Monday, October 31, 2011

போன பிறவிகளில் கோபால் நிச்சயமா ஒரு கருடன்.

சீனுவைப் பார்க்க வழக்கம்போல் கிளம்பும்போது ஃப்ரிட்ஜைத் திறந்து நீண்ட மல்லிகைச் சரத்தை எடுத்தேன். கூடவே ஒரு மல்லிகை மாலையும். நேத்து ராச் சாப்பாட்டுக்காகப் போனபோது 'டேகா மால்' போய் உதிரி மல்லிகை வாங்கிக்கணுமுன்னு நினைப்பு. ஆனால் வழியிலேயே ஒரு பூக்கடைக்காரர் மாலைகள் 'கோர்த்து' விற்பதைப் பார்த்ததும் அதை சாமிக்குப் போடலாமேன்னு வாங்கிவந்து வச்சதுதான்.

சண்டிகர் போன நாள் முதல் என் தலை பூவுக்கு அழுதுக்கிட்டே இருக்கு. துருக்க சாமந்தி (மெரிகோல்ட்) பூவை விட்டால் வேறெதுவுமே அங்கே இல்லையோன்னுதான் நினைச்சுக்கணும். கோவில்களுக்கோ, இல்லை விழாக்களுக்கோ, சுருக்கமாச் சொல்லப்போனா மனுசன் பிறப்பு முதல் இறப்புவரை எல்லாத்துக்கும் இதுதான். தெற்கு வாழ் மக்களான நாம் கோவிலுக்கு வேற, தலைக்குச் சூட வேறன்னு விதவிதமா வகைப்படுத்தி வச்சுருக்கோமுல்லெ? சென்னை வாசத்தில் தினம் சாப்பிடறேனோ இல்லையோ பூ மட்டும் மறக்காமல் வாங்கிக்குவேன். நம்ம சாமிக்கும் ஆச்சு, இல்லை! நியூஸியில் ஏராளமான பூக்கள் வீட்டைச் சுற்றி இருந்தாலும் இந்த ஊரில் யாரும் தலைக்குப் பூச் சூடிக்கறதில்லையாக்கும் கேட்டோ:( ஊரோடு (இதிலாவது) ஒத்து வாழ வேணாமா?

ஒரு சிங்கைப் பயணத்தில் பழம் வாங்கிக்க ( அழகா துண்டுகள் வெட்டித் தனியா அடுக்கி வச்சுருப்பாங்க. அப்படியே சாப்பிடலாம்) டேகா மால் பேஸ்மெண்டில் இருக்கும் சூப்பர் மார்கெட் போனபோது மல்லிகை மலர்கள் சின்னப் பொதியா இருப்பதைப் பார்த்தேன். உடனே வாங்கி வந்து ஹொட்டேலில் நம்ம வசதிக்காக ஊசி நூல் வச்சுருப்பாங்க பாருங்க, அதை வச்சுக் கோர்த்துச் சூடிக்கிட்ட அனுபவத்தைக் கடாச முடியுமா? இந்த முறை அதே நினைவில் மறக்காம ஒரு நூல்கண்டு எடுத்துப் பெட்டியில் பயணச்சாமான்களுடன் போட்டு வச்சேன். (ஹொட்டேலில் ரெண்டு முழம் நூல் கூடுதலா வச்சுட்டாலும்..... :(
(ஓசின்னாக்கூட அளந்து பார்த்துருவேன்லெ)

இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பறோம். இந்தப் பயணத்தில் கடைசி முறையாச் சீனுவைப் பார்த்து மாலை போட்டு 'பைபை' சொல்லிக்கணும். கோவிலில் கூட்டம் இல்லை.அங்கொன்னும் இங்கொன்னுமா சிலர் மட்டும். மாலையைப் பட்டரிடம் கொடுத்ததும் அதை நேராக் கொண்டு போய் பெருமாளுக்குச் சார்த்தினார். ஏற்கெனவே அங்கிருந்த 'துளசி'யுடன் இதுவும் சேர்ந்து ஜொலிக்குதுன்னு என் நினைப்பு. ( நம்ம வெங்கடநாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானக் கோவிலில் துளசி மாலை சம்பந்தமா கசப்பு அனுபவம். சாமிக்குன்னு மக்கள் பயபக்தியா கொண்டு வந்து கொடுப்பதை அலட்சியமா ஒரு கையால் வாங்கி சாமி காலில் கடாசுவார் அங்கே ஒரு பட்டர். அதைப் பார்த்த நாள் முதல் அந்தக் கோவிலுக்குப் பூக்கள் கொண்டுபோகும் பழக்கத்தை விட்டுட்டேன். துளசியைக் கொண்டுவர வேண்டாமுன்னுகூட ஒரு அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க இப்போ! வெளங்கிரும்)

சிங்கையில் துளசிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பக்தர் ஒருவர் துளசியைப் பதமா ஆய்ஞ்சு வைக்கிறார் பாருங்க.

நாங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு முடிச்சோம். கடைசிநாளாச்சேன்னு எல்லா சந்நிதிகளையும் க்ளிக்கிட்டே நான் வலம் போக, கோபால் ஒரு தூணருகில் 'சாந்தமா' உக்கார்ந்துருந்தார். நான் திரும்பி வரும்போது யாரோ ஒரு பெண் கோபால்கிட்டே பேசிக்கிட்டு இருக்காங்க. தெரிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தால் நம் சென்னை வீட்டு ஹவுஸ் ஓனரம்மா. சிங்கையில் ரெண்டு வருச ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்துருக்காங்களாம். வேலைக்குப் போகும் வழியில் சாமிக்கு ஒரு கும்பிடு போட வந்துருக்காங்க. கொஞ்சம் குசலம் விசாரிச்சுட்டு உலகம் ரொம்பவே சின்னதா ஆகிப்போச்சுன்னு சொன்னேன். இன்னும் மூணு மாசத்தில் சென்னைக்குத் திரும்பிருவாங்களாம். சென்னைக்கு வந்தால் சந்திக்கணுமுன்னு அப்பீல் பண்ணினதை பெரியமனசோட ஏத்துக்கிட்டேன்:-) பொழைச்சுக் கிடந்தால் பார்க்கலாம். ( ஓனர் பாராட்டும் டெனண்ட் நாங்க.)
மால் முகப்பு

நாம் தங்கி இருந்த பார்க் ராயலின் எதிரே முந்தி கட்டிக்கிட்டு இருந்த மால் இப்போ வா வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்னு அதுக்குள்ளே நுழைஞ்சு கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு வந்தோம். சிடி ஸ்கொயர் மால். (ECO Friendly Mall) மால் வாசலுக்கு முன்னே ஒரு தோட்டம் இருக்கு. அங்கிருக்கும் படிகளில் இறங்கி நடந்தால் சாலையைக் கடந்து நேர் எதிரில் இருக்கும் ஃபேர்ரர் பார்க் எம் ஆர் டி நிலையத்துக்குப் போயிறலாம். அஞ்சடுக்கில் கம்பீரமா நிக்குது. கடைகள் எல்லாம் கண்ணை இழுத்தாலும் நம்ம மக்கள் முஸ்தாஃபாவில் கூடுவது போல் இங்கே வர்றதில்லை. நமக்கு ஏதும் 'தேவை' இல்லை என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு சாலையைத் தாண்டி அறைக்குப்போய்ச் சேர்ந்தோம். பொட்டியை அடுக்கி வச்சுட்டுக் கிளம்பினோம். மதியம் மூணு வரை லேட் செக்கவுட் கிடைச்சிருக்கு.

பதிவர் சந்திப்பு நடந்த மெரினா பே வரும்போதே பார்த்து மனசில் வச்சுக்கிட்டு இருந்ததை மெள்ள வெளியே எடுத்தார் கோபால். இவர் போன பிறவிகளில் கருடனாகத்தான் இருந்துருக்கணும்! எந்த ஊருக்குப் போனாலும் உசரக்கே ஏறி ஒரு கருடபார்வை பார்க்கணும். அப்படியே இங்கேயும் ஒன்னு இப்போதைக்கு ஆச்சு:-) ஒரு டாக்சி எடுத்து மெரீனா பே போய்ச் சேர்ந்தோம். ஸாண்ட்ஸ் ஹொட்டேல். சிங்கைக்குப் புதுசு. சீட்டுக்கட்டுகளை உதறிப்போட்டு அடுக்கி வச்சுக் கட்டியது போல கோபுரம். லேசான ஒரு வளைவுடன் உசரமா நிக்குது. இதே போல் அடுத்தடுத்து மூணு கோபுரம் கட்டி மூணையும் இணைக்கும் வகையில் ஒரு வளைஞ்ச படகு உச்சாணியில் உக்கார்ந்துருக்கு! வடிவமைச்சவர் Moshe Safdie. ஏற்கெனவே உலகப்புகழ் பெற்றவர். இப்போ புகழ் இன்னும் கூடிப்போயிருக்கு!

பூ வடிவ அமைப்புக்குள்ளேதான் கலைப்பொருட்களுக்கான ம்யூஸியம்.

அம்பத்தியஞ்சு மாடிக்கட்டிடங்களில் 2561 அறைகள் உள்ள ஹொட்டேல். ஏகப்பட்ட ரெஸ்ட்டாரண்டுகள், கன்வென்ஷன் செண்ட்டர், ம்யூஸியம், நீச்சல் குளம், தியேட்டர்கள், தனிப்பட்ட க்ளப்புகள், கடைகள், அது இதுன்னு எக்கச்சக்கமான விஷயங்கள். அங்கே ஒரு நாள் தங்கிக்கலாமுன்னா..... நியூஸிக்குப்போய் வீட்டை வித்துட்டு வரணுமாயிருக்கும். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு கெஸீனோ வேற வச்சுருக்காங்க.
மாடல்
டேக்ஸா?


வரவேற்பில் நுழைஞ்சாலே 'ஆ'ன்னு வாயைப் பிளக்கும் உயரமான மேற்கூரை. ஸாண்ட்ஸின் மாடலைச் செஞ்சு வச்சுருக்காங்க.
பிரமாண்டமான மரச்சாடிகளில் மரங்கள். அஜ்மீர் தர்கா டேக்ஸா அளவில் விளக்குகள். அங்கங்கே தண்ணீர் வழிந்தோடும் பளிங்குக்கரைகள். சிலதில் தண்ணீர் வழியும் அடையாளமே இல்லாமக் கிடக்கு. ஆனால் ஓசைப்படாமல் ஆடாமல் அசையாமல் தண்ணீர் வழிஞ்சு போய்க்கிட்டே இருக்கு! அரக்கு மாளிகையைப் பார்க்க வந்த துரியோதனன் மட்டும் இங்கே வந்திருந்தால்....... நம்ம கதையெல்லாம் பாரதமாகி இருக்கும்:-))))
மரச்சாடி

அப்சர்வேஷன் டெக் (Sky Park) அம்பத்தியேழாவது மாடியில் . அங்கே போய்ப் பார்க்க ஆளுக்கு இருபது சிங்கை வெள்ளிகள் கட்டணம். இந்தக் கட்டிடங்கள் கட்டி முடிக்க ஆன செலவு எட்டு பில்லியன் சிங்கை டாலர்களாம். அதுலே நாப்பது இன்னிக்கு நம்ம உபயம். மேலே போக அதிவேக மின்தூக்கிகள். ஒரு இருபத்தியஞ்சு விநாடியில் பறந்துபோய் நம்மைத் தள்ளிவிட்டுருது! நான் ஸ்டாப். வழியில் நிக்காது:-)



சிங்கை முழுசையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். அக்கம்பக்கத்து நாடுகளையும் அங்கிருந்து பார்த்து ஆசீர்வதிக்கலாம். கடல் பகுதி முழுசும் கணக்கில்லாத படகுகள் கப்பல்கள் சின்னதும் பெருசுமா நிக்குது. சிங்கப்பூர் ஃப்ளையர் என்னும் ராட்சஸ ராட்டினம் கைக்கு எட்டும் தூரத்தில்!
விர் விர்ருன்னு காத்து ஆளைத் தள்ளப்பார்க்க, ஐயோ விழுந்துட்டான்னு நமக்கு பயம் வராத வகையில் கண்ணாடித் தடுப்புகள் தலை உசரத்துக்கும் மேலே சாய்ஞ்சு நின்னு காத்தைக் கண்ட்ரோல் செய்யுது. சுத்தி நடக்கும்போது ஒரு கோணத்தில் அந்த பிரத்தியேக க்ளப்பின் நீச்சல் குளம். கண்ணில் பட்டவர் ஒரு வெளிநாட்டு'அழகி' ( தினப்பத்திரிகை மொழியில் இப்படித்தானே சொல்லணும் இல்லை?)
தரையில் இருந்து 191 மீட்டர் உயரத்தில் 376,500 கேலன் தண்ணீரை ரொப்பி வச்சுருக்காங்க. 422000 பவுண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்திக் கட்டுன நீச்சல் குளம். அடடா...... எவர்ஸில்வர் குளமா அது!!!!! குளித்த களைப்பு நீங்கவும் வெய்யில் காயவும் இருக்கைகள், நிழல்தரும் மரங்கள்(??!!) இப்படி...... காசுள்ளவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களையெல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லைடி மீனாட்சி


கீழே அழகுபடுத்தி, சாலைகள் அமைச்சுப் பொலிவாக்கும் புது நிர்மாணங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. சிப்பிகளைக் கவுத்து வச்சதுபோல் ரெண்டு கண்ணாடிக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் டூரியன் பழங்களை வெட்டிக் கமுத்தி வச்சுருக்காங்க! அநேகமா அடுத்த வருசத்துக்குள் இந்த வேலைகள் முடிஞ்சு வேறொரு புதுமை செய்ய ஆரம்பிச்சு இருப்பாங்க.


அங்கிருந்து கீழே தரைக்கு இறங்கி வந்தபின் கெஸீனோவுக்குள் போனோம். உள்ளுர் மக்களுக்கு நுழைவுக் கட்டணம் 100 வெள்ளி. வெளிநாட்டவர்களுக்கு? நம்ம கடவுச் சீட்டைக் காமிச்சால் இலவச அனுமதி. உள்ளுர் மக்களின் சூதாடும் பழக்கத்தைக் குறைக்க எடுத்த நடவடிக்கையாம். ஆனால் வருசத்துக்கு 2000 வெள்ளி அடைச்சால் வருசம் முழுவதும் போய்வரலாமாம். அளவுக்கு மிஞ்சிப்பொருள் உள்ளவர்களுக்கு இந்த ரெண்டாயிரமெல்லாம் ஜூஜுபி இல்லையோ?

கொஞ்ச நேரம் ஒரு சதம் ரெண்டு சதம் மெஷீன்களில் விளையாடிட்டுக் கிளம்பினோம். பத்து டாலருக்கு ரெண்டு பேருக்கு ஒரு மணிநேரம் பொழுது போக்கு. நாட் பேட்!

இன்னொரு டாக்ஸி எடுத்து நேரா நேத்துப்போன சீனக்கோவிலுக்கு எதிர்க் கடை. மிளகாய்ச் சரம் வாங்கணும். வாங்கியாச்சு. என் வழக்கபடி எண்ணிப்பார்த்தேன். நூத்தியெட்டு மிளகாய்ப் பழங்கள்! இவுங்களுக்கும் 108 முக்கிய எண்ணா!!!!!!

ஹொட்டேலுக்குத் திரும்பி கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்சிக்குக் காத்திருக்கும்போதுதான் இங்கே நம்ம நியூஸியில் இருந்து நேற்று வந்த குடும்பத்தைப் பார்த்தோம். அவுங்க விமானத்தில் இருக்கும்போதுதான் நிலநடுக்க சேதியை விமானஓட்டி சொன்னாராம். கவலை படிஞ்ச முகங்கள். ஊருக்கு எப்போ வரப் போறீங்கன்னாங்க. நாலைஞ்சு மாசம் ஆகுமுன்னு சொன்னோம்.
'பரம சாதுவான' பெண் புலியுடன் 37 வருசமா வாழ்ந்ததுலே பயம் சுத்தமா விட்டுப்போச்சு போல! இங்கே வெண்புலியுடன்............

சாங்கி விமானநிலையம் போனதும் செக்கின் செஞ்சுட்டு PPS லவுஞ்சில் போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வேடிக்கை எல்லாம் பார்த்துட்டு தில்லி விமானம் ஏறி, இறங்குனப்ப ராத்திரி பத்தரை. ஏற்கெனவே பதிவு செஞ்சுருந்த ஹொட்டேலில் இரவு தூங்கி எழுந்து மறுநாள் காலை பத்தரைக்குக் காரில் சண்டிகர் பயணம். பகல் சாப்பாட்டுக்கு அதே ஹவேலி. இவ்வளவு சுத்தமான உணவிடமும் வசதியும் ஏன் தமிழ் நாட்டில் ஹைவேக்களில் இல்லை என்ற பொருமலோடு பாக்கி தூரத்தையும் கடந்து வீடு வந்தப்ப மணி நாலே கால்.

பயணம் நிறைவு:-)


PIN குறிப்பு: சிலபல காரணங்களால் இந்தப் பயணம் முடிஞ்சு எட்டு மாசம் கழிச்சுத்தான் பதிவு செய்ய முடிஞ்சது. சில குறிப்புகள் செய்திகள் வீட்டுப்போயிருக்க வாய்ப்பு உண்டு. ஞாபக சக்தி குறைகிறது. வயசாகுதுல்லெ?



Wednesday, October 26, 2011

அன்புகளுக்கு.............

பதிவுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
வாழ்வில் எல்லா நலன்களும்(?) பெற்று இனிதாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

Wednesday, October 19, 2011

குலுக்கல்கள் பலவிதம் .........( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 10 )

சீனக்கோவிலுக்குள்ளே போனோம். சந்நிதிக்கு முன் அந்த பெரிய ஹாலின் நடுவில் பெரிய கம்பளம் விரிச்சு வச்சுருந்தாங்க. நேத்து அங்கே என்ன நடக்குதுன்னு பார்க்காமல் நான் நேரா மூலவர்களை நோக்கிப் பறந்துருந்தேன். அந்தக் கம்பளத்தில் கால்களை மடிச்சு முழங்காலிட்டதுபோல் பலர் உக்கார்ந்து கையில் ஒரு சிலிண்டர் வடிவக் குடுவையை ஆட்டிக்கிட்டே இருக்காங்க. அதுலே இருந்து சரசரன்னு ஒரு சப்தம். 'சீனக் கலாச்சார நிபுணர்' கூட வரும்போது விடமுடியுங்களா?
இது ஒருவகை ஆரூடம். நமக்கு வேணுமுன்னால் பார்த்துக்கலாமுன்னு சொன்னதும் மூலவருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு ஹாலின் ஒரு பக்கம் இருந்த கவுண்ட்டரில் போய் நின்னதும் வரிசையா சுவர்பக்க ஷெல்ஃபில் இருந்த குடுவைகளில் ரெண்டு எங்கள் கைக்கு வந்தன. குடுவை குலுக்கிகள் கட்டாயம் கம்பளத்துக்கு மேல் அமர்ந்துதான் குலுக்கணும். குடுவையில் மெலிஸான ச்சொப் ஸ்டிக்குகள் போல ஒரு கைப்பிடி அளவு குச்சிகள். நூறு இருக்கும். குடுவையை கொஞ்சம் சாய்ச்சுப்பிடிச்சபடியே குலுக்கணும். குச்சிகள் எல்லாம் வெளியில் தெறிச்சு விழும்படி வேகமாக் குலுக்கக்கூடாது. நிதானமான அளவில் சீராக் குலுக்கிட்டே கடவுளிடம் நமது கோரிக்கையை வைக்கணும். கிளி ஜோசியத்தில் சிலருக்குக் கிளி சட்னு சீட்டை எடுத்துப்போடும் சிலருக்கு ஒவ்வொன்னா எடுத்துக் கலைச்சு, அப்புறம் களைச்சுப்போய் கடைசி சீட்டு எடுத்துப்போடுமே அதைப்போல சிலர் குலுக்க ஆரம்பிச்ச சில நிமிசங்களில் எழுந்து போறாங்க. சிலர் கை சோர்வாக ஆகும்வரை குலுக்கிக்கிட்டே இருக்காங்க. கோரிக்கைகளின் வெயிட் அனுசரிச்சு குலுக்கும் நேரம் கூடுதோ என்னவோ?

முழங்காலிட்டுக் குலுக்கினோம். இதெல்லாம் வேணுமான்னு மனசு கேக்கும்போது ஒரு குச்சி எல்லாத்தையும்விடக் கொஞ்சம் முன்னாலே வந்துச்சு(அப்டீன்னு நினைக்கிறேன். முன்னால் உக்கார்ந்திருந்த சிலருக்குக் குச்சி அப்படியே குதிச்சு வெளியில் வந்து விழுந்ததையும் கண்டேன்) வெளியில் தலை நீட்டிய குச்சியைத் தனியாக் கையில் எடுத்துக்கிட்டுப்போய் இன்னொரு கவுண்டரில் குச்சிகள் இருந்த குடுவையையும் கையில் வச்சுருந்த குச்சியையும் கொடுத்தோம். ஒவ்வொரு குச்சியிலும் எதோ எண்கள் சீனத்தில் எழுதி இருக்கு. நாம் கொடுத்த குச்சியை வாங்கிப்பார்த்துட்டு அந்த எண்ணுக்குண்டான ஒரு சின்ன ஸ்லிப் கையில் கொடுத்துட்டு அந்தக் குச்சியை நாம் திருப்பிக் கொடுத்த குடுவையில் போட்டு கவுண்டரின் மறுபக்கம் வச்சவுடன் இன்னொருத்தர் அதைக் கொண்டுபோய் குடுவைகள் வழங்கும் இடத்தில் உள்ள ஷெல்ஃபில் கொண்டு வச்சார். எல்லாம் ரொம்ப சிஸ்டமேட்டிக்கா நடக்குது.

எனக்குக் கிடைச்ச காகிதத்துண்டில் நமக்கு வந்த எண்ணுக்கான பலன் சுருக்கமா இருக்கு. அந்தக் கவுண்ட்டரின் ஒரு பக்கம் கையளவு சைஸில் நிறைய புத்தகங்கள் இருக்கு. எல்லா எண்களுக்கும் விரிவான பலன் அச்சடிச்சது. அதுலே ஒன்னும் எடுத்துக்கிட்டுப்போய் ஒரு பக்கமா உக்கார்ந்து இன்னும் விலாவரியா எண்ணுக்குண்டான பலன்களைப் படிச்சுக்கலாம். திரும்பப் புத்தகத்தைக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வச்சுறணும்,ஆமா.

மனுஷ மனசுக்கு எப்படியெல்லாம் சமாதானங்கள் வேண்டி இருக்கு பாருங்க. இதை நிறைவேத்தித்தரத்தானே மதங்களும் கடவுளர்களும். இல்லையா? வளாகத்தைக் கடந்து எதிர்ப்பக்கம் போய் சீன வாஸ்த்துகள் விற்கும் கடைக்குள் வேடிக்கைப் பார்த்துக்கிட்டேச் சுற்றினோம். கண்ணாடியில் செஞ்ச மிளகாய்ச்சரம் அருமையா இருக்கு. எல்லாம் பழுத்த மிளகாய்கள். பச்சைக் காம்புகளுடன். வெளிச்சம் ஊடுருவும்போது அட்டகாசமா ஜொலிக்குது. கோபாலுக்கு மிளகாய் (சாப்பிடப்) பிடிக்கும். வாங்கலாமான்னு யோசனை. கொஞ்சம் ஆறப்போட்டேன்.
வெளியில் மீன் தொட்டிகளுக்கும் பூச்செடிகளுக்கும் இடையில் போட்டு வச்சுருந்த இருக்கைகளில் உக்கார்ந்து கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே கொஞ்சம் வீட்டு விஷயங்கள். சொந்தக் கதைகள், கதைக்குண்டான கருப்பொருட்கள், அடுத்து எழுத உத்தேசிப்பது இப்படிப் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு வயசான சீனர் வந்து கை நீட்டினார். எனக்கு ஒரே திகைப்பு. இங்கேயா? சிங்கையிலா? சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சுன்னார். ஜெயந்தி சட்னு ரெண்டு வெள்ளியை அவர் கையில் வச்சாங்க. அரசாங்க உதவிகள் கிடைக்குதான்னு தெரியலை....... கொஞ்சம் இதை விசாரிக்கணும். சீனக்குடும்பங்கள் நம் இந்தியக் குடும்பங்கள் போலத்தான். வயதான தாத்தா பாட்டி அப்பா அம்மாவையெல்லாம் வச்சுப் பராமரிக்கும் வழக்கம் உண்டு. இப்படி ஒரு கலாச்சாரம் புழங்கும் ஊரில்........... இதே சம்பவம் இந்தியாவில் ஏராளமாப் பார்த்திருந்தாலும் எனக்கென்னவோ சிங்கையில் (கௌரவ)பிச்சை கண்டது இதுவே முதல்முறை!

சரி வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்குள் போனோம். கோவில் கருவறை மூடி இருக்கும் நேரம். கருவறைக்கு வெளியே நின்னு வணக்கம் போட்டுட்டு, திருப்பாவை சிற்பங்கள் 'காணலை'யேன்னு கண்ணனிடம் குறை சொல்லிட்டு வெளிப்பிரகாரம் கூட்டிக்கிட்டுப்போய் 'நம்மாட்களை'க் காமிச்சேன். இன்னிக்கு மீண்டும் சந்திச்சதில் நம்ம தண்டபாணிக்கு மகிழ்ச்சின்னு அவர் முகம் சொல்லுச்சு. நேற்றுச் செஞ்ச யானைகளை தூண்களைச் சுத்தி நடக்க வச்சுக்கிட்டு இருந்தார். பிரகாரத்தில் இருக்கும் மற்ற எல்லா சிலைகளையும் என்னமோ நானே செஞ்சு வச்ச பெருமையில் அதன் அழகையெல்லாம் அனுபவிச்சுச் சொல்லிக்கிட்டு இருந்தேன். நல்ல வேளையா இங்கே கூட்டிவந்தீங்க. இல்லைன்னா இந்தப் பக்கம் எல்லாம் வரவே எனக்கு நேரம் கிடைச்சுருக்காதுன்னாங்க ஜெ. அதானே....உள்ளூர்லேயே அழகெல்லாம் கொட்டிக் கிடந்தா யார் கவனிக்கப்போறா?


அங்கிருந்து கிளம்பி திரும்ப பொடி நடையா நடந்தே போய் சையத் ஆல்வி தெருவில், அதான் அந்த முஸ்தாஃபா தங்க நகைக்கான கட்டிடம் தாண்டி (அதை சட்டையே செய்யாமல் நடந்தோமாக்கும்!) தெருவில் இன்னும் கொஞ்சம் உள்ளே போனதும் நம்ம சரவணபவன் கண்ணில் பட்டுச்சு. அதானே.... அது என்ன பொழுதன்னிக்கும் கோமளவிலாஸ் ?

யாருமே இல்லாமல் காலியா இருந்த இடத்தைக் கொஞ்சம் நிரப்பினோம். சிற்றுண்டி சாப்பிட்டு முடிச்சு காஃபி, ஃபில்டர் தானான்னு உறுதிப்படுத்திக்கிட்டுக் குடிச்சேன். வீட்டுக்குப்போய் சமைக்கவேணாமேன்னு இங்கேயே கொஞ்சம் சாப்பாடு வாங்கிக்கிட்டாங்க ஜெ. அப்பதான் கோபால் செல்பேசியிலே கூப்பிட்டு தான் அறைக்கு வந்துட்டதாகவும், நாங்க அவசரமே இல்லாமல் சுத்திட்டு நிதானமா வந்தால் போதுமுன்னும் சொன்னார். அப்படியெல்லாம் சொன்ன பேச்சைக் கேக்கமுடியாதுன்னு அவருக்கும் ஒரு காஃபி பார்ஸல் வாங்கிக்கிட்டு மூணே நிமிச நடையில் அறைக்குப் போய்ச் சேர்ந்தோம். ' சரி. முஸ்தாஃபா கோல்ட்லே நிதானமாச் சுத்திப் பார்த்துட்டு கொஞ்சம் 'எதாவது' வாங்கிண்டு வரேன்'னுமட்டும் சொல்லி இருந்தால்............ அலறி அடிச்சுண்டு ஓடி வந்துருப்பர்:-)

தாய்லாந்து தொழிற்சாலைக்குப் போவதற்காக நேற்றுப் பகல் நியூஸியில் இருந்து கிளம்பி இங்கே சிங்கைக்கு வந்த 'தலை' இப்படியே திரும்பி நியூஸிக்கேப் போறாராம். ஊருலே நிலை ரொம்பவே மோசமாம். பிள்ளைகளை வாரி எடுத்துக் காரில் போட்டுக்கிட்டு மனைவி வடக்குத்தீவை நோக்கிப் போய்க்கிட்டு இருக்காங்களாம்.

பத்தரை மணிப் பயணம் முடிச்சுட்டு நல்லாத் தூங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தவரை நியூஸி நிலநடுக்கம் அங்கிருந்தே ஆட்டி வச்சுருக்கு. சிங்கைக்கும் நியூஸிக்கும் அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்குன்னு முந்தியே சொல்லி இருந்தேன்லெ? சிங்கையில் காலை எட்டு மணியானப்ப, நியூஸியில் ரெண்டு கட்டிடம் முழுசா இடிஞ்சு விழுந்து அதுலே இருந்த மக்களில் 90 சதவீதம் பரலோகம் போயிட்டாங்க. மனைவிக்கு நலம் சொல்ல கூப்பிட்டவரின் 'தலை'யில் இடிவிழுந்தாப்போல!

ஒரே குலுக்கலா குலுங்கி நிற்காம, நாலு நிமிசத்துக்கு ஒன்னு, அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு, ஏழு நிமிசத்துக்கு ஒன்னுன்னு அட்டவணை போட்டு வச்சுக்கிட்டு இருந்த மாதிரி அந்த நாள் மட்டுமே 156 முறை சின்னதும் பெருசுமாக் குலுங்கி நாட்டையே கலவரப்படுத்தி இருக்கா பூமித்தாய்.

மக்கள்ஸ் அலறி அடிச்சுக்கிட்டு வேறிடம் தேடி ஓடும் களேபரத்தில் ஏர்ப்போர்ட் முழுசும் கூட்டம் நிறைஞ்சு வழியுது. ஆனால் எந்த ஊருக்கும் விமானச்சீட்டு கிடைக்கும் வழி இல்லை. எல்லாமே ஃபுல்லு! காரில் ஊரைவிட்டு ஓடும் மக்களால் நேஷனல் ஹைவேக்களில் ட்ராஃபிக் ஜாம்.
அப்படியே காரில் ஓடினாலும் பிக்டன் என்ற ஊர்வரைதான் போகமுடியும். அங்கிருந்து தீவைக் கடக்க ஒரே வழி கடல்தான். எல்லா ஃபெர்ரி சர்வீஸுகளும் சுநாமி எச்சரிக்கை இருப்பதால் ஓரங்கட்டி உக்கார்ந்துருக்கு,

திடமனதோடு நிலநடுக்கத்திற்கு நடுங்காம உள்ளூரிலேயே இருக்கும் மக்களுக்கு தண்ணீரும் மின்சாரமும் இல்லை. மரண எண்ணிக்கை முன்னூறுக்கு மேலே இருக்குமுன்னு ரேடியோ ஒரு பக்கம் அலறிக்கிட்டே கிடக்கு. பக்கத்து பேட்டைகளுக்கு உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குப் போகலாமுன்னா ஊர் முழுக்க சாலைகளில் பிளவு. அரசு அவசர நிலை அறிவிச்சுருச்சு. எந்த நிமிசமும் விமானநிலையத்தையும் இழுத்துப் பூட்டலாம். ரன்வேக்களில் விரிசல்.

காலை 1151க்கு கிறைஸ்ட்சர்ச் நகரில் இருந்து கிளம்பிய சிங்கை விமானம், சரியா ஒரு மணி நேரம் கழிச்சு நகரில் நடந்த பேரழிவைப் பயணிகளுக்கு அறிவிச்சு இருக்கு. கையறு நிலையில் பயணிகள். அதே விமானம் சிங்கை நேரம் மாலை 7.50க்குத் திரும்பிப் போகும். அதுலே ஊர்திரும்பறார் 'தலை' இவர் போய்ச் சேரும்போது விமானநிலையம் திறந்திருக்குமான்றது கூட சந்தேகம்தான்.

கோபால் சொல்லச் சொல்ல நானும் தோழியும் வாயடைச்சுக் கேட்டுக்கிட்டு இருக்கோம். இருட்டப் போகுதேன்னு தோழி ஜெ கிளம்பிப் போனாங்க. இப்படியும் ஒரு குலுக்கலான்னு சிந்திக்கும் சமயம், நாளைக்கு நீ கிளம்பி நியூஸிக்குப்போய் என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு, வீட்டுக்கு பழுது பார்க்கணுமுன்னா ஏற்பாடு செஞ்சுரு. நான் இந்தியாவுக்குப் போய் சிலவேலைகளை முடிச்சுட்டு ரெண்டு வாரத்தில் நியூஸிக்கு வரேன்னு அவசர முடிவு எடுத்தார் கோபால்.

தொடரும்...............:-)


Monday, October 17, 2011

ஓம் மணி பத்மே ஹூம்.........( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 9 )

இன்னிக்கு ஃபிப்ரவரி 22. இந்த நாள் மறக்கமுடியாத ஒரு நாளாகிப்போகுமுன்னு எந்த cantabrian -னும் நினைச்சே இருக்கமாட்டாங்க நியூஸி நேரம் பகல் 12.51 ஆகும்வரை. 'நியூஸி கேண்டர்பரி ரீஜன்' மக்களைத்தான் இப்படிச் சொல்வது வழக்கம். காலையில் வழக்கம்போல் சீனுவைக் கண்டுக்கிட்டு வந்தாச்சு. முகமில்லாத நளனில் காலை உணவையும் முடிச்சுக்கிட்டோம். லேடீஸ் டே அவுட்க்கு ஏற்பாடாகி இருக்கு. இதுலே நம்ம கோபாலை என்ன செய்யறதுன்னு பயங்கர முன்னேற்பாடு.........அவருடைய நியூஸி கம்பெனி 'தலை' இன்னிக்கு பகல் மூணுவரை சிங்கையில் இருப்பார். அவரோடு ஒர் லஞ்சு டேட்..

பத்துமணிக்குத் தோழி அறைக்கு வந்துட்டாங்க. சிங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துருக்கு. கோபால் கிளம்பிக்கிட்டு இருக்கார். ரயில் பிடிச்சு ஏர்போர்ட் ஹொட்டேலுக்குப் போறாராம். தற்செயலா டிவியை ஆன் செஞ்சதும் அதுலே காமிச்சுக்கிட்டு இருந்த சேதி அப்படியே எங்களை உறையவச்சது.

நியூஸியில் எங்க ஊர்லே நிலநடுக்கம். நல்ல பகல் 12.51க்கு நகர மையத்துலே பயங்கர அழிவு. வேலை நாள் ஆனபடியால் அலுவலகங்கள், கடைகள் இப்படிக் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள். ரெண்டு பெரிய அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அப்பளம்போல் நொறுங்கி விழுந்துருக்கு. இறப்பு எண்ணிக்கை அதிகமுன்னு படம் காமிக்கிறாங்க. அதிர்ச்சியில் மூஞ்சி செத்துப்போய்க் கிடக்கும் எங்களை ஜெயந்தி ஆறுதல் சொல்லித் தேற்றிக்கிட்டு இருக்காங்க. மகளை அங்கிருந்து தொடர்பு கொண்டோம். முதலில் லைன் கிடைக்கவே இல்லை. விடாமல் முயற்சி செஞ்சதும் தரைவழியில் கிடைச்சாள்.

நெருங்கிய தோழியின் தாத்தாவின் மரணச்சடங்குக்குப் போயிட்டு வரும்போதுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுச்சாம். ரேடியோ செய்தியில் யாரும் நகர மையத்துக்கு வரவேணாம். அவரவர் வீட்டில் இருங்கன்னு காவல்துறை அறிவிப்பு கொடுத்துருக்கு. வீடுகளில் தண்ணீர், மின்சாரம் எதுவும் இல்லை. தொடர்ந்து ரேடியோ செய்தி கேட்டு அதன்படி செய்யுங்கன்னு அரசு அறிவிச்சுக்கிட்டு இருக்கு. சிவில் டிஃபென்ஸ், ஆபத்து வரும் காலத்தில் பொதுமக்கள் என்னென்ன முன்னேற்பாடுகள் செஞ்சுக்கணுமுன்னு டெலிஃபோன் டைரக்டரியின் பின்பக்க அட்டையில் விவரம் கொடுத்துருப்பாங்க. அதுலே முக்கியமானது அஞ்சு லிட்டர் குடி நீர். டார்ச் லைட். அதுக்குண்டான கூடுதல் பேட்டரிகள், ரேடியோ, டின்னின் அடைச்ச உணவுகள் இப்படி ஒரு பட்டியல் இருக்கும். அது முக்கியமுன்னு உணர்ந்தாலும் முக்கால்வாசி ஜனம் எமெர்ஜன்ஸி சப்ளை ஒரு நாள் எடுத்து தயாரா வைக்கணுமுன்னு நினைக்கும். அதுலே நாமும் ஒன்னு:(

இந்த வருச டெலிஃபோன் டைரக்ட்டரியில் கூடுதலா ரெண்டு பக்கம் கடைசி அட்டைக்குப்பக்கம் சேர்த்துருக்காங்க. நிலநடுக்கத்துக்கு முன்னுரிமை! Earthquake Resource Guide , Canterbury Earthquake Recovery Authority. இங்கெல்லாம் வருசாவருசம் புது டைரக்டரி எல்லா வீடுகளுக்கும் இலவச சப்ளை உண்டு. நமக்கு ஃபோன் லைன் இருக்கா இல்லையான்னெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கமாட்டாங்க. அதுபாட்டுக்கு அதுன்னு வாசல்லே கொண்டுவந்து வச்சுட்டுப்போயிருவாங்க. பழைய டைரக்டரியை அதே பையில் போட்டு மறுவாரம் வாசலில் வச்சுட்டா அவுங்களே வந்து பழசை எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க.

மகள் காரில் இருக்கும் ரேடியோவில் செய்திகளைக் கேட்டுக்கிட்டு இருந்துருக்காள். நிலம் ஆடுனதில் பயந்துபோன 'ஜூபிடர்' வேற காணாமப் போயிருக்கான். (அவள் ஒரு பூனை வளர்க்கிறாள்) கவலைப்படாதீங்க, நான் நல்லா இருக்கேன்னு சொன்னாலும் நமக்கு மனசு கேக்குதா?

சிங்கைக்கும் நியூஸிக்கும் அப்போ எங்க கோடை காலம் ஆனதால் அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்கு. சம்பவம் நடந்தப்ப சிங்கையில் காலை 7.51. நாங்க காலையில் எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போயிட்டோம். குறைஞ்சபட்சம் திரும்பி வந்தவுடன் டிவி போட்டுருந்தால் கூட விவரம் கொஞ்சம் சீக்கிரமாத் தெரிஞ்சுருக்கும். அப்போ நம்ம கோவி. கண்ணன் கைபேசியில் கூப்பிட்டு என்ன விவரமுன்னு கேட்டுட்டு (அவரும் தொலைக்காட்சி செய்தியில் விஷயத்தைப் பார்த்திருக்கார்) சென்னையில் இருந்து வல்லியம்மா உங்க கைப்பேசி எண் கேட்டாங்க கொடுத்தேன்னார். வல்லியம்மாவும் சென்னையில் பொழுதுவிடிஞ்சு செய்தி பார்த்தப்ப ஆடிப்போயிட்டாங்க.

கொஞ்ச நேரத்தில் வல்லியம்மா கூப்பிட்டாங்க. மகள் நலம் என்ற விஷயத்தைச் சொன்னதும் அவுங்களுக்கும் கொஞ்சம் நிம்மதி ஆச்சு. கோபால் கிளம்புனதும் நானும் ஜெயந்தியுமாக் கிளம்பி நடக்கப்போனோம். நல்லவேளையா ஏதும் முன்னேற்பாடுகள் பண்ணி வச்சுக்கலை. அஜெண்டா ஒன்னும் இல்லாத ஒரு ஒன் டு ஒன் சந்திப்பு. மனம்விட்டுப்பேசும் நாள் இது. கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கமே இன்னிக்குப் பேச்சை ஆக்ரமிச்சது. என்னை உற்சாகப்படுத்த ஜெயந்தியும் ஆறுதல் சொல்லிக்கிட்டே வேறேதோ நடப்பைப்பற்றிப் பேசறாங்க.

செராங்கூன் சாலையில் கடைகள் எல்லாம் திறந்து அன்றைய தினத்துக்கான வாடிக்கையாளர்களுக்குக் காத்திருக்கு. வாசலில் நிற்கும் பொம்மைக்கு அழகாப் புடவை கட்டிவிட்டுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். விரல்கள் கொசுவத்தை மடிப்பதிலே ஒரு லாகவம். அவரோட மனைவி ரொம்பக் கொடுத்து வச்சவங்கன்னு அவர்கிட்டேயே சொன்னேன். அவருக்கு வெட்கம் கலந்த சிரிப்பு:-) க்ளிக்.
எருமைத்தெருவுக்குள் நுழைஞ்சோம். அங்கே ஒரு கடையில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும்.. நோட்டம் விட்டபோது எனக்கானது எதுவும் கண்ணுலே படலை. ஆனால்.....சிந்தனைக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப்படணுமாமே..... அந்தக் கணக்கில் அருமையான குழாய்ப் புட்டு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். கூடவே மல்லிகைப்பூ இட்டிலியும் இடியப்பமும்.பார்த்ததுமே வாங்கத் தூண்டும் விதத்தில் பொதிஞ்சு வச்சுருந்தது சூப்பர். சுத்தயமான பொருள்தான். நான் மட்டும் உள்ளூர் வாசின்னா இதை வாங்காமல் விடமாட்டேனாக்கும்!
இங்கே மூக்குத்திக்கே ஒரு கடை இருக்குன்னு சொன்னதும், 'நீங்க வந்தாத்தான் உள்ளூர் சமாச்சாரமே எனக்குத் தெரியுது'ன்னாங்க ஜெயந்தி. 'இந்தப் பக்கமெல்லாம் வர்றதே இல்லை. எப்பவாவது வந்தால் அதிசயம். எனக்கும் ஒரு மூக்குத்தி வாங்கிக்கணும். போய்ப் பார்க்கலாமா'ன்னாங்க.. நானும் மகளுக்கு ஒன்னு வாங்கலாமான்ற யோசனையில் இருந்தேன். தமிழ்நாட்டு ஸ்டைலில் திருகாணி உள்ளது மகள் போடமாட்டாள். வெறும் கம்பி உள்ளது கிடைக்குமான்னு தேடணும். மூக்குத்தி கார்னரில் நுழைஞ்சோம்.
மகளுக்குச் சரியானதா ஒன்னுமே அமையலை. ஒரு நீலக்கல் 'நோஸ் பின்'னை எடுத்துப் பார்க்கும்போது நான் பார்த்துட்டுத்தரேன்னு கையில் வாங்கிய ஜெயந்தி..... இது நான் மகளுக்குக் கொடுக்கும் அன்பளிப்புன்னுட்டு என் சொல்லை 'மதிக்காமல்' அவுங்களே அதுக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டாங்க. முதல்லேயே சொல்லி இருந்தால் இன்னும் நல்லதா வாங்கி இருப்பேனேன்னு 'சண்டை' போட்டேன்:-))))))
லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் புகுந்து மனம்போனபடி சுற்றிட்டு
வழியில் இளநீரை வாங்கிக்குடிச்சுட்டு கேம்பெல் லேன் வழியாக் கொஞ்சம் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போன எங்களை வாவான்னு கூப்புட்டார் அடுத்த சாலையில் சந்திப்பில் உக்கார்ந்துருந்த புள்ளையார். வெள்ளை வேட்டி , மேல்துண்டோடு ஆளு பலே ஜோரு! இவர் வலம்புரி வேற! பேச்சு சுவாரசியத்தில் ஜலன்பெஸார் சாலைவரை வந்துருக்கோம். ஜெவுக்கு யானையைக் காமிக்கலாமேன்னு பென்கூலென் சாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் போகலாமுன்னு சொன்னேன்.
சீனக்கோவிலுக்கெதிரில் கடைகளைக் கடக்கும்போது ஏதோ இந்திய மந்திரம் போல ஒன்னு இடைவிடாம ஒலிக்குது. ஓம் என்னும் ரீங்காரம். இது நம்ம ஓம் மாதிரி கேக்குதுல்லேன்னேன். அறியாமையைச் சரியான ஆளிடம் வெளிப்படுத்திட்டேன் பாருங்க.. 'ஓம் மணி பத்மே ஹூம்'. ன்னு சொல்லும் மந்திரம் அதுன்னாங்க ஜெ. சீனக்கலாச்சாரத்தில் ஆர்வம் அதிகம் உள்ள ஜெ இதுவரை நிறையக் கதைகளை சீனத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து இருக்காங்க.

தொடரும்.................:-)

Monday, October 10, 2011

அண்ணனைச்சுற்றி வந்தால் அத்தனையும் கிடைக்கும்.. ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 8 )

உண்மைதான். சைனா டவுனில் கடந்துபோன வருசப்பிறப்பு அலங்கார விளக்குகளை அப்படியே விட்டு வச்சுருக்காங்க. புத்தர் பல் இருக்கும் கோவில் ஒன்னு அழகாப்பெருசா கம்பீரமா நிக்குது. ஆனால் கதவுகளை சாத்தி இருக்காங்க. வெளியே இருக்கும் சிலைகளை ரசிச்சுக்கிட்டே நடந்து போனால் அடுத்த மெயின் ரோடு வந்துருச்சு.. ஆஹா..... நம்ம கோவில் தப்பிச்சுருச்சு. விடறதில்லைன்னு அதே பாதையில் திரும்பறோம். கோவில் அடையாளமே இல்லை. அஞ்சு நிமிசமுன்னு அந்தப்பெண்மணி கை காமிச்ச திசையில்தானே வந்தோம்....... யாரையாவது கேக்கலாமுன்னா.... யாரை? எட்டுமணிதான் ஆகி இருக்கு. அதுக்குள்ளே சாலையில் நடமாட்டமே காணோம்:(
நமக்காக புள்ளையார் ஒருத்தரை அனுப்பிச்சார். சரேலென குறுக்கே கடந்த உருவத்தைப் பார்த்து .இங்கே புள்ளையார் கோவில் எங்கேங்க?'ன்னு கோபால் 'தமிழில்' கேட்க. இடதுபக்கம் பிரியும் சின்ன சாலையில் கை காமிச்சுட்டு அவர் போயே போயிட்டார். 'என்ன.... தமிழில் கேட்டீங்க? அவர் தமிழ்க்காரருன்னு எப்படித் தெரியும்?' 'ஆளைப் பார்த்ததும் தெரிஞ்சது'. ஆஹா....

அவர் கைகாட்டிய திசையில் நடந்து போனா....வெளியே நீளமான வெராண்டாக்களுடன் சில ஹொட்டேல்கள். அதுலே ஒன்னு 1929 ஹொட்டேல். கோவிலா ஒன்னும் கண்ணுலே படலையே.... இன்னும் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமான்னு பேசிக்கிட்டே அதைக்கடந்து நடந்தால் திடுக்குன்னு கோவில் வந்துருச்சு. கட்டிடங்களோடு கட்டிடமா கூட்டத்தில் கலந்து நிக்குது. பெரிய கேட் இருக்கேன்னு உள்ளெ போனால் வாங்க வாங்க சாப்பிடன்னு கூப்புடறாங்க. சாப்பாட்டு ஹாலில் நல்ல கூட்டம். அட ராமா...... இன்னும் சாமியையே பார்க்கலை. அதுக்குள்ளே சோறா? சந்நிதி எங்கே இருக்குன்னு கண்ணை ஓட்டுனா..... திரை போட்டு ஸ்வாமி அலங்காரம் நடக்குது. அங்கேயும் கொஞ்சம் சின்னதா மனித முடிச்சுகள்.

சரி. சாப்பிட்டு முடிச்சறலாமுன்னு போனோம். வெஜிடபுள் நூடுல்ஸ், தயிர் சாதம். வடை, சாம்பார் லட்டு. யதேஷ்டம். சுவையும் நல்லா இருந்துச்சு.
சாப்பிட வாங்க வாங்க இவர் லயன் சித்தி விநாயகர். இந்த லயன் சிங்கமான்னால்.... இல்லை. இதுக்கு வேற ஸ்பெல்லிங் போட்டுருக்கு. Layan . இதுக்கு என்ன பொருளுன்னு தேடுனா.... இது அரபிச் சொல்லாம். soft, gentle ன்னு விவரம் கிடைச்சது. இது இந்த லயனுக்குப் பொருந்துமான்னு தெரியலை. இன்னும் கொஞ்சம் கிளறினதில்.......

சிதம்பரத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் என்ற சைவர் இந்திய தேசியப் படையில் (INA) சேர்ந்து இங்கே ராணுவ வீரரா வந்துருக்கார். வரும்போது கையோடு தினமும் பூஜிக்கன்னு ஒரு புள்ளையார் சிலையைக் கொண்டுவந்துருந்தார். இவர் இங்கே வந்தபிறகு இவருடைய ஆன்மீக ஈடுபாடைப் பார்த்த சிலரால் பொன்னம்பல ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட அதுவே நிரந்தரமா ஆயிருச்சு. சின்னதா ஒரு தகரக்கொட்டாய் கட்டி அதுலே புள்ளையாரையும் வச்சு அது புள்ளையார் கோவிலா ஆகிப்போச்சு. முதல் உலகப்போர் முடிஞ்ச சமயம் அது. மக்கள் கோவிலைப் பார்த்ததும் வழக்கமா கோரிக்கைகள் வச்சு வேண்டிக்குவாங்க பாருங்க. அதே போல் பலருக்குக் கோரிக்கைகள் நிறைவேறுனதும் புகழ் பெற ஆரம்பிச்சார் இந்தப் புள்ளையார். ( நம்ம வீட்டு சாமிக்குக்கூட ஒரு தோழி ஏதோ கோரிக்கை வச்சு அது நிறைவேறுச்சுன்னு புதுத்துணிகள் கொண்டுவந்து சார்த்தினாங்க ஒரு சமயம். நம்புனவங்களை விடமாட்டானா இருக்கும்)

இந்தக் கோவில் அப்போ பொது மருத்துமனையின் புது சவக்கிடங்குக்குப் பக்கம் இருந்துருக்கு. ராணுவத்தினருக்கான ஆர்மி குவார்ட்டர்ஸில் இருந்து கோவிலுக்குப்போக ஒரு ஷார்ட்கட் பாதைகூட வந்துருச்சு. ராணுவ குடியிருப்புகள் வரிசையில் இருக்குமுல்லே . அந்த சிப்பாய் லயனைக் கடந்து போகணும் என்பதால் லயன் புள்ளையார்ன்னு குறிப்பிடப்பட்டு, அதுவே இப்ப நிலைச்சிருச்சு .

கோரிக்கைகளை நிறைவேற்றும் புள்ளையார் என்பது உறுதிப்பட்டுப் போயிருந்ததால்..... பொதுமருத்துவ மனையில் வேலை செய்யறவங்க, பக்கத்துலே அவுட்ரம்( Outram) ஏரியாவில் இருந்த ஜெயிலில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆஸ்பத்திரிக்கு வர்ற பொதுமக்கள் இப்படி பக்தர்கள் கூட்டம் தினம் கோவிலுக்கு வர ஆரம்பிச்சாங்க. பொன்னம்பல ஸ்வாமிகள் ஒரு நாகரையும் ஸ்தாபிச்சு தினசரி பூசைகள் நடத்திக்கிட்டு இருந்தார்.

இவர் சர்வீஸ் முடிஞ்சு திரும்பிப் போனப்ப சாமியைக் கூடக்கொண்டு போகாமல் கோவிலை இங்கே இருந்த நகரத்தார் வசம் கொடுக்க நினைச்சார். .அவுங்களும் இதை எடுத்துக்கறதா வேணாமான்னு கொஞ்சம் யோசிச்சு இருக்காங்க. எதுக்கும் அறநிலையத்துறையினரைக் கேட்டு அவுங்க வசம் கொடுங்கன்னு சொல்லி இருக்காங்க. ஸ்வாமிகள் அங்கே போய்க் கேட்டா.... அவுங்களும் ஆர்வம் காட்டாமல் தயங்கி இருக்காங்க. மறுபடியும் நகரத்தார்களிடம் நீங்களே எடுத்து நடத்திக்குங்கன்னு இவர் விண்ணப்பம் செஞ்சிருக்கார். சாமியை வேணாமுன்னு ஸ்வாமிகள் கிட்டே பளிச்சுன்னு சொல்ல முடியாமல் சரின்னு சம்மதம் சொல்லிட்டாங்க நகரத்தார். அப்போ ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் நல்லா நடந்துக்கிட்டு இருக்கு. கூடவே இந்தக் கோவிலையும் பார்த்துக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்க. அப்படியே ஆச்சு.

ஆனால்..... கொஞ்ச காலத்தில் (1920) மருத்துவமனையை விரிவுபடுத்திக் கட்டும்போது கோவில் இருக்கும் இடம் (சவக்கிடங்கு பக்கம்) தேவையா இருக்குன்னு அரசு தீர்மானிச்சு அந்த இடத்துக்குப் பதிலா காசு தர்றோம். நீங்க வேற இடத்துக்குக் கோவிலை மாத்திருங்கன்னு கேட்டாங்க. சட்டம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா? புது இடம் தேடிப்பார்த்தப்பக் கிடைச்சதுதான் ( junction of Keong Saik Road and Kreta Ayer Road.)இப்போ கோவில் இருக்கும் நிலம். அரசு கொடுத்த நிதியுடன் இன்னும் நிறைய பணம்போட்டு கோவிலைக் கட்ட ஆரம்பிச்சாங்க. இது கட்டி முடிஞ்சதும் சாமியை புது இடத்தில் குடி ஏத்தும் திட்டம். பார்த்தால் அங்கே பழைய தகரக்கொட்டாயில் சாமி சிலை கொஞ்சம் பழுதடையும் நிலையில் இருந்துருக்கு. அடடா..... இப்படி ஆகிப்போச்சேன்னு ,இந்தியாவில் இருந்து கணபதியின் கருங்கல் சிலை ஒன்னு ஏற்பாடு செஞ்சு அதைக் கொண்டுவந்துட்டாங்க.

பொதுவா சிதிலம் ஆன மூலவர் சிலைகளைக் கடலில் ஜலசமாதி செய்யும் வழக்கம் இருக்கு. (ஃபிஜியில் கூட பழைய மூலவரைக் கடலில்தான் இறக்கினாங்க) நகரத்தார்களில் சிலர் துக்கு சம்மதிக்கலை. வச்சுக்கும்பிடறோமுன்னு பொன்னம்பல ஸ்வாமிகளுக்கு வாக்குக் கொடுத்துட்டு இப்போ அந்தச் சிலையை கடலில் போட்டா கொடுத்த வாக்கை மீறுனதா ஆகிருமேன்னு தயங்கினாங்க.

கோவில் விஷயத்துலே மனமொத்த கருத்து வேணும். எதுக்கும் வம்பு வேணாமுன்னு தீர்மானம் செஞ்ச மற்ற அங்கத்தினர்கள் புதுப்பிள்ளையாரை பிரதிஷ்ட்டை செஞ்சுட்டு அதே கருவறையில் மூலவர்க்கு முன்னே பழையவரையும் ஸ்தாபிக்கலாமுன்னு அதுக்கான ஏற்பாட்டைச் செஞ்சுட்டாங்க. 1925 இல் புதுக்கோவிலின் மஹாகும்பாபிஷேகம் ஆச்சு. இப்போ கருவறையில் ரெண்டுபேருமே இருக்காங்க. ஆகமவிதிப்படி பூஜைகள் செய்ய ஊரில் இருந்தே ( வெளிநாட்டுலே நம்மாட்கள் ஊர்ன்னு சொன்னால் அது தமிழ்நாடு. ஃபிஜியில் கூட நம்மை ஊர்க்காரங்கன்னுதான் சொல்வாங்க)

நாகராஜாவும் இங்கே குடியேறினார். கூடவே வேல் வடிவில் முருகன். ராமநாமம்ன்னு ஒரு சந்நிதி. வெள்ளியில் ஒரு ரதம் செஞ்சு ரத ஊர்வலம் தைப்பூசத்துக்கு முதல் நாள் தண்டபாணி கோவிலில் இருந்து புறப்பட்டு மார்கெட் தெருவழியா வந்து லயன் பிள்ளையார் கோவிலில் நிறைவடையும் வழக்கமும் வந்துச்சு.
ரதம்

ஸ்ரீதண்டபாணி கோவிலில் அறங்காவலரா இருந்த பிச்சையப்ப செட்டியாருடைய கிடங்கு இருந்த இடமும் ( மார்கெட் சாலை) அரசின் வசம் போனதால் அவர் பூஜிச்சுக்கிட்டு இருந்த பிள்ளையார் சிலையையும் கோவிலுக்கே கொடுத்துட்டார். இப்ப மூணு சிலைகள் கருவறையில்.
அன்றும்
இன்றும்

சாப்பாடானதும் நோட்டீஸ் போர்டைப் பார்வையிட்டேன். பழைய கோவில் படங்கள், சமீபத்திய கும்பாபிஷேகங்களின் படங்கள் எல்லாம் போட்டு வச்சுருந்தாங்க. அதையே 'சுட்டு'க்கிட்டேன். குழந்தைகளும் பொங்கல் வாழ்த்து, விநாயகர் துதி, அவர் பெருமைன்னு எழுதிப்போட்டுருந்தாங்க.
2007 வது ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கூட்டம். மூணு நிலைக்கோபுரம் இப்போ அஞ்சு நிலையில் அருமையா அமைஞ்சு போயிருக்கு. மூணரை மில்லியன் டாலர் செலவில் எல்லாம் அமர்க்களம்தான் போங்க!
சுற்றிவர வாகாய்ப் பிரகாரம் அமைஞ்சுருக்கு. 108 முறை சுற்றினால் கைமேல் பலனாம். சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்.

உற்சவர் பிரமாண்டமான மூஷிக வாகனத்தில் அட்டகாசமான அலங்காரத்துடன் எழுந்தருளி இருந்தார். சட்னு பார்த்தப்ப இந்தக் கோவில் பெஸண்ட் நகரில் (பஸ் ஸ்டாண்டு அருகில்) இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அமைப்பு போலவே இருக்கு. அங்கே ஹால் கருவறைக்குப் பின்புறம். இங்கே கருவறைக்கு வலப்பக்கம். அது ஒன்னுதான் வித்தியாசம்.
திரை விலகியதும் கஜமுகன்களைக் கண்குளிரக் கண்டோம். க்ளோஸ்ட் சர்க்யூட் டிவியில் வேற காட்சி தர்றார். என்ன விசேஷமுன்னு கேட்டால் 'சதுர்த்தியாம்'! எல்லா மாசமும் வரும் சதுர்த்தியிலும் இப்படிக் கொண்டாட்டம். ஆவணிச் சதுர்த்தியில் பிரமாண்டமான விழா. அது விநாயகச் சதுர்த்தியாச்சே! அவுட்ரம் ரயில் நிலையம் அங்கிருந்து அஞ்சு நிமிச நடையில் இருக்கு. வயிறும் கண்ணும், மனசும் நிறைஞ்சு வழிய ரயிலேறி ஃபேரர் பார்க் நிலையத்தில் இறங்கி அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்னிக்குப் பூரா ஏகப்பட்ட சந்திப்புகள் இல்லே????
தொடரும்.................:-)

Friday, October 07, 2011

சவுத் ப்ரிட்ஜ் ரோடுலே, சைனாடவுன் நடுவிலே! ( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 7)

சிங்கையின் இந்துக் கோவில்களில் மூத்தது என்ற பெருமையை தனதாக்கி இருக்காள் மாரி. கிழக்கிந்தியா கம்பெனி, மலேயா ப்ராஞ்சின் பினாங் ஆஃபீஸ்லே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நாராயண பிள்ளை என்றவர் ஸர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் ( ப்ரிட்டிஷ் காலனிகள் அமைப்பதில் இவர் முக்கிய புள்ளி. திரு. ராஃபிள்ஸ்தான் சிங்கையை நிர்மாணித்தவர்.) அவர்களுடன் 1819லே சிங்கப்பூர் தீவுக்கு வந்துருக்கார். புது ஊர் உருவாகி வந்துக்கிட்டு இருக்கும் சமயம் நாராயண பிள்ளையும் செங்கல் சூளை வச்சு வியாபாரம் ஆரம்பிச்சு நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துருக்கு. கூடவே கட்டிட வேலைக்கான கம்பெனியும் தொடங்கினார். இந்தியாவில் இருந்து இங்கே கட்டிட வேலை செய்யறதுக்குன்னு ஆட்களைக் கூட்டிக்கிட்டு வந்த காலக்கட்டம். (இப்பவும் இது நடக்குதுல்லே?)

ஒன்னுரெண்டு வருசங்களில் கொஞ்சம் செட்டில் ஆனதும் கோவில் ஒன்னு கட்ட பிரிட்டிஷ் அரசிடம் இடம் கேட்டுருக்கார். முதல்லே ஒதுக்குன இடம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்குன்றதாலே சரிப்படலை. ரெண்டாவதா ஒரு இடம் ஸ்டாம்ஃபோர்டு வாய்க்கால் பக்கம் ஒதுக்குனதும்கூட நகரமைப்புத் திட்டத்தின் காரணம் சரிவரலை. மூணாவதா கிடைச்ச இடம்தான் சவுத் ப்ரிட்ஜ் ரோடுலே, சைனாடவுன் நடுவிலே!

நிறைய மரக்கட்டைகளையும் ஓலைகளையும் பயன்படுத்திச் 'சின்ன அம்மன்' கோவில் எழும்புனது 1827 இல். ரொம்பவே சிம்பிளா ஒரு கட்டிடம் மக்களை நோய்களில் இருந்து காப்பாத்தும் மாரியம்மன் குடிவந்தது இப்படித்தான். இதுக்குள்ளே நாராயண பிள்ளை வந்து வருசம் எட்டாகி இருந்துச்சு. துணி இறக்குமதி வியாபாரம் ஒன்னும் ஆரம்பிச்சு உள்ளூர் வர்த்தகப் பிரமுகரில் முக்கியமானவரா ஆகியிருந்தார்.

அந்த்க் காலக்கட்டங்களில் ஊரில் இருந்து சிங்கை வந்து சேரும் மக்களுக்குப் புகலிடம் போல இருந்துருக்கு இந்தக் கோவில். இந்துக் கலியாணம் செய்யணுமுன்னா, அதைச் செஞ்சுவைக்கும் அதிகாரம் இந்தக் கோவில் அர்ச்சகர்களுக்கு மட்டும்தான்னு அரசு அங்கீகாரம் கொடுத்துருந்துருஞ்சுன்னா பாருங்க!
நாலைஞ்சு வருசத்தில் கோவிலைச் சுத்தி இருக்கும் இடங்கள் சில தானமாக் கிடைச்சது. .கோதண்டராமசாமிக்கு யாரு தானமாக் கொடுத்தாங்கன்ற கல்வெட்டு ஒன்னு இன்னும் கோவிலில் இருக்கு! இப்படி மாரியம்மன் கூடவே ராமனும் வந்துட்டான். சித்தி விநாயகரும் சைலண்டா வந்து கூட்டணி அமைச்சுக்கிட்டார்.

பத்துப்பனிரெண்டு வருசங்களில் நாகப்பட்டினம், கடலூர் பக்கங்களில் இருந்து கோவில்கட்டும் வேலையில் பயிற்சி உள்ளவர்களைக் கூட்டிவந்து 1843 இல் கோவிலைப் புதுப்பிச்சுக் கட்டுனார் நாராயண பிள்ளை. மறுபடி 1862, 63 களில் இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுக் கட்டுனாங்க. நம்ம மக்கள் தொகை உயர உயர கோவிலின் அவசியமும் கூடிக்கிட்டுத்தானே போகுது.
1903 வது வருசம் சின்னதா ஒரு மூணு நிலைக் கோபுரம் உருவாச்சு. நல்ல நிதானமான வளர்ச்சிதான். சைனா டவுனுக்கே(!!!) லேண்ட் மார்க்கா ஆகி இருந்துச்சு இந்த இந்துக்கோவில். 1925 வது வருசம்தான் நாம் இப்போ பார்க்கிற இந்த அஞ்சுநிலை ராஜகோபுரம் நிர்மாணிச்சாங்க. ரொம்பவே கலர்ஃபுல்லா அழகான பதுமைகளுடன் கோபுரம் ஜொலிக்குது. இடைவிடாம தேவையானபோது மராமத்துப் பார்த்து புனரமைச்சு, குடமுழுக்குன்னு நிர்வாகம் நல்ல முறையில் சேவை செஞ்சுவருது. போன கும்பாபிஷேகம் நடந்து ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. எல்லா சிலைகளும் பளிச்ன்னு அட்டகாசம் போங்க. மாரியும் சிங்கைத் தமிழ்மக்கள் மனசில் நீங்காத இடம் பிடிச்சுட்டாள்.
கோவிலுக்குள்ளே படம் எடுக்க மூணு டாலர் கட்டணம். பிரச்சனை இல்லாமச் சுட்டுத் தள்ளலாம்.
கோட்டை வாசல் கதவுகளைப்போல் பிரமாண்டமா புதுக்கருக்கு அழியாத பளபளக் கதவைக்கடந்து உள்ளே காலடி எடுத்து வச்சால் வெல்கம் சொல்லி வரவேற்கும் மிதியடிகள்! கண்ணுக்கு நேரா தொலைவில் மூலவர். இடையில் உள்ள மண்டபம் முழுசும் அலங்கார ஓவியங்கள். அம்மனின் பலவித உருவங்கள். விதானத்தையும் விட்டுவைக்கலை. ஆலிலைக் கண்ணன் அழகா இருக்கார். அர்த்தமண்டபத்தின் அலங்காரம் தூள் கிளப்புது. கருவறையில் மஹாமாரி அருள் பொங்கும் முகத்துடன் இருக்காள். நல்ல பெரிய திருமேனி. நம்ம நாராயண பிள்ளை காலத்து சின்ன அம்மன் சிலையும் கருவறையில் இருக்கு.
அம்மனை கும்பிட்டுக் குங்குமப்பிரஸாதம் வாங்கி நெற்றியில் வச்சுக்கிட்டுக் சந்நிதியை வலம்வர முற்றத்தில் இறங்குனா...... ஒரு
நாலைஞ்சு பாத்திரங்கள் அடுக்கிவச்சு பிரஸாதம் விநியோகம். வேணுமுன்னா சாப்பிடலாம். எனக்கு வேணாமுன்னு இருந்துச்சு. பசி இல்லை. அவுங்களுக்குப் பின்புறம் இருக்கும் பெரிய கட்டிடத்தின் கீழ்தளத்தில் பெரியாச்சி, துர்கை, மதுரைவீரன், காளின்னு.....
முற்றத்தில் மூலவர் சந்நிதிக்கு இடப்பக்கம் புள்ளையாருக்குத் தனிக்கோவில். அழகான குட்டி விமானம். இவர் சித்தி விநாயகர். வணக்கம் போட்டு வலம் வர்றோம். பளிச்ன்னு படு சுத்தமா இருக்கும் வளாகத்தில் நம் வலதுபக்கம் பூராவும் அந்தந்த சாமிக்கு ஏற்ற வகையில் விதவிதமான விமானங்களுடன் உள்ள கருவறைகளின் சுற்றுச்சுவர்களில் (ஆச்சரியமான) கடவுளர் சிலைகள், காசைப் போடாதேன்னு கண்டிப்பாச் சொல்லிக்கிட்டு நிக்கறாங்க.!!!!!!!
பசுவின்மேல் சாய்ந்த நிலையில் குழல் இசைக்கும் ஸ்ரீ வேணுகோபாலன் உருவம் பதித்த விமானத்தின் கீழ் கண்ணை ஓட்டுனா........ ரெண்டு பெரிய விழிகள் நம்மைப்பார்த்து முறைக்குது! ஆஹா..... அரவான்! இதுதான் முதல் முறையா அரவான் சந்நிதி பார்க்கிறேன்! என்ன கதை என்ன கதைன்னு பிச்சு எடுத்த கோபாலுக்கு 108 வது முறையா அரவான் கதையைச் சொன்னேன்.
இந்தப்பக்கம் தனி மேடையில் வெள்ளி(கவசம்?) சிவலிங்கம்.
அவருக்குப்பின்னே உள்ள பகுதியில் ஏழு பெண்கள் ஒரே யூனிஃபார்ம் போட்டு தலையை அள்ளி முடிஞ்சு, கொண்டையில் பூச்சூடி வரிசைகட்டி உக்கார்ந்துருக்காங்க. மாம்பழக்கலர் உடல்(புடவைக்குத்தான்) ஜரிகை போட்ட ப்ரவுன் பார்டர். அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. எல்லாம் லைஃப் சைஸ்! இந்தப்பக்கம் இரு தேவியருடன் அய்யனார். த்ரௌபதியம்மன் சந்நிதி மண்டபத்தில் நிக்கறோம். இந்த அம்மனுக்குத்தான் இங்கே வருசாவருசம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தீமிதித் திருவிழா நடக்குது.
சந்நிதி உள்ளே பச்சைப்புடவையில் த்ரௌபதி. சின்ன உருவம். அஞ்சு துணை இருந்தும் தனியா நிக்கறாள். வெளிப்புறம் வலப்பக்கம் பூராவும் ஸ்ரீகிருஷ்ணன், அரியணையில் இருக்கும் தருமர். அவருடன் திரௌபதி. தருமருக்கு வலப்பக்கம் அர்ஜுனன் நிற்க, பீமன் தரையில் கொஞ்சம் தள்ளி அமர்ந்துருக்கார்.. இந்தப்பக்கம் நகுலன் நிற்க சகாதேவன் உக்கார்ந்துருக்கார். ராமர் பட்டாபிஷேகம் பார்த்துருக்கேன். ( நேரில் இல்லைப்பா.........சிலைகள், படங்கள் இப்படி.) ஆனா தருமர் பட்டாபிஷேகம் பார்ப்பது இதுவே முதல்முறை.
இன்னும் கருடவாகனத்தில் விஷ்ணு, அரவான், சிவனடியார் தலையைக் கொய்து கையில் பிடிச்சுருக்கும் ஒரு சாமின்னு ஏகப்பட்ட சிலைகள். எல்லாம் மூக்கும் 'முழி'யுமா இருக்கு.

போருக்கு முன் அம்மனை வழிபட்டு ஆசி வாங்குவது
விதானம் முழுசும் பாரதக் காட்சிகள். அதிலும் த்ரௌபதை கல்யாணம். தருமருக்கு மகுடம் சூட்டுதல் இப்படி பெரிய ஓவியங்கள். வெளிப்பிரகாரத்தில் தனியா முத்தாலராஜா. மதுரைவீரனாம் இவர்.
சிங்கை அறநிலையத் துறையின் கவனிப்பில் கோவில் நடக்குது. தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்னா இந்தக் கோவிலைச் சேர்த்துருக்காங்க.

மணி எட்டாகுதே. கிளம்பலாமுன்னா சும்மா விடறாங்களா? கோவிலில் பார்த்த ஒரு பெண்மணி, இங்கே பக்கத்துலே ஒரு புள்ளையார் கோவில் இருக்குதுங்க. அங்கே இன்னிக்கு ரொம்ப விசேஷம். அஞ்சே நிமிசத்துலே நடந்துபோகும் தூரம்தான்னு கிளப்பி விட்டுட்டாங்க.

தொடரும்............:-)