Sunday, May 04, 2008

கேட்டுக்கோடி உரு/றுமி மேளம்

மருதக்காரனுக்கு வாக்கப்பட்டவ, உருமிச் சத்தத்துக்குப் பயந்தா ஆகுமா?

கொஞ்சநாளா(?) காதுலே பிரச்சனை. எப்பப் பார்த்தாலும் குறுகுறு, புருபுருன்னு லேசா ஒரு குடைச்சல். என்னதான் செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சாலும், கட்டுப்படுத்த முடியாமத் தவிக்கும் ஆசை வேகத்துலே, 'இது ஒண்ணு'ன்னு நான் சொன்னாச் சரியா இருக்குமான்னு நீங்களே பாருங்க. ஒரு மெலிசான இறகு எடுத்து அப்படியே காதுலே லேசாக் கொடைஞ்சா.....ஆஹா..... சுகமோ சுகம். (இதை ஒரு தமிழ் சினிமாவிலே கூட காட்டியாச்சு. சவுந்தர்யா நடிச்ச பொன்னுமணி என்ற படம். பாவம்... அந்தப் பொண்ணு. அல்பாயுசுலே போயிருச்சு(-: ஹூம்...)



நம்மூர்மாதிரி இங்கே கோழி இறகு கிடைக்க நமக்கு வாய்ப்பு இல்லை என்றதாலே வாத்து இறகு கிடைச்சா( அதான் பார்க்குகளில் ஆத்தோரம் நடக்கும்போது கிடைக்குமே) எடுத்துட்டு வருவேன். எதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமி இருக்குமோ என்ற பயத்துலே ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வச்சு அதில் இதைப் போட்டு அஞ்சு நிமிசம் நல்லாக் கொதிக்க விடறதுதான். எதைச் செஞ்சாலும் சுத்தம் சுகாதாரம் கடைப்பிடிக்கிறேனாம்.:-))))))))))))



ஸ்டெரெலைஸ் செஞ்சுக் காயவச்சு எடுத்து வச்சுக்குவேன். இருக்கட்டும்....
பாதி ராத்திரி நடுத்தூக்கத்துலே விழிப்பு வரும்போது காது புருபுருவும் வந்துரும். அந்நேரத்துலே விளக்கைப் போட்டுக்கிட்டு இறகு தேட முடியுமா?
தலைமாட்டுலே (மூக்குக் )கண்ணாடி எடுத்து வைக்குமிடத்தில் கைக்கெட்டும் தூரத்தில் எப்பவும் ஒண்ணு. எதுக்கும் இன்னொரு 'பேக்கப்' முறை இருக்கட்டுமுன்னு சில இயர் பட்(ear bud)ம் வச்சுருக்கேன்.


இங்கே மூணு மாசத்துக்கு ஒருதடவை டாக்டர்கிட்டே போய் மெடிக்கல் செக்கப் (அதான் ரத்தக் கொதிப்பு ஆடிக்கிட்டு இருக்கே) செஞ்சுக்கிட்டு மருந்துக்கான சீட்டு வாங்கிக்கறது வழக்கம். மருந்துக்கடையில் மூணுமாசத்துக்கான மருந்தை ஒரேடியாத் தரமாட்டாங்க. ஒவ்வொரு மாசமும் போய் வாங்கிக்கணும். முதல் மாசம் காசு கட்டுனாப் போதும். அடுத்த ரெண்டு முறை இலவசம். அப்படி ஒரு ஆறு மாசம் முன்னே டாக்டருகிட்டே போனப்ப, இப்படிக் காதுலே புருபுருன்னு சொன்னேன். அந்தம்மா சின்ன மைக்ராஸ்கோப் போல ஒரு சாதனத்தை வச்சுப் பார்த்துட்டு இன்ஃபெக்ஷன் ஒண்ணும் இல்லை. எதுக்கும் குளிக்கும்போதுக் காதுக்குள்ளேத் தண்ணி போகாமப் பார்த்துக்கோ'ன்னு சொன்னாங்க. நடக்குற காரியமா? குளிச்சுட்டு வந்து ஒரு பஞ்சு மொட்டு போட்டுக் காதைத் துடைச்சுக்குவேன்.



மூணுமாசம் ஆச்சு. இன்னும் ஒண்ணும் குறையலை. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு அப்பப்ப காதுக்குளே உருமி மேளத்தில் குச்சியைவச்சு இழுக்கும் 'ப்ரும்' சத்தம் வேற. அடுத்தமுறை டாக்குட்டர் அம்மாவைப் பார்த்தப்ப வழக்கமான மருந்துச்சீட்டு வாங்கிக்கிட்டுக் காது இன்னும் சரியாகலைன்னேன். மறுபடி செக் பண்ணிப் பார்த்துட்டு, காதுக்குள்ளெ இருக்கும் தோலில் ஒரு வகையான டெர்மடைடிஸ் (செதில்செதிலா வரும்) இருக்கு. இதுக்கு ஒரு சொட்டு மருந்து எழுதித்தாரேன். தினம் நாலுவாட்டி போட்டாச் சரியாயிருமுன்னு சொன்னாங்க. இந்த மருந்துக்கு அரசாங்க சலுகை இல்லை என்றதால் 13 டாலர் அழுதேன்.



தினம் நாலு முறை. போட்டவுடன் ஒரு மாதிரி வாந்தி வர்றதுபோலவும் லேசாத் தலை சுத்தறதாவும் இருந்துச்சு. 'கேட்டுக்கோடி உறுமி மேளமுன்னு அது பாட்டுக்கு அதுன்னு இருக்கு இன்னமும். (இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் வில்லனைக் காமிக்கும் சீன்களில் இந்த 'ப்ரும்' சத்தம் வர்றதைக் கவனிக்க ஆரம்பிச்சேன்:-))))


இது எல்லாம் வலது காதில்தான். நாலைஞ்சுமுறை வெய்யிலில் நின்னுக்கிட்டு, காதுக்குள்ளே எதாவது இருக்கான்னு பாருங்கன்னு கோபால்கிட்டே சொல்றதும், அவர் 'பார்த்துட்டு' ஒண்ணும் இல்லைன்றதும்
ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்கு.



தலைசுத்தல் வேற அடிக்கடி ஆனதும் பொறுக்கமுடியாமப் போய் ஒரு நாள் காதுமூக்கு தொண்டை நிபுணர்கிட்டே ஒரு நேரம் வாங்கிக்கிட்டோம். 'புது இடத்துக்கு மாறிட்டோம். இந்த விலாசத்துக்கு வரணும்'னு விவரமாக் கடுதாசி போட்டாங்க. அட! இது நம்ம ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் பக்கத்தில்தான் ரெண்டு தெருத் தள்ளி இருக்கு. போற வழியிலே கோவிலுக்குப்போய் ஒரு நமஸ்காரம் செஞ்சுட்டே போகலாமுன்னு எண்ணம். அங்கே விழுந்து சாமி கும்பிட முடியலை. குனிஞ்சாவே லேசா மயக்கம்.









The Changing face of Christchurch city ன்னு ஒரு தொடர் எழுதணும்போல. The most English city of New Zealand என்ற பெயரை மாத்தும் விதமா நவநாகரீக டிசைன் கட்டிடங்கள் வந்துக்கிட்டு இருக்கு நகரில். இருக்கும் சில பழங்காலக் கட்டிடங்களைச் 'சரித்திரம்' ஆக்கிருவாங்க இன்னும் கொஞ்ச நாளில்!
எல்லாவித விசேஷ மருத்துவர்களுக்குமுன்னு சில கட்டிடங்கள் அடுத்தடுத்து இருந்துச்சு. நாம் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். ரெண்டாவது மாடி. உள்ளே நாலு பகுதியில் வெவ்வேற சிறப்பு மருத்துவம்.







எல்லாருக்கும் சேர்த்து ஒரு காத்திருப்பு ஹால். சுவத்துலே தொலைக்காட்சி. குழந்தைகள் விளையாட விளையாட்டுச் சாமான்கள். நமக்குப் படிக்க கொஞ்சம் புதுசா வார/மாத இதழ்கள். இந்த ரெண்டு மாசத்துக்குள்ளே வந்தவை. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒவ்வொரு செயலாளர் தனித்தனியா ஜன்னல் வச்சுக்கிட்டு இருக்காங்க. அதுவழியாத்தான் காசு கொடுக்கல் வாங்கல் இன்னபிற எல்லாம்.








எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தப்ப அந்த செயலாளர் பணிவா அருகே வந்து குனிஞ்சு, 'மிஸ்ஸஸ் கோபால். த டாக்டர் ஈஸ் ரன்னிங் லேட். ஐ அம் ரியலி சாரி. இட் வோண்ட் பி லாங்' என்றார்.' அப்பத்தான் நாம் சாதாரணமாப் போய்ப் பார்க்கும் GP க்கும் Specialist க்கும் உள்ள வித்தியாசம் 'பளிச்' ன்னு புரிஞ்சது.


ஜிபியைப் பார்க்கப்போனால் வெயிட்டிங் ரூமில் நாம்பாட்டுக்குக் காத்துக்கிட்டு இருப்போம். அங்கே இருக்கும் வரவேற்பாளினிகள் யாரும் சட்டையே செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு என்னிக்கும் 'டான்'னு நம்மை உள்ளே கூப்பிட்டதாகச் சரித்திரமே கிடையாது. ( சில சமயம் 40 நிமிசம்கூட ஆயிரும்)


அதுவரை அங்கே கிடக்கும் அறுதப்பழசான பத்திரிக்கைகளை மேய்ஞ்சுக்கிட்டு இருப்போம். பிள்ளைகளுக்கு ஒரு சின்ன பெட்டியில் நாலைஞ்சு விளையாட்டுச் சாமான்கள். இருக்கும். நாமா எழுந்துபோய் இன்னும் எவ்வளவு நேரமாகுன்னு கேட்டால் மட்டும் 'ஷீ இஸ் ரன்னிங் லேட்'ன்னு மறுபடி வரும்.


ஒரு 10 நிமிசக் காத்திருப்புக்குப் பின் மருத்துவர் வந்து கை குலுக்கி உள்ளே கூப்பிட்டுப் போனார். என்ன விசயமா வந்துருக்கோம் என்ற விசாரிப்பு. நான் எல்லாத்தையும் சொன்னேன். 'ஐ ஃபீல் தட் சம்திங் இஸ் ரப்பிங் மை இயர்ட்ரம்ஸ். (பின்னே... ஐரிஷ்காரருக்குப்போய் உருமிக்கொட்டுன்னு சொன்னா?)வலது பக்கம்தான் கூடுதலா இருக்கு. லேசான வலியும்கூட.'


அயர்லாந்துக்காரர். சின்ன வயசு ஆள்தான். ஒரு மூணு மாசக் குழந்தை இருக்கு. (அங்கேதான் குடும்பப்படம் வச்சிருந்தாரே) அவரும் அந்தக் கருவியால் காதுகளைப் பரிசோதிச்சார். பின்னே மெதுவா.... காதுலே பஞ்சு இருக்குன்னார். இருக்காதா பின்னே? அதான் தினமும் குளிச்சதும் தண்ணியை எடுக்கச் சுத்தம் செய்றேனே. சில இழைகள் ஒட்டிக்கிட்டு இருக்கலாம்னு அசட்டையா இருந்தேன்.


உள்ளே ஒரு பரிசோதனை மேசையில் படுக்கச் சொல்லிட்டு ரொம்ப மெலிசான ஒரு கம்பி இருக்கும் சிரிஞ்சி போலுள்ள சாதனத்தைக் காமிச்சுட்டுக் காது உள்ளே செலுத்தினார். எனெக்கெதிரில் கோபால் கவலை தோய்ந்த முகத்துடன்.... என்னமோ உறிஞ்சும் சத்தம் மெலிசாக் கேட்டுச்சு......


டடா.........


டாக்டர் கையில் ஊசி முனையில் ஒரு முழு காட்டன் பட் !!!!!

oh my God ன்னு சொன்ன என்னால், அதுக்கப்புறம் வந்த சிரிப்பை நிறுத்தவே முடியலை. கிட்டத்தட்ட ஆறுமாசமா உள்ளே இருந்துருக்கு. மூணு மாசமா அதுக்கு சொட்டுமருந்து உபச்சாரம் வேற :-))))))


அதுக்கப்புறமும் உள்க்காதுலே இருக்கும் திரவத்தின் சமநிலைக்கான பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு, என்னோட காதுவலி ஏற்கெனவே எனக்கிருக்கும் பின்கழுத்துலே தண்டுவடம் ஆரம்ப எலும்புகள் தேய்மானத்தால் வந்துருக்கு. அதுக்கு மருந்து எடுக்கணுமுன்னு சொன்னார். அதான் மருந்து எடுத்துக்கிட்டுத்தானே இருக்கேன். 34 வருசமாத் ரங்கமணியின் சொல்லுக்கு இந்தத் தங்கமணி தலையாட்டியதன் விளைவாக இருக்குமோ என்னவோ? :-))))






காதோட கேட்கும் திறனுக்கு ஒரு பரிசோதனை ( எதிர் அறையில்) செஞ்சுக்கணுமாம். அங்கே ரெண்டு நாளைக்குப் பிறகு நேரம் ஒதுக்கி அதுக்கும் இன்னிக்குப் போய்வந்தேன். (ஒரு ஏழெட்டு வருசமுன்பு ஒருமுறை பரிசோதிச்சு இருக்கு. எதோ மணிபோல ஒண்ணை வச்சு ஆட்டி ஆட்டி சத்தம் கேக்கும்போது எஸ் எஸ்ன்னு சொல்லணும். இது என்ன பிரமாதமா?)
இங்கே என்னடான்னா.....மணியைக் காணோம். எல்லாம் ஹைடெக். கம்ப்யூட்டர்லே சகலமும் அடக்கியாச்சு. காதுலே ஹெட்ஃபோன்) போட்டுக்கிட்டுச் சத்தம் கேட்டதும், கையிலே கொடுத்த டார்ச் மாதிரி இருக்கும் ஒரு சாதனத்தில் அந்த பொத்தானை அமுக்கணும். எல்லாம் சுலபமா முடிஞ்சது.


செவிகள் நல்ல நிலையில் இருக்கு. ஆனால் கேட்கும் திறன் குறைஞ்சு இருக்காம். அதான் இனிமே நானே சொன்னாலும் (காதுலே) கேக்கமாட்டேன்.
ஆஹா.....காது இனி கேக்காது:-)))))








(இன்னிக்குத்தான் கேமெரா கொண்டுபோய் அங்கே சிலபடம் எடுத்துவந்தேன்)




சின்னப் பசங்க புளியங்கொட்டை, பலப்பம் இதையெல்லாம் காதுலே, மூக்குலே போட்டுக்குவாங்கன்னு அம்மா சொல்வாங்க. அதெல்லாம் நெசந்தான் போல:-))))


சரி...இம்புட்டுக் கதை கேட்டீங்களே..... நீதி என்ன?


காதைக் குடையக்கூடாது. அப்படியே பஞ்சு மொட்டுலே குடைஞ்சால் அதை வெளியே எடுத்ததும் அந்த முனையில் பஞ்சு இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கான்னு கவனிக்கணும். குச்சியில் இல்லைன்னா அது வேற எங்கேயும் போயிறாது. உங்க காதில்தான் இருக்கும்.:-))))

50 comments:

said...

இதனால் அறியப்படும் நீதி என்ன என்பதைப்போல முத்தாய்ப்பாகப்போட்டீர்கள் பாருங்கள் அதுதான் மிகவும் பிடித்தது!

////காதைக் குடையக்கூடாது. அப்படியே பஞ்சு மொட்டுலே குடைஞ்சால் அதை வெளியே எடுத்ததும் அந்த முனையில் பஞ்சு இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கான்னு கவனிக்கணும். குச்சியில் இல்லைன்னா அது வேற எங்கேயும் போயிறாது. உங்க காதில்தான் இருக்கும்.:-))))///

நன்றி டீச்சர்!

said...

கொத்தனார் ஊரில் கையைப் பிடித்துப் பார்த்தால் டாக்டர் கன்சல்டிங் ஃபீஸ் 100 டாலராம். உங்கள் ஊரிலும் அப்படித்தானா?

இங்கே கோவையில் இரண்டு டாலரில் எல்லாம் முடிந்து விடும்!

மருத்துவமனைப் படங்கள் அசத்தல்.

ஒரு ஆங்கில வலைப்பதிவு ஆரம்பித்து, இந்த மாதிரிப் படங்களுடன் நீங்கள் கட்டுரைகள் எழுதினால், விளம்பர சார்ஜ் என்று அவர்களிடமே 100 அல்லது 200 டாலர்கள் வாங்கி விடலாம்:-))))

said...

//oh my God ன்னு சொன்ன என்னால், அதுக்கப்புறம் வந்த சிரிப்பை நிறுத்தவே முடியலை. கிட்டத்தட்ட ஆறுமாசமா உள்ளே இருந்துருக்கு. மூணு மாசமா அதுக்கு சொட்டுமருந்து உபச்சாரம் வேற//
:-))))))))))

said...

//34 வருசமாத் ரங்கமணியின் சொல்லுக்கு இந்தத் தங்கமணி தலையாட்டியதன் விளைவாக இருக்குமோ என்னவோ? :-))))
//
துளசி மேடம்! நிஜமாவா ?

said...

துளசி மேடம்! உங்க பதிவு தளத்துக்கு Hits ஒரு லட்சம் தாண்டிடுச்சு. கலக்குங்க.

said...

இதே மாதிரி ஒரு பிரச்சனைக்கு (எனக்கல்ல)சென்னையில் மருத்துவரிடம் போனேன்..பார்த்துட்டு காதில் பிரச்சனையில்லை உங்கள் மூக்கில் தான் சிறிய பிரச்சனை - ஆப்பரேசன் செய்தால் சரியாகும் என்றார்.தேவை என்றால் செய்துகொள்ளலாம் என்றார்.
65 ரூபாய் தான் பீஸ். :-))

said...

வாங்க வாத்தியார் ஐயா.

நீதிக்கதைகள் சொல்லும்போது நீதி என்னன்னு கேக்கணுமா இல்லையா? :-)))

ஆமாம். என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? கொத்தனார் ஊருக்கு நாங்க சளைச்சவுங்களா என்ன? அதெல்லாம் குறைவைக்காம ஃபீஸ் கறந்துருவாங்க.

என்ன ஒண்ணு கொத்ஸ்க்குக் கிடைச்ச பாக்கியம் கோபாலுக்குக் கிடைக்கலை(-: கையைப் புடிக்காமலேயே காசு வாங்கிக்கறாங்க:-))))

ஒவ்வொரு விசேஷ மருத்துவத்துக்கும் வெவ்வேற காசு. இதயம் பார்க்கப்போகும்போது 850 வாங்கிப்பாங்க.

நம்ம பஞ்சு மொட்டு சல்லிசுதான். 150.

நம்ம அரசாங்கம்வேற 'வெல்ஃபேர்' அரசு ஆச்சே. நம்மகிட்டேக் கறந்தாத்தானே dole தரமுடியும்?

said...

வாங்க பிரேம்ஜி.

அதென்ன நிசமாவா?

காதல்கணவனைக் கைப்பிடித்து, அவன் காரியம்...முழுதும் தலையாட்டி.....

லட்சம் தாண்டுனதை எங்கே பார்த்தீங்க?

நம்ம ஸ்டாட் கவுண்(ட்)டர் என்ன சொல்றாருன்னா 158,805 ன்னு. நடுவில் அவுங்க சொன்ன லாக் சைஸை மாத்திக்காம விட்டதுலே ஆறு மாசம் வேலை செய்யாம வேறக் கிடந்துச்சு.

ஆ(க)ட்டும் ஆ(க)ட்டும் எல்லாம் நான் பெற்ற இன்பம் இவையகம்தான்:-))))

said...

வாங்க குமார்.

60ன்னா எவ்வளவோ தேவலை. இங்கே எல்லாம் (வரிகட்டும்) மக்கள் கட்டுன பசுக்கள்.:-))))

said...

//என்ன ஒண்ணு கொத்ஸ்க்குக் கிடைச்ச பாக்கியம் கோபாலுக்குக் கிடைக்கலை//

இது வேற!! :))

said...

காதுக்கு வந்தது கம்மலோட போயாச்சு-ன்னு வெச்சுக்கோங்க:-))

said...

வாங்க கொத்ஸ்.

இல்லையா பின்னே? :-)))))

said...

வாங்க தங்ஸ்.

கம்மலோடா? இல்லையே....
வீட்டுலேயே கழட்டிவச்சுட்டுதான் போனேன்...:-)))

இப்பெல்லாம் ரொம்பவே தேறிட்டேன்.
எந்தெந்த டாக்டரைப் பார்க்கணுமோ அதுக்கேத்தாப்போல தான் அணிகலன்:-))))

said...

ஆகா துளசி என்ன இது !! நானும் ஒரு தடவை இப்படி டாக்டரிடம் போவேண்டி வந்தது காது அடைச்சு போச்சுன்னு வலது காது தான்.. டாக்டர சொன்னார் பட்ஸ் வச்சு செய்யறதே அவசியமில்லாதது.. துண்டால வெளியே பக்கத்தை துடைத்தால் போதும்.. நீங்க க்ளீன் செய்யறேன் பேர்வழின்னு வேக்ஸை தள்ளி தள்ளி .. காது ட்ரம்மில் கொண்டுப்போய் சேர்க்கறீங்கன்னு சொன்னார்..அப்பத்திலிருர்ந்து பட்ஸ் தொடுவதே இல்லை..

said...

பட்ஸ் உபயோகப்படுத்தாதேனு ரெண்டு வருஷம் முன்னாலியே நமக்குக் கட்டளை ஆயிடுச்சி:)

இப்போ காது பின்னால அலர்ஜி வந்த போது நானே(!!!!) கண்டுப்பிடிச்சிட்டேன். கண்ணாடியோட தடம் அழுந்தி அதில ஹேர்டை பட்ட்டு,சிவந்து போயிருக்கு.னு
யார்கிட்டயும் சொல்லலை.

உடனே பசங்க நேச்ச்சுரலா இரேம்மா.
டை எல்லாம்வேணாம்னு ஆரம்பிச்சுடுவாங்க:)

ஆனலும் இவ்வளவு ஜீவ காருண்யாம் ஆகாது துளசி, ஒரு பஞ்சு மொட்டை வளர்த்து இருக்கீங்களே.:)
டாக்டர் ஹேண்ட்சமா இருக்கார்.;)

said...

//(இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் வில்லனைக் காமிக்கும் சீன்களில் இந்த 'ப்ரும்' சத்தம் வர்றதைக் கவனிக்க ஆரம்பிச்சேன்:-))))//

டீச்சர் இதுதான் அல்லாருக்கும், அல்லாத்துக்கும் ஆரம்ப எச்சரிக்கை..

'ப்ரும்' போய் 'கொய்ங்' வரும்.. அப்பாலதான் உங்க வீட்டு தங்கமணி கூப்பிட்டாக்கூட உங்களுக்குக் கேட்காம "ஏன் என் கூட பேச மாட்டேங்குறீங்க"ன்னு வக்கீல் நோட்டீஸ் விடுற அளவுக்கு மேட்டர் போகும்..

ஹெட்போன்ல பாட்டு கேக்குறது.. சினிமா தியேட்டர்ல முன்னாடி போய் உக்காந்து ஸ்பீக்கர் கிட்டக்க காதை வைக்கிறது.. அதிகமாக சவுண்ட் கேக்குற மாதிரி இடத்துல நிக்குறது.. இது எல்லாத்தையும் சுத்தமா தூக்கிப் போட்டுட்டு எங்க போனாலும் 'அக்கடா'ன்னு மாத்திரையை போட்டுட்டு ஒதுங்கிப் போய் உக்காருங்க..

வருஷத்துக்கு 3 டெஸிபலா குறைய வேண்டியது 1.5 டெஸிபலா குறைஞ்சுட்டுப் போகுது.. வேற என்ன செய்றது?

said...

மிகவும் பிரயோசனமான பதிவு. பாராட்டுக்கள்.
பலர் இவ்வாறுதான் மறந்து விடுவதுண்டு. இதைப் போலவே காதுக்குள் உள்ளி வைத்துவிட்டு, அதை மறந்து பல வைத்தியர்களிடம் அலைந்த பின் என்னிடம் வந்த ஒருவர் பற்றி 'ஒரு டாக்டரின் டயறியிலிருந்து..' நூலில் பதிவு செய்துள்ளேன்.

said...

பஞ்சும் நஞ்சாகுமோ?-செவிக்கு
சீயக்காயும் அரப்பும் மருத்துவமா யென்ன? கேளிர் குலமே- தங்க இடம்
கேளாய் காதில், பஞ்சணையும்
கொண்டிருந்தாள் எழு திங்களாய்.
பஞ்சணையில் இருந்தாலும் செவியில்
பஞ்சடைத்து.. வழக்கம் போல் கோபால் வார்த்தை கேளாமலே வாழ்ந்துமிருக்கிறாள்.

எடுத்த பஞ்சு குப்பையில் இருந்தாலும்
சொல் பேச்சு மட்டும் எப்போதும்
கேளாய்...
அடைத்தது செவியா??


விவசாயி

said...

நலம் விசாரித்த நண்பரே,

நலம்தான். நன்றி.

ஆமாம் இவ்வளோ நாளா அஞ்ஞானவாசம் ஏனோ?

said...

வாங்க கயல்விழி.

இனி மொட்டுகளைப் பார்ப்பதோடு சரி.பறிக்க மாட்டேன்:-)

முடியலைன்னா மேலாக:-)

said...

வாங்க வல்லி.


பட்டுக்கு விலக்கா?


இந்த ஹேண்ட்சம் நபர்தான் ஆடியோலாஜிஸ்ட்.

எட்டாயிரம் டாலர் செலவுலே புது டிஸைன் காது கேட்கும் கருவி வந்துருக்கு. ட்ரையல் பார்க்கறீங்களான்னு வினை விதைக்கப் பார்த்தார்:-)

said...

வாங்க உண்மைத்தமிழன்.

அன்னிக்கே உங்க நினைவுதான் வந்துச்சு. எந்த நேரத்துலே தத்து எடுத்துக்கச் சொல்லிக் கேட்டாரோன்னு:-)))))

ஒன் டு ஒன் சரியாத்தான் கேக்குது. ஆனால் மம்ப்ளிங் வாய்ஸ் கேக்கறதில்லை. இதையும் ஆடியோலாஜிஸ்ட் கிட்டே சொல்லிட்டு, வெளியே வந்து பில் கொடுக்கும் சமயம் அங்கிருந்த கோபாலைக் காமிச்சு, 'ஹீ இஸ் த ஒன் மம்பிள்ஸ்'ன்னு போட்டுக் கொடுத்தேன்:-)

said...

வாங்க டாக்டர்.

பயன் இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

உங்க பதிவில் போடும் பின்னூட்டங்களுக்கு நீங்கள் ஒன்னும் சொல்லாம விட்டுட்டீங்க. அதனால் நம்மையெல்லாம் 'கண்டுக்கலை'ன்னு நினைச்சதைப் பொய்யாக்கிட்டீங்களே:-)

said...

\oh my God ன்னு சொன்ன என்னால், அதுக்கப்புறம் வந்த சிரிப்பை நிறுத்தவே முடியலை. கிட்டத்தட்ட ஆறுமாசமா உள்ளே இருந்துருக்கு. மூணு மாசமா அதுக்கு சொட்டுமருந்து உபச்சாரம் வேற :-))))))
\\


;)))))))

டீச்சர்...நல்ல சவுண்டு உள்ள பதிவு ;)

said...

வாங்க கோபி.

ஏன் லேட்டு?

(சத்தம்) கேக்கலையோன்னு நினைச்சேன்:-)

said...

வாங்க விவசாயி.


இந்தவருசம் 'பருத்தி' போட்டுருக்கீங்களா?

பஞ்சுன்னதும் பன்ச் கவிதை( அது கவிதைதானே? இல்லை வெறும் விதை?) வந்துருக்கு!!!!

said...

//'பருத்தி' போட்டுருக்கீங்களா//
ஆமாங்க. ஒரு 2 கிலோ அனுப்பட்டுங்களா. காது"க்குள்ளே" வெச்சிக்க..

said...

அஞ்ஞானவாசமில்லீங்க...கல்யாணவாசம் போயிருந்தேன்:-)

said...

விவசாயி,

கட்டாயம் அனுப்புங்க. ஆனா அதுலே கொட்டை, தூசி தும்பு எதுவும் இருக்கக்கூடாது.இங்கே ரொம்பக் கடுமையா பரிசோதிக்கிறாங்க.

எதாச்ச்சும் தப்பித்தவறி இருந்தா அக்னிப் பரீட்சை:-)

said...

தங்ஸ்,

ஆஹா..... கல்யாண வாசமா?

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

ஆமா...மறுவீடு போய்த் திரும்ப இத்தனை வருசமா?:-))))

said...

ஆமா..இந்தக்காது பிரச்னை பெரும் பிரச்னைதான்.
என் நண்பன் ஒருத்தனுக்கு ஒரு பூச்சியே உயிரோட ஒரு மாசம் இருந்திருக்கு!
:)

என்னதான் காதுக்கு பிரச்னையா இருந்தாலும்...எங்களுக்காக, போற இடத்துக்கெல்லாம் போட்டா மிசின் எடுத்திட்டுப்போய் படம் போட்டு விளக்குறீங்களே! அதுதான் உங்க சிறப்பு!

:)

said...

நன்றி!

ஹரி,கஸ்தூரி,லலிதா,பிஜ்யா கல்யாணத்துக்கு வந்த புண்ணியம்தான்....


வருசமா?மூணு மாசம்தானே போனேன்.

said...

ஒரு ஆறுதல் உங்களுக்கும் இந்தக் காது (சத்தம்) பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சு!
<==
34 வருசமாத் ரங்கமணியின் சொல்லுக்கு இந்தத் தங்கமணி தலையாட்டியதன் விளைவாக இருக்குமோ என்னவோ? :-))))
==>
தங்க/ரங்க மணியை மாத்திப்போட்டுட்டீஙக.
கோபால் சார், வந்து உண்மையச்சொல்லுங்க. ===)))

said...

ஐய்யய்யோ முதல்ல எங்க வீட்டு ரங்கமணிகிட்ட சொல்லனும், குலிச்சு முடச்சு முத வேலையா காட்டன் பட்ஸ் தான் எடுப்பாப்ல.

said...

டீச்சர்,

நலமா? உடம்ப (காதைப்) பாத்துக்கோங்க.

பதிவின் நடை அருமை.நேத்தே படிச்சுட்டேன்.பின்னூட்டம் தான் லேட் :D :D.

//வல்லிசிம்ஹன் said...
......:)
டாக்டர் ஹேண்ட்சமா இருக்கார்.;)
//

இருங்க! மறுபடி போய் பாத்துட்டு வரேன் :)

said...

கடைசி வரைக்கும் சுவாரசியம் சற்றும் குறையாமல் .சூப்பர்....

said...

மன்னிக்கவும் துளசி.
வேண்டுமென்று பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாம விடவில்லை. தினமும் இணையத்தில் படிக்கவோ எழுதவோ முடிவதில்லை. அந்நேரத்தில் 'கண்டுக்காம' விட்டுவிட்டேனோ தெரியவில்லை.

said...

\தங்ஸ் said...
நன்றி!

ஹரி,கஸ்தூரி,லலிதா,பிஜ்யா கல்யாணத்துக்கு வந்த புண்ணியம்தான்....


வருசமா?மூணு மாசம்தானே போனேன்.
\\\

ஆகா..தங்ஸ்...மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

said...

நன்றி கோபி..உங்களுக்கும் புண்ணியத்தின் பலன் சீக்கிரம்
கிட்டும்:-))))

said...

வாங்க சுரேகா.

நம்ம வகுப்பில் கல்வித்திட்டத்தை மாத்தியாச்சு. காலம் மாறிவருதுல்லே....இன்னும் வெறும் எழுத்தையே காமிச்சா? அதான் படம் பார்த்துக் கதை சொல்லு.

அப்புறம் ஒரு நாள் பரிட்சையில் காதின் படம் வரைந்து பாகத்தைக் குறிக்கச் சொல்லி கேப்பேன்:-))))

said...

தங்ஸ்,

'சின்னு'வை மூணரை வருசமாக் கவனிக்காம விட்டுட்டு இப்ப என்ன திடீர்னு கல்யாணம்? :-)))))

பாருங்க இப்ப மக்கள்ஸ் எப்படித் தடுமாறிட்டோமுன்னு:-))))

said...

வாங்க சாமான்யன் சிவா.

மனுசங்களுக்கு ஆறுதல் எப்படியெல்லாம் கிடைக்குதுன்னு பாருங்களேன்!!!!

'தங்க ரங்க' வில் மிஸ்டேக் எதுவும் இல்லை:-))))

said...

வாங்க கிருத்திகா.

'விழி'ப்புணர்வை ஏற்படுத்திருச்சு பதிவுன்னு சொல்லுங்க:-))))

said...

வாங்க புதுவண்டு.

பல நடைகளில் இதுதான் பொருந்தி வந்தது.

said...

வாங்க பாசமலர்.

கடைசிவரை 'பஞ்சை'யும் கவனிக்கலையே:-))))

said...

என்னங்க டாக்டர்,
மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம்?

நான் ச்சும்மாக் கலாய்ச்சேன்:-)

உங்க பதிவுகளை விடாமப் படிக்கும் ரசிகை நான்:-)

said...

//துளசி கோபால் said...
வாங்க உண்மைத்தமிழன். அன்னிக்கே உங்க நினைவுதான் வந்துச்சு. எந்த நேரத்துலே தத்து எடுத்துக்கச் சொல்லிக் கேட்டாரோன்னு:-)))))//

ஆஹா டீச்சரம்மா.. கொன்னுட்டீங்க போங்க.. நச்சுன்னு இருக்கு பதிலடி..

முருகன் சத்தியமா நான் எதையும் நினைச்சு அந்த கமெண்ட்டை போடல டீச்சர். ஆனா ஏதோ ஒண்ணு நடந்திருச்சு பாத்தீங்களா..? முருகன் அப்ப எல்லாத்தையும் பாத்துக்கிட்டேயிருக்கான்னு அர்த்தமாக்கும்..

//ஒன் டு ஒன் சரியாத்தான் கேக்குது. ஆனால் மம்ப்ளிங் வாய்ஸ் கேக்கறதில்லை. இதையும் ஆடியோலாஜிஸ்ட் கிட்டே சொல்லிட்டு, வெளியே வந்து பில் கொடுக்கும் சமயம் அங்கிருந்த கோபாலைக் காமிச்சு, 'ஹீ இஸ் த ஒன் மம்பிள்ஸ்'ன்னு போட்டுக் கொடுத்தேன்:-)//

ஐயோ பாவம் கோபால் ஸார்.. இந்தப் பக்கம் வந்தார்ன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க.. இங்கன பாதிக்கப்பட ஆண்கள் சங்கம்னு ஒண்ணு புதுசா ஆரம்பிச்சிருக்கு.. தள்ளிட்டுப் போய் சேர்த்தர்றேன்..

said...

உண்மைத்தமிழன்,

வேலைக் கையில் வச்சுருக்கறவனுக்கு வேற என்ன வேலை?


அதான் கவனிச்சுக்கிட்டே இருக்கான்.

அந்தப் பக்கம்வருமுன் தகவல் அனுப்பறேன். தள்ளிட்டுப்போயிட்டா எனக்கும் கொஞ்சம் வசதிதான். ஆற அமர (நகை)கடைகளில் கொஞ்சம் பூந்து வெள்ளாடலாம்:-))))

said...

பலர் காதிலே வாக்ஸ் இருக்குன்னுதான் குடையறாங்க.
சரியா கொஞ்சமா குடஞ்சா சரியா போயிடும்.
அதாவது கொஞ்சமா தேங்காய் எண்ணைல பட்ஸ் ஐ தோச்சு பிழிஞ்சு அதால முன் பக்கமா மட்டும் (ஆழமா இல்லாம) லேசா துடைங்க. பலத்த காட்ட வேணாம். கொஞ்ச நேரத்தில திருப்பி செய்யுங்க.
எண்ண வாக்ஸ் ஐ இளக வைக்கும். இரண்டாம் தரம் துடைக்கிறப்ப வெளியே வந்துடும். தேவையானா 2-3 நாள் இப்படி செய்யலாம். எண்ணைல நனைஞ்சு இருந்தா பஞ்சு பிரிஞ்சு வராது.

said...

வாங்க திவா.

சமீபத்துலே இங்கே மருத்துவர்கள் சொல்லும் புதுச் செய்தி .....
காதுலே வேக்ஸ் இருக்கணுமாம். அதை எடுக்கக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.