Monday, May 09, 2011

ஷிம்லா ஸ்பெஸல்

என்ன ஒரு ரெண்டரை மணி நேரத்துலே போயிறலாம்னு பிரதீப் சொன்னதும் ஆ....ன்னேன். நெட்டுலே ஹிமாச்சல் வலைப்பக்கத்தில் மூணரை மணின்னு போட்டுருக்கு. அப்ப ப்ளஸ் ஒன்னுன்னு சேர்த்தால் நாலரை ஆகும். ஆனா.... கூகுள் மேப் சொல்லுது, ரெண்டு மணி நேரத்தில் போகலாமாம். மனோ வேகத்திலா?

'நிறையதடவை போய் வந்துருக்க ஆள் சொன்னா நம்ப மாட்டியா?' கோபால் குறுக்கிட்டார். வெறும் 129 கிமீதானே?

எட்டரைன்னு நல்ல நேரம் குறிச்சு எட்டு இருவதுக்குக் கிளம்பிட்டோம். அன்னையர் தினம். நேற்று இஸ்கான் கோவிலில் வாங்கிய யசோதா கிருஷ்ணர் பொம்மையைப் படம் எடுத்து ஒரு வாழ்த்துப் பதிவு போட்டுட்டேன். இனி இன்னிக்குப்பூரா அன்னையர் தினம் கொண்டாட்டம்தான்.

ஷிம்லா போகும் வழியில் பாபா ரத்னசாமி கோவிலுக்குள் போய் அஞ்சு நிமிசம் சாமி கும்பிட்டோம். அங்கே இருக்கும் நம்மாட்களைப் பார்த்து நலம் விசாரிப்பு. இதுக்குத்தான் போனதே! பக்கத்துலே மேம்பாலம் வருதுன்னு கோவில் காம்பவுண்டை இடிச்சு வச்சுருக்கு!

பிஞ்சோர் தாண்டி கல்கா. காளியின் கோவிலை போற போக்கில் பார்த்து ஒரு கும்பிடு. கல்கா கோவில் தாண்டுனதும் மலைப்பாதை ஆரம்பிச்சுருது. இதுக்கு முப்பது ரூ வாங்கிடறாங்க.

ஷிம்லா போக கல்காவில் இருந்து ரயில் இருக்கு. மீட்டர் கேஜ். மலைப்பாதையில் ஊர்ந்து போகும் ரயிலில் இருந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கணுமுன்னு ரொம்ப நாளா ஒரு திட்டம்.ஒரு சனிக்கிழமை காலை எட்டரைக்கு ரயில் பிடிச்சா......அஞ்சரை மணி நேரப் பயணத்தில் மலைகளின் ராணியிடம் ஒரு நாள் தங்கி மறுநாள் ஞாயிறு மாலை திரும்பி வரலாம்.

நமக்கெங்கே விடியுது. ரொம்பப் பக்கத்தில் இருப்பதால் ஒரு வீக் எண்ட் போகலாம், போகலாமுன்னு அம்பத்தி ரெண்டு வீக் எண்டுகளைத் தாண்டியாச்சு.

அதான் இன்னிக்கு மதர்ஸ் டே கொண்டாட்டம் மலைகளின் ராணியின் மடியில்ன்னு சட்னு கிளம்பிட்டோம். நோ ரயில். அதுக்கே போக வர பதினோரு மணி நேரம் ஒதுக்கணுமே. போற அவசரத்துலேயும் ஹிமாச்சல் ப்ரதேஷ் வலைப்பக்கம் எட்டிப் பார்த்து முக்கியமான நாலு கோவில்கள் விவரம் எழுதி வச்சேன்.( வச்சதோடு சரி. எடுத்துப்போக மறந்தது கிளைக்கதை)
சண்டிகரை விட்டதுமே ரோடில் பயங்கர ட்ராபிக் ஜாம்

தரமான சாலைன்னு சொல்ல முடியாது. அங்கங்கே குண்டும் குழியுமாத்தான் கிடக்கு. சின்னச்சின்ன ஊர்களைக் கடந்து போறோம். உயரம் மெல்ல கூடிக்கிட்டே போகுது. தரம்பூர் என்ற கொஞ்சம் பெரிய ஊரைக் கடக்கும்போது கோபால் ஒரு முக்கியமான இடத்தைப் பார்த்து வச்சுக்கிட்டார் என்பது எனக்கு மாலையில் தெரிஞ்சது.

மலைச்சரிவில் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் வீடுகள் உயரம் கூடக்கூட கொஞ்சம் அதிகமா இருக்கு.

வழியில்வந்த ஸோலன் என்ற ஊர், அந்த மாவட்டத்தின் தலைநகர். சாலையில் கடைகளும் மக்கள் நடமாட்டமும் கொஞ்சம் கூடுதல்தான். இந்த ஷிம்லா போகும் சாலையில் ட்ரக்குகள், கார்கள் நடமாட்டம் அதிகப்படியாவே இருக்கு. காய்கறி ஏற்றிக்கொண்டுபோகும் வண்டிகள் பார்த்தால் மேலே ஒன்னும் விளையாது போல இருக்கே!

தாராதேவி என்னும் ஊருக்காகக் காத்திருந்தேன். ஊரும் வந்துச்சு ஆனால் நாம் போகணும் என்று இருந்த கோவிலைக் காணோம்! வாயில் இருக்கே வழின்னு விசாரிச்சால் நாம் இதுக்கு முன்னே கடந்துவந்த ஷோகி என்னும் ஊர்லே இருக்காம் இந்தக் கோவில். ஒரு அஞ்சு கிலோமீட்டர் பின்னே போகணும். நோ ஒர்ரீஸ். வரும்போது பார்த்துக்கலாம்.
அடுத்த கோவில் சங்கட மோசன் மந்திர். ஷிம்லா போகும் வழியிலேயே இருக்கு. நல்ல வேளையா கோவிலுக்குப்போகும் வழி வளைவு வச்சுருக்காங்க. சாலையில் இருந்து கீழே இறங்கிப்போகணும். அப்பப்பா.....எப்படிக் குறுகலான பாதை. அதிலும் ஓரமா வண்டிகளை நிறுத்தி வச்சுருக்காங்க. கவனமாப் போகணும் நாம். அதிக தூரம் இல்லை. ஒரு முன்னூறு மீட்டர் இருக்கலாம். கோவிலுக்கு முன்னே வண்டிகள் நிறுத்தும் இடம் இருக்கு. வளாகத்துக்குள்ளே நுழைஞ்சால் கண்ணைக் கவர்வது நம்ம தென்னிந்தியக் கோபுரத்தோடு இருக்கும் ஒரு கோவில். இது புள்ளையாருக்கு! கோபுரம் முழுசும் புள்ளையாரே புள்ளையார். பதினாறுவிதக் கணபதிகளாம்! எப்போ யார் கட்டுனாங்க என்ற விவரம் கிடைக்கலை:( இடதுபக்க ஓரமா இருக்கு கோவில். நடுவில் உள்ள பாதையில் இடப்புறம் நவகிரக சந்நிதி. வலப்பக்கம் கண்ணாடி அறையில் சிவலிங்கம். எதிரில் அழகான சதுர மேடையில் நந்தி!

இடது புறம் வெள்ளைக் குமாச்சிதான் நவகிரகங்களுக்கு.
இன்னும் நேராப் போனால் சங்கட மோசன் கோவில். வாசலின் ரெண்டு பக்கமும் யானைகள். உள்ளே ஹால் . அதன் மறு கோடியில் மூணு சந்நிதிகள். நடுவில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும். அவருக்கு வலப்புறம் நெஞ்சைத் திறந்து அங்கு வீற்றிருக்கும் ராமனையும் சீதாவையும் காண்பிக்கும் ஆஞ்சநேயர் ( இவர்தான் எல்லா சங்கடங்களையும் தீர்க்கும் விமோசனர்) விஷ்ணுவுக்கு இடப்புறம் மஹாதேவர் மனுஷ்ய ரூபத்தில்!
ஹாலில் ஒரு பெரிய கோஷ்டி பஜனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இங்கே உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.
தரிசனம் முடிச்சுப் பிரஸாதம் ( வெள்ளைச்சீனி மிட்டாய்) வாங்கிக்கிட்டு வெளியே வந்தால் கொஞ்சம் நாலைஞ்சு படி இறங்கினால் பெருசா முற்றம். அதிலும் ஒரு சந்நிதி.பரம் பூஜ்ய ஸ்ரீ பாபா நீம் கரோரி மஹராஜ் அவர்களின் சந்நிதியாம். மூடிக்கிடக்கு. இந்தக் கோவிலை புனருத்தாரணம் செஞ்சது இவர்தான். ப்ராசீன் மந்திரா இது இங்கேயே இருந்த கோவிலாம். கோவிலுக்கு வயசில்லைன்னால் அது ப்ராச்சீன். சுத்து வட்டமா உக்கார ஏதுவா சுவர் கட்டி வச்சுருக்காங்க. மலைகளையும் அதில் இருக்கும் கட்டிடங்களையும் பார்த்து ரசிக்கலாம் மேக மூட்டம் இல்லாமல் இருந்தால்......
நல்ல சுத்தமான வளாகம். குழந்தைகள் விளையாட சின்னதா ஒரு பார்க், பக்தர்களின் வசதிக்காக ரெஸ்ட்ரூம் ஒன்னும் இருக்கு. சுத்தம் செஞ்சு வைக்க ஒரு பணியாளரும் இருக்காங்க. பாராட்டப்படவேண்டியது. எல்லா சங்கடமும் விமோசனம் ஆகிருது!

அஞ்சே கிலோமீட்டர் தூரத்தில் ஷிம்லா நகருக்குள் நுழைஞ்சுடறோம். சுற்றுலாப்பயணிகளுக்கான அலுவலகம் ஒன்னு கண்ணில் பட்டது. பார்க்க வேண்டிய இடங்களை விசாரிச்சால் அச்சடிச்ச விவரம் ஒன்னு கொடுத்தாங்க. வெள்ளையர்கள் காலத்தில் கடும் வெய்யிலில் இருந்து தப்பிக்க இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு நிறைய கட்டிடங்களைக் கட்டியிருக்காங்க. அதுலே வைஸ்ராய் மாளிகையும் ஒன்னு. இடப்புறம் மேலே போகும் பாதையில் போய் அதைப் பார்த்துக்கிட்டுப் போங்கன்னு அலுவலர் சொன்னார். அட்வான்ஸ் ஸ்டடீஸ்ன்னு கேளுங்கன்னார். வாசலில் இருந்த ஒரு பயணிகளுக்கான அறிவிப்பில் ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் சம பங்குன்னு சொல்லாமல் சொல்லி இருக்கு:-)
நாங்களும் அங்கங்கே 'அட்வான்ஸ் ஸ்டடீஸ்'ன்னு கேட்டுக்கிட்டே மலைப்பாதையின் வழியாக மேலேறிப்போய் வைஸ்ராய் மாளிகையை அடைஞ்சோம். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி இங்கே இப்போ இந்த மாளிகையில் வகுப்புகள் நடத்துது. உள்ளே மரவேலைப்பாடுகள் எல்லாம் அழகா இருக்கு(மாம்) வைஸ்ராய் மாளிகையாச்சே. இங்கிலாந்து ஸ்டைலில் கட்டி இருக்காங்க.

நாங்க போனபோது மணி பனிரெண்டேகால். கைடு ஒருத்தருடந்தான் உள்ளே போகணுமாம். கைடு 12.50க்குத்தான் வருவாராம். உள்ளே போக ஒரு ஆளுக்கு 20 ரூ கட்டணம். நம் வண்டி உள்ளே வந்து நம்மை இறக்கிவிட்டுப்போக ஒரு 20 ரூ கட்டணம் ஏற்கெனவே கொடுத்தோம். அரைமணி நேரம் காத்திருக்க பொறுமை இல்லை. பாவம் நம்ம டிரைவர், வழியில் எங்கேயும் டீ குடிக்கக்கூட நிறுத்தலை. முதல்லே ட்ரைவரை சாப்பிட அனுப்பணும். வெளியே இருக்கும் அழகான தோட்டத்தைச் சுத்திப் பார்த்துட்டு அங்கங்கே ஜன்னல் வழியா உள்ளே நோட்டம் விட்டுட்டுக் கிளம்பிட்டோம்.
வைஸ்ராய் மாளிகை


பதிவின் நீளம் கருதி பாக்கி நாளை:-)

26 comments:

said...

ஜெய்ப்பூர் பதிவுகளுக்கு நடுவிலே ஜில்ஜில் சிம்லாவா! நல்லதுதான்.

said...

ஆமாம், தெரியாமல் தான் கேட்கிறேன்! தமிழ் நாட்டுக் கோவிலுக்கு என்று வருவதாக உள்ளீர்கள்?

said...

ஜில் ஜில் ஊர் பிரயாணம் நல்ல சுவாத்தியமாக இருக்கு. நல்ல படங்கள்.

said...

Cool !!! Special!!!!

said...

ரொம்ப சுத்தமா அழகா இருக்கு இடம்..

நம் நாட்டிலா என்பது போல இருக்கு..

ரொம்ப பொறுமைதான் உங்களுக்கு..:)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இது 'ஒரு பகல்' நேரச் சுற்றுலாதான். ராஜஸ்தான் வரண்டு கிடக்கேன்னு இதைக் கையில் எடுத்தேன்:-))))))

said...

வாங்க குடந்தை அன்புமணி.

வந்தேனே!

said...

வாங்க சந்திர வம்சம்(பத்மா)

ரெண்டு வருசம் முன்பு தமிழ்நாட்டுக்கோவில்கள் 'கொஞ்சம்' எழுதினேனே. பார்க்கலையா நீங்க:(

வெறும் 43 இடுகைகள்தான்!!!

said...

வாங்க டொக்டர் ஐயா.

சண்டிகர் வெய்யிலுக்கு இது கொஞ்சம் மாற்றம்தான்.

ஒரு நாளுன்னா ஒரு நாள் இல்லீங்களா:-))))

said...

வாங்க சித்ரா.

உண்மைதான். இங்கே 38 அங்கே 28!

said...

வாங்க சாந்தி.

படத்துலே குப்பை அவ்வளவாத் தெரியாதே:-))))))

பொறுமை இல்லாட்டி இத்தனை வருசம் 'குப்பை' கொட்டி இருக்க முடியுமா????

said...

அட சிம்லா வந்தாச்சா. குளிர் கொஞ்சமாவது உறைத்ததாஇனிமே இந்தியாவில துளசி கால் படாத கோவிலே இல்லைன்னு ஆகிடப் போகிறது:)
அன்பே வா பட ஷூட்டிங் எடுத்த இடமெல்லாம் பார்த்தீங்களா.
புதிய வானம் புதிய பூமி ........பதிவு நீளமெல்லாம் சுருக்கக் கூடாது. சொல்லிட்டேன்.
--

said...

"ஷிம்லா" பார்க்கணும் என நினைத்த இடம்.

உங்களுடன் சுற்றியதில் இன்று பார்த்து விட்டேன் :)

மிக்க நன்றி.

said...

வங்கிப்பணியில் முதலில் சேர்ந்தது அங்குதான். பனிமழையில் நனைந்து வாழ்ந்தது மறக்க இயலா முற்றிலும் புதிய அனுபவம்.

said...

மன்னிக்கவும்! தங்கள் தளம் தான் நான் முதலில் "தேவதை " மூலம் கண்டு "தளம்" பற்றி அறியமுடிந்தது.--பத்மா

said...

//வாங்கிக்கிட்டு வெளியே வந்தால் கொஞ்சம் நாலைஞ்சு படி இறங்கினால் பெருசா முற்றம். அதிலும் ஒரு சந்நிதி.பரம் பூஜ்ய ஸ்ரீ பாபா நீம் கரோரி மஹராஜ் அவர்களின் சந்நிதியாம். மூடிக்கிடக்கு. //

போய்டு வந்த இடத்தை அப்படியே ஞாபகம் வைத்து எழுதுவது சிலருக்கு தான் வரும். கலக்குறிங்க

said...

//"ஷிம்லா ஸ்பெஸல்"//

ஷிம்லா ஸ்பெசல் இல்லையா :)
கமல் படத்தில் அப்படித்தான் பேரு இருக்கும்.

said...

வாங்க வல்லி.

இந்த எர்மைத்தோலுக்குக் குளிர் உறைச்சுட்டாலும்.......:(

அங்கேயும் வேர்வைக் குளியல்தான் எனக்கு. ஆனால் சண்டிகரைவிட சூடு குறைவுதான்ப்பா.

அட! இந்த 'அன்பே வா'வை மறந்துட்டேனே!

அங்கே இருந்த நாலு மணி நேரத்துக்கு மூணு பதிவு போறாதா:-))))

said...

வாங்க மாதேவி.

கூடவே வந்துருக்கீங்க. பில்லை அனுப்பவா:-))))

said...

வாங்க பாலராஜன்கீதா.

ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!!
நலமா?

அப்போ நடுங்கும் குளிரில் இருந்து இப்போ கொதிக்கும் வெயிலுக்குத் தாவிட்டீங்களே:(

said...

என்னங்க பத்மா இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு......

தேவதை வந்து உங்களை நம்ம தளத்துக்குக் கூப்பிட்டு வந்துட்டாளா!!!!

தேவர்களும் படிக்கும் துளசிதளம் என்று விளம்பரம் கொடுக்கலாம்:-)))))

நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் பின்னாலே போங்க நம்ம தளத்துலே.

சுவையானவை கிடைக்கலாம்!

said...

வாங்க கோவியார்.

இப்பெல்லாம் நினைவு சுருங்கும் 'காலம்' வந்துருக்கு. ஆனாலும் டிஜிட்டல் கேமெரா இருக்கக் கவலை ஏன்?

எல்லோருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்கு வேற வழி இல்லையோ?

அதான் சிம்லா ஸ்பெஷல் இப்படி ஷிம்லா ஸ்பெஸல் ஆகி இருக்கு. அந்த ஊரின் ஒரிஜனல் ஹிந்தி உச்சரிப்பு இதுதான்:-)

said...

படிச்சுட்டேன். சுவாரஸ்யம். பிள்ளையார் கோபுரமும், நந்தி இருக்குமிடமும் என்னவொரு ஏகாந்தம்>

said...

வாங்க ஸ்ரீராம்.

முதல் வருகைக்கு நன்றி.

அப்பப்ப வேற சம்பந்தப்பட்ட இடங்களில் லிங்க்சாமியை அனுப்புவதில் பலன் உண்டுன்னு புரியுது:-))))

அந்த இடத்தில் நம்மூர் கோவிலைப் பார்த்ததும் சொல்லமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது!

said...

//முதல் வருகைக்கு நன்றி.//

முதல் வருகை இல்லை என்றே நினைக்கிறேன்!

said...

அச்சச்சோ..........

அப்போ......


ரொம்ப நாளா நம்மூட்டுப் பக்கம் வரலையா?

மீண்டும் வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.