Sunday, May 31, 2009

இப்போதைக்குக் கோட்டையையும் விடறதா இல்லை கொட்டாரத்தையும் விடப்போறதில்லை .........(2009 பயணம் : பகுதி 31)

புலியூர்குறிச்சிக்கு வந்து சேர்ந்தோமுன்னு சொன்னாவே ஒரு கெத்தா இருக்குல்லே? சரித்திரத்துக்குள்ளே மீண்டும் ஒரு பயணம். இங்கேதான் இருக்கு உதயகிரிக் கோட்டை. தொல்பொருள் இலாக்காவும் வனத்துறையுமாச் சேர்ந்து இதைப் பாதுகாத்துப் பராமரிக்கிறாங்க. உள்ளே போய்ப் பார்க்கச் சின்னதா ஒரு கட்டணம். அஞ்சே ரூபாய்கள்.. கெமெராவுக்கு ஒரு இருவது ரூபாய். உள்ளே சின்னதா ஒரு மூலிகைப் பண்ணையும், அக்வேரியமும், சில உயிரினங்களும் (முக்கியமாப் புள்ளி மான்) நட்சத்திர ஆமைகள் சிலதும் உள்ளே இருக்கு.

வட்டக்கோட்டைச் சரித்திரத்துலே வந்த டச்சுக்காரர் டிலென்னாய்தான் இங்கேயும் ஹீரோ வேஷம் கட்டியிருக்கார். கோட்டைச் சரித்திரத்தைச் சுருக்கமா ரெண்டு அறிவிப்புப் பலகைகளில் எழுதி வச்சுருக்கு அரசு. அதுவுமில்லாமல் இங்கிருக்கும் உயிரினங்களின் பெயர்கள், மரங்களின் பெயர்கள், மூலிகைகளின் பெயர்கள் எல்லாம் ரொம்பவே விவரமா எழுதிப்போட்டுருக்காங்க. இது ரொம்ப நல்ல விஷயம். யாரையும் போய்த் தொணப்பி எடுக்காம நாமே தெரிஞ்சுக்கலாம். நானும் விவரங்களை அப்படியே சுட்டுக்கிட்டு வந்துட்டேன்:-)

நாங்க போன சமயம் நாகர்கோவில் எஞ்சிநீயரிங் கல்லூரி மாணவ மாணவிகள் குழு ஒன்னு வனப்பராமரிப்புக்குன்னு வந்துருந்தாங்க. ஒரு பத்து மாணவிகள் இருந்துருப்பாங்க. கூடவே ஒரு டீச்சர். மாணவர்கள் ஒரு இருபது பேர் இருக்கலாம். அநியாயம் என்னன்னா மொத்தக் குழுவுக்கும் ரெண்டு துடைப்பம், ஒரு மண்வெட்டி. 'வாரியலைச் சும்மாக் கையிலே வச்சுக்கிட்டு நிக்காமத் தரையைக் கூட்டுவது போல போஸ் கொடும்மா'ன்னு சொல்லி வச்சேன்.
துக்கிட்டு இருக்கோமு'ன்னு கலாய்ச்சாங்க. இளரத்தம். பலசாலிகள். பரபரன்னு அவுங்களைவச்சு எவ்வளோ வேலை வாங்கி இருக்கலாம்! நம்மூர்லே எல்லாத்துக்கும் வெறுங்கூட்டம்தான். வேலை ஒன்னும் நடக்கறதில்லை. பராமரிப்புக்குன்னு வரும்போது தேவையானவைகளை அவுங்களே கொண்டு வரலாம். அப்படி இல்லைன்னா வனத்துறை ஏற்பாடு செஞ்சுருக்கலாம். எல்லாம் இந்த 'லாம் லாம்' தான். அரசு இயந்திரத்தின் நகராத பல்சக்கரத்தில் சிக்கிக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
ஒரு உயரமான மரத்துலே உச்சியில் ஒரு குடில் கட்டிவச்சுருக்காங்க. ஒரு சமயத்தில் அஞ்சுபேர் மட்டும் ஏறிப் பார்க்கலாமாம். யானைகளுக்கு அந்த மர ஏணியில் ஏற அனுமதி இல்லை. அதனால் நான் போய்ப் பார்க்கலை. கோபால் போய்ப் பார்த்துட்டு வந்தார்,

பீரங்கி குண்டுகள் தயாரிச்ச உலைக்களத்தின் சிதைந்த பகுதிகள் எல்லாம் இருக்கு. தளபதி டிலென்னாய்யின் கல்லறையும் கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்காம். ஒரே முள்பகுதியாக் கிடக்கு. சின்னதா ஒரு பாதை போட்டு வச்சுருக்கலாம். எல்லாம் பீஸ் ஆஃப் ஹிஸ்டரி!

இவ்வளவு கலாட்டாவிலும் கோட்டை மதிலுக்கு ஏறிப்போகும் படிக்கட்டில் கடலை வறுத்துக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். நம்ம ரமேஷ்வேற, 'படியிலே ஏறிப் பாருங்கம்மா அந்தப் பக்கம் இருக்கும் வீடுகளும் கோட்டை அமைப்பும் நல்லாத் தெரியுமு'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கார். நாம்தான் 'சிட்டி' ஆளுங்களாச்சே. 'எக்ஸ்க்யூஸ் மீ'ன்னு சொல்லிக்கிட்டு அவுங்களைக் கடந்து போய்ப்பார்த்தோம். பழையகாலத்து வீடுகளின் பின்பக்கப் புழக்கடை வாசல்கள். இன்னொரு இடத்தில் வீட்டின் முன்புறமுள்ள 'வீதி'யில்லாத்த வீதி!
(அகலமில்லாத தெருன்னு மலையாளத்தில்)

'என்ன, ஒன்னும் பேசாம அப்படியே உக்கார்ந்துருக்கீங்க'ன்னு கோபால் கடலைகளை விசாரிச்சார். சின்னதா, மிரட்சியா ஒரு புன்முறுவல். 'மௌனம் பேசுகிறது'ன்னு சொன்னேன்.

முருங்கை , வேம்பு ன்னு மரங்கள். சொர்க்கமரமுன்னுகூட ஒன்னு இருக்கு. ஒரு மரத்தைக் காமிச்சு இது என்ன சொல்லுங்க பார்ப்போம் னு புதிர் போட்டார் ரமேஷ். இலவம் பஞ்சுன்னு சொன்னேன். முழுமார்க் கிடைச்சது.
ஒரு நல்லதண்ணீர் கிணறும், வாளியும் கயிறும். உடனே கோபால் அங்கே ஆஜர்:-) மரத்தோட வயசை எப்படிக் கணக்குப்போடணுமுன்னு ஒரு மரம் வெட்டிக் காமிச்சுருக்கு. பூவுலகில் மிருகங்கள் மனிதர்கள் இப்படி எல்லாருமா இணைஞ்சு இருக்கணுமுன்னு ஒரு இடத்தில் போர்டு & விளக்கம். அறிவிச்சா வேலை தீர்ந்துச்சு. செயல்படுத்தன்னு மெனெக்கெடவேணாம்(-:
அடுத்த இடத்துக்குப் போகும் வழியில் ஒரு அபூர்வ மரத்தைக் காமிச்சார் ரமேஷ். அடுத்த புதிர்.
"மரத்துலே என்ன தொங்குது?"

"தூக்கணாங்குருவிக் கூடுகள்."

"இல்லை"

"அப்ப? நான் ஃபெயிலா?"

"ஆமாம். சரியான விடை: வவ்வால்கள்."

"ஹா..............இத்தனையா? அதுவும் பட்டப் பகலில்"!!!!!!
பத்துநிமிசம்கூட ஆயிருக்காது கோட்டையைவிட்டு. இப்ப என்னடான்னா பத்மநாபபுரம் அரண்மனை முற்றத்தில் நிக்கறோம். பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க 'இன்பச் சுற்றுலா' வந்துருக்காங்க. மரத்தடியில் 'களபிள'ன்னு பேசிச்சிரிச்சுக்கிட்டு, அப்பப்ப டீச்சர்களின் கண்ணசைவைக் கவனிச்சபடி இருக்காங்க.
அரண்மனையைப் பார்க்கக் கட்டணம் ஒன்னு இருக்கு. ஆளுக்கு இருவத்தியஞ்சு ரூபாய். கெமெராவுக்கு இருவத்தியஞ்சு ரூபாய். இதுவரைக்கும் ஓக்கே. ஆனா வீடியோ கேமெரான்னா மட்டும் ஆயிரத்தைஞ்ஞூறாம். இதென்னடா 'ராஜா' இப்படிக் கொள்ளையடிக்கிறார்!!! நடப்பதுதான் கம்யூனிஸ்ட் ஆட்சியாச்சே......

ராஜாவின் கொட்டாரமுன்னா சினிமாவில் காட்டறதுபோலப் பளாபளா ஜெகஜெகான்னு மினுங்குமுன்னு கற்பனை செஞ்சுக்கவேணாம்.. சாதாரண வீடுபோன்ற முகப்புதான். அறைஅறைகளா நீண்டு போகுது. ஆனா முகப்பில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் மர வேலைகளைப் பார்க்கணும். ஹைய்யோ.... அப்படி ஒரு நுட்பமான செதுக்கல். 408 வருசப் பழமைவாய்ந்த கட்டிடமுன்னு சொன்னாங்க. முழுக்க முழுக்க மரமே மரம்.
ரெண்டு பகுதிகளா அமைஞ்சுருக்கு. நம் கண்முன்னால் ராஜா வூடு.. வலதுபக்கம் இருக்கும் பகுதி தொல்பொருள் காட்சியகம். வீட்டின் முதல்பகுதியா வரவேற்புக் கூடம். இதைப் பூமுகம்ன்னு சொல்றாங்க. விதானத்தில் மரத்தண்டுகளில் பூக்களாவே செதுக்கி வச்சுருக்காங்க. தொன்னூறு பூக்களாம். ஒவ்வொன்னும் ஒரு டிஸைனாம்! முழுக்க முழுக்க மரமே மரம்.
சீனர்கள் அன்பளிப்பாக் கொடுத்த ஒரு நாற்காலி இந்த பூமுகத்தை அலங்கரிக்கறதைப் பார்த்தா....... இப்ப எதைப் பார்த்தாலும் இருக்கும் 'மேட் இன் சீனா' ஒன்னும் புதுசில்லை:-))) இந்த இடத்தைக் கடந்து இடதுபக்கமா இருக்கும் மரப்படிகளில் ஏறிப்போனால் ராஜாவின் ஆலோசனை அரங்கம். இங்கேதான் முக்கியப் பிரமுகர்களைச் சந்திப்பாராம். இந்த அரண்மனை முழுசும் அங்கங்கே தகவல் பலகைகளை வச்சு, மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தின்னு மூணு மொழிகளில் விலாவரியா சரிதம் முழுதும் எழுதி இருக்கு. இதில்லாம அங்கங்கே நம்ம சந்தேகத்தை நிவர்த்திச் செஞ்சிக்க ஏராளமான சேச்சிமார் பணியில் இருக்காங்க. நம்ம ஆளும் சந்தேகம் கேட்டுட்டாரே...... 'சந்திரமுகி ஷூட்டிங் நடந்த இடம் எது'ன்னு:-))))
ஆலோசனை நடக்குமிடங்களில் 'கிளிவாதில்' என்று சொல்லும் சின்னச் சன்னல்கள். நாம் உள்ளே இருந்து கீழே வெளிப்புற முற்றத்துலே நடப்பவைகளைப் பார்க்கலாம். ஆனால் அங்கே இருக்கும் எவருக்கும் நாம் தெரியமாட்டோம். ரகசிய ஆலோசனைகள்தான் போல!! அங்கிருந்து இன்னொரு படி மூலம் கீழ்தளத்திற்குவந்தால் உணவுக்கூடம். ஒரே சமயம் ஆயிரம்பேர் இருந்து சாப்பிடலாம். இதேபோல மாடியிலும் இன்னொரு கூடம் இருக்காம். ரெண்டாயிரம் பேர் ஒருவேளைக்குச் சாப்பிடணுமுன்னா எவ்வளோ ஆக்கி இருப்பாங்க! கூடத்தின் ஒரு பக்கம் பெரிய பிரமாண்டமான சீனச் சாடிகள். ஊறுகாய் போட்டு வச்சுக்கும் பரணி. பள்ளிக்கூடத்துப் பசங்களும் கூடவே வந்துக்கிட்டு இருந்தாங்க. அது என்ன ஜாடின்னு கேட்டேன்...... தெரியலையாம். ஊறுகாய் ஜாடின்னு சொன்னதும் ஊறுகாய் எங்கேன்னு கேக்குதுங்க. இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சேன்னேன்:-)))))
அங்கங்கே திறந்தவெளி முற்றங்களும் கட்டிடங்களுமாப் பரந்து விரிஞ்சு போய்க்கிட்டே இருக்கு மாளிகை. செடிகள், மரங்கள் அலங்காரமாயும் வெய்யில் தெரியாமக் குளுமை தரவுமா நிறைய இருக்கு. பரமரிப்புப் பணிக்குப் பணியாளர்கள் ஏராளம். ஓய்வா உக்காந்து கதை பேசிக்கிட்டு இருந்தாங்க. ச்சும்மாவா? அரமணை உத்தியோகமுல்லே! தென்னை மரங்களும் வளாகம் முழுசும் அடர்த்தியா இருக்கு.
அரண்மனை வளாகத்தின் கட்டிடக்கூட்டங்களின் நடுநாயகமா இருக்கும் நாலுமாடிகள் உள்ளத் தாய்க்கொட்டாரம் உள்ளெ நுழையும்போதே மண்டபத்துலே மர நாகர். மேலே விதானத்தில் மரவேலையில் பூக்களாக ஒரு டிஸைன். அதுலே நடுவிலே ஒரே ஒரு பூ மத்த டிசைனிலே இருந்து வித்தியாசமா இருக்குன்னு விடாமச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும் உத்து உத்துப் பார்த்தேன். என் ஓட்டைக் கண்ணுக்கு எல்லாமே ஒன்னாக் கிடக்கு. இவர் சொல்றார் மத்ததுலே மூணு வட்டம் இதுலே ரெண்டுவட்டமாம். சொல்லிச் சொல்லி என்னை வட்டாக்காம விடமாட்டாங்க போல:-) முழுக்க முழுக்க பலாமரத்தில் செஞ்ச மண்டபமாம்.
( மலையாள மொழியில், வட்டு = பயித்தியம்)


உப்பரிகை மாளிகை, அந்தப்புரம், அரசிகளின் படுக்கை அறை, அந்தக் காலத்துப் ப்ரத்யேகக் கழிவறை ( long drop) எல்லாம் முதல் மாடியில் இருக்கு. ரெண்டாம் மாடியில் மகாராஜாவின் படுக்கை அறையில் 64 மூலிகை மரங்களால் ஆன அருமையான கட்டில். நாலுபுறமும் யானைத்தந்தமுன்னு நினைக்கிறேன். அட்டகாசமான வேலைப்பாடு. அங்கிருந்து மேலே மூணாம் நாலாம் மாடிக்குப் படிக்கட்டுகள் இருந்தாலும் நமக்கு அனுமதி இல்லை. மூணாம் மாடி, மகாராஜா தியானம் செய்யுமிடமாயும், நாலாவது மாடி திருவாங்கூருக்கு 'உண்மையான அரசரான சாக்ஷாத் ஸ்ரீ அனந்தபத்மனாப ஸ்வாமி'யே வந்து படுத்துறங்கும் கட்டில் இருக்குமிடமாயும் இருக்காம்.

திருவாங்கூர் சமஸ்தான அரசர்கள் எல்லோரும் வழிவழியா, ஸ்வாமி ஸ்ரீ அனந்தபத்மனாபனின் பிரதிநிதிகளாக மட்டுமேப் 'பத்மனாபதாஸன்' என்னும் பட்டப்பெயர்களோடு. அரசாட்சி செய்கிறார்கள். மாளிகையைச் சுத்தி வரும் வெராண்டா முழுசும் மரத்தடுப்புகளோடு வெளிச்சமும் காற்றும் உள்ளேவர வசதியாவும் அதே சமயம் அரை இருட்டாகவும் இருக்கு.
அம்பாரி முகப்பு

காவல் கோபுரம் உள்ள பகுதி, ஆயுத சாலை, அம்பாரி முகப்பு ( மக்கள் வந்து ஒரு முற்றத்தில் கூடுனா, ராஜா மாடம் வழியாக அவுங்க குறைகளைக் கேப்பாராம்) ஓவியச் சாலை இப்படி எல்லாமும் பார்த்துக்கிட்டே அயல்நாட்டு விருந்தினர்களுக்குக் கட்டப்பட்டப் பகுதிக்கு வந்தோம். இந்திரவிலாஸம்னு பெயராம். கேரளப் பாணியில் இல்லாமல் கொஞ்சம் விஸ்தாரமான படிகள்! அதிலே இறங்கி வெளி முற்றத்திற்கு வந்தால் அடுத்துள்ள ஒரு சிறிய கட்டிடத்தில் கட்டணக் கழிப்பறை! அரண்மனைக் கட்டிடங்களின் சாயலில் கட்டியிருக்காங்க. மாடர்னாக் கட்டுறோமுன்னு ஆரம்பிச்சு இருந்தால் சூழலுக்கு ஒவ்வாமத் துருத்திக் கொண்டு இருந்துருக்கும். நல்லவேளை.

இந்தக் கட்டண அறைகளை இந்தியாவில் பயன்படுத்த இதுவரை சான்ஸே கிடைக்கலை. இங்கே போயிட்டுவந்தால், 'ஒன்னுமில்லெங்கிலும் கொட்டாரத்தில் ஒன்னு போயி'ன்னு பறயாமல்லோ:-))))

"மூத்ரம் ஒழிக்கானோ அல்லது மற்றதோ?" கேட்டது அங்கே ஜோலிக்கு இருந்ந ஒரு வலியம்மே. 'பைஸா பின்னே தந்தோளு'

அதுவும் சரிதான். என்ன ஆகப்போகுதுன்னு போனாத்தானே தெரியும்!!

ஒன் பாத் ரூம் போக ஒரு ரூபாய்

ரெண்டு பாத்ரூம் போக மூணு ரூபாய். ( ஆஹா..... ரெண்டுன்னா அதுலே ஒன் னும் அடக்கம் என்ற கணக்கோ)

குளிக்கணுமுன்னா நாலு ரூபாய்.

டாய்லெட் நல்ல வ்ருத்தியா. கொள்ளாம். தள்ளெயிடம் ஒரு ரூபாய் கொடுத்தேன்.

மகாராஜா குளிக்கும் அரண்மனைக்குளம் பாசிபிடித்துக் கிடக்கு. வளாகத்தில் சின்னதா ஒரு கோயிலும்கட்டி வச்சுருக்காங்க. கடைசியாக வந்து சேர்ந்து இடம் 'ஒருமுறை வந்து பார்த்தாயா?'ன்னு கேட்டது. நவராத்ரி மண்டபம்.

"பார் உன் மனைவி கங்காவைப் பார்.."

"என்ன கொடுமை சரவணன்?"

'ராரா..... சரசக்கு ராரா.....' ன்னு பாட்டு தன்னாலே வாயில் வருது. கஷ்டப்பட்டு வாயைக் கட்டவேண்டியதாப் போச்சு:-)

இத்துனூண்டு சைஸிலே மூணு ஜன்னல்கள்:-))))

அரண்மனை டூர் முடிஞ்சு அருங்காட்சியகம் போனோம். பழங்கால விளக்குகள், பாத்திரங்கள் ஆயுதங்கள், வீரர்களுக்கான கவசங்கள் இப்படி. சிற்பங்களும் நிறைய இருக்கு. ஓவியங்களும் கொஞ்சம் வச்சுருக்காங்க. 'நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகறதை' அங்கே பார்த்தேன்!!!!!

இப்போ ஒரு 95 வருசமாத்தான் மகாராஜா குடும்பம் திருவனந்தபுரத்தில் வசிக்கறாங்க. ராஜ குடும்பம் இப்போ இங்கே இல்லை. நாலாம் மாடியில் சாமி மட்டுமே இருப்பார்.

அரண்மனையில் அங்கங்கே மேற்கூரை பிரிச்சு ஓடு மாத்தும் வேலைகள் நடந்துக்கிட்டே இருக்கு. அரண்மனையின் அளவைப் பார்த்தால் வருசம் முழுசும் இந்த வேலை ஓயாது போல. மக்களுக்குக் காண்பிக்கும் பகுதி மூணில் ஒரு பங்குதான் இருக்கும்.

எல்லாக் கேரளப் பாணியில் உள்ள பழங்கால வீடுகளின் கண்ணாடித்தரைதான் இங்கே முக்கியமான இடங்களில் எல்லாம். என்ன ஒரு மினுமினுப்பு! (அதுவும் சந்தியா நேரத்தில் 'தீபம் தீபம் எனச் சொல்லிக்கொண்டே கையில் பிடிச்ச ஏற்றிய நிலவிளக்குக் கொண்டுவந்து பூமுகத்தில் வச்சவுடன், இருளை விழுங்கி ஒளிவீசும் விளக்கின் ஜோதி அந்தத் தரையில் பிரதிபலிக்கும் அழகு இருக்கே..... சொல்லி மாளாது. கெமெரா என்னும் வஸ்து எட்டாக் கனியா இருந்த காலகட்டத்தின் ஓர்மைகள் இதொக்க)

படங்கள் எல்லாம் சமீபத்திய வழக்கம்போல் ஆல்பத்தில் போட்டுருக்கேன்.

உதயகிரிக் கோட்டை

பத்மநாபபுரம் அரண்மனை



கொட்டாரம் விட்டு வெளியில் வந்தால்....... செவ்விளநீரும் நுங்கும் கிடைச்சது.

தொடரும்..................:-)))))

Thursday, May 28, 2009

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே .........(2009 பயணம் : பகுதி 30)

பாம்புக்கதைகள் எத்தனை கேட்டுருக்கோம்! அதுலே இருந்துதானே பாம்புன்னா ஒரு பயம் நடுக்கம் எல்லாம் வந்துருது! பாம்பு பயம் போகணுமா? பேசாம நாகத்துக்குன்னே இருக்கும் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வாங்களேன். நம்ம கோபாலுக்கும் பாம்புன்னாக் கொஞ்சம்....... அதான் நாங்களும் ஒரு நடை..... நான் சும்மாக் கூட ஒரு துணையாத்தான் போனேன்:-))))
நாகராஜா கோவில் இருக்குமிடம் நாகர்கோவில். கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையும் இருக்கு. கொஞ்சம் பெரிய ஊர்தான். பசுமை மாவட்டத்துக்கேத்தாப்புலெ எங்கெங்கு காணினும் பசுமைகளே. மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளெ தள்ளுனாப்புலே கோவில் வளாகம். பின்னால் இருக்கும் தெருவழியாப் போனதால் கண்ணுக்கு முன்னால் தெரியும் கோவில்கதவுகள் மூடியிருக்கு, வலது பக்கம்போய் இடது திரும்புனா பிரமாண்டமான நீளத் திண்ணைகளுடன் கோவில். ஒரேதாக் கேரள சம்பிரதாயமுன்னும் சொல்லமுடியாம என்னவோ வித்தியாசமான அமைப்பு.

ரெண்டு நிலை மாடம். முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா மகாவிஷ்ணு, ரெண்டு பக்கங்களில் சக்கரம் சங்குடன் காட்சி தர்றார். உள் முற்றத்தில் ஜொலிக்கும் கொடிமரம். உள்ளே நுழைஞ்சால் அனந்தகிருஷ்ணன் சந்நிதி. 'கிருஷ்ணா நீ இங்கேயா இருக்கே? நாகராஜா கோயில்னு நினைச்சு வந்தேனே! அப்போ அனந்தன் எங்கே?'ன்னு கேட்டதுக்கு 'இடம்கொடுத்துருக்கேன்'னு இடப்பக்கம் கை காட்டுனாப்பலெ ஒரு தோணல்.

இடப்பக்கம் நடந்தால் 'நான்கூட இங்கிருக்கேன் கவனின்னு மனக்குரல். சிவன் இருக்கார். 'பேசாமச் சிவனேன்னு இரும்'னுக் கொஞ்சம் அதட்டிச் சொல்லிட்டு அவரைத் தாண்டுனதும் தர்னேந்திரன், பத்மாவதி என்ற ஜோடி துவாரநாகர்கள் ரெண்டுபேர் மிரட்டலா ஜொலிக்க உள்ளே புகுந்து போனால் நாகராஜா. மேற்கூரை ஓலையா இருக்கு. கீழே புத்து இருக்காம். அந்த மண்ணைத்தான் துளி எடுத்துப் பிரசாதமுன்னு தந்தாங்க. இவருக்குன்னு அஞ்சுதலை நாகம் சுதைச்சிற்பமாப் பதிச்சத் தனிப் பிரதான வாசல். அதுலே வெளியே வந்தோம். இப்பப் புரிஞ்சுபோச்சு. இவருக்குக் கோவிலை எக்ஸ்டெஷன் செஞ்சு இடம் குடுத்தாற்போல் ஒரு தோற்றம். இவருக்கு முன்னால்தான் கோவில் குளமும் இருக்கு. சின்னதா அளவான அழகான செவ்வகமா இருக்கும் சுத்தமான குளம்.


சிவன்கோவில்களில் நந்தி சிலைகளை மதில்சுவர்மேல் வரிசையா வச்சுருப்பாங்க பாருங்க அதே போல இங்கே மதில் சுவருலேயும், குளத்துக்கானச் சுத்துச்சுவரிலும் வரிசையா நாகர்கள். கோவில் வளாகத்தில் பெரிய அரசமரம். மேடைஎல்லாம் போட்டு சுத்திவர நாகர்கள் அமர்ந்திருக்க அட்டகாசமா இருக்கு. எல்லாருக்கும் மஞ்சள் பூச்சு வேற.
கோவிலின் தலப்புராணத்தைப் பார்த்தோமுன்னா......அநேகமா எல்லா ஊருலேயும் சொல்றதுமாதிரிதான். ஒரு காடான இடத்துலே புல்வெட்டப்போச்சு ஒரு பொண்ணு. புல் அறுக்கும் அரிவாள் ஒரு இடத்துலே பட்டதும் குபுகுபுன்னு ரத்தம் வந்தவுடன் பயந்துபோய் ஊருக்குள்ளே வந்து விசயத்தைச் சொல்லுச்சு. ஆளுகெல்லாம் ஓடுனாங்க. ரத்தம் வந்த இடத்துலே பார்த்தால் ஒரு அஞ்சுதலை நாகம். தலையிலே வெட்டுப்பட்டுக்கிடக்கு. இதுக்கு அங்கிருந்த எல்லாருமே சாட்சி. அடடா....... நாகத்துக்கு இப்படி ஆயிப்போச்சே. 'அப்பா நாகராஜா, எங்களை மன்னிச்சுரு. ஏதோ தெரியாமப் பிழை நடந்துபோச்சு. உனக்குக் கோவில் கட்டிக் கும்பிடுறோமு'ன்னு சொல்லி அந்த இடத்துலே கட்டுன கோவில்தான் இது.
இன்னொரு கதையில் ஒரு ராஜாவுக்குத் தொழுநோயோ, தோல்நோயோ வந்துருச்சாம். அவர் ஆவணிமாசத்தில் ஒரு ஞாயித்துக்கிழமையன்னிக்கு இங்கே வந்து நாகரைக் கும்பிட்டதும் ரோகம் போயே போயிந்தி. இட்ஸ் கான். காயப் ஹோகயா''. அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோடு எல்லா வருசமும் ஆவணி மாசத்தில் ஒவ்வொரு ஞாயிறும் வந்து கும்பிட்டுப்போனாராம் அவர் வாழ்ந்திருந்த நாள் வரை. ராஜாவுக்கு ஆவணி ஞாயிறுன்னா எங்களுக்கு மட்டும் இல்லையான்னு மக்கள் ஆவணி ஞாயிறைப் பிடிச்சுக்கிட்டு இப்ப அதுவே ஒரு திருவிழா ரேஞ்சுக்குப் போயிருக்கு. பாம்பு பயம் போக, தோல்நோய் குணமாக இப்படி எல்லாத்துக்கும் நிவாரணி ஆவணி ஞாயிறு!!!
அந்தக் காலமனுசங்களுக்குக் கற்பனை வளம் கொஞ்சம் கம்மியோன்னு எனக்குப் பலசமயம் சந்தேகம் வந்துரும். கோவில் சிலைகளைப் பொறுத்தவரை அதுவும் சுயம்புன்னு சொல்றாங்க பாருங்க அதெல்லாம் பூமியில் புதைஞ்சுதான் இருக்கும். ஒரு பசு தினமும் அங்கே போய் தானாவே பாலைப்பொழிஞ்சு அபிஷேகம் செஞ்சுச்சு, இல்லே, அங்கே தோண்டுனப்பக் கல்லில் அடிவிழுந்து ரத்தம் வந்துச்சு இப்படித்தான் முக்கால்வாசிக் கதைகள். அப்படியும் இல்லைன்னா, சாமி பலரின் கனவில் ஒரே சமயத்தில் வந்து கோவில் கட்டச் சொல்லும். 'வேண்டுவது வேண்டாமை இலன்' இல்லையோ சாமி என்பது!!!!! ஹ்ஹூம்.....ஆனா ஒரு விஷயம் கவனிக்கணும். புகழ் பெருகப்பெருகப் பண நடமாட்டமும் கூடுதலாகி செல்வம் கொழிச்சுக் கோவிலை வச்சு ஊர் மக்கள் பிழைக்க வழி கிடைச்சு ஊரே நல்லா ஆயிருது பாருங்க.
ஒவ்வொரு மாசமும் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளும் இங்கே விசேஷமா இருக்குமாம். பொதுவாக் கேரளக்கோயில்களில் ஆயில்யம் நாளுக்குன்னு விசேஷம் உண்டான்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.

கோயிலுக்குள் நிறைய நாகப்பாம்புகள் இருக்குன்னும் இதுவரை அவைகளால் எந்த ஆபத்தும் வரலைன்னும் சொல்றாங்க. நல்ல சேதிதான். பாம்புகள் தங்கி வசிக்கணுமுன்னே கோயில் கூரையும் ஓலைகளால் கட்டப்படுதாம். வருசாவருசம் ஆடிமாசம் புதுக்கூரை போடும் பணியைச் செய்யறவங்க, இங்கே வழக்கமாத் தினசரி கோயில் பூஜை செய்யும் நம்பூதிரிகளும் போத்திகளும்தானாம். வெளியாட்கள் பாம்பைப் பார்த்துப் பயந்துருவாங்கல்லே?

நாகங்களுக்குக் கோவில் கட்டுன ஊரானதால், ஊருக்கும் நாகர்கோவில் என்ற பெயர் நிலைச்சுருச்சு. இந்தக் கோயிலில் சமணர்களின் சாமிகளான தீர்த்தங்கரர்களின் சிலைகளை மண்டபங்களில் செதுக்கி வச்சுருக்கு. அதனால் இந்தக் கோவில் சமணர்களின் கோவிலா இருந்துருக்கலாமோன்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துருக்கு. ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிச்சப்ப, 'நெசமாவாச் சொல்றாங்க?'ன்னு ஆச்சரியம் வந்ததென்னமோ உண்மை. ஆனா ஏகப்பட்டக் கல்வெட்டுக்கள், குறிப்புகள் எல்லாம் தேடிப்பிடிச்சுதான் ஆராய்ச்சி நடந்துருக்கு. படிச்சவுங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.

நீங்களும் இங்கே இந்தச் சுட்டியில் படிச்சுப் பார்த்து முடிவுக்கு வாங்க.


தொடரும்..............:-))))))

Tuesday, May 26, 2009

புருசனை அடையாளம் தெரியலையே(-: .........(2009 பயணம் : பகுதி 29)

அத்ரி முனிவரின் மனைவி அனுசூயா. பிரமாதமான அழகி. குணநலன்களைச் சொல்லி மாளாது. மூவுலகிலும் அனுசூயாவைப் பத்தின பேச்சுகள் (எல்லாம் நல்ல விஷயங்கள்) பரவிக்கிட்டே போகுது. சேதி கேட்ட மற்ற பொண்ணுங்க எல்லாம் ஆ....ஊ..... பெருமூச்சு விட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னொருத்தரை அழகின்னும், அதுவும் ரொம்பவே நல்லவள்ன்னும் கேட்டா எப்படி வயிறு எரியும்? இவதான் பெரிய ஆளா? நாம் மட்டும் என்ன மட்டமா? பெண்ணுங்க சும்மாவே இருக்கமாட்டாங்களாமே..... அது சாமிகளாவே இருந்தாலும் கூட.

ஒரு நாள் பகல் சாப்பாடெல்லாம் ஆனபிறகு பார்வதியும், லக்ஷ்மியும், சரஸ்வதியுமா வம்பளந்துக்கிட்டு இருக்காங்க. 'நாம் மூணுபேரும் எவ்வளோ அழகு, எவ்வளோ அறிவுன்னு இருக்கோம். சாமிகளின் மனைவிகள் என்ற பெத்த பேர் இருக்கு. ஆனாலும் ஒரு மானிடப் பொண்ணைப்படியெல்லாம் மூணு உலகிலும் புகழ்வதைக் கேட்டுக்கேட்டுக் காதெல்லாம் நொந்துபோச்சு. எப்படியாவது அனுசூயாவின் கவுரவத்துக்கு ஒரு இழுக்கு உண்டாக்கியே தீரணும். என்ன செய்யலாமுன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியாக் கொடுங்க. எது ஒர்க் அவுட் ஆகுமுன்னு யோசிச்சு முடிவு செய்யலாம்.'

மூளையைக் கசக்குனதில் ஐடியா கிடைச்சது. தேவலோகத்துலே அப்சரஸ்களின் நாட்டியம் பார்த்துக்கிட்டு வெட்டிப்பொழுது போக்கும் வூட்டுக்காரர்களுக்கு ஒரு வேலையும் கொடுத்தாப்லெ ஆச்சு.

அவுங்கவுங்க வூட்டாம்பளைக் கூப்ட்டாங்க. 'ஒரு வேலை ஆகணும் உங்களாலே. நீங்க மூணுபேரும் ஒன்னாப் போய் அனுசுயா வீட்டுலே விருந்து சாப்பிட்டுட்டு வரணும்'. ஆஹா.... கரும்பு தின்னக் கூலியா?
'விருந்து பரிமாறும்போது அந்த அனுசூயா, ஒரு பொட்டுத் துணி இல்லாம உங்களுக்கு சாப்பாடு போடணும். போடுவாங்க ......போட்டே ஆகணும். ஏன்னா நீங்க போடும் கண்டிஷன் அப்படித்தான். போயிட்டு வாங்க. (அடிப் பாவிகளா...அனுசூயா மேலே என்ன ஒரு அசூயை பாருங்க.....)

'ஜமாய் ராஜா..... இப்படி நமக்கு ஒரு அதிர்ஷ்டமா'ன்னு சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் குதியாட்டத்தோடு மாறுவேசங்கட்டிக்கிட்டு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தாங்க. முனிவர் வெளியில் எங்கியோ போயிருக்கார். அதிதிகள் வந்து சேர்ந்ததும் முப்பெரும் தெய்வங்கள் நம்ம வீட்டுக்குச் சாப்புட ஒன்னா வந்தாங்களேன்னு அனுசூயா ரொம்ப மகிழ்ச்சியா சமையல் செஞ்சு, இலை போட்டு மூவரையும் சாப்புடக் கூப்புட்டாங்க. (என்னதான் வேசங்கட்டுனாலும் அனுசூயா அம்மா கண்டுபிடிக்காம இருப்பாங்களா? கண்டுபுடிச்சுட்டாங்க. அவுங்க சக்தி அப்படி)

பொண்டாட்டிங்க சொன்னச் சொல்லைத் தட்டாம, நிபந்தனையை எடுத்துச் சொன்னாங்க மூவரும். ஐயோ..... இப்படி ஒன்னா? கவலையே படலை அனுசூயா. தன்னுடைய கற்பின் வலிமையால் மூணு சாமிகளையும் கைக்குழந்தையா ஆக்கிட்டாங்க. பொறந்த பிஞ்சுகளுக்கு நிர்வாணம் என்னன்னு தெரியுமா? அதுகளும் ஜாலியா வயிறு நிரம்பப் பாலைக் குடிச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க.

போன புருசன்மாரைக் காணோமே...... எப்படியெல்லாம் அனுசூயாவுக்கு வெட்கக்கேடு ஆகி இருக்கும்! சீக்கிரமா வந்து விலாவரியாச் சொல்லக்கூடாதான்னு இங்கே முப்பெரும் தேவியர் வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து புலம்பறாங்க. பொறுமை எல்லை மீறுது. போனேன் வந்தேன்னு வராம எம்மா........ நேரம்? சரி....வாங்க நாம் மூணு பேரும் போய் அங்கே என்ன ஆச்சுன்னு பார்க்கலாமுன்னு அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தாங்க. அனுசூயா தாம் பாட்டுக்கு வீட்டு வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க (துணிமணியோடதான்). வாசத்திண்ணையில் மூணு குழந்தைகளும் சிரிச்ச முகத்தோடு பாயில் படுத்து உருண்டு விளையாடுதுங்க. 'அட! அனுசூயாவுக்கு ட்ரிப்லெட்ஸ் பொறந்துருக்கா? தெரியாமப்போச்சே'ன்னு பேசிக்கிட்டே வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்தாங்க.

வாங்கம்மா தேவிகளான்னு சிரிச்ச முகத்தோட உள்ளே கூப்புட்டாங்க அனுசூயா. எங்க வீட்டாம்பளைங்க இங்கே வந்தாங்களான்னு ஒன்னும் தெரியாதமாதிரி கேக்கவும், ஆமாம். வந்தாங்க. இதோ பாருங்க இவுங்கதான்னு அந்த மூணுக் குழந்தைகளையும் காமிச்சாங்க. அவுங்கவுங்க புருசனை அவுங்கவுங்கத் தூக்கிட்டுப் போங்கன்னாங்க. அடக் கடவுளே..... இதென்னடா அநியாயமா இருக்கு..... அச்சுலே வார்த்து எடுத்தாப்லெ மூணும் ஒரே மாதிரி.... யாரு யாருன்னு தெரியாம யாரைத் தூக்கிட்டுப் போறது? அப்புறம் இதுகளை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ளே நம்ம தாவு தீர்ந்துறாதா?

அவசியமுன்னு வந்தபின்னே.... கௌரவம் பார்த்துக்கிட்டு நின்னா முடியுமா? காரியம் பெருசா வீரியம் பெருசா?
மூணு தேவிகளுக்கும் சட்னு ஒரே யோசனை தோணுச்சு. வாயை மூடிக்கிட்டு அனுசூயாம்மாகிட்டே 'மன்னிப்பு'ன்னு சரண்டர் ஆனாங்க.

அருங்குணங்கள் நிறைந்த அனுசூயா, 'என்னமா ஒரு விபரீத விளையாட்டு விளையாடிட்டீங்க....போனாப்போகட்டும்'னு பெரியமனசு பண்ணி மன்னிச்சு மூணு குழந்தைகளையும் பழைய உருவத்துக்கு மாத்துனாங்க.
தாணு(அரன்), (திரு)மால், அயன் மூணுபேரும் ஒன்னா வந்ததைக் காமிக்க இந்த சுசீந்திரம் கோயிலில் ஒரே சிவலிங்கத்தில் இந்த மூணு தெய்வங்களும் இருக்காங்க. தாணுமாலயன் கோவில். இந்திரன் பெண்ணாசை பிடிச்சுச் செய்யக்கூடாத அக்கிரமங்களையெல்லாம் செஞ்சுட்டு இங்கே வந்து தாணுமாலயனை வணங்கி மீண்டும் சுத்தமாயிட்டானாம். அதான் இந்திரன் சுசி அடைந்த இடமுன்னு இந்த ஊருக்கு சுசி இந்திரன் னு பேர் வந்து சுசி இந்திரமுன்னு ஆகி இப்போ சுசீந்திரம்.
அட்டகாசமான அழகான வெள்ளைக்கோபுரத்தோட கம்பீரமா நிக்குது கோயில். கோயிலுக்குள்ளே கெமெரா அனுமதி இல்லை. மூணு ரூபாய் வாங்கிக்கிட்டு அவுங்களே பாதுகாப்பா வச்சிருந்துத் திருப்பிக்கொடுத்தாங்க.
முதலில் ஸ்ரீதாணுமால்யனைத் தரிசிச்சோம். வலதுபக்கச் சுவரில் அனுசூயா கதையைச் சுருக்கமா(?) எழுதிப் படமாவும் வரைஞ்சு வச்சுருக்காங்க. இப்பவும் இரவு நடுநிசியில் தேவர்கள், தேவர்கோன் எல்லாம் வந்து இவரைப் பூஜிச்சுட்டுப் போறாங்களாம்.( அப்ப ...இந்திரனின் அக்கிரமங்கள் இன்னும் ஓயலை போல!!!) தினமும் இரவு அவுங்க பூஜிக்கத் தேவையான பூஜைப்பொருட்களை கர்ப்பக்கிரகத்தில் வச்சுட்டுக் கோவிலைச் சாத்துவாங்களாம். காலையில் பார்த்தால் இரவு பூசிச்ச அடையாளம் இருக்குமாம். இதுலே என்னன்னா...... ராத்திரி பூஜைப்பொருட்கள் வச்சுட்டுப்போற நம்பூதிரிகள்/ போத்திகள் காலையில் கோவில் திறக்க வருவதில்லையாம். ஷிஃப்ட் போட்டுக்கிட்டு வேற ஒருத்தர் வந்து பூஜை சாமான்களை அகற்றுவாங்களாம். வச்சவரே வந்தால் பூஜை நடந்துச்சா இல்லையா என்ற விவரம் வெளி வந்துருமுல்லே?

மக்கள் மனசுலே உண்டாக்குன நம்பிக்கையை நீட்டிவைக்க இப்படியும் ஒரு வழி கண்டுபிடிச்சவங்களைச் சொல்லணும்:-)))) போகட்டும்...நம்புனாத்தானே சாமியே. இல்லையா? ஆனா ஒன்னு இந்திரனையே மன்னிச்சுச் சுத்தம் பண்ணவர் 'நம்மையும் மன்னிச்சு விட்டுருவார்' ன்னு மக்கள் நினைச்சுக்கப்பிடாது, ஆமாம்.

பொதுவா சிவன் கோவில்களில் நவகிரக சந்நிதிகள் இருக்கும் பாருங்க. இங்கே நவகிரக மண்டபம் இருக்கு. மண்டபத்தின் உட்புறமா இருக்கும் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களில் நவகிரக நாயகர்களைச் செதுக்கி வச்சுருக்காங்க. அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டுக்கணும். மண்டபத்தைச் சுத்திவந்துட்டு மேடையில் விளக்குகளை ஏற்றிவச்சு வழிபடும் வழக்கம். மேடை பூராவும் கார்த்திகை தீப விளக்குகள் போல ஜொலிப்பான ஜொலிப்பு. கூடவே எண்ணெய் சிந்திக் கருப்பாவும் இருக்கு(-: சின்னத் தட்டுகளில், சின்னதா ஒன்பது அகல்களை வச்சுத் திரிபோட்டு விக்கறாங்க. வாங்கிக் கொளுத்துது சனம்.

அநேகமா இப்பெல்லாக் கோவில்களிலும் எண்ணெய்/நெய் விளக்குகள் விக்கறாங்க. அப்படியே வாங்கிக் கொளுத்திட்டு வந்துடலாம். முந்தி ஒரு காலத்துலே கோவிலுக்குப் போகும்போது ஒரு சின்னக் கிண்ணத்துலே எண்ணெய் எடுத்துக்கிட்டுப் போவோம் அது நினைவுக்கு வந்துச்சு. இப்ப இதெல்லாம் ஒன்னும் மெனெக்கெட வேணாம். காசை மட்டும் கொண்டுபோனால் எல்லாம் கிடைச்சுருது. காலம் மாறித்தான் போச்சு.

மூலவர் இங்கே சிவன்தான். லிங்க ரூபத்தில் இருக்கார். அந்த லிங்கத்துலேயே பிரம்மா, விஷ்ணு செத்துக்கி இருக்கு. இந்தத் தாணுமால்ய சுவாமியைக் கலியாணம் செஞ்சுக்கத்தான் பகவதி காத்துருந்தாங்க.(மூணு பேரையும் இல்லை. சிவனை மட்டும்) அந்தக் கல்யாணம் நடக்காமப்போனதால்தான் இன்னும் பகவதி, கன்னியாகவேக் குமரி முனையில் காத்து நிற்கிறாங்கன்னும் ஒரு கதை இருக்கு. கன்யாகுமரி பெயர் வந்த காரணம் இதுதான். (குறுக்கே புகுந்து கல்யாணத்தை நடக்கவிடாமச் செஞ்சப் 'புண்ணியம்' கட்டிக்கிட்டவர் நாரதர். நடக்கபோகும் நல்ல காரியத்தைக் கெடுக்கும் மனுசங்க இவர்கிட்டேதான் ட்யூஷன் படிக்கறாங்க போல)
புள்ளையாருக்குப் பொண் வேஷம் போட்டு விக்னேஸ்வரின்னு சொல்றாங்க. இருக்கட்டும், கடவுள்கள் ஆணாவும் பெண்ணாவும் எல்லாமாவுமா இருக்கணும்தானே? கோயில் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. சிற்பங்கள் அற்புதம்தான். இங்கே இருக்கும் ஹனுமான் ரொம்ப விசேஷம். பதினெட்டு அடி உயரத்தில் லேசா வளைஞ்ச முதுகோடு நிக்கிறார். கோயில்வேலைகளுக்காக நிலத்தைத் தோண்டும்போது கிடைச்ச சிலையாம். கொஞ்சம் முறைச்சுப் பார்த்துப் பல்லை எல்லாம் காமிக்கிறார்.
(எதிரில் கண்முன்னால் நடப்பதைப் பார்த்து வந்த எரிச்சலோ என்னவோ)
சுட்டபடம்:-)

இருபது ரூபாய்க்கு அஞ்சு பாட்டில் பன்னீரும், வாழை இலையில் கட்டுன வெண்ணையுமா ஒரு செட் அங்கே அவர் முன்னாலேயே கனஜோரா விறபனை ஆகுது. நாமும் ஒரு செட் வாங்கினோம். அனுமார் சிலையில் முகம் எல்லாம் வெண்ணையா ஈஷி வச்சுருக்கு. வெண்ணெய் சாத்தறாங்களாம். அவருக்கு முன்னால் வலது பக்கம் ஸ்டேண்டு போல அடிச்சுருக்கும் பலகையில் நாம் வாங்குனதை வச்சுடணும். தடுப்புக்கு அந்தப் பக்கம் இருந்து ஒருத்தர் பாட்டில்களைத் திறந்து பரபரன்னு 'பன்னீரை' ஒரு பாத்திரத்தில் ஊத்தறார். பாத்திரம் நிறைய நிறைய, அது மறுபக்கத்துக்கு போகுது. சில சமயம் திறக்காத பாட்டில்களுமே அந்தப் பக்கம் போயிருது. அதேபோல வெண்ணை வாழை இலைப்பொதியும் திறக்காமலேயே போய்க்கிட்டு இருக்கு.
ரீசைக்கிளிங் முறை ரொம்பவே விறுவிறுப்பா, ஒரு சுறுசுறுப்போட நடக்குறதைப் பார்த்துக் கொஞ்சம் ஆச்சரியம் அடைஞ்சதென்னவோ உண்மை. இல்லேன்னா விலைவாசி இருக்கும் நிலையில் அஞ்சு பாட்டில் பன்னீர் பத்து ரூபாய்க்கு........????? ஒருவேளை அது FUN நீராவும் இருக்கலாம்:-)
நல்ல கூட்டம். கோவிலைச் சுத்திட்டு வெளியே வந்தோம். கோவில் குளம் அழகான நீராழி மண்டபத்தோடு படு சுத்தமா இருக்கு. பார்க்கவே ரொம்ப அழகு.

தொடரும்......:-)

Sunday, May 24, 2009

வட்டவட்டமா ஒரு கோட்டை .........(2009 பயணம் : பகுதி 28)

கண்ணைத்திறந்ததும் கெமெராவைக் கையில் எடுத்துக் கடமையைச் செய்தேன்:-) தினம் சூரியனுக்காகக் காத்திருக்கும் கூட்டம், அதேபோல கொஞ்சமும் சோம்பலில்லாமல் வந்து கடற்கரையில் நிக்குது. படகுத்துறைக் கட்டிடமும், மக்களுக்காகக் காத்திருக்கும் படகுகளும் இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடலை. அதோ...... தங்க நிறத்தண்ணி. வந்துட்டான்ய்யா வந்துட்டான்....... கையில் பிடிச்சுப் பார்த்தேன்:-)
அய்யன் அமைதியில் உறைஞ்சுகிடக்கார்
காத்திருக்கும் சனம்


வர்றான்.....


வந்துட்டான்ய்யா ............வந்துட்டான்

எட்டுநாளாச்சு ரயில் டிக்கெட் புக் பண்ணி. இன்னும் அது கன்ஃபர்ம் ஆகலையேன்னு கோபாலுக்கு மனசுலே ஒரு கவலை. வலையிலே போய் அலசினாலும் விவரம் ஒன்னும் அகப்படலை. 'லாலுவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பலாமா?' போறவழியில் ரயில்வே நிலையத்தில் போய் விசாரிச்சுக்கலாம். மனுசனுக்கு மன அமைதி முக்கியம்.

ரயில் நிலையக் கட்டிடமே அழகா அம்சமா இருக்கு. கோபால் மட்டும் விசாரிக்கப் போயிருந்தார். 'நீங்க என்ன வேலை செய்றீங்கம்மா?' கேட்டது ரமேஷ்தான். 'பதிவு' என்பதை மனசுலே மெள்ள முணுமுணுத்துக்கிட்டு வெளியில் 'எழுத்தாளர்'னு சொன்னேன்!!!
ரவிவர்மாவின் 'பெண்கள்' ஹொட்டேல் வரவேற்பில்

நேற்றைய மாலை அலங்காரம்(அதான் பூ மலர்ந்துபோச்சு)

ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டதுபோல ஆகிருச்சு அவர் முகம். (இன்னும் எழுத்தாளர்கள்ன்னா ஒரு மதிப்பு இருக்கு நம்ம பக்கங்களில், இல்லே? அதைக் காப்பாத்திக்கணும், நான் இப்போ)

எந்தப் பத்திரிக்கையில் எழுதறீங்க? அந்த ஊர்லேயான்னார். இண்டர் நெட்டுலே எழுதறேன்னு சொன்னதும்.....ஏதோ அதிசயமான விஷயமுன்னு நினைச்சுக்கிட்டார். படம் எடுக்கணுமுன்னா சொல்லுங்க. அங்கங்கே நின்னு எடுத்தறலாமுன்னார். சின்ன வயசுலே படிக்காமக் கோட்டை விட்டுட்டோமேன்னு சரியான கவலை நம்ம ரமேஷ் பாஸ்கர்(முழுப்பெயர்) மனசுலே. குறைஞ்சபட்சம் ஒரு ஈமெயில் வச்சுக்கணுமுன்னு பார்க்கறாராம். மனைவி படிச்சுருக்காங்க. மருந்தாளுனர். ஆனா இன்னும் வேலை கிடைக்கலையாம். அஞ்சு வயசுலே ஒரு பையன் இருக்கான். இப்ப ரெண்டாவது பொறக்கப்போகுது.

இதுக்குள்ளெ கோபால் வந்துட்டார். வெயிட்டிங் லிஸ்ட்டுலே நாம்தான் முதலா இருக்கோம் என்றதால் பிரச்சனை இல்லையாம். ஆனாலும் இன்னும் கன்ஃபர்ம் என்ற சேதி வரலையாம்.

கடுகு பெறாத விஷயமுன்னு சொல்றாப்புலே இந்த மிளகு விஷயத்துக்காக காயங்குளம் ராஜாவுக்கும் திருவிதாங்கூர் ராஜாவுக்கும் மனக்கசப்பு தொடங்கி இருக்கு. நாம் போய் மிளகு அள்ளிக்கலாமுன்னு நினைச்சோ என்னவோ டச்சு நாட்டுக் கடற்படை அதிகாரி அட்மிரல் Eustachius De Lannoy என்றவர் கொளச்சல் துறைமுகத்துக்கு வர, அங்கே இருந்த திருவாங்கூர் ராஜாவின் படையுடன் மோதலாகிப் போச்சு. இது பத்தின கதைகூட ஒன்னு இருக்கு. டச்சுக்காரன் சண்டைக்கு வந்துட்டான். அவன்கிட்டேயோ பீரங்கி இருக்கு. ராஜாவோட ஆட்கள் பார்த்தாங்க என்ன செய்யலாமுன்னு. கடலோரம் இருந்த மீனவர்களை உதவிக்குக் கூப்புட்டுக்கிட்டு, நல்ல பனைமரங்களைப் பெரிய துண்டுகளா நீளமா வெட்டி எடுத்துக்கிட்டு மாட்டு வண்டிகளைக் கொண்டுபோய்க் கடலோரம் வரிசையாச் சாய்ச்சு நிறுத்தி ஒவ்வொன்னுலேயும் பனைமரத் துண்டங்களைச் சாய்ச்சு வச்சுருக்காங்க. தூரத்துலே இருந்து பார்க்கும்போது பீரங்கி வண்டிகள் வரிசையா எக்கச்சக்கமாக் கடலோரம் நிக்குது. 'ஆத்தாடி..... எதிரி இத்தனை பீரங்கி வச்சுருக்கானா? பெரிய ஆளா இருப்பாம்போலெ..தொலைஞ்சோம் நாம்'ன்னு பயம் வந்துருச்சு டச்சுக்காரர்களுக்கு. இது போதாதா? சண்டையில் இவுங்க தோத்து, டிலென்னாயைக் கைதியாப் பிடிபட்டாச்சு. கைது செஞ்சது ராஜா மார்த்தாண்ட வர்மாவின் தம்பி. சிறையிலும் போட்டாச்சு. அப்ப டிலென்னாயின் போர்த்திறமைகள், பீரங்கி இயக்கும் வல்லமை எல்லாம் பார்த்துட்டு மகாராஜா மார்த்தாண்டவர்மா, தன்னுடைய படையிலேயே அவரைத் தளபதியாச் சேர்த்துக்கிட்டார். அதுக்குப்பிறகு திருவிதாங்கூர் ராஜாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதெல்லாம் தனிக்கதை. 'கொளச்சல் போர்' இப்படின்னு சரித்திரம் சொல்லிக்கிட்டுப் போகுது. இன்னும் ஆழமாப் படிக்கணுமுன்னா வலையில் கொட்டிக்கிடக்கு. எல்லாம் ஒரு முன்னூறு வருசச் சமாச்சாரம்தான்.சரியாச் சொன்னால் 1741 லே நடந்த சண்டை.
கோட்டை முகப்பு

ராஜாவின் தேசத்தைப் பலப்படுத்தன்னு ஏற்கெனவே பாண்டிய மன்னர்கள் காலத்துலே கடலோரம் கட்டி இருந்தக் கோட்டையைப் பலப்படுத்தி இருக்கார் இந்த டிலென்னாய். கருங்கல் கோட்டையின் உயரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தி இருக்கார் இவர். சிமெண்ட், காரை ன்னு பயன்படுத்தி இருக்காங்க. நாம் பார்க்கும்போது ரெண்டு வெவ்வேறு பொருட்களால் கோட்டைக் கட்டி இருப்பது தெரியுது. துப்பாக்கி வச்சுச் சுடத்தோதா கோட்டை மேல் சுவரில் மறைவிடங்களும், படைவீரர்கள் ஒளிஞ்சு நின்னு தாக்கும் விதமாவும் கட்டி வச்சுருக்கார். (அதுவும் சரி. பாண்டியர்கள் காலத்தில் துப்பாக்கி ஏது?) கடல் பக்கம் இருந்து எந்த எதிரிகளும் தாக்கமுடியாத அளவில் இது உருவாகி இருக்கு.
கோட்டை உள்

மூணரை ஏக்கர் பரப்பு இருக்கு இந்த கோட்டைக்கு. உள்ளே மூணு பக்கங்களிலும் போர்வீரர்கள் தங்க மண்டபம் . நட்ட நடுவில் ஒரு குளமும், எண்கோணக் கைப்பிடிச்சுவர் வச்சக் கிணறுமா வெட்டி வச்சுருக்கு. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் பாண்டியர்களின் இலச்சினையான மீன் சின்னம் செதுக்கி வச்சுருக்காங்க. கோட்டை மதில் சுவர்கள் அஞ்சடி அகலம் வரும்போல. ரெண்டு ஆள் படுக்கலாம். புல்வெளிகள் பச்சைப்பசேலுன்னு கண்ணுக்குக் குளிர்மை. நல்ல விஸ்தீரணம்.

பாண்டியரின் மீன்

கோட்டையில் இருந்து ராஜாவின் அரண்மனைக்குப் போக நாலடி அகலச் சுரங்கமும் ஒன்னு இருக்கு. நாப்பது கிலோ மீட்டர் நீளமாம். நம்ம மக்கள் அதுக்குள்ளே போய்க் 'கடலை' போட ஆரம்பிச்சதையொட்டி, இப்பச் சுரங்கப் பாதையை மூடி வச்சுட்டாங்க. படைவீரர் தங்கும் மண்டபம்

டிலென்னாயின் காலத்தில் பீரங்கி வண்டிகளை உருட்டி மேலே மதில் சுவத்துக்கருகில் கொண்டு போகன்னு ஒரு ஏற்றப்பாதையைச் சரிவாக் கட்டிவச்சுருக்காங்க. கோட்டையில் மதில் சுவருக்குப் போக இடதுபக்கம் கருங்கல் படிகள் வசதியும் இருக்கு. மேலே ஏறிப்பார்த்தோம். ஹோன்னு கடல் ஆர்ப்பரிக்குது. கடற்கரை மணலில் கருப்பாப் படிஞ்சிருக்கு. தோரியம், யுரேனியம் இப்படித் தாதுக்கள் நிறையப் படிஞ்சுருக்கும் மண்ணாம். சாதாரண மணலை விட அங்கத்து மண் அஞ்சு மடங்கு எடை கூடுதலா இருக்குதாம்.
கருப்பு மண் கடற்கரை

எழுத்தாளருக்கான விவரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக்கிட்டு இருக்கார் ரமேஷ்:-)))
ரமேஷ் & கோபால்

கோட்டை இப்போது அரசுவின் தொல்பொருள் இலாக்காவின் கையில். நல்லாப் பாதுகாத்துச் சுத்தமா வச்சுருக்காங்க. அதுக்கே ஒரு பாராட்டு தந்தாகணும். ஆனா உள்ளே இருக்கும் சுத்தத்தைப் பழிவாங்கும் ஆவேசம் நம்ம மக்களுக்கு இருக்கே(-: வேலியா போட்டு வைக்கிறே..... இப்பப் பார் , வேலியை ஒட்டி நான் குப்பையைப் போடாட்டா.... என் பெயர் பொது சனமில்லை! எல்லா அழுக்கும் வேலிக்கே(-:

கோட்டைக்கு வெளியே குடிதண்ணீர் ஏற்பாடு காங்ரீட் குடத்தில் இருக்கு. பிடிச்சிருக்கு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

வட்டக் கோட்டையை, மலையாளக்கரை மொழியில் 'வட்டு'க் கோட்டை ஆக்காமல் விட்டதுக்கே ஒரு நன்றி சொல்லிக்கணும்:-)

அடுத்த ஸ்டாப்பா எங்கே போறோம்? சொல்லப்போறக் கதையைக் கேட்டுக்கிட்டே கூட வாங்களேன்.

டிவி சீரியல்கள் எல்லாத்துக்கும் முன்னோடி. குடும்பக் கதை. அதிலும் மாமியாரும் மருமகளும் அண்ணியும் அத்தையுமா சும்மாக் கலந்துகட்டி நடிச்சது. 'அப்பாவியான ஆம்பிளைகளும்' அவுங்க பாகத்தை நல்லாச் செஞ்சுருக்காங்க.
வட்டக்கோட்டை ஆல்பம்

தொடரும்..................:-)))))

Thursday, May 21, 2009

கடலோரக் க(வி)தைகள்.........(2009 பயணம் : பகுதி 27)

படம் எடுக்கணுமுன்னா சொல்லுங்கம்மா. வண்டியை நிறுத்தறேன்னு சொல்லியிருக்கார். ஆனா.... கண் கவனிச்சு, வாய் நிறுத்துங்கன்னு சொல்றதுக்குள்ளே ஒரு நூறுமீட்டராவது போயிருப்போம் என்பதுதான் உண்மை. குறுகிய சின்ன ரோடு. ஆனாலும் அதிலும் வேகமாவே ஓட்டிக்கிட்டுப்போறார் ரமேஷ். 'சரேல்'ன்னு கார் ஒரு கோயிலைக் கடந்துபோச்சு. கொல்லங்கோடு பகவதியாம். ஆஹா....விடறதில்லை......நிறுத்தச் சொல்லி இறங்கினேன். மகாதேவர் க்ஷேத்ரம், பக்கத்துலே பகவதி. விழா நடக்கும்போது அடுத்துள்ள பரம்பு முழுசும் கூட்டம் நிறைஞ்சு வழியுமாம். பத்து லட்சம் மக்கள் கூடுனா பின்னே வேற எப்படி இருக்கும்?


கோயில் திறக்க இன்னும் ஒன்னரை மணி நேரம் ஆகுமாம். நமக்கேது நேரம்? வளாகத்தில் நின்னு நாலு படம் எடுத்துக்கிட்டேன். கோவிலின் முன்வாசக்கதவுகளில் ஒன்னு மட்டும் திறந்து இருந்துச்சு. அதனூடே ஒரு பார்வை. நந்தி உக்கார்ந்துருக்கார். அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சு:-)))) வர்ட்டா மஹாதேவா.... வர்ட்டா பகவதி!

ரமேஷிடம் பேச்சோடு பேச்சா... சூரிய அஸ்தமனத்தை நேத்துப் பார்க்க முடியலை. போறவழியில் சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டதுதான் ......
அதைப்பத்துனக் கவலையை விடுங்க. போறவழியெல்லாம் கடற்கரைகள்தான் பாத்துறலாமுன்னு ஊக்கம் கொடுத்தார். கொளச்சல் பீச்சுக்குப் போனோம். கடலில் pier கட்டிவிட்டுருக்கு. அந்த முனையில் நின்னு கதையடிச்சுக்கிட்டுக் கிடந்தாங்க சில இளவட்டங்க. சின்னத் துறைமுகம். அதுக்கேத்தமாதிரிச் சின்னக் கப்பல்களா அங்கங்கே நின்னுருந்துச்சு.


கொளச்சல்
Pier....peer.....Beer

முன்சிறை ஊராட்சி 'எல்கை' ஆரம்பமுன்னு ஒரு போர்டு பார்த்தேன்.
தேங்காபட்டினம் வழியா வந்துக்கிட்டு இருக்கோம். கொளச்சல் கடந்தப்ப இந்தப் பெயரை எங்கோ கேட்ட நினைவு. அடுத்த நிமிஷம் பூச்சிக்காடு, வெள்ளியாவிளை தாண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்துட்டோம். கோயில் என்னவோச் சின்னதுதான். ஆனால் கீர்த்தி ரொம்பப் பெருசுபோல! கொடிமரம் தாண்டுனதும் இருக்கும் ஹாலின் கடைசியில் கண்ணுருட்டிப் பார்க்கும் பகவதி. வாசல் கேட்டில் இருந்து பார்த்தாலும் சாமியைச் சேவிச்சுக்கலாம். பெரிய உருவம்தான். நம்ம பக்கங்களில் மாரியம்மன் கோவில் அநேகமா எல்லா ஊரிலும் இருப்பதுபோலத்தான் கேரளாப் பகுதிகளில் பகவதி கோயில்கள். எல்லாம் சக்தி வழிபாடுகள்தானே?


மண்டைக்காடு கோவில்
இந்த பகவதிகளில் முக்கியமானவர்களா மட்டும் ஏழோ இல்லை ஒன்பது பேரோ இருக்காங்களாம். எல்லாம் பராசக்தியின் வெவ்வேறு அம்சங்கள். கொடுங்கல்லூர், கொல்லங்கோடு, மண்டைக்காடு, ஆற்றுக்கால், சோட்டானிக்கரை, செங்கண்ணூர் இப்படி. கிடைச்ச பகவதிகளை நாமும் விடக்கூடாதுல்லே? நாமும் சென்னையைச் சுத்தியே மாங்காடு, திருவேற்காடுன்னு வச்சுருக்கோமுல்லே. சக்திபீடங்கள்ன்னு ஒரு 51 இருக்கே!!
கோயில்திருவிழா வருதாம். அதுக்காகக் கோவிலைச் சுத்தி எக்கச்சக்கமான பொரிகடலை & தீனிக்கடைகள். இதெல்லாம் இருந்தாத்தானே திருவிழாக் களைகட்டும்!! கோவில் வளாகத்தில் முன்பகுதியைத் தவிர மற்ற மூணு பாகங்களில் செங்கல் வச்சு அடுப்பாக்கி, அதைப் பொங்கல் வைக்குமிடமா ஆக்கி வச்சுருக்காங்க. நூத்துக்கணக்கான அடுப்புகள். தினமும் மக்கள்ஸ் வந்துப் பொங்கிப் படைக்கிறாங்க போல. நாங்க போனப்பவும் நாலைஞ்சு அடுப்புகள் தீமூட்டிக் கிடந்துச்சு. பானைகளில் பொங்கல் கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு. கோயில் குழாயில் ஒரு சின்னப் பையன் அம்மாவுக்கு உதவியாப் பொங்கப்பானைக்குத் தண்ணீர் பிடிச்சுக் கொண்டுவந்து தந்தான். எல்லாம் சரி. ஆனால் சமையல் முடிச்சதும் இடத்தைச் சுத்தம் பண்ணக்கூடாதோ? பேப்பர்களும் குப்பையுமா நல்லாவே இல்லை(-:

கோயிலைச் சுத்திவந்தப்ப வெடிவழிபாடுன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒருத்தர் உக்காந்துருந்தார். விசாரிச்சப்ப.... பத்துரூபாய் கொடுத்தால் ஒரு வெடி வெடிப்பாங்களாம். ஆடு வெட்டறோம், பொங்கல் வைக்கிறோமுன்னு பிரார்த்தனை செஞ்சுக்கறதுபோல 'சாமி, உனக்கு வேட்டு வைக்கிறோமு'ன்னு நேர்ச்சை வைக்கிறதா? சிலர் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு பணம் கட்டி வெடி வழிபாடு செய்யவாங்களாம். பேசாம் ஒரு பத்து கொடுத்து நானும் வந்தேன்னு 'ஆஜர்' வெடி வெடிக்கலாமான்னு ஒரு எண்ணம் வந்ததென்னமோ உண்மை:-)
மரக் கை, கால், ஆள் ரூபம், மண்டைப்புற்று கிடைக்குமுன்னு ஒரு அறிவிப்புப் பலகை கண்ணுலே பட்டது. ஒவ்வொருத்தருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை, அதுக்கேற்றமாதிரி நேர்ச்சைகள் பலவிதம்.

முட்டம் பாறைகளில் அலை



அடுத்துப்போன இடத்தின் அழகை அப்படியே பாரதிராஜா கொண்டாந்து ஊருலகத்துக்குக் காட்டிட்டாரே! தெருவெல்லாம் கருவாட்டு மணம்வருதான்னு கவனிச்சேன். பதிவர் சிறில் அலெக்ஸ், அவர் பங்குக்குத் தன் புத்தகத்தில் சொல்லி வச்சதெல்லாம் நினைவுக்கு வருது. முட்டம் கடற்கரை. லேசான வெளிறிய சிகப்புக் கலந்த மணல். கடற்சிப்பிகள் (மஸ்ஸல்ஸ்) ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கும் பாறைகள். பெரிய பெரிய அலைகளா வந்து பாறையில் அடிச்சுத் திரும்பும் ஓயாத சப்தம். சின்னதா ஒரு கலங்கரை விளக்கம். பெரும்பாறைகளுக்கிடையில் கட்டப்பட்ட வீடுகள். இந்தப் பக்கம் பாறைகளுக்கிடையில் போய் பத்திரமா நின்னுக் கடலைப் பார்க்கும் வகையில் பாதுகாப்புக் கம்பிகள்ன்னு அம்சமாத்தான் இருக்கு. குளிக்கும் மக்களுக்காக உடைகள் மாற்றும் அறைகள்கூட கட்டிவச்சுருக்காங்க. புதுக்கருக்கழியாம நிக்குது. இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கலை போல. எந்த மந்திரிக்காகக் காத்துக் கிடக்கோ? நம்மைப்போல நாலைஞ்சுபேர் வந்துருந்தாங்க. என்ன இருந்தாலும் சினிமாப்புகழ் பெற்ற இடம் இல்லையா? ஊருக்குள்ளே போகாமல் கிளம்பினோம். அழகான சர்ச் ஒன்னு கண்ணில் பட்டது. சூரியன் அஸ்தமிக்க இன்னும் நேரமாகும்போல இருக்குன்னு அடுத்த பீச்சுக்குப் போனோம். சூரியன் மேற்கேயும் நாங்கள் கிழக்கேயுமாப் பயணிச்சாலும் இன்னிக்கு அவனை விடுவதில்லைன்னு ஒரு துரத்தல்.

'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நாந்தான் ஐயா.....' சத்தமாப் பாடலாமான்னு ஒரு வேகம் வந்துச்சு. அதான் பேண்டு வாத்தியத்தில் வாசிச்சுக்கிட்டு ஒரு கல்யாண ஊர்வலம் கண்முன்னே போகுதே. அட! இந்தப் பாட்டுதான் வாசிக்கிறாங்க.... உனக்கு எப்படித் தெரியுமுன்னு கோபாலுக்கு வியப்பு. ஆஹா..... இதுமட்டுமா.... 'எனக்கு என்னெல்லாம் தெரியுமுன்னு உங்களுக்குத் தெரியவே தெரியாது'ன்னு கொஞ்சம் அலட்டிக்கிட்டேன்.

கறுப்பு பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு வெள்ளை மல்லிகை மாலையில் கம்பீரமா இருக்கார் மாப்பிள்ளை. கோலாகலமான ஊர்வலம். கடற்கரையில் இருக்கும் சிலுவைக் கம்பத்தைச் சுத்திக்கிட்டுப் போறாங்க. பெரிய டிஜிட்டல் பேனரில் மணமக்களுக்கு வாழ்த்துக்களை அறிவிக்கும் குடும்பம். கல்யாணம் இராஜாக்கமங்கலம்துறை, புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடந்ததாம். இந்த ஊருக்குப்பேர் பெரியகாடு. அழகான கடற்கரை. எதுத்தாப்புலே அந்தோனியார் தேவாலயம். அதுக்கு வலது பக்கம் கலையரங்கமுன்னு ஒரு மேடை. ஓப்பன் ஏர் தியேட்டர். மக்கள்ஸ் எல்லாரும் ஜாலியா கடற்கரை மணலில் சாய்ஞ்சு படுத்து நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். இடது பக்கம் சாவடி போல் இன்னொன்னு. சண்டே ஸ்கூல் நடத்துமிடமாவும் இருக்கலாம். இதோ உன் தாய் ன்னு எழுதிவச்சுருக்கு. தேவாலயத்தினுள்ளில் பார்வையை ஓடவிட்டேன். தூரத்தில் லேசான நீலவண்ணத்தில் குழந்தை ஏசுவைக் கையிலேந்தி நிற்கும் அந்தோனியார் உருவம். சென்னையில் இருந்த காலத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் பாரீஸ்கார்னர் அருகில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குப் போனது நினைவுக்கு வந்தது.

அரங்கத்தில் அஞ்சாறுபேர் அமர்ந்து அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. எவ்வளவு அழகான இடத்தில் வசிக்கிறோம் என்ற ப்ரக்ஞை இருக்குமான்னு தெரியலை. எவ்வளவு அமைதியான இடம். இந்தப் பயணத்தில் இப்படிக் கடலையொட்டியக் கிராமங்களைப் பார்க்கும்தோறும், 'ரிட்டயர் ஆனதும் பேசாம இங்கே வந்து வீடு ஒன்னு கட்டிக்கிட்டு இருந்துறலாமா'ன்னு மனசு சொல்லும். இப்பவும் சொல்லுச்சு. நிறையவாட்டிச் சொல்லுச்சுன்னு வையுங்க:-)))))

கல்யாண சீதனமாக் கட்டில், மெத்தை, பீரோ இன்னபிற சாமான்கள் கொடுக்கும் வழக்கம் இன்னும் நீடிக்குது போல இருக்கு. ஒரு லாரியில் சாமான்கள் போய்க்கிட்டு இருக்கு. இங்கேயும் சூரியனைத் துரத்துவதுதான் இங்கேயும் நடந்துச்சு. நம்மைப் பார்த்து நடுங்கி மேகத்துக்குள் போய் ஒளிஞ்சுக்கிட்டான்...சரியான பயந்தாங்குளி. சலோ அடுத்த பீச்.


புத்தளம் பேரூராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. கடலுக்கு முகப்பு வாசல் அலங்காரம். கடற்குதிரைகள், சங்கு, சிப்பி இப்படிக் கடல்வாழ் இனங்களா அலங்கரிச்ச தோரணவாயில். கடற்கரைக்கு இறங்க அகலமான படிக்கட்டுகள். ரெண்டு பக்கமும் சிங்கங்கள். இடதுபக்கம் சுழல்படிக்கட்டுகளுடன் ஒரு வியூ மாடி. அட்டகாசமா இருக்கு. ஆனால் சூரியன் வெளியே வரவே இல்லை. விளக்கும் வச்சாச்சு.

கன்யாகுமரி வந்தப்ப நல்ல இருட்டு. விவேகானந்தர் நினைவு மண்டபம் அழகான ஜொலிப்பில் மனசுக்கு ஆறுதல் சொன்னது. நாளைக் காலை எட்டுமணிக்கு ரமேஷுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தோம்.

வரவர ஆல்பங்களின் எண்ணிக்கைக் கூடிக்கிட்டே போகுது. நண்பர்களின் வசதிக்காகத் தனித்தனியாப் போட்டுருக்கேன். அந்தந்த ஊர்க்காரர்கள் அவுங்கவுங்க ஊரைப் பார்த்துக்கிடுங்க:-)))

கொல்லங்கோடு

கொளச்சல்

மண்டைக் காடு

முட்டம்

பெரியகாடு

புத்தளம்

தொடரும்.......:-)