Thursday, April 19, 2012

ஆட்டைக்கடிச்சு மாட்டைக் கடிச்சு....

இப்போ மண்ணுக்கும் வந்துட்டாங்கப்பா....... மிளகைவிடக்கொஞ்சம் சின்ன சைஸுலே இருக்கு. ரெண்டு டாலர் கொடுத்து பதினாலே கிராம் எடை இருக்கும் சின்னப் பொட்டலம். ஆறுமணி நேரம் ஊறவச்சால் உப்பிருமுன்னு கடைக்காரம்மா சொன்னாங்க.


ரெண்டு கண்ணாடிக் குடுவைகளில் போட்டு தண்ணி ஊத்திவச்சேன். சொன்னா நம்பமாட்டீங்க...... "உன் பாத்திரம் நிரம்பி வழிவதாக!"

வேற ஒரு பெரிய குடுவைக்கு இடம் மாத்தினேன். ஒரு லிட்டர் தண்ணியிலே ஊறவச்சுருக்கணும். நான்தான் வளர்ச்சி எப்படின்னு கவனிக்கணுமுன்னு சின்னதுலே இருந்து ஆரம்பிச்சேன். நல்ல கோலிகுண்டாட்டம் வந்துருக்கு. கையிலே தொட்டா ஈரம் ஒட்டலை.


ஒரிஜனல் சைஸைப்போல 150 மடங்கு ஊதிப்பருக்குது. அறையின் வெப்ப நிலையைப் பொறுத்து (23 டிகிரி C) லேசா மெலிவதும் உண்டு. பயப்படவேணாம். இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்துனால் போதும்.

பலநிறங்களில் கிடைக்குது. ரெயின்போ மட் என்று வியாபாரப்பேர் கொடுத்துருக்காங்க. நான் பச்சை நிறம் வாங்கியாந்தேன். நம்ம வீட்டுக்கு மேட்சான கலர்:-))))

வீட்டுக்குள்ளே வளர்க்கும் செடிகளுக்கு இந்த மண்ணே போதுமாம். பாட்டிங் மிக்ஸ்ன்னு இங்கே விற்கும் மண்ணைப்போட்டு கையை அழுக்காக்கிக்காதேன்னு........ ஊஹூம். நமக்கு மனசு கேக்காது. ஏற்கெனவே முழுசும் மண்ணா இல்லாமலிருக்கும் இந்தப் பாட்டிங் மிக்ஸ் வச்சுச் செடிகளை ஏமாத்திக்கிட்டு இருக்கோம். இதுலே இது வேறயா?....... பூச்சாடிக்கு(ம்) உகந்ததாம்!
பைன் மரப்பட்டைகளை நல்லாத் துருவிக்கணும். அதனுடன் கொஞ்சம் கம்போஸ்ட்டும் ஆத்துமண்ணும் சேர்த்துக் கலந்து ஒரு பெரிய தொட்டியில் நல்லா அடைச்சு வச்சுடணும். மூணு மாசம் கழிச்சுப்பார்த்தால் அது மக்கியிருக்கும். செடிவளர்வதற்குத் தேவையான உரம் கொஞ்சம் சேர்த்துக் கலந்தால் பாட்டிங் மிக்ஸ் ரெடி.

இதைத் தயாரிக்கும் தொழிலில் நிறைய நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கு.
இங்கே நிறைய பைன் மரங்களைத் தோலுரிச்சு வீடுகட்டப் பயன்படுத்தறாங்க. பைன் மரத்தடிகள் அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகுது. அதனால் அந்தந்தத் தொழிற்சாலைகளில் இருந்தே சல்லிசான தொகைக்குப் பட்டைகளைக் கிளப்பிடுவாங்க:-)

வீடுகளிலும் சிலர் சொந்தமா பாட்டிங் மிக்ஸ் தயாரிச்சுக்கறாங்க. தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கும் இலைகள், வீட்டுலே சமையல் செய்யும்போது கிடைக்கும் காய்கறிக் கழிவுகள், பைன் மரத்தூள் ஆத்துமண்ணு இப்படி எல்லாத்தையும் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு பெரிய குழிவெட்டி அதுலே போட்டுக்கிட்டே வருவாங்க. மண்புழுக்கள் அதுலே வரத்தொடங்குனா அது உங்க அதிர்ஷ்டம். இல்லேன்னா மண்புழுக்களை விற்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் வாங்கிப்போட்டுக்கலாம். நாலைஞ்சு மாசத்தில் இதெல்லாம் நல்லா மக்கிப்போய் தூளாக்கிடக்கும். அதையே செடிகளுக்கு மண்ணாப் பயன்படுத்தலாம். இதுலேகூடப் பாருங்க....சேர்க்கும் பொருட்களில் வெவ்வேற கூட்டணி இருக்கு. (நம்ம ஒவ்வொருத்தர் வீட்டுலேயும் குழம்புப்பொடி, மசாலாப்பொடி அரைச்சு வைக்கும்போது சாமான்கள் சேர்க்கையில் வெவ்வேற அளவும் காம்பினேஷனும் ஒன்னாவா இருக்கு? கோச்சுக்காதீங்க, தெரிஞ்ச உதாரணம்தான் சொல்லமுடியும் கேட்டோ!)

தோட்டக்கலையில் அதீத ஆர்வம் இருக்கறவங்களுக்குத்தான் இது சரி. என்னப்போல் நோகாம நோம்பு கும்பிடும் ஆட்களுக்கு...... இருக்கவே இருக்கு கார்டன் சப்ளைஸ் ஸ்டோர்ஸ். அதுவும் முழு விலை கொடுத்து வாங்கியாந்ததே இல்லை. ஸேல் என்ற பெயரில் ஒரு பத்து காசாவது குறைச்சு இருந்தே ஆகணும். அதெல்லாம் கொளுகையை விட முடியாது:-)

ஊருக்குப்போகும் சமயங்களில் நண்பர்களிடம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பொறுப்பைக் கொடுப்போம். அவுங்க ஊருக்குப்போகும்போது நாங்க பதில்சேவை செய்வோம். ஆனால் ஒரு நாலைஞ்சு நாள் அக்கம்பக்கம் எங்கியாவது போகும்போது, வர்றவரை செடிகள் சமாளிச்சுக்குமுன்னு கிளம்புமுன் தண்ணி ஊத்திட்டுப்போறதும் உண்டு.

இப்பப் புதுசா வந்துருக்கும் 'வானவில் மண்' ' ஏற்கெனவே இங்கே பூ வியாபாரம் செய்யும் மக்களுக்குப் பழக்கமானதுதான். நிறைய நாட்கள் பூ வாடாமல் இருக்க கலர்லெஸ் ஜெல்கள் போட்டுவைப்பாங்க. நம்ம வீட்டுக்குத் தாமரைக்கிழங்கு வாங்குனப்பவும் அதுலே கொஞ்சம் போட்டுருந்தாங்க. அந்த ஈரத்துலே கிழங்கு முளைவிட ஆரம்பிச்சிருந்தது. ஆனா பொதுமக்களுக்கு இதைத் தனியா வாங்கிக்கும் சான்ஸ் இல்லை. இந்தக் குறைய வழக்கம்போல் இப்ப சீனர் தீர்த்துவச்சுட்டாங்க.

காலாவதி கிட்டத்தட்ட ஒரு வருசம். அப்பப்பக் கொஞ்சம் தண்ணீர் ஊத்தி உப்ப வச்சுக்கணும். ஈரப்பதம் இருப்பதால் செடிகள் நல்லாவே வளருமாம். Crystal Soil is a water absorbent polymer. மனிதக்கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறிய துளைகள் இருப்பதால் அது காற்றையும் உட்கொண்டு செடிகளுக்குப் புகட்டுமாம்!!!!
எதன் கையிலோ கிடைச்ச பூமாலையா இருக்கு இப்போ:-) பரிசோதனைகளா, வெவ்வேற பாத்திரம், ஜாடி, கிண்ணம் இப்படி வச்சுப்பார்த்து இன்னிக்கு கண்ணாடி குளத்தில் தவளையோடு!! :-)))))

PIN குறிப்பு: குழந்தைகளுக்கான டயப்பர், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்ஸ், ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைப்பகுதிகள், செல்லங்களுக்கான படுக்கைகள் போன்ற தயாரிப்புகளில் இந்த பாலிமர் தூள் பயன்படுத்தப்படுகிறது. உடல்நலத்துக்கு ஊறு இல்லைன்னு சொல்றாங்க!

32 comments:

said...

நல்ல அறிமுகம். பார்க்கவும் ரொம்ப அழகா இருக்கு.

said...

இன்னும் மனுசனைக் கடிக்கலியா?

said...

இது பேரு வாட்டர் பேபின்னு சொல்றாங்க, எங்க அலுவலக பெண்மணி கொஞ்சம் கொடுத்ததை நான் வாங்கி வீட்டில் தண்ணீர் ஊற்றி வைத்தேன், உப்பிக் கொண்டே வந்தது, வாரத்துக்கு ஒருதடவையாவது தண்ணீர் ஊற்றனும், இல்லை என்றால் நாறிவிடும், தொடர்ந்து அதையே கவனித்தால் நம் பொழப்பும் நாறிடும்
:)

said...

இரண்டு வருடம் முன்னாடி தில்லியில் சந்தையில் கலர் கலரா கிடைத்தது. வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி வைத்திருந்தேன். அழகா இருந்தது. ரோஷ்ணி இதை கையில் எடுத்து ஸாப்டா இருக்குன்னு விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனா இது செடியை வளர்க்க உதவும்னு தெரியாது. தகவலுக்கு நன்றி டீச்சர்.

said...

பார்க்க நல்லத்தான் இருக்கு
படங்களுடன்விளக்கிச் சொன்னவிதம்அருமை
வாழ்த்துக்கள்

said...

இதுலே இது வேறயா?....... பூச்சாடிக்கு(ம்) உகந்ததாம்!//

பூச்சாடி அழகு.
பார்க்கும் போது பூச்சாடிக்கு உகந்ததாகத்தான் தெரிகிறது.

said...

புது தகவல் .. நன்றி

said...

இன்று

கதம்பம் 19-04-2012

said...

எங்கூர்ல பாக்கெட் அஞ்சு ரூபாய்க்குன்னு கிடைக்குதே.. அதானா இது !! அட அதேதான் :-))

நானும் மல்ட்டி கலர்ல வாங்கி ஒரு ஸீ த்ரூ பாட்டில்ல போட்டு தண்ணி ஊத்தி இறுக்கி மூடி ஹால்ல வெச்சிருக்கேன். நாலஞ்சு மாசமா வாடாம வதங்காம அப்டியே இருக்குது. காட்சிக்கும் நல்லாருக்குது.

எதையெடுத்தாலும் ருசி பார்த்தே தீரும் வழக்கமுள்ள சின்னக் குழந்தைங்க இருக்கற வீட்ல கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இதை வெச்சுக்கணும்.

said...

ரீச்சர்,

அதுல இருக்கும் ஆங்கிலக் குறிப்புகள் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே.

http://elavasam.posterous.com/7365204

said...

இதுல செடி வளர்க்கணும்னா செடிகளுக்கு நியூட்ரியன்ட் சொல்யூஷன் ஊற்ற வேண்டும். ஏனென்றால் இதில் பயிர்ச்சத்து எதுவுமில்லை.

said...

இங்கே தில்லியிலும் இவை கிடைக்கிறது. ஆனால் வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமே! :) கண்ணாடிக் குடுவையில் தண்ணீர் விட்டு இதனைப் போட்டு வைத்தால் காலையில் குடுவை முழுக்க கொழுகொழு கலர் குண்டுகள்! :)

said...

நன்றாக இருக்கு.
ஆமாம், ஊரில் இல்லையா? அல்லது என் மெயில் கிடைக்கவில்லையா? பதில் இல்லாததால் சந்தேகமாக இருந்தது.

said...

இந்தப் பதிவில் பார்க்காத இரண்டு நபர்களைப் பார்த்த்தாச்சு:)
இந்தக் கோலிக்குண்டுகள் பார்க்கும்போது மார்ஷ் மாலோ ஞாபகம் வருது;)
ரொம்ப அழகுப்பா.

said...

குளிர் பிரதேசங்களில் காய்கறி வளர்க்கப் பயன்படுத்தியது இப்போது பரவலானப் பயனுக்கு வருகிறது.. பார்க்க நல்லாத் தானே இருக்குது? புழு பூச்சியில்லாம இருந்தா நல்லது தானே? (ஆ! இயற்கைவாதிங்க பின்னால துரத்திட்டு வராப்ல இருக்குதே?)

said...

ஒரு முறை ட்ரேட் ஃபேரில் நாங்களும் வாங்கி வந்தோம்..
அதெல்லாம் ஒழுங்காபராமரிக்கிறவங்களுக்குத்தான்..ன்னு விட்டுடோம்..

said...

கொழு கொழு கோலிக் குண்டுகள் நன்றாகவே இருக்கின்றன.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகுதான்ப்பா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க டாக்டர் பழனி கந்தசாமி ஐயா.

மனுசனைக் கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்பதான் நாட்டு மக்கள் முழிச்சுக்கிட்டு, நம்ம நாட்டுப் பால்பண்ணையை(யும்) வாங்கிட்டாங்கன்னு ஒரே கூச்சல்.
அதெப்படி விற்கலாம். வேணுமுன்னா 99 வருச ஒப்பந்தம் போட்டுருக்கலாமேன்னு சொல்ல அரசு முழிக்குது!

வேளாண்மை பேராசிரியர் நீங்க. சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

பயிர்ச்சத்து இதுலே சேர்த்துருக்கோமுன்னு சின்ன எழுத்துகளில் போட்டுருக்காங்க. இங்கே வீட்டுக்குள்ளே வளர்க்கும் செடிகளுக்கும் வெளியில் இருக்கும் செடிகளுக்குமே பலவிதமான plant food ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை போடத்தான் வேண்டி இருக்கு.

said...

வாங்க கோவியாரே.

குழந்தை கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கணும் . ஒரு வருசம்வரை இருக்குமாம். அப்பப்ப தண்ணீர் ஊத்தாமக் காய்ஞ்சு சின்ன மணிகளா ஆனதும் அப்படியே வச்சுருந்து , மனசுக்குத் தோணும் தினத்தில் தண்ணீர் ஊற்றினால் திரும்ப உப்பாதா? பரிசோதிக்கணும்,

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ரெண்டு வருசத்துக்கு முன்னேயே அங்கே வந்துருச்சா?????? பேஷ் பேஷ்.

ஈரப்பதம் இருப்பதால் செடிகள் வளர்க்கலாமுன்னு போட்டுருக்காங்க போல. ஊர்விட்டு ஊர் எடுத்துப்போக வேண்டிய செடிகளையும் செடி கட்டிங்குகளையும் இதுவச்சு வாடாமக் கொண்டு போகலாம். தண்ணீர் கொட்டிடும் என்ற பிரச்சனை இல்லை.

said...

வாங்க ரமணி.

இப்பெல்லாம் படம் இல்லாமப் பதிவே இல்லை என்ற நிலைக்கு ஆளாகிட்டேன்:(

said...

வாங்க கோமதி அரசு.

பூக்கள் கூடுதலா சிலநாட்கள் வாடாம இருக்கு! பூங்கொத்து வச்சுப் பார்க்கலாமுன்னா.....

இன்னும் இந்திய ஆண்களுக்கு பூங்கொத்து வாங்கிவந்து மனைவிக்கு ஐ லவ் யூ சொல்லி, கையில் கொடுக்கத்தெரியலை பாருங்க:(

இத்தனைக்கும், குடும்பத்துக்காகவே உழைக்கும் ஜென்மங்கள்!!!!!

said...

வாங்க என் ராஜபாட்டை ராஜா.

வருகைக்கு நன்றி.

கதம்ப மணம் நல்லா இருந்துச்சு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

என்ன......... அஞ்சே ரூபாயா? இங்கே எம்பதுன்னு கொள்ளை:(


குழந்தைகள், கோலின்னு வாயிலே போட்டுக்கிட்டால் வம்புதான்.

வருசத்துக்கு வச்சுப்பாருங்க. எவ்வளவு தாங்குதுன்னு பார்த்துறலாம்.

said...

வாங்க கொத்ஸ்.

நம்ம வகுப்புலே டீச்சர் எல்லாத்தையும் போர்டுலே எழுதிப்போட்டு, பிள்ளைகள் அப்படியே எழுதிவச்சு மனப்பாடம் செஞ்சுக்கும் இந்திய முறைக் கல்வி இல்லையாக்கும்.

குறிப்பால் உணர்த்தினால்..... அவுங்களே அதைத்தேடி எடுத்துப்படிச்சுத் தெரிஞ்சுக்கும் நியூஸி முறை இங்கே!

ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே எழுதி வச்சுட்டீங்க அட்வான்ஸ் ஸ்டடியா!!!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அலங்காரச்சாமானத்தான் இருக்கட்டுமே. செலவு அதிகம் இல்லை பாருங்க. நீலக்கலர் வாங்கி கொலுவுக்குக் குளம் செய்யலாமான்னு ஒரு யோசனை இருக்கு:-)

said...

வாங்க குமார்.

நீங்க திருப்பி அனுப்பியது கிடைத்தது.
கேட்டுக்கொண்டு இருக்கேன்.

said...

வாங்க வல்லி.

ரெண்டில் ஒன்றுதான் என் கண்ணுக்குத் தெரியுது!!!

சென்னையில் கிடைக்குதாப்பா?

said...

வாங்க அப்பாதுரை.

இங்கே வெறும் தண்ணீர் முறையில் செடிகள் வளர்க்கறாங்களே! ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கொட்டகையில் பச்சைமிளகாய் பயிரிட்டு இருக்காங்க. அமர்க்களமாக் காய்ச்சுக் குலுங்குது.

Hydroponics/ hydroculture வகையில் அன்த நீரிலேயே பயிருக்கான உரச்சத்து சேர்த்துடறாங்க.

நம்ம வீட்டில் வெறும் குழாய்த்தண்ணீரில் ஒரு செடி வச்சுருக்கேன். அதுக்கு 'டிசம்பர் 23' என்று பெயர் வச்சுருக்கேன்:-)

said...

வாங்க கயலு.

என்னப்பா ஒழுங்கா பராமரிக்கறவங்க...... இன்டோர் செடிகளுக்கு நீர் ஊற்றும்போது இதுக்கும் கொஞ்சம் தண்ணி காமிச்சால் ஆச்சு:-))))

said...

வாங்க மாதேவி.

அழகானவைதான்.

இப்பெல்லாம் ரொம்ப மெனெக்கெட முடியலைப்பா. பொறுமையும் குறைஞ்சுக்கிட்டே வருது. அதான் தண்ணி தெளிக்கறதோட முடிச்சுக்கலாமேன்னு:-))))