Friday, February 17, 2012

எதிர்பாராத விருந்தாளி.

இங்கே வந்த 24 வருசத்துலே முதல்முதலா வீட்டு (பின்)வாசலில் பார்த்ததும் எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை! எப்படி எப்படி? அதுவும் இங்கே...... எப்படி? ஒருவேளை......


தேவதைகள் ஆகாயத்தில் இங்கும் அங்குமாப் பறந்துக்கிட்டே இருப்பாங்களாம். அதுவும் 'ததாஸ்த்து' சொல்லிக்கிட்டே!!! இதுக்கு 'அப்படியே ஆகட்டும்' என்று பொருள் ' எங்க பாட்டி சொல்லும் 'கதை'களில் இதுவும் ஒன்னு. அதனால் எப்போதும் நல்ல சொற்களையே பேசணும். நல்லதே நினைக்கணும் அப்ப நல்லதாவே எல்லாம் நடக்கும். கெட்டவைகளை நினைச்சால் அதுக்கும் ததாஸ்துதான்:(

எங்களுக்கும் பறக்கும் உரிமை இருக்குன்னு, போறப்ப கீழே குனிஞ்சு நம்ம தாமரைக்குளத்தைப் பார்த்துருக்குமோ! தாமரைக்கிழங்கை நட்ட கையோடு குளம் பார்வைக்குப் போரடிக்குதேன்னு நாலைஞ்சு 'சீனத் தாமரைகளை' 2 டாலர் கடையில் வாங்கி மிதக்க விட்டுருந்தேன். கூடவே 'நல்ல கடை'யில் வாங்குன ஒரு ஸோலார் ஃபவுண்டனும்.

இயற்கை வரும்வரை செயற்கை இருக்கட்டும். எங்கிட்டே மட்டும் ரெண்டு கோடி இருந்திருந்தால் தோட்டாதரணியைக் கூப்பிட்டு செட் போட்டுருப்பேன் கேட்டோ:-)

அப்போ கிறிஸ்மஸ் & புதுவருஷத்துக்கான விடுமுறை நடந்துக்கிட்டு இருந்தது. 'யாரு வந்துக்கான்னு பாருங்க...ஓடி வாங்க'ன்னு கூப்பிட்டதும் 'அதிசயமா உடனே ஓடிவந்து பார்த்த கோபால்..... 'இவன் எப்படிம்மா இங்கே வந்தான்? எதாவது தின்னக்கொடு'ன்னார். வீடென்ன மினி சூப்பர் மார்கெட்டா? அடுக்களையில் பார்த்தால் தினப்படி நம்மூட்டுக் குருவிகளுக்குப் போடும் ரொட்டிதான் இருக்கு, அதுவும் ஒரே ஒரு ஸ்லைஸ். அதையே கையில் எடுத்துக்கிட்டுப் போனேன்.கூடவே என் மூன்றாம் கண்ணும்.

ஹலோ
ஹலோ எப்படி இருக்கேன்னு ஆசையாக் கேட்டுக்கிட்டே ரொம்ப நாள் பழகிய தோழி போல என்னை நோக்கி வர்றாங்க வாத்தம்மா. ரொட்டியைப் பிச்சுப்போட்டதும் லபக்கிட்டு பேசாம அங்கேயே உக்கார்ந்து ஓய்வெடுக்கறாங்க. 'இருக்கா இருக்கா'ன்னு எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டே சமையலை முடிச்சேன். அப்போ...இன்னுமா சமையல் ஆகலைன்னு பின்வாசக் கதவருகில் வாத்துநடை.
கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆகுமோன்னு தெரியலை. ப்ரெட் வேற இல்லை சாயங்காலம் போய் வாங்கிக்கணும். என்ன கொடுப்பாள் எதைக்கொடுப்பாள் என்று எண்ணிக்கொண்டே கண்ணாடிவழியா உத்துப் பார்க்கும் வாத்தம்மாவுக்கு..... மஹாநைவேத்தியம்தான் அளிக்கணும்.
'தின்னுவானாம்மா'ன்னு சந்தேகத்துடன் கேட்ட கோபாலுக்கு 'நோ ஒர்ரீஸ்' என்ற பதிலை செய்கையால் கொடுத்தாங்க வாத்தம்மா.( கட்டாயம் இது பெண்தான்) என்ன ஒன்னு மண்சோறு சாப்பிடவேண்டியதாப் போச்சு! பாவம்...... நம்ம பசங்க தட்டுலே வச்சு விளம்பி இருக்கலாமோ!


அப்புறம் பொடி நடையா புல்வெளியில் ஒரு சின்ன உலாத்தல். கொஞ்சம் ஓய்வுன்னு இருந்துட்டு...... நான் கடைக்குப்போய்வந்து பார்த்தப்ப ஆளைக்காணோம்.

அன்னிக்கு சாயந்திரம் ரமண் பையா வீட்டுக்கு விஸிட் போனப்ப 'சம்பவத்தைச் சொன்னேன்'. சாப்பாடு போட்டியா? அப்ப தினமும் வரும் பாருன்னு சொன்னாங்க. அவுங்க பேச்சை நம்பி மறுநாள் வழிமேல் விழி. ஊஹூம்..... நோ ஸைன்:(

ஒருவேளை....வழி தவறி எதிர்வீட்டுக்குள் போயிருக்குமோ! நீ.... ஹா......வ். ஸ்வாஹா.....

PIN குறிப்பு: இந்தப் பதிவை நம்ம கீதா சாம்பசிவம் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவுங்க 'நேற்றையப் பின்னூட்டம்'தான் இன்ஸ்பிரேஷன்.


43 comments:

said...

சீனத் தாமரைகளை' 2 டாலர் கடையில் வாங்கி மிதக்க விட்டுருந்தேன். கூடவே 'நல்ல கடை'யில் வாங்குன ஒரு ஸோலார் ஃபவுண்டனும்.//

ஆஹா! அழகு.

எதிர்பாராத விருந்தாளி வாத்தம்மாவுக்கு, ரொட்டி, சாதம், என்று அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்.

said...

அடடா... எதிர்பாராத விருந்தாளிக்கு என்னவொரு விருந்தோம்பல்...

ரொட்டி, சாதம்-னு அசத்தீட்டீங்க... :)

அச்சச்சோ எதிர் வீட்டுக்குப் போயிருக்கக் கூடாதுன்னு தோணுது...

said...

அழகான வாத்தம்மா:)! ஸ்வாஹா ஆயிருக்காமா திரும்ப வரணும்!

சீனத் தாமரைகள் அழகு. வாசல் வெண்கல உருளியில் தண்ணீர் ரொப்பி இயற்கை மலர்களை மிதக்க விடுவது வழக்கம். நடுவில் கிடைப்பதில் ஓரிரு நாள் தாமதமானால் என்ன செய்யவென இது போன்ற செயற்கை மலர்கள் கைவசம் எப்பவும் இருக்கும்:).

said...

இந்தப் பறவைகள் வாத்து மாதிரி இருந்தாலும் ஏரோப்ளைன் மாதிரி ஓட்டம் எடுத்து கடல் தாண்டி நாடுகளுக்கு சென்று முட்டையிட்டு வரும் வகைன்னு நினைக்கிறேன், இடையில் உங்க வீட்டில் ஓய்வு எடுத்திருக்கிறது, நீங்க அதிர்ஷ்டசாலி.
:)

said...

கத்தரிக்காய் புளிக்குழம்போட கல்சட்டியில் பிசைஞ்ச தயிர் சாதத்தை உருண்டை பிடிச்சு போட்டிருந்தா, உங்க வீட்லயே தங்கியிருந்துருப்பாங்களோ என்னவோ :-)

said...

உங்க வீட்டுக்கு வந்து ப்ரெட்டை லபக்கிட்டு சொல்லாம கொள்ளாமப் போன இந்த லார்டு லபக்கு தாஸோட பேரு மல்'லார்ட்' வாத்து. விவரங்கள் சுட்டியில் புட்டுப்புட்டு வெச்சிருக்காங்க.

http://www.birdinginformation.com/birds/ducks/mallard-duck

உங்கூட்டுக்கு அம்மாதான் விசிட் அடிச்சிருக்காங்கன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!..

said...

ஸ்வானம்மா வானத்துல போகாம திரும்ப வருவாங்க... சாப்பிட்ட இடத்தை மறக்கறதுக்கு அதென்ன மனிதர்களா... நீங்க எடுத்த படங்கள் அருமை!

said...

கலக்கல் ;-)

said...

விருந்தாளிக்கு அமர்க்களமாக விருந்து வைத்து கவனிச்சிருக்கீங்களே!!

படங்கள் அழகு.
அந்த ஸோலார் ஃபவுண்டன், சீனத்தாமரை சூப்பர்.

said...

நியூசி வாத்தம்மா....சாதம் சாப்பிட்டிருக்கே.....ரொம்ப சமத்து தான்....

இங்க மாடு கூட சப்பாத்தியும், பாலக்கும் தான் சாப்பிடுது...

சீனத்தாமரைகளும் நீரூற்றும் சூப்பர்....

said...

காக்கை குருவி எங்கள் ஜாதி
என்ற எனது பதிவை படித்துப் பாருங்கள். எனது மூத்த சகோதரி மகன் திரு தங்கராஜ், சிவகாசியில் அருமையாக பறவைகளை பராமரித்து வருகிறார். தினந்தோறும் விருந்தினர்கள் வருகை. இணைப்பு.
http://rathnavel-natarajan.blogspot.in/2011/05/blog-post_27.html
நன்றி அம்மா.

said...

PIN குறிப்பு: இந்தப் பதிவை நம்ம கீதா சாம்பசிவம் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவுங்க 'நேற்றையப் பின்னூட்டம்'தான் இன்ஸ்பிரேஷன்.//

ஆஹா, நன்னி ஹை, நன்னி ஹை!

ஆஹா, என்ன ஒரு அபூர்வ விருந்தாளி! ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுத்து வைச்சிருக்கீங்க. இங்கேயும் வாத்துக்குடும்பம் தாத்தா, பாட்டியோட இருக்கு, ஆனால் ஏரிக்கரையில் தான் போய்ப் பார்த்தாகணும். :(

நசிராபாத்தில் நாங்க இருந்த பங்களாத் தோட்டத்தில் மயில், குயில், வாத்து, புறா, முயல்னு எல்லாமே வரும். சர்வ சகஜமா "आप कैसे हैं? "னு விசாரிக்கும். அது ஒரு காலம்!

என்னதான் சொல்லுங்க, ஒருநாள் வந்துட்டு மறுநாள் வரலைனாக் கவலையாத் தான் இருக்கு! :(((((

said...

அழகான வாத்து. கொஞ்சம் கூட திடுக்கிடலே இல்லாம வீட்டுக்குள்ள சுத்தியிருக்கு.

தமிழ்நாட்டு வழக்கப்படி வரப்போற கணவன் வாத்துக்காக மண்சோறு வேற சாப்பிட்டிருக்கு. அங்காளபரமேஸ்வரி துணையிருப்பாள். :)

பெங்களூர் வீட்டில் புறாக்கள் வரும். அதுக்கு ஜன்னலுக்கு வெளிய கொஞ்சம் அரிசி போட்டு வெச்சேன். ஆனா கொஞ்சநாளா வரவேயில்லை. அதுனால அரிசி போடுறத நிறுத்தீட்டேன். நேத்து நேரங்கழிச்சு வேலைக்குக் கிளம்புனதால புறா காலைல வர்ரது தெரிஞ்சது. நாளையிலிருந்து திரும்பவும் அரிசி போடனும்.

அப்பாம்மா இங்கயே வந்துட்டதால சென்னைல தெனம் வீட்ல சாப்டுக்கிட்டிருந்த காக்காய்க் கூட்டம் என்ன பண்ணுதோ தெரியலை. சத்தம் போட்டுக் கூப்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். யாராச்சும் சாப்டா ஆசைக்குக் கொஞ்சமா கேட்டு வாங்கிச் சாப்புடும். என்ன பண்ணுதங்களோ இப்போ!

said...

பதிவும் போட்டோவும் நன்றாக உள்ளது. நீங்க போட்ட சாப்பாட்டை சாப்பிடதுனலா அதற்கு அதிர்ஷ்டம் அடித்து அத்ற்கு அமெரிக்கா விசா கிடைத்து இங்கே வந்துவிட்டது. ஹீ.ஹீ

said...

வாத்தம்மா என்னமா உட்கார்ந்திருக்காங்க. முழு சாதத்தையும் சாப்பிட்டாங்களா.
ராஜலக்ஷ்மி பார்க்கலியா.
ஆனாலும் அதீத அழகுப்பா தாமரைத் தடாகம். செயற்கையா இருந்தாலும்கண்ணைப் பறிக்கிறது.
ஒரிஜினல் தாமரை தனியா தெரிகிறது. அதெல்லாம் எதிர்வீட்டுக்குப் போயிருக்க மாட்டங்க. நேத்திக்கு இங்க ஒரு இடத்தில பார்த்தேன்.:) துளசி வீட்டுக்குப் போறேன். சேதி இருந்தா சொல்லுன்னுது;)

said...

சொல்லாம வந்த விருந்தாளிக்கே இந்த கவனிப்புனா , சொல்லிட்டு வந்தா ?

said...

இன்று ...

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .

said...

துளசிகையால் விருந்துண்ண வந்திருக்காங்க வாத்தம்மா.
ஹீரோஜினி ஆகிட்டாங்க.:)

said...

ஆஹா !!!! மல்லார்ட் வாத்தக்கா என்ன ஜோரா ரிலாக்ஸ்டா உக்காந்திருக்காங்க .அழகோ அழகு ..சென்னைல எங்க வீட்டுக்கு ஒரு
மிஸ்டர் ரங்கன் அடிக்கடி வருவாராம் .வந்து தண்ணி, இட்லி எல்லாம் சாப்பிட்டு போவாராம் .கொஞ்ச நாளா காணோம்னு அம்மா சொன்னாங்க .திடீர்னு வரல்லன்னா கஷ்டமாதான் இருக்கும் .

said...

இதை சொல்ல வில்லையே நான் அம்மா இப்படிதான் சொன்னாங்க
//ரவி கொஞ்ச நாளா வீட்டுபக்கமே வருவதில்லை //
நீங்களும் அம்மா மாதிரியே செல்லம் /குழந்தை அப்படீன்னு கூப்பிடறீங்க

said...

வாங்க கோமதி அரசு.

வராதவுங்க வந்துட்டா...ஒரு பதற்றம் ஏற்படுதுல்லே..... அவுங்களுக்கு என்ன கொடுப்பதுன்னு திகைப்பும் வந்துருது. வயித்துக்கு ஆகுமோன்ற கவலை வேற....அதான் வெறுஞ்சோறு...

(நான் பயணத்துலே இருக்கும்போது வெறுஞ்சோறு கிடைச்சால் போதும்ன்னு இருப்பேன்)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இதுவரை மீண்டும் வரலை. அதான் கவலையா இருந்துச்சு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வீட்டுவாசலில் வெண்கல உருளியில் ..... நினைச்சுப்பார்க்கவே சுகமா இருக்கு. ஒரு படம் எடுத்துப்போடுங்க.

நம்மூர் குளிருக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். அதான் குருவிக்குளியலுக்கு Bird Bath இருக்கேன்னு விட்டுடறேன். அதுலே பூக்கள் போட்டால் குளியலுக்கு இடைஞ்சலா இருக்கும்:(

செயற்கைப்பூக்கள் சில சமயம் இயற்கைப்பூக்களைவிட அழகா அமைஞ்சுருது இல்லே!!!!

ஸோ அண்ட் ஸோ திரும்ப வரலை:(

said...

வாங்க கோவியாரே.
அவ்ளோ அதிர்ஷமெல்லாம் இல்லை. நம்மூரில் ஏவோன் ஆற்றங்கரைப் புதர்களில் இந்த வாத்துவகைகள் ஏராளமா இருக்கு. அவற்றைப்பிடிக்கவோ கொல்லவோ முடியாது. தடை செஞ்சுருக்காங்க. இல்லேன்னா.......

ஹாங்காங் கைமாறுனதுக்கு அப்புறம் இதுங்க இனமே 'இங்கே' அழிஞ்சுருக்கும்!

said...

எஸ் மைலார்ட் அமைதிச்சாரல்.

மல்லார்டைப் பத்திச் சொன்னதெல்லாம் கரெட்க்ட்டூ:-)))

மனித இனத்தைத்தவிர மற்ற எல்லா இனங்களிலும் ஆண்கள்தான் அழகு என்ற என் கருத்தை உறுதி செஞ்சுக்கலாம்:-))))

சில சமயம் குடும்பத்தோடு மெயின் ரோடைக் கடக்கும்போது போக்குவரத்தை நிப்பாட்டி இதுகள் கடக்கும் வரை பொறுமையா நிப்போம்.

அடடா...... குஞ்சும் குளுவானுமா
ரொம்ப அழகா இருக்கும்!

கல்சட்டி கொண்டுவரலைப்பா....... இல்லேன்னா....:-)))))

இந்தமுறை மண்சட்டிகள் கொண்டுவந்துருக்கேன்:-)

said...

வாங்க கணேஷ்.

இங்கே வாத்துகள் உண்மையாவே வானத்துலே பறந்து போகுதுங்க!!!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க கோபி.

தெளியும் நாள் தூரத்தில் இல்லை:-))))

said...

வாங்க ராம்வி.

முந்தி மின்சாரத்துலே இயங்கும் பவுண்டெந்தான் வச்சுருந்தோம். ஊரைவிட்டுப்போகும்போது கழட்டி வச்சது இப்ப எங்கே இருக்குன்னு தெரியலை. ஒருநாள் கண்டான்முண்டான் சாமான்களைக் குடையணும். அதான் ஸோலார் வகை கிடைச்சப்ப வாங்கிப் போட்டது. அப்பப்ப வேலை செய்யுதான்னு அடுக்களை ஜன்னல்வழி ஒரு பார்வை பார்த்துக்குவேன். இங்கே அடிக்கிற வெயிலை நம்பினேன் பாருங்க....

அத்தி பூக்கும் நேரம்:-)

said...

வாங்க கோவை2தில்லி.

சண்டிகரிலும் மக்கள் சப்பாத்திகளை மாட்டுக்குக் கொடுப்பதைப் பார்த்துருக்கேன். பூனாவில் இருந்தப்பக் கீழ் வீட்டு 'உம்மா' தினமும் கனமான சப்பாத்தி ஒன்னு செஞ்சுவச்சு, வீட்டுவாசலுக்குள் தலைநீட்டும் பசுவுக்குக் கொடுப்பாங்க. அதுவும் 'டாண்'ன்னு தினம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆஜராகும்!!!!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

சுட்டிக்கு நன்றி. முன்பே வாசித்திருந்தேன்:-)

said...

கப்பல்லேந்து விருந்தாளி, ஏரிலேந்து விருந்தாளி, ! ஏங்க, அன்னபூரணி அம்சம் நிறைய இருக்குறா மாதிரி தோணுதே!

A special lady attracts special visitors.

said...

வாங்க வெற்றிமகள்.

அட! அப்படியா?



ஏமாளின்னு அப்பட்டமா இந்த வாத்துக்குக்கூடத் தெரியுதே!ன்னு நான் வேறமாதிரி இல்லே நினைச்சேன்:-)))))

said...

வாங்க கீதா.

உண்மைதான். மறுநாள் காத்திருந்து பார்த்திருந்து கண்கள் பூத்தே போச்சு:(

மயில் வந்தா அட்டகாசமா இருந்துருக்குமே!

மே டீக் ஹூம்ன்னு சொல்லலையா:-)))

said...

வாங்க ஜீரா.

அங்காள பரமேஸ்வரி துணையா இருந்திருப்பாள் போல இருக்கே. குழந்தையுடன் ஒருத்தியைப்பார்த்தேன். ஜாடை என்னவோ நம்மூட்டுக்கு வந்தவளைப்போல்தான் இருந்துச்சு

இந்தியா வந்துருந்தப்ப நம்ம பறவைகளுக்கு யாரு ப்ரெட் போட்டுருப்பாங்களோன்னு கவலைதான். பார்வதிபரமேஸ்வரன் எல்லோருக்கும் படியளப்பாங்கன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். எந்த ஊரில் இருக்கோமோ அங்கே கொஞ்சம் தீனியை இதுகளுக்கும் போடணும். வீடுதேடி வர்றதைத் துரத்த முடியுமா?

இப்படிச் சொல்றேனே தவிர வீட்டாண்டை வந்த ரெண்டு மனுசங்களை உள்ளே வரவிடாம துரத்த வேண்டியதாப் போச்சு. சாட்டர்டே அட்வெண்டிஸ்ட் சர்ச். பண்பாட்டுக்காக வீட்டுக்குள்ளே அழைச்சுட்டு பலதடவைக் கஷ்டப்பட்டுட்டேன். நீ கும்புடறது கல்லுன்னு ஆரம்பிக்கும்போது எரிச்சலா வருது.

இப்பெல்லாம் ஸாரி. நான் வேறு மதம். நீங்கபோயிட்டு வாங்கன்னு வாசலோட துரத்தறேன்:(

said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

இவுங்களுக்கு எதுக்கு விஸா? அதெல்லாம் மனுசப் பயல்களுக்காச்சே:-))))

said...

வாங்க வல்லி.

தரையில் கொஞ்சம்போல சாதப்பருக்கைகள் பாக்கி இருந்துச்சுப்பா.

சிங்கையில் சீனக்கோவில் வாசலில் எல்லா நிறங்களிலும் தாமரை மொட்டுகள் விக்கறாங்க. பெரிய பெரிய மொட்டுகள். ஹைப்ரிட் வகைன்னு நினைக்கிறேன்.

நமக்கு அது கொடுப்பனை இல்லைன்னாலும் செயற்கையாவாவது இருக்கட்டுமேன்னு.....

ஆமாம். அந்த படத்துலே இயற்கைப்பூ ஒன்னுகூட இல்லையேப்பா:-))))

வாத்தை பத்திரமாத் திருப்பி அனுப்பி வுடுங்கப்பா:-)

said...

வாங்க ராஜபாட்டை ராஜா.

சொல்லிட்டே வாங்க.புது சோறாவது வடிச்சு வைக்கிறேன்:-)))))

பதிவு திருடு போகாமல் இருக்க ஒரே வழி நீங்க சொன்ன கடைசி வழிதான்:-))))

said...

வாங்க மாதேவி.

போன ஜென்மத்துலே நான் அவுங்க வீட்டுலே சாப்பிட்டு இருப்பேன் போல:-))))

said...

வாங்க ஏஞ்ஜலீன்.

அம்மா சொன்னது போல் திடீர்னு வரலைன்னாக் கஷ்டமாத்தான் போயிருதுப்பா.

இந்த ராஜலக்ஷ்மி தினமும் வெவ்வேற நேரத்துக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறாள். இன்னிக்கு மெதுவா வீட்டுக்குள்ளே வந்து சாமியறைக்கு நேராப்போய் நின்னதும் ஆடிப்போயிட்டேன். ஒரு வேளை கோகியின் புனர்ஜென்மமோன்னு!!!

said...

இப்படிச் சொல்றேனே தவிர வீட்டாண்டை வந்த ரெண்டு மனுசங்களை உள்ளே வரவிடாம துரத்த வேண்டியதாப் போச்சு. சாட்டர்டே அட்வெண்டிஸ்ட் சர்ச். பண்பாட்டுக்காக வீட்டுக்குள்ளே அழைச்சுட்டு பலதடவைக் கஷ்டப்பட்டுட்டேன். நீ கும்புடறது கல்லுன்னு ஆரம்பிக்கும்போது எரிச்சலா வருது.//

நீங்க வேறே; அதுவானும் வேறே நாடு மொழி, கலாசாரம். இந்தியாவில்,,,,,,.......... என்னத்தைச் சொல்றது! :((((((((

said...

// இந்தியா வந்துருந்தப்ப நம்ம பறவைகளுக்கு யாரு ப்ரெட் போட்டுருப்பாங்களோன்னு கவலைதான். பார்வதிபரமேஸ்வரன் எல்லோருக்கும் படியளப்பாங்கன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். எந்த ஊரில் இருக்கோமோ அங்கே கொஞ்சம் தீனியை இதுகளுக்கும் போடணும். வீடுதேடி வர்றதைத் துரத்த முடியுமா? //

அதேதான். இங்க புறாக்களுக்கு அரிசி. அரிசியை அப்படியே முழுங்குதே. நமக்கெல்லாம் சோறா வேகவெச்சு மெத்து மெத்தா இருந்தாத்தான் தொண்டையில் இறங்குது.

// இப்படிச் சொல்றேனே தவிர வீட்டாண்டை வந்த ரெண்டு மனுசங்களை உள்ளே வரவிடாம துரத்த வேண்டியதாப் போச்சு. சாட்டர்டே அட்வெண்டிஸ்ட் சர்ச். பண்பாட்டுக்காக வீட்டுக்குள்ளே அழைச்சுட்டு பலதடவைக் கஷ்டப்பட்டுட்டேன். நீ கும்புடறது கல்லுன்னு ஆரம்பிக்கும்போது எரிச்சலா வருது.

இப்பெல்லாம் ஸாரி. நான் வேறு மதம். நீங்கபோயிட்டு வாங்கன்னு வாசலோட துரத்தறேன்:( //

தப்பில்லை. இதை நானும் பட்டிருக்கேன். பாவம் அறியாதவர்கள். என்னோட ஆபீஸ் டெஸ்க்குல பிளாக் மடோனா என்னும் கருப்பு மேரி கையில் ஏசுவோடு உட்காந்திருக்கிறாள். மூச்சுக்கு முச்சு முருகா என்றாலும் அந்த மேரி மீது ஒரு பற்று. ஐரோப்பாவில் ஊர் ஊராச் சுத்துனப்பவும் அந்த ஊர்ச் சர்ச்சுக்குப் போறத தவறவிட்டதில்லை.

ஆயிரம் பேர் சொன்னாலும் எல்லாம் ஒன்னுதான்.

தேவையில்லாம பிரச்சனைய வளக்குறத விட “நாங்க வேற”ன்னு சொல்லி அனுப்புறது தப்பேயில்லை. ரெண்டு பக்கமும் நேரம் மிச்சம்.

said...

கீதா,

இந்தியாவில் அட்லீஸ்ட் கையில் பெரிய
பைபிளைத் தூக்கிக்கிட்டு வருவாங்க. யாருன்னு ஈஸியாக் கண்டு பிடிச்சுடலாம். இங்கே ஷோல்டர் பை ஒன்னு மாட்டிக்கிட்டு இளமையா ஒரு ஜோடி வந்து கதவைத் தட்டும். சம்பளத்துக்கு வேலை செய்யறாங்கன்னு நினைக்கிறேன். இப்பெல்லாம் அந்த ஜோடியில் ஒருத்தர் சீனர்!!!!!

said...

வாங்க ஜீரா.

சண்டிகர் வீட்டுலே ஏராளமான பறவைகள் வரும். ஊர் முழுக்க மரங்கள் நெருக்கமா இருக்குல்லே!

கீழே வீட்டு உரிமையாளர்கள் சன்னா மசாலாக்கறி முதக்கொண்டு மீந்து போற சமாச்சாரங்கள் அத்தனையும் வெளியே ஒரு செவ்வக மரஸ்டூலில் போட்டு வைப்பாங்க. கீழே சிந்திச் சிதறாமல் இருக்க ஸ்டூல் ஓரத்தில் மரக்கட்டையில் ரெண்டு அங்குல உயரம் கட்டைச்சுவர்கூட இருக்கு!

பறவைகள், அணில்கள்ன்னு வேத்துமை பார்க்காமல் எல்லாரும் வந்து சாப்பிடுவாங்க. நம்ம கேமெராவுக்கும் வேட்டை ஆப்டும்:-)


மேரின்னதும் எனக்கு என்ன ஒரு ஒத்துமைன்னு ஆச்சரியமாப்போச்சு. இங்கே வந்த புதுசில் நம்ம பழைய வீட்டு பரணில் மேரி சிலை ஒன்னு கிடைச்சது. அவர் லேடி ஆஃப் ஃபாத்திமா. தலையை இடப்புறம் லேசாச் சாய்ச்ச நிலையில் ரெண்டு கரம் கூப்பி நமஸ்காரம் சொல்றதுபோல் நிக்கும் போஸ்.

அட....மேரியானாலும் சாமின்னு எடுத்து வச்சுக்கிட்டேன். அப்புறம் ஒரு தோழி வாயிலாக அந்த வீட்டில் பேய் இருந்துச்சுன்னும் அதை ஜெபம் பண்ணி ஓட்டுனாங்கன்னும் தெரியவந்துச்சு. ஒருவேளை அப்ப வச்ச சிலையா இருக்கலாம்.

அந்த வீட்டில் நாம் 17 வருசங்கள் இருந்தோம். கடைசிவரைப் பேயைப்பார்க்கும் பாக்கியம் கிடைக்கலை. நான் இருப்பதால் அது வந்துருக்க வாய்ப்பில்லை:-)))

எந்த சர்ச், தர்க்கான்னாலும் நான் போய் என் மனசில் நிற்கும் கடவுளைக் கும்பிட்டுவருவேன். எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

சாமிக்கு நாம் பெருமாள், முருகன்னு பெயர்வச்சதைப்போல அவுங்களுக்கும் ஏசு, மேரின்னு வைக்க உரிமை இருக்குல்லே