Monday, May 23, 2011

சாமி அனுப்பிய ஸையத் அக்பர் அலி ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 14)

'முந்தி ஒரு காலத்துலே மலை மலைன்னு ஒன்னு இங்கெல்லாம் இருந்துச்சு..... பாட்டி கதையை ஆரம்பிக்க அக்கம்பக்கத்துப் பிஞ்சுகள் எல்லாம் ஆர்வமா வந்து உக்கார்ந்தாங்க. "மலையா? அது எப்படி இருக்கும்? அது இப்போ எங்கே போயிருச்சு பாட்டி?"

'சின்னத்துண்டுகளா வெட்டிக்கூறு போட்டு வித்துட்டாங்க. ஒரு பேப்பரும் பென்சிலும் கொண்டுவா. நான் மலையை வரைஞ்சு காமிக்கிறேன்'னு பாட்டி சொல்லும் காலம் வருவது வெகுதூரத்தில் இல்லை என்பதென்னவோ நிஜம்.
மலையெல்லாம் துண்டுபோட்டு.............

ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பி அஜ்மெரை ( ஆஜ்மீர் என்று தவறான உச்சரிப்பில் நாம் சொல்லும் Ajmer) நோக்கிப் போறோம். இது திடீருன்னு முந்தாநாள் போட்ட திட்டம். ஏற்கெனவே நாம் போட்ட திட்டத்தின் படி மூணு நாள் ஜெய்ப்பூர். அப்புறம் நேரா உதய்பூர். போகும் தூரத்தைக் கணக்குப் பார்த்தப்ப உதய்பூருக்கு நானூத்திச் சொச்சம் கிமீ போகணும். கூகுளே அஞ்சரை மணி நேரமுன்னு சொன்னால்...... நிஜத்தில் ஏழு மணி நேரம் எடுக்கும். அதனால் இங்கே ஒரு நாளைக் குறைச்சு அதை உதய்பூர் போகும் வழியில் ஒரு நாள் தங்குவது போல பார்த்துக்கலாமேன்னு கோபால்தான் ஐடியாக் கொடுத்தார்.

இங்கே சாலைகள் இருக்கும் அழகில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 300 கிமீக்கு மேலே பயணம் நல்லதில்லை. அதிலும் ட்ரைவர் ஓய்வில்லாம ஓட்டுவது நல்லதில்லைதானே?

மடிக்கணினியைப் பிடுங்கி வச்சுக்கிட்டு ஆராய்ஞ்சதில்....... புஷ்கர் என்ற புண்ணியத்தலம் கண்ணில் பட்டது. அங்கே போகும் வழியில் அஜ்மெர் வருது. கூடவே ' நீச்சே உம்மா' வின் நினைவும். இருங்க ஒரு கொசுவத்தி ஏத்திவச்சுக்கிட்டு ஆரம்பிக்கலாம்.

பூனாவில் நாம் இருந்த காலத்தில் நம் வீட்டுக் கீழ்தளத்தில்'(நீச்சே) இருந்தவங்கதான் இந்த உம்மா. சொந்த ஊர் கேரளாவில் தலைசேரி.. உப்பாவுக்கு ரயில்வேஸில் வேலை. அதுவும் உயர் வகுப்புக்கான கேண்டீனில். நம்ம ச்சிண்ட்டு இருந்தான் பாருங்க. அவனுக்கு தினமும் பொரிச்ச கோழி கொண்டுவந்து தருவார். அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பான் இவனும். சைக்கிள் சத்தம் கேட்டதும் வாலாடும் வேகத்தைப் பார்க்கணுமே:-))))))


ஒரு சமயம் உம்மாவும் உப்பாவும் ஆஜ்மீர் போய்வந்து யாத்திரையைப் பற்றிக் கதைகதையாச் சொன்னாங்க. பெரிய ராக்ஷச சைஸ் டேக்ஸாவில் கஞ்சி வைப்பதையும் வரும் பக்தர்களுக்கெல்லாம் பிரசாதமாகத் தருவதையும் அதன் ருசியையும் பக்தர்கள் கூட்டத்தையும், தர்காவில் ரெண்டு நாள் தங்கி வழிபாடு செய்ததையும் நாங்க ரொம்ப ஆவலோடு கேட்டோம். அப்பெல்லாம் நமக்குப் பயணம் என்பதுக்கு 'பொருள்' அறவே இல்லை.

இந்த அஜ்மெர் தர்க்காவையும் சேவிச்சுக்கிட்டுப் போகலாம். இன்னிக்கு யுகாதிப் பண்டிகை. நாள் நல்ல நாளாவேற இருக்கு:-) தங்க இடம் இருக்கான்னு தேடணும் முதலில்....வலை விரிச்சோம். அஜ்மெரில் ஒன்னும் சரியா இல்லை. புஷ்கரில் இடம் கிடைச்சது.
ஜெய்ப்பூர் சாலைகளின் நடுவே இருக்கும் மீடியன் ஸ்ட்ரிப்புகளில்கூட கோட்டைச்சுவரின் டிஸைன்கள்தான்! பல வீடுகளின் காம்பவுண்டுச் சுவர்களும் இதே டிஸைனில் இருப்பதை பார்த்தேன். அதென்ன...'கோட்டைன்னா கொள்ளைப் பிரியமா இருக்கே! '

நூத்தி முப்பத்தி நாலு மீட்டர் பயணத்தில் அஜ்மெர். ஊர் நெருங்க ஒரு அம்பது கிலோ மீட்டர் இருக்கும்போதே மார்பிள் பிஸினஸ் கொடிகட்டிப் பறப்பது தெரிஞ்சது. நெடூக வரிசையா விதவிதமான பெயர்களில் வியாபாரம். வாங்க வர்றவங்களுக்குத் தலை சுத்தாம இருந்தால் பாக்கியம். எதை எடுப்பது எதை விடுவது?
மார்பிள் கட்டிகளாக் குவிச்சு வச்சுருக்காங்க. திருட்டு பயம் இருக்காது:-)

சாமி மாடங்கள், அலங்காரப்பொருட்கள்ன்னு ஆரம்பிச்சு பெரிய பெரிய யானை குதிரை சிங்கமுன்னு ஒரு 'வண்டலூரே' இருக்கு! கற்களைக் கொண்டு இறக்க, இங்கிருந்து டெலிவரிக்குக் கொண்டு போகன்னு பயங்கர ட்ரக் ட்ராஃபிக். அந்த அம்பது கிலோமீட்டரும் நாம் கவனமா மெதுவாப் போகவேண்டியதாப் போயிருச்சு. யாராவது சைடு கொடுக்கணுமே:(


கனம் தாங்காமல் முக்கி முனகிக்கொண்டே இஞ்ச் இஞ்சாக நகரும் ட்ரக்

அப்பதான் நினைச்சேன்..... வருங்கால சந்ததிகளுக்கு மலைன்னா வரைஞ்சு தான் காமிக்கணும். எதுக்கும் ஒரு அளவு வேணாமா? இப்படி வெட்டிக் குவிச்சா ..?
மார்பிள் பிஸினஸ் கொடிகட்டிப்பறக்குதே!
அஜ்மெர் ரயில்வே ஸ்டேஷன்

ஊருக்குள்ளெ நுழைஞ்சப்ப முதலில் கண்ணில் பட்டது அஜ்மெர் ரயில்வே ஸ்டேஷன். ராஜபுதனக் கட்டிடக்கலையுடன் உள்ள முகப்பு நல்ல அழகுதான். ஊர் பெருசாத்தான் இருக்கு. அதுக்கேத்த போக்குவரத்து நெரிசலும். தர்கா இருக்குமிடம் விசாரிக்கலாமுன்னு ரோடோரம் நின்னுக்கிட்டு இருந்த சனங்களில் ஒருத்தரைக் கேட்டேன். தெரியாதாம்! நெற்றியில் சிந்தூரப்பூச்சுடன் நின்னுக்கிட்டு இருந்தவர், முகத்தில் ஒரு வெறுப்பைக் காமிச்சுக்கிட்டுப் பதில் சொன்னார். வெளங்கிரும்:( உள்ளுர் ஆள்தான். கைவண்டியில் பழம் வச்சு வியாபாரம் செய்யறார். தப்பான ஆள்கிட்டே கேட்டது என் தப்பு.

இன்னும் கொஞ்ச தூரம் போனபிறகு கூடி இருந்த சில இளைஞர்களிடம் கேட்டேன். ஒரு இளைஞர் நான் வழி காட்டுறேன். என் பின்னாலேயே வாங்கன்னு தன்னுடைய ரெண்டு சக்கரத்தைக் கிளப்பினார். போகும் வழியில் தர்காவுக்குப் போகும் வழி ன்னு போட்டுருந்த போர்டை உதாசீனப்படுத்திட்டு வேறொரு தெருவழியா திரும்பினார். நாங்களும் பின் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கோம்.
ஸையத் அக்பர் அலியுடன் கட்டுரை ஆசிரியர்! (இப்படித்தானே போடணும்?)


ரெண்டு மூணு தெருவைக் கடந்து ஒரு கேட்டுக்குள் நுழைஞ்சோம். அது ஒரு வீட்டின் முற்றம். வண்டியை இங்கேயே விட்டுருங்க. தர்காவில் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம் என்றார். என்ன ஏதுன்னு கேக்காமச் சொன்னபடி செஞ்சோம். கேமெரா, கைப்பை எதுவும் கூடாது. செல்ஃபோன் மட்டும் ஓக்கேன்னார். எல்லாத்தையும் வண்டியில் வச்சுப் பூட்டினோம்.

அங்கே இருந்த ரெண்டு பேர் நாங்க பார்த்துக்கறோம். கவலைப்படாமப் போயிட்டு வாங்கன்னதும் ஒரு ஆட்டோ வந்து நின்னுச்சு. நாங்க ரெண்டு பேரும் ஆட்டோவிலும், நம்ம ப்ரதீப் அந்த இளைஞரின் டுவீலரிலும் புறப்பட்டோம்.

ஆறடி அகலச் சந்துகளில் இங்கேயும் அங்கேயும் குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டே இருக்கோம். ரெண்டு பக்கமும் திறந்த சாக்கடைகள். மூக்கே வெடிச்சுரும்போல இருக்கு.............:( (இதுவும் நம்ம உம்மாவின் வார்த்தைப் பிரயோகம்தான். யாரா படக்கம் பொட்டிச்சது? படச்சோனே....மூக்கிண்டே பாலம் பொட்டியல்லோ!!! ) அங்கங்கே நாய்களும் பன்றிகளும், கன்னுக்குட்டிகளும், பசுக்களும் கிடைச்ச இடத்தை அடைச்சுப் படுத்திருக்கு. திடுக் திடுக்குன்னு குறுக்கே பாயும் கோழிகள் வேற! அச்சு அசப்பில் பார்த்தால் மதுரா விருந்தவனத்தி;ல் நாம் அடைஞ்ச அதே அனுபவம்:( பக்தர்கள் கூடும் புண்ணியஸ்தலங்கள் எல்லாம் ஏன் இப்படி நாறிக் கிடக்கு? டவுன் கவுன்ஸில் கொஞ்சம் சிரத்தை எடுத்துச் சுத்தமா வைக்கக்கூடாதா?
முன்னால் போன மோட்டர்சைக்கிளைக் காணோமேன்னு நினைக்கும்போது முட்டுச் சந்து ஒன்னில் ஆட்டோ நிக்க அங்கே அந்த இளைஞரும் ப்ரதீபும் நமக்காகக் காத்துருக்காங்க. பசுக்கொட்டிலைத் தாண்டி ஏழெட்டுப் படி இறங்கிப்போய் இடது பக்கம் திரும்பினால் கசகசன்னு நெருக்கமாக் கடைகள். கூட்டமான கூட்டம். இங்கே செருப்பை விட்டுருங்கன்னு இடம் காமிச்சார். சுத்தும் முத்தும் கண்ணை ஓட்டினால் கொஞ்சம் நீளப்படிகளோடு தர்காவின் நுழைவு வாசல். சட்னு பார்த்தால் கூட்டத்தோடு கோவிந்தான்னு கிடக்கு.
தர்கா ஷெரீபின் முகப்பு



தொடரும்.....:-)

கோபாலின் செல்லில் எடுத்த தர்கா ஷெரீஃபின் படங்கள் இவை)

18 comments:

said...

உங்கள் சுற்றுப் பயணம், நாங்கள் பார்த்த இடங்களுடன் பல அடி௸ன்ஸ ;-).

அந்த ஏரியும், அழகிய இளைப்பாருமிடங்களும், இப்போதும் என் கண் முன்! அந்த சின்ன கோட்டையில் உள்ள ம்யூசியம் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

Have a good time in many more tours.

said...

நீங்க சுற்று பயணங்களை , எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எழுத்து நடையே ஸ்பெஷல் தான்.... ரசிக்க வைக்கிறது.

said...

எங்களையும் சேர்த்து கடத்திட்டு போய்ட்டாங்களோன்னு நினைச்சிட்டேன்.. :))

said...

அருமையான பதிவு.
நாங்களும் சேர்ந்து வந்தாற்போல் உணர்வு.
நன்றி.

said...

ஹை அஜ்மேரா! கவனமா கவனிச்சி படிக்கிறேன். தொடருங்கள்....

said...

niceநானும்தான் இந்த ஊருக்குப்போயிருக்கேன் ஆனா குதிரைக்கு சேணம் பூட்டியது போலத்தான் போயிருக்கோம் போல

said...

தர்காவின் முகப்பில் நிற்கின்றோம் :)

said...

வாங்க வெற்றி மகள்.

முன்னேற்பாடு செய்யப்பட்டச் சுற்றுலாவில் போவதைவிட இப்படி நாமே தனியாகப்போவதில் கிடைக்கும் சௌகரியங்களில் இந்த அடிஷன்ஸ் கூடுதல் போனஸ்!

said...

வாங்க சித்ரா.

இதுதான் கண்டது 'கண்டபடி':-)))))

said...

வாங்க சுசி.

கடத்திக்கிட்டுப்போனால்..... அந்த அனுபவத்தையும் எழுதிருவோம்ல:-))))

said...

வாங்க ரத்னவேல்.

சோம்பல் இல்லாமல் கூடவே வர்றதுக்கு நன்றிகள்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

//கவனமா கவனிச்சி படிக்கிறேன். //

ஆஹா...... அப்ப நான் இன்னும் கவனமுடன் எழுதணும் போல!!!!!

said...

வாங்க மாதேவி.

பிரார்த்தனை பண்ணிக்கிட்டே கடைகளை வேடிக்கை பாருங்க. நாளைக்குக் காலையில் தர்கா உள்ளெ நுழையலாம்:-)

said...

வாங்க கிச்சா.

கண் பட்டை மாட்டிய குதிரையா:-))))))))

said...

every photo and the interesting narration makes me feel as if I was there with you Thulasi.
thanks ma.

said...

வாங்க வல்லி.

அலுப்பு இல்லாமல் நீங்க பின் தொடர்ந்து வருவது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா.

நன்றிகள்.

said...

அன்புள்ள திருமதி துளசிகோபால் அவர்களுக்கும்
நமது துளசிதளம் நண்பர்களுக்கும் வணக்கம்.
இத்தனை நாட்கள் உங்களை காணாது இருந்ததற்கு
மன்னிக்கவும்...

ராஜஸ்தான் பயணத் தொடர் அருமை.. குறிப்பாக அந்த கஹூ (பசு)காட் அனுமன் கோவில் மனதைத் தொடுகிறது.

நன்றி.

said...

வாங்க சிவஷன்முகம்.

ரொம்ப நாளா உங்களைக் காணோமேன்னு நினைச்சுக்குவேன்.

மீண்டும் வருகை தந்ததுக்கு நன்றி.

இன்னும் மனதைத்தொடும் நிறைய விஷயங்கள் இந்த ராஜஸ்தான் தொடரில் வருது.

ப்ளீஸ் கீப் கமிங்.