Friday, June 19, 2009

பேச்சியம்மன் கூப்புட்டாடா .........(2009 பயணம் : பகுதி 33)

குமரி மாவட்டம் முழுசும் விளைச்சல் அமோகமா இருக்கும் போல. விளை என்று முடியும் பெயர்களில் எக்கச்சக்கமான ஊர்கள். எப்படியோ விளைஞ்சாச் சரி.
ஒரு இருவது நிமிஷக் கார் ஓட்டத்தில் குலசேகரம் என்ற ஊருக்குள்ளே வந்துட்டோம். ஒரு நிமிசத்துலே வர்றேன்னு ரமேஷ் இறங்கிப் போனவர்,
திரும்பி வந்து அஞ்சு நிமிசம் வீட்டுக்கு வந்துட்டுப்போங்கன்னு கூப்புட்டார். மாமியார் வூடு. மனைவி அங்கேதான் இருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துலே குழந்தை பிறக்கப்போகுது. சின்ன வீடா இருந்தாலும் கிணறு, தோட்டமுன்னு அம்சமாத்தான் இருந்துச்சு. மூத்த பையனுக்கு அஞ்சாறு வயசாகுது. நம்மூர் வழக்கபடி விருந்தாளிகளுக்கு 'ரைம்ஸ்' சொல்லி, பாடப்புத்தகத்தைக் கொண்டுவந்து காமிச்சுப் படிச்சுக் காட்டினான். ப்ளைட்டன் என்ற பெயர். சொல்லமறந்துட்டேன் இல்லை..... வழிநெடுக இந்துக்கள் கோவில்கள், பாரம்பரியக் கதைகள் எல்லாம் அப்பப்பச் சொல்லிக்கிட்டு வந்த ரமேஷ் பாஸ்கர் கிறிஸ்துவமதத்தைச் சேர்ந்தவர். அய்யாவழி என்ற பிரிவையும்பற்றிச் சொன்னார். அப்போதான் நமக்கு 'அய்யாவழி' என்ற தமிழ்ப் படம் ஒன்னு (மலேசிய நண்பர் அனுப்புனது) வீட்டில் இருக்கும் நினைவு வந்துச்சு. ஊருக்குப் போனதும் கட்டாயம் பார்க்கணும்.

தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த மக்களை ஒதுக்கிவச்சுத் தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்த உயர்சாதியினரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற ஏற்பட்டப் புதுப் பிரிவு மதம் தான் இந்த அய்யாவழி. தலைப்பாகைக் கட்டிக்கிட்டு நெற்றியில் வெண்ணிற திருமண் இட்டுக்குவாங்களாம். இந்தப் பக்கம் ஒரு கோயிலே கட்டி யிருக்காங்க. இன்னொருமுறை இங்கே வரும்போது பார்க்கணுமுன்னு மூளை ஓரத்தில் முடிச்சுப் போட்டுவச்சுக்கிட்டேன்.

ரமேஷின் மனைவிக்கு எங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. முகத்தில் தெரிஞ்சது. பிரசவம் நல்லபடி நடக்குமுன்னு ஆசிகள் வழங்கிட்டு, அவுங்களுக்கு வேலை வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கணுமுன்னும் வாழ்த்திட்டுக் கிளம்புனோம். குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு வெறுங்கையோடு போனமேன்னு நொந்துக்கிட்டுப் ப்ளைட்டன் கையில் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால்.
அங்கிருந்து மறுபடி இருவது நிமிஷ ஓட்டத்தில் நாம் போய்ச் சேர்ந்த இடத்தில் செண்டை மேளத்தோடு யானை மேல் அம்பாரியில் அம்மன் ஊர்வலம் ஆரம்பிக்கத் தயாரா இருக்கு. பயங்கர டைமிங். இதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி ரமேஷுக்கு. ஊரே விழாக் கோலம் பூண்டதுன்னு சொல்வாங்க பாருங்க அதை இந்தப் பயணத்தில்தான் மெய்யாலுமே பார்த்தேன். அந்தப் பகுதிகளில் மாசி மாசம் கோவில்களில் விழாக் காலம். ரோடுக்கு ரெண்டு பக்கமும் தென்னைக் குருத்தோலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும், உண்மைப் பூக்களாலும், பலநிறத்தில் உள்ள மின் விளக்குகளாலும் அலங்கரிச்சு ஜமாய்ச்சு வச்சுருக்காங்க.
பேச்சியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறையினரின் பரிசாக ஒரு அலங்கார வளைவுகூட இருக்கு. பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் அடிவாரம் இந்த இடம். ஒரு பக்கம் அணையிலிருந்து பீறிட்டு வெளிவரும் தண்ணீர் ஓசை காதைப் பிளக்க, மேளதாளச் செண்டை வாத்தியங்களின் இசை இன்னொருபக்கம் முழங்க, கால்வாய்க் கரையில் இதை எதையும் பாராட்டாம சின்ன வயசு யானைக்குட்டி, தலையில் பேச்சிஅம்மனைச் சுமந்துக்கிட்டு (கூடவே ரெண்டு ஆட்களையும்) ஒய்யாரமா அடிமேலடி வச்சு ஆடி நடந்து வரும் அழகே அழகு.





இந்த ஏரியாவில் பிஜேபி ஆதரவு அதிகமோ என்னவோ, ஒரு பெரிய டிஜிட்டல் பேனர் வச்சுருந்தாங்க. பேச்சியம்மனைப் பார்க்க அத்வானியே வந்துட்டார். (அவரால் பேசமுடியாது. டமில் மாலும் நஹி ஹை)



ஊர்வலத்தில் ராமன், கிருஷ்ணன் இப்படி தெய்வீக வேஷஅலங்காரத்தில் சின்னப் பிள்ளைங்க வந்துக்கிட்டு இருந்தாங்க. அட்டகாசமான ஆடை அலங்காரத்தில் மகளிர். கையில் தாலப்பொலியொடுப் பெண்குழந்தைகள் தலையில் சுமந்த புனிதநீர்க் குடங்களோடு சிலர். அட்டகாசம்தான் போங்க.
(கோபால் எடுத்த மூணரை நிமிச வீடியோ க்ளிப்பை வலை ஏத்தி இருக்கேன்)



யானைக்கால் இப்படி இருக்கே..... ஒரு நாலு கொலுசு போட்டுருந்தா எவ்வளோ அழகா இருக்கும்!!

படிக்கட்டுகளில் ஏறி நீர்த்தேக்கத்தைப் பார்க்கப்போனோம். பாதிவழியில் கண்காளிப்பாளரின் விடுதி இருக்கு. மேலே ஏறிப் போய்ப் பாருங்க. ஆனா படம் எடுக்கவேணாமுன்னு சொன்னார். 'சொல்லிட்டீங்கல்லே.... அதெல்லாம் எடுக்கமாட்டோம்.' கொடுத்த வாக்கைக் காப்பாத்தினோம்.
( இது வலையில் சுட்ட படம்)

பிரமாண்டமான இடம்தான். கோதை ஆற்றின் குறுக்கேக் கட்டி இருக்கு. 207 சதுர கிலோமீட்டர் பரப்பு, தண்ணீர் இருக்கும் பகுதி மட்டும். அணைக்கட்டின் நீளம் 425.5 மீட்டர். உயரம் தரைக்குமேலே நிக்கும் பகுதிமட்டும் 120.7 மீட்டர். அஸ்திவாரம் அப்போ எவ்வளவு இருக்கும்? (வடுவூர் குமாரைக் கேக்கணும்.The Dam is a straight gravity type masonry dam. இப்படி ஒரு வரி. இதையும் குமாரே விளக்கிச் சொல்வார் அப்படின்னு நினைக்கிறேன்)

அணைக்கு வயசு இப்போ 103 வருசம்! சமீபத்தில் 2006 -இல் நூற்றாண்டுவிழாக் கொண்டாடி இருக்காங்க. கல்வெட்டு ஒன்னு இருக்கு பார்த்தேன். அமைச்சர் ராதிகாச் செல்வி பெயர் பொரிச்சிருக்கு.

இங்கே பொழுதுபோக்குக்காக உல்லாசப்படகுச் சவாரி செய்யலாமாம். நாங்க போன நேரத்தில் கரையில் ஒதுக்கமா நின்ன நாலு படகுகள் மட்டுமே கண்ணில் பட்டது. படகுச்சவாரியில் யாரும் தடுமாறி விழுந்துறாதீங்க. ஆழம் வெறும் 14.63 மீட்டர்தானாம்!!

நீர்ப்பரப்புக்கு அடுத்தபக்கம் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைவாழ் மக்கள் இந்தப் பக்கம் வந்து கடைகண்ணிக்குப்போய்ச் சாமான்கள் வாங்கிக்க, மருத்துவ வசதியைத் தேடிவர, அங்கத்துப் புள்ளைங்க, இந்தப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் வந்து படிக்க, இங்கே இருக்கும் பலர் அந்தப் பக்கம் எஸ்டேட் வேலைகளுக்குப் போய்வர இப்படி எல்லாத்துக்குமா இப்போப் போக்குவரத்துக்கான படகுகளும் வந்துருக்கு. என்ன ஒன்னுன்னா.... மாலை மூணரைக்கு மேல் போக்குவரத்து இருக்காதாம்.

அணைகட்ட எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது வருசங்கள். கட்டுனவர் எஞ்சிநீயர் மின்சின். ஐரோப்பாக்காரர் (European Engineer Mr. Minchin) அந்தக் காலக்கட்டத்தில் இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானமா, மகாராஜா மூலம் திருநாள் அரசாட்சி செய்த காலம். இது கட்ட ஆன செலவு 26.1 லட்சம் ரூபாய்கள். அதானே இவ்வளோ காசு அந்தக் காலத்துலே ராஜாவாலேதான் கொடுக்கமுடியும்.

திரும்பிப்போகும் வழியில் இன்னும் சில சின்ன அணைகளும் இருக்கு. அதிலொன்னு சிற்றார் அணை. இதுலேயே முதல் அணை, இரண்டாம் அணைன்னு ரெண்டு. அப்புறம் பெருஞ்சணை, பாண்டியன், புத்தன் ன்னு அணைகள். தண்ணீருக்குப் பஞ்சமில்லா தேசம்தான். பார்க்கும்போதே மனசு அப்படியே குளிர்ந்து போகுது. நீர்வளம் இருப்பதால் சுத்தத்துக்கும் குறைவு வர்றதில்லை, பார்த்தீங்களா?
(வழியில் போகும்போதே தெரிஞ்ச சிற்றார் அணை)

நதிக்கரையோரம்தான் (மனித) நாகரீகம் பிறந்தது என்பது சத்தியமான உண்மை

தொடரும்....:-)

22 comments:

said...

திருவிழா நல்லா இருக்குது.தாலப்பொலிய காட்டீருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.தமிழ் நாட்டில் ஒரு கோயில்ல யானைக்கு அதோட பாகன் தன்னோட சொந்த செலவுல வெள்ளிக்கொலுசு செஞ்சு போட்டிருக்காரு:-).
அய்யாவழி கோயில் கன்னியாகுமரி போகும் வழியில்தான் இருக்கு. ரமேஷ் கிட்ட சொல்லி இருந்தா ஒரு நடை கூட்டிப்போயிருப்பாரே? ப்ளைட்டனுக்கு ப்ளையிங் கிஸ்ஸஸ்.

said...

திருவிழாவில நீங்கதான் முதன்மை விருந்தாளியா டீச்சர்..

//நீர்வளம் இருப்பதால் சுத்தத்துக்கும் குறைவு வர்றதில்லை//

உண்மைதான்.. ஆனா நாளுக்கு நாள் தமிழ்நாட்டுல நீர்வளம் கொறஞ்சுட்டே இருக்கே என்ன பண்ண..

said...

வாங்க ஐம்கூல்.

நேரப் பற்றாக்குறையாலேதான் அய்யாவழி கோயில் போகலை(-:
அடுத்த பயணத்துக்குப் போகவேண்டிய இடங்கள் ஏராளம்.

நம்ம வீட்டுலே கொலுசு போட்ட யானை ஒன்னு (அது நான் இல்லை)
இருக்குது. அலங்காரமாப் பார்க்க ரொம்பவே அழகா இருக்கும்.

said...

வாங்க தீப்பெட்டி.

சாமி முக்கியமா இருக்கும் நேரத்தில் ஆசாமிக்கு எங்கேங்க இடம்?

உண்மையைச் சொன்னால் சென்னைதாங்க அசுத்தம் நிரம்பிய நகரம்(-:

கன்யாகுமரி மாவட்டத்தில் சின்ன ஊர் எல்லாம்கூட 'பளிச்'ன்னு இருக்கு.

said...

தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த மக்களை ஒதுக்கிவச்சுத் தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்த உயர்சாதியினரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற ஏற்பட்டப் புதுப் பிரிவு மதம் தான் இந்த அய்யாவழி. தலைப்பாகைக் கட்டிக்கிட்டு நெற்றியில் வெண்ணிற திருமண் இட்டுக்குவாங்களாம். இந்தப் பக்கம் ஒரு கோயிலே கட்டி யிருக்காங்க. இன்னொருமுறை இங்கே வரும்போது பார்க்கணுமுன்னு மூளை ஓரத்தில் முடிச்சுப் போட்டுவச்சுக்கிட்டேன்.//


மடிச்சி அவிழாமல் இருக்க வாழ்த்துகிறேன், தெளிவான ரிப்போர்ட்டிங் வாழ்த்துக்கள்

said...

நீங்க குடுத்து வெச்சவுங்க டீச்சர். உள்நாட்டுலயே இருந்துட்டு நாங்க இதெல்லாம் பாக்கறதில்லை.

said...

துளசி, வீடியோ அட்டகாசமா எடுத்துட்டீங்க. யானைக்கு கொலுசு பக்கத்தில கிடச்சிருந்தா வாங்கிப் போட்டு இருப்பீங்க.
தாலப் பொலின்னா என்னா.

அய்யா வழின்னு ஒண்ணு இருக்குன்னு இப்பத்தான் தெரியும். இந்த மாதிரி ஊரு ஊராப் போனதான் தெரியும் .வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்குத் துளசி தான் ட்ராவலாக்:))

Anonymous said...

//யானைக்கால் இப்படி இருக்கே..... ஒரு நாலு கொலுசு போட்டுருந்தா எவ்வளோ அழகா இருக்கும்!!//

இப்ப கொலுசு போடணூம்பீங்க, அப்பறம் இடுப்புக்கு ஒட்டியாணம் போடணூம்னு சொல்வீங்க. அவங்களுக்கு கட்டுப்படியாவுமா :)

said...

டீச்சர் நியூசிக்கு வந்தாச்சா? படிச்சுட்டு வரேன்.

said...

\\ஒரு நாலு கொலுசு போட்டுருந்தா எவ்வளோ அழகா இருக்கும்!!
\\

அய்யோ!!! போதுமா டீச்சர் !?

;)))

said...

வாங்க ஜாக்கி சேகர்.


மூளையில் போட்ட முடிச்சுக்கள் ஏராளம். அதுலே எது இதுன்னு கண்டுபிடிப்பேனான்னு தெரியலை:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க தராசு.

கொஞ்சம் கண்ணைத்திறந்து வச்சுக்கிட்டாவே அக்கம்பக்கம் நிறைய
விஷயங்கள் நடக்குதே.

நாம்தான் எப்பவும் வேலை வேலைன்னு கிடக்கோம். அப்பப்ப இப்படி சிலநாள் ஊர் சுத்தவே கிளம்பணும். இதுவும் மனசுக்கு ஒரு டானிக்தான்:-))))

said...

வாங்க வல்லி.

வீடியோக்காரர் நம்ம கோபால்தான்:-)))

தாலப்பொலின்னா ஒரு தட்டுலே விளக்கு, பூக்கள் எல்லாம் வச்சுக்கிட்டு கொடுக்கும் வரவேற்பு.
தாலம் = தட்டு

கேரளாவில் அவுங்க பாரம்பரிய உடையான செட் முண்டு அணிஞ்சு பெண்கள் பலர் ரெண்டு வரிசையா நின்னு விஐபி வரும்போது முக்கிய சடங்கா இதை மலர் தூவி வரவேற்பு தருவாங்க.

said...

வாங்க சின்ன அம்மிணி.

முதலில் எனக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கிக்கிட்டுத்தான் யானைக்கு வாங்கணும்.

கோபால் மசிவாரான்னு தெரியலை:-))))

said...

வாங்க சிந்து.

இன்னும் நியூஸிக்கு வரலை.

நிதானமாப் படிச்சுட்டு வாங்க

said...

வாங்க கோபி.

நல்ல வேளை. யானைக்கு நாலே கால்!

இதுவே பூரானா இருந்தால்......!!!!

said...

இது வலையில் சுட்ட படம்)
//


ந‌ல்ல‌ வேளை. முருக‌ப்பெருமான் வ‌ ந்து சுட்ட‌ ப‌ட‌ம் வேணுமா, சுடாத‌ ப‌ட‌ம்
வேணுமா என்று கேட்டார் என்று எழுதுவிடுவீர்க‌ளோ என்று விய‌ ந்து போனேன்.

அது ச‌ரி, உங்க‌ள‌து ஆற்ற‌லைக் க‌ண்டு விய‌க்கும் என‌து வீட்டுக்கார‌ர்
அது என்ன‌ 32 கேள்விக‌ளாமே ! வ‌லை வானில் சுத்தி சுத்தி வ‌ருதாமே !
அதை உங்க‌ள் முன்னே வைத்து,

" என் கேள்விக்கென்ன‌ ப‌தில் ?" என்கிறார்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
இத்தொட‌ரில் என‌க்குத் தெரிந்த‌ அத்த‌னை பேரும் ஆல்ரெடி மாட்டிக்கொண்டு விட்டார்க‌ள்.

நீங்க‌ளும் வ‌ர‌வேண்டும். ப‌தில் த‌ர‌வேண்டும்.

மீனாட்சி பாட்டி.
சென்னை.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

இன்னும் அமெரிக்காதானா?

கொஞ்சம் டைம் தாங்க. எழுதிடலாம்.

இன்றைக்கு நிஜத்தில் சுட்ட பழம் தின்னேன். தின்னும்போது சுட்டபழமுன்னும் நினைச்சேன். நீங்க அதையே குறிப்பிட்டுப் பின்னூட்டி இருக்கீங்க.

சும்மாவாச் சொன்னாங்க தங்கை நினைப்பதை அக்காவும் நினைப்பாங்கன்னு:-))))

said...

கன்னியாகுமரி பக்கமே போய் இராத எனக்கு இந்த பதிவு உபயோகமா இருந்துசுங்க. நன்றி

said...

வாங்க ஜானி வாக்கர்.

புதுசா இருக்கீங்க போல?
நலமா?

பயனுள்ள பதிவுன்னு சொன்னதுக்கு நன்றி. நானும் இந்த இடங்களை இப்போதான் முதல்முறையாப் பார்த்தேன்.

தொடர்ந்து வரணும் நீங்க.

said...

hi naan periya pechiparai rasigai pls neengal pechiparai parri innum update saiya mudiyuma its my dream destination pls..........

said...

வாங்க பாரதி.

அப்டேட் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.

நான் சும்மா அந்தப் பக்கம் போனச் சுற்றுலாப் பயணி.

அந்த ஊர்க்காரர்கள் யாராவது நம்ம பதிவர்களா இருந்தால் நல்லா இருக்கும்.

விவரம் சொல்வாங்க.

வருகைக்கு நன்றி.