Sunday, June 28, 2009

போண்டா இல்லாத பதிவர் சந்திப்பு சாத்தியமா?.........(2009 பயணம் : பகுதி 37)

ஊஹூம்....இல்லவே இல்லை. பதிவர் உண்மைத் தமிழனுடன் ஒரு தனிக்கூட்டம். அதான் மூணு பேர் இருந்தோமே. மனுசர் எழுதறதுலேதான்
'நான் ஸ்டாப்.' நேரில் பார்க்க ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கார். 'எப்படிங்க டீச்சர்........'னு நாத்தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டுட்டார். நான் பேச அவர் கேக்க, அவர் கேக்க நான் பேசன்னே நேரம் போய்க்கிட்டு இருந்துச்சு:-)
வேலைக்கிடையில் வந்துருந்தாரேன்னு பேச்சைச் சுருக்கமா (!)முடிச்சுக்கிட்டேன். சந்திப்பு நிகழ்ந்த இடம் பாலாஜி பவன், தி,நகர்.


அங்கிருந்து கிளம்பி இன்னும் சில வேலைகளை முடிச்சுக்கிட்டு இன்னொரு 'பிரபல எழுத்தாளர்' நண்பரை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்தோம். எல்லாம் அவரவர் வேலை செய்யும் இடங்களுக்கருகில் இருந்த ஒரே காரணம்தான். 'உன்னைப்போல் ஒருவன்' பற்றியே நிறையப் பேசினோம். அந்த டிஸ்கஷனில் இருந்துதான் கொஞ்சநேரம் ஒதுக்கி நம்மைப் பார்க்க வந்தார்.

அவரைச்சந்திச்ச கையோடு இன்னொரு பதிவர் சந்திப்பு. (வயதில்) மூத்த பதிவரைப் போய்ப் பார்த்தோம். ரொம்ப நாளா...இல்லை ரொம்ப மாசங்களா ஒன்னுமே எழுதாதவர். அவர் குடும்பமே என்னை தத்து எடுத்துக்கிட்டு இருக்கு:-))) சலோ சாலிக்ராமம்னு போய் மாமாவின் குடும்பத்துக்கு ஹலோ சொல்லிட்டுக் காவேரி விநாயகரையும் கண்டுக்கிட்டு வந்தோம். கோயில் சந்நிதிகள் அடைச்சுட்டாங்க. அதனால் என்ன? அவர் நம்மைக் கவனிச்சுக்கிட்டுத்தானே இருக்கார். எத்தனைமுறை வந்துருக்கோம்! அப்படி மறந்துருவாரா என்ன? குருக்களுக்கே நம்மை நினைவிருக்கும்போது.....
கோயிலில் குடமுழுக்குக்கான வேலைகள் அந்த இரவிலும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அருமையான தேக்குமரக் கதவுகள் தயாரா இருக்கு முன்வாசலுக்குப் பொருத்த. மாமாதான் கோவில் ட்ரஸ்டி என்பதால் இது நம்ம சொந்தக் கோயில்(மாதிரி)

பேருதான் பிள்ளையார் கோவில். ஆனால் ஸ்ரீராமலக்ஷ்மணர், சீதா, அஷ்டபுஜ துர்கை. அனுமான், முருகன், நவகிரகங்கள்,அகஸ்தீஸ்வரர், ஐயப்பன் இப்படிக் குட்டிக்குட்டிச் சந்நிதிகள் உண்டு. நம்ம தமிழ்சினிமா மாதிரிதான். எல்லோரையும் ஏதோ வகையில் திருப்திப் படுத்தணும். இந்தக் கோயிலுக்கும் கோலிவுட்டுக்கும் சம்பந்தம் நிறைய இருக்கு. சினிமா ஆட்கள் ஸ்பெஷல் பூஜை எல்லாம் போட்டுப் படத்தை நல்லா ஓடவைக்க புள்ளையாருக்குக் கோரிக்கை வைக்கிறாங்க. நம்ம புள்ளையாரும் சிரிச்சுக்கிட்டே தரமில்லாத படங்களை ஓட வச்சுடறார், தியேட்டரை விட்டு:-)

இன்னிக்கு ஏன் இப்படி ஓட்டமுன்னு கேட்டால் (கேக்கமாட்டீங்களா?) கார் ஒன்னு வாடகைக்கு எடுத்துருக்கு. காருள்ளபோதே சுற்றிக்கொள்!

அடுத்த இரண்டு நாட்கள் உற்றார் உறவினர் வீடுகள், அங்கங்கே ஓசிச் சாப்பாடுன்னு போச்சு. இதெல்லாம் சரிப்படாது. உண்மையான ரெஸ்ட் எடுத்தே ஆகணும் என்ற நிர்பந்தத்தில் கோபால் டெல்லி ஆஃபீஸுக்குக் கிளம்பிப்போயிட்டார்.

சுத்துன கால் சும்மா இருக்குமா? அட..என்னைத்தாங்க சொல்றேன். இப்போ என்னைக் கண்கலங்காமச் சுத்த வைக்கும் பொறுப்பு அண்ணனிடம். பாசமலர் ரேஞ்சுதான் நம்மூட்டுலே. காலையில் முதல்வேலையா, 'இன்னிக்கு எங்கெங்க போகணுமுன்னு சொல்லும்மா, போயிட்டு வந்துறலாம்'பார். ஏழடுக்குக் கடை இப்போ சிங்கை முஸ்தாஃபா ரேஞ்சுக்குப் போயிருச்சாமே அங்கே போய்ப் பார்க்கலாம். அப்படியே புத்தகம் சில வாங்கிக்கணும். காரைக்கொண்டுபோய் சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கிங்கில் விட்டோம். கடைக்குப் பின்பக்கமுள்ள தெருவழியாப் போகணும். அம்பது ரூபாய் சார்ஜ். அநியாயமா இருக்கா? கவலையை விடுங்க. நேரக் கணக்கெல்லாம் கிடையாது. கடையில் சாமான்கள் வாங்கிட்டுக் காசு அடைக்கும்போது பார்க்கிங் ரசீதைக் காமிச்சால் இந்த அம்பது ரூபாயைக் கழிச்சுக்கிறாங்க. அதுவும் ஒரே ஒருமுறை மட்டுமே:-) (ஏழு மாடின்னு ஞாபகம் வச்சுக்குங்க)


காய்கறிகள் பிரிவைத்தான் எப்பவும் (சிங்கையிலும்கூட) ஆசையாப் பார்ப்பேன். எதெது நமக்கு நியூஸியில் திங்கக் கொடுத்துவைக்கலைன்னு பார்த்துப் பெருமூச்சு விடத்தான். சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, புடலங்காய் இப்படி ஏராளம். மாம்பழம், சீத்தாப்பழமுன்னு பாய்ஞ்சு எடுத்தேன். எங்கூர்லே கொட்டிக்கிடக்கும் காலிப்பூ இங்கே ஆட்டம் போடுது இப்படிக் காளியா:-) தமிழ்ப்படங்கள் பகுதியில் நாலைஞ்சு டிவிடி, பாலச்சந்தரின் பழைய படங்கள் அரங்கேற்றம். அபூர்வ ராகம், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் இப்படி. ( ஆனால் எதையும் நம்மூர் வந்ததும் பார்க்கமுடியலை. என் டி எஸ் ஸி யில் பதிவாகி இருக்கு)

புத்தக உலகத்தைத் தேடி வடக்கு உஸ்மான் ரோடில் ரெண்டு மூணுமுறை இப்படியும் அப்படியும் நடக்க வேண்டியதாப் போச்சு. நம்ம நாச்சியார் வல்லி, அது சுந்தரி ஸில்க்ஸ்க்கு எதிரில் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. இப்போ புதுசா ஒரு மேம்பாலம் வந்துருக்குன்னு கவனிச்சேன். கடைசியில் கடை மேம்பால இறக்கத்துக்கு எதிரில் ஒளிஞ்சிடுந்துச்சு. ஜில்லுன்னு ஏஸி போட்ட கடை.

இந்த முறை ஜெ.மோ.வை வாசிக்கணுமுன்னு இருந்தேன். சில தலைப்புகளைப் படபடன்னு சொன்னதும் கடைக்கார விற்பனைப்பகுதிப் பெண் கேட்டாங்களே ஒரு கேள்வி.

" நீங்க அந்த மாதிரி புத்தகம் படிக்கிறவங்களா?"

"எந்த மாதிரி?"

கொஞ்சம் 'ஙே'ன்னு முழிச்சேன். கூட்டிக்கிட்டுப்போய் ஒரு ஷெல்ஃப் முன்னாலே விட்டாங்க. ஏழாம் உலகம், காடு கிடைச்சது. நம்ம பாலாவின் அவன் அவள் அது, கையில் எடுத்தவுடன் இன்னொரு திருநங்கை எழுதிய புத்தகத்தை என் கண்முன்னே நீட்டுனாங்க. இருக்கட்டும் பிறகு பார்க்கலாமுன்னு தலையை ஆட்டினேன் வலதும் இடதுமாய். ஆசிரியர் ஒரு பதிவரா(வும்) இருக்கணும் என்ற நம்ம கண்டிஷன் அவுங்களுக்குத் தெரியாதுல்லே:-)
ரெண்டு பணியாட்கள் ஓரமா உக்காந்து பார்சல் கட்டிக்கிட்டு இருந்தாங்க. ஏனோதானோன்னு இல்லாம நல்லாப் பொதிஞ்சதைக் கவனிச்சேன். புத்தகம் வேணுமுன்னா அவுங்களே அனுப்புவாங்களாம். இந்தியாவுக்குள் தபால்செலவு இலவசம். கடையும் அதன் சேவைகளும் ரொம்ப நல்லா இருக்கு. துணிஞ்சு வாங்கலாம்.

யானைகள் அணிவகுப்பும் கையில் கேடயத்தோடு நிற்கும் படைவீரர்களுமான வரிசையைத்தாண்டிப் போய்க்கிட்டு இருக்கோம். வண்டியை நிறுத்தி இறங்கிப்போய் அந்த வி ஐ பி மரியாதையை வாங்கிக்காம 'விர்'ன்னு வி ஜி பியைக் கடந்துப் போய்க்கிட்டே இருக்கோம். அருமையான சாலை. வேகத்துக்குக் கேட்பானேன். இன்னிக்குக் காலையில் அண்ணன் கேட்டதுக்கு மறுமொழி தக்ஷிண சித்ரா.

ஆரவாரமில்லாத முகப்புக் கட்டிடம். பன்னிரெண்டு வருஷமா இந்த ஐடியாவை மனசுலே ஊறவச்சுத் திட்டம் போட்டு இதோ, இப்படி நம்ம கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துனது 1996 டிசம்பர் 14. இதுக்காகப் பாடுபட்டது ஒரு தனிமனிதரல்ல. ஒரு குழு. நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் அந்தக் காலத்துலே எப்படி இருந்தோமுன்னு வருங்கால சந்ததிகளுக்குக் காமிக்கவும் இத்தனை அருமையா ஒரு ஏற்பாடு செஞ்ச அந்தக் குழுவினருக்கு நாம் நன்றிக்கடந்தான் படவேணும். குழு அங்கத்தினரில் பெரும்பாலோர் பெண்கள் என்பது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. 33 சதவீத இட ஒதுக்கீடு இங்கே ஆண்களுக்கு:-))))

வெறும் தமிழ்நாடுன்னு ஒதுக்கிவைக்காமப் பூராத் தென்னியக் கலாச்சாரத்துக்கும் சேர்த்து உருவாக்கி இருப்பதைப் பாராட்டத்தான் வேணும். சென்னைக்கு அருகாமையிலேயே அமைஞ்சதும் ஒரு நல்ல வாய்ப்புதான். முக்கியமாப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் வந்து பார்க்க லகுவா இருக்குமே. நாளைய உலகம் அவுங்களுதுதானே? செல்வம் மிகுந்தவர் புரவலர்களாகவும் ஆர்வம் இருப்பவர்கள் தன்னார்வத் தொண்டர்களாவும் இங்கே போய் உதவி செய்யலாமாம். வரவேற்கிறார்களாம். அஞ்சாயிரம் கட்டுனா ஆயுட்காலம் முழுசும் அங்கத்தினரா இருக்கலாம். இலவச இனைப்பாச் சலுகைகள் நிறைய உண்டு. கைவினைப்பொருட்கள் செய்யும் கலைஞர்களும் இங்கே கடை விரிச்சுவச்சுருக்காங்க. எனக்கும் ஒரு யானை அரைவிலையில் கிடைச்சது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா & கர்னாடகாப் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். இதே பயணத்தில் சுவாமிமலை ஆனந்தத்தில் தங்குனதால் இங்கே அவ்வளவாச் சுவை இல்லாமப்போச்சுன்னாலும், தமிழ்நாடு நீங்கலா மற்ற மூணு பகுதிகளும் நல்லாவே இருக்கு. கர்நாடகாவுக்குப் போகும்போது மட்டும் மூக்கைக் கெட்டியா மூடிக்கணும். பயங்கர (துர்)நாற்றம். தண்ணி தராட்டா இப்படித்தான் நாறுமோ என்னவோ!

தமிழ் எழுத்துக்கள் எப்படி ஆரம்பிச்சு இப்படி இன்னிக்கு இருப்பதுபோல் உரு மாறியிருக்குன்னு ஒரு சார்ட் இருந்துச்சு. தெரிஞ்சுவச்சுக்கிட்டாக் கல்வெட்டுகளைப் படிக்கமுடியுதான்னு பார்க்கணும்:-) சின்னச் சின்னத் திண்ணைகள் வச்சக் குட்டிக்குட்டி வீடுகள். ஓலைக்கூடைகள் பின்னுவது, ஈரக் களிமண் கொண்டு பானைகள் வனைவதுன்னு கொஞ்சம் நாமும் செஞ்சுதான் பார்ப்போமே என்ற அளவில் ஆக்ட்டிவிட்டீஸ் இருக்கு. பது ரூபாய் அஞ்சு ரூபாய் என்ற அளவில்தான் இதுக்கெல்லாம் சார்ஜ். ஆங்.....சொல்ல மறந்துட்டேனே..... நுழைவுக் கட்டணம் ஒன்னும் வச்சுருக்காங்க இங்கே. பிரச்சனையில்லை நமக்கு. 75 ரூபாய்கள். வெள்ளைத்தோல் என்றால் 200 ரூபாய்கள். சின்னப் பிள்ளைகளுக்கு 20 ரூபாய்கள். பள்ளிக்கூடத்துக் குழுவா வந்தா இன்னும் கொஞ்சம் மலிவா இருக்கலாம். நாங்க போன அன்னிக்கும் பள்ளிக்கூடப் பசங்க வந்துருந்தாங்க. சேத்துப்பட்டுலே இருக்கும் பள்ளிக்கூடமாம்.


மயிலாட்டம் ஒன்னு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. மயில் வந்து சுமாரா மேளதாளத்துக்கேற்ப ஆடுச்சு. மயில்கால் போன்ற சாக்ஸ் போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும். அழுக்குக் கால்களோடு இருந்த மயிலின் 'முகம்' கடைசியில் தெரிஞ்சப்ப ஒரு பரிதாபம்தான் மனசுலே தோணுச்சு. பிள்ளைங்க ரொம்பவே ரசிச்சாங்க. குழந்தை மனம் வேணும் என்பது ரொம்பச் சரி.

கிளம்பி வெளியே வரும்போது மணி ரெண்டு இருக்கும். கல்லூரி மாணவிகள் கூட்டம் மூணு பஸ்களில் வந்து சேர்ந்தாங்க. அதில் குதிச்சு உள்ளே ஓடிவந்த அம்மணிக்குக் கால் பிசகிக்கிச்சு. வலியில் கூத்தாடச் சிசுருஷை செஞ்சாங்க ஒரு டீச்சர் (அப்படீன்னு நினைக்கிறேன். அதான் புடவை கட்டிக்கிட்டு இருந்தாங்கல்லெ;-)



படங்களைத் தனி ஆல்பமாப் போட்டுருக்கேன். பாருங்க.



தொடரும்......:-)

Friday, June 26, 2009

கன்யாகுமரியில் கடைசிநாள்.....(2009 பயணம்: பகுதி 36)

இன்றைக்கும் ஏமாத்தத்தான் போறானா இல்லை ஒழுங்கா வருவானா என்ற 'கவலை'யோடுதான் கண்ணைத் திறந்தேன். அதே கவலையோடு ஒரு ஒற்றைப் பறவையின் தேடலும் இருந்துச்சோ? வந்தே வந்துட்டான்! சுற்றுப்புறம் அத்தனையும் க்ளிக்கி முடிச்சுக் காலை உணவுக்குப் பின் அம்மனை நோக்கிப்போனோம். தரிசனம் ஆச்சு. கோவில்மண்டபத்துக் கடையொன்றில் கம்பீரமாய் நிற்கும் கேசவன், நிலவிளக்கை ஏந்திவரும் ஷோபனா(அந்தப் பொண்ணைப் பார்த்ததும் எனெக்கென்னவோ ஷோபனாவின் சாயல்தான் முகத்தில் தென்பட்டுச்சு)வைக் கவனிச்சு, கேசவனைமட்டும் வாங்கினேன். இந்தமாதிரி சமயங்களில் கோபாலின் கண்களைமட்டும் கவனமாத் தவிர்த்துருவேன். நோ ஐ காண்டாக்ட்:-))))

இன்னும் ரயில் டிக்கெட் எந்த கதியில் இருக்குன்னே தெரியலை. ஹொட்டேலில் கணினி இணைப்பைக் கேட்டுவாங்கி அதுலே தேடிக்கிட்டு இருந்தார் கோபால். நானோ வரவேற்புப் பகுதியில் இருந்த புள்ளையார் கலெக்ஷன்களை நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அங்கே வேலைசெய்யும் பசங்களோடதாம். அருமையா இருந்துச்சு.




வெளியே பாறைகளுக்குப் படகுப் போக்குவரத்து ஜரூரா நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளை அன்னம்போல் இருக்கும் தேவாலயத்தைப் பார்க்கக் கிளம்பினோம். சென்னை போல அடாவடியாக இல்லாமல் ஆட்டோக்காரர் இருபது ரூபாய்தான் கேட்டார். எங்களை இறக்கிவிட்ட பிறகுத் திரும்பிப்போகாமல் காத்திருப்பதாகவும் சொன்னார். வெயிட்டிங் காசு வேணாமாம். எங்களுக்கு அங்கிருந்து திரும்பிவர அந்த இடத்தில் ஆட்டோ கிடைக்காதாம். அட! இவ்வளோ கரிசனமா? பேஷ் பேஷ்.
ரெண்டுபக்கமும் சின்னக் கூம்புக் கோபுரமும் நடுவில் ரொம்ப உயரமான கோபுரமுமாய் கம்பீரமா நிற்கும் கோவிலைப் பார்ப்பதே ஒரு பரவசம், நடுக்கோபுரம் 153 அடி உயரமாம். அதன்மேலே இருக்கும் சிலுவை, சொக்கத் தங்கமாம். கோதிக் ஸ்டைலில் கட்டி இருக்காங்க. கத்தோலிக்கர்கள் கையில் வச்சு ஜெபிக்கும் ஜெபமாலையில் இருக்கும் மணிகள் எண்ணிக்கையில் இந்த ஆலய கோபுரங்களையும் நிர்மாணிச்சு இருக்காங்களாம். இது எனக்குப் புதுச் செய்தியா இருந்துச்சு. கோவிலுக்கு வயசு நூறு.

மாதாகோவிலில் உள்ளெ நுழைஞ்சால் வித்தியாசமா 'ஹோ'ன்னு இருக்கேன்னு கவனிச்சதில் புரிபட்டுருச்சு, அங்கே பெஞ்சு வரிசைகள் ஒன்னும் இல்லை. கிறிஸ்துவமதக் கோவில்களில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமே இந்த பெஞ்சுதான். இந்துக் கோவில்களில் தரையில் உக்காந்து பூஜை பார்ப்பது கஷ்டம். அதுவும் என்னைப்போல முழங்கால் வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ரொம்பநேரம் கால்மடக்கி இருக்க முடியாது. நேரம் ஆக ஆக கடவுள் மேல் உள்ள பக்தி போய், எப்படா இந்தப் பூஜை முடியுமுன்னு ஆகிரும். மனம் லயிச்சு வழிபாடு நடத்தணுமுன்னா உடல் நோகக்கூடாது. இதுதானே நோகாமல் நோம்பு கும்புடறது? பேசாம நானே ஒரு கல்ட் ஆரம்பிச்சு பெஞ்சுலே உக்கார்ந்து பூஜை செய்யலாம் என்ற வகையை அறிமுகப்படுத்திறலாமா? இங்கேதான் வகைவகையான சாமியார் & சாமியாரிணிகள் இருக்காங்களே, நம்மதும் 'க்ளிக்' ஆயிருச்சுன்னா எங்கியோ போயிறலாம்!!! வாரப்பத்திரிக்கைகள் குமுதம் வகையறாக்களை ஒருதரம் புரட்டினாலே விதவிதமான 'கடவுள்கள்' விளம்பரம் கொடுத்திருப்பது தெரியும். நம்ம விளம்பரமும் வரணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்குங்கப்பா. பதிவர்களுக்கு முன்னுரிமையும் கூடவே இலவச தரிசனமும்:-))))

அப்புறம் விசாரிச்சதுலே இங்கே இருக்கும் மீனவர் குப்பத்து மக்கள்தான் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வர்றவங்களாம். அதான் பெஞ்சுகிஞ்சு ஒன்னும் வேணாமுன்னு இருந்துட்டாங்களாம். (ஆனாலும் இது அநியாயம்)
ஆல்டரில் மேரியம்மா புடவை கட்டிக்கிட்டு குழந்தை ஏசுவைக் கையில் தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கீழே அடுத்த படியில் சிலுவையில் தொங்கும் ஏசுபிரான். ஆல்டர் அருமையா இருக்கு. ரெண்டுநிமிஷம் நம்ம எல்லாருக்காகவும் பிரார்த்தனை செஞ்சேன். ( சாமியைப் பார்த்ததும் அது கொடு, இது கொடுன்னு யாசிக்கும் வழக்கத்தை நிறுத்தமுடியலை. குழந்தையைலிருந்தே வளர்ப்பு அப்படி. 'நல்ல புத்தியைக் கொடு'ன்னு சொல்ல ஆரம்பிச்சுவச்ச பாட்டியைத்தான் சொல்லணும்)
கர்ப்பக்கிரகத்தின் ரெண்டுபக்கமும் இருக்கும் சந்நிதிகளில் ஒன்றில் ஏசுநாதரும், அடுத்ததில் குழந்தை ஏசுவைத் தூக்கி வச்சுருக்கும் ஜோஸஃப் (அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்டோஃபராவும் இருக்கலாமோ? ஆனா அவர் குழந்தையைத் தோளில் தூக்கிச் சுமப்பாரில்லையா?) சிலைகளும்.
ஆலயத்தில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்குது.


வெளியே ஆலயமுகப்புக்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உசரமான தூண்கள்போல ஒரு ஸ்தம்பம். கொடிமரமுன்னு வச்சுக்கலாமா?
இடதுபக்கம் ஒரு திறந்தவெளி அரங்கம்.அலங்கார அன்னை கலை அரங்கம். அடடா...சர்ச்சோட பெயர் சொல்லலையே...Church of Our Lady of Ransom.

உள்ளேயும் சரி, வெளியே மைதானத்திலும் சரி அழகான அமைதியான மனநிறைவான கட்டிட அமைப்புகள். கோவில் இருக்கும் தெருவும் ரெண்டுபக்கமும் மண்தரையாக இருந்தாலும் படு சுத்தமா இருக்கு. நமக்காகக் காத்து நின்ன ஆட்டோவில் ஏறினோம். மெயின் ரோடுக்கு வந்தோம். அங்கேயே ஒரு சிவன் கோயில் இருக்கு. குகநாதர் கோவில்.
அஞ்சு நிமிசம் பிந்திப்போச்சு(-: கோவிலை மூடிட்டாங்க.



அறைக்குத் திரும்புனதும் அயினிச் சக்க கூப்புட்டது. லேசா அமுக்குனதும் அப்படியே பிளந்து சுளைகள் தெரிஞ்சது. ஹைய்யோ.... அப்படியே மினியிலும் மினிப் பலாச்சுளை. சதைப்பற்றெல்லாம் இல்லை. இத்துனூண்டு சுளையிலே முக்கால்வாசி கொட்டை! பகல் சாப்பாட்டுக்குக் கீழே ரெஸ்டாரண்டுக்குப் போனோம். தைரியமா எனக்கும் ஒரு சாப்பாட்டுத் தட்டை வாங்கிக்கிட்டேன். அங்கேயே ராத்திரி சாப்பாடு வாங்கிக் கொண்டுபோக ஏற்பாடு இருக்கான்ன்னு விசாரிச்சதில் நாம் கிளம்பும்போது சாப்பாட்டைத் தயாரிச்சுத் தரேன்னு சொல்லிட்டாங்க. ரயில் பயணத்துலே கண்ட இடத்தில் வாங்க வேணாமுன்னுதான்.
அஞ்சரைக்கு வண்டி. நாலுமணிக்குச் சாப்பாடு வந்துச்சு. ரொம்ப அழகாப் பார்ஸல் செஞ்சக் கட்டுச்சோறு மூட்டை. இப்போதைக்குக் கடைசியா அய்யனைக் க்ளிக்கி, போய்வரோமுன்னு சொல்லிக் கீழே வரவேற்புக்கு வந்தால் அரவிந்தன் அன்றைய மலர் அலங்காரத்தைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.அவரோட கலை உணர்வைப் பாராட்டுனதும் சின்ன வெட்கம் முகத்தில் வந்துச்சு. நல்ல பையர். நல்லா இருக்கட்டும்.
அம்பது ரூபா கொடுத்து ஒரு டாக்ஸி பிடிச்சு ரயில் நிலையம் போனோம். இந்தக் கட்டிடமே ரொம்ப அழகா இருக்கு. நாட்டின் கடைசிக்கோடி என்றதால் நெடுக்காக நிக்கும் ரயில் பாதை. இன்னும் நமக்கு இடம் இருக்கா இல்லையான்னே தெரியலை. விசாரிச்சதில் ' ரயில் பெட்டியில் ஒட்டிட்டோம். போய்ப் பாருங்க'ன்னாங்க.

என்னங்க, இவ்வளோ நீளமான ரயில்? நாம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கோம். சென்னையே வந்துருமோ? எஞ்சினுக்கு ரெண்டாவது பெட்டியில் நமக்கு இடம். பதினைஞ்சு வருசம் கழிச்சு முதல்முறையா ரயிலில் தூங்கப் போறோம். உள்ளே இருட்டா, அழுக்கு நீலக்கலரில் ஒரு உள் அமைப்பு. மேலேயும் கீழேயுமா ரெண்டடுக்கு. ஜன்னல்வழியா ஒன்னுமே தெரியக்கூடாதுன்னே அழுக்கை அப்படியே விட்டுவச்சுருக்காங்க. குறையே சொல்றேனேன்னு யாரும் வருத்தப் படாதீங்க. இருக்கும் லக்ஷணத்தைச் சொல்லியாகணும் இல்லையா?

கோவில்பட்டி வந்தால் கடலைமிட்டாய் வாங்கிக்கணுமுன்னு காத்திருந்தேன். ஆனால் கோயில்பட்டியெல்லாம் கடந்துபோய் ரொம்ப நேரமாச்சாமே!!! அக்கம்பக்கம் ஆட்கள் சாப்பிடும்போது நாங்களும் சாப்பிட்டு முடிச்சோம். ஆச்சரியமா அதுவரைக்கும் இளம்சூடாவே இருந்துச்சு சாப்பாடு. எண்ணெயில்லாச் சப்பாத்தி, வெஜிடபிள் கறி, ஃப்ரைடு ரைஸ். ஹொட்டேல் ஸீ வ்யூ கவனிப்பு நல்லாவே இருக்கு. இங்கே நம்மூரில் இருந்து போகும் வெள்ளைக்கார நண்பர்களுக்குத் தாராளமாப் பரிந்துரைக்கலாம்.

கருநீலக் கர்ட்டனுக்குள் எல்லாரும் முடங்கியாச்சு. தனித்தனிக் கூடுகளும் விதவிதமான குறட்டை ஒலிகளும். ஒரு சத்தம் அடங்குனா இன்னொண்ணு ஆரம்பிக்குது. ஏதோ டைம்டேபிள் போட்டுவச்ச மாதிரி:-) எழும்பூர் வருமுன் எழுந்துட்டோம். கூட்டிட்டுப்போக யாரும் வரவேணாம். நாங்களே வீட்டுக்கு வந்துருவோமுன்னு வீராப்பாச் சொல்லிவச்சுருந்தோம். டாக்சியைத் தேடுனா கிடைக்கலை. ஆட்டோகளின் அணிவகுப்புதான். பயணிகள் கவனத்துக்கு: எக்மோர் ஸ்டேஷனில் ப்ரீபெய்ட் டாக்சிகள் சர்வீஸ் கிடையாது.

வழிநெடுக எக்கச்சக்கமான தோரணங்களும் அலங்காரங்களும். போஸ்டர்களும் போலீஸுமா..... நமக்கு எதுக்கு இப்படியெல்லாம் வரவேற்பு? ஓசைப்படாம இருக்கலாமுன்னா விடமாட்டாங்களே......ஒருவேளை, யாரோ ஆட்டோ அனுப்பறாங்கன்னு.......கத்திப்பாரா தாண்டிப் போரூர் சாலையில் கூடுதல் அமர்க்களம். ஞாயித்துக்கிழமையிலே வேலைக்கு வந்த சடைவு காவல்துறையினர் முகங்களில். கொத்துக்கொத்தாக் கரைவேட்டிகள் அடையாள பேனரைப் பிடிச்சுக்கிட்டுச் சாலையோரமா நிக்கறாங்க. கண்ணுலேத் தட்டுப்பட்டாகணும். இல்லேன்னா வம்பு. நாளைக்கு எவனாவது போட்டுக் கொடுத்துட்டா? ராட்சஸ டெய்ஸிப்பூ போல டிஸைனில் கொடிகளால் அலங்காரம், நடுவிலே சம்பந்தப்பட்ட முக்கியஸ்தரின் முகம். இந்த டிசைனையும் இப்போதான் முதல்முறையாப் பார்க்கிறேன். சமீபத்திய வரவோ? இதுலெல்லாம் மட்டும் நம்மது அசுர வளர்ச்சி. என்ன விஷயமாம்? பிரமாதமா ஒன்னுமில்லே.... முதல்வர் ஆசுபத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு(??) போறாராம். ஹூம்.....உண்மையிலே 'நாம் போகவேண்டிய தூரம் ரொம்ப' என்று புரிஞ்சது(-:

"பனிரெண்டுநாள் காக்காபோல் சுத்தியாச்சு. இனி ரெண்டுவாரம் கம்ப்ளீட் ரெஸ்ட்" கோபால் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பா வந்துச்சு. அதான் கன்யாகுமரியில் நாலுநாள் ரெஸ்ட் எடுத்தீங்களே, அதே மாதிரிதானே?

தொடரும்.....:-))))

Wednesday, June 24, 2009

அரவணையில் துயிலும் ஆதிகேசவன்.........(2009 பயணம் : பகுதி 35)

இருபத்தியிரண்டடி நீளமா அறிதுயில் கொண்டிருக்கும் ஆதிகேசவன் முன்னே நிக்கிறோம். 'அனந்தபுரம் பப்பநாபனைப் பார்க்கலை'ன்னு நான் அப்பப்பப் புலம்புனதைக் கேட்டுக்கேட்டு காது புளிச்சுப்போச்சு போல இருக்கு நம்ம ரமேஷுக்கு. நிம்மதியாச் சாமியைப் பாருன்னு திருவட்டாறு கோயிலுக்குக் கொண்டுபோயிட்டார்.

'பதினாறாயிரத்துயெட்டுச் சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசக்கரை திருப்படிமம் ' இப்படித்தான் விளக்கம் போட்டுருந்தாங்க. விவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க. வெளியே இருந்து பார்க்க ரொம்பவே சாதாரணமா இருக்கும் உயரமான மதில் சுவரும் பத்துப் படிகளேறிப் போகவேண்டிய வாசலுமா இருந்துச்சு. கேரள பாணியில் அமைஞ்ச கூரைகள். கோபுரமுன்னு ஒன்னும் இல்லை. கோயிலைப் புதுப்பிக்கும் பணி நடக்கப்போகுதாம், அதுக்குக் கொஞ்சம் நன்கொடை கொடுத்தோம். ஊர்கூடித்தானே தேர் இழுக்கணும்.

அர்ச்சனைச் சீட்டு, மொத்தக் குடும்பத்துக்கும் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு வரிசையா எழுதிக் கொடுத்தார் அங்கே இருந்த இளைஞர். நாமும் குடும்ப நபர்களை ஒருத்தர் விடாமச் சொன்னோம்:-)))) அம்பது ரூபாய்தான். நம்மைக் கூட்டிக்கிட்டுப்போய் முன்மண்டபத்தில் விட்டார் மற்றொரு கோவில் ஊழியர். இதோ கேசவன் முன்னே நிக்கிறோம். மேற்குப் பார்த்த திருமேனி. அதனால் பப்பநாபன் கோலத்துக்கு நேர் எதிரா இருக்கார். தாமரைக் கண்ணனின் தாழ் முதலிலும், இடை இடையிலும் சிரம் கடைசியிலுமாய் மூணு வாசல்களில் தரிசனம். சின்னதாச் சுடர்விட்ட வாழைப்பூ விளக்கின் ஒளியில் அர்ச்சனைச் சீட்டுலே இருந்த பெயர்களையெல்லாம் ஒவ்வொன்னாய்ப் படிச்சு நிதானமான அர்ச்சனை செய்தப் போத்தியைத் தவிர்த்தால் நாங்களும் கேசவனுமாய் ஏகாந்த சேவை. ஒருவினாடியாவது முகம் காமிக்காமல் இருந்த பப்பநாபனை நினைத்துக்கொண்டேன். இருபது நிமிஷம் அந்த முக அழகை ஆராதிக்க அனுகிரகம் செய்தார் ஆதிகேசவர்.
இந்தக் கோயில்தான் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக முன்னே இருந்ததாம். இங்கே பூஜை முடிஞ்சபிறகுதான் மன்னர் சாப்புடுவாராம். இங்கே பூஜை முடிஞ்சு சாமி சாப்பிட்டானதும் அரண்மனை வரை உள்ள இடைவெளிதூரத்தில் அங்கங்கே அரண்மனை சிப்பாய்கள் தொடர்வெடிகள் வெடிச்சு அந்த வெடிச்சத்தம் மூலம் சேதி அரண்மனைக்குப் போகுமாம். இதேபோல் ஒரு கதை நம்ம கட்டபொம்மன் சரித்திரத்திலும் எங்கோ படிச்ச ஞாபகம். இங்கே வெடின்னா அங்கே மணி ஓசை. அங்கங்கே பெரிய காண்டாமணிகள் ஒலிக்கச் செய்து ஜக்கம்மா கோவில் பூசை முடிஞ்ச விவரம் மன்னருக்குப் போகுமாம்.
இந்த அரண்மனையைவிட்டுத் திருவனந்தபுரத்துக்கு மன்னர் குடும்பம் இடம்பெயந்தப்ப, மன்னரும் தினசரி வழிபட ஏதுவா அரவணைமேல் பள்ளிகொண்டானை அங்கே அனந்தபுரத்தில் பிரதிஷ்டை செஞ்சு உண்டான கோவில்தான் திருவனந்தபுரம், அனந்த பத்மநாப ஆலயம்.
திருவட்டாறு கோவிலின் உட்பிரகாரம் ரொம்ப அழகா விஸ்தீரணமா இருக்கு. முக்கியமாச் சொல்லவேண்டியது சுத்தம். படு சுத்தம். வெளிப்பிரகாரம் சுற்றிவர மூன்று பகுதிகளிலும் தமிழ்நாட்டுக்கோவில்கள் போலவே கல் தூண்களும் அதுலே வரிசையா அணிவகுத்து நிற்கும் பாவை விளக்குகளும் அருமை. அதுவும் ஒரு கோணத்துலே இருந்து பார்க்கும்போது..... ஆஹா...அடடா...ன்னு இருக்கு. அந்தக் காலத்துலே எண்ணெய் விளக்குக் கொளுத்திவச்சுருப்பாங்கல்லே? இருட்டில் எப்படி ஜெகஜ்ஜோதியா இருந்துருக்குமுன்னு கற்பனை செஞ்சு பார்த்தேன்.

(கோயிலையொட்டி இருக்கும் எளிமையான தெரு)
ஊரைச் சுத்தி ஆறு வட்டமாப் போவதால் இந்தப் பெயர் வந்ததுன்னு சொல்றாங்க. கேசவனைப் பார்த்த கையோடு இன்னும் அங்கே இருக்கும் ரெண்டு சந்நிதிகளைப் பார்க்கலாமுன்னு கோவிலை வலம் வந்தோம். அம்பாடி கிருஷ்ணன், கையில் வேய்ங்குழலோடு ஸ்ரீ வேணுகோபாலனாக் காட்சி தர்றார். மனசுக்கு நிறைவான தரிசனம். இந்தச் சந்நிதியை இப்போ பராமரிச்சுப் பார்த்துக்கறது ஹரே கிருஷ்ணா இயக்கமாம். அடுத்த பகுதியில் ஐயப்பன் இருக்காராம். எனக்கென்னவோ அங்கே போகணுமுன்னு தோணவே இல்லை. மனசு முழுக்க ஒரு திருப்தியா ஒரு உணர்வு.

இந்தக் கோயிலுக்கு வயசு? பலநூற்றாண்டுகள் ஆனது, ரெண்டாயிரம் வருசங்கள் இருக்கும் என்று சொல்றாங்க.மூலவர் சந்நிதிக்கு முன்னே இருக்கும் கல்மண்டபம் அபூர்வமானதுன்னு விளக்கம் போட்டுருக்கு. ஆனா 'பொறியல்' பண்ணிட்டாங்க. ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோவில். இதுவும் அந்த நூற்றுயெட்டில் ஒன்னு.



பெருமாளுடைய முகம் சொல்லமுடியாத அழகு. கிட்டப்போய்த் தொட்டுக் கொஞ்சலாமான்னு இருந்துச்சு. திருத்தல மகிமைகள் ஒரே ஃப்ரேமில் அடங்காததால் நாலு படமா எடுத்தேன். ஓவர்லேப் ஆகி இருக்கும்.

நம்ம சென்னையிலும் அடையாறில் அனந்தபத்மநாப சுவாமி கோவில் ஒன்னு இருக்கு. போனமுறை பார்த்ததைவிட இன்னும் செல்வச் செழிப்புக் கூடி இருக்கு. வெள்ளிக்கவசங்கள் எல்லாம் தங்கக் கவசமா ஆகி இருக்கு. மழமழன்னு பெருமாள் முகம் ரொம்பவே அழகு. முக்கியமா சொல்லவந்தது என்னன்னா மூலவருக்குப் பூஜை நடக்கும்போது அதை CCTV யில் வெளியே ரெண்டு பக்கமும் மானீட்டர்களை வச்சு ஒளி பரப்பறாங்க. கூட்டம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. நடக்கறதையெல்லாம் நின்ன இடத்தில் இருந்தே நாமும் பார்க்கலாம் சாமியைப்போல. இதுவும் ஒருவகையில் நாம்தான் கடவுள்:-))))


இன்றையக் கணக்கில் இதுதான் கடைசி இடம். நேரா கன்யாகுமரிதான். இந்த ஒரு நாளில் மட்டும் வட்டக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில், உதயகிரிக் கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி, திருவட்டாறு இப்படி ஒன்பது இடம் ஓடி இருக்கோம். எல்லாம் ஒரு சாம்பிள் பார்த்தமாதிரிதான். இனி ஒரு பயணத்தில் நின்னு நிதானமாப் பார்க்கணும்.

மறுநாள் கார் வேணுமான்னு யோசிச்சதில் மாலை ரயிலைப் பிடிக்கணும் என்றதால் உள்ளுரில் விட்ட இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு ரமேஷுக்கு பைபை சொன்னோம். நல்ல மனுஷர். அடுத்தமுறை இவரை நம்பிப் பயணிக்கலாம். மறுநாள் ரயிலடிக்கு கூட்டிப்போக வரேன்னார். 'நல்லா இருக்கே...... போய்ப் பிழைப்பைப் பாருங்க. முழுநாளுக்கு பயணிகள் கிடைச்சா நாலு காசு வருமே'ன்னு சொன்னதும் அவருக்கு மனசெல்லாம் இளகிருச்சு. அறைக்குப்போய், நியூஸியிலிருந்து கொண்டுபோயிருந்த சாக்லேட்டை (கடைசிப் பெட்டி) ப்ளைட்டனுக்குக் கொடுத்து அனுப்பினோம்.
களைத்துப்போன கால்களுடன் ஹொட்டேலுக்குள் நுழைஞ்சால் அரவிந்தனின் அன்றைய மலர் அலங்காரம் வரவேற்றது.

தொடரும்....:-)