Monday, June 17, 2013

"இப்படித்தான் இருந்தான்! இப்படியேதான் இருந்தான் " (பாலி பயணத்தொடர் 2)

இருள்வெளியில் ஒரு 'ஓம்' கண்ணில் பட்டது . முதலில்  நான்  எங்கிருக்கிறேன் என்பது மனசுக்குத் தெளிவாகலை.  நியூஸி  நேரத்துக்கு உறக்கம் போயிருக்கு. பால்கனியில் வந்து நின்னால்.... மசமசன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா மினுக்கும்  பல்பு! எதிரில் வீரமாகாளியம்மன் கோவில். அந்தக் கோபுரத்தில்தான் இந்த ஓம் இருக்கு! இந்தப் பக்கம் கைலாஷ் பர்வத்!  இதுவும் இதே ஹொட்டேல் கட்டடத்தின் நீட்சி. இங்கே  ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு இந்தப்பெயரில்:-)))))

பொழுது புலரக் காத்திருந்து  குளிச்சு முடிச்சுக் கிளம்பி முதல்வேலையா  பேட் கி பூஜா. அப்படியே காளியம்மனுக்கு ஒரு கும்பிடு. கோவிலின் பின்பக்கத்தில் புதுசா ஒரு ஆறுமாடிக்கட்டிடம் வரப்போகுது.  அன்னதானக்கூடம்,  உணவுக்கூடம் (ரெண்டுமே ஒன்னில்லையோ? ) அடுக்களை, திருமணமண்டபம், அலுவலகம், ஸ்டோர் ரூம்,  கோவில் பணியாளர் விடுதி,  பல்நோக்கு அறைகள் இப்படி சகலவசதிகளும் ஒரே இடத்தில்!  அடுத்த வருசம் கும்பாபிஷேகம் வச்சுருக்காங்களாம்.



செராங்கூன்  சாலை லேசாக் கண்ணைத் திறக்க முயற்சி செய்யுது.  கோவிலின் அருகே இருக்கும் பூக்கடையில் மல்லிச்சரம் வாங்கிக்கிட்டேன்.  கொண்டை பூவுக்கு நிஜமாவே அழுதே! இங்கே நியூஸியில் பூவச்சுக்க முடியுதா?  ரொம்பப் பழைய காலனி ஆதிக்ககால கட்டிடங்கள் சில கண்ணில் பட்டன. மேல்மாடிகளை அப்படியப்படியே வச்சுக்கிட்டு கீழ்தளத்தில் கடைகள் விதவிதமாய்!

கோமளவிலாஸில்   ரெண்டொரு வாடிக்கையாளர்கள். கல்லாவில் இருந்தவங்களைக்  ( நமக்கு கடந்த 28 வருசமாப் பழக்கம்தான்!) குசலம் விசாரிச்சுட்டு  போய் உக்கார்ந்தோம். விலைவாசி என்னவோ தாறுமாறா ஏறுனாப்போல   இருக்கு. ஐட்டங்கள் அதே என்னும்போது எதுக்கு அனாவசியமான்னு  விலையை மட்டும் புதுப்பிச்சு  வச்சுருக்காங்க. என் கணக்குக்கு  இப்போ ( ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே  வந்துட்டுப்போனேன் )எல்லாம் 50%  விலை அதிகம்.


கொஞ்சம் மெலிசாத் தட்டக்கூடாதோ? பூத வடையா இருக்கே!  படம் எடுக்கும்போது நம்பள்கியை நினைச்சுக்கிட்டே ...கோபாலத் தவிர்த்து, படம் எடுக்க முயற்சித்தேன். பழக்கதோஷம்  கோபாலும் படத்துலே  இருந்தார்:-))) சாப்பிட்டு முடிச்சு  சீனுவை நோக்கிப்போகும்போது  மூடிய கடை வாசல் வெராந்தாவில் உள்ளூர் கடைகளுக்கு பத்திரிகை விநியோகம் செய்ய  கட்டுகளைப்பிரிச்சு அடுக்கிக்கிட்டு  இருந்தாங்க ரெண்டு பேர். ஒரு ஆங்கிலமும் ஒரு தமிழுமாக ரெண்டு  தினசரிகளை வாங்கினோம்.  நெருங்கிய எழுத்தாளர் தோழி இப்போ அந்தத் தமிழ்ப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க. அவுங்க கட்டுரை எப்படி வந்துருக்குன்னு பார்க்கும் ஆர்வம் எனக்கு:-)


இந்தத் தமிழ்பத்திரிகையில்  நமக்குத் தெரிஞ்ச  அக்கா ஒருத்தர் (ஃபிஜியில் இருந்தபோது பழக்கம்)  அந்தக் காலத்தில் வேலை செஞ்சுருந்தாங்க. மலேசியா & சிங்கைன்னு ரெண்டு பதிப்புகளையும் அப்போ கவனிச்சுக்கிட்டு இருந்ததால்  இங்கேயும் அங்கேயுமா பயணத்துலேயே இருப்பாங்க அந்த அக்கா, மிஸ் அம்மணி அய்யர்.   குழந்தையுடன் முதல்முறை சிங்கை வந்திருந்தோம். சேதி சொன்னதும் ஓடிவந்து குழந்தையை உச்சிமோந்து ஆசீர்வதித்த அன்பை இன்னும் என்னால் மறக்க முடியலை.


ஃபாரர் பார்க் பக்கம் கிச்சனர் சாலை &  ரங்கூன் சாலை  முனையில் புதுசா அடுக்கு மாடிக் கட்டிடம் வருது!  சிகிச்சை சுற்றுலாவுக்கு வரும் மக்களைக் குறிவச்சு கட்டிக்கிட்டு இருக்கு  ஃபா ர்டீஸ் நிறுவனம். ( Fortis Healthcare)  ஃபாரர் ஸ்கொயர் என்று பெயராம்.

கோவிலில் சின்னதா  ஒரு கூட்டம். பெரிய திருவடிக்கு முன் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு.  பெருசா ஒரு கலசம்/கும்பம் ஒரு மேடையில் ! புள்ளையாருக்கு ஒரு தேங்காய் அர்ச்சனை செஞ்சுக்கணும். ஒரு சமாச்சாரத்துக்கு அப்பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.  எல்லா பட்டர்களும் யாகத்தில் பங்கேற்பதால்  அது முடிஞ்சாவுட்டுத்தான் அர்ச்சனை என்று கவுண்ட்டரில் சொன்னார்கள். சரி எப்படியும்  எட்டுநாளில் திரும்பி சிங்கை வரும்போது  வச்சுக்கலாமுன்னு  சீனுவை தரிசிக்கப்போனோம்.

'இப்படி.... இப்படித்தாம்மா இருந்தான் அன்னிக்கு திருப்பதியிலே! கேட்டுக்கிட்டே இருந்தியே எப்படி இருந்தான் எப்படி இருந்தான்னு இப்படியேதான் 'என்றார் கோபால்.(பாவம்... ரொம்பப் பட்டுட்டார்!)



ஒற்றை வஸ்த்திரமும் துளசி மாலையுமா  ..... நாமம் மட்டும்  மங்கலாத் தெரியுது!


"அன்னிக்கு உன் கண்ணில் படலையேன்னு இன்னிக்கு அப்படியே காட்சி கொடுக்கறான் பார் ... "கோபால். ஏகாந்த சேவையா வேற வாய்ச்சுருச்சு!



தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதியில்  தூமணி மாடம் பாடுவது எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பிப் பார்த்தால் கோபாலைக் காணோம். கண்ணைத் துரத்தினால் சீனுவின் முன்னால் மண்டபத்தில் கம்பியை ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார்.  என்னன்னு கிட்டே போனால்.... திருமஞ்சனம் ஆரம்பிக்கப்போகுதாம்!

அட்றா சக்கை! போனஸ் ஆப்ட்டது நமக்கு!





ஒரு மணி நேரம்! உற்சவருக்கும் மூலவருக்குமா  குளியல் ! அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை எல்லாம்  அமோகம். கண்குளிரக் கண்டோம்!

 திருப்பதி தரிசனத்தை இடைக்கிடை நினைச்சுக்கிட்டு நடுங்கினது என்னவோ நிஜம். ஒருவிநாடி கண்ணைத் திறக்குமுன்  கை இழுத்துக் கடாசும் கோவில் ஊழியர்களின் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா? 


மூலவருக்கு முன் திரை போட்டு அலங்காரங்கள்  ஒரு பக்கம் ஆரம்பிக்க,யாககுண்டத்தின் அருகில் அன்றைய கட்டளைதாரர்  மாலைகள் ஏந்திய தாம்பாளத்துடன் யாகத்துக்கான சீர்வரிசைகளுடன்  கோவிலைச் சுற்றி வந்து  நிற்க , யாக குண்டத்தின் ஆஹூதியில்  எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு  பரிபூரணம் !  பரிவட்டம் கட்டிய பட்டர் கலசத்தைத் தலையில்சுமந்து  மேளதாளங்களுடனும்  தீவட்டி, குடைகள் போன்ற சம்ப்ரதாயங்களுடனும் கோவிலைச் சுற்றி வந்தார். கலசத்துக்கு தீபாரதனை காட்டினார்கள்.

நினைச்ச இடத்துக்குப்போகும் வகையில் சக்கரம் வச்ச வட்ட யாககுண்டம் அழகோ அழகு.

சிங்கை சீனு ஸ்பெஷலாக  பத்துப்பதினைஞ்சு வருசமா நான் ஒரு வழக்கம் ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன்.  கோவில் உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிப்பது.  நம்மிடம் இருக்கும் பெரிய எழுத்துப் புத்தகத்தை சிங்கைப் பயணங்களில் கொண்டு போவேன். மிஞ்சிப்போனால் ஒரு அரைமணி நேரம். நம்ம தூண் வேற நமக்காகக் காத்திருந்தது.  வாசிச்சு முடிச்சு  பெருமாளுக்கும், அனுமனுக்கும்  நின்ன இடத்தில் இருந்தே ஒரு கும்பிடு போட்டு, எட்டுநாளில் மீண்டும் சந்திக்கலாமுன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பினோம். ஜாய் ஆலூக்காஸ் கடை போட்டுருக்கு  கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் தள்ளி!

எப்பப் பார்த்தாலும் செராங்கூன் ரோடு என்ன வேண்டி இருக்குன்னு  குறுக்குச்சாலையில் புகுந்து புறப்பட்டோம். சின்னச் சின்ன  சந்துகளும் வீடுகளுமா  இருக்கு.  சுத்தம்  ஓரளவு பரவாயில்லை. சீனர்களின் கடைகளில் காய்கறிக் கூடைகள் விற்பனைக்கு வந்து இறங்கி இருந்தன. அங்குமிங்குமா  பழைய கலோனியல் ஸ்டைல் கட்டிடங்கள்.  போலீஸ் ஸ்டேஷன்கூட கண்ணில் பட்டது. கூடவே ஒரு பழைய சர்ச் !  கம்போங் கபோர் சர்ச்.

 1929/30 வது வருசம் கட்டப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியான்னு சொல்லும் இந்தப்பகுதியில்  இந்தியர்கள்மட்டுமில்லாமல்  சீனர்களும் மற்ற இனத்தவர்களும்  கணிசமான அளவு இருந்துருக்காங்க.  அப்போ  1890களில்  பாபா என்னும் சீன ஆண்கலும் நோன்யா என்ன்னும் சீனப்பெண்களுமா சுமார் 20 பேர்கள் சேர்ந்து  சிங்கை மெதடிஸ்ட் சர்ச்சின் முதல் பெண் சமய போதகராக இருந்த சோஃபியா ப்ளாக்மோரின் வீட்டில் கூடி இருந்து ஆலயமொன்று வேண்டுமென தீர்மானித்துள்ளனர். 1891 முதல் மிடில் ரோடிலுள்ள கிறிஸ்துவ நிலையக் கட்டிடத்தில்  வழக்கமாகக்கூடி வழிபாடு நடத்தி இருக்காங்க.


இதே கட்டிடத்தில்தான்  மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி ஒன்னும்  1900 ஆம் ஆண்டு வரை நடந்துருக்கு.   வழிபாடு நடத்தும் கூட்டம் கொஞ்சம்கொஞ்சமா அதிகாமானதும் இடப்பற்றாக்குறை காரணமாக,  1927 ஆம் ஆண்டு தேவாலய உறுப்பினர்கள் நண்பர்கள், பிஷப் பிக்லி  குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து  நிதி திரட்டி அம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள்  செலவில்  இப்போ நாம் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. (கம்போங் கபோர் சாலையும் கஃப் சாலையும்  சந்திக்கும் மூலை இது) பிக்லி மெமோரியல்ன்னே ஒரு காலத்துலே இதைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கிட்டு இருந்துருக்காங்க.

சிங்கைச் சரித்திரத்தின் ஒரு பகுதியா அரசு இதை அறிவிச்சு  தகவல் பலகையும் வச்சுருக்கு.  சிங்கை அரசில் பாராட்டப்படவேண்டிய  ஒரு  முக்கிய  அம்சம் இப்படிப்பட்டத் தகவல் பலகைகள். ஆங்கிலம் தமிழ் சீனம் என்று மும்மொழிகளில்  பாரம்பரிய, சரித்திர அம்சங்களோடுள்ளதை மறக்காமல் மக்களுக்கு  எடுத்துச் சொல்லும் சிறப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! அப்பாடா.... சரித்திரம் கிடைச்சுருச்சுன்னு  மகிழ்ச்சியா ரெண்டு க்ளிக் க்ளிக்கிட்டு  டன்லப் தெரு வந்து சேர்ந்தோம்

. பச்சைப்பசேலுன்னு காய்கறிக் கடைகள்.  ஒரு  ஆரம்பப் பள்ளி(Endeavour Primary )ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணாக்கரை  லைஃப் ஸ்டடி  டூர் என்ற வகையில்  கூட்டிவந்து  கடைகளையும் பொருட்களையும் காமிச்சு பாடம் சொல்லிக்கிட்டு இருந்தார். முத்தாத இளம் காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்கணுமுன்னு சொல்லி இருப்பாரோ? மாணவர்கூட்டத்தில் சிறுமிகளை விட  சிறுவர்களே அதிகம் என்று தோணுச்சு எனக்கு. (நல்லாப் பார்த்துப் படிங்கப்பா....பின்னாளில் மனைவியிடம் பாராட்டு பெற உதவும்!)


பொடிநடையில் நாங்கள்  Tekka Centre (சிராங்கூன் சாலையின் ஆரம்பம்)  வந்து அங்கே அடித்தளத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்குப்போய்  பழங்கள் பகுதியை நோட்டம் விட்டோம். அழகாக நறுக்கிய பழத்துண்டுகளை  சின்ன அளவில்  பொதிஞ்சு வச்சுருப்பாங்க இங்கே. பார்க்கவும் சுத்தமாக இருப்பதால் பயமில்லாமல் வாங்கிச்சாப்பிடலாம். பலாப்பழம் கிடைச்சது. டூரியனையும்  வெட்டி வச்சுக்கிட்டு இருந்தார்  ஒரு இளைஞர்.  இங்கே நியூஸியில் நான்  தேடிக்கிட்டு இருக்கும்  டெவில்ஸ் ஐவி (மணி ப்ளான்ட்ஸ்) செடிகள் விற்பனைக்கு இருக்கு.  ஐயோ.....  என்னால் வாங்கிவர முடியாதே............  நியூஸியில்  விமானம் இறங்கும்போது  ஒரு பூவோ, பழமோ இலையோ  நம்வசம் இருந்தால் தொலைஞ்சோம்!  பயோ செக்யூரிட்டி  இங்கே கடுமை.  பத்தாயிரம் டாலர் வரை அபராதம் உண்டு!

அப்படியே லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு  ஒரு புத்தகக்கடைக்குப்போய்ப் பார்த்தோம்.  துளசி கிடைச்சாள். பாலகுமாரன். பயண வாசிப்புக்கு வேணுமேன்னு பார்த்ததில்  எழில்வரதனின் 'கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை' ஆப்ட்டது. சிரிப்புக்கு  கேரண்டீன்னதால்வாங்கினேன். கூடவே வாடாமல்லியும்.(சு.சமுத்திரம்)




லெட்சிமி புஸ்பக்  கடையில்  அழகான மாலைகளும் இன்னொரு மூலைக்கடையில்  மாம்பழவகைகளும் அப்படியே  கண்ணையும் மனசையும் இழுத்துச்சு.   இன்னொரு கடையில்  இளநீர்  வாங்கிக்குடிச்சுட்டு  செராங்கூன் சாலையைக் கடந்தோம். ஏதோ  டிவிக்கான படப்பிடிப்பு.  நாயகி ஷாப்பிங் செஞ்ச  பைகளோடு  சாலையைக் கடக்குறாங்களாம்!!! படு பொருத்தம்:-)

வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் போய்  சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம்.  பிரசாத விநியோகம் நடக்குது.  சாம்பார் சாதமும் கேஸரியும்  கண்ணை இழுத்தாலும் வயிற்றில் இடமில்லையே:(

ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டு (இங்கே செக் அவுட் டைம் பகல் 12. செக் இன்  மதியம் 3 ) சிங்கை ஸ்டாப் ஓவரின்  ஃப்ரீ பிக்கப்   ஒரு பனிரெண்டரை மணிக்கு  வரும் என்று காத்திருந்தோம்.  சரியான நேரத்துக்கு வண்டி  வந்தது. நாங்க ரெண்டு பேர் மட்டுமே என்பதால் நேராக விமானநிலையம்தான். ஏர் ஏஷியா டெர்மினல்  நம்பர் ஒன்னில் இருந்து போகுதாம். ரொம்ப நல்லதாப்போச்சு.போன முறை விட்டுப்போன  காக்டெஸ் கார்டனைப் பார்த்துறலாம்!





22 comments:

said...

எட்டு மாதத்தில் 50% விலை அதிகம்... நல்ல முன்னேற்றம்...

படங்கள் மூலம் திவ்ய தரிசனம்... நன்றி...

said...

இருளிலும் தெரியும் ஓங்காரம் அருமை.

உணவுக்கூடங்குறது சமைக்கும் இடமா இருக்குமோ?

திருமஞ்சனசேவை கண்டது அருமை. மாலவனை நீங்கள் பார்க்க முடியாமல் போனதால் உங்களைப் பார்க்க அவன் செய்து கொண்ட ஏற்பாடுதான் அது. :)

எனக்கு சில விஷயங்கள் புரிவதேயில்லை. ஆண்டவனுக்குத் தீட்டு என்று படம் பிடிக்க விடுவதில்லை. எல்லாம் வல்லவனுக்கு தீட்டாகுமா? சிங்கை/மலேசியாவில் கோயில்களுக்குள் இறைவனை படமெடுக்க அனுமதிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

தோசையும் வடையும் அழகு. பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கே. தட்டுதான் சிறுசா இருக்கு. சாம்பார் சட்டினி எல்லாம் காணோம்?

50% விலைவாசி உயர்வா! ம்ம்ம். இந்தியாவிலயும் உயர்ந்துக்கிட்டேதான் இருக்கு.

said...

விலைவாசி உயர்வு எல்லா இடத்திலும் தான் டீச்சர். :)

தில்லியில் இப்போது வாழைப்பழம் ஒரு டசன் ரூபாய் 60/- :))))

உங்களுடன் நாங்களும் சிங்கையைச் சுற்றி வந்து சீனுவின் தரிசனம் கண்டோம்.

இங்கே தில்லியிலும் திருப்பதி சீனு புதிதாய் வந்திருக்கிறார் - எனது வீட்டின் அருகிலேயே.... அதனால் தினமும் சீனு தரிசனம்!

said...

அருமையான பகிர்வு.

‘ஓம்’ ஒளிர்கிறது.

4-ஆம் படத்திலிருப்பது போன்ற ஜன்னல்களின் அமைப்பு என்னையும் மிகக் கவர்ந்தது. காலை மாலையில் எடுத்த படங்கள்:
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6528814621/
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6537231433/
http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6524643281/

பெங்களூரில் வடைகள் இந்த சைஸ்தான்:)!

said...

அது யாரு நம்பள்கி? தோசையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்:(
இன்றைய ஜுரத்துக்கு அது அமிர்த மருந்து!!
பெருமாள் பெரும் ஆள். தாங்கள் கண் கலங்கினதைப் பார்த்திருப்பார். அதுதான் சிங்கப்பூருக்கு துளசியை வரவழைத்துவிட்டார்.
ரொம்ப நல்லா இருந்ததுப்பா.

said...

//நினைச்ச இடத்துக்குப்போகும் வகையில் சக்கரம் வச்ச வட்ட யாககுண்டம் அழகோ அழகு.//

நல்ல ஐடியா !!

திருமஞ்சனம் அற்புதம் . மாலைகள் fரெஷா அழகு , அது என்ன பச்சை கலர்ல நடுவுல ரோஜாவோட ஒரு மாலை , (அது வெற்றிலையா அல்லது வேறு இலையா )ரொம்ப அழகு

நிறைவான பதிவு ,நன்றி .

said...

வீட்டுக்குள்ளிருந்தபடியே உலகையே சுற்றிப் பார்க்கும் அனுபவம் உங்கள் பதிவின் மூலம் பெறுவதே பாக்கியம். அழகழகான படங்களும் தகவல்களும் அற்புதம். மாலைகள் மனத்தைக் கொள்ளைகொள்கின்றன.

said...

Komala Vilas Vadai and Dosai brings back sweet memories of Singapore. Thanks for documenting your travel!

said...

உற்சவருக்கும் மூலவருக்குமா குளியல் ! அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை எல்லாம் அமோகம். கண்குளிரக் கண்டோம்!

அருமையாய் தரிசனம் செய்து வைத்தீர்கள்..பாராட்டுக்கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எட்டு மாசத்துக்கு முன்னேயே விலைவாசி கொஞ்சம் கொஞ்சமா ஏறி இருக்கணும். நாந்தான் அப்போ கவனிக்கத் தவறி இருப்பேன்:(

படங்கள் எடுக்கத்தடை இல்லை என்பதால் எல்லாம் அமோகமே:-)))

said...

வாங்க ஜி ரா.

அன்னதானக்கூடம் & சமைலறை கீழ்தளத்துலே வருமுன்னு படம் காமிக்குதே!

படம் எடுத்தால் பவர் குறையுதுன்னு சொல்வது.... சரி இல்லைதான்:(

இங்கெல்லாம் படம் எடுப்பதால் கோவில் இன்னும் செழிப்பாத்தான் வளருது.

ஆனா ஒன்னு பாருங்க.... இந்தியாவில் முக்கிய தமிழகத்தில் படம் எடுக்கக்கூடாதுன்னு சொல்வது மனசுலே பதிஞ்சு போனதால் இங்கே மூலவரைப் படம் எடுக்க நமக்கே ஒரு தயக்கம் வந்துருது.

சாம்பாரையும் சட்டினியையும் தோசை மறைச்சுருச்சே:-)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

திருப்பதியார் வந்துட்டாரா?

6 வருசம் முன்பு ஆர் கே புரம் செக்டர் 3 பெருமாள் கோவிலுக்குப் போனபோது

திருப்பதி தேவஸ்தானக் கோவில் வராப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

பட்டர்களின் அட்டகாசம் ஆரம்பிச்சாச்சா?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்க படங்களின் அழகுக்குச் சொல்லணுமா???? பகலும் இரவும் அருஐ!

சிங்கையிலும் வெவ்வேற காம்பினேஷன்களில் ஜன்னல் கதவுகளுக்கு வர்ணம் அடிச்சு இதுவும் ஒரு அழகாத்தான் இருக்கு!

பெரிய வடைகளா தடிமனா இருந்தால் உட்புறம் சரியா வேகறதில்லையேப்பா:(

said...

வாங்க வல்லி.

நம்பள்கி நம்ம பதிவர் குடும்ப அங்கம்தான்.

பட்டர் தோசை நல்லா க்றிஸ்ப்பா இருந்துச்சுப்பா. கோபால் மசஆல் தோசை ப்ரேமி:-)

பெரும் ஆள் யாரையும் விரட்டுவதில்லைப்பா! எப்போதும் தரிசனம், பரிபூரணம்.

said...

வாங்க சசி கலா.

யாக குண்டம் மட்டுமா? வீல் வச்ச இன்னொரு சமாச்சாரமும் இருக்கு இங்கே! அப்புறமாச் சொல்றேன்:-)

அது வெற்றிலை மாலைதான். நம்ம ஆஞ்சநேயடு ஸ்பெஷல்!

said...

வாங்க கீத மஞ்சரி.

எல்லாம் 'நான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம்' வகைகளே:-)))

said...

வாங்க தெய்வா.

கோமளவிலாஸ் ஓனர் மறைவுக்குப்பின் வியாபாரத்தை பாகம் பிரிச்சதில் பிள்ளைகளில் மூத்தவர் பழைய கோமளவிலாஸையும் இளையவர் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளையும் எடுத்துக்கிட்டாங்க.

எனெக்கென்னவோ..... பழைய ஸ்டைல்தான் பிடிக்குது. ருசி கூட இங்கேதான் நல்லா இருக்கு!

சென்னையில் ஒரு கோமளவிலாஸ் ஆரம்பிச்சு நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம் தரம் கீழே போய் கடைசியில் மூடிட்டாங்க. அதைக்கூட முந்தி ஒரு சென்னைப்பதிவில் புலம்பிய நினைவு.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

கோவில் திருமஞ்சனம் எல்லாம் கோபாலின் கைவண்ணம். எனக்குக் கண்ணீர்திரையால் பார்வைக்குறைவு!

நமக்கு இப்படி ஒரு பாக்கியமான்னு அழுது தீர்த்துட்டேன்.

தாங்க முடியறதில்லைப்பா:(

said...

தம்பி சிங்கையில் தான் இருக்காப்ல. இப்போ அம்மா, அப்பாவும் அங்கே போயிருக்காங்க. நீங்க சொன்ன அதே டயலாக் தான் அம்மாவும் சொன்னாங்க. விலை வாசி ரொம்பவே ஏறியிருக்கு.

இதே டயலாக்கை ஹைதையிலும் சொல்
றேன்!!!! :(

said...

சீனுவின் வீடு ஏரியல் வ்யூவில் அருமையாயிருக்கு.

மாலைகள்லாம் அழகழகா புதுப்புது டிசைன்ல இருக்கறது ரொம்பவே வித்தியாசம்.

அப்றம் போனஸை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி துள்சிக்கா :-)

said...

கண்குளிர அபிஷேகம், தர்சனம் பெற்றோம்.

மாலைகள் கொள்ளை அழகு.

அடுத்து காண....வருகின்றேன்.

said...

சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ஞாநி கூட லி குவான் யூ யை பேட்டி கண்டு எழுதிய புத்தகம் குறித்து எழுதி இருந்தார். ஆங்கிலத்தில் கூடவே டிவிடி உடன்.

எது குறித்தும் அச்சமின்றி பேசியிருந்தார் என்று ஞாநி எழுதி விட்டு அவசியம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய நூல் என்றும் எழுதி இருந்தார்.

மும்மொழி திட்டம் என்று உங்கள் வரிகளில் படித்தவுடன் நானும் இன்று வரையிலும் சிங்கப்பூர் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் என்பது இந்த பாரபட்சமின்மையே. உள்ளூற நிறைய உள் குத்துக்கள் இருந்த போதிலும் அற்புதமான நாடு சிங்கப்புர்.

செரங்கூன் சாலையை பார்க்கும் போது ஏதும் மாறியதாக தெரியல.

ரொம்ப சந்தோஷமாக இருக்கு இந்த பதிவும் படங்களும்.