Wednesday, November 07, 2012

வேங்கட க்ருஷ்ணனின் குடும்பம்.



உள்ளுர் தினசரியில் அன்றைக்கு வந்த விளம்பரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது என்னவோ உண்மை. இவ்வளாம் பெருசா? எப்போ? அந்தப்பக்கம் எத்தனை முறை பகலிலும் இரவிலுமாப்போயிருக்கோம்? கண்ணுக்கே தெம்படலை!!!   அல்லும்பகலும் நெருக்கியடிக்கும் போக்குவரத்து  நெரிசலிலே  மாட்டிக்கிட்டு  பயப்பிராந்தியோடு சாலையிலேயே கண்ணு நட்டுக்கிட்டு இருந்தால் அக்கம்பக்கம் யானையே நின்னாலும்  கண்ணுக்குத் தெரியுமா?

அண்ணா சாலையில்தான்னு சொல்றீங்க..... இன்னிக்குக் கட்டாயம் கண்ணால் பார்க்கணும் என்ற முடிவோடு இருந்தேன். ராத்திரிக்கு எப்படியும் விமானநிலையம் போயாகணும்.வர்றாள். அப்ப மறக்காமல் யானையைப் பார்க்கலாம்.

சனிக்கிழமையா இருக்கேன்னு பார்த்தசாரதியை தரிசிக்கக் கிளம்பினோம்.  ஏழுமணி வாக்கில்பதிவர் சந்திப்பு ஒன்னு இருக்கு.  தில்லக்கேணி ஐயா வழக்கம்போல் இருக்கார்.  ஸ்பெஷல் தரிசனம் இப்போ சீக்ர தரிசனம் ஆகி இருக்கு.  நேரக்குறைவு காரணம் சீக்ரமா எனக்குப் பெருமாளை ஸேவிக்கணும். சந்நிதிக்கு இடப்புறம் டிக்கெட் கொடுக்கறாங்க. கூடவே கொஞ்சம் மஞ்சள் குங்குமப்ரசாதமும்.  நேரா நம்மைக்கொண்டுபோய்  மூலவருக்கு  முன்வாசலில் விட்டாறது. தர்ம தர்சனம் வரிசைக்குப் பாரலலா ஒரு வரிசையில் போய் நிக்கணும்.ரெண்டே நிமிசத்தில்  முழிச்சுப் பார்க்கும்  மூலவர் முன் சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆச்சு.  வழக்கத்துக்கு மாறா மூலவர் பளிச்ன்னு இருக்காரேன்னால் நல்ல மின்விளக்கு ஃபோகஸ் செய்யுது அவர் முகத்தை!அடடா.... பாரதப்போரின் விழுப்புண்கள் ,அம்பு கொத்திய இடங்கள் எல்லாம் தழும்புகளாய்த் தெரியுதே!!!!

மூலவரை நாம் பார்த்த(னின் தேரை ஓட்டிய )ஸாரதின்னு சொல்றோமே தவிர இவருக்கு  அசல்பெயர் வேங்கடக்ருஷ்ணன். ரெண்டே கைகளுடன் குடும்ப சமேதராய் இங்கே காட்சி கொடுக்கிறார்.  அண்ணனும், தம்பியும், மனைவியும்,மகனும் பேரனுமா கூட்டம்தான். மூணுதலைமுறை!  ஆனால் நட்ட நடுவில் ஒன்பதடி உசரத்தில் ஆஜானுபாகனாய் முறுக்கு மீசையுடன் புஷ்ப அலங்காரங்களுடன்  ஜொலிப்பவனை விட்டு  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கண்களை ஓட்டினால்தானே குடும்பம் தெரியும்? எங்கே ஓட்ட விடறான். முட்டைக்கண்ணால் நம்ம முழிச்சுப் பார்க்கிறானே!!! அவன் கண்ணைவிட்டு அகலுதா நம் கண்கள்?

இடக்கையில் இருக்கும் சங்கு வலக்கையில் வந்துருக்கு. சக்கரத்தை விஷ்ணு லோகத்துக்கு அனுப்பி இருக்கார், சாரதி வேஷம் கட்டுனப்ப! அதான் போரில்ஆயுதம் எடுக்கமாட்டேன்னு துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துருந்தாரே! கையில் ஒரு சாட்டை  தேர்க் குதிரைகளை விரட்ட. ஆனால் இடுப்பில் இருந்து தொங்கும் வாள் எதுக்கு? இது ஆயுதம் இல்லையோ????  ஒருவேளை தற்காப்புக்கோ? என்னவோ போங்க 'சாமி'யைப் புரிஞ்சுக்கவே முடியலை. சப்தரிஷிகளுக்கும் தரிசனம் தந்துருக்கார். நமக்கும்தான்........... இல்லையோ?

மீசைக்காரனை மீசையில்லாமல் கூட தரிசிக்கலாமாம். வருசத்துக்கு அஞ்சு நாட்கள்.  பகல்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை! சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் ஒருமுறையாவது  வந்து தரிசிக்கும் கோவில் என்றாலும்  இதுநாள்வரை  மைனஸ் மீசை பார்க்கக் கிடைக்கலை. ராப்பத்து மட்டும் ஒரே ஒருநாள் கிடைச்சது.ஸ்ரீராமர் அலங்காரம்.

சீக்ர தரிசனத்துலே வந்தால் நாம்  மிஸ் பண்ணுவது  ராமனையும் ரங்கனையும்:(  பக்கத்துலே கம்பித் தடுப்பு வரிசைகளில் வரும் சனம் பார்வையை மறைச்சுருது. கூட்டம் இல்லேன்னா.....  அப்ப எதுக்கு சீக்ரம்? பொது தரிசனத்துலே வந்தால் மூணு சந்நிதிகளையும் தரிசிக்கும்   சான்ஸ்  கிடைச்சுருமே!  என்னவோபோங்க..........இடப்பக்கம் இருக்கும் ஹனுமனையும் ஆழ்வார்களையும்  மட்டுமே சேவிக்க முடிஞ்சது.

கோவிலை வலம் வந்து வேதவல்லித்தாயார், யோக நரசிம்மர்,  கஜேந்திர வரதர், நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு  கருவறை விமானத்துக்குக் கண்ணைச் செலுத்தும்போது கீழே முற்றத்தில் (யோகநரசிம்மர் சந்நிதிக்குப்பின்பக்கம்)  மேடையில் குழலூதும் கிருஷ்ணனும் பசுவுமா ஒரு சுதைச்சிற்பம். புதுசு. என்னவோ அங்கே இருக்கும்  பழைய அமைப்புக்கு ஒட்டாமல் இருந்ததா  கோபால் சொன்னார்.  பெருமாள் திருவடிகளைக் கும்பிட்டுவிட்டு, பக்கத்துலே கண்ணாடிப்பொட்டியில்,  கோவில் எப்படி இருக்குன்ற டிஸ்ப்ளே  பார்த்தால்  அருமையான அமைப்புதான்.  ஆனால் கோவில் உள்ளே நிஜமாவே நாம் இருக்கும்போது  அந்த  ஒரிஜனல் அழகு தெரியறதில்லை:( பஞ்சமூர்த்திகள் உள்ள  திருக்கோவில்!!!

பிரஸாத ஸ்டாலில்    புளியோதரையும் மைசூர்பாகும் சக்கரைப் பொங்கலும்கிடைச்சது.  இங்கே சக்கரைப் பொங்கல் ரொம்ப விசேஷம்.  ஆண்டாள் சொன்ன முழங்கைநெய்வார என்பதைக் கடைப் பிடிக்கிறார்கள்.  போரில் சும்மா இருந்தவரையும் எதிரிகளின் அம்பு தாக்கி காயம் ஆச்சே.  புண்கள் ஆறிக்கிட்டணுமேன்னு  ரொம்ப காரம் இல்லாமல் வெறும் மிளகுப்பொடி மட்டும் சேர்த்த  புளியோதரையும், ஏகப்பட்ட நெய்யும் முந்திரிப்பருப்புமா கலந்து செஞ்ச  சக்கரைப்பொங்கலும்  சூப்பர். ஒரு கிலோ அரிசிக்கு 700 கிராம்  முந்திரியும் 350 கிராம் நெய்யுமாம். !!!! (எனக்குக் கிடைச்ச சக்கரைப் பொங்கலில்  மூணே முந்திரிதான் இருந்துச்சு. நான் ஒன்னும் சொல்லப்போறதில்லை  மூச்....)

ப்ருந்தாரண்யத்தில் இருந்து கிளம்பினோம்.  ஆஹா... அதென்ன?  இதுதான் பழைய பெயராம் இந்த தலத்துக்கு. துளசிவனம்.  அப்புறம்தான் அல்லிக்கேணியாச்சு.  பீச் ரோடுவழியா திரும்பி வந்தோம்.  விவேகாநந்தர் இல்லத்தில்  150 வது பிறந்தநாள் விழான்னு  நடந்துக்கிட்டு இருக்கு.  மறுநாள்  மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி வச்சுருக்காங்க.



அறைக்கு வந்தகொஞ்ச நேரத்தில்  பதிவர் மின்னல்வரிகள்  பாலகணேஷ் வந்தார்.  புதுமுகம் என்ற  பிரமிப்பு  ஒன்னும் இல்லாமல் எதோ காலங்காலமா தினமும் பார்த்துப்பேசிவந்ததைப் போல் ஒரு  தோணல்.  நேத்து விட்ட இடத்துலே இருந்து பேச ஆரம்பிக்கிறோம். பதிவர் குடும்ப லக்ஷணம் என்பது இதுதான்.  அவருக்கும் அநேகமா இப்படித்தான் இருந்துருக்கணும்.  விதிவிலக்காக நம்ம கோபால் மட்டும்  இருந்தார்:-)))))

நேரம் போறது தெரியாமல் ஒரு அரட்டை.  அவர் வீட்டு புத்தக அலமாரியை ஒரு நாள் அபேஸ் பண்ணிடணுமுன்னு இருக்கேன்.  பதிவுலகம் ஒன்னு இப்படி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு அவருக்கு ரொம்பநாளாத் தெரியாதாம். அப்புறம்தெரிஞ்சதும்  கண்ணைத்  திறந்துக்கிட்டே  கடலில் குதிச்சுட்டாரு:-)))))  இப்பதான் ஒரு வருசம் ஆகி இருக்குன்னார். மனம்கவரும் அருமையான பதிவுகளை எழுதிவரும் நண்பர்களைப்பற்றி, ' இதைப்படிச்சீங்களா? அதைப்படிச்சீங்களா? ன்னு  விசாரிச்சுக்கிட்டோம். விழாவுக்குக் கட்டாயம் வந்துருங்கன்னு சொல்லி நினைவூட்டுனதும் நண்பர் ஒருவரையும் கூட அழைச்சுக்கிட்டு வரேன்னார்.  நண்பர் பெயரை நான் சட்னு சொன்னதும்  வியப்புதான்.  ஒரே  குட்டையில் இருக்கும் மீன்களுக்கு  ஒன்றையொன்று புரியாதா?:-))))))) இவ்ளவு பேசுனவ சரிதாவைப் பற்றி மட்டும் ஒன்னும் விசாரிச்சுக்கலை!

விமானநிலையம் போகணுமுன்னு கோபால் நினைவுபடுத்தினார். போறவழியில் கவனிச்சுக்கிட்டே வந்தேன். ஆஹா.... அட்டகாசமான விளக்கொளியில் மின்னுவதை எப்படித்தவறவிட்டேன்?

இன்னிக்குத்தான் திறப்புவிழா.  அதான் பளிச் பளிச்.

இத்தனைநாள்  எப்படியோ மறைச்சு வச்சுருந்தாங்க போல. பிரமாண்டமாத்தான் நிக்குது! மகளுடன் திரும்பி வரும்போது  யானையைக் காமிச்சேன்.  மெட்ரோ வேலைகள் நடப்பதால் முழு வியூவும் பார்வைக்கு அகப்படலை.  ஒருநாள் போகத்தான் வேணும்.  மகளுக்குப் பிடிக்கும்.

அடுத்த ரெண்டு நாட்களும் மகளுக்குத் துணிகள் எடுப்பது தைக்கக்கொடுப்பது, உறவீனர் வீடுகளுக்கு விஸிட் என்று  அலைஞ்சோம்.  எங்க வீட்டு இமெல்டா மார்கோஸ் என்ற பட்டத்துக்கு உரிய  மகளை  எகஸ்ப்ரெஸ் அவென்யூவுக்குக் கூட்டிப் போனோம்.  நானும் ஒரு கிளாஸ் மனப்பால் குடிச்சுட்டுக் கிளம்பினேன். எனக்கு அங்கே ஸ்ரீரங்கா ஜுவல்லர்ஸ்  பார்க்கணும்.  (கவனிக்க: பார்க்கணும்)  சான்ஸ் கிடைச்சா எதாவது சின்னதா.............

எனக்கு முன்னாலேயே என் அதிர்ஷ்டம் (ஒருவேளை கோபாலின் அதிர்ஷ்டமாகக்கூட  இருக்குமோ?)    அங்கே போய் உக்கார்ந்துவிட்டது. மூணுதளமும் மாறிமாறி ஏறி இறங்கினது மிச்சம். கடையைக் காணோம்:(  போச்சு என் காமதேனு...........

எனெக்கென்னமோ   இங்கே பார்க்கிங் சார்ஜ் கூடுதல் என்று தோணுது.  ஒருவேளை எங்கூர் மால்களில்  எல்லாம் இலவச பார்க்கிங் என்பதால் இருக்கலாம். பார்க்கிங் மட்டுமா...உள்ளே இதர சாமான்களும் இப்படித்தான் தீ பிடிச்ச விலை.  சாதாரண ப்ரிண்ட் (மயிலிறகு டிஸைன்) உள்ள புடவை பத்தாயிரத்துச் சொச்சம்.   புளிப்பு திராக்ஷை!

வீட்டு அலங்காரச் சாமான்கள் கடையில்  யானை மந்தைகள். எல்லாமே ரொம்ப அழகா நீட்டா வச்சுருக்காங்க. அசப்பில் எங்கூர் கடைகள் போல ஒரு ஃபீலிங்ஸ். அதான் ஒன்னும் வாங்கிக்கலை:-)










பகலுணவு நேரமாச்சேன்னு ஃபுட்கோர்ட் பக்கம் போனால் நளாஸ் ஆப்பம் கண்ணில் பட்டது.  நம்ம பதிவர் மோகன்குமார் ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு வரவே அங்கேயே சாப்பிடலாமுன்னு முடிவு.  முதலிலேயே காசைக் கட்டணும். மீதிச் சில்லறை கிடைக்காதுன்னு பதிவுகளின் மூலம் தெரிஞ்சதால்  சரியாக் கணக்குப் போட்டு அதுக்குண்டான தொகையை மட்டும் கட்டி  ப்ரீபெய்டு  கார்டு  வாங்கினோம்.  எக்ஸ்ட்ரா எதாவது வேணுமுன்னா.... மூச்.   இந்த சிஸ்டம்  சரியானதில்லைன்னு எனக்குப் படுது.  மீதியை நம்ம  டெபிட் கார்டுக்கு அனுப்பக்கூடாதா?  இல்லை சாப்பாட்டு பில்லை சாப்பிட்டப்பிறகு நம்ம க்ரெடிட் கார்டைக் கொண்டு கட்டலாம் என்று இருக்கக்கூடாதா?  இங்கெல்லாம் அப்படித்தானே செய்யறோம்.  என்னவோ போங்க..... உள்ளுர் விவகாரம் ஒன்னும் புரிபடமாட்டேங்குது:(


அறைக்குத் திரும்பும்  வழியில்  அண்ணாசாலையில் ஒரு ஆண்டீக் கடை பெயர்பலகை பார்த்தது நினைவுக்கு வர அங்கே போனோம். ஒரே இருட்டு. தட்டுத்தடவி  கண்கள் இருட்டுக்குப் பழக்கமானதும்  ரெண்டு மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். பவர் கட்டாம்.  இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் வெளிச்சம் வர.  ஜன்னல் வழியா சூரிய ஒளி புக முடியாமல் அடைச்சுவச்ச சாமான்கள்.   தெருபக்கம் ஷோ விண்டோ.  பொருட்கள் ஒன்னும் சரிவரலைன்னு நினைச்ச சமயம் உள்ளே இருந்து ஒரு மணியைக் கொண்டுவந்தார்.  பித்தளை மாதிரி இருக்கு.  ஆனால்...ஏழு உலோகங்களின் கலவை. Tibetan Prayer Bell  தியானத்துக்கானதாம்.  ஒரு மரக்கட்டையால் விளிம்பைச் சுத்தினால்  ஒருமாதிரி 'ஓம்' என்ற ஒலி வருது.

ரெண்டு சைஸ் இருக்கு. கொஞ்சம் பெரியதை (11 செமீ விட்டமும்  20 செ.மீ உயரமும்) வாங்கினோம். பேரம் பேசத் தோணலை.கடை இருக்கும் அழகைப் பார்த்தால் அன்றைக்குப் பூராவும் நாங்க மட்டுமே  கஸ்டமராக இருப்போம் போல. ரெண்டு பேர் காலையில் இருந்து கடையைத் திறந்துவச்சுக்கிட்டு  மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்துருக்காங்க. போயிட்டுப் போகுது போ!




ஒரு 46 விநாடி  வீடியோ இது. நின்னு நிதானமா  கட்டையை சுத்திவர ஓடவிட்டா நல்ல சப்தம் வருது. இங்கே அவசரடியா ... ச்சும்மா ஒரு சாம்பிள்.




28 comments:

said...

//எனெக்கென்னமோ இங்கே பார்க்கிங் சார்ஜ் கூடுதல் என்று தோணுது.//

நீங்க எங்க ஊர் (உங்க ஊரும்தான்) மால்மாரர்களின் வியாபார நுணுக்கத்தை சரியா புரிஞ்சுக்கலை. மால்களில் இருக்கும் கடைகளில் நாங்கள் வேடிக்கை மட்டும்தான் பார்ப்போம். ஒண்ணும் வாங்க மாட்டோம். கடை வச்சிருக்கறவனும் விளம்பரத்துக்காகத்தான் அங்க ஸ்டால் போட்டிருக்கிறான்.

அப்புறம் மால்காரனுக்கு செலவுக்கு காசு வேணுமில்லையா? அதுக்குத்தான் பார்க்கிங் சார்ஜ். இதுக்கு லிமிட் இல்லை. வேணும்னா கொடுங்க இல்லாட்டி போய்ட்டே இருங்க. இதுதான் எங்க பாலிசி.

said...

// அண்ணாசாலையில் ஒரு ஆண்டீக் கடை பெயர்பலகை பார்த்தது நினைவுக்கு வர அங்கே போனோம்//

"அண்ணா சாலையில் துளசி மேடத்தோட ஆண்டி ( aunty) கடை வைத்திருக்காங்களா ? எங்கிட்டே சொல்லலையே !!" என்றேன்.

"அதெல்லாம் இருக்காது" அப்படின்னு தொடர்ந்த என் இவள்,

"ஒரு வேளை ஏதேனும் ஆண்டி ( pauper ) ஒரு காலத்திலே ஓஹோன்னு இருந்தவன் இப்ப இருப்பதெல்லாம் எப்படியாச்சும்
வித்துப்போடணும்னு காத்திட்டு இருக்காரோ !! சரி தான் ! துளசி மேடம் மாட்டினாங்க...."

"இல்லை. ...இல்லை.... இப்போதான் புரியுது...." என்று கூவினேன். யூரேகா ஸ்டைலில்.

"என்ன புரியுது ?"

"antique அப்படின்னா பழைய சாமான். நம்ம ஊரிலே ஈய பித்தளை இரும்பு சாமானுக்கு பேரீச்சம் பழம் தாரேன் அப்படின்னு
சொல்லிட்டு போவாகளே அந்த மாதிரி வாபாராம்...."

"பழசுன்னு சொன்னாலே அதுக்கு ஒரு தனி மௌசுதாங்க.... "

"ஆமாம். உன்னைத் தவிர.... .."

இவள் முறைத்தாள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in


said...

இரண்டு முறை திட்டமிட்டும் இந்த மால்கள் பக்கம் போக வாய்ப்பு அமையவே இலலை. ராஜராஜன் நீங்க போனா பஞ்சாயத்தை இழுத்துடுவீங்க என்று தவிர்த்து விட்டார்.

said...

கண்ணாடிப்பொட்டியில், கோவில் எப்படி இருக்குன்ற டிஸ்ப்ளே பார்த்தால் அருமையான அமைப்புதான்.

ஆனால் கோவில் உள்ளே நிஜமாவே நாம் இருக்கும்போது அந்த ஒரிஜனல் அழகு தெரியறதில்லை //

நிறைய கோவில்கள் அப்படித்தான் உணரவைக்கின்றன....

said...

திருவல்லிக்கேணி கோயில் பத்தி நீங்க சொன்ன விஷயம் சரிதான். உள்ளிருக்கும போது அழகு தெரியறதில்லை. அங்க வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் நல்லாயிருக்கா? நான் பலதடவை தரிசனம் (மட்டும்) பண்ணிட்டு பேக்கு மாதிரி திரும்பியிருக்கேன். அடுத்த முறை டேஸ்ட் பாத்திடுறேன். நமது சந்திப்பு பற்றி நீங்கள் எழுதினது மிகச் சரி. நான் உணர்ந்ததும் அப்படியே. சரிதா பத்தி நிறைய நேர்ல விவரங்கள் சொல்றேன். வெல்கம் டு மை குடில்! அப்பறம்... நீஙக எடுத்த படங்கள் ஒவ்பொண்ணும் அருமை. மிக ரசிச்சேன்.

said...

யானையா மவுண்ட் ரோடிலயா.ஹ்ம்ம்.
எல்லாம் சொல்றவங்க வந்து பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கே:)
இந்த மால் வெளியூர் மால் போலவே இருக்கு. விலையும் அப்படித்தான் இருக்கும்.
நானும் போய்ப் பார்க்கிறேன்.
சாரதிக்கு என்ன. கம்பீர புருஷன். சின்னவயசில அந்தக் கண்ணுக்கும் மீசைக்கும் பயந்தே பாட்டியோடப் போக மாட்டேன். இப்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு:)

said...

பார்க்கிங் சார்ஜ் பகல் கொள்ளையா இருக்கே.

திர்லக்கேணி தரிசனம் அருமை.

said...

பல தடவை பார்த்த பார்த்தசாரதியை உங்களுடன் சேர்ந்து மறுபடி பார்த்தாச்சு!

புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டாச்சு.

என்னமா எழுதறீங்க என்ற வியப்பிலிருந்து வெளியே வர முடியாமல் .....

திரு பால கணேஷ் எல்லோருடனும் பல நாட்கள் பழகியவர்போல பழகும் இனிமையானவர்.

said...

வேங்கட கிருஷ்ணனை பார்க்க ஒரு தரம் போகணும். சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் டேஸ்ட் பண்ண....:)

மால்கள் எல்லாமே வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும் தான் என நினைக்கிறேன். தில்லியிலும் இப்படித்தான்...

கணேஷ் சார் கிட்ட நான் சரிதா பற்றி ஞாபகமா கேட்டேன். அவரும் சொன்னார். ஆனா நான் சொல்ல மாட்டேன்.....சஸ்பென்ஸ்..

said...


என் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து வந்தேன். ஐந்தாறு தளங்களில் எப்படி எழுதுகிறீர்கள் என்று பார்க்க துளசி தளம் மட்டும்தான் ஆக்டிவ் போலிருக்கு.
பார்த்த சாரதி கோயிலுக்கு நானும் போயிருக்கிறேன். கண்ணனின் விழுப் புண்கள் ஏதும் என் கண்ணில் படவில்லை. பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது கையில் சக்கரம் இல்லாமலேயா ஆதவனை மறைத்து ஜெயத்ரதனை வெளியில் வரச் செய்தார். ? சில விஷயங்களை பின்னூட்ட மிடுவதை விட மின் அஞ்சலில் தெரிவிக்கலாம் என்றால் முகவரி இல்லையே. உங்கள் வீட்டு விசேஷத்தில் உணவு உட்கொண்டது பற்றி சூரி சிவா வெகுவாக சிகாகித்து எழுதி இருந்தார். தற்சமயம் ஜாகை எங்கே.? இந்தியாவா நியூஜிலாந்தா.?அடிக்கடி வாருங்கள்.பதிவுலகின் “ஜாம்பவானி “( ஜாம்பவானுக்குப் பெண்பால்.?) என் பதிவைப் படித்தார் என்பதில் மகிழ்ச்சி. என் ‘ சாதாரணன் ராமாயணம் ‘ நீங்கள் படிக்க வேண்டும் ஆறு காண்டங்களும் ஒரே வாக்கியத்தில் . மேலும் சந்திப்போம்.

said...

பார்த்த சாரதியைத் தர்சித்தோம்.

ஆகா! மணி அருமை.

said...

ஆஹா... அருமையான படங்கள்...

நன்றி...

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

அப்டீங்கறீங்க!!!!! ஆஹா.....

நாங்க மட்டும் எங்கூருலே மால் போனா வாங்கிக்கிட்டே இருக்கோமா?

முக்கால்வாசிநாள் நடைப்பயிற்சியும் விண்டோ ஷாப்பிங்கும்தான்.
அதுக்கும் இங்கே ஃப்ரீ பார்க்கிங்தான்:-)

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா.

அதான் ஓல்ட் ஈஸ் கோல்ட். கோல்ட் ஈஸ் ஓல்டுன்னு இருக்கே:-))))

said...

வாங்க ஜோதிஜி.

பஞ்சாயத்தா???? நீங்கசெஞ்சாலும் செய்வீங்க:-)

பேசாம தலைப்பை மாலும் மாலும் என்று மாத்தி வச்சுருந்து இருக்கலாமோன்னு இப்போ தோணல்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சுற்றுப்புறத்தில் நிறைய இடம் விட்டுக் கட்டிய கோவில்களை அடைச்சு கடைகளும் கூட்டமுமா இப்போ ஒரிஜினல் அழகை ரசிக்க முடியாம இருக்குதேன்னு .... கவலைதான்.

said...

வாங்க பால கணேஷ்.

வெண்பொங்கல் இதுவரை நான் சாப்பிட்டுப் பார்க்கலை:( ஆனால் அதிரசம் இளம் சூட்டோடு அட்டகாசமா இருந்துச்சு ஒருமுறை.

சரிதா பற்றித் தனியா விசாரிக்கணும் அடுத்த சந்திப்பில்.

said...

வாங்க வல்லி.

புதுகைத்தென்றல் சொன்ன ராஜ்தானி(யும்) இந்த மாலில்தான் இருக்கு என்பது கூடுதல் தகவல் உங்களுக்கு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரசிப்புக்கு நன்றிப்பா. அவருக்கென்னப்பா சாட்டையும் கையுமா அட்டகாசமா நிக்கறார். ஒன்பதடி மிரட்டல்தான்:-)))

said...

வாங்க ரஞ்சனி.

பதிவர் குடும்பமே இப்படித்தான். வேற்றுமுகமே இல்லாம பழகும், சண்டை சச்சரவுகள் எல்லாம் கலந்து இருக்கும் அன்பான கூட்டுக்குடும்பம்.

யாரும் யாரையும் விட்டுக் கொடுத்துறமாட்டோம்:-)))

பார்த்தசாரதியை மட்டுமா..... நம்மூர் கோவில்களை எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பே வர்றதில்லை.

கோவிலில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்துக் கோபம் வந்தாலும் (எனக்கு திருப்பதி மேல் வறும் கோபம் போல்) அடுத்தமுறை முணங்கிக்கிட்டே போகத்தோணுதே:-)))

உங்களுக்காக இங்கே ஒரு சுட்டி: வெறும் மூணுதான். நூல்பிடிச்சுப்போகணும்.

http://thulasidhalam.blogspot.co.nz/2011/06/1.html

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அப்ப உங்களுக்கான சென்னைக்கோவில் விஸிட்க்கு பட்டியல் தயாரிக்கத்தான் வேணும்:-)

சரிதா சமாச்சாரம் இப்படி சஸ்பென்ஸ் ஆகிப்போச்சு பாருங்க!!!!

விடுவதில்லை இந்த பால கணேஷை:-)

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

இதுதான் நம்ம வீடு. மற்றவைகள் கூட்டுப்பதிவுதான். ஏழாம்படைவீடு மட்டும் சண்டிகர் முருகனுக்காக ஆரம்பிச்சுக் கொடுத்தேன். அப்போ அங்கே இருந்த நண்பர்கள் யாராவது தொடர்ந்து எழுதுவாங்கன்னு நினைச்சால் எனக்கு முன்னே அவுங்க இடம் பெயர்ந்துட்டாங்க. நானும் ஊரைவிட்டு வந்தவுடன் அதுவும் நின்னுபோச்சு.

பார்த்தசாரதியை நானும் பலமுறை பார்த்தேன் என்றாலும் தழும்பு கண்ணில் பட்டது இந்த முறைதான். நல்ல பளிச்ன்னு விளக்கொளி இருந்ததே காரணம். விளக்குப்போட்ட புண்ணியவான் நல்லா இருக்கணும்.

வைகுண்டத்தில் விட்டு வந்த சக்கரத்துக்கு செல் ஃபோனில் கமாண்ட் கொடுத்துருக்க மாட்டாரா என்ன? (என்னமா சமாளிக்க வெண்டி இருக்குன்னு பாருங்க!)

25 வருசமா நியூஸியில்தான் ஜாகை. சில சமயம் பயணம் வாய்ப்பதுண்டு. கோபாலின் வேலை நிமித்தம் 2009 ஜூன் முதல் 2011 ஜூலை வரை இந்தியாவுக்கு வந்திருந்தோம்.

எல்லாமே துளசிதளத்தில் இருக்கு.

உங்க ராமாயணம் வாசிக்க ஆவலா இருக்கேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

ஒருநாள் ஒழுங்கா ஆடாம அசையாம உக்காந்து மணி சுத்தி, தியானம் செய்யணும்ப்பா.

எந்த நினைப்பும் குறுக்கிடக்கூடாது. முக்கியமா தமிழ்மணம், பதிவு, பின்னூட்டம் இதெல்லாம்!

மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே கதைதான்:-)))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வேங்கடகிருஷ்ணன் ஒரிஜினல் பேரா? இது தெரியாத தகவல். மல்லிகையை எந்தப் பேர் சொல்லி அழைத்தால் என்ன? மல்லிக்கை மல்லிகைதானே :)

நான் பொதுவழியில்தான் போனேன். சனிக்கிழமையாக இருந்தும் கூட்டமில்லாமல் காட்சி தந்தான் கருணைக்கடல். நீங்க எல்லாரையும் பாத்திருக்கிங்க.

நான் முகம் கண்டேன். முகமே கண்டேன். அங்கிருந்த பட்டர் பாத தரிசனம் பண்ணுங்கன்னு சொன்னதும்தான் முகத்திலிருந்து பார்வையை விலக்கி திருவடி கண்டேன்.

கண் நிறைந்ததா? மனம் நிறைந்ததா? உடல் நிறைந்ததா? உயிர் நிறைந்ததா? தெரியவில்லை. ஒரு நிறைவு. :)

வேதவல்லித்தாயாரையும் கண்டேன். புள் சுமந்த பெருமாளையும் கண்டேன். அங்கு பட்டர் விளக்கங்களை அழகாகச் சொன்னார். யோகநரசிம்மரையும் கண்டேன்.

புளியோதரை மட்டும் வாங்கினேன். பொங்கலும் வெண்பொங்கலும் வாங்கவில்லை. அடுத்த முறை வாங்கி விடுகிறேன்.

நீங்கள் சொல்லும் முந்திரிப்பருப்பு நெய் கணக்கு திடுக்கென்று இருக்கிறது. உப்பிலேயே லோ சோடியம் உப்பு சாப்பிடுறவனுக்கு இதெல்லாம் தேவையா!

கடவுள்களே உடம்புக்கு நல்லாயிருக்கும் பலகாரங்களை நைவேத்தியமா ஏத்துக்க மாட்டீங்களா?!

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பார்க்கிங் விலை அதிகம். ஊரிலிருந்து குழந்தைகள் வந்தால் மட்டுமே கார் அந்தப் பக்கம் போகும். இல்லையென்றால் இல்லை. அதுவும் கொள்ளை. நீங்கள் சொல்லும் ஃபுட்கோர்ட்டும் கொள்ளை. எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் சாப்பிடாதிங்க. ஒருமுறை சாப்பிட்டு வாந்தி எடுத்தேன். அதுல கொஞ்சமா லேசா இத்துணூண்டு ரத்தம். வீட்டில் எல்லாரும் டென்ஷன். டாக்டரைப் பாத்து.. அவரு ஒன்னுமே இல்லைன்னு சொன்னதுதாம் எல்லாருக்கும் திருப்தி. அதிலிருந்தே வீட்டுல எல்லாருக்கும் எக்ஸ்பிரஸ் மால் புட்கோர்ட்டுன்னா ஒரு பயம்.

அந்த மணி மிகமிக அழகு. ஓங்காரவொலி காதில் கேட்டது. அந்த மணியோட விலை என்ன? கேக்கலாம்தானே? :)

said...

அருமையான படங்கள். அவர் உண்மையான பெயர் வேங்கட கிருஷ்ணனா? ஓ...

கந்தசாமி சார் கமெண்ட் ரசித்தேன்.

said...

வாங்க ஜீரா.

நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் என்று சொல்லிக்கிட்டேதான் நைவேத்தியம் சாமிக்குக் காமிக்கிறது:-)

நெய்யும் சக்கரையுமாக் கொட்டி....உடல்நலத்துக்குக் கேடுன்னாலுமிது பிரசாதம்ன்னு நினைச்சுத்துளியூண்டு வாயில் போட்டுக்கணும். வளைச்சுக்கட்டி வெட்டக்கூடாது:-)))))

அதுக்குத்தான் மஹாநைவேத்தியமுன்னு வெறும் வெள்ளை அன்னம் இருக்கே! (வெறும் சோறு!)

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிக்கும் கமெண்டை 'நச்'ன்னு போடும்போதே தெரியலையா கோயமுத்தூர் குறு(சு)ம்புக்காரர்ன்னு:-))))))

நானும் அவர் கமெண்டை எப்பவும் வெகுவாக ரசிப்பேன்:-)