Thursday, March 15, 2012

கடசியா மொகம் பார்க்கணுமுன்னா.......... Christchurch Earthquake 8

வறட்டியைக் கையில் வச்சுக்கிட்டு, கடைசியா முகம் பார்க்கணுமுன்னா சீக்கிரம் பார்த்துக்குங்க. மூடிட்டா அப்புறம் எடுக்கமுடியாதுன்னு சுடுகாட்டுலே வெட்டியான் சொல்றதைப்போல.......

எங்க பிஷப் விக்டோரியா ரொம்பவே கடக்கா இருக்காங்க. " மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு இடிக்கத்தான் போறோம். ஆனால் புல்டோஸர் கிடையாது. ரொம்ப மரியாதையா, கண்ணியம் குறையாம கல் பை கல்லா எடுத்துருவோம். விழுந்தாலும் மனிதர்களுக்கு ஆபத்து இல்லாத வகையில் ஒரு ரெண்டு இல்லை மூணு மீட்டர் உயரம் பாக்கி இருக்கும்வரைதான் எடுக்கப்போறோம்."

"அப்ப..... குட்டிச்சுவரா நிக்குமா? கல் பை கல் எடுக்கத் தெரிஞ்சவங்க அதே கல் பை கல்லை வச்சு திரும்பக் கட்டி எழுப்பக்கூடாதா? "

ஊரே ரெண்டு பட்டுக்கிடக்கு இந்த விவகாரத்துலே! "நிபுணர்கள் ரிப்போர்ட் வந்துருக்குன்னு சொல்லும் பிஷப், அந்த அறிக்கையை வெளியிடணும். அதுலே என்னதான் இருக்குன்னு மக்களுக்கும் தெரியணும்."

"அது ரொம்ப டெக்னிக்கலா இருக்கு. மக்களுக்குப் புரியாது."

"புரியுதோ புரியலையோ காமிம்மா காமி."

"நான் எஞ்சிநீயரிங் படிக்கும் மாணவன். எனக்குப் புரியும். சீக்கிரம் வெளியிடும் பிஷப்பே! "

ஐய்ய..... போன பிஷப் ரொம்ப நல்லவர். மக்களோடு மக்களா பழகுவார். இந்த பிஷப்தான்...... எதுக்கும் மசியலை. எல்லோரும் நொந்து போயிருக்கும்போது வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காம சதுக்கத்தை கடற்கரை சினிமா தியேட்டர் ஆக்கலாமுன்னு திருவாய் மொழிஞ்சாங்க இந்தம்மா:(

Christchurch's Cathedral Square could be transformed into an artificial beach with large movie screens. Bishop of Christchurch Victoria Matthews said the proposal could help make the earthquake-damaged Square "welcoming and engaging" again.
She spoke about the idea during the visit of the Australian governor-general to Christchurch.

(எங்கூலே பொம்நாட்டிகள் பூஜாரிணியா இருக்க ஒரு தடையும் இல்லை கேட்டோ!)
ரைட் ரெவரண்ட் விக்டோரியா மாத்யூஸ் கனடாவில் பிறந்து வளர்ந்தவங்க. எங்க ஊர் (ஆங்லிகன் சர்ச்சு) கதீட்ரலுக்கு பிஷப்பா வந்து இது நாலாவது வருசம் ஆகுது. உள்ளூர் மக்களுக்கு மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த கதீட்ரலோடு இருக்கும் பிணைப்பும் உணர்ச்சியும் சொந்தமும் இவுங்களுக்கு அவ்வளவா இருக்காதுன்னுதான் நினைக்க வேண்டி இருக்கு. இது எங்க அடையாளம். இந்த ஊர் பெயருக்குக் காரணகர்த்தா. எங்க ஊர் சரித்திர சாட்சி.
இந்த ஊருக்கு முதல் பிஷப்பா ஹென்ரி ஜான் ச்சிட்டி ஹார்ப்பர் 1856க்கு வந்தார். அவருடைய முயற்சியால் திட்டங்கள் போட்டு 1858 ஆண்டு சர்ச் கட்டிக்க ஒப்புதல் கிடைச்சது இங்கிலாந்தில் இருந்து. ப்ரிட்டிஷ்காரர் ஜ்யார்ஜ் கில்பர்ட் ஸ்காட் என்ற கட்டிடக் கலைஞர் ( கோதிக் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட்) வந்து கட்டிடத்துக்கு ப்ளான் போட்டுக் கொடுத்தார்.

1864 வது ஆண்டு அடிக்கல் நாட்டினாங்க. காசு பத்தாக்குறைன்னு கிடப்பில் கிடந்துச்சு சில வருசங்கள். அப்போ இது ரொம்பச் சின்ன ஊர். மக்கள் கணக்கெடுப்பெல்லாம் பார்த்தால் 450 ஆண்கள் இருந்துருக்காங்க. பெண்கள் பற்றிய குறிப்புகள் ஒன்னும் கிடைக்கலை. சரிக்குச்சரின்னு பார்த்தால்கூட குழந்தைகள் உட்பட ஒரு ஆயிரம் பேர் இருந்துருக்கலாம்.

1873 வது வருசம் உள்ளூர் கட்டிடக்கலைஞர் பெஞ்சமின் மவுண்ட்ஃபோர்ட் திட்டம் நிறைவேற முயற்சி எடுத்தார். முந்தி வரைஞ்ச பழைய டிஸைன் நல்லாவே இருக்குன்னு அதையே ஆதாரமா வச்சுக்கிட்டு, பக்கத்துலே பெல் டவர், கூடுதல் பால்கனிகள், வெராந்தா இப்படி சேர்த்துக்கிட்டார்.
ரெட்டைக் கதவுகளுடன் கோவில் உள்வாசல்

ஒரிஜனல் ப்ளான்படி இது முழுக்க முழுக்க மரக்கட்டிடம்தான். ஆனால் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துன சமயம் நல்ல masonry stone உள்ளூர் பேங்க்ஸ் பெனின்சுலா (Banks Peninsula) வில் கிடைக்குதேன்னு அதையும் சேர்த்துக்கிட்டாங்க. உள்ளூர் நேடிவ் மரங்களான டோடரா, மடாய் (totara and matai) மரத்தடிகளை கூரைக்கான சப்போர்ட்டுக்குப் பயன்படுத்திக்கிட்டாங்க.
மளமளன்னு வேலைகள் நடந்து 100 அடி உயர பெல் டவர் கட்டி முடிச்சப்ப வருசம் 1881. 17 வருசம் கழிச்சு ஊர் அழகுக்காக சர்ச்சின் தெற்குப்பக்கம் ரெண்டு Sycamore மரங்களையும் நட்டு வச்சாங்க!

முதல்முதலா குடியேறுன குடும்பங்களில் ஒருவரான ராபர்ட் ஹீட்டன் ரோடஸ் என்றவர் தன்னுடைய சகோதரனின் நினைவுக்காக கோபுரக் கும்மாச்சிக் கூம்பு எல்லாம் வச்சுத்தர முன்வந்தார். இன்னும் 33 மீட்டர் உயரம் கூடிப்போய் மொத்தம் 63 மீட்டர் ஆஜானுபாகுவாக சதுக்கத்துக்கு ஒரு அழகை கூட்டிச்சு. அதுலே ஏறிப்போய்ப் பார்க்க படிகள் வச்சுருக்கு. உசரே இருந்து பார்த்தால் ஊரே தெரியும். குறுகலான படிகளில் ஏறிப்போய் வந்தவர்களுக்கு ஒரு சான்றிதழ் கிடைக்கும். நம்மகிட்டே கூட ஒன்னு இருக்கு. இதுக்கு ஒரு சின்னக் கட்டணமா ரெண்டு டாலர் கொடுக்கணும்.
1881 வது வருசம் பெல்டவருக்குள்ளில் ஆலயமணிகளா பத்து காண்டாமணிகளை வார்த்துக் கொடுத்துச்சு ஒரு லண்டன் கம்பெனி. John Taylor & Co of Loughborough. லண்டனில் இருக்கும் செயிண்ட் பால் தேவாலயத்து மணிகளைச் செஞ்சு கொடுத்தவங்களும் இவுங்கதான். இந்த மணிகளின் எடை 7 டன்! இவ்வளவு பாரமும் தாங்கும்விதமா பெரிய மரங்களை உத்தரமாப் பயன்படுத்துனாங்க. 1978லே எங்க தேவாலயத்தைப் பழுது பார்த்து சீரமைக்கும்போது இந்த உத்தர மரங்களை மாற்றவேண்டியதாப்போச்சு. பாவம் அதுவும் எத்தனை வருசம் கனம் தாங்கும்? அப்போ புது மணிகள் வேணுமுன்னதும் இதே கம்பெனி 13 மணிகளைச் செஞ்சு கொடுத்தாங்க. சரியாச் சொன்னால் 12 காண்டாமணிகளும் பெரிய தாம்பாளம்போல் ஒரு மணியும்! பெரிய மணிகள் D நோட்டும் இந்த தாம்பாளம் C நோட்டுமா ட்யூன் ஆகி இருக்குமாம்.
மணி இழுத்த மகான்கள்

இந்த மணிகளை இழுத்து ஒலிக்கச் செய்ய பெல் ரிங்கர்ஸ் என்னும் குழு இருக்கு. பலவருசங்களா இவுங்க ஞாயிறு (சண்டே சர்வீஸ்) பூஜை நேரங்களுக்கு மணி அடிச்சுக்கிட்டு இருந்தாலும் கூட, வாரம் ஒருநாள் பெல் அடிச்சுப் பிராக்டீஸ் செஞ்சபடியே இருப்பாங்க.அது செவ்வாய்க் கிழமைகளில் மாலை 7 முதல் ஒன்பது வரை. அந்த நாட்களில் நாங்க வேற வேலை காரணமா சிட்டி செண்டர் பக்கம் சுத்திக்கிட்டு இருந்தோமுன்னா மணிச்சத்தம் கேட்டதும் வண்டியை ஓரங்கட்டி அதைக் கேட்டு ரசிப்போம். ஏதோ பாட்டு மாதிரி ரொம்ப நல்லா இருக்கும். அந்த தினங்களில் பொதுமக்கள் போய் மணி அடிக்கும் அழகை நேரில்கூடப் பார்க்கலாம். ஆனாலும் அப்போ ஒரு முறைகூடப்போய்ப் பார்க்கத் தோணலை:(

இந்த ஆலயமணி என்பது முக்கியமா சின்ன ஊர்களில் மக்களுக்குச் சேதி சொல்லும் சமாச்சாரம் என்பது இப்போ நினைவுக்கு வருது. திருச்சபையைச் சேர்ந்த ஒருவர் சாமிகிட்டே போயிட்டாருன்னா சீரான இடைவெளியில் 'டிங்' ன்னு ஒற்றை ஓசையா வரும் மணிச்சத்தம் தகவல் பலகைதான். ஒரு நீண்ட ஒலி உலகத்து சோகத்தையெல்லாம் எப்படி விளம்புதுன்னு பாருங்களேன்!!!!
அழிவில் வீழ்ந்து கிடக்கும் மணிகள்


இனிமேல் மணி அடிச்சு சேவை செய்ய இங்கே வாய்ப்பே இல்லைன்னு ,மனம் நொந்துபோல எங்க பெல் ரிங்கர்ஸ் குழு, அண்டை நாடான அஸ்ட்ராலியாவுக்குப் போய் சிலபல சர்ச்சுகளில் மணியை இழுத்து அடிச்சு தங்கள் சோகத்தைத் தீர்த்துக்கிட்டு வந்துருக்காங்க.

எங்கூரு கதீட்ரலின் ஆர்கன் கூட ஒரு விசேஷத்தன்மை வாய்ந்தது. வில்லியம் ஹில்ஸ் அண்ட் சன்ஸ் என்ற கம்பெனி 1882 இல் இந்த ஆர்கனை அமைச்சுத் தந்தாங்க. அதுக்குப்பிறகு 1927 வது ஆண்டு அதைப் பழுதுபார்த்துச் சரிவராம புதுசாவே ஒன்னு செஞ்சு வச்சாங்க. 1980 வது ஆண்fடு மீண்டும் புதுப்பிச்சு கூடிதலா 11 ரேங்க்ஸ் ( இதுலே ஒன்னு ட்ரம்பெட் ஒலியும் தரும்) பொருத்தினதும் பூவுலகின் தென் கோளத்துலேயே 'பெஸ்ட் ரொமாண்டிக் இன்ஸ்ட்ரூமெண்ட்' என்ற பெயரைத் தட்டிக்கிட்டுப் போச்சு. காதல் எதனாலே வருது, எப்ப வருது... எப்படி வருது, எதுக்கு வருதுன்னு இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியலை பாருங்களேன்!!!!

PIN குறிப்பு 1 : பதிவின் நீளம் கருதி மீதிப்பாதி அடுத்த பதிவில்.

PIN குறிப்பு 2 : கண் முன்னால் காணாமப்போனாப்லெ சரித்திரம் அழியுதே என்ற அங்கலாய்ப்பிலும், 'போனவங்க பெருமைகளை' மறப்பது தமிழ்ப்பண்பாட்டில் இல்லை என்பதாலும் கதீட்ரலின் கதியை இங்கே பதிவு செய்து வைக்கிறேன். வாசிக்க Bபோரா இருந்தாலும் புரிஞ்சுக்குவீங்க என்ற நம்பிக்கை என்னை விட்டுப்போகலை கேட்டோ!

PIN குறிப்பு 3 : இந்தப்பதிவை வெளியிடும் இன்று பகல் எங்கூர் மந்திரவாதி, தேவாலயத்தை இடிக்கக்கூடாதுன்னு சொல்லும் மக்கள் ஆதரவைத் திரட்டி கையெழுத்து வேட்டை நடத்தப்போவதாகவும், 'பிஷப் ஜெபம் பண்ணட்டும். நான் அதுக்கு எதிரா மந்திரம் ஸ்பெல் போடறேன்'னு சொல்லிக்கிட்டு இருக்கார். மந்திரமோ தந்திரமோ பலிக்கட்டுமுன்னு நாங்க ஜெபம் பண்ணறோம். மந்திரவாதி ஒன்னும் ஏப்பை சாப்பை இல்லை. கலாசாலை பேராசிரியராக்கும்.



23 comments:

said...

புதுமை என்று நினைத்து இத்தனை பழைய ஒரு சின்னத்தை எதற்கு இடிக்க வேண்டும்.

பார்க்கவே அழகாக இருக்கும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படவா வேண்டும்....

தொடருங்கள்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கதீட்ரலின் இப்போதைய படம் சேர்க்கலை பாருங்க!! அதான்.....

இதோ படம் ஒன்னு சேர்த்துடறேன்.

said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

said...

தேவனே என்னைப் பாருங்கள். கதீட்ரல் அழற மாதிர் இருக்கு.

said...

பூகம்பத்தைத் தாங்கற வகையில் கட்டடக் கலை நிபுணர்களின் உதவியோட அதை புதுப்பிக்கலாமே.. தியேட்டர் ஆக்கி ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் போக்கடிக்கறதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா..

said...

பூகம்பத்தைத் தாங்கற வகையில் கட்டடக் கலை நிபுணர்களின் உதவியோட அதை புதுப்பிக்கலாமே.. தியேட்டர் ஆக்கி ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் போக்கடிக்கறதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா..//

அமைதிச்சாரலின் கருத்தையே நானும் வழி மொழிகிறேன்.

மணி கீழே கிடப்பதைப்பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சங்கடமாய் இருக்கிறது.

said...

மணி இழுத்த மகான்களைப் போட்டு விட்டு கீழேயே மணியின் இன்றைய நிலையை போட்டிருந்திங்க பாருங்க.. மனதை அசைச்சுடுச்சு...

said...

மீதிப்பாதியைப் படிச்சுட்டு கமென்ட் போடறேன், கேட்டோ?

said...

மந்திரமோ தந்திரமோ பலிக்கட்டுமுன்னு நாங்க ஜெபம் பண்ணறோம்..

ஆமாம்.. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..

மந்திரமோ, மாயமோ, தந்திரமோ, கையெழுத்தோ எதுவானாலும் மீண்டும் கட்டடம் உருவானால் சரி...

said...

அழகான தேவாலயமா இப்படி ஆயிடுச்சு:(((

புதுப்பித்தால் சரி....

said...

பழமையின் மதிப்பை உணராதவராய் இருக்கிறார்களே:(?

/இந்த மணிகளை இழுத்து ஒலிக்கச் செய்ய பெல் ரிங்கர்ஸ் என்னும் குழு இருக்கு. பலவருசங்களா இவுங்க ஞாயிறு (சண்டே சர்வீஸ்) பூஜை நேரங்களுக்கு மணி அடிச்சுக்கிட்டு இருந்தாலும்/

கற்பனை செய்ய முடிகிறது. காண்டாமணிகள் பரிதாபமாக கிடக்கின்றன.

/மந்திரமோ தந்திரமோ பலிக்கட்டுமுன்னு நாங்க ஜெபம் பண்ணறோம்./

நம்பிக்கை வலிமை வாய்ந்தது. நல்லது நடக்கட்டும்.

said...

நல்லது நடக்கும்..என்று நம்புவோமாக...அந்த மணியைப் பாத்தாப் பாவமா இருக்கு..

said...

வாங்க கீதமஞ்சரி.

அறிமுகத்துக்கு நன்றிகள். இப்போதுள்ள நிலையில் இது எனக்கான 'ஆறுதல் பரிசு'!

said...

வாங்க வல்லி.

சரியான பாட்டுதான்!

ஊரே அழும்போது கட்டிடம் அழாதா என்ன?

said...

வாங்க அமைதிச்சாரல்.

அந்தப் பூஜாரிணியம்மா..... ஒரு கூறு கெட்ட குப்பாயம். கோவிலுக்குப் பதிலா பீச், சினிமான்னு சொல்லத் தோணுதே:(

said...

வாங்க கோமதி அரசு.

அந்தக் கட்டிடம் கட்டுனப்போ பூகம்ப டெக்னாலஜி ஒன்னும் வளர்ந்துருக்கச் சான்ஸே இல்லை.

இப்போ கட்டலாமுன்னா.... காசு அதிகமாகுமுன்னு சொல்றாங்க:(

மணிகள் அதீத சோகம்தான்:(

said...

வாங்க கணேஷ்.

சோகம் இப்போ பொது.
பங்கு பெற்றமைக்கு நன்றிகள்.

said...

வாங்க டாக்டர்.

சாரமில்லா. ஞான் காத்திரிக்கும் கேட்டோ!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பொக்கிஷம் அநேகமாக் காணாமப் போகும் என்றுதான் நிலை:(

கோர்ட் கேஸ் போடலாமான்னு யோசனை. ஆனால் இந்த நிலநடுக்கத்தைப் பொறுத்தவரை CERA வுக்குத்தான் முழு அதிகாரமும்.

said...

வாங்க ரோஷ்ணிம்மா.

நடக்குமுன்னு தோணலைப்பா:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஹெரிட்டேஜ் பில்டிங்ஸ் பலதும் இப்படிப்பட்ட நிலையில்தான் இங்கே:(

பழுதுபார்க்க உள்ளே போனால் வேலை நடக்கும்போது மனித உயிர்களுக்கு ஆபத்து எதுவும் வந்துறக்கூடாதுன்ற நினைவில்தான் ஒரேடியா இடிச்சுத் தள்ளிக்கிட்டு இருக்காங்க:(

said...

வாங்க பாசமலர்.

வருத்தத்தில் பங்கேற்றமைக்கு நன்றிகள்.

said...

புத்துயிர்பெறுமென நம்புவோம்.