Tuesday, August 31, 2010

தங்கவேட்டைக்குப் புறப்பட்டேன் (அம்ரித்ஸர் பயணத்தொடர் - 1)

அக்கம்பக்கம் இருக்கும் நல்ல விஷயங்களைக் கண்டுக்கணும். த டைம் இஸ் ரன்னிங் ஃபாஸ்ட். மழைக்காலம் முடியட்டுமுன்னு காத்திருந்து, கிளம்பிட்டோம். வானிலை அறிக்கையை வலையில் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் மழைன்னு போட்டுருக்கு. சமாளிக்கலாமுன்னு குடையை எடுத்து வச்சுக்கிட்டார் கோபால்.

அம்ரித்ஸர் போறோம். ( இடங்களின் பெயர்களையும் நபர்களின் பெயரையும் நமக்கேத்தமாதிரி உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது அதை அப்படித்தான் சொல்லப்போறேன்) சண்டிகர் நகரில் இருந்து 234 கிலோமீட்டர் தூரம். லூதியானா ஜலந்தர் வழி ஒன்னும் ரூப் நகர் ஜலந்தர் வழி ஒன்னும் இருக்கு. நம்ம ட்ரைவர் தேர்ந்தெடுத்தது ரூப்நகர் மார்க்கம்.

சண்டிகருக்கு ரெண்டு கைகளா பஞ்ச்குலா (ஹரியானா மாநிலம்) மொஹாலி (பஞ்சாப் மாநிலம்) இருக்குன்னு முந்தியே சொல்லி இருக்கேன். இப்போ நாம் பஞ்சாப் மாநிலத்துக்குள்ளே போகப்போறோம் என்பதால் மொஹாலி ( கொசுறுத்தகவல்: இங்கேதான் க்ரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானம் இருக்கு)வழியே போய்க்கிட்டு இருக்கோம். இந்த மொஹாலியே ஒரு காலத்தில் அதாவது சண்டிகர் நகர் பஞ்சாபின் தலைநகரா நிர்மாணிக்கப்பட்டு, பிறகு 1966 இல் மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பார்வைக்கு வருமுன்பு, ரூப்நகர் மாவட்டத்தில்தான் இருந்துச்சு.

ரொம்பப் பழைய ஊர்தான் இந்த ரூப்நகர்.சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடங்களில் இதுவும் ஒன்னு. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் அரசர் ரோகேஷர் பதினோராம் நூற்றாண்டில் இந்த நகர்ப்பகுதியை ஆண்டு வந்தபோது தன்னுடைய மகன் ரூப் சென் பெயர் நிலைக்கட்டுமுன்னு ரூப் நகர்ன்னு பெயரிட்டாராம். ( ஹூம்......பெயர் நிலைக்க யாரெல்லாம் என்ன பாடுபடறாங்கன்னு உங்களுக்கே தெரியும்)

அம்பது கிலோமீட்டர்தான் சண்டிகரில் இருந்து. பஞ்சாப் என்ற பெயருக்குக் காரணமான பஞ்ச(ஐந்து) நதிகளில் சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டி இருக்கும் பாலத்தைக் கடந்து வர்றோம். கண்ணுக்கெதிரில் தூரத்தில் வெண்புறாபோல் பளிச்ன்னு ஒரு குருத்வாரா இருக்கு. அஞ்சு நிமிசம் பார்த்துட்டுப் போகலாம். பெரிய குருத்வாரா (பொற்கோவில்) போகுமுன் சாம்பிள் பார்த்தமாதிரி இருக்குமுன்னு ஒரு நினைப்பு!

சட்லெஜ் நதி
'பாபோர்சாஹிப்' னு இந்த குருத்வாரா(சீக்கியர்களின் கோவில்)வுக்குப் பெயர். அலங்கார நுழைவு வாசலில் உள்ளே வந்தால் பெரிய வளாகம். அழகான தோட்டம் கடந்து கோவில் வாசல்முன்னே வண்டியை நிறுத்தி உள்ளே போறோம்.

சாலையில் நுழைவு

ரெண்டாம் பிரகார நுழைவு வாசல்
கால் நனைக்க ஒரு ஓடை


குருத்வாரா

பக்தர்கள் காலைக் கழுவிட்டு உள்ளே வரும்படியான ஏற்பாடு. சின்ன ஓடையில் கால்வச்சுக் கடந்து அந்தப்பக்கம் கோவிலை நோக்கிப்போறோம்.
அலங்கார மேடையில் பட்டுத்துணி போர்த்தி வச்சுருக்கும் 'குரு க்ரந்த் சாஹிப் (சீக்கியர்களின் புனித நூல்) ஒரு பக்கம் திறந்து ஒருத்தர் ஒரு கையில் சாமரம் வச்சு வீசிக்கிட்டே மெல்லிய குரலில் வாசிக்கிறார்.

வணங்கிட்டு வெளியே வந்து சுற்றிப்பார்க்கப்போனால்......சுத்திவரத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நதி. அழகு அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது! பின்பக்க முற்றத்தில் ஒரு சின்ன அறை தனியா நிக்குது. கண்ணாடி ஜன்னல்வழியா எட்டிப் பார்த்தால் ஒரு ஆஸ்டின் கார்.அட! விண்டேஜ் வண்டி! இது கார்ஷெட்டோன்னு நினைச்சால் ஒரு பெரிய போர்டு நிறைய பஞ்சாபி மொழியில் எழுதிவச்சுருக்காங்க. குரு கோபிந்த் சிங் பயன்படுத்திய வண்டியாம்.


சீக்கியர்களின் பத்தாவது குரு இவர். இவருடைய தகப்பனார் குரு Tegh Bhahadur அவர்களை முகலாய மன்னர் ஔரங்கஸேப், இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்ய விரும்பினார். இவர் மதம் மாறினால் இவரைப்பின்பற்றும் மொத்தக் கூட்டமும் மதம் மாறும் என்ற நம்பிக்கை. காரியம் நினைச்சபடி நடக்கலை. குருஜியைக் கைது செய்து மூணு மாசம் பஸ்ஸி பத்தானா என்ற இடத்தில் வச்சு டார்ச்சர் செஞ்சபின் இரும்புக் கூண்டில் வச்சு டெல்லிக்குக் கொண்டு போனாங்க. தான் எப்படியும் திரும்பி வரப்போவதைல்லைன்னு உணர்ந்த குருஜி தன் ஒன்பது வயசு மகன் கோபிந்த் ராயை அடுத்த குருவா பிரகடனம் செஞ்சுட்டுக் கிளம்பினார். செல்லி சாந்தினி சௌக் லே வச்சு பொதுமக்கள் முன்னிலையில் குருவின் தலை கொய்யப்பட்டது:(

இங்கே குரு கோபிந்த் சிங் மக்களை சீக்கிய தர்மப்படி வழி நடத்திக்கிட்டு இருந்தார். முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் பகை அதிகமாகிக்கிட்டே இருந்த காலக் கட்டம். தங்கள் மதத்தில் வீரமுள்ளவர்களைச்சேர்த்து இன்னும் பலமான தற்காப்புப்படையா மாத்தணுமுன்னு குரு கோபிந்த் சிங் விரும்பினார்.

ஒரு சமயம் தன் முன் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து 'உங்களில் ஒருவரது தலை எனக்கு வேணும்'னு கர்ஜிச்சதும் கூட்டம் அப்படியே பயந்து மௌனமா நின்னுச்சு. மூணாவது முறை இவர் இப்படிக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த தயா ராம் என்றவர் தலை கொடுக்க முன்வந்தார். அவரைத் தன் கூடாரத்துக்குள்ளே கூட்டிப்போனார் குருஜி. சில நிமிசங்களில் 'தட்'னு ஒரு சப்தம். தலை கீழே உருண்டது:( ரத்தம் சொட்டும் வாளோடு வெளிபட்ட குருஜி இன்னொரு தலை வேணுமுன்னு கர்ஜிச்சதும் கூட்டம் மிரண்டது. அப்படியும் தரம் தாஸ் என்றவர் முன் வந்தார். மறுபடி ஒரு சப்தம். ரத்தம் சொட்டும் வாள். இப்படியே அஞ்சு பேர் தலை கொடுத்தாங்க!!

இதுக்குள்ளே குருஜிக்கு என்னமோ ஆகிருச்சு. நம்ம எல்லோரையும் போட்டுத் தள்ளப்போறாருன்னு கூட்டம் கலைஞ்சு ஓட ஆரம்பிச்சது. அப்போ கூடாரத்துக்குள்ளே இருந்து தலை கொடுக்க முன்வந்த அஞ்சு பேரும் கம்பீரமான உடைகளைத் தரிச்சு வெளியில் வந்தாங்க. இவுங்களை 'பஞ்ச்பியாரே'ன்னு குருஜி அழைச்சார். குருவுக்குப் பிரியமான ஐவர். இவர்களை வச்சு ஆரம்பிச்சதுதான் கல்ஸா என்னும் வீரர் பிரிவு. கல்ஸா (Khalsa) என்ற சொல்லுக்குப் பரிசுத்தம் என்று பொருள். PURE.

கல்ஸா பிரிவுக்கு குரு கோபிந்த் சிங் அவர்கள்தான் தந்தை என்று போற்றி அவரை விசேஷமா வழிபடுறாங்க. வீரத்தின் அடையாளமா ரெண்டு பக்கமும் கூர்மையாத் தீட்டிய நீளமான வாள் ஒன்னை எப்பவும் தோளில் தொங்கவிட்டுருப்பாங்க இந்தப் பிரிவினர்.

குரு கோபிந்த் சிங் இந்த பாபோர் சாஹிப் குருத்வாராவில் ஏறக்கொறைய ஒரு வருசம் தங்கி இருந்துருக்கார். அப்போது இறைவன் மேல் பல பக்திப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி இருக்கார். இப்படி சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக்ஜி முதல் குரு கோபிந்த் சிங்ஜி வரை பத்து குருமார்கள் எழுதியவைகள் எல்லாம் சேர்ந்து சீக்கியர்களின் புனித நூலான கிரந்தம் ஆனது. 42 வயது வரை வாழ்ந்த குரு கோபிந்த் சிங்ஜியின் மரணத்திற்குப் பிறகு (1708) இந்த கிரந்தப்புத்தகமே இனிவரும் காலங்களில் குருவாக இருக்கட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு குரு கிராந்த் சாஹிப், எல்லா குருத்துவாராக்களிலும் மிகவும் மரியாதைக்குரிய இடத்தை அடைஞ்சுருக்கு. புனித நூலை இடைவிடாது 24 மணி நேரமும் யாராவது ஒருத்தர் வாசிச்சுக்கிட்டே இருக்காங்க.

நாமும் மீண்டும் ஒருமுறை வணங்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ஜலந்தர் போகும் வழியில் சாலையை ஒட்டியே இடதுபுறம் நல்ல அகலமான வாய்க்கால் நம்ம கூடவே வருது. நடுவிலே சுதந்திரப்போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த வட்டத்தில்(Shahid Bhagat Singh Nagar District.) இருக்கும் Nawanshahr என்ற ஊரைக் கடந்தோம். எங்காவது பகத்சிங் அவர்களுக்கு நினைவிடம் இருக்குமான்னு கேட்டால் ...... விவரம் ஒன்னும் கிடைக்கலை.

வழி எங்கும் நாலைஞ்சு இடத்தில் டோல் கேட் இருக்கு. 'டோல்கேட் வரப்போகுது என்றதை மட்டும்' ஆயிரம் மீட்டர் லே வருது, ஐநூறு மீட்டர்லே வருதுன்னு கொட்டை எழுத்தில் ஆங்கிலத்துலே எழுதி வச்சுருக்காங்க. 11, 29, 38 ன்னு விதவிதமான கட்டணங்கள். பேசாம ரவுண்ட் நம்பரா வைக்கலாமுல்லே? பாக்கிச்சில்லறை ஒரு ரூபான்னா திருப்பிக் கொடுக்கறதே இல்லை. ரெண்டு, மூணுன்னா சாக்லேட். இது என்ன வியாபாரமுன்னு தெரியலை:(
டபுள் டெக்கர்

பெரிய ட்ரக்குகளை டபுள் டெக்கரா மாத்திக்கிட்டுப் புனிதப்பயணங்கள் போறாங்க மக்கள். ஏறி இறங்க ஏணிகூட கட்டி வச்சுருக்காங்க ஒரு ட்ரக்கில்!

ஜலந்தர் நகருக்குள்ளே போகாமல் பைபாஸ் ரோடு வழியா அம்ரித்ஸர் நகரை நோக்கிப்போனோம். அதுக்கு முன்னால் பைபாஸ் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஹவேலியில் ஒரு 15 நிமிசத்துக்குச் சின்ன ப்ரேக். கணக்குப்பிள்ளை அதே கோலத்துடன் இன்னும் கணக்கு எழுதிகிட்டே இருக்கார். முகத்தில் ஒரு சிரிப்பும் இல்லை. இந்த ஹவேலி ஒரு செயின் ரெஸ்ட்டாரண்ட் வகையில் இங்கே வட இந்தியாவில் பல இடங்களில் ஹைவேயில் இருக்கு. நல்ல வசதி.

இங்கிருந்து நாம் போகவேண்டிய ஊருக்கு ஒன்னரை மணி நேரப்பயணம். சரியாப் பனிரெண்டரைக்கு அம்ரித்ஸர் போய்ச்ச் சேர்ந்தோம். கார்பரேஷன் கவுன்ஸிலர் முதல் எம். எல் ஏக்கள் எம் பி க்கள்ன்னு கூட்டம் கூட்டமா நம்மை அபிநந்தன், வெல்கம், ஸ்வாகத் சொல்லி வரவேற்றார்கள். இதென்னடா நமக்கு வந்த வாழ்வு????

தொடரும்.......................:-)

Friday, August 27, 2010

மரம் நடவேண்டாம்

"புதுசா கண்ட மரங்களை நடறேன்னு கிளம்பாதே. இங்கே பாரு. இந்தப் படங்களை நல்லா உத்துப்பாரு. எது எது எங்கே இருக்குன்னு தெரியுதா? அதான் நம்பர் எல்லாம் போட்டு வச்சுருக்கே. இதுகளைக் காப்பாத்து. அதுவே போதும்."
விக்ரம்சேத் சிங் (வெண்தாடி)

விக்ரம்சேத் சிங் சொல்லிக்கிட்டு இருந்தார். நாங்க ஒரு அம்பதுபேர் இருக்கும், அவர் முன்னால் நின்னு கேட்டுக்கிட்டு இருக்கோம். சண்டிகர் வந்த நாள் முதல் கலைநிகழ்ச்சியோ இல்லை மத்த ஏதுமோ பார்க்கலை. அப்படியே காய்ஞ்சுபோய் இருந்தேன். எப்போ எங்கே என்ன நடக்குதுன்னே தெரியலை. இவ்வளவு பெரிய நகரத்துலே அப்படி ஒன்னுமே இல்லாமலா போகும்?

வீட்டு ஓனரம்மாவிடம் பேசுனப்ப, 'இங்கே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை'

'எப்படிங்க? எப்படி? தினசரியில் சிலசமயம் நடந்து முடிஞ்ச நிகழ்ச்சி படத்துடன் வருதே!'

அது எங்கியாவது நடக்கும். பொதுவா இங்கே அவ்வளவா ஒன்னும் நடக்கறதில்லை.

அப்போ நீங்க எல்லாம் எப்படிதான் பொழுது போக்குவீங்க? தினமும் இல்லைன்னாலும் என்னைக்காவது............

தினம் டிவி பார்ப்போம்.

வெளங்கிரும்.....மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். புலம்பல் மரத்துக்குக் கேட்டுருக்கலாம்.

தினசரியில் சிடி பீட் (City Beat) என்னும் பகுதியில் 'ROOT CAUSE" ஹெரிடேஜ் ட்ரீ ஃபோட்டோ எக்ஸிஃபிஷன் மாலை 5 முதல் 7 வரை. லீஷர் வேலி எய்ஃபில் டவர்கிட்டே வந்துருங்கன்னு போட்டுருக்கு. இதென்னடா எப்போ பாரீஸ்லே இருந்து பிடுங்கி இங்கே நட்டாங்க? போய்ப் பார்க்கணும். போனோம்.
ரூட் காஸ்

இந்த Leisure valley என்றது சண்டிகர் நகரின் செக்டர் ஒன்னுலே லேசா ஆரம்பிச்சு அடுத்துள்ள செக்டர்களையெல்லாம் கடந்து ஒரு எட்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கு. இங்கே இருக்கும் ரோஸ் கார்டன், 1 போகன்வில்லா கார்டன் எல்லாம் இதுலே சேர்ந்திருக்கும் தோட்டங்கள்தான். இப்ப நாம் போக வேண்டியது சண்டிகர் ம்யூஸியத்துக்கு எதிரில் இருக்கும் லீஷர்வேலியின் பகுதி. இது செக்டர் பத்து. (போதுண்டா சாமி. எண்களை மனப்பாடம் செஞ்சே நொந்து போயிருவோம். ஒரு நாள் ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் போயிட்டுப்போகலாமுன்னு திடீர்னு பாதி வழியில் தோணுச்சு. ட்ரைவரிடம் சொன்னால் செக்டர் நம்பர் சொல்லுங்கன்றார். யாருக்கு நினைவிருக்கு? பெயரைச் சொல்லிப் பழகின மக்கள் அல்லவா நாம்!)

பத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அட! ஆமாம். எய்ஃபில் டவர் நிக்குது கொஞ்சம் சின்னதா:-))))
வாசலுக்குள் நுழைஞ்சு போனால் சரியா புல் வெட்டப்படாத காடு போல ஒன்னு. மழைக்காலம் அதான் புல் வெட்டலை- கோபால். எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்துருவார். ஒரு கிடார் வச்சு வாசிச்சுக்கிட்டு ஒரு இளைஞர் அவரைச்சுத்தி ஒரு பத்துப் பதினைஞ்சு பேர். இன்னொரு பக்கம் ஒரு பெரிய மரம். நிறைய படங்களைக் கட்டித் தொங்க விட்டுருக்காங்க. போட்டோ கண்காட்சி!!

வெவ்வேறு செக்டர்களில் இருக்கும் புராதன மரங்கள் விலாசத்தோடு படங்களில் இருக்கு. வேணுமுன்னா நேரில் போய்ப் பார்த்துக்கலாம். எல்லாம் புகைப்படக்கலை படிக்கும் மாணவர்கள் எடுத்தவை.

சண்டிகர் நகரம் உருவாகுமுன் இங்கே பதினெட்டு கிராமங்கள் இருந்துச்சு.(ஆஹா..... நம்ம பதினெட்டுப்பட்டி!!!) அப்போ இந்த பதினெட்டு கிராமங்களும் ரொம்ப பின் தங்கிய நிலையில் இருந்துருக்கு. இப்ப சண்டிகர்தான் இந்தியாவிலேயே பணக்கார நகரம். இப்போ நகரத்துக்கு வயசு 58.

அமெரிக்கக் கட்டகலை நிபுணர் ஆல்பர்ட் மெயர் (நியூயார்க்) (Albert Mayer, Whittleslay, Glass & Mathew Nowicki) மேத்யூ நோவிக்கி என்றவருடன் கூட்டாகச் சேர்ந்து இன்னும் சிலபல கட்டிடக்கலை நிபுணர்களுடன் திட்டம் வகுக்க ஆரம்பிச்ச வேலை, சட்னு நின்னுபோச்சு. காரணம்? மேத்யூ ஒரு விமானவிபத்தில் போய்ச் சேர்ந்துட்டார். கொஞ்சநாள் இடைவெளிக்குப்பிறகு மறுபடி திட்டத்துக்கு உயிர்வந்து 1952 இல் கட்டிடம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ ப்ரான்ஸ் நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் Le Corbusier கூட்டுச் சேர்ந்துக்கிட்டார்.

ப்ரெஞ்சுக்காரர், நகரை 'டிஸைன் செய்யறேன்'னு குறுக்கும் நெடுக்கும் வீதிகள் நேரா வருவதுபோல க்ரிட் அமைப்பில் வரைஞ்சுட்டார். இவுங்களுக்கு நூல் பிடிச்சாப்போல தெருக்கள் இருக்கணும் போல. நம்ம பாண்டிச்சேரியிலும் இப்படித்தானே நேர் நேரா தெருக்கள் உண்டாக்கி வச்சுருக்காங்க!


ராக்கெட்?
சுதந்திர நினைவுச்சின்னம்?
மேலே உள்ள படங்கள் ரெண்டும் அங்கே தோட்டத்தில் எடுத்தவை.

பாதைக்குக் குறுக்கே நிற்கும் மரங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டாங்க. அதுலேயும் குறுக்கிடாமத் தப்பிப் பிழைச்சதுகள் தான் இந்த ஃபோட்டோக்களில். முக்கியமா ஆலமரங்களும் அரசமரங்களுமாத்தான் இருக்கு. சில மாமரங்களும் உண்டு. புதுசாச் சாலைகளை நிர்மாணிக்கும்போது கெட்டிக்காரத்தனமா மாமரங்களை நட்டுவச்சுருக்காங்க. ஊர் முச்சோடும் விதவிதமான மாதான்..
மரங்களில் நீண்ட ஆயுள் உள்ள மரங்களா இங்கே அஞ்சு வகைகள் இருக்காம். ஆல், அரசு, வேம்பு, மா அப்புறம் இன்னொன்னு என்னவோ சொன்னார். எப்படி இதுகளைமட்டும் பூச்சிகள் அரிக்காம ரொம்ப நாள் வாழுதுன்னா..... இதெல்லாம் பால் மரங்கள். பூச்சிகள் துளைச்சு உள்ளே போனதும் அதுகளை கபால்னு இந்தப் பிசினு, பால் பிடிச்சு வளைச்சுக்குது. நகரமாட்டாம அவை கைது செய்யப்பட்டு உடனே மரணதண்டனைதான்.

அப்படியும் வில்லனுக்கு வில்லனான பூச்சிகள் நம்ம அடையாறு ஆலமரத்தையே அரிச்சு எடுத்துருச்சே:(

இந்த மரங்கள் நெடுநாள் வாழ்வதால்தான் பறவை இனங்கள் கூடுகட்டி வசிக்க ஏதுவா இருப்பதோடு பறவைகள் அழியாம இருக்கவும் உதவுது. பொதுவா மாமரத்துலேயும் ஆலமரத்துலேயும் இயற்கையாவே பொந்துகள் இருக்கும். இவைதான் கூடு கட்டிக்கத் தெரியாத இனங்களுக்கு வீடு கட்டித்தருபவை.

அந்தக் காலத்துலே மனிதர்கள் மரங்களின் அருமைகளைத் தெரிஞ்சவுங்க. இரு கிராமம் உருவாகுதுன்னா ஊருக்கு நடுவிலே ஒரு கோவிலைக் கட்டும்போதே கோவிலுக்குப் பக்கத்துலே ஒரு மரமும் நட்டுருவாங்க. பிள்ளை குட்டிகளை வளர்ப்பதுபோல் கண்ணும் கருத்துமா அந்த மரத்தை வளர்த்துப் பெருசானவுடன், ஊர் பெரியவர்கள் வந்து உக்கார்ந்து பேச ஒரு இடமா ஆகிருது. ( அதானே நாட்டாமை செய்யவும் இடம் வேணுமே! இந்தப் பக்கம் சொம்பு டிஸைன் வேற மாதிரி இருக்குமோ?)

வயசான முதியவர்களுக்கு இப்படி 'மரத்தடி'தான் சோஸியல் க்ளப் இல்லீங்களா? விக்ரம்சேத் சிங் இப்படி ஒரு 95 வயசுக்கிழவரை அஞ்சு வருசத்துக்கு முன்னே ஒரு செக்டரில் ( பழைய பதினெட்டில் ஒன்னு) கோவில் மரத்தடியில் சந்திச்சாராம். அவர் ரிஷிகேஷ் கடந்து 250 கி.மீட்டரில் இருக்கும் கோவிலுக்கு இதுவரை பத்து முறை போயிட்டு வந்தவராம். அதனால் என்னன்னு கொஞ்சம் அலட்சியமாக் கேட்டப்ப, வந்து விழுந்த விஷயத்தைக் கேட்டதும் கப்சுப் ஆனாராம். அந்தப் பத்து முறையும் இங்கிருந்து நடந்தே..... இங்கேயிருந்து ரிஷிகேஷ் 250. அங்கிருந்து கோவில் ஒரு 250ன்னு மொத்தம் 500 கி.மீ. போகவர ஆயிரம் கி,மீ. நடந்து போய் வருவாராம். என்கூட வர்றியா போய் வரலாமுன்னு அவர் கூப்புட்டப்ப..... இதோன்னு ஓடிவந்தவர் அப்புறம் அந்த கிராமத்துப்பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்கலைன்னார்.

அந்தக்காலத்து மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததுலே நல்ல பலசாலிகளாவும் ஆரோக்கியமாவும் இருந்துருக்காங்கன்னு சொல்றார். இப்போதான் நாம் சாப்பிடும் பொருட்களில் எல்லாம் ரசாயனக்கலப்படம் வந்து மனுஷன், மிருகம், தாவரம் சுற்றுச்சூழல் இப்படி எல்லாத்துக்கும் கேடு பண்ணிக்கிட்டு இருக்குன்னு வருத்ததோடு சொன்னார். உண்மைதான் :(


அவர் சொன்ன அஞ்சு மரங்கள் என்னென்னன்னு தேடுனப்ப இன்னொரு சுவையான விஷயம் கண்ணுலே பட்டுச்சு. நாம் கும்பிடும் சாமிகள் கூட ஆளுக்கு நாலு மரமுன்னு புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க!

வில்வமரம், ஆலமரம், ருத்ராக்ஷமரம், இலந்தைமரம் சிவனுக்கு

அரசமரம், நாகலிங்க மரம்,விஷ்ணுவுக்கு

கடம்பமரம் கிருஷ்ணனுக்கு

மாமரம் ஹனுமனுக்கு

முள்ளிலவு மரம் (சில்க் காட்டன் ட்ரீ) மகாலக்ஷ்மிக்கு (இந்த மரத்தைப்பற்றி சீக்கியர்களின் புனிதநூலான குரு க்ரந்த சாஹிப்லே கூட ஒரு குறிப்பு இருக்குதுங்க)

அசோகமரம் காமதேவனுக்கு,

தென்னை மரம் வருணனுக்கு

வேப்பமரம், சீதளாதேவி(மாரியம்மனுக்கு)க்கு இப்படி................

இந்திர லோகத்துலே பாரிஜாதம், சந்தனம், கற்பகமரம் (ஆலமரம்), மந்தாரம், samtanaka மரம்( இது ஆண்களுக்கான குடும்ப விருத்திக்கு பயன்படுமாம். சந்தான மரமோ? ) இப்படி அஞ்சு மரங்கள் இருக்காம். பைபிளிலும் ( Book of Genesis & Gospel of Thomas) சொர்கத்தில் அஞ்சு மரங்கள் இருக்குன்னு சொல்லி இருக்காம்.

ஒரு மரத்தைப்பத்தித் தெரிஞ்சுக்க, தெரியாமக் காட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டேன் போல. படு சுவாரஸியமான தகவல்கள் கொட்டிக்கிடக்கு. கற்றது கைமண் அளவெல்லாம் இல்லைங்க. நம்ம கை அளவுன்னு சொன்னதெல்லாம் ச்சும்மா. நகமளவுகூட நாம் இதுவரை கத்துக்கலை என்பதுதான் நிஜம். தெரியாத விஷயத்துக்கு எல்லையே இல்லை!!!!

ஆலமரத்துக்கு 'பேன்யன் ட்ரீ' என்ற பெயர்க்காரணம் என்ன? (இதுதான் நம் தேசிய மரமும்கூட)

பனியாக்கள் சில்லரை வியாபாரத்தைக் கிராமம் கிராமமாப்போய் செஞ்சுட்டு இளைப்பாறுவதற்கு அங்கங்கே அதன் நிழலில் உக்கார்ந்துருப்பாங்களாம். ரொம்பசரி. குல்லாய் வியாபாரியும் குரங்குகளும் நினைவுக்கு வருதா?
ஒரு பதினைஞ்சு நிமிசத்துலே பேச்சை முடிச்சுக்கிட்டார் விக்ரம்சேத் சிங். இந்தப்பக்கம் ஒரு ஏழெட்டு இளைஞர்கள் ஃபேஸ் பெயிண்டிங் செஞ்ச முகங்களோடு ஒரே மாதிரி கருப்பும் சிவப்புமா உடையில்.என்ன நடக்கப்போகுது? தெருநாடகமா? இந்தப்பக்கம் தெருநாடகங்கள் கொஞ்சம் அதிகம் போல. ரோஸ் கார்டன் ஒரு நாள் போனப்ப, சிலர் ஒத்திகை பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

மரங்களைப்பற்றி ஒரு (மைம்) ஊமை நாடகம் போடறாங்களாம்.... இருந்து பார்க்கணுமுன்னு கேட்டுக்கிட்டார் எனக்கு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தவர். இதுவும் பதினைஞ்சு நிமிச நாடகம்தான். இவுங்க தயாராகும் வரை கொஞ்சம் அக்கம்பக்கம் சுத்திப்பார்த்தோம். சாக்குப்படுதாக்களால் ஸ்டால்ஸ் காட்டி வச்சுருக்காங்க, அங்கக்கே. திருவிழா சமயத்துலே வந்து பார்க்கணும்.


மரத்தை வெட்டிப் போட்டுட்டாங்கைய்யா....

பொருத்தமான இசைமட்டும் ஒரு டேப்லே போட்டுட்டு நாடகம் ஆரம்பிச்சது. மொத்தம் பத்து பேர். மரங்கள் இருந்த காலம். எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க. காதலர்கள் கடலைபோடச் சரியான இடமா இருக்கு. மரம் வெட்டறவன் வந்து மரங்களை வெட்டிப்போட்டுடறான். சொல்ல வாயில்லைன்னாலும் கீழே விழுந்த மரம் துடியாத் துடிக்குது:( அப்புறம் சாலை போட்டுட்டாங்க. வண்டிகள் ஏராளமாப் போகத்தொடங்குது. ஊரெல்லாம் காற்றில் மாசு படிஞ்சு போயிருது. மக்களுக்கெல்லாம் வியாதிகள், தொண்டை எரிச்சல் வந்து கஷ்டப்படுறாங்க. மழை வேறு இல்லை. சூடு எரிக்குது. குடிக்கவும் தண்ணீர் கிடைக்கலை. அப்போ இயற்கை நலன் விரும்பி வந்து மரங்களால் ஆகும் நன்மைகளைச் சொல்றார். எல்லோரும் மரக்கன்னுகளை நட்டுவச்சுப் பராமரிக்கிறாங்க. மரங்கள் பெருசாகி நிழல்தருது. நாட்டில் மழையும் பொழியுது. அனைவரும் மகிழ்ச்சியா இருக்காங்க. சுபம்.

பார்வையாளர்களா ஒரு நூறு பேர் இருந்துருப்போம். ஊமை நாடகம் என்பதால் எங்களையும்(சளசளன்னு) பேச அனுமதிக்கலை. ஆனால் நல்லா இருக்கும் பகுதிகளுக்கு கைதட்டலாம். விஸிலும் அடிக்கலாம். அடடா.....விஸிலடிக்கக் கத்துக்கலையேன்னு கவலையாப் போச்சு எனக்கு.

நாடகம் முடிஞ்சதும் விக்ரம்சேத் சிங் அவர்களுடன் கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பினோம். இது(வும்) ஒரு புது அனுபவம்தான்.

நல்ல மரங்களாப் பார்த்து நட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை.
மரத்தை எங்கே நடுவது? வேணுமுன்னா....இருக்கறதை வெட்டாமப் பார்த்துக்கிறேன்

Thursday, August 26, 2010

உள்ளூர் சமாச்சாரம்

கம்போடியா நாட்டு இடிபாடுகளைக் கொஞ்சநாளா பார்த்துக்கிட்டு இருந்தீங்கல்லே? கையோடு கையா, சூட்டோடு சூடா நம்ம பக்கத்து சமாச்சாரத்தையும் சொல்லிட்டா....மனசுலே தங்கும் என்ற நப்பாசையில்......

சண்டிகரில் இருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு, பிஞ்சோர் என்னும் ஊர். முதல்முறை இங்கே வந்தப்ப அஞ்சு மணிக்கே கேட் மூடிட்டாங்கன்னு புலம்பி இருந்தேன். இந்தமுறை தாய்லாந்துப் பயணம் புறப்படுவதுக்கு முதல்நாள் மாம்பழத் திருவிழா நடந்துச்சுன்னு ஓடிவந்து பார்த்தப்ப, இதையும் கண்டுக்கிட்டுப்போனேன்.

பீமாதேவி கோவில். என்ன சாமின்னு தெரியலை:( இல்லை பீமன் வனவாசத்துலே வந்து வழிபட்ட இடமா? ஒருவேளை பீமனே கைப்படக் கட்டி இருப்பானோ?

தொல்பொருள் இலாகா 'போற்றிப் பாதுகாப்பா' வச்சுருக்கு 'இப்போ'. அதுக்குள்ளே, சும்மா விழுந்துகிடக்கும் கற்களை இங்கிருந்து மக்கள்ஸ் கொண்டுபோய்ட்டாங்க. எங்கே அடுப்பாவோ, துணி துவைக்கும் கல்லாவோ, வீட்டுத்தரையாவோ இன்னும் என்னென்னவாகவோ கிடக்கோ? :(
அழகாச் சுத்துச்சுவர் வச்சு நடைபாதையெல்லாம் போட்டுப் பராமரிக்கிறாங்க. பீமாதேவி ம்யூஸியம். இதுக்குப் பக்கத்துலே கோவில்(இருந்த) இடம். போனவருசம்தான் இந்த ம்யூஸியத்தைக் கட்டி, நம்ம ஹரியானா முதல்வர் திரு புபிந்தர் சிங் ஹூடா அவர்கள், சுற்றுலா, வனத்துறை, சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை இத்தியாதிகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் திருமதி கிரண் சௌத்ரி அவர்களும், தொல்பொருள்துறை அமைச்சர் திருமதி மீனா மாண்டல் அவர்களும் 'சாட்சி' நிற்க திறந்து வச்சுருக்கார்.

(நம்ம தமிழ்நாடு அரசில் மேற்கண்ட துறைகளுக்கு பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர்கள் யாருன்னு தெரியலை. தெரிஞ்சவுங்க சொல்லுங்க)
நடைபாதிக்கு ரெண்டு புறமும் ஆராய்ச்சியாளர்கள் அலுவலர்கள் பயனுக்குச் சில அறைகளும் நடுவாக மரம் வச்ச மேடையோடு இருக்கும் முற்றத்தின் மூணு பக்கமும் அருங்காட்சியகமுமா இருக்கு.
சின்னச்சின்ன அறைகளில் சுத்திவரச் சிற்பங்களை வச்சு பெயரெல்லாம் போட்டு வச்சுருக்காங்க. சிதையாத சிற்பமுன்னா ஒன்னுகூட இல்லை:(

வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளியெடுத்து அவருக்கே நிவேதனமா செஞ்சது போல இங்கே இடிபாடுகளில் கிடைத்த சிற்பங்களையே அங்கங்கே சின்ன மேடைகளில் வச்சு அலங்கரிச்சுட்டாங்க. அதனால் உள்ளே நுழைவதில் இருந்தே ஒவ்வொரு சிற்பமாக் கவனிச்சுப் பார்த்துக்கிட்டே மெதுநடையாப் போகலாம்.
பத்தாம் நூற்றாண்டுக்கும் பதினோராம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 1 காலக் கட்டத்தில் இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்கன்னு சில கற்களில் செதுக்கப்பட்டிருந்ததை ஆராய்ஞ்சு சொல்லி இருக்காங்க நிபுணர்கள். (இதே சமயம்தான் கம்போடியாவிலும் பல கோவில்கள் கட்டிக்கிட்டு இருந்துருக்காங்க. அங்கே இருக்கும் அப்ஸராக்கள், காந்தர்வர்கள் சிலைகளைப்போல் இங்கேயும் இருக்கு!!!)
கஜ்னி முகமதுவின் படையெடுப்பினால் அழிக்கப்பட்ட ஏராளமான இந்துக்கோவில்களில் இதுவும் ஒன்னு.


அப்சரா

அட! அதே வாலில்லா சிங்கம்!


இந்து மதக் கடவுளர்களான விஷ்ணு, சிவன், உமா, கிருஷ்ணன், வராக மூர்த்தி, பிரம்மா, பிள்ளையார் சிலைகள் இருந்துருக்கு. பஞ்சாயன சம்பிரதாயம்

ஈசுவரன், அம்பாள். விஷ்ணு விநாயகர். சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்கரேக் ஓடியகல் விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

விநாயகருக்கு உருவமான சோனபத்ரக் கல். கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்றுசேர்த்து வைத்ததுபோலாகும்.

நன்றி: காஞ்சி சங்கராச்சாரியாரின்( பெரியவர்) தெய்வத்தின் குரல்


கஜூராஹோ கோவில் சிற்பங்களைப்போல் இங்கேயும் இருந்ததாம். இப்போ சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு இருக்கு. கம்போடியாக் கோவில்களில் பாலியல் சிற்பங்கள் ஒன்னுமே இல்லை. எல்லாம் படு நீட் என்னும்போது இந்தியக் கோவில்களில் மட்டும் ஏன் இப்படி?


கோவில்களுக்கு மக்களை வரவழைக்கத்தான் இப்படி சீப் பப்ளிசிட்டி பண்ணதுன்னு படிச்சேன். இன்னொரு இடத்தில் இப்படி இருக்கு,


'மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.'

ஐயோ..... போதும் போதும், மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகி பூமியே வெடிக்கப்போகுது:(




சின்ன பீடங்களில் தனித்தனியாக விஷ்ணு, கங்கா, கணேசா, சிவா, உமான்னு பெயர்களுடன் வச்சுருக்கும் சிற்பங்களை அருங்காட்சியகத்தில் பார்த்துட்டு அடுத்துள்ள ஒரு கேட் வழியாப் போனால் 'கோவில்'. அடி பீடம் மட்டுமே மேடையா நிக்க, இடிஞ்சுப்போன கோபுரத்தின் கற்களை எடுத்து ஒரு பெயருக்கு கோபுரமா அடுக்கி நடுவில் வச்சுருக்காங்க.
நிறைய மரங்கள் இருப்பதும் வசதிதான். எல்லா மரங்களைச் சுற்றியும் சிற்பவேலைப்பாடுகளுடன் இருக்கும் இடிஞ்சு விழுந்த கற்கள். சில மரங்களைச்சுத்தி மேடை அமைச்சும் வச்சுருக்காங்க. இதிலும் சிற்பங்கள் உக்கார்ந்துருக்கு. கூடவே இங்கே வந்து தூங்கும் சிலரும்:(



நல்லா சுத்தமாப் பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க போல! நடைபாதையிலும், சிற்பங்களுக்கும் மின்சார விளக்கெல்லாம் போட்டுருக்கு. ராத்திரி வந்து தூங்கும் ஆட்கள் பயமில்லாமத் தூங்கலாம் இல்லே? ஆமாம்.... அதான் அஞ்சு மணிக்கெல்லாம் கேட்டை அடைச்சு வச்சுடறாங்களே, அப்ப எதுக்கு இந்த லைட்டாம்? மழைத்தண்ணீர் போய் சேர குளம் ஒன்னு ஒரு பக்கம் கட்டி வச்சுருக்காங்க பழங்காலத்துலேயே! அதுலே இருந்து தண்ணீர் வெளியேறி மரங்களுக்கு போகுதாம். காவலுக்கு இருந்தவர் சொன்னார்.
நல்லவேளை அரசாங்கம் 1964 இல் முழிச்சுக்கிச்சு. இங்கிருந்து இனி கற்களைத் திருடினால் மூணு மாசம் சிறையும் அபராதம் 5000 ரூபாயும்.

Wednesday, August 25, 2010

மூன்று நாடுகள்...............( தாய்லாந்து, கம்போடியாப் பயணம் நிறைவுப்பகுதி )

ஹொட்டேல் வரவேற்பறையில் ஒரு ரெட்டை மாட்டுவண்டி டிஸைன் கண்ணை இழுத்துச்சு. சக்கரம் அச்சுலே இருந்து கழண்டு வராதபடி அருமையா ஒரு எக்ஸ்டென்ஷன் கட்டை கொடுத்து அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்து டிஸைனா இருக்கலாம். கண்டு பிடிச்சவர் தமிழ் சினிமா பார்த்துருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். வில்லன் கடையாணியைப் பிடுங்கி வச்சுருவார். இதை அறியாத நாயகன், காளைகளை விரட்ட, அது ஓடு ஒடுன்னு ஓட, கடையாணி இல்லாத சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா அச்சுலே இருந்து கழல..... நாமெல்லாம் பல்லைக் கடிச்சபடி இருக்கை நுனிக்கு வர ( இயக்குனர் விருப்பப்படி) பயங்கர த்ரில், இப்படிக் கட்டை வச்சு இருந்தா...பாழாய்ப் போகாதோ!!!!!

ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். விமானநிலையம் வர மெயின் சாலையில் போகும்போது ரெண்டு பக்கமும் அட்டகாசமான ஹொட்டேல்கள் அணிவகுத்து நிக்குது. ஆஹா...... வரும்போது இருட்டுனதாலே இதெல்லாம் கண்ணில் படலை. சொல்லிவச்சாப்போலே எல்லாத்திலும் நுழைவு வாசலில் அஞ்சு தலை. அதென்னடா..... இங்கே இவர் மேலே அப்படி ஒரு ஈர்ப்பு!!!!
மெயின் ரோடிலேயே நடைபாதையை அடுத்து தாமரைக் குளங்கள். பச்சைக்குப் பச்சை, அழகுக்கு அழகு. காசுக்குக் காசு.

ஏர்போர்ட் வாசலிலே போய் இறங்கிக்கலாம்

இருவது நிமிசத்துலே விமான நிலையம் வந்து சேர்ந்தாச்சு. உள்ளே செக்கின் செய்யப்போனால்...... ஒரு ஈ காக்கா இல்லை. சின்ன விமான நிலையம்தான். நாட்டின் டூரிஸம் வருமானத்துக்கு இதில்தான் முதலிடம். ராத்திரி எட்டரைக்கு ஒரு ப்ளைட் பாங்காக் போக இருக்குன்னாலும் பலநாட்களில் அது ரத்து ஆயிருமாம். நம்ப முடியாதுன்னு பாங்காக் ஏர்லைன்ஸ்காரர்களே சொல்றாங்க. நமக்கோ மறுநாள் காலை ஏழரைக்கு டெல்லி ப்ளைட் பிடிக்கனும். வம்பு வேணாமுன்னுதான் இப்பவே கிளம்பிட்டோம்.

எண்ணி ஒன்பது பேர் நம்ம ஃப்ளைட்டில். வரும்போது கொடுத்த மாதிரியே வெஜிடபிள் சேண்ட்விச். ஒருவேளை வருசத்துக்கு மொத்தமா வாங்கி வச்சுருக்காங்களோ??? அதே 50 நிமிசப்பயணம். பாங்காங் நகரைக் கொஞ்சம் தாழ்வான உயரத்தில் பார்த்தேன். வாட்டுகள் அங்கங்கே தாரளமா இடம்பிடிச்சு இருக்குது.
பாங்காக் நகரின் நதி 'ச்சாவ் ப்ராயா'
சுவர்ணபூமியில் இறங்கினோம். பறந்த நேரத்தில் பாதியை விமானத்திலிருந்து எங்களைக் கூப்பிட்டுப் போன பேருந்தில் செலவு செஞ்சோம். அது என்னங்க, வேற ஊரிலே இறக்கிட்டாங்களா என்ன? போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம். ஏழெட்டு கிலோமீட்டர் மெதுப்பயணம்.

எட்டு நாளைக்கு முன் இங்கே வந்து இறங்கினவுடன் ஓடுன வேகத்தில் அர்ரைவலில் இருக்கும் அழகான விஷயங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதை இப்ப எடுத்து நம் கடமையை முடிச்சுக்கலாமுன்னு கேமெராவைத் தீட்டி வச்சுக்கிட்டுக் காத்திருந்தேன். ஆனா.....

பேருந்தைவிட்டு இறங்கி விமானநிலையக் கட்டடத்துக்குள் நுழைஞ்சால் கண்ணெதிரே குடியுரிமை வழங்கும் இடம். இந்தமுறையும் நோ ச்சான்ஸ்:(

நாளைக்குக் காலை ஆறு மணிக்கு இங்கே இருக்கணுமே என்பதால் நகருக்குள் போகாமல் விமானநிலைய ஹொட்டேலில் ஒரு இரவு தங்கிக்க ஏற்பாடு. நோவோடெல் (NOVOTEL). அவுங்களுடைய இலவச பிக்கப் வண்டியில் உக்கார்ந்தா..... அதுவும் இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு விமானநிலைய வளாகத்துலேயே வட்டம் போட்டு பத்துப் பதினைஞ்சு நிமிசம் சுத்திக்காட்டிட்டு நம்மளைக் கொண்டுவிட்டுச்சு.

தேவைக்கும் அதிகமான பிரமாண்டம் இங்கேயும். எங்கேயும் போக வேண்டாம். நல்லா ஓய்வு எடுக்கணுமுன்னு தீர்மானிச்சதால் சாப்பிடக்கூட கீழே போகாமல் ரூம்சர்வீஸில் முடிச்சுக்கிட்டோம். ஜன்னலில் பார்த்தால் கையெட்டும் தூரத்தில் விமானநிலையம் ஜொலிக்குது. நிமிசத்துக்கொரு விமானம் ஏறுவதும் இறங்குவதுமா இருக்கு. தரை ஊர்திகள் போக்குவரத்து ஏராளம். ஆனால் ஒரு சத்தமும் இல்லை. ஊமைப்படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்! நல்லத்தான் கட்டி இருக்காங்க! அமைதியோ அமைதி.

அதிகாலை அஞ்சரைக்கு எழுந்து குளிச்சுக் கிளம்பி விமானநிலையக் கட்டிடத்துக்குள் வந்து சேர்ந்தப்ப ஆறரை. அதான் இங்கே காஃபி வொர்ல்ட் இருக்கேன்னு அறையில் இருக்கும் காஃபியைச் சட்டை செய்யலை. ஆனா எப்படியோ அது இருந்தபக்கம் போகாம வேற பக்கம் திரும்பிட்டோம்போல! .

லேசான தலைவலி ஆரம்பிச்சது. இந்த காஃபிச் சனியனை விட்டொழிக்கணும். வேண்டாத சமாச்சாரத்தையெல்லாம் எப்படிப் பழக்கி வச்சுருக்கோமுன்னு லேசா ஒரு கோபம். (நல்ல காஃபி கிடைச்சதும் கோபத்தை மறந்துருவொம்லெ)

கோபால் புண்ணியத்துலே லவுஞ்சுக்குப்போய் லேசா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் & காஃபியை முடிச்சுக்கிட்டு நம்ம கேட்டுக்கு வந்தோம்.
இந்த முறை 'தாய் ஏர்வேஸ்' விமானத்துலே நம்ம இருக்கைக்கு முன் டிவி ஸ்க்ரீன் இருக்கு. நிகழ்ச்சிகள் அவ்வளவா சுவாரசியப்படலை. பெண் பயணிகளுக்கு 'ஆர்கிட் பூ ப்ரோச்' ஒன்னு கொடுத்தாங்க.

நாலரை மணிப் பயணம் முடிச்சு டெல்லியில் வந்து இறங்கினோம். அதே பழைய டெர்மினல்தான். புதுசு மறுநாள் முதல் பயனுக்கு வருதாம். 2 நமக்காக வந்து காத்துருந்த வண்டியில் சண்டிகரை நோக்கிக் கிளம்பிட்டோம். டெல்லி மா 'நரக'த்துக்குள்ளே போகலை. அதென்னவோ டெல்லி ட்ராஃபிக்லே மாட்டிக்க மனசே வரமாட்டேங்குது:( ஆனாலும் பிதாம்பூர் வரை கொஞ்சம் மெதுவான பயணம்தான். பகல் பனிரெண்டு மணி ஆகுது. போக்குவரத்து அதிகமில்லைன்னு ஓட்டுனர் சொன்னார்.

எல்லாம் நாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்கு. பத்து நாளுக்கு ஒரு மாற்றமும் இல்லை. வழியில் சாப்பிடன்னு இடம் தேடிக்கிட்டே ஹைவேயில் வந்து மூணு மணி நேரப் பயணத்தில் 'ஹவேலி'யை அடைஞ்சோம். அழகான செடிகள். கார் பார்க்கிங் ஏரியா நல்லாவே இருக்கு. அங்கேயே ரெஸ்ட் ரூம்ஸ் ஒரு பக்கம். நாட் பேட். சுத்தமாத்தான் இருக்கு. தோட்டத்தின் ஒரு பக்கம் ஒட்டைச்சிவிங்கி குடும்பம் ஒன்னு.

ஹவேலி
பஞ்சாபி தாபாதான். ஆனால் மாளிகை செட்டிங்ஸ். பெரிய வளாகத்தில் இருக்கு. ஒரு பக்கம் ரெஸ்டாரண்ட், அதுக்கு நேர் எதிர்ப்புறம் கொஞ்சம் கடைகள். பயணிகளுக்கான பொருட்களா கேமெரா, பேட்டரிகள், குடிதண்ணீர் பாட்டில், ஷால், பரிசுப்பொருட்கள்ன்னு கிடக்கு. இடைவெளியில் கயித்துக் கட்டில்கள், ஒரு கிணறு. அதுலே தண்ணி இறைச்சுக் குடத்தைத் தலையில் சுமந்துகிட்டுப்போறாங்க ஒரு பெண். இன்னொருத்தர் தண்ணி இறைச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப்பக்கம் ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமா பாங்ரா நடனம் ஆடிக்கிட்டே இருக்காங்க.

ரெஸ்டாரண்டை ஒட்டி வெளியே பானிபூரி, குல்ஃபி, லஸ்ஸி, ஆலு டிக்கா, சாட் வகைகள் இப்படி தனித்தனியா அடுப்பு வச்சு சமைச்சுத்தரும் வகையில் அமைச்சுருக்காங்க. சாயந்திர வேளையில் கயித்துக்கட்டில்களில் ஹாயா உக்கார்ந்து வேணும் என்பதை வாங்கி உள்ளே தள்ளலாம். காசை வாங்கிப்போட்டுக்க கணக்குப்பிள்ளை ஒருத்தர், ஆனால்........... இந்தப்பக்கம் அம்மாவும் பொண்ணுமா ரெண்டு லேடீஸ், உக்காந்து தலைவாரி விட்டுக்கிட்டு இருக்காங்க. சாப்பாட்டுக் கடைவாசலில் இப்படி இருந்தா நல்லாவா இருக்கு? கண்டுக்காம உள்ளே போகவேண்டியதுதான்:)

மினி மீல்ஸ் வித் ஸ்வீட்ன்னு கொஞ்சம் சோறு, பருப்பு, கூட்டு, அப்பளம், கொஞ்சூண்டு பாயசம் நமக்கு. ஆனால் விலை கொள்ளை. 250 ரூ. ரெண்டு மீல்ஸ், அதிகமில்லையோ? ஹைவேன்னா இப்படித்தானாம். கோபால் சொல்றார்.
அங்கிருந்து ஒரு ரெண்டரை மணிப்பயணத்துலே வீடு வந்து சேர்ந்தோம். மணி சரியா நாலே முக்கால். முதல்லே நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டுத்தான் மறுவேலை.

இப்படியாக நம் தாய்லாந்து கம்போடியாப் பயணம் நிறைவுற்றது. இதுவரை பொறுமையாகக் கூடவே வந்த நம் வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

என்றும் அன்புடன்,
உங்கள் டீச்சர்.


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!