Wednesday, December 16, 2009

ஹேப்பி பர்த் டே டு யூ.

காற்றிலே பறந்து வந்த ஒரு பூ திரௌபதியின் பக்கத்துலே வந்து விழுந்தது. எடுத்து மோந்து பார்த்தால்....... ஹைய்யோ...மனத்தை மயக்கும் வாசனை. இப்பவே இந்தப் பூ பூத்து நிற்கும் செடியைப் பார்க்கனுமுன்னு மனசு துடிக்குது. அக்கம்பக்கம் தேடிப்பார்க்கிறாள். கண்ணுக்கு இந்தப் பூ இருக்கும் செடி ஒன்னுமே தெரியலை. தடித் தடியா அஞ்சுபேர் அன்பைக் காமிக்க இருக்கும்போது யாரையாவது ஏவினால் ஆச்சு. ஓ.... அஞ்சுன்னு சொல்லிட்டேன் இல்லை.. இப்போதைக்கு நாலு. அர்ஜுனன் தவம் செய்யப்போயிருக்கான்.

அந்த சமயம் பீமன் பக்கத்துலே வந்து நிக்கிறான். இவ்வளவுநாள் கொஞ்சம் வாடிய முகத்துடன் சோகமா இருந்தவள், இப்ப என்னடா ஒரு பூவை கையில் வச்சுக்கிட்டு முகர்ந்து முகர்ந்து பார்த்து பூரிச்சுப் போயிருக்காளேன்னு......

ஏ புள்ளெ.... என்னா இம்பூட்டு சிரிப்பு?

இந்தப் பூவைப் பாருங்க. எப்புடி மணக்கு? மனசை எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது

ஆஹா...அரோமாதெரப்பி.

"இந்தப் பூவு இன்னும் கொஞ்சம் வேணும். இந்தச் செடியை இங்கே வச்சு வளர்த்தால் எப்பவுமே பூ சப்ளை குறையாம இருக்கும்னு மனசுலே ஒரு எண்ணம். இந்தச் செடி ஏது எங்கேன்னு பார்த்து ஒன்னு கொண்டுவாங்க."

இதோன்னு கிளம்புனவன், மணம் புடிச்சுக்கிட்டே போறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூச்செடிகள் ஒன்னையும் காணோம். நடந்து நடந்து வந்தவன் ஒரு மலை அடிவாரம் வந்துட்டான். சரி வந்தது வந்தோம்..........மலைமேல் ஏறிப் பார்த்துடலாம். ஒருவேளை இந்தச் செடி அங்கே இருந்தால்....

முள்ளுச்செடியைத் தள்ளிக்கிட்டு ஒரு மலைப்பாதையில் வரும்போது அங்கே ஒரு கிழக்குரங்கு பாதையின் நடுசெண்டர்லே கிடக்குது. எங்கே போறேன்னு பீமனைக் கேட்க (குரங்கு பேசுமான்னு குறுக்குக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. எங்க கோகி, கப்பு எல்லாம் பேசுவாங்க எனக்கு அது புரியும்) இந்தப் பூ பூக்கும் செடியைத் தேடிக்கிட்டு வந்தேன். மலைமேலே இருக்குமோன்னு ஒரு சம்சயம். நீ வழியை விடு...... நான் மேலே ஏறிப் பார்த்துட்டு வரேன்னான்.

'இங்கே நரன்களுக்கு தடா. நீ போகப்பிடாது'ன்னு சொல்லுச்சு வாநரன்.. 'நீ என்ன இங்கே நாட்டாமை? நான் அப்படித்தான் போவேன். என்னை யார் என்ன செய்யரான்னு பார்க்கலாமு'ன்னு தன் 'சிக்ஸ் பேக்கை' ஸ்டைலாக் காமிச்சு வீரம் பேசறான் பீமன். 'வல்லவனுக்கு வல்லவன்' உண்டுன்னுச்சு குரங்கு. 'சரி,சரி வீண் பேச்சுப் பேசாதே..... மிருகத்தைத் தாண்டிப் போனால் பாவமுன்னு பாட்டி சொல்லி இருக்கு. ஓரமாத் தள்ளிப்படு. நான் போகணு'முன்னான்.

"எனக்கோ உடம்பு ரொம்ப பலவீனமாக் கிடக்கு. நகர முடியலை. நீயே என்னைத் தூக்கி அந்தப் பக்கம் ஓரமா விட்டுட்டுப் போயேன். இந்தப் பேச்சு பேசறே?"

"நீ படு கிழமா இருக்கே. என் பலமான கையாலே தொட்டுத் தூக்கினாலே நீ கூழாயிருவே. என் இரும்புப்பிடி எனக்கே பயமா இருக்கு, நான் தொட்டால் சங்குதான். "

"சரி. அப்ப ஒன்னு செய். என் வாலை மட்டும் நகத்தி வச்சுட்டுப் போ. பாட்டி சொல்லைத் தட்டாதே. சாஸ்திரம் மீறாம இருக்கும்"

சுண்டுவிரலால் லேசா வாலைத் தூக்கலாமுன்னா என்னவோ ஆணி அடிச்சு வச்ச மாதிரி அசைக்க முடியலை. என்னடா இது வம்பா இருக்கேன்னு அசைச்சுப் பார்க்கிறான். ஊஹூம். தன் பலத்தையெல்லாம் சேர்த்து அந்த சின்ன வாலைத் தூக்குனாலும் போதுமுன்னு பார்த்தால்...... ஒன்னும் நடக்கலை.

ஆஹா..... இதுதான் அந்த வல்லவனுக்கு வல்லவன். நம்ம கணக்கு எங்கியோ மிஸ்டேக் ஆகிப்போச்சு......

"ஐயா, கிழ வாநரரே..... நீங்க யார்? என்னாலே உங்க வாலை ஒரு மில்லிகூட (இது மீட்டர்) அசைக்க முடியலை. மன்னிக்கணும். தயவு செஞ்சு நீங்க யார்ன்னு சொல்லுங்க. தயவாக் கேக்கறேன்."

"நாந்தாய்யா உன் அண்ணன்."

"ஐயோ! எப்படி? நீ குரங்காச்சே?"

"எதுக்குய்யா இப்படி பதட்டப் படறே? நான் உன் ஹாஃப் ப்ரதர். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அப்பா.

எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அவுங்க ஒரு நாள் மலையில் உலாத்தும்போது நம்ம அப்பா, (அப்ப அவர் நம்ம அப்பா இல்லேப்பா) அவர்தான் வாயு பகவான் அம்மாவைப் பார்த்தார். (அப்ப அது அம்மா இல்லை. ஒரு பொண்ணு.) கண்டேன் காதலை ன்னு ஆகிப்போச்சு. அதுக்கப்புறம்தான் நான் பொறந்தேன்."

"அட தேவுடா..... எனக்கு வேற கதை இருக்கு. அதை அப்புறம் ஒரு நாள் விலாவரியாச் சொல்றென். ஆனா எனக்கும் அப்பா அதே வாயுதான். ஆமா உம்பேரு என்ன?"

"அனுமான்"

"அடக் கடவுளே.....அண்ணாத்தே, ராமாயண காலத்துலே பகவான் ஸ்ரீ ராமருக்கு எல்லா வகையிலும் உதவுன ஹனுமான் நீர்தானா?"

"ஆமாம். தம்பி. அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார் எனக்கு ஒரு(?) தம்பி இருக்கான்னு. அது நீதான்னும் எனக்குத் தெரியும். எப்படித் தெரியுமுன்னு கேக்காதே. நான் இப்ப சாமி. எனக்கு எல்லாம் தெரியும்."

"அருமை அண்ணா...."

"ஆசைத் தம்பி.................."

'பாய் பாய்'ன்னு கட்டித் தழுவினாங்க ரெண்டு பேரும். பீமனுக்கு உடம்பில் இன்னும் பலமும் தேஜஸும் கூடுச்சு. ஹனுமனின் ஆசியோடு மலை உச்சிக்குப் போன பீமன், அங்கே பூத்துக் குலுங்கும் செடியில் இருந்து பூக்களைப் பறிச்சுக்கிட்டு, கையோடு ஒரு இளம்செடியையும் தோண்டி எடுத்துக்கிட்டு கீழே இறங்கினான்.

அண்ணாத்தே...இனி யாரும் வரமாட்டாங்க. நீ நல்லா ஆர அமரப் படுத்துத் தூங்குன்னு சொல்லி, கையோடு கொண்டுவந்த பூக்களைப் பாதி எடுத்து மெத்தையா அடுக்கிவச்சான். இன்னும் கொஞ்சம் பூக்களை எடுத்து ஒரு தலையணையும் செஞ்சு கொடுத்துட்டு வந்தான்.

நிம்மதியா ஒரு தூக்கம் போடணுமுன்னு ஒய்யாரமாப் படுத்து, வாலைத் தன் தொடைகளுக்கிடையில் கொடுத்துவாங்கி, ஒருகையால் முகத்துக்கு அண்டை கொடுத்து, மறுகையால் தன் கதாயுதத்தைப் பிடிச்சுக்கிட்டு, உள்ளங்கால் தெரியப் பாதத்தைத் திருப்பிப்போட்டு அசந்து தூங்கிட்டார் வாநர சிரேஷ்டர் ஹனுமான்.

எப்படி இருந்துருக்கும் அந்தக் காட்சி?


இப்படித்தான்.

சொல்ல மறந்துட்டேனே.... இந்தப் பூவின் பெயர் சௌகந்தி(யாம்)

அனைவருக்கும் ஹனுமத் ஜெயந்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

42 comments:

said...

கலக்கல்... நடுசெண்டர்ல ஹாஃப் ஃபாதர்-ன்னு சொல்லி காட் ஃபாதர கலக்கி எடுத்துட்டீங்க... துளசி தளத்தில் தங்க அனுமானின் பிறந்த நாள் தரிசனம்... அருமை.

said...

அனுமனுக்கு ஏத்த சிம்மாசனம்,படுக்கை. ஒய்யாரமா தூங்கறாரே.
துளசி கப்பு ஜிக்கு வரிசையில இவரும் உங்க கிட்ட
என்னை வீட்டுக்குக் கூட்டிப்போனு சொல்லிட்டாரா!!
கதை அழகு. வசனம் அழகு, சௌகந்திப் பூ எப்படி இருக்குமோ தெரியாது.
ஆனால் அதன் அழகு பூராவும் இந்தப்
பதிவில் வந்து விட்டதுமா.

ஒரு குறும்படமாப் பார்த்தத் திருப்தி.
அனுமத் ஜயந்தி வாழ்த்துக்கள். உங்க அன்பு ஆஞ்சநேயடு உங்களுக்கு
எல்லாவிதமான ஆசிகளையும் வழங்குவார்.

said...

வாங்க அரசூரான்.

போணி பண்ணிட்டீங்க! முதல் பின்னூட்டமே கலக்கல்:-)

ரசித்'தேன்'.

said...

வாங்க வல்லி.


'இந்த' அனுமனைப் பொறுத்தவரை 'எல்லாப் புகழும் வல்லிக்கே'!!!!!

//உங்க அன்பு ஆஞ்சநேயடு உங்களுக்கு
எல்லாவிதமான ஆசிகளையும் வழங்குவார்.//

அதென்ன உங்களுக்கு?

நம் எல்லோருக்குமுன்னு சொல்லுங்க:-)))))

said...

அனுமன் ஜயந்திக்கேற்ற பதிவு. வாழ்த்துக்கள்

said...

வாங்க அண்ணாமலையான்.

அண்னாமலையாரே வந்ததுக்கு மகிழ்ச்சி.

ஆஹா..... ஹரியும் சிவனும் ஒன்னு:-)

said...

யாரோ பதிபவருக்கு தான் பர்தே டே பதிவு என்று தலைப்பை பார்த்து நினைத்து விட்டேன்.

கலக்கல்.

said...

வாங்க சூர்யா.

இவர்தான் அந்தக் காலத்து NRI :-))))

said...

அழகா இருக்கு , எப்ப வாங்கினீங்க.. ? தன் படுக்கையில் படுத்தது போதாதுன்னு உங்க வீட்டு மெத் சோபா வேறயா? அவருக்கு..:)

said...

உங்களுக்கே உரித்தான நடையில் அழகா சொல்லிட்டீங்க பீமன்-அனுமன் சந்திப்பை(அக்னி நட்சத்திரம் படம் போல ஆனால் உல்டாவா அன்புச் சகோதரர்களாய்:)!

கடைசியில் அந்தப் படமும் அருமை. பீமன் தந்த பூமெத்தை போதாதென நீங்களும் கொடுத்திருக்கீங்க மெத்து மெத்துனு சோஃபா. துயிலும் தங்க அனுமன் கண்கொள்ளா காட்சி!

எல்லோரும் அனுமன் அருள் கிட்டட்டும். நன்றி.

said...

போற போக்கை பாத்தா நியூசி போறதுக்குள்ள நீங்க ரெண்டு மூணு படத்துக்கு கதையும் எழுதிடுவீங்க.

டீச்சர் பேருக்கு முன்னாடி நிறைய அடைமொழிக சேர்ந்திடும்.ஒய்யாரமா படுத்திருந்தாலும் அனுமன் தங்க கலரில் கம்பீரமா தான் இருக்கார்.

said...

வர வர உங்க 'லொல்லு' தாங்கல.

//தடித் தடியா அஞ்சுபேர் அன்பைக் காமிக்க இருக்கும்போது யாரையாவது ஏவினால் ஆச்சு.//
:)))))

பேசாம பாரதக்கதையை இப்பூடி உங்க இஸ்டைலில்?!:))எழுதினா நல்லாயிருக்கும் டீச்சர்

இது சௌகந்தி ன்னா பாமாவுக்கு கிடைச்சது 'பாரிஜாதமா' ரெண்டும் வேறா?

said...

யாரோ நம்ம பதிவுல 'தம்பி'ரானுக்கோ தம்புராட்டிக்கோ ஹாப்பி பர்த் டேன்னு வந்தால்........

said...

துளசி,
கலக்கலா இருக்கு பதிவு எப்பவும் போல...

சிலையும் பாந்தமா அழகா இருக்கு..ஆனால் அனுமன் சிலை வீட்டுல வச்சுக்கக் கூடாதுன்ன சில பாட்டிஸ் சொல்றாங்களே,பரவாயில்லையா?

அப்புறம் அந்தப் பூ பாரிஜாதம்னுல்ல படிச்சதா ஞாபகம்..

டீச்சர் சொல்றதே தப்பா?

ஆ.ஆ..ஆ..ஆ.ஆஆ(நாயகன் கமல் மாதிரி இருக்கோ?!)

said...

KanmaNi, krushnan kathaiyil PARIJATHAM.

Bharathak kathaiyil Saukandhikaa:)

said...

பூ செளகந்தி தான், பாரிஜாதம் பாமா, ருக்மிணி சண்டையிலே வரும். அநுமன் சிலையைப் படத்தை எல்லாத்தையும் தாராளமா வீட்டிலே வச்சுக் கும்பிடலாம். தப்பே இல்லை. சும்ம்ம்ம்ம்மா நடுவிலே சிலர் கிளப்பறது இதெல்லாம். ஜமாயுங்க துளசி!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

'தங்க' அனுமனுக்கு வீட்டில் 'தங்க' இடம் கொடுத்தாச்சு:-)

said...

வாங்க சிந்து.

மெகா சீரியல்ஸ் எழுத என்னைவிட்டா இனி வேற யாரும் இருக்கமுடியாதுன்ற லெவலுக்குப் போகணும்:-)

said...

வாங்க கண்மணி.

எனக்கே ரொம்ப நாளா இப்படி ராமாயணம் பாரதம் எல்லாம் நம்ம ஸ்டைலில் கதை சொல்லணுமுன்னு ஆசை.

நியூஸியில் கூட்டம் ஏது? அதான் கோபாலுக்குச் சொல்லிக்கிட்டு இருக்கேன். ஒன் டு ஒன்:-)

said...

வாங்க அறிவன்.

நம்ம வீட்டுலே ப்ரிஸ்பேன் ஹனுமார் ஏழெட்டு வருஷமா கைகூப்பிக் கும்பிட்ட நிலையில் அமர்ந்துருக்கார். கதையெல்லாம் கை மாத்தி மாத்தி வச்சுக்குவார்.

அதுக்கப்புறம் நின்ற நிலையில் கைகூப்பி ராமர் செட்டோடு.

இப்ப்ப இவர் மூணாவது.

கெட்டது நடக்கும் என்பது ரொம்பச் சரி. முதல்வர் வந்தபிறகுதான் எழுதணுமுன்னு விபரீத எண்ணம் வந்தது!!!!!


பாரிஜாதமுன்னு சொல்வது பவளமல்லிப் பூவைத்தான்.

said...

வல்லி,

கேரளாவில் ரஜனிகந்தி ன்னு ஒரு பூ இருக்கும். பார்க்க நம்ம அடுக்கு நந்தியாவெட்டை போலவே. ஆனால்..... மணம் அப்படியே வாரிக்கிட்டுப் போகும்ப்ப்பா.

said...

வாங்க கீதா.

வீட்டில் சிலகள் கூட கட்டைவிரல் சைஸுக்கு மேலே வச்சுக்கூடாதுன்னும் பலர் சொல்லி இருக்காங்க.

ஆனா அதையெல்லாம் அந்தக் காதுலே கேட்டு அதே காதுலே வெளியே விட்டுருவேன்.

அழகழகா ட்ரெஸ் பண்ணி விடுவேன். இதெல்லாம் என்னோட பார்பி டால் ன்னு மகள் சொல்வாள்.

said...

கலக்கல். இது மாதிரி எளிமையா ஒரு புராண கதைய வேற யாரும் புரியவைக்க முடியுமான்னு தெரியல.

மீ டூ ஸே “"ஹேப்பி பர்த் டே” டு அனுமார் :)

said...

ஹனுமான் ஜெயந்திக்கு வாழ்த்தா..?

டீச்சர் இதெல்லாம் ரொம்ப ஓவரா கீது..!

ஆனாலும் உங்களோட வார்த்தைப் பிரயோகங்கள்.. ம்ஹூம்.. அங்கதான் ஜெயிச்சுட்டீங்க..!

said...

வாங்கப்பா கயலு. ஜஸ்ட் மிஸ்டுப்பா.

போன புதனுக்கு ஆப்ட்டார். வல்லிதான் சொன்னாங்க அவர் அங்கே 'கிடக்கார்'ன்னு. போய்ப் பார்த்தால்...... ஹப்பா......
விடமுடியுதா? ரொம்ப அஞ்ஞானம். வீட்டுக்குக் கூட்டியாந்துட்டேன்:-)

அவருக்கென்னப்பா.... கொடுத்துவச்ச மகாராசா. துளசி கிடைச்சுட்டா:-))))))))))))

said...

டீச்சர், கோ அஹெட்..ஸ்டார்ட் மியூசிக்.. மகாபாரதம்...பர்டிகுலரா ”கீதோ உபதேசம்” உங்க ஸ்டைல்ல சொன்னா, நிச்சியமா நம்ப ரேன்ஞ் கும்பலுக்கு எல்லாம் ஈசியா புரியும். உங்களுக்கும் புண்ணியம்..பிளீஸ்.

said...

வாங்க நான் ஆதவன்.

எளிமையில் சொல்வதா?

கம்பரை மறந்துட்டீங்களே.

எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்.


இதைவிட எளிமைக்கு எங்கே போறது?

said...

வாங்க உண்மைத் தமிழன்.

நம்ம தளத்துலே 'லையில்' போட்டுருப்பதைப் பாருங்க.

எதை வேணுமுன்னாலும் எழுதுவேன்.

வெரி அன் ப்ரடிக்டபிள்:-)

said...

வாங்க விஜய்.

கீதா..............

ஆஹா............

இப்பவே அப்படித்தான். பதிவை எழுது. பின்னூட்டம் எதிர்பார்க்காதேன்னு புதிய கீதை சொல்லுது:-)))))

said...

அனுமன் படம் அமர்க்களம் அம்மா :) நீங்க பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அழகும்தான்!

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்.

said...

வாங்க கவிநயா.

ராம லக்ஷ்மண ஜானகி.....
ஜெய் போலோ ஹனுமானு'கி'

said...

Thulasi madam, Miga arumayana pathivu. en veetla chinna krishnar vigaraham onnu iruku thinamaum abhishekam avaruku anathan enaku soru..

said...

துளசி வீட்டில் கோயில் கொள்ள வந்த தங்க அனுமாருக்கு வந்தனங்கள். ராம் ராம் ராம்.

said...

வாங்க எல் கே.

முதல்லே அவர் சாப்பிட்டு ஒன்னும் ஆகலைன்னா, நமக்கு:-)))))

said...

வாங்க மாதேவி.

நீட்டி நிமிர்ந்து படுத்துட்டார். வேலையெல்லாம் யார் செய்வாங்களாம்?
:-))))
வருகைக்கு நன்றி.

said...

//அவர் சாப்பிட்டு ஒன்னும் ஆகலைன்னா, நமக்கு:-)))))//

apapdium vachikalam

said...

pathivu arumai. vaazhthukkal!

said...

வாங்க குலோ.

முதல் வருகை போல இருக்கே? வணக்கம். அடிக்கடி வந்து போகணும்.

said...

என்னங்க எல் கே.

இன்னுமா டமில் டைப்பலை?

கலப்பையால் உழுது, பதிவராகி, சீக்கிரம் வந்து ஜோதியில் சேரணும்.

said...

//என்னங்க எல் கே.

இன்னுமா டமில் டைப்பலை?

கலப்பையால் உழுது, பதிவராகி, சீக்கிரம் வந்து ஜோதியில் சேரணும்//

அம்மா, நான் வீட்ல இருந்து கமெண்ட் பண்ண தமிழ் உபயோகிப்பேன்.. பல சமயங்கள் அலுவலகத்தில் இருந்து உங்கள் வலை பதிப்பை படிப்பதின் விளைவு ஆங்கிலத்தில் பின்னூட்டம் வரும் ...

said...

உண்மையில நானும் நெனச்சேன் மகாபாரதம் உங்க நடைல படிச்சா நல்ல மனசுல பதியுமோ நு நீங்களும் சொல்லிடீங்க . கதாகாலட்சேபம் பண்ணனும்னு எண்ணும் போது அப்டியே writing லயும் போட்டுடுங்க .
தங்க நிற ஹனுமான் அவ்ளோ அழகு . நன்றி படத்துக்கு

said...

வாங்க சசிகலா.

முந்தியாவது நம்ம கோபாலகிருஷ்ணன் இருந்தான், சொல்லும் கதாகாலக்ஷேபத்தைக் கேக்க.

இப்ப இருக்கும் ராஜலக்ஷ்மி விளையாட ரெடியா இருக்காள்.

கதை சொல்ல ஆரம்பிச்சால் அப்பீட் ஆயிடறாள்ப்பா!

இந்த ஹனுமனை அப்புறம் சண்டிகரில் ஒரு கலைப்பொருட்கள் கடையில் பார்த்தேன். ரெண்டு சிலை. உடனே வாங்கி தோழிகள் இருவருக்கு என் நினைவாக் கொடுத்துட்டேன்.

குரங்கு பார்த்ததும் என்னை நினைச்சுக்கோன்னு:-))))

அங்கே சென்னை விலையில் பாதிதான்!!!