Wednesday, July 06, 2011

காட்டுவழி போறவளே........? ((ராஜஸ்தான் பயணத்தொடர் 29)

இதென்ன இப்படிக் குறுகலா இருக்கும் மலைப்பாதைக் காட்டுக்குள்ளே மாட்டிக்கிட்டோமே..... இந்த வழி சரியானதுதானா? யார் கிட்டேயாவது கேக்கலாமுன்னா....குரங்குகளைத் தவிர வேறொன்னும் இல்லையே!
எதிரில் வந்த வண்டியை நிறுத்திக் குசலம் விசாரிச்ச குரங்கன்மார்:-)

இன்னிக்குக் காலையில் ஏழரைக்கு ஊரைவிட்டுக் கிளம்பறோம். அவ்வளவு சீக்கிரத்தில் ஹவேலி ஓனர் ஹரீஷ் வரமாட்டாரேன்னு நேத்து இரவே அவர்கிட்டே பேசுனப்ப, நீங்க டின்னரை முடிச்ச பிறகு எல்லாக் கணக்கும் பார்த்து பில் போட்டுடறேன்னார். அப்புறம் அவர்கிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தப்ப, ரணக்பூர் எங்கே இருக்குன்னேன்? அவர் கண்களில் அப்படியே ஆயிரம் வாட் பல்ப்! நாளைக்கு நீங்க அந்த ஊர் வழியாவே ஜோத்பூர் போகலாம் என்றார். அங்கே ஒரு ஜெயின் கோவில் இருக்காமேன்னு வாய் வார்த்தை வெளிவருமுன்.......... இன்னொரு பல்ப் எரிஞ்சது:-) இதோ பாருங்கன்னு அவரோட லேப்டாப்பில் இருக்கும் கோவில் படங்களைக் காட்டுனார். இவர் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்தானாம். குறைஞ்சது மாசம் ஒரு முறையாவது போயிட்டு வந்துருவாராம். அவரோட குரு அங்கே அந்தக் கோவிலில்தான் வாசம் என்றார். அந்தப் படங்களைப் பார்த்த வினாடியில் பைத்தியமானேன்.
மேல்மாடிக்குப் போய் உதய்பூர் அட் நைட்ன்னு டின்னரை முடிச்சோம். கணக்கு வழக்கை செட்டில் செஞ்சுட்டு படுக்கையில் விழுமுன் மடிக்கணினியில் இந்த ஏரியாவை வலை மேய்ஞ்சால்........ எதாவது விட்டுட்டோமான்னு தெரிஞ்சுக்கத்தான்......... நிறையதான் விட்டுப்போயிருக்கு:( இன்னொரு முறை பயணம் (முடிஞ்சால்) வரத்தான் வேணும்.
காலையில் ரூஃப்டாப் போய் சூரியோதயம், வீடுவீடாத் தாவிப்போகும் குரங்கன்மார், ஹலோ சொல்ல வந்த அணில்கள், பிச்சோலாவில் மிதக்கும் மாளிகைகள் இப்படி எல்லாத்துக்கும் 'போயிட்டு வாரேன்' சொல்லிட்டு டோஸ்ட்டும் லஸ்ஸியுமா ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டோம். பயணத்துலே காஃபி வாயில் வைக்க வழங்கறதில்லை, சென்னையைத் தவிர!

ஒரு தொன்னுத்தியாறு கிலோ மீட்டர் பயணம். நாதோத்வாரா வழியாகக்கூட போகலாம். நப்பாசை இருந்துச்சு 'அவனை' இப்பவாவது பார்க்கலாமேன்னு....... ஆனால் மீண்டும் முறுக்கிக்கிட்டா.....

கோவில் கோபுரம் ஒன்னு ஒரு வளைவில் கண்ணுலே பட்டதும்தான் மனசுக்கு நிம்மதி ஆச்சு. சின்னதா ஒரு கோவில் சூரியனுக்கு! மேவார் நாட்டு மன்னர்கள் சூர்யவம்சிகள் தான்! அநேகமா ஒரு ஐநூற்றி அம்பது வயசு இருக்கலாம் இந்தக் கோவிலுக்கு. ஆனால் நாம் தேடிவந்த கோவில் இது இல்லையே! விசாரிச்சதில் வழி கிடைச்சது. அதோ அந்தப் பக்கமுன்னு கைகாட்டுன திசையில் அடர்த்தியான மரங்கள். இன்னும் ஒரு ரெண்டு நிமிச ஓட்டம்.
போதும்ப்பா...இந்த மூச்சடைப்பு! இப்படி எத்தனை முறைதான் வாய் பிளந்து நிற்பது? பெரிய மதிள் சுவருக்குள் தோட்டம், விடுதிகள் எல்லாம் கடந்து போனால் அடுக்கடுக்கான சிகரங்கள் ஏகப்பட்டது ஒரே இடத்தில் குமிஞ்சு கிடக்க ப்ரமாண்டமா கண் எதிரில் கோவில்! என்ன ஏதுன்னு கவனிக்காமத் தடதடன்னு படியேறி உள்ளே நுழைஞ்சேன். கண்ணைக் கட்டி ஸ்தம்பக் காட்டில் விட்டால்............... ஹைய்யோ....... 1444 தூண்கள்! உயரமும் பருமனும் ,மட்டுமே ஒன்னுபோல. அதில் செதுக்கிய சிற்பங்கள்..... ஒன்னுபோல ரெண்டில்லை!
நாங்க போன நேரம் மூலவருக்குப் பூஜை நடந்துக்கிட்டு இருக்கு! ஜெயின் மதக் கோவில் இது. மூலவர் ரிஷப மஹாதேவ். சமணமதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலானவர். கோசலை நாட்டின் அயோத்தியில் பிறந்த அரசர் இந்த ரிஷபதேவர். மக்களுக்கு நல்லது செய்துவந்தார். குடும்ப வாழ்க்கையில் கடைப் பிடிக்கவேண்டியவைகள், சமூகத்துக்கான நியமங்கள், நுண்கலைகளைப் பேணி வளர்த்தல், குடிமக்கள் கடமைகள் இப்படி எல்லாத்தையும் நிர்ணயிச்சு ஒழுக்கமும் ஒழுங்குமான வாழ்க்கையை நடத்தியவர். இந்த பூமி கர்மபூமியாக இருக்கணும், போக பூமியா இதை ஆக்கிடக்கூடாதுன்னு உபதேசிச்சவர். காலக்கிரமத்தில் தன்னுடைய மகன் பரத் என்ற இளவரசரை நாட்டுக்கு அரசனாக்கிட்டு துறவறம் பூண்டார். சமண மதத்துக்கான நியமங்களை ஏற்படுத்தியவர் இவரே.
துறவியாகி நெடுநாள் தவம் செய்து ஞானம் அடைஞ்சு தர்மத்தையும் சத்தியத்தையும் மக்களுக்கு உபதேசிச்சார். கொல்லாமை, பொய் சொல்லாமை, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் எல்லா மக்களும் இயற்கையோடு இணைஞ்சு வாழ்வது என்று பல நல்ல விஷயங்களை போதித்தார். அதன்படியே வாழ்ந்து(ம்) காட்டினார்.

இவரைப் பின்பற்றி வளர்ந்த சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர்தான் மகாவீரர். இவர் ஜெயந்திக்கு மத்திய அரசு விடுமுறை கொடுப்பதால் குறைஞ்சபட்சம் இவர் பெயர் மக்களுக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பு உண்டு.

பதினைஞ்சாம் நூற்றாண்டுகளின் நடுவில் ராணா கும்பா என்றவர் மேவார் நாட்டின் அரசராக ஆட்சி செஞ்சுக்கிட்டு இருக்கார். அவரோட அமைச்சர்களா தர்னாஷா, ரத்னாஷான்னு ரெண்டு அண்ணந்தம்பிகள் இருக்காங்க. இவுங்க ஜைன மதத்தைச் சேர்ந்த குரு ஆச்சார்ய சோமசுந்தர்சுரீஷ்வர்ஜி அவர்களை தங்கள் குருவாக ஏற்று வழிபட்டு வாழறாங்க. அப்போதான் குருஜியின் வேண்டுகோளின்படி ஒரு கோவில் கட்டும் எண்ணம் வந்துருக்கு.

மஹாராஜாகிட்டே அனுமதியும் கோவிலுக்கான இடமும் கேட்டாங்க. ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு பெரிய இடத்தைக் கொடுத்த அரசர், கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு ஊரையும் நிர்மாணிக்கச் சொல்றார். கூடவே வேண்டிய பொருளுதவியும். எப்படியும் கோவில் வேலைகளுக்காக வரும் தொழிலாளர்கள் தங்கவும் ஒரு ஊர் வேண்டித்தானே இருக்கு.

இந்த ஊருக்கு ராணாப்பூர்ன்னு பெயர் வந்து, ரான்பூர், ரணிக்பூர் இப்படியெல்லாம் மருவி இப்போ ரணக்பூர் ஆகி இருக்கு. ராணா கும்பாவும் தன் பங்குக்கு அங்கே தன் குலதெய்வமான சூரியனுக்கு ஒரு கோவில் கட்டி வச்சார். இதைத்தான் நாம் வரும்வழியில் பார்த்தோம்.

கோவில் குறிப்புகள் சொல்லுது, கட்டுமான வேலைக்கு 2500 ஆட்கள் எடுத்துருக்காங்க. மொத்தம் ஏழு நிலைக்கட்டிடம் என்றதால் கோபுரங்கள் விதானங்கள் கனத்தைத் தாங்கணுமுன்னு அந்த ஆயிரத்து நானூத்தி நாப்பத்துநாலு தூண்கள் வச்சுருக்காங்க. அதிக ஆழமான அஸ்திவாரம் தோண்டவே ஏகப்பட்ட மாசங்கள் ஆகி இருக்கு.

தலைமை ஸ்தபதி வேலைக்கு யாரை ஏற்பாடு செய்வதுன்னு ரொம்பக் குழப்பம். தர்னாஷாவின் மனசுலே உருவாகி இருந்த கோவிலை அவர் விளக்கிச் சொல்லி மாடல், ட்ராயிங் எல்லாம் வரைஞ்சு வரச்சொல்றார். நூற்றுக்கணக்கான ஆட்கள் வந்தாலும் யாராலுமே இவர் நினைச்சதை மாடலாக் கொண்டு வர முடியலை' கடைசியில் கடவுளே அனுப்புன மாதிரி தீபக் என்றவர் ஒரு மாடலை வரைஞ்சு கொண்டு வந்தார். பார்த்ததும் தர்னாஷாவுக்குப் பிடிச்சுப்போச்சு. வந்தவரும் கிடைக்கும் பொருளை பெருசா நினைக்காமல் கலைக்காகவே உயிர் கொடுக்கும் நபர். நல்ல காம்பினேஷன் கிடைச்சதும் ஆச்சார்யா சோமசுந்தர்சுரீஷ்வர்ஜியின் ஆசிகளுடன் வேலையை ஆரம்பிச்சாங்க.

அம்பது வருசம் இடைவிடாது கோவில் பணிகள் நடந்தும் மூணு நிலை மட்டுமே இதுவரை கட்டி இருக்காங்க. தர்னாஷாவுக்கும் குருஜிக்குமே இப்போ அம்பது வயசு கூடி இருக்கு. இன்னும் எவ்வளவு நாள் வாழ்க்கை இருக்குன்னு தெரியாத நிலையில் இதோடு வேலையை முடிச்சுக்கிட்டு கும்பாபிஷேகம் நடத்திடலாமுன்னு தீர்மானிச்சாங்க.
அதுக்குப்பிறகு 'மிச்சம்மீதி இருக்கும் வேலைகளை கவனிச்சு முடிச்சு வைக்கவேண்டியது உன் பொறுப்பு' ன்னு தன்னுடைய அண்ணன் ரத்னாஷாவிடம் சொல்லி வச்ச தர்னாஷா, கொஞ்ச நாளில் இறைவனடி சேர்ந்தார். மீதி வேலைகளை முடிக்கவே பத்து வருசங்கள் ஆச்சாம் அண்ணனுக்கு.

தொடரும்.................:-)

PINகுறிப்பு: பதிவின் நீளம் கருதி ரெண்டு பாகம் வருது. ரொம்பச் சுருக்கினால் இது நான் இந்தக் கோவிலுக்குச் செய்யும் அநீதி:-)

25 comments:

said...

//துறவியாகி நெடுநாள் தவம் செய்து ஞானம் அடைஞ்சு தர்மத்தையும் சத்தியத்தையும் மக்களுக்கு உபதேசிச்சார். கொல்லாமை, பொய் சொல்லாமை, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் எல்லா மக்களும் இயற்கையோடு இணைஞ்சு வாழ்வது என்று பல நல்ல விஷயங்களை போதித்தார். அதன்படியே வாழ்ந்து(ம்) காட்டி//

நல்ல கருத்துக்கள்
அருமையான படங்கள்
புதிய தகவல்கள் என
அற்புதமான பதிவு
நன்றி

said...

கோயிலின் அழகு அற்புதமா இருக்குங்க. தகவல்களும் படங்களும் அருமை.

said...

இத்தனை அழகான இடங்களா னு வியக்க வைக்கிறது எழுத்தும் படமும்..

said...

குரங்கன்மார், ஹலோ சொல்ல வந்த அணில்கள், பிச்சோலாவில் மிதக்கும் மாளிகைகள் இப்படி எல்லாத்துக்கும் 'போயிட்டு வாரேன்' சொல்லிட்டு//

விட்டா வீட்டுக்கு கூட்டிட்டே வருவீங்க..:)

said...

//பதிவின் நீளம் கருதி ரெண்டு பாகம் வருது. ரொம்பச் சுருக்கினால் இது நான் இந்தக் கோவிலுக்குச் செய்யும் அநீதி:-(//

படங்களைப் பார்க்கும்போதே மேலே சொல்லி இருப்பது உண்மையெனவே தோன்றுகிறது....

படங்களும் உங்கள் விளக்கங்களும் அருமை.... தொடருங்கள்...

said...

அருமையான பதிவு.
நிறைய படங்கள்.
நிறைய தகவல்கள்.
நன்றி அம்மா.

said...

அழகிய கோபுரங்களுடன் விரிந்து நிற்கும் கோயில்கட்டிடம் மலைக்கத்தான் வைக்கிறது.

said...

breathtaking photos!
இந்தியாவில் இதெல்லாம் இருக்குனு உங்க புண்ணியத்துல தெரிஞ்சுக்குறோம். விவரங்களுக்கு ரொம்ப நன்றி.

said...

அடடா! நாங்க இன்னும் இங்கே போகலியே துளசிம்மா!!

said...

வணக்கம் துளசி மேடம்.நான் பதிவுகளுக்கு புதியவள். ரொம்ப நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.இப்பொழுதுதான் கருத்திட தைரியம் வந்திருக்கிறது.
உங்கள் பயண கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. புது புது தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது.
நன்றி.

said...

\\இப்படி எத்தனை முறைதான் வாய் பிளந்து நிற்பது? \\

நானும் படங்களை பார்த்துட்டு அப்படி தான் இருக்கேன் டீச்சர் ;)

என்னமா உழைச்சிருக்காங்க !!!

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

எல்லாம் 'நான் பெற்ற இன்பம்' வகை:-)

ஊக்கத்துக்கு நன்றி.

said...

வாங்க கோவை2தில்லி.

கூடவே வர்றீங்க! நன்றிப்பா.

said...

வாங்க சாந்தி.

கண்ணுக்குக் கிடைச்ச விருந்தை உங்களோடெல்லாம் பகிர்ந்து கொள்ளணும் என்ற பேராசைதான்ப்பா:-))))

வீட்டுக்கு மட்டும் கூட்டிவரும் வசதி இருந்தா ஒரு கோவிலைக் கூட்டிவரணும். எங்கூரில்தான் பாரம்பரிய அழகோடு கோயில் ஒன்னும் இல்லையே:(

said...

வாங்க வெங்கட்.

நிறைய சொல்லவேண்டி இருக்கு. அதான்......

நாளைக்கு வெளியிடப்போகும் அடுத்த பதிவைக் கட்டாயம் 'பாருங்க'!!!

said...

வாங்க ரத்னவேல்.

நேஷனல் ஹைவே இருக்கும்போது இந்தக் காட்டுவழியில் போய் கண்டுக்கிடற ஆட்கள் குறைவுதான். அதான் நம்ம எல்லோருக்கும் இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பது தெரியணுமேன்னு சிலவரிகள் எழுதினேன்:-)

said...

வாங்க மாதேவி.

கும்மாச்சி கும்மாச்சியாக் கணக்கில்லாத கோபுரங்கள்!! அதுவே ஒரு தனி அழகுதான்.

said...

வாங்க அப்பாதுரை.

இந்தியாவில் அபூர்வமான விஷயங்கள் ஏகப்பட்டது கொட்டிக் கிடக்கு. இதுவரை நான் பார்த்தது ஒரு சதவீதம் இருக்கலாம்.

நமக்குத்தான் நேரமும் இல்லை, வசதியும் இல்லை:(

said...

வாங்க அருணா.

சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்கப்பா.

மதியம் அங்கே இருக்கறமாதிரி போங்க.
போயிட்டு வந்து எழுதுங்க.

said...

வாங்க ராம்வி.

வணக்கம். புதுவரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருது. தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

உங்க பக்கத்தை இப்பத்தான் பார்த்தேன். அழகான படங்களோடு அருமையா இருக்கு. இனிய பாராட்டுகள்.

said...

வாங்க கோபி.

வாய் வலிக்கு மருந்து ஏதும் உண்டா:-)))))))

said...

கோயில்களோட படங்களைப்பார்க்கும்போதே பிரமிப்பில் மூச்சடைக்குது.. நேரில் பார்த்த உங்களுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் :-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

பூர்வ ஜென்ம புண்ணியம் ஏதோ ஒன்னு அங்கே நம்மைக் கூட்டிப்போயிருக்குன்னு நம்பறேன்!

said...

//இதென்ன இப்படிக் குறுகலா இருக்கும் மலைப்பாதைக் காட்டுக்குள்ளே மாட்டிக்கிட்டோமே..... இந்த வழி சரியானதுதானா? யார் கிட்டேயாவது கேக்கலாமுன்னா....குரங்குகளைத் தவிர வேறொன்னும் இல்லையே! எதிரில் வந்த வண்டியை நிறுத்திக் குசலம் விசாரிச்ச குரங்கன்மார்:-)

இன்னிக்குக் காலையில் ஏழரைக்கு ஊரைவிட்டுக் கிளம்பறோம். //

ஹி ஹி ஹி நீங்க கிளம்புன நேரம் சரி இல்லை. ஏழரை அப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு :-))

சரி அதெல்லாம் இருக்கட்டும் நீங்க RAMVI பயமுறுத்தற அளவுக்கு என்ன எழுதினீங்க.. பாருங்க பயந்து போய் இவ்வளோ நாள் கமெண்ட் போட யோசித்துட்டு இருந்து இருக்காங்க :-)))

said...

வாங்க கிரி.

ஏழரை ஏழரை ஒன்னும் பண்ணாது என்ற அதீத நம்பிக்கைதான்:-)))))


ராம்வி நம்ம வகுப்புலே புது மாணவி. அதான் சபைக்கூச்சம். இல்லையா ராம்வி?