Friday, June 28, 2013

ராஜான்னா ராஜாதான் இல்லே? (பாலி பயணத்தொடர் 7 )

மெங்வி தேசத்துக்கு ராஜகுடும்பத்தின் கோவிலுக்குள்ளே நுழையறோம்.Pura Taman Ayun ,  Desa Mengwi  தெருவிலிருந்து அகழிப்பாலம் போகுது. அகழி நல்ல அகலம். முப்பதடி  இருக்கும். முதலை இருக்கான்னு கண்ணு தேடுச்சு. நாம் , குரங்கன்ஸ் பார்த்த குஷியில்  கிளம்பிக்  காமணியில் இங்கே வந்துட்டொம். எல்லாம் அப்படி ஒன்னும் அதிக தூரமில்லை.  வெறும் ஏழே கி மீ.  முன்னாடியே நல்லா ப்ளான் போட்டு வச்சு , நமக்கு  நல்ல ஒரு கைடும் காரும் இருந்தால்  நாலே நாளில் மொத்த பாலியையும் இண்டு இடுக்கு விடாமல் பார்த்துறலாம்.  சின்னத்தீவுதான்.

பொதுவா சுற்றுலாப் பயணிகளுக்கு முகம் சுளிக்காமத்தான் மக்கள்ஸ் இருந்தாலும்,  நாமாகக் கேட்டால் மட்டுமே  உள்ளூர் சமாச்சாரங்களும் விவரங்களும் சொல்றாங்க. என்ன இடம் சொல்றோமோ அதுக்கு இவ்ளோ சார்ஜ்ன்னு  காரோட்டிகள்  'கோடி 'காமிச்சு,  நாம் பேரம் பேசிக்கணும். நம்ம காரோட்டி ந்யோமேனின்  முதலாளிக்கு  ஏழு வண்டிகள்  இருக்கு. அவை எல்லாமே இதே ஹொட்டேலுக்குன்னு ஒப்பந்தம் போட்டுருக்காராம். வாசலில் நிற்கும் வண்டிகள் எல்லாம் ஒரே கம்பெனிக்கு உரியவைகளாம்.
அஞ்சு வருச அனுபவம் இந்தக்கம்பெனியில் நம்ம ந்யோமேனுக்கு!

கோவிலுக்கு நுழைவு சார்ஜ் ஆளுக்கு பதினைஞ்சாயிரம். கார் பார்க் வெளியேதெருவில் என்பதால்  இலவசம்தான். டிக்கெட் கொடுக்கும்போதே கோவில்பற்றிய 'சரித்திரக்குறிப்பு ஒன்னும் தர்றாங்க.  அதை வாசிக்கும்போது சின்னதா ஒரு குழப்பம் வந்தது உண்மை.  மெங்வி ராஜாங்கம்  ஆரம்பிச்சது 1627 BC.    ராஜாங்கத்தின் முதல் ராஜா   Gusti Agung Ngurah Made Agung கோவிலைக் கட்டுனது  1634 AD ஆண்டு. தட்டச்சுப் பிழையாத்தான் இருக்கணும், இல்லை?


ராஜ குடும்பத்திற்கான தனிக் கோவிலாத்தான் இதைக் கட்டி இருக்காங்க. குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்குத் தனித்தனி சந்நிதிகள், குடும்ப தெய்வங்களுக்கும், மற்ற பெரிய தெய்வங்களுக்கும்  பகோடா ஸ்டைலில்  மேரு என்ற அடுக்கு கோபுரங்கள் இப்படி. இந்த  அடுக்கெல்லாம்  அழகா வெட்டிய  ஓரங்கள் உள்ள  வைக்கோல் வச்ச கூரைகள்தான். எத்தனை அடுக்கு இருக்கோ அத்தனை  சக்தி அந்த தெய்வங்களுக்கு!  அங்கேயும்  க்ளாஸ் இருக்கு பாருங்களேன்!


 நம்ம மேருமலையைத்தான் சிம்பாலிக்கா மேருன்னு இவுங்க கட்டுறாங்க. வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது  வைக்கோலே இல்லையாம்.  கருப்பு வகைக் கரும்பின் தோகையாம். ஓலை மாதிரிதானே இருக்கு. ஆமாமில்லே!!!


 புரா டமன் அயூன்  (Pura Taman Ayun ) என்று பெயர். அழகான தோட்டக்கோவில் என்று இதற்கு பொருளாம்.   பாலியில் இருக்கும் புகழபெற்ற ஏழு கோவில்களில் இதுவும் ஒன்னு.  பெயருக்கேத்தாற் போலவே  பெரிய தோட்டம் கோவிலுக்குப் பின்புறத்தில் பரவிக்கிடக்கு.  மொத்தம் 10 ஏக்கர் நிலம். இந்தக் கோவில் மூணு பகுதியா அமைஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றிப்போகும்  அகழியைக் கடந்து  பாலி ஸ்டைல்  Candi bentar (நேர்பாதி கட் ஸ்டைல் )கேட் கடந்து முன்புறத்தோட்டத்திற்குள் நுழையறோம். விஸ்தாரமான கோவிலின் நான்கு மூலைகளிலும்  சின்னக்குடில் போன்ற  அமைப்புகள். காவல் தெய்வங்களுக்காக இருக்கலாம். வலப்பக்கம் டிக்கட்டு கவுண்ட்டர். அங்கே ஏராளமான பச்சைக்குடைகள்  ஒரு பீப்பாயில் போட்டு வச்சுருக்காங்க.   விருந்தினர்கள், மழையோ வெயிலோ கஷ்டப்படவேணாம். இதுதான் ராஜ உபசரிப்பு என்பது.


இடப்பக்கம் பெரிய ப்ரமாண்டமான புல்வெளி.  அதில் செயற்கை நீரூற்று.  கவுண்ட்டருக்கு எதிர்ப்புறமா சின்னதா ஒரு சந்நிதி. கோவில் பூனை ஒன்னு பூஜை செய்ய வந்துருக்கு!



 கல்பாவிய நீண்ட பாதையின்  வலப் பக்கம் ஒரு அழகான கட்டிடத்தில் ரெஸ்ட் ரூம்ஸ். வெரி குட்.

ஏழெட்டுப் படிகளுடன் உள்ள இன்னொரு ஸ்ப்ளிட் கேட் வாசல் கடந்து  உள்ளே போனால் பரந்த புல்வெளியின் நடுவில் காவல் மாடம்போல் வச்ச உயர்ந்த சிம்மாசனம்  ஒன்னு.  ராஜா அங்கே உக்கார்ந்து  தன் நாட்டைப் பார்வையிடலாம் போல!   (அப்புறம் விசாரிச்சப்ப சொல்றாங்க.... கோவில் மணி கட்டி இருக்காம். மரமணி என்பதால் நான் சரியாக் கவனிக்கலை. கண்ணாடி மாற்றும் நேரம் வந்துருக்கு)



அழகழகா  சின்னச்சின்ன குடில்கள் புல்கூரை அமைப்புடன்  அங்கங்கே.  டிக்கெட் செக்கிங் கூட இப்படி ஒரு குடிலில்தான்! பெரிய சாவடி ஸ்டைலில்  சில கட்டிடங்கள்.  உச்சிவெயிலுக்குப் படுத்தால் தூக்கம் அப்படியே இழுத்துரும். திருவிழா சமயங்களில் கலை நிகழ்ச்சிகள் இங்கே நடத்துவாங்களாம். அட! அரங்கு!

பாதையின் இடதுபக்கம் பிரியும் பகுதியில் ரெண்டு சாவடிக் கட்டிடங்கள். ஓவியர் ஒருவர் வரைஞ்சுக்கிட்டு இருக்கார். ஏகப்பட்ட அழகான ஓவியங்கள் வரிசைகட்டி நிக்குது. விற்பனைக்கு இருக்கலாம். நாம் ஒன்னும் கேட்டுக்கலை:(  செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்னும் மனசை அள்ளுச்சு.காலையில் நாம் பார்த்த டனாலாட் கூட அருமையா வரைஞ்சுருக்கார்.







இரண்டாம்  (நடுப் பகுதி) பிரகாரம் (?) முடிஞ்சு  கருவறைக்குடில்கள் இருக்கும்  முதல் பகுதிக்குப்போக கதவுள்ள மூடின வாசல் (Paduraksa style) ஒன்னு இருக்கு.  வழக்கம்போல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலுக்குள்ளே என்ன இருக்குன்னு  பார்க்கும் வகையில்  சுற்றுச்சுவரை சின்ன உயரத்தில் கட்டி இருக்காங்க.




ஒரு நாலடிச்சுவர்.  வலம் வர நல்ல கல்பாவிய பாதை.  இந்த பாதையில் வலம் வரும்போது நமக்கிடது பக்கம் மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்த   அழகான தோப்பு.   மங்குஸ்தான், ரம்புத்தான்,  மாங்காய், டூரியன் வகைப் பழமரங்களும்  ஏராளம்.  பாதிரிப்பூ, செம்பகப்பூ, மனோரஞ்சிதம் ஆகிய   வாசனை மலர்களுக்கான  மரங்களுக்கும் பஞ்சமில்லை.  தோட்டத்தின் அக்கரை அகழியை ஒட்டியே போகுது.

தோப்புக்குள்ளே இருந்து அங்கும் இங்குமா அகால நேரத்துலே சேவல்கள்  விடாமக் கூப்புடுது!  இந்நேரத்துக்கு  என்ன கொக்கரக்கோ!!!!


நாம் எட்டிப்பார்க்கும் உட்பிரகாரத்தில்  சுற்றிலும்  இன்னொரு சின்ன அகழி. அல்லிப்பூக்கள் நிறைந்து  அழகாச் சுத்தி வருது.  நடுவில்தான்  சந்நிதிகளுக்கான சின்னச் சின்னக் குடில்கள். பதினோரு அடுக்கு மேருகள் முதல்  மூணடுக்குகள் வரை!  சிவனுக்கு  பதினொரு அடுக்கு. ப்ரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒன்பது அடுக்குகள். (ஹா.... ஒரு படி கீழே!)


குடும்பக் கோவில்களில் கூட  அடுக்குகளை எண்ணினால் அவுங்க என்ன சாதின்னு தெரிஞ்சுருமாம்.  பதினோரு அடுக்கு  ராஜ வம்சம். அப்புறம் ஒரு அடுக்கு(?)  கீழ் சாதி. இடைப்பட்டவை எல்லாம்  அந்தந்த சாதிகளின் மதிப்புக்குத் தக்கபடியாம்.  இந்தியாவில் இருந்து போன மதம் சாதியை உதறித்தள்ளாமக் கூடவே கொண்டு போயிருக்கு பாருங்க:(


'டேவி ஸ்ரீ ' (Dewi Sri) என்ற அதி முக்கிய தேவதைக்கு ஒரு சந்நிதி வச்சுருக்காங்க. நானும் கையெடுத்துக் கும்பிட்டேன்.  போகும்வரை சோத்துக் கவலை இருக்கவேணாம் பாருங்க. அன்ன லட்சுமி தேவி ஸ்ரீ அரிசிக்கான சாமி.

சுட்ட படம். நன்றி விக்கியண்ணே /\

அங்கங்கே  பிரமாண்டமான  சாவடிகள்.  பூஜை புனஸ்காரம் நடத்துவாங்க போல. பூனைகள் ஓடித் திரியுதுகள். அங்கங்கே தினம் சாமிக்குப் படைக்கும்  ஓலைத்தட்டு சமாச்சாரங்களில் இருக்கும் முக்கிய வஸ்து ஒருவேளை இவுங்களுக்கான ஸ்பெஷலாகக்கூட  இருக்கலாம்.  கருவாடு வேணாமுன்னு  பூனை சொல்லுமா என்ன?

மெங்வி (MENGWI) மஹாராஜாக்கள் கோலோச்சி வளமா  இருந்தாங்க. பத்து தலைமுறை ஆகி இருக்கு.  அப்போ 1890 வது வருசம் பக்கத்து தேசமான படுங் (BADUNG)மகாராஜா இவுங்களோடு போர் தொடுத்தார்.

இந்த ரெண்டு தேசத்துக்கும் இடையில் இருக்கும் தூரம் வெறும் அஞ்சு கிமீதான்! உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்த மாதிரிஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தேசமாத்தான் இருந்துருக்கு அப்ப.

போரில் வெற்றி படுங் ராஜாவுக்கே!  தோல்வியடைஞ்ச மெங்வி ராஜா  பாலித்தீவின் வடகிழக்குப்பக்கம்  குடிபெயர்ந்துட்டார்.  மெங்வி நாடு இப்போ படுங்கோடு சேர்ந்துருச்சு. படுங் ராஜா... தன் ஆட்சிக்குக்கீழ்வந்த மெங்வி நாட்டை சரியா கவனிக்கலை.  கோவிலும் பராமரிப்பு இல்லாம பாழாக ஆரம்பிச்சது.  நல்லவேளை ஒவ்வொரு ராஜாக்கள் போல  தோல்வி அடைஞ்ச நாட்டுக் கோவில்களை இடிச்சுத்தள்ளி பாழாக்கலை என்ற வரை நிம்மதி!

ஆச்சு 21 வருசம்.  மெங்வி ராஜ குடும்பத்தில் சிலர் மீண்டும் மெங்வி தேசத்துக்குத் திரும்பிவந்தாங்க. கோவிலின் கதி பார்த்து ரத்தக்கண்ணீர் வந்துருக்கு. மெள்ள மெள்ள கோவிலைத் திருப்பிக்கட்டும்  பணியை ஆரம்பிச்சாங்க. இது 1911 வது வருசம்.

படுங்  ராஜா எதிர்ப்பு ஒன்னும் தெரிவிக்கலை போல. நல்லதாப்போச்சுன்னு  இருந்துருக்கலாம்.

எல்லாம் நல்லபடியாப்போய்க்கிட்டு இருக்கும்போது  ஜனவரி 20, 1917 இல் ஒரு பெரிய நிலநடுக்கம்.  இடிஞ்சு விழுந்த ஏராளமான பழங்கோவில்கள், கட்டிடங்கள் கூட்டத்தில் இந்த ராஜகுடும்பக் கோவிலும் ஒன்னு:(
படிப்படியா பழுது பார்த்து மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. பாரம்பரிய சரித்திரப்புகழ் இருக்குன்னு யுனெஸ்கோ நிதி உதவி செஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு மூலையிலும்  கூண்டு ஒன்னு. அதில் சேவல்.  உள்ளூர் வாஸ்து போல!


அப்புறம் கோபால் ரெஸ்ட்ரூம்வரை போனவர் சேதி கொண்டு வந்தார். இங்கே சேவல்சண்டை நடக்குமாம். அதுக்கான ஒரு அரங்கு ரெஸ்ட் ரூம் போற வழியில் இருக்குன்னார். அரங்கு இருக்கட்டும் படம் இருக்கான்ன்னா.... எடுத்தாச்சுன்னார். அது போதும். வாஸ்து பிரச்சனை இல்லைன்னு  தெரிஞ்சுக்கிட்டோமே:-)



பகல் ஒன்னேகால் ஆச்சு. போதும் பார்த்தது.  கொஞ்சம் ஓய்வு வேணும். அறைக்குப் போகலாமுன்னு கிளம்பி 21 கிமீ பயணம் செஞ்சு ஹொட்டேலுக்கு வந்தோம். இதுக்கே  பகல் மணி ரெண்டு.


மாலை நாலு மணிக்கு மீண்டும் கிளம்புவதா ப்ளான்.  ட்ராஃபிக்  ஆரம்பிச்சுரும். அதனால் மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்குமென்றார்  நம்ம ந்யோமேன். சரி, நீங்களும் போய் சாப்பிட்டு ஓய்வெடுங்கன்னு சொன்னார் கோபால்.

தொடரும்.......:-)


22 comments:

said...

அழகான இடம்... படங்கள் அனைத்தும் அருமை...

அங்கேயும் சாதியா...?

said...

செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்னும் மனசை அள்ளுச்சு.காலையில் நாம் பார்த்த டனாலாட் கூட அருமையா வரைஞ்சுருக்கார்.

படங்கள் கண்கொள்ளாக்காட்சி ..!

பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு..!

said...

//சேவல்சண்டை//

நம்மூர் கீரியும் பாம்பும் மாதிரி ரொம்ப நேரம் வேடிக்கை மட்டுமே காமிச்சுட்டிருக்காங்க. எப்போதான் சேவல்சண்டை ஆரம்பிக்குமாம் :-))

செவ்விளநீர்க்குலை நிஜம் மாதிரியே இருக்கு.

அனைத்து விவரங்களும் அசத்தல்.

said...

நல்ல பகிர்வு.

குறைந்த உயரத்தில் சுற்றுச்சுவர்.. நல்ல யோசனையுடன்.

அல்லிக்குளம், இளநீ, சம்பங்கி படங்கள் மிக அழகு. சம்பங்கி இளமொட்டிலிருந்து மலரும் வரை இருக்கிறது படங்கள். விரைவில் பகிருகிறேன்:)!

சேவலோடு சைஸுக்கு இன்னும் கொஞ்சம் பெரிய கூண்டாக வைத்திருக்கலாமோ. பார்க்கப் பாவமாய் இருக்கிறது.

said...

அனைத்தும் அருமையான படங்கள்.

இத்தனை விவரங்கள் தர உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் டீச்சர்.

said...

நல்ல மழை நேரமோ துளசி?
கரும்புக் கூரை!!மன்மத தேசமோ ஒருவேளை.?

படங்கள் வெகு கச்சிதம்.அந்த ரனடால் வரைந்த லக்ஷ்மி யும் பிள்ளையாரும் அற்புத அழகு.
செவ்விளநீக் குலை எதிரே பார்க்கிற மாதிரி நிஜமாகத் தெரிகிறது. கோவிலுக்குள்ள ஏன் போகக் கூடாதாம்?கேட்டீங்களா. அற்புதமான இடமாத் தேர்ந்த்டுத்து எங்களையும் அழைத்துப் போனதுக்கு நன்றிப்பா. படங்கள் அனைத்தும் மனசை நிறைக்கின்றன.

said...

அருமையான படங்கள் . நேரில் சென்று பார்த்தது போல சந்தோசம் .
thanks for sharing

said...

டீச்சர், பாலியின் அழகே அழகு!

டனா லாட் (எ) கடற் கோயில்/தீர்த்தக் கோயில் கேள்விப்பட்டு இருக்கேன்;

அதை விட..
"பைசாக்" (எ) விசாகக் கோயில்
- அன்னையின் வீட்டில் முருகன்!

பாலித் தீவுகளில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் முருகனாம்!
அதுவும் பயங்கரமான போர்க்கோல முருகனாம்;
ஆனா அந்த இதழில் மட்டும் புன்னகையாம்!

இந்தப் "போர்ப்-புன்னகை" காட்சியைத், தமிழ் இலக்கியத்தில் படிச்சிருக்கேன்;
ஆனா கண்ணால பாக்கணும்;பாலிக்குப் போக ரொம்ப நாள் ஆசை; எப்போ போவேனோ?

கதிர்காமக் கந்தன் வரவழைச்சா மாதிரி, வரவழைச்சாத் தான் உண்டு!

said...

//வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது வைக்கோலே இல்லையாம். கருப்பு வகைக் கரும்பின் தோகையாம். ஓலை மாதிரி தானே இருக்கு. ஆமாமில்லே!!!//

கரும்புக்கு மட்டுமே இந்தச் சிறப்பு!

மத்த எல்லாத்தையும் இலை, ஓலை-ன்னு சொல்லுறது தான் வழக்கம்!
மயிலுக்கே உரிய "தோகை", கரும்புக்கும் ஆகி வருவது, அதன் அழகின் பாற்பட்டே!

கரும்பு போட்டிருக்கும் வயலில், காவல் காக்கப் போவும் போது, சித்தப்பா பல முறை எச்சரிப்பாரு;
பாத்து நடக்கலை-ன்னா கரும்புத் தோகை கிழிச்சிரும்; அதன் பூவும் கண்ணுல பட்டா அம்புட்டு தான்:)

என்ன இருந்தாலும், மன்மதன் பாணம் பாருங்க:)
---

கரும்பு அறுக்கும் போது, இப்பல்லாம், சோம்பேறித்தனத்தால்/ ஆள் பற்றாக்குறையால் தோகைகளை தீ வச்சிக் கொளுத்திடுறாங்க:(
அப்படிப் பண்ணவே கூடாது!

தோகையை அப்படியே வயலில் விட்டுட்டா, இயற்கையா மூடாக்கு போடப்பட்டு, நீர் ஆவியாறது தடுக்கப்படும்;
அறுப்புக்குப் பின், வயலும் காய்ஞ்சிப் போகாம, குளிர்ச்சியா "சில்"லுன்னு இருக்கும்!

கரும்புத் தோகை வேய்ஞ்ச குடிசை/ கொல்லைத் தொழுவம்..
வைக்கோல் ஈரம் பட்டு நாறுவது போல் நாறாது; கரும்புத் தோகை வாசனையே தனி;

ஊர்ப் பக்கத்தில், முதலிரவு கூட, புதுசா தோகை வேய்ஞ்சி, அதுக்குள்ள வைக்கும் வழக்கம் உண்டு!
சில்-ன்னு மணமா இருக்குமோ என்னவோ? I dunno:)))
-----

நிறைய குழந்தைகள் இருக்கும் வீட்டில், வீட்டுக்குள் வைக்காம, இப்படித் தான் வைப்பாங்க!

இவ்ளோ பெரிய வீடு இருக்கும் போது, எதுக்கு அண்ணாவுக்கும் அண்ணிக்கும் புதுசா குடிசை போடுறீங்க? -ன்னு நான் கேட்டு வைக்க, அத்தனை பேரும் சிரிச்சது தான் ஞாபகம் வருது:)

said...

//அகால நேரத்துலே சேவல்கள் விடாமக் கூப்புடுது! இந்நேரத்துக்கு என்ன கொக்கரக்கோ!!!!//

சேவல் எந்நேரமும் கொக்கரக்கோ -ன்னு தான் கூவும்!
அதென்ன iPhone Alarmஆ? டைப் டைப்பாக் கூவ?:)

கொக்கு = மாமரம்
அற = வீழ்த்திய
கோ = முருகன்

மா மரமாய் நின்ற சூரனை, கூறாக்கியவா
= கொக்கு அறக் கோ, கொக்கு அறக் கோ -ன்னு கூவுது;
kokku meaning ok; but chummaa jolly kaRpanai:)
----

//இடைப்பட்டவை எல்லாம் அந்தந்த சாதிகளின் மதிப்புக்குத் தக்கபடியாம். இந்தியாவில் இருந்து போன மதம் சாதியை உதறித் தள்ளாமக் கூடவே கொண்டு போயிருக்கு பாருங்க:(//

Too bad!
One which earns permanent bad name to Hinduism!
Itz very hard to wipe off this vice, even in this age! Once started, it twines the leg:(


said...

//செவ்விளநீர்
பாதிரிப்பூ
அழகான தோப்பு
மங்குஸ்தான் பழமரங்கள்
மாங்காய்
செம்பகப்பூ
மனோரஞ்சிதம்
அக்கரை அகழி//

haiyo! teacher... I want to goto Bali;
Muruga, take me! take me!

நீங்க போட்ட எல்லாப் படத்திலும்,
அந்தத் "தாமரைப் பொய்கை"...
மனசை என்னமோ பண்ணுது டீச்சர்!

"வாழி ஆதன் வாழி அவினி
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை!"

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சா'தீ' பரவும் இல்லையா?
அதுதான் வேதனை:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உண்மையான பாராட்டுகள் அந்த ஓவியருக்குத்தான்.

அவர் சார்பில் நன்றி சொல்லிக்கறேன்.

அருமையோ அருமை.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வருசம் ரெண்டு முறை சேவல்சண்டை திருவிழா போல நடக்குதாம்.

அதுவரை அரங்கில் அவுங்க காத்திருக்கட்டும்:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்கள் படப் பகிர்வுக்குக் காத்திருக்கேன்.

அது என்னமோ ஸ்டாண்டர்ட் சைஸ் கூண்டா இருக்கு அங்கே. சேவல் கொஞ்சம் சின்னதா இருக்கலாம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசனைக்கு நன்றிகள்.

'கண்'டதை எழுதினால் இப்படி ஆகிவிடும்:-)))

said...

வாங்க வல்லி.

வெய்யில் சக்கைப்போடு போட்டது அதுதான் குடை:-)

சுற்றுலாப்பயணிகளில் பல மதத்தவரும் இருப்பதால் யாருக்கும் அனுமதி இல்லை கோவில் கருவறை பிரகாரத்தில்.

இதுவும் நல்லதே. எல்லாருக்கும் ஒரே மாதிரி.

said...

வாங்க சசி கலா.

மகிழ்ச்சின்னு சொன்னது என்மகிழ்ச்சியை அதிகமாக்கிருச்சு:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

அந்த பைசாக் கோவிலை மதர் டெம்பிள் என்று சொல்றாங்க.

அங்கே ஏகப்பட்ட சந்நிதிகள் இருக்கு. ப்ரம்மா, 'விஸ்னு' சிவன் மூவருக்கும் சந்நிதிகளாம்.

இந்தக் கோவிலுக்கு நாம் போகலை. முருகன் சந்நிதி இருக்கான்னு தெரியலை.

கோவிலைப்பற்றிய ரிவ்யூ பார்த்தால் அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கு 'மொட்டை' அடிக்கிறமாதிரி தெரியுது:-(((

said...

கே ஆர் எஸ்,

கரும்புக்கூரை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்:-)

ஃபிஜியில் கரும்பு அறுவடை ஆரம்பிச்சு நாக்கும்போது ஒரு கட்டத்தில் அறுப்பு சுலபமா இருக்குன்ஞு தீ வச்சு விட்டுருவாங்க.

இது கரும்பு ஆலை மூடும் சீசனைப் பொறுத்து இருக்கும். சுட்ட கரும்புக்கு விலை கொஞ்சம் குறைவுதான். ஆனால் மில் மூடுமுன் போய்ச் சேர்ந்துருமே!

said...

கே ஆர் எஸ்,

கற்பனை பலே பலே.

விரைவில் பாலி கிடைக்க 'அவன்' அருளட்டும்.

பெசாக் கோவிலுக்குக் போகுமுன் கொஞ்சம் ஹோம் ஒர்க் செஞ்சுக்கிட்டுப் போங்க:-)

said...

செவ்விளநீர் பறித்து சாப்பிட்டுவிடலாம் :)) அவ்வளவு அழகு.

சேவல் சண்டை மண்டபம் என அனைத்தும் நன்றாக இருக்கின்றது.