Tuesday, March 23, 2010

தேடித் தேடி ஞான் அலைஞ்ஞு.................

எப்படியும் போய்ப் பார்த்தே தீரணும் என்ற வெறி எனக்கு. காலையில் 9 மணிக்கு வந்த ட்ரைவர் ரோஹித்,'எங்கே போகணும்'னு கேட்டார் . நமக்குத்தான் அரைநாள் இருக்கே. "சலோ அதே சண்டி கோவில்.!" ஊரைவிட்டு வெளியில் வந்து ஷிம்லா போகும் பாதையில் வண்டி போகுது. இங்கிருந்து ஷிம்லா ரொம்பப் பக்கமாம். வெறும் 120 கிலோ மீட்டர்கள். ஆனால் நாலரைமணி நேரம் ஆகுமாம். மலைப்பாதையாச்சே. புதுசா ஒரு சாலை போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமாப் பயணம் ஒரு மணிநேரம் குறையலாமாம். (கூகுளிச்சப்ப வெறும் ரெண்டேகால் மணின்னு சொல்லுச்சேன்னு........ போகட்டும் அது மனோவேகமா இருக்கணும்!)
இந்த நாலைஞ்சு நாளிலேயே எந்த ரவுண்ட்டாணாலே திரும்புனா எங்கே பஞ்ச்குலா ரோடு வருதுன்னு புரிஞ்சுபோச்சு. மனஸா கோவிலுக்குத் திரும்பும் பாதையை விட்டு முன்னால் போய் வலது பக்கம் திரும்பிட்டோம். சரியான கிராமங்களும் சிற்றூர்களுமாக வந்துபோகுது. நெருக்கமான போக்குவரத்து. ஒழுங்கா வரிசையில் இல்லாத தெருவோரக்கடைகள், அழுக்கு, நடு ரோடில் ஒய்யாரமா நடக்கும் மாடுகள், தார்பாலின் போர்வையோடு லாரிகள், நடுநடுவிலே அட்டகாசமான கார்கள், திடீர் திடீர்னு கண்ணில் படும் தெருவோரப் பழக்கடைகள்(ஆரஞ்சு சீஸன் இப்போ) எல்லாத்தையும் பார்வையால் மட்டும் அளந்துக்கிட்டு இருக்கேன். வண்டியின் வேகத்தில் எடுக்கும் படங்களும் ஆட்டம்தான். ரொம்ப தூரத்துலே ஷிவாலிக் மலைத்தொடர்கள் மசமசன்னு தெரியுது.

இப்படி பிஸியான சாலையில் ஓரமா ஒரு நாற்காலியும், கண்ணாடியும் வச்சுக்கிட்டு முடி திருத்தும் தொழிலாளி கஸ்டமருக்கு சவரம் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஆமாம், வெறும் 10 கிலோமீட்டர் தூரம்தான் கோவிலுக்குன்னு கைடு புக் சொல்லுது. ஆனால் இம்மாந்தூரம் வந்துட்டோமே! 'இங்கே பக்கத்துலேதான் கோவில்.தோ..... வந்துருச்சு'ன்றார் ரோஹித்.
ஒரு கோட்டை மதில் கண்ணில் பட்டது. இதை யாதவிந்த்ரா கார்டன்ஸ்ன்னு இப்போ சொல்றாங்க. ஆனா பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம். நம்ம முகலாயமன்னர் ஔரங்கசீப் (அதென்ன சீப்போ?) டிஸைன் செஞ்ச தோட்டமாம். மாம்பழத் திருவிழான்னு சொன்னேன் பாருங்க அது இங்கேதான் நடக்குமாம். அழகான தோட்டமுன்னு கேள்வி. எனக்கு ரேஷனில் அரைநாள்தான் கிடைக்குது என்பதால் அப்புறம் ஆகட்டுமுன்னு போகவேண்டியதாப் போயிருச்சு.
பிஞ்சோர் என்ற ஊரைக் கடந்தோம். வெள்ளை மாளிகை இங்கே இருப்பதை இப்போதான் கண்டுபிடிச்சேன். அமெரிக்கமுறையில் கல்வி அளிக்கும் மாண்டிஸோரி, பாலர் பள்ளி வேற இருக்கு இந்த ஊரில்.


மரவேலைகள் ஜரூரா நடக்கும் ஊர். கடைவீதிகளில்(?) நாற்காலி, கட்டில் , சோஃபா, அலமாரி என்று கடைவாசல்களில் விற்பனைக்கு அடுக்கி வச்சுருக்காங்க. டெர்ரகோட்டாவில் மண் பூச்சட்டிகள், அலங்காரச் சாமான்கள், காற்றில் ஒலி எழுப்பும் விண்ட் ச்சைம்கள் ஏராளமா ஒரு பக்கம். வெங்காயக் கூம்புடனும் கொள்ளை அழகுடனும் குருத்வாரா ஓங்கி உயர்ந்து நிற்குது.
ஷிம்லாவுக்கு இன்னும் 90 கி.மீ போகணுமுன்னு தேசிய நெடுஞ்சாலை 22 சொல்லுது. கால்கா எல்லையைத் தொட்டதும் கான்வெண்ட் ஸ்கூல் 'தும் ஸபி மேரே பாஸ் ஆவோ. மே துமே விஷ்ராம் தூங்கா'ன்னு ஜீஸஸ் ஹிந்தியில் கூப்புடறார்.
கால்கா ரொம்ப பழைய ஊர். பழைய கட்டிடங்கள் ஒவ்வொன்னா போகப்போக அந்த இடத்தைப் புதுக்கட்டிடங்கள் எடுத்துக்கிட்டு இருக்குன்னாலும் பழைய அழகோடு அங்கங்கே ஒன்னொன்னு சின்னச்சின்ன ஜன்னல்களோடு சூப்பரா நிக்குது.
கோவிலை நெசமாவே சமீபிச்சுட்டோமுன்னு கட்டியம் கூறும் வகையில் பூஜைப்பொருட்களுக்கான கடைகளும் சிகப்பும் சரிகையுமா நேர்த்திக்'கடனுக்கான' துணித்துண்டுகளும். ஒரு சாலையின் வளைவில் சட்னு கண்ணுக்குப் புலப்படாத வகையில் ப்ராச்சீன் காளிமாதா மந்திர் கால்கா. அலங்கார வாசலின் மேல் மாடத்தில் ரெண்டு பக்கமும் யானைகள் மாலைகளை நீட்ட நடுவில் புள்ளையார் 'வா வா'ன்னு கூப்பிடறார்.
இந்தச் சாலை ரொம்பக்குறுகலா ஒரு பாலம், கடந்தவுடன் லேசான ஏத்தத்தோடு இருக்கு. ஷிம்லா போகும் மலைப்பாதை இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது. இடதுபக்கம் அண்ணாந்து பார்த்தால் மண் மூடிய மலைச்சரிவுகள். அங்கங்கே கூரைகளுடன் சில வீடுகள்(?), ஊர்ந்து போகும் வண்டிகள்ன்னு கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஊரில் இருந்துதான் ஷிம்லா போகும் மலைப்பாதை ரயிலுக்கான மீட்டர் கேஜ் ஆரம்பிக்குதாம். (இந்தப் பாதை இப்போ உலகின் பாரம்பரிய ரயில்போக்குவரத்து (ஹெரிடேஜ்) சைட்டுலே ஒன்னு) ப்ரிட்டிஷ் கால ஆட்சியில் ஷிம்லாவை அவுங்க கோடை வாசஸ்தலமா, பாட்டியாலா மகராஜாகிட்டே இருந்து வாங்குனப்ப (1843) இந்த கல்காவையும் சேர்த்தே வாங்குனாங்களாம். அப்பவே பாதையை சரியாப் போட்டுருக்கக்கூடாதோ? இடம் வாங்கி அம்பது வருசம் கழிச்சுத்தான் ரயில்வே லைனைப் போட்டுருக்காங்க. அஞ்சு வருச உழைப்பு. 1903வது வருசம் ரயில் போக்குவரத்து தொடங்கியிருக்கு. அப்போ ரயில்வே ஒர்க்ஷாப் வேலை, உள்ளுர் மக்கள்ன்னு ஏழாயிரம் மக்கள் இந்த ஊரில் இருந்தாங்கன்னு 1901 புள்ளிவிவரம் சொல்லுது.
மஞ்சள் இஞ்சி வியாபாரத்துக்கு இதுதான் தலைமை மார்கெட்டாம்.
ரொம்பவே புராதனக் கோவிலாம். ப்ராச்சீன் காளி மாதா கோவில். காலக்கணக்குத் தெரியாத எல்லாமே 'ஆதியில் இருந்தது' என்ற விவரத்தின் படி இந்தப் பக்கங்களில் 'ப்ராச்சீன்கள்' நிறைய இருக்கு. ஒரிஜனல் கட்டிடம் பலமுறை மாத்திக் கட்டுனதால் காணாமப்போயிருக்கு. தெருவிலிருந்து ஏழெட்டுப்படி இறங்கிப்போகணும். நிழலுக்காக நீலக்கூரை போட்டுவச்சுருக்காங்க. இடதுபுறம் காலணிகள் பாதுகாக்குமிடம். இலவசச்சேவை. கூரையின் கீழே நடந்து போனால் அடுத்த வாசல் இடதுபக்கமே வருது. பெரிய நீளமான கம்பியில் ரெண்டு வரிசையா மணிகளைத் தொங்கவிட்டுருக்காங்க. உள்ளே போகும் சனம், நான் ஆஜர்'ன்னு சொல்லும் வகையில் கம்பியைப்பிடிச்சு ஒரு குலுக்கு குலுக்கு. ஜலஜல ஜல்ஜல்.
ஸ்ரீ மாதா சாமுண்டின்னு எழுதிவச்சுருக்கும் கருவறை. காளிமாதா முகம். சுவர் ஓரமாக் காளியின் இன்னும் சிலபல முகங்கள். குனிஞ்சு உள்ளே பார்க்கும் விதமா கருவறை வாசல் ரொம்பச் சின்னது. கருவறையை வலம் வந்தால் அங்கங்கே மாடங்களில் தேவிகள், ஹனுமன், பிள்ளையார்ன்னு வர்ணச்சிலைகள். ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டியை கழுத்தில் கயிறுகட்டிப் பிடிச்சிருந்தார் ஒரு ஆள். இன்னொரு பூசாரி(?) அதன்மேல் தீர்த்தம் தெளிச்சார். அடக் காட்டு மிராண்டிகளான்னு பதறிப்போய் வெளியே ஓடிவந்துட்டேன்.(கோயிலுக்கு நேர்ந்து விடறாரோன்னு ஒரு நப்பாசை)

தெருவுக்கு நேரா இருந்த கண்ணாடி போட்ட (?)பெரிய மண்டபத்தில் கீழே விழுந்துகிடக்கும் சிவனின் நெஞ்சில் ஒரு காலை வச்சு, கையில் உள்ள சூலாயுதத்தை ஓங்கிக் குத்தும் போஸில் காளி ஆக்ரோஷமாக நிற்கும் வர்ணச்சிலை.
அடடா.... அம்மாவுக்கு இந்தக் கோவம் வரும்படி என்ன செஞ்சுட்டேப்பா?
மண்டப உள்புறச் சுவர்களில் சாமிக் கதை'' சொல்லும் சித்திரங்கள் தீட்டிவச்சுருக்காங்க. உத்துப் பார்க்க முடியாமல் வெயிலில் க்ளேர் அடிப்பதால் படங்களும் சரியா வரலை. பக்கவாட்டுக் கட்டிடத்தின் மேல் மாடி பால்கனிகளில் ஹனுமன், ஹிரண்யனின் வயிற்றைக்கிழிக்கும் நரசிம்ஹர் சிலைகள் . கண்ணாடிப் பாதுகாப்பில் இருக்காங்க எல்லோரும்.

அதே கட்டிடத்தில் பண்டாரா இருக்கு. கோவில் சாப்பாடு போடுது. இவ்வளவு இருந்தும் தெருவிலிருந்து கீழே இறங்கும் படிகளின் ரெண்டு பக்கமும் ஏராளமான பிச்சைக்காரர்கள்.

ஒவ்வொரு தூணா நின்னு நிதானமாப் பார்க்கும் அளவுக்குக் கோவில் விஸ்தாரம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளே வெளியே வந்துட்டோம். ஆனால் நவராத்ரி காலங்களில் எள்ளு போட்டா (இதயம்) நல்லெண்ணெய்தான் வருமாம். நாம் முன்னே பார்த்த குருத்வாரா இந்தக் கோவிலின் பின்பக்கம் தலை உயர்த்திப் பாக்குது.
கோவிலுக்குப் பக்கத்தில் க்ளேஸ்டு ஜாடிகள், திருகைக்கல்லு, கல்பத்தா என்னும் சின்ன உரல், சப்பாத்திக்கல், அலங்காரப் பொம்மைகள் இப்படிப் பொருட்கள் நிறைஞ்ச கடைகள். ஒரு ஹனுமன் ராமலக்ஷ்மணர்களைத் தோளில் சுமந்துருக்கும் பொம்மை சூப்பர். விலை என்னன்னுகூடக் கேக்கவிடலை ஒருத்தர். என் காலக்கெடு முடிஞ்சு போச்சு. "வெறும் 10 கிலோ மீட்டர்ன்னு சொல்லி இம்மாந்தூரம் கொண்டுவந்துட்டே....( யாரு? நானா?) திரும்ப உன்னைக் கொண்டுபோய் ஹொட்டேலில் விட்டுட்டு நான் ஆஃபீஸ் போகணும்"

இத்தனைக்கும் வெறும் 35 கி.மீதான் வந்துருக்கோம்.

"வேணாம். சிரமம் எதுக்கு?. வர்றவழியில் ஒரு ரோடு பிரியுது .வெறும் 18 கி.மீதான். ஒரு சேஞ்சுக்கு உங்களை ஆஃபீஸில் விட்டுட்டு நான் ஹொட்டேலுக்குப் போறேன். (முகத்தில் கோடி சூர்யப்பிரகாசம்)

இன்னும் ஷார்ட் கட் இருக்கு. அதுலே போனால் இருவது நிமிஷத்துலே போயிறலாமுன்னு ரொம்ப உற்சாகமா வண்டியை எடுத்த ரோஹித், சந்து பொந்துக்குள்ளேயெல்லாம் போய் வழிதவறி அங்கங்கே குறுகலான பாதைகளில் வண்டியைத் திருப்பிக்க இடமில்லாமல் முழிச்சு ஒரு வழியா 'சீக்கிரமா' ஒரு ஒன்னேகால் மணி நேரத்துலே ஹிமாச்சல் பிரதேசத்துலே இருக்கும் ஃபேக்டரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இவரை விட்டுட்டுத் திரும்பிவரும்போது 50 நிமிசத்துலே சண்டிகர் செண்ட்ரலுக்கே வந்துட்டோம். புது ரோடு அப்படி ஜோரா இருக்கு. இன்னும் வேலை முடியலை. டார் சீல் செஞ்சபிறகு 40 நிமிஷத்துலே போகலாமாம்.

முதல் அரைமணி நேரத்துக்குப்பிறகு நம்பிக்கை இழந்த கோபால், 'தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜானென்ன முழமென்ன....' எருமைகளையும் எருமுட்டைகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தார். எல்லாம் வேலை செய்யும் எருமைகள். மாட்டு வண்டிகளை இழுத்துக்கிட்டுப் போகுதுகள். வழியெல்லாம் செங்கல் சூளைகள் எக்கச்சக்கம். டெர்ரகோட்டா பொருட்கள் ஏராளமாக் கிடைக்கும் ரகசியம் புரிஞ்சது.

கடைசிவரை இந்தச் சண்டி கண்ணில் படாமல் ஒளிஞ்சுக்கிட்டாளேன்னு எனக்கு ஏக்கம். இன்னொரு சண்டியை நேர்கொள்ள திடமில்லாதவள். அன்னிக்கு மாலை சந்திச்ச ஒரு மிலிட்டரிக்காரரிடம் ( ரிட்டயர்டு ஆர்மி கர்னல்) பத்து கிலோ மீட்டரில் இருக்கும் உங்கூரு சண்டி எங்கேன்னதும் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாப் போச்சு! சரியான நபரிடம்தான் விசாரிச்சு இருக்கேன்!!!

"வெஸ்டர்ன் கமாண்ட் ஹெட்க்வாட்டர்ஸ் பார்த்தீங்களா? வெளியே சின்ன பீரங்கிகள் எல்லாம் இருக்குமே. அதே இடம்தான். அதுக்குள்ளே போகணும். ஆஃபீஸ் ரூம் இருக்கும் வளாகத்தில் நேர் எதிரா இருக்கும். வாசலில் இருக்கும் செண்ட்ரிகிட்டே கோவிலுக்குப் போகணுமுன்னு சொன்னால் போதும். வழி விடுவாங்க"


அடப் பாவமே!! சண்டி, இப்போ ஆர்மி அரெஸ்ட்டா?

14 comments:

said...

ப்ராச்சீன் காளி மாதா கோவில்
கண்ணாடிக்குள் இருக்கும் காளி பயமாகத்தான் இருக்கிறது.

"ஹனுமன் ராமலக்ஷ்மணர்களைத் தோளில் சுமந்துருக்கும் பொம்மை சூப்பர்" ஆமாம்.
முன்னாடி தர்சனத்திற்கு வந்திருக்கும் தங்க ஹனுமாருக்கு கோபம் வந்திடுமே.:))

said...

ஆக ரோஹித் கண்டு பிடிச்சு கொடுத்துட்டாரு சண்டியை.. :)

said...

Hopefully you will get to see her now!

said...

வாங்க மாதேவி.

ஹனுமன் சாந்த மூர்த்தியா இருக்கார். நல்லவேளை காலடியில் பெண்ணைப்போட்டு மிதிக்கலை. ஆனா 'அம்பாள்' அந்த வேலையை ஆரம்பிச்சுட்டாங்க:-)

said...

வாங்க பொற்கொடி.

எங்கே? எங்கே?

சண்டி சண்டின்னு நான் புலம்ப 'அசல்' சண்டியை விட்டுட்டு மத்த எல்லாக் கோவில்களுக்கும் கொண்டுபோயிட்டார்!

said...

வாங்க சந்தியா.

இப்போதானே 'இருக்குமிடம்' தெரிஞ்சுருக்கு! இனிமேல்தான்......

said...

இன்னும் எத்தனை நாள் இருக்கப்போறீங்க? அப்படி நேரமிருந்தா,30 கிமீ தூரத்துல டிம்பர் ட்ரைல் கயிற்றுவழியில் (Ropeway) ஏறி அங்க மேல இருக்குக் ரெசார்டில் ஒரு டீ குடிச்சுடு வரலாம். அப்படி இன்னும் கொஞ்சம் போனீங்கன்னா ரேணுகா ஏரியும் இருக்கு அதையும் பாக்கலாம். முடிஞ்சா கசெளலி போய் வானம் தெளிவா இருந்தா பாக்கிஸ்தான் பார்டரையும் பாக்கலாம்.. இதெல்லாம் பாக்காட்டாலும் கயித்து கட்டில் போட்டு சுடச்சுட தந்தூரி ரொட்டியும் காரமா ராஜ்மா மசாலாவும், சர்சோன் கா சாக் சாப்பிடாம வந்துராதீங்க. அப்படியே போனா போகட்டும்னு சண்டீகர் ஸ்பெஷல் பால் பர்ஃபியும் (நா போனப்ப எல்லாம் அங்க டி.பி.அர் எலில் வேலை பார்க்கும் உள்ளூர் சர்தார்ஜிகள் ஒரு டப்பா வாங்கி கொடுத்துடுவாங்க வேற எங்கயும் அந்த மாதிரி டேஸ்ட் நா பாத்ததில்ல).

said...

வாங்க கிவியன்.

தோ..... காலையில் கிளம்பிடுவோம்.

ஆனால்....எவ்ரிதிங் நோட்டட்.

செஞ்சுறலாம், அடுத்த பயணத்தில்:-)

said...

சண்டியைக் கண்டு விலகிட்டாங்களோ:)
அடுத்த தடவை பார்த்துடலாம்!
எப்படிச் சுத்த வச்சிட்டாங்க!!
காளி கோவில்ல இன்னும் ஆடு ஏமாறுதா பாவமே.
ஒருவேளை வீட்டுக்காரர் மேல இருக்கற கோபத்தினாலியோ என்னவோ
சுத்திவர இருக்க மலையெல்லாம் அழகா இருக்குப்பா.
டெல்லி மாதிரி இங்கயும் பழைய சண்டிகர் ,புது சண்டிகர் இருக்கோ ?

said...

எப்ப டீச்சர் ஒரிஜினல் சண்டியை பாக்கறது....நீங்க தேடி தேடி அலையறீங்க..கூடவே நாங்களும் தான்!!!!

said...

சண்டின்னா சும்மாவா...!! ;)

said...

வாங்க வல்லி.

அதே அதே:-)))))

வம்பு எதுக்கு நைனான்னு ஒதுங்கி இருந்துருக்குமோ!!!!

said...

வாங்க சிந்து.


அலையவே வேணாம். இப்பெல்லாம் வீட்டுவீட்டுக்கு ஒன்னு இருக்கு. போய்க் கண்ணாடியில் பார்த்தால் போதும் என்கிறார் கோபால்:-)))))

said...

வாங்க கோபி.

சண்டே மட்டுமில்லை.........
சண்டின்னாலும் ரெண்டு:-)