Tuesday, July 29, 2008

ராணிக்கு ஒன்னுன்னா ராஜாவுக்கும் ஒன்னு........(ஃபிஜிப் பயணம் பகுதி 5)

நேத்துக் காலை & மாலை பூசைகளுக்கிடையில் கிடைச்ச இடைவெளியில் பழைய நண்பர் ஒருத்தரை( முந்தி இருந்த வீட்டுலே இவர் அடுத்த வீட்டுக்காரர்) ஒரு பத்து நிமிசம்(??) பார்த்துட்டு வந்தோம். நாட்டோட நிலமை சரியில்லை. எல்லாம் 'கைவித்தி'களுக்கு( நேட்டிவ் ஃபிஜியன்களைக் குறிப்பிடும் சொல்) போகப்போகுது. வியாபாரமும் முன்னைப்போல இல்லை. எல்லா இந்தியர்கள் வீட்டிலும் வருங்காலம் பற்றிய கவலை. அதான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதே வேற இடத்துக்குப் போயிறலாமுன்னு ஒரு எண்ணம். இங்கேயே நாலைஞ்சு தலைமுறைகளா இருந்துட்டோம். இப்ப திடீர்னு போக முடியுமா? நாங்க இதுவரை சம்பாதிச்சதையெல்லாம் இங்கேயே வீடு வாசலுன்னு போட்டாச்சு. இதையெல்லாம் வித்துட்டுக் கிளம்பலாமுன்னாலும் யாரும் வாங்கிக்கத் தயாரா இல்லை. அப்படி அப்படியே விட்டுட்டுத்தான் போகணும். இந்தியாவுக்குப் போணுமுன்னாலும் அங்கே மட்டும் எங்களுக்கு யார் இருக்கா? சொந்த பந்தம் எங்கேன்னு தேடறது. அதான் பிள்ளைகளை மட்டும் ஆஸ்தராலியா, நியூஸிலாந்து, கனடான்னு அனுப்பிட்டோம். இப்பப் பாருங்க வயசான காலத்துலே தனியாக் கிடக்க வேண்டி இருக்கு.



இவுங்க அப்பா, குட்டப்பன் நாயர் சின்ன வயசுலே இங்கே வந்து செட்டில் ஆனவர். பலசரக்கு வியாபாரம். பிள்ளைகள் எல்லாம் இங்கே பிறந்தவங்கதான். மூத்த மகனுக்கே இப்ப 79 வயசாகுது. இதுவரை யாருமே இந்தியாவுக்குப் போனதில்லை. மலையாளம் பேசத்தெரியாத மலையாளிகள். சமையலில் மட்டும் 'அவில்' எல்லாம் உண்டு. அவியலைத்தான் இப்படிச் சொல்றாங்க.



எங்களுக்குத் தெரிஞ்சே நாலு தலைமுறைகள் ஒன்னாவே இருந்த வீடு இது. மூத்தவங்க எல்லாம் இறந்து போய், இளைய தலைமுறைகள் யாருமே நாட்டில் இல்லாம 'அம்போ'ன்னு இருக்காங்க. இந்த அழகில் அந்த வீட்டம்மா சீக்கு வந்து நடக்கமுடியாமல், நாக்கும் குழற ஆரம்பிச்சுக் கிடக்கறாங்க. எவ்வளவு சுறுசுறுப்பா ஓயாமல் வேலை செஞ்ச உடம்பு. மகளுக்குக் காது குத்தி மொட்டை அடிச்சப்ப எப்படியெல்லாம் வந்து உதவுனாங்க. மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஒரு பத்துப்பதினைஞ்சு வருசம் முந்திகூட நியூஸிலாந்து சுற்றிப்பார்க்க வந்து நம்ம வீட்டில் நாலைஞ்சுநாள் தங்கிட்ட்டுப் போனாங்க.



இதேபோலத்தான் இன்னொரு தோழியின் தந்தை ஒண்டிக்கட்டையா இங்கிருக்கார். (தோழி இருப்பது நியூஸியில்) யாராவது வீட்டை வாங்கிக்கிட்டாக் கிளம்பிருவாராம்!!!! இந்தியர்கள் யாரும் வாங்க மாட்டாங்க. ஃபிஜியன்கள் வாங்குனாத்தான் உண்டு. ஆனா அவுங்ககிட்டே காசு பணம் ஏது? இவருக்கு வயசும் 87. இப்ப என்ன செய்யறாருன்னு கேட்டேன். 'ட்ராவிடியன் கல்ச்சர்'ன்னு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்காராம். 'எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளருடன் சந்திப்பு' என்ற வகையில் சற்றுநேரம் உரையாடிட்டு வந்தேன். இந்த 'எழுத்து' என்னும் விசயம் எத்தனை பேருக்கு ஒரு ஆசுவாசமா இருக்குன்னு பாருங்க!!!



கடைத்தெருவில் கொஞ்சம் சுத்திட்டு (எல்லாம் இந்த தசாவதாரம் ஹிந்திப்படம் கிடைக்குமான்னுதான்) அப்படியே டாங்கி டாங்கி கோயிலுக்குப் போனோம். ஒரு அரைமணிநேரப் பயணம் கிங்க்ஸ் ரோடில்.
சொல்ல மறந்துட்டேனில்ல? ஏர்ப்போர்ட்டில் இருந்து வெளியே வந்து மெயின் ரோடில் சேரும் இடத்தில் இருந்து வலது பக்கம் போனால் தலைநகர் வரை குவீன்ஸ் ரோடு. இடது பக்கம் திரும்பி அதே தலைநகர்வரை போகும் ரோடு கிங்க்ஸ் ரோடு. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்னுமில்லை... தீவைச் சுத்தியே போகும் ஒரே ரோடுதான்னு சொல்லிறமுடியாது.



தலைநகருக்குப்போக ராணியில் 5 மணி நேரம். ராஜாவில் 7 மணியாகும்.
ராணிக்குப் பராமரிப்பு பரவாயில்லை. ராஜாவுக்கு ரொம்பவே மோசம். ராணியின் வழியில் அவ்வளவா ஊர்கள் இல்லை. ராஜாவுக்கு அங்கங்கே சின்னச்சின்னதா ஊர்கள். நாட்டின் பெருந்தலைகள் விமானநிலையம் வரப்போக ஏதுவாக இருப்பதால் ராணியை நல்லாக் கவனிச்சுக்குறாங்க.
ஹைவேயில் பராமரிப்பு, மராமத்து நடப்பதைக் கண்கூடாக் கவனிச்சேன்.



ரெண்டு மூணு மைலுக்கு ஒரு குழுன்னு 'ரோட் ஒர்க்ஸ்' நடந்துக்கிட்டு இருக்கு. குழு மொத்தமும் அஞ்சாறு ஃபிஜியன்கள்தான். குண்டும் குழியுமா இருக்கும் இடங்களில் தரைக்கு வலிக்காத விதமா லேசா பூப்போல கடப்பரையால் ஒருத்தர் லேசாத் தோண்டறார். இன்னொருத்தர் ரோடின் ஒரு பக்கத்தில் கொட்டி இருக்கும் சரளைக்கல் ஜல்லிகளை கொஞ்சமா வாரி குழியில் ரொப்புரார். இன்னொருத்தர் ஒரு மக் போல இருக்கும் குட்டித் தகரடப்பாவில் தாரை மொண்டு ஊத்துறார். இப்ப இன்னும் கொஞ்சம் ஜல்லி அதுமேலே விழுது. நல்ல உயரமான, திடமான உடம்புள்ள இன்னொருத்தர் திமுசுக் கட்டையால் அந்தக் குழியை அலுங்காமக்கொள்ளாம ஒத்தி எடுக்கறார். அவ்ளோதான். ஆச்சு, இனி அதுக்குப் பக்கத்தில் அரை அடி தூரத்துலே இருக்கும் இன்னொரு குழிக்குச் சேவை தொடர்கிறது இதே மாதிரி.


தெருவேலைக்கான 'ட்ராஃபிக் கோன்'களைச் சுற்றி வச்சதால் போக்குவரத்து நெளிஞ்சு வளைஞ்சு போகுது. ஒரு அரைமணியில் இந்தக் கூம்புகள் வேற குழிக்குத் தேவையா இருக்கேன்னு இடமாற்றம் ஆன அடுத்த அஞ்சு நிமிசத்தில் செப்பனிடப்பட்ட இடத்தில் ஓடும் வண்டியில் தாரெல்லாம் ஜல்லியோடு ஒட்டிக்கிட்டுப் போயிருது. இந்தக்குழியில் இருந்து அங்கே, அங்கே இருந்து இங்கேன்னு நாள் முச்சூடும் நாலைஞ்சு குழிகளை நிரப்பியே அன்றைக்கான பராமரிப்பு வேலை முடிஞ்சதுன்னு வையுங்க.


மறுநாள் காலையில் பழையபடி, இங்கேயே இதே வேலைதான். ராத்திரியில் போக்குவரத்து குறைவா இருக்கும் சமயம் ரோலர் எல்லாம் வச்சு ஒழுங்கா இந்த வேலையைச் செய்யலாம்தான். ஆனால் இங்கே யாரும் அஞ்சரைக்குமேலே வேலைக்கு வரமாட்டாங்க. பேசாம இதை ஒரு ஒப்பந்தக்காரருக்கு விட்டாலாவது உருப்படியா வேலை நடக்கும். ஆனா பொதுப்பணித்துறை அரசாங்கத்துப் பிரிவாச்சே.



இவ்வளவு என்னத்துக்கு...... டவுன் கவுன்சிலுக்குச் சொந்தமான பார்க்குகள், விளையாடும் திடல்கள் இருக்குல்லே. இங்கே புல்வெட்ட ஒரு லான்மோவர் இல்லை. சின்னதா லைன் ட்ரிம்மர் வச்சுக்கிட்டுப் புல்வெட்டியாறது. ஒரு திடல் வெட்ட ஒரு மாசம் ஆகும். கடைசிப்பகுதி முடிச்சவுடன் மறுபடி முதல் பகுதியில் இருந்து ஆரம்பிக்கணும். அதுக்குள்ளே புல் முளைச்சு ரெடியா இருக்கும். எப்படியும் ஒரு ஆளுக்கு(ஃபிஜியன்) மாசம் முழுசும் வேலை இருக்கு.




அப்ப எல்லா நேடிவ் ஃபிஜியன்களும் நல்லபடியாக் கஷ்டமில்லாமல் இருக்காங்களான்னு பார்த்தால்.......ஊஹூம். இந்திய விவசாயிகள்??
அவுங்களிலும் பாதிக்கு மேல் ரொம்பக் கஷ்ட ஜீவனம்.
கொஞ்சம்பேர் சுமாரான வாழ்க்கைவசதிகளுடன் இருந்தாலும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த வண்டி ஓடுமுன்னு தெரியலை.



முந்தியே சொன்னபடி விவசாய நிலங்கள் எல்லாமே ஃபிஜியன்களுக்கு மட்டுமே அந்தந்த கிராமத்துக்கு உரியது. அதை இந்திய விவசாயிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கிட்டுக் கொடுப்பாங்க. அதுலே கிடைக்கும் வருசாந்திரப் பணத்தை, அந்தக் கிராமத்து மக்களுக்குப் பிரிச்சுக் கொடுப்பார் கிராமத் தலைவர்.



ராணுவப்புரட்சி நடந்து....... நேட்டிவ் ஃபிஜியன்களுக்கு முன்னுரிமை கொடுக்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த அரசியல் தலைவர்களும், எல்லா மக்களுக்கும் மேலே பெரிய தலைகளா இருந்த கவுன்ஸில் ஆஃப் சீஃப் என்ற குழுமமும் சேர்ந்து என்ன செய்யலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தாங்க. இந்திய விவசாயிகள் நம்ம நிலத்தையெல்லாம் பயிரிட்டுக் கொள்ளை லாபம் அடிக்குறாங்க. முதல்லே அவுங்களுக்கு நிலத்தைக் கொடுக்கக்கூடாது. நிலமில்லேன்னா எப்படிச் சம்பாதிப்பாங்கன்னு பார்க்கலாம். (எனக்கு ஒரு கண்போனாப் பரவாயில்லை. அவனுக்கு ரெண்டும் போகணும்?)



"அப்ப ஏற்கெனவே ஒப்பந்தம் இருக்குங்களே, அதை என்ன செய்யறது?"
அது இருந்துட்டுப் போகட்டும். அவகாச காலம் முடிஞ்சபிறகு இனிமே புதுப்பிக்கக்கூடாது. இந்த சமயம் பார்த்து ஒப்பந்தம் முடிஞ்ச காலக்கட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நிலம் கிடைக்கலை. நிலம் கொடுக்காததால் கிராமத்துக்கு லீஸ் பணமும் கிடைக்கலை. என்னதான் கிராமத்தலைவர் நினைச்சாலும் மேலிட உத்தரவு இல்லாமல் அவராலும் ஒன்னும் செஞ்சுக்க முடியாது. கடைசியில் உனக்குமில்லை எனக்குமில்லைன்னு பல நிலங்கள் சும்மாவே கிடக்குது.



சரி. இந்தியர்களுக்கு வேணாம்ப்பா. நாங்களே இதைப் பயிரிட்டுக்கறோமுன்னு சொல்வாங்களா? அதுவும் இல்லை. கரும்புத்தோட்டமுன்னா அது வருசத்துக்குண்டான பயிர். வேலை அதிகம். இந்தியர்களுக்கு இருக்கும் பொறுமை , வங்கியில் கடன் வாங்கி விவசாயம் பார்ப்பதுன்னு இதெல்லாம் அறவே இல்லை. இவுங்களை நம்பி எந்த வங்கியும் கடனும் கொடுக்காது. வாரக்கூலியாக் கிடைக்கும் காசையே கூலி வாங்குன அன்னிக்கே செலவாக்கும் மனப்போக்கு இவுங்கது. வீட்டைச் சுத்தியும், கண்பார்க்கும் இடத்தில் எல்லாம் கப்பக் கிழங்கை நட்டுவச்சு
அதையே முக்கிய உணவாக் குடும்பம் முழுசுக்கும் கொடுத்துக் காப்பாத்தத்தான் பெண்கள் இருக்காங்களே. கடல் மீன்கள், நக்காய்ன்னு சொல்லும் சிப்பி இனங்கள், இன்னும் நார்த்தங்காய், ஆரஞ்சுன்னு எது கிடைச்சாலும் மார்கெட்டில் கொண்டுவந்து வித்து............ இவுங்க சமூகத்துலேயும் பெண்கள்தாங்க முக்கால்வாசிக் குடும்பச்சுமையைத் தாங்கிக்கறாங்க.











இந்த ரெண்டு பிரிவுகளும் இல்லாம மூணாவது பிரிவா (கொஞ்சம் அதிக மக்கள் தொகையுடன்) இருப்பது வியாபாரிகளான குஜராத்திகள். நிலத்துக்கும் இவுங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடைகண்ணின்னு ஆரம்பிச்சு இப்ப தொழிற்சாலைகள்வரை எல்லாமே இவர்கள் வசம்தான். பணம் என்னும் கோட்டைச் சுவரால் பாதுகாக்கப்பட்டவர்கள். 'தவுலத் கா தீவார்'னு ஒரு ஹிந்திப்பட வசனம் நினைவுக்கு வருது. நாட்டுக்கு வரிகள் மூலம் வரும் வருமானம் முக்கால்வாசி இவுங்களாலேதான். இவுங்களாலேதான் பலருக்கு வேலைவாய்ப்பும்.



எப்படியாவது அண்டைஅயல் நாடுகளுக்குப் போய்விடணும் என்ற தவிப்பு இவுங்களுக்கு இப்போதைக்கு இல்லை. ஆனாலும் குடும்பத்தில் ஒருத்தர் ரெண்டுபேர் என்ற அளவில் அண்டைஅயல்களுக்கு இடம்பெயர்ந்து இருக்காங்க. ஆனாலும் இன்னும் வேர்கள் இங்கேதான். எப்பவாவது இங்கே இருக்கவே முடியாத நிலை வந்துச்சுன்னு வையுங்க ( ஐயோ...அதெல்லாம் எதுக்கு? டச்வுட்) கையில் பணப்புழக்கம் இருப்பதால் பிஸினெஸ் மைக்ரேஷன் சலுகையில் இடம் பெயர்ந்துறலாம். அவ்வளவா பிரச்சனை இருக்காது.




இவ்வளவு போராட்டங்கள் இருக்குமிடத்திலும் பள்ளிக்கூடங்களுக்கு குறைவே இல்லை. இந்த பா என்ற ஊரில் மட்டும் எடுத்துக்கிட்டீங்கன்னா.......
குஜராத்தியர்கள், , தென்னிந்திய சங்கம், இந்த ஊர் முஸ்லீம்கள், இங்குள்ள பஞ்சாபிகள், உள்ளூர் ஹிந்துஸ்தானிகள், ஆர்யசமாஜம், கத்தோலிக்கக் கிறிஸ்த்தவர்கள்னு எக்கச்சக்கமான பள்ளிக்கூடங்கள். மாணவர்கள் எண்ணிக்கையும் ஒரே இடத்தில் குவியாமல் பரவலாத்தான் இருக்கு. இத்தனூண்டு ஊருக்கே, இந்த மாவட்டத்து மக்கள் தொகை 14 ஆயிரத்துச் சொச்சம், இத்தனைப் பள்ளிக்கூடமுன்னா மொத்த நாட்டையும் கணக்குலே எடுத்தா..............................?


என்னென்னவோ யோசனையும் மண்டைக்குடைச்சலும்......





இதோ பாருங்க இங்கே டாங்கி டாங்கியிலும் ஒரு பள்ளிக்கூடம் முளைச்சிருக்கு. எல்லாம் நல்லதுக்குத்தான்.




"ஆமா, இங்கே கோயிலில் இருந்த கோபுரம் என்னாச்சு?"


"கோபுரமெல்லாம் இங்கே அப்பவே இல்லையே. என்ன ஞாபகத்துலே உளறுறே?."



"குட்டியா ஒரு கோபுரம் இருந்துச்சு. முந்தி எடுத்த படம் வீட்டுலே இருக்கு.
பார்த்துட்டுச் சொல்றேன்....."



மண்டபத்துலே நுழைஞ்சவுடன் எதிர் சுவரில் சின்னதா மூணு சன்னிதிகள். நடுவில் முருகன். அவருக்கு வலது புறம் அம்மா, இடதுபுறம் மாமா. ஒவ்வொன்றின் முன்னாலும் சின்னதா ஒரு தகர உண்டி. மாமாவுக்கு முன்னே இருந்ததில் 'வங்கஷ் பெர்மால்' vankash permal னு கோணமாணலா எழுதி வச்சுருக்கு.



மேலே உள்ள படம் அன்றும், கீழே இன்றும் ( பிங்க் பார்டர் பட்டுப்பாவாடையில் மகள்)



பழைய ஆல்பத்தைத் தேடிப்புடிச்சுப் பார்த்தால்.........




அட! ஆமாம். கோயிலுக்கு கோபுரம் இல்லை!!!



கொசுவத்தி லேசா புகைஞ்சுது.......




அப்போது ஏதோ விசேஷம். .....ம்ம்.... வேப்பமரத்தில் பால் வருதுன்னு, அதைப் பார்க்க, நாங்க அக்கா மாமாவோடு சேர்ந்து போயிருந்தோம். ஊர்லே இருந்து வந்தவள்னு என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கூப்புட்டுக் கிட்டுப்போய் ..........உபசரிப்பு. ஏதோ என் வீட்டு விசேஷத்துக்கு சமைக்கிறமாதிரி.... சமையல் சரியா வந்துருக்கான்னு பாருங்கன்னு கேட்டுக்கேட்டுச் செஞ்சாங்க.





தமிழ்க்காரங்களா இருந்தும் நம்மாலே தமிழில் பேசமுடியலை என்ற அங்கலாய்ப்பும், தமிழ்ப் பேசும் ஆட்களைக் காணும்போது ஒரு மகிழ்ச்சியும் அதுவும் நம்மை மாதிரி தமிழ்நாட்டுலே இருந்து வந்தவங்கன்னா கேக்கவே வேணாம். கண்ணுலே நல்லாத் தெரியும்.


ஊர்க்காரவங்களா? ஊர்லே எல்லாரும் நல்லா இருக்காங்காங்களான்னு ஆசையோடு கேக்குறதைப் பார்க்கும்போது மனசு கொஞ்சம் ஒடிஞ்சு போயிருது எனக்கு.




வேலைக்கு ஆள் வேணுமுன்னதும் கொஞ்சம்கூட மனசுலே இரக்கமே இல்லாம, 'எல்லாம் நம்ம காலனி நாடுகள்தானே. நமக்கு இல்லாத உரிமையா'ன்னு புடிச்சுக்கிட்டு வந்து விட்ட வெள்ளைக்காரங்களை என்ன செஞ்சாத் தகும்? வர்ற வழியிலேயே சீக்குவந்து செத்தவங்க எத்தனை பேரோ?




( பாட்டியும் அக்காவும் மகளும்)



இப்படிக் கொணாந்தவங்களை கிர்மிட்( girmit. agreements), லே வந்தவங்கன்னு சொல்வாங்க. மகள் பிறந்த சமயம், இந்த ஊரில் கிர்மிட்லே வந்த மக்களில் கடைசி ஜீவனா இருந்த 'சுந்தராம்பாள் பாட்டி', தள்ளாடும் வயசுலேயும் கஷ்டம் பார்க்காம ஊர்க்காரப் பாப்பா( அது நாந்தான்)வூட்டுப் புள்ளையைப் பார்க்கணுமுன்னு வந்த அன்பை மறக்க முடியுமா?




தொடரும்.............:-)

42 comments:

said...

அய்.வகுப்புக்கு நான் தான் முந்தி.தூங்கிட்டு காலையில பதிவப் படிக்கிறேன் மேடம்.குட்மார்னிங்க்:)

said...

வாங்க ராஜ நடராஜன்.

வகுப்புக்கு வந்துட்டுத் 'தூங்கப்போறேன்'னு சொல்லும் உங்க நேர்மையைப் பாராட்டுகின்றேன்:-))))

said...

//மேலே உள்ள படம் அன்றும், கீழே இன்றும் ( பிங்க் பார்டர் பட்டுப்பாவாடையில் மகள்)//

வெள்ளைக்கலர் ட்ரெஸில் இருப்பது நீங்களா டீச்சர்?

வழக்கமா நான் தான் முதலில் கமெண்ட் எழுதுவேன் மிஸ் ஆகிவிட்டது :(

said...

மீண்டும் அருமையான கட்டுரை.

//மகள் பிறந்த சமயம், இந்த ஊரில் கிர்மிட்லே வந்த மக்களில் கடைசி ஜீவனா இருந்த 'சுந்தராம்பாள் பாட்டி', தள்ளாடும் வயசுலேயும் கஷ்டம் பார்க்காம ஊர்க்காரப் பாப்பா( அது நாந்தான்)வூட்டுப் புள்ளையைப் பார்க்கணுமுன்னு வந்த அன்பை மறக்க முடியுமா?//

உருக்கமான வரிகள். இது போன்ற சுயநலமில்லாத அன்பை எல்லாம் சுத்தமாக தொலைத்துவிட்டோம் என்று நினைக்கிறேன் :(

said...

பதிவைப் படிக்கிறப்போ மனசு ரொம்பக் கஷ்டமாருந்துச்சு டீச்சர். பணம்னு ஒன்னு இருந்துட்டா எங்குட்டும் போயிப் பெழைச்சிக்கிறலாம்ல. ம்ம்ம்ம்ம்...

அந்த வெள்ளக்காரப் பயக பண்ணுன அட்டூழியம் கொஞ்ச நஞ்சமா! படுபாவிங்க.

அந்தப் பாட்டியைப் பத்திப் படிக்கிறப்பவும் ஒரு மாதிரி ஆயிருச்சுங்க.

ஊரு விட்டு ஊரு வந்தா நம்மவங்க எல்லாருமே ஒறவுதான். இங்க முந்தி எங்கூட இன்னொருத்தரும் இருந்தாரு. கல்யாணம் ஆனவரு. ஆனா குடும்பம் ஊர்ல இருந்துச்சு. இப்பக் கூட்டீட்டு வந்து தனிவீட்டுக்குப் போயிட்டாரு.

ஒரு வெள்ளிக்கிழமை ஒன்னுக்கு ரெண்டு சினிமா பாத்துட்டு... டர்க்கிஷ் ரெஸ்ட்டாரண்டுல நல்லா டோனேர் கபாப் தின்னுட்டு நடுராத்திரிக்கும் மேல வீட்டுக்கு வந்தேன். வந்தா...எங்க போனா ஏது போனேன்னு கேட்டுட்டு... இந்த மாதிரியெல்லாம் ராத்திரிக்கெல்லாம் சுத்தக்கூடாது சரியான்னு உறுமலாச் சொன்னாரு. நானும் சரிங்கன்னு சொல்லீட்டுப் போய் படுத்துட்டேன். வழக்கம்மா யாரும் சொன்னா...வேலையப் பாருவேன்னு சொல்ற நான் அன்னைக்குச் சரின்னு அமைதியாச் சொல்லீட்டுப் போய்ப் படுத்ததும் அதிசயந்தான்.

said...

வழக்கம் போல சுவாரஸ்யமாத்தான் இருக்கு.

said...

வாங்க க.ஜூ.

அந்தப் பொண்ணு அக்காவீட்டுலே இருந்த போர்டர்.

சமையல் குரூப்பில் காய் வெந்துச்சுன்னான்னு பார்க்கும் நீலப்புடவைதான் நான்:-)

பாட்டிபோன்ற அந்தக் காலத்து ஆட்கள், தாங்கள் விட்டுவந்த சொந்தபந்தத்தை நம்மில் தேடுறாங்களோன்னு நினைச்சுக்குவேன்.

said...

வாங்க ராகவன்.

//ஊரு விட்டு ஊரு வந்தா நம்மவங்க எல்லாருமே ஒறவுதான்.//

சத்தியமான வரிகள்.
அக்கா, மாமான்னு எழுதறேனே அவுங்களும் ஃபிஜியில் நமக்குப் பழக்கமான மொத தமிழ் மக்கள். பார்த்த அன்னிக்கே 'அக்கா'ன்னு கூப்புட்டேன். இன்னும் அந்த பந்தம் 27 வருசமாத் தொடருது. அவுங்க இப்ப ஆஸ்தராலியாவில் இருக்காங்க.மாமா இறந்துட்டார்.

Anonymous said...

பிஜிக்காரங்க‌ தாய்மொழி ம‌ற‌ந்த‌வ‌ங்க‌ ப‌ல‌ர். இந்தியும் குஜ‌ராத்தியுமே தெரிந்த‌வ‌ர்க‌ள். எங்கூட நாயுடுவும் க‌வுண்ட‌ரும் வேலை பாத்தாங்க‌ ஆனா குஜ‌ராத்தி ம‌ட்டுமே இந்திய‌ மொழிக‌ள்ல‌ பேச‌த்தெரியுமாம்

said...

வாங்க பிரேம்ஜி.

மனிதர்களே சுவாரசியம் தானே?

said...

பாட்டியப்பாத்ததும் மனசு கலங்கிப்போச்சு.. ம்.. கிராமத்தை விட்டு நகரம் வந்தாலே கஷ்டம் இது .. திரும்ப போகமுடியாம ஒரு இடத்தில் இருந்துட்டு பாவம் அவங்கள்ளாம் எவ்வளவும் மன உளைச்சல் அடைஞ்சிருப்பாங்க.. இது ஏறக்குறைய நாடுகடத்தல் மாதிரி தானே.. ஏழைகளா பிறந்த தவறு தவிர என்ன செய்திருப்பாங்க

said...

இடம் பெயர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை வந்து போகும் நமக்கே இல்லளவு கஷ்டமாக இருக்கும் போது, அடுத்து எங்கு செல்வது என்றே தெரியாமல் போய் விட்ட அவர்களுக்கு.... :(

said...

ஃபிஜித் தீவின் இன்றைய நிலை விளங்குகின்றது... இதே நிலை சமீபத்தில் உகாண்டாவிலும் ஏற்ப்பட்டது... வித்தியாசம் ஏதுமில்லை

said...

வாங்க சின்ன அம்மிணி.

நாயுடுவும் கவுண்டரும் இந்தி மட்டும்தான் பேசத்தெரிஞ்சவுங்கன்னு இருக்கணுமோ?

ஹிந்தி அங்கே ஒரு ஆட்சி மொழியாவும் இருக்குது.

பொதுவா ஆரம்ப நாட்களில் வந்த மூத்த தலைமுறை குஜராத்திகள் அதிலும் குறிப்பாப் பெண்கள் ஹிந்தியைப் புரிஞ்சுக்குவாங்களே தவிர பேசத்தெரியாது. அதுக்குப்பிறகு வந்த தலைமுறைகள் எல்லாம் ஹிந்தி நல்லாவே பேசுவாங்க.

இந்தியர்கள் (குஜராத்திகள் நீங்கலாக) தாய்மொழியை விட்டுட்டாலும் ஹிந்தியை நல்லாப் பேசுறாங்க.

said...

வாங்க கயலு.

நீங்க சொல்வது ரொம்பச் சரி. கடைசிவரை ஒரு மன உளைச்சலோடுதான் வாழ்ந்துருப்பாங்க(-:

said...

வாங்க தமிழ் பிரியன்.


உகாண்டா நிலவரம் பற்றி முந்தி எழுதுன நியூஸித் தொடர் பகுதி 53 இல் கொஞ்சம் எழுதி இருக்கேன்.

இங்கே பாருங்க

said...

உள்ளேன் ரீச்சர்.

said...

வாங்க கொத்ஸ்.

வந்து வகுப்பில் உக்காருங்க:-)

said...

மேடம்!காலையில் வந்து நல்லபிள்ளையா பதிவையும் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தேன்.

said...

ம்ம், அந்த பாட்டி ரொம்பவே பீல் பண்ண வெச்சுட்டாங்க. :(

டீச்சர், உங்களுக்கு ஆறடி நீள கூந்தல் போல. :p

said...

நீலச்சேலை கட்டிக் கிட்ட நியூஸிப் பொண்ணுனு பாடலாம் மாதிரி,
போஸ் நல்லா இருக்கு.

பாட்டியைப் பார்த்தாத்தான் மனசு தாங்கலை. இவ்வளவு பாவத்தைக் கொட்டிக் கொண்டவங்க எப்படியும் நல்லா இருக்கட்டும்.

said...

////மகள் பிறந்த சமயம், இந்த ஊரில் கிர்மிட்லே வந்த மக்களில் கடைசி ஜீவனா இருந்த 'சுந்தராம்பாள் பாட்டி', தள்ளாடும் வயசுலேயும் கஷ்டம் பார்க்காம ஊர்க்காரப் பாப்பா( அது நாந்தான்)வூட்டுப் புள்ளையைப் பார்க்கணுமுன்னு வந்த அன்பை மறக்க முடியுமா?//

உருக்கமான வரிகள். இது போன்ற சுயநலமில்லாத அன்பை எல்லாம் சுத்தமாக தொலைத்துவிட்டோம் என்று நினைக்கிறேன் :(//

கயல்,

வருத்தத்துடன் சொல்கிறேன்ங்க. சுயநலமில்லாத அன்பு எங்கயும் தொலஞ்சி போகலைங்க. நாம் மற்றவர்களுக்கு கொடுக்க மறந்துட்டோம். பணத்தின் ஓயாத தேடல், அதை எல்லாம் காணாம போக்கிறுச்சி. வலிதான். ஆனா உண்மையும் அதுதான்.

சாரி, யார் மனசையும் புண்படுத்தும் நோக்கம் இல்ல. ஒரு சுயசோதனைன்னு வச்சிகோங்களேன். :(

said...

//கயல்,

வருத்தத்துடன் சொல்கிறேன்ங்க. சுயநலமில்லாத அன்பு எங்கயும் தொலஞ்சி போகலைங்க. நாம் மற்றவர்களுக்கு கொடுக்க மறந்துட்டோம். பணத்தின் ஓயாத தேடல், அதை எல்லாம் காணாம போக்கிறுச்சி. வலிதான். ஆனா உண்மையும் அதுதான்.

சாரி, யார் மனசையும் புண்படுத்தும் நோக்கம் இல்ல. ஒரு சுயசோதனைன்னு வச்சிகோங்களேன். :(//

விஜய்,
முற்றிலும் உண்மை. சுயநலமில்லாத அன்பு நமக்கு கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணம் நாம் கொடுக்க மறந்தது தான். :(

said...

பயணம் பகுதி 6 போட்டிருக்கீங்களோன்னு திரும்பவும் வந்தேன் மேடம்.அப்புறம்தான் தலைப்பு எண் பார்த்தேன்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

நல்லா தூங்கி எழுந்து ஃப்ரெஷா வந்துட்டு இப்படிப் 'படிச்சேன்'னு மட்டும் சொன்னா எப்படிங்க?

said...

வாங்க அம்பி.

பாட்டி ரொம்பப் பாவம்தான். அவுங்களை சின்னப்பொண்ணா இருந்தப்பவே பிடிச்சுக்கிட்டு வந்துருக்காங்க. குழந்தைகூட ஒன்னு இருந்துச்சாம். கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க வந்தாங்களாம்.

இங்கே புதிய குடும்பம் குழந்தைகள் பேரன்பேத்தின்னு ஆனபிறகும் சம்பவத்தைச் சொல்லி அழுவாங்களாம்.


டீச்சருக்கு ஆறு அடியும் அரை அடியும் மாறிமாறி வந்து போகும். இப்ப அரை அடியில் இருக்கேன்.

said...

வாங்க வல்லி.

நாங்கள் அங்கே இருக்கும்போதே பாட்டிக்கு முடிவு வந்துருச்சுப்பா.(-:

கோபால்கூட சுடுகாடுவரை போய்வந்தார்.

said...

வாங்க விஜய்.

சரியாச் சொல்லி இருக்கீங்க.

said...

என்னங்க இது இவ்வளோ நீட்டு பதிவு... மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி...

Anonymous said...

இவர்களுக்கு எதுவுமே செய்ய முடியாதா? அந்தப் பாட்டியின் முகம் நெஞ்சை விட்டு அகலவில்லை. இந்த வரிகள் எழுதும்போது என்னையுமறியாமல் கண்கள் கலங்கத்தான் செய்கிறது.

said...

வாங்க விக்னேஷ்வரன்.

இதுக்கே பயந்துட்டீங்களா?

அப்ப நாளைக்கு வரப்போகும் பதிவு?
:-)

said...

வாங்க இனியவள் புனிதா.

வணக்கம். நலமா?


முதல்முறையா வந்துருக்கீங்க போல?

பாட்டியைத் தொடர்ந்து நாலு தலைமுறை வந்தாச்சு. எல்லாரும் நல்லா வந்துக்கிட்டு இருந்தப்பத்தான் இந்த 'ராணுவப்புரட்சி'.

இதுலே நாம் என்ன மாதிரி உதவலாமுன்றது தெரியலை(-:

said...

///இவுங்க சமூகத்துலேயும் பெண்கள்தாங்க முக்கால்வாசிக் குடும்பச்சுமையைத் தாங்கிக்கறாங்க.///

ரொம்ப கரெக்டா சொன்னீங்க டீச்சர்!
எந்த சமூகமா இருந்தாலும், குடும்ப சுமையை தாங்குவது பெண்கள் தானே!!

said...

வாங்க தமாம் பாலா.

உலகம் முழுசும் நல்லாக் கவனிச்சுப் பார்த்தாலும் 'சுமை' என்பது பெண்களுக்குத்தான் என்பது எழுதப்படாத விதியா இருக்கேப்பா(-:

Anonymous said...

//வணக்கம். நலமா?
முதல்முறையா வந்துருக்கீங்க போல?//

வணக்கம் ஆசிரியை! நான் நலம். ஆமாங்க முதல் வருகையும் முதல் பின்னூட்டமும் கூட :)

said...

டீச்சர்...அந்த ரோடு வேலை போட்டோக்களும் போட்டிருக்கலாமே..
பார்க்க ஆசையாயிருக்கு :)

said...

பிரசண்ட் டீச்சர்!

பிங்க் பட்டுப்பாவாட க்யூட் :)

பாட்டி இஸ் அ ப்ரேவ் வுமன். என்ன சொல்றீங்க?

எங்க போறோம்னு தெரிஞ்சே , பாதி நேரம் புலம்பும் நிறைய பேருக்கு நடுவில், சிரித்த முகத்துடன், சொந்தமாய், சொந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு.........

said...

வாங்க ரிஷான்.

ரோடு வேலையைப் பார்த்த அதிர்ச்சியில் கெமெராவை முடுக்க மறந்துட்டேன்(-:

said...

வாங்க புதுவண்டு.

பாட்டி ப்ரேவாத்தான் இருந்துருக்கணும்.
மூணு நாலு மாசம் கப்பலில் வர்றதுன்னு சும்மாவா?

said...

மகிழ்ச்சி இனியவள் புனிதா.

அடிக்கடி வந்து போகணும்.ஆமா:-)

said...

Greetings from Norway! We have started a Ganesh temple here in Drammen! we have Murugan Temple in Oslo!Amman temple in Oslo! and in Bergen!

said...

வாங்க ஷான் நல்லையா.

முதல்முறையா வந்து இருக்கீங்க!!!!

நலமா?

நியூஸியில் வடக்குத்தீவில் சில ஊர்களில் இந்துக் கோயில்கள் உள்ளன.

தெற்குத் தீவுக்குத்தான் இன்னும் வேளை வரலை(-:

இங்கே எங்கள் ஊரில் (கிறைஸ்ட்சர்ச்)
இஸ்கான் ஹரேக்ருஷ்ணா கோயில் ஒன்று இருக்கிறது.