Wednesday, July 24, 2013

கோவா கஜா (பாலி பயணத்தொடர் 17 )


குகைக் கோவிலைக் கட்டுனது ஒன்பதாம் நுற்றண்டில். யானைக் குகைக் கோவில் என்று உள்ளூர் ஆட்கள் அடையாளப்படுத்துறாங்க. இதையும் 'கண்டு பிடிச்சு'ச்  சொன்னது நம்ம கோபால்தான். யானைகளை விட்டுப்பிரிய மனசில்லாமல் வெளிவந்து வண்டியில் ஏறினவுடன்,  கோவா கஜா போகலாமுன்னு புத்ராவிடம் சொன்னார்.  ம்ம்ம்ம்.... அது கொஞ்ச தூரமாச்சே...... இன்னும் அம்பதாயிரம் ஆகுமேன்னு இழுத்தார். பரவாயில்லை போங்கன்னதும்  வண்டி கிளம்புச்சு.

ஒரு  இருபத்தி எட்டு கிலோ மீட்டர்  ( ஸென்டானாவிலிருந்து  யானை சஃபாரிக்குப்  போன அதே தூரம்தான்) தொலைவில் இருக்கு  கோவா கஜா. நாலைஞ்சு கிலோமீட்டர் கடந்ததும் மழை ஆரம்பிச்சு வலுத்துக்கிட்டே போகுது.   ரெண்டு பக்கமும் கடைகள் நிறைஞ்சுருக்கும் ஒரு சின்ன சதுக்கம் கார் பார்க். வண்டிக் கதவைக்கூடத் திறக்க முடியாமல்  மழை அடிச்சுப்பெய்யுது. நம்மகிட்டே ஒரு சின்னக்குடைதான் இருக்கு.  இப்படி மழைன்னு தெரிஞ்சுருந்தால்  நம்ம அறை கைப்பிடிச்சுவரில் வச்சுருந்த குடையைக் கொண்டுவந்திருக்கலாம். புத்ராவிடமும் குடை ஒன்னும் இல்லை. ரொம்ப சர்வசாதாரணமா தினமும் இப்படித்தான் மழை பெய்யுமுன்னு சொல்றார். நேத்து என்னமோ அபூர்வமா மழை வரலை(யாம்!)  அடடா..... அதுதான் அறைகளில் குடைகள் வச்சுருந்தாங்களோ?

கோபால் மட்டும் சட்னு இறங்கிப்போய்  இன்னொரு குடையுடன் திரும்பி வந்து  என் பக்கத்துக் கதவைத் திறந்தார். வாடகைக்கு எடுத்தாராம். பத்தாயிரம் ரூபாய். தலையையும் தோளையும் மூட முடிஞ்சது.  என்ன ஒன்னு.... நியூஸி போல  குளிர் நடுக்கும் மழை இல்லை:-)

கடைகளின் முன்னே மழைக்கு மறைப்பை இழுத்துவிட்டுட்டு  சின்னதா  இடைவெளியில் எட்டிப் பார்க்கும் முகங்கள்.  சதுக்கம் விட்டு எதிர்ப்புறம் போய் படிகளில் இறங்கினால்  கல்பாவிய  பெரிய சதுக்கம். வலப்பக்கம்  நுழைவுச்சீட்டு வாங்கும் இடம். ஆளுக்கு பதினைஞ்சாயிரம் ருப்பையா.  டிக்கெட்டு வாங்கிக்கிட்டு அம்பு காமிச்ச பாதையில் போறோம். முழங்கால் வரை தொப்பலா நனைஞ்சு கிடக்கேன்.  போதாததுக்கு  தலையில் தண்ணீர் சொட்டுது.  குடைக்குள் மழை!!!!

இடப்பக்கம் சின்ன அறை போல் இருக்குமிடத்தில் ஜன்னலில் நம்ம டிக்கெட்டை நீட்டினால்  சரி பார்த்துட்டுத் திருப்பித் தரும்போது  வெளியில் ரெண்டு மரப்பெட்டிகளில் போட்டு வச்சுருக்கும் துண்டுகளில் ஒன்னை எடுத்து இடுப்பில் கட்டிக்கச் சொன்னாங்க. நல்லவேளை இது ஆண்களுக்கு மட்டும்:-) முழங்கால் மூடி இருக்கணும் என்பது பொது விதி இங்கே!


ஃபிஜியன் சுலு போல அதை இடுப்பில் சுத்திச் செருகிட்டு  படிகள் இறங்கிப் போறோம். நல்லவேளை கைப்பிடிக்கு  இரும்புக்குழாய் பிடிமானம் இருக்கு.  பைக்குள் இருக்கும் கெமெராவைக்கூட வெளியே எடுத்துக்கமுடியலை:( கீழே விழுந்து வைக்காமல் இருக்கணுமேன்னு கவனமாப் படிகள் இறங்கிப்போறோம்.  மலையின் மீது அடிச்சுப் பேயும் மழை வெள்ளம்   சரேலுன்னு இறங்கிக் குட்டிக்குட்டி நீர்வீழ்ச்சியா இரைச்சலோடு  படிகளின் ஓரத்தில் பாயுது.  அநேகமா நூறு மீட்டர்  ஆழம் கீழே  போகணும்.

படிகள் முடிஞ்ச இடத்துக்கு எதிரிலொரு பெரிய மண்டபம். சட்னு அதுலே புகுந்துக்கிட்டோம்.  நாலைஞ்சு உள்ளூர் மக்கள் நிதானமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. இளநீர், பழம் என்று சின்னதாக் கடை போட்டுருக்கவுங்க.  மண்டபத்தின் உள்ளே   நேரெதிரா இன்னொரு பக்கம் ஒரு மேடையும் அதில்மூணு அலங்காரக்  கதவுகளுமா இருக்கு. மேடையில் சிலர்  படுத்து ஓய்வெடுக்கறாங்க.  மேடை மேல் ஏறிப்பார்த்தார் கோபால். கதவுக்குப்பின்னே.....  ஒன்னுமே இல்லையாம்! ஓக்கே...  அப்ப இது பத்மாஸனா!   புனித நீராடும் பக்தர்கள் உடை மாற்றிக்கவாம்.  அங்கிருந்த ஒருவர் சொன்னார்.  இருக்காதுன்னு எனக்கொரு தோணல்.  மேடை போட்டா உடை மாற்றிக்குவாங்க?

ஒரு காலத்துலே முனிவர்கள் தவம் செஞ்சுக்க தங்கள்  வெறுங்கையாலேயே   பாறைகளைச் சுரண்டி  இந்தக் குகையை உண்டாக்குனதா ஒரு கர்ண பரம்பரைக் கதை இருக்கு. வெறுங்கையால் என்றதை நீக்கிட்டு  முனிவர்கள் கண்டுபிடிச்ச இயற்கை குகைன்னுகூட நாம் வச்சுக்கலாம்.   நாம் குகை என்று சொல்வதை வட இந்தியாவில்  குஃபா என்று சொல்வதைப்போல  பாலி மொழியில் கோவா( GOA)   என்கிறார்கள்.   யானைக்குகை  இங்கே  Goa Gajah .

தூரக்கே  இருந்து பார்த்தால் பெரிய யானை நிக்குது அதன் வயித்து பாகத்துலே  ரெண்டு ஜோடி கால்களுக்கு நடுவில்  நுழைவு வாசல்.


இது இங்கே  காடுகள் மண்டி, மண்மூடிக் கிடந்ததை 1923லே கண்டு பிடிச்சு செடிகொடிகளை அப்புறப்படுத்தி இருக்காங்க.  குகையின் முகப்பிலே  ராக்ஷச முகம் ஒன்னும்  சிலபல மிருகங்களும் செடிகொடிகளுமா இருக்கும்  சிற்பங்களுமாச் செதுக்கி இருப்பது கூட,   கண்டுபிடிக்கப்பட்ட பின்னே  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றுதான் சொல்றாங்க.

பாலி நாட்டுப் புராணங்களில்  அகஸ்திய முனிவர் இங்கே இருந்து சிவனை வழி பட்டுத் தவம் செஞ்சாருன்னும் காலன்   அணுகாமல்  இருக்க காலதேவதையின் முகத்தை குகை வாசலில்  வச்சாருன்னும் சொல்றாங்க. எமன் முகம்  எப்படி இருக்குமுன்னு நமக்கும் இப்போ தெரிஞ்சு போச்சு.

பக்கத்துலே ஓடும் நதிக்கு யானை ஆறு என்ற பெயர் இருப்பதால் இதை யானைக் குகைன்னு  சொல்ல ஆரம்பிச்சு இருக்கலாம். நாம் இப்போ நிற்கும்  மண்டபத்துக்கு  இடப்புறம்  குகைக்குப்போகும் பாதையும்,   ஒரு தீர்த்தக் கட்டமும் இருக்கு.  தீர்த்தக்கட்டம் ரெண்டு பிரிவா நடுவில்  ஒரு மேடையோடு  இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் மும்மூணு   சிலை மங்கையர்  கையில் குடம்  ஏந்தி  நிற்க குடத்திலிருந்து  பெருகி  ஊற்றும் நீர்த்தாரைகள் !


இந்த  தீர்த்த கட்டத்தில்   சப்தநதிகள்  சேர்ந்து   வந்து இதை சப்த தீர்த்தமா ஆக்கி இருக்காம். புனித  நதிகளான கங்கை, சிந்து,  யமுனை, சரஸ்வதி, கோதாவரி,  நர்மதை, சரயூ  ஆகியவை  ஒன்னா சேர்ந்து  இங்கே இருக்காங்கன்னு ஐதீகம்.  ஆறு சிலைகள் தானே இருக்கு. ஏழாவது எங்கேன்னால்.... நடு மேடையில் இருந்துருக்கணும் .  சிலை  கிடைச்சுருக்குன்னும்  சேதி.




இந்த  தீர்த்த கட்டத்தில் முழுகி எழுந்து  இங்கிருந்து  நீர் கொண்டுபோய்  பூஜைக்குப் பயன்படுத்தினாங்க,  ரிஷிமுனிவர்கள் என்றும்  ஒரு நம்பிக்கை.

1923 இல் குகையைக் கண்டு பிடிச்ச  இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின் 1950 இல் தான் தீர்த்தக்கட்டம் இருப்பதையே  அகழ்வாராய்ச்சி செஞ்சவுங்க  கண்டு பிடிச்சாங்களாம். அப்போ தோண்டி எடுத்த கற்களின்   குவியல்களை , குளத்துக்கு எதிர்ப்புறமா  அழகா ஒரு இடத்துலே அடுக்கி வச்சுருக்காங்க.

கிட்டே போய் பார்க்கலாமுன்னு  பேய்மழையில்  எங்கே?   குகைக்குள்  போனோம். அகலம் குறைஞ்ச ஒரு  நீண்ட  காரிடோர் போல ஒன்னு.  ஒரு வெள்ளைக்காரப் பெண்  வாசலைப் பார்த்தபடி  உக்கார்ந்துருந்தாங்க.  மழை கொஞ்சம் ஓயட்டுமுன்னு  இருக்காங்களாம்.  பாம்பு  வங்கி (ஆர்ம் பேண்ட்) ஒன்னு போட்டுருந்தாங்க. ரொம்ப அழகா இருக்கேன்னு விசாரிச்சதில் தோழி கொடுத்த பரிசாம்.  இந்தியாவில் வாங்குனது! ஆஹா....


காரிடார் முடிவில் இன்னொரு வாசல்.  ஒரு ஸீரோ வாட் பல்பு  எரிஞ்சாலும் உள்ளே  கும்மிருட்டு.  செல்ஃபோன் வெளிச்சம் காட்ட  கண்ணை இடமும் வலமும் ஓட்டினோம்.  ஒரு நாப்பதடி நீள இடம். அகலம்  ஒரு பதினைஞ்சடிஇருக்கும். இடப்பக்கம்  குழி பறிச்ச ஒரு மாடத்தில்  புள்ளையார்.  நான்கு கைகள், கையில் மோதகம்,  ஜெபமாலை , ஆயுதங்கள், ஓலைச்சுவடி இப்படி  எல்லாமே அம்சமா இருக்கு. எல்லாம் பார்ட் பார்ட்டாத்தான் பார்க்கணும்.  வர்றளவு  வரட்டுமுன்னு க்ளிக்கிவச்சேன்.





அடுத்து அடுத்து நீண்ட சுவரில் மாடங்கள்.   காலிதான். பத்மாஸனாவா இருக்கலாம்.  வலப்பக்கம் இன்னொரு மாடத்தில்  மூணு  சிவலிங்கங்கள். த்ரிலிங்கம். முகம் கை காலுன்னு  இல்லாததால் ' மொழுக்'னு ஜொலிக்கும் சிவன். மூவருக்கும்  வெள்ளை, கருப்பு, சிகப்புன்னு  உடைகள்.

(பீடத்துலே ஒவ்வொன்னுக்கும்  எட்டு குட்டி லிங்கங்கள் இருக்காம். அடடா..... இதெல்லாம் அப்புறமால்லே தெரியவந்தது!  இதுக்குத்தான் கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டுப் பயணம் போகணும்)

பூஜை செஞ்ச அடையாளமா  குருத்தோலைத் தட்டுகளும் பிரசாதங்களுமா கண்ணில் பட்டன. புள்ளையாரைப் பார்த்தால் பாவமா இருந்தார்.  அவருக்கு ஒரு துதி  சொல்லலாமேன்னு ' கஜானனம்' சொல்லிட்டு  ரெண்டு பாட்டு பாடினேன்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


விநாயகனே வினை தீர்த்தவனே.....

கணபதியே வருவாய்.....

அங்கே நம்மைத் தவிர வேற யாரும் இல்லை என்ற தைரியம்தான்:-)

கோபாலையும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னதுக்கு  அவருக்குத் தெரிஞ்ச ஒரே பாடலைப் பாடினார்.....   சினிமாப்பாட்டுதான்.    ' எல்லோரும் கொண்டாடுவோம்.... எல்லோரும் கொண்டாடுவோம்...'

தியானம் செய்ய நிஜமாவே தோதான இடம்தான் இது!  யாரும் வரமாட்டாங்க.  எல்லாம் அடங்கி இருக்கும் ,ஓசை உட்பட! இல்லையோ?

இதே குகைக்கு  புத்தமதத்தினரும்  சொந்தம் கொண்டாடுறாங்க.  கோவிலைச்சுற்றி இருக்கும் பெரிய தோட்டமும், இன்னும் கீழே கொஞ்சம் இறங்கிப்போனால் புத்தர் சிலையும் சின்னதா ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்காம். கடும் மழை காரணமா நாம் வேறெங்கியும் போகலை:(  அடர்த்தியான தோட்டம் இங்கிருந்தே தெரிஞ்சது.

இப்போ  சமீபத்துலே (1995) ஒரு பதினெட்டு வருசத்துக்கு முந்தி யுனெஸ்கோவின்  உலக பாரம்பரிய இடங்களின் ( UNESCO World Heritage Site) வகையில் சேர்க்கப்பட்டுருக்கு. இன்னும்  அகழ்வாராய்ச்சி  செய்வாங்க போல!


எங்கியாவது விழுந்து வைக்கப்போறோமோன்னு  கவனத்துடன் காலடி வச்சுப் படியேறி மேலே வந்து ஸராங்கை அவிழ்த்து   அங்கிருந்த ஒரு மரப்பொட்டியிலே போட்டுட்டுக் , குடையைத் திருப்பிக் கொடுத்துட்டுக் கிளம்பினோம். இப்படி ஒரு மழையை என்  வயசுக்குப் பார்த்ததே இல்லை. வானம் பொத்துக்கிட்டு ஊத்துதே!

ஈரக்குடையும் ஈர உடைகளுமா வண்டி பூராவும் நனைச்சு வச்சோம்.  நல்ல முறுகலாக் காய்ஞ்சு இருந்த ஒரே ஜீவன் புத்ராதான். வண்டியை வீட்டு இறங்கினால்தானே...............



தொடரும்.........:-)






19 comments:

said...

எல்லோரும் கொண்டாடுவோம்.... எல்லோரும் கொண்டாடுவோம்... பாடல் அருமை... ஹிஹி...

எமன் முகம் உட்பட படங்கள், பயணம் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

said...

புத்ரா புத்திசாலி:)
எப்படிப்பா வழுக்காம இறங்கினீங்க. !!சில்லுனு இருக்கு பார்க்கவே. ஒரே பசுமை. கோபால் இளைச்சுட்டாரே !

கஜா கோவானு படிச்சேன்.
பால் கோவா பிரசாதமோன்னு தோணித்து:)
நல்லபாட்டாத்தான் ரெண்டு பேரும் பாடி இருக்கீங்க.

நீங்க பார்த்த இடம் சாமியார் மடம் மாதிரி எனக்குத் தெரிந்தது. எமனையே பார்த்தாச்சா. இனி கவலை இல்லை.

said...

பயணமும், படங்களும் அருமைங்க..

said...

தினம் தினம் மழையா!! ஐயோன்னு இருக்குமே.

ஒன்றே பாடினாலும் நன்றே பாடியிருக்கார் அண்ணா :-))

லொகேஷன் அசத்தல்.

said...

சிலு சிலுன்னு மழை !!! படிக்கும்போது இங்க சென்னைலையும் மழை !! so இங்கிருந்தபடியே உங்களுடன் நனைந்தோம் . போட்டோஸ் அருமை . வர்ணனையும் அருமை

said...

யானைக்குகை அருமையாக இருக்கின்றது.

கொட்டு மழையில் இவ்வளவு இடம் பார்த்ததே மகிழ்ச்சி.

said...

eppadi ivvalavu visthaarama ezhutha mudiyudhu?
nalla pathivu

said...

அப்படியே அந்த மழைல குடையெல்லாம் தூக்கி வீசிட்டு முழுசா நனைஞ்சு இருப்பேன் நான்.... :)

படங்களும் விவரிப்பும் மிக அருமை.....

தொடர்கிறேன்....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எமன் முகம் க்யூட்டா இருக்குல்லே:-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

கஜா கோவாலுன்னு படிக்கலையா:-)))))

சாமியார் மடம் அப்படியா இருக்கும்? எல்லாம் தங்க சிம்மாசனம் வச்சுண்டு இருக்காதா?

இப்பெல்லாம் ஃபைவ்ஸ்டார் ஹொட்டேல் மாதிரிதானாம்!

என்னப்பற்றிய கவலையில் கோபால் இளைச்சுட்டாரோ என்னமோ?

அடுத்து என்ன செலவு வைக்கப் போறாளோன்ற கிலி:-)))

said...

வாங்க சங்கவி.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மழை இல்லேன்னா... இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுப் பார்த்துருக்கலாம்.

நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)

said...

வாங்க சசி கலா.

ஒவ்வொன்னையும் ரசிச்சு ருசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

எனக்கும் குகையின் வெளிப்புற டிஸைன் ரொம்பப் பிடிச்சதுப்பா.

said...

வாங்க சிஜி.

கண் பார்த்ததை கை தட்டச்சுது. அதான் இந்த விஸ்தாரம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மழையில் நனையும் வயசெல்லாம் எனக்கு போயே போச்.

இப்பெல்லாம் பயணத்தில் உடல்நலம் குறித்த கவனம் அதிகம். உடம்புக்கு எதாவது வந்துட்டால் புது இடத்தில் கூட வர்றவங்களுக்கும் தொல்லைதானே?

said...

குடைக்குள் மழை. படமும் கவிதை! கேமரா நனையாமல் இருந்ததா:)? மறக்க முடியாத மழைப்பயணமாக இருந்திருக்கும்.

said...

வாங்க ராமல்க்ஷ்மி.

கேமெரா நனையாம இருக்க பாடுபட வேண்டியதாப்போச்சு.

நல்லவேளை சின்னது என்றதால் ஒருமாதிரி க்ளிக்க முடிஞ்சது. அப்படியும் அருமையான காட்சிகள் எடுக்க முடியலை:-(

said...

என்னங்க! நான் சொன்னாலும் சொன்னேன்; கோபாலுக்கு காபி, டிபன், சாப்பாடு எல்லாம் கட்டா! டோட்டல் தடாவா?

சும்மா அவர் சாப்பிடும் படம் போடுங்க; ஒன்னும் கண்ணு படாது! நானும் கோபால் மாதிரி தான்; நான் சொல்றது சாப்பாட்டிலே; ஆமாங்க! நான் சாப்பாட்டு ராமன் தான். ஏகப்பட்ட eating competition- ல் பரிசு வாங்கியிருக்கேன்.

பின்குறிப்பு:
உங்களுக்கு போட்டியா ஆன்மீகப் பதிவு ஒன்று போடப்போகிறேன். கிண்டல் இல்லை; உண்மையான பதிவு! உங்களை மாதிரி எழுதுவது சந்தேகமே; புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகொண்டா மாதிரி இருந்தாலும் பரவாயில்லை; எழுதப்போகிறேன்...!