Thursday, April 29, 2010

கூப்பிட்ட குரலுக்கு.............

இன்னிக்கு 'ராத் தங்கல்' எங்கேன்னு (சீட்டுக் குலுக்கிப்)பார்த்ததில் உடுப்பிக்கு சான்ஸ் அடிச்சது. நெட்லே தேடுனா ஒன்னும் சரியா வரலை. நேரில் போனால் ஆச்சு. யாத்ரக்கார்க்கு சௌகர்யங்கள் கிருஷ்ணன் செஞ்சு தரட்டுமே.
கொல்லூர் டு உடுப்பி மலைப்பாதையா இருக்கு. இருவது நிமிசப் பயணத்துலே வலது பக்கம் அழகா ஒரு தோரண வாசல். புள்ளையார், விஷ்ணு, சிவான்னு இல்லாம நடுநாயகமா ஒரு மாடு! 'அச்சச்சோ..... என்னன்னு தெரியலையே'ன்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். புத்தம் புதுசாப் போட்ட சிமெண்டுப் பாதை, மெல்ல மலை ஏறுது. பள்ளிக்கூடம் விட்டு வரும் பசங்க சின்னச்சின்னக் குழுவாப் பேசிக்கிட்டே மலைப்பாதையில் நடந்து போறாங்க. ஒரு ரெண்டு கிலோமீட்டர்வரை போயிட்டு, இன்னும் எவ்வளவு தூரமுன்னே தெரியலையே..... வந்து மாட்டிக்கிட்டோமோன்னு பசங்களைக் கேட்டால் கோவில் ரொம்ப தூரத்துலே இருக்காம். பத்து நிமிசம் ஆகுமாம்! அச்சச்சோ.......
ரெண்டே நிமிசத்துலே கோவில் முன் நின்னோம். gகாயினகுடி. பசுக்களுக்கான கோவில். புதுசாப் பெயிண்ட் அடிச்சு சூப்பரா இருக்கு. விசாரிக்கலாமுன்னா யாரையும் காணோம். போயிட்டுப்போகுது..ம்ம்ம்ம்ம்மா........
ஒரு அரைமணிக்கூறில் இன்னொரு பெருமாள் கோவில் கண்ணில் பட்டது, என்ன ஊர், என்ன இடமுன்னு தெரியலை. எங்கெயாவது பெயரை ஆங்கிலத்திலோ இல்லை ஹிந்தியிலோ எழுதி வைக்கக்கூடாதா? வழிநெடுக பெட்ரோல் பங்குகளைப் பார்த்தாலும், போர்டில், கம்பெனி பெயர் இருக்கே தவிர அது இருக்கும் இடத்தோட பெயரை எழுதிவச்சால் குறைஞ்சா போயிரும்.? தப்பித்தவறி பெயர் எழுதி இருக்கும் கோவில்களில் எல்லாமே ஜிலேபி:( யாத்ரக்காருக்கு பயங்கர புத்திமுட்டு:(

லக்ஷ்மி வெங்கடரமண ஸ்வாமி. கோவில் பண்டிட்டுக்கு என்னமோ நம்மைப் பார்த்தவுடன் அதீத மகிழ்ச்சி. உள்ளே கூட்டிட்டுப்போய் தீபாராதனை காமிச்சுப் பிரஸாதம் கொடுத்தார். கோவிலையும் சுத்திக் காமிச்சார். ஒரு ஆயிரம் வருசமாச்சாம் கோவிலுக்கு வயசு. மூடிவச்சுருக்கும் தேர் ஷெட்டைத் திறந்து தேரைக் காமிச்சார். அவர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். புத்தம் புதுசா ஜொலிக்குது. அட்டகாசமான மரவேலைப்பாடு. ரொம்ப நுணுக்கமாச் செதுக்கி இருக்காங்க.

கோவிலுக்கு மூணு குளம் இருக்கு. நல்ல சுத்தமானவைகள். அதுலே ஒன்னு வித்தியாசமான டிஸைனில் படிக்கட்டுகளோடு. அதுக்குப் பக்கத்துலே நாகர்களுக்கு ஒரு சந்நிதி. இது தனிக் கட்டிடமா இருக்கு. உள்ளே நிறைய கல்நாகங்கள். அதுக்குப் பின்னே பெரியபெரிய புத்துகள். இங்கேயும் அபிஷேகத்துக்குன்னு தண்ணீர் சொட்டும் அமைப்பு. புற்றுகளில் 'பெரியவங்க ' இருக்காங்களாம். சில சமயம் ச்சும்மாக் காத்தாட வெளியே வந்து உக்காருவாங்களாம். இந்தப் பக்கம் பிள்ளைகுட்டிகளோடு பண்டிட்டின் குடும்பம் வசிக்குது..... என்னதான் கோவில் நாகமுன்னாலும்..... குலை நடுங்கத்தான் செய்யுது! ( வீடுகளில் மனைப்பாம்புன்னுகூட புத்துகளைப் பார்த்துருக்கேன். ஒரு சமயம், ஒரு வீட்டுலே நடு ஹாலில் கூரைவரை உயரமான புத்து இருந்துச்சு.நாகத்தோடு சம்பந்தப்பட்ட நம்ம குடும்பக் கதை ஒன்னு இருக்கு. அதை அந்த 1500லே போடத்தான் வேணும்)


நாகரஹாவு

தாகத்துக்கு எதாவது குடிச்சுட்டுப் போங்க. சாயா இல்லே காஃபி தயாரிக்கச் சொல்றேன்னு விருந்தோம்பல் வேற! பரவாயில்லையே. கோவில் பண்டிட்கள் அதிதி சல்காரம் கூடச் செய்யறாங்களே!!!!! அதெல்லாம் ஒன்னும்வேணாம். கோவில் நல்லா சுத்தமா இருக்குன்னு சொல்லிப் பாராட்டிட்டு வந்தேன். நாலைஞ்சு சிறுவர்களும் சிறுமிகளும் கோவில் வெளிப்புறத்தில் குப்பைகள் இல்லாமல் பொறுக்கிப் போட்டுக்கிட்டும், அங்கங்கே தரையில் முளைச்சுருக்கும் புல்பூண்டுகளை எடுத்துச் சுத்தம் பண்ணிக்கிட்டும் இருந்தாங்க. உண்மையான சேவை.

யாராவது காஃபின்னு சொன்னதும் நமக்கும் காஃபித் தாகம் வந்துருமே. இதுக்குள்ளெ மலைப்பாதையிலிருந்து ஹைவே 17 இல் வந்து கலந்துருந்தோம். ஒரு இடத்துலே நிறுத்தி காஃபி ஆச்சு. ப்ரஷாந்துக்கு மட்டும் செட் தோசை. அது என்ன செட் தோசைன்னு நம்ம இவருக்கு ஒரு ஆர்வம். ஆனால்.....பசி இல்லை இப்போ வேணாமுன்னுட்டார். இனி நேரா உடுப்பிதான்.

வண்டி ஓடும்போது என்னவோ விசித்திரமா ஒரு சத்தம். நிறுத்திப் பார்க்கணுமுன்னு கோபால் கண்டிப்பாச் சொன்னார். பார்த்தா...... சந்தேகம் சரி. பின் சக்கரத்தில் பங்ச்சர். அதுவும் என் பக்கம்:( மெயின்ரோடைவிட்டுக் கீழிறங்கி நிறுத்துன்னு சொன்னதைக் கேக்காம நல்லா பிஸியா இருக்கும் ஹைவேயில் நிறுத்துனதும் நல்லதாத்தான் போச்சுன்னு சொல்லணும். ஸ்டெப்னி இருக்கு. மாத்திக்கலாமுன்னு ஜாக்கை எடுத்து தப்பான இடத்தில் வைக்கும் ப்ரஷாந்தைப் பார்த்துக் குலை நடுங்குனதென்னவோ நிஜம். வண்டி பேலன்ஸ் இல்லாமத் தரையில் உக்காரப்போகுது. சும்மா அப்படியே வண்டியை நிறுத்துனா ஆச்சா? ஹஸார்டு லேம்ப் போடணும் போடணுமுன்னு அதுவும் ஆச்சு. வண்டிக்குப் பக்கத்தில் நின்னாதான் 2 விபத்துகள் பலதும் நடக்கும். கீழே இறங்கி அந்தப் பக்கம் போய் நில்லுன்னு நம்ம இவர்வேற என்னிடம் உறுமுறார்.
ஸ்டெப்னி டயரை எடுக்க முயற்சித்தால் முடியலை. இந்த இன்னோவா வண்டிகளில் அது டிக்கியில் இல்லை. வண்டிக்கு அடியில் ஒரு சங்கிலி ஊஞ்சலுடன் இருக்காம். மேலே இருக்கும் ஒரு துளையில் நீண்ட கம்பிபோல ஒன்னு போட்டுச் சுத்துனா அது அப்படியே ஊஞ்சலாடி கீழே வருமாம். கனவு சீன்களில் மேலே இருந்து நாயகி & நாயகன் ஊஞ்சலில் வந்து இறங்குவது சமயாசந்தர்ப்பம் இல்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்குது.
ஒரு முறை சுத்துனவுடன் அந்தக்கம்பி ரெண்டாய் பிட்டுக்கிச்சு:(

சாலையில் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு (100 மீட்டர்தூரம்) கொஞ்சம் கீழே இறங்கிப்போகும் மண்பாதையில் இருக்கும் கடைகளில் வாசலில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தவர் வந்தார். அசப்பில் நம்ம ஜெய்கணேஷ் மாதிரி இருந்தார். மனிதர் பாவம், அந்த ஸ்டெப்னியை எடுக்கச் சாலையில் வண்டிக்கடியில் படுத்தெல்லாம் முயற்சி செஞ்சார். பொழுது சாயும் முன்னே அடுத்த ஊருக்குப் போயிறணும் என்ற திட்டம் அம்பேல்.

சாலையில் போய்க்கிட்டே இருந்த ஒரு மோட்டர்பைக் தடதடன்னு உறுமிக்கிட்டே வட்டமடிச்சு நம்ம வண்டிக்குப் பக்கம் வந்து நின்னுச்சு. ஹெல்மெட்டைக் கழட்டினார் ஒரு இளைஞர். அவர் பங்குக்கு அவரும் சாலையில் உருண்டு அங்கப்ரதக்ஷணம் செஞ்சும் ஒன்னும் நடக்கலை. எப்படியும் ரெண்டா உடைஞ்ச கம்பியை எங்கியாவது வெல்ட் செஞ்சால் வேலை நடக்கும்னு ஒரு தியரி. அதோ அங்கே ஒரு கடை இருக்குன்னு நம்ம ஜெய்கணேஷ் கை காட்ட , வெல்டிங் கடையைத் தேடி தன்னுடைய பைக்கிலே ப்ரஷாந்தைக் கூப்பிட்டுப் போனார். ஜெய்கணேஷும் தன்னுடைய கடைக்குப் போயிட்டார்.
உடுப்பிக்குப் போய் கிருஷ்ணனை இன்னொரு முறை பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவளை இப்படி நட்டாத்துலே விட்டுட்டாயேடா..........
சூரியன் மலைவாயில் விழுந்தான். இருட்டு வரப்போகுது. எங்கேதான் இருக்கோமுன்னும் தெரியலை.சுத்துமுத்தும் கண்ணை ஓட்டினேன். கோபாலடி ரோடு! தேவுடு காக்க வச்சுட்டான்ய்யா........

நாங்க ரெண்டு பேரும் பேய் முழியோடு நிக்கிறோம். ஒரு கால்மணி நேரத்துலே வெல்டு பண்ணக் கம்பி வந்தாச்சு. பார்த்துக்கிட்டே இருந்தார் போல நம்ம ஜெய் கணேஷ். அவரும் எழுந்து வந்தார். நல்லா டைட்டா வச்சுத் திருப்புன்னு கோபால் லெக்சர் கொடுத்துக்கிட்டு நிக்க..... ஆளாளுக்குக் கம்பியைத் திருப்ப ஒரு அனக்கமும் இல்லை. இதுக்கு நடுவில் போற வர்ற ஆட்கள் நின்னு பார்த்துட்டு, எங்கமேல் ஒரு (பரிதாப) லுக் விட்டுட்டுப் போறாங்க. போகட்டும், சக்கரத்தைக் கழட்டிப் பஞ்சர் ஒட்டிக்கலாமுன்னா..... அதையும் கழட்ட முடியலை ப்ரஷாந்துக்கு. மும்மூர்த்திகள் உதவலாமுன்னு போனா....

பைக் வாலிபர் சர்னு கிளம்பிப்போயிட்டார். பக்கத்துலே யாரையாவது கராஜ்லே இருந்து கொண்டுவரேன்னு போயிருக்கார் புண்ணியவான். நல்லா இருக்கணும். பத்தே நிமிசத்துலே ஒரு பையனோடு திரும்பி வந்தார். சின்னப் பையன். ஆனா எண்ணிப் பத்தே நிமிசத்தில் ஸ்டெப்னியை இறக்கி, டயர் மாத்தியாச்சு!!!! எல்லார் முகத்திலும் நிம்மதியான சிரிப்பு.

கம்பியை விட்டு முடுக்கறார். க்ருஷ்ணான்னு நான் மனசுலே கூப்புடவும், டடக் னு ஒரு சத்தத்தோடு ஸ்டெப்னி கீழே இறங்கவும் சரியா இருந்துச்சு. அடப்பாவி. எவ்வளோ அரற்றினேன். அப்பெல்லாம் பேசாம இருந்துட்டு இப்போ.....உதவும் பாவனையா?

எதுக்கும் அந்த டயருக்குப் பங்ச்சர் ஒட்டிக்கிட்டுப் போயிருங்க. இந்த பையன் ஒட்டித் தருவார்ன்னு சொன்னார் பைக் வாலிபர். ஆமாம் இவர் யார்? எதுக்கு வேலை மெனெக்கெட நம்மோடு ஒன்னரை மணிநேரம் மாரடிச்சு இருக்கார்?

இன்னோவா வண்டி ஏன் இப்படி ரோடோரத்தில் வாயைப் பிளந்துக்கிட்டு நிக்குது? கூடாதேன்னு பார்க்க வந்தாராம். இங்கே காபு (Kaup) ஏரியாவில் டொயோட்டாவுக்கான சேல்ஸ் மேனேஜராம். உடுப்பியிலிருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்துருக்கார். அப்பத்தான் அவர் பெயரைக் கேக்கணுமுன்னு தோணி இருக்கு எனக்கு. அஷ்வத்.

நம்ம ஜெய்கணேஷ்க்கு நன்றி சொல்லிப் பெயரைக் கேட்டால்..... நாராயணா!!!!

வாய்(ஸை) கட்டிட்டாப்பா.....

கோலமகரிஷி என்றவர் சிவனைக் கும்பிட்டு தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அதே சமயம் கௌமாசுரன் என்ற ஒரு அசுரனும் சிவனை நோக்கித் தவம் செய்யறான். சிவன்தான் யாரு தவம் செஞ்சாலும், மனம் மகிழ்ந்துபோய் 'என்ன வரம் வேண்டுமானாலும் கேள்'ன்னு சொல்றவராச்சே! மற்ற தேவர்கள் அசுரன் ஏதாவது கேட்டு. நமக்கு ஆபத்து விளைவிச்சுருவானோன்னு பயந்துக்கிட்டே போய் அன்னை பார்வதியிடம் முறையிடுறாங்க.

'அஞ்சேல்' ன்னு சொல்லி, அசுரனின் பேசும் சக்தியைப் பறிச்சுட்டாங்க 'வாக்கு' தேவி. இனி 'பே பே' தான் என்ன வரம் வேண்டுமுன்னு கேக்கமுடியாதாம்! அதனால் அந்த அசுரனுக்கு மூகாசுரன்னு பெயர் வந்துருச்சு. ஆனாலும் அவன் விடாமல் தவம் செய்யறான். அப்போ அவனிடம், சண்டைக்குப் போனாங்க, அம்மா. போரில் அசுரனால் ஜெயிக்க முடியலை. பராசக்தி நீயே கதின்னு அன்னையைச் சரணடைஞ்சான். அவன்மேல் இரக்கம் கொண்டு அவனுக்குப் பேசும் சக்தியைத் திருப்பித் தந்தாள் பார்வதி. அப்போ அவன் வணங்கிக் கேட்டுக்கிட்டானாம். 'அம்மா. நீ இந்த இடத்துலே கோவில் கொண்டு எல்லாரையும் காப்பாற்றணும்'னு. 'விஷ் க்ராண்டட்.' மூகாசுரன் வேண்டுதலுக்காகத் தங்கிய அன்னைக்கு மூகாம்பிகை என்ற பெயரும், கோல மகரிஷி தவம் செய்யததால் இந்த ஊருக்குக் கொல்லூர் என்ற பெயரும் வந்துச்சுன்னு ஒரு புராணக் கதை இருக்கு. மூகாசுரனை தேவி இங்கே வதம் செஞ்சதாவும் சொல்றாங்க. 'மரண கட்டே'ன்னு ஒரு இடம் இருக்காம்.

சரணமடைஞ்சவனை வதம் செய்வதா? சீச்சீ.... நல்லா இல்லே:(

சக்தி பீடமுன்னு இந்தக் கோவிலைச் சொல்றாங்க. பரசுராமர் ஏழு கோவில்களை உண்டாக்கினார். அதுலே பார்வதிக்கான கோவில் இது ஒன்னுதான்னு சொல்றதும் உண்டு.

தாய் மூகாம்பிகை படம் எல்லோரும் பார்த்துருப்பீங்கதானே?

நம்ம ஆதிசங்கரர், அன்னையை நோக்கித் தவமிருந்து 'சௌந்தர்ய லஹரி'யை எழுதுனது இங்கே தானாம். கைலாசத்தில் இருந்து அன்னையை, தன் தேசத்துக்குக் (பரசுராமரால் கிடைச்ச தேசமான இப்போதைய கேரளா) கூட்டிப்போகணுமுன்னு ஆதிசங்கரர் வேண்டினாராம். அன்னையும் அவர் சொல்லுக்கு இணங்கி ஒரே ஒரு கண்டிஷனோடு புறப்பட்டு வர்றாங்க. சங்கரர் தம்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடக்கணும். தேவி பின்னாலே நடந்து வருவாங்க. அப்போ சங்கரர் கேட்டுக்கிட்டார், அம்மா, நீ என்னைத் தொடர்வது எனக்கு எப்படித் தெரியும்? உன் கால்கொலுசுச் சலங்கைச் சப்தம் கேட்டுக்கிட்டே வந்தால் நீ வர்றேன்னு நானும் நிம்மதியாத் திரும்பிப் பார்க்காம முன்னால் போறேன்னு மறு கண்டிஷன் போட்டார்.

(வெளிப்ரகாரச் சந்நிதிகள் வரிசை )

அப்படி நடந்து வரும்போது இந்த ஊரில் இந்த இடத்துக்கு வரும்போது , அதுவரை கேட்டுக்கிட்டு இருந்த கொலுசுச்சத்தம் நின்னு போச்சாம். என்ன ஆச்சுன்னு தன்னையறியாமல் திரும்பிப் பார்த்துட்டார் சங்கரர். உடனே அங்கே ஒருசிவலிங்கமா உருமாறித் தங்கிட்டாங்களாம் தேவி. அந்த சிவலிங்கத்தில் தேவியின் இருப்பைக் காமிக்க ஒரு தங்கரேகை பளபளன்னு தங்கிருச்சாம். ஆஹா............................ரொம்ப சிம்பிள்! பெண் = பொன்!!!! அப்ப இருந்துதான் பெண்களுக்கு நகை ஆசை வந்துருக்கும்.இல்லே?

ஆதி சங்கரர், ஒரு சமயம் தேவியின் முன்னால் தியானம் செஞ்சு முடிச்சதும் இடத்தைவிட்டு எழுந்திரிக்க முடியாமல் தடுமாறினாராம். அவருக்கு உடல்நலமில்லைன்னு உணர்ந்த அன்னை பராசக்தி, தானே 'கஷாயம்' செஞ்சு அந்த 'காஷாயத்துக்கு'க் கொடுத்துருக்காங்க. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும்விதமா தினமும் ராத்திரி கடைசி பூஜைக்குக் கஷாயம் நைவேத்தியம் இங்கே உண்டாம். (பலி உத்ஸவ கஷாயா)

இங்கே மூகாம்பிகை சிலை ப்ரதிஷ்டை செஞ்சு 1200 வருசங்களாகி இருக்காம். சங்கு சக்கரம் தரிச்சு, காளி, சரஸ்வதி, மஹாலக்ஷ்மின்னு முப்பெரும்தேவியரா இங்கே இருந்து அருள்பாலிக்கிறாள்.ஆதிசங்கரர், 'கலாரோஹணம்' பாடுனதும், இந்த சரஸ்வதியை தியானிச்சுத்தானாம். நவராத்ரி காலங்களில் அப்படி ஒரு கூட்டம் வந்து அலைமோதுமாம். மூலவருக்கு ரெண்டு பக்கமும், காளிக்கும் கலைவாணிக்கும் ஐம்பொன்சிலை செஞ்சு வச்சுருக்காங்க.இந்தக் கோவில் அரசியல்வாதிகளுக்கும் சினிமா உலகத்தின் முக்கிய புள்ளிகளுக்கும் ஃபேவரிட்டா ஆகிருச்சு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் நடிகர் எம் ஜி.ஆர், இந்தக் கோவில் அம்மனுக்கு ஒரு கிலோ எடையில் ரெண்டரை அடி நீளமான ஒரு தங்க வாளைக் காணிக்கையா அளிச்சுருக்கார். அதே சைஸ்லே ஒரு வெள்ளி வாளை , அப்போதிருந்த கர்நாடகா அரசின் முதலமைச்சர் குண்டு ராவ் காணிக்கையாத் தந்தாராம். ( Y வாள்? எதிரிகளைப் போரிட்டு அழிக்கவா?) அன்னைக்குச் சார்த்தும் முகக்கவசம், விஜயநகரப்பேரரசு காலத்தில் அம்மன்னர்களின் காணிக்கை. இப்போ இருக்கும் கோவிலும் 1200 வருசப் பழசுன்னு சொல்றாங்க. ராணி சென்னம்மாஜி கட்டுனதாம். நம்ம இளையராஜாவும் அம்மனுக்கு வைரக்கைகள் கொடுத்துருக்கார். அடுத்து வைரக்ரீடம் கொடுக்கப்போவதாச் சொல்லி இருக்காராம்.

கோவிலில் அஞ்சு காலப்பூஜை தினமும் நடக்குது. காலையில் தேவிக்குப் பல்விளக்கும் சம்பிரதாயம் கூட இருக்கு. தந்தாடவன் பலி பூஜா..... ! சந்தியாக்காலப்பூஜைக்கு சலாம் மங்களாரத்தின்னு ஒரு பெயர். திப்பு சுல்தான் ஒரு சமயம் இங்கே வந்தப்பக் கோவிலில் சந்தியாகாலப் பூஜையைப் பார்த்துட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, தேவிக்கு, ஒரு' சலாம்' வச்சாராம். இப்பவும் வருசத்துக்கொரு முறை சிறப்பு நிகழ்ச்சியா இங்கே பூஜை சமயம் இசுலாமிய அன்பர்கள் வந்து தேவி தரிசனம் செய்யறாங்களாம்.
கோவில் கொடிமரத்துக்குப் பக்கத்துலே 21 அடுக்குள்ள தீபஸ்தம்பம் இருக்கு. விசேஷம் என்னன்னா..... அந்த தீபஸ்தம்பத்தைத் தாங்குவது நம்ம கஜராஜன். நேரா மூலவரைப் பார்த்துக்கிட்டு இருக்கார். அவரைத் தாங்குவது ஒரு கூர்ம பீடம். அட்டகாசமா இருக்கு. கிட்டப்போய்ப் படம் எடுக்க முடியலை. அதான் அங்கே ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சே!

கேரளப்பாணியில் திண்ணைகள் ஓடும் கோவில்தான் இது. கருவறையை ஒட்டி இருக்கும் உள்ப்ரகாரத்துலே, வெள்ளையைப் பளிங்குலே ஒரு புள்ளையார் இருக்கார். பலமுரி விநாயகர். தும்பிக்கை வலது பக்கம் சுழிச்சிருக்கும் வலம்புரி விநாயகர்தான் இவர்! இந்தப் ப்ரகாரத்துலே நாலுவித கணபதிகள் இருக்காங்க. ஒருத்தருக்கு தசபுஜம் இருக்கு.
வெளிப்பிரகாரம் வலம் வரும்போது மூலவருக்குப் பின்பக்கச் சுவர் வரும் இடத்தில் வரிசையா சுப்ரமண்யர், சரஸ்வதி, ப்ராணலிங்கேஸ்வரர், பார்த்தீஸ்வரர், வாலில் மணி கட்டி இருக்கும் நேயடு(வாதிராஜர் ப்ரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் இவர்), விஷ்ணு ப்ருந்தாவனத்தின் நடுவில் நிற்கும் கோபாலகிருஷ்ணன்னு சந்நிதிகளை தரிசனம் செஞ்சுக்கிட்டே வந்தால் பெரிய துளசி மாடம் ஒன்னு அருகம்புல்லா நிறைஞ்சு கிடக்கு. அடுத்த சந்நிதி வீரபத்திரருக்கு.

ஒரு க்ரிக்கெட் மட்டையும், பந்தும் வச்சு விசேஷப்பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. நாலு சிதறுதேங்காய் உடைச்சாங்க. தேங்காய் ஓடைவிட்டு ஜம்முன்னு எகிறித் துண்டா நம்மகிட்டே வந்து விழுந்துச்சு. அங்கே நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருந்ததால் அதை எடுத்துத் தின்னோம். பேச்சுக் கொடுத்தப்பத் தெரிஞ்சது, அது அனில் கும்ப்ளேவின் மட்டையாம். நாம் சென்னைவாசிகள்னு தெரிஞ்சதும் அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 'இன்னிக்கு இப்போ கொஞ்ச நேரத்துலே உங்க ஊர்லேதான் கேம் ஆரம்பிக்கப்போகுது. அனில் கும்ப்ளே வெற்றிக்காகத்தான் இந்த பூஜை'ன்னு சொன்னாங்க. ( வீரபத்திரர் வேண்டுதலை நிறைவேற்றலைன்னு அன்னிக்கு ராத்திரியே தொலைக்காட்சியில் தெரிஞ்சது.

முதல் வேண்டுதல் ஒருவேளை, எதிரணி செஞ்சுருக்கலாம்.:- ) ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு!
கோவில் தேர் அட்டகாசமான மரவேலைப்பாடுகளுடன் கம்பீரமா இருக்கு. சக்கரங்களைச் சுலபமாத் திருப்ப ஒரு ஸ்டியரிங் வீல் கூட இருக்கு. கோவில் ப்ரஸாதமா இங்கே லட்டு விக்கறாங்க. 'ஒந்து, ஹத்து ருப்யா'


கோவில் யானையும் கோவில் பூனையும்,கோவில் குருவியும் கூட இங்கே இருக்கு. ( இப்பத்தானே குருவிகள் இனம் அழிஞ்சு வருதுன்னு ஒரு பதிவு போட்டார் செந்தழல் ரவி)
ஒரு ஹால் சுவற்றுக்கு மேல் மொஸைக் டிஸைனில், பாம்பணைமேல் பள்ளிகொண்ட பரந்தாமன், இன்னும் சில கடவுளர்களின் சித்திரங்களுடன் ஒரு கும்பினிக்காரனும், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும் இருக்காங்க.

படப்பிடிப்புக் குழுவில் ஒருத்தர் வந்து நம்மைக் கண்டுக்கிட்டார். தேங்காயை அரைச்சுக்கிட்டே மேல்விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். நாயகி, கேரளத்துலே ரொம்ப ஃபேமஸாம். டிவி சீரியலில் வர்றாங்களாம். அவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்காத ஜென்ம(மும் உண்டோன்னு அவருக்கு அதிசயம்:-)

Tuesday, April 27, 2010

ருத்ரபூமியில் கோபத்துக்குப் பஞ்சமேது?

வேறென்ன கோவில்கள் இங்கே இருக்குன்னு தப்பா ஒரு கேள்வியைக் கேட்டுட்டேன். 'தடுக்கி விழாமப் போ'ன்னாங்க. முக்கியமானதுன்னு இருக்கும் மஹாகணபதி க்ஷேத்ரத்தைக் கட்டாயம் கண்டுக்கணும். சிறுவனா வந்து 'ஆப்பரேஷன் ஆத்மலிங்கம்' (சொல் உபயம்- அமைதிச்சாரல். நன்றி) ட்யூட்டியில் மேஜர் பார்ட் இவருக்குத்தானே? அதுக்கு நன்றிக்கடனா வச்ச சிலை. புள்ளையார் சின்னப்புள்ளை உருவமா நிக்கறார். இப்போ இருக்கும் கோவில் 1500 வருசப் பழசு.
மஹாபலேஷ்வர் கோவிலில் இருந்து அதே தெருவில் ஒரு ரெண்டு நிமிச நடையில் இந்தக் கோவில் இருக்கு. வாசலில் கொஞ்சம் பூவையோ இல்லை அருகம்புல்லையோ ஒரு இலையில் வச்சு விற்கும் பெண்களின் கூட்டம் ஏராளம். அந்த ஏரியா முழுசும் கோக்கள் நிதானமா நடைப்போட்டுக்கிட்டு இருக்குதுங்க. பக்தர்கள் வாங்கித் தரும் வாழைப்பழங்கள்தான் முழுநேர உணவு போல! நமக்கு வாகா அங்கங்கே கடை முன்னால் நிக்குதுகள்.
கணபதி கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் முன்னால் ஒரு நீண்ட ஹாலும் அதை அடுத்து ஒரு கருவறையும். ப்ரவுனும் தங்கமும் கலந்தது போல் இருக்கும் கல்லால் செய்யப்பட்டுருக்கார். இவருக்கும் அபிஷேகம் இடைவிடாமல் நடக்க தலைக்கு மேல் பாத்திரம் தொங்குது. பால் நீர் ன்னு எதாவது கொண்டுவந்து மக்கள் அதை நிரப்பிக்கிட்டே இருக்காங்க. அருகம்புல் கொத்தை அவர் தலையில் வைப்பதும், செம்பில் தனியாப் பால் கொண்டு வந்து சொட்டுப்பாத்திரத்தில் விடாமல், டைரக்ட்டா இவர் தலையில் ஊத்துவதுமா அவரவர் விருப்பபடி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கருவறைக்குள்ளே நுழையணுமுன்னா டிக்கெட் வாங்கிக்கணும். ஒத்தை ரூபாய்தான். எங்கே வாங்கணுமுன்னா ஹாலின் ஒரு ஓரத்தில் கவுண்ட்டர் இருக்காம்.

ரெண்டு டிக்கெட் கொடுங்கன்னு பத்து ரூபாய் நீட்டுனதும் கவுண்ட்டர் மனுஷர் அப்படியே கொதிச்சுப் போயிட்டார்! அவர்முன்னால் மேசையில் ஒருரூபாய் ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய் நாணயங்கள் கோபுரங்கள் போல அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. சில்லறையாக் கொண்டு வரணுமாம். நம்மகிட்டே உண்மையாவே சில்லறை ஒன்னும் இல்லை. இருந்ததெல்லாம் வழிச்சு வாழைப்பழம் வாங்கியாச்சு மாடு பாப்பாக்களுக்கு.
'பரவாயில்லை. பத்து ரூபாய் வச்சுக்குங்கோ .ரெண்டு டிக்கெட் கொடுங்கோ'ன்னா அவருக்கு இன்னும் அசாத்தியமாக் கோபம் வருது. நம்ம கோபால் காசுக் குவியலைக் காட்டி அதுலே இருந்து அஞ்சு ரூபாயைத் தந்தால் போதும். மீதி வேணாமுன்னார். 'இனாம் ஒன்னும் வேணாம். இதோ ரெண்டு டிக்கெட். எடுத்துக்கோனு நம்ம பத்து ரூபாயையும் ரெண்டு டிக்கெட்டையும் கவுண்ட்டர் ஜன்னல் வழியாத் தள்ளிக்கிட்டே கத்தக் குரலெடுத்தார். ருத்ரபூமியாச்சே.... அதே கோபம் நமக்கும் ஏறாதா? நான் அந்த ரெண்டு டிக்கெட்டையும் மறுபடி உள்ளே தள்ளிட்டு எனக்கும் இலவசம் ஒன்னும் வேணாம். அப்படிப்போய் சாமியைப் பார்க்காட்டிப் பரவாயில்லை. கோவிலில் உக்கார்ந்துக்கிட்டு இவ்வளோ கோபம் கூடாதுன்னு சின்னதாக் கத்துனேன். (மந்திர்மே பைட்கி இத்னா குஸ்ஸா அச்சா நையே)

ஒரு நொடி தலையைத் தூக்கி என்னை ஏறெடுத்துப் பார்த்த மனிதர்..... கொஞ்சம் தழைவான குரலில் தரிசனம் முடிச்சுட்டு அப்புறமாச் சில்லரை மாத்திக் கொடுங்கன்னார். நான் ஒன்னும் சொல்லாம கவுண்டரை விட்டு நகர்ந்துட்டேன். கருவறைக்குப் போகும் படிக்கருகில் ஒரு அர்ச்சகர் தட்டுலே நிறையச் சில்லரைக்காசு இருந்துச்சு. அங்கே போய் பத்துக்குச் சில்லரை கேட்டதும் கொஞ்சம் முழிச்சார். பரவாயில்லை கொடுங்க. எல்லாம் இங்கேதானே திரும்பிவரப் போகுதுன்னதும் கொடுத்துட்டார். சரியான சில்லரையா ரெண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு 'gகேட்'டுக்குச்சியை(!) தாண்டி புள்ளையாரின் தொப்பை வயித்தைத் தொட்டுத் தடவிக் கும்பிட்டேன்:-)
கோவில் தேர் நின்ன இடம் தாண்டி எதிர்வரிசைக்குப் போனால் ஸ்ரீ வெங்கடரமண ஸ்வாமிக்கு ஒருதனிக்கோவில். இந்தப் பக்கங்களில் தேர் அலங்கரிப்பது ரொம்ப வித்தியாசமா இருக்கு. வெள்ளையும் சிகப்புமா முக்கோணக்கொடிகள் வச்சே அலங்கரிச்சுடறாங்க. வழியில் கரகம் போல் அலங்கரிச்ச ஒன்றைத் தலையில் வச்சுக்கிட்டு ஒரு கூட்டம் கொட்டுமுழக்கோடு ஆடிக்கிட்டே வந்தாங்க. கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ஒரு வெள்ளைக்காரர் ஆட ஆரம்பிச்சார்.
பெருமாள் கோவில் பழமையான கோவில்தான். நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை. கோவிலின் முன் மண்டபம் நல்லா கலர்ஃபுல்லா இருக்கு. மூலவர் கொஞ்சம் இருட்டுலேதான் நிக்கிறார். பண்டிட் ரொம்ப நல்லா தீபாராதனை செஞ்சு ப்ரஸாதம் கொடுத்தார்.




கோவிலை ஒட்டிய வீதியில் சின்னச்சின்னத் திண்ணைகள், பொட்டிக்கடைகளா மாறி இருக்கு! வீட்டையும் பார்த்துக்கிட்டு அப்படியே யாவாரத்தையும் பார்த்துக்கறதுதான்! நம்ம ஊர்ப்பக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இப்படித்தான் இருக்கும். நாம் மாறிட்டோம், அவுங்க இன்னும் மாறலை. செல்ஃபோன் பயன்படுத்தும் விஷயத்தில்கூட தமிழ்நாடுதான் முன்னேறிக்கிடக்கு. அம்பானிகளையும் டாடாக்களையும் இன்னும் பணக்காரரா ஆக்கியே தீரணுமுன்னு சபதம் எடுத்துருக்கோமுல்லே?
கொஞ்சம் வயதான மலைநாட்டுப் பெண்கள் தமிழ்சினிமா நாயகிபோல ஒரு உடை போட்டுருந்தாங்க. வெய்யிலுக்கு இதமா இருக்குன்னு பார்த்தாலே தெரியுது.
ஊருக்குள் நிறைய வெள்ளைக்காரகளைப் பார்த்தேன். இங்கே ஓம் பீச்ன்னு ஒன்னு இருக்காம் ஹிந்தியில் ஓம் என்ற எழுத்துவடிவமா கடற்கரை இருக்குதுன்னாங்க. அங்கே கேம்ப் சைட்டும் கொஞ்சம் மலிவான தங்குமிடங்களும் இருக்குன்னு வெள்ளைக்காரர்கள் அங்கே தங்கிடறாங்களாம். இவுங்கெல்லாம் நம்மைப்போல ஒரு நாள் ரெண்டு நாளுன்னு இல்லாம ரெண்டு மாசம் மூணு மாசமுன்னு தங்கி நிதானமாச் சுத்திப் பார்க்கும் ஆட்கள். ஆனால் இவுங்களுக்குக் கோவிலுக்குள் போய் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை:(

சமஸ்கிரதம் படிக்கவும், வேதங்களைக் கத்துக்கறதுக்கும் இங்கே கல்வி நிலையங்கள் , இருக்கு. நாடெங்கிலும் இருந்து மாணாக்கர்கள் வர்றாங்களாம்.


இன்னும் ஏராளமான கோவில்களும் கடற்கரைகளும் இருந்தாலும் நேரம் இல்லாததால் கிளம்பினோம். காலையில் வந்த அதே தேசீய நெடுஞ்சாலை 17 இல்தான் திரும்பிப்போகணும். பகல் சாப்பாட்டுக்கு அங்கே இங்கேன்னு தேடி ஒன்னும் சரிப்படலைன்னு முருதேஷ்வராவில் இருக்கும் ஆர். என் எஸ். ஹைவே ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். சிம்பிளான டைனிங் ஹால். ரெஸ்ட்ரூம் எல்லாம் படு நேர்த்தியாச் சுத்தமா இருக்கு. பயணத்துலே இதுதான் பெரிய ப்ராப்லமாப் போயிருது. இன்னும் நம்ம மக்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சரியா இல்லை என்றது எனக்கு ரொம்பவே வருத்தமான விஷயம். செல்ஃபோன் வளர்ச்சியையும் வசதிகளையும் பார்த்தால் இதுலே எல்லாம் முன்னேறத் தெரிஞ்ச நம்ம மக்கள் எப்படி அடிப்படை சுகாதார அறிவே இல்லாம இருக்காங்கன்னு நொந்துக்கத்தான் வேணும்.

இங்கிருந்து சுமார் ஒன்னரை மணி நேரப்பயணம். கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தாச்சு. நீண்ட மதில் சுவர்களைச் சுற்றி கோவில் முகப்புக்கு வந்து உள்ளே நுழைஞ்சால் கொடிமரத்தைத்தாண்டி ஏழெட்டு டீன் ஏஜ் பெண்கள் நடனமாடிக்கிட்டு இருக்காங்க. பாட்டுப்பாடிக்கிட்டே ஒரு இளம்பெண் பக்தியோடு நடந்து அந்தப்பெண்கள் கூட்டத்தில் புகுந்து போறாங்க.



"தாயே மூகாம்பிகா..... இது என்ன உன் விளையாட்டு"!!!!

ஷூட்டிங் நடக்குது. பக்திப்பாடல்களுக்கான படப்பிடிப்பாம்.
கோவில் வாசலில் 'செல்ஃபோனுக்குத் தடா'ன்னு அறிவிப்பு இருக்கு. உள்ளே மக்கள் தாராளமா இங்கேயும் அங்கேயுமாப் பேசிக்கிட்டு இருக்காங்க!

முதலில் பிரகாரங்களைச்சுற்றி வந்து அங்கே இருக்கும் சந்நிதிகளில் சேவிச்சுட்டு அப்புறமா மூலவரைப் பார்த்து சேவிப்பதுதான் மரபுன்னு நினைக்கிறேன். ஆனா .... அது என்னவோ முதலில் மூலவரை நோக்கி ஓடுவதே எனக்குப் பழக்கமாகிப் போயிருச்சு. சரியான இடும்பி:(

"ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே "மூகாம்பிகையே

பத்மாசனம் போட்டு உக்கார்ந்து அருள் பாலிக்கும் அம்பாள் (காலடியில்) காலுக்கு முன்னே சிவன் லிங்க ரூபத்தில். அதில் ஒரு தங்கரேகை ஓடுதாம். அபிஷேக சமயத்தில் தெளிவாகத் தெரியுமாம். ஆனா ஆறுமணிவரை காத்துருக்கணும். சதுரமான பீடத்தின் நடுவில் பளபளன்னு செம்பு மூடி போட்டு வச்சுருக்காங்க.

மீதி அடுத்த இடுகையில்......................

Monday, April 26, 2010

சிவன் தலையில் கை வச்சேன்.

'ருத்ரமா? எதுக்கு இதெல்லாம் வேணாமு'ன்னு சொல்ல வாயைத் திறந்த கோபாலிடம் பட்டியலில் கடைசியில் இருக்கும் தொகையைக் கொடுக்கச் சொன்னேன். உடனே அங்கிருந்த பண்டிட் ஒருத்தர் நம்மை உள்ளே கூட்டிக்கிட்டுப்போய் சங்கல்ப்பம் செய்விச்சு, குழந்தைகளின் பெயர்கள் எல்லாம் கேட்டுக் குடும்ப நலனுக்காகப் பிரார்த்தனை செஞ்சு தீர்த்தம் கொடுத்தார். தட்சிணை போடுங்கோன்னு சொல்லவே இல்லை!

பெரிய ஹால். ஒரு பத்திருவது பேர் உக்காந்து ஒன்னுபோல வேதம் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அர்த்தம் ஒன்னும் புரியலைன்னாலும் அதை கேக்கும்போது மனசுக்குள்ளே ஊடுருவிப்போறமாதிரி இருக்கு. சப்தங்களின் ஜாலம்! எழுதாக் கிளவி! இந்தப் பக்கம் ஒரு சின்ன அலங்கார மண்டபத்தில் சந்திரமௌலீஸ்வரர் (மீசையுள்ள முகம்). அவருக்கு முன்னால் மாவிலையோடு கலசம். வெளியே வந்ததும் நமக்கு ஒரு பஞ்சமுக ருத்ராக்ஷம், விபூதி ப்ரசாதம் கொடுத்து ஒரு கவரில் நம்ம விலாசம் எழுதச் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டாங்க. (நான் இதை மறந்தேபோயிட்டேன். போனவாரம் அங்கிருந்து ஸ்வாமி ப்ரஸாதம் வீட்டுக்கு வந்துச்சு)
ப்ரகாரத்தில் நடந்து மகாபலேஷ்வரரைத் தரிசிக்கப்போனோம். அங்கே ஒரு வாசல் இருக்கு. வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லைன்னு அறிவிப்பு வச்சுருக்காங்க. சொல்ல மறந்துட்டேனே..... இங்கே கோவிலில் ஆண்கள் மேல் சட்டையைக் கழட்டிடணும். . உள்பிரகாரத்தில் போனதும் அங்கே ஒரு கருவறை. இந்திய ஆடைகள் தரிசனத்துக்கு உகந்ததுன்னு இன்னுமொரு அறிவிப்பு.

இந்த மாதிரி தெளிவாப் போட்டுவச்சுட்டால் வம்பே இல்லை பாருங்க. அப்பாடா.... இங்கேயும் தப்பிச்சேன். ஆனால் இண்டியன் உடைகளில் தமிழ் சினிமா நாயகிகளின் பாடல் காட்சி உடைகள் வருமான்னு தெரியலையே:(

பெண்களுக்கு 'நாசூக்கா' ஒரு அறிவிப்பு வச்சுருந்தாங்க. அந்த நிலைன்னா யாரும் பொதுவா கோவிலுக்குப் போகமாட்டோம்தான். காலம் மாறுது. மக்கள் மனசுலே இதைப்பற்றியெல்லாம் வேறமாதிரி தோணுதுன்னு நிர்வாகம் நினைக்குது போல.


ஆறடி உயரமுள்ள சிவலிங்க ரூபத்தில் இருக்கும் மூலவர் மஹாபலேஷ்வர். ராவணன் பெயர்தெடுக்கப் பார்த்தும் அசைக்கக்கூட முடியாமல் பலம் பொருந்தியவராக இருந்ததால் இந்தப் பெயர் வந்துருக்கு. கருவறை ரெண்டு பகுதியா இருக்கு. முன்பக்கம் வரிசையில் போகக் கம்பித்தடுப்பு. தரையெல்லாம் ஒரே ஈரம். நசநசன்னு. வழுக்கிவிடாமல் பிடிச்சுக்கவும் அந்தக் கம்பித்தடுப்புப் பயன்படுது. அடுத்த பகுதியில் தரையில் ஒரு சதுரமான பீடம். அதன் நடுவில் சின்னதா ஒரு குழி. மேலே கலசத்தில் இருந்து சொட்டும் அபிஷேக நீர் குழி முழுசும் ரொம்பி இருக்கு, அதில் பூக்களும் வில்வ இலைகளுமா மிதக்குது.

அந்தச்சதுர பீடத்துக்குப் பக்கத்திலே ஒரு பண்டிட் உக்கார்ந்துருந்தார். நல்லா கைவிட்டுத் தொட்டுப் பார்த்துக் கும்பிடுங்கன்னு பக்தர்களுக்கு சொல்லிக்கிட்டே இருந்தார். பீடத்தின் மறு பக்கத்துலே ஒரு தட்டுலே கொஞ்சம் ரூபாய்கள் இருந்துச்சு. நமக்கு முன்னே இருந்தவர்கள் எல்லோரும் தட்டுலே கொஞ்சம் காசைப் போட்டுட்டு தரையில் குத்துக்காலிட்டு உக்கார்ந்து குழிக்குக் கைவிட்டுக் குடைஞ்சுட்டு கண்களில் ஒத்திக்கிட்டு எழுந்து போறாங்க. ப்ரஸாதமா அவுங்களுக்குக் கொஞ்சம் வில்வ இலையும் பூவுமா, பண்டிட் கொடுத்து அனுப்புறார். காசு போடுங்கன்னு யாரும் யாரையும் கேக்கலை. கோபாலுக்கு அடுத்தபடி நான். நமக்கோ தரையில் உக்காருவது ஏகப்பட்ட கஷ்டம். சரீரம் அப்படி காத்திரமா இருக்கு!

பெருமாளேன்னு கும்பிட்டுக்கிட்டே கொஞ்சமாக் குனிஞ்சேன். குழிக்குள்ளே தடவுனதில் நடுவிலே சின்னதா ஒரு கல்போல் கைக்கு உணர்ந்துச்சு. சிவனின் தலை முடிச்சு. வழுவழுன்னு இல்லாம கொஞ்சம் கரடுமுரடாவும் ஒரு பக்கம் சின்னதா பிளந்து இருப்பதுபோலவும் உணர்ந்தேன். பார்க்க முடியாது. அதான் தண்ணீரும்(கங்கை?) பூக்களுமா மிதந்துக்கிட்டு இருக்கே. பிரஸாதம் வாங்கி வெளியில் வந்தேன்.
எனக்கு ரொம்ப ஏமாத்தமாவும் அதே சமயம் த்ரில்லிங்காவும் இருந்துச்சு. ஆறடி லிங்கமுன்னு சொன்னாங்க. இப்பப் பார்த்தா ஒரு ரெண்டு அங்குலம்தான் இருக்கு:(

விசாரிக்கணுமே....... ஆறடி என்றது உண்மைதான். அதன் தலைப்புறம் பீடம் எழுப்பி கருவறையாக் கட்டி வச்சுருக்காங்களாம். நாப்பது வருசத்துக்கு ஒருமுறை அஷ்டபந்தன மஹோத்ஸவம் நடக்குமாம். அந்த சமயம் முழு லிங்கத்தையும் தரிசனம் செய்யமுடியுமாம். எப்படி?????

ஏற்கெனவே அறையாக் கட்டிவச்சு இருக்காங்க. ஒருவேளை அந்தத் தரைக்கு அடியில் வழி எதாவது சுரங்கம்போல் அமைச்சு இருப்பாங்களோ???
பொதுவாக் கோவில்களில் பனிரெண்டு வருசத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தணுமுன்னு சாஸ்த்திரங்கள் சொல்லுது. இங்கே வேறமாதிரி சொல்றாங்க. பலவருசங்களா அஷ்டபந்தன விழா நடக்கவே இல்லையாம். போன நூற்றாண்டுலே மூணே முறை 1906, 1930, 1983 ஆண்டுகளில் நடந்துருக்கு. மூணு லட்சம் பக்தர்கள் வந்து போயிருக்காங்க. கர்நாடகா அரசு ரொம்ப சிறப்பாக எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தாங்கன்னு நன்றியோடு நிகழ்ச்சியை நினைவு கூறினார் ஒரு பெரியவர்.

'மனசைச் சாந்தப்படுத்திக்கோ, கோபத்தைக் குறைச்சுக்கோ அமைதியா இரு'ன்னு எத்தனை முறை யார்யாரோ வந்து 'உபதேசிச்சாலும்' ஒருமுறை ஆத்திரம் வந்தா சட்னு அடங்குதா என்ன? கொதிக்குது மனசு அப்படியே......

குறைஞ்சபட்சம் பாலாக இருந்தால் கொதிச்சுப் பொங்கும்போது ஒருகை பச்சத்தண்ணீ(ர் தெளிச்சா கொஞ்சமாவது அடங்கும். நம்ம சிவனுக்குக் கொதிக்குது மனசு அப்படியே.......... இந்த ப்ரம்மா இப்படிப் பண்ணிட்டானே....... அவனையும் அழிச்சுறலாமுன்னா..... இந்த விஷ்ணுவேற சமாதானப் புறாவாட்டம் வந்து...அமைதி அமைதி..... கூல் டவுன் கூல் டவுன்னு ஒரு பக்கம்.....

ஒரு இடத்துலே உக்காந்து யோசிக்கிறார் சிவன். இனி செய்ய வேண்டியதென்னன்னு ஒரு முடிவுக்கு வரணும்....... பேசாம வீட்டைப் பார்த்துப் போகவேண்டியதுதான். கிளம்புனவர், வெறுங்கையோடா போறதுன்னு....தன்னுடைய சக்தி, பிரம்மனுடைய சக்தி, அவன் படைச்ச ஜீவராசிகளின் சக்தி, விஷ்ணுவின் சக்தின்னு எல்லாத்தையும் சேர்த்து அதை ஒரு பொன்மானா உருவாக்கினார். அதுக்கு நாலு கால்கள், மூணு கொம்புகள், மூணு கண்கள். மானைக் கையில் பிடிச்சுக்கிட்டுக் கயிலைக்குப் போய்ச் சேர்ந்தார்.

இதுவரை படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் திடீர்னு ஜீவனே இல்லாம நடைப்பிணமா இருக்கு. தேவர்களுக்குச் செய்ய வேண்டி பூஜை புனஸ்காரங்களைச் செய்ய சக்தியில்லாமக் கிடக்குது சனம். ஏன் இப்படின்னு மறுபடி ஒரு ஆலோசனைக்கூட்டம் நடக்குது. விஷ்ணுதான் இந்தக் கமிட்டிக்குத் தலை. 'ருத்திரர்தான் சக்தியெல்லாம் திரட்டி எடுத்துக்கிட்டுப் போயிட்டார்ன்னு தெரியுது. நாமெல்லாம் அவர்கிட்டே போய் திருப்பித்தாங்கன்னு கேக்கலாம்'ன்னார்.

கைலாயத்துக்கு எல்லோரும் கூட்டமாப் போனாங்க. ருத்திரரை வணங்கி, (முகத்)துதிகள் எல்லாம் பாடி மன்றாடிக் கேட்டதும் மனம் இரங்கிருச்சு. பொன் மானில் இருந்த சக்திகளை மீண்டும் அவரவருக்குச் சேரவேண்டியதைப் பிரிச்சுக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கக் கொடுக்க அந்தப் பொன்மான் கரைஞ்சுக்கிட்டே போகுது. கடைசியா மிஞ்சி இருந்தது அந்த மூணு கொம்பில் ஒரு கொம்பு. அதுலேதான் ருத்திரனின் சக்தி முழுசும் திரண்டு இருக்கு. இந்தக் கொம்புதான் ப்ராணலிங்கம். ரொம்பப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் இதை ருத்திரரே வச்சு வழிபட்டு வந்தார். பெரியவரே கும்பிடும் அளவுக்கு இது இருக்குன்னா..... இதன் சக்தி மகத்தானதுன்னு விண்ணுலகவாசிகளும் இதை வணங்கி என்றும் அழியா ஆனந்தத்துடன் இருக்காங்க.

இந்த ப்ராணலிங்கம் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ராவணனும் கயிலைக்கு போறான். துண்டு துண்டா வெட்டப்பட்டு முந்தைய பதிவுகளில் வந்ததையெல்லாம் படிச்சவங்களுக்கு இப்ப முழுக்கதையும் தெரிஞ்சுருக்குமே!

Sunday, April 25, 2010

பசுவின் காது

78 கிலோமீட்டர்தான் ஒன்னரை மணி நேரம் பயணம். வழியிலே எங்கேயும் நிறுத்தலை. வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்ததுதான். Grand Canyon வந்துட்டோமோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன். செம்மண் குன்றுகளை பெரிய பெரிய துண்டுகளா வெட்டி எடுத்து அப்படியே ராட்சஸ மைசூர்பாக்காட்டாம் அடுக்கி வச்சுருக்காங்க. இதை அடுக்கி வீடு கட்டிக்கலாம். கேரளாவில் இப்படி கட்டுன வீடுகளைப் பார்த்துருக்கேன். இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் போனால்....இந்த செம்மண் குன்றுகள் ஹிஸ்டரி ஆகிரும். இந்தச் செம்மண் காட்டிலே எக்கசக்கமா முந்திரி மரங்கள் நிக்குது.
ஒரு வளைவில் திரும்புனதும் கடலோரப்பாதை வந்துருது. கொஞ்ச தூரத்தில் உப்பளங்கள் தென்பட்டது. கடல் தண்ணீரைப் பாத்திக் கட்டி விட்டுருக்காங்க. அங்கங்கே சின்னச்சின்னக் குவியல்களாக் குவிச்சுருக்கும் உப்பு..

ஊருக்குள் வர்றதுக்கு முன்னாலேயே 'ஓம் பீச்' இந்தப் பக்கம்னு வலதுபக்கம் போகச் சொல்லி ஒரு கைகாட்டி. 'ஓஹோ அப்படியா'ன்னு நாம் இடதுபக்கம் போனோம். ரொம்பப் பழைய ஊர். குறுகிய தெருக்களொடு இருக்கு கோகர்ணம். ஏழு முக்தி ஸ்தலங்களில் ஒன்னு. தக்ஷின் காசி என்ற புகழ். இங்கே பித்ருகடன் செய்தால் முன் பத்துத் தலைமுறை, பின் பத்துத் தலைமுறை, இப்போ இருக்கும் தலைமுறைன்னு 21 தலைமுறைக்குக் கடன் செய்த பலனாம். இங்கே வந்து இறந்தவர்களுக்கு டைரக்டா சொர்கம்தானாம். இன்னொரு பிறவி என்பதே இல்லாமல் போயிருமாம். எப்பேர்ப்பட்டப் படுபாதகம் செய்தவங்களுக்கும் இங்கே உள்ள மஹாபலேஸ்வரரைத் தரிசனம் செய்தால் பாவம் நீங்கி மோக்ஷம் உறுதியாம்.

கோகர்ணம் பெயர்க்காரணம், விளக்கம் ரெண்டு மூணு இருக்கு. அதுலே ஒன்னு ரொம்ப சுவாரசியமானது. வந்து உக்காருங்க. கதையை ஆரம்பிக்கலாம்.


கோடானகோடி யுகங்களுக்கு முன்னே....... ப்ரளயம் வந்து எல்லாமே அழிஞ்சு போன காலக்கட்டம். அப்போ இருந்த ப்ரம்மாவுக்கு புது சிருஷ்டி செய்யவேண்டிய நிர்ப்பந்தம். மனசை ஒருமுகப்படுத்தி த்யானம் செஞ்சுக்கிட்டு இருக்கார். கடுமையான தவத்தின் முடிவில் ப்ரம்மாவின் நெற்றியில் இருந்து ருத்திரன் வெளிப்பட்டு நிக்கிறார். கண் திறந்து பார்த்த ப்ரம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. படைக்கும் தொழிலை ருத்திரரைவிட வேறு யாரால்சிறப்பாகச் செய்யமுடியுமுன்னு சிந்திச்சு, 'நீங்கதான் பொருத்தமானவர். உங்க கையாலே எல்லாத்தையும் படைச்சுருங்க'ன்னு சொல்லி வேண்டிக்கிட்டார். (எப்படியோ வேலையை நைஸா ருத்திரன் தலையில் கட்டியாச்சு)

'அதுக்கென்ன, செஞ்சுறலாம். நான் படைக்கும் ஜீவராசிகள் எல்லாம் நற்குணங்கள் மட்டுமே பொருந்தியதாகவும், என்றென்றைக்கும் அழியாமல் நிலைத்து வாழ்வதாகவும் இருக்கப்போகுது பார்'ன்னு சொல்லிக்கிட்டே பாதாள லோகத்துக்குப்போய் தவம் இருக்க ஆரம்பிச்சார் ருத்திரர். (ஆன்னா ஊன்னா தவம் இருந்துவாங்களே!)

இதோ அதோன்னு காலம் கடந்து போய்க்கிட்டே இருக்கு. இங்கே ப்ரம்மா வெயிட்டீஸ். மூணு யுகாந்திரங்கள் போயிருச்சு ஒன்னும் நடக்கலை. இவர்வேற சத்வம் , ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஆன உயிர்களைப் படைக்காமல் எல்லாமே சாத்வீக குணமுள்ளவையாக படைக்கறேன்னு போயிருக்கார். இப்படி இருந்தால் சமுதாயத்துலே கலவரமும் ஒழுங்கீனமும் பெருகித் தாறுமாறா ஆகிருமேன்னு கவலையா வேற இருக்கு. ருத்திரனுடைய ஆவேசத்தை நினைச்சுப் பார்த்தால் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல முடியலைன்னு கவலைப்பட்ட ப்ரம்மா, தாமே படைக்கும் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சுட்டார். முக்குணங்களும் உள்ள பல்வேறு ஜீவராசிகள் பொறந்தாச்சு பூமியில் நிகழ்ந்த மாறுதல்கள் எல்லாம் தவத்தில் இருந்த ருத்திரனுக்கு ப்ரகிருதி மூலம் தெரியவந்துச்சு. 'என்கிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் செஞ்சு முடிக்கறதுக்குள்ளே அப்படி என்ன அவசரம்'னு ஆவேசமாக் கிளம்பி வர்றார்.

பாதாள லோகத்துலே இருந்து பூலோகம் வர்ற வழி தடைபட்டுப்போய் பெருசா பூமி தலைக்குமேலே நிக்குது. தலையாலே முட்டி ஒரே இடி.யில் இடிச்சுப் பிளந்துட்டு வெளிவரப்போகும் சமயம். பூமாதேவி, ருத்திரனை வணங்கி பணிவாகச் சொல்றாள். "தயவு செய்யுங்க. உங்க கோபத்தையும் வேகத்தையும் என்னால் தாங்க முடியாது. உங்க உருவைச் சுருக்கிச் சின்னதாக மாற்றி என் காது வழியாக மெதுவாக வெளியே வந்தால் உங்க பாரத்தைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியும். கருணை காட்டுங்க."

பூமாதேவி பசுவைப்போல் பொறுமையுடன் வணங்கிச் சொன்னது ருத்திரனுக்குப்பிடிச்சுப்போச்சு. சரின்னு சம்மதிக்கிறார். பூதேவியும் பசுவாகவே உருவம் எடுத்து நிக்கறாள். உடனே தன் உடலைச்சுருக்கிக் கட்டைவிரல் அளவான ரூபம் எடுத்து அவள் காது வழியாக மெதுவே ருத்திரன் வெளிப்பட்டார். உன்னுடைய 'ஆட்டிட்யூட்' ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்று முதல் பூமியின் இந்த நிலப்பகுதிக்கு கோ கர்ணம் (பசுவின் காது) என்ற பெயர் இருக்கட்டும். இந்த இடத்தைச் சுற்றி பதினைஞ்சு மைல் அளவுள்ள இடங்களுக்கு க்ஷேத்ரம் என்ற புகழ் இருக்கட்டும்னு சொல்லி பூமாதேவியை ஆசீர்வதிச்சுட்டுக் கோபத்தோடு ப்ரம்மனை நோக்கிப்போறார்.

'நீ சிருஷ்டித்தவைகளை அடியோடு அழிப்பதுதான் முதல்வேலை'ன்னு போகும்போது மகாவிஷ்ணு எதிரில் வந்து, 'எதுக்காக இத்தனை கோபம்? கொஞ்சம் மனசை அமைதிபடுத்திக்குங்க. ப்ரம்மன் ஏதோ தெரியாத்தனமா செஞ்ச பிழையைப் பொறுத்தருளணும். ப்ரம்மன் ஒருமுறை படைச்சுட்டான்னா அது பிரளயம் வந்துதான் அழியணும் என்பது விதி. அதை மாற்ற யாருக்குமே அதிகாரம் இல்லை. பெரியமனசோடு ப்ரம்மனை மன்னிக்கணுமு'ன்னு வேண்டி, 'இந்த இடம் இனி ருத்திரபூமின்னு அழைக்கப்படும் என்றார்'

. பூஜைப் பாத்திரங்கள், சாமி விக்கிரஹங்கள் விற்கும் கடைகள் வீடுகளையொட்டிய திண்ணைப்பகுதிகளில் ஆரம்பிச்சு ரோடுவரை வந்து, ஏற்கெனவே சின்னதா இருக்கும் ரோட்டை இன்னும் குறுக்கி வச்சுருக்கு.



கீக்கிடமான ஒரு இடத்துலே கோவில் தேர் ஒன்னு நிக்குது. மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் ஏராளமான கோக்களும் கோப்பாப்பாக்களுமா ஜேஜேன்னு இருக்கும் பகுதியில் கோவிலின் நுழைவாசல் இருக்கு. உள்ளே போனால் விஸ்தாரமான வெளிப்ரகாரம். வாங்கன்னு வரவேற்றார் ஒரு பண்டிட். எதாவது பித்ரு கார்யங்கள் செய்யணுமான்னு விசாரிச்சார். ' 'இல்லை'ன்னதும், இப்படியே போய் வலதுபக்கம் திரும்புனால் மூலவர் சந்நிதி. நீங்களே தொட்டுக் கும்பிடலாம்.னு சொல்லிட்டுப் போனார். இங்கே இடது பக்கம் மந்திரங்கள் சொல்லும் சப்தம் கேட்டுச்சு. கோடிமுறை ருத்ரம் சொல்றாங்களாம். . .

அங்கே வெளியே பட்டியல் போட்டு வச்சு நமக்கிஷ்டமான தொகையைக் கட்டி இதுக்கு உதவலாமுன்னு அறிவிப்பு பார்த்தேன். வழக்கமா இப்படியெல்லாம் பார்த்தால் அறிவிப்பைப் படிச்சுக்கிட்டேக் கடந்து போகும் பழக்கம்தான் நமக்கு. இன்னிக்கு என்னமோ...மனசுலே ஒரு தோணல். என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.

இது ஏறக்குறைய ஒரு வருசப் ப்ரோக்ராம். ஒரு நாளைக்கு 27,951 முறை ருத்ரம் சொல்றாங்களாம். வருசம் முடியும்போது ஒரு கோடியே ஏழு லக்ஷத்து எழுபதாயிரத்து நூத்தி முப்பத்தி அஞ்சு முறை ஓதி முடிஞ்சுருக்குமாம். போன வருசம் ஏப்ரல் மாசம் 27க்கு ஆரம்பிச்சது. இந்தவருசம் மே மாசம் 16 தேதிக்கு முடியப்போகுது. உலக 3 சரித்திரத்தில் இது முதல்முறையாச் செய்யப்படுது. ஆஹா.... 'சரித்திரம்' என்றதால்தான் மனசு சரின்னு சொல்லுது!