Thursday, August 28, 2008

சர்வ மதமும் சம்மதம் ( மரத்தடி நினைவுகள்)

எங்க பக்கத்து வீட்டுலெ ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்க பேரு ஆரோக்கிய மேரி. அவுங்க வீட்டுலே ஒரு பெரிய கூண்டுலே இரண்டு ஆடுங்க இருக்கும்! ஆடுங்களுக்கு எதுக்கு கம்பி போட்ட கூண்டுன்னுதானே நினைக்கறீங்க? அதுங்க ரெண்டும் 'ஸ்பெஷல்' ஆடுங்க! அதுங்க ரெண்டும் 'கேளை ஆடு'ங்களாம்! கூண்டுன்னா சின்னது இல்லே. அதுங்க காலாற நடக்கறதுக்கும், துள்ளிக்
குதிக்கறதுக்கும் இடம் நிறைய இருந்துச்சு. அதுங்களுக்குத் தீனிக்காக ஏதோ ஒருவித தழைங்களைக் கொண்டுவந்து போட்டுருப்பாங்க. நான் அங்கே போறப்பெல்லாம், அந்தத் தழைங்களை எடுத்து, கம்பிக்கு நடுவாலே நீட்டுவேன்,. அதுங்க ரெண்டும் என்னப் பாத்தாப் போதும், 'மே மே"ன்னு கத்தும்!

அவுங்க வீட்டுலே கோழிங்ககூட நிறைய இருந்துச்சு. அதுங்க குஞ்சுங்களோட மேயறதைப் பாக்கறதுக்கு ஜோரா இருக்கும்.அந்த அக்கா ஒரு கிளிகூட வளத்தாங்க!

அந்த அக்காவோட வூட்டுக்காரரு, வேற எங்கோ மலைமேல வேலையாம். எப்பவாவது வருவார். அந்த ஆடுங்ககூட அவரு மலையிலே இருந்து கொண்டு வந்ததுதானாம்!

நம்ம அண்ணன் இருக்காரு பாருங்க, அவரு ரொம்ப நல்லா படம் வரைவாரு! அப்பல்லாம் நம்ம 'சந்திரா டாக்கீஸ்'லே புதுப்படம் வரும்போது, காலையிலே ஒரு மாட்டு வண்டிலே டும் டும்னு கொட்டு அடிச்சுகிட்டு
தெருவுலெ எல்லாருக்கும் சினிமா நோட்டீஸ் கொடுத்துகிட்டுப் போவாங்க. அங்கே வேலை செய்யற ஆளு நம்ம அண்ணனோட 'ஃப்ரெண்ட்' ஆயிட்டாரு. அந்த வண்டி நம்ம வீட்டுகிட்டே வர்றப்ப நானும் சத்தம் கேட்டுட்டு நோட்டீஸ் வாங்க ஓடுவேன். அப்போ அந்த '·ப்ரெண்ட்' கீழே இறங்கி எனக்கு நோட்டீஸ்
கொடுத்துட்டு, கூடவே பெரீய்ய்ய சினிமா போஸ்டர் ஒண்ணும் தருவாரு. அது அண்ணனுக்கு!

அண்ணன் அந்த போஸ்டர்லே இருக்கற படங்களைப் பாத்து, அப்படியே வரைஞ்சிருவாரு! நம்ம வீட்டுலெ அண்ணன் வரைஞ்ச படங்கள் ஏராளமா இருந்துச்சு.

படம் மாத்திரமில்லை, நல்லா பொம்மையும் செய்வாரு. புள்ளையார் சதுர்த்தி வரும்போது, ஆளுங்க புதுக்களிமண்ணாலெ புள்ளையார் சிலை செஞ்சு விப்பாங்க. அந்த ஈர மண்ணெ ஒரு அச்சு மாதிரி இருக்கற பலகையிலே அடைச்சு ஒரு தட்டு தட்டினா புள்ளையார் அப்படியே 'டபக்'ன்னு வெளியே
வந்துருவாரு! கூடவே எருக்கம் மாலையும் விப்பாங்க! ஆனா, ஆத்துப்பக்கம் நிறைய எருக்கஞ்செடி இருக்குல்லே,நாங்க அங்கேபோய் பறிச்சுகிட்டு வந்து, ஊசிநூலுலெ கோத்துருவோம்!

நம்ம வீட்டுலே மட்டும் சிலையா வாங்காம, நாலணாக்கு வெறும் களிமண்ணை வாங்குவோம். வெறும் மண்ணுன்றதாலே நிறைய தருவாங்க!

அதை அண்ணன் புள்ளையார் சிலையாச் செஞ்சுருவாரு. மூஞ்சூறுகூட அற்புதமா இருக்கும். எனக்கும் கொஞ்சம் பச்சை மண்ணு கிடைக்கும், சின்ன சின்ன சொப்பு செய்யறதுக்கு. இந்த சிலை மட்டுமில்லே, நம்ம வீட்டுலே நோம்பு கும்புடுவாங்களே, அதுக்கும் கலசத்துலே முகம் வரைஞ்சு, கண்ணு, மூக்கு, காது
எல்லாம் அரைச்ச மஞ்சளாலே அருமையா செஞ்சுடுவாரு!

வத்தலகுண்டுலே நிறைய ராவுத்தருங்க இருக்காங்க. ஒரு தடவை ஒரு பெரியவரு நம்ம ஆஸ்பத்திரிலே கொஞ்சநாள் தங்கியிருந்தாரு. அவருக்கு நம்மோட, ரொம்ப பிரியம் ஏற்பட்டுப் போச்சு! உடம்பு சுகமாகி
வீட்டுக்குப் போனப்புறமும், தினம் ஒரு நடை நம்மையெல்லாம் வந்து பாத்துட்டுத்தான் போவாரு.
தினமும் கொஞ்சதூரம் நடக்கணும்னு அம்மா சொல்லியிருந்தாங்களாம். இங்கே ராவுத்தருங்கெல்லாம் தமிழ்தான் பேசுவாங்க.அவுங்க வீட்டுலேயும் தமிழ்தான்.

அவரு ரொம்ப பக்திமான். தினமும் சாயந்திரம் மசூதிக்குப் போயிட்டு அப்படியே ஒரு ஏழு மணிவாக்குலெ நம்ம வீட்டுக்கு வந்து, வெளியே இருக்கற பெரிய திண்ணையிலே உக்காருவாரு.

அநேகமா அம்மா அந்த நேரத்துலெ ஆஸ்பத்திரி ஜோலியெல்லாம் முடிச்சுட்டு வீட்டுலெதான் இருப்பாங்க. நம்ம பக்கத்துவீட்டு ஆரோக்கியம் அக்காவும் எப்பவுமெ நம்ம வீட்டுலெதான் இருப்பாங்க.

நான் தான் நம்ம ராவுத்தர் தாத்தாவுக்கு, 'சங்கத்தலைவர்'னு பேரு வச்சிருந்தேன்! ராவுத்தர் தாத்தா வந்தவுடனே எல்லாரும் திண்ணைக்கு வந்துருவாங்க. நல்லா இருக்கீங்களாம்மான்னு அன்பாக் கேப்பாரு.
சின்னப்புள்ளென்னு நினைக்காம எங்கிட்டேயும் 'இன்னிக்கு என்ன பாடம் படிச்செம்மா? வீட்டுப்பாடம் எழுதியாச்சா?'ன்னு கேப்பாரு. பெரியவங்க எல்லாம் ஏதாவது விஷயம் பேசிகிட்டு இருப்பாங்க. 8 மணி
சங்கு ஊதுனவுடனே,'நல்லதும்மா, போயிட்டு வாரேன்'ன்னு கிளம்பிடுவாரு.

பேச்சு எதுலெயோ ஆரம்பிச்சு எங்கெயொ போகும். ஒருநா, எங்க தாத்தா எப்படி செத்தாருன்னு அம்மா சொன்னாங்க. கேக்கறதுக்கு கதை மாதிரி இருந்துச்சு. அக்காங்க எல்லாம் உள்ளெ எதாவது படிச்சுகிட்டோ,
ரேடியோவிலே பாட்டு கேட்டுகிட்டோ இருப்பாங்க. அண்ணன் அவர் பாடத்தைப் படிச்சுகிட்டு இருப்பார்.
நாந்தான்ஆஆஆன்ன்னு பேசறவுங்க வாயைப் பாத்துகிட்டு அவுங்களோட உக்காந்திருப்பேன்.

ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம் நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.
அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கற பசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்
படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும். நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!

அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்ப நீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.

அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ஃபாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.
அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்க சாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுக் கேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுக்கிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாம முழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சை ரசமாம்.
நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னு
பாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜை
எல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.

அம்மாவுக்குத் தொண்டையிலே சின்னக் கட்டிபோல வந்தது. அவுங்களே ஏதோ மருந்து சாப்பிட்டாங்க. ஆனா அது போகறமாதிரி தெரியலெ!
நம்ம ராவுத்தர் தாத்தாதான் சொன்னாரு, 'வியாழக்கிழமை கொஞ்சம் சக்கரை கொண்டுபோய், மசூதிலெ கொடுத்தா பாத்தியா ஓதித் தருவாங்க.
அப்படியே ஒரு அச்சு வெல்லத்தை மசூதிலே இருக்கற குளத்துலெ போடுங்க'ன்னு.

நானும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு அச்சு வெல்லமும், ஒரு காகிதத்துலெ பொட்டலம் கட்டுன சக்கரையுமா மசூதிக்குப் போவேன்.
அச்சு வெல்லத்தைக் குளத்துலெ போடுவேன். அங்கெ நிறைய வயசான தாத்தாங்க உக்காந்திருப்பாங்க. அவுங்கள்ளே யாராவது அந்தச்
சக்கரைப் பொட்டலத்தை வாங்கி, ஏதோ மந்திரம் சொல்லி ஓதிட்டு, திரும்பத் தருவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுகிட்டே
வீட்டுக்கு வந்துருவேன். பொட்டலத்துலே பாக்கி இருந்தா அக்காங்களுக்கு அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கணும்!

ரெண்டு மூணு மாசத்துலே அந்தக் 'கட்டி' காணாமப் போச்சுன்னு அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் சக்கரையை பாத்தியா
ஓதி வாங்கறது அந்த ஊர்லே நாங்க இருந்தவரைக்கும் தவறாம நடந்துச்சு.

வத்தலகுண்டுக்குப் பக்கத்துலே இன்னொரு கிராமம் இருக்கு. அதுதான் முதல்லே வத்தலகுண்டா இருந்துச்சாம். அப்புறம் ஊர் பெருசா
ஆகணும்னு இப்ப இருக்கற எடம் வத்தலகுண்டாயிடுச்சாம். அதனாலே அந்தக் கிராமம் பழைய வத்தலகுண்டாயிடுச்சாம்! அங்கே வீடுங்க
ரொம்ப இல்லே. ஆனா ஒரு பெரிய கோயில் இருக்கு, அது மாரியம்மன் கோயில். சித்திரை மாசம் திருவிழா வரும். அதுக்குன்னு ஏகப்பட்ட 'முஸ்தீபு' இருக்கு. இருங்க சொல்றேன்!

பங்குனி மாசம் தொடக்கத்துலே நல்லதா, மூணுகிளையா இருக்கற வேப்பக்கம்பை எடுத்து, அரைச்ச மஞ்சளைப் பூசி, குங்குமம் வச்சு
ஒரு மேடையிலெ நடுவிலெ நட்டு வச்சிருவாங்க. இது கோயிலுக்கு முன் வாசல்லே இருக்கும். தினமும், கோயிலுக்குப் பக்கத்துலெ
இருக்கற குளத்துலெ பொம்பிளங்க முங்கி எந்திருச்சு, கையோட கொண்டுவந்துருக்கற குடத்துலே தண்ணி மொண்டுகிட்டுப் போய்
அந்தக் கம்பத்துக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, சுத்திவந்து கும்பிட்டுகிட்டு, கோயிலுக்குள்ளெ போய் சாமி கும்பிடுவாங்க. இதுபோல ஒரு
மாசம், தினமும் நடக்கும்! ஆளுங்க, குடும்பக் கஷ்டங்களுக்காக, சாமிகிட்டே நேந்துகிட்டு, இப்படி ஒரு மாசம் பூரா தினமும் வந்து 'கொம்பு'க்கு தண்ணி ஊத்துவாங்க!

30 நாளு ஆனபிறகு, கோயில் திருவிழா நடக்கும். அது ஒரு வாரம். அதுலெ கடைசி மூணு நாளு, சாமி,, இப்ப இருக்கற வத்தலகுண்டுக்கு வந்துரும்! இங்கே மூணு நாளு திருவிழா அமர்க்களப்படும். தினமும் ராத்திரி ஒரோரு அலங்காரமா ஊர்கோலம் வரும். முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்குன்னு. ஜோடனை செய்யறதுக்கு ஆளுங்க வெளியூர்லெ இருந்து வருவாங்க! பாட்டுக் கச்சேரி,
பொய்க்காலு குதிரை, கரகாட்டம்னு நடக்கும். வளையல், பொம்மைங்க, விளையாட்டு சாமானுங்க, முட்டாய்ங்கன்னு எங்கெ பாத்தாலும்
கடைங்கதான்! குடை ராட்டினம், தொட்டி ராட்டினம்னு வேற சுத்திக்கிடே இருக்கும். இந்த சமயம், முழுப் பரீட்சையெல்லாம் முடிஞ்சு
பெரிய லீவு விட்டிருப்பாங்களா, எங்களுக்கெல்லாம் திருவிழா நடக்கற இடமே கதின்னு சுத்திக்கிட்டு இருப்போம்! நம்ம வத்தலகுண்டுலே
'ராஜாஜி மைதானம்'னு இருக்கு. அங்கெதான் இதுக்கு இடம்.





(அங்கே ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து நீர் விழும் தண்ணீர்த்தொட்டி இருக்கு. அதன் நினைவா இங்கே நம்ம வீட்டில் ஒன்னு வாங்கி வச்சுருக்கேன்)

ஒரு பெரிய சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இருக்கே தவிர, மாரியம்மனுக்குன்னு கோயில் இல்லே. அதனாலே மைதானத்துலே
ஓரு ஓரமா ஓலைக்கொட்டாய் போட்டு அங்கெதான் சாமியை வச்சிருப்பாங்க! அந்த மூணு நாளும் 'ஜே ஜே'ன்னு எங்கெ பாத்தாலும்
ஜனங்க ! இங்கேயே ஒரு கோயில் கட்டணும்னு பேசிகிட்டு இருக்காங்களாம்.


அந்த ஊர்லே நமக்குத் தெரிஞ்சவுங்க ( நமக்குத்தான் எல்லாரையும் தெரியுமே!)குடும்பம் ஒண்ணு, சாமிக்கு நேர்த்திக்கடன்னு சொன்னாங்க!
அவுங்க வீட்டுலே பெரிய கூட்டுக் குடும்பம்.அவுங்களுக்குள்ளே என்ன சொந்தம்னு சொன்னாலும் புரியாது. அவுங்க வீட்டுக்குப் போனா,
நேரம் காலம் தெரியாம விளையாடலாம். அங்கே எல்லா வயசிலேயும் ஆளுங்க இருப்பங்க. ஒரு நாலஞ்சு இடத்துலெ சமையல் கட்டுங்களா
இருக்கும்! வேற வேற சமையல் செஞ்சுகிட்டு இருப்பாங்க! அந்த வீட்டுலெ ஒரு பெரியம்மா இருக்காங்க. அவுங்கதான் எல்லாருக்கும் 'க்ளாஸ் லீடர்'மாதிரி!

'எல்லாப் புள்ளைங்களையும் இழுத்துக்கிட்டு, காலேல 5 மணிக்கெல்லாம் புறப்பட்டுக் கோயிலுக்குப் போகணும்'னு அம்மாகிட்டே சொல்லிக்கிட்டு
இருந்ததை நான் கேட்டேன்! என் கண்ணுல இருந்த ஆசையைப் புரிஞ்சுகிட்டு, பெரியம்மா( எல்லாப் பசங்களும் அவுங்களை அப்படிக்
கூப்புடறதுனாலே நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்!)சொன்னாங்க,

"பாப்பாவையும்( நாந்தான் அது)அனுப்பறேங்களா?"

" அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாளே!"

" நான் எந்திருச்சுருவேன்" இது நானு.

" நாங்க எல்லாரும் கிளம்பி இங்க வர்றதுக்கு ஒரு அஞ்சரை ஆயிரும். எப்படியும் இந்தப் பக்கம்தான், உங்க வீட்டைத் தாண்டிப் போகணும்.
நாங்க வந்து கூப்புட்டுக்கிட்டுப் போறோம்"

" அவ்வளவு தூரம் நடப்பாளான்னு தெரியலையே"

"நடப்பேன் நடப்பேன்" இது நானு.

" திரும்பி வந்து ஸ்கூலுக்குப் போகணுமே"

" இந்தப் பசங்கெல்லாம்கூட ஸ்கூலுக்குப் போகணும்தான். இன்னும் லீவு வுடலையே"

" எத்தனை மணிக்குத் திரும்புவீங்க?"

" என்ன, ஒரு எட்டுக்கு முன்னாலெ வந்துருவொம்"

அம்மா ஒருவழியா சம்மதிச்சுட்டாங்க! மறுநாள் காலையிலே யாரோ என்னப்போட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்குறாங்க!

கண்ணைத் திறந்தா, சின்னக்கா கையிலே ஒரு தண்ணிக் குடத்தோட நிக்குது! 'சீக்கிரம் கிளம்புடீ, எவ்ளோ நேரமா எழுப்புறது?
அவுங்கெல்லாம் வந்து வாசல்லே நிக்கறாங்க.எந்திரிச்சி ஓடு'ங்குது!

அப்பத்தான் ஞாபகம் வருது, நான் கம்பத்துக்கு தண்ணி ஊத்தப்போணும்ங்கறது! அரக்கப் பரக்க எந்திரிச்சு, அசட்டுச் சிரிப்போட
வெளியே போனேன்.'கொஞ்சம் இருங்க. பல்லு விளக்கிட்டு வந்துருவா'ன்னு அக்கா சொல்லுது.

'அதெல்லாம் போற வழிலே பாத்துக்கலாம். இதுங்கெல்லாம் கூட அப்படியேதான் வருதுங்க'ன்னு பெரியம்மா சொன்னாங்க.

நானு தண்ணிக்குடத்தை எடுத்துகிட்டு, (குடம் என்ன குடம், அது குடம் மாதிரி இருக்கற சொம்புதான்!)கிளம்பிட்டேன்.

போற வழிலே, புளியங்கா நிறைய இருக்கு. எடுக்கலாம்னு பாத்தா, 'இப்ப வேணாம். இன்னும் நீங்க யாரும் பல்லு விளக்கல்லே.
வரும்போது எடுக்கலாம்'னு பெரியம்மா சொல்லிட்டாங்க!

ரோட்டுலே நடமாட்டம் அவ்வளவா இல்லே. இவ்வளவு காலேலெ அப்படித்தான் இருக்கும்னு பெரியம்மா சொன்னாங்க. ரோடெல்லாம் ஆடிகிட்டே போனோம். ரொம்ப நேரம் போனமா, அப்ப தூரத்துலே மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிஞ்சது!

மெயின் ரோட்டுலே இருந்து பிரியுற செம்மண் பாதையிலே இறங்கி ஓடுனோம். குளம் வந்துருச்சு. குளத்துக்குப் பக்கம் இருக்கற வேப்ப மரத்துக்கிளையை உடைச்சு,சின்னக் குச்சிங்களா எடுத்து எங்களுக்குத் தந்தாங்க பெரியம்மா. எதுக்குத் தெரியுமா?

பல்லு விளக்க! அதைக் கடிச்சு,அப்படியே மெல்லணும்.கசப்பா இருக்குன்னு மென்னு மென்னு துப்பிகிட்டு இருந்தோம். அது அப்படியே
ப்ரஷ் ஆயிருச்சு. அதைவச்சு பல்லை விளக்கிட்டு, குளத்துலே முங்கி எந்திரிச்சு,'குடத்துலே'தண்ணி ரொப்பிகிட்டு, கோயிலுக்கு
முன்னாலெ நட்டு வச்சிருக்கற கம்பத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, உள்ளெ போய் சாமியைக் கும்பிட்டோம். ஈரப்பாவாடை, கவுனு அப்படியே உடம்புலே ஒட்டிகிச்சு. நடக்கவே முடியலே! எங்களை மாதிரி நிறையப் பேரு ஈரமா வந்து சாமி கும்புடறாங்க.கோயிலு தரையெல்லாம் 'நச நச'ன்னு ஈரமா இருக்கு. எங்கே வழுக்கிறுமோன்னு, பயந்து பயந்து காலை தூக்கி வச்சு நடக்கறோம்.
சாமியைக் கும்புட்டு, துண்ணூரு வாங்கிக்கிட்டு வந்தவேலை முடிஞ்சு போச்சுன்னு கிளம்பிட்டோம்.

வர்ற வழியெல்லாம் ஒரே ஓட்டம்தான். வெய்யிலு வர ஆரம்பிச்சிருச்சு. பாவாடை சட்டையெல்லாம் அப்படியே காஞ்சுபோச்சு.
மரம் மரமாப் போயி புளியங்கா பொறுக்கிக்கிட்டே வீடு வந்துட்டோம். மறுநாளு, என்னைத் தயாரா இருக்கச் சொல்லிட்டு பெரியம்மாவும், மத்த பசங்களும் போயிட்டாங்க.

அக்காகிட்டே வழக்கம்போல, இதுவரைக்கும் நடந்ததெல்லாம் சொன்னேன். அக்கா சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு,
'போய் நல்லா பல்லு விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்புடு.ஸ்கூலுக்கு நேரமாயிருச்சு'ன்னு சொன்னாங்க.

எங்கிட்டே ஒரு பழக்கம் என்னனா, பள்ளிக்கூடத்துலே இருந்து வந்தாலும் சரி,வேற எங்கேயும் போயிட்டுவந்தாலும் சரி,
வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே, நடந்தது எல்லாத்தையும் ஒப்பிச்சாகணும். அவசரமா பாத்ரூம் போகணும்னு இருந்தாலும்,
கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு, விஷயத்தைச் சொல்லிட்டுதான் பாத்ரூமுக்கு ஓடுவேன்.பெரியக்கா சொல்லும்,'கிருஷ்ணர் வேஷம்
போடாதே! பாத்ரூமுக்கு போயிட்டு வந்து சொல்லு'ன்னு. ம்ம்ம்ஹூம். நான் அதையெல்லாம் கேக்கற ஆளா?

மறுநாளு, அம்மாவே காலெல எழுப்பி என்னை 'ரெடி'பண்ணிட்டாங்க. அன்னைக்குத் திரும்பிவரப்போ, சும்மாப் போன மாட்டுவண்டிலெ எங்களை ஏத்திக்கிட்டாங்க! ஜாலியா இருந்துச்சு. அப்புறம், நாங்களாவே மாட்டுவண்டி 'லி·ப்ட்' கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருப்போம். சிலநாள் கிடைக்கும். சிலநாளு ஒண்ணுமே அந்த நேரத்துலே வராது!

இப்படியே ஒரு மாசமும் போயிருச்சு.நடுவுலே பெரிய பரிட்சை முடிஞ்சு லீவும் வுட்டுட்டாங்களா, ஒரே ஆட்டம்தான்!

அப்புறம் திருவிழா ஆரம்பிச்சு, சாமி இங்கே வந்துச்சு. தினம் நல்லா சுத்திகிட்டு இருந்தோம். கைலேயும் காசு நடமாட்டம் நிறைய இருந்துச்சு. திருவிழாக் கடையிலே ஒரு பச்சைக்கல் வச்ச அழகான லோலாக்கு ரெண்டணாவுக்கு கிடைச்சது. அக்காவுக்கு 'சர்ப்ரைஸ்' தரலாம்னு, அதைவாங்கி, வீட்டுக்கு வெளியே இருக்கற திண்ணையிலே உக்காந்து, நான் ஏற்கனவே போட்டுருந்தத்
தங்க லோலாக்கை அவுத்துட்டு,பச்சைக்கல் லோலாக்கைப் போட்டுகிட்டு வீட்டுக்குள்ளெ போய் அக்காவுக்குக் காமிச்சேன்.

அக்கா, ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, 'நீ போட்டுருந்த தங்கலோலாக்கு எங்கே?'ன்னு கேட்டுச்சா, அப்பத்தான்
ஞாபகம் வருது, நான் அதை அங்கே திண்ணையிலேயே வச்சுட்டு வந்துட்டேன்னு. ஓடிப் போய் பாக்கறேன், எனக்கே
'சர்ப்ரைஸ்!' அது அங்கே இல்லை! 'திருவிழாக்கூட்டம்தான் ஊரெல்லாம் மேயுதே, யாரு கையிலே கிடைச்சதோ'ன்னு அப்புறம் எல்லாரும் வீட்டுலே கத்திக்கிட்டே இருந்தாங்க! எனக்கு நல்லா 'டோஸ்'கிடைச்சது!


நன்றி: மரத்தடி 2004

திருமதி அரிச்சந்திரன்

நம்ம பதிவு இப்படி திருமதி அரிச்சந்திரனின் தாலி மாதிரி ஆகிருச்சே......

யார் கண்ணுக்கும் தெரியாதாமே.....அப்படியா?

ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி

இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பாதி இப்படிச் சிலது மனசுலே வந்து போச்சுங்க. வம்புவேணாம் பேசாமத் தமிழில் வச்சுறலாமுன்னு ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி....
தேர்ந்தெடுத்தேன்:-)




வாங்குன புதுசு


நீள உருண்டைக்கல் போல இருக்கு. அது முளைக்கும்போதே சரி பாதியாப் பிளந்து வர்றதுக்கு வசதியா நடுக்கோடு லேசாத் தெரியுது. இது நம்மகிட்டே இல்லையே...புதுமாதிரியா இருக்கேன்னு ஒன்னு மூனு மாசம் முந்தி வாங்கிவந்தேன். வரும்போது இருந்த நடுக்கோடு, நம்ம வீட்டு விவகாரம் பார்த்துருச்சுபோல.கற்பூரப் புத்தி. மெல்ல எழுபது முப்பதா ஆகி இருக்கு இப்ப. யார் எழுபதுன்னு உங்களுக்குக் குழப்பம் இருக்கவே இருக்காதுன்னு நம்பறேன்.



பரிசல்காரன் ஒரு இடத்துலே அவருடைய துணிகளுக்கு உமா அதிக இடம் ஒதுக்கி வைப்பாங்கன்னு எழுதி இருந்தாருல்லே. அதை நான் ஞாபகமா மறந்துட்டேன்:-)))) குற்ற உணர்ச்சி, அது, இதுன்னு மனசு குழம்பக்கூடாது பாருங்க!!!


போனவாரம் இன்னும் மலிவாவும், மொட்டோடவும் ஒன்னு இருக்கேன்னு விட மனசில்லாமல் வாங்கியாந்தேன். நேத்து பூப் பூத்துருச்சு.



அழகான பூவா இல்லைன்றது வேற..... ஆனா அதுக்கு ஈடு செய்யும்விதமா அந்தத் தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல்லா இருக்கு.



இதோ நான் பெற்ற இன்பம், உங்களுக்கும்:-))))


Wednesday, August 27, 2008

ரெட் ராஸ்கல்ஸ்

இவனுங்களை என்ன பண்ணினாத் தகும்? அப்படியே கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை உரிக்கலாமா? இல்லே பேசாமக் கூர்மையான கத்தியை வச்சுத் துண்டுதுண்டா நறுக்கலாமா? எப்படின்னாலும் நறுக்குனதுகளைத் தூக்கிப்போட முடியுமா? வேகவச்சுக் கறிபண்ணித் தின்னத்தானே வேணும்?


விருந்துச் சமையலோ இல்லை வெறும் ஞாயித்துக்கிழமைக்கான ஸ்பெஷலோ... அப்படி இல்லைன்னாலும் தினப்படிச் சமையலை ருசியாக்க அநேகர் பயன்படுத்தும் காய் என்ன?

ஒன்னுமே செய்யாமல் சும்மா சோஃபாவில் இருக்கும் ஆட்களை எப்படிக் கவுரவிக்கிறோம்? வேற எந்த காய்கறிகளுக்கும் இல்லாத ஒசந்த மரியாதை எதுக்கு இருக்கு? couch பூசனிக்காய்..... நல்லவா இருக்கு?

எல்லாத்துக்கும் விடை ஒன்னேதான். உருளைக்கிழங்கு. சாதாக்கறி, காரம்போட்டக் கறி, ரோஸ்ட், மசாலாக்கறி, பூரிக்கேத்த ஜோடியான கிழங்கு, மசியல் இப்படி எக்கச்சக்க ஐட்டம் செஞ்சுக்கலாம்.

பொதுவா நம்ம ஊர்ப் பக்கத்தில் உருளைக்கிழங்குன்னா அநேகமா ஒரே ஒரு வகைதான் கிடைக்கும். சிலசமயம் கோலிகுண்டுபோல சின்ன உருளை கிடைக்கும். என் தோழிவீட்டில் Ball curry ன்னு முழுசாப் போட்டுச் செய்வாங்க. ருசி அப்படியே தூக்கிக்கிட்டுப் போகும்.


இங்கே நியூஸி வந்த புதிதில் 20 கிலோ உருளைக்கிழங்கு 4 டாலருக்குக் கிடைக்கும். வாங்கினதே இல்லை. அவ்வளோ வாங்குனா திங்க ஆள் வேணாமா?

ஒருமுறை 'ரெட் ராஸ்கல்' என்ற பெயரில் அழகான இளம் பிங்க் நிறத்தில் உருளையைப் பார்த்தேன். பக்கத்தில் குவிச்சுவச்சுருந்தச் சக்கரைவள்ளிக்கிழங்குலே இருந்து சாயம் ஒட்டிக்கிச்சோன்னுகூட நினைச்சேன். இங்கே சக்கரைவள்ளிக்கிழங்குக்குப் பெயர் என்னன்னு சொல்லுங்க? குமரா Kumera. கூமெரா:-)))) இதுலேயும் வெளிர் மஞ்சள் நிறவகை ஒன்னு கிடைக்கும். அது கோல்டன் கூமெரா.



உருளையில் ஏராளமான வகைகள் இருக்குன்றதே இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சது.

Red Rascals.இதுக்கு Van rosa, Desiree ன்னும் பெயர்கள் உண்டு.

Rocket, Swift , Liseta இதெல்லாம் 60 நாளில் பலன் கொடுக்கும் வகைகள்.


Jersey Bennes, Cliff Kidney, Ilam Hardy, Maris Anchor இதெல்லாம் 90 நாள் எடுக்கும்.

சிப்ஸ்க்கு , வேகவைத்து அப்படியே சாப்பிட, ஜாக்கெட்டோடு(தோலுடன்) அவனில் வச்சு ரோஸ்ட் செய்ய, Mashed Potato, ஸாலட் செய்யன்னு தனித்தனி வகைகள் இருக்கு. இங்கிலாந்தில் மட்டும் 450 வகைகள் விளையுதாம். இங்கே நியூஸிக்கு உருளையைக் கொண்டுவந்தவங்க பிரிட்டிஷ்காரர்கள்தான்.


இது நிறைஞ்ச சத்துள்ள உணவும்கூட. அரிசியைவிட கொழுப்புச் சக்தி கம்மின்னு பொடெடோ கவுன்ஸில் சொல்லுது. பொட்டாஸியம் அதிக அளவில் இருக்காம்.



உருளையின் வயசு 6000 வருசத்துக்கு மேலே. முதல்முதலில் பெரு நாட்டில் Inca Indians பயிரிட்டாங்களாம். (ஹைய்யா....'இண்டியன்ஸ்' இதுலே நம்ம பெயரும் பாதி இருக்கு )

இப்ப ஒரு அவசர சமையல் குறிப்புப் பார்க்கலாம்.

சிம்பிள் கறி:


வேகவைச்ச உ.கிழங்கு 3 ( தோலை உரிச்சுப் பெரிய துண்டுகளா நறுக்கி வச்சுக்கணும்)த் துண்டங்க

பூண்டு நாலு பற்கள்

இஞ்சி - ஒரு ரெண்டு செ.மீ நீளத்துண்டு

குழம்புப்பொடி இல்லைன்னா சாம்பார்ப்பொடி இதுலே ஒரு டீஸ்பூன்( இது எதுவும் கைவசல் இல்லையா? நோ ப்ராப்லம். மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி இருக்குமில்லை? அதுலே தலா அரை டீஸ்பூன்)

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

உப்பு முக்கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

ஆம்ச்சூர் இல்லைன்னா கெட்டியானப் புளிக்கரைச்சல் 1 டீஸ்பூன்

எண்ணெய் 2 டீஸ்பூன்

கருவேப்பிலை - தனித்தனி இலையா ஒரு பத்து. ( ஒரு இணுக்குன்னு சொன்னா பலருக்குப் புரியலையே)

பூண்டு & இஞ்சியை நல்லா சதக் சதக்குன்னு நசுக்கிக்குங்க. கல்பத்தாவுலே வச்சு நசுக்கினா நல்லா இருக்கும். (பின்னே? நான் புதுசா ஒரு கல்பத்தாவை வாங்குனதை இப்பச் சொன்னாத்தானே உண்டு)




கல்பத்தா= சின்னக் கல் உரல்.

(பத்தர்ன்னா இந்தியிலே கல்லுன்னுதான் பொருள். அது என்னமோ அவுங்க கல்பத்தான்னு பெயர் வச்சுருக்காங்க.ஒருவேளை..... இப்ப வேணாம். இன்னொருநாள் பார்க்கலாம்)

செய்முறை:

ஒரு ஃப்ரையிங் பேனை அடுப்பில் வச்சுச் சூடானதும் எண்ணெய் ஊத்துங்க. அதுலே நசுக்குன இஞ்சி & பூண்டு, கருவேப்பிலை போட்டு வதக்கணும். லேசா புரவுன் நிறம் ஆனதும் குழம்பு, மஞ்சள், பெருங்காயப்பொடிகளைச் சேர்த்து வறுத்துக்கிட்டு உப்பையும் போட்டுக்குங்க. புளிக்கரைச்சலையும் இப்ப சேர்த்துக்கலாம். எண்ணெயில் வறுபட்டதும் உருளைக்கிழங்குத் துண்டங்களைச் சேர்த்து ரெண்டு நிமிஷம் நல்லா வதக்கி எடுத்தா வேலை ஆச்சு. அடுப்பு இளம் தீயா எரியணும். சாம்பார், ரசத்துக்குத் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.




புதுவரவும் பொட்டேட்டோக் கறியுமுன்னுகூடத் தலைப்பு வச்சுருக்கலாம். அன்னிக்கு அதான் கல்பத்தா வாங்குன வீகெண்ட் ஒரு யானையும் வாங்குனோம்:-)))))




சரி. உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம். இன்னிக்கு அவுங்கவுங்க வீட்டுலே எதாவது உருளைக்கிழங்கு வகை சமைச்சுச் சாப்பிடுங்க. கொஞ்சமாச் சாப்பிடுங்க. என்னதான் சக்தி இருக்குன்னு சொல்லிக்கிட்டாலும் இது வாய்வுப் பதார்த்தம். ஆளைத் தூக்கிட்டுப்போயிறப்போகுது, உஷார்:-)

Tuesday, August 26, 2008

ஓமான் பதிவர்கள்

நண்பர்களே,

ஓமானில் இருந்து வலைபதியும் நண்பர்கள் இருந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்வீர்களா?

நம்ம மஸ்கட் சுந்தர் இப்ப அங்கே இல்லை.

மீனா அருணின் பதிவுகள் போனவருசத்தோடு அப்படியே நின்னுபோயிருக்கு(-:

அதுதான் வேற வழி இல்லாமல் இங்கே பதியவேண்டியதாப் போயிருச்சு!!!!

Sunday, August 24, 2008

ஒலிம்பிக்ஸ் சில (வேண்டாத) எண்ணங்கள்.

ஒலிம்பிக்ஸ்: என் பார்வையில் (வேண்டாத வேலைன்னு வச்சுக்கவா?)

ஆமாம். சும்மாப் பார்க்கத்தான் முடியும். அதுலே கலந்துக்கிட்டு விளையாடியெல்லாம் செயிக்க முடியாது. இதுவரை சிலபல ஒலிம்பிக் விழாக்களைப் பார்த்துருந்தாலும்..... இப்பத்தான் சிலவிசயங்களைக் கவனிச்சேன்னு சொல்லலாம். வலைபதிய ஆரம்பிச்சபிறகு கண்ணோட்டமும் மனஓட்டமும் மாறித்தான் போச்சு. இதுதான் முதல் விழா.....வலைபதியவந்தபிறகு.

மக்கள் ஆர்வமாக் கலந்துக்கிட்டு உற்சாகக்குரலில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிச்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு லட்சம்பேர் திடலில் குவிஞ்சுருக்காங்க. இது இல்லாம உலகம்பூராவும் இருந்த இடத்தில் இருந்தே என்னைப்போல நோகாம நோம்பு கும்புட்டுக்கிட்டு இருக்கறவங்க எத்தனை லட்சம் இருக்குமோ!!!!

பலவிளையாட்டுகள் பார்க்க நல்லா இருக்குன்னாலும் ஒரு சிலதைப் பார்க்கும்போது...... தேவைதானான்னு மனசு கொப்புளிக்குது. என்னதான்.....ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணுமுன்னு இருந்தாலும் ..............

முதல்லே இந்த 50 கிலோமீட்டர் நடை.

இந்தக் காலத்துலே யாருங்க நடையா நடக்குறாங்க? மனுசனுடைய பழக்கங்கள் எல்லாம் எவ்வளோ மாறிக்கிடக்கு! ரெண்டு கிலோமீட்டர் போகவே ஆட்டோவைத் தேடறோம். உடற்பயிற்சிக்குன்னு கூடிப்போனா மூணு நாலு கிலோமீட்டர் நடை. இந்த அழகில் உடம்பை வருத்திக்கிட்டு அம்பது கிலோமீட்டர் நடக்கணுமுன்னா....... பார்க்கறப்பவே எனக்குக் காலெல்லாம் கல்லைக் கட்டிவிட்டாப்புலே இருந்துச்சு. போன ஒலிம்பிக்ஸ்லேயும் எங்கூர் 'வீரர்' ஒருத்தர் இப்படிப் போட்டியில் கலந்துக்கிட்டுக் கடைசியில் நடக்க முடியாமல் காலெல்லாம் அப்படியே உதறி, நிக்கமுடியாமல் மடங்கி..... ரொம்பக் கோராமையாப் போச்சு.


ரெண்டாவதா.... இப்பப் புதுசா சேர்த்துருக்கும் BMX போட்டி.




பறந்துபறந்துவந்து ....ஒன்னு விழுந்தா....பின்னாலே வர்றவங்க எல்லாம் முட்டி மோதி விழுந்து..... பாவம் பசங்க. உடம்பெல்லாம் அடிபட்டுக்கிச்சுங்க. தலைக்கு மட்டுமே ஹெல்மெட் பாதுகாப்பு. அதுவும் அந்த ட்ராக் சரிவா இருக்கு பாருங்க. கீழே விழுந்து, சரிஞ்சு வரும்போது பின்னாலே வேகமா வர்றவங்க வந்து இடிச்சு அவுங்களும் விழுந்து....ஒரே களேபரம்.

மூணாவதா....

பெண்களுக்கான 20 கி.மீ நடை.

எல்லார் உடம்பு வாகும் இதைத் தாங்குமா?

சரி. போட்டியில் வைக்கறதுதான் சரின்னாலும் தூரத்தைப் பாதியாக் குறைக்கக்கூடாதா?

இப்பப் பாருங்க மாரத்தான் முடிஞ்சதும் இதை எழுதிக்கிட்டு இருக்கேன். அந்தக் காலத்துலே இப்படி ஓடுனாங்கன்னு இப்பவும் ஓடவச்சுட்டாங்க. ஆனா இந்த நடக்கறதைவிட இது எவ்வளவோ தேவலை!!! கூட்டமா ஆரம்பிச்சு ஒரு அரைமணியிலேயே அஞ்சுபேர் கும்பல் மட்டும் முன்னாலே வந்துக்கிட்டு இருந்துச்சு. நேரம் செல்லச் செல்ல மூணுபேர்ன்னு ஆச்சு. முடிவுக்குக் கொஞ்சம் முன்னே அதுவரை வந்துக்கிட்டு இருந்தவரில் ஒருத்தர் கண்ணெல்லாம் கலங்குறமாதிரி பார்க்கிறார். அரங்கத்தில் முதல் இரண்டு வீரர்கள் வந்தபிறகு.... மூணாவது வர்றவரைக் கடைசி நிமிசத்தில் நாலாவது நபர் பின்னுக்குத் தள்ளிட்டார். செயிக்கமுடியாதவரின் கலங்குன
கண்ணில் ஒரு விரக்தி.


அயிட்டங்களை மறுபரிசீலனை செய்து காலத்துக்கேற்ற மாதிரி அமைச்சா நல்லா இருக்காதா?

தொழில்முறையா ஆடும் விளையாட்டுகளை இதில் சேர்க்கணுமா அப்படியே சேர்க்கணுமுன்னு இருந்தாலும், தொழில்முறை ஆட்டக்காரர்களை சேர்க்காம இருக்கலாமில்லையா?

இன்னும்கூட என்னென்னவோ சொல்லிப் புலம்புவேந்தான்..... ஆனா.....

நாம் சொல்லி என்னா ஆகப்போகுதுன்னு.......

வேண்டாத லிஸ்ட்டுலே........பீச் வாலிபால்..நீங்க எல்லாம் வெகுவா ரசிச்சது இதுதானாமே......!!!!!


'மெய்வருத்தக் கூலிதரும்' எனப்து மெய்தான்.அதுக்காக மெய்யைக் கூடுதலா வருத்துனா அது பொய் ஆகிருமோன்னு ஒரு பயம்தான்............

பிடிச்ச ஐட்டத்தையும் சொல்லாமப் போகலாமா?

சீனர்கள் நெத்தியில் திலகம் வச்சுக்கிட்டு ஆடுன ஆட்டங்கள் எல்லாம் ஜோரே ஜோர்:-)))))


சொல்லவிட்டுப்போன ஒன்னு: எங்கூர்லே ஒரு குரங்கு காணாமப்போச்சு.

அட! நம்புங்கப்பா....உண்மையான குரங்குதான். கப்புசின் மங்கி. பெயர் மிண்ட்டி. புதுசா வந்த ஒரு செட் குரங்குகள். மொத்தம் நாலுபேர். டாக்டர் செக்கப் செய்ய கூண்டு மாற்றினபோது, நைஸா நழுவிட்டார். மூணுநாளா தினம் இந்தக் கவலைவேற சேர்ந்துக்கிச்சு.

சனிக்கிழமை பத்திரிக்கையில் இதுதான் முக்கிய சேதி. மத்த மூணுபேரும் வருத்தமா உக்கார்ந்துக்காங்க.



எங்கியாவது கண்ணுலே பட்டா, இந்த நம்பர்லே கூப்புட்டுச் சொல்லுங்க. யாரும் கிட்டே அணுகவேணாமுன்னு நம்ம எக்ஸ்ட்ரா நியூஸ்லேயும் இருந்துச்சு. இது என்னடா நம்ம கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்த சோதனை(-:



வேண்டாத சாமி இல்லை. நல்லவேளை நேத்து மத்தியானம் கிடைச்சுருச்சு.
நாயை, நடக்கக் கூட்டிக்கொண்டு போனவர், மிண்ட்டி ஒரு மரத்துலேக் 'குந்திக்கினு' இருந்ததைக் கண்டு, தொலை பேசியில் கூப்பிட்டாராம். மிண்ட்டியை இல்லைங்க, ரிஸர்வ் ஓனரை.

நல்லபடியா வீட்டுக்குக் கூட்டியாந்துட்டாங்க.

டிஸ்கி: இந்த ரெண்டு சேதிக்கும் சம்பந்தமில்லை

Thursday, August 21, 2008

கிருஷ்ணலீலா

சின்னக் கால்களின் தடம்பதித்து ஓடிவரும் அழகே அழகு.

கோபி(யர்கள்) கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா.....

கண்ணா...கருமை நிறக் கண்ணா.........

இப்படியெல்லாம் அம்மா என்னைக் கொஞ்சும்போது எனக்கே என்னைப் பிடிக்குமுன்னா பாருங்களேன்:-)))


அம்மாவோடு விளையாட்டும் உண்டு. டிவி பின்னால் ஓடி ஒளிஞ்சால் கண்டுபிடிக்கவே முடியாது. ஆமாம், பூனைக் கண்ணை மூடிக்கிட்டால் பூலோகமே இருண்டுபோயிருமாமே!!!!


ஒருநாள் 'உள்ளூர் பத்திரிக்கையில், இவன்கள் தங்களுக்கான சாப்பாட்டைத் தானே போய் வேலை பார்த்துச் சம்பாரிச்சுக்கணுமுன்னு இருந்துச்சு. நானும் இவனிடம், ' நீ வேலைக்குப்போய் சம்பாரிச்சுக்கிட்டு வாடா'ன்னு சொன்னேன். கண்ணில் உடனே ஒரே சோகம்'ன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டப்ப எனக்கு அழுவாச்சியா வந்துச்சு.



"செய்யணுமுன்னுதான் தோணறது.ஆனா......... என்ன செய்யணுமுன்னு தோணலையே...."



"பரவாயில்லை. அம்மாவுக்கும் ஒரு 'மாடல்' தேவைப்படுதேடா எப்பவும். பேசாம மாடலிங் செய்யேன்"

"நெசமாவா?"

"ஆமாண்டா. ஆண் மாடல்கள் எப்படி மூஞ்சைச் சுள்ன்னு வச்சுக்கிட்டுப் போஸ் கொடுக்கறாங்க. அதேபோல் இங்க பார். பார்க்கலாம்"

சரியா இருக்கான்னு பாரும்மா.

ஏக தந்தாய நமஹ....... நாலுலே மூணு போச்சுன்னா அதுக்காக இப்படியா?

Drop dead Fred:-))))

குளிர் ஆளைக் கொல்லுதே.......





வெயிலு காஞ்சா எவ்வளோ நல்லா இருக்கு!!!!


வீட்டுலே இருக்கும் பெஸ்ட் ஸீட் எனக்குத்தான் வேணும். ஆள் உக்கார்ந்துருக்கா? அப்ப மடி என்னத்துக்கு இருக்காம்?


வீட்டுக் காவலுக்குன்னு தனியா ஆள் போட்டுக்கலை. நானே போதும். என்னைத்தாண்டி ஒருத்தர் உள்ளே வந்துறமுடியுமா?

அண்டைஅயல் பிள்ளைகளோடு எப்பவும் ஒரு சண்டை & முறைப்பு. என்னைப் பார்த்தாலே அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவான்கள்:-))) அதுலேயும் இந்த ஆலியும் பூனியும் எப்பப் பார்த்தாலும் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கானுங்க. எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? கொஞ்சம் ஏமாந்தாப் போதும் கதவைத் தள்ளிதிறப்பானாமே......

பூனைபோல் மெள்ள நடந்துவந்து ஒரே பாய்ச்சல்.





அலுப்பா இருக்கு. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வரேன்.


கிருஷ்ணஜெயந்தி விழா வருதாமே..... கொண்டாடுங்க. பாவம். அவனும் என்னைப்போலத்தான் கருப்பா இருக்கான். போதாததுக்கு என் பெயரைவேற வச்சுக்கிட்டு இருக்கான்!!!

வைணவத்தில் என்னையும் சேர்த்து நல்லாத்தான் சொல்றாங்கன்னு 'கே ஆர் எஸ்'ன்னு ஒருத்தர் பிரசங்கம் பண்ணி இருக்காராம். ஆனால் இந்த இந்திரன்.......என் பெயரைக் கெடுத்துட்டானே........


அனைவருக்கும் கண்ணன் பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.


இப்படிக்கு என்றும் அன்புடன்,

கோகி என்னும் கோபால கிருஷ்ணன்.

பிகு: இப்பெல்லாம் அம்மா என்னை Bolt, கிருஷ்ணா போல்ட்ன்னு கூப்புடறாங்க. எதுக்குன்னு எனக்குப் புரியலை. நான் ஒரே ஓட்டமா ஓடிட்டேன்:-)

Tuesday, August 19, 2008

டெனாரா டெனாரா.... மீரு பாக உன்னாரா? (ஃபிஜிப் பயணம் பகுதி 8)


ராத்திரிக்குக் கிளம்பணும். வந்ததுக்கு, எல்லாரையும் சந்திச்சோம், நல்லா சாப்புட்டோம், கல்யாணக் கொண்டாட்டங்களில் கலந்துக்கிட்டோம்.ஆனாலும் மிச்சம் மீதியையும் பார்க்காம விடமுடியுதா?

இன்னிக்கும் சார்ஜர் தகராறு. ஒரு மணி நேரம் சார்ஜ் ஆனாக்கூடப் போதுமாம். முருகனிடம் ஒரு சின்ன பேரம் பேசினேன். ஒன்னேகால் டாலர். குறிப்பிட்டக் கோணத்தில் சார்ஜ் ஆக ஆரம்பிச்சது. அலுங்காமக் குலுங்காமத் தரையில் வச்சேன். ஹைய்யா......

எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டுக் கிளம்பணும். புதுமாப்பிள்ளையும் பொண்ணும் நியூஸிக்குத்தான் தேன் நிலவுக்கு வர்றாங்க. தொலைபேசச் சொன்னேன். ஒன்பது மணியில் இருந்தே வண்டிகள் விமானநிலையம் போறதும் வாறதுமா இருக்கு. பக்கத்துத் தீவில் இன்னொரு கல்யாண நிச்சயதார்த்தம். நாப்பதுபேர் நிச்சயத்துக்குப் போறாங்க. சின்ன விமானம். 10 பேர்தான் போக முடியும். அதனாலே கிடைச்ச ப்ளைட்டைப் பிடிச்சுப் போகவேணும். கடைசி பேட்ச் மறுநாள் 4 மணிக்குக் கிளம்புது. நல்லவேளை 1 மணி நேர ப்ளைட் தான்.

அந்த மாப்பிள்ளைப் பையன் இங்கே ஆக்லாந்துதான். இங்கே இந்தக் கல்யாணத்துக்கு வந்துருக்கார். அர்விந்த் பையாவோட அண்ணன் பேரன். நிச்சயம் நாளை மாலை. கல்யாணம் நவம்பரில் இங்கே நியூஸியில். பெண்கள் கூட்டம் அப்படியே இங்கிருந்து அங்கே இடம் பெயரல். நிச்சயத்துக்கும் சமைக்கணுமே.......ப்பா....பாவமா இருக்கு.

மகளும் நண்பரும் 11 மணிக்கு ரூமைக் காலி செஞ்சுட்டு ஏர்ப்போர்ட் வந்துருவாங்க. பிக்கப் & ட்ராப்க்கு ஏற்பாடு ஏற்கெனவே இருக்கே. இதனால் ஒரு 45 நிமிசம் எங்களுக்கு மிச்சம். நாங்களும் போற வழியில் லௌடோகா போய், நமக்குத் தெரிஞ்சவங்களை பத்து நிமிசம் பார்த்துட்டுப் போகணும். இந்தக் குடும்பம்தான் முருகன் சிலைக்கு அந்தக் காலத்தில் தென்காசியில் ஏற்பாடு செஞ்சவுங்க.

'மூக்குச்சண்டை மீனா'ன்னு மகள் குழந்தையா இருக்கும்போது சொல்லிக்கிட்டு இருப்பாள். மசால்வடை பிரமாதமா இருக்கும். கடையின் பெயர் 'ஹாட் ஸ்நாக்ஸ்'. நாங்க அங்கே இருந்தப்ப ஆரம்பிச்ச கடை. இன்னும் நல்லாவே நடக்குது. ஓனர் மூணு வருசம் முன்பு இறந்துட்டார். ரெண்டு வடை வாங்கிச் சூடாத் தின்னுட்டு ரெண்டு வடை பொண்ணுக்குப் பார்ஸல் வாங்கிக்கிட்டேன். கடையில் இருந்த ஓனரின் பெண் எங்களைப் பார்த்துக்கிட்டே யோசனையா இருந்தாங்க.

அம்மா எப்படி இருக்காங்கன்னு கேட்டதும்....."வேர் ஈஸ் த லிட்டில் கேர்ள்.? கோபால் அங்கிள்தானே?" ஞாபகம் வந்துருச்சு:-)))) மாடியில் அம்மாவைப் போய்ப் பார்த்தோம். மதுரைக்காரவுக. எல்லாருக்கும் வயசாகிப்போச்சு. ஆச்சே 20 வருசம்.

வர்ற வழியில் ஒரு பலகை போட்டு அதுமேலே நாலைஞ்சு கிண்ணம் நிறைச்சு என்னவோ வித்துக்கிட்டு இருக்காங்க ஒரு ஃபிஜியன் அம்மா. நண்டும் சிண்டுமா மூணு குழந்தைகள் வேற. இலந்தைப் பழம். ஒரு டாலராம். வாங்கிக்கிட்டேன். நம்ம பசங்க சாப்புட்டுப் பார்க்கட்டுமே. ரெண்டு டாலர் கொடுத்தா மீதி ஒரு டாலர் சில்லரை அந்தம்மாட்டே இல்லை. ஒரு டாலர்கூட கையில் இல்லாம என்னத்தை வித்து, பிள்ளைங்களை வளர்த்து.......பரவாயில்லே. பாக்கி தரவேணாமுன்னு சொன்னாலும் பதறிப்போகுது அவுங்களுக்கு. வேணாம் வேணாமுன்னுத் தலையைத் தலையை ஆட்டுறாங்க.... ஏழ்மையிலும் நேர்மை.

அப்பப்பார்த்து அந்தப் பக்கம் இன்னுமொரு ஃபிஜியன் பெண் கையில் ரெண்டு துண்டு, மூணடி நீளக் கரும்பைவச்சுக்கிட்டு, வேடிக்கைப் பார்த்துக்கிட்டே எங்களைக் கடந்து போகுது. கரும்பு விலைக்குத் தர்றயான்னு கேட்டேன். சட்னு ரெண்டையும் என்கிட்டே நீட்டுது. காசு வேணாமாம். தின்னுக்கோங்குது. ஒரு துண்டு போதும். இங்கிருந்து ஒரு டாலர் வாங்கிக்கோன்னு சொன்னால்....காசு வேணவே வேணாங்குது அந்தம்மா. 'அப்படீன்னா எனக்குக் கரும்பு வேணாமு'ன்னு நான் ஆரம்பிச்சதும் சமாதானமாயிருச்சு. நம்மூர் கிராமங்களில் பிரியத்தோடு இப்படிச் சட்னு எடுத்துக்கொடுக்கும் எத்தனைபேரை சின்னவயசுக் காலங்களில் சந்திச்சுருக்கேன். அதெல்லாம் ஒரு கணம் மனசில் வந்து போச்சு. வெள்ளந்தியா இருக்கும் கிராம மக்கள். மகளின் நண்பர் அதிர்ஷ்டசாலிதான். ருசி பார்க்க நினைச்சது கிடைச்சுருச்சு பாருங்க.

அடிச்சுப்பிடிச்சு வந்து, ஏர்ப்போர்ட்டில் காத்துருந்தவங்களையும் ஏத்திக்கிட்டு டெனாராத் தீவுக்கு வழிகாட்டிப் பலகை காமிக்கும் வழியில் போனா..... இதுக்கு முந்தி இங்கேயெல்லாம் வந்துருக்கோமோன்னு நினைவு. ஆமாவாம். இந்தப் பக்கமெல்லாம் பிக்னிக் வந்துருக்கோம். இந்த இடம் நினைவு இருக்கா? பஸிபிக் கடலில் குழந்தையின் காட்டன் நாப்கின்னை அலசின ஆள் நானாகத்தான் இருப்பேன்.. இந்த இடம் தாண்டுனதும் சதுப்புநிலக் காடுகள் போல் ஒரு mangroves உள்ள இடமும் அதுக்கு அந்தப் பக்கம் ஸ்வாம்ப் போல இருந்த தீவையும் தான் இப்ப மாற்றி அமைச்சு இருக்காங்க. போர்ட் டெனாரா. வெளிநாட்டு பெரிய ஹோட்டேல் செயின்கள் ஏழெட்டுச் சேர்ந்து தீவுக்குப் பாலம் கட்டி வெள்ளை மணலைக் குவிச்சு டெவெலப் பண்ணி இருக்கு.










துறைமுக வசதிகள் (உல்லாசப் படகுகளுக்கு மட்டும்) ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், 18 ஹோல்ஸ் கோல்ஃப் மைதானம், பத்து டென்னிஸ் கோர்ட், சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட்ஸ் இப்படி வெளிநாட்டு லெவலுக்கு வந்துருக்கு. கல்யாணம் பண்ணிக்கன்னே ஒரு வெட்டிங் சாப்பல் wedding chapel. உள்நாட்டுப் பங்குகளும் வேணுமுன்னு ஆரம்பிச்ச புதுசுலே இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுங்கன்னு கூவிக்கூவி வித்துருக்காங்க. நாடு இருந்த 'நிலையாமை'யான நிலையில் யாரும் அவ்வளவா முன்வரலை. வெறும் பதினைஞ்சு ஆயிரத்துக்கு இன்வெஸ்ட்மெண்ட் ப்ளாட்ஸ் கிடைச்சதாம். அதுலே பணத்தை முடக்குனா, வருசத்துக்கு ஒரு வாரம் இலவசமாத் தங்கிக்கலாம். இப்ப அதே இடங்கள் முக்கால் மில்லியனுக்கு விலை போகுது. மால்தாரியா இருந்தா அங்கே ஒன்னு வாங்கிப்போட்டுக்கிட்டு அக்கடான்னு இருக்கலாம். தனிவீடுகளும் இருக்கு. எல்லாவீட்டுக்கும் பின்னால் செயற்கை ஆறு. படகு நிறுத்தி வச்சுக்கவாம். முன்னால் போனாக் காரு, பின்னாலே போனால் படகு. மஜாதான்:-)





ஷாப்பிங் ஏரியாவில் ஜனங்களுக்கு வரவேற்புமாதிரி மூணுபேர் உக்காந்து பாடிக்கிட்டும், கிதார் வாசிச்சுக்கிட்டும் இருந்தாங்க.
பகல் சாப்பாட்டுக்குத் தேடுனதுலே ஒரு பிட்ஸா கடை கிடைச்சது. நா(ண்)டி ஸ்பெஷல் வெஜி. பிட்ஸா. பிரமாண்டமான ஸைஸுலே வந்துச்சு. ஆனால் தேசலா இருந்தது.


சூப்பர் மார்கெட்டுலே நுழைஞ்சேன். தீ பிடிக்கும் விலை.
நியூஸிக் காய்கறிகளை ஒரு பார்வை பார்த்துக்கிட்டேன். ஹாலிடே மூடில் இருந்து ஆர்டுனரி மூடுக்கு வரணும் இல்லையா? மறுநாளிலிருந்து சமைக்கணுமே. ஜில்லுன்னு ஒரு (குடி)தண்ணீர் மட்டும் வாங்கினேன்.





ப்ளூக் கலரில் இருக்கும் பூலா Bula பஸ்களில் ஏறிச் சுத்துங்க. முற்றிலும் இலவசமுன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லி அனுப்புனாங்க அர்விந்த் பையா மனைவி. புல் குடிசை மாதிரி மேற்கூரை கட்டுன ஷட்டில் பஸ்கள். தீவைச் சுத்திச் சுத்தி இருக்கும் எல்லா ஹோட்டல்களுக்கும் போய் வருது. மக்கள் எங்கே வேணுமுன்னாலும் ஏறி எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கலாம். பொதுவாவே எல்லாக் கட்டிடங்களிலும் புல்கூரைகளை ஒரு அலங்காரமாப் போட்டு வச்சுருக்காங்க. தீவுகளில் இருக்கும் ஏழைக் குடிசைகளாம்:-)



பழையகாலத்து அக்கிரஹாரத்து வீடுகளில் முன்வாசலில் நின்னு பார்த்தா........கொல்லைப்புறத் தோட்டம் தெரியுமே அதைப்போல ஹோட்டல் லாபியில் இருந்து நேராப் பின்னாலே கடல் தெரியுது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகு, ஒவ்வொரு டிசைனு. கடற்கரை மணல் ஓரமாவே போனோமுன்னா எல்லா வீட்டுக் கொல்லைப்புறங்களையும் பார்த்துக்கிட்டே நடக்கலாம். விதவிதமான டிஸைன்களில் நீச்சல்குளங்கள். அநேகமா எல்லா ஹோட்டல்களிலும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகள் நிறைஞ்சு வழியுறாங்க. நாங்க போன சீஸனும் மிட் விண்டர் காலமாச்சே. ஒரு வேளை இதனாலும் இருக்கலாம். விண்டர் எஸ்கேப்பு:-) விருந்தினர்களுக்குப் பொழுது போகணுமேன்னு கடலையொட்டிய விளையாட்டுகள். வாசலில் நின்னு இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்கும் பணியாளர்கள். நாள் முழுசும் சுற்றுலான்னு உள்ளூர் வெளியூர் மக்கள் கூட்டம்.








Adrenalin Watersports. மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல்வந்து வாய்க்குள்ளே விழுந்தாப்போல அலறணுமாம். FLYING FISHன்னு ஒன்னு. கையில் பிடிச்சுக்க வாகாய் ஒன்னுமே இல்லாத ரப்பர்/ ப்ளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டுக் காலை மட்டும் கீழே இருக்கும் பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு......அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி..... இதுக்கு 29 டாலர் டிக்கெட்:-)))))


நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா...... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும்போதே....வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு.....:-))))


அழகாச் சின்னதா ஒரு சர்ச். பூஜை தினமும் நடக்குதான்னு தெரியாது. ஆனா கல்யாணத்துக்குன்னே கட்டி விட்டுருக்கு. ஹாலிடேயில் வந்தமா, கல்யாணம் செஞ்சுக்கிட்டு அப்படியே ஹனிமூனையும் முடிச்சுக்கிட்டுப் போகலாமான்னு நல்ல வசதி. ஒரு கோர்ட்டும் இருந்துட்டா வாழ்க்கை இன்னும் நிம்மதியா இருக்கும்.


வெய்யில் காயறோமுன்னு பலர் இருந்தாலும் ஒரு சிலர் இது பொதுஜனங்களுக்கும் ஆக்ஸெஸ் இருக்கும் பீச் என்பதை மறந்து போயிட்டாங்க. குழந்தைகளும் சின்னப்பசங்களும் திடுக்கிட்டுப்போன மாதிரி இருந்துச்சு. இது எதையும் கண்டுக்காம பாரில், ரெஸ்டாரண்டில் வேலை செய்றவங்க கருமமே கண்ணாயினாருன்னு கொண்டுவந்து தேடித்தேடி விளம்பிக்கிட்டு இருந்தாங்க.

ஃபிஜியன்கள்தான் எல்லா வேலைகளிலும் இருக்காங்க. ஒரு பேபி சிட்டர் கூட பிள்ளைங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஓய்வறைகள் எல்லாம் பளிச்.
நாலுமணிக்குக் கிளம்பி நாண்டி டவுன் வந்து கோயிலுக்குப் போனோம். இந்த முறை மகளும் உள்ளே வர முடிஞ்சது. சாமிக்குச் சொன்னதைச் செஞ்சுட்டு,
அங்கே கோயிலில் கத்தியைக் கேட்டு வாங்கினேன். கரும்பை வெட்டிப் பசங்களுக்குத் தந்தோம். முதல் முறையாகக் கரும்பைச் சுவைச்ச நண்பர், 'டேஸ்ட் லைக் ஷுகர்' ன்னு கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுச் சொன்னார்:-))))

கோயில் சுவரில் இருந்த சித்திரங்களைக் காமிச்சு மகள், 'இதை நம்ம பூனை வரைஞ்சுருக்கு'ன்னதும் பார்த்தால்...... ...ஆமாம். 'கோபாலகிருஷ்ணன், மைலாப்பூர் 'ன்னு போட்டுருக்கு. மண்டபத்தின் விதானங்களில் சித்திர வேலை அழகு.




பழைய பூசாரியை(உள்ளூர்க்காரர்)ப் பார்த்தோம். பழைய நினைவுகளின் பகிர்தல்கள். பழைய கோவிலில் இருந்து மூலவரை இடம் பெயர்க்க எடுத்தபோது அப்படியே தூள் தூளா உடைஞ்சுருச்சாம். ஏற்கெனவே கால் உடைஞ்சு வந்தவராச்சே.... இத்தனை வருசம் தாக்குப்பிடிச்சதே கூடுதலோ?
சாமி சிலை உடைஞ்சப்ப இவர் அப்படி அழுதாருன்னு தோழி சொல்லி இருந்தாங்க. அதைப் பற்றிக்கேட்டேன். அங்கே இருந்த அருள்சக்தியை அப்படியே இங்கே கொண்டுவந்து ஆவாஹனம் செஞ்சாங்களாம்.?????????
ஏதோ ஒரு நம்பிக்கை. மனுசனை வாழவைக்க இதுவும் தேவைதானே?உடைஞ்ச சிலை? கடலில் கொண்டுபோய்ச் சேர்த்தாங்களாம்.

அஞ்சேமுக்காலுக்கு வண்டியைத் திருப்பிக் கொடுப்பதாப் பேச்சு. அவுங்க சொன்ன இடத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, பார்க்கிங்லாட்டைச் சுத்திச்சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். ஆஃபீஸ் முன்னாலேன்னு சொன்னா ஆபீஸ் முன்னாலே இருக்கும் பார்க்கிங் தளத்தைக் காசு கொடுத்துச் சுத்திப்பார்த்தப் பெருமை முற்றிலும் எங்களுக்கே:-))))

லவுஞ்சில்போய் காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் முடிச்சுக்கிட்டு, ட்யூட்டிஃப்ரீ வேடிக்கைப் பார்த்தோம். ஒரு வீடியோ கெமெரா ரொம்பக் க்யூட்டா அட்டகாசமா இருக்கு. புத்தரின் போதனையை நினைவில் கொண்டுவந்தேன். தோழிகளுக்குக் கொடுக்க சில மரச்சாமான்கள் வாங்குனதோடு சரி.

இங்கே வந்து இறங்கும்போது நள்ளிரவு பனிரெண்டரை மணி. சம்பிரதாயங்கள் முடிச்சு டாக்ஸி பிடிக்க வெளியே வந்தால்........ ஆயிரம் ஊசி நறுக். குளிரான குளிர். வீட்டுக்குவந்து படுக்கையில் விழும்போது ரெண்டு மணி. காலையில் ஒன்பதுக்கு கோபாலகிருஷ்ணனைக் கூப்பிட்டுவரணும்...........

ஏழுமணிக்கு ஏதோ உருட்டும் சப்தம். அரைக்கண்ணில் பார்த்தால் நம்ம கோபால் நடுக்கத்தோட நிக்கறார்!!!!!


தொடரும்.............:-)

Sunday, August 17, 2008

சட்டாம்பிள்ளை (மரத்தடி நினைவுகள்)

வத்தலகுண்டு 'எலிமெண்டரி ஸ்கூல்'காம்பவுண்டு. பின்பக்கச் சுவர்லே ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அது வழியா பசங்க போலாம்,வரலாம். ஆனா போகக்கூடாதுன்றது டீச்சருங்க போட்ட கட்டளை. ஏன்னா அதும் பக்கத்துலெதான் பெண்பிள்ளைகளுக்கான 'கக்கூஸ்' இருக்கு. அந்த ஓட்டைக்கு வெளியே ஒரு சின்ன மண்தரை இருக்கும். அந்தத் தரையைத்
தாண்டினா ஒரு பாதை வரும் அதுக்கு நேர் எதிரே நம்ம வீட்டு வாசல்! ஒரே நிமிஷத்துலே வீட்டுக்குப் போயிரலாம்!

எனக்கு 'அது'வழியா 'ஸ்கூலு'க்குப் 'போறதுக்கு' மட்டும் முடியாது. செங்கல்லுலே உரசி சட்டையெல்லாம் அழுக்கு ஆயிடுமே!
ஆனா உண்மையான காரணம் வேற ஒண்ணு. ஸ்கூலுக்குத் தனியாப் போகப் பயம்! மொதநாளு என்கிட்ட அடிவாங்குன பசங்க திருப்பி அடிக்கக் காத்துகிட்டு இருப்பாங்கல்ல.

"இருடா இரு வீட்டுக்குப் போறப்ப பாத்துக்கறேன்"

" எங்க கை மட்டும் பூப்பறிக்குமா? இருடி இரு"

இந்த மாதிரி வீர வசனங்கள அப்பப்ப எடுத்துவிடுவோம்.

பெரிய காரணமெல்லாம் இருக்காது. சிலேட்டுக்குச்சி தரலே, சிலேட்டுலே எழுதுனதை அழிச்சிட்டான்(ள்)
கணக்குக்கு விடையைச் சொல்லலே, இப்படி ஏதாவது சில்லறைக் காரணம்தான். ஆனா அந்த வயசுக்கு அது ரொம்பப் பெருசுதானே!

சண்டை எதுக்கா இருந்தாலும், வகுப்பு நடக்கறப்ப சமத்தா இருந்துடுவோம். எதா இருந்தாலும் சாயந்திரம் ஸ்கூல் விடறதுக்குக் கொஞ்சம் முன்னலேதான் அதுக்கு மறு உயிர்!

சாயந்திரமா 'ஸ்கூல் விடறப்ப பின்னாலேயே போய், ஒரு அடி 'படார்'னு முதுகிலே அடிச்சுட்டு, சுவத்துலெ
இருக்கற ஓட்டைவழியா வீட்டுக்கு ஒரே ஓட்டம்தான். இது தெரியாம பசங்க 'ஸ்கூல் கேட்'லே காத்துக்கிட்டு
இருப்பாங்க சில சமயம்!

மறுநாளு, காலையிலே எந்திரிக்கும்போதே ஒரு பயம் வந்திரும். ஸ்கூல் நேரத்துக்கு முன்னாலேயே ஆஸ்பத்திரிக்குப்
போய், அங்கேயே சுத்திகிட்டு இருப்பேன். சிலநாளு அம்மா கூடவே,'ரவுண்ட்ஸ்'போவேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச
இடம் எதுன்னா, புதுப்பாப்பா வார்டு. ஜோரா இருக்கும்! கிராமத்துலே இருந்து வந்தவுங்க எல்லாம் கூட்டம் போட்டுகிட்டு
உக்காந்திருப்பாங்களா, அம்மா அங்கெ போறதுக்கு முன்னாடி, நர்ஸ்ஸம்மா போயி அவுங்களையெல்லாம் விரட்டுவாங்க!
அவுங்களும் வெளியே போறமாதிரி போயி, அம்மா தலை மறைஞ்சவுடனெ, திரும்பி வந்துருவாங்க!

அம்மா கேப்பாங்க "ஸ்கூல் டயமாச்சே, இன்னும் போகலையா?"

"இன்னும் பெல் அடிக்கலே"

மணி 'அடிக்க'றதுக்கு முன்னாலெ போனா, பசங்க 'அடிக்க'க் காத்திருப்பாங்க! மணி அடிச்சபிறகு போனா, டீச்சரு திட்டுவாங்க! ஆனா திட்டு வாங்காம தப்ப ஒரு வழி இருக்கு. யாராவது பெரியவுங்க கொண்டாந்து விட்டாங்கன்னா
டீச்சரு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! அதுக்காக, ஆஸ்பத்திரிலே இருக்கற 'கம்பவுண்டர், வார்டு பாய், குறைஞ்சபட்சம் அழுக்கெல்லாம் கூட்டற 'லச்சி' இவுங்கள்லே யாரையாவது கூட்டிட்டுப் போகணும்னு காத்துகிட்டிருப்பேன்!

'பாப்பாவை நான் கூட்டிட்டுபோறேன்'ன்னு சொல்றதுக்கு ஆள் 'ரெடி'யா இருக்கும்! இந்த சாக்குலே ஒரு அஞ்சு
நிமிசம் 'எஸ்கேப்' ஆகலாம்னுதான்!

ரொம்ப தூரமா என்ன? ஒரு பத்து எட்டுலெ இருக்கு பள்ளிக்கூடம்! முக்காவாசி நாளு இதே கதைன்றதால எல்லாருக்கும் பழகிப்போச்சு.


அந்த ஸ்கூல்லே ஒரு பழக்கம் இருந்துச்சு. அதாவது காலையிலே 'ஆஜர்' சொன்ன பிறகு, யார் யார் வரலேன்னு தெரிஞ்சுரும்லே. அப்ப டீச்சர் கேப்பாங்க, வராதவுங்கல்லாம் ஏன் வர்லேன்னு.

தெரிஞ்சா சொல்லுவோம், தெரியலேன்னா, தெரிலேன்னு கத்துவோம்.

உடம்பு சரியில்லேன்னா மட்டும் எனக்குக் கட்டாயம் தெரிஞ்சிரும். நம்ப அம்மாகிட்டதானே மருந்து வாங்க வருவாங்க!

தினமும் காலையிலே ஆஸ்பத்திரி முன்னாலே இருக்கற பெரீய்ய்ய்ய வெராண்டாவுலே ஒரு பெரீய்ய்ய மேஜை போட்டு வச்சிருப்பாங்க. அங்கெதான் 'அவுட் பேஷண்ட்'டைப் பாக்கறது. அம்மா 'சீட்டு' எழுதுனவுடனே,
அதைக் கொண்டுபோய்க் கம்பவுண்டர் கிட்டே கொடுத்தா, அவரு, ஏற்கெனெவே கலக்கி வச்சுருக்கற 'தண்ணீ' மருந்தைத் தருவாரு. அதை வாங்கறதுக்கு 'சீசா' கொண்டு போணும். இல்லாதவுங்க, நம்ம ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்கு
வெளியே, ஒரு ஆளு, சாக்கு விரிச்சு உக்காந்துகிட்டு, 'பாட்டிலு' விக்கறாரு இல்லே, அவருகிட்டப் போய் வாங்கணும்.


ஆனா, எல்லாருமெ ஒரு 'சீசா' வீட்டுலே இருந்துதான் கொண்டு வருவாங்க. பழைய மருந்து ஏதாவது பாக்கி இருந்தா அதை வெளீயே ஊத்திட்டு, அவசர அவசரமாக் களுவிட்டு வந்துருவாங்க சில பேரு. கம்பவுண்டர்க்கு எப்படியோ இது தெரிஞ்சிரும் போல. மோந்து பாத்துட்டு, வேற கொண்டான்னுட்டார்னா, வழியில்லாம அஞ்சு காசு,பத்து காசு கொடுத்து வாங்கிருவாங்க!

அதே ஆளுதான், ஸ்கூல்லே 'ரீஸஸ்' விடுறப்ப, ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளியெ, அதே சாக்கை விரிச்சு, அதுலே அவிச்ச கள்ளே, நெல்லிக்காய், கொடுக்காப்புளி,கரும்புத்துண்டு இப்படி 'சீஸனு'க்கு ஏத்த மாதிரி விப்பாரு. இதுலெல்லாம் எனக்கு 'இன்ட்ரெஸ்ட்' இல்லே! ஆனா அவரு பக்கத்துலே ஒரு 'ஆயா' உக்காந்து விக்கும் பாருங்க 'சவ்வு முட்டாய்' அதுதான் என் 'கோல்' அதுலெ ரெண்டு விதம் இருக்கும். ஒண்ணு கலரு போடாதது, இன்னொண்ணு நல்லா சிவப்புக் கலருலே இருக்கும்! அதைத் தின்னா, அப்படியே வாயெல்லாம் சிவந்து, வெத்தலை போட்டமாதிரி இருக்கும். பசங்க எல்லாம் அதைத் தின்னுட்டு, நாக்கை நாக்கை நீட்டிப் பாத்துக்குவாங்க! பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!

ஆனா, எனக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. வெளியிலே 'கண்டதையும்' வாங்கித் தின்னக் கூடாதுன்றது அம்மாக் கட்டளை! அரச கட்டளை மாதிரிதான் இது! தெரியாம வாங்கித் தின்னலாம்னா, அந்த சிவப்புக் கலரு இருக்கே அது, மத்தியானம் வரைக்கும் அப்படியே இருக்கும்.அப்படியேன்னா, அப்ப்ப்ப்படியே இல்லை. ஆனா லேசில போகாது! பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகணும்ல.
அப்ப மாட்டிக்க மாட்டேனா?

அந்த வயசுலெ ஆசையெ அடக்கறதுக்கு நான் என்ன புத்தரா? தின்னணும், ஆனா மாட்டிக்கக்கூடாது. எப்படி? ஒரேவழி. கலரு
போடாத முட்டாயத்தான் வாங்கித் தின்னணும்! (அந்த வயசிலேயே எவ்வளவு தில்லு முல்லு திருக்கோசு பாருங்க!)

முட்டாயுன்னதும் இன்னொண்ணு கூட ஞாபகம் வருது. ஒரு முட்டாய் விக்கறவரு,தடியா ஒரு கம்பைத் தோள்மேலே தூக்கிகிட்டு வருவாரு.
அந்தக் கம்புலே, மேல்பக்கத்துலே கலர்கலரா வானவில்லை அப்படியெ பந்தா சுருட்டின மாதிரி சவ்வு முட்டாய் சுத்தி இருக்கும். அந்தக் கம்பு உச்சியிலே ஒரு பொம்மை இருக்கும். அதுக்கு நல்லா 'கவுனு' இல்லாட்டா புடவைன்னு உடுத்தி விட்டுருப்பாங்க!அதுக்குச் சலங்கைகூட கட்டிவிட்டுருப்பாங்க! கம்பத் தூக்கிகிட்டு வரும்போதே'ஜல் ஜல்'ன்னு தாளத்தோட பொம்மை ஆடிகிட்டே இருக்கும்.

அவருகிட்டே முட்டாய் வாங்குனா, நமக்கு என்ன மாதிரி வேணும்னு கேட்டு, அதே மாதிரி செஞ்சு கொடுப்பாரு.( டிஸைனர் முட்டாய்!)
எல்லாப் பசங்களும் சொல்லிவச்ச மாதிரி கைக்கடியாரம்தான் கேப்பாங்களா, அவரும் கம்பு மேலெ இருக்கற பந்திலெருந்து, நீளமா
இழுத்து நீட்டி, அதைச் சுத்திச் சுத்தி நிமிசத்திலே கைக்கடியாரம் செஞ்சு, கேட்டவுங்க கையிலே கட்டியும் விட்டுருவாரு. கையிலே கட்டிட்டா
திங்கறது எப்படி? அதுக்காக, கம்புலேருந்து இன்னும் கொஞ்சம் இழுத்து நீட்டினதுலே, கொஞ்சம்போல எடுத்துத் தனியா கொடுத்துருவாரு!
பூனை, நாய், சைக்கிள்,தேளு இப்படி விதவிதமா அவரு விரலு விளையாடும்! அதப் பாக்கறதே ஒரு சொகம்! அதுக்கும் நமக்கு கொடுப்பனை
இல்லே. அந்த முட்டாய் சுத்த பத்தமா செஞ்சது இல்லையாம்! அந்த ஆளுங்க,'மூக்கைச் சீந்திட்டு' அப்படியே தொட்டுருவாங்களாம்!
அப்படி, இப்படின்னு சொல்லி வச்சுருவாங்களா, அதுக்குப் பயந்துகிட்டு அதையெல்லாம் பாக்கறதோட சரி.

நம்ம கையிலே காசு வந்தவுடனே அது, நம்ம தெருவிலே இருக்கற பெட்டிக் கடைக்கு போயிரும்.ஆரஞ்சு முட்டாய் இல்லேன்னா கோழிமுட்டை
முட்டாய். இதுலே உள்ளுக்குள்ளே ஒரு பாதாம் பருப்பு இருக்கும். இதை வாயிலெ போட்டுட்டா அவ்ளதான். ரொம்ப நேரத்துக்கு பேச முடியாது.
வெளியவும் எடுக்க முடியாது. எச்சி இல்லே! முட்டாய்ங்களைப் பத்தி இன்னைக்கில்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்தான்.

ஆனாப் பாருங்க, வாழ்க்கையிலே நிறைவேறாமப் போன ஆசைகளிலே இந்த ஜவ்வு முட்டாயும் இருக்கு. இப்பல்லாம் இது கிடைக்குதான்னு கூடத் தெரியலே.

ஆங்.... எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஸ்கூலு...ஆஜர் எடுக்கறது.

டீச்சரு கேட்டப்ப, வராதவுங்க ஏன் வரலைன்றதுக்குக் காரணம் தெரியலேன்னா, அதைத் தெரிஞ்சிக்கறதுக்கு வேற வழி இருக்குல்ல!

" கமலா/செல்வி/வசந்தா/குமார் ஏன் வரலென்னு யாருக்காவது தெரியுமா?"

"தெரியாது டீச்சர்"

"இவுங்க வீடு யாருக்குத் தெரியும்?"

" எனக்குத் தெரியும் டீச்சர்!"


இந்தக் கேள்வியை மத்தவங்ககிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை. அதான் நான் இருக்கேனே. எல்லார் வீடும் அனேகமா எனக்குத்
தெரிஞ்சிருக்கும்! அது எப்படி? அதானே எனக்கும் தெரிலெ!

நான் எப்பவும் ஊரைச் சுத்திக்கிட்டு இருந்ததாலா? ச்சீச்சீ, இருக்காது. எல்லாருக்கும் எல்லார் வீடும் தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்.
அப்ப 'இந்தக்காலத்தில' இருக்கறதைப்போல தப்புத் தண்டாவெல்லாம் நாங்க கேள்விப்பட்டதேயில்லை! பயமில்லாமத் திரிஞ்சிகிட்டு இருந்தோம்!

உடனே என்னையும், கூட இன்னோரு பொண்ணையும்( இது எப்பவுமெ என் 'பெஸ்ட் ·ப்ரண்டு' பிச்சம்மாவாத்தான் இருக்கும்) அனுப்புவாங்க!

"ஓடிப்போய் என்னன்னு கேட்டுட்டு வரணும். அங்கே, இங்கேன்னு பராக்குப் பாத்துகிட்டு நிக்கக்கூடாது"

நாங்க ரெண்டுபேரும் கிளம்பிடுவோம். டீச்சர் சொல்படி ஓடிப்போக மாட்டோம். ஏன் தெரியுமா? பிச்சம்மாவுக்கு, 'போலியோ' வந்து, ஒரு காலு
வளஞ்சு போயிருக்கும்.அந்தக் காலை உதறி உதறி விந்தி விந்திதான் நடப்பா. மத்தபசங்கெல்லாம் அவளை, நொண்டிப்பிச்சம்மா'ன்னு கூப்பிடறப்போ, எனக்குக் கோவம் கோவமாவரும்.

என் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு(இருந்தது?) என்கூட இருக்கறவங்க எப்படிப் பேசுறாங்களோ, நடக்கறாங்களோ, அதேமாதிரி என்னை அறியாமலேயே
செஞ்சுருவேன். பிச்சம்மாகூட போறப்ப நானும் அவளைப் போலவே நடப்பேன்.பாக்குறவங்களுக்கு, ரெண்டு சின்ன பொண்கள் கால் சரியில்லாம
இருக்கறாங்கன்னு நினைச்சுப்பாங்க! ( இதை ஒருதடவை எங்க அம்மா பாத்துட்டு கேட்டப்பத்தான் எனக்கே தெரியும், நான் பிச்சம்மா மாதிரி நடக்கறேன்னு!)

இந்த நகர் வலத்தை முடிச்சிட்டு திரும்பி வர்றதுக்கே காலையிலே விடற 'ரீஸஸ் டைம்' ஆயிரும்! அப்புறம் ரெண்டு பீரியட்தான்.சாப்பாட்டு
இடைவேளை வந்துரும்!

அப்புறம், டீச்சரு எங்கெயாவது போனாங்கன்னா, சட்டாம் பிள்ளைதான் டீச்சர் வர்ற வரைக்கும் மொத்த வகுப்பையும் பாத்துக்கணும். சத்தம் கித்தம்
போடாம, வீட்டுப் பாடம் எதாவது எழுதிக்கிட்டு இருக்கணும்.

எங்க 'ஸ்கூல்'லெ வகுப்புத் தலைவர்(சட்டாம்பிள்ளை) ஆவணும்னா வகுப்புலெ மொத'ரேங்' எடுக்கற ஆளா இருக்கணும். எல்லா மாசமும்
'டெஸ்ட்' வைப்பாங்கல்ல. அதுலே யாரு நிறைய 'மார்க்'கோ, அவுங்கதான் அடுத்த 'டெஸ்ட்' வரவரைக்கும் 'க்ளாஸ் லீடர்'

இதுலே எனக்கும், எங்க வகுப்புலே இருந்த 'வைத்தி' ன்னு நாங்க கூப்புடற வைத்தியநாதனுக்கும்தான் போட்டி.

வைத்தியப்பத்திச் சொல்லியே ஆகணும். அக்ரஹாரத்துப் பையன். ஆசாரமான குடும்பமாச்சா, அதுனால 'குடுமி'வச்சிருப்பான். முன்னந்தலை
அரைவட்டமா மழிச்சு இருக்கும். ஆனா, மழ மழன்னு இருக்காது. குட்டி குட்டியா சின்னச் சின்ன முடி இருக்கும். தலையைத் தடவுனா,
'ப்ரஷ்'மாதிரி குறு குறுன்னு இருக்கும். நல்லாப் படிப்பான். நல்ல நிறமா இருப்பான். அவனோட தங்கச்சிப் பாப்பாவுக்கு எப்பவும் வயித்துக்கோளாறுன்னு
ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வருவாங்க அவுங்க அம்மா. கூடவே இவனும் வருவான்.அப்ப அவனை எங்க வீட்டுக்குள்ளேயெல்லாம்
கூட்டிட்டுப்போய் எங்க அக்காங்களுக்கெல்லாம் காமிச்சிருக்கேன். நாங்க ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸ்தான்.ஆனா அப்பப்ப சண்டையும்
வந்துரும்!

ஒருநாளு டீச்சரு இல்லாதப்ப அவந்தான் எங்களையெல்லாம் மேய்ச்சுகிட்டு இருந்தான்.நாங்கெல்லாம் எப்பவும்போல பேசிகிட்டு இருந்தோம்.
சத்தம் ஜாஸ்தியாச்சுன்னா, ஒரு 'சத்தம்' போடுவான்.

"உஷ்ஷ்ஷ்ஷ்.... பேசாதீங்க! டீச்சரு சொல்லிட்டுப் போயிருக்காங்க, பேசறவங்க பேரை 'போர்டு'லே எழுதணும்னு. இப்ப எழுதிருவேன். அப்புறம் டீச்சரு வந்தா மாட்டிக்குவீங்க"

நான் அப்படியெல்லாம் அடங்கற ஆளா? ரெண்டு நிமிஷம் சத்தம் இருக்காது.அப்புறம் மெதுவா, கிசு கிசுப்பா தொடங்கும். போகப்போக
சத்தம் உசந்துகிட்டே போயிரும்.

வைத்தி, என் பேரை கோணக்கா மாணக்கான்னு 'போர்டு'லே எழுதிட்டான்!

இவ்வளவு தூரத்துக்கு இதுவரைக்கும் வந்ததில்லே. இன்னைக்கு ஏன் டீச்சரு இவ்வளொ நேரமா திரும்பி வரலே?

"டேய் வைத்தி, டேய் அழிச்சுடுடா, இனி பேசமாட்டெண்டா, டேய் டேய்"

"ஐயோ, டீச்சரு வந்துகிட்டு இருக்காங்கடா, டேய் வைத்தி, அழிடா அழிடா"

டீச்சரு காலை உள்ளே வெக்கறதுக்கும், வைத்தி 'போர்டை' அழிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.

அப்பாடா, தப்பிச்சுட்டேன்! ஆனாலும் எவ்வளொ கெஞ்ச வச்சிட்டான். இருக்கட்டும். அவனை வீட்டுக்கு விடறப்பக் 'கவனிக்கலாம்'!

அடுத்த ரெண்டு நாளிலேயே சந்தர்ப்பம் கிடைச்சிடுச்சு. நான் தான் 'லீடர்'

டீச்சரு வகுப்பிலே இல்லே. பேச்சு சத்தம் கொஞ்சம் கொஞ்சமா உச்ச ஸ்தாயிலே போயிகிட்டு இருக்கு. எனக்கு
செஞ்ச உபகாரத்தை நினைச்சுகிட்டு, வைத்தி சத்தமா பேசிகிட்டு இருக்கான், பக்கத்துலே உக்காந்து இருக்கற பையனோட!

நானு, சத்தம் போடாதீங்க, சத்தம் போடாதீங்கன்னு ஒப்புக்கு ரெண்டுதடவை கத்திட்டு, வைத்தி பேரை 'போர்டு'லே எழுதிட்டேன்! அவன் அதை சட்டையே பண்ணாம இன்னும் பேசிகிட்டு இருக்கான்!

ஆஹா.... டீச்சரு வந்துட்டாங்க! வைத்திக்கு அவன் கண்ணையே நம்ப முடியலே! அவன் பேரு இன்னும் இருக்கு.
நான் அதை அழிக்கறதுக்கு ஒரு முயற்சியும் எடுக்கலே!

வைத்திக்கு 'நல்லதா' ரெண்டு அடி உள்ளங்கையிலே கிடைச்சது! அவன் கண்ணுலே தண்ணி முட்டிகிட்டு நிக்குது!

டீச்சரு என்னெ எதுக்கு கை நீட்டச் சொல்றாங்க! ஐயோ...ஆஆஆஆ வலிக்குதே! எனக்கு எதுக்கு ரெண்டு அடி?

நானே நீலி! 'நீலிக்கு கண்ணீரு நெத்தியிலே'ன்ற மாதிரி, கண்ணீரு ஆறாப் பெருகுது!

வகுப்பே முழிக்குது!

அழுதுகிட்டே கேக்கறேன், "என்னை ஏன் அடிக்கறீங்க? நானா பேசுனேன்?"

டீச்சரு, 'போர்டை'க்காட்டுனாங்க. இப்பத்தான் எனக்கு உறைக்குது!

நாந்தான் எழுதியிருக்கேன்!

'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'

நன்றி: மரத்தடி 2004

Saturday, August 16, 2008

நியூஸியின் தங்க மங்கையர்.



இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒலிம்பிக்ஸ் விளையாட்டின் படகுப்போட்டியில் நியூஸி வீரர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சது.

நாங்க எல்லோரும் ரொம்ப ஆவலாவும், நிச்சயமாவும் எதிர்பாத்துக்கிட்டு இருந்தது மாஹே ட்ரைஸ்டேல் தங்கம் ஜெயிச்சுருவாருன்னு. நம்ம போதாத காலம் பாருங்க..... அவருக்கு பெய்ஜிங் பெல்லி வந்துருச்சு. பாவம். ரொம்பவே ----ட்டார் போல. நாலு கிலோ எடை பளிச்சுன்னு குறைஞ்சுருச்சு. உடம்பும் ரொம்ப நீர்ச்சத்து இல்லாமப்போய் நிஜமாவே ட்ரை ஆகிருச்சாம். அப்படியும் இறுதிப் போட்டியில் மூச்சைப்பிடிச்சுப் படகு வலிச்சு மூணாவதா வந்துட்டார். போட்டி முடிஞ்ச அடுத்த நிமிஷமே வாந்தி & மயக்கம். பாதுகாப்பா அவரைக் கரைக்குக் கொண்டுவந்த மெடிக்கல் டீம், சிகிச்சை கொடுத்தது. பரிசளிப்பு விழாவுலே பங்கெடுக்க முடியாமப்போகுமோன்னு எனக்கு ஒரே கவலை. இதுவரை எந்த பரிசளிப்பையும் இந்த விழாவில் நான் பார்க்கவே இல்லை. நல்லவேளையா பரிசளிப்புக்கு அஞ்சு நிமிசம் இருக்கும்போது அவர்வந்து கலந்துக்கிட்டார். விழா முடிஞ்சதும் நாலுபேர் வந்து கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.

அதுக்கப்புறம் இரட்டையர் போட்டியிலும் நியூஸி மூணாவதாவே வந்துச்சு. பெண்கள் இரட்டையர் போட்டியில் கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களும் ரொம்ப ஹாயா முதலில் இருந்தே பின் தங்கி முதலாவதா...... அதாவது கடைசிக்கு முதலாவதா வந்து அஞ்சாம் இடம் பிடிச்சாங்க.

இன்னொரு போட்டியில் நியூஸிக்காக படகு வலிச்ச சகோதரிகள் (Georgina and Caroline Evers-Swindell )தான் நம்பிக்கை நட்சத்திரமா எங்களுக்குத் தோன்றினார்கள். அதெல்லாம் அவ்வளோ சீக்கிரம் நம்பிக்கை இழந்துறமாட்டோம் நாங்க.

ஆரம்பத்தில் கொஞ்சம் பின் தங்குனாலும் ஆயிரம் மீட்டர் கடக்கும்போது வேகம் எடுத்தாங்க. நாங்க கத்துன கத்தல்( இதுக்கு ஊக்குவித்தல் என்று பெயர்) நெசமாவே கேட்டுச்சுபோல. 1500 மீட்டர் கடந்ததும் அருமையான வேகம். ஜெர்மனி மங்கையர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே வேகத்தில் முதலாகவே போய்க்கிட்டு இருந்தாங்க. கடைசியில் ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் ஜெயிச்சதுபோல. ஃபோட்டோ ஃபினிஷுக்காக சில நிமிசம் காத்துருந்தோம். நியூஸியுமே ஜெர்மனிதான் ஜெயிச்சாங்கன்னு நினைச்சோம்.

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..... நூத்துலே ஒன்னுன்னு சொல்றது போல ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் நியூஸி ஜெயிச்சே ஜெயிச்சுத் தங்கம் வாங்கிட்டது, இந்த ஒலிம்பிக் விழாவின் முதல் தங்கம் இது.

இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெல்டன் ஜார்ஜினா & கேரலின்.Georgina and Caroline Evers-Swindell

சொல்ல மறந்துட்டேனே..... இவுங்க ரெண்டுபேரும் ஒரே நாளில் பிறந்தவுங்க. பிறந்த ஊரும், ஆஸ்பத்திரியும்கூட ஒன்னுதான். இன்னும் சொல்லப்போனா ரெண்டு பேருக்கும் அம்மா அப்பாகூட ஒன்னு.
ரெட்டைப்பிறவிகள்:-)))))

கடைசிச் செய்தி (இப்போதைக்கு)

குண்டு எறியும் போட்டியில் நியூஸியின் Valerie Vili முதலிடம்.

வாலரிக்கு வில் பவர் அதிகம், ஜெயிச்சுட்டேம்மா.....ஜெயிச்சுட்டே.

Thursday, August 14, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: ஏழாம் நாள்.

குளியலறை ட்ராஃபிக் வழக்கத்தைவிட படு பிஸியாக் கிடக்கு. பாதி பஸ் இங்கேயே தங்கிருச்சோ........ கோபால் வேற காலையில் எழுந்து படுக்கை அறைக் கதவைத் திறக்கறதும் மூடறதும் படுக்கையில் மறுபடி வந்து விழறதும். அஞ்சாறு நிமிசத்தில் திரும்ப எழுந்து போய்க் கதவைத் திறக்கறதும்னு ரகளையா இருக்கு. பாத்ரூம் காலியா இருக்கான்னு பார்க்கறாராம்.

என்னன்னு போய்ப் பார்த்தேன். குழந்தைகள் உட்பட எல்லாரும் குளிச்சு ரெடி ஆகிக்கிட்டு இருக்காங்க. லேடீஸ் எல்லாம் எங்கே? இப்பத்தான் சமையல் வேலைகளை முடிச்சுக்கிட்டு வந்தாங்களாம். ட்ரெஸ் சேஞ்ச் நடக்குதாம். ஆண்கள் இப்பப் பாத்ரூமைப் பிடிச்சுக்கிட்டாங்க. மாடியிலும் ரெண்டு குளியலறை இருக்கு. எல்லாமே ஃபுல்.

'ராத்திரி எத்தனை மணிக்கு கல்யாண மண்டபத்தில் இருந்து கிளம்புனீங்க?' பன்னெண்டு மணி ஆயிருச்சாம். பொண்ணும் வந்துருக்குமே. மாமியார் வீட்டுலே இருக்கா? இல்லை. இங்கேதான் மாடியில் இருக்கு. அலங்காரம் நடக்குது. பத்தரைக்குப் பூஜை இருக்கு.

தடாபுடான்னு குளிச்சு ரெடியானேன். இன்னிக்குத் திங்கக்கிழமை. வேலைநாள். உள்ளூர் ஆட்கள் மட்டும் அரைநாள் வேலைக்குப் போயிருக்காங்களாம். பிள்ளைங்க யாரும் பள்ளிக்கூடம் போகலை. கோபாலும் கைத் தொலைபேசியில் மெயில் பார்க்கறதும், டொக்டொக்குன்னு பதில் அனுப்பறதுமா இருக்கார். அதை முடிச்சுட்டு, சார்ஜர்லே போட்டா.....அது வேலை செய்யலை. ஒரு கோணத்துலே புடிச்சுக்கிட்டு இருந்தாப் பச்சை விளக்கு வருது. அப்படியே சூட்கேஸ் மேலே வச்சா விளக்கு போயிருது.

லீவு எடுத்துருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே தவிர வேலை எல்லாம் நெட் மூலமா நடந்துக்கிட்டு இருக்கு. மடிக்கணினி வேற தகராறு. ஒயர்லெஸ் வேலையே செய்யலை.


இதுக்குள்ளே உடைமாத்திக்கிட்டு ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்துக்கிட்டாங்க. பொண்ணு நல்லா அழகா கைநிறைய வளையல்களும், மெஹந்தியுமா இருக்கு. மத்த லேடீஸ் முகம் கொஞ்சம் வாட்டம். உபவாசமாம். போதாதகுறைக்கு யாருமே தூங்கலையாம். ராத்திரி வந்து அலங்காரத்தையெல்லாம் கலைச்சப்பவே ரெண்டு மணியாம். மூணு மணிக்கு அடுத்த செஷனுக்கான சமையல் ஆரம்பிக்கணுமேன்னு ச்சும்மா கொஞ்சநேரம் பேசிக்கிட்டே ரெஸ்ட் எடுத்த்துதானாம். தூங்கலாமுன்னு படுத்தா ....அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போயிருச்சுன்னா?

மூணுமணிக்கு எல்லாரும் குளிச்சுட்டு, மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருக்காங்க. எதிர் தெருதான். ரெண்டு நிமிச நடையிலே போயிறலாம். ஆனாலும் கார்லேதான் போக்குவரத்து. இன்னிக்கு மா(த்)தா பூஜை. அதுக்காக ரொம்ப விசேஷமான சமையல். போளி செஞ்சுருக்காங்க. ஒம்போது வகையான கறிகள். நம்முர் ஆப்பம் போல ஒன்னு. போண்டா, சக்கரைப்பொங்கல் மாதிரி ஒன்னு, அப்புறம் வழக்கமான ரொட்லி, தால், பப்படம் இப்படி. இன்னும்கூட என்னவோ இருந்துச்சு. இப்ப நினைவுக்கு வரலை(-:

பத்தரைக்கு அங்கே ஆஜரானோம். நம்ம பக்கத்துலே தலைவலிக்குப் பத்துப் போட்டுக்குவாங்க பாருங்க அப்படி அந்த வேசத்தில் நெத்தியில் சிகப்பாக் குங்குமத்துலே பத்துப் போட்டுக்கிட்டு சில பெண்கள் உக்காந்துருந்தாங்க. உபவாசமிருக்கும் 'ஒன்பது' பேருக்கும் இப்படிப் 'பத்து.'

பூஜை செய்யும் இடத்தில் சுவத்துலே ஒரு வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) வச்சு அதுலே நாலு மூலையிலும் ரெண்டு ஜோடி குங்குமத்தில், ரெண்டு ஜோடி மஞ்சளில் தோய்ச்செடுத்த உள்ளங்கைகள் பதிஞ்சு இருக்கு. நடுவில் கோலம் வரைஞ்சு அதில் ஒரு கார்ட்டூன் சித்திரம் கைகோர்த்துக்கிட்டு இருப்பதுபோல். கீழே தரையில் நாலுநாள் முன்னே வரைஞ்சு வச்ச எட்டுப் பானைகள். ரெவ்வெண்டா நாலு வரிசை. ரெண்டு பக்கத்திலும் மும்மூணா இன்னொரு செட் பானைகள், பிரிமணை மேலே உக்கார்ந்துருக்கு. தலையில் ஒவ்வொன்னுக்கும் குடுமியோடு ஒரு தேங்காய்.(நியூஸியில் மொட்டைத் தேங்காய்தான் கிடைக்கும்)

அதுக்கு முன்னால் மணை போட்டு நடுவில் புள்ளையார், விளக்கு தேங்காய், பழம், பூக்கள். என்னைக் கவர்ந்தது என்னவோ அதுக்கும் கீழே ஒரு பலகையில் இருந்த ரெண்டு கருப்பு உருவங்களும், ரெண்டு கூடைகளில் விதைச்சு, முளைச்சிருந்த தானியங்களும்.


சரிதான். இது நம்ம பக்கத்து முளைப்பாரி! அப்ப அந்த உருவம்? கூர்ந்து பார்த்தால் எதோ மிருகத்தின்மேல் சவாரி செய்யும் தொப்பி வச்ச மனிதன். 'வழக்கம்போல்' நான் கேட்ட கேள்விக்கு 'வழக்கத்துக்கு மாறா'ப் பதில் வந்தது. 'குதிரையும் அதன்மேல் சவாரி செய்யும் மா(த்)தாவும். குதிரையின் ரெண்டு பக்கமும் கடிவாளம், மா(த்)தாவின் கையில் இணைந்திருக்கு, நல்லாப் பார்'

ஓஹோ..... குதிரை வாகனமா?

இன்னிக்குக் குலதெய்வத்தைப் பூஜிக்கும் நாளாம். குலம் விளங்கணுமுல்லே?
ஒன்பது தாம்பாளத்தில், போளி & இன்னபிற நைவேத்தியங்களைப் படைச்சாங்க. நடுவில் ஒரு அகலில் நெய்விளக்கு. பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாமி கும்பிட்டாங்க. ஒரு ரிப்பன் வச்சு ரெண்டுபேருக்கும் கனெக்ஷன் கொடுத்துருந்துச்சு:-)

அந்த ஒன்பது தேவியருக்கும் கழுத்தில் பூமாலை போட்டு உக்கார்த்தி வச்சாங்க. அவுங்களையும் விழுந்து கும்பிட்டுட்டு, மனி மாமி தலைமையில் எல்லோருமாச் சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து முடிச்சதும், அந்த ஒன்பது பேருக்கும் ஆளுக்கொரு தட்டா வச்சுச் சாப்பாடு பரிமாறினாங்க. நவதேவியர் வந்து சாப்பிட்டுப் போனதா ஐதீகமாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குலதெய்வம், பூஜை முறைகள் எல்லாம் வெவ்வேறாம். நம்ம கல்யாண வீட்டுக்காரர்களுடைய குல தெய்வம் சாமுண்டீஸ்வரி. எந்த சாமுண்டி? சாக்ஷாத் நம்ம மைசூர் சாமுண்டி ஹில்ஸ் சாமிதாங்க. அட!!!!எப்படி இப்படின்னு கொஞ்சம் ஆராய்ஞ்சதுலே(?????எல்லாம் இவுங்க சர் நேமை வச்சுத்தான்) இவுங்க க்ஷத்ரியர்களில் அக்னிவம்சப் பிரிவு (Clan agnuvanshi) பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்கள் வழிவந்த வம்சமாம். (அடக் கடவுளே! அப்ப இது ராசா வூட்டுக் கலியாணமா?) இவுங்களோட தேசம்தான் இப்பக் கர்நாடகா மாநிலம். இதெல்லாம் இவுங்களுக்கே தெரியுமான்னு தெரியலை:-))))

மெல்லமெல்லத் தென்னாட்டுக்காரரா ஆகி இருக்காங்களோ? இருக்கட்டும். நமக்கும் நல்லாத்தானே இருக்கு:-)

சாப்பாடு ஆனதும் அரைமணி கூட ஓய்வெடுக்காமல் மாலையில் நடக்கப்போகும் ரிஸெப்ஷனுக்கு ஒரு புதுவிதமான பூரி செய்ய ஆரம்பிச்சாங்க. ஈஸ்ட், சீரகம், எண்ணெய் எல்லாம் போட்டுப் பிசைஞ்ச மாவில் பூரி. ஆனா மெயின் அயிட்டம் சமைக்கப்போவது ஆண்கள்தானாம்.



ஆத்துலே போட்டாலும் இப்படித்தான் அளந்து போடணும்:-))))

Goat Meat கறிக் குழம்பு. பதினோரு ஆடுகளைப் பொலி போட்டு எல்லாம் தயாரா வச்சுருக்காங்களாம். ஆஹா.... 44 கால்கள். அப்ப இதுதானா விஷயம், ஒரு நாள் வீட்டுவிருந்தில் பாயா செஞ்சு விளம்பியதுக்கு!! இன்னிக்கு 600 பேருக்கான சமையல். கத்ரி ஹாலில் வச்சே சமைச்சுருவாங்களாம். ரெண்டு மணிக்கு ஆரம்பம் ஆண்கள் ஒன்லி சமையல். 'இன்றைக்குச் சமையல் செய்யப்போவதால் அரைநாள் விடுப்பு தரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்' :-) அரைநாள் மட்டும் வேலைக்குப்போய் வரும் காரணம் இதுதானா? இன்னிக்கு அவுங்க சமூகம் மட்டுமில்லாமல், உள்ளூரில் இந்தக் கல்யாணத்துக்கு அழைப்புவச்சுக் கூப்புட்டவங்க எல்லாரும் வரப்போறாங்க. பொண்ணு வீட்டு சைடுலே இருந்தும் நெருங்கிய சொந்தம் வருவாங்களாம்.

கோபாலையும் சமைக்க அனுப்பலாமுன்னா........ கம்பெனிக்குப்போய் நெட் கனெக்ஷன் எடுத்து சிலவேலைகளை முடிக்கணுமாம். எனக்கும்தான் கொஞ்சம் தபால் பார்க்கணும். போற வழியில் வீடியோக் கடைக்குப்போய் பழைய படங்களாப் பார்த்து கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். அஞ்சு டிவிடி வாங்குனா ஒன்னு இலவசமாம். 15 வாங்குனதுக்கு 3. இன்னொண்ணும் தாங்க. உங்களுக்கு இலவச விளம்பரம் நியூஸியில் போட்டுக்கலாம். இவருக்கு துணிகளைப் பொட்டிப்போடும்போது 'பார்க்க' பாட்டுகள் வேணும்தானே?
ராஜேஷ் கன்னாவின் பல படங்கள். மெட்ராஸில் இந்தி சினிமாவுக்கு மக்களைப் பழக்குனதில் ஆராதனாவுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கே!!! நூதன் & அமிதாபின் ,
'சௌதாகர்' கூட வாங்குனோம்.


சாயங்கால வரவேற்பு, ' இண்டோ இங்லீஷ் ஸ்டைல்'. ஹால் வாசலில் மாப்பிள்ளையின் பெற்றோர் புது மணத் தம்பதியருடன் நின்னு வர்றவங்களை வரவேற்றுக்கிட்டு இருக்காங்க. அப்பவே அறிமுகமும் ஆயிருது. உள்ளே லைவ் ம்யூஸிக். பிஜியன்கள் ரெண்டு பேர், கீ போர்டும், ப்ளூட்டும் வாசிக்க, எலக்ட்ரானிக் ட்ரம்ஸ் சகிதம் ஒரு ஜோடி, ஹிந்திப் பாட்டுக்களைப் பொளந்து கட்டுராங்க.



மாப்பிள்ளையின் அப்பா, இங்கே இறக்குமதி செஞ்சு வித்துக்கிட்டு இருக்கும் மின்விளக்கு அலங்காரங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஆரம்பிச்சு உள்ளே எங்கே பார்த்தாலும் ஜொலிக்குது. இது ஒரு விளம்பரமாவும் ஆகி இருக்கு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-)))) என்ன ஒன்னு..... எல்லாம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள். வியாபாரம் பெருகினால் தீபாவளிக்குன்னே அலங்காரங்களை ஆர்டர் செஞ்சு விக்கலாம். இங்கே தீபாவளி சமயம் அநேகமாக எல்லா வீடுகளிலும் (இதில் மத வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை) மின்விளக்கு ஜோடனைகள் இருக்கும்.

நாங்கள் உக்கார்ந்திருந்த முன்பகுதிக்கு மெதுவா ஆடி அசைந்து நடந்துவந்த ஃபிஜியன் பெண்ணின் கையில் ஏதோ தீனி உள்ள தட்டு. அட! பஜ்ஜி. முதல் ரெண்டு வரிசைக்கு மட்டுமே கிடைச்சது. (நாங்க ஏழாவது வரிசைப்பா) திரும்பிப்போய் இன்னொரு முறை அதே மாதிரி ஆட்டி அசைஞ்சு கொண்டுவந்ததும் முன்னிரு வரிசைகளே வழிமறிச்சுக் கொள்ளையடிச்சுட்டாங்க. இதேபோல நாலைஞ்சுமுறை வழிப்பறி:-)
மூணாம்வரிசையில் ஆரம்பிச்சு எல்லாரும் முழிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கோம்.

கோபால் எழுந்துபோய் எதாவது 'ஜூஸ்' கொண்டுவரேன்னு சொல்லிட்டுப்போனவர், உடனே திரும்பிவந்து என்னையும் கூடவேக் கூட்டிட்டுப்போனார். மண்டபத்தின் முன் பகுதியிலேயே 'பார் பார் ன்னு பார்'ட். இன்னும் நான் சந்திக்க வேண்டிய நண்பர்கள் கூட்டம்
பாரில் மொய்ச்சுக்கிட்டு இருக்காம். அங்கே தட்டுத்தட்டாய் மிளகாய், வெங்காயம் , உருளைன்னு விதவிதமாய்ப் பஜ்ஜிகளும், வாளு என்று சொல்லும் மீன் வறுவலும் ஏந்திய ஸுலுசாம்பா( தேசிய உடை) அணிந்த ஃபிஜிமங்கையர் விறுவிறுப்பாகக் கூட்டத்தின் இடையில் புகுந்து வர்றாங்க. 'குடி'மக்களின் தேவைகளைப் 'பார்'த்துப் 'பார்'த்துக் கவனிப்பு நடக்குது. பாவம் உள்ளே உக்கார்ந்திருக்கும் மக்கள். செவிக்கு மட்டுமே உணவு. ( நான் திரும்ப உள்ளே போகவில்லை)


ஸ்நாக்ஸ்க்கு மட்டும் தனியாக ஒருத்தருக்கு கேட்டரிங் செய்ய விட்டுருக்காங்க. அந்தக் கம்பெனி, வெளி வெராந்தாவில் ரெண்டு கேஸ் அடுப்பு வச்சு ஒரு கடாயில் பஜ்ஜியும், இன்னொன்னில் மீன் வறுவலும் செஞ்சு அனுப்பிக்கிட்டு இருக்காங்க. ஏழுமணிக்கு ஆரம்பிச்சதுக்கு, ஊஹூம்....வேகம் பத்தாது.

எட்டுமணியானதும் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். மெயின் ஆக்டர்ஸ் வந்து மேடையை அலங்கரிச்சதும், வரவேற்பு உரை, வாழ்த்துரை ஆச்சு. புதியவர்களுக்காக..... மணமகனின் வாழ்க்கைச் சரித்திரம் !!இது ஒரு (வகையான) காதல் திருமண(மா)ம். ரெண்டரை வருசத்துக்கு முன்னே இப்படி ஒரு கல்யாண விழாவில் சந்திச்சு, இமெயிலில் வளர்ந்து இப்போ அறுவடை! கையைத் தட்டோதட்டுன்னு தட்டுனோம். சத்தம் சரியாவரலை....எண்ணெய்ப்பிசுக்கு:-) போகட்டும், ஒரே சமூகமா இருந்ததால் பிரச்சனை இல்லாம எல்லாமே நல்லபடி முடிஞ்சது.

கேக் வெட்டினாங்க. புதுமணத்தம்பதிகளுக்காக ஆர்க்கெஸ்ட்ரா பாடுன பாட்டுக்கு ஒரு சின்ன நடனம்.(கபி கபி மேரே தில் மே கயாலு ஆதா ஹை!!!

ஆஹா.... அன்று வந்ததும் இதே நிலா.....ச்சச்சச்சா.....




கீழ்தளத்தில் சாப்பாடு ஆரம்பிச்சது. ஊரே கூடிக் கொண்டாடியாச்சு.

மணமக்கள் நல்லா இருக்கணும். மனமார்ந்த ஆசிகள்.

இன்னியோடு கல்யாணக் கொண்டாட்டங்கள் நெசமாவே முடிஞ்சது.

(அப்டீன்னா நினைக்கிறீங்க?)