Friday, March 30, 2012

சண்டிகரின் பல சனிகளில் ஒரு சனி

வடக்கே போகப்போக சனிகளின் ஆதிக்கம் அதிகமா இருக்குமுன்னுதான் தோணுது. இல்லேன்னா ஏன் இப்படி அநேகமா எல்லாக் கோவில்களிலும்? நம்ம பக்கங்களில் பாருங்க.... முக்கியமா எல்லா சிவன் கோவில்களிலும் நவகிரக சந்நிதிகள் இருந்தாலும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு திருநள்ளாறில் தனிச்சந்நிதியா வச்சுருக்காங்க.

சண்டிகர் நகரில் நான் பார்த்தவரை சிவன் கோவில், பெருமாள் கோவிலுன்னு தனித்தனியாக் கோவில்கள் இல்லை. பெயர் மட்டும், ஷிவ் மந்திர், லக்ஷ்மிநாராயண் மந்திர் இப்படி வச்சுருந்தாலுமே கோவில்களுக்குள் நுழைஞ்சோமுன்னா அநேகமா ராதா கிருஷ்ணர், சீதையுடன் ராமர்& கோ, அனுமார். புள்ளையார், சிம்ஹவாஹினியா அம்பாள், சந்த்ரகண்டா, க்ருஷ்மாண்டா, ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, ஸ்கந்தமாதா, காத்யாயனி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி, காலராத்ரி பல பெயர்களில் அஷ்ட மாதாக்கள்சண்டிகரில் இருக்கும் ஒரே ஒரு தென்னிந்தியக் கோவிலான ஶ்ரீ கார்த்திகேயஸ்வாமி கோவிலிலும் அனுமன், மகாவிஷ்ணு சந்நிதிகளும் தென்னிந்திய ஸ்டைலில் ஒரு மேடையில் நவகிரஹங்களும் உண்டு.

யார் யாருக்கு எந்த சாமி விருப்பமோ அதைக் கும்பிட்டுக்கோ என்ற சுதந்திரம்தான்!எல்லாக் கோவில்களிலும் ஒரு பக்கத்துலே கோபுரத்துக்கான இடத்தில் பெரிய சிவலிங்கம். சட்னு பார்த்தால் வாட்டர் டேங்கோன்னு இருக்கும்!! அதுக்குக்கீழே தனி அறையில் தரையில் பதித்த சிவலிங்கம். இங்கெல்லாம் நாமே இறைவனுக்கு அபிஷேகம் செஞ்சுக்கலாம் என்றபடியால் மக்கள்ஸ் செம்பில் நீர் மொண்டுவந்து லிங்கத்தின்மேல் ஊற்றியபடியே இருப்பாங்க. வீட்டில் இருந்து செம்பு தூக்கிப்போகணும் என்பதில்லை. கோவிலிலேயே செம்புகள் (லோட்டா) வச்சுருப்பாங்க.

சனி பகவானுக்காக தனியா கருப்பு டைல்ஸ் பதிச்ச சின்ன அறை. சாமி சிலை இருப்பதுகூடச் சட்னு கண்ணுப் புலப்படாது. அப்படி ஒரு டார்க் ரூம். சின்ன விளக்கு முணுக் முணுக்ன்னு எரிஞ்சால் பிழைச்சோம். சனிக்கிழமைகளில் மட்டும் அபாரக்கூட்டம். சனி என்றால் பயம்.

கிட்டத்தட்ட 60 வயசாகும் இந்த ஊரை நிர்மாணிக்கும் போதே சமூகக்கூடங்கள், தோட்டங்கள். பார்க்குகள், விளையாட்டுத்திடல்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் இப்படி இடம் அங்கங்கே ஒதுக்கி விட்டுருக்காங்க. அதனால் இங்கே மேற்படி சமாச்சாரங்கள் எல்லாத்துக்குமே கூடிவந்தால் அறுவது வயசுக்கு மேல் இல்லை.

நாம் இருந்த செக்டரில் ஒரு குருத்வாரா மட்டும்தான். பக்கத்து செக்டரில்( 20) மார்கெட், ஷாப்பிங் பகுதியை ஒட்டி ஒரு இடம் கோவிலுக்கு ஒதுக்கியதில் அங்கே ரெண்டு கோவில்கள் உருவாச்சு. அடுத்தடுத்து என்பதால் ரெண்டுமே ஒரே வளாகத்தை பார்க்கிங் ஏரியாவா வச்சுருப்பதால் நமக்கும் போய்வர வசதி.
அதுலே ஒன்னுதான் லக்ஷ்மிநாராயணன் கோவில். இங்கே மற்ற கோவில்களைப்போல் இல்லாமல் 'ஷனி மந்திர் ' கொஞ்சம் விசாலமான இடத்தில் அழகாக் கட்டி இருக்காங்க. ஒரே வளாகம் என்றாலும் இது தனிக்கட்டிடம். நல்ல வெளிச்சமுள்ள சந்நிதி. படிக்கட்டில் தொடங்கி எல்லாமே கருப்பு. வலம்வரும் வகையில் ஒரு பிரகாரம்.


காக்கை வாகனத்தில் ஜம்முன்னு சனி அமர்ந்திருக்கும் படம். இன்னொரு படத்தில் .....பாவம்...அந்தக் காக்கா. இவ்ளோ பெரிய உருவத்தைத் தேருடன் எப்படி இழுக்குமோ........
படிகள் ஏறி சந்நிதிக்குள் போனால்.... எருமை (ஒருவேளை கருப்புக் காளையோ?)வாகனத்தில் சனி! இந்தப் பக்கம் நாலு, அந்தப்பக்கம் நாலுன்னு பாக்கி உள்ள எட்டு கிரக நாயகர்கள். . எல்லோரும் எல்லோரையும் பார்த்தபடி!!!!
விசாரிச்சதில் அது எருமைதானாம். சூரியனுக்கும் அவர் மனைவி ச்சாயா தேவிக்கும் பிறந்தவர். யமனுக்கு அண்ணனாம். (அதான் தம்பியின் காரை இரவல் வாங்கி இருக்கார் போல!)

ஐயோ....இதென்ன புதுக்குழப்பம்? நம்மூர்லே எமன், தருமதேவதையின் மகன் என்றுதானே சொல்வாங்க??? ஒருவேளை சனிக்கு இவர் கஸின் ப்ரதரா இருப்பாரோ?

அங்கே இங்கேன்னு கொஞ்சம் துருவுனதில் சில தகவல்கள் கிடைச்சது. சூரியனுக்கு ரெண்டு மனைவிகள். முதல் மனைவி உஷா தேவிக்குப் பிறந்தவர் யமன். ரெண்டாம் மனைவி ப்ரத்யூஷாவுக்குப் பிறந்தவர் சனி.

ஒரு சமயம் யமனுக்குக்கோபம் வந்து சனியை எட்டி உதைச்சதால் சனிக்குக் காலில் அடி. அதனால் கொஞ்சம் விந்திவிந்திதான் மெதுவா நடப்பாராம். அதனால் சனீச்சரண் என்ற பெயர் காலப்போக்கில் சனீஸ்வரன் என்றாகி இருக்கு. ஒருவிதத்தில் இதுகூட சரிதான். ரொம்ப பவர்ஃபுல். பிடிச்சால் சட்ன்னு விலகாது. குறைஞ்சபட்சம் ஏழரை வருசம்!

சனியின் சிறப்புக்கள் என்று 'இந்த வீட்டில் இருந்தால் இந்தப் பரிகாரம்' ' இப்படி வரிசையா இருக்கும் பட்டியல் ஒன்னு வலையில் பார்த்தேன். ஒன்பதாம் வீட்டில் இருந்தால் மொட்டை மாடியில் புல் வளர்க்கக்கூடாதாம்!!!!!!!!!!!!!!!

ஆனால் ஒன்னு சனியைப்போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்லக் கேட்டுருக்கேன்.

கொடுக்கணுமுன்னா நல்ல பதிவுகள் எழுத வரம் கொடுன்னு வேண்டிக்கலாமா?

PINகுறிப்பு: பக்கத்துக் கோவிலைப் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம். உண்மையா அந்தக் கோவிலைப்பற்றி எழுத வந்து ....... இப்படி ...... ஹூம்.... சனி முந்திக்கொண்டது:-))))

20 comments:

said...

நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு நமக்கு நல்லா புரிய வைக்கக்கூடியவர் என்பதால எனக்கு சனீஸ்வரரை ரொம்ப பிடிக்கும். :))

said...

ஆமாம். இங்கு சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கூட சனியை தரிசிப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். மற்ற நாட்களில் ஆள் அரவமே இருக்காது.

கறுப்பு கொண்டக்கடலையில் மசாலா சேர்த்து வேகவைத்து நைவேத்தியம் செய்வார்கள்.

வாழைப்பழத்திற்கு கூட மசாலா:((

said...

வாரந்தவறாம சனிக்கு அர்ச்சனை .. வியாழனுக்கு அர்ச்சனைன்னு செய்துட்டிருந்த காலம் உண்டு..

நீலாஞ்சன ஸமாபாஸம்.....”
தென்றலைப்போலவே எனக்கும் சனீஸ்வரரை ரொம்ப பிடிக்கும்..

said...

அட நான் கூடச் சனீஸ்வரரை வேண்டிக்கறேன். எனக்கும் சிலசமயம் குழப்பமாதான் போகிறது .அதற்காக நாயக்கரோட பேரன் மாதிரி நீ நல்லவனா கெட்டவனான்னு கேக்க முடியுமா என்ன.
ஏன்பா திடீர்னு சனி நினைவு வந்து விட்டது உங்களுக்கு!!!ஆஞ்சநேயுடு இருக்க சனீஸ்வரரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்:)

said...

படங்களும் பகிர்வும் அருமை.

பெங்களூர் கெம்ப்ஃபோர்ட் சிவாலயத்திலும் பக்தர்களே பால் அபிஷேகம் செய்யலாம். அங்கேயே வரிசையாக செம்புகளில் தயாராக இருக்கும். ஒரு செம்பு பால் பத்து ரூபாய்.

ஏற்கனவே இருப்பதை வரமாகக் கேட்கிறீர்களே:)? வேறு கேளுங்கள்.

said...

இங்கே சனி என்றால் அதிகமாகவே பயம் தான்.

எருமை தான் இங்கே வாகனம். தில்லியில் சில இடங்களில் ஆங்காங்கே இப்படி சனி கோவில்கள் முளைத்து சனிக்கிழமைகளில் நல்ல கலெக்‌ஷன் பார்க்கின்றார்கள்! :)

நடு ரோட்டில் ஒரு கிண்ணத்தில் எண்ணை வைத்து அதன் நடுவே ஒரு அகல் விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். அக்கிண்ணத்தின் உள்ளேயே ஒரு கருப்பு தகடில் மீசை வைத்த உருவம் வரைந்து இருக்கும்.... போவோர் வருவோர் எல்லாம் காசு போட்டுச் செல்வார்கள்.....

அட இது பத்தி நானே ஒரு பெரிய பதிவு எழுதலாம் போல இருக்கு! :)

said...

இங்கேயும் ஒரு சனீஸ்வரர் கோயில் இருக்குது. ஆஞ்சனேயர் பக்தர்களைச்சீண்ட மாட்டேன்னு சனி வாக்குக்கொடுத்துருக்காராமே. வாக்கைக் கடைப்பிடிக்கிறாரான்னு சூபர்வைஸ் செய்யறதுக்காக அதே சன்னிதியிலேயே ஆஞ்சனேயரும் உக்காந்துருக்கார். அதனால மக்கள் தைரியமா சனீஸ்வரர் கிட்டக்கப்போயி எண்ணெய் அபிஷேகம் எல்லாம் செஞ்சுட்டு வராங்க..

//நல்ல பதிவுகள் எழுத வரம் கொடுன்னு வேண்டிக்கலாமா?//

லாம்தான்.. ஆனா கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லைன்னும் சொல்றாங்களே. அதான் யோசனையாயிருக்கு.

said...

// யார் யாருக்கு எந்த சாமி விருப்பமோ அதைக் கும்பிட்டுக்கோ என்ற சுதந்திரம்தான்!//

இந்து மதத்தின் சிறப்பே இதுவாம். பரந்த மன நிலை.

ஆகாஷாத் பதிதம் தோயம்
யதா கச்சதி சாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ‌
கேசவம் பிரதிகச்சதி

என கண்ணன் பார்த்தனிடம் சொல்கிறான்.

வானத்திலிருந்து பொழியும் நீர் எல்லாம் நதியாகிகளாகி, இறுதியில்
ஆழியை நோக்கிச்சென்று சங்கமம் ஆவது போல, எல்லா தெய்வங்களுக்கும்
செய்யும் துதிகளும் வணக்கங்களும் கேசவனையே ( நாராயணனையே )
சேருகின்றன.

அத்வைத மையக்கருத்தில் ஆண்டவன் உருவ, குணங்களுக்கு அப்பாற்பட்டவன்.
உருவாயும், அருவாயும் அதே சமயம் அத்தனைக்கும் கருவாயும் அமைந்தவன்.

ஸ: ஏகஹ. விப்ராஹா பகுதா வதந்தி.
அவன் ஒருவனே. ( ஆயினும் ) படித்தவர் (அவனைப் ) பல்விதமாகப் பகர்வர்
என்கிறது ப்ரஹ்ம ஸூத்ரம்.

மீனாட்சி பாட்டி.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

உண்மைதான். இது வாழ்க்கை நிம்மதியா ஓட, தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய விஷயமாச்சே!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அட! இந்த மசாலா நியூஸ் எனக்குப் புதுசு!

ஸ்பைஸ் இல்லேன்னா லைஃப் இல்லை!!!!

said...

வாங்க கயலு.

இதெல்லாம் க.மு காலத்தில்தானே?????

said...

வாங்க வல்லி.

ஆஞ்சநேயரைப்பத்தி எழுதப்போய்த்தான் சனிப்புராணம் வந்துருச்சுப்பா:-)))))

நல்லவருன்னே வச்சுக்கலாம். எதாவது சொல்லப்போய்........ அப்புறம் ....

எதுக்குப்பா வம்பு!!!!!!!!!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கோவர்தனம்போல பால் ரீஸைக்கிள் ஆகுதா இங்கே????

திநகர்லே கூட ஒரு மாரியம்மன் கோவிலில் வாசலில் அபிஷேகத்துக்கு பால் விக்கறாங்க!

சிங்கையில் பால்பாக்கெட்டைத் திறந்து அப்படியே அபிஷேகம் செஞ்சுறலாம்.

நாமாச் செஞ்சோமுன்னா அதிலும் ஒரு திருப்தி இருக்குதானே!!

வரம்.......வரவர வீக் ஆகுது. அதான் ஒரு டானிக் கொடுக்கச்சொல்லி வேண்டிக்கலாம்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


உங்கூர்லே பாபா கரக் சிங் ரோடுலே ஸ்டேட் எம்போரியத்துக்கு எதிரில் ஒரு கோவில் இருக்கு பாருங்க.அங்கே ப்ரமாண்டமான எண்ணெய்க் கொப்பரையில் ராக்ஷ்ஸத் திரி போட்டு சனிக்கு விளக்கு தீவட்டியா எரியுது,பார்த்தீங்களா?

சண்டிகரிலும் கையில் சாம்பிராணி போட்ட விளக்கு வச்சுக்கிட்டு சனிக்கிழமைகளில் தெருக்களிலும் ஷாப்பிங் ஏரியாக்களிலும் சனி வசூல் நல்லாவே நடக்குது.

அவுங்களுக்கு பிழைக்கும் வழி காட்டிக் கொடுத்துட்டார் சனி!!!!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அதேதாங்கக்கா. பெரியவங்க சரியான பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாமா அவர் வாக்குக்கொடுத்தாரோ நாம் தப்பிச்சோமோ!!!!

வரம் வேண்டும்போது சொற்பிழை, உச்சரிப்புப்பிழை இல்லாமக் கவனமா வேற இருக்கவேணும். இல்லேன்னா கும்பகர்ணன் கதி வந்துட்டால்......

said...

செய்திகளும் படங்களும் அருமை....ராமலக்ஷ்மி சொன்னதுதான்..இருப்பதையே வரமாஅக் கேட்டால் எப்படி?

said...

பிள்ளையாரையும் , அவர் பக்தர்களையும் சனி அண்டுவதில்லை என்பது ஐதீகம்..

கணபதி இன்று போய் நாளை வா என்று முதுகில் எழுதிவைத்து ஏமாற்றிவிட்டாராம் சனி பகவானை !

அம்மையப்பனையே சுற்றிவந்து வெற்றிக்கனி பெற்ற புத்திசாலி !!!!

said...

கமு வே தான்.. அப்பத்தான் வீட்டுல அம்மா ஆட்சி..
இப்ப நம்ம ஆட்சி..:)

said...

சனிபகவான் புராணம் பாட வைத்துவிட்டான்:))