Friday, October 17, 2008

அண்ணனின் நண்பர்!

அண்ணனுக்கு 'திக் ·ப்ரெண்ட்ஸ்' கிடைச்சுட்டாங்க!. அவுங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க!


பழனிச்சாமி அண்ணன், நாராயணன் அண்ணன் இவுங்கதான் அவுங்க! இதுலே பழனிச்சாமி அண்ணன் அந்த ஊரு பண்ணையார் வீட்டுலே ஒரே மகன். அவுங்க குடும்பத்துலேயே பெரிய படிப்பு(!) படிக்கற ஒரே ஆள்.
அவருக்கு ஒரு மொறைப்பொண்ணுகூட ரெடியா இருக்கு. ஆனா, அந்த அண்ணன் சொல்லிருச்சாம், படிப்பு முடிஞ்சாவுட்டுத்தான் கல்யாணம்னு!

அவுங்களுக்கு நிறைய நிலபுலன்கள் இருக்குல்லே, அங்கெல்லாம் நாங்க போய் விளையாடிக்கிட்டு இருப்போம். ஞாயித்துக் கிழமைங்களிலே வண்டிகட்டிகிட்டு வந்துட்டாருன்னா, நாங்க தென்னந்தோப்புக்குப் போறோம்னு
அர்த்தம்! வாடகை சைக்கிள் எடுத்துகிட்டுப் போணும்னு எங்க அண்ணன் நினைக்கும். ஆனா நாராயணன் அண்ணனுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது!

மொதல்லே அவுங்க கூட்டத்துலே என்னச் சேத்துக்கலே. நானு சும்மா இருக்கற ஆளா? அழுது, ஆகாத்தியம் பண்ணி, அம்மாவோட சிபாரிசுக்கு வழிசெஞ்சு, காரியத்தைச் சாதிச்சுகிட்டேன். அந்த அண்ணனே என் கண்ணீரை(!)பாத்துட்டு, 'சும்மா இருப்பா, தங்கச்சி வரட்டும்.நம்ம வீட்டுலேயும் அங்கே எவ்வளவு சின்னப்
புள்ளீங்க இருக்காங்க, அவங்களோட விளையாடட்டும். எங்க வீட்டுக்கெல்லாம் அனுப்ப மாட்டீங்களாம்மா'ன்னு அம்மாகிட்டே கேட்டார்.

அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு,பழனிச்சாமி அண்ணனோட அப்பா சிபாரிசு செஞ்சதாலெயும், நாங்கெல்லாம் கெஞ்சிக் கூத்தாடுனதாலேயும்,
ஒரு வருஷம், சின்ன கரும்புக் காடு குத்தகைக்கு அம்மா எடுத்ததும், நானும் அண்ணனும் எங்க 'க்ளாஸ்' பசங்களை எல்லாம் கூட்டிகிட்டுப் போய் ,(அப்ப வெல்லம் காச்சற சமயம் வேற!) எல்லாத்தையும் தின்னே தீர்த்ததும் தனிக் கதை!
அந்த வெல்லப் பாகுதான்,தினம் இட்டிலி, தோசைக்குத் தொட்டுக்கறது. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கும்!


நம்ம நாராயணன் அண்ணனை மொத மொதல்லே பார்த்தப்ப, யாரோ பெரியவரு, அண்ணன்கிட்டே ஏதோ பேசிக்கிட்டு இருக்காருன்னு நினைச்சேன். அந்த அண்ணனுக்கு தலைமுடிலெ நிறைய நரை இருந்துச்சு. கால்லேயும்
செருப்பெல்லாம் இல்லே. அவரு போட்டுகிட்டுருந்த சட்டையும், வேட்டியுமே பழசா, நிறம் மங்கி இருந்துச்சு. ஆங்.. சொல்ல மறந்துட்டேனே, அந்த ஊர்லெ ஹைஸ்கூல்லே பெரிய க்ளாஸ் படிக்கிற அண்ணனுங்க
எல்லோரும் வேட்டிதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.அதனாலே நம்ம அண்ணன்கூட வேட்டிதான் கட்ட ஆரம்பிச்சிருந்தார். ரொம்ப 'ஸ்டைலா' தரையக் கூட்டற மாதிரி கட்டிக்கிட்டு இருப்பாரா, அம்மா பார்த்தா திட்டுவாங்க!

நாராயணன் அண்ணனுக்குக் கோயில் இருக்குன்னு அண்ணன் சொன்னாரு! ஒரு நாளு அம்மாகிட்டே அண்ணன் சொல்லிகிட்டு இருந்தப்ப நான் அங்கெதான் இருந்தேன். 'அந்த அண்ணனுக்கு அப்பா இறந்துட்டாராம். அவுங்க வீட்டுலே மொத்தம் ஆறு பசங்களாம். நாராயணன் அண்ணந்தான் எல்லாத்துக்கும் மூத்ததாம். அப்புறம் நாலு பொண்ணுங்களாம். கடைசியா ஒரு தம்பி இருக்கானாம். இன்னும் அஞ்சு வயசு ஆகலையாம். இந்த அண்ணன் படிச்சுமுடிச்சுத்தான் வீட்டைக் காப்பாத்தணுமாம்.

அவுங்க அப்பாதான் நம்ம பெருமாள் கோயில்லே பட்டராம். இன்னும் மூணு பட்டருங்க இருக்காங்களாம். இவுங்கல்லாம் முறை போட்டுகிட்டு
கோயில் பூஜை செய்வாங்களாம். இப்ப அப்பா இல்லாததாலே நாராயணன் அண்ணன் அவுங்க முறைக்கு கோயில் பாத்துக்கணுமாம்.' அந்த அண்ணன் நல்லாப் படிக்குமாம். அவுங்க வீடு அக்ரஹாரத்துலே இருக்காம்.

'அக்ரஹாரத்துலே எங்கண்ணே அவுங்க வீடு'ன்னு நான் கேட்டதுக்கு, நம்ம வைத்தி வீட்டுக்கு நாலாவது வீடுன்னு அண்ணன் சொன்னாரு.

நாலாவது வீடா...ம்ம்ம்ம்ம்ம்ம்

"ஒரு தாத்தா, திண்ணையிலே ஈஸிச்சேர்லே உக்காந்து, எப்பப்பாத்தாலும் பேப்பர் படிச்சுகிட்டு இருப்பாரே அந்த வீடா?"

" அது இல்லெ. 'நரசுஸ் காபி'க்கு எதிர் வீடு"

"ஓ, அப்ப அது வைத்தி வீட்டுக்கு இந்தப்பக்கம் நாலாவது வீடா?"

ஆனா, அந்த வீடு எப்பப் பாத்தாலும் மூடியே இருக்குமே! அக்ரஹாரத்துக்குள்ளே நேராப் போனாக் கடைசியிலே ஒரு கோயில் வரும்.
அது சிவன் கோயில். நாங்கெல்லாம் கோயிலுக்குப் போறபோது, ரெண்டுபக்கமும் இருக்கற வீடுங்களைப் பாத்துகிட்டே போவோம்.
அக்ரஹாரத்துலே எல்லா வீடுங்களும் ஒரேமாதிரி இருக்கும்.ரெண்டுபக்கமும் திண்ணை! வாசக்கதவுலே நின்னு பாத்தா, நேஏஏஏஏஏரா
பின்னாலெ இருக்கற கிணறு வரைக்கும் தெரியும்.

'நரசுஸ் காபி இங்கே கிடைக்கும்'னு போர்டு மாட்டியிருப்பாங்க! கொஞ்சநாளாதான் இந்த போர்டு இருக்கு. இதுக்கு முன்னாலெ,
நாங்க பச்சைக் காபிக்கொட்டை மதுரையிலே இருந்து வாங்கறது வழக்கம். வீட்டுலேயே அதை வறுத்து, ஆட்டுக்கல்லுலே இடிச்சுத்
தூளாக்கி காபி போடுவாங்க. அம்மாக்கு காபி நல்லா இருக்கணும். சில சமயம் சாப்பிட நேரம் இல்லைன்னு, வீட்டுக்குவந்து ஒரு காபி குடிச்சுட்டு அவசரமா ஓடுவாங்க!

'நரசுஸ் காபி' வந்த பிறகு, நாங்க அங்கேயே வாங்க ஆரம்பிச்சுட்டோம். அஞ்சாறு நாளைக்கு ஒருதடவை நான் போய்,ஒரு பவுண்டு காப்பித்தூள் வாங்கிகிட்டு வருவேன். எத்தனை நாளு போயிருக்கேன், திண்ணை மேலே ஏறிக் குதிச்சு விளையாடியிருக்கேன்? ஒரு நாளு கூட எதுத்த வீட்டுலே யாரையும் பாத்த ஞாபகம் இல்லையே!

அடுத்த தடவை, காப்பித்தூள் வாங்கப் போனப்ப, எதுத்த வீட்டுக் கதவை தட்டுனேன். யாரும் இல்லை! ஒருநாளு, நாராயணன் அண்ணன்
அவரோட தம்பியைக் கூட்டிகிட்டு வந்திருந்தார். அவன் பேரு கிச்சா. கிருஷ்ணனைதான் அவன் கிச்சான்னு சொன்னானாம்.

அப்பப்ப மூணு அண்ணனுங்களும் எங்க வீட்டுலேயே படிச்சுகிட்டு இருப்பாங்க. எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், ஒரு ஹால் இருக்கு.அங்கெ இருக்கற அலமாரியிலேதான் என் புஸ்தகமெல்லாம் வச்சுருக்கேன். அதுக்கு இடது பக்கமா ஒரு பெரிய ரூம் இருக்கு. அதுதான் அண்ணனோடது. இவுங்கெல்லாம் அந்த ரூமோடு சரி. உள்ளேயெல்லாம் வரமாட்டாங்க.

இவ்வளோ நாளா இவுங்களையெல்லாம் பாத்து பாத்து எங்க வீட்டுலே எல்லாருக்கும் பழகிடுச்சு. அம்மா அவுங்களைப் பாத்தா எப்பவும்
ரெண்டு வார்த்தை பேசாம இருக்கமாட்டாங்க. என்ன படிக்கிறிங்களா? சாப்பாடு ஆச்சான்னு ஏதாவது கேப்பாங்க! நாந்தான், என்ன
சாப்டீங்க? என்ன குழம்புன்னு பெரிய மனுஷியாட்டம் கேட்டுக்கிட்டு இருப்பேன்.

பழனிச்சாமி அண்ணன், கோழிக்குழம்பு, மீன் குழம்புன்னு ஏதாவது சொல்லும். அப்ப நாராயணன் அண்ணன் மூஞ்சைப் பாக்கணும். கண்ணை ஒருமாதிரி மூடிகிட்டு, ரெண்டு கையாலேயும் காதை பொத்திக்கும். எங்களுக்கெல்லாம் சிரிப்பா வரும்! எங்க அண்ணன் 'ஆமாண்டா, நீ அதெல்லாம் சாப்புடமாட்டேல்ல.சரி. நீ என்னடா இன்னைக்கு சாப்பிட்டே'ன்னு கேக்கும். அதுக்கு நாராயணன் அண்ணன் 'பொரிச்ச கூட்டு, வெண்டைக்கா கறி'ன்னு ஏதாவது சொல்லுமா, இவுங்க இன்னும் சத்தம் போட்டுச் சிரிப்பாங்க! 'ஏண்டா, நீ 'கறி'யெல்லாம் திங்கறியா?'ன்னு கேப்பாங்க. ஐய்யய்யோ.. இது வேற கறி. நீங்க நினைக்கற கறி இல்லே'ன்னுவாரு. கறின்னா ஆட்டுக்கறி இல்லேயாம்!

நாராயணன் அண்ணனுக்கு கோயில் 'டூட்டி' இருக்கறப்ப, சாயந்திரமா மத்த ரெண்டுபேரும் போய் அங்கே வெளி மண்டபத்துலே உக்காந்துகிட்டு ஏதாவது பேசிகிட்டோ,படிச்சுக்கிட்டோ இருப்பாங்களாம்.

கோயிலை ஒட்டி ஆறு ஓடுதுல்லே, அதனாலே காத்து ஜிலு ஜிலுன்னு வரும்னு அண்ணன் சொல்வார்.கோயிலுக்கு அப்படி யாரும் ரொம்ப வர்றது இல்லேன்னும் சொன்னாரு. ரெண்டு மூணு பேருவந்தாலே ஜாஸ்தியாம்! நான்கூட எப்பவாவது அண்ணன்கூடப் போவேன்.

பெரிய பரிட்சை வருதுன்னு சொன்னாங்க. மூணுபேரும் ராத்திரி ரொம்ப நேரம் இருந்து படிச்சாங்க. சிலநாளு, ஸ்கூல்லேருந்து அப்படியே வீட்டுக்கு வந்துட்டு, படிச்சுகிட்டு இருப்பாங்க. ஒருநா, கிச்சா, அவனோட அண்ணனைக் கூப்பிட வந்தான். நான் அவனை உள்ளே கூட்டிட்டுப் போய் அக்காங்ககிட்டேக் காமிச்சேன்.

அவன் என்னை மாதிரி! புது ஆளுங்கன்ற பயமில்லாம நல்லாப் பேசுனான். 'நாணாவைக் கூப்புட வந்தேன்'னு சொன்னான்.நாராயணன்
அண்ணனுக்கு வீட்டுலே நாணான்னு பேராம்! கொஞ்சநேரம் அவன்கிட்டே நாங்கெல்லாம், அவுங்க அக்காங்க பேரெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தோம்.

"ஏண்டா உங்க வீடு எப்பப் பாத்தாலும் மூடியிருக்கு?"

" ஆத்துள்ளே காரியமா இருப்போம்"

" உங்க அக்காங்க எத்தனாவது படிக்கிறாங்க?"

" அவா, படிக்கலே. ஒத்தாசை செய்யறா. அம்மாவும் ஒத்தாசை செய்யறா."

அக்கா என்னைப் பாத்து, உதட்டுக்குமேலே விரலை வச்சு, 'ஒண்ணும் கேக்காதெ'ன்னு ஜாடை காமிச்சாங்க. நானு அதையெல்லாம் கண்டுக்கற ஆளா?

" சாப்பாடு ஆச்சா? என்ன சாப்பிட்டே?"

அக்காங்களுக்கு 'கறி' ஜோக்கைக் காட்டலாம்னு கேட்டேன்.

" மோருஞ்சா,கொள்ளுத்தொகையல்"

" அதில்லைடா, என்ன குழம்பு, என்ன கறி?" எனக்கு சிரிப்பு வந்துகிட்டே இருக்கு.

" குழம்பு கறியெல்லாம் கிடையாது. எங்காத்துலே எப்பவும் மோருஞ்சா, கொள்ளுத்தொகையல்தான்"

" போடா, தினம் இதுதானா? நேத்து என்னடா குழம்பு?"

" நேத்தைக்கும் இதான்."

பெரியக்கா, அவனைக் கையைப் பிடிச்சு, அண்ணன் ரூமுக்குக் கொண்டுபோய் விட்டுட்டாங்க.

"நாணா, நம்மாத்துலே நேத்தைக்கும் மோருஞ்சாம், கொள்ளுத்தொகையல்தானெடா"

நாராயணன் அண்ணன் தலையை மட்டும் ஆட்டிட்டு, கிச்சாவோட போயிட்டார்.

எனக்கு ஒரே திட்டு. அம்மா வந்ததும், அழுதுகிட்டே சொன்னேன். அக்காங்களும் நடந்ததையெல்லாம் சொன்னாங்களா, அம்மாவும் என்னைத் திட்டுனாங்க! 'ரொம்ப வாய்க்கொழுப்பு'ன்னாங்க!

மறுநாளு ஏதோ விசேஷம்னு எங்க வீட்டுலே வடை, பாயசம்ன்னு செஞ்சாங்க. அம்மா, எல்லா அண்ணன்களையும் நம்ம வீட்டுலேயே சாப்பிடச் சொன்னாங்க. பழனிச்சாமி அண்ணன் ஒண்ணும் சொல்லாம சாப்பிடவந்து உக்காந்துட்டார்.
நாராயணன் அண்ணன் மட்டும் வேணாம், வேணாம்னு சொல்லிகிட்டே இருந்தாரு.

அம்மா ' இன்னிக்கு நல்ல நாளுப்பா. நாங்க சுத்தமாதான் சமைச்சிருக்கோம். வாப்பா சாப்பிட'ன்னு சொன்னாங்க.

தயங்கித் தயங்கி உள்ளே வந்தாரு. உள் ஹாலைத் தாண்டி வரப்போ அங்கே மாட்டியிருந்த எங்க தாத்தாவோட ·போட்டோவைப் பாத்ததும், 'நீங்க பாதம் வச்சா நாமம் போடுவேள்'ன்னு கேட்டாரு.

'ஆமாம்'ன்னு அம்மா சொன்னதுக்கு, அவுங்க 'பாதம் வைக்காம நாமம்' போடுவாங்களாம். 'நியாயமா உங்காத்துலே நாங்க சாப்பிடக் கூடாது'ன்னார்.

அதுக்கு அண்ணன்,'ஒய் நாமம், யு நாமம் எல்லாம் நாமம்தாண்டா. அது பரவாயில்லே'ன்னு சொன்னதும் நாங்க எல்லாம் சிரிச்சோம்.

ரொம்பக் கூச்சத்தோட, தயங்கித் தயங்கி சாப்பிட்டார். 'இதை உங்க வீடா நினைச்சுகோப்பா'ன்னு அம்மா சொன்னாங்க.

மறுநாளு, அம்மா அண்ணன் கிட்டே,' இனிமே நம்ம வீட்டுக்கு வந்தவுடனே ஏதாவது சாப்பிடக் குடுப்பா. பரிட்சை வேற வருது. படிக்கறதுக்கு பலம் வேணாமா?'ன்னு சொன்னாங்க.

பரிட்சை நெருங்க நெருங்க, ராத்திரியெல்லாம் படிச்சாங்க. எங்க வீட்டு மொட்டை மாடியிலேயே படுத்துக்குட்டாங்க.

ஒருவழியாப் பரிட்சை முடிஞ்சது. அந்தப் பரிட்சை நடந்தப்ப, சின்ன க்ளாஸுங்களுக்கெல்லாம் ஒரு வாரம் லீவு. ஜாலியா இருந்தோம்.
வீட்டுலெதான், 'உங்களுக்கும் முழுப்பரீட்சை வருது. மரியாதையா உக்காந்து படிங்க'ன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க!

எங்க பரிட்சையும் வந்து போச்சு! லீவும் விட்டாச்சு!

ஒருநாளு, அண்ணனுங்க 'ரிஸல்ட்' பேப்பருலே வருதுன்னு ஒரே பேச்சா இருந்துச்சு. பேப்பர் வீட்டுக்கு தினம் காலையிலெ வரும்லெ.
அதுக்குக்கூடக் காத்திருக்காம நம்ம அண்ணன் காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் எந்திருச்சு, 'பஸ் ஸ்டாண்டு' கடைக்குப் போனார்.
வர்றப்ப அவரு மூஞ்சு ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு அக்கா, அப்புறம் சொல்லுச்சு. கொஞ்ச நேரத்துலே பழனிச்சாமி அண்ணன் சைக்கிள்
எடுத்துகிட்டு, நம்ம வீட்டுக்கு வந்துச்சு. எல்லாம் அம்மாகிட்டே ரொம்பக் கவலையாப் பேசிகிட்டு இருந்தாங்க.

நம்ம அண்ணனும், பழனிச்சாமி அண்ணனும் 'பாஸ்' ஆயிட்டாங்க. ஆனா நம்ம நாராயணன் அண்ணன் ஃபெயிலாம்!

உடனே, ரெண்டு அண்ணனுங்களும் அதே சைக்கிள்ளே நாராயணன் அண்ணன் வீட்டுக்கு, முதல்தடவையாப் போனாங்க.

அப்புறம் அவரை, நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. அம்மா, பக்கத்துலே உக்காந்து, நல்ல வார்த்தைங்கல்லாம் சொன்னாங்க. 'செப்டம்பர்லே எழுதிரலாம்'ன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அந்த அண்ணன் ரொம்ப அழுதுச்சு. அதைப் பாத்து எனக்குக்கூட அழுகையா வந்துச்சு.

அண்ணனுக்காக, மொதநா செஞ்சு வச்சிருந்த மைசூர்பாக்கைக் கூட யாரும் வெளியே கொண்டுவரலே.

மறுநாளு, காலேல, நம்ம வைத்தி ஓடிவந்தான் நம்ம வீட்டுக்கு,'நாராயணன் அண்ணன் தூக்கு போட்டுக்கிட்டாராம்'

அம்மாவும் அண்ணனும் அலறி அடிச்சுகிட்டு ஓடுனாங்க. அதுக்குள்ளெ எல்லாம் அடங்கிடுச்சாம்.

அம்மாதான்'போஸ்ட் மார்ட்டம்' செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தாசில்தாருகிட்டே பேசுனாங்க. அக்ரஹாரம்ன்றபடியாலே
கொஞ்ச நேரத்துலேயே சாவு எடுத்துட்டாங்க. பழனிச்சாமி அண்ணன் கத்திக் கத்தி அழுதாரு.

ஒரு வாரம் கழிச்சு, 'எஸ்.எஸ்.எல்.சி புக்' வாங்கறதுக்கு ரெண்டு அண்ணன்களும் போனாங்க. நம்ம அண்ணன் முகமெல்லாம் சிவந்து போய், ஓடிவந்தாரு. நாராயணன் அண்ணனோட 'புக்'கைப் பாத்தாராம். அவருதான் 'ஸ்கூல் செகண்ட் மார்க்காம்!'

அவரோட நம்பர் 'ப்ரிண்ட்லே' விட்டுப் போச்சாம். மறுநாளு பேப்பர்லெ 'பிழை திருத்தம்'னு போட்டிருந்தாங்களாம்!

நன்றி: திண்ணை. 30/9/2004 இது 'பிழை திருத்தம்' என்றபெயரில் வெளிவந்தது. தலைப்பு உதவி ஜெயந்தி சங்கர்.

என் குறிப்பு:

காலவெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போன நாங்க மதராஸில் ( அப்ப அதுதான் சென்னையின் பெயர்) கரை ஒதுங்கினோம். அண்ணன் ஒரு தொழிற்சாலையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தார். அம்மாவும் இறந்துட்டாங்க. நான் ஹாஸ்டலில் தங்கிப் படிச்சுக்கிட்டு இருந்தேன்.சம்பவம் நடந்த சமயம் பெரிய லீவுக்கு வந்துருந்தேன். பல வருடங்களுக்குப் பின், வேலை சம்பந்தப்பட்ட கடிதம் ஒன்னை ஒரு ஊரில் இருந்த வாடிக்கையாளருக்கு அனுப்புனாராம் அண்ணன். முகவரியில் கையால் எழுதி இருந்த (அண்ணன் கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும்) எழுத்துக்களைக் கவனித்த அந்த ஊரில் தபால் அலுவலகத்தில் இருந்த ஒருவர், அதில் இருந்த அனுப்புனர் முகவரியில் அண்ணனின் பெயரைச் சேர்த்து ஒரு கடிதம் அனுப்பினார்.

' இந்தக் கடிதம் அனுப்பியவர் பெயர் ***** இதுதான் என்றால், உடனே பதில் கடிதம் ஒரு வரி அனுப்ப வேண்டுகின்றேன். நான் அவருடையப் பள்ளித் தோழன் பழனிச்சாமி.'

அன்னிக்கு வேலையில் இருந்து வந்தப்ப, அண்ணனின் முகத்தில் கோடிச் சூரியனின் ஒளி. உடனே அது நாந்தான் நாந்தான்னு கடிதம் அனுப்பிட்டாராம். இப்படியாக மறுபடி அந்த நட்புக்கு உயிர்வந்துருச்சு.
நம்ம பழனிச்சாமி அண்ணனேதான். அவருக்கு ரெண்டு பசங்களாம். மூத்தவனுக்கு அண்ணன் பெயரையும், இளையவனுக்கு நாராயணன் அண்ணன் பெயரையும் வச்சுருக்காராம்.

35 comments:

said...

super friendship:):):)

said...

அச்சச்சோ, இது நிஜத்திலயும் நடந்ததா? ரொம்ப வருத்தமா இருக்கு:(:(:(

said...

பாதம் வெச்சு நாமம் போடறதுன்னா எப்படி இருக்கும்?

said...

ம்..

said...

;(

போங்க டீச்சர் நீங்க எப்பாவும் இப்படி தான்.

\\நம்ம பழனிச்சாமி அண்ணனேதான். அவருக்கு ரெண்டு பசங்களாம். மூத்தவனுக்கு அண்ணன் பெயரையும், இளையவனுக்கு நாராயணன் அண்ணன் பெயரையும் வச்சுருக்காராம்.\\

கிரேட்...;)

said...

படிக்கப்படிக்கப்புரிஞ்சு போச்சு...கடைசில குண்டத்தூக்கிப்போடுவீங்கன்னு:-(

said...

படித்தபோது மணசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு :(

said...

படிச்சு மனசு வலிச்சுது. எங்க அண்ணாவுக்கும் இதே மாதிரி 2 நண்பர்கள் இருக்காங்க. இதை படிச்சதும் அவங்க ஞாபகம் வந்துச்சு.

said...

அட அப்பாவி நாராயணா, அழ வச்சிட்டியே.
கொடுமைப்பா.

ராப், பாதம் வச்ச நாமம்னா சாமி படத்தில பாருங்க. பெருமாள் யு மாதிரியும் போட்டுப்பார்.
அந்த யூவுக்கே கொஞ்சம் நீட்டி ஒய் மாதிரியும் போடுவாங்க.
புரிஞ்சுதோ இல்லையோ:(

said...

டீச்சர்.. உங்கள் பால்ய காலத்து நினைவுகள் எங்களையும் அந்த காலத்துக்கே கூட்டிட்டு போகுது. ஒருவேளை அந்த ஒரு சின்ன பிரிண்டிங்க் மிஸ்டேக் ஆகாம இருந்திருந்தா அவரும் இந்நேரத்துக்கு பேரன் பேத்திகளோட விளையாடிட்டு, ப்ளாக் எழுதிட்டு இருந்திருப்பார் இல்ல... :((

said...

இது போன்ற நிஜம் பதிவாகிறது டைப் கதைகளில் எல்லாம் இதே வேலையாப் போச்சு டீச்சர் உங்களுக்கு! எப்பமே கனக்க வைக்கறீங்க!

கனமான நட்பால் மனமும் கனமாகுமோ? :(

said...

:( என்ன சொல்றது ? ஏற்கனவே கோபி , கே.ஆர்.எஸ் எல்லாம் சொல்லிட்டாங்களே...

said...

இன்னிக்குப் பூரா எங்கே போனாலும் இதே கதைதான் நடக்குது! ஏற்கெனவேயே பாரமா இருந்த மனசு இன்னும் பாரமா ஆயிடுச்சு! :((((((

said...

வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி.

பின்னூட்டங்களுக்கு உடனே மறுபடி தரமுடியலை. மன்னிக்கணும்.

பழைய நினைவுகளில் மீண்டும் ஒருமுறை 'புதைஞ்சு போயிட்டதால்' மனசு கனத்துப்போச்சு. மீண்டு வந்தேன்.

said...

வாங்க ராப்.

உண்மைக் 'கதை' தாங்க.

நம்ம வல்லி பதில் சொல்லி இருக்காங்க பாருங்க, அதே அதே

U & Y . இந்த ஒய் தான் பாதம் வச்சது.

இது, தென்கலை நாமம். வெறும் யு வடகலை.

said...

வாங்க கொத்ஸ்.

//ம்//

???????

said...

வாங்க கோபி.

சிரிப்பான சம்பவங்கள் மனசைக் காயப்படுத்துவதில்லைப்பா.

சோகங்கள், வடுவை ஏற்படுத்திட்டுப் போயிருது.

said...

வாங்க தங்ஸ்.

சிரித்துக்கொண்டே அழும் சமாச்சாரமா ஆகிப்போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்.

said...

வாங்க PVS.

எனக்கும் இதை எழுதும்போது மனம் சரியாவே இல்லை(-:

said...

வாங்க கபீஷ்.

அண்ணாவின் நண்பர்களுடன் இப்பவும் நட்பு தொடர்கிறதா?

வருகைக்கு நன்றி

said...

வாங்க வல்லி.

எல்லாம் நாராயணன் செயல்!!!!

அம்பி இப்போ எப்படி, என்னவா இருப்பானோன்னு அப்பப்ப நினைச்சுக்குவேன்.

said...

வாங்க வெண்பூ.

இந்த பிழைகள் எல்லாம் மன்னிக்கப்படவேண்டிவைகளா? ஒருத்தர் வாழ்வோடு விளையாடுனமாதிரி ஆகிருச்சே...(-:

ஒருமுறைக்கு நாலுமுறை சரிபார்த்திருக்க வேணாமா?

ஹூம்....

said...

வாங்க கே ஆர் எஸ்.

நட்பும் கனம், மனசும் கனம்.
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

said...

வாங்க கயலு.

எனக்கும் உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலைப்பா.
மனசைக் கனக்க வைத்த சம்பவம்.

said...

வாங்க கீதா.

நம்ம கல்வி முறையைக் குத்தம் சொல்றதா? இல்லே பரிட்சை முடிவுகள்தான் மனிதர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்குதுன்னு இருக்கும் சமூகத்தைச் சொல்றதா?

ஒவ்வொரு பரிட்சை முடிவுகள் வரும்போதும் இப்படித்தான் சிலர் செஞ்சுக்கறாங்க.

இதையெல்லாம் பார்க்கும் நமக்கும் மனப்பாரம்தான்(-:

said...

பதிவு படிக்க ஆரம்பிக்கும் போதே ஒருவித பதட்டத்தோடதான் இருந்தேன். டீச்சர் கடைசியில் ஏதோ சொல்ல வர்ராங்கன்னு நெருடுச்சு... :(

///மூத்தவனுக்கு அண்ணன் பெயரையும், இளையவனுக்கு நாராயணன் அண்ணன் பெயரையும் வச்சுருக்காராம்.///

நட்பு சில நேரங்களில் இப்படியும் துளிர்க்கிறது... :)

said...

பரீட்சைல ஃபெயில் (அது உண்மையா இல்லியா என்பது வேறு) என்ற விஷயத்திற்கு ஸ்திர புத்தியுடன் யோசிக்க முடியாத நாணா அண்ணா நாளை பின்ன இன்னும் பெரிய பிரச்சனைகள் ஏதும் வரும் போது மனைவி குழந்தைகளை நட்டாத்தில விட்டுட்டு போறதை விட இதுவே மேல்.

சரி, அவர் குடும்ப சூழ்நிலை, இந்த பரீட்சையில் ஃபெயில் என்பது மிகப் பெரிய விஷயமே. ஆனால் ஒரு பரீட்சையில் நாம் எழுதியதற்கு 90 வருமா 35 வருமா நு கூட தெரியாதா? 50 வரும்னு நினைச்சு 35 வர்றதுக்கும், 90 வரும்னு நினைச்சு 35 வர்றதுக்கும் எவ்வளவு வித்தியாசம். அது எப்படி அதை கூட யோசிக்காமல் நம்பினார் அவர்?? மிகவும் விந்தயா உள்ளது.

said...

வாங்க தமிழ் பிரியன்.

துளிர் விட்ட நட்பு இன்னும் நல்லாவே வளர்ந்து இருக்கு.

அண்ணனுக்குத்தான் ஒரே ஒரு பொண் குழந்தையாப் போயிருச்சு. (நான் பண்ணுன அட்டகாசங்களைப் பார்த்து பொண்ணுன்னாவே பயம் வந்துருக்கும்போல)

said...

வாங்க ஹேமா.

நீங்க சொல்லும் கோணத்துலே இருந்து இதுவரை பார்க்கவேயில்லை!!!

இப்பத்துத் தலைமுறையை விட போன தலைமுறை மனிதர்கள் கொஞ்சம் வெகுளியா, பரிட்சை மட்டுமே வாழ்க்கைன்னு இருந்துட்டாங்களோ?

said...

இப்படி மனச கனக்க வச்சிடீங்களே டீச்சர்....

//அந்த வெல்லப் பாகுதான்,தினம் இட்டிலி, தோசைக்குத் தொட்டுக்கறது. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கும்!//

நாக்குல எச்சி ஊருது.....

said...

அன்பின் துளசி,

மலரும் நினைவுகள் சில சமயம் துன்ப நினைவுகளாகவும் - மனதை உருக்குவதாகவும் அதே சமயம் மனது அமைதி பெறவும் - உதவுகின்றன

ஆனால் நாம் இனிய நினைவுகளை மட்டுமே அசை போட விரும்புகிறோம் இல்லையா

said...

வாங்க நான் ஆதவன்.

கசப்பும் இனிப்புமா இருந்துச்சா பதிவு?

வாழ்க்கையும் இப்படித்தானே?

said...

வாங்க சீனா.

இன்பத்தை மட்டுமே அசை போடறோமுன்னாலும், சில சமயங்களில் மனசின் ஆழத்தில் அமுக்கிவச்சத் துன்ப மூட்டைகள் மேலே வந்துருதுங்களே.

said...

மனசுக்கு கஷ்டமா இருக்கு டீச்சர் :(

said...

வாங்க ரிஷான்.

வருத்தத்தில் பங்கெடுத்ததுக்கு நன்றிப்பா.