Friday, November 09, 2012

ஃபுல்லுக்கட்டும் புல்லுக்கட்டும்...............



காலையில் ஃபோன் பண்ணி  டேபிள் ரிசர்வேஷன் செய்யலாமுன்னா.... இன்னும்  முழுசா செயல்பட ஆரம்பிக்கலை. நீங்கள் மாலை ஏழுமணிக்கு இங்கே வந்துருங்கன்னாங்க.  ட்ரெஸ் கோட்  இருக்கான்னு தெரியலை. ஆனாலும் நட்சத்திரத்துக்குரிய அந்தஸ்தை தரத்தானே வேணும்.

ஹொட்டேல் க்ராண்ட் ச்சோழா. பெஷாவ்ரி ரெஸ்ட்டாரண்ட். மொத்தம் பத்து உணவகம் உள்ளே இருக்குன்னு தகவல். ஆனால் திறந்து இன்னிக்கு மூணே நாள் ஆனபடியால்  பெஷாவ்ரி மட்டுமே திறந்துருக்கு.

புது ஹொட்டேலில் பத்துமாடிகள். 600 அறைகள். 1000 கார்களுக்கான பார்க்கிங் வசதி. பணத்தின் ஜொலிப்பு தகதகன்னு எங்கெபார்த்தாலும் தெரிஞ்சது. அரண்மனைகளைப்போல வெளிப்புறச் சுவர்களும் அதில் சுற்றிவர நிற்கும் ரெட்டை யானைகளுமா அட்டகாசம் போங்க. அருமையான தோட்டம், செயற்கை நீரூற்று. லாபியில்  விதானம் முழுக்க வரிசைகட்டி நிற்கும் விளக்குகள்.  பிரமாண்டமான ஷாண்டிலியர்கள். தரையில் தாமரைக்குளம். எல்லாம் மாசுமருவில்லாமல் தூய்மை! ( நிஜத் தாமரைப் பூக்களைப் போட்டு வைக்கப்டாதோ?) 



தமிழ்நாட்டுலே மின்வெட்டு இருக்குன்னு சொல்றாங்க?  தனி பவர் ஸ்டேஷன் வச்சால்தான் இப்படி தாளிக்கமுடியும்!!!!



கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், பார்கள் , ஏழு லவுஞ்சுகள் இப்படி அங்கங்கே  நிறைய 'கள்'கள்தான். ஒத்தைபடையா ஒன்னுமே இல்லை ஒன்னைத்தவிர !

சோழன் வந்திறங்கிய குதிரை ஒன்னு மட்டும் நின்னது:-)))

எட்டு ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போட்டுருக்காங்க. அம்பத்தியேழு வகையான  பளிங்கு/மார்பிள் கற்களை வச்சு இழையோ இழைன்னு இழைச்சுவச்சுருக்காங்க.  இதுமட்டும் பத்து லக்ஷம் சதுர அடிகள். எல்லாம் இடாலி  இறக்குமதி. தனியா ஒரு க்வாரி  அங்கே இதுக்குன்னே  வேலை செஞ்சுருக்கு.  உள் அலங்காரத்தில் நுணுக்கமான வேலைகளுக்கு நம்ம மாமல்லபுரத்தில் இருந்து  நாலாயிரம் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு வந்தாங்களாம். சோழப்பேரரசு  காலத்து  திராவிடக் கலை  கட்டுமானம்னு சொல்றாங்க.  இந்த அரசர்களின் அரண்மனையை விட்டு வச்சுருக்கக்கூடாதோ?  அட்லீஸ்ட் கம்பேர் பண்ணிக்க வசதியா இருக்குமே! சிங்கையில் இருக்கும் அமெரிக்க கம்பெனி ஒன்னு வடிவமைச்சுக் கொடுத்துருக்கு. இந்தியாவில் மூணாம் பெருசு இது.

செலவு கூட அவ்வளோ அதிகமில்லை. ஆயிரம் கோடி  பட்ஜெட். ஆனால் எதுதான் நினைச்ச பட்ஜெட்டுலே அடங்குது.  நகைக்கடைக்கும் புடவைக்கடைக்கும் போன அனுபவம் எல்லாருக்கும் இருக்குமே!  ஒரு 20 சதம் கூடிப்போயிருச்சு.  ஆயிரத்து இருநூறு கோடிகள்.  ( அட இவ்ளோதானா?  அப்ப ஒரு லட்சத்துக்கு  எழுபத்தி ஆறாயிரம் கோடிகளுக்கு  இதைப்போல  எத்தனை கட்டலாமுன்னு அசட்டுத்தனமாக் கணக்குப்போடும் மனசை அதட்டி உக்காரவச்சேன்)

  ஏகப்பட்ட பணியாட்கள். நாலாயிரமாம்.  வரவேற்பில் பெண்களுக்கு  யூனிஃபார்ம் அருமையான டிஸைனில் புடவைகள். போகட்டும்.... நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள். மகளிர்  மட்டும் என்று ஒரு முழு மாடி.  ஹொட்டேலில் தங்கவரும் பெண் விருந்தினர்களுக்கு மட்டும்! ஆஹா.... அந்தப்புரம்!!!  ஆண்களுக்கு  அனுமதி இல்லை கேட்டோ!

ப்ரெசிடென்ஸியல் ஸ்யூட்  ஒன்றின் பெயர் கரிகாலன் ஸ்யூட்!  கலை என்ற பெயரில் ஒரு கலையரங்கம் கூட இருக்கு.  நாப்பத்தியஞ்சே பேர் தான் உக்காரமுடியும். ஸோ.... பதிவர் சந்திப்புக்குப் போதாது கேட்டோ:(

பெயர் வைப்பதில் கில்லாடிகள் நாம் என்று நிரூபிச்சுட்டாங்க.  ஹெல்த் ஸ்பா இருக்கும் இடத்துக்கு காயகல்பம் என்று பெயர்!

சுற்றுச்சூழல் எனர்ஜிக்கான  பசுமைச் சான்றிதழ் 'லீட் ' கிடைச்சுருக்கு.  அதிலும் தர வரிசையில் மேலான ப்ளாட்டினம் சான்றிதழாம். ( Leadership in Energy and Environmental Design (LEED), an internationally recognised green building certification system. ) கூடிய விரைவில் மொட்டை மாடியில் ஹெலிபேட்  ஒன்னு வருதாம்.  அதானே..... ட்ராஃபிக்லே மாட்டிக்காம ஜம்முன்னு வந்து இறங்கிக்கலாம், இல்லை?


அளவுக்கு மீறிய பணிவோடு அழைச்சுப்போய் உக்காரவச்சு நமக்கு பிப் எல்லாம் மாட்டி மெனுப்பலகையைக் கொண்டுவந்து வச்சாங்க. ஒரு பக்கம் வெஜ் மறுபக்கம் நான் வெஜ் பட்டியல்.

உட்காரும் இடத்துக்கு டபுள் மடங்கு சமையலறை. பெரிய மேடைகளுக்குள்ளே ஒளிஞ்சுருக்கும் தந்தூரி அடுப்புகள்.  எல்லாமே படு சுத்தம்.  இந்த செட்டிங்ஸ், பாத்திர பண்டம் எல்லாமே  தில்லி மௌரியாவில் இருக்கும் பெஷாவ்ரி போலவே அச்சு அசலா இருக்குன்னார் கோபால். நெசமாவான்னதுக்கு .... ஒன்னே ஒன்னைத்தவிர....ன்னு இழுத்தார்.  அவர் கண் போன இடத்தைப் பார்த்தவுடன் புரிஞ்சு போச்சு. மெனுவின்  வலது பக்கம்......  ஓ.... குறைவா இல்லை அதிகமா? கொஞ்சம் மலிவுதான்னார்:-)

சமையல் நிபுணர்களைக்கூட தில்லியில் இருந்துதான் கொண்டு வந்துருக்காங்களாம். போகப்போக  உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி தருவாங்களா இருக்கும்.

சாப்பாடு வகைகளின் ப்ரஸண்டேஷன், ருசி ,  சர்வீஸ் எல்லாம் அருமை. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்  தினந்தினம் வரமாட்டோமுல்லெ. எப்பவாவது ஒரு நாள் என்றால்  சரிதானே?  நல்ல பெரிய சர்விங் என்பதால் நீங்கள் கொஞ்சம் பார்த்து ஆர்டர் செய்யுங்க.  சாப்பிட்டுட்டுக்  கூடுதல் வேணுமுன்னா   அப்புறம்  ஆர்டர் செஞ்சுக்கலாமே! ஃபுல்லா  கட்டணுமுன்னு நினைச்சால்  ஒரு வேளை பட்டினி கிடந்துட்டுப்போனால்.....ஜஸ்டிஃபை  பண்ணிக்கலாம்:-)

ரெஸ்ட்டாரண்டில்  கூட்டமே இல்லை. ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருந்தாலே அதிகம்.  பீடா, பான் வகைகள் எல்லாம் கூட அருமையாத்தான் இருந்துச்சு. அங்கங்கே பூச்சாடியில்  சிம்பிளான பூக்கள் அலங்காரம் , பளபளக்கும் ரெஸ்ட் ரூம்ஸ் என்று  எல்லாம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி பாந்தமா இருக்கு. அறிமுகச் சலுகையா அறை வாடகையைக்கூட அம்பது சதமானம்போல  குறைச்சுருக்காங்க.  முதலிலேயே தெரிஞ்சுருந்தா ஒரு மூணுநாள் வந்து தங்கி இருக்கலாம். மகளுக்கும்  மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ( போகட்டும் அடுத்த ஹொட்டேல் கட்டும்போது வந்து தங்கினால் ஆச்சு:-))))

வெளிப்புறச் சுவர் யானைகளைக் கிட்டக்கப்பார்த்தால்.........  வேறென்னவோ மாதிரி தெரியுதே:(   இதென்னடா   யானைக்கு வந்த சோதனை????    கண்ணாடி மாத்தணுமோ என்னவோ! 

மறுநாள் சில கோவில்களுக்குப் போகலாமுன்னு கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பினோம். நம்ம கெஸ்ட் ஹவுஸ்லே  காலை ஏழரை முதலே ப்ரேக்ஃபாஸ்ட்  கிடைச்சுருது.  அறைவாடகையோடு  இதுவும் சேர்த்தி என்பதால்  ஒருவிதத்தில் சௌகரியமாத்தான் இருக்கு. இன்னிக்குக் காலையில்   நம்ம சீனிவாசன்  கண் முழிச்ச நேரம் சரியில்லை போல!

அண்ணாசாலையில் போய்க்கிட்டு இருக்கோம்.  இடது பக்கம் திரும்பி பாரதிதாசன் சாலைக்குள்  நுழையணும்.  எங்களுக்கு  இடதுபுறமிருந்து  ஒரு நானோ வேகமா வந்து   ஒரு அறிவிப்பும்  கொடுக்காம  சடார்னு  நம்ம வண்டிக்கு முன்னால் ரைட் லேனுக்குப் பாய்ஞ்சது. சீனிவாசன்  சடார்னு ப்ரேக் போட்டாலும்  முடியாம  நானோவைப் பின்புறம் தட்டும்படி ஆச்சு.  எதிர்பாராத  சடன்ப்ரேக்கால் நான் முன்சீட்டில்  முகத்தை இடிச்சுக்கிட்டேன்.  என் லிப்ஸ்டிக் எல்லாம் முன்ஸீட்டின் முதுகுலே  ஒட்டிக்குச்சுன்னா பாருங்க!  மகளும் கொஞ்சம் இடிச்சுக்கிட்டாள்தான்.  ஸீட் பெல்ட் ஏன் இந்த வண்டியில் இல்லேன்னு அவள் விசாரம்.

இதுக்குள்ளே அங்கே சின்னதா ட்ராஃபிக் ஜாம் ஆகி  போலீஸ்காரர்  ஓடிவந்தார். ரெண்டு வண்டிகளையும் ஓரம் கட்டியாச்சு.  போலீஸோடு பேச்சுவார்த்தை நடக்குது. என்ன  ஆக்‌ஷன் எடுக்கப்போறாங்கன்னு  எனக்குத் தெரிஞ்சுக்கணும்.  அதெல்லாம்  ஒன்னும் வண்டியை விட்டு இறங்க வேணாம். ஸ்ரீநிவாசன்  பேசிக்குவார்ன்னு கோபால் சொல்றார்.  இறங்கிப்போய்ப் பார்க்கலைன்னா அம்,மாக்கு மண்டை வெடிச்சுருமுன்னு  மகள்  சொல்ல அதானே...ன்னு கீழே இறங்கிப்போய்ப் பார்த்தேன்.  நானோவைப் பார்த்ததே இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தவளுக்கு நானோவைப் பக்கத்துலே பார்க்க ஒரு சான்ஸ்:-)


லெஃப்ட்லே  வந்து ஓவர்டேக் பண்ணியவர்  தன்னுடைய தப்பு எதுவுமே இல்லைன்றமாதிரி நிக்கறார்.  இன்ஷூரன்ஸ் இருக்கான்னு (எங்கூர் வழக்கப்படி) கேட்டேன்.  இருக்குன்னார்.  அதுக்குள்ளே கோபால் இறங்கி வந்து  எங்கே அடிபட்டுருக்குன்னு  பார்த்துக்கிட்டே  விவகாரம் எப்படி தீரப்போகுதோன்னு  கவலை முகத்தை மாட்டிக்கிட்டார்.  மகள் வேற தனியா உக்கார்ந்துருக்காளேன்னு நான் நாலைஞ்சு க்ளிக் செஞ்சுக்கிட்டு போயிட்டேன்.

விவகாரம்  முடிவுக்கு  வர எல்லாம் ஒரு இருவது நிமிஷம் எடுத்துருக்கு.  இன்னொரு போலீஸ்  ஆப்பீஸர்  வந்து சேர்ந்தார். எந்த வண்டி  பின்னாலே  இடிச்சதோ அதடோ தப்புதான்னு ஆப்பீஸ்ஸர் முடிவு செஞ்சார். லெஃப்ட்லே இருந்து  ரைட்டுலே பாய்ஞ்சு ஓவர்டேக் செய்யலாமா என்பதெல்லாம்  பிரச்சனையே இல்லை(யாம்!)  கேஸ் புக் பண்ணனுமுன்னு சொன்னாராம்.

இதுக்குள்ளே ட்ராவல்ஸ்க்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னதும் வேற வண்டி அனுப்பறேன்னுட்டார் ஓனர்.  கொஞ்ச நேரத்துலே வண்டியும் வந்துருச்சு.  எங்களை அதுலே ஏத்திவிட்ட  சீனிவாசன்  நான் பார்த்துக்கறேம்மா. நீங்க   கவலைப்படாதீங்கன்னார்.

எல்லா ட்ரைவர்களுக்கும் அவரவருக்கு  ஒரு ரூட் இருக்கும்போல!  புது ட்ரைவர் நல்ல (!!) சாலையில் போகாம, குழி தோண்டிப் போட்டுருக்கும்  சின்னச்சின்னத் தெருக்கள் வழியா  உலுக்கி உலுக்கிக்,குலுக்கிக் குலுக்கி  வண்டியை ஓட்டிக்கிட்டு ஈஸிஆர் ரோடுலே போய்ச் சேர்ந்தார்.

அதுக்குள்ளே சீனிவாசனின் ஃபோன் வந்துச்சு. விவகாரம் செட்டில் ஆயிருக்கு. ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னாராம் ஆப்பீஸ்ஸர்.  யாருக்குன்னு புரியலை!  ஒரு வேளை பசித்த மாட்டுக்குப் புல்லுக்கட்டோ? ட்ராவல் கம்பெனி கொடுக்காதாம். இவரே சொந்தக் காசுலே கட்டிருவாராம். ஆமாம்..... ட்ராவல்ஸ் நடத்துறவங்க  அவுங்க வண்டிகளுக்கு இன்ஷூரன்ஸ்  எடுத்துக்கமாட்டாங்களா?  குறைஞ்சபட்சம் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்?





30 comments:

said...

ஹோட்டல் உள் அமைப்பு அருமையாக இருக்கு.இழைத்திருக்கிறார்கள்.
ஹெலி பேட்க்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது ஏனென்றால் அது துல்லியமாக விமானம் இறங்கும் பாதையில் இருக்கு என்று நினைக்கிறேன்.
சென்னையில் சரியாக வாகனம் ஓட்டுனர்கள் நிஜமாகவே பாவப்பட்டவர்கள்.

said...

இவ்ளோ பெரிய ஹோட்டல் எல்லாம் நமக்கு கட்டுபடியாகுதுங்கோ ?

எங்க இரண்டு பேருக்கும் ராக சுதா ஹாலிலே கிடைச்ச சாப்பாடே போதுமுங்க...

சுப்பு ரத்தினம்.

said...

படங்கள் எல்லாம் சூப்பர்ப்...

said...

ஹோட்டெல் படங்கள் அருமை. நாங்களே நேரில் பார்கிற மாதிரி இருக்கிறது.

said...

செலவில்லாமல் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் பார்த்தாச்சு!

கார் டிரைவர் எப்படி 'சமாளி' ச்சாராம்?

ரொம்ப முக்கியம் அதுதான் பாருங்க!

நல்ல தலைப்பு கொடுத்திருக்கீங்க!

பாராட்டுக்கள்!

said...

இங்கல்லாம் விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி லெப்ட்ல கை காட்டி. ரைட்ல இன்டிகேட்ட்ர் போட்டு. ஸ்ட்ரெய்ட்டா போவானுங்க. ட்ராபிக் ரூல்ஸ்லாம் போலீசுக்கு கைல வெட்டினா இஷ்டத்துக்கு வளைஞ்சுரும். என்னத்தச் சொல்ல... ஹோட்டல் பத்தி நீங்க சொல்லியிருக்கறதையும். படங்களையும் ரசிச்சு மனசைத் தேத்திக்கிட்டேன், அருமை.

said...

கனடாவிலிருந்து ஆண்ட்டி வருவாங்க அப்ப போயிடணும் இங்க.தாங்ஸ்ம்மா.

said...

ஹோட்டல் ரொம்ப அருமையாக இருக்கின்றது.

படங்களும் விபரித்த விதமும் சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகின்றது.

said...

ஹோட்டலு இவ்வளவு பிரம்மாண்டமா இருக்குதே. பணம் படுத்தும் பாடு.

இதோட ஓனர் யாரு? எந்த ஊர்க்காரரு?

அந்த யானைப்படம் பாத்து எனக்கு என்ன தோணுச்சோ அந்த நீங்க மறைமுகமாச் சொல்லிருக்கிங்க. வெளிநாட்டு டிசைனா இருக்கும். அங்க அதான நெறைய. யானைகள் கெடையாதுல்ல.

ரேட்டெல்லாம் ... ம்ம்ம்ம். ஒன்னும் சொல்றதுக்கில்ல. யாராச்சும் கூட்டிட்டுப் போய் சாப்பாடு வாங்கிக் குடுத்தா சாப்டலாம் :)

said...

காலையில் முதல் வேளையா உங்களுக்கு தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள் சொல்ல வந்தேன். தேவியர்கள் குளிக்க ஆய்த்தமாகிக்கிட்டு இருக்காங்க.

தலைவருக்கு தெரியப்படுத்துங்க.

said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினரின் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை. இன்னிக்குத்தான் பாவ்பீஜ், ஆகவே இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் துள்சிக்கா :-)

said...

ஹோட்டல் படங்கள் கனவு லோகம் மாதிரி இருக்கு! இந்த டிராஃபிக் விஷயங்கள் இங்கு பழகிப் போன விஷயம்!

said...

அருமை

said...

வாங்க குமார்.

நோ ஹெலிபேடா!!! அச்சச்சோ!!!!

சாலை'விதி'கள் அங்கெ ரொம்பக் குழப்பம்:(

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நமக்கு மட்டும் கட்டுப்படி ஆகுதா என்ன? எல்லாம் 'காற்றுள்ளபோதே......' தானாக்கும்:-))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

படங்கள் மட்டுமா....பில்லும் கூடத்தான் 'உசத்தி'!!!!

said...

வாங்க ரமாரவி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரஞ்சனி.

காவல்துறை உண்மையாவே மக்களின் நண்பன்ப்பா. அதான் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே இருந்து பணம் பிடுங்கினாத் தப்பில்லை.

நண்பேண்டா....:-)))))

said...

வாங்க பால கணேஷ்.

ட்ராபிக் ரூல்ஸ் பத்தி நீங்க சொன்னது சத்தியமான உண்மை.

இளமூங்கில் கூட ஓரளவுதான் வளையும்!

said...

வாங்க அமுதா.

கனடா ஆண்ட்டி வரும்போது விட்டுடாதீங்க:-))))

said...

வாங்க மாதேவி.

காசு கொட்டிக் கிடக்கு. கம்பீரத்துக்கு என்ன குறைச்சல்!!!! நிறையப்பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் பார்த்தால் இது நல்ல சமாச்சாரம்தான்.

said...

வாங்க ஜீரா.

நம்ம ITC Welcomgroupதான் ஓனர்.
நிறைய அரண்மனைகளையும் மாளிகைகைகளையும் புடிச்சுப்போட்டு ஹொட்டேலா மாத்தி இருக்காங்களே.!

நமக்குத்தான் ரேட் அதிகமுன்னு புலம்பல். கள்ளப்பணம் குவிஞ்சுகிடக்கே அவுங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபிதான்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் திருக்கார்த்திகை, கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

உங்கள் அனைவருக்கும் வரப்போகும் விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க ஜோதிஜி,

உங்கள் அனைவருக்கும் வரப்போகும் விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க மாதேவி.

உங்கள் அனைவருக்கும் வரப்போகும் விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

உங்கள் அனைவருக்கும் வரப்போகும் விழாக்களுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆமாம். பழகிக்கணும்.

'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னு இருந்துட்டால் இனி எல்லாம் நலமே!!!!

said...

ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் உள்ளே இருக்கும் அற்புதமான என்னா ரசனைப்பா.. அழகா கட்டி இருக்காங்க... அதோடு அங்கிருக்கும் இரண்டு யானைகளை கிட்டக்க பார்த்தால் அன்னம் பறப்பது போன்றும்.. இரண்டு யானைகளுக்கு இடையில் ஒரு யானை அழகா உட்கார்ந்துக்கிட்டு துதிக்கை தூக்குவது போலவும் தெரிகிறதுப்பா...

வாகனம் இடித்தவருக்கு ஒரு ஃபைனும் இல்ல.. பாவம் வாகன ஓட்டுனர்..

அசத்தலான பகிர்வு. அங்க பிரச்சனை நடந்துட்டு இருக்கும்போது நீங்க அவசரமா ஒரு 5 க்ளிப் மட்டும் அடிச்சிட்டு வந்துட்டீங்களா :) ம்ம்ம்///