Tuesday, April 23, 2013

மகமாயி.... மஹாமாயா...........


"இப்போ  சமயபுரம் போறோம். தரிசனம் முடிச்சுட்டு வேறெங்கேயும்  நிக்காம நேர  சிங்காரச் சென்னைதான்.  வேறெங்கேயும் உனக்குப் போகவேணாம்தானே? "  யப்பாடா.... என்ன முன்னெச்சரிக்கை.  நான் வாயைத் திறக்குமுன் அடுத்த வரி வருது." நாளைக்கு ராத்திரி ஃப்ளைட் இருக்கு, ஞாபகம் இருக்குல்லே?"

 ம்ம்...ம்ம்.........

அறையைக் காலி செஞ்சுக்கிட்டுக் கிளம்பும்போது மணி  ஒரு ஒன்பது இருக்கும்.  கொள்ளிடம் பாலம் கடந்து போறோம்.  இருக்கும் இத்துனூண்டு தண்ணியில்  துவைச்சுக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க 'ஈரங்கொல்லிகள்'!   வண்ணமயம்தான் போங்க!

அரைமணி நேரப்பயணத்தில் சமயபுரம் வந்தாச்சு.  அலங்கார வளைவுக்குள் நுழைஞ்சு போறோம். கொஞ்சம் தூரத்தில் தெப்பக்குளம்! நல்லா சுத்தமா இருக்கே!!! கோவிலை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்கு பாருங்க அதான் சுத்தமா இருக்குன்ற ரகசியம் புரிஞ்சது:-)

கலகலன்னு ரெண்டு பக்கமும் பூஜைப்பொருட்கள் விற்கும்  தெருவுக்குள் போனால்.... (வழக்கம்போல) வண்டி இதுக்குமேல்போகாது. இங்கேயே நிறுத்தணுமுன்னு தடாலடியா  சொல்லும் சிலர். காதுலே விழாதமாதிரி சீனிவாசன்  போய்க்கிட்டே இருக்கார்.   கோவில் வாசலைத் தாண்டி இருக்கும்  இடத்தில் வண்டியை நிறுத்தினார்.  இறங்கும்போதே கூட்டமா வந்து மொய்ச்சுக்கறாங்க வியாபாரிகள். கையில்  நேர்த்திக்கடனுக்குரிய  கண், முகம், கை காலுன்னு உடல் பாகங்கள் நிறைஞ்ச தட்டு.


கோவில்  மண்டபம் நிறைய ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள்.  கடை வாசலுக்குக் கோலம் போட்டு வச்சுருக்காங்க. பெருக்கித்தள்ளின குப்பைகள் மண்டபம் முழுசும் பக்தர் காலடிகளில்  ஒட்டிக்கிட்டு இங்கும் அங்குமாப்போகுது:( ஆரஞ்சும் மஞ்சளுமாத் தாலிக்கயிறு ஒரு கடை முழுசும். விதானத்துலே வரைஞ்சுருக்கும் சித்திரங்களை நின்னு ரசிக்க விடாமல் கடைக்காரர்கள் கூவி அழைக்கிறார்கள். நிக்கவே கூடாது போல:(

நல்ல நீண்ட மண்டபத்தின் பாதியில்  நிக்கறாள் சுமி!  பெயர் சுமித்ராவாம்!  நல்ல அழகிதான்! கடமையே கண்ணாக, காசு வாங்கி ஆசி வழங்கிக்கிட்டு இருக்காள். காவாசிக்கூட்டம்  இவளைச் சுத்திதான்.   மண்டபத்தின் கடைசிக்குப்போறோம்.





 நல்ல கூட்டம், தரிசனத்துக்குக் காத்திருக்கு. ஸ்பெஷல்தரிசன வரிசைக்குள் நுழையறோம். டைம்  ஈஸ் மணி!    கம்பித்தடுப்புகளா நட்டு வச்சுருக்காங்க.  கோவில் அர்த்த மண்டபமுன்னு நினைக்கிறேன். தேங்காய் உடைக்க ஒரு அமைப்பு. கோவில் பூஜாரி ஒருத்தர் நின்னு  அர்ச்சனைத் தட்டுத் தேங்காய்களை உடைச்சுட்டு தட்டில் போடறார்.

அந்த ஏரியா முழுசும் தேங்காய்த் தண்ணீர் விழுந்து பாசி புடிச்சுக்கிடக்கு.  வெறுங்காலை வச்சு அதைக் கடந்து போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன பயம். வழுக்........  சுத்திவர கல்தரை.   ஒரு  தேங்காய்நார் நடை விரிப்பு போட்டு வச்சுருக்கலாம்.  வரிசை வலமும்  இடமுமா  இருக்க நடுவில் நீண்ட இடம் முழுக்க உண்டியல்களே!  சட்னு பார்த்தால் ஏர்லைன்ஸ் கேட்டரிங்  தள்ளுவண்டி மாதிரியே இருக்கு!  அதே பளபள  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்!   ஒன்னு ரெண்டு இருந்தால் சரி. இதென்ன வரிசையா  இத்தனை?  காணிக்கை போட மறந்துடப் போறாங்களே  மக்கள்ஸ்ன்னு  நினைவூட்டுறாங்க போல!வலப்பக்கமா  சிறப்பும்  இடப்பக்கமா  பொதுவுமா  மெள்ள நகர்ந்து போறோம்.

பக்தர்களுக்கு உதவி வேண்டும் சமயம் டாண்னு வந்து காப்பாற்றும் தேவி  என்பதால் சமயபுரம் மாரியாக  இங்கே இருக்காள்.  முன்பொரு காலத்தில்  மாரியம்மன் 'அண்ணன் 'வீட்டோட இருந்ததாகவும்,  இவளுக்கான தனிப்பட்ட பூஜைகளை அங்கே நிறைவேற்ற முடியாமல் இருந்ததாகவும், அதனால் கோபமாவே எப்போதும் இவள் இருந்ததாகவும், இவளைச் சமாதானப்படுத்த  அப்போ இருந்த ஜீயர் கொடுத்த ஐடியாவின் படி  இவளை  இங்கே தனிக்கோவிலில் வச்சதாகவும் ஒரு கதை உலவிக்கிட்டு இருக்காம்.

நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம்.  இதோ இன்னொன்னு கேளுங்க.....தில்லிப்படைகளிடம் இருந்து  மாரியம்மனின் உற்சவரைக் காப்பாற்ற  தூக்கிக்கொண்டு போன சமயம் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் இறக்கி வச்சுட்டு பக்கத்தில்ஓடும் கால்வாயில்  இறங்கி கைகால்முகம் கழுவிட்டுத் திரும்ப வந்தால் சிலை மாயமாய் மறைஞ்சு போயிருக்கு.  தேடிப்பார்த்தும் கிடைக்கலை.  ரொம்ப காலம் கழிச்சு   ரெண்டு சிறுவர்கள் கண்ணில் பட்டுருக்கு.  சேதி தெரிஞ்ச  ஊர்ப்பெரியவர்கள் வந்து  சேரவும் சிலையை வேறு இடத்துக்குக் கொண்டுபோக உத்தரவாச்சு.  யானை மேலே வச்சுக்  கொண்டு போறாங்க.  ஒரு இடம் கடக்கும்போது யானை நகர மறுக்கவே அங்கேயே அந்தச்சிலையை பிரதிஷ்டை செஞ்சதாகவும் அது ஆதி மாரியம்மன் கோவிலென்றும் சொல்றாங்க.

நதி மூலம் ரிஷி மூலம் மாதிரி  இங்கே மாரி மூலமும் கேக்கப்டாது கேட்டோ!

எது எப்படியோ மாரியம்மன் கோவில் கொண்டு,  மக்களுக்கு அருள் பாலிக்கிறாள். அதுதான் முக்கியம்.  இந்தக்கோவில்  ஆதியில் நம்ம ரெங்கனின் நிர்வாகத்தில்தான் இருந்தது.  அவன்  ஒன்பது கோவில்களைக் கட்டிக் காப்பாத்தி வந்துருக்கான்.  நாம் முந்தி பார்த்த காட்டழகிய சிங்கர் கோவிலும்  நம்ம ரெங்கனுடைய அரசாட்சியில்தான். 1984 ஆம் ஆண்டு முதல்  சமயபுரம் கோவில் தனியாப் பிரிஞ்சு வந்து தனி ராஜாங்கம் செய்ஞ்சுக்கிட்டு இருக்கு.   ஆனாலும் இந்த மாரி, ரெங்கனின்  சகோதரியான மாஹாமாயாதேவி என்பதால் இன்றைக்கும்  தைப்பூசம் தீர்த்தவாரி சமயம்   உடன்பிறந்தாளுக்கு  பட்டும் பூவும் தளிகையும் பொறந்த வீட்டு சீர் என்று   அனுப்பி வைக்கிறான் நம்ம ரெங்கன்.

கிருஷ்ணாவதாரத்தில்   வசுதேவர், குழந்தைக் கண்ணனை கோகுலத்தில் வச்சுட்டு யசோதையின் குழந்தையான  மாயாவைக் கொண்டு வந்து  இதுதான் எட்டாவது குழந்தைன்னு கம்சனிடம்  சொன்ன கதை  அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும் இல்லையா?  தில்லியில் கூட கல்காஜி கோவில் என்று ஒரு  கோவிலுக்குப் போனேன். அது(வும்) மஹாமாயாவின் கோவில்தான். அப்போ அது தெரியாது எனக்கு.  சக்திபீடக் கோவில் என்று நினைச்சேன்.  அதுக்கு வந்த பின்னூட்டங்களால்தான்  தெளிவு கிட்டியது.


வரிசை நகர்வது போலவே தெரியலை.  பயங்கர சூடு வேற! இத்தனைக்கும் காலை பத்து மணிதான் ஆகி இருக்கு.  சூடுன்னதும் ஞாபகம் வருது.  சிவன் மன்மதனை எரிச்சார் பாருங்க அந்த சூடு லோகங்கள்  முழுசும் பரவி தேவர்களும் கூட  சூடு தாங்க முடியாமல் சீதளா தேவியிடம் அபயம் தேடி  ஓடி வர்றாங்க.  எல்லா சூட்டையும்  தானே உள்வாங்கிக்கிட்டாளாம்  அம்மன். அதனால்  அவள் கருவறையில் எப்போதும் ஈரம் தேங்கிக் குளிர்ச்சியா இருக்கும்படியா  அமைச்சுருக்காங்க.  காலடியில் தண்ணீர்  ஸ்பரிசம் நமக்கும் கிடைக்குது.

ஒரு வழியா கருவறைக்குச் சமீபம் போனது வரிசை.  உள்ளே சிவாச்சாரியார்கள்  பூஜை செய்யறாங்க.  அம்மனின் முகம் சாந்தமா இருக்கு.  உக்ர ரூபத்தின் கோரைப்பற்களைப் பிடுங்கி இவளைச் சாந்தப்படுத்திட்டாங்களாம்.  மூத்த பிள்ளையைக் கூட்டி வந்து  கருவறைக்கு ரெண்டு பக்கமும்  வச்சவுடன் கோபம் மறைஞ்சே போயிருக்கு! அமைதியான முகத்துடன், எட்டுக் கைகளுடன் இடது காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கப்போட்டு  அரக்கர்களின் தலையில்  வைத்தபடி உக்கார்ந்து இருக்காள்.  முன்னொரு காலம்   நாங்க இங்கே வந்தப்ப அம்மன் காதில்  அழகான நட்சத்திர வடிவக் கம்மல்  பார்த்துருக்கேன். பளிச்ன்னு ஸ்டார் ஜொலிக்கும்! அதைத் தேடிய என் கண்கள் ஏமாந்து போச்சு.  இப்ப வேறென்னமோ நகை போட்டு வச்சுருக்காங்க:( போகட்டும் புது மோஸ்தர் நகை அவளுக்கும்தானே வேணும்!

வலையில் சுட்ட படம்.


மாரியம்மனை கும்பிட்டு விட்டு பக்கவாட்டு கம்பித்தடுப்பு வழியா வெளியே வந்தோம்.  இப்ப அதிக அளவில் கூட்டம் வருது . என் முன்னொரு காலப்பயணத்தில்  நேரா உள்ளே வந்து  அம்மனை வெகு கிட்டக்கப் பார்த்த நினைவு.  கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலேன்னுசொல்றாங்க. ஆனால்.....  தில்லிப்படைகள் காலக் கட்டம் பார்த்தால்....  அப்படித் தோணலை.  போகட்டும்  சாமி வயசையே கோவிலுக்குச் சொல்வாங்களா இருக்கும். ஆனா....சாமிக்கு வயசு எவ்ளோன்னு யாரு கணக்குப் போடமுடியும்?

காலையில் அஞ்சு மணியில் இருந்து இரவு  ஒன்பது  மணிவரை கொஞ்சம்கூட அசராமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் அம்மா.  எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு. நம்மையெல்லாம் காப்பதைவிட அவளுக்கு வேறு என்ன வேலை இருக்காம்?   கவர்மெண்ட் ஆஃபீஸ் எம்ப்ளாயியா  என்ன?  டாண்  டாண்ணு  காபி ப்ரேக், லஞ்ச் ப்ரேக்ன்னு  தவறாமல் எடுத்துக்கிட்டு  சாயங்காலம் அஞ்சானதும் கிளம்பிப்போக?  பொதுவா எல்லாக் கோவில்களுமே இப்படி  பகல் பொழுது முழுசும் திறந்திருந்தால்தானே மக்களுக்கு நல்லது!  அர்ச்சகர்களுக்கு  ஓய்வு வேணுமுன்னா ஷிஃப்ட்  ட்யூட்டி போட்டுக்கலாம்தானே?

தேர்த்திருவிழா,தெப்பக்குளத்திருவிழான்னு  விழாக்கள் பல நடந்தாலும் பூச்சொரிதல் விழா ஒன்னு சிறப்பா நடக்குதாம்.  அப்ப அம்மனே மக்களுக்காக விரதம் இருக்காளாம். கேக்கவே ஆசையா இருக்கு.  ஒரு திருவிழா வந்து பார்த்தால் நல்லா இருக்கும். ஆனால்  கூட்டத்தை நினைச்சாலே பகீர்:(

மாரியம்மன் கோவில்களில் வழக்கமா  மக்கள் நேர்ந்துக்கும் பிரார்த்தனைகள் எல்லாம்  இங்கேயும் நடக்குது. குழந்தை வரம் வேண்டும் மக்கள் பிரார்த்தனை நிறைவேற்ற  கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்திக் கோவிலைச் சுற்றி வந்து கும்பிடறாங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப்பட்டிக்கும் ஆத்தாதான் குலதெய்வம்!

இவ்ளோ புகழ் பெற்ற கோவிலை இன்னும் சுத்தமா வச்சுருக்கலாம்.  ஆனால் எங்கே:(

அசுத்தம்  போதாதுன்னு பிச்சைக்காரர்கள் தொல்லையும்  அதிகமா இருக்கு. அதிலும் சின்னக்குழந்தைகள் கையேந்தி நிற்பதைப்பார்த்தால் ..........ப்ச். என்னவோ போங்க:( ஒருத்தருக்கு கொடுத்தவுடன் ஒரு படையே திரண்டு ஓடி வருது:(

வண்டியைத் திருப்பி சென்னைக்குப்போகும் ஹைவேக்குக் கொண்டுவந்துட்டார்  சீனிவாசன். பரவாயில்லை ஒன்னரை மணி நேரத்தில்  தரிசனம் முடிச்சுட்டோம். ஆனால் கோவிலைச் சுத்திப் பார்க்கலை.  எல்லா இடத்திலும் கம்பித்தடுப்பு, தூண்களைச் சுற்றிக் கும்பல் கும்பலா மக்கள்!

டோல்ரோடு.  அங்கங்கே  காசு  கட்டிட்டுப் பயணம் தொடர்கிறோம்.  எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு இடத்தில் கட்டிட்டுப் போகும் வசதி ஏன் வைக்கலை?  இந்த அழகிலே பாக்கிச் சில்லறை கொடுக்கவே மாட்டேங்கறாங்க:(   முண்டியம்பாக்கம், திண்டிவனம் எல்லாம் கடந்து  ஆர்யாஸ் கார்டன் என்ற  ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு.  பரோட்டாதான். சுமாரா இருந்துச்சு. ஓய்வறையும்  சுமார் ரகம். அதாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்!




இப்போ  பகல் ஒன்னரை மணி ஆச்சு. கிளம்பினோம்.

கொஞ்ச தூரத்தில் ஒல்லியா ஒரு ஹனுமனைப் பார்த்தேன்.    ஒரு சின்னக்குன்றின் மேல் ஒரு கோவில்கண்ணில் பட்டது.  அப்புறம் இன்னும் கொஞ்ச தூரத்தில்  தவம் செய்யும்சிவன். ஏதோ ஆஸ்ரமமாம்.

புது  ஹைவே தரமா இருக்குன்னு  வண்டி பறக்குது. நின்னு விசாரிக்கமுடியாதபடி  ஒரு வேகம்.  மேல்மருவத்தூரைக் கடந்தோம்.  ஊரே கலகலன்னு இருக்கு.  மதுராந்தகம் தாண்டும்போது... 'ராமா.... உன்னைப்பார்க்க இன்னும் வேளை வரலை'னு  முனகினேன்.  கோவில் சாத்தி இருக்கும்  நேரம் இப்போ:( எத்தனை முறை இந்தப்பக்கம் போய் வந்திருப்போம்! ஹூம்....

தாம்பரம்,  தி. நகர் னு அறைக்கு வந்துசேர்ந்தோம்.  பகல் மணி மூணரை!  நல்லவேளை  மாலைநேர ட்ராஃபிக்கில் மாட்டிக்கலை:-)

எங்கே மகளைக் காணோமுன்னு  ஒரு  குரல்!  எனக்கொரு சர்ப்ரைஸ்  கிடைச்சது அங்கே!

தொடரும்................:-)





35 comments:

said...

எங்கே மகளைக் காணோமுன்னு ஒரு குரல்! எனக்கொரு சர்ப்ரைஸ் கிடைச்சது அங்கே!

மகமாயி தரிசனம் அருமை ..!

said...

பலமுறை சென்றிருந்தாலும் மீண்டும் ஒருமுறை கோவில் மண்டபம் சுற்றி வந்த திருப்தி - படங்கள் அப்படி... நன்றி...

வழியில் பல ரெஸ்ட்டாரண்ட் அழகாக மட்டும் தான் இருக்கும்...!

முடிவில் 'திக்'... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி...

said...

சென்ற வாரம்தான் போய்வந்தேன்
ஆனாலும் தங்கள் பதிவை போட்டோவுடன் பார்க்க
படிக்க நான் சரியாக ரசித்துப் பார்க்கவில்லை
எனப் புரிந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

தமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன்
அருமையான பதிவு அனைவருக்கும் போய்ச்
சேரவேண்டாமோ

said...

ஆஹா !!!!!!! நம்மூருக்கு வராங்கப்பா !!!

சமயபுரத்தம்மன் பற்றி அருமையான பதிவு .
நீங்கள் சொல்வது போல் கோவில் தான் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்தா தேவலாம்னு தோணும் .

said...

சோ, ஊருக்குப் போற நேரம் வந்திருச்சு.

said...

// எனக்கொரு சர்ப்ரைஸ் கிடைச்சது அங்க

துளசியைத் தேடிக்கினு வரும் ஆத்தா

அருள் புரிய வந்துட்டா.
https://www.youtube.com/watch?v=xHhC6VCxrAM

சுப்பு ரத்தினம்.


said...

சமயபுரம் கோவிலுக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. படங்களைப் பார்த்தவுடன் சமீபத்தில் நேரில் பார்த்த உணர்வு. நன்றி டீச்சர்.

சர்ப்ரைஸ் சஸ்பென்ஸ் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவல். காத்திருக்கிறேன்.

said...

என்ன டீச்சர் இது?
அரங்கனுக்கு அத்தினி பதிவு போட்டீக?
ஆத்தாளுக்கு இத்தினி வெரசா முடிச்சிட்டீக?:(

சமயபுரத்தாளை, அவ கிட்டக்க, உள் படிக்கட்டில் நின்னு பாக்கும் போது...
அப்படியே ஒரு குழந்தை, தவழ்ந்து, "அம்மா"-ங்குறது போல இருக்கும்!

அவ முகம் அம்புட்டு விசாலம்!
அவ நெத்தி அம்புட்டு விசாலம்!
அவ கண்ணு அம்புட்டு விசாலம்!

திருநீற்றைக் கீத்தாப் பூசாம, முழுப் பூச்சு பூசி இருப்பா;
நீராடி, நீறாடி இருப்பா!

அந்த நீறு-ல தான், அவ புருவமே பாக்க முடியும்!
குழிச்சிக்கிட்டு சிரிப்பா;

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை
அங்கம் எல்லாம் பூத்தாளை
என் உயிரில் வேர்த்தாளை
மாதுளம் பூ நிறத்தாளை...

மாதுளம் பூவால் பின்னிய சடை!
= இவளுக்கு, ஆண்டு தோறும் சீர் வரிசை அனுப்பணும்-ன்னு இராமானுசர் உத்தரவு;
= இன்னிக்கும் அரங்கன் அனுப்புறான்

"கற்புடைய மடக் கன்னி காவல் காக்கும்" -ன்னு ஆழ்வார் பாசுரம்!

அந்த அழகிய சீர் வரிசை, நுணுக்கி நுணுக்கிக் கட்டிய பூச்சடை பாக்கணுமா?
இதோ = http://srirangaminfo.com/img/srirangam-photos/srirangam-temple-flower-for-puja.JPG

(இது சமயபுரத்தாளுக்கும், காவிரித் தாய்க்கும், மட்டுமே அரங்கன் அனுப்பும் அப்படியொரு சீதனம்)

said...

//உள்ளே சிவாச்சாரியார்கள் பூஜை செய்யறாங்க//

:((

இவள், சங்கத் தமிழ்ப் பூர்வ குடிகளின் தெய்வம்
இவள், கொற்றவை (எ) தமிழ்க் கடவுள்!

கொற்றம் + அவ்வை = கொற்றவை
* கொற்றம் = வெற்றி
* அவ்வை = முதுமகள்
(தெலுங்கில் "அவ்வா" -ன்னு சொல்வதை நோக்கவும்)

இப்பிடியொரு, எளிய மக்களின் தொன்மம்..
இன்னிக்கி, பூஜா/புராணம் -ன்னு ஆகிப் போச்சு;

பொதுவா, நாட்டார் கோயில்களுக்குச் சிவாச்சாரியாள் வருவதில்லை;
ஆனால் சமயபுரத்தில் செல்வம் கொழிக்கத் துவங்கியவுடன், நாட்டார் வழக்கமெல்லாம் மறைஞ்சி, ஸ்தல புராணம்/ ஆகமம்-ன்னு வந்துருச்சி:(

* ஆத்தாள் = un civilized word ஆகி,
* அம்பாள் = decent word ஆகி விட்டது:(

//உக்ர ரூபத்தின் கோரைப்பற்களைப் பிடுங்கி இவளைச் சாந்தப் படுத்திட்டாங்களாம்//

தாயே!
ஒன்னையும், நீயாவே இருக்க விட மாட்டாங்களா?
ஒன் பல்லையே புடுங்குற அளவுக்கு, என்ன ஆகமமோ? :((

said...

//முன்னொரு காலம் நாங்க இங்கே வந்தப்ப அம்மன் காதில் அழகான நட்சத்திர வடிவக் கம்மல் பார்த்துருக்கேன். பளிச்ன்னு ஸ்டார் ஜொலிக்கும்! அதைத் தேடிய என் கண்கள் ஏமாந்து போச்சு//

இப்பவும் இருக்கு!:))
= அது காதோலை/ கருகமணி!

ரெட்டைப் பட்டையா, நல்லாத் தெருப்பா, நட்சத்திரப் பட்டை போட்டு மின்னும்;
சுத்தியும் நீலக் கல்லு வச்சி, நடுவாப்புல பெருசா செவப்புக் கல்லு;
தங்கத்தால் செஞ்ச பனையோலை கீழே விரிச்சாப் போல இருக்கும்!

நாட்டுப்புறத் தெய்வங்களுக்கே உரிய = காதோலை!
---

//அரக்கர்களின் தலையில் வைத்தபடி உக்கார்ந்து இருக்காள்//

அட முருகா, இந்தப் "புருடாணம்" வேறயா?:)
அவிங்க எல்லாம் "அசுராள்" இல்லை டீச்சர்;

நடுகல் (முன்னோர்) வழிபாடா, கொற்றவை இருந்த போது,
போரில் வெற்றி வேண்டியோ/ தோல்வி ஏற்பட்ட பின் வாழப் பிடிக்காமலோ... "கண்டம்" குடுத்தவர்கள்;
அதாச்சும் தலையைச் சீவிக் கொள்ளும் ஆறலைக் கள்வர் குடி!
---

கையில், ஒரு வெங்கல மணி வச்சிக்கிட்டு இருப்பா;
சாமிக்குப் பூசாரி தான் மணி அடிப்பாரு; சாமியே எதுக்குக் கையில் மணி வச்சிக்கிட்டு இருக்கு?

அதான், சமயபுரத்தாளை, நாட்டுப்புறத்தாள்/ "கொற்றவை" -ன்னு காட்டீக் குடுத்துரும்;

சங்கத் தமிழ்ப் பாடல்களைப் பாத்தீங்க-ன்னா தெரியும்;
ஆறலைக் கள்வர்களின் பாலை நிலத் தெய்வம்; கையில் மணி வச்சி இருக்கும்!

சமயத்தில் வருபவள் அல்லவா? அதான் அவ வருவதை, முன்னமே மணி வந்து சொல்லும்!
அன்னை வரும் பின்னே!
அவ மணி வரும் முன்னே!

(அவ மூக்குக்கும் செவப்பான வாய்க்கும் நடுவால ஒரு புல்லாக்கு தொங்கும்; அதை விட்டுப்புட்டீயளே:))

said...

மகமாயி.....

அருமையான கோவில். ஆனால் உங்களைப் போலவே கும்பலை நினைத்தால் தான் பயமே....

வாரத்தில் மூன்று நாட்கள் தான் இங்கே அதிக அளவில் மக்கள் இருக்க மாட்டார்கள் - திங்கள், புதன் மற்றும் வியாழன். செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.

பூச்சொரிதல் மிகச் சிறப்பாய் இருக்கும். வெப்பம் முழுவதும் தானே வாங்கிக் கொண்டிருப்பதால் இப்படி கூடை கூடையாக பூவை சொரிந்து அவளது வெப்பத்தினைத் தணிப்பார்கள். திருச்சி மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து பல வண்டிகளில் பூக்கள் வந்து பூச்சொரிதல் நடைபெறும். திருச்சி முழுவதுமே பூ வாசம் தான்....

said...

நன்றி நன்றி. சமயபுரம் அம்மாவை எவ்வளவு பார்த்தாலும் போதாது.

குப்பைதான். என்ன செய்வது.சாமியாடறவங்களைப் பார்க்கலையா.

யானை ரொம்ப சாது. அதுக்கா சுமித்ரான்னு பேரு!! சரியாத்தான் வச்சிருக்காங்க.
அதென்ன மகளைக் காணோம்?

said...

//முண்டியம்பாக்கம், திண்டிவனம் எல்லாம் கடந்து ஆர்யாஸ் கார்டன் என்ற ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு. பரோட்டாதான்//

Barotta, Buritto - ஆறு வித்தியாசம் செப்பண்டி:)

திண்டிவனம் diversion எடுத்தா நம்மூரு;
திருவண்ணாமலை, அப்படியே எங்க வாழைப்பந்தல் கிராமத்துக்கும் வந்திருக்கலாம்-ல்ல?
நுங்கு சீவி, பனங் கெழங்கு அவிச்சிக் குடுத்துருப்பாங்க!

திண்டி வனம் = புளியங் காடு
வர வழீல தான், மலை மேல "மயிலம்" முருகன் கோயில்!

செதுக்கி வச்ச செல்லுலாய்டு ஹீரோ கணக்கா, செக்சியா இருப்பான் மயிலம் முருகன்:)

அங்கிட்டு வாங்குன முருகன் சிலை தான்...
24 வருசமாக் கூடவே இருக்கான், paint டச்சப் பண்ணி, டச்சப் பண்ணி:)

அப்பவே ரெட்டை முருகனா வாங்குது;
வீட்டுக்கு ஒன்னு,
என் bedside-க்கு ஒன்னு:)

Bedside murugan now in New York!
Veetu murugan has gone to friend's home in Blore;
see how he looks still young in blue stylish shirt:)
dei loosu murugava, say hi to teacher:)

said...

சூறாவளிச் சுற்றுப்பயணம்ங்கறது இதானா!! நானும் ஒண்ணு விடாம எல்லா அரியர்ஸையும் முடிச்சுட்டேனே :-))

எத்தனை விதமான வேண்டுதல்கள்.. பிரார்த்தனைகள் உண்டோ அத்தனையையும் ஆத்தா கோயில்ல பார்க்க முடியுது.

said...

நெய்யும் பப்படமுமா பப்பு மம்மு சாப்பிட்டுட்டு வந்து உக்கார்ற நேரத்துல இப்படி பரோட்டாவைக் கண்ணுல காமிச்சு கெளப்பி விடுறீங்களே,.. இது நியாயமா துள்சிக்கா :-))))))))

said...

மஹாமாயி...

சாந்த சொரூபீயா தரிசனம் தருவாள்.

சமயபுரத்துக்கு... ரோஷ்ணி 45நாள் குழந்தையாக இருந்த போது மாமியாரோடு எடுத்துச் சென்றது. இன்னும் அவ கூப்பிடலை....

கணவர் குழந்தையோடு ஒரு முறை சென்று வர வேண்டும். வேண்டுதல்கள் பாக்கி இருக்கு....

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்க சமயபுரம் பதிவு இன்னும் அருமையாக இருக்கு! வாசித்து மகிழ்ந்தேன். ரசித்தேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கோவில்கள் மட்டும் எத்தனை முறை போய் வந்தாலும் அலுப்பதே இல்லை.

அப்படியெல்லாம் திடுக்கிடும் 'திக்' இல்லையாக்கும்:-))))

said...

வாங்க ரமணி.

என்னென்னவோ பார்க்கணுமுன்னு கோவிலுக்குள் போவோம். ஆனால் கூட்டம் நம்மை ரசிக்க விடாது. அதன் போக்கிலே தள்ளப்பட்டு வீடு வந்தபின்தான் அச்சச்சோ....ஆதைப் பார்க்கலையே இதைப் பார்க்கலையேன்னு தோணும்.

அடுத்தமுறையும் இதே கதிதான்!

said...

தமிழ்மணத்தில் இணைத்ததற்கு நன்றிகள், ரமணி.

said...

வாங்க சசி கலா.

யாருடைய இடையூறும் இல்லாம நேராப் போனோமா சாமியை தரிசனம் செஞ்சோமா, கண் குளிரப் பார்த்தோமான்னு இருக்கணும்ப்பா. அர்ச்சனை, ஆரத்தி கூட வேணாம்னு போயிருது.

சுத்தமாக இருந்தால் உத்தமம்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

தேர் எப்படியும் நிலைக்குத் திரும்பித்தானே ஆகணும் இல்லையோ:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஆடி ஆடி வரும் அம்மன் தரிசனம் அருமை! எங்களைக் கூட்டிப்போய்க் காமிச்சதுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க கீதமஞ்சரி

பெரிய சர்ப்ரைஸ் எல்லாம் இல்லைப்பா. சிம்பிளா ஒன்னு!

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா.... இம்புட்டு இருக்கா அங்கிட்டு!!!!

உள்படிக்கருகில் எங்கே நிக்கவிடறாங்க? வரிசையில் நாப்பது நிமிட் காத்திருப்பு.உள்ளே காலடி வச்சவுடன் அஞ்சு விநாடி! அம்புட்டுத்தான். அதுக்குள்ளே அம்மன் அழகை ரசிக்கணும்,துன்னூறு வாங்கிக்கணும், தட்டுலே தட்சணை போடணும்.

தலை கொடுத்த தம்பிகளா அவுங்கெல்லாம்! ஆஹா ஆஹா.

பத்மநாபபுரம் அரண்மனையில் நாக்கைப்பிடுங்கிக்கிட்டும் தன் கழுத்தை தானே வெட்டிக்கிட்டும் கீழே சாயும் வீரர்களின் ஓவியங்களைப் பார்த்து விக்கிச்சுப்போய் நின்னது நினைவுக்கு வருது இப்போ!

எல்லாம் கூடி ஒரு மணி நேரக்கோவில் விஸிட்லே எம்புட்டு கிடைச்சதோ அம்புட்டுதானே எழுத முடியும்?

பேசாம உங்க பின்னூட்டங்களைப் பதிவில் சேர்த்துட்டால் எல்லாம் நிறைவாகிரும். செய்ஞ்சுறவா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாம் போனது ஒரு வியாழந்தான் என்றாலுமே காத்திருப்பு நேரம் அதிகமா இருந்துச்சு. வரிசை நகரலை:(

பூச்சொரிதல், நீங்க சொல்வதே வாசிக்க மகிழ்ச்சியா இருக்கு. ஊர் முழுசும் பூ வாசம்!!!!!

said...

வாங்க வல்லி.

சாதுக்களின் பெயர் சுமி என்பதே:-))))

ராமாயணத்தில் கூட ரெட்டைபெற்றவள் எங்காவது வாயைத் திறந்தாளா?

சாமி நான் ஆடுனாத்தான் உண்டுப்பா. ஒருவேளை சாயங்காலமா ஆடுவாங்களா இருக்கும்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆறுநாள்.ஆறே நாள்.அம்புட்டுதான்ப்பா:(

அந்த பப்பு நெய் பப்படம் இருந்தால் எனக்கு அமிர்தம்.

வாங்க பண்டமாற்று பண்ணிக்கலாம்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது எனக்குக் கிடைக்கும் காசை அம்மாவிடமோ இல்லை பெரியக்காவிடமோ கொடுத்து வைப்பேன். எல்லாம் ஒரு பத்து நிமிசத்துக்குதான். அப்புறம் அதுலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து வச்சதைவிடப் பலமடங்கு வாங்கிருவேன். முக்கியமா அவுங்க ரொம்ப பிஸியா இருக்கும் சமயம்தான் 'தா தா' ன்னு குதிப்பேன்:-)

பிடுங்கல் தாங்காமல் யார் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாதுன்னு சொல்லிக் காசை எடுத்துக் கொடுப்பாங்க.

ஆனால் உண்மை மாரி,அவளே கூப்பிட்டு வசூல் பண்ணிக்குவாள்!

said...

//பேசாம உங்க பின்னூட்டங்களைப் பதிவில் சேர்த்துட்டால் எல்லாம் நிறைவாகிரும். செய்ஞ்சுறவா//

முருகா...

கரும்பலகையும் சாக்பீசும் டீச்சருக்கே உரியது;
என் இடம் பின்னூட்ட Ruled Notebook மட்டுமே:)

நீங்க தான் பதிவுலகப் பேராசிரியை!
நான் ஒங்க வகுப்பு மாணவன் மட்டுமே!

"துளசி தளமுலசே சந்தோஷமுகா" -ன்னு தியாகராஜர் பாட்டு தான் நம்ம School Anthem:)

கரும்பலகை சாக்பீசும் டீச்சருக்கேலோ ரெம்பாவாய்!

said...

திருமதி துளசி,

நீங்கள் தங்கிய சென்னை கெஸ்ட் ஹவுஸ் மற்றும் டாக்சி ஏஜென்ஸியின் வெப்சைட் (பெயர், முகவரி, தொலைபேசி எண் ), வாடகை பட்டியல் ஆகியவை தர இயலுமா? 2013 முழுதும் தேடினேன்; கண்டு பிடிக்க முடியவில்லை! நன்றிகள் பல.

said...

வாங்க கலை.

கெஸ்ட் ஹவுஸ்தி நகர் வெங்கட்ராமன் தெரு. சர்வீஸ்டு அபார்ட்மெண்ட்ஸ்.

அவுங்க பக்கத்தின் சுட்டி இது.
http://www.thelotus.in/

ஸ்ரீராம் ட்ராவல்ஸ்லேதான் ஆறேழு வருசமாய் கார் எடுத்துக்கறோம்.

அவுங்க தொலைபேசி எண் இன்னொரு கை பேசியில் இருக்கு. அப்புறமாய் பார்த்து(கைப்பேசியைத் தேடிப்பார்த்து)சொல்றேன்.

said...

விபரங்களுக்கு நன்றி திரு துளசி. ஸ்ரீராம் ட்ராவல்ஸ் சென்னையில் நிறைய இருக்கிறது. தொலை பேசி எண் கிடைக்கும் போது கொடுங்கள்.

said...

சென்ற வருடம் பூச்சொரிதல் அன்று எங்கள் மகனுடைய நிச்சயதார்த்தம் சமயபுரத்தில் நடந்தது. கோயிலும் பூச்சொரிதல் நிகழ்வும் இன்னும் மனதை விட்டு அகல வில்லை.