Friday, April 19, 2013

கில்லாடிப் புள்ளையார்!


நம்ம ரெங்கனிடம் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....மற்ற கோவில்கள் பகல் 12 முதல் மாலை 4 வரை மூடி வச்சுடறாங்க பாருங்க அதைப்போலில்லாமல் கோவில், காலை  6 மணி முதல் இரவு  9 வரை திறந்தே இருக்கு. முக்கிய சந்நிதிகளான  தாயார் சந்நிதியும் ரெங்கநாதர் சந்நிதியும் கூட   பகல் தரிசனத்துக்குக் குறிப்பிட்ட நேரங்களில் திறந்துதான் இருக்கு. அதான் உள்ளூர் மக்கள்ஸ் பகல் ரெண்டு மணிக்குப்போய்  ஹாயா ஸேவிச்சுக்கிட்டு வந்துடறாங்க.  நம்மைப்போல வெளியூர் மக்களுக்கு இந்த ரகசியம் தெரியாததால்  பகல் 12 மணிக்கு கோவில் மூடி இருக்குமுன்னு நினைச்சுக்கறோம்.



கோவிலில் கிடைச்ச தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன்.   ஒருமுறை பார்த்து வச்சுக்குங்க. உதவலாம்.
ஒரு நாளைக்கு மூணுமுறை பூஜை நேரம் தவிர  மற்ற நேரங்களில் பெரியவர் ஃப்ரீதான்.

உற்சவரோ வருசத்துக்கு 322 நாள் பயங்கர பிஸி.  அலங்கரிச்சுக்கிட்டு ஊர்வலம் வந்துக்கிட்டும் மக்களுக்குக் காட்சி கொடுத்துக்கிட்டும் இருக்கார்.
பதிவில் அங்கங்கே இருக்கும் படங்களைப் பாருங்களேன். புரிஞ்சுரும்:-)



  பெருமாள் சந்நிதி:


Sri Ranganathar Sannathi
 Viswarooba Seva            -      6.00  to  7.30
  Pooja Time[no Seva]   -    7.30  to  8.45
  Seva                             -    8.45  to 13.00
  Pooja Time[No Seva]  -   13.00 to 14.00
  Seva                             -   14.00 to 18.00
  Pooja Time[No Seva]  -   18.00 to 18.45
  Seva                             -   18.45 to 20.00
  Free Seva                     -   20.00 to 21.00
  No Seva  after 21.00
  Quick Seva Rs. 250/= per head.
Viswarooba Seva Rs. 50/= per head.
General Entrance - Free in all Seva time.


ரங்கநாயகி தாயார் சந்நிதி
Sri Ranganachiar Sannathi

Viswaroobam Paid Seva  -  6.30 - 7.15
Viswaroobam Free Seva  -  7.15 - 8.00
Pooja Time [No Seva]     -   8.00 - 8.45
Paid Seva                         -   8.45 - 12.00
Free Seva                         - 12.00 - 13.00
Pooja Time[No Seva]      - 13.00 - 15.00
Free Seva                         - 15.00 - 16.00
Paid Seva                         - 16.00 - 18.00
Pooja Time[No Seva]      - 18.00 - 18.45
Paid Seva                        -  18.45 - 20.00
Free Seva                        -  20.00 - 21.00
[No Seva after 21.00. Timings are subject to change during Festival days.]

திருச்சிவரை வந்துட்டு உச்சிப்பிள்ளையாரைப் பார்க்காமல் போக மனசு வரலை. ஆனால்  இப்போ இருட்டிப் போச்சு. மணிவேற ஏழாகப்போகுது. மேலும் முழங்கால் வலி. பேசாம தாயுமானவரை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு  'நாங்களே' முடிவு பண்ணி மலைக்கோட்டைக்குப் போகச் சொன்னோம் நம்ம சீனிவாசனை.

ரொம்பவே குறுகலான ஒரு தெருவுக்குள் காரைக் கொண்டு போறார். எதிரில் வண்டி வந்தால் அம்பேல்.  பக்கத்துலே சின்னக்கடைத் தெரு இருக்கு. அதன் வழியா வந்துருக்கலாம். ரெண்டு பக்கமும் வீடுகள். இடையிடையே  தேங்காய்பழம் விற்கும் கடைகள்.இங்கேயே வண்டியை நிறுத்துங்க. இனி மேலே போக வழி இல்லை. இப்படி ஓரமா(!!)  நிறுத்திட்டு இதை வாங்கிக்கிட்டு போங்கன்னு  பூஜைப்பொருட்கள் தட்டை நீட்டுறாங்க. எப்படி நிறுத்தி எப்படி இறங்கறது? கார்க் கதவைத் திறக்கவும் இடம் இல்லையே:(  கண் முன் கொஞ்ச தூரத்தில் கார்களின் பின்னால் இருக்கும் சிகப்பு விளக்கு வெளிச்சம்தெரியுது. அப்பவண்டி இன்னும் போகலாம், இல்லையா?

கொஞ்சதூரம் மெள்ள வண்டியைச் செலுத்திக்கிட்டே போனதும்   வலப்பக்கம்  கடைவீதியின் கலகல!  திரும்பாமல் இன்னும் கொஞ்சதூரம் மேலே போனதும் பாதை கொஞ்சம் அகலமா ஆச்சு. வண்டி நிறுத்தவும் இடம் கிடைச்சது. இடது பக்கம் கோவில் வாசல் போல ஒன்னு.  சனம் போறதும் வாறதுமா இருக்கு. நாங்களும் இறங்கிப்போனோம்.அருள்மிகு  மாணிக்க விநாயகர் கோவில்

கோவில்களுக்கே உரித்தான  காவியும் வெள்ளையும் பட்டைகளாப் போட்ட  படி வரிசைகள்.  ஆனால் கீழே போகுது. விடுவிடுன்னு இறங்கிப்போறோம்.  பேஸ்மெண்ட் போயிட்டோம்.  தனிக்கோவிலாட்டம்  ஒரு சின்ன சந்நிதி. செவ்வகமா மூணு பக்கமும் கம்பித்தடுப்பு.  எட்டிப்பார்த்தால் புள்ளையார்!  நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டு இடப்பக்கம் திரும்பினால்  ஒரு பெரிய ஹால். பாட்டுக் கச்சேரி நடக்குது !  அருமையான கணீர் என்ற குரல்!  ' கணபதியே வருவாய்.....'

பார்க்க ஸாலிடா இருக்கார் பாடகர். உள்ளூர்க்காரர்.  இளம் கலைஞர்.  பக்க வாத்தியங்களுடன் தூள் கிளப்பறார். வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவரிடம் பெயர் விசாரிச்சேன். கஷ்யப் மஹேஷாம்.  ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் அவார்ட் வாங்கியவராம்.

விசேஷம் என்னன்னு  கேட்டேன்.  விநாயகச் சதுர்த்தி விழா.பத்து நாள்கோலாகலமா நடக்குமாம்.  தினம் பாட்டு, ஆன்மிக உபந்நியாசம், பேச்சுன்னு  விதவிதமான நிகழ்ச்சிகள்.  கூட்டம் சுமாரா இருக்கு சபையில்.  பாட்டு கேக்கலாமுன்னு உக்காரப் போனவளை, சாமி பார்க்க வரலையான்னார் கோபால்.

அவர் கையில் ரெண்டு சீட்டுகள். அர்ச்சனைக்கான்னு கேட்டதுக்கு  விசேஷ தரிசனம் என்றார்.  ரொம்ப நேரம் வரிசையில் நிக்காமச் சட்புட்ன்னு சாமியைப் பார்த்துட்டுப்போகலாம். அம்பது ரூபாய்.  அதை எடுத்துக்கிட்டு எங்கே எந்தப்பக்கம் போகணுமுன்னு பார்த்தால்....  விநாயகர்  சந்நிதிக்கருகில்  இருந்தவர்  கையில் உள்ள சீட்டைப் பார்த்துட்டுக் கம்பித்தடுப்பைத் திறந்து வழிவிட்டார் . இதில் நுழைஞ்சு தான்  மலையேறும் படிக்கட்டுகளுக்குப் போகணும் போலன்னு நுழைஞ்சவளை  புள்ளையார் சந்நிதிக்குப்பக்கம் நிக்கச்சொன்னார். அடுத்த பக்கம் இதே போல கோபால். துவாரபாலகனும் பாலகியுமா நிக்கறோம். புள்ளையாருக்கு அபிஷேகம், தீபாராதனை எல்லாம் ஜாம் ஜாம்ன்னு நடக்குது.  நம்மைச் சுத்தி இருக்கும் கம்பித்தடுப்புக்கு வெளியில் சனம் நின்னு சாமி கும்பிடுது.


தீபாராதனையை முதலில் நமக்குக்காமிச்சு விபூதி பிரசாதம் வழங்கியபின் மற்ற சனங்களுக்குக் கொண்டு போறார் அர்ச்சகர்.  அப்பத்தான்புரியுது  இந்த விசேஷ தரிசனச் சீட்டு இங்கே இந்தப் புள்ளையாருக்குன்னு!!!!  எதுக்கு  ஸ்பெஷல் தரிசனச் சீட்டு வாங்குனீங்கன்னு  கேட்டால்   தாயுமானவரைத் தரிசிக்கன்னு நினைச்சேன் என்று முழிக்கிறார் கோபால்:-))))

புள்ளையார்  பலே கில்லாடிதான். கோபாலை எப்படி ஏமாத்தணுமுன்னு  தெரிஞ்சுருக்கு:-) முந்தி ஒருக்கில் ஸ்வாமிமலை  ஸ்வாமிநாதனைத் தரிசிக்க படிகளேறிப்போனதும்  முதல்லே கண்ணில் பட்டவர் புள்ளையார்தான்.  அங்கிருந்த குருக்களும் வாங்கோன்னு கூப்பிட்டு  தீபாராதனை காமிச்சுட்டுத் தட்டை நீட்டறார். கண்ணில் ஒத்திக்கிட்டு தட்சணை போட கோபால் சட்டைப்பைக்குள் கையை விட்டு ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வச்சார். அப்பதான் தெரியுது அது அம்பதுன்னு!  புள்ளையாரைப் பார்த்தால்  சிரிச்சமுகமாத் தெரிஞ்சது.  என்ன தாராளப்பிரபுவா இருக்கீங்கன்னு அப்புறம் கேட்டால்..... பைக்குள் பத்து வச்ச  நினைவுன்றார்.

மாணிக்கவிநாயகரின் ஒரிஜினல் பெயர் சித்தி விநாயகர்.  கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுக்கும் பெரிய மனசு!  ஒரு காலத்தில் மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு பக்தர்  இவருக்குண்டான  அனைத்து செலவுகளுக்கும் ஸ்பான்சார் செஞ்சுட்டதால் இவர் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக்கிட்டார். உண்மையாவே பெரியமனசுதானே!!!



கோவில் கடைகள் ஜேஜேன்னு இருக்கு. பிள்ளையார்  பொம்மைகள் கொட்டிக்கிடக்கு. நம்ம கலெக்‌ஷனுக்கு  புதுவகையில் இருக்கும் ஒன்னு தேடிக்கிட்டே இருந்தேன்.  டக்ன்னு மனம் கவரும் விதமா ஒன்னும் கண்ணுலே ஆப்டலை.  புதுமையா இருக்கணும்,கூடவே சின்ன அளவாகவும் இருக்கணும் என்ற கண்டிஷன் வேற இருக்கே:(


மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் கிரிவலப்பாதையில்  மட்டும் பதினோரு பிள்ளையார்கள் இருக்காங்க. ஏழைப்பிள்ளையார்னு கூட ஒருத்தர் இருக்கார். ஆனால்...நம்ம மாணிக்க விநாயகர்  பணக்காரர். இவர் கோவில் விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க.  கோவிலில் அன்னதானம் நடக்குது.சிதர் தேங்காய் உடைக்கத் தனி இடம்.  விழாக்கள் நடத்தத் தனி ஹால் இப்படி   ஜமாய்க்கிறார்.



என்ன ஒன்னு....காலணிகள் பாதுகாக்க  இருக்கும் இடம் பிள்ளையார் சந்நிதி கடந்து கடைகள் ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பது.... கஷ்டம்:(  படிக்கட்டுகளில் இறங்கி செருப்புக்காலோடு  சந்நிதித் தடுப்பைக் கடந்து போகணும் அங்கே போக.  இந்தப்பக்கம் படிகள் இருக்குமிடத்தில் ஏதாவது  அரேஞ்ச் செஞ்சுருக்கக்கூடாதோ?

ஒரு வேளை கடைகள் இருக்கும் பகுதிக்கு அப்பால் போனால் கோவில் வாசல்  இன்னொன்னு வருதோ? அப்படித்தான் இருக்கும் போல!  அந்தப்பக்கம் நாம் போகலையே:(   படத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. எதா இருந்தாலும் அடுத்த பயணத்தில் கொஞ்சம்  எக்ஸ்ஃப்லோர்  பண்ணிக்கணும்.

மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு  கேட்டதுக்கு,  'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு.  நாளைக்கு வேற நீண்ட பயணம் இருக்கு.  அறைக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாம்.
இன்னொருக்கா  பார்க்கலாம் ' என்றார்  என் தாயுமானவர்.


தொடரும்.............:-)


இன்று ஸ்ரீ ராமநவமி விழாவைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும்  விழாக்கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





29 comments:

said...

தாயுமானவர் மன்னிப்பார்.

said...

இவ்வளவு தூரம் போய் தாயுமானவரைப் பார்க்காமல் வந்தது வருத்தம்தான். பிள்ளையார் கோபால் சாரிடம் என்னமாய் விளையாடுகிறார்...

\\மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு கேட்டதுக்கு, 'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு. நாளைக்கு வேற நீண்ட பயணம் இருக்கு. அறைக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாம்.
இன்னொருக்கா பார்க்கலாம் ' என்றார் என் தாயுமானவர்.\\

இந்த ஃபைனல் டச் மனத்தையும் டச் செய்துவிட்டது டீச்சர்.

said...

மனம் சென்று தரிசித்தப்பின் தாயுமானவர் உங்களை ஆசிர்வதிதிருப்பார்

said...

கொஞ்சம் மலையேறுவது கடினம் என்றாலும் தாயுமானவரையும், உச்சிப் பிள்ளையாரையும் சந்தித்து கொஞ்சம் அளவளாவி விட்டு ஊரையும் ஒரு கழுகுப் பார்வை பார்த்து விட்டு வருவது எனக்குப் பிடித்தமானது.

சில முறைகளாக போக வில்லை! அடுத்த முறை செல்ல வேண்டும்.....

said...

ரங்கனை விட்டுட்டு வரமேன்னு கஷ்ட்டபட்ட மனசை பிள்ளையார காமிச்சு சமாதானபடுத்தியாச்சு

said...

மாணிக்கவிநாயகருக்கு எதிரே சந்தோஷி மாதா -அவரது மகளாம்- வெள்ளிக்கிழமைகளில் விஷேசபூஜைகள் மகளிர் நடத்துகிறார்கள்..

தாயுமானவரைத்தரிசிக்க நிறைய படிகள் ஏறவேண்டும் ..
சீக்கிரம் தரிசியுங்கள்..

ஸ்ரீ ராமநவமி விழா வாழ்த்துகள்...

said...

கையை விட்டு ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வச்சார். அப்பதான் தெரியுது அது அம்பதுன்னு! புள்ளையாரைப் பார்த்தால் சிரிச்சமுகமாத் தெரிஞ்சது. என்ன தாராளப்பிரபுவா இருக்கீங்கன்னு அப்புறம் கேட்டால்..... பைக்குள் பத்து வச்ச நினைவுன்றார்.//

பிள்ளையார் தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டார்.
ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் ராமநவமி வாழ்த்துக்கள்.

said...

ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்கள்...

சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் பல... நன்றிகள்....

said...

திருச்சிலே கிரிவலம் வரும்பொழுது சின்னகடை தெரு, ரைட்டிலே திரும்பினா நந்திகோவில் தெரு,
திரும்பவும் ரைட், வடக்கு ஆண்டார் தெரு, கண்ணிலே படுதுலே அரச மர புள்ளையார், அதுக்கு
எதுத்தாப்போலேஇருக்கற ரோ விலே ஃபர்ஸ்ட் வீடு தான் எங்க ஊடு. அங்கன இருந்து தான், ஸ்கூலு,
காலேஜு எல்லாமே படிச்சென். 1961 லே படிப்பு முடிஞ்சு மதுரைக்கு கிளம்பிட்டென். அங்கே மீனாட்சி
புடிச்சுக்கிட்டா.

1942 முதல் 1994 வரைஎந்த வூடு எங்க கிட்ட தான் இருந்துச்சு. எங்க அப்பா வக்கீல். வூடு நாகனாத ஸ்வாமி கோவிலுக்கு சொந்தம்.
42 லே வாடகை ரூ 3. 1994 லே ரூ 1750. வாடகை மட்டுமில்ல.. மராமத்து நம்ம தான் பண்ணிக்கணும்.
இனி வூடு மராமத்து பண்ண முடியாது, இடிச்சுட்டு தான் கட்டணும் அப்படிங்கற போது கோவில் ஒத்துக்கல்ல.

இப்ப யாரோ அதை ஆக்ரமிச்சு புதுசா வூடு கட்ராகளாம். வை. கோபாலக்ருஷ்ணன் சார். சொன்னாரு.

நீங்க சொல்ற ஏழைப்பிள்ளையார் கோவிலாண்ட இருக்கறவங்க எல்லாமே குபேரனுக்கு
சொந்தக்காரங்க...

அவரு சக்தி அம்புட்டு.

அங்கன மாயவரம் லாட்ஜிலே சாப்பிட்டீங்களா !!

அந்த தாயுமானவர் கோவில் மேலே போய் உச்சிப்பிள்ளையார் கோவில் அங்கேயிருந்து காவிரி நதி
பாத்தீகளா. ?

சுப்பு ரத்தினம்.
இன்னிக்கு ராம நவமி.
வாழ்த்துக்கள்.
ராம ரசம் வேணும்னா எங்க பதிவுக்கு வாங்க.
பாயசம் வேணும்னா ராஜேஸ்வரி பதிவுக்கு வாங்க..
ராமனைப் பத்தி உபன்யாசம் கேட்கணுமனா ஷைலஜா வூட்டுக்கு போங்க.
ஏரி காத்த ராமர் தரிசனம் வேணும்னா வல்லி அம்மா .






said...

//மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு கேட்டதுக்கு, 'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு//

ஒரு முறை, அம்மா கூட, விராலி மலை முருகன் கோயிலுக்குப் பயணம்;
நியூ யார்க்கில் கால் சிக்கிப் போனமைக்கு அம்மா குல தெய்வம் வேண்டுதல்:)

இரவு தான் ரயிலு; மாலை நேரம் தானே ஆச்சு, அரங்கனைப் பாத்துட்டு வந்துறலாம் -ன்னு மனசு தவிக்க...
அம்மா, "ரொம்ப அசதியா இருக்குப்பா, பெறவு பாத்துக்கலாம்" -ன்னு சொல்லீட்டாங்க;

* தாயும் ஆனவங்களை Passenger Waiting Hall-இல் விட்டுட்டு,
* தாயும் ஆன அரங்க நாச்சியாரைக் காண மனசு ஒப்பலை

அரங்கனைக் காணாமலேயே..
அரங்கனைக் காணாமலேயே..

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?-ன்னு இளங்கோவடிகள் என்னைய கேலி பண்ணுற மாதிரி ஓர் உணர்வு:(

திருச்சி-சென்னை ரயிலில் ஏறி உட்கார்ந்தாச்சு;
காவிரிப் பாலம் வருது; தடக் தடக் -ன்னு ரயில் சத்தம்;
போய்க் கதவோரம் நின்னுக்கிட்டேன்;

அரங்கனின் நெடிது உயர்ந்த கோபுரம்; இருட்டுல லேசு மாசாத் தான் தெரியுது; அன்னிக்கு-ன்னு பார்த்து, ஏனோ கோபுர விளக்கு கூட அதிகம் போடலை போல:(

உன்னைத் தான் பாக்கலை; வெறுமனே உன் வீட்டைக் கூடவா பார்க்கக் குடுத்து வைக்கலை?
அப்பா -ன்னு மனசுக்குள்ள கேவுகிற நெலமை!

ஆயிரம் சொல்லுங்க; பெத்து வளர்த்த அம்மாவை விட,
அப்பா-பொண்ணு உறவு ஏனோ கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்கும்; "அப்பா"-ன்னு வாய் விட்டுச் சொல்லும் போது, ஒரு வலி..

குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் - "எந்தை"
அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ?
என்செய்வேன் உலகத் தீரே?

அப்போ-ன்னு பார்த்து, காவிரியில் பளிச் பளிச் -ன்னு மின்னல்!
வெட்ட வெளி மின்னல், அப்படியே கோபுரத்திலேயே விழுகுறாப் போல...

மின்னலொளியில் அரங்கன் கோபுரத்தைக் கண்டது, அந்த ஒரேயொரு முறை தான்!

said...

மலைக்கோட்டை புள்ளையாரு ரொம்ப அம்சமானவரு:)

மலை வெட்ட வெளியில் இருந்து புள்ளையார் கோயிலுக்கு ஏறும் படியெல்லாம் ஒரே சீரா இருக்காது; ஆனா கம்பி இருக்கும்; சறுக்கிச் சறுக்கி விளையாடலாம்:)

மாலையில் போனா, மாலையான காவிரியும்,
சூரியன் மறைவதையும், திருச்சி/திருவரங்கம் வெளக்கு எல்லாம் ஒவ்வொன்னா எரியத் துவங்குற காட்சியும் பாக்கலாம்; சூப்பரா இருக்கும்!

அப்பா, மாத்தலாகி, தஞ்சாவூரில் இருந்த போது,
அரையாண்டு/ கோடை விடுமுறைக்குப் போவோம்; சனி ஞாயிறு-ன்னா திருச்சி வந்துருவோம்; தஞ்சையில் ஊர் சுத்த ரொம்ப ஒன்னும் டவுனு இல்ல என்பதால்:)

அப்பல்லாம் இந்த புள்ளையாரு படிகள் தான் எங்க மெரீனா பீச்:)

தஞ்சைக்குத் திரும்பிப் போற வழியில், BHEL வழியா நெடுஞ்சாலையில் போவாம, கல்லணைக் கால்வாய் வழியாப் போலாம்-ப்பா -ன்னு அடம் பிடிப்பேன்:)

காவிரி கூடவே ரோட்டோரமா ஓடீயாரும்;
அதுவும் பெளர்ணமி-ன்னா கேக்கவே வேணாம்; அப்படியே மின்னும்!

பூண்டி மாதாவைப் பாத்துட்டு, திருக்காட்டுப்பள்ளி காவிரிக் கரை மண்டபத்தில், சங்கீதா ஓட்டல் பார்சல் பிரிக்கப்படும்...

லபக் லபக் லபக்:)

said...

ஸ்ரீராமநவமி வாழ்த்துகள் துளசி.
படியிறங்கிப் போனால் பிள்ளையார் கோவில் இருக்கா. என்னப்பா அதிசயா. கேள்விப்பட்டதே இல்லை.
கடைகண்ணி எல்லாம் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. தாயுமானவரைப் பார்க்கணும்னால் பாதி மலை ஏறணுமே. செங்குத்துப் படிகள் வேற.
இவங்க ஏன் பழனி மாதிரி வின்ச் வைக்கக் கூடாது. :(
பாவம் கோபால். பிள்ளையார் அவரிடம் ரொம்பத்தான் விளையாடுகிறார்.
நீங்க ஸ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பறட்து எனகுகும் கஷ்டமாதான். இருக்கு. உங்க குறிப்புகளைப்படியெடுத்துக் கொண்டேன். ரொம்ப நன்றிப்பா.

said...

//ரங்கநாயகி தாயார் சந்நிதி
Paid Seva 8.45 - 12.00
Free Seva 12.00 - 13.00//

வெட்கக் கேடு - அரங்கனுக்கு:(

அம்மா-அப்பாவைக் கூட, காசு குடுத்துப் பாக்கும் பழக்கம் என்னிக்கு ஒழியுமோ?

கேரளம்-கர்நாடகத்தில் இந்தக் கொடுமை இல்லீயே!
ஏனோ, தமிழகம்-ஆந்திரத்தில் மட்டும்?

திருவேங்கடம், திருச்செந்தூர்-ன்னு பல்கிப் பரவி இருக்கு இந்தக் கொடுமை!

திருவேங்கடத்திலாச்சும் பரவாயில்லை, காசு வாங்கினாலும், ஒரு இடம் வரைக்கும் தான்; அப்பறம் கலந்து வுட்டுடறானுங்க;
எம்பெருமானின் முன்பு, பணம் குடுத்தவங்க/ தரும தரிசனம்-ன்னு எல்லாம் ஒன்னா ஆக்கிடறானுங்க; கன்னங் கரேல் மக்களோடு, "மிடில் கிளாஸ்" மக்களும் நெட்டித் தள்ளித் தான் அவனைப் பாக்கணும்;

திருச்செந்தூர்/பழநியில் இன்னும் மோசம்;
பண வரிசை தனி; கிட்டக்க பார்க்கலாம்!
தரும தரிசனம் தனி; மேடையேறி, எட்ட இருந்து தான் பாக்கவே முடியும்!:((

பணம் இருந்தா, அம்மா "கிட்டக்க" போகலாம்;
பணம் இல்லீன்னா, அம்மா "எட்டக்க" தான்!
= இதைப் போலொரு வன்கொடுமை, பக்தி-ங்கிற பேருல தான் செய்ய முடியும்;
"அர்த்தம்" உள்ள இந்து மதம்; சோரம் போன பொழைப்பு:(

நாமளும் "பழகீட்டோம்:" ((

அடுத்த தலைமுறை, இதைக் கண்டிப்பா ஒழிக்கணும்!
இல்லீன்னா, இன்னொரு பெரியார் வந்து, மொத்தமும் ஒழிப்பாரு; அப்போ தெரியும் அவஸ்தை!

said...

"மாணிக்" பாத்ததெல்லாம் இருக்கட்டும்...
என் முருகனைப் பாத்தீயளா?

திருச்சி மலைக்கோட்டை முத்துக்குமார சாமி; ரொம்ப அழகா இருப்பான்
தனிச் சந்நிதி; பாதாள அய்யனார் சந்நிதி பக்கம்!

"தென் சிராப்பள்ளி" வெற்பில் தேவர்கள் பெருமாளே -ன்னு தனித் திருப்புகழே இருக்கு அவனுக்கு!

வாசித்துக் காண் ஒணாதது
பூசித்துக் கூடு ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது -நெஞ்சினாலே

மாசர்க்குத் தோன் ஒணாதது
நேசர்க்குப் பேர் ஒணாதது
மாயைக்குச் சூழ் ஒணாதது - விந்துநாதம்
-ன்னு A Class திருப்புகழ்:)
-----

செட்டிப் பெண்ணுக்கு மருத்துவச்சியாக வந்த கருணை வள்ளலான ஈசனை, மருத்துவச்சிப் பெண் கோலத்தில் காண்பது வித்தியாசமா இருக்கும்;

பொதுவா அவரு தானே "மோகினி"த் திருக்கோலம் போடுவாரு? ஈசனைப் பெண் கோலத்தில் காண, திருச்சியில் மட்டுமே முடியும்:)
--------

இந்தத் தம்மாத்தூண்டு எடத்துல, யாரு "கோட்டை" கட்டினாங்களோ, தெரியல!
உள்ளூருக்காரவுக விவரம் தரவும்;

ஆனா, உச்சிப் புள்ளையாருக்குப் போவும் வழியில், ரெண்டு குகை வரும்! பல்லவர் குகை -ன்னு நினைக்கிறேன்.

அதுக்குள்ள அப்படி என்ன தான் இருக்கு?-ன்னு நுழைஞ்சிப் பாக்க ஆசை;
ஆனா சிறு பிள்ளையாய் இருந்த போதும் அம்மா விடல;
இப்ப போனாலும், அங்கெல்லாம் போகாதடா -ன்னு தான் சத்தம் வரும் முன்னே, அம்மா வரும் பின்னே:)

said...

பிள்ளையார் தர்சனம் கிடைத்தது.

உச்சிப் பிள்ளையார் இரண்டுதடவை ஏறி இருக்கின்றேன்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அவருக்கு வேறவழி?

said...

வாங்க கீதமஞ்சரி.

புள்ளையாருக்கு கோபாலை ரொம்பவே பிடிக்கும். என்னைக் கண்டால்தான் கொஞ்சம் நடுங்குவார். 37 வருசமா அவரைக் கொழுக்கட்டையாலேயே மிரட்டி இருக்கேன்! போனவருசம்தான் தப்பிச்சுட்டார். சென்னைப் பயணம் அப்போ! ஆனாலும் சுஸ்வாத் கடையில் வாங்கி அவர் கண்ணில் காமிச்சுட்டேனே:-)))

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

அடுத்தமுறை தாயுமானவருக்கு ஒரு நாள் ஒதுக்கியாச்சு. மனம் மகிழ்வாரென்றே நம்புகிறேன்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


போனமுறை மாலை ஒரு 4 மணி போல கோவிலுக்குப்போய் தாயுமானவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு, உச்சிப்பிள்ளையாரையும் தரிசனம் முடிச்சு மலை மேலேயே இருட்டும்வரை உக்கார்ந்துருந்தோம். இருள் மயங்கும் நேரம் விளக்குகள் அங்கொன்னும் இங்கொன்னுமா எரியத்தொடங்க நகரமே அழகா இருந்துச்சு. பொல்யூஷன் கூட அவ்வளவா இல்லை. ஆச்சு 24 வருசம்!

said...

வாங்க சசி கலா.

எப்பவும் காம்ப்ரமைஸ் பண்ணினாத்தான் வாழ்க்கையே:-)))

வைர நெக்லெஸ் வேணாம். வைர வளை வாங்கிக்கோன்னா.... வேற வழி இல்லைன்னு கோபாலிடம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கத்தான் வேணும்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


சந்தோஷிமாதாவுக்கு அப்பாவா இவர்!!!!!

அடுத்தமுறை போகணும் என்ற ஆசையை அவர்தான் நிறைவேற்றிக் கொடுக்கணும். படியேற்றம்தான் கொஞ்சம் யோசிக்க வைக்குது:(

said...

வாங்க கோமதி அரசு.

அதானே? பிள்ளையாரா கொக்கா:-)))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

சூப்பர் ரஸம். ரசித்துக் குடித்'தேன்'!!!!

பயணத்தில் சாப்பாடு ருசிப்பதில்லை எனக்கு. வேற வழி இல்லையேன்னு வெறுஞ்சோறுதான்:-)

படியேறலைன்னா அப்புறம் எங்கே காவிரி பார்ப்பது:( ஹூம்...........

ஸ்ரீராமநவமிக்கு எல்லா இடத்துக்கும் போயாச்சு. இன்னிக்கு ஒரு பதிவும் ஆச்சு:-)

said...

வாங்க வல்லி.

நமக்கே ரெங்கனைப் பிரியக் கஷ்டமா இருக்கே அவனுக்கு எப்படி இருந்துருக்கும்? சீக்கிரம் கூப்பிடுவான்னு நம்பறேன்.

நல்ல வெளிச்சம் இருக்கும் மாலை நேரம் போனால் மெள்ள மெள்ள படி ஏறிடலாம்ப்பா. அன்னிக்கு ரொம்ப இருட்டிப்போச்சு. அதான்...ப்ச்

விஞ்ச் எல்லாம் வேணாம்ப்பா. அதுக்கு மலையை நாசப்படுத்திருவாங்க. சேதமில்லாமல் அமைக்க இவுங்களுக்குத் தெரியாது:( ரொம்பக்கூட்டம் சேரச்சேர அழுக்கு அதிகமாகிரும்:(

said...

வாங்க மாதேவி.

ஆஹா... இருமுறையா? ஸ்ரீரங்கம்பதிவர் சந்திப்பு சமயம் நாம் எல்லோருமாச் சேர்ந்து உச்சிப்பிள்ளையாரை வந்து வணங்குவோமுன்னு வேண்டிக்கவா?

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா.... மின்னலாய் வந்துட்டானா!!!!

தாயை விட்டுத்தனியே வந்துருந்தால் தாயாருக்குப் பிடிச்சிருக்காது!

சிறப்புதரிசனம் கட்டணம் என்றாலும் தாயார் கேட்பது வெறும் 10 ரூ தான். ஐயாதான் 250 ன்னு ரேட்டை உசத்திவச்சுருக்கார்:( கொண்டுவந்தால் தந்தை என்பது உண்மை.

நான் மட்டும் பெருமாளா இருந்தால் (முக்கியமாத் திருப்பதியில்) என்னைப்பார்க்கக் கட்டணம் வாங்குவதோடு மக்களை எல்லாம் ஆடுமாடாட்டம் பட்டியில் அடைச்சு வச்சு தரிசனத்துக்கு வருபவர்களைக் கையைப்பிடித்துக் கடாசும் கோவில் ஊழியர்களையெல்லாம் ஒரே விரட்டா விரட்டிவிட்டுட்டு, கோபுரத்துக்கு மேலே போய் நின்னு ஊர் உலகமெல்லாம் தரிசனம் செஞ்சு மகிழட்டுமுன்னு போஸ் கொடுப்பேன்:-)))

பெருமாள் முன் அந்த வரிசை எப்படி இருக்குன்னா.....இங்கே நியூஸியில் ஆடுகளுக்கு முதுகில் மருந்து தெளிக்க வரிசையில் அனுப்புவாங்க. மரத்தடுப்புக்குக் கடைசியில் ஒருத்தர் ஸ்ப்ரே கேன் வச்சு முதுகில் ஸ்ப்ரே செய்வார். ரோமத்தில் பூச்சி பிடிக்காமல் இருக்கத்தான் இது. அதுதான் நினைவுக்கு வந்துச்சு இந்த ஆட்டுக்கார அலமேலுவுக்கு:-)

தம்பியைப் பார்க்கவிடலையேப்பா அந்த அண்ணன்:(

said...

/ஒரு வேளை கடைகள் இருக்கும் பகுதிக்கு அப்பால் போனால் கோவில் வாசல் இன்னொன்னு வருதோ? அப்படித்தான் இருக்கும் போல! அந்தப்பக்கம் நாம் போகலையே:/
அதுதான் பிரதான வாசல். மலை வாசல் படி என்று சொல்வார்களே. அது வழியாகத்தான் கோவிலுக்கு வர வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட சின்ன கடை வீதி வழியாக வந்தால் அங்கு வர முடியும்.(நீங்கள் சென்றது ஆனையடி பாதையில்.யானையை பார்க்கவில்லையா? தவிர கிரி வலமும் சின்னக்கடை வீதி, நந்தி கோவில் தெரு, ஆண்டார் வீதி வழியாகத்தான்.நீங்கள் சொன்னபடி அடுத்தமுறை அதிக நேரம் ஒதுக்கிவிட்டு உச்சி பிள்ளையார் மற்றும் சுற்றியுள்ள கோவில்களையும் நன்கு தரிசியுங்கள்.

said...

சில நாட்களாக மலைக்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. கோவில் கடைகளில் ஸ்வாமிக்கு தகுந்த குட்டி கிரீடம், கழுத்து செட், ஜடை அலங்காரம், பாவாடை முதலியவை கிடைக்கும்.

அப்படியே அந்த NSB ரோட்டில் ஒரு ரவுண்ட் வந்தால் நன்றாக இருக்கும்...