Tuesday, June 28, 2011

சி(ட்)டி பேலஸ் போகலாமா? ........((ராஜஸ்தான் பயணத்தொடர் 26)

அடுத்த ஸ்டாப் நமக்கு சிட்டிப்பேலஸ். நம்ம ஜக்தீஷ் மந்திர் இருக்கு பாருங்க. அங்கிருந்து நேராப்போனால் ஒரு நிமிச நடைதான். வலப்பக்கம் சந்துத்தெருவில் நுழைஞ்சால் நம்ம ஹவேலி வந்துரும். அரசர்களும் குடும்பங்களும் ஜக்தீஷ் மந்திருக்கு தினப்படி வந்து போவாங்களாம். திருவனந்தபுரம் நினைவுக்கு வருது.
அரண்மனைக்கே உரிய பெரும் சுவர்களையும் காவல்வீரர்களையும் கடந்து உள்ளே போறோம். நுழைவுச்சீட்டும் கெமெராவுக்கான சீட்டும் வாசலுக்கு வெளியே இருக்கும் கட்டிடத்தில் வாங்கிக்கணும். வண்டியை உள்ளே கொண்டு போய் நிறுத்திக்கலாம். எல்லாம் ஒரு ஜம்பம்தான்:-)

விசாலமான வெளி முற்றத்தில் தோட்டம் அட்டகாசமா இருக்கு. அதுலே இடப்புறம் யானைகளைக் கட்டிவைக்க துவாரமுள்ள கற்களைப் புதைச்சு வச்சுருக்காங்க. வலப்புறம் புலிக்கூண்டுகள். அரண்மனை வாசலில் மேவார் நாட்டுச் சின்னம். அதுக்குக் கொஞ்சம் தள்ளி சூரியனின் உருவம். இந்த ராஜாக்கள் சூர்ய வம்சத்தினர். பொதுமக்கள் இந்த முற்றத்தில் கூடி சூரியனை வழிபடுவார்களாம்.

வாசலுக்கு ஏறிப்போகும் படிக்கட்டுகளையொட்டி நீளமான மேடை அமைப்பு. அதுலே ரெண்டுவிதமான உயரங்கள். 'குதிரையின் மீது ஒரே தாவாக தாவி ஏறினார்' எல்லாம் கிடையாது. குதிரை மேடைக்குப் பக்கத்தில் வந்து நின்னதும் அரசர் மேடையோரம் நடந்து போய் ஏறிக்குவார். அப்ப யானை ஏறனுமுன்னா? அதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் உயரமா இருக்கும் மேடை அமைப்பு:-)))))
பத்துப்பதினைஞ்சு படிகள் ஏறி முன்வாசலைக் கடந்து உள்ளே போனதும் வலது பக்கம் ஆயுதசாலை. நாலு படியேறிப்போகணும். இங்கெல்லாம் வாசல்நிலைகள் உயரம் குறைவா இருக்கு. தலையைக் குனிஞ்சுதான் கடக்கணும். பொதுவா ராஜபுத்திரர்கள் நல்ல உயரமாத்தான் இருப்பாங்க. அப்படி இருக்க சின்ன வாசல்.....காரணம்?

எதிரிகள் ஆக்ரமிச்சால் டக்ன்னு உள்ளே வர முடியாமல் கொஞ்சமாவது தாமதிக்கணும் என்பதற்காகவாம்! சுவர் முழுசும் துப்பாக்கிகள் வரிசை போட்டு நிற்க, கேடயங்களும் வாட்களும் கத்திகளுமா கண்ணாடிப் பெட்டிகளுக்குள் காட்சிக்கு வச்சுருக்காங்க. 'இடுப்பில் இருந்த கட்டாரியை உருவி, இருளில் பதுங்கி நடக்கும் அந்த உருவத்தின் மேல் எறிந்தான்' ன்னு சரித்திரக் கதைகளில் வாசிச்சு இருக்கோம் பாருங்க. அந்தக் கட்டாரியை இப்போதான் நேரில் பார்க்கிறேன். ரெண்டு பக்கமும் கூர்மையா இருக்கும் கத்தி! எறிஞ்சால் சக்ன்னு சொருகிடும் இல்லே?
1527 ஆம் வருசம் ஃபிப்ரவரி மாசம் 22 தேதியில் நடந்த Bபயானா சண்டையில் பயன்படுத்திய முரசு, ட்ரம்பெட்ஸ், படைவீரர்கள் அணிவகுத்துப்போகும்போது கையில் ஏந்திப்போன பதாகைகள் கொடிகள் இப்படியெல்லாம் கூட காட்சிக்கு வச்சுருக்காங்க. மஹாராணா ப்ரதாப் சிங்கின் வீரவாள் இருபத்தி அஞ்சு கிலோ எடையாம். அதுவும் ரெண்டு வாட்களை எப்போதும் வச்சுருப்பாராம். ஆயுதம் இல்லாத எதிரியுடன் சண்டை செய்ய நேரிட்டால் எதிரிக்கு 'இந்தா ஆயுதம். இதைவச்சு என்னோடு சண்டைபோடு'ன்னு சொல்லி அந்த இன்னொரு வாளை நீட்டுவாராம்!

அங்கிருந்த ஒரு சித்திரத்தில் குதிரையில் அமர்ந்திருக்கும் ஒருமுகலாய வீரனையும் அந்தக் குதிரையையும் ஒரே வாள் வீச்சில் அப்படியே ரெண்டாய் பிளந்ததை வரைஞ்சு வச்சுருக்காங்க. பார்க்கும்போதே நடுக்கம்தான்.
ஒரு இடத்தில் இந்த மேவாரை இதுவரை ஆண்ட ராஜவம்சத்தினரைப் பற்றிய விளக்கங்கள் ஆங்கிலம் ஹிந்தி என்ற இரண்டு மொழிகளிலும் இருக்கு. சரித்திர ஆராய்ச்சி செய்யும் நபர்களுக்கு இது ஒரு ஹார்லிக்ஸ். அப்படியே எடுத்துக்கலாம்:-))))
Dதுனிமாதா கோவில் இங்கேதான் இருக்கு. இதுதான் மஹாராணா உதய்பூர் நகரை நிறுவுவதற்கு முன் இந்த இடத்தை அடையாளம் காண முதலில் கட்டுனது. தும்பிக்கை ஆழ்வாரும் மாதாவும் பளிங்குலே செஞ்சு சுவர் மாடத்தில்! இங்கிருந்து மாடிக்குப் படிகள் போகுது.

விசாலமான முற்றம். ஒரு பக்கம் இருக்கும் பெரிய கூடங்களில் ஓவியங்கள். ஹாலின் நடுப்பகுதியில் மஹாராணா பிரதாப் அவர்களின் வாளும் சேணம் பூட்டிப் புறப்படத் தயாராக அவரோட பட்டத்துக் குதிரையான சேதக்கின் யானைத் தும்பிக்கையுடன் இருக்கும். உருவச்சிலையும் காட்சிக்கு. லைஃப் சைஸ்!
போர்களுக்காகவே ஒரு முழு கேலரியை ஒதுக்கிட்டாங்க. சண்டைக்காட்சிகளே! சேதக் கேலரின்னே இதுக்குப் பெயர்.

மேலே படத்தில் இருக்கும் தொட்டி போன்ற அமைப்பைப் பாருங்க. ஒரு நல்ல நாள், இல்லே இளவரசருக்கு ராஜாவாப் பட்டம் கட்டும் நாள் இப்படி விசேஷங்களில் இந்தப் பளிங்குத் தொட்டியை வெள்ளிக்காசுகளால் நிறைச்சுருவாங்களாம். அப்புறம்? இந்த மாடத்தின் மேல் இருந்து வெளிப்பக்கமா அரண்மனை வெளி முற்றத்தில் காத்து நிற்கும் பொது மக்களுக்கு தானம் செய்வாராம் புது அரசர். தட்டுதட்டாக பணியாட்கள் வாரித்தர உப்பரிகையில் இருந்து வெள்ளிக்காசுகளை மழைமாதிரி பொழிவாராம். ஹூம்.... இதுமட்டும் எனக்கு மன சமாதானமே இல்லை. எத்தனைபேர் கூட்டத்தில் முண்டியடிச்சு, நெருக்கடியில் சிக்கி உயிர் இழந்தாங்களோ? எல்லோரையும் வரிசையில் வரச்சொல்லிக் கைப்பிடி எடுத்து வழங்கி இருக்கலாம் இல்லே?
நதிநீர் இணைப்பை உலகில் முதன்முதலாச் செஞ்சு காமிச்சவங்களும் இந்த மேவார் நாட்டு மன்னர்களே! (படத்தைக் கிளிக்கிப் பெருசு பண்ணிப் பாருங்க!)
மேல் மாடியில் வரிசையா வெராந்தாவில் நிற்கும் அலங்காரத்தூண்களை அடுத்துள்ள பெரிய முற்றத்தில் பளிங்குக்குளம். இதில் தண்ணீர் நிரப்பி முக்கியமாக அழைக்கப்பட்ட விருந்தினருடன் அரசர் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவாராம். கட்டிடத்துன் உள்ளே இருக்கும் இன்னொரு பளிங்குக் குளத்தில் வண்ணங்கள் கலக்கி தன் குடும்பத்தினருடன் நீரை வாரித்தெளித்து ஹோலி கொண்டாடுவாராம். இந்தக் குளத்தின் மேலாக இருக்கும் மண்டபக்கூரையில் ஊஞ்சல் போட்டு அதில் அமர்ந்து வீசி ஆடும்போது குளத்தின் தண்ணீரைக் கால்கள் தொட்டுப்போகும் வகையில் அமைச்சுருக்காங்க. கூரையில் இருந்து தொங்கும் கிளிக்கூடுகள். காதுக்கு இனிமையாக் கொஞ்சும் கிளிப்பேச்சு நல்லாத்தான்யா அனுபவிச்சு இருக்காங்க, இல்லே? (நாம் பார்த்தப்ப ஊஞ்சல் பலகை மிஸ்ஸிங்:( சின்னதா ஒரு அலங்காரம் நடுவில் வச்சுருந்தாங்க)
இங்கிலாந்து அரசர் அஞ்சாம் ஜார்ஜின் இந்திய விஜயத்தின் போது, இங்கே நாட்டில் உள்ள எல்லா அரசர்களையும் சந்திக்க ஒரு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க 12 டிசம்பர் 1911 வது வருசம் தில்லியில். நடந்தது. ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனியா இருக்கைகள் தயாரிச்சு அவர்கள் பெயரெல்லாம் எழுதிவச்சுட்டாங்க. அந்தக் கூட்டத்தில் ஒரு மன்னரைத்தவிர மற்ற அனைவரும் கலந்துக்கிட்டாங்க. அந்த ஒருவர் ஆங்கில ஆதிக்கத்தை அடியோடு வெறுத்த மேவார் மன்னர் மஹாராணா ஃபடே சிங். கோபம் வந்துருக்கு கிங் ஜார்ஜ் அஞ்சுக்கு. அந்த நாற்காலியை மஹாராணாவுக்கு அனுப்பிவச்சுட்டார். அதையும் இங்கே காட்சிக்கு வச்சுருக்காங்க.

தொடரும்..............:--)

Monday, June 27, 2011

வா வா முத்தம் தா........((ராஜஸ்தான் பயணத்தொடர் 25)

திருவிழாவா? அப்ப நாளைக்குச் சட் புட்டுன்னு சுத்திப் பார்த்துட்டு நாலுமணிக்கு முன் அறைக்கு வந்துறணும். நன்றி சொல்லிட்டு மாடிக்குப்போய் அஞ்சு நிமிசம் வியூ பார்க்கலாமுன்னு படி ஏறினோம். போனால்.... ரூஃப் கார்டன் ரெஸ்டாரண்டு இருக்குன்னாங்களே..... அது! கூட்டமெல்லாம் இங்கேதான் இருக்கு. மூணு குடும்பம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இங்கேயும் நாலைஞ்சு மேசை போட்டு வச்சுருக்கு. ஒரு பக்கம் தரையில் மெத்தைகள் விரிச்சு சாய்மான திண்டுகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. அதுலே குழந்தைகள் உருண்டு விளையாட அப்பாக்கள் தீர்த்தமாடிண்டு இருக்கா.
அமைதியான சூழல். கண்ணெதிரே உதய்பூர் ஏரியில் இருக்கும் மாளிகை. இப்போ அது ஹொட்டேலா இருக்கு. தாஜ் ! நம்ம 'பாண்டு' படத்தில் எல்லாம் நடிச்சுருக்கே! விளக்கொளியில் மின்னும் ஏரி! இந்தப் பக்கம் கண்ணை ஓட்டினால் இப்போ நாம் போய்வந்த ஜெக்தீஷ் மந்திர். இன்னொரு பக்கம் சிட்டி பேலஸ்! அட! இவ்ளோ கிட்டேயா இருக்கு!!!!
அக்கம்பக்கத்து ஹவேலிகளின் சாப்பாட்டுக்கூடங்களில் கூட்டமே இல்லை. அப்போ..... நம்மதுதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்:-) போனதுக்கு இருக்கட்டுமுன்னு ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். ரூஃப்லே கார்டன் எங்கேன்னு தேடினேன். ஒரு பூந்தொட்டி வச்சுருக்காங்க நடுவில்:-)
மறுநாள் காலை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ரூஃப் டாப் வந்திட்டோம். அருமையான சூரிய உதயத்தின் பின்னணியில் கோவில் கோபுரம்! காலை நேர உணவுக்காக குரங்கன்ஸ் எதிர்சாரியில் கட்டிடம் கட்டிடமா பால்கனியில் தாவிப்போய்க்கிட்டு இருக்குதுகள். அதென்னவோ நம்ம பக்கம் வரலை. அதான் நாம் ஏற்கெனவே இருக்கோமேன்னு நினைப்போ? அழகா அணில் ஒன்னு வந்து ராத்திரி மக்கள்ஸ் விட்டுப்போன உணவு எதாவது கிடைக்குமான்னு பார்க்குது.


ஒரு கைடு வேணுமுன்னு சொல்லி வச்சுருந்தோம். அவரும் வந்து சேர்ந்தார். எட்டரை மணிக்கு ' மான்ஸூன் பேலஸ் ' பார்க்கப் போறோம். சஜ்ஜன்கட் என்னும் ஒரு மலையின் மேல் கட்டி வச்சுருக்காங்க. உள்ளே போய்ப் பார்க்க இருவது ரூ கட்டணம் தலைக்கு. மலை அடிவாரங்களிலும் சரிவுகளிலும் இருக்கும் வனத்தில் மிருகங்கள் ஏராளமா(!!!) இருக்காம். அதனால் மலைப்பாதைக்குப் போகும் வழியில் ரெண்டு பக்கமும் உயரமா சுவர் எழுப்பிக் கம்பி வேலி போட்டு வச்சுருக்காங்க.

அப்பப் பார்த்து நம்ம பிரதீப், வண்டிக்கு டீஸல் போடணுமுன்னு சொன்னதும். கைடு கன்ஷ்யாமுக்கு லேசா ஒரு எரிச்சல். ' இங்கே ஏது பெட்ரோல் பங்க்? திரும்ப சிட்டிப் பக்கம் போகணுமே'ன்னார். மேலே போயிட்டு திரும்பி வர எரிபொருள் இல்லைன்னா நமக்கும் கஷ்டமாச்சே! எவ்வளவு தூரம் மலை ஏறணுமுன்னு கேட்டால் 'அஞ்சு' கிலோமீட்டராம். அட! சின்ன மலைதனா?

ப்ரதீபுக்கு உயிர் வந்துச்சு. இன்னும் இருபது கிலோமீட்டருக்கு டீஸல் இருக்குன்னு மலை ஏற ஆரம்பிச்சார். மேலே இருந்து பார்க்கும்போது சுற்றிவர ஆரவல்லி மலைத்தொடர்கள், கீழே சுற்றிவர வறண்டு கிடக்கும் நிலங்கள், அங்கங்கே வயல்கள், பிச்சோலா ஏரியில் ஜொலிக்கும் கட்டிடங்கள் இப்படி கலவையாக் காட்சிகள் கண்ணுலே படுது. கொஞ்சம் காஞ்ச ஊருதான் போல:(

மதிள் சுவரைக் கடந்து முற்றத்துள்ளே கால் வச்சதும் கண்ணெதிரில் அஞ்சடுக்கில் கம்பீரமா நிக்குது இந்த வெள்ளை மாளிகை.
'Bபாதல்' பார்க்கத் தோதா இருக்குமுன்னு இங்கே சஜ்ஜன்சிங் மஹராஜா கட்டினது இது. இந்த ராஜஸ்தான் ராஜாக்களுக்கு வானசாஸ்த்திரமுன்னா என்ன அப்படி ஒரு பைத்தியமோ தெரியலை.....ராஜா சஜ்ஜன் சிங்கும் பருவகால மழைமேகம் சஞ்சரிப்பதையும் எப்போ எந்தப்பக்கம் அது கடந்துபோய் பொழியுதுன்னு பார்க்கவுமே இந்த மாளிகையைக் கட்டினாராம். முழுமையாக் கட்டி முடிக்குமுன்பு தன் இருபத்தி ஆறாவது வயசுலேயே சாமிகிட்டே போயிட்டார்:( பத்தே வருசம் அரியணையில் இருந்தாலும் லஞ்சம் ஊழல் ஒழிப்புன்னு பல நல்ல காரியங்கள் நடத்தி இருக்கார். வறண்டு கிடக்கும் நாட்டுக்குப் பல்வேறு வகையில் நீர் கொண்டுவர கால்வாய்கள் எல்லாம் வெட்ட ஏற்பாடு செஞ்சுருக்கார்.
இந்த குன்றுக்கு Bபன்ஸ்தாரான்னு ஒரு பெயர் இருக்கு. கடல் மட்டத்தில் இருந்து 944 உயரத்தில் அமைஞ்சது. 1883 லே கட்டிட வேலை ஆரம்பிச்சது. மேவார் அரச குடும்பம் கோடைகாலத்தை இங்கே வந்து இருந்து சூட்டில் இருந்து தப்பிச்சுக்குவாங்களாம். கோடை முடிஞ்சு மழைக்காலம் ஆரம்பிக்கும்போது மேகங்கள் நாலாபக்கமும் இந்த மாளிகையைச் சூழ்ந்துக்கிட்டு மழை பொழிய ஆரம்பிக்கும். அதைப் பார்த்து ரசிப்பதே ஒரு அற்புதமான அனுபவம். (மழைமேகம் = Bபாதல் (ஹிந்தி)
வா வா முத்தம் தா........ன்னதும்..... மேகம் ஓடிவந்து முத்தமிடும் மழைக்கால மாளிகை!
மழைத்தண்ணீர் சேகரிப்புக்குன்னு அந்தக் காலத்துலேயே அற்புதமா ஒரு ஏற்பாடு செஞ்சுருக்கார் மஹாராணா! ஒவ்வொரு கட்டிடங்களின் மாடிகளிலும் தண்ணீர் சேகரத்துக்கு ஒரு தொட்டி. இதுவே கட்டிடத்தையும் குளிர்ச்சியா ஆக்கும் ஏர்கண்டிஷனர் வேலையும் செய்யுது. இதெல்லாம் நிரம்பி வழியும் தண்ணீரை வீணாக்காமல் கட்டிடத்தின் அடியில் ஒரு பெரிய தொட்டி. கொள்ளளவு சொன்னால் நம்பமாட்டீங்க...... ஒரு லட்சத்து தொன்னுத்தி அஞ்சாயிரம். கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் லிட்டர்!!!!!
பளிங்குத்தரைகளும் பளிங்குத்தூண்களுமா இருக்கும் மாளிகையில் முன்பக்க ஹாலில் தரை முழுசும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாய்களை பதிச்சு இருக்காங்க. அந்தப் பக்கம் இருக்கும் இடத்தில் இருக்கைகளைப் போட்டுக்கிட்டு தண்ணீரைத் திறந்துவிட்டால் மாயாலோகமா இருந்துருக்கும்! மாடியில் ஹாலைப் பார்த்த உப்பரிகைகளில் இளவரசிகள் இருந்து சபையில் நடக்கும் நிகழ்சிகளை ரசித்திருக்கலாம்.
இப்ப இந்த ஹாலின் சுவர்களில் மஹாராணா சஜ்ஜன்சிங்கின் படமும் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் சித்திரங்களுமா இருக்கு. கீழே இருக்கும் காட்டில் வசிக்கும் பறவைகள் மிருகங்கள் பற்றிய விவரங்களும் அவைகளின் படங்களுமா சரணாலயத்தின் விஸ்தரிப்பு.
இந்த மாளிகையை மேவார் நாட்டு மக்களுக்கு அன்பளிப்பா ( உண்மையாவே) கொடுத்துட்டார் மேவார் மன்னர் மஹாராணா பக்வத்சிங்ஜி பஹதூர்! இது 1956 வது ஆண்டு. இப்ப இந்த மாளிகையை அரசாங்கம் பொறுப்பெடுத்து பழுது பார்த்துக்கிட்டு இருக்கு. ராத்திரிகளில் விளக்குப் போட்டு வைக்கிறாங்க. நம்ம ஹவேலியில் இருந்து பார்த்தால் மலைமுகட்டில் ஒரு லேசான ஜொலிப்புதான் போங்க!
ராஜ குடும்பத்தினர், பணியாளர்கள் எல்லோருக்கும் தனித்தனி இடங்களும், சின்னச்சின்ன உப்பரிகைகளும், கூடங்களும் முற்றங்களும், அறைகளுமா பரந்து விரிந்திருக்கும் மாளிகையில் தற்போது வசிப்பவர்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களே! அடிச்சதுப்பா அதிர்ஷ்டம்!!!! கேர் ஆஃப் மான்ஸூன் பேலஸ்ன்னு போட்டுக்கலாம்.

தொடரும்...............:-)

Friday, June 24, 2011

ஓம், ஜெய் ஜகதீஷ் ஹரே....((ராஜஸ்தான் பயணத்தொடர் 24)

அஞ்சு நிமிச நடையில் இருக்கே..... மெள்ளப் போய்வரலாம்தானேன்னு சிறுநடையில் ஏத்தமும் இறக்கமுமா இருக்கும் 'சந்துத்தெரு'வில் போறோம். அழகழகான ஓவியங்கள் விற்கும் கடைகள் அடுத்தடுத்து இருக்கு. சந்தில் போய் கீழிறங்குமிடத்தில் பெரிய பிரமாண்டமான இரும்பு வாணலிகள் அடுக்கடுக்காய் கட்டிப்போட்டுக் கிடக்குது. சந்து முடிவில் இடதுகைப்பக்கம் திரும்புனா கோவில். ஜக்தீஷ் மந்திர்! ( எல்லாம் மதியம் ஹவேலியைத் தேடி நாம் வந்த வழிதான்)

பளிங்குப்படிகள் முப்பத்தி ரெண்டு ஏறணும். மேல் படியில் ரெண்டு பக்கமும் சங்கிலி போட்டுக் கட்டிவச்ச ரெண்டு பெரிய பளிங்கு யானைகள், பக்கத்துக்கொன்னா துதிக்கையைத் தூக்கி வா வா''ன்னு கூப்புடுது.

நேரா பெரிய சுவர் தெரியும் முன் கதவுக்குள்ளே நுழையறோம். இது என்னடா குறுக்கில் ஒரு நந்தி ..... ன்னு சுவரைக் கடந்தால்...இந்த சுவர், கருடரின் சந்நிதியின் பின்பக்கச் சுவர்! பத்துப் படிகள் ஏறிப்போகும் உசரத்தில் மனுஷ்ய ரூபத்தில் முழிச்சுப் பார்க்கும் கண்களும் கூரான வளைஞ்ச கருடன் மூக்குமா பெரிய திருவடி இதோ ரெடி என்னும் நிலையில் சட்னு எழுந்துவரத் தோதா இருக்கார். பெரிய அளவு பித்தளைச் சிலை. இந்த கருடாழ்வார் மண்டபமே வேலைப்பாடுகளுடன் ரொம்ப அழகா இருக்கு!

ஜெய்ப்பூரில் ஹவா மஹலுக்கு அக்ராஸ் ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவில் பார்த்தோம் பாருங்க.... அதே டிஸைனில் இந்தக் கோவிலும் இருக்கு. இங்கேயும் கருடாழ்வார் சந்நிதிக்கு நேரெதிரா பத்துப்படிகள் ஏறி மூலவரை தரிசனம் செஞ்சுக்கணும். பெரிய திருவடியும் பெருமாளும் கண்ணோடு கண் நோக்க ஏதுவா ஒரே ' ஐ லெவலில்' இருக்காங்க.
நல்ல கறுப்புப் பளிங்குச்சிலையில் நாராயணனும் லக்ஷ்மியியும் ஒரு ஜொலிப்புடன் மின்ன கோவில் மணி ஓசை அந்தப் பகுதி முழுக்க ஓங்கி ஒலிக்க ஆரத்தி நடக்குது. பனிரெண்டு வெங்கலமணிகளை ஒரு கட்டையில் கோர்த்து மாட்டி உசரத்துலே பிடிப்பிச்சு இருக்காங்க. அதன் ஒரு பக்கம் இருக்கும் கயிற்றைப்பிடிச்சு ஆட்டும்போது பனிரெண்டும் குலுங்கிச் சிரிக்குது!!! ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரேன்னு வடக்கே பாடும் வழக்கமான ஆரத்திப் பாட்டு. நல்ல கூட்டம். தீர்த்தம் கிடைச்சது.

ஆரத்தி முடிஞ்சதும் பக்தர்கள் கூட்டம் அப்படியே கீழே அமர்ந்து பஜனை பாட ஆரம்பிச்சாங்க. நாங்களும் முன்மண்டபப் படிகளில் வந்து உட்கார்ந்துக்கிட்டோம். கீழே உட்கார என் முழங்கால் முட்டிக்கு பயம். தலையைத் திருப்பிப் பெரிய திருவடியையும் பெரும் ஆளையும் மாறி மாறிப் பார்க்க இதுதான் வசதி.

தரிசனம் முடிஞ்சு திரும்பி வரும் பக்தர்கள் மூலவருக்கு முதுகைக் காமிக்காமல் பின்னாலேயே நடந்து முதல் படி வந்ததும் அதில் முன்நெற்றி தொட தலை வச்சுப் படுத்துட்டு அப்படியே ஒவ்வொரு படியா பின்னாலேயே கால் வச்சு ஒவ்வொரு படிக்கும் முன் நெற்றியைத் தொடக் கொடுத்து இறங்கிப் போறாங்க. கடைசிப்படி வந்தவுடன் திரும்பி கருடாழ்வாருக்கு ஒரு பெரிய கும்பிடு. அப்புறம் படிகளின் இடப்பக்கம் ஒரு சின்ன மேடையில் இருக்கும் விஷ்ணு பாதங்களுக்கு குனிஞ்சு இன்னொரு தலை முட்டல். கூடுதல் செழிப்பான உடல்களும் கூட குனிஞ்சு கும்பிடும் நேர்த்தியைப் பார்த்தப்ப....... 'எனக்கு' பக்தியே இல்லைன்னு தோணுச்சு:(
மூலவருக்கு முதுகுப் பக்கம்!


கோவிலை வலம் வந்தோம். ஜெய்ப்பூர் கோவிலுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் கண்ணில் பட்டது. நாலு பக்கச் சுவரிலும் வரிசை வரிசையா அடுக்கடுக்காச் செதுக்குச் சிற்பங்கள். யானைகளும் குதிரைகளும், பசுக்களும் கன்றுகளும் பறவைகளும் பூக்களும் மனிதர்களும் தேவர்களுமா எதைச் சொல்ல, எதைவிட?



முதலை (வாய்) தண்ணீர்! கருவறையில் அபிஷேகம் ஆனதும் வெளிவரும் தீர்த்தத்துக்கு வாய்பிளந்து காத்திருக்கு:-)

அண்ணாந்து உச்சிக் கோபுரத்தைப் பார்க்கும்போது மூச்சு நின்னதும் உண்மை. மூணடுக்கு மாடியும் உச்சியில் நெடுநெடுன்னு போகும் கோபுரமும் சட்னு த்வார்கா கோவிலை நினைவுக்குக் கொண்டுவந்துச்சு. ஆமாம்.... அச்சு அசல் த்வார்க்கா தீஷ் கோவிலின் வடிவம்தான். அங்கே ஏழடுக்கு. இங்கே மினியேச்சர் போல மூணடுக்கு.
இந்தக் கோவிலுக்கு வயசு 350! மஹாராணா ஜெகத்சிங் 1651 இல் கட்டி இருக்கார், உச்சிக்கோபுரத்தின் உயரம் எழுபத்தி ஒன்பது அடி! அதில் படபடவென கொடி பறந்துக்கிட்டு இருக்கு! என்ன அழகான தூண்கள்! அந்தக் காலத்துலே இந்தக் கோவிலைக்கட்ட பதினைஞ்சு லட்சம் ரூபாய் செலவு. ரூபாய்க்குப் பத்து பவுன் இருந்துருக்குமோ என்னவோ? எனக்குத் தெரிஞ்சே எங்க பாட்டி சொல்லக் கேட்டுருக்கேன் ஒரு நூறு வருசம் முந்தி 1900 களில் பவுனு பத்து ரூபாய்ன்னு.
மூலவர் சந்நிதி இருக்கும் தனிக் கோவிலுக்கு வெளியில் நாம் வலம் வரும்போது மூலைக்கு ஒன்னா அளவான சின்னக் கூம்பு கோபுரத்துடன் நாலு தனிச் சந்நிதிகள். முதலில் புள்ளையார், அவருக்கு நேர் எதிரா அந்தப் பக்கம் சூரியபகவான் ( இந்த மஹாராணாக்கள் சூர்ய வம்சத்தினர்) அடுத்த பக்கம் துர்கையும் நேர் எதிரா சிவனுமா இருக்காங்க.
நாலு மூலைக்கோவிலில் இது சிவன் சந்நிதி.

தரிசனம் முடிஞ்சதுன்னு மெதுநடையில் ஹவேலிக்குப் போய்ச் சேர்ந்தோம். ராச்சாப்பாட்டுக்கு மாடிக்குப் போனால் அங்கே யாருமே இல்லை. நாம்தான் லேட்டா சாப்பிட வந்தோமோ, இல்லைன்னா ஊருக்கு முந்தி சாப்பிட வந்துட்டோமோன்னு ......மணி எட்டரை ஆச்சு. சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துட்டு ஜன்னல் வழியாத் தெரிஞ்ச ஏரியையும் மின்னும் விளக்குகளையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். மறுநாள் நமக்காக ஒரு கைடுக்கு ஏற்பாடு செஞ்சுருக்கார் ஓனர் ஹரிஷ். முடிஞ்சவரையில் சுத்திப் பார்த்துறணும்.

அப்போ ஒரு அம்மாவும் பொண்ணுமா வந்து நம்ம பக்கத்து டேபிளில் உக்கார்ந்தாங்க. ஒரு புன்னகையை அள்ளி வீசி 'ஹை' சொன்னேன். கொஞ்ச நேரத்தில் அந்தம்மா நீங்க சென்னையான்னு ஹிந்தியில் கேட்டாங்க. அட! தெரிஞ்சு போச்சா!!!! எப்படி?

வேலூர் சி எம் சியில் சிகிச்சைக்காக ஆறு மாசம் இருந்தாங்களாம்! சொந்த ஊர் குஜராத்தில் இருக்கு. த்டீர்னு கண்ணு தெரியாமப் போயிருச்சு.
பல மருத்துவமனைகளிலும் காமிச்சுருக்காங்க. என்னென்னவோ மருந்துகள். ஒன்னும் சரியாகலை. அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு.... வேலூர் போயிருக்காங்க. கண் பக்கத்துலே இருக்கும் நரம்பு ஒன்னு பாதிக்கப்பட்டி இருக்குன்னு அங்கே சிகிச்சை செஞ்சாங்களாம். பூரண குணமாகும்வரை ஆறுமாசம் தங்கி இருந்துருக்காங்க. இப்போ கண் நல்லாத் தெரியுது. பிரச்சனையே இல்லைன்னாங்க. படபடன்னு மகள் நம்ரதா சொன்ன விவரங்கள்:-)

கேக்க சந்தோஷமாவும் கொஞ்சம் பெருமையாவும்கூட இருந்துச்சு. நம்ம பக்கத்து ஆஸ்பத்திரிகளையும் கோவில்களையும் நல்லாவே தெரிஞ்சுவச்சுருக்காங்க வடக்கர்கள் பலர். இப்படித்தான் பாருங்க சண்டிகரில் நமக்குப் பல் வைத்தியம் செய்யும் டாக்டர் ஒருநாள் திடீர்னு கர்ப்ப ரக்ஷகாம்பாள் கோவில் சென்னையில் இருந்து எவ்ளோ தூரமுன்னு கேட்டாங்க. சரியாத் தெரியலை. கும்பகோணத்துக்குப் பக்கம் இருக்குன்னு நினைக்கிறேன். பார்த்துச் சொல்றேன்னேன். அவுங்களுக்கு கன்ஸீவ் பண்ணுவதில் எதோ பிரச்சனை இருந்து, யாரோ சொன்னாங்கன்னு வேண்டிக்கிட்டாங்களாம். இப்போ ரெண்டரை வயசு Bபவ்யா வீட்டை அதகளம் பண்ணிக்கிட்டு இருக்காள்:-)

நம்ரதா என்ற பெயரில் ஒரு நடிகைகூட இருக்காங்களேன்னேன். இந்த நம்ரதா டூரிஸம் படிக்கும் மாணவி. கடைசி வருசம். ஒரு அஸைன்மெண்டுக்காக உதய்பூர் வந்துருக்காங்க ரெண்டு மூணு நாளைக்கு. பண்டிகை வருதேன்னு அம்மாவும் கூட வந்தாங்களாம். நம்ம ஹவேலியில்தான் அறை எடுத்துருக்காங்க.

நாளைக்கு இந்நேரம் கால் வைக்க இடம் இருக்காது இந்தப் படித்துறையில்' சொல்லி லால்காட்டைக் கைநீட்டிக் காமிச்சாங்க.. என்ன பண்டிகை? வஸந்த நவராத்ரியா? அதுவும்தான். ஆனா இது வேற திருவிழா. கங்கோர் ஃபெஸ்டிவல். அது இங்கே இந்த Gகாட்டில்தான் நடக்கும். மாலை நாலுமணிக்கே இந்தப் பக்கம் போக்குவரத்தை எல்லாம் நிறுத்திடுவாங்க!

ஆஹா.... நமக்குத் தெரியாமல் போச்சேன்னதுக்கு கைப்பையில் வச்சுருந்த ஒரு நோட்டீஸை எடுத்துக் கொடுத்தாங்க. அட! பாருங்களேன்..... நாம் பாட்டுக்கு தேமேன்னு இருந்தாலும் எப்படி விவரங்கள் வந்து விழுதுன்னு!!!!

திடீர்னு அந்தம்மா.... நாங்கள் ப்ராமின்ஸ்ன்னாங்க. ஓஹோ... அப்படியான்னு தலையை ஆட்டுனோம். பதிலுக்கு நாம் யாருன்னு சொல்வோமுன்னு எதிர்பார்த்தாங்கன்னு முகத்தில் தெரிஞ்சது:-) வேலூர்லே இதையே சொல்லி இருப்பாங்களோ? அப்போ என்ன ரியாக்ஷன் கிடைச்சிருக்குமுன்னு எனக்கு யோசனை. என்னவோ போங்க....

தொடரும்.....................:-)


Wednesday, June 22, 2011

குதிரையின் தும்பிக்கை..........(ராஜஸ்தான் பயணத்தொடர் 23)

மஹாராணா உதய்சிங் அவர்களுக்குச் சின்னவயசுலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பதினெட்டு வயசுலே அவருக்கு பிள்ளையா ப்ரதாப் சிங் பிறந்தார் (1540) அதுக்குப்பிறகு சிலபல மனைவிகள் மூலம் இருபத்தி அஞ்சு மகன்களைப் பெற்றெடுத்துருக்கார். முதல் மகனாகப் பிறந்ததால் பிரதாப் சிங் பட்டத்து இளவரசர் ஆனார். உதய்பூரை தலைநகரா மாற்றிய நாலே வருசத்தில் (1572) , தந்தை இறந்துட்டார். முப்பத்தி இரண்டு வயசில் ராணா பிரதாப் சிங் பட்டத்துக்கு வந்தார். அதுலேயும் ஒரு சின்ன தகராறு ராமாயணக்கதை மாதிரி ஆகிப்போச்சு.

உதய்சிங் மஹாராஜாவின் பல மனைவிகளில் அவருக்குப் பிரியமான மனைவிக்குப் பிறந்த ஜக்மல் என்பவரை தனக்குப்பிறகு நாட்டை ஆளணுமுன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க அந்த ஜக்மலின் தாய் ராணி படியானி(Rani Bhatiyani). (ஓஹோ.... அதான் உதய்பூரில் ஜக் மந்திர், ஜக் நிவாஸ் இப்படி ஜக் ஜக்கா இருக்கோ!)

இந்த ஜக்மல் தானே ராஜாவா ஆகணுமுன்னு பிடிவாதமா இருக்கார். மந்திரி பிரதானிகள் எல்லாம் ஆலோசனை செய்து, ராணா ப்ரதாப்சிங்தான் அரசுரிமை ஏற்றெடுக்கணுமுன்னு வாக்குவாதம் செஞ்சு ஒரு வழியா ப்ரதாப் சிங் பட்டம் சூட்டிக்கிட்டார். இதனால் எரிச்சலான ஜக்மல், நேரா அஜ்மெர் போய் எதிரியான அக்பரிடம் போய் சேர்ந்துக்கிட்டார். இந்த துரோகத்துக்குப் பரிசா குறிப்பிட்ட இடத்துக்கு (ஜஹஸ்பூர்) இவரை ஜாகீர்தாரா ஆக்கினாராம் அக்பர்.

முகலாயர்களுக்கு இந்த மேவாரைப் பிடிப்பதே ஒரு லட்சியமா ஆகிப்போச்சு. மற்ற ராஜபுத்திர சமஸ்தானங்கள் முகலாயரோடு வம்பு எதுக்குன்னு இணக்கமாப் போயிட்டாலும் மேவார் சமஸ்தானம் மட்டும் கடைசிவரை பிடி கொடுக்காமலே இருக்கு. எங்களோடு இணைஞ்சுக்குங்கன்னு ஆறு தடவைகள் தூதுவர்களை அனுப்பிப் பார்த்தார் அக்பர் சக்ரவர்த்தி. ஒன்னும் சரியாகலைன்னு ஆனப்போது தன்னுடைய மச்சினரும் தளபதியுமான ராஜா மான்சிங்கையும் தூது அனுப்பினார். ராஜா மான்சிங்கின் சகோதரி அக்பரின் மனைவிகளில் ஒருவர்.

இனி போர் என்று முடிவு செஞ்சு மேவார் போகும் வழியைக் கைப்பற்றித் தன் படைகளை நிரப்பினார் அக்பர். எம்பதாயிரம் வீரர்கள். ராணாவின் படையில் இருபதாயிரம் வீரர்கள்தான். நாலில் ஒரு பங்கு! அக்பரின் படையைத் தலைமைதாங்கி நடத்தியது ராஜா மான்சிங்.

ராஜா மான்சிங் யானை மேலே இருந்து சண்டை போடறார். நம்ம பிரதாப் சிங் குதிரையில் இருந்து. இந்தக் குதிரைதான் மஹாராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை. 'சேதக்' என்று பெயர்.. இதோட முகத்துலே யானைத் தும்பிக்கை போல ஒன்னு செஞ்சு மாட்டி விட்டுருக்காங்க. யானை இன்னொரு யானையைப் பார்த்தால் முதலில் ஒன்னும் செய்யாதாம். அதனால் தந்திரமா இப்படி ஒரு ஏற்பாடு.
ராஜா மான்சிங்கை வாளால் தாக்கும்போது அவர் சட்னு குனிஞ்சதால் யானைப்பாகன் கொல்லப்பட்டார். ஆனால் முகலாயர்கள் இன்னொரு தந்திரம் செஞ்சுட்டாங்க. யானையின் துதிக்கையில் வாளைக் கட்டி வச்சுருந்தாங்க. அது குதிரையின் அடிவயித்தைக் கிழிச்சுருச்சு. அதுக்குப்பிறகு மேவார் மன்னரை முகலாயப்படைகள் சூழ்ந்துக்கிட்டாங்க. அந்த சமயம் பார்த்து மன்னரின் சகோதரர் ஷக்தி சிங் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன் படுத்திக்கிட்டு சேதக் மன்னரோடு தப்பி ரெண்டு மைல் தூரம் ஓடி அங்கிருந்த ஆற்றைத் தாவிக் கடந்து மன்னரைக் காப்பாற்றிய நிம்மதியோடு கீழே விழுந்து உயிரை விட்டுச்சு:(
இந்தப் போர் ஆரம்பிச்சு நாலே மணி நேரத்தில் முடிவுக்கு வந்துருச்சு. இந்த விவரங்களையெல்லாம் மோதி மாங்ரி ம்யூஸியத்தில் விளக்கப்படங்களோடு வச்சுருக்காங்க. சண்டை நடந்த ஹல்டிகாட்டி (Haldighati)என்ற இடத்தையும் பெரிய அளவில் மாடலாச் செஞ்சு வச்சுருக்காங்க. சித்தூர் கோட்டை மாடலும் இருக்கு. இந்த சித்தூரில்தான் இதே ராஜவம்சத்து மருமகளா வந்தவங்க மீராபாய். ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு பெரிய ஹாலில் கண்ணாடிச் சட்டத்துக்குள் இருக்கு!

மோதி மாங்ரியில் உள்ளே போக சின்னக் கட்டணம் ஒன்னு வசூலிக்கிறாங்க. ஆட்டோவுக்கு தனி கட்டணம். கேட்டுக்குள்ளே நுழைஞ்சு போகும்போது ஏதோ ஒரு மலைப்பாதைக் காட்டுக்குள்ளே போவது போல இருக்கு. கொஞ்சம் உயரமான இடம் இது. போகும் வழியிலே இந்த ம்யூஸியம் இருக்கு. அதையும் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போனால் இன்னும் கொஞ்சம் உயரமான பகுதியில் அழகான தோட்டம். நடுவில் செயற்கை நீரூற்று. நீரூற்றைப் பார்த்த மாதிரி சேதக் மேல் அமர்ந்த நிலையில் மஹாராணா ப்ரதாப் சிங்கின் வெண்கலச்சிலை.

பீடத்தின் நாலு பக்கமும் சுருக்கமான சரித்திரம் படங்களாக! சூரிய வம்சம், ராணாவின் வாழ்நாள், ஹல்திகாட்டி போர். சேதக் உயிரைவிடுவது இப்படி!

அங்கே இருந்து சுற்றிவரக் கண்ணை ஓட்டினால் ஒரு பக்கம் ஃபடே ஸாகர், இந்தப் பக்கம் குன்றுகள் மரங்கள் இப்படிப் பசுமையாவே இருக்கு.
மஹாராணாவின் நினைவிடத்துலே கேடயம் டிஸைனோடு ரெய்லிங் எனக்கு ரொம்பப் பிடிச்சது..

ராஜஸ்தானி பாரம்பரிய உடைகளைத் தொங்கவிட்ட ஒரு ஸ்டுடியோ ஒன்னு இருக்கு இங்கே. அந்த உடைகளை அணிஞ்சுக்கிட்டுப் படம் எடுத்துக்கலாம். நாம் சுத்திப் பார்த்து முடிக்குமுன் படம் ரெடி ஆகிருமாம். கோபாலுக்கு ஏனோ ஆர்வம் இல்லை:( பெரிய முண்டாசு ஒன்னு தலையில் இருந்தால் நல்லா இருக்காது?

அடுத்த இடமா நம்மை ஸஹலியோன் கி பாடி ( Sahalion ki bari) என்ற தோட்டத்துக்குக் கொண்டு போனார் ஆட்டோக்காரர் ரஹ்மான். உள்ளே போக நுழைவுக் கட்டணம் தலைக்கு அஞ்சு.
மஹாராணா சங்ரம்சிங் அவர்களின் நாற்பத்தியெட்டு மனைவியருக்காகக் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் கல்யாணப்பெண் கூடவே சில தோழியரும் தஹேஜ் வகையில்( வரதட்சிணை) வந்துருவாங்களாம். அப்போ நாப்பத்தியெட்டுக்குக் கூடவே இன்னும் எத்தனை பேர் அந்தப்புரத்தில் இருந்துருப்பாங்கன்னு பாருங்க. அவுங்க எல்லோரும் மாலை நேரத்தில் ஓய்வா உலாத்த இந்தத் தோட்டத்தை அரசர் கட்டிவிட்டுருக்கார். (அங்கேயே எப்படியாவது அடிச்சுக்குங்க. என் வேலையில் குறுக்கே வரவேணாம்!)

இல்லையில்லை.அவருக்கு ஒரே ராணிதான். ராணியின் கூட வந்தவங்க இந்த 48 தோழிகள் என்றும் சிலர் சொல்றாங்க.
பெரிய கேட் இருக்கும் நுழைவு வாசலைக் கடந்தால் தரையில் நீரூற்று! கடந்து போனால் அருமையான புல்வெளிகளும் விசிறி வாழையும், அசோகமும், மா மரங்களுமா ஒரு பெரிய வளாகம். சுற்றுலா மக்களுக்காக நாலைஞ்சு மேசை போட்டு கலைப் பொருட்கள் விற்பனை:(

இன்னும் நாலு படியேறி உள்ளே போனால் நீராழி மண்டபம். அடிக்குற வெய்யிலுக்கு பார்க்கவே ஜில்லுன்னு இருக்கு. குளத்தைச் சுத்தி பெரிய நடைபாதைகள் இருக்கைகள், நாலு மூலைக்கும் சின்னதா நாலு மண்டபங்கள், தொட்டியில் செடிகள்னு அழகு!
அழகு முழுவதையும் ரசிக்க விடாமல் தலைசுற்றல் வந்துச்சு எனக்கு. ப்ரெஷர் மாத்திரை ஒழுங்காத்தானே எடுத்துக்கறேன். இது என்னடா வம்பு?
படிக்கட்டில் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்துட்டு ஹவேலிக்குத் திரும்பிடலாமுன்னு ரெஹ்மானிடம் சொன்னதும் அவருக்கு லேசான அதிர்ச்சி.

ஹவேலிக்கு வந்ததும், பேசின தொகை முன்னூறைக் கொடுத்தோம். அவர் அதுலே இருந்து நூறை நமக்கு நீட்டுறார். 'இருக்கட்டும். நாங்கதானே போதும்னுன்னு வந்தோம். நீங்க வச்சுக்குங்க'ன்னதும் வேணாம் என்பது போல மனசில்லா மனசோடு கையை நீட்டிக்கிட்டே இருந்தார். பாவம். நல்ல மனுஷர். இந்தக் காலத்திலும் இப்படி நேர்மை இன்னும் சிலரிடத்தில் இருக்கு பாருங்க. நாளைக்கு பாக்கி இடங்களைப் பார்க்கணுமுன்னா சொல்லுங்க. நான் கூட்டிப்போய் காமிக்கிறேன்னார்!

அறைக்குப்போய் இன்னொரு மாத்திரையைப் போட்டிக்கிட்டுக் கண்ணைமூடி ஒரு மணி நேரம் படுத்திருந்தேன். கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. ஜன்னலில் தெரிஞ்ச காட்சி மனசை அப்படியே மயக்குச்சு. விளக்கொளியில் ஏரி, அதிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் ஜொலிக்குது.

தொடரும்.........................:-)