள்ளே வருது. அங்கேயே ஒரு ஸ்டாப்பர் வால்வ் போட்டதாலே, தேவைப்பட்டா வெளியே தெருவுக்குப் போகாமலேயே, தண்ணியை நிறுத்தமுடியும்! இந்த ஆளு தனக்கு யாரையுமே உதவியாளரா வச்சுக்கலை. ஏன்னு கேட்டதுக்கு அது ரொம்பத் தொந்திரவாம். தனியாச் செய்யறது ரொம்ப லகுவா இருக்காம். கத்தாமக் கொள்ளாம நிம்மதியா விஸிலடிச்சுக் கிட்டே ப்ளாஸ்டிக் குழாய்களை சீலிங் வழியா இழுத்துக்கிட்டு இருந்தார். ப்ளாஸ்டிக்கைப் பார்த்ததும் எனக்கு பயம் வந்துருச்சு. அதெல்லாம் ஒண்ணும் ஆகாதாம். சூடு தாங்கும் ப்ளாஸ்டிக் தானாம்.

1/10
இன்னைக்கு இவர் சாயந்திரம் வந்து சொல்றாரு, வீட்டுக்கு முன்னாலே மண்ணு கொட்டிவச்சிருக்குன்னு! என்னன்னு போய்ப் பார்த்தா, ஒரு 'ட்ரக் லோடு' மண்ணு யாரோ கொண்டுவந்து கொட்டியிருக்காங்க! 'க்ரேக்'கிட்ட கேட்டால் யாரு போட்டாங்கன்ற விவரம் இல்லே.

2/10
காலையிலே கோவிலுக்கு போறதுக்கு முன்னே போனோம். மண்ணு இருக்கு. யாரோ தப்பான இடத்துக்கு டெலிவரி செஞ்சிருக்காங்க.'ஸ்க்ரீன்' செய்யாத மண்ணு. யாரும் வந்து கேக்கலைன்னா, நம்மத் தோட்டத்துக்கு ஆச்சு.




அப்படியே, 'பாலிகட் polycut' போனோம். பிள்ளையார் படம் நான் அனுப்புனதை ரொம்ப அட்டகாசமாச் சின்னதும், பெருசுமா ரெண்டு செஞ்சு வச்சிருந்தாங்க.zig zag puzzle மாதிரி தனித்தனியா இருக்கு. தனியா வட்டமான வளையம் வேற. வட்டத்துக்குள்ளே வச்சு இணைச்சுத் தருவாங்களாம். அதுக்குமேலே ப்ளாஸ்டரிங் செஞ்சுக் கலர் அடிச்சுக்கலாமாம். அதையே ஒண்ணை வீட்டு முகப்புக்கும், ஒண்ணை கராஜ் மேலே வர்ற இடத்துக்கும் போடலாம்னு முடிவாச்சு. அங்கேயே 'ஃப்ளூட்டட் காலம்'னு அலங்காரத் தூண்கள் வச்சுருக்காங்க. பேசாம அதை வச்சு ஒரு கல்யாண மண்டபம் மாதிரி செட் செஞ்சுக்கிட்டா, உள்ளூர்லே நடக்கும் இந்துக் கல்யாணத்துக்கு அட்டகாசமா அமையும். ஒரு அடி உயரத்தில் ரெண்டு துண்டு தூண் அறுத்து வாங்கிட்டு வந்தோம். அதை மரக்கலருலே பெயிண்ட் அடிச்சு, அதும் மேலே நம்மூட்டு ஹனுமார், பிள்ளையார் விக்கிரகங்களை வச்சா, நல்லா பெடஸ்டல் போல இருக்கும். சும்மாத்தான் தந்தாரு 'ட்ரெவர்'. அதை வீட்டுக்குக் கொண்டுவந்து தங்கநிறமாக்கறேன்னு 'கோல்டன் கலர் ஸ்ப்ரே செஞ்சப்ப, அப்படியே அந்த தெர்மாக்கோல் கரைஞ்சு பொந்துபொந்தாக் குழி விழுந்துருச்சு(-: ( அப்புறம் கேட்டப்பச் சொல்றாங்க, அதை ஒரு 20 செமீ. தூரத்துலே வச்சு ஒரு ஆங்கிளில் ஸ்ப்ரே செய்யணுமாம்.)

3/10
மறுநாள் ஊஞ்சல் போட மேலே கம்பிக்கு அளவெடுக்கப் போனோம். 'ஜீபூம்பா' !!!! மண்ணைக் காணோம். யாரோ சுத்தமா எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. கொடுத்தவனே எடுத்துக்கிட்டாண்டீ:-))) மரச்சட்டத்தை அளந்து, எங்கே கொக்கி வருதுன்னு குறிச்சிட்டு, அளவை எழுதிக்கிட்டு வந்தோம். மழை பேய்ஞ்சு முன்னாலே ரூம்லேயும், கராஜ்லேயும் தண்ணி தேங்கி இருக்கு.



இன்டர்னல் கட்டரிங் போட்டாதான், ஃபேஷியா போடுவதை முடிப்பாங்களாம். அப்புறம்தான், ஓடு வேயற வேலையும் முடிப்பாங்களாம்.எல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பான விஷயம். தண்ணி தேங்கறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலே. ரூஃப்க்கு கறுப்புப் பேப்பர் போட்டு ஏழு நாளைக்குள்ளே ஓடு போடணுமுன்னு இவுங்கதானே சொன்னாங்க?

4/10
மறுபடி இந்த ஒருவாரமா ரொம்ப வேலை ஒண்ணும் நடக்கலே. இன்னைக்கு, காலையிலே ஃபேஷியா முடிச்சாச்சு. ஓடும் கிட்டத்தட்ட முடிச்சாச்சு. இன்னும் கொஞ்சமா பாக்கி இருக்கு. ஜஸ்ட் ஃபினிஷிங் செய்யணுமாம்.

5/10
ச்சும்மாப் போய் பாத்தாச்சு, வெளியிலே இருந்தே! வேலை ஒண்ணும் நடந்த அடையாளம் இல்லை.
6/10
அடுத்தநாள் இவரு, கராஜ் கதவு போடற ஆளுங்களுக்கு ·போன் போட்டுக் கேட்டாராம், எப்ப வேலையை ஆரம்பிக்கப் போறாங்கன்னு? அதுக்கு வந்த பதில் என்ன தெரியுமா?

நேத்தே வந்து போட்டுட்டுப் போயிட்டாங்களாம்! நாங்க வெளியிலே இருந்து பாத்ததாலே ஒண்ணும் தெரியலே. கதவைப் போட்டுட்டு, அதை மேலே இழுத்து வச்சிட்டுப் போயிருக்கறாங்க! ஓப்பனர் இன்னும் போடலை, ஒயரிங் செய்யணுமே.

அப்புறமா சாயந்திரம் போய்ப் பார்த்துட்டு வந்தோம். நல்லா தான் இருக்கு! வொயரிங் வேலையும் ஆரம்பிச்சாச்சு. 'துடைப்பம்' கேட்டதொகை 20,000 $ இது கூலி மட்டும்தான். ரொம்பவே அதிகம். தேவையான ஒயர்கள் நாங்களே வாங்கித் தருவோம். கோபால், அவரோட கம்பெனியில் இருந்து வாங்கிப்பார். நல்ல தள்ளுபடியில் நமக்குக் கிடைக்குது. அங்கே இத்தனை வருசம் வேலை செஞ்சதுக்குண்டான லாபம்:-)))) தேடுனதில் வேற ஆளு கிடைச்சிருக்கு! இவர் பெயர் கேரி.




கதவுக்கு கைப்பிடி, வாசக்கதவு பூட்டு எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு. 3 நாளுலே தரேன்னு சொன்னாங்க.' நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ்' இதுதான் கடையோட பேரு!


ஊஞ்சலுக்கு க்ளாம்ப்ஸ் போட ஒருத்தர் வந்து அளவெடுத்துகிட்டுப் போனாராம்!

தொடரும்...................

Tuesday, August 28, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 14

இன்னைக்கு 'மார்னிங் கோர்ட்'க்கு ஃப்ரேம் வருதுன்னு சொல்லியிருந்தாங்க. பொல்லா......த மார்னிங் கோர்ட்! கூரையின் சரிவில் வானம் பார்க்க ஒரு ஜன்னல் மாதிரி கண்ணாடி பதிக்கிறாங்க. ஸ்லைடிங் கதவு திறந்து, இந்தக் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் இடத்தில் காலையில் உக்கார்ந்து காஃபி குடிக்கலாமாம். கூரைக்குள் வரும் அவுட்டோர் ஏரியா. மத்தியானம் 12.15க்குக் கிளம்பி நடந்தே போனேன். நல்ல வெய்யிலு இருக்குதே, ஒரு எக்ஸர்ஸைஸ் ஆச்சுன்னு! சரியா 30 நிமிசம் எடுக்குது.






அங்கெ போனா ஒரு 'ஈ, காக்கா' இல்லே. அந்த ஃப்ரேம் வர்ற இடத்தை அண்ணாந்து பாத்தா, நட்ட நடுப் பகலிலெ நீலவானத்துலே நிலா தெரியுது! 'நிலாக் காய்கிறது'ன்னு பாட்டைப் பாடிக்கிட்டு கொஞ்சநேரம் நம்ம 'அரண்மனை'யைச் சுத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.அப்புறம் வெயிலு எங்கெங்கே வருதுன்னும் பாத்தேன். மாஸ்டர் பெட்ரூம், டைனிங், சாமி அறை இங்கெதான் கொஞ்சம் வெயிலு இருக்கு! அப்புறம், அங்கெ போட்டுவச்சிருக்கற கட்டைங்க மேல உக்காந்து, ரெண்டு 'ஸ்லோகம்' சொல்லிட்டுக் கிளம்பி வந்துட்டேன்.




நம்ம 'லைப்ரரி'யிலே என்னோட வேலை செய்யற எலிநோரும், அவுங்க வீட்டுக்காரர் ஜானும் இன்னைக்குக் காலையிலே ஒம்பதேமுக்காலுக்கு இங்கேவந்து என்னக் கூட்டிக்கிட்டு போனாங்க. எங்கே? இதென்ன கேள்வி? புது வீட்டைப் பாக்கத்தான்! ரொம்பநாளாக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதான் இன்னிக்குன்னு ஒரு முன்னேற்பாடு.




அப்ப 'ப்ளம்பிங் வொர்ல்ட்' ஆளு வந்து 'இன்ஃபினிடி கேஸ் ஹாட் வாட்டர் ஹீட்டர்' போடறதுக்கு அடுக்களையிலே 'பான்ட்ரி' வர்ற இடத்துலே, ப்ளைபோர்டுலே ஒரு செவ்வகமா வெட்டி, அதுக்கு வெளிப்பக்கம் அந்த 'பாக்ஸ்' வச்சிகிட்டு இருந்தாரு. அப்புறம் ஒரு பெரிய மஞ்சள் கலர் பைப் ஹோஸ் இழுத்துக்கிட்டு வந்தாரு.


அதுக்குள்ளெ நான் நம்ம 'அரண்மனை'யைச் சுத்திக் காமிச்சிட்டு, லைப்ரரிக்கு நேரமாயிடுச்சுன்னு வந்துட்டோம். இதுக்கே 10 நிமிசம் லேட்டாயிடுச்சு லைப்ரரி திறக்க. சரி.......... ஃபீல்ட் ட்ரிப்னு நினைச்சுக்க வேண்டியதுதான்!
நானு மூணு ·போட்டோவும் எடுத்துகிட்டேன். எலிநோருக்கும் ஜானுக்கும் வீடு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். வாசல்லே இருக்கற 'ஹாலி ட்ரீ' நல்லா இருக்கு. அது, புதுசா வச்சா, வளர ரொம்ப நாளாகும். இது நல்ல பெரிய மரம். பழம் வந்தவுடன் பறவைகள் கூட்டமா வரும். அப்படியே விட்டிரு'ன்னு சொன்னாங்க! நம்ம 'ஜாப்பனீஸ் அம்பர்லா' மரத்தையும் வெகுவாப் புகழ்ந்தாங்க! எனக்கும் சந்தோஷமா இருந்துச்சு!




இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் கோபால் ச்சீனாலே இருந்து கூப்பிட்டாரு. அந்த ஃப்ரேம் இன்னைக்கு வரலையாம். நாளைக்குத்தான் வருதாம். பில்டருகிட்டே கேட்டப்ப சொன்னாராம். நானும் 'கேஸ்' போடற விஷயத்தைச் சொன்னேன். விஞ்ஞானம் முன்னேறுனதுலே எவ்வளவு நன்மை பாருங்க! எந்த ஊர்லே இருந்தாலும், உள்ளூர்லே இருக்கற மாதிரியே எல்லாரையும் தொடர்புகொண்டு பேச முடியுது! கைத்தொலைபேசி இருக்கறது ரொம்ப நல்லதாப் போச்சு! நாளைக்குப் போய் பார்க்கறேன்! என்ன ஆவுதுன்னு?


இன்னைக்கு மத்தியானம் 2 மணிக்குத்தான் போக முடிஞ்சது. 'க்ரேக்' தனக்கு உதவியா ஒரு பையனை ஏற்பாடு செஞ்சுருக்கார். பேர் க்ளிண்டன். Bill பில் இல்லே! சாதா:-) ரெண்டுபெரும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஃப்ரேம் வந்து இறங்கியிருக்கு! பாத்தா பெரூசா இருக்கு! ஒண்ணரை மீட்டர் நீளம் இருக்கும்போல!







நாளைக்கு அதை மேலே ஏத்துவாராம்! முன்னாலே வர்ற தூணுக்கு 'பில்லர்' ஆள் வந்துட்டுப் போனாராம். நாளைக்கு 'கராஜ்' முன்னாலே வர்ற வளைவுக்கு அளவெடுக்க ஒரு ஆளு 9 மணிக்கு வர்றாராம்!



அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்! பாத்ரூமில் 'கேஸ்'சுடு தண்ணிக்கு வர 'கண்ட்ரோல் பேட்' 'கேவிடி டோர்' வரும் இடத்துலே வச்சிட்டாங்க. அதை இடம் மாத்தணுமாம். ஸ்பா பக்கம் வர்ற சுவத்துக்கு மாத்தணும்.
மெயின் லவுஞ்சிலே வரப்போற 'ஷோ கேஸ்' பத்தி முடிவு செஞ்சுடணுமாம். 'வாக் இன் ரோப்'க்கு எப்படி செட்டிங், எந்த மாதிரி 'ஷெல்ஃப்' ன்னும் முடிவு செய்யணுமுன்னு க்ரேக் சொன்னாரு. நான் அப்படியே 'லினன் கப்போர்டுக்கு கதவு எப்படி, ஷெல்ப் எங்கே இருந்து தொடங்கும்னு சொன்னேன். சரின்னுட்டு பெரிய வீடு பெரிய வீடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு! அப்புறம், முன்னாலே பில்லர் மேலேபோய் முடியுற இடத்துலே, ஃபேஷியா சரியா உக்காராம இருந்ததை சரி பண்ணியாச்சுன்னு காமிச்சார். டிம்பர் சப்ளை செஞ்சவுங்க நீளம் கூடுதலா செஞ்சுட்டாங்கன்னும், அதைக் கொஞ்சம் நடுவுலே வெட்டி எடுத்துட்டு இணைச்சேன்னும் சொன்னாரு. இப்ப நல்ல உயரமா இருக்கு முன்வாசல்!







நேத்து ராத்திரி, 'லக்ஸ்' ( செண்ட்ரல் வேக்குவம்)ஆளு பேசுனாரு. நாளைக்கு காலேல 10 மணிக்கு நான் 'சைட்'க்குப் போகணும். 'வேக்பேன்' வைக்கற இடத்தை முடிவு செய்யணும்! எங்கெங்கே இன்லெட், அதுக்கு வரும் பைப் எப்படி இணைக்கணுமுன்னு பார்க்கணுமாம்.


திட்டப்படி போய்ச் சேர்ந்தேன். எங்கெங்கே போர்டு வைக்கறாங்க,ஹோஸ் நீளம் எல்லா இடத்துக்கும் எட்டுமான்னு பார்த்து, இடங்களையெல்லாம் குறிச்சுத் தந்தாச்சு! 'வேக் பான்' அடுக்களையிலே சிங்க் வருதுல்லே, அதுக்கு இடது பக்கம் இருக்கற ட்ராயருக்குக் கீழே வைக்கலாம்னு முடிவாச்சு!
அந்த ஆளு, க்ராம்( கிலோ இல்லைங்க) வேலையை ஆரம்பிச்சுட்டாரு. க்ராம்கூட வந்த டோனி எல்லா ஜிப் வேலையும் முடிச்ச பிறகு யூனிட்டை கனெக்ட் செய்வோம்ன்னு சொன்னாரு. கார்பெட்/ வைனல்/வெறும்தரை, சோஃபா மூலை இண்டு இடுக்கு இப்படி ரெண்டு விதமான ப்ரஷ் நமக்குக் கிடைக்குது. இது இல்லாம கர்ட்டன், அப்ஹோல்ஸ்ட்ரின்னு சுத்தம் செய்யும் 'அப் க்ரேட்' ப்ரஷ் விக்கறதுலேயே கவனமா இருக்காங்க! நானும் எல்லாம் முடிச்ச பிறகு, இந்த ரெண்டு ப்ரஷ்-ம் உபயோகிச்சுப் பாத்துட்டு சொல்றேன்னு சொன்னேன்!
கராஜ்லே ஒரு மூலையில் 60 செ.மீ x 60 செ.மீன்னு ஒரு ச்சின்ன கப்போர்டுக்கான இடம்தான் வாக்குவம் க்ளீனர் யூனிட் வைக்கறதுக்கு. அதுக்கு வந்து சேரும்படியான பைப் லைன் போட்டாங்க.





கராஜ் வளைவுக்கு 'பாலீஸ்டைரீன்' செய்யற ஆளு அளவெடுக்க வந்தார். போய்ட் வரைஞ்ச செவ்வக டிஸைன் 'கீ'க்கு பதிலா யானை வருமான்னு கேட்டேன். வரும். என்ன மாதிரி? தும்பிக்கை மேலே தூக்குனதான்னு கேட்டாரு, ஆமாம்னு சொன்னேன். படம் வரைஞ்சு கொண்டுவந்து காட்டிட்டு அப்ரூவ் செய்யலாம்னு சொன்னார். ஹைய்யா யானை வருது!




கிரேக் கிட்ட பேசுனேன். பாலீஸ்டைரீன் வேற யாரு செய்யறாங்கன்னு கேட்டதுக்கு, வேற யாரும் இல்லையாமே! இவரை(யே) நாந்தான் அரேஞ்ச் செஞ்சேன்னு சொன்னாரு.சரின்னு கேட்டுக் கிட்டேன்.இன்னைக்கு ஃப்ரேம் மேலெ போகுதாம். அப்புறமாப் போய் பாக்கலாம்!


ப்ளம்பிங் வொர்ல்ட்க்குப் ·போன் போட்டு 'ஸ்டீவ்' கிட்டே இந்தமாதிரி, சுடுதண்ணிக் கன்ட்ரோல் தப்பான இடத்துலே இருக்குது. அங்கே கேவிடி டோர் வருதுல்லே? ஆனா கோபால் கொடுத்த ட்ராயிங்லே அந்த மாதிரி இல்லையாம். இவரு பழைய ப்ளானைக் கொடுத்துட்டாரோ? அதை இடது பக்கம் மாத்தணும்னு சொன்னேன். ஜிப் இன்னும் போடலேன்னும் சொன்னதுக்கு, ஆளு வந்து மாத்துமாம், ஆனா அதுக்குக் கொஞ்சம் செலவாம். என்னன்னா, ஆளு வந்து போக $40 தரணுமாம். இப்படித்தான் ஒவ்வொண்ணா ஏறிக்கிட்டே போகுது!



24/9
இவ்வளவு களேபரத்துக்கு மத்தியிலும் இணையத்துலே தமிழ் வாசிச்சுக்கிட்டு இருந்த நான் , இன்னிக்குப் புதுசா எனக்கே எனக்குன்னு ஒரு வலைப்பதிவைத் தொடங்குனேன். என்ன பெயர் வைக்கலாமுன்னு முதலில் கொஞ்சம் யோசிச்சவுடன், சட்னு மனசுலே வந்து நின்னுச்சு 'துளசிதளம்.' என்றதுதான். இன்னிக்கு கோபாலுக்குப் பொறந்தநாள். அதனாலே இன்னிக்கே ஆரம்பிச்சு முதல் பதிவும் போட்டேன். கலப்பையை 2 சால் ஒட்டணுமுன்னு தெரியாது. பழைய கலப்பை 1 ணாலே எழுதுனா, எல்லாம் திஸ்கிலெ வருது. காசியை, ஙொய் ஙொய்ன்னு பிடுங்கி, அப்புறம் கலப்பை 2 ஐ இறக்கி ஒருமாதிரி, வலை உலகத்துலே காலு குத்தினேன்:-))))

தொடரும்.........................

Monday, August 27, 2007

இனிமே சமைக்க மாட்டேன்:-)

தினமும் அஞ்சு காய்கறிகள் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காறாம்.



இப்படிச் செஞ்சுவைக்கத் தெரிஞ்சா இனி சமையலே இல்லைன்னு சொல்லிருவேன்.


மகள் அனுப்பித் தந்த படங்களில் சில உங்களுக்கு.

ச்சைனீஸ் கேபேஜ் ஏஞ்சல் மீன்கள், கத்தரிக்காப் பெங்குவின்கள்,அழுதுக்கிட்டு இருக்கும் ஆரஞ்சுன்னு கலக்கலா இருக்கு ஒவ்வொண்ணும்!!!!































Sunday, August 26, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 13

எங்கெங்கே லைட், ப்ளக், ஹீட்டிங் எப்படி, 'அவன்' அடுப்புக்கு மின் இணப்பு அப்படின்னு வரைஞ்சு வச்சிருந்ததை கோபாலுடன் சேர்ந்து விளக்கியாச்சு. இனி துடைப்பம்தான் சொல்லணும் அதுக்கு என்ன செலவாகும்னு! எனக்கு வீடுன்னா நல்ல வெளிச்சமா இருக்கணும். ஃபோட்டோ எடுத்தா, அது பளிச்சுன்னு இருக்கணும். அதுதான் நான் வெளிச்சத்தை அளக்கற ஸ்கேலு. இருட்டு இருட்டா 'மணி ரத்னம்' படம் போல இருக்கற லைட்டிங் எஃபெக்ட் எனக்குப் பிடிக்காது. பாக்கலாம், எப்படி இருக்கப்போதுன்னு.


அப்புறம் ஃபார்மல் லவுஞ் & டைனிங் ரெண்டுலேயும் ஜன்னல் கண்ணாடியை இன்னும் கொஞ்சம் டார்க்காப் போடலாம்னு தோணுச்சு. ஏன்னா பக்கத்து வீடு, ரொம்பப் பக்கமா இருக்கற மாதிரியும், அங்கேயிருந்து கை நீட்டுனா நம்மத் தொட்டுடலாம் மாதிரியும் இருக்கு! வேலியில் இருந்து மூணு மீட்டர் இடைவெளி இருக்கு. ஆனா இப்ப நாம இருக்கற 311லே பக்கத்து வீடுன்னு ஒண்ணு இருந்தாலும், அவுங்களுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. யாரோ ரெண்டு மாசம், மூணு மாசமுன்னு வாடகைக்கு இருக்குறாங்க.. ....இப்பப் புது வீட்டுலே பக்கத்துவீடு, நிஜமாவே 'பக்க்க்கத்த்து' வீடா இருக்கு!


பில்டிங் பேப்பர் போட்டு முடிச்சாச்சு! சாஃபிட் வீட்டைச் சுத்தி அடிச்சாச்சு! கராஜ்லே கதவு வர்ற இடத்துலே ஃப்ரேம் போட்டிருக்கு.வீடு முழுசும் நல்லா துடைப்பத்தாலெ பெருக்கி வச்ச மாதிரி சுத்தமா இருந்துச்சு!
நேத்து, நம்ம 'துடைப்பம்' வந்து பாத்துட்டுப் போனதால வந்த எஃபெக்டோ?


ஊஞ்சல் இடத்துலெ இன்னொரு மரச்சட்டம் போடறதுக்கு ஞாபகப் படுத்தணும் 100வது முறையா!

ஓடு வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு!


மத்தியானம் 'சென்ட்ரல் வாக்குவம் க்ளீனர்' போடறத்துக்கு ஃபைனலைஸ் செஞ்சாச்சு. $2300 ஆகுது! அடுக்களையிலே வர்ற குப்பையை அப்படியே உறிஞ்சற vac pan க்கும் சேர்த்துதான் இது. வாக்குவம் க்ளீனரை இழுத்துக்கிட்டுப் போக வேணாம். அந்த ஹோஸ் மட்டும் கொண்டுபோய்
அங்கங்கே சுவரில் இருக்கும் 'இன்லெட்'லே பொருத்திக்கலாம்.



நாளைக்கு கோபால் லீவ் எடுத்திருக்காராம். நாளக்குப் போய் இன்னும் 'கராஜ் டோர்' பாக்கணும்! வீடு கட்டும் வைபவத்துக்கு அப்பப்ப ஒண்ணு ரெண்டுநாள் லீவு எடுத்துக்கிட்டா என்ன தப்பு? சனி ஞாயிறுன்னா எல்லா நிறுவனங்களும் திறக்கறதில்லையே.



காலேல 9 மணிக்கெல்லாம் 'கராஜ் டோர்' இடத்துக்குக் கிளம்புனோம். போற வழிலே கார்பெட், வைனல் விக்கற கடைக்குப் போனோம். வைனல் டைல்ஸ் புது மாதிரியா அட்டகாசமா இருக்கு. விலை தோராயமா 150 டாலராம் ஒரு சதுர மீட்டருக்கு! 'மாவுக்கேத்த பணியாரம்!' அங்கேயிருந்து, அந்த பெரியவர் 'பில் ( phil)' சொன்ன இடத்துக்குப் போனோம். அவுங்கதான் இதை இங்கே இறக்குமதி செய்யறவங்களாம். இங்கிலாந்துலே இருந்து வரணுமாம். அதைப் போடறதுக்குத் தனிக்கூலி!


அப்புறமா 'கராஜ் டோர்' இடத்துக்குப் போனோம். அங்கெ ஒரு விதமா டிஸைனைத் தேர்ந்தெடுத்துட்டு, பேரமெல்லாம் பேசி, புதுசா வந்திருக்கற 'ஓப்பனர் பேரு கோப்ரா' நல்லா இருக்குல்லே, (கோபாலுக்கு பாம்புன்னாவே பயம்) அதையும் சேர்த்துத் தரேன்னதும் அக்ரிமெண்ட்லே கையெழுத்து போட்டுட்டு திரும்புனோம். அவங்க வந்து அளவெல்லாம் எடுத்துப்பாங்க.



ஹார்வி நோர்மன் அப்படின்னு இங்கே ஒரு பெரிய கடை இருக்கு. பெரும்பாலான கடைகளில்' எங்களிடம் வந்து வீட்டுச் சாமான்களை வாங்கிக் கொள்ளுங்கள். 2006 வருடம் பணம் கட்டினால் போதும்' என்றெல்லாம் விளம்பரம் செய்து, நம்மை இழுக்கப் பார்க்கிறாங்க. அதுபோல விளம்பரம் செய்யும் கடைதான் இது. ( இப்ப 17 மாசத்துக்கு வட்டியில்லாம பொருட்கள் தர்றோம்,வா வான்னு விளம்பரம் செஞ்சுருக்காங்க) அங்கெ ஒரு எல்.ஜி. வாஷிங் மெஷின் $700 இருக்கிறது.அதைவிடக் கொஞ்சம் பெரிசு $1100 ! ஒரு கிலோ துணி கூடுதலாக துவைக்குமாம்! அதில் ஏதாவது ஒன்று வாங்கிக்கணும். வீடு கட்டுறது ஒரு பக்கமுன்னா, அங்கே போட வேண்டிய சாமான்களுக்கு அலையறது இன்னொரு பக்கம்.





மத்தியானம் நம் 'கிச்சன் கிங்' தயாரித்து வைத்திருந்த சமையலறை கப்போர்டுகளை, அவர் வீட்டுக்குப்போய் பார்வையிட்டோம். ச்சும்மா சொல்லக்கூடாது! ரொம்ப நன்றாக மிகவும் உயர்தரத்தில் சூப்பரா இருக்கு. 'பாண்ட்ரி' பலகைகள் பெருசா இருக்கு. ரயிலில் தூங்கறமாதிரி பெர்த்லே ஏறி படுத்துக்கலாம். அந்தக் காலத்துலே முன்பதிவு இல்லாத ரயில் பயணத்துலே, சாமான்கள் மட்டும் வைக்கும் வலைபோட்டச் சின்னத் தட்டுலே ஆளுங்க வளைஞ்சு, உடம்பை குறுக்கிப் படுத்துக்கிட்டு வருவாங்க. அந்த இடத்தைப் பிடிக்கவே ஒரு அடிதடியாகும்:-) கிச்சன் மேசையா வரப்போகும் பகுதி, மரத்தில் செஞ்சுருக்கு. கை வச்சா மழ மழன்னு வழுக்கிக்கிட்டு போகுது. ரொம்ப நல்லா செஞ்சிருக்கார் 'ராசா'




ஏற்கெனவே ரெடிமேடா தயாரிச்சு இருக்கும் அடுக்களைன்னா மலிவாவே கிடைக்கும். எல்லாத்துக்கும் ஒரு ஸ்டேண்டர்டு சைஸுலே செஞ்சுருக்கும். நானோ உயரம் கம்மி. வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கும் பழக்கமும் இல்லை. உயரம் என்னதான் 10, 15 செண்டி மீட்டர் கூடுனாலும், கை வலி, தோள்பட்டை வலி வந்துருது. அதுக்காகவே என்னுயரத்துக்குத் தகுந்தமாதிரி ஸ்பெஷலா செய்யறோம். (அதானே.........பதிவு எழுதும் கைக்கு வலி வரலாமா? )



இன்னைக்குப் பொழுது விடிஞ்சவுடனெ செஞ்ச காரியம் என்ன தெரியுமா? புது வீட்டிலே போய் கண்ணு திறந்தது! என்ன ஆச்சுன்னா, நேத்து 'ப்ளம்பர்' வரேன்னு சொன்னாருன்னு கிரேக் சொன்னதால அரக்கப் பரக்கன்னு ஓடி அவுங்க சொன்னநேரத்துக்குப் போய் உக்காந்துகிட்டு இருந்தோம்! அதுக்குள்ளே ஃபர்னிச்சர் எல்லாம் போட்டாச்சான்னு கேட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க! காருக்குள்ளெதான் உக்காந்து இருந்தோம். சொன்ன நேரம் தாண்டிப் போச்சு. யாரையுமெ காணோம். பிறகு, ஃபோன் செஞ்சா, அவரு சொல்றாரு அடுத்த வியாழக்கிழமைன்னு தானே சொன்னேன். 'காது காதுன்னா லேது லேது'ன்னு இல்லாம எல்லாம் சரியாக் கேட்டுக்கணும்னு நினைச்சுகிட்டு, இன்னைக்கு வரமுடியுமா, கோபாலு நாளைக்குச் சீனா போறாரேன்னு சொன்னதும், அவரு' ஐயோ இன்னைக்கு நான் 'மெளண்டன் பைக்'லே சவாரி போறேனே' அப்படின்னார். அப்ப போறதுக்கு முன்னாலே முடியுமான்னு வேண்டிக்கேட்டதுக்கு, சரி காலையிலே 7.30 மணிக்குன்னு முடிவாச்சு.



அந்த ஆளு பேரு 'மேட் Matt' நல்ல ஆளா(?) இருந்தாரு. நம்ம குளியலறையிலே தரையை கழுவிவிடற தண்ணி போறதுக்கு வழி வேணும்னு பிரத்தியேகமா சொல்லி அதை ட்ராயிங்குலேயும் போட்டிருக்கு. அதைக் கவனிக்காம இந்த க்ரேக் சிமெண்ட் போட்டாச்சு!வெள்ளைக்காரங்களுக்கு இந்த கழுவறது என்னன்னு தெரியாது.'எல்லாமே தொடைச்சுப் போடறதுதான். 'க்ரேக் என்கிட்டே எங்கே சம்ப் வருதுன்னு கேட்டதுக்கு நடுவிலேன்னு சொன்னேன். அப்படியும் இந்த மாதிரி செஞ்சிட்டாரு.


இந்த மேட், அதை சரிபண்ணிக் கழுவி விடற மாதிரி பைப் வச்சுடறென்னு சொல்லி வயித்துலே பாலை வார்த்தார்.ஆனாலும் 'கெஸ்ட் டாய்லெட்'டைத் தொடைச்சுதான் ஆகணும். அங்கே ஒண்ணும் செய்ய முடியாது!


இன்னைக்கு கோபால் 'ச்சீனா'வுக்குப் போறார். வர 10 நாளாகும். அதனாலே காலேல 9 மணிக்கு( கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலே) போனோம். நான் நினைச்சுகிட்டு இருக்கேன், நாளின் வேற வேற நேரத்துலே போய்ப் பார்த்தாதான் எவ்வளவு வெய்யல், எங்கெங்கே வருதுன்னு தெரியும்.
சாமி இடத்துக்கு நல்ல வெய்யில் இருக்கு. எங்க படுக்கை அறையும் பரவாயில்லே. ஆனா எங்க பாத்ரூமுக்கு அட்டகாசமா வெய்யில் வருது!
டைனிங், கிச்சன் பரவாயில்லே. நல்ல வெயில். லிவிங் ஏரியா ரொம்பவும் சுமார்தான்!

தொடரும்....................

Saturday, August 25, 2007

மாவேலி நேரத்தே வந்நூ

கேரளாவுக்கு போற வழியிலே, இன்னிக்கு இங்கே கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்துட்டு போனார் நம்ம மாவேலித் தம்புரான்.


அவருக்கு அருமையான பூக்களத்தோடும் பதினெட்டுவகை ஓண சத்யாவோடும் வரவேற்பு கொடுத்து அனுப்பி இருக்கோம்.


'மாவேலி வருந்ந திவசம் மனுஷரெல்லாம் ஒண்ணுபோல' ன்னு ஒரு சொலவடை இருந்தாலும், இன்னிக்கு எங்க கேரளா அசோஸியேஷன் தலைவர் சொன்னது என்னைக் கொஞ்சம் (!) சிந்திக்க வச்சது.


"இயற்கையின் நிகழ்வுகளைப் பார்த்தால் ஒரு புல் கூட ஒண்ணைப் போலவே ஒண்ணு இருக்காது. அப்படி இருக்கும்போது மனுஷர்கள் எல்லாம் எப்படி ஒரே போல இருக்கமுடியும்? "


நியாயம்தானே? இங்கேயும் சொல்வாங்க, ஸ்நோ விழும்போது ரெண்டு 'ஸ்நோ ஃப்ளேக்ஸ்' கூட ஒண்ணைப்போல ஒண்ணு இருக்காது. பில்லியன் கணக்குலே விழும் பனித்துகள் இப்படியா!!!!!



ஒண்ணுவேணுமுன்னா இப்படிச் சொல்லிக்கலாமா?


மாவேலி வருந்ந திவசம் மாத்திரம் மனுஷரெல்லாம் ஒண்ணுபோல:-))))

இன்று ஒரு நாளாவது நமக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் சச்சரவுகள் எல்லாம் கொஞ்சம் தூர நிறுத்திட்டு மனமகிழ்ச்சியோடு எல்லாரும் இந்த ஓணப் பண்டிகையைக் கொண்டாடலாமா?

அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துக்கள்.

எல்லாவர்க்கும் பொன் ஓணத்திண்டே ஆசம்ஸகள். லோகம் நன்னாயி வரட்டே!






இந்த வருசத்தின் பூக்களம் நம்ம கேரளா சங்கத்தின் ஆண்கள் உண்டாக்கியது. அதனாலெ பூவும் ஸ்பெஷல் பூவு.

அப்படி என்ன பூவு?

தேங்காய் பூ !!!!






திருவாதிரைக் களி ( இது இல்லாம ஓணக் கொண்டாட்டமா? )


முக்கிய விருந்தினரை விளக்கு ஏத்தி வைக்கச் சொன்னோம். ஆளுக்கு ஒரு திரிதான்.



உள்ளூர் எம்.பி.& இப்ப ஆளும் கட்சியாயிருக்கும் லேபர் அரசில் Chief Whip .இவருக்குக் கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது, ஒரு பையனுடன்.

நியூஸியின் லேபர் கட்சி பாராளுமன்ற அங்கத்தினர் டாக்டர் அஷ்ரஃப் செளதரி இந்த விழாவுக்காக வந்திருந்தார். (120 ஓட்டு இருக்கே விடமுடியுமா? )

இவரைப் பற்றிய சில தகவல்கள்.


இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பஞ்சாபில் பிறந்து வளர்ந்தவர். நியூஸி வந்தது 1976 வருடம்.


இவருடைய பதவியேற்கும் வைபவத்தில், திருக்குரானைக் கையோடு கொண்டுவந்து , அதன் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் செய்தார். இனி வரப்போகும் இஸ்லாமிய அங்கத்தினர்களுக்கு பயன்படட்டுமேன்னு அந்தப் புனித நூலை இங்கே பாராளுமன்றத்திற்கே கொடுத்துட்டார். அப்படியே மரபையும் மாத்திட்டார்ன்னு வச்சுக்குங்க. நியூஸியின் முதல் எத்னிக் எம்.பி.


அவரோடு அறிமுகமானப்ப, அவர் ஹிந்தியில் பேச ஆரம்பிச்சுட்டு, உடனே உங்களுக்கு ஹிந்தி தெரியுமான்னுகேட்டார்.


"ஆப்கோ ஹிந்தி ஜாந்தாஹை கியா? "


"க்யோன் நை. சப்ஜன் ஹிந்தி பட்னே ச்சாஹியே போல்கி தம்கி தியானா ஆப் நார்த் லோக்"


" சவுத் லோக் கோ தேக்தே ஹம்கோ பஹூத் டர் லக்தா ஹை"


" அச்சா பாத் ஹை. அய்ஸாகி ஹோனா ச்சாஹியே"


(ஒவ்வொரு வரிக்கிடையிலும் பலத்த சிரிப்புன்னு போட்டுக்குங்க.)



கலை நிகழ்ச்சியில் நம்ம பாய்ஸ் ஒரு ஹிந்திப் பாட்டைப் பாடுனாங்க. நம்ம கேரள உச்சரிப்பில்.


திகைச்சுப்போனவர், அவருடைய உரையை நிகழ்த்தும்போது நல்ல ஹிந்தியில் சற்றுநேரம் பேசினார்.


" ஹமாரா பாய்ஸ் கா கானா கைஸா தா? கான் பக் கயா கியா"



"எங்கே ஹிந்தி மறந்துறப் போகுதோன்னுதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஹிந்தியில் பேசிட்டேன்"



(ஒவ்வொரு வரிக்கிடையிலும் பலத்த சிரிப்புன்னு போட்டுக்குங்க.)
பதிவின் பத்திகளுக்கிடையில் கூடுதலா இடம் இருக்கா? கவலையே இல்லை. அதுலே மகிழ்ச்சி & ஆனந்தம் நிரப்பி வச்சுக்கலாமா?

Thursday, August 23, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 12

11/9
ரெண்டு மூணு நாளா ஓடு வேயற வேலைதான் நடந்துகிட்டு இருக்கு. 'ஸ்டீல்' ஓடுங்க, 7 சேர்ந்த மாதிரி நீளமா இருக்கு!அதை அப்படியே முன்னாலே போட்ட 'பில்டிங்' பேப்பரு' மேலே அடுக்கிக்கிட்டு இருக்காங்க! கலர் ஸ்டீல் ஓடுகள் 50 வருச உத்திரவாதத்தோடு வருது. என்ன, இங்கே நிதானமா யோசிக்க முடியாது. ஆரம்பத்துலேயே வீட்டோட கலரை முடிவு
செஞ்சுக்கிட்டுத்தான் வேலையைத் தொடங்கணும்.

கலருக்கு இவ்வளவு முக்கியமா? ஒருவிதத்துலே இதுவும் ஞாயம்தான். கலரில்லாத உலகைக் கற்பனைச் செஞ்சு பாருங்கோ......................



12/9
இன்னைக்குப் பாருங்க, கடைக்குப் போயிட்டு வரவழியிலெ எதேச்சையா(!) நம்ம புது வீட்டுப் பக்கம் போறோம், அங்கே ரெண்டு ஆளுங்க நின்னு வேடிக்கை பாத்துகிட்டு இருக்காங்க. நான் மெல்ல அவுங்க பக்கம்போய் நின்னு, 'வீடு நல்லா இருக்கா?' ன்னு கேட்டேன். அவுங்க 'ஆமா, ரொம்ப பெரிய வீடா இருக்கு. நல்லா இருக்கு'ன்னு சொல்லிட்டு. 'வீடு உங்களுதா'ன்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னதும் அவுங்க, 'நாங்க பின்பக்கத்துத் தெருவுலே இருக்கோம். தினமும் இங்க வீட்டுவேலை நடக்கறதைப் பாத்துகிட்டு வர்றோம். ஆமா........ வீட்டுக்குள்ளே ஊஞ்சலு போடறீங்களாமே? என்ன மாதிரி? முன்னாலே அலங்காரத் தூண் வேற வருதாமே'ன்னு கேட்டாங்க!

'நம்ம வீட்டுலே நாம செய்யறது எல்லாமே இவுங்களுக்கு எப்படித் தெரிஞ்சது'ன்னு எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விசாரிச்சா விஷயம் வெளீயிலே வந்தது. நம்ம பில்டர் சொன்னாராம்!

அடுத்தவுங்க விஷயம் தெரிஞ்சு அதுலே மூக்கை நுழைக்கிற ஆளுங்க இங்கேயும் இருக்காங்கன்றது இப்ப வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுபோச்சு!இதெல்லாம் மனுஷ சுபாவம்தானே? மனுஷன் அடிப்படையிலே ஒரேமாதிரிதான்! தோலோட 'கலரு'தான் வித்தியாசம்!



அவுங்க போனபிறகு, நம்ம வண்டிக்கு முன்னாலே நிறுத்தி வச்சிருந்த காருலே இருந்து ஒரு வயசான ஜோடி இறங்குனாங்க. அவுங்க மெதுவா நம்ம வீட்டுவாசல்லே வந்து நின்னாங்க. அதுக்கு முன்னாலேயே கோபால் போய் நம்ம வண்டிலே உக்காந்து, அதை கிளப்பத் தயாரா இருந்தார். நான் வீட்டுகுள்ளெ இருந்து அப்பத்தான் வாசலுக்கு வர்றேன்.
நான் நம்ம பண்பாட்டை அனுசரிச்சு, வாசலிலே நிக்கறவங்களை என்ன, ஏதுன்னு விசாரிச்சேன். அவுங்க ரெண்டு தெரு தள்ளி இருக்கறவங்களாம். அவரும் ஒரு 'பில்டர்'ங்கறதால இந்த வீடு எப்படி கட்டி இருக்காங்கன்னு பார்க்க வந்தாங்களாம்!


நானும் 'உடனே' வந்து பாருங்க. நீங்க பில்டர்ங்கறதாலே ஒரு 'செகண்ட் ஒப்பீனியன்' கொடுங்க. வேலை தரமா இருக்கா? ஏதாவது விட்டுப் போயிருக்கான்னு பாருங்க'ன்னு சொன்னேன்.

அதுக்குள்ளெ கோபால் வண்டியிலேருந்து இறங்கி வந்து எங்களொட சேர்ந்துகிட்டார். சின்ன அறிமுகத்துக்குப் பிறகு, எல்லொருமா உள்ளெ போய் அறை அறையாச் சுத்திக் காட்டினோம்.






நம்ம '·பேமிலி லிவிங்' இடத்தைப் பாத்துட்டு, இது 'பால் ரூம் டான்ஸ்'க்கான இடமா(!)ன்னு கேட்டாங்க. அப்புறம் யாரு இந்த வீட்டை 'டிஸைன்' செய்தது, கால அட்டவணைப்படி வேலை நடக்குதா, எந்த மாதிரி 'ஹீட்டிங்' போடறோம் அப்படி இப்படின்னு எல்லா விஷயத்திலும் 'மூக்கை நுழைச்சிட்டு' நம்ம 'கராஜ்' கதவுக்கு மேலே ஒரு 'ஸ்டீல் ·ப்ரேம்' வச்சா, கதவு திறக்க மூட நல்லதுன்னு சொன்னாங்க.நாம 'ஆட்டோமாடிக்' கதவுதான் போடறொம். ரிமோட் கண்ட்ரோல் வைக்கறோம்.


காரிடார் இல்லாமக் கட்டி இருக்கோம் என்றதே எல்லாருக்கும் ஆச்சரியம். இங்கத்து வீடுகளில் ஒரு மீட்டர் அகலத்துக்கு நடைபாதை வாலாட்டம் நீண்டு போய்க்கிட்டு இருக்கும். எனக்கு என்னமோ இது பிடிக்கலை. சுவத்துலே உடம்பை இடிச்சுக்கிட்டு நடக்கறமாதிரி தொந்திரவு.


அப்புறம் மூலைங்களிலே வர்ற ஜன்னலுங்களுக்கு இன்னும் கொஞ்சம் 'சப்போர்ட்' தரணும். அந்த மூலைகள் கனம் தாங்கணும்னு சொன்னாரு.கேட்டுகிட்டோம். அதையும் கொஞ்சம் சரிபாத்துரணும்! எதுக்கு வம்பு?




எல்லாரும் கேக்கற ஒரு கேள்வி, 'எப்ப குடிவருவீங்க? எப்ப கட்டிடம் ரெடியாகும்?' கிறிஸ்மஸ்க்கு வந்துருவீங்களா? அவங்களோட ஒரே பெரிய பண்டிகை கிறிஸ்மஸ். அதுக்கு புது வீடுங்கறது அவுங்களுக்குப் பெரிய விஷயமா இருக்கு. நமக்கு அப்ப மார்கழி மாசமாச்சே!


"யாருக்குத் தெரியும்? எல்லாம் வீட்டுக்குள்ளெ இருக்கற வேலைங்களெ முடிக்க ஆளுங்க கிடைக்கிறதைப் பொறுத்துதான்! எலக்ட்ரீசியன்,ப்ளம்பர், ஜிப் போடறவங்க, பெயிண்ட், கார்பெட், வைனல்ன்னு பலதும் இருக்குல்லே!
எப்படி இருந்தாலும், தை மாசம் முடிஞ்சிடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு!"


இன்னொண்ணும் சொல்லணும். இங்கெ வீட்டுவேலை நடக்கற இடத்துலே ஒளிவு மறைவுன்னு ஒண்ணுமே இல்லை. சுத்திவர வேலிகூட இல்லை. யாருவேணா உள்ளெ போயி பாக்கற மாதிரிதான் இருக்கு. வாசலில் 'டேஞ்சர்'னு போர்டு வச்சுருக்கறதை யாருமே சட்டை செய்யறதில்லை போல.


எனக்கொரு ·பீலிங், உள்ளெ வேற யாரோ வந்து போறாங்கன்னுதான்! எப்படின்னா,அங்கே ஒரு இடத்துலே நான் பாத்த ஃபேண்டா ஆரஞ்சு பாட்டில், மறுநாள் வேற இடத்துலே இருந்தது! அந்த வீக்கெண்ட் யாரும் வேலை செய்யலே. அதனாலே வேலையாட்கள் வரலேன்னு நமக்கு நல்லாத் தெரியும்! அப்புறம், விருந்தினருக்கான கழிப்பறையிலே ஒரு ஃப்ரேம், யாரோ அழுத்தி அடிச்ச மாதிரி, அதோட ஆணியிலேருந்து உடைஞ்சு கீழே நழுவி இருந்துச்சு.


கோபாலுக்கென்னன்னா வீடு கட்டற நாம், வெள்ளைக்காரனா இல்லாததால யாரோ விஷமிங்க அப்படி செய்யறாங்களோ ஒரு சந்தேகம். 'நாம அங்கெ அடிக்கடி போகக்கூடாதோ' ன்னு சொன்னாரு.

"நல்லா இருக்கே நியாயம்! நாம கட்டற வீடு. நாம போகாம ஊருலே இருக்கற மத்தவனுங்கெல்லாம் போகணுமா? அப்ப நாம வீடுகட்டி முடிச்சுட்டாலும் அங்கெ குடிபோகவே முடியாதா?"


"அது வேற. அப்ப ஆளுங்க வீட்டுலே வசிப்போம்லெ."

"வேணும்னு செய்யறவன் அப்ப வரமாட்டானா? இப்ப அது காலி வீடு. நாம போயிட்டா எல்லா சாமானும் ரொம்பிடும் இல்லெ. அப்ப ஏதாவது விஷமி, எதுன்னாச்சும் செஞ்சா, நஷ்டம் இன்னும் கூடுதல்லாச்சே!"


13/9 இன்னும் கூரைவேலைதான் நடந்துகிட்டு இருக்கு. கூரை வேயற ஆளு கொஞ்சம் 'சுள்'னு இருக்கறதா நம்ம பில்டர் சொன்னாரு! அதனாலே நாங்க அவ்வளவா பேச்சு வச்சுக்கலெ. ஆனா இன்னைக்கு போனப்ப, இந்த ஓடுங்க எப்படி வேயறாங்கன்னு எங்களுக்கு இருந்த சந்தேகத்தைக் கேட்டோம். அந்த ஆளு நல்லா, விளக்கமா சொன்னாரு. அவருக்கு நாங்க வச்சிருந்த 'சுள்ளான்'ங்கற பேரை மாத்திரலாமான்னு யோசிக்கணும்!



இன்னொண்ணும் கவனிச்சேன், அவரு கீழே இருந்த எல்லா ஓடுங்களையும் எடுத்து, ஒரு இடத்திலே அழகா அடுக்கி வச்சிட்டுப் போனாரு!






வீட்டைச் சுத்தி 'கி·ப்ட் பார்ஸல்' பொட்டலம் மாதிரி ·ப்ரேம்கார்டு பேப்பர்' சுத்த ஆரம்பிச்சிருந்தாங்க! 'சப்போர்ட்'க்குக் கொடுத்திருந்த சட்டங்களையெல்லாம் எடுத்திருந்தாங்க! 'மாஸ்டர் பெட்ரூம்'பக்கம் ஓடு முழுசாப் போட்டாச்சு. இன்னும் 'பேரல் ட்ரிம்' கொஞ்சம் பாக்கி.

14/9
நுழைவாசல்லெ ஓடு போடறதுக்கு சரியான ஃப்ரேம் இல்லைன்றமாதிரி இருந்துச்சுன்னு நம்ம 'போய்ட்'க்குத் தகவல் சொல்லி அவரு காலையிலே வந்து பாத்து என்னவோ விளக்கம் சொன்னாராம். இப்ப அதை சரிபண்ணிகிட்டு இருக்காங்க.





எலக்ட்ரீசியன் வறேன்னு சொன்னதால மத்தியானம் 2 மணிக்குப் போனேன். கோபாலும் வேலையிலிருந்து அங்கெ வந்துட்டார். வீடு முழுசும் ஃப்ரேம்கார்டு பேப்பர் போட்டாச்சு!



வீட்டுகுள்ளெ வெயில் ரொம்ப கொஞ்சமாத்தான் வருது. அங்கே இருந்த சமயம் ரொம்பவெ குளிராவும் இருந்துச்சு. நம்ம எலக்ட்ரீசியன் பேரை நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க! 'துடைப்பம்'. ஐய்யய்யோ திட்டலைங்க. இதுதான் பேரே Broom!

தொடரும்...............

Tuesday, August 21, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 11

வீட்டு வேலை தொடங்கி 2 மாசம் முடிஞ்சிடுச்சு! மத்தியானம் போனேன். கூரையெல்லாம் ஃப்ரேம் போட்டாச்சு. நாளைக்கு ஃபேஷியா fascia போடறவங்க வர்றாங்களாம். வீட்டுச்சுவரும் கூரையும் இணையும் இடத்துலே 'சட்'ன்னு கூரை நின்னுடாதில்லை? சரிஞ்சு இறங்கி வரும்போது சுவருக்கும், வெளிப்புறம் நீட்டிக்கிட்டு இருக்கும் கூரையின் ஓரத்துக்கும் ஒரு அரை மீட்டர் இடைவெளி இருக்கு. இந்த அரை மீட்டர் அகலத்துக்கு 'ஸ்டீல் தகடு' போல வர்ற போர்டு, வெளிப்புற 'ஸீலிங்'மாதிரி வீட்டைச் சுத்திப் போடறாங்க. இதுக்கு (soffit)சாஃபிட்ன்னு பேராம். இந்த சாஃபிட் ஓரத்தை மூடறதுதான் ஃபேஷியாவாம். அதுக்கு மேலேதான் மழைத்தண்ணி வழிஞ்சு ஓடறதுக்கு(guttering) 'கட்டரிங்' உக்காருது.







கூரையின் கலர்லேயே ஃபேஷியாவும், மழைத்தண்ணீ வழிஞ்சோடும் கட்டரிங் தெரிவு செஞ்சிருந்தோம். நியூ டெனிம் ப்ளூ. சிலர், வெளிப்புற சுவரின் நிறத்திலும் போட்டுக்கறாங்க.

கூரை, சுவர், கட்டரிங்ன்னு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு தனி கம்பெனி. எல்லார்கிட்டேயும் ஒப்பந்தம் போட்டுவச்சிருக்கோம். இவுங்க எல்லோரையும் ஒருங்கிணைச்சு வேலை வாங்கறதுக்குள்ளே................... இதுலே பில்டரோட ஒத்துழைப்பும் வேணும். பெரிய தலைவலின்னுதான் பில்டிங் கம்பெனிகளுக்கு மொத்தம் காண்ட்ராக்ட் விட்டுடறாங்க மக்கள். நம்ம அப்படியெல்லாம் அடங்குற ஆட்களா? வேலியில் போற ஓணானை.................



நுழைவாசல் கதவுக்கு முன்னால் வரவேண்டிய தூணுக்கு அடி இன்று போட்டாச்சு. காங்க்ரீட் மேடைமாதிரி போட்டு , தூண் அதுக்குள்ளே இருந்து வர்ற மாதிரி இருக்கும். அந்தத் தூண் கனத்தை தாங்கணும்னு உள்ளே சிமெண்ட்லே ஒரு இரும்பு 'க்ளாம்ப்' வச்சு அதுலே ஒரு நல்ல மரத்தண்டு இணைக்கணுமாம்..அதைச் சுத்தி 'ஃப்ளூட்டட் காலம்' வரும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்லே வார்த்து எடுப்பாங்களாம்.


இன்னைக்கு முதல் 'வஸந்தகாலம்' வந்தாச்சு. செப்டம்பர் ஒன்னுன்னு தேதியைப் பார்த்ததும் குளிர் கொஞ்சமே கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு ஒரு தோணல்! மனுஷ மனசு இருக்கே..............


ஃபேஷியாவுக்கு சாமான்கள் வந்து இறங்கியிருக்கு. 'பில்டிங் பேப்பர்' போட ஆரம்பிச்சிருக்காங்க. நேத்து போட்ட சிமெண்ட் நல்லாக் காஞ்சு போச்சு. அந்த 'க்ளாம்ப்'லே மரத்தூணை வச்சு இணச்சாச்சு. இந்த தூண்கள் மொத்தம் நாலு. ரெண்டு நுழைவாசலுக்கும்,மற்ற ரெண்டும் 'காரேஜ்' கதவை ஒட்டியும் வருது!
நான் முந்தியே சொன்ன மாதிரி இங்கே வீடு கட்டறதுக்கு ரொம்ப 'நக்ரா'தான். ஏகப்பட்ட மரம் செலவாயிருக்கு. இன்னத் தேதிக்குப் பார்த்தா, மரச்சட்டங்களா கூட்டமா ஒரு காடு மாதிரி இருக்கு. இனி அதை மூடறமாதிரி, ஒரு பில்டிங் பேப்பர், செங்கல், அதுக்குமேலே சிமெண்ட் ப்ளாஸ்டர். இதெல்லாம் வெளிப்புறம். உள்ளே வேற வைத்தியம்! பிங்க் பேட், ஜிப் போர்டு, ப்ளாஸ்டர்ன்னு கூடிக்கிட்டேபோகும். சரி எப்படியோ குளிராம இருந்தாச் சரின்னு இருக்கேன்.




'ஃபேஷியா' போட ஆரம்பிச்சாச்சு! 'கராஜ்'க்கு முகப்பு 'பாலிஸ்டைரீன்' என்கிறதாலே அங்கே '·ப்ரேம் கார்ட்' பேப்பர் போட்டு இருக்கு. கோபால் மத்தியானம் போனாராம். அங்கெ நாம் தேர்ந்தெடுத்த 'பாத் டப்' க்கு இடமில்லையாம். சின்னதா இருக்குதாம் இடம். ஒதுக்குன இடம் இப்ப எங்கே போச்சு? அதனாலே நாளைக்கு முதல்லே 'பாத்ரூம் ·பிட்டிங்கு ·பைனலைஸ்' செய்யணும்னு சொன்னார்.


4/9
இன்னைக்கு மகளுக்கு பிறந்தநாள். ஆச்சு வயசு 21. இந்த வீடு நமக்குப் பிறகு அவளுக்குத்தானே போய்ச் சேரும்! இதுவரை மகள் ஒருநாள்கூட இங்கே வந்து பார்க்கலை! கட்டி முடிச்சபிறகு வரேன்னு சொல்லி இருக்காள். நாங்கெல்லாம் அந்தக் காலத்துலே அப்பா அம்மாகூடப் போக ஆலாப் பறப்போம். இப்பத்துப் பசங்களுக்கு ஆர்வம் வேற விஷயங்களில் இருக்கு. இந்தப் பிறந்தநாளை இங்கே கொண்டாடுறது ரொம்ப முக்கியமாம். 21 வயசுன்றது அவுங்களை, 'அடல்ட் சமுதாயத்துக்குள்ளே கொண்டுவரும் வயசாம். அதுக்கு அடையாளமா பெரிய சாவியைப் பரிசாத் தருவாங்க. உலகத்தைத் திறக்கும் திறவுகோல்!!!!



பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் பிள்ளைங்களே பண்ணிக்கறதாலே, நமக்கு அந்த அலைச்சல் கிடையாது. நம்மைக் கூப்புட்டாங்கன்னா நாமும் போய் கலந்துக்கிட்டு, மறக்காம அங்கத்துச் செலவுகளுக்கான பில்லை செட்டில் செஞ்சுட்டு வரணும். கூப்புடலைன்னா? பில் வந்தபிறகு செட்டில் செஞ்சாப் போதும்:-)


மறுநாள் காலையிலெ கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலெ ''அங்கே' போனோம். (அங்கேன்னா இதுக்குள்ளே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். தெரிலென்னா நீங்க பதிவுகளைச் சரியாப் படிக்கலேன்னு அர்த்தம்:-)
'க்ரேக்' வேலை செஞ்சுகிட்டு இருந்தார். எல்லா அறைகளிலும் மூலைகள் சேருமிடத்தில் எல்லாம் ஒரு 'ப்ளை போர்டு' அடிச்சுகிட்டு இருந்தார். ஊஞ்சல் வர்ற இடம் எதுன்னு சொன்னார். அங்கே ஏற்கெனவே போட்ட மரச்சட்டத்துக்கு சப்போர்ட்டா இன்னொரு கனமான மரம் போடணும். அதுக்குள்ள 'க்ளாம்ப்' க்கு ஏற்பாடு செய்யணும்.


நாங்க ஏற்கெனவே எந்த மாதிரி பாத் டப்'ன்னு தீர்மானிச்சு அதுக்குத் தகுந்த மாதிரிதான் 'ப்ளான்' வரையச் சொன்னோம். இப்பப் பாத்தா இடம் சின்னதா ஆயிருக்கு! நமக்கு 1850 மில்லிமீட்டர் வேணும். ஆனா இருக்கற இடம் 1800க்கும் கொஞ்சம் துளியூண்டு கம்மி. அதனாலே அதே மாதிரி பாத் டப் சின்ன சைஸ் வாங்கணும். அதே மாதிரி விருந்தினருக்குள்ள 'டாய்லெட்'டில் கைகழுவும் பேசின் வைக்கற இடமும் சின்னதா ஆயிருச்சு. அதுக்கும் சின்ன சைஸ்தான் தேர்ந்தெடுத்தோம். மரச்சட்டம் அடிக்கும்போது, அகலம் கூடுனதை,ரொம்ப திக்கா இருக்கறதை அடிச்சு வச்சுட்டதாலே 20,30ன்னு மில்லி( மீட்டர்)கள் காணாமப் போயிருக்கு. இப்ப இன்னும் ச்சின்னதாத் தேடணும்(-: 500 மிமி இப்ப 450 மிமி. அம்பது போயே போயிந்தி!



குளிக்கறதுக்கு ஷவர் ஹெட், தண்ணி மிக்ஸர் ( சுடு தண்ணீ, பச்சைத்தண்ணீ கலக்கறதுக்கு) இதுக்கெல்லாம் நாம 'க்வோட்' வாங்குனது ரொம்ப நல்ல தரமானது. இப்ப பட்ஜட் கையைக் கடிக்கறதாலெ சுமாரா வாங்குனா போதும்னு என் எண்ணம். ஆனா கோபால்தான் 'ஒரேடியா இப்படி சொல்லறயே, கொஞ்சம் நல்லதாவே வாங்கலாம்' னு சொல்லி, மறுபடி எல்லா குழாய், ஷவர் சாமான்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கும்படி ஆகிருச்சு! இதுலேயே நிறைய நேரம் போயிடுச்சு.

இதுவரைக்கும் நூறு தடவை ( சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஆனாலும் ஒரு 30 தடவை இருக்கும்) இந்தக் கடைங்களைப் பாத்து கொஞ்சம் அலுப்பாவே ஆயிடுச்சு!


தினம் இதே வேலைன்னு இன்னைக்கும் போய் அளந்தோம். லாண்டரிக்குப் பக்கத்துலெ வர்ற கப்போர்டுக்கு 'பை ·போல்டு' கதவு போட்டா அங்கே அடியிலெ 'வெட் க்ரைண்டர்' வைக்க இடம் கிடைக்கும்னு கோபால் ஐடியா கொடுத்தார். வெரிகுட்! இப்படித்தான், எதிர்ப்பார்க்காத நேரங்களில் சில சூப்பர் ஐடியாக்களை வெளியிடுவார்!



இப்பல்லாம் வீடு இருக்கற இடத்துக்குப் போனா, இங்கே என்ன சாமான் வைக்கணும்,அங்கெ என்ன வருது அப்படின்னு கவனமா இருக்கறதாலெ நேரம் இழுத்துகிட்டுப் போயிடுது.


ஆனாலும் 'சாமி ரூம்'தான் மனசுக்குத் திருப்தியா இல்லை. சின்னதா இருக்கறதுபோல இருக்கு! ரொம்பச் சின்னது இல்லை, ஆனாலும்சின்னதுதான். இனி ஒண்ணும் செய்ய முடியாது. 'அடுத்த வீடு' கட்டறப்ப கவனமா இருக்கணும்னு நினைச்சுகிட்டேன்!



'ஃபேஷியா( fascia)' போட்டு முடிச்சாச்சு. அப்படியே 'கட்டரிங்' போடுவாங்க நாளைக்குன்னு நினைக்கிறோம். இருட்டின பிறகுதான் போனோம்! அங்கெ தெரு விளக்கு பிரகாசமா இருக்கறதாலெ எல்லாம் நல்லாவே பாக்கமுடியுது!


சாயந்திரமா கோயிலுக்குப் போகணும்னு கிளம்பினோம். இன்னைக்கு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியாச்சே! அதுக்கு முன்னலெ 'வழக்கமா போற' இடத்துக்கும் போனோம்! மேற்கூரை போடறதுக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு. ஒரு ஆள் நிறைய ஆணிங்களை நல்ல இடைவெளி (ஒண்ணுபோல இருந்தது) விட்டு அடிச்சுகிட்டு இருந்தார். 'பில்டிங் பேப்பர்' வந்து இறங்கி இருந்தது. இருட்டும்வரை வேலை செய்வாராம்.


இதுக்கிடையில் நம்ம நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் இருக்காங்களேன்னு அவுங்களைப் பாக்கப் போனோம். அப்படியே வீட்டுவேலை எவ்வளவு நடந்திருக்குன்னும் பார்க்கணுமில்லே, கூரை மேலே black colour 'பில்டிங் பேப்பர்' போட ஆரம்பிச்சு ரெண்டு அறைகளுக்குப் போட்டுருக்காங்க! அந்த பேப்பருக்குமேலே ஆணியிலே சப்போர்ட் கொடுத்து மரச்சட்டங்கள் உக்காந்து இருக்கு. Therma craftன்னு சொல்ற பேப்பர் அது. இந்தப் பேப்பரைப் போட்டபிறகு, அதுக்குமேலே 'ஸ்டீல் ஓடு'ங்க வருமாம். பேப்பரு போட ஆரம்பிச்ச 7 நாளுக்குள்ளே ஓடு போட்டுரணுமாம். இதே பேப்பரைத்தான் வீட்டைச் சுத்தியும் செங்கல் வைக்கறதுக்கு முன்னாலே போடணும். அது வெள்ளை நிறம். இது வீட்டுக்குள்ளே இருக்கற சூட்டைத் தக்க வைக்கறதுக்குத்தான்!



அந்தப் பேப்பரைக் கொஞ்சம் கிழிச்சுப் பார்த்தோம். நல்ல 'திக்' ஆகத்தான் இருக்கு. கொஞ்சம் 'தோல்' மாதிரி இருந்தது. 7 நாளைக்குள்ளே ஓடு வரணும். அதுக்குள்ளெ மழை வந்துச்சுன்னா, பேப்பர் கெடுமோ, தண்ணீ ஊறிடுமோன்னு கவலையா இருந்தது. கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சுக் கொண்டுவந்து தண்ணீலே போட்டுப் பார்த்தோம். தாமரை இலை போல, தண்ணி நிக்காம ஓடுச்சு. எதா இருந்தாலும், மழை வரக்கூடாதேன்னு சாமியை வேண்டிகிட்டு இருக்கேன்!


ஆணிஅடிச்சாங்க பாருங்க, அதுக்குமேலெ 'பில்டிங்' பேப்பரு போட்டு, அதை ஒட்டி சின்ன மரச்சட்டங்களை வச்சு அடிச்சிருக்காங்க. இப்ப வீடு இருட்டா இருக்கு. ஒருநாளைக்கு வெயில் இருக்கறப்ப வந்து பாக்கணும், எங்கெங்கே எவ்வளவு வெயில் வீட்டுக்குள்ளெ வரும்னு தெரிஞ்சிக்கலாம்!
'மார்னிங் கோர்ட்'க்கு 'போய்ட்' சரியா டிஸைன் போடாததாலே அதுக்குண்டான மரம், டிம்பர்காரங்க அனுப்பலையாம்! நம்ம 'பில்டர்' மரச் சட்டங்களை அறுத்து, ஒரு ஃப்ரேம் பண்ணி போட்டார். இதாலெ ஃபேஷியா வேலை கொஞ்சம் தாமதமாயிருச்சு!



தொடரும்......................





பாருக்குள்ளே நல்ல நாடு

இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு நிறைவைக் கொண்டாட ஒரு ஒன்றுகூடல்நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சிருந்துச்சு எங்க இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப். எல்லாருக்கும் வசதியா இருக்கணுமுன்னு ஞாயித்துக்கிழமைக்கு வச்சிருந்தாங்க.சாப்பாடு 'Pot luck' வகை.
நான் என்னுடைய வழக்கமான ஐட்டம் 'எலுமிச்சை சாதம்' கொண்டு போகலை. அதுக்கு பதிலா இருக்கவே இருக்கு புளியோதரை:-))


சம்பிரதாயமான சடங்குகள் ஒண்ணுமில்லாமத்தான் இந்த விழா. இப்போதைய சங்கத் தலைவர் எல்லாரையும் வரவேற்று நாலு வார்த்தை சொன்னார். அப்புறம் வடக்கு, தெற்கு,கிழக்கு, மேற்குன்னு மக்களை குழுவா நிக்கச் சொன்னார். (நாங்க அவர் சொல்றதுக்கு முன்னாலேயே தெற்கெல்லாம் ஒரு இடத்துலே தானாவே குழுவா நின்னுத்தான் பேசிக்கிட்டு இருந்தோம். அது என்னவோ....... எங்கியாவதுநம்ம மொழி பேசறவங்களைப் பார்த்தாக் காலு தானாவே அங்கெ நகர்ந்து போயிருது.)

இன்னொரு தமிழ்க்குடும்பம், ஒரு கர்நாடகா, ஒரு பாலக்காடுன்னு நாங்க 8 பேர். ஒரு தெலுங்குக் குடும்பம் ரெண்டு பிள்ளைகளோடு வந்துருந்தாங்க.
அப்புறம் தலைவர் சொன்னதுபோல வட்டமா கைகோர்த்து நின்னு 'சாரே ஜஹாங் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடுனோம். அப்புறம் ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களோடு கை குலுக்கி, அவுங்களோட மொழியில் வணக்கம், கேம்ச்சோ, நமஸ்தே, எல்லாம் சொன்னோம்.

தெலுங்குப் பொண்ணு வயசு எட்டு இல்லை ஒம்போது இருக்கும் ஒரு தெலுங்கு பாட்டுப் பாடுச்சு. தெலுகு கொப்பதி, தெலுகு தீயதி, அம்மா நானான்னு இருக்கும்போது மம்மி டாடின்னு சொல்றது எதுக்குன்னு பொருள் வரும் பாட்டு. நானும் நினைச்சேன் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடலாமான்னு. கூடி இருக்கும்கொஞ்ச மக்களையும் விரட்டிவிட்டாப் பாவம் இல்லே?

பஞ்சாபி, பெங்காலின்னு சிலர் அவுங்க மொழியிலே கொஞ்சம் பேசுனாங்க. இப்பத் தமிழில் பேசணும். யாரு? எல்லாம் நாந்தேன். முன்னறிவிப்பு இல்லாததால் தயார் செஞ்சுகொண்டு போகலை. ஆனாலும் ஒரு ரெண்டு மூணு நிமிஷத்துப் பேச்சுதானேன்னு கவனமா, பேச்சு மொழியைத் தவிர்த்து மேடைப்பேச்சாவே சிலவிஷயங்களைச் சொன்னேன்.

"அனைவருக்கும் வணக்கம்.நான் தென் இந்தியர்கள் சார்பாக இங்கே பேச வந்திருக்கின்றேன்.ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்ற நான்கு மானிலங்களும் சேர்ந்ததுதான் தென் இந்தியா.

இந்தியாவின் சுதந்திர தினவிழாவைக் கொண்டாடி, சுதந்திரம் கிடைக்கப் பாடுபட்ட பெரியோர்களை இன்று நினைவு கூர்ந்தோம். இந்த சுதந்திரத்துக்கு வட இந்தியர்களைப் போலவே தென்னிந்தியர்களும் பாடுபட்டார்கள். அதை ஒரு போதும் மறக்கக்கூடாது. மகா கவி சுப்ரமணிய பாரதி, விடுதலைப் போராட்டத்தின் போது, பல தேச பக்திப் பாடல்களை இயற்றி மக்களுக்கு தேசிய உணர்வை உண்டாக்கி இருக்கிறார். 'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு' என்ற பாடல் சற்றுமுன் நாம் பாடிய 'சாரே ஜஹாங் சே அச்சா' என்ற அதே பொருள் உள்ளது.

வட இந்தியர், தென் இந்தியர் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக வாழவேண்டும். ஜெய் ஹிந்த்"

(கொஞ்சம் சொதப்பிட்டேனோ? சட்னு ஒண்ணும் பேசத் தோணலைப்பா)

எப்படியோ, கொஞ்சம் தமிழோசையை அந்தக் கூட்டத்தில் பரவவிட்டேன்னு சொல்லிக்கலாம்.

தற்போதையத் தலைவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் விடுமுறைக்கு இந்தியா போனப்ப எடுத்த சபர்மதி சத்தியாகிரக (காந்தி) ஆசிரம வீடியோக் காட்சியைக் காமிச்சார். அதுக்கப்புறம் பஞ்சாபி நண்பர்கள் கொஞ்சம் பாடுனாங்க. எல்லாருமாச் சேர்ந்து பாடியது,

'யே மேரி வதன் கி லோகோ,
ஜரா ஆங் மே பர்லோ பானி,
ஜோ ஷஹீத் ஹுயேன்ஹி உன்கி,
ஜரா யாத் கரோ குர்பானி.

இந்த சங்கம் ஆரம்பிச்சப்ப (1997லே) சுதந்திர தினப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தப்பாட்டை, இசைக்குழுவோடு அருமையாப் பாடின 'நீலு'வையும் நினைச்சுக்கிட்டேன். என் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருந்த சங்கத்தின் ஸ்தாபகர் பொருள் பதிந்த பார்வை ஒன்றை என் மேலே வீசினார். சங்கத்தின் பத்து வருச வளர்ச்சியைக் கண்ட பெருமிதம் அவர் முகத்தில். இருக்காதா பின்னே?:-)

'ஜன கண மன'ன்னு தேசிய கீதம் எல்லாரும் சேர்ந்து சத்தமாப் பாடுனோம். அப்புறம் சாப்பாடு. தற்போதையக் கலாச்சாரத்தின்படி 'அந்தாக்ஷரி' இருக்கு உணவுக்கு அப்புறம். அதுக்கெல்லாம் நிக்கப் பொறுமை இல்லாமல், கிளம்பினோம். எங்க கூடவே தென்னிந்தியா முழுசும் கிளம்பிருச்சு:-))))

இப்ப என்ன தோணல்ன்னா, கவிஞர் முகம்மது இக்பால் 'சாரே ஜஹாங் சே அச்சா' எழுதுனது 1904-இல். நம்ம பாரதியார் 'பாருக்குள்ளெ நல்ல நாடு' எழுதுனது எப்ப? எந்த வருஷம்? வஹாங் ஸே யஹா(ங்) வா இல்லை யஹா(ங்) ஸே வஹா(ங்)வா? இல்லே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமல் 'கிரேட் மென் திங் அலைக்'கா?

தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

இந்தப் பார் இப்போ Bar ஆக மாறி இருக்கறதுக்கு இன்னொரு புலம்பல், இன்னொரு நாளைக்கு வரப்போகுது.

Saturday, August 18, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 10

நல்லவேளையா ராத்திரியிலேருந்து மழை . நல்லதாப்போச்சு, சிமெண்டுக்கு!
காலையிலே மொத வேலையா 'பாத்ரூம்' டிஸைனுங்களைப் பாத்தோம். வீட்டுலேதான் ' இன்·பர்மேஷன் புக், ப்ரோஷர்ஸ்' கொட்டிக் கிடக்கே! முடிவு செஞ்சது என்னன்னா, இப்போதைக்கு பேசாம இருந்துட்டு, ஃப்ரேம் வந்தபிறகு யோசிக்கலாம்னு.( சும்மா இருப்பதே சுகம்)




மத்தியானம் 'பனிமழை' பெய்ய ஆரம்பிச்சது. ராத்திரி தூங்கறப்பக் கூட ஓயாமல் பனி விழுந்துகிட்டு இருக்கு.

காலையிலே ஊர் முழுசும் 'வெள்ளைப் போர்வை' போத்திக்கிச்சு! வெளியே தலை காட்ட முடியாது. ஆனா பார்க்க ரொம்ப அழகாவும் இருந்ததை மறுக்க முடியாதுல்லே!



இன்னைக்கு 'காங்க்ரீட்' தரையை ஒரு சின்ன மெஷின் வச்சு கீறுவாங்களாம். அப்போதான், அது உஷ்ணத்துலே விரியும்போது தரைபிளந்து, வெடிக்காம இருக்குமாம். ஒரு 'இஞ்ச்' ஆழம்தான் வெட்டுவாங்களாம். அடியிலே இருக்கற அழுத்தம் வெளியாகும்போது ஆபத்து வராதாம் இப்படி வெட்டுனா.
இவர்தான் இன்னைக்குப் போய்ப் பார்த்தார். அவுங்க வெட்டிட்டு போயிட்டாங்களாம். இனி வேலை புதன்கிழமைதானாம்.





'West lakes timber' கம்பெனியில் இருந்து மரச்சட்டங்களும், போஸ்ட்களும் வந்திறங்கிவிட்டன. சாயந்திரமாக, 'கிங்'கைப் பார்த்து, சமையலறை 'பெஞ்ச் டாப்' கலரை உறுதி செய்து விட்டு, $8000 அட்வான்ஸ் கொடுத்தோம்.

நல்ல வேளை, இதுவரை மழை பெருசா வரலே! வீடு 'வளர' ஆரம்பிச்சுடுச்சு! 'மாஸ்டர் பெட்ரூம்' லே இருந்து ஆரம்பிச்சிருக்காங்கன்னு இவர் சொன்னாரு. நான் அப்புறம் போனேன். அடுக்களையிலே பாதிவரையும், செகண்ட் பாத்ரூம் வரையும் ·ப்ரேம் வந்தாச்சு. இப்பத்தான் வீடு மாதிரி ஷேப் வருது! நல்லாத்தான் இருக்கு!







எல்லா மரச்சட்டமும் அப்படியே ஆணி அடிச்சு ஜன்னலுக்கு இடம் விட்டு, ஃப்ரேம் ஃப்ரேமா வந்திருக்கு. கொஞ்சம் வேலை தெரிஞ்சவனா இருந்தா நாமே கட்டிரலாம்போல! 'லட்டு லட்டு' டா இருக்கு. அப்படியெ எடுத்து எடுத்து அடிக்கறாங்க. நம்பர் எல்லாம் போட்டு, வரிசையா அடுக்கி வந்திருக்கு. வீடு கட்டறது இவ்வளொ சுளுவா?.......... 'கிரேக்' நிறையக் கூலி கேட்டுட்டாரோன்னும் இருக்கு! இனிமே ஒண்ணும் செய்ய முடியாதில்லே! வெறும் மரச் சட்டமா வாங்கிதான் எல்லோரும் தருவாங்களாம். பில்டர்தான் அங்கங்கே தேவையான அளவு வெட்டிக்கணுமாம். இப்ப எல்லாமே அளவுப்படி இணைச்சு வந்தது லகுவா இருக்காம். நல்ல கம்பெனியில்தான் ஆர்டர் கொடுத்தீங்கன்னு எங்களுக்குப் பாராட்டுவேற வழங்குறார் கிரேக்! எல்லாம் கடவுள் விட்ட வழின்னு மனசைச் சமாதானப் படுத்திக்க வேண்டியதுதான்!



நம்மூர்லே அந்தக் காலத்துலே சுத்தியலை வச்சுக்கிட்டு 'டொக் டொக்குன்னு ஆணி அடிக்கிறமாதிரி இல்லாம மின்சாரத்துலே இயங்கும் ட்ரில்போல ஒண்ணை வச்சுக்கிட்டு படபடன்னு ஆணியைத் தட்டிவிடறார்.ஆணி புடுங்கறதும் சுலபம். அதே ட்ரில், ரிவர்ஸ்லே வேலை செய்யுது.
ஒரு பில்டர், ஒரு உதவியாளர். அவ்ளொதான் மொத்த டீம்:-)











இப்பத்தான் போய்ப் பாத்துட்டு வந்தேன். முழு வீட்டுக்கும் ·ப்ரேம் அடிச்சாச்சு! எல்லா ரூம்லேயும் உள்ளே போய் உலாத்திட்டு வந்தேன்! க்ரேக் சொன்னது ' வீடு பெருசா இருக்கு!' எனக்கு அப்படி ஒண்ணும் பெருசாத் தெரியலை. இப்ப நாம இருக்கற அளவுதான் இருக்கு! என்ன ஒரு 'வாக் இன் ரோப் & பாத்ரூம்' மாஸ்டர் பெட்ரூம்லே இருக்கு! மேல்கூரைக்குள்ள 'பீம்கள் அடுத்தவாரம்தான் போடறாங்களாம். கொஞ்சம் ·போட்டோக்கள் எடுத்தேன்!











மறுநாள் நாங்க ரெண்டுபேரும் போய்ப் பார்த்தப்ப, 'கிரேக்' எல்லா மரச்சட்டங்களுக்கும், இன்னொரு தடிமனான சட்டத்தை வச்சுச் 'சப்போர்ட்' கொடுத்துட்டு, எல்லா அளவையும் சரிபார்த்துகிட்டு இருந்தார். அங்கங்கே தட்டிக் கொட்டி நேராக்கணுமாம்!



நம்ம அடுக்களைக்கு ஆர்டர் செஞ்சிருந்த 'சிங்'கும், குழாயும் வந்துருச்சுன்னு 'ப்ளேஸ் மேக்கர்' கடையிலெருந்து ·போன் வந்துச்சு. போய்வாங்கிட்டு வந்ததும், நம்ம 'கிங்' வந்து எடுத்துகிட்டுப் போனார். வீடு முடியறதுக்குள்ளெ அடுக்களை ரெடி ஆகிடும்போல இருக்கு! அடுக்களையில் ரெட்டை சிங். வலதுபக்கம் சிங் அடியில் வேஸ்ட் மாஸ்டர் ஒண்ணு வைக்கணும். அதனாலே அந்தப் பக்கத்து சிங்லே தண்ணி வெளியே போகும் வழி விட்டம் கொஞ்சம் பெருசா இருக்கணும். சமையல், சாப்பாடு மீதி எல்லாம் அதுக்குள்ளே தள்ளிவிட்டால் அது கூழா அரைச்சு தண்ணீரோடு கலந்து கழிவு நீர் குழாயில் சேர்ந்துரும். நம்ம மிக்ஸி மாதிரி அரைச்சுரும். முருங்கைக்காய் தோல், வாழைப்பழத்தோல் எல்லாம் போட்டுறக்கூடாது. ப்ளேடுலே சிக்கிக்கும். எந்த மிஷின் ஆனாலுமே கொஞ்சம் கவனமா இருக்கணும். சிலசமயம் ஸ்பூன் உள்ளே விழுந்துருச்சுன்னா,அடிபட்டு மாட்டிக்கும்.


இன்னைக்கு வீட்டுக் கூரையோட மரச்சட்டம் அடிக்கறாங்க! இவரு போய்ப் பார்த்தார். அப்படியே 'தாற்காலிகமா பவர் சப்ளை' கேட்டிருந்தோம்ல. அதுக்கு ஒரு ஆளு வந்து தெருவுலே இருந்து 'பவர் போர்டு' வரை கனெக்ஷன் கொடுத்தாச்சு. நாளைக்கு வேறஆள் வந்து அந்த 'ஃப்யூஸ்' போடுவாராம்! இதுவரை நடந்துக்கிட்டு இருந்த வேலைக்கு நம்ம பக்கத்து வீட்டுலே இருந்து மின்சாரம் எடுத்துக்கிட்டு இருந்தோம். அந்த மாச மின்சாரக் கட்டணத்தை நாங்க அடைச்சுடறோமுன்னு சொல்லி, அப்படியே செஞ்சோம்.



'சிங்'குலெ ஏதோ 'டென்ட்' இருக்குன்னு 'கிங்' ·போன் செஞ்சார். நாளைக்கு அதைத் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கணும்! இங்கே கடையில் பிரச்சனைகள் செய்யமாட்டாங்க.


இன்னைக்கும் சரியான மழை! அதனாலே யாரும் வேலை செய்யலே! மரச்சட்டங்கள் மழையிலே நனைஞ்சா ஊறிக்கிட்டு பொதபொதன்னு ஆயிருமோன்னு இன்னொரு கவலை. எல்லாமே ட்ரீட்டட் மரம். நனைஞ்சாலும் ஒண்ணுமே ஆகாதுன்னு இவர் சொல்லிக்கிட்டு இருந்தார்.

நிறைய (அஞ்சாறு) நாளா இந்தப் பக்கம் வரலை? இல்லையே, சனிக்கிழமை அந்த அவசரத்துலேயும் காலையிலெ கோயிலுக்குப் போறதுக்கு முன்னே வந்து பாத்தமே............. இப்பத்தான் ஞாபகம் வருது!








ராத்திரி இருட்டுனபிறகு போனோம். வீட்டுக்கு முன்னாலே ரெண்டு பக்கமும் தெருவிளக்கு இருக்கு. அதனாலெ எல்லாம் 'பளிச்'ன்னு தெரியுது! மேல் கூரைக்கான ஃப்ரேம் கிட்டத்தட்ட போட்டாச்சு. நாளைக்கு வந்து மீதியை முடிச்சுடுவாங்களாம்! ரூஃப் போடறவங்க, கலர் ஸ்டீல் ஓடுகளைக் கொண்டுவந்து போட்டுவச்சிட்டு போய் இருக்காங்க! மரச்சட்டங்கள் கூட்டமாக் காடுபோல நிக்குது. ஒரு வீட்டுக்கு இவ்வளொ மரமா? காடுகள் அழிஞ்சுக்கிட்டு வர்ற காரணம் இதானா?









தொடரும்...................

Thursday, August 16, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 9

ஒரு வீடு கட்ட ரெண்டுநாள் லீவு போடக்கூடாதா? போட்டார். காலையிலே 'வழக்கம் போல' போய்ப் பார்த்தோம். முழுசும் கருப்பு பாலித்லீன் ஷீட்போட்டு, மேலே கம்பி வச்சிருந்தாங்க. அவுட்லைன்லே ஆணி அடிச்சுகிட்டு இருந்தாங்க. மத்தியானம் கவுன்சில் இன்ஸ்பெக்ஷன் இருக்காம்.நாங்க அப்படியே 'கார்ட்டர்ஸ்' கடைக்குப் போய், உள்ப்புறக் கதவுங்க டிஸைன்களைப் பார்த்து எல்லாக் கதவுங்களுக்கும் 'ஆர்டர்' கொடுத்தோம். மொத்தம் 20 கதவுங்க. சிலது கண்ணாடி இல்லாதது.பலது கண்ணாடி பொருத்தியது. சிலசமயம் கதவுக்கு அந்தப் பக்கம் ஆள் இருக்கறதுதெரியாம வேகமாத் திறந்துட்டு ச்சின்னச்சின்ன விபத்து நடந்துருக்கு. முக்கியமா காஃபி, டீ எல்லாம் கொட்டிரும். கொட்டுனதுகூடப் பரவாயில்லை, அதுக்கப்புறம் அந்த இடத்தை, கார்பெட்டைச் சுத்தம் செய்யறதுக்குள்ளே தாவு தீந்துரும். அதை மனசுலெ வச்சுத்தான் கண்ணாடிக் கதவு.




எனக்குப் புராதனசாமான்கள், கலைப்பொருட்கள்னு கொஞ்சம் பைத்தியம் இருக்கு. இதுமட்டுமா? இன்னும் நிறைய இருக்குதான். அதெல்லாம் அப்புறம் ஒருநாள் சாவகாசமாச் சொல்றென். யுனீக்கா இருக்கற பொருட்களைப் பார்த்தால் மனசு பரபரங்கும். இதுலே நம்ம வீட்டு முன்வாசக் கதவை இந்த ஊரில் இல்லாத ஒரு டிஸைன்லே செஞ்சுக்கலாம்னு எண்ணம். கதவுன்னா கதவு இல்லை. அதுலே பொருத்தும் கண்ணாடியில்தான். அப்படியே ' Lead light design' போய் , 'வாசக் கதவு'க்கு என்ன 'டிஸைன்' கண்ணாடியிலே செய்யலாம்னு பார்த்துட்டு வந்தோம். அந்தக் கடைப் பெண்மணி, எந்த டிஸைன் ஆனாலும் செஞ்சுறலாமுன்னார். என் கம்மல், புடவையிலே இருக்கற படம், வேறு ஏதாவது 'இந்திய டிஸைன்' எதுவானாலும் செய்து பார்க்கலாமாம். கேக்கவே நல்லா இருந்துச்சு!








மத்தியானமும் ஒரு முறை வீட்டைப் பார்க்கப் போனோம். அப்பத்தான் கவுன்சில் ஆளு வந்து எழுதிகிட்டு இருந்தாரு. பாலிஸ்டைரீன் வச்சு அதுக்கு மேலே கம்பிங்க வச்சு கம்பிங்களை சின்ன இரும்புக் கம்பிங்களாலே கட்டிகிட்டிருந்தாங்க! எல்லாம் சரியா இருக்குன்னு கவுன்சில் ஆளு சொன்னாரு. பாலீஸ்டைரீன் நல்லா திக்கா இருக்கு 4 செ,மீ உயரம் இருக்கு. அதுமேலே ஆளுங்க நடந்துகிட்டு இருந்தாங்க. ஒண்ணும் ஆகலே!




நான் 'ஜர்னலு'க்காக படம் எடுக்கணும்னு சாயந்திரம் போனா, நம்ம பில்டர் அவரு பேரு 'க்ரேக் ஸ்மித்', நான் பாட்டுக்கு 'பில்டர் பில்டர்'னு சொல்லிகிட்டு இருக்கேன். அவரும் , டீனும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க, மணி அஞ்சரையாகுதேன்னோம். காலையிலே 7 மணிக்கு முன்னாலேயே 'காங்க்ரீட்' போட வந்துருவங்களாம். அதனாலே எல்லாத்தையும் முடிக்கறதுதான் நல்லதுன்னு வேலை செய்யறாங்களாம்.




காங்க்ரீட் போட்ட உடனே அதை நிரவிவிட ஒரு 'ஸ்பெஷலிஸ்ட்' வருவாராம் . அவருக்கு ஒரு ச.மீக்கு 4.10 டாலர் தரணுமாம். கையோடு காசுகொடுக்கறதா இருந்தா 3.10 டாலருக்கு செஞ்சு தாரேன்னார். சரின்னோம்.
நாளைக்கு மழை இல்லாமல் இருந்தா நல்லதுன்னு சாமியை வேண்டிகிட்டு இருக்கோம்.



காலையிலே ஏழரைக்குப் போறோம், அதுக்குள்ளெ காங்க்ரீட் போட்டுட்டாங்க. அதை சரி செய்து, லெவல் செய்து, பாலீஷ் போடறதுக்குப் பிரத்யேகமா இருக்கற ரெண்டுபேரு அங்கே இருந்தாங்க. வேலை நடந்துகிட்டு இருந்தது. $780 கொடுத்தோம். சரின்னுட்டாங்க!




அப்ப 'ரமண் பையா( ஹிந்தியில் அண்ணன்னு பொருள்)' அந்தப் பக்கம் வந்தாரு.அவர் பக்கத்துத் தெருவில்தான் இருக்கார். ரியல் எஸ்டேட் ஏஜெண்ட். நம்ம பழைய வீட்டுக்கு இவர்தான் நமக்கு ஏஜெண்ட். பிளான்படி எல்லாம் நடக்குதான்னு கேட்டுட்டுப் போனார். நாங்களும் 'காஸ் கனெக்ஷன்' கொடுக்கற ஒரு கம்பெனிக்குப் போய் , அதற்கான செலவு விவரம் அனுப்பறதுக்குச் சொன்னோம். குளிர் ஊரா இருக்கறதாலே சுடுதண்ணிதான் எல்லாத்துக்கும் ரொம்ப பயன்படுத்தணும். இங்கே மின்சார பில் வரும்போது பார்த்தா ஜன்னி வந்துரும். சுடுதண்ணி டேங்க் எப்பவும் ஆன்லேயே இருக்கணும். அப்படி இருந்தும் முதல்லே குளிக்கப் போனவுங்க ஜலக்ரீடை செஞ்சா, அடுத்து குளிக்கப் போறவங்களுக்கு தண்ணீர் வெதுவெதுன்னு வரும். மூணாவது ஆளுக்கு.........சுத்தம். சுடுதண்ணீ வெளியேற வெளியேற அந்த இடத்துக்குப் பச்சைத்தண்ணீர் வந்து டேங்குலே ரொம்பிருதுல்லையா?இந்த வம்பு இல்லாம இருக்கலாமுன்னு இந்த வீட்டுக்கு சுடுதண்ணீர் மின்சாரத்துலே இல்லாம, கேஸ் மூலம் சூடுஆகறமாதிரி செஞ்சுக்கலாமுன்னு ஏற்பாடு. நமக்கு வேணுங்கற சூட்டுக்கு சுடுதண்ணீர் வரும். யார் எவ்வளோ நேரம் வேணுமுன்னாலும் குளிச்சுக்கட்டுமுன்னு இருக்கலாம். இதுதான் உண்மைக்குமே செலவு கம்மியா இருக்கு. வேணுங்கறப்பதானே கேஸ் செலவு ஆகும். மின்சார டேங்க்ன்னா அது பாட்டுக்கு 24 மணி நேரமும் ஆன்லேதானே இருக்கு.




அப்புறம் மகளோடு போய் சாப்பிட்டு விட்டு, 'ப்ளேஸ் மேக்கர்' என்னும் கடையிலெ போய் அடுக்களை ஸிங்க், குழாய் ரெண்டுக்கும் ஆர்டர் கொடுத்துட்டு மறுபடி அந்த வீட்டு வேலை என்னாச்சுன்னு பாக்கப் போனோம். பாலீஷ் செஞ்சுகிட்டு இருந்தாங்க. எல்லாம் சரியா வரதாச் சொன்னாங்க. நல்லகாலம், இதுவரை மழை இல்லே.





இந்த 'ஜர்னல்' எழுதறது ஒரு ஏறக்குறைய ஒரு 'டைரி' யாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனா தினமும் என்ன நடந்ததுன்னு எழுதலைன்னு வையுங்க எல்லாம் மறந்திரும் இல்லையா? அப்புறமா எல்லாத்தையும் சுருக்கி எழுதணும்னு இருக்கேன். என்னத்தை, எப்படிச் சுருக்கணுமுன்னு யோசிக்கணும்.




காலையிலே போனோம். எங்கே? எங்கே போவோம்? எல்லாம் அந்த வீடு கட்டற இடத்துக்குத்தான்! இனிமே போனோம்னு சொன்னா, எங்கே ஏன் அப்படின்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. புரிஞ்சுக்கணும் நீங்க, இது புது வீடு 'மேட்டர்'னு. சரியா ?




காங்க்ரீட், சிமெண்ட் காஞ்சிருந்தது. வேலியிலே ஒரு பலகை உடைஞ்சிருந்ததாலே, பக்கத்து வீட்டு நாய் வெளியே ஓடிருச்சுன்னு பக்கத்து வீட்டு ஆளுங்க சொன்னதுனாலே இடைவேளி இருந்த இடத்துலே பலகையை ( ரெண்டு இடத்துலே) வச்சு அடிச்சாரு கோபால்.நாமோ அங்கே அவுங்களுக்குப் பக்கத்து வீட்டு ஆளுங்களா ஆகப்போறோம். பின்னால எதுக்கு மனக்கசப்பு? நல்ல விதமா நடந்துக்கறதுதானே நல்லது!
மகளோட 21 வது பிறந்தநாள் வருது. அதுக்கு 'கேக்' ஏற்பாடு செஞ்சுட்டு, அப்படியே 'கிச்சன் திங்க்ஸ்' போய் என்ன 'பெஞ்ச் டாப் கலர்' ன்னு முடிவு செய்யறதுக்கு 'ஸாம்பிள்' எடுத்துட்டு வந்தோம்.




ராத்திரி, இவரு நிறையப் படங்களை 'நெட்' லே இருந்து எடுத்துக் கொடுத்தார். வீட்டு முன் கதவுலே போடற படம் என்னன்னு முடிவு செஞ்சுக்கணும். குழப்பமா இருக்கு!



தொடரும்.......................
குமார் கேட்டுக்கிட்டே இருந்த அஸ்திவாரம் ஒருவேளை இதுதானோ?