Monday, July 29, 2013

மும்முகமுள்ள நான்முகன் (பாலி பயணத்தொடர் 19 )

தேடிச்சோறு நிதம் தின்று பல... சின்னஞ் சிறுகதைகள் பேசி.....   இந்த நிமிசத்துக்கு பாரதியை மறக்கணும்.  ஒருநாள் உணவை  ஒழி என்றால்.... அவ்வையார் எதிர்ப்பாட்டு பாடிட்டார்....

கடைத்தெருவுக்குள் கால் வைச்சதும்தான் காலையில் பார்த்து வச்ச  எதிர்க் கடை , நினைவுக்கு வந்துச்சு. இப்போ அங்கே வியாபாரம் பார்த்துக்க வேறொரு பெண்.  பிரம்மன் இருக்காரான்னு பார்த்தால் நமக்காகக் காத்திருக்கார்.  விலை  காலையில் சொன்னதேதான்.  நான் என்னுடைய டீலைச் சொல்லி  காலையில் பார்த்த விற்பனைப்பிரிவுப் பெண், முதலாளியிடம் கேட்டு வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க.  கேட்டாங்களான்னு தெரியலைன்னு(ம்) சொன்னேன்.

ஒரு நிமிசம் யோசிச்சதும்,  'காலையில் நீங்க வந்து போன விவரம் என்னிடம் சொல்லிட்டுத்தான் போனாங்க.  நீங்க சொன்ன விலைக்குத் தர்றேன்.ஆனால்  நீங்க வேற யார்கிட்டேயும்  சொல்லிடாதீங்க'ன்னாங்க. அந்த வேற யார் யாருன்னு தெரிஞ்சால் சொல்லாம இருக்கலாமேன்னு நினைச்சேன்.  ரெண்டரை லட்சம் கை மாறுச்சு.


 உண்மையில் இது பிரம்மனான்னே  எனக்கு ஒரு சந்தேகம். அஞ்சு தலையுடன்  இருந்த பிரம்மனின் தலையை பொய் சொன்ன காரணத்தால் கிள்ளி எறிஞ்சார் சிவன் என்று ஒரு புராணக்கதை உண்டு. எல்லாம் அந்த அடி முடி விவகாரம்தான்.  முடி கண்டேன் என்று  தாழம்பூவை (பொய் )சாட்சி  வச்சு விட்ட ரீலுக்கான தண்டனை. இந்த தலை கொய்தல் சம்பவத்தின் பின்னே பல கதைகள் இருக்கு.  சிவன், பைரவரை உருவாக்கி அவர்மூலமாகத் தலையைக் கொய்தார் என்றும், சிவனே கோபம் கொண்டு சூலாயுதத்தால்  கிள்ளி எறிந்தார் என்றும்,  பிரம்மனொரு முறை,  தான்  சிருஷ்டித்த அழகியையே  கண்டு காமவசப்பட்டார்  என்றதால் அதற்கான தண்டனையாக அவர்  தலையைக் கொய்தார் ஈசன் என்றும்  வகை வகையாக நிறைய கதைகள்  உண்டு.  நான்முகன் அதுக்கப்புறம் என்ன தப்பு பண்ணினாரோ.... இப்ப  இன்னொரு தலை அவுட். ஒவ்வொரு தலையுடன் அதற்கான ஜோடிக் கைகளும்   காலி ஆனதால் இப்போ மூணு தலைகளும் ஆறு கைகளுமா இருக்கார்.

இப்போ நியூஸி  வர அவருக்கு லபிச்சுருக்கு.  இங்கே  வந்த பிறகாவது   அசட்டுத்தனமா எதாவது செய்யாம இருக்கணும்.  சட்டம் இங்கே அனைவருக்கும் ஒன்று என்பதால்  குற்றம் செஞ்சுட்டுத் தப்பிக்க முடியாது.

இந்தக் கடையில் இன்னும் ஏராளமான கைவினைப் பொருட்கள் இருக்கு. அனைத்துக்கும் ஆசைப்பட நமக்கு ஐவேஜ் இல்லை:(  பொம்மலாட்டம் பொம்மைகள் கூட இருக்கு!  க்ளிக் க்ளிக்...அம்புட்டுதான்.

பிரம்மனைத் தூக்கிக்கிட்டு  வலப்புறம்  ஒரு பத்து கடை தூரம் போனோம். ஏற்றமான சாலை என்பதால் கால்களுக்குச் சிரமமா இருக்கு.  போகட்டும் போன்னு  திரும்பி இறக்கத்தில் நடந்து போய் வழியில் ஒரு  இருட்டுக்கடையைக் கண்டோம்.  இருட்டு அதிகரிச்சால் அது நல்ல ரெஸ்ட்டாரண்டு என்று பொதுவா ஒரு எண்ணம் நிலவுது.  அதுக்குத் தகுந்த மாதிரி  விலையும் தாளிச்சுருவாங்க.  Kids friendly ன்னு போர்டு சொல்லுது.  அப்ப ஓக்கே எனக்கு:-)

சுப காரியங்களுக்கு சக்கரைக்கூடு  வைப்பாங்க  பாருங்க அது போல  கூம்பு வடிவில் சோறு கிடைச்சது.  புளிப்பே இல்லாத நல்ல தயிரில் ஒரு லஸ்ஸி. தாராளம்!

சாப்பாடு ஆன கையோடு  கொஞ்சம் நடையில்  கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கண்ணில் பட்டதும் இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கலாமுன்னு  போனார் கோபால். 9400 ரேட்.  எப்படியும் ஊர் விட்டுக் கிளம்பும்வரை தேவைதானே?  அதே கடையின் மறுபுறம்  ஒரு ம்யூஸிக் ஷாப்.  இன்னிக்குக் காலையில்  நம்ம ஸென்டானா ரெஸ்ட்டாரண்டில் கேட்ட குழலிசை மனசுக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இதே மெட்டுகளில் சிலபல தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்டுருக்கேன். என்ன பாட்டுன்னுதான் சட்னு நினைவுக்கு வரலை.

ம்யூஸிக் கடையில்  குழலிசை வேணுமுன்னதும்   அவர் காமிச்ச  சிடியைப்  போட்டுக் கேட்டால்... இதுவும் தமிழ்ப்பாட்டையே நினைவு படுத்துது. நல்லமெலடி.  (மனசுக்குள்ளே ஓட்டிக்கிட்டே இருந்ததில்  பிடிபட்டுப்போச்சு. தொன்னூறுகளில் பிரபல இசை அமைப்பாளரின் பாட்டுகள்.  ஓக்கே ...இன்ஸ்பிரேஷன் யார் மூலம் யாருக்குன்னு தெரியாது என்பதால் தேவையில்லாத  விவாதங்கள் தவிர்க்கப்படணுமுன்னு  முடிவுக்கு வந்துவிட்டேன்) எது எப்படியோ  நமக்குத் தெரிஞ்ச பாட்டாக இருக்கே என்பதில் மகிழ்ச்சியே. ஆசைக்கு ஒன்னு இருக்கட்டுமுன்னு  வாங்கியாச்சு.  விலைதான் அறுபதினாயிரம் ரூபாய்.

அடுத்துப் பார்த்தது ஒரு துணிமணிக் கடை. மகளுக்கு  ஒன்னும் இதுவரை  வாங்கலையேன்னு  பார்த்து  ஒரு  ட்ரெஸ் வாங்கினோம். அப்படியே எனக்கு  ஒரு ஸராங். அரை விலை டெக்னிக்கில் பேரம்  படிஞ்சது. கடையில்வேலை செய்யும்   அழகான குட்டிப்பொண்  அப்பப்பக் கடை முதலாளியிடம்  கேட்டுட்டு  வந்து  வியாபாரம் செய்யறாங்க.  பெயர்  கேட்டேன். புட்டு!  ஆஹா....   தலைச்சன் குழந்தை!  கடைக்காரம்மா மடிக்கணினியில்  பயங்கர பிஸி.  பணம் கொடுக்கும்போது தற்செயலாப் பார்வையில் பட்டது  Zuma Game . அட!  உன் கேம்தான் இவுங்க விளையாடுறாங்கன்னார் கோபால்.


சகவிளையாட்டுக்காரி என்றதும் எங்களுக்குள்  ஒரு நட்பு ஏற்பட்டுப்போச்சு. மூளையை  அலர்ட்ட்டா வச்சுக்க இப்படிப்பட்ட கேம்ஸ் ஒன்னு ரெண்டு அப்பப்ப விளையாடணும் என்ற  என் அறிவுரையை  முற்றிலும்  ஆமோதிச்சாங்க:-)

ஆச்சு ... இன்னிக்கான கடமைகள் என்ற நிம்மதியோடு  அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள்  பொழுது விடிஞ்சதும் எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்கு ஸென்டானா  ஸன் ரைஸ் ரெஸ்ட்டாரண்டு போனால் நேற்றைப்போலவே அதே புல்லாங்குழல் இசை !  அடடா..... கேட்க எவ்ளோ இனிமை!


இன்னிக்கு  பழவகைகளில்  ஒரு வித்தியாசமான ஒன்னு இருந்துச்சு. ஸ்நேக் ஸ்கின் ஃப்ரூட்! பெயர்ப் பொருத்தம்  சூப்பர்.  நான் மட்டும் ஒன்னு எடுத்துக்கிட்டு வந்தேன். Salak  என்றுபெயராம்.  உள்ளே மூன்று சுளைகள்.  கொட்டை ரொம்பப்பெருசு. சதைப்பற்று கொஞ்சூண்டுதான்.   நல்ல முதிர்ந்த பலா, ஜஸ்ட்  பழுக்குமுன்  உள்ள சுவை.  (பலா சிப்ஸ்க்கு  இப்படி உள்ள பலாக் காயைத்தான்  வெட்டுவோம். எல்லாம் கேரள வாழ்க்கை அனுபவம்தான்)





அப்புறம்  வாழை இலையில் மடிச்சு வேகவச்ச  ரெண்டு சமாச்சாரங்கள்.  க்ளூட்டோனியஸ் அரிசிமாவு தண்ணீர் சேர்த்துப் பிசைஞ்சு,  அதை  சின்ன வட்டமாகப் பரத்தி நடுவில்  நாட்டுச்சக்கரையும்  உலர்ந்த திராக்ஷையும் வைத்து  மூடி ,  மாவை இலைக்குள் பொதிஞ்சு  ஆவியில் வேக வச்சுருக்காங்க.  இன்னொன்னு தேங்காய் வெல்லம் அரிசி மாவு  குங்குமப்பூ சேர்த்து  செஞ்ச இலைக் கொழுக்கட்டை.

பரிமாறும் பெண்களிடம் என்ன ஏதுன்னு விசாரிச்சேன்.  ஒருத்தர் பெயர் புட்டு இன்னொருத்தர் காடெக். எல்லாமே கொள்ளை அழகு!  ஹெலிகோனியா (heleconia)க்கள்  அட்டகாசம். இந்த வகையில் மட்டும் 200 விதச் செடிகளிருக்காமே! என்ன ஒரு இனிய சூழல்.  விட்டுப் பிரிய மனமே இல்லை:(


போயிட்டு வரேன்டா  குரங்கன்மாரே!

அறைக்கு வந்ததும் கோபால் இன்னொருமுறை  டிக்கெட் சமாச்சாரங்களைச் செக் பண்ணியவர், அடடா..... ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை  எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன்.  இப்பப் பார்த்தால்  ஃப்ளைட் 2 மணிக்குதான் என்றவர் புத்ராவுக்கு  ஃபோன் செஞ்சு பத்து மணிக்கு வரச் சொல்லிட்டார்.  முன்னமே தெரிஞ்சுருந்தால்  இங்கே பெரிய க்ராஃப்ட் மார்கெட் இருக்காமே போய் வந்திருக்கலாம்:(  எவ்வளவு தூரமோ என்னவோ.....  போகட்டுமுன்னு சொல்லிட்டு இவர் ஒரு தூக்கம் போட ஆரம்பிச்சார்.

நான் ஒருத்தி..... வாயிலே இருக்கு வழி என்பதைச் சுத்தமா மறந்து போயிருந்தேன். ஸென்டானாவைச் சுற்றிப்பார்த்துக் கிட்டும் மைனாக்களோடு பேசிக்கிட்டும்.  செடி கொடி மரங்களை க்ளிக்கிக்கிட்டும்  அவைகளிடம்  போய் வாரேன்னு  சொல்லிக்கிட்டும் திரிஞ்சேன்.

அறைக்குத் திரும்பினால் இவர் தூக்கம் முடிச்சு சாருகஸேரயில்  உக்கார்ந்துருக்கார்.  அதைப் பிரிய மனமில்லை போல!  அங்கே பாருன்னு  கண்ணைக் காமிச்சார்.  பக்கத்து அறையைச் சுத்தம் செய்யப் பணிப்பெண்கள் கைவண்டியைத் தள்ளிக்கிட்டு  வர்றாங்க. யாருன்னு பார்த்தால்..... அட... நேத்து பார்த்தப் பள்ளிக்கூடச் சிறுமிகள்..... ஓஹோ  அதுதான் ஒன்பது மணியாகட்டுமுன்னு காத்திருந்தாங்களோ!

குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம்.  கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. உண்மைதான். இதுவரை  எல்லா இடங்களிலும்  பார்த்த  இளம்பெண்கள்  மனசில் வந்து போனாங்க.

தொடரும்.............:-)





30 comments:

said...

கைவினைப் பொருட்கள் உட்பட படங்கள் அனைத்தும் அழகு...

said...

//குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம். கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு//

பெரியாழ்வார் பெற்றெடுத்த "பெண்பிள்ளை" வாழியே!

பாலி நகர் உழைத்திடும் "பெண்பிள்ளை" வாழியே!
---

எனக்குத் திருச்செந்தூரில் சுண்டல் வித்து, காபி குடுத்து, பசி போக்கி...
முருகனையும் தோழனையுமே ஒரு கணத்துக்கு மறக்கச் செய்த...
உச்சிமாகாளி என்னும் "பெண்பிள்ளை" வாழியே!

said...

//உண்மையில் இது பிரம்மனான்னே எனக்கு ஒரு சந்தேகம்//

பாவம் பிரம்மா!:)
மும்மூர்த்தியுள் ஒருமூர்த்தி! ஆனாலும் Followers அதிகம் இல்லாத காரணத்தால், மற்ற இருவராலும், ரொம்பவே Tease செய்யப் படுகிறார்:))

ஆனா டீச்சர்...
காதலர்களுக்குப் பிரம்மாவும் ஒரு பெருங்கடவுள், தெரியுமோ?

உலகாயுதம் (எ) மரபு ஒன்னு இருக்கு; வாழ்க்கையைச் சந்தோசமா வாழ்ந்தாப் போதும், கடவுள் எல்லாம் ஒன்னும் வேணாம் -ன்னு சொல்லுற Sub Religion!
அதுல பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் ஏகப்பட்ட மரியாதை!:)
கடவுள் என்ற பேரால் இல்லாம, படைப்பாளி/ கலைப்பாளி என்கிற பேரால்:)))

மறந்தும் புறம் தொழா ஆண்டாள் கூட, மன்மதனை மட்டும் தொழுவா:) = "அனங்க தேவா, உன்னையும் உம்பியும் தொழுதேன்"

4-5 ஆழ்வார்கள் முருகனைப் பாடி இருக்காங்க!
ஆனா இவ மட்டும்? ரொம்ப தான் இவளுக்கு:))
-----

நீங்க வாங்குனது பிரம்மா-வா? -ன்னு எனக்கு மிகப் பெரும் ஐயம் டீச்சர்:)

நல்லாப் பாருங்க! இதே போல் "மூன்று முகம்" Elephanta Caves TriMurthy க்கும் உண்டு!
இதோ = படம்

மேலும் கைகளைப் பாருங்க:
ஒரு கையில் ஜபமாலை இருந்தாலும்...
* வேறு கைகளில், தீயும்/மழுவும் இருக்கு = Shiva?
* இன்னுமொரு கையில், அமுத கலசம்/ சக்கரம் இருக்கு = Vishnu?

எதுக்கும், அந்தப் பொண்ணுங்களை இன்னோரு தபா கேட்டுக்கோங்க! ரெண்டரை லட்சம் கொட்டிக் குடுத்து இருக்கீக:)
(btw, those Photo Girlz look cute:))

said...

//இருட்டு அதிகரிச்சால் அது நல்ல ரெஸ்ட்டாரண்டு என்று பொதுவா ஒரு எண்ணம் நிலவுது//

திருநெல்வேலி "இருட்டுக் கடை" அல்வா மகாத்மியம் தெரியுமோன்னோ?:)

பக்கத்துல சாந்தி ஸ்வீட்ஸ் டல்லடிக்க, அட நெல்லையப்பரே டல்லடிக்குறாரு.. இருட்டுக் கடை தொறக்கும் போது மட்டும்:)
அந்த மூனு மணி நேரம் மட்டுமே கடைத் திறப்பு! சொர்க்க வாசல்:)
----

//ஸ்நேக் ஸ்கின் ஃப்ரூட்//

புடிச்சி இருந்ததா டீச்சர், salak?
நான் மலேசியாவில் வாங்கிப் பார்த்தேன்.. சுமார் தான்:)
பழத்தை விடக் கொட்டை தான் பெருசா இருக்கு! பலாக் கொட்டை போல் சுட்டு கூடத் திங்க முடியாதாம்!

//ஹெலிகோனியா (heleconia)க்கள் அட்டகாசம்//

ஹைய்யோ! இந்தப் பூக்கள், காந்தள் பூ போல, என்ன நிறம்!
அப்படியே சிவப்பும், மஞ்சளும் - தீ பறக்குறாப் போல!

//ஸென்டானாவைச் சுற்றிப்பார்த்துக் கிட்டும் மைனாக்களோடு பேசிக்கிட்டும். செடி கொடி மரங்களை க்ளிக்கிக்கிட்டும்//

காக்கைக் குருவி எங்கள் சாதி! - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்!

மரமும் மயிலும் டீச்சர் நண்பன்!
புட்டும் கட்டும் நல்ல உணவு:))

said...

தென்னை, கமுகுன்னு கேரளச்சூழல்தான்.குரங்கன்மார் என்ன சொன்னாங்கன்னு அப்படி அதிர்ச்சியாயிட்டீங்க :-))))

கசேரயும், மாடிஃபைட் தாமரைக்குளமுமா வீட்டோட மும்புறம் அருமை. கட்டுனா இப்படியொரு வீட்டைக்கட்டணும்.

நம்மூர்லயும் பொண்குழந்தைகள் வேலைக்குப் போகுதுகள். படிக்கிற பிள்ளைங்கன்னா பார்ட்டைமா கிடைக்கிற ஏதாவதொரு வேலை, படிக்காம வீட்டோட இருக்கறவங்களில் கிராமப்புறப் பெண்குழந்தைகளானா வயல் வேலைகள், செங்கல் சூளைகள்ன்னு வேலையில் இறங்கறதைப் பார்த்திருக்கேன்.

said...

எல்லார்கிட்டையும் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டீங்களா...

படங்கள் எல்லாமே நல்லா இருந்தது......

பள்ளியில் படிக்கும் பெண்கள் கூட இது போல பகுதி நேர வேலை செய்து சுயமாக சம்பாதிக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

said...

//ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன்.
இப்பப் பார்த்தால் ஃப்ளைட் 2 மணிக்குதான்//

ஹிஹி! ஒங்களுக்குமா?

பாரீசில் எங்க கதை வேற! Paris to Caen!
சுத்திப் பார்ப்பதை விட, மனம் விட்டுப் பேசிக்கிட்டு இருக்கவே அந்தப் பயணம்!

5:30 pm! Return Train to Paris!
அடுத்த நாள் காலை, Paris to New York! Airport -இல் இருக்கணும்!

மாலை 05:30 மணிக்குப் போய் நின்னா.. Last Train already gone sire -ங்குறான்! அடப் பாவிங்களா!

டிக்கெட்-ல்ல போட்டிருக்கே, எப்படித் தப்பாகும்? -ன்னு கேட்டா...
You Illiterates -போல லுக்கு விட்டாரு அந்த ஆபிசர்!:)

என் அருமைத் தோழன்! எனக்கு -ன்னு வந்து வாய்ச்சானே..
அவன் டிக்கெட் எடுத்தது தான் எடுத்தான்!
அந்த 05:30 அன்னிக்கி மாலை அஞ்சரை இல்லீயாம்; அடுத்த நாள் காலை அஞ்சரை!:)

இதச் சரியாப் பாக்காம, நாங்க அசடு வழிஞ்சி...
ராவுக்கு, எந்த முன்னேற்பாடும் இல்லாம, அங்கேயே ஒரு டொக்கு ஓட்டலில் தங்கி...
அடுத்த நாள் விடிகாலையில், ஓட்டமும் நடையுமா.. :))

அந்த நேரத்திலும், என்னை வம்பிழுக்கத் தவறவில்லை!

என் சட்டையை கீழே லேசாக இழுத்து விட்டுக் கொள்ளும் பழக்கம் எனக்குண்டு - ஏதோ சேலை இழுத்து விட்டுக் கொள்ளுறாப் போல!:)
Ticket goofup - பண்ணுற தப்பை அவன் பண்ணிட்டு, என்னை ஓட்டிக்கிட்டு வரான்:) எப்படா Paris போயி, New York Flight புடிப்போம் -ன்னு ஆகிப்போச்சு:)

முருகா...
நீயும் ஒரு லூசு
நீ குடுத்த தோழனும் ஒரு லூசு
நானுமொரு லூசு
:)))

said...

ரெண்டு பதிவுகள் படிக்கிற அனுபவம் உங்க பதிவிலதான் கிடைக்கும். அட்டகாசமான பின்னூட்டங்களோட கதை சொல்கிற கண்ணனைத்தான்:)

அந்தப் பெண்களின் இன்னொசென்ஸ் அழகாவே இருக்கு. குரங்கனார் மாதிரியே போஸா:)

said...

எவ்ளோ அழகா சொல்றீங்க.அதுவே ரசனை.உங்கள் பின்னால் பயணிக்க வைக்கிறது !

said...

//குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம். கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு//

is there no child labour Act in force there ?

subbu thatha.

said...

அந்தம்மா திட்டாம சொல்லிச்சு சரி, அதுக்காக அவ்வையார்ன்னு பெயரை மாத்தணுமா? ஔவைன்னு சொன்னா நல்லா இல்லையோ?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க கே ஆர் எஸ்.

உச்சிமாகாளி வாசிச்ச அன்று மனசுகரைஞ்சது உண்மை.

ஆண்டாளுக்குக் கொஞ்ச நஞ்சமில்லையாக்கும்! அவள் எழுதுனதுலே கண்ணை ஓட்டிப்பார்த்தால்...... பயங்கர தில்பார்ட்டி:-)

அவர் த்ரீ மூர்த்தியாவே இருந்தாலும் ஓக்கேதான். தனிப்பட்ட பிரம்மனா இருந்தாலும் ஓக்கேதான்.

நியூஸியில் வேற யார் வீட்டிலும் இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி:-)))

அவருக்கு நாமம் சார்த்தியாச்சு இங்கே:-)

சிங்கை விமானநிலையத்தில் ஒரு ஹெலிகோனியா தோட்டமே இருக்கு. நான் போனபோது மெயிண்டனன்ஸ்க்கு அடைச்சு இருந்தாங்க.

அடுத்த பயணத்தில் கண்டுக்கணும்.



said...

வாங்க அமைதிச்சாரல்.

கூடவே கிளம்பி வரேன்னு குரங்குப் பிடி(வாதம்) பிடிச்சால்...எனக்கு அதிர்ச்சியா இருக்காதா:-))))

படிப்போடு பார்ட் டைம் வேலைக்குப்போகும் பிள்ளைகள் பாராட்டபட வேண்டியவர்கள்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசனைக்கும் கருத்துக்கும் ந்ன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

கண்ணன் வந்தாலே களை கட்டிருதேப்பா!

போகட்டும் ரெண்டு முகமும் அச்சு அசலா ஒன்னா இருக்கா இல்லையா? ரெட்டைப்பிறவிகள்:-))))

said...

வாங்க ஹேமா.

ரசித்தமைக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான சட்டம் இப்பதான் உருவாகி இருக்கு. 2020 ஆண்டுக்குள் இந்நிலை மாற்றப்படுமாம். அதுவரை பள்ளிக்கூடப் பிள்ளைகள் பார்ட் டைம் வேலையா செஞ்சுக்கலாம்.

said...

வாங்க கொத்ஸ்.

ஒளவை ன்னு எழுதப்போக அதை ஒ ள வைன்னு வாசிச்சுட்டால்.....

அவ்வை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பதே என் கருத்து.

மேலும் எனக்கு ஆதரவாக... இப்படி ஒரு பின்னூட்டம் வேறொரு இடத்தில் பார்த்தேன் நேற்று.

//நெல்லிக்கனி கிடைத்தால் அவ்வையாருக்கு அல்ல, உங்களுக்கே தருவேன்! வாழ்த்துக்கள்.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. //

நம்ம குடும்பத்தில் பெரியக்காவின் மகள் பெயர் அவ்வை.

புத்தகம் போட்டாலும் போட்டீர்..... தப்புன்னால் மட்டும் தலையில் குட்ட ஓடோடி வருகின்றீரே!

சீத்தலையாகப் போகுது. பார்த்துக்குங்க. ஐ மீன் உங்க தலை!

said...

//அவ்வை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பதே என் கருத்து//

வணக்கம் டீச்சர்:)
தங்கள் கருத்து சரியே!

(என்னடா, டீச்சருக்கே சொல்லுறான் தம்மாத்தூண்டு பொடியன் -ன்னு தவறாகக் கொள்ள வேண்டாம்:))

தமிழின் பால் உள்ள மாறா அன்பினால் சொல்கிறேன்!
"அவ்வை" என்ற நல்ல தமிழ்ச் சொல்லு போயீறக் கூடாது! ஒளவையும் சரியே!
----

தெலுங்கில் "அவ்வா" -ன்னு சொல்லிக் கேட்டு இருக்கீங்களா?
அதான், தமிழில் = அவ்வை/ ஒளவை

அவ்வை/ அவ்வா = முதுமகள்!
கொற்றவை = கொற்றம் + அவ்வை!

"அவ்வை" தி.க. சண்முகம் -ன்னு தான் எழுதுவாரு தன் பேரை!
இவர் தமிழ் நாடகக் காவலர்; முத்தமிழ் அறிஞர்!
----

சிலப்பதிகார வரியை எடுத்துக்கோங்க:

அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ?
அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ?

இளங்கோ அடிகளே, "அவ்வை" என்று சொல்லுவாரு! இன்னும் நிறைய இருக்கு தமிழ் இலக்கியத்தில்!
----

நாம தான் ஒரு "மாயையில்" மூழ்கி, அவசரப்பட்டு, அவசரப்பட்டு,

"மிகைத் திருத்தம்" செய்து,

நல்ல சொற்களையெல்லாம், தமிழை இழக்க வைக்கிறோம்!
இது என் மனம் நோகும் வேதனை:((

அமுதே தமிழே நீ வாழ்க!
அவ்வைத் தமிழே உன் சொல் வாழ்க!

said...

அப்பறம் எதுக்கு "ஒள" -ன்னு ஒரு எழுத்து இருக்கு?
"அவ்" -ன்னே எழுதிட்டுப் போகலாமே? -ன்னு கேட்கலாம்!
------

அதான் தமிழ் ஒலியியல்;
(Vowel Cluster - உயிர் மயக்கம் -ன்னு தமிழ் நுட்பம்)

ஒலி அடிப்படையில், அ + உ = ஒள என்பது தொல்காப்பியர் ஓசை நுட்பம்;
(Sort of a diphthong)
"அகரம் உகரம் ஒளகார மாகும்" -ன்னு தொல் சூத்திரம்!

ஒள = 2 மாத்திரை
அவ் = 1.5 மாத்திரை

ஒளகாரக் குறுக்கம் -ன்னு சொல்லுவாங்க!
(அப்போ தன் மாத்திரையில் குறுகும்)

அங்கெல்லாம் ஒள/ அவ் -ன்னு ஆகலாம் என்பது தொல்காப்பியர் ஒலிக் குறிப்பு!
(நூற்பா: அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும் )

வெளவினான் = வவ்வினான்
ஒளவையார் = அவ்வையார்

Ouuvaiyaar -ன்னு ரொம்ப வாயைக் குவிக்கறதில்லை!
Auvaiyaar -ன்னு லேசாச் சொல்லுவோம்! ஏன்னா ஒளகாரக் குறுக்கம்!
------

ஒளஷதம் -ன்னு சம்ஸ்கிருதம்!
அதுக்காகத், தமிழிலும் திணிக்கப் பார்க்கிறார்கள்!:(

அப்போ தமிழில், எல்லாத்தையும் "அவ்" -ன்னே எழுதிறலாமா?
= கூடாது!
= ஒளகாரக் குறுக்கத்தில் மட்டுமே இப்படி!

"ஒள" -ன்னு ஒரு Exclamation Mark இருக்கு தமிழ் இலக்கியத்தில்!
"Wow" ன்னு சொல்லுறோமே, அது போல!
அதை "அவ்" -ன்னு எழுதக் கூடாது! "ஒள" தான் சரி! ஏன்னா Exclamation-இல் குறுக்கம் வராது!
(எ.கா: ஒள ஒள ஒருவன் தவஞ் செய்தவாறே)

அதே போல, அளபெடையிலும், "ஒள" தான்! "அவ்" அல்ல!
(எ.கா: ஒளஉ இனி வெகுளல் அல்லேன்)
---------

சும்மா-ன்னா "மிகைத் திருத்தம்" சொல்லுறவங்க, "அவ்வை = தப்பு" -ன்னு ஒத்தை வரியில் சொல்லிட்டுப் போயிடுறாங்க!

ஆனா, "அவ்வை" -ன்னு நல்ல தமிழ்ச் சொல்லு போயீறக் கூடாதே -ன்னு, நாம தான் ஆதாரம்/ தரவு இத்தினி மெனக் கெட வேண்டி இருக்கு:(( முருகா! என்னை ஏன் இப்பிடிப் படைச்சியோ?:((

தமிழ் மரபியல் சொற்கள் வாழி!

said...

புட்டு.. அதிகமா வழக்கத்திலிருக்கும் பெயர் போலும். இளம் பெண்கள் முகத்தில் எத்தனை மலர்ச்சி.

/ ஹெலிகோனியா (heleconia)க்கள்/ படங்களில்தான் பார்க்கிறேன். அழகான பின்னல்.

பகிர்வு அருமை.

said...

கலைப்பொருட்கள், பெண்கள் என அனைத்துமே அருமையாக இருக்கின்றது.

said...

குரங் கனார் என்ன சொன்னாருன்னு இப்டி reaction !!!

கலைபொருட்கள் rare collections !!!
கூம்பு வடிவ சோறு புதுசு ... அந்த spaghetti போல இருக்கறது காரட் தானே ? KRS அவர்களுக்கு நன்றிகள் பல ..

வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்வதுபோல ரெட்டை பயன் கிட்டுகிறது உங்கள் பதிவை படித்தால் .:)))

said...

கே ஆர் எஸ்,

முருகன் நல்லாதான் படைச்சுருக்கான்.

இன்னும் நல்லா மெனெக்கெடணுமுன்னு ஆடிக்கிருத்திகைக்கு ஆறுமுகனை வேண்டிக்கறேன்.

டபுள் பதிவு படிக்கிறாங்களாம் துளசிதளம் வாசகர்கள்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

முதல் பெண் குழந்தைகளுக்கு புட்டு என்று பெயர் வச்சுடறாங்கப்பா. இது ஆணாக இருந்தால், வையான்.

said...

வாங்க மாதேவி.

கலையை ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

நியூஸிக்கு நானும் கூடவே வரேன்னு சொன்னால் அதிர்ச்சியா இருக்காதா:-))))

added attractions துளசிதளத்தில் கண்டு மகிழுங்கள்!

said...

திரு. இலவசம் அவர்களிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்

* உங்களுக்கு எதிராகச் சொல்லணும் என்பது என் நோக்கம் அன்று!
* நல்ல சொற்கள், தமிழை விட்டுப் போயீறக் கூடாதே என்பதே "நோக்கம்"

வெறுமனே அவ்வை=சரியே! -ன்னு ஒத்தை வரியில் சொல்லிட்டுப் போயிருக்கலாம்!
தரவு காட்டி உரைப்பது தான், சிலருக்குக் கோவம் வரும்! ஆனால் "நோக்கம்: தமிழ்" -ன்னு எண்ணிப் பார்த்தால் கோபம் வராது அல்லவா?

எனினும், தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்;

அப்படியே, மிகைத் திருத்தங்கள் பற்றியும் சிந்தித்துப் பார்க்குமாறும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்; நன்றி நற் புரிதலுக்கு!

said...

இலை கொழுக்கட்டை, பெண்ணின் பெயர் புட்டு , மற்றும் படங்கள் எல்லாம் ரசித்தேன்.