Monday, December 20, 2010

தீக் (DEEG) போகலாம் வாங்க.

கோவர்தன்மலை தரிசனம் முடிச்சு அறைக்கு வந்தப்ப மீதி இருக்கும் அரைநாளுக்கு என்ன செய்யலாமுன்னு ........

'தீக்' னு இங்கே ஒரு கோட்டை இருக்கு. போலாமான்னார் கோபால்.

'எங்கே இருக்கு? நான் மதுராவை வலையில் துழாவினப்பக் கண்ணில் படலையே'ன்னால் அது ராஜஸ்தானாம். அப்ப சரி. நாந்தான் குதிரைக்குக் கண்பட்டி போட்டதுபோல் மதுராவை விட்டு மற்ற இடங்களை ஏறிட்டுக்கூடப் பார்க்கலையே.

ஏறிட்டுன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. அம்ரித்ஸர் போயிந்தப்ப வண்டி இழுத்துவரும் ஒரு குதிரைக்கு காந்தாரி போல, துணி கண்கட்டு போட்டுருந்துச்சு. எனக்கு ரொம்ப பேஜாராப்போயிருச்சு பாவம். அதுவும் வண்டிக்காரர் கையில் பிடிச்சுருந்த கயிறு மூலமாவே திசை அறிஞ்சு போய்க்கிட்டு இருந்தது.

தீக் எங்கேன்னு சரியாச் சொல்லுங்கன்னா....இங்கே பக்கத்துலேதானாம்.
எங்கியாவது போகணுமுன்னா முதல்லே வலையில் தேடி ஒரு ஹோம் ஒர்க் செஞ்சுக்கணும். அது டீச்சரின் மறுபாதியா இருந்தாலுமேன்னு மிரட்டிட்டு வலையில் தேடுனால்..... கோவர்தனகிரி தாண்டி அதே சாலையில் போகணும்னு சொல்லுது. கிழிஞ்சது போ...... இப்பத்தானே அங்கே இருந்து வந்தோம். திரும்பவும் அதே ரோடா?

"ஆமாம்...ஏன் எனக்கு முன்னாலேயே சொல்லலை?நானாவது பார்த்து வச்சுருப்பேனே?"

"நீதான் ஒரு முழத்துக்கு லிஸ்ட் போட்டு வச்சுருக்கயே! அதெல்லாம் முடிச்சு நேரம் இருந்தால் சொல்லலாமுன்னுதான்................."

அச்சச்சோ...... மனம் இளகிப்போச்சு. மனைவிக்கு முன்னுரிமை! நாமும் நியாயமா நடக்கணுமே! பேசாம விருந்தாவனத்துக்கு ஒதுக்கிய ஒரு நாளை ரெண்டாப் பிரிச்சு அரை நாள் இன்னிக்கும் இன்னொரு அரைநாள் நாளைக் காலைக்கும் வச்சுக்கலாம். நாளை மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு அந்த தீக். ஜெயிச்சேன்.

நல்லவேளையா நேத்துப்போல் மதுரா டவுன் வழியாப் போகாம, டில்லி ஆக்ரா ரோடுலேயே போய் கோவர்தனகிரி சாலையைப் பிடிக்கலாம். கூட்ட நெரிசலில் மாட்ட வேணாம். நாம் தங்கியிருந்த ஹொட்டேலும் மெயின் ரோடுக்குப் பக்கம்தான் இருக்கு.

சரியா ஒன்னே முக்காலுக்குப் புறப்பட்டாச்சு. மொத்தம் 41 கிலோ மீட்டர். கோவர்தன கிரியில் இருந்து 16 கி.மீ. கிரியைத்தாண்டி கொஞ்ச தூரத்தில் அறிவிப்புப் பலகை. சீமா சமாப்த். ஒரு அடி இடைவெளியில் சீமா ப்ராரம்ப். பயந்துறாதீங்க........ மாநில எல்லை முடிவு மாநில எல்லை ஆரம்பம்:-)))))

தீக் (DEEG) பரத்பூர் வட்டம். ராஜஸ்தான்,

வர்ற வழியில் பார்த்த குதிரை காளை மாடு, காளைஎருமை, ஒட்டகம், ட்ராக்டர் வண்டிகளுடன் ஒப்பிடும்போது எல்லை கடந்ததும் ஒட்டக வண்டிகளே கூடுதல் பொதுவா வண்டிகளில் அதன் அகலத்தை விட ரெண்டு மடங்கு அகலமான சாக்குப் பையில் அடைச்ச பொருளுடன் எதிரே இருக்கும் சாலையை மறைச்சுக்கிட்டுத்தான் சவாரி. ஓவர்டேக்கும் செய்ய முடியாது சில இடங்களில். அப்பெல்லாம் யார் இழுக்கறான்னு குளம்படி பார்த்து கண்டு பிடிக்கும் விளையாட்டில் நூறு சதமானம் தேர்ச்சி அடைஞ்சேன்.

அப்படி என்னதான் கொண்டு போறாங்க. இவ்வளவு அடைச்சால் அச்சாணி தாங்குமா? இழுக்கும் விலங்குகளுக்குக் கஷ்டமா இருக்காதா?

எல்லாம் வைக்கப்புல் மாட்டுத்தீனிகள்தான். எடை அவ்வளவா இருக்காதாம். நெசமாவா? (பீலிபெய் சாகாடும்..அச்சிறு அப்பண்டம்..........................)

இந்த விலங்குகளைப் பொறுத்தவரை என்னை ரொம்பவே வியப்புக்குள்ளாகுவது இந்த எருமைக்காளைதாங்க. ஒன்னும் உதவாத எருமைன்னு இனி யாரையும் திட்டக்கூடாது. அது இந்த எருமைக்காளையை அவமானப்படுத்துவதுன்னு புரிஞ்சுகிட்டேன்.

ரொம்ப சுமாரான சாலையில் வந்து தீக் ஊருக்குள்ளே நுழையறோம். பிரமாண்டமான மதில், சுற்றிலும் 'பச்சை'த் தண்ணீர் இருக்கும் அகழின்னு கொஞ்சம் மிரட்டலா இருக்கு. கோட்டையின் பாழடைஞ்ச தோற்றம் மனசுக்குள்ளே என்னவோ மாதிரி.............

வழி எங்கேன்னு விசாரிச்சு,அவர் கைகாட்டும் திசையில் போனால் தீக் பேலஸ் வாசல் வந்துருது. தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும் அரண்மனை. பெரிய கேட். காவல்காரர் சிரிச்ச முகத்தோடு வரவேற்று அடுத்துள்ள அலுவலக அறையில் நுழைவுச்சீட்டு வாங்கணுமுன்னு சொன்னார். அஞ்சு ரூபாய்.


தோரணவாயில்கள் அடுக்கடுக்கா இருக்கும் முகப்பு. அழகான புல்வெளிகள் ரெண்டு பக்கமும் இருக்கும் மண்பாதையில் நடக்கறோம். இதுக்குள்ளே எங்களோடு வந்து சேர்ந்துக்கிட்டார் விக்ரம் (காவல்காரர்தான்)
இந்த வாசலுக்கு 'சிங் போல்' னு பெயர். இதென்னடா சிங்குன்னா...அது சிங்கம்.
பரத்பூர் சமஸ்தானத்து இலச்சினையை முகப்பில் பொறிச்சுருக்காங்க. அதை உயர்த்திப் பிடிக்கும் ரெண்டு சிங்கங்கள். சிங்கத்தைப் ஃபோகஸ் செஞ்சால் இலச்சினையில் நம்ம யானையாரும் இருக்கார்! பேஷ் பேஷ்!
இலச்சினை

கண்ணுக்கு நேரா நெடூக செயற்கை நீரூற்று ( தண்ணீர் இல்லாமல்) அமைப்பு. அதன்முடிவில் கோபால் பவன். அதுக்கு ரெண்டு பக்கமும் கூடாரம்போன்ற அழகான அமைப்பில் ரெண்டு கட்டிடங்கள்.. வசந்த காலத்துக்கு ஒன்னு மழை காலத்துக்கு ஒன்னு. இந்த மூணு கட்டிடங்களும் ஒரு பெரிய குளத்துக்குள் நீண்டு இருக்கு. குளத்தின் பெயர் கோபால் ஸாகர். கூடாரங்கள் முகத்தையும் பவனம் முதுகையும் குளத்துக்குக் காமிக்கும் விதம்!
கோபால் சாகர்
குளத்தை ஊர் மக்கள் நலனுக்காகவும் ஒதுக்கிட்டார் ராஜா. இப்பவும் அங்கே குளிச்சுத் துவைச்சுன்னு மக்கள் பயன்படுத்திக்கறாங்க.


மழைக்கூடாரத்துக்குள் போகப் படிகள் இறங்கணும். இந்தப் படிகளேகூட அட்டகாசமான வேலைப்பாடுகளுடன் இருக்கு. வளைவுகளுடன் கூடிய மண்டபம். மழைக்காலத்தில் மழைத்தண்ணீர் சரஞ்சரமாய் மண்டபத்தின் மூணு ப்க்கங்களிலும் தாரையாகப் பொழியும் அமைப்பு. உள்ளே செப்புக் குழாய்கள் சுத்திவரப் பதிச்சு வச்சுருக்கு. நீர்நிலையைப் பார்த்தபடி அக்கடான்னு மயிலாசனம் போல ஒரு ஆசனத்தில் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்,இல்லே!!!

கோபால் பவனத்துக்குள்ளே போகும் சின்ன வாசலில் ஓடுமீன் ஓட உறுமீனைக் காத்துச் சிலர். விக்ரமுக்கு உள்ளே வர அனுமதி இல்லை. நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க நான் காத்துருக்கேன்னார்.( அப்ப...... கேட் காவல் அவ்ளோதானா? யாராவது வந்தால்........ அது கிடக்கட்டும். இப்ப நாம்தான் முக்கியம்)

உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. கல்லால் ஆன ஒரு பெரிய கட்டில் வரவேற்குது. பக்கத்துக் கதவில் போகணுமாம். விஸிட்டர்ஸ் ஹால். பெரிய பெரிய சோஃபாக்கள், யானைத்தந்தங்களோடு இருக்கும் பெரிய நிலைக் கண்ணாடி, யானைக் கால் ஃப்ளவர் வாஸ்.( இது போல ஒன்னு நம்ம கானாடுகாத்தான் அரண்மனைப்பதிவில் படம் போட்டுருக்கேன்) தலைக்கு மேலே நீண்டு தொங்கும் பங்காக்கள். பங்கா இழுப்பவர்கள் எல்லோரும் கண்ணுக்கு மறைவா வெளி நின்னு இழுப்பாங்களாம். ஜாலியாக் காத்தை அனுபவிச்சுக்கிட்டு முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு நடக்குமாம்!.

பங்கா ஆட்கள் உக்கார

சுவத்துக்குப் பக்கம் இருந்த அலங்கார மேடையில் சில தந்தச் சிற்பங்கள். அதுலே ஒரு வெள்ளைக்காரி.(தந்தமே வெள்ளை. அதுலே இப்படி....) ராஜாவுக்கு 'ரொம்ப வேண்டப்பட்டவங்க'. ஜெர்மன்னு சொன்ன நினைவு. பாட்டுக்காரி.. வயலின் நல்லா வாசிப்பாங்க. ராஜா இறந்தவுடன் அதிர்ச்சியில் உடனே அவுங்களும் இறந்துட்டாங்களாம்.( உடன் கட்டையில் ஏத்திட்டா என்ன செய்வதுன்ற பயத்தினால் இருக்கணும்.
கோபால் பவன் (குளத்திலிருந்து பார்த்தால்)

ரொம்ப நாளுக்கு முன் பார்த்த ஒரு ஆங்கிலப்படம் ஹீட் & டஸ்ட்ன்னு நினைக்கிறேன் ஏ(ய்)மியை உடன்கட்டையில் ஏத்தி தீ வச்சுருவாங்க. இறந்துபோன கிழக் கணவனை மடியில் வச்சுக்கிட்டு ராம் ராம் ன்னு பயத்தோடு சொல்லுவாங்க. தீ நாக்கு உயர உயர பயம் கூடிப்போய் ராம் ராம் அழுகையில் கலந்து அவலமா ஒலிக்கும் போது ஹிரோ வந்து காப்பாத்திருவார்.

இந்த ஹாலையொட்டியே பின்னால் இருப்பது டைனிங் ஹால். குளத்தைப் பார்த்துருக்கும் ஜன்னல் வரிசை. முக்கிய விருந்தினர்களுக்காகவே வியூவோட அமைச்சுருக்கார் ராஜா. பதினெட்டு பேர் உக்காரலாம். அழகான நீஈஈஈஈஈண்ட மேசையும் இருக்கைகளுமா அமர்க்களம். ஆனாலும்......

மாடியேறிப் போனதும் இருந்த இன்னொரு அமைப்பு ரொம்பப் பிடிச்சுப்போச்சு எனக்கு. இதுவும் சாப்பாட்டு அறைதான், பளிங்குக்கல்லால் நீள்வட்டமா ஒரு அடி உசரத்துலே அறையின் நட்டநடுவில். இருக்கு. அந்த நீள்வட்டத்தின் ஒரு முனையில் ரெண்டடி அகலத்துக்கு வெட்டிவிட்டது போல் அமைப்பு.. அதன் வழியா பரிமாறுபவர்கள் உள்ளே வந்து தங்கள் கடமைகளைச் செய்வாங்க. பளிங்கு மேடையின்மேல் சுற்றிவர சாப்பாட்டுத் தட்டுகள். வட்டத்துக்கு வெளிப்புறம் தரையில் விரிப்புகள் விரிச்சு அதுலே உக்கார்ந்து சாப்பிடும் ராஜ குடும்பம்.

பொதுவா சாப்பாட்டுத்தட்டை நம் ஆசனத்தைவிட கொஞ்சம் உசரமா இருக்கும் மணையில் வச்சுச் சாப்பிடணுமுன்னு ஒரு நியதி இருக்கு. உணவுக்குக் கொடுக்கும் மரியாதை. நம்ம வீடுகளில் அந்தக் காலத்தில் மணையில் நாம் உக்கார்ந்துக்கிட்டு சாப்பாட்டுத்தட்டை தரையில் நம் முன்னால் வச்சுக்குவோமே......அது தப்பில்லையோ!!!! வடக்கும் தெற்கும் எப்பவுமே எதிரெதிர்தானா?
கோபால்பவன் முன் நிற்பது.....நம்ம கோபால்.

எச்சரிக்கை: பதிவின் நீளம் கருதி தீக் ரெண்டு பாகமா வருது.

தொடரும்................................:-)





21 comments:

said...

முருகா சுத்தி சுத்தி காலெல்லாம் கெஞ்சுது.. படமெல்லாம் சூப்பர் டீச்சர்! :)))

said...

வாங்க பொற்கொடி.

காலுவலிக்குதா?

ஐய்ய..... இப்பத்தான் அரண்மனைக்குள்ளே நுழைஞ்சுருக்கோம். இன்னும் என்னெல்லாம் இருக்குன்னு பார்க்க வேணமா?

said...

கட்டடக்கலையில் ராஜஸ்தான் மக்களை அடிச்சுக்க ஆளே கிடையாது போலிருக்கு. ஒவ்வொரு கட்டிடமும் என்னமா மெரட்டுது :-))))

said...

அது சரி அப்ப ஒண்ணரை வருசமா சுத்திக்கிட்டு இருக்கதெல்லாம்? எப்ப நியூசி? ஆசையா கட்டின வீடு காத்துக்கிட்டு இருக்குல்ல.. (சத்தியமா நீங்க சுத்தறதை பாத்து எனக்கு பொறாமையே இல்ல.. இல்ல. இல்ல. :P)

said...

மழைக்கூடாரம் படிகளின் வேலைப்பாடு அமோகம்.

"கோபால் பவன்" என்ன ஒற்றுமை. எங்கும் கோபாலர்கள் :)

said...

வெண்பாப் பத்தி எல்லாம் எழுதினா, அதுவும் முக்கியமா தப்பா எழுதினா, கரெக்ட்டா வந்திடுவோமுல்ல.... :)

/பீலிபெய் சாகாடும்..அச்சிறு அப்பண்டம்..........................)/

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

அச்சிறு என்றால் அந்த சிறிய என்று பொருள் ஆனால் இங்க சொல்ல வந்தது அச்சிறும். அச்சு+இறும் என்று விரிவடையும். இறும் என்றால் உடையும் என்று பொருள்.

பெயின் என்றால் pain இல்லை. பெய் என்றால் சிதறி விழுவது (மழை பெய்கிறது) என்பது ஒரு பொருளாக இருந்தாலும் வை என்ற பொருளும் உண்டு. வைத்தால் என்று சொல்வதைத்தான் இங்கு பெயின் என்று சொல்கிறார் வள்ளுவர்.

சால என்றால் மிகவும், மிகுத்து என்றால் அதிகமாக்கி. சால மிகுத்துப் பெயின் என்றால் மிகவும் அதிகமாக வைத்தால்.

மயில் இறகே ஆனாலும் கூட அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் அது வண்டியின் அச்சினை முறிக்கும் என்பது குறளின் பொருள்!

ரீச்சர், நீங்க கொஞ்சம் வெளியில் போனா சட்டாம்பிள்ளை நான் பாடம் எடுக்கணும்தானே!!

said...

அப்புறம் கோபாலபுறத்து ஆளோட (அதாங்க கோபாலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆளோட) போட்டோவே காணுமே!!

said...

குளம்படி பார்த்து கண்டு பிடிக்கும் விளையாட்டில் நூறு சதமானம் தேர்ச்சி அடைஞ்சேன்/
இது நல்ல விளையாட்டா இருக்கே..
நெக்ஸ்ட் டைம் நாங்களும் ட்ரை செய்யறோம்..

கோட்டை அழகா இருக்கு..

said...

அழகான பதிவு - அருமையான பகிர்வு.

said...

கோட்டை,குளம் எல்லாம் பார்க்க அழகாக உள்ளது டீச்சர், அந்த காலத்து மக்கள் அமைதியான,அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் டீச்சர்:))))

said...

உள்ளேன் டீச்சர் ;)

said...

வாங்க அமைதிச்சாரல்.

வடக்கே ராஜாக்கள் எல்லோரும் அரண்மனைகளையும் தெற்கே ராஜாக்கள் கோவில்களையுமாக் கட்டுவதுலேயே கண்ணா இருந்துருக்காங்கப்பா.

நடுவிலே கொஞ்ச போரடிச்சால் போருக்குப் போவாங்கபோல!!!!

said...

வாங்க பொற்கொடி.

வந்த வேலை இன்னும் முடியலை. அதான் ஊர்சுற்றல். இன்னும் பார்க்கவேண்டிய இடங்களையெல்லாம் பார்த்து முடிச்சுட்டு நியூஸி போகணும். இதுக்காக இன்னொரு பிறவி எடுத்து வரமுடியுமா?

ச்சீச்சீ....பொறாமைன்னா என்னன்னே உங்களுக்குத் தெரியாதேப்பா. அப்புறம் எப்படிப் படுவீங்க:-)))))

said...

வாங்க மாதேவி.

கோபால்ன்னு பெயர் இருந்தாப்போதும். அது நம்மோடது(தான்)ன்னு உரிமை வேற வந்துருது:-))))

said...

வாங்க கொத்ஸ்.

உங்களை வகுப்புக்கு வரவழைக்கணுமுன்னா 'ம்' விட்டு வைக்கணும்:-))

முழுக் குறளையும் எழுதுனா அதுக்குப் பொருள் சொல்லணுமுன்னு பதிவுலகில் (எழுத்தப்படாத) ஒரு விதி இருக்கு. அதுதான் பாதியோட 'எஸ்' ஆவது:-)

சட்டாம்பிள்ளை உஷாரா இருக்கீங்க. அதுக்கு ஒரு 20 மதிப்பெண் போனஸ்!

மாடல் இருக்கும்போது க்ளிக்க ஆள் வேணாமா?

said...

வாங்க கயலு.

பசங்களுக்கு விளையாட்டைச் சொல்லிக் கொடுத்துருங்க. அண்ணாத்தை ஜெயிச்சுருவார்:-)))

said...

வாங்க சித்ரா.

தொடர்ச்சியை இன்னிக்கு போட்டுருக்கேன். உங்க கருத்தைச் சொல்லுங்க.

said...

வாங்க சுமதி.

அமைதியான வாழ்க்கைன்னு சொல்ல முடியாதுப்பா. ஏழைகளுக்கு எப்பவுமே வாழ்க்கை ஒரு போராட்டமாத்தான் இருக்கு.

said...

வாங்க கோபி.

கொள்ளுன்னா மட்டும் வாய் திறக்கும் குதிரை....கடிவாளமுன்னா வாயை மூடிக்குமாம்!

பாடம் எடுக்க ஆரம்பிச்சா....உள்ளேன்னு சொல்லிட்டுக் கடைசி பெஞ்சுக்கு ஓடறீங்க:-))))

said...

//பாட்டுக்காரி.. வயலின் நல்லா வாசிப்பாங்க. ராஜா இறந்தவுடன் அதிர்ச்சியில் உடனே அவுங்களும் இறந்துட்டாங்களாம்.( உடன் கட்டையில் ஏத்திட்டா என்ன செய்வதுன்ற பயத்தினால் இருக்கணும்.//

:) அப்படித்தான் தோணுது !

//உணவுக்குக் கொடுக்கும் மரியாதை. நம்ம வீடுகளில் அந்தக் காலத்தில் மணையில் நாம் உக்கார்ந்துக்கிட்டு சாப்பாட்டுத்தட்டை தரையில் நம் முன்னால் வச்சுக்குவோமே......அது தப்பில்லையோ!!!! வடக்கும் தெற்கும் எப்பவுமே எதிரெதிர்தானா?//

பெற்றோர் வீட்டில் அதுக்குண்ணே மணைகள் இருக்கும், எப்போது அவையெலலம் காணாமல் பயன்படாமல் போனது நினைவு இல்லை. சாணம் மொழுகி இருக்கும் வீடுகளில் மணையில் உட்கார வைக்கும் பழக்கம் இருந்தது, பின்னாளில் சிமெண்ட் தரைக்கு மாறிய பிறகு மணைகளின் பயன் தேவையில்லாமல் போய்விட்டது. மற்றபடி மணை பயன்படுத்தியதற்கு தரை ஈரம் தான் காரணம் என்றே நினைக்கிறேன்

said...

வாங்க கோவியார்.

ஈரம் + மணை லாஜிக் சரியாத்தான் இருக்கு.

எங்க பாட்டி வீட்டுலே தேக்குமரத்தில் செஞ்ச பெரிய மணைகள் ஒரு ஜோடி இருக்கு.

கல்யாண மணைகள். நிறையக் கல்யாணம் பார்த்துருக்கு. அக்கம்பக்கம் எல்லாம் கடன் வாங்கிப் போவாங்க அந்தக் காலத்துலே!

இப்போதுள்ள வாழ்க்கை முறையில் வீடுகளில் மணைகளைக் காணோமே:(

உணவு மேஜையிலும் சாப்பாடு இருக்கையை விட உயரத்துலே இருக்குதில்லே!