Sunday, December 30, 2007

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 3

முதல் பயணம் இங்கே





அன்புள்ள பாட்டிக்கு,

நாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தோம். இங்கே எல்லாம் நல்லா இருக்கு. குளிர்தான் தாங்கலை. எங்களை நல்லபடியாப் பார்த்துக்கறாங்க...
ரெண்டு வாரம் கழித்துக் கோணா மாணா என்ற எழுத்தில் விவரம்தாங்கி வந்தது கடிதம், கஸ்தூரியின் கையெழுத்தில். நல்லவேளை. விலாசம் எல்லாம் மறக்காமல் எழுதிக்கொண்டு போனார்கள்............



ஒரு தபால் கார்டு வாங்குவதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா என்று நினைத்தாள் லலிதா. அடுத்த கிராமத்தில் இருக்கும் தபாலாபீஸில் போய் வாங்கிவர வேண்டுமாம். அல்லது இங்கே தபால்காரர் வரும்போது அவரிடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாமாம். அவர் எப்போது வருவாராம்? யாருக்குத்தெரியும்? இங்குள்ளவர்கள் யாருக்காவதுக் கடிதம் வந்தால் வருவாராம்.


"இங்கேயும் கூடிய சீக்கிரம் தபாலாபீஸ் வரப்போகிறதாம். எப்போது என்றுதான் தெரியவில்லை".... ஹரி


அண்ணனுடன் மூவரும் வீடு வந்து சேரும்போதே சாயுங்காலம் ஆகிவிட்டிருந்தது. மூன்று நாள் ரயில், பஸ், அப்புறம் காளைவண்டி, நடை.
மா ஜிக்கு வியப்பும், ஆனந்தமும் ஒருசேர வந்தது. படபடவென பஞ்சாபியில் தாயும் மகனுமாகப் பேசிக்கொண்டனர்.



முதலில் எதாவது சாப்பிட்டுவிட்டு மற்றதைக் கவனிக்கலாமென்று பெண்களிடம் சொன்னார்கள். லலிதாவுக்கு எதுவுமே வேண்டி இருக்கவில்லை. முதலில் குளிக்க வேண்டும். மூன்று நாள் பிசுக்கு உடம்பில்.
வெந்நீர்க்குளியல். ஹூம்....எவ்வளோ நாளாச்சு இப்படி வெந்நீரில் குளிச்சு..........



அடுப்படியில் இவர்களை உட்காரவைத்துவிட்டுச் சுடச்சுட ரொட்டிகளைச் சுட்டெடுத்துத் தட்டில் போட்டபடி மா ஜி. தணலில் நேரடியாக் காண்பித்ததும் அப்படியே உப்பி வரும் ரொட்டியை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் கஸ்தூரி.



தொட்டுக்கொள்ள தால். என்னவோ மொழுக்கென்று ஒரு தனி மணத்துடன் இருந்தது. இதே வாசனை இந்த ரெண்டு நாளாக மூக்கைச் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. தாளிப்பில் கடுகு எண்ணெயாம்.


அடித்துப்போட்டதுபோல் தூங்கி எழுந்ததும் நாக்கு பரபரவென்று அலைந்தது ஒரு வாய் காஃபிக்கு. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்பியது முதல் வழியெல்லாம் அங்கங்கே 'ச்சாய்' தான். குமட்டல்.


பாவம். மா ஜி அனைவருக்கும் 'ச்சாய்' தயாரித்துச் சொம்பில் ஊற்றினார்கள். பெரிய லோட்டா அத்துடன்.


பக்கத்து டவுனில் இருந்து காப்பித்தூள் வாங்கித் தருகிறேன் என்று தங்கைகளைச் சிரித்தமுகத்துடன் நோக்கியபடிச் சொன்னான் ஹரி.


மா ஜி, பிதா ஜி கேட்டவைகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர் மூவரும். மொழிபெயர்ப்பாளனாக நடுவில் ஹரி. நேரம் செல்லச் செல்ல அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர்.



ஆரம்ப அதிர்ச்சிகள் எல்லாம் ஓரளவு ஓய்ந்தது. சர்சூ கா சாக், உர்தி தால்
செய்வதில் லலிதா தேர்ச்சி பெற்றுவிட்டாள். ரோட்டித்தான் இன்னும் சரிவரவில்லை. வீட்டின் மற்ற வேலைகளை மூவருமாகச் சேர்ந்து செய்தனர்.
கிராமத்து வீட்டில் வேலைக்காப் பஞ்சம்? ஹரி வெளிவேலைகளையும் பார்த்துக்கொண்டுத் தங்கைகளுக்கும் அவ்வப்போது உதவி செய்தான்.
பெரிய பெரிய வாளிகளில் பாலைக் கறந்துவைப்பது அதிகாலையில் அவனது முதல் வேலை.



ஆனாலும் இந்தக் கடுகெண்ணெய் வாசனை பழகத்தான் ரொம்பவே கஷ்டமாகப் போய்விட்டது. அதென்ன? தலைக்கும் அதையே தடவிக்கொண்டு, சமையலுக்கும் அதையே விட்டுத் தாளிக்க.........



மூணாவது வீட்டில் நம்ம கஸ்தூரியின் வயதில் ஒரு பெண் இருந்தாள். அவளுடன் சேர்ந்து வயல்வெளிகளில் சுற்றுவது ஒரு ஆனந்தமான அனுபவம்.
கண்ணுக்கெட்டியதூரம் வரை மஞ்சமஞ்சேரென்று பூவைப் பார்த்தது அதிலொன்று. கடுகுப்பூவாமே! ஹைய்யோடா................


மா ஜிக்கு மனம் நிறைவாக இருந்தது. . நிறைய ஓய்வு கிடைத்தது. வீட்டில் மஹாலக்ஷ்மி வந்ததைப்போல பெண்குழந்தைகள்.



வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு அக்கம்பக்கத்துப் பெண்களுடன்
குளிருக்கு இதமாக வெய்யில் காய்ந்துகொண்டே ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பார். இன்னும் குளிர் கடுமையாக வருமுன் இவர்களுக்குத் தேவையான கம்பளி ஆடைகளைத் தயாரித்து வைக்கவேண்டுமே........ கைகள் பரபரவென்று பின்னிக்கொண்டிருந்தன. இந்த வருடம் குளிர் குறைவாக இருக்கிறதாம்!


' குளிர்காலம்தானே இப்போது. இதைவிடக் குளிருமா என்ன?' திகைத்தனர் பெண்கள்!


இந்த எட்டுமாத காலத்தில் பஞ்சாபிப் பேசவும், குடும்பப் பழக்கங்களை அனுசரிக்கவும் கற்றுக்கொண்டனர். காஃபி, இட்டிலி, தோசை எல்லாம் கனவில் இப்போதெல்லாம் வருவதே இல்லை. பிஜ்யா மட்டும் எப்போதாவது கோதுமை மாவைக் கரைத்துத் தோசையாகச் செய்வாள். அவளுக்கு உண்மையில் பிடிக்காத ஒன்று இருந்ததென்றால், அது அவள் பெயர் பிஜ்யா ஆனதுதான். என்ன செய்வது? 'வ, வி' எழுத்துக்களெல்லாம்தான் அங்கே ப, பி ஆகி விட்டதே. அவர்களுக்கு அப்படித்தான் சொல்ல வருகிறதாம்.


நாளை இரவு இங்கே 'லோரி' பண்டிகை கொண்டாடுவார்கள். நாமெல்லாரும் போகலாம் என்று ஹரி சொன்னதுமுதல் ஒரே எதிர்பார்ப்பு. இவர்கள் கிளம்பிப்போனபோது, கிராமத்தின் பொதுத் திடலில் சின்ன சொக்கப்பனைபோல எரியும் தீ. குளிருக்கு ரொம்ப இதம். ஊரே அங்கே திரண்டு வந்துவிட்டிருந்தது. ஒரே பாட்டும் கூத்தும் கேலியுமாக நேரம் போனதே தெரியவில்லை.


'இன்று ஜனவரி மாதம் 13 அல்லவா. நம்மூரில் போகிப் பண்டிகை. அதற்காகவென்றே சேமித்து வைத்த பழைய முறம், பாய், துடைப்பம் போன்றவைகளை அதிகாலையில் தீமூட்டி எரிப்போமே...அதையே இவர்கள் இரவு நேரத்தில் செய்கிறார்கள் போல!'.....லலிதாவின் மனம் பாட்டி வீட்டுக்குப் பறந்தது.

'பட பட பட பட் பட் பட பட..........' தெரித்து விழுந்தது மக்காச் சோளப்பூக்கள்.
எரிந்து கொண்டிருக்கும் தீயைச்சுற்றி வலம்வந்த இளைஞன் ஒருவன் கையிலிருந்த மக்காச் சோளத்தைத் தீயில் தூவிக்கொண்டே 'சோனா' என்று கூவினான். பெண்கள் கூட்டத்தில் ஒரே சிரிப்பும் கலகலப்பும். ஒரு இளமங்கைத் தன்கைகளால் முகத்தை மூடிகொண்டு அங்கிருந்து ஓட முயன்றாள். பெண்கள் கூட்டம் ஒன்று அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடவிடாமல் செய்துகொண்டிருந்தது. கடைசியில் அந்தப்பெண் சோனா நாணிக்கோணிக்கொண்டேத் தீயினருகில் வந்து கொஞ்சம் மக்காச் சோளத்தை அதில் தூவினாள். அதைத்தொடர்ந்து இளைஞர்கள் பகுதியில் ஒரே ஆரவாரம்.


அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள் மன நிலை எப்படியோ என்று தெரிந்து கொள்ளத்தான் அவள் பெயரைச்சொல்லி சோளம் தூவினான். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தால் பதிலுக்குச் சோளம் தூவினால் போதும். அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் என்று பொருள். இப்படியாக அவர்களுடைய காதலை ஊருக்குத் தெரிவித்தாகிவிட்டது. இனி உறவினர்களும், பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.


மா ஜியின் விளக்கத்தைக் கேட்டு அதிசயித்தாள் கஸ்தூரி.


ஒருவேளை அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால்? இது பிஜ்யாவின் சந்தேகம்.


பிடிக்கவில்லை என்றால் அந்தப் பெண் பதில் சோளம் தூவமாட்டாள். அவனுக்கும் அவள் உள்மனம் தெரிந்துவிடும். தீர்ந்தது கதை. என்று சொல்லிச் சிரித்தார் மா ஜி.


வசந்தகாலம் தொடங்கிவிட்டது. வயல் வெளிகளிலும் வேலைகள் ஜரூராக ஆரம்பித்துவிட்டன. நிற்க நேரமில்லாமல் வேலைகளில் மூழ்கிப்போனான் ஹரி.


அவசரத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அருகில் வந்து உட்கார்ந்தார்
மா ஜி. அவனுடன் என்னவோ முக்கியமாகப்பேச வேண்டும் என்ற பாவனை முகத்தில்!


"அம்மா.....என்ன விஷயம்? எதோ சொல்லவேண்டுமா?"


"ஆமாம் ஹரி. நீ சாப்பிட்டுவிட்டு வாயேன். கொஞ்சம் நிதானமாப் பேசலாம். இப்போதெல்லாம் உக்கார்ந்து பேச நேரமே இல்லை. நீயும் எதாவது வேலையில் மூழ்கிப்போய் விடுகின்றாய்"


ஆமாம் அம்மா. இப்போதும் உடனே தோட்டம் வரை போகவேண்டும். அங்கே மோட்டார்பம்பு ரிப்பேராகிவிட்டது. மெக்கானிக் வரேன்னு சொல்லி இருக்கார்.


அப்படியா.....நானும் அந்தப்பக்கம் போயே நாளாகிவிட்டது. இப்போது உன்கூடவே வரட்டா? பேச்சுத் துணைக்காச்சு.



இந்தவருட விளைச்சலைப்பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் நடந்தார்கள். திடீரென்று, 'நம்ம பிரேந்தரின் அம்மா வந்து போனார்கள்' என்றார்.


"நானும் பலமுறை அவர்களை வழியில் வைத்துப் பார்த்தேன். நின்று பேச நேரமில்லைம்மா. என்ன விஷயமாம்? பிரேந்தர்தான் பாவம். மனசொடிஞ்சு கிடக்கிறான். மூஞ்சில் சொரத்தே இல்லை."



" அவன் விஷயமாகத்தான் வந்திருந்தார்.....ம்ம்ம்ம்....உன்னிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றேன்"


"என்னிடமா? எதாவது உதவி வேணுமா?

" இல்லைப்பா..... அவனுக்கு நம்ம லலிதாவைக் கேட்கிறார்....... அதான் உன்னிடம்......"



அருமையான இளைஞன். ரெண்டு வருசம் முன்பு ஜாம்ஜாம் என்று திருமணம் ஆனது. அந்தப் பொண்ணும் அழகும் அடக்கமுமா இருந்தாள். விதியைப் பழிக்காமல் என்ன செய்வது? கஷ்டப் பிரசவம். தாயும் பிழைக்கவில்லை. சேயும் பிழைக்கவில்லை. இந்த ஒரு வருஷமா அவன் முகத்தில் சிரிப்பே போய்விட்டது.....



பிரேந்தரின் அம்மா, பர்மீந்தர் நம் மா ஜியின் சிறிய வயது தோழி. மிகவும் நல்ல சுபாவம். இருவரும் ஒரே ஊரில் வாழ்க்கைப்பட்டு வந்ததை எண்ணி மகிழாத நாளே இல்லை.



'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அம்மா?"


" இதில் நினைக்க என்ன இருக்கிறது ஹரி? எனக்கொரு பெண் இருந்திருந்தால் அவளை பர்மீந்தருக்குத்தான் மருமகளாக்கி இருப்பேன்"

"எதற்கும் லலிதாவை ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டு முடிவு சொல்லலாம் அம்மா"


லலிதா கோர்( கெளர்) & பிரேந்தர் நிச்சயதார்த்தம் வீட்டளவில் நடந்தது. பைஷாகி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் ஆனது. மிகவும் எளிய முறையில் செய்தால் போதும் என்று பிரேந்தர் கண்டிப்புடன் சொல்லிவிட்டான்.


"அட! நம்மூர் வருசப்பிறப்பு தினம்தான் இவர்களுக்கும் வருஷப் பிறப்பாம்.
அப்ப சித்திரை பிறந்ததும் அக்காவுக்கு டும் டும் டும்"



கஸ்தூரிக்கு ஒரே குதூகலம். "அத்தான் நன்றாக இருக்கிறார். அக்காவுடன் ஜோடிப்பொருத்தம் பலே. ஆனால் அக்கா ரொம்பக் குள்ளமோ? 'களுக்' என்ற சிரிப்பைக்கேட்டதும், என்ன சிரிப்பு என்று திரும்பிப் பார்த்த லலிதாவிடம்," ஒண்ணுமில்லேக்கா. அத்தான் பக்கத்துலே நீ நின்னப்ப ஒரு பொம்மை போல இருந்தே. எங்கே அத்தான் 'டக்'ன்னு உன்னை இடுப்பில் தூக்கிக்கிட்டு நடந்துருவாரோன்னு பயந்துட்டேன்."



லலிதாவின் வாழ்க்கைப் பயணத்தில் இன்னொரு இஞ்சினில் அவளைக் கோர்த்துவிடுவார்கள், ரயில்பெட்டி மாதிரி. நாமெல்லாருமே ரயில் பெட்டிகள்தானோ? ஆனந்தமும் துக்கமும் நம் பெட்டியில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறதோ? அப்ப அடுத்தது நானா? பிஜ்யாவின் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள்..............


நான்காம் பயணம் தொடரும்.....................
நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Monday, December 24, 2007

கிவி ஸ்டைல் கிறிஸ்மஸ்

மக்கள்ஸ் வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு உணவு. அப்புறம்தான் கலைவிழா.


நான்
சாதம்
சிக்கன் கறி ( மெட்ராஸ் சிக்கன் கறி)
லேம்ப் கறி ( ரோகன் ஜோஷ்)
மிக்ஸட் வெஜிடபிள் கறி
ரைய்த்தா
பப்படம்


வெஜிடேரியன் மக்களுக்கு :

பாலக் பனீர்
தால் மக்கானி
மிக்ஸட் வெஜிடபிள் கறி
நான்
சாதம்
ரைய்த்தா
பப்படம்


ஜூஸ் வகைகள், கோக், ஃபாண்டா இத்தியாதிகள் தாகம் தணிக்க.

கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷனின் கிறிஸ்மஸ் விழா.
சாப்பாடு வகைகளை இங்கே நமக்குத் தெரிந்த ஒரு உணவகத்தில் இருந்து வாங்கினோம். ரொம்பவும் நல்ல முறையில் தயாரித்து, பரிமாறும் பாத்திரங்களுடன் வழங்கினார்கள்.

நானும் கோபாலும் காய்கறிப்பிரிவில் எல்லாருக்கும் சோறு போட்டுப் புண்ணியம் தேடிக்கிட்டோம்:-)

மாலை 6.15க்கு ஆரம்பித்து 7.15க்கு எல்லாரும் சாப்பிட்டாச்சு. 7.30க்குக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு.

வழக்கமான பாட்டுக்களும், பாலிவுட் நடனங்களும், சிறுத்தா என்னும் தெலுங்குப்படத்தில் வரும் ஒரு ரீமிக்ஸ் பாட்டுக்கான நடனம்னு மேடையில் பலதும் போனது.

இங்குள்ள பெல்லிடான்ஸ் நடனப்பள்ளியில் ஃப்யூஷன் செய்யறொமுன்னு மவோரிகளின் காப்பா ஹாக்கா நடனத்தையும் பெல்லிடான்ஸையும் சேர்த்து ஆடுனாங்க. மவோரிகள் போல தாடையில் பச்சை குத்திக்கிட்டு( எல்லாம் வரையறதுதான். டெம்ப்ரரி டாட்டூ)

( உங்களுக்காக ஒரு பெல்லீ டான்ஸ் ஐட்டம் ப்லொக்கர்லே நேரிடையா அப்லோடு பண்ணினா......ரொம்ப நேரம் அப்லோடிங் அப்லோடிங் னு சொல்லிக்கிட்டே இருந்து கடைசியில் கழிச்சுவிட்டுருச்சு. அதிர்ஷ்டக்கட்டைங்கப்பா )

ஒரு பாதிரியார் கிறிஸ்மஸ் மெஸேஜ் சொன்னார். திருமணம், குடும்ப அந்நியோனியம், அருமையான கலைகலாச்சாரப் பின்னணி இருக்கும் நாடுன்னு இந்தியாவையும், கேரளத்தையும் புகழ்ந்து நாலு வார்த்தைப் பேசினார்.

( இது பெல்லி டான்ஸுக்கு முந்தின நிகழ்ச்சி. அவர் முடிச்சுட்டு விடை பெற்றுப்போனதும்தான் ஆட்டம் ஆஆஆஆஆரம்பம்:-)

இடைவேளையில் எல்லாருக்கும் ஐஸ்க்ரீம்( லெமன் & வெனிலா)

சூப்பர் ஐயிட்டமுன்னா ஒரு ராஜஸ்தானி ஃபோ(ல்)க் டான்ஸ். அருமையான ஆட்டம்.



நல்ல கூட்டம்தான். 170 பேர் வந்திருந்தாங்க. கிறிஸ்மஸ் தாத்தா வரும்போதே மணி பத்தேகால் ஆயிருச்சு. அதுக்கப்புறம் 'பூகி வூகி'ன்னு எல்லோரும் ஆட ஆரம்பிச்சாங்க. நாங்க கழண்டுக்கிட்டோம்.

நம்ம வீட்டில் கிறிஸ்மஸ் ட்ரீ எங்கே, ஏன் இன்னும் வைக்கலைன்னு ஐலாவுக்கு ஒரே கேள்வி.

வச்சாப்போச்சு. தேடி எடுத்து அலங்கரிச்சு, சாண்ட்டா பொம்மையுடன், ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மிட்டாய்களையும் போட்டு வச்சேன். இது இன்னும் கொஞ்சம் கூட்டத்தை வசீகரித்தது:-)))) பசங்களுடன் பூனியும் ஆலியும் வந்து வந்து போகிறார்கள். 'எப்படியோ தொலையுங்க' என்ற மனோ பாவத்துடன் நம்ம ஜிக்கேயும் ஜிக்குஜூவும்.


இன்னும் கொஞ்சம் அடிஷனல் அட்ராக்ஷன் இருக்கட்டுமேன்னு நம்ம ஜாப்பனீஸ் நீடில் பைன் மரத்தையும் அலங்கரிச்சோம்.

ஆச்சு...பொழுது விடிஞ்சாப் பண்டிகை. வழக்கம்போல இன்னிக்கு இரவு நம்ம கதீட்ரலுக்கு ஒரு விஸிட் அடிக்கணும்.

எனக்கு 'நம்ம வீட்டு சாண்ட்டா' ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் 500 ஜிபி பரிசாகக்
கொடுத்தார். தமிழ்ச்சேவை செய்யணுமில்லே:-))))




அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்து(க்)கள்.




Friday, December 21, 2007

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 2


முதல் பயணம்: இங்கே

வேலிப்பக்கமிருந்த படலைத் தள்ளித்திறந்துகொண்டு உள்ளே வந்த ஹரியைப் பார்த்து 'இவ(ர்)ன் யார்?' என்ற மிரட்சி,கண்களில் தெரிய 'பாட்டி, பாட்டி'ன்னு கத்திக்கொண்டே உள்ளே ஓடினான் சுகுமாரன். கொடியில் காயவைத்திருந்த துணிகளை ஒவ்வொன்னாக எடுத்து ஒரு தோளில் கோபுரம் கட்டிக்கொண்டிருந்த ஒரு பதினைஞ்சு வயசுப் பெண் அசட்டையாத் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள். ம்ம்ம்.... புதுசா இருக்கானே.........கூடவே ஒரு பயமும் வந்தது. மூணு நாள் பயணம் செஞ்சு, அழுக்கு உடை(அதுவும் கொஞ்சமும் பரிச்சயமில்லாத பைஜாமா) தாடி மீசைன்னு வேஷம் கட்டி இருந்தானே ஹரி!

வெளித் திண்ணைக்கு வந்த பாட்டி, கண்ணை இடுக்கிப் பார்த்து, 'யாருப்பா நீ? என்ன விஷயம்?' என்று கேட்டுக்கொண்டே.....வீட்டின் உள்ப்பக்கம் கையை வீசினாங்க. யார் வந்திருக்காங்க என்ற ஆவலோடு எட்டிப்பார்க்க வந்த பெண்களுக்கு இந்த சிக்னல் புரிந்துவிட்டது. இனியும் தலையை வெளியில் காண்பித்தால் 'பாட்டு'த்தான் கேட்கவேண்டி இருக்கும்.

தலைமுடிதான் 'கொல்'லென்று நரைத்திருக்கே தவிர, பாட்டியின் முகத்தில் அவ்வளவாக மாற்றமில்லை என்று நினைத்துக்கொண்டே, 'பாட்டி, நாந்தான் திருவேங்கடம்' என்றான். ஒன்றும் புரியாமல் நின்ன பாட்டியிடம், திருவேங்கடம் பாட்டி. காணாமப் போனத் திருவேங்கடம் வந்துருக்கேன் பாட்டி. 'திருட்டுத் திருவேங்கடம்' என்று தன் பால்யகாலத்துப் பட்டப்பெயரையும் சேர்த்துச் சொன்னான்.

வீட்டில் எல்லோருக்கும் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. ஒரு மணிநேரத்துக்கும் மேலாகச் சுற்றி உட்கார்ந்து அழுதா பின்னே எப்படி இருக்குமாம்?

'ராமர் வனவாசம் போனமாதிரி பதினாலு வருசம் பிரிஞ்சு போயிட்டேப்பா'ன்னு பாட்டி சொல்லிச்சொல்லி மாய்ந்தாங்க.

என்னவெல்லாமோ நடந்து போச்சேப்பா........உங்க அம்மாவும் அந்த ராட்சஸன் தொல்லையிலே இருந்து தப்பிச்சு ஒரேடியாப் போயிட்டா. உங்க அப்பன் திருந்தவே இல்லை. தாயில்லாப் பிள்ளைங்க படற கஷ்டம் தாங்காம நாந்தான் இங்கே கொண்டாந்து வச்சுருக்கேன்.

இதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சியெல்லாம் செஞ்சு பார்க்கணுமுன்னு அவனுக்குத் தோணவே இல்லை பார். உங்கம்மா போட்டுருந்த பீ பித்தாளையெல்லாம் அப்பவே அழிச்சுட்டான்.

"அண்ணி பக்கத்துலே படுத்துத் தூங்கறாப்போல இருந்து அர்த்தராத்திரியில் தாலிக்கயித்தை மெதுவாப் பல்லாலே கடிச்சு அதுலே இருக்கும் கா சவரன், தங்க குண்டுன்னு களவாடிக்கிட்டுப் போயிருவாராமே அண்ணன்"

சமயசந்தர்ப்பம் தெரியாமல் சித்தி சொன்ன 'ஜோக்கை'க் கேட்டு அத்தனைபேரும் சிரித்த சப்தம் சோகச்சூழலைக் கொஞ்சம் குறைத்தது.

அண்ணனை வைத்த கண் மாறாமல் 'ஆ'வென்று பார்த்துக்கொண்டிருந்தனர் தங்கைகள்......

"அப்பா இப்ப எங்கே இருக்கார்?"

" யாருக்குத் தெரியும்? எங்கியாவது சுத்திக்கிட்டு இருப்பான்.அவனுக்குன்னுதான் ஒரு சோம்பேறிக் கூட்டம் நண்பர்கள் என்ற பெயரில் இருக்கே"

" தங்கச்சிங்களைப் பார்க்கவாவது வந்து போகிறாரா?"

" ஆங்.......எப்பவாவது ஒரு மூணு நாலு மாசத்துக்கொரு தடவை வருவான். வர்றதுதான் வர்றானே அதுகளுக்கு ஒரு பொட்டலம் சேவு கூட வாங்கி வரமாட்டான். இதுங்க என்ன பாவம் பண்ணுச்சுங்களோ, இவனுக்குவந்து பொறந்ததுங்க"

உலகிலேயே ஒசத்தியான தின்பண்டமுன்னா பாட்டிக்கு அது காராசேவுதான்:-)))

இதைக்கேட்டதும் இவனுக்கு 'ச்விக்' என்று இருந்தது. இவனும்தான் வெறுங்கையோடு வந்தவன். அவசரமாகத் தன் குர்த்தா ஜேபியைத்தடவி, கிடைத்த சில ரூபாய் நோட்டுக்களை ஒரு தயக்கத்துடன் கஸ்தூரியிடம் நீட்டினான்.

" அது இருக்கட்டும். வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சே? உனக்குத்தான் நம்ம பாஷையே மறந்து போயிருக்குமே. நீ பேசறது எனக்கே புரியலை. யார்கிட்டே என்னன்னு கேட்டே?"


'வாயில இருக்கு வழி' என்பதில் பாட்டிக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை.

"ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்ததும் எல்லாமே அப்படியே இருக்கறமாதிரிதான் பாட்டி. பழைய ஞாபகத்தில் தெருமூலை திரும்பி,மெயின் ரோட்டு மேலே ஏறி வந்தேன். வேலிதான் புதுசாத் தெரிஞ்சது. "

'ஆமாம்ப்பா....இப்பத்தான் ஆறுமாசம் ஆச்சு இந்த வேலியைப்போட்டு. ஊர் மாடுகள் எல்லாம் வந்து செடிகளை மேஞ்சுட்டுப் போயிருது. தொலையட்டுமுன்னு பார்த்தா......ஒரு நாள் கொடியில் காயப்போட்டுருந்த
புடவையை ஒரு மாடு பாதி தின்னுருச்சு."

அதுகிடக்கட்டும் விடு. எப்பச் சாப்புட்டியோ என்னவோ.....போய் குளிச்சுட்டு வா. சாப்புடலாம் என்று கிணற்றுப் பக்கம் கை காட்டினார் பாட்டி.

பேரன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் சாப்பிடுவதைக் கவனித்துக்கொண்டே.....
'எல்லாம் உன் தங்கச்சிங்க சமையல்தான். நல்லா இருக்கா?

வீட்டுக்கதைகளும் பஞ்சாப் நாட்டுக்கதைகளுமாக ஒரு பத்து நாள் போனது. சோறு மட்டும் சாப்பிட்டால் ஒன்னும் சரியாகவில்லை என்று சப்பாத்திக்கு அடிபோட்டான் ஹரி. அவனுக்காகக் கோதுமை வாங்கி, மில்லில் அரைத்தானது.

தட்டில் விழுந்த சப்பாத்தியைப் பார்த்து நொந்துபோனான் ஹரி. இதென்ன? தோலில் செய்ததா? மறுநாளில் இருந்து தானாகவே சப்பாத்தியைச் செய்துகொண்டான். அடுப்படியில் குத்துக்காலிட்டு அமர்ந்து மாவையும் தண்ணீரையும் மட்டுமே சேர்த்துக் குழைத்து, மெத்தென்ற ரொட்டி உருவாகும் விந்தையை முதலிரண்டு நாட்கள் 'ஆ'வென வாய் பிளந்து பார்த்த குடும்பம் மெல்லப் பின்வாங்கி விட்டது.

'உனக்கு வேணுங்கறதை நீயே செஞ்சுக்கோயேன்.......'

தோட்டத்தில் பூச்செடிகள் பூத்துக்குலுங்கின. நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளியெல்லாம் புது மெருகுடன் இருந்தது. கொஞ்சமும் சோர்வில்லாமல் கிணற்றில் இருந்து நீர் இறைத்துச் செடிகளுக்குப் பாய்ச்சினான். அடிமண்ணையெல்லாம் கொத்திவிட்டு, மண்ணைக் குவித்துப் பாத்திகள் கட்டிச் சீரான அழகுடன் ஜொலித்தது வெளிவாசல்.

வீட்டில் யார் என்ன வேலை செய்தாலும் பாய்ந்து ஓடிக் கையில் உள்ள வேலையைப் பிடுங்கிச் செய்து கொடுத்தான்.

'ம்ம்....கொஞ்சமாவா தின்னுறான். செய்யட்டுமே இன்னும் கொஞ்சம் வேலை'

அவ்வப்போது பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அப்பாவையும் தங்கைகள் திருமணம் பற்றியும் பேசினான். வரிசையா நிக்கும் வயசுப்பெண்கள் மூவரையும் எப்படிக் கரையேத்தப் போறோமோன்னு கலங்கி நின்ன பாட்டிக்கு இந்தப் பேச்சு ரொம்ப ஆசுவாசமாக இருந்தது. கூடவே ஒரு மண்டைக் குடைச்சலும்.

இன்னும் இவன் எத்தனை நாள் இங்கே இருக்கப்போறானோ? தேவா வந்தே மூணு மாசத்துக்கு மேலாச்சே..எப்போ வருவானோ? அப்பனும் பிள்ளையும்
சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்குமா? தங்கைகள் கல்யாணத்துக்கு காசு கொண்டு வந்துருப்பானோ? எவ்வளவுன்னு அவனாச் சொல்வான்னு பார்த்தால் வாயைத் திறக்கலையே! பெரியவளுக்கும் ஆச்சே 20 வயசு. இன்னும் தள்ளிப்போட்டா நல்லாவா இருக்கும்? இப்பவே முத்தல்னு சொல்லிருவாங்களே...........

'இவனா என் மகன்' என்ற ஆச்சரியமும் பெருமிதமும் கலந்த பார்வையுடன்
திண்ணையில் உட்கார்ந்திருந்தார் தேவா. எதிர்பாராத சந்திப்பு. மகள்களைப் பார்த்துவிட்டுத் தாயின் கைகளில் நாப்பதோ அம்பதோ கொடுத்துவிட்டுப்போக வந்தவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்.

மறுநாளே தகப்பனும் மகனுமாகக் கிளம்பிப் போனார்கள். மற்ற சித்தப்பாக்களின் வீடுகளுக்கும், அத்தைகள் வீடுகளுக்குமாய் போய்வருவார்களாம்.

பயமா, மகிழ்ச்சியா என்று இனம்பிரிக்கமுடியாத ஒரு கலந்து கட்டுன மனோநிலையில் ஒரு பெட்டியில் தங்களது சாமான்களைத் திணித்துக்கொண்டிருந்தனர் லலிதா, விஜயா & கஸ்தூரி. அண்ணனுடன் போகிறோம். அங்கே எப்படி இருக்குமோ?

அப்பாடா....ஒரு பாரம் தீர்ந்தது. இந்த தேவா கில்லாடி. அவனாச்சு, அவன் குடும்பமாச்சு. எனக்கோ வரவரத் தள்ளலை. கொள்ளிபோடவாவது வருவானோ என்னவோ...........பாட்டி

இந்தப்பொண்கள் இருந்தது வீட்டுவேலைக்கு சுலபமா இருந்தது. பையன் சுகுவுக்கும் விளையாட்டுத் துணை. இனி எல்லா வேலையும் என் தலையிலெ விழுந்துருமே...........ச்சின்ன அத்தை.

இந்த அட்லஸில் இவர்கள் ஊர் எங்கேன்னு போடலையே? ச்சின்ன ஊராமே. புதுசாக் கட்டிக்கிட்டு இருக்கும்
பக்ரா நங்கல் அணையிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்காம். எங்கேன்னு
யாரைக் கேக்கலாம்............சுகுமாரன்.

நல்லவேளை. சமயத்தில் இவன் வந்து சேர்ந்தான். இவனைத் தாஜா பண்ணி, மனசைக் கரைச்சுப் பொண்ணுங்களை இவனே பொறுப்பாக் கட்டிக்கொடுக்கறேன்னு சொல்ல வச்சுட்டேன். ஒரு வாரம் இதே வேலையாப் போச்சு. போகட்டும். இந்த அளவில் எனக்கு வெற்றிதான்......தேவா.

அப்பாகிட்டே, நானே எல்லாப் பொறுப்பையும் ஏத்துக்கறேன்னு ஒரு உணர்ச்சிவேகத்தில் சொல்லிட்டேனே....எப்படியாவது மா ஜியிடமும் பிதா ஜியிடமும் கெஞ்சி இவுங்களை அங்கே நல்ல இடத்தில் நம்ம கிராமத்துலேயேக் கட்டிக்கொடுத்துறலாம். அவுங்களுக்கு ரொம்ப இளகுன மனசு. மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க. நம்ம கிராமத்துலேயும் பசங்க இருக்கானுங்களே. சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சமில்லாம ஒரு வாழ்க்கை கிடைக்கும். எனக்கும் நம்ம குடும்பத்து மனுசங்கன்னு அங்கே ஆதரவு இருக்கும்.....பாவம். பொண்ணுங்க .....அப்பாவால ரொம்பக் கஷ்டம் அனுபவிச்சு இருக்குதுங்க..........ஹரி.

மொத்தக் குடும்பமும் அன்று செண்ட்ரல் ரயில் நிலயத்தில். மெயில் வண்டியில் அண்ணந்தங்கை நால்வரையும் ஏற்றி அனுப்பியாச்சு. பெரியவளும் கடைக்குட்டியும்தான் தேம்பித்தேம்பி அழுதவண்ணம் இருந்தனர். நடுவுள்ளவள் விஜயா, கொஞ்சம் கெட்டி. நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரயில் நகர்ந்தது.

மூன்றாம் பயணம் தொடரும்................

Wednesday, December 19, 2007

திருவேங்கடம் 'ஹரியானது இப்படித்தான்:-)


உண்மைக்குமே ரொம்ப நாளுக்குமுன்னே எழுத ஆரம்பிச்சு அப்படியே வச்சிருந்தது. எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான். நடை'யைப் பார்த்தாலே புரிஞ்சிருக்குமே. தலைப்பு என்னவோ ரயில் பயணங்கள் ன்னுதான் வச்சுருந்தேன். இப்ப நம்ம வலைப்பதிவுகளில் சூடா ஓடிக்கிட்டு இருக்கும் சமாச்சாரத்தைப் பார்த்தபிறகு, ஜோதியில் இப்படியாவது கலந்துக்கலாமுன்னுத் 'தலைப்புக் கயமை' செஞ்சுருக்கேன். என்ன செய்யறதுங்க? ட்ரெண்ட்:-)))

மினித்தொடர். அநேகமா மூணு பகுதிகளில் முடிக்கப்பார்க்கிறேன். ரயில்வண்டித்தொடர் போல நீளமாகாமல் இருக்கணுமுன்னு 'ஹரி'யையே வேண்டிக்கலாம்.



ரயில் பயணங்கள்
*******************
ரயில் பயணத்தால், வாழ்க்கை மாறிவிடலாம் என்று யாராவது சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால்
ஹரியின் வாழ்விலேதான் இந்த ரயில் என்னமாதிரி அவன் வாழ்க்கைப் பாதையையே திசை
திருப்பிவிட்டது!

முதலாவது பயணம்:
******************
ஹரியின் பெயர் ஹரியே இல்லை! தாத்தாவும் பாட்டியும், தாயும் தகப்பனும் ஏகோபித்து அவனுக்கு வைத்த பெயர் திருவேங்கடம்.
வீட்டிற்கு தலைச்சன் பிள்ளை. அவனுக்குப் பிறகு, லலிதா,விஜயா, கஸ்தூரி என்று மூன்று பெண்கள்.
வாழ்க்கை என்னவோ ஒரே சீராகத்தான் போய்க் கொண்டிருந்தது, அவனுடைய 'முதலாவது ரயில்ப் பயணம் ' ஏற்படும் வரையில்!

நம்ம திருவேங்கடத்துக்கு 'கை கொஞ்சம் நீளம்'. 'போதாதற்கு பொன்னம்மா'என்று அவனுடைய அம்மாவும்
ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருந்தாள். அப்பன் தேவராஜனும் சரியில்லை. ஏதேதோ சூதாட்டங்களிலும்,
குதிரையிலுமாய் கடையிலிருந்து வரும் வருமானத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டு இருந்தார். அந்தக் கடையுமே திருவேங்கடத்தின்
தாத்தாவின் கடைதான். தாத்தா இறந்தபின், மூத்த மகன் என்ற ஹோதாவில் இருந்த தேவாவுக்குக் கடை கிடைத்தது.
இதனால் தேவாவின் தம்பிகளுக்கு கொஞ்சம் வருத்தம், (கொஞ்சமென்ன கொஞ்சம்? நிறையவே தான்)இருந்தது.

'நாலு புள்ளைங்களைக் காப்பாத்த வேண்டாமா?' என்று நினைத்து தேவாவின் அம்மாதான், தன் மற்ற பிள்ளைகளிடம்
கொஞ்சம் சண்டையும் போட்டு, சொத்து பாகம் பிரிக்கும்போது, கடை தேவாவுக்குக் கிடைப்பதற்கு உதவினாள்.

'என்ன இருந்தாலும் அவன்தானே எனக்குக் கொள்ளி வைக்கப்போறவன்'என்ற நினைப்பு வேறு! மேலும் அவனுக்குப்
பாரமாக இருக்கவேண்டாம் என்று தனிவீட்டிலே, சிறுவயதிலேயே 'மூளி'யாகிப்போன மகளுடனும், அவள் குழந்தையுடனும்
வேறு ஊர்லே இருந்தாள்.

தப்பித்தவறி, புருஷன் கொடுக்கும் காசில் திருவேங்கடம் 'கை'வைக்கும் போதெல்லாம் வீட்டில் சண்டைதான். அவனுடைய அம்மாவும்
தான் என்ன செய்வாள்? ஆறு வயித்துக்குச் சோறுபோட வேண்டாமா? இதெல்லாம் அவனுக்குப் புரியுமா? இன்னும் குழந்தைதானே?
பத்து வயசுங்கறது ரொம்பப் பெருசா?

அடி வாங்கியவுடன், அழுதுகொண்டே பாட்டி வீட்டுக்குப் போய்விடுவான். அப்பல்லாம் பட்டணத்துலே 'ட்ராம்' ஓடுன காலம்.
ராயப்புரத்துலே இருந்து, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ரயிலில் அம்பத்தூருக்குப் போனால் பாட்டி வீடு!

டிக்கெட் எடுக்காமல் திருட்டு ரயில்தான் எப்போதும்! பிடிபட்டாலும், அழுதுகொண்டிருக்கும் சின்னப் பையன் என்பதால்,கொஞ்சம்
மிரட்டலோடு விட்டுவிடுவார்கள்.

அன்றும் அதேதான் நடந்தது. எப்படியோ சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தவன்,வழக்கமான பிளாட்பாரத்திற்குப் போய், அங்கு நின்றிருந்த
ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ஒரே பசி வேறு! இன்றைக்கென்று பார்த்து, கையில் 'காசு வரும்முன்பே' சண்டை வந்துவிட்டது. சரி, பாட்டி
வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்று இருந்தவனுக்கு, களைப்பின் மிகுதியால் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது! மேலே
சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறிப் படுத்தான். அவ்வளவுதான்.

தூக்கத்தில் இவன் கும்பகர்ணன்.

ஆட்கள் வந்து நிரம்பியதும், வண்டி புறப்பட்டதும் எதுவுமே அவனுக்குத் தெரியாது. கண் விழித்த போது, முதலில் அவனுக்குத் தான்
எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. அங்கிருந்து கீழே பார்த்தபோது, எல்லா இருக்கைகளிலும் ஜனங்கள் தூங்கிக்கொண்டு
இருக்கிறார்கள். ரயிலோ 'பேய்' வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது! ஜன்னல் கதவுகள் எல்லாம் இறுக்கமாக அடைபட்டுள்ளன. ரயிலின்
சத்தத்தையும் மீறின மழையின் சத்தம்! கீழே இறங்குவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சொல்லத் தெரியாத
ஒரு பயம், வயிற்றில் என்னவோ வேதனை.

கீழே படுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், புரண்டு படுத்தபோது, அகஸ்மாத்தாகக் கண்களைத் திறந்தவள், மேலே இவன் கொட்டக் கொட்ட
விழித்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு, 'க்யா, நீந்த் நஹி ஆயா?' என்று கேட்டாள்.

இவன் மலங்க மலங்க விழித்ததைப் பார்த்ததும், 'க்யா பேடா, க்யா தேக்தா? அப்னா பரிவார் கஹாங்?' என்றாள்.

இவனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வேற்று மனிதர்கள், வேறு பாஷை! வண்டியோ நிற்பதற்கான அடையாளமே
இல்லாமல் பேயோட்டம் ஓடுகிறது!
அழுகை கொஞ்சம் கொஞ்சமாக வெடித்துக்கொண்டு வருகின்றது!

அவ்வளவுதான், அடுத்த விநாடி, அவனைச்சுற்றி ஒரு வடக்கிந்தியக் கும்பல்! அதுவே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, அவர்கள்
வடக்கிந்தியர் என்பது! ஆளாளுக்கு அவனிடம் வேறுமொழியில் விசாரணை செய்தாலும் அவனுக்கு ஏதாவது புரிந்தால் தானே?
அந்த ரயில்ப்பெட்டி முழுதும் தென்னிந்திய யாத்திரைக்கு என்று வந்த வட இந்தியர்களுக்கான' ஸ்பெஷல் கோச்'!

பாட்டியின் பெயரோ, விலாசமோ ஒன்றுமே அவனால் சொல்ல முடியவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டியின் வீடு மட்டுமே!
முதன் முதலில் அவனிடம் பேசிய பெண்ணின் கண்களில் கருணை இருந்தது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அவர்கள் தந்த உணவு
அந்த நேரத்துக்கு அமிர்தமாக இருந்திருக்க வேண்டும். கடைசியில் அவர்களுடனேயே போகும்படி ஆனது. அந்த வயதான தம்பதிகள்
ராமேஸ்வரம் யாத்திரைக்காக தென் இந்தியாவுக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பிள்ளையில்லாத அவர்கள், தங்களுடனேயே அவனைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். ஏராளமான சொத்து! நிறைய நிலபுலன்கள்.
அந்தக் குடும்பத்திலேயே வேரூன்றிவிட்டான் நம் திருவேங்கடம்.அந்த ஊரில் எல்லோருக்கும் இப்போது அவன் ஹரி! எல்லோருக்கும்
நல்லவனாக இருந்தான். படிப்புதான் ஏறவில்லை. அவனைச் சொல்லி என்ன பிரயோஜனம்? பஞ்சாபி எழுத அவனுக்கு வந்தால்தானே?
பேச்சு மட்டும் சரளமாக வந்துவிட்டிருந்தது! சின்னக் கிராமமானதால் அநேகமாக எல்லார் வீட்டுப் பிள்ளைகளும் படிக்காமல் கோதுமை
வயல்களில்தான் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்படிப் பெருசாகப் படித்துக் கிழிக்கவும் அங்கே ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தைத்
தவிர வேறு ஏதாவது இருந்தால்தானே?

சப்பாத்தியும், பாலும், நெய்யும் அவனை அடியோடு மாற்றியிருந்தது! ஆச்சு, பதினான்கு வருடங்கள். உழைத்து, உழைத்து மெருகேறிய
நல்ல உரம் வாய்ந்த உடம்பு. ஏற்கெனவே அவன் நல்ல நிறம்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் தான் அம்மாவைக் கொண்டு
பிறந்திருந்தான். அவன் தங்கைகள் எல்லாம் ஒரு மாற்றுக் கம்மிதான்.

கொஞ்ச நாட்களாக அவன் மனதில் ஏதோ ஒரு மாற்றம். பெற்றோர் வேறு இப்போதெல்லாம் கனவுகளில் வருகின்றனர்! இதுவரை வேறு
நினைவுகளுக்கு அவன் ஆளானதே இல்லை.

'மா ஜி' (அம்மாவை அப்படித்தான் கூப்பிடுகின்றான்) அவனது மாற்றத்தை உணர்ந்தவர்போல் இருந்தார்.

"ஹரி ஏன் ஒரு மாதிரி இருக்கின்றாய்? சரியாகச் சாப்பிடுவதுகூட இல்லையே?"

" ஒன்றுமில்லை மா ஜி. நன்றாகத்தானே சாப்பிடுகின்றேன். இன்னொரு ரோட்டி போடுங்கள்"

" உனக்கில்லாததா? இன்னும் கொஞ்சம் சப்ஜி எடுத்துக் கொள். உன் முகத்தில் ஒரு வாட்டம் இருக்கிறதே.

'இந்த அம்மா'வுக்குச் சொல்லலாம் என்று நினைத்தால் சொல்லு"

அன்பில் தோய்ந்த வார்த்தைகள்.அன்பு என்றால் அப்படியே மனத்தை உருக்கும் அன்பு! இதற்குமேல் அவனால் வாயை
மூடிக்கொண்டிருக்க முடியவில்லை.

" மா ஜி, என் அப்பா, அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது? என் தங்கைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ?

அவர்களும் என்னை மாதிரி வளர்ந்து, இப்போது பெரிய பெண்களாக இருப்பார்கள் அல்லவா?"

" இதில் சந்தேகம் என்ன? கடவுள் அருளால்,கட்டாயம் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்."

இப்படியே சில மாதங்கள் போனது. ஆனால் அடிக்கடி இதைப் பற்றிய சம்பாஷணைகள் மட்டும் தொடர்ந்தன. இப்போதெல்லாம்
'பிதா ஜி'யும் இதில் கலந்து கொள்கின்றார்.

பேச்சு வாக்கில் ஒரு நாள் அவன் சொன்னான், 'ஒரு முறை மத்ராஸ் சென்று அவன் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என்று.
ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் தயங்கின 'மா ஜி' புன்சிரிப்போடு சொன்னது, 'போய்விட்டு வாயேன்'


ரெண்டாவது பயணம் தொடரும்.........

Thursday, December 13, 2007

Just to keep in touch

டிசம்பர் வந்துருச்சு. வருசக்கடைசி. கையைக் கடிக்குது. போன பதிவில் போன வருச லிங்கைக் கோர்த்துவிட்டது தப்போன்னு இருக்கு. 'பசங்க' அதைப் படிச்சிட்டு(???!!!!) லீவுக்கு இப்படி ஆ(ளா)லாப் பறக்கறாங்க.

இனிவரும் நாட்களில் நம்ம தோட்டத்தை வச்சேக் கொஞ்சம் ஜல்லியடிச்சு
நாட்களைக் கடத்தணும்போல.. போதாக்குறைக்கு நானும் PIT மாணவின்னு
அப்பப்பக் காமிச்சுக்கணும் இல்லையா?
ஆழ்ந்து படிக்காம மேலோட்டமா நானும் வந்தேன்னு இருக்கும் என் வகுப்புத் தங்கங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
முந்தாநாள் முத்துலெட்சுமி கேட்ட கேள்விக்கு இது(வும்) பதிலாக இருக்க வாய்ப்புண்டு.
தலைவெட்டி நியூஸியில்:-)
பொதுவா சூரியகாந்திச்செடி, நெடுநெடுன்னு உசரமா வளர்ந்து உச்சாணியில் ஒரு பூ மட்டுமே பூக்கும்தானே?
இது என்னவோ குள்ள வகையாம். பரபரன்னு எல்லாப் பக்கங்களிலும் கிளைகள்விட்டு 16 பூக்கள் வந்துருக்கு. கொடுத்த காசு செரிச்சாச்சு:-)))
இங்கே நம்ம வீட்டுலே இருக்கும் லொபெலியாப் பூக்கள் நிஜத்தில் ஒரு கலராவும், நிழலில் ஒரு கலராவும் இருக்கு. டார்க் பர்ப்பிள் கலரில் இருப்பது,
படத்தில் மட்டும் ப்ளூவாத் தெரியுது. காரணம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க,
நம்ம கெமெராவுக்கு கலர் ப்ளைண்ட்????
கண்ணுக்குக் காட்சி.சற்றே வயிற்றுக்கும் உணவு. இந்த வருசம் ராஸ்பெரி நிறைய வந்துருக்கு. ( ஒரு செடி பத்து டாலர்ன்னு மார்கெட்டிலே பார்த்ததும்
வீட்டுக்கு வந்து, செடிகளை எண்ணி நூறு டாலர் கோபாலுக்கு மிச்சம் பிடிச்சதைச் சொன்னேன்:-)
கடைசியா( இப்போதைக்கு) நம்ம ஜிகேவுக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசா ஒரு
பாப்பா வாங்கி இருக்கு. அவனைப் போலவே இவன்.

Tuesday, December 11, 2007

வருசாவருசம் என்னத்தைச் சொல்றது?

வருசாவருசம் என்னத்தைச் சொல்றது?

'டாண்'ன்னு ரெண்டு மணிக்குத் தொடங்கிரும். எல்லாரும் சீக்கிரம் போய் இடம் பிடிக்கணும். வேடிக்கை 'பார்க்'க இடம் கிடைச்சிரும்.வண்டி 'பார்க்' பண்ண இடம் கிடைக்காது. இந்த கஷ்டத்துக்காக மக்கள்ஸ் ஒரு மணிநேரம் முன்னால் போறதும் உண்டு.








ஊர் பழக்கத்தையொட்டி நாங்களும் போனோம்..... ஆனால் ஒரு பதினைஞ்சு நிமிஷம் முன்னால். ஒரு அஞ்சு நிமிஷ நடையில் பக்கத்துத் தெருவில் ஒரு வொர்க்ஷாப்பின் பார்க்கிங்லே வண்டியை விடறது நம்ம வழக்கம்! ஞாயித்துக்கிழமை லீவுதானே. அதுவுமில்லாம அந்த சுவத்துலே 29ன்னு எழுதியிருக்கும். நம்ம வீட்டு எண். அதனால் ஒரு உரிமை:-)





இருபது வருசமா இதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்கோம். ஒரு அசுவாரசியம்தான். ஆனாச் சின்னப்புள்ளைங்க முகத்தைப் பார்க்கணுமே......
ஃப்ளோட் கண்ணுக்குத் தெரியாமப்போயிருமோன்னு ஒரு கவலை அந்தப் பிஞ்சின் முகத்தில். இது முதல்முறையான்னு 'அப்பா'கிட்டே கேட்டேன். ரெண்டாவது முறையாம். போனவருசம் பார்த்தது நினைவில்லை. வயசு மூணுதானே......





எங்களுக்கு முன்னால் நிற்க இடம் கொடுத்தோம். நடைபாதையும் நிறைஞ்சு, சாலையிலும் உக்கார்ந்துருக்காங்க. கிளை பிரியும் தெருக்களில் போக்குவரத்துக்குத் தடா.







ஒரு 'மைல்' தூரம் போகும் ஊர்வலம். கொஞ்சம் 'சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்'......







சரியா அறுபது வருசத்துக்கு முன்னே நாலே நாலு அலங்கார வண்டிகளுடன் ஆரம்பிச்சதாம். 'ஹேஸ்' என்னும் வியாபார நிறுவனம் ( எல்லாம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்தான் ) கிறிஸ்மஸ் சமயம் வியாபாரத்தைப் பெருக்கச் செய்தத் தந்திரமான விளம்பரம். கொஞ்சம் கொஞ்சமா வண்டிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதுக்கப்புறம் அந்தக் கடைக்குப் 'ஃபார்மர்ஸ்' என்ற பெயர் மாற்றம். நாங்க இங்கே வந்தப்ப 'ஃபார்மர்ஸ் சேண்ட்டா பரேட்' என்ற பெயர்தான் விழாவுக்கு இருந்தது. இப்பச் சில வருஷங்களா இது 'ஸ்மித் சிடி சேண்ட்டா பரேடு'ன்னு ஆகி இருக்கு. யார் மெயின் ஸ்பான்ஸாரோ அவுங்க பேரை வச்சுருவாங்க. 'டுல்ஸீஸ் சேண்ட்டா பரேட்'ன்னா நல்லா இருக்காது?:-))))











பொதுவா இது குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் ஊர்வலம் என்றதாலே அந்தந்த வருசம் பிரபலமா இருக்கும் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் கேரக்டர்கள் வேசத்தில் அலங்கார வண்டிகளில் இருக்கும் நபர்களுக்கு
வரவேற்பு பலமாவே இருக்கும்.கெர்மிட் & மிஸ் பிக்கி, சிம்ஸன்ஸ், ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் தவறாமல் வருவாங்க.










ஆல் டைம் ஃபேவரிட் என்றதுபோல ஃபேரி டேல்ஸ் கதாபாத்திரங்கள் உண்டு. சிண்டெரல்லா, த்ரீ லிட்டில் பிக்ஸ், மதர் கூஸ் இத்தியாதிகள்.
நானும் 20 வருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்....... சில அலங்காரவண்டிகள் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அதே வர்ணத்தில்( எல்லாம் புதுப் பெயிண்ட் அடிச்சு) மினுக்கலா வர்றதுதான்.







ஆமா.....வருசம் ஒருக்கா வெளிவரும் இதுகளை எங்கே வச்சுக் கட்டி(?)க் காப்பாத்தறாங்க? இதுக்குன்னே ஒரு ட்ரஸ்ட் இருக்காமே. அவுங்கதான் பொறுப்பாப் பார்த்துக்கறாங்களாம்.





ஒரு பத்துவருசமா, நம்ம 'ஹரே கிருஷ்ணா' கோயிலின் தேர்/ரதம் இதுலே கலந்துக்குது.மத்த அலங்கார வண்டிகள் மாதிரி மோட்டார் வச்சு இயக்காம, கையாலேயே வடம் பிடிச்சு இழுத்துக்கிட்டு வர்றதுதான். வேட்டி/புடவை கட்டுன இயக்கத்தினர்கள் வடம் இழுப்பதோடு, 'பஜனை' செஞ்சுக்கிட்டு, மிருதங்கம் வாசிச்சுக்கிட்டுப் போறது 'நமக்கு நல்லாத்தான் இருக்கு பார்க்க'.












இந்த முறை மொத்தம் 130 அலங்காரங்கள் கலந்துக்கிட்டாங்க. அறுபதாண்டுக் கொண்டாட்டம். ஆக்லாந்து நகர் சேண்ட்டா பரேடில் தடை செஞ்ச சீனர்களின்
'ஃப லூன் டாஃபா கொங்' இங்கே தடை ஏதும் இல்லாம ரெண்டாவது வருசமா
ஊர்வலத்தில் வந்தாங்க.









ச்சின்ன சப்பரம் மாதிரி அலங்கரிச்சதைப் பல்லக்கு மாதிரி தோளில் சுமந்துக்கிட்டு ஜப்பானியர்கள், கொரியன் மேளத்தோடும், பாரம்பரிய உடைகளோடும் கொரிய மக்கள், உள்ளூர் மவோரி இனக்குழு, சிங்க நடனம் ஆடிக்கிட்டே (குட்டிப்பாப்பா சிங்கம் கூட அப்பப்ப ஆடுச்சு)வண்டியில் நின்ன
ச்சீனக்குழு, ச்சின்மயா சங்கத்தின் ஆட்கள்,இந்தோனேசியக் கலாச்சார அலங்காரத்துடன் வந்த மக்கள், பேக் பைப் வாசிக்கும் ஹைலேண்ட் குழு, சர்க்கஸ் காமிச்சபடி அக்ரோபடிக் பள்ளிக்கூடப் பசங்கள், BMX Bike group,
அக்கார்டியன் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம், நாடகம்/நடிப்புக்கான பள்ளிகள், பேலே நடனம் சொல்லித்தரும் பள்ளிக்கூடம்( இது நம்ம வீட்டுக்கு ரெண்டாவது கட்டிடத்தில் இயங்கும் பள்ளி.அதனாலே என்னவோ நாமே பங்கெடுத்துக்கற மாதிரி ஒரு மகிழ்ச்சியில் பசங்களுக்கு ஜோராக் கையாட்டினேன்)இப்படி வந்த வரிசையில் 'பெல்லி டான்ஸ் சொல்லித்தரும் பள்ளி' முதல்முறையாக் கலந்துக்கிச்சு. தமிழ் சினிமாவில் நடனக்காட்சிகள் பார்த்துப் பழகின நமக்கு இது அவ்வளவா அதிர்ச்சியைக் கொடுக்கலைன்னு வையுங்க. ஆனால்........





குஞ்சும் குளுவானுமா இருக்கும் கூட்டத்தில் பெற்றோர்களுக்குக் கொஞ்சம்(??!!) அப்படி இப்படி இருந்துச்சோன்னு ஒரு நினைப்பு. அரைகுறை உடுப்போட ( அதுக்குன்னு இருக்கும் காஸ்ட்யூமே அப்படித்தானே?) ஆடிக்கிட்டு இருக்கற வண்டி போனதும் கொஞ்ச நேரத்தில் பால்ரூம் டான்ஸ் பள்ளி மக்கள்ஸ், குழுவா நடந்து வந்து அஞ்சு நிமிசத்துக்கொரு ஆட்டம் போட்டுக்கிட்டுப் போனாங்க.
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா குட்டிக் குதிரைகளும், கென்னல் க்ளப் நாய்களும்தான். அதிலும் அந்த போனி க்ளப் குதிரைகள் ரொம்பவே க்யூட்.







வழக்கம்போல கடைசி ஃப்ளோட் சேண்டாவோடது. வழக்கத்துக்கு மாறா பாட்டு ஒண்ணும் இல்லாம சைலண்டா வந்தது என்னமோபோல இருந்துச்சு எனக்கு. ஒருவேளை ஆடியோக்கு ஏதும் வந்துருச்சோ? கிறிஸ்மஸ் தாத்தா வரும்போது கேரல்ஸ் முழங்கணுமா இல்லையா? என்னவோ போங்க.
ஊர்வலம் ஆரம்பிச்சதுலே இருந்து இதுவரை சரியா ஒன்னரை மணி நேரம் ஆச்சு.

கூட்டம் கலைய ஆரம்பிச்சதும் பரபரன்னு அஞ்சு குப்பை வண்டிகள் வந்து பின்னாலேயே சுத்தம் செய்ய ஆரம்பிச்சு வீதி எல்லாம் பளிச்.

இந்தப் பதிவை எழுதவேணாமுன்னு முதல்லெ நினைச்சேன்.வருசாவருசம் அதே தானே? என்னாத்தைன்னு எழுதறதுன்னு.






ஆனா..... ஊர்வலம் முடிஞ்ச மூணாம் நாள் உள்ளூர் செய்தித்தாளில் வந்த ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றைப் பார்த்ததும் சில கேள்விகள் மனசில்......
உள்ளூர் குடும்பம் எழுதி இருக்காங்க இப்படி.




"இந்தப் பரேடு கிறிஸ்மஸ் பண்டிகைக்கானது. நம்ம மக்களுக்கு பண்டிகை ஸ்ப்ரிட்(???) வர்றக்காகன்னு ஏற்பட்டது. இதுலே மத்த இனத்தார்களின்
அலங்கார வண்டிகள் வர்றது கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லை. இந்திய மதத்தைச் சேர்ந்த ஹரே கிருஷ்ணா, ச்சீனாவில் தடை

செய்யப்பட்ட ஃப லூன் டாஃபா எல்லாம் எதுக்காக இதுலே வரணும்?"




அவுங்க சொல்றதுலே இருக்கும் நியாயம் புரியுதுதான். சம்மதிக்கிறோம்.



ஆனா.........



ஒரு லட்சத்து முப்பாதாயிரம் மக்கள் கூடும் இடத்துலே மற்ற இனங்கள் தங்களை வெளிப்படுத்திக்கலைன்னா...... எப்படி? (எங்க ஊரின் மொத்த ஜனத்தொகை 4 லட்சம்)




இவுங்களும் இந்த நகரத்தில் இருக்கறவங்கதானே?



தனியாத் தேர்த்திருவிழா, சீன விழான்னா எப்படி விளம்பரம் செய்யமுடியும்? நமக்கு ஆடியன்ஸ் எப்படிக் கிடைப்பாங்க? அப்படியே சிட்டிக் கவுன்சிலிடம் அனுமதி வாங்கி ஊர்வலம் வந்தாலும் பார்க்க யார் இருக்காங்க? என்றைக்கு அதுக்கு நாள் ஒதுக்கறது?




அப்படியே வந்தாலும், சாலைகளைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை யார் கொடுக்கறது? கட்டுப்படி ஆகுமா?



மற்ற இனத்துடன் கூடி வாழும் வாழ்க்கை ஏன் சிலருக்குப் பிடிக்கலை. இந்த வெறுப்பு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி பின்னாளில் ஏதாவது விபரீதம் ஆகுமா?




இப்படி எல்லாம் எண்ண ஓட்டம் வந்துக்கிட்டு இருக்கு. இது நல்லதுக்கான்னே தெரியலை(-:



படங்கள் சிலவற்றை அடுத்த பதிவிலும் போடவேண்டியதுதான் போல.
மக்களின் வேண்டுகோளை முன்னிட்டுப் போன வருசம் நடந்த ஊர்வலம் இங்கே பாருங்க.
பார்த்துட்டு ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்கணும்.ஆமா.......

Friday, December 07, 2007

தீபா....ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்......

தீபா,

நீங்க ''மேக்ரோ' சொன்னது இதுதான்னு புரிஞ்சுக்கிட்டு(????) கிட்டே அதாவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக்கிட்ட்டே போய் கிளிக்குனது இவையெல்லாம்.
எதாவது தேறுமா, அட்லீஸ்ட் பாஸ் மார்க்கையாவது தொடுவேனான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.
ஹோம்வொர்க் செஞ்சுட்டேன்:-))))
நாளைக்கு யாரும் நான் PIT வகுப்புக்கே வந்ததில்லைன்னு சொல்லிறக்கூடாது பாருங்க......
அதான்....
வீட்டுலே ஒண்ணையும் விட்டுவைக்கலை. தோசையைக்கூடச் 'சுட்டுட்டேன்':-)))))

Monday, December 03, 2007

நாங்களும் வரலாமா?

மலர்கள் போட்டிக்குத் தோட்டநகரத்தில் இருக்கும் நாங்க கலந்துக்கலேன்னா எப்படிங்க? அதான்......................

சூரியனைக் காணோமே?
போட்டிக்கு ரெண்டுதானாமே......
*****************************************************************************************
வந்தது வந்துட்டோம். இன்னும் சிலர் உங்கள் கண்களுக்குக் காட்சி.
மலர்ந்தும் மலராத பாதி மலர்.......
மழையில் நனைஞ்சுட்டேன்.....

இது இன்றைய ஸ்பெஷல்....

மகள் கொண்டுவந்த கட்டிங்(??)கில் முதல் பூ:-)))